Everything posted by ரசோதரன்
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது. இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை. இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம். மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால் அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே. பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம். இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது. அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம். மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்...........)
-
யாழில் நாய் இறைச்சி கொத்து.
மாட்டு இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று ஒரு குழு போராட்டம் நடத்துகின்றனர். பசு வதை செய்பவர்களை தலை கீழாக கட்டித் தொங்க விடுவோம் என்று அமித்ஷா அந்தப் பக்கம் முந்தாநாள் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கின்றார். வேள்வி அன்று கோயிலுக்கு போய் பார்த்தேன். சின்ன சின்ன கிடாய் ஆடுகளே ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலே. இந்த நிலையில், கொத்துக் கடைக்காரர்களிடம் 'என்ன, கொத்தில இறைச்சியையே காணல்ல...' என்று முறைத்தால், அவர்களும் தான் என்ன செய்யிறது? அதிகமாக கண்ணில் படுவதை பிடித்து அடிக்கின்றார்கள் போல. ஒவ்வொரு ஒழுங்கையிலும் எவ்வளவு என்கிறீர்கள்.......கூட்டம் கூட்டமாக நிற்கின்றன........எங்களைப் பார்த்து முறைத்த படியே.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣...... நீங்கள் அந்த மருத்துவர்கள் சொல்கின்ற 'வில்லங்கம்' பிடித்த ஆட்களில் ஒருவர். உங்களுடன் அவர்கள் மேற்கொண்டு கதைக்க மாட்டார்கள், வெறுமனே பில் மட்டும் தான் உங்களுக்கு தருவார்கள்......... சந்தையைக் கூட பார்க்கவில்லை, ஈழப்பிரியன். எதிரிலேயே Kings Park என்று ஒரு கடை. இன்னும் ஒரு பார்க் வேற இருந்தது. அவர்கள் மூன்று கடைகளுக்கும் போனார்கள். நான் கார் ஓட்டுனரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டுக் கொண்டிருந்தேன்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நாங்கள் போன கடையின் பெயர்: Queens Park. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சுன்னாகத்தில் பல இடங்கள் ஒரு விளம்பரத்துடன் இருக்குது போல........
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
ஆறு மாதங்கள் என்பது தான் பொதுவான நடைமுறை என்று நினைக்கின்றேன். சில வருடங்களின் முன், சிட்னியிலிருந்து இலங்கை போக இருந்த ஒரு உறவினரை பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு மாதங்களை விட குறைவாக இருக்கின்றது என்று பயணிக்க அனுமதிக்கவில்லை. சிங்கப்பூர் விமான நிறுவனம் என்று ஞாபகம்.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
பாஸ்போட்டில் ஏதாவது பிழை இருப்பது தெரிந்தவுடன், அதற்குப் பொறுப்பானவர்களுடன் கதைத்து, பாஸ்போட்டிலேயே ஒரு பக்கத்தில் குறிப்பு ஒன்றை எழுதி, அதன் கீழே உத்தியோக முத்திரை ஒன்றை குத்தக் கூடிய வசதி ஏதும் இருக்கும் என்றே நினைக்கின்றேன். அறிவு அதிகமாகச் சுடர் விட்டாலும், ஒரு சின்ன இருட்டும் அதன் கீழேயே இருக்கும் போல.......
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பற்றி அங்கே வேலை செய்த ஒரு வைத்தியர் சில விடயங்களை முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். வெறும் அடிப்படை சிகிச்சை ஒன்றை அளித்து நோயாளியை அப்படியே வைத்திருப்பது போன்றே அவர் சொல்வதாகத் தெரிந்தது. எல்லா வைத்தியசாலைகளும் இப்படியே என்றால், நோயாளிகள் எங்கு தான் நம்பிப் போவார்கள்? அமெரிக்கா மருத்துவம் இன்னொரு வகை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களே ஏறக்குறைய எல்லா பெரிய முடிவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. என்ன மருத்துவம், சிகிச்சை, எந்த மருத்துவமனை, எப்ப செய்வது என்று எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆனால், ஒரெயொரு நல்ல விடயம், பெரும்பாலும் முடிவுகளை உடனேயே எடுத்து, சிகிச்சைகளை ஆரம்பித்து விடுகின்றனர். கனடாவில் நண்பன் ஒருவன் ஒரு எம்ஆர்ஐ எடுக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்பொழுது அங்கே வேறொரு சிகிச்சைக்காக அவனை ஒரு வருடம் காத்திருக்கச் சொல்லியிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற கதைகளைக் கேட்டிருக்கின்றேன்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
நான் அவர்களை வேண்டாம் என்று சொன்னேன். சரியாகக் கோபப்பட்டார்கள். நீங்களே தள்ளினால், தூக்கினால், நாங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென்று அவர்களில் ஒருவர் கோபத்துடன் சொன்னார். ஒரு நிலையான கட்டணம் தான் என்றால் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், இவர்கள் என்ன கேட்பார்களோ என்ற சந்தேகத்திலேயே வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி விடுகின்றோம். சென்னை புகையிரத நிலையத்திலும் இதே கருத்தை அங்கு உள்ள பொதி தூக்கும் ஒருவர் முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார் - நீங்களே தூக்கினால், நாங்கள் என்ன செய்வது.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
கூகிள் இப்படிச் சொல்கின்றது: Rs 1000.00 per passenger (for maximum 04 baggages only) and Rs 250.00 for additional baggage for both Arrival and Departure round the clock.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். சில வருடங்களின் முன் என் அயலவரின் மகன் ஒருவர் திருமணத்தின் பின் தேனிலவிற்காக மாலைதீவு போயிருந்தார்.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
👍...... பாஸ்போர்ட்டை பக்கம் பக்கமாக பார்ப்பார்கள் என்ற தகவலே பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆக ஆச்சரியமான செய்தி, அங்கு வேலையில் இருந்த பலருக்கு எந்த மொழியும், அவர்களின் சொந்த மொழி கூட, எழுத வாசிக்கத் தெரியாமல் இருந்தது என்ற தகவல். 🤣..... மாலைதீவிற்கு ஒரு தரம் போய் வருவமோ என்று என்னைப் போலவே உங்களுக்கும் ஒரு ஐடியா இருக்குது போல...😀
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
கசகிஸ்தான் போய் வந்த தன்னுடைய சமீபத்திய அனுபவம் ஒன்றை ஜெயமோகன் எழுதியுள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பயணம், வசதிகள் என்று முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு போவதால் வரும் சிக்கல்களை நன்றாக எழுதியிருக்கின்றார். எந்த எந்த நாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையும் பயனுள்ளதே. ************************ கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும் -- ஜெயமோகன் -- May 16, 2024 -------------------------------------------------------------------------------------------------- நண்பர் கிருஷ்ணன் தான் கசகிஸ்தான் திட்டத்தைப் போட்டது. அவர் கருதியது ஒன்றே, விசா தொல்லைகள் இல்லை. டிக்கெட் கட்டணம் கம்மி. நேராகச் சென்றிறங்கி, சுற்றிப்பார்த்து திரும்பி விடலாம். நானும் அவருடைய பயணத்திட்டங்களில் இணைந்துகொள்வதையே இப்போதெல்லாம் செய்கிறேன். தனியாக திட்டமிடுவதில்லை. மண்டை வேறு வேறு விஷயங்களில் மாட்டிக்கிடக்கிறது. நாகர்கோயிலில் இருந்து ரயிலில் பெங்களூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று, டெல்லியில் இருந்து கசகிஸ்தான் செல்லும்படி கிருஷ்ணன் திட்டமிட்டார். அனைவரும் ஒன்றாக திரண்டு செல்வதற்கு அது உகந்தது என்பது அவர் கணக்கு. நானும் யோசிக்கவில்லை. செல்வேந்திரன் “ஏன் சார் நான் மெட்ராஸிலே இருந்து பெங்களூர் வந்து டெல்லி போகணும்?” என்றபின்னர்தான் அந்த அபத்தம் உறைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை, டிக்கெட் போட்டாகிவிட்டது. பெங்களூர் ரயில்நிலையம் விமானநிலையம் போல கட்டியிருக்கிறார்கள். ஆகவே அங்கே கட்டண ஓய்வறை இருக்கும், அங்கேயே குளித்து உடைமாற்றி விமானநிலையம் செல்லலாம் என நினைத்தேன். பல ஊர்களில் அப்படிச் செய்ததுண்டு. ஆனால் அங்கே இலவச காத்திருப்பு அறைதான் இருந்தது, கழிப்பறை நாறிக்கிடந்தது. வெளியே வந்து ஓர் ஆட்டோ பிடித்து ஒரு விடுதியை கண்டுபிடிக்கலாம் என முயன்றேன். ஆயிரம் ரூபாய் கேட்டார்கள், மூன்று மணிநேரத்துக்கு. ஆட்டோ டிரைவர் “நான் கொண்டுட்டு போறேன் சார், நல்ல நல்ல ஓட்டல்லாம் இருக்கு” என அழைத்துச் சென்றார். முக்கால் மணிநேரம் அவரே சுற்றித்தேடியும் அப்பகுதியில் ஓட்டல்களே இல்லை. இருந்த இன்னொரு ஓட்டலிலும் அதே ஆயிரம் ரூபாய். ஆட்டோவுக்கு கூடுதலாக முந்நூறு ஆயிற்று. அப்போதே ‘புறப்பட்ட ராசி’ சரியில்லை என தோன்றியது. டெல்லியில் இருந்து பின்னிரவில் விமானம் ஏறி மறுநாள் காலை நான்கரை மணிக்கு கசகிஸ்தான் சென்றோம். விசா இல்லை என்பதனால் நேராக எமிக்ரேஷனில் சென்று நின்றோம். மற்றவர்கள் கடந்துவிட்டனர். என் பாஸ்போர்ட்டை அதிகாரி உற்று உற்று பார்த்தார். எழுந்து சென்றுவிட்டார். நான் நின்றுகொண்டே இருந்தேன். முக்கால் மணிநேரம். நடுவே ஒரு போலீஸ்காரர் வந்து என்னிடம் மீண்டும் ‘வரிசையில் சென்று நில், அங்கே நிற்கக்கூடாது’ என்று சைகையால் அதட்டினார். நான் “என் பாஸ்போர்ட், என் பாஸ்போர்ட்” என்று கூச்சலிட்டேன். அவருக்கு கஸாக் மொழி தவிர எந்த மொழியும் தெரியாது. அந்த அதிகாரி திரும்பி வரும் வரை வெவ்வேறு ஆட்களிடம் “என்ன பிரச்சினை” என மன்றாடினோம். எல்லாருமே சைகைதான். ஓர் உயரதிகாரி அம்மாள் வந்தார். உதிரி ஆங்கிலம் தெரிந்தவர். என் பாஸ்போர்ட்டில் பக்க எண்கள் மாறியுள்ளன என்றும், ஆகவே நான் கசகிஸ்தானுக்குள் செல்ல முடியாது என்றும் சொன்னார். நான் அந்த பாஸ்போர்ட்டுடன் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் சென்றிருக்கிறேன். எல்லா விசாக்களும் அதில் உள்ளன. அது ஓர் அச்சுப்பிழை. ஆனால் அதைச் சொன்னால் அந்த அம்மையாருக்கு அதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆங்கில அறிவில்லை. திரும்ப திரும்ப “நோ ரூல். யூ காண்ட் கோ” அவ்வளவுதான். “சரி, நான் திரும்பிச் செல்கிறேன். நீங்கள் கிளம்புங்கள்… உங்கள் பயணம் தடைபட வேண்டாம்” என்று நான் நண்பர்களிடம் சொன்னேன். அரங்கசாமி “இல்லை சார், அதெப்படி…” என்றார். “நீங்கள் சென்றால்தான் எனக்கு தேவையென்றால் உதவமுடியும். மேலும் பெரும்பணம் செலவழித்து நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் நாம் பணத்தை இழக்கும்படிச் சொல்ல முடியாது” என்றேன். ஒருவழியாக பயணத்தைத் தொடர அரங்கசாமி சம்மதித்த பிறகுதான் மற்ற நண்பர்களின் முகமே தெளிவடைந்தது. அவர்கள் சென்றபின் என்னை ஒரு நாற்காலியில் அமரச்செய்தனர். காலை ஐந்தரை மணிக்கு அமர்ந்தேன். காலை ஒன்பது வரை அங்கேயே இருந்தேன். நாற்காலியில் இருந்து எழுந்தால் ஒரு போலீஸ்காரர் கையால் உட்கார் உட்கார் என ஆணையிட்டார். மீண்டும் அமர்ந்தேன். தாகம், பசி. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூட அனுமதியில்லை. விமானநிலையமே காலியாகியது. அலமாட்டி கசகிஸ்தானின் இரண்டாம் தலைநகரம். ஆனால் தூத்துக்குடி அளவுதான் இருக்கும் அந்த விமானநிலையம். எந்த அதிகாரியும் இல்லை. போலீஸ்காரர்கள் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் ஒவ்வொருவரிடமாக ஆங்கிலத்தில் “என்ன நடக்கிறது? ஏன் என்னை அமரச்செய்திருக்கிறீர்கள்?” என மன்றாடினேன். அதே சைகை, கைகளால் அதட்டல். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஒரு போலீஸ்காரரிடம் உரக்க “சிறுநீர் கழிக்கவேண்டும்” என்றேன். பாண்டின் ஸிப்பை அவிழ்த்தால்தான் நான் சொன்னது அவருக்கு புரிந்தது. அவர் அழைத்துச்செல்ல, துப்பாக்கி முனையில் சிறுநீர் கழித்தேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை, காகிதமும் இல்லை. மீண்டும் சில விமானங்கள் வந்தன. பழைய அதிகாரிகள் அனைவரும் சென்று புதியவர்கள் வந்தனர். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. என் செல்பேசியில் இணைய இணைப்பு இல்லை. அங்கே இலவச இணைய இணைப்புக்கு வழியில்லை. ஐரோப்பா முழுக்க ஆங்காங்கே கிடைக்கும் இலவச இணையத்தை வைத்தே சமாளித்த நினைவில் நான் ‘இண்டர்நேஷனல் ரோமிங்’ போடவுமில்லை. அங்கே வைத்து அரங்கசாமி போட்ட நெட்பேக் ஐந்து நிமிடம் கழித்து வேலை செய்யவில்லை. ஒரு வழியாக இணைய இணைப்பு வந்தது. ஆனால் ஐந்து நிமிடம் இணையம் வேலைசெய்தால் இந்திய ரூபாயில் முந்நூறு ரூபாய் காலியாகிவிடும். ஒரே ஒரு ஃபோன் பேசினால் ஆயிரம் ரூபாய் கரைந்துவிடும். ஒரே நாளில் மூவாயிரம் ரூபாய்க்கு செல்போன் பயன்படித்து சாதனை புரிந்தேன். ஆனாலும் என் பிரச்சினையை ஆங்கிலத்தில் எழுதி கூகுள் வழியாக கசாக் மொழிக்கு மொழியாக்கம் செய்து அதை அவர்களிடம் காட்டினேன். அப்போதுதான் ஒன்று தெரிந்தது, காவலர்களில் பாதிப்பேருக்கு கஸாக் மொழியும் வாசிக்க தெரியாது. போலீஸ்காரர் இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி தெரிந்துகொண்டார். அங்கே பலருக்கு எந்த மொழியுமே எழுதப்படிக்கத் தெரியாது. முழுக்க முழுக்க கல்வியறிவில்லாதவர்கள்! கடைசியாக வந்த அதிகாரியிடம் என் மொழியாக்கத்தைக் காட்டினேன். அவருக்கு அப்போதுதான் தோராயமாக விஷயம் புரிந்தது. அவருடைய காபினில் என் பாஸ்போர்ட் இருந்தது, என்ன தகவல் என்று ஏதும் அவருக்கு தெரியவில்லை. அவர் உடனே என்னை ஓர் அறைக்கு கொண்டுசென்றார். விமானநிலைய ‘லாக்கப்’ அது. உடைசல்கள், சிக்கு பிடித்த மெத்தை போட்ட இரு கட்டில்கள். ஒரு நாற்காலி. சன்னல்கள் இல்லை. புழுதிவாடை. உள்ளே ஏற்கனவே இருவர் இருந்தனர். இருவருமே போலி பாஸ்போர்ட் பயணிகள். கஸகிஸ்தானின் பிரச்சினையே அதுதான். சுற்றிலுமுள்ள தாஜிஸ்தான், அசர்பைஜான், துர்க்மேனிஸ்தான் உட்பட பல்வேறு அரைப்பட்டினி நாடுகளில் இருந்து கசகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபடியே இருக்கிறார்கள். அந்த வழியாக ஐரோப்பாவுக்குள் செல்ல ஏதோ மார்க்கம் இருக்கிறது. வியட்நாம் பையன் இயல்பாக ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். அந்த ரேடியோ அவனை இடைவிடாமல் அதட்டுவதுபோல் இருந்தது. இன்னொரு ஆள் அவனுடைய ‘ரக்ஸாக்’கில் இருந்து ஏகப்பட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்து மீண்டும் உள்ளே வைத்து மீண்டும் வெளியே எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான். காலை பத்துமணி கடந்துவிட்டது. எனக்கு வேகவைத்த உருளைக்கிழங்கு, இரண்டு துண்டு ரொட்டி, ஒரு கோப்பை பழச்சாறு தந்தார்கள். நண்பர்கள் இந்தியாவுக்கு கூப்பிட்டுச் சொல்ல, உயர் அதிகாரம் கொண்ட என் நண்பர்கள் இந்திய தூதரகத்தை அழைத்துப்பேச, என்னிடம் தூதரக அதிகாரி பேசினார். அவர்களுக்கே மொழிச்சிக்கல். கஸாக் மொழிதான் அங்கே பேசவேண்டும், ஆனால் தூதரகத்தில் அம்மொழி தெரிந்தவர்கள் சிலர்தான். பேசிய வரையில் அவர்களுக்கு என் பாஸ்போர்ட் பலத்த சந்தேகத்தை கொடுத்துள்ளது என தெரிந்தது. அதில் அமெரிக்க விஸா இருந்ததனால் அந்த ஐயம் பெருகியிருந்தது. அவர்களின் நடைமுறை என்பது இதுதான். அந்த பாஸ்போர்ட்டை அவர்கள் பறிமுதல் செய்துவிடுவார்கள். அதிலுள்ள செய்திகளை நம் தூதரகத்துக்கு தெரிவிப்பார்கள். நம் தூதரகம் அதை இந்தியாவிற்கு அனுப்பி, சோதித்து, நான் இந்தியக் குடிமகனே என உறுதிசெய்து அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றை அவர்களுக்கு அளிக்கவேண்டும். என்னை அதன்பின் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைப்பார்கள். இந்தியத் தூதரகம் என்னை தனி ஆணைப்படி இந்தியாவுக்கு அனுப்பவேண்டும். அதுவரை நாலைந்துநாள் என்னை சிறையில் வைத்திருப்பார்கள். என் பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது. என் பாஸ்போர்ட்டில் பல விசாக்கள் இருந்தன. அதை நான் இழக்க முடியாது. அதிகாரி அதை அவர்களிடம் பேசினார். “அப்படியென்றால் அந்த பாஸ்போர்ட்டில் ‘டீபோர்ட்டட்’ என முத்திரை குத்தித்தான் தருவோம்” என்றனர். அப்படி முத்திரை குத்தினால் உலகில் பெரும்பாலான நாடுகளில் அதன்பின் நுழைய முடியாது. விசா எடுக்கும்போதெல்லாம் பிரச்சினை. அது முடியாது என்று தூதரக அதிகாரி அவர்களிடம் பேசினார். பிற்பகல் முழுக்க அந்தப் பேச்சுதான் போய்க்கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என எவரிடமும் கேட்க முடியாது, ஒரே ஒருவருக்கு மட்டும்தான் ஆங்கிலம் தெரியும். அவருக்கும் எந்த விஷயமும் தெரியாது. அந்த சின்னஞ்சிறு அறையில் வியட்நாம் மொழியின் அதட்டல் ஒலித்துக்கொண்டே இருந்தது. பிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றனர். இன்னொருவன் வந்து சேர்ந்தான். செய்யவேண்டியதைச் செய்தாகிவிட்டது, இனி யோசிக்கவேண்டாம் என முடிவு செய்தேன். மடிகணினியை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தேன். தமிழில் வேண்டாம், ஆங்கிலத்தில் எழுதலாமென முடிவு செய்தேன். நீண்டநாட்களாகிறது, ஆங்கிலத்தில் எழுதி. மண்டை முழுக்க தமிழ். தாய்மொழி மலையாளமே கூட தடுமாற்றம்தான். இருந்தாலும் எழுதினேன். நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி முடித்தேன். எல்லாமே அத்வைத வேதாந்தம் பற்றி. அவற்றை திரும்பத் திரும்ப செப்பனிட்டேன். ஆங்கிலத்தில் எழுதுவது காமிராவில் இரண்டு லென்ஸ்களை அணுக்கி, விலக்கி ‘போகஸ்’ செய்வது போலிருந்தது என் மனதையும் மொழியையும் இசைவடையச் செய்வது. ஆனால் அதன்பின் கட்டுரையை வாசித்தபோது பரவாயில்லை என தோன்றியது. ஆங்கிலத்துக்குரிய நடையழகு இல்லை, அது எளிதில் வரவும் வராது. ஆனால் எனக்குரிய மொழி ஒன்று இருந்தது. எந்த மொழியானாலும் ஒரு மனிதனின் மனம் தான் மொழிநடை என்பது. Style is the man. மாலை நான்கு மணிக்கு நான் டெல்லி திரும்ப ஒத்துக்கொண்டார்கள். என் பாஸ்போர்ட்டும் என்னிடம் ஒப்படைக்கப்படும் என்றார்கள். அதன்பின் அரங்கசாமி என்னிடம் அளித்திருந்த கடன் அட்டையால் டிக்கெட் போட்டேன். டிக்கெட் போட்டதும் ஒரு நிம்மதி, சரி கிளம்பவிருக்கிறோம். ஆனால் அதற்குள் தூதர அதிகாரி அழைத்தார். “பாஸ்போர்ட்டில் அமெரிக்க விஸா இருப்பதனால் யோசிக்கிறார்கள்” என்றார். விமானம் இரவு எட்டரைக்கு. ஏழரை மணி வரை எந்த தகவலும் இல்லை. ஏனென்றால் இன்னொரு அதிகாரி வந்துவிட்டார். அவருக்கு ஒன்றும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது. மீண்டும் பழைய நிகழ்வுகள். எட்டு மணிக்கு என்னை ஒரு காவலருடன் விமானத்திற்கு அனுப்பினார்கள். காவலர் என்னை ஒரு கேட் முன் அமரச் செய்துவிட்டு டிவி பார்க்கலானார். நான் பார்த்தபோது என் விமானம் கிளம்பும் கேட் வேறு ஒன்று. காவலரிடம் என் கேட் வேறு என எழுதி கஸாக் மொழியில் மொழியாக்கம் செய்து காட்டினேன். அவருக்குப் படிக்க தெரியவில்லை. இன்னொருவரிடம் காட்டி படிக்கச் சொல்லி புரிய வைத்தேன். சுருக்கமாக “அங்கே உட்கார்” என்றபின் டிவியில் மூழ்கினார். நான் மெல்ல பின்னகர்ந்து அப்படியே கூட்டத்தில் கரைந்து வந்து இண்டிகோ விமானத்தில் ஏறிவிட்டேன். போலீஸ்காரர் என்னானார் என தெரியாது. விமானம் மேலேறும் வரை பதற்றம். டெல்லி விமானநிலையம் வந்தேன். அப்படியே டார்ஜிலிங் சென்று சிலநாட்கள் இருந்துவிட்டு வரலாமென அரங்கா சொன்னதனால் டிக்கெட் போட்டிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு விமானம். இங்கே வந்து பார்த்தால் என் செல்பேசியில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போடுவதற்கான கேபிள் அரங்காவிடம் சென்றுவிட்டது. அரங்கா என்னிடம் ஒரு பேக்கப் பேட்டரி தந்திருந்தார். அந்த பேக்கப் பேட்டரியும் காலி. என் டிக்கெட் செல்போனில் இருந்தது. மீண்டும் பதற்றம், பிறகு ஒன்றை கண்டுபிடித்தேன். என் லேப்டாப் கேபிளால் பேக்கப் பேட்டரியை சார்ஜ் போட்டு அதனுடன் செல்போனை இணைத்து ஒருவழியாக சார்ஜ் செய்தேன். கண்கள் சொக்க டார்ஜிலிங் விமானத்தை பிடித்தேன். பாக்தோரா சென்றிறங்கியபோது மீண்டுவிட்டிருந்தேன். கசகிஸ்தான் முன்னாள் ருஷ்ய நாடுகளில் எண்ணை வளம் மிக்கது. ஆகவே பணபலம் உடையது. ஆனால் ஜனநாயகம் இல்லை. 16 டிசம்பர் 1991 ல் கசகிஸ்தான் சுதந்திரம் பெற்றது சோவியத் ருஷ்யாவின் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த நுருசுல்தான் நாசர்பயயேவ் அதன் சர்வாதிகாரியானார். அவருடைய குடும்பம்தான் மொத்த நாட்டையும் ஆட்சி செய்தது. எண்ணை நிறுவனங்களின் ஆதரவுடன் அவர் 2019 வரை ஆட்சி செய்தார். தன் பெயரையே தலைநகருக்கு போட்டார். காசிம் ஜோமார்ட் டோகயேவ் (Kassym-Jomart Tokayev) இப்போதைய அதிபர். இப்போதும் அதே சர்வாதிகாரம்தான், பழைய சர்வாதிகாரி குடும்பத்தின் உள்ளடி எதிர்ப்புகளும் உண்டு. நான் டார்ஜிலிங்கில் ஸ்டெர்லிங் விடுதியில் தங்கியிருந்தேன். காஃபி கிளப்பில் ஒரு முன்னாள் வெளியுறவு அதிகாரியுடன் பேச நேர்ந்தது, அவர் ராணுவ மேஜராகவும் இருந்தவர். அவர் நான் சொன்ன கதையை கேட்டுவிட்டு வெடித்துச் சிரித்தார். “உங்களுக்கு வலுவான அரசியல் தொடர்புகள் இருந்தது அதிருஷ்டம். நல்லவேளை உங்களுடன் பெண்கள் இல்லை. உங்கள் மனைவியின் பாஸ்போர்ட் இப்படி இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? நமது பெண்கள் அந்த ஊர் சிறையில் நான்கு நாட்கள் இருந்தார்களென்றால் அதன்பின் அவர்கள் உளரீதியாக மீண்டெழுவது கடினம்!” அவர் சொன்னார்; பயணச்செலவு குறைவு, விசா இல்லை, பலர் செல்கிறார்கள் என்பதெல்லாம் சுற்றுலா செல்வதற்கு ஓர் இடத்தை தேர்வுசெய்ய காரணங்கள் அல்ல. சொல்லப்போனால் இதெல்லாம் அவர்கள் நம்மை கவர்வதற்காக வைக்கும் பொறிகள் என்றே சொல்லவேண்டும். நாம் பார்க்கவேண்டியது மூன்றே விஷயங்கள்தான். ஒன்று, அந்த நாடு இந்தியாவுடன் இயல்பான நல்லுறவுடன் இருக்கிறதா என்பது. சிறிய அளவில் தூதரகப்பூசல்கள் இருந்தால்கூட தவிர்த்துவிடவேண்டும். ஏனென்றால் சிறிய அளவில் வெளியே தெரிகிறது என்றால் பெரிய அளவில் உள்ளே சிக்கல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள். இரண்டு, அந்த ஊரில் ஜனநாயகம் உள்ளதா என்பது முக்கியம். நாம் ஜனநாயகத்தை மட்டுமே பார்த்தவர்கள். ஆகவே நமக்கு ஒரு துணிச்சலும், அரசு, சட்டம், மனித உரிமை, சட்டபூர்வ உரிமை எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையும் உண்டு. நாம் எங்கும் சட்டம் பேசுவோம். ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த அதிகாரிக்கும் உண்மையான அதிகாரம் இல்லை என்பதே பொருள். எவரும் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். ஒத்திப்போடுவார்கள், தவிர்ப்பார்கள், இன்னொருவரிடம் தள்ளிவிடுவார்கள். ஏனென்றால் எவருடைய அதிகாரமும் வரையறை செய்யப்பட்டிருக்காது. முடிவெடுத்தவர் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை அழிந்துவிடும். நீதிமன்றம், காவல்துறை, ராணுவம் எல்லாமே டம்மிதான். சர்வாதிகாரியின் உள்வட்டம் மட்டும்தான் முடிவு எடுக்க முடியும். மிகச்சிறிய முடிவுகளைக்கூட அவர்களே எடுக்க முடியும். ஒரு ஜனநாயக நாட்டில் ஓர் அதிகாரி சட்டப்படி தன் வேலையைச் செய்யலாம், முடிவெடுக்கலாம், தப்பாகப் போனாலும் எவரும் எதுவும் செய்யமுடியாது, நீதிமன்றம் இருக்கிறது, தொழிற்சங்கங்கள் இருக்கின்றன, ஊடகங்கள் இருக்கின்றன. பார்க்கலாம் என்னும் தைரியம் இருக்கும். சர்வாதிகார நாடுகளில் சட்டம் எல்லாம் ஒரு கண் துடைப்பே. முறையான விசாரணை எல்லாம் இருக்காது. சிறை சென்றால் சென்றதுதான். வெளியே வர எந்த காரணமும் உதவாது. அங்கே தூதரகச் செல்வாக்கு மட்டுமே நம்மை மீட்கும். அதுவும் இல்லையேல் மூக்குப்பொடி டப்பாவை கீழே போட்ட குற்றத்துக்கு மரணதண்டனைகூட கிடைக்கக்கூடும். பல இஸ்லாமியச் சர்வாதிகார நாடுகளிலுள்ள ‘மதஅவமதிப்பு’ சட்டங்கள் கொடூரமானவை. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமியர் அல்லாத ஒருவர்மேல் குற்றம் சாட்டினாலே போதும், நேரடியாகச் சிறைதான். மூன்று, குறைந்த அளவிலேனும் ஆங்கிலம் பேசத்தெரிந்த நாடுகளுக்கே பயணம் செய்யவேண்டும். இல்லையேல் சிக்கல்கள் வரும்போது திகைத்து விடுவோம். அவர் இரண்டு வாரம் முன்புதான் இதே போல மாலத்தீவில் இருந்து ஒரு குடும்பத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே மீட்டார் என்றார். அங்கே ஒரு விடுதியில் பரிமாறுதல் தாமதமாகியது, வெள்ளைக்காரர்களை மட்டும் கவனிக்கிறார்கள் என்று குடும்பத்தலைவர் ஏதோ கத்திவிட்டார். மதநிந்தனை செய்ததாக இரு ஊழியர்கள் புகார் செய்ய மொத்தக் குடும்பத்தையும் அப்படியே தூக்கி உட்கார வைத்துவிட்டனர். எந்த தண்டனை வேண்டுமென்றாலும் கிடைக்கலாம். மீண்டும் வெளிச்சத்தையே பார்க்கமுடியாமலாகலாம். இவர் தன் முழுத்தொடர்புகளையும் பயன்படுத்தி கடுமையாக போராடி, பேரம் பேசி, பெரும் பணம் செலவிட்டு அவர்களை மீட்டார். இவர் அவர்களிடம் கேட்டார். “மாலத்தீவுதான் நம்மிடம் நல்லுறவுடன் இல்லையே. அங்கே இன்றைய அதிபரின் பிரச்சாரத்தால் கடும் மதவெறி தலைதூக்கியிருக்கிறது. ஒருவகையான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் இந்தியாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர். அங்குள்ள சாமானியர்கள் கூட இந்தியர்களை வெறுக்கின்றனர். எதை நம்பி அங்கே சென்றீர்கள்?” அவர்கள் வங்காளிகள், கல்லூரி ஆசிரியர்கள். குடும்பத்தலைவர் சொன்னார். “மாலத்தீவு அமைச்சர் சுற்றுலாப்பயணிகளை வரும்படி மன்றாடிய செய்தியை கண்டோம். எங்களுக்கு மோடியையும் பிடிக்காது. மனிதாபிமானக் கொள்கை அடிப்படையில் சென்றோம்” இவர் அதை நம்பவில்லை. சிரித்தபடி மேலும் விசாரித்தார். உண்மை வெளிவந்தது. அண்மையில் இந்தியச் சுற்றுலாப்பயணிகள் மாலத்தீவு செல்லாமாலானபோது அவர்கள் கடுமையான கட்டணத் தள்ளுபடிகள் அறிவித்திருக்கிறார்கள். செலவு குறைவாக ஆடம்பரச் சுற்றுலா என நினைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். “ஒரு நாடு மிகையான சுற்றுலா தள்ளுபடிகள் அறிவிக்கிறதென்றாலே ஐயப்படவேண்டும்” என்றார். நான் பெருமூச்சு விட்டேன். https://www.jeyamohan.in/200863/
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும். முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல. ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர். அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர். சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள். மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது. 'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது. இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர். நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார். பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன். (தொடரும்........)
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஏற்கனவே காவலர்களால் உடைத்து முறிக்கப்பட்ட தனது கையை பெண் காவலர்கள் மீண்டும் முறித்து விட்டார்கள் என்று நேற்று நீதிமன்றத்தில் சங்கர் சொல்லியிருக்கின்றார். காவலுக்கு தான் போகிறோம் என்று போயிருப்பார்கள்..... ஆளைப் பார்த்த பின், இன்னும் ஒருக்கால் உடைத்தால் என்ன கெட்டு விடப் போகின்றது என்று பின்னர் உடைத்தார்களோ தெரியாது... சங்கரை மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனைக்கு நீதிபதி இப்போது அனுப்பியுள்ளார்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... தேவாலயங்களைத் (வேதக் கோவில்கள்) தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்றாவது சொன்னார்கள். ஆனால் எவரையும், எதையும் நேருக்கு நேர் தட்டிக் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. சுத்தமாக அந்த துணிவு எனக்கில்லை, பலருக்கும் இருக்காது....... 👍.... சொல்லிப் பார்த்தேன், கேட்பது போல தெரியவில்லை.......... மிகுதியை கடைசியில் நோர்தேர்ண் ஹாஸ்பிட்டலில் வைத்துத் தான் சொல்ல வேண்டும் போல......🤣. அந்த தனியார் மருத்துவமனையை பற்றி எழுதுவதற்கும் சில விடயங்கள் இருக்கின்றன.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣......... ஆழமான கருத்துகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள், கோசான். ஆலயப் பிரவேசம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சில கேள்விகளை முன் வைக்கின்றது. எவராவது, எப்பவாவது இது பற்றி அங்கே கதைத்திருக்கிறார்களா என்று எனக்கு ஞாபகமில்லை. போராட்ட காலத்தில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. ஆனால், பெரும்பாலும், அவர்கள் கூட இந்த விடயத்தில் பட்டும் படாமலுமே இருந்தார்கள். கேரளாவில் பல கோவில்களில் ஆண்கள் மேலாடை அணிவது இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணம் பூணூலா அல்லது இல்லையா என்று பார்ப்பதற்கு அல்ல என்றே நினைக்கின்றேன். கோணேஸ்வரர் கோவிலில் வாசலில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். அவரின் பேச்சு அவ்வளவு தெளிவாக இருக்காது. காற்சட்டையுடன் போகின்றவர்களுக்கு ஒரு வேட்டியை எடுத்து நீட்டுவார். வேட்டிகள் ஒரு குவியலாக அவர் பக்கத்தில் இருக்கும். அருகிலேயே காற்சட்டையுடன் உள்ளே போகக் கூடாது என்று ஒரு அறிவித்தலும் இருக்கும். நயிணை நாகபூசணி அம்மன் கோவிலின் உள்ளே மேல் சட்டையுடன் போகலாமா, இல்லையா என்று தெரியவில்லை. இரண்டையும் அங்கே சொன்னார்கள். சிறிது நேரம் வெளியில் நின்று விட்டு, அங்கேயும் வீதியில் இருந்த ஒரு மரத்தின் கீழ் போய் இருந்து விட்டேன். வெளியில் மிக நல்லாகவே இருந்தது நல்ல காற்றோட்டத்துடன் தலதா மாளிகையில் அவசரமாக புது உடுப்பே வாங்க வேண்டியதாகப் போய் விட்டது. விபரமாக அதை பின்னர் எழுதுகின்றேன். கோவில் வீதிகள் கோவில்களுக்கே சொந்தமானவை. ஆனாலும் இவ்வளவு கெடுபிடி தேவையில்லை என்பது என் அபிப்பிராயமும். நானும், பிள்ளைகளும் தினமும் திருவிழாவிற்கு போகவில்லை. அது சாத்தியம் இல்லை என்று முக்கியமானவர் அடுத்த நாளே புரிந்து கொண்டார்.....🤣
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
அன்னதானம், நீர்ச்சோறு, புளியோதரை, வடை, பொங்கல் என்று மிக அருமையான உணவுகள் தினமும். இரவுத் திருவிழாக்களின் பின்னர் இட்லி, தோசை, இடியப்பம் என்றும் கொடுத்தனர். கோவில் திருவிழாக்களில் புலம் பெயர்ந்தவர்கள் சிலர் கொஞ்சம் 'படம்' காட்டுகின்றார்கள் தான், மறுப்பதற்கு இல்லை, ஆனால் இந்த திருவிழாக்கள் ஊருக்கு பொதுவாக அனுகூலமானவை என்றே நினைக்கின்றேன். வல்வெட்டித்துறை - தொண்டமானாறு பிரதான வீதி, 752/763 பஸ் பாதை, கோவிலுடனேயே இருக்கின்றது, அம்மன் கோவிலின் வடக்கு வீதியுடன். பிரதான வீதியில் மேல் சட்டையுடன் சாதாரணமாக போய் வரலாம். ஆனால் பிரதான வீதியை ஒட்டியே இருக்கும் மணலில் கால் வைப்பதற்கு வேறு விதிகள்.....😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் எதுவுமே மாறாவில்லை என்றே தெரிந்தது. அதே 'மிரட்டல்' பார்வை அன்றிலிருந்து இன்று வரை தொடர்கின்றது. யாரும் மிரட்டலாம். நான் கூட யாராவது கோவில் வீதியில் மேல் சட்டை போட்டிருந்தால், 'ஆ, சட்டையை கழட்டலாம்...' என்று அந்த அகப்பட்ட மனிதரை மிரட்டலாம்........😀.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
👍... நீங்கள் சொல்வது மிகச் சரியே. அவர்களிடம் இருப்பவை மற்றும் ஒரு தொடர் பழக்கமே பல நடைமுறைகளை நிர்ணயிக்கின்றன. பெரிய கரண்டியால் சீனியை அள்ளிப் போடாமல், சிறிய ஒரு கரண்டியால் போடலாம் தானே என்று தான் அங்கேயும் சொன்னேன். அது ஒரு சிரிப்பாகவே முடிந்தது. வவுனியாவில் இருக்கும் உடன் பிறந்த தங்கையின் வீட்டில் தான் இது நடந்தது. 'போடா, எல்லாம் படித்துக் கிழித்தவர் சொல்ல வந்திட்டார்....' என்று இலகுவாக என்னை மறுத்து விட்டாள் என் தங்கை........😀. ஆச்சரியமாக அவர்களில் எவருக்கும், எனக்குத் தெரிந்த வரையில், தொடர் சுகயீனங்களோ அல்லது உடல்நலக் குறைகள் ஏதும் இருப்பதாகவோ தெரியவில்லை.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம். எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும். சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே. அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது. இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே. திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது. மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது. தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது. (தொடரும்..........)
-
Am I myself ? - சுப.சோமசுந்தரம்
நீங்கள் தமிழில் இதை எழுதியிருந்தது நன்றாக ஞாபகமிருக்கின்றது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
😀... சிலர் அப்படியும் நினைக்கின்றார்கள். ஒரு வீட்டில் கறி அள்ளும் பெரிய கரண்டியையே சீனியை எடுத்து போடுவதற்கும் பயன்படுத்தினர். 'வெள்ளை' நிறமான உணவுப் பொருட்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வளவு கெடுதல்களை விளைவிக்கும் என்று நாங்கள் வாசித்த, பார்த்த ஆயிரக்கணக்கான கட்டுரைகள் அங்கே இன்னும் போய்ச் சேரவில்லை..............
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
👍.... இவர்கள் ஓடும் ஓட்டத்திற்கு வாகனம் எந்த வருடத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் சீட் பெல்ட் இல்லாமல் இருப்பது பெரும் ஆபத்து அல்லவே. வரும் வழியில் சில பெரிய விபத்துகள் நடந்த இடத்தை ஓட்டுநர் காட்டி விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு விபத்து நடந்தால், பின்னர் அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு விபத்துகள் தொடராக நடக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையையும் ஓட்டுநர் சொன்னார். பின்னர் வேறொரு நாளில் வாகனம் திருத்துபவர் ஒருவருடன் கதைத்த பொழுது, தான் முன்னர் யாழ் - கொழும்பு வாகனம் ஓடியதாகவும், ஆனால் இப்போது அதை விட்டு விட்டதாகவும் சொன்னார். இரவில் குடித்து விட்டு வீதியில் படுத்திருந்த ஒருவரின் மேல் இவரின் வாகனம் ஏறிவிட்டது. அந்த இருட்டில் அந்த நபர் அங்கிருந்தது தனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நீங்கள் சொல்வது மிகவும் சரி, எந்த நிலையிலிருக்கும் வாகனத்தையும் திருத்த வேலைகள் செய்து தயாராக்கி விடுகின்றனர். வாகனப் புத்தகம் என்பது ஒரு பேருக்கு அன்றி, வாகனங்களில் இருக்கும் எந்த விதமான பகுதிகளுக்கும், வாகனத்தின் பெயருக்கும் சம்பந்தம் கிடையாது. மலாயன் கபே இல் டீ ஒன்று கொடுத்தார்கள். சீனியை குறைவாகப் போடுங்கள் என்று அவர்களுக்கு சொல்ல மறந்து விட்டேன், மற்றபடி ஓரளவு நன்றாகவே இருந்தது.