Everything posted by ரசோதரன்
-
நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
எங்களுக்கு மட்டும் தான் இங்கு கலிபோர்னியாவில் தினமும் பூமி அதிர்ச்சியா என்று நான் நினைத்திருக்கக்கூடாது போல..........😀
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
இந்தக் கட்டுரையை எழுதிய கிரிசாந்த்தின் வலைப்பூவில் இந்த விபரம் இருக்கின்றது: கிரிசாந். பிறந்தது, 14. 01. 1994. யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி என்னும் ஊரில் பிறந்தவர். அப்பா : சிவசுப்பிரமணியம், அம்மா : பாக்கியலட்சுமி, துணைவி : பிரிந்தா. ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மயான காண்டம் என்ற கூட்டுத் தொகுப்பில் சில கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. யாழ். இலக்கிய குவியம், யாழின் கரங்கள், விதை குழுமம் ஆகிய சமூக அமைப்புகளில் செயற்பாட்டாளராக செயற்பட்டிருக்கிறார். விதை குழுமம் வெளியீடான ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
👍.... தமிழ் நாட்டவர்களிடம் ஏன் இப்படி சார் என்ற ஒரு அடைமொழி என்று கேட்டிருக்கின்றேன். அவர்களில் சிலர் நீங்கள் ஈழத்தவர்கள் அண்ணா அல்லது அண்ணை என்ற கூறுவது போலவே இது எங்களின் பழக்கம் என்று சொல்லியிருக்கின்றனர். அந்த வார்த்தையின் அர்த்தம் அழிந்து, இன்று இது ஒரு பழக்கமாகவே அவர்களுக்கு வந்து விட்டது போல. 'நவீன கங்காணி' என்ற ஒரு வார்த்தை இந்தக் குறுங்கதையில் வருகின்றது. அது இந்த துறையில் எம்மவர்கள் பலரிடையே இருக்கும் ஒரு மனநிலையையே காட்டுகின்றது. குறுங்கதையில் அதை நான் விபரித்து எழுத இடம் கிடைக்கவில்லை..............
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
🙏.... ஒப்பீட்டளவில் இது ஒரு புதுத் துறையாகவும், பணம் மிக அதிகம் புரளும் இடமாகவும் இருப்பதால், இன்னும் பல வருடங்கள் எடுக்கும் போல இதன் மீதுள்ள கவர்ச்சி ஒரு சமநிலைக்கு வருவதற்கு. 😀....... தாங்ஸ் கவிஞன் சார்..... உங்களின் 'இந்த அருணாச்சலம் சொல்றான்...' கார்ட்டூன்கள் சூப்பர் சார்.....👍
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
(குறுங்கதை) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் -------------------------------------------------------------- அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தது என்று தினமும் கிளம்பி விடுவார். வேலை தளத்தில் பலர் ஏற்கனவே வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியொரு திங்கள் காலையா என்று நினைத்தவன் உறை நிலையில் இருந்த அவனின் கணினியை தட்டி எழுப்பினான். இந்த நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருக்கின்றது. இதுவரை அவன் இங்கு வேறு சில நிறுவனங்களில் பல வருடங்கள் வேலை செய்துள்ளான். ஆனால் இங்கே தான் முதன் முதலாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் வேலை செய்கின்றான். இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருள் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவின் முன்னணி கணினி தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்துள்ளார்கள். அதில் சில நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர். அங்கிருந்து இப்படி வருபவர்கள் முதலில் ஆறு மாதங்கள் மட்டும் இங்கே இருந்து பணி செய்யும் ஒப்பந்தத்துடன் வருவார்கள். சிலர் ஒரு வருடம், இன்னும் சிலர் சில வருடங்கள், பல வருடங்கள் என்று அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு. இப்படியான நிலைகளில் ஒரு அளவிலான பணியாளர்களை, இங்கே குடி உரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களை, வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு முறையும் இங்கே இருக்கின்றது. அவனை அப்படியே எடுத்திருந்தார்கள். 'ஏன் விக்னேஷ், எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். விக்னேஷ் சென்னையை சேர்ந்தவன், இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கின்றான். 'இல்ல சார், நாங்க நேற்றிலிருந்தே இங்க தான் உட்கார்ந்திருக்கிறம்.' இவர்கள் சிலருடன் இருக்கும் ஒரு பெரிய தொல்லை இது. எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் இந்த சார் என்று கூப்பிடுவதை விடவே மாட்டார்கள். இவர்களிடையே வேலைத் தளத்தில் இராணுவத்தில் இருப்பது போன்ற பதவி வரிசைகளும், அதற்கான ஒழுங்கும், மதிப்பும் இருக்கும். இங்கு மற்றவர்களிடையே பொதுவாக அப்படியான ஒரு ஒழுங்கோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பணிவோ இருப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையை செய்து கொண்டு, மிகச் சாதாரணமாக இருப்பார்கள், பழகுவார்கள். இங்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. 'நேற்று ஞாயிறில் இருந்தா, ஏன்?' 'ஆமாம் சார். வாற சண்டே ப்ராடக்ட் ரிலீஸ் என்று டெட் லைன் போட்டு விட்டார்கள். அதால சென்னையிலும், இங்கேயும் எங்க டீம் ஒண்ணா உட்கார்ந்து வேலை செய்யிறாங்கள்.' அங்கு மிச்சமாக விடப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை அவன் அப்பொழுது தான் கவனித்தான். விக்னேஷிற்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. ஆறு மாதங்களின் முன் விக்னேஷின் மனைவியை மருத்துவரிடமும், பின்னர் மருத்துவமனைக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தது. முடிவில் தனிமையும், மன அழுத்தமுமே காரணம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இவர்கள் வேலைக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. காரணம் கேட்டால் அங்கே இஎம்ஐ கட்ட வேண்டும் என்பார்கள், இப்படி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பார்கள், இப்படி ஏதேதோ சொல்வார்கள். 'உங்க டீம் பண்ணி முடிச்சிட்டாங்களா, சார்?' 'தெரியல விக்னேஷ், இனித்தான் பார்க்கணும்.' விக்னேஷும், இவனும் வெவ்வேறு அணியில், மென்பொருளின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவனுடைய அணியின் முதன்மைப் பொறியியலாளன் இவன் தான். விக்னேஷிற்கு அவர்களின் ஊரைச் சேர்ந்த கணேஷ் என்னும் ஒருவர் மேற்பார்வையாளராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேலிருப்பவர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று யோசிப்பவர் கணேஷ். இவனுக்கு கணேஷுடன் பெரிதாக ஒட்ட முடியவில்லை. சுருக்கமாக் சொன்னால், ஒரு நவீன கங்காணியாகவே இவன் கணேஷைப் பார்த்தான். கணேஷிற்கும் அது தெரியும். தன் இடத்தில் வந்து அமர்ந்து, வந்திருந்த மின் அஞ்சல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் நூறுக்கும் மேற்பட்டவை வந்திருந்தன. 'நேற்றும், முந்தா நாளும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே' என்றபடியே முருகன் வந்தார். இந்த திட்டத்திற்கு அவர்களின் பக்கத்தில் இருந்து வந்திருக்கும் திட்ட மேற்பார்வையாளர் அவர். அப்படியா என்றபடி இவன் கைத்தொலைபேசியை வெளியில் எடுத்தான். 'சனி ஞாயிறு ஆளைப் பிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆமா, சனி ஞாயிறில் வேறு ஒரு உலகத்துக்கே போய் விடுகின்றாயா, என்ன?' சிரித்து சமாளித்துக் கொண்டே ஏதோ வீட்டு வேலையில் இருந்து விட்டேன் என்றான். அப்படி ஒன்றும் வீட்டில் வெட்டி நிமிர்த்துவது கிடையாது. ஆனாலும் இவர்களுடன் சேர்ந்து கண் மண் தெரியாமல் ஓடுவதில்லை என்ற முடிவை அவன் எப்பவோ எடுத்திருந்தான். முருகன் கொஞ்சம் வயதானவர். அவர் இவனுடன் ஒரு மாதிரியும், அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்னொரு மாதிரியும், கொஞ்சம் கடுமையாகவும், நடந்து கொள்வார். அவர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சொன்னபடியே அந்த ஞாயிறன்று புதிய மென்பொருள் பரீட்சாத்தமாக வெளியிடப்பட்டது. பின்னர் இரண்டு வாரங்களில் அது வாடிக்கையாளர்களுக்கு, சில பிழை திருத்தங்களின் பின், வெளியிடப்பட்டது. இங்கு எந்த மென்பொருளையும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் இருந்து, அவரே வந்து உருவாக்கி, எழுதினாலும் அதில் பிழைகள் வந்தே தீரும். பில் கேட்ஸின் விண்டோஸ் என்னும் மென்பொருளில் இந்த உலகம் பார்க்காததா? அவரை ஒரு ஜீனியஸ் என்று சொல்வார்கள். ஆரம்ப நாட்களில், பல வருடங்களின் முன், அந்த மென்பொருள் இடையிடையே கணினித் திரையை அப்படியே முழு நீலமாக மாற்றி விட்டு, அப்படியே நின்றும் விடும். முழு நீலம் ஒரு குறியீடு போல, நடுக்கடலில் உன்னை தள்ளி விட்டுள்ளோம், இனி நீயாகவே நீந்திக் கரை சேர் என்று சொல்வதற்கான ஒரு குறியீடு. இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருளும் வாடிக்கையாளர்களின் கைகளில் பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்கு முன்னேயே புதிய மென்பொருளை சொன்ன நேரத்தில் வெளியிட்டதற்காக பெரும் விழா ஒன்று நடந்து முடிந்திருந்தது. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்கள் பலருக்கு மட்டும், இவன், கணேஷ் உட்பட, சன்மானமும் கொடுத்திருந்தனர். விக்னேஷிற்கோ அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்து எவருக்குமோ எதுவும் கொடுக்கப்படவில்லை, வெறும் 'தாங் யூ சோ மச்' என்ற வார்த்தையைத் தவிர. பின்னர் சில நாட்களில் இந்த புதிய மென்பொருளின் தோல்வியாலும், நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினாலும் பலரை வேலையிலிருந்து நீக்கும் முடிவை நிறுவனத்தின் மேல் நிர்வாகம் எடுத்தது. இவனையும் நீக்கினார்கள். கணேஷையும் நீக்கினார்கள். 'என்ன சார், இப்படி அநியாயம் பண்ணிட்டாங்கள். உங்களை ஏன் சார் தூக்கினாங்கள்?' என்று கடைசி நாளான அன்று வந்து நின்றான் விக்னேஷ். அவர்களின் நிறுவனத்திலிருந்து எவரையும் வேலையிலிருந்து, இன்னமும், நீக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் வேறு ஒரு புதிய மென்பொருள் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்றும் முன்னமே இருந்தது. 'இதில என்ன இருக்கு, விக்னேஷ், தூக்க வேண்டும் என்று முடிவு செய்து எல்லாரையும் ஒன்றாக தூக்கினார்கள்.' 'நீங்க எப்படி சார் இப்படி ஈசியா இருக்கிறீர்கள். கணேஷ் சார் எங்களுடன் பேசவே இல்லை, அழுதிருப்பார் போல.' 'இதெல்லாம் இங்க சாதாரணம், விக்னேஷ்.' 'உங்களுக்கு இஎம்ஐ எதுவும் இல்லையா, சார்.' 'வீட்டிற்கு இருக்குது, இரண்டு காருக்கும் இருக்குது, இன்னும் எவ்வளவோ இருக்குது.' 'என்ன பண்ணுவீங்க, சார்?' 'அடுத்த வேலையை தேட வேண்டியது தான். இந்த துறையில் இங்க வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று எவருமில்லை.' விக்னேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். கை கொடுத்தவன் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்த்தனர். அப்படியே திரும்பி நடந்த விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான். 'குடும்பத்தை பார்த்துக் கொள், விக்னேஷ்' என்றான் இவன்.
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
பொதுவாக உலெகெங்கும் இந்த மாதிரி விடயங்களில் மன்னிப்பு ஒரு இரண்டு தலைமுறைகள் தாண்டியே கேட்கப்படும். ம்ம்ம்....... திடீரென்று இஸ்லாமிய மக்களின் மீது கடும் பிரியத்தை இலங்கை அரசு காட்ட ஆரம்பித்திருக்கின்றது.
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
👍..... ஊரில் Volleyball Over Game விளையாடி விட்டு, இங்கு வந்து வேறு ஆட்களுடன் சேர்ந்து Setup Game (Standard) விளையாட ஆரம்பித்தேன். ஊரில் நின்ற நிலையிலேயே ஒரு சம்மட்டியால் அடிப்பது போல பந்தை அடித்து, திருப்பி அனுப்புவது தான் அந்த விளையாட்டு. செட்அப் வாலிபாலில் குதிப்பதும், தவழ்வதும், பாய்வதும் என்று மாறி மாறி உடனேயே செய்யவேண்டும். தொடர் விளையாட்டால், Jumper's Knee என்னும் அழற்சி முழங்காலில் வந்தது. மருத்துவர் இதையே தான் சொன்னார்: முழங்காலிற்கு மேலே இருக்கும் தசைகளையும், கீழே இருக்கும் தசைகளையும் உறுதிப் படுத்து என்று. அதற்காக சில உடற்பயிற்சிகளையும் பரிந்துரைத்தார். அளவாக விளையாட வேண்டும் என்றும் சொன்னார்.....😀 பல வருடங்களில், பல நண்பர்களுக்கு முழங்காலில் இருக்கும் ACL, MCL, PCL என்பன அறுந்து, சத்திரசிகிச்சை வரை போயிருக்கின்றனர். சிலர் திரும்பவும் வந்து விளையாடுகின்றனர். பலர் விளையாடுவதை அத்தோடு விட்டு விட்டனர்.
-
ஒரு கிலோ விளாம்பழம்
🙏........ உங்களினதும், களத்தில் வேறு பலரினதும் தொடர் ஊக்குவிப்பால் நானும் எழுதலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது சிறிது வந்து விட்டது என்று நினைக்கின்றேன். எல்லாவற்றையும் வாசிப்பவர்களின் பாடு என்னவோ தெரியவில்லை......🤣
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
இந்த விடயத்தில் ஒரு மாற்றமுமே வரப் போவதில்லை. ஒரு துரும்பு கூட நகரப் போவதில்லை. @Kavi arunasalam அவர்கள் போட்டிருக்கும் கார்ட்டூனில் இருப்பது போல, இந்த ஈழ விடயங்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் தமிழக, இந்திய அரசியல்வாதிகளுக்கு இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் சட்னி, மிளகாய்ப் பொடி போல. தலையில் பலாப்பழத்தை தூக்கி வைத்துக் கொண்டு கச்ச தீவை மீட்போம் என்று சொல்லுகிறவரும் அங்கே இருக்கின்றார். அவரின் கரை வேட்டியையே அவருடன் முன்னர் கூட இருந்தவர்களிடமிருந்து அவரால் மீட்க முடியவில்லை.........🫣
-
இலங்கை கடற்படை மீது பாஜகவும், காங்கிரஸும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கச்சத்தீவு விவகாரத்தில் பழ.நெடுமாறன் கேள்வி
இந்த விடயத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் இவர்கள் எவர் என்றாலும் உண்மையை பார்க்கவே மாட்டம் என்று அடம் பிடிக்கின்றார்கள்.........🫣
-
கடவுளின் பிரதிநிதிகள்
🤣.......... ஒரு நாலைந்து பூனைகள் உரிமையாளர்கள் இன்றி இங்கு சுற்றித் திரிகின்றன. அருகிலேயே ஒரு பள்ளிக்கூடம் இருக்கின்றது. அங்கே தான் தங்குகின்றன போலும். என் வீட்டில், சொந்தமாக, நாய் பூனைகள் இல்லை. குருவிகள் முந்தி இருந்தன. இப்ப அவையும் இல்லை.
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
இங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் வாழும் மக்கள் மிக அதிகம். ஆனால் அவர்கள் எல்லோரும் இப்போது எல்லை தாண்டி வந்தவர்கள் அல்லர். பலர் பல வருடங்களாகவே இங்கேயே இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன். நான் இருக்கும் ஊரின் எல்லைகளிலும் இந்த நான்கு வருடங்களில் சிலர் வந்துவிட்டனர். போகப் போக தான் இதனால் வரும் விளைவுகள் தெரிய வரும்.
-
கடவுளின் பிரதிநிதிகள்
'கடவுளின் பிரதிநிதி' புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்று. அவருடைய எல்லாக் கதைகளுமே புகழ்பெற்றவை தான். தலைப்பை அங்கிருந்து எடுத்து, மிகுதியை நான் முயன்றிருக்கின்றேன். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது என்றும் ஓயாத ஒரு கேள்வியே. **************************** கடவுளின் பிரதிநிதிகள் ------------------------------------ சுரீர் என்று வெயில் கொட்டித் தீர்த்த மழையின் பின் பூமியின் ஈரம் துவட்ட என்று கொளுத்திக் கொண்டிருந்தது கவிழ்ந்த அரைக் கிண்ண வானத்தில் நீலம் அன்றி வேறெதுவும் இல்லை சூரியனுடன் சொட்டிச் சொட்டி ஈரம் காய்ந்த மரங்கள் எங்கும் பாலர் வகுப்பு பிள்ளைகளாக குட்டிக் குட்டி குருவிக் கூட்டங்கள் இரண்டு பூனைகள் இரண்டு மனிதர்கள் என்று மெதுவாக நடமாட்டம் தொடங்கியிருந்தது நடப்பம் என்று நடந்தவன் நிமிர்ந்து என்ன அழகான நாள் என்று விட்டு குனிய காலடியில் ஒரு மண்புழு நாலடி நடைபாதை அதில் அப்புழு ஒரு அடி தூரம் ஊர்ந்து விட்டது இன்னும் மூன்றடி இது எப்படி போகும் இந்த வெயிலில் கடக்க முன் எப்படியும் இறந்தே போகும் என்று விட்டு கடந்து போனவனுக்கு கடவுளின் எண்ணம் வந்தது ஒரு கடவுள் இருந்தால் ஒரு மனிதனும் ஒரு மண்புழுவும் ஒன்று தானே அவருக்கு இப்ப இந்த மண்புழுவை காப்பாற்ற நினைத்தால் அந்தக் கடவுள் என்ன செய்வார் என்று நின்று யோசித்தான் திரும்பி நடந்து சிறு குச்சியால் அப்புழுவை தூக்கி மூன்று அடிகள் தள்ளி புல்லில் விட்டு விட்டு நடையை தொடர்ந்தான்.
-
"யாரோ? நான் யாரோ ?"
எல்லா சாமியார்களையும் ஒரு வரிசையில் விட்டு, அடித்து துவைத்து இருக்கிறீர்கள் போல, தில்லை ஐயா.................🤣
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம்
மிகவும் சிறப்பு......👏 பல தடவைகள் வாசித்தேன், இவை என் ஞாபகத்தில் தங்க வேண்டும் என்பதற்காக....🙏
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
டெக்சாஸ் முதல் தொகுதி மக்களை கலிபோர்னியாவிற்குத்தான் அனுப்பியது.......😀 இப்படியான ஒரு செய்தியையும் இங்கு நான் கேள்விப்படவில்லை. கலிபோர்னியா மிகக் கவனமாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரிலும் இன்னார் இன்னார் தான் இருக்கலாம் என்பது போல ஒரு எழுதாத சட்டம் இங்கே......🤣.....வீட்டு விலைகளும் அதற்கேற்ப ஒவ்வொரு மட்டங்களில். இங்கு இந்த அகதியாக வந்த மக்களை எங்கு குடியிருத்தி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நியூஸ் 18 இல் 'தேர்தல் கச்சேரி' என்று ஒன்று தினமும் போடுகின்றனர். அமெரிக்க மேற்கு கரை நேரப்படி பின்னேரம் 6 மணிக்கும், வேறு சில நேரங்களிலும். முழுச் சிரிப்பு. நேற்று வாசன் அவரின் வேட்பாளர் இல்லாமலேயே அவரின் மற்ற தொகுதியில் வாக்குக் கேட்டதையும் அதில் போட்டுக் காட்டினர்...அதற்கும் ஒரு மீம்ஸ்.....
-
காலை உணவு எல்லோருக்கும் அவசியமா? அரசனைப் போல சாப்பிட்டால் என்ன ஆகும்?
😀.... 👍....... இது ஒரு சாதாரண உடல் நிலை தான். நீங்கள் சொல்வது போல பரம்பலில் நான் ஒரு கரையில் நிற்கின்றேன்......😀 அப்ப என் இதயத் துடிப்பும் 50 தான் இருந்தது. அதற்கும் அந்த மருத்துவர் கொஞ்சம் அதிகமாகவே துடித்தார். இப்ப மேல ஏறி 60 தாண்டி விட்டது.
-
ஒரு கிலோ விளாம்பழம்
👍...... நான் உங்களின் இந்த ஆக்கத்தை முன்னர் பார்த்திருக்கவில்லை. இந்த விளாம்பழ விலை பேரம் எனக்கு நடந்த ஒரு அனுபவம், 2020ம் ஆண்டு அங்கு போயிருக்கும் போது. அதை வைத்து, கொஞ்ச கற்பனையையும் கலந்து எழுதினேன். 👍... நீங்கள் சொன்னவுடன் காயை நாங்களும் அப்படி சாப்பிடும் முறை நினைவில் வந்தது.....
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நேற்று ஓபிஎஸ்ஸை பார்த்தீர்களா? அவருடைய பலாப்பழ சின்னத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டே இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி விட்டார்.........பின்னர் சமாளித்து, பழக்க தோசம் என்று சொன்னார். நேற்று ஒரு கூட்டத்தில் காயத்ரிக்கு 'கனிமவளம்' என்ற சொல்லு வரவே மாட்டன் என்று அடம் பிடித்தது. பக்கத்தில் நின்றவர் டியூசன் எடுக்கின்றார். அப்பவும் கனிமவளம் வரவில்லை. கடைசியில் கல், மண், பாறை என்று நிகரான சொற்கூட்டம் ஒன்றை அவருக்கு சொல்லிக் கொடுத்து சமாளித்தனர். விந்தியா ஒரு பிரச்சாரத்தில் சொன்னார் திமுகவிற்கு ஓட்டு போடுவதும், குரங்கிற்கு கோட் போடுவதும் ஒன்று தான் என்று. ஒரு எதுகை மோனைக்காக என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள்........😀 துன்பம் வரும் போது சிரி என்றார்கள், அது கஷ்டம், ஆனால் தேர்தல் வந்தால் சிரிப்போ சிரிப்பு......
-
ஒரு கிலோ விளாம்பழம்
👍..... சீனியுடன் கலந்தால் அதன் சுவை சொல்லி மாளாது. இளம் காயை உடைத்துச் சாப்பிட்டால் தொண்டை கட்டினது போல அடைத்து விடும். விளாமரம், இலந்தை போன்றவற்றில் அவைகளில் இருக்கும் முட்களையும் தாண்டி ஏறி இறங்கியிருக்கின்றோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க கொஞ்சம் அதிசயமாகவே இருக்கின்றது.
-
ஒரு கிலோ விளாம்பழம்
👍.... அடியார் மடம் என்றால், உங்களுக்கு வெங்கடாசலம் மாஸ்டரை தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
-
ஒரு கிலோ விளாம்பழம்
🙏........... விளையாட்டுகள் தான் நான் எழுதாதற்கு காரணம். எப்போதும் ஏதாவது விளையாடுவேன். மிகுதியாக கிடைக்கும் நேரத்தில் வாசிப்பு, சினிமா என்று போய்விடும். எப்பவோ ஆரம்பித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகின்றது. இப்பவாவது ஆரம்பித்தேனே என்று நிறைவடைய வேண்டியது தான்...........😀
-
காலை உணவு எல்லோருக்கும் அவசியமா? அரசனைப் போல சாப்பிட்டால் என்ன ஆகும்?
🤣...... எனக்கு தொடர்ச்சியாக 50 ஐ விடவும் குறைவாக இருந்தது. இங்கு என்னுடைய சில நண்பர்கள் என்னை 'லோ சுகர் சாமியார்' என்று அப்பொழுது பகிடி பண்ணுவார்கள். அப்பொழுது முட்டை சாமியார், தேசிக்காய் சாமியார், சவுக்கடி சாமியார் என்று தமிழ்நாட்டில் சாமியார்கள் உதயமாகிக் கொண்டிருந்த ஒரு காலம்...😀 இப்பொழுது 60 - 70 அளவில் இருக்கின்றது.
-
ஒரு கிலோ விளாம்பழம்
நன்றிகள் அல்வாயன். உங்களின் அடுத்த கவிதைக்கு காத்துக் கொண்டிருக்கின்றேன்.....😀....நல்ல பகிடிகள் உங்களின் கவிதைகள்.