Everything posted by ரசோதரன்
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே. வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. 'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும். புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே. அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம். ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது. ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை. (தொடரும்..........)
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣...... இதே போன்ற ஒரு கற்பனை என்னுடன் கூட வந்த ஒருவருக்கும் வந்திருந்தது...........😀
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
🤣..... படம் எதுவும், ஒரு இடத்தை தவிர, எங்கேயும் எடுக்கவில்லை. அதனால என் பயணத்தில் இரண்டு 'படமும்' இல்லை என்று சொல்ல நினைத்தேன்........நாம என்னதான் அடக்கமாக இருந்தாலும், ஆள் வெளியிலிருந்து வந்திருக்கின்றார் என்று எப்படியோ கண்டு கொள்கின்றனர்.....100 ரூபா கச்சானை 200 ரூபா என்று கோவில் வீதியில் எனக்கு விற்றும் விட்டனர்....... 🤣
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
👍.... இதற்கு நேர்மாறான ஒரு விடயம் பின்னர் ஒரு நாள் நடந்தது.......
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
சாப்பாடு நல்லாகவே இருந்தது. சிங்கப்பூர், மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் போன்ற அதே வகை தெரிவுகளும், உபசரிப்பும்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
👍..... மூன்று கிழமைகள் ஊர் போயிருந்தேன். திரும்பி வந்தவுடன் கொஞ்சம் அசதியாகப் போய் விட்டது....
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)
-
மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
👍..................... நுங்கு எங்கும் தாராளமாகக் கிடைக்கின்றது. யாழில் பல இடங்களிலும் ஒன்று 200 ரூபா என்று விற்கின்றனர். ஆனால் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு. நுங்கை வெட்டி சீவிக் கொடுப்பவர் நுங்கை நெஞ்சருகே வைத்து கத்தியால் சீவுவது ஒரு பயத்தை உண்டாக்கியது. முந்தி நாங்களும் இப்படித் தான் வெட்டியும், சீவியும் இருக்கின்றோம். ஆனால் இப்பொழுது ஒரு இடைவெளி விழுந்து விட்டது....
-
யாழில் உணவகத்தில் புழு!!
👍... வணக்கம் ஈழப்பிரியன். மூன்று கிழமை லீவு முடிந்துவிட்டது.....😀
-
யாழில் உணவகத்தில் புழு!!
மூன்று கிழமைக்கு மேல ஊர் போய் நின்று விட்டு, நேற்றுத் தான் திரும்பி வந்தேன். யாழில் சில இடங்களில் 300 ரூபா மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டும் இருக்கின்றேன். இது எந்தக் கடை என்று சொன்னீர்கள் என்றால், திருவிழா நாட்களில் மரக்கறி என்று நினைத்து மச்சம் சாப்பிட்டதற்கு மனதார மன்னிப்பு கேட்க வசதியாக இருக்கும். அங்கு கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலில், சாப்பாட்டில் புழு இருக்குதா, அசையுதா அல்லது சோற்றுப் பருக்கை அதுவா அசையுதா என்று பேதம் பிரித்து பார்க்கும் பொறுமையையும் இருக்கவில்லை........... என்ன வெயிலும், வெக்கையும்.......புழுக்கள் கூட அடுத்த கொஞ்ச நாட்களுக்கு பதுங்கி வாழ்வது தான் அவைக்கு பாதுகாப்பு.....
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
இங்கு என்னுடைய தமிழ் நண்பர்களில் வெகு சிலரே ட்ரம்பின் ஆதரவாளர்கள். ஆனால் அந்த வெகு சிலரும் சரியான தீவிர ஆதரவாளர்கள். அவர்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கின்றது, அதற்காக வாதாடுகின்றார்கள் என்ற மரியாதை எனக்கு அவர்களின் மேல் இருந்தது. போன தடவை இங்கு ட்ரம்ப் தோற்ற போது, அவர் தோற்றதிற்கு காரணம் கள்ள வாக்குகளே என்று அந்த நண்பர்கள் சொன்னார்கள். இன்றும் சொல்கின்றார்கள். அவர்களின் மேல் இருந்த மரியாதை அன்றிலிருந்து கேள்விக்குறியாகி விட்டது..... அவர்கள் ஒரு ரசிகர் மன்றம் போன்று செயற்படுகின்றார்கள் என்று இப்பொழுது தோன்ற ஆரம்பித்துள்ளது.
-
பிறப்புரிமையான சுதந்திரத்தை எவரும் எழுதித்தர வேண்டியதில்லை! யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு:
ஒரு விடயத்தை தெளிவாக, பலருக்கும் விளங்குவது போல சொல்வதில் இவருக்கு சின்ன சிக்கல் இருக்கின்றது. இவருடைய வேறு சில பேச்சுகளையும் கேட்டிருக்கின்றேன். நான் நினைக்கின்றேன் இவர் தான் அப்பொழுது வாசித்து, அறிந்து கொண்டிருக்கும் வேறு சில விடயங்களையும் இவரின் அன்றாட பேச்சில் கலந்து விடுகின்றார் என்று. பெரும்பாலும் ஒரு தேவையும், தொடர்பும் இல்லாமல்.
-
தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி படுதோல்வி
தோல்வியின் பின்னர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது அல்லது கட்சியில் பெரும் மாற்றங்களை கொண்டு வருவன என்பன நல்ல முன்னுதாரணங்கள். வெளிநாட்டு சதிகள், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள், கள்ள வாக்குகள் என்று சில ஒரே மாதிரியான காரணங்களை சொல்லி, தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதமாகவே இருக்கும் தலைவர்களும், தொண்டர்களும் தான் இன்று அதிகம்.
-
மிஸோக்களுடன் சில நாள்கள்…
👍.... இந்தக் கட்டுரையில் எங்கள் நாட்டில் முன்னர் இருந்த 'சேனைப் பயிர்ச்செய்கை' என்ற விவசாய முறையையே மிஸோரம் மக்கள் இன்றும் தொடர்கின்றனர் என்ற விபரம் ஆச்சரியம் தந்தது. அது போலவே அவர்களின் தேசியத்திற்கான போராட்டமும், அதன் முடிவும், பெண்களுக்கு அவர்களின் சமூகத்தில் இருக்கும் சம உரிமையும் ஆச்சரியமான விடயங்கள். எளிமையான மனிதர்கள்......👍
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாளாந்தம் தக்காளி வியாபாரம் செய்யும் ஒருவர் காலையில் தக்காளி கொள்வனவிற்காக கொண்டு போன பணத்தை பறக்கும் படை தடுத்து எடுத்தது. அந்த வியாபாரி என்ன தான் செய்வார்? அழுதார்.....பாவம்.... தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து சில முன்னேற்பாடுகளை இன்னும் திறம்பட செய்யவேண்டும். திமுக எம்பி ராசாவின் வாகனத்தை சரியாகச் சோதனை போடவில்லை என்று அங்கு கடமையில் இருந்த பறக்கும் ஊழியர் ஒருவரை தமிழக தேர்தல் ஆணையாளர் சத்ய பிரதா சாகு பணி நீக்கம் செய்தார்... சத்ய பிரதா சாகு தமிழில் ஒரு விழிப்புணர்வு பாடல் பாடி வெளியிட்டிருக்கின்றார். ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில். இவர் நன்றாக முயல்கின்றார், ஆனால் அலிபாபாவும் 4000 திருடர்களும் என்ற கணக்கில் ஒவ்வொரு கட்சியும் இருக்கின்றது.....🫣
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
விருதுநகர் விஜய்காந்தின் பிறந்த ஊர் என்பதால் அவரின் மகனுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது என்றே எல்லோரும் சொல்கின்றனர். எனக்கு தனிப்பட்ட வகையில் விஜய்காந்த் மீது இருந்த அபிமானம் இன்னும் அவர் குடும்பத்தில் எவர் மேலும் வரவில்லை. மாறாக, குறிப்பாக விஜய்காந்தின் மனைவியும், அவர் மைத்துனரும் வெறும் பேரம் பேசும் வியாபாரிகள் போன்றே தெரிகின்றனர். அங்கு எல்லோருமே பேரம் தான் பேசுகின்றனர், ஆனாலும் இவர்கள், சரத்குமார் போன்றோர் இன்னும் சில படிகள் கீழே இறங்கினது போல உள்ளது.....😌
-
தேனும் விஷமும்
'அவன் சும்மாவே ஆடுவான், இதில நீங்கள் சலங்கை வேற கட்டி விடுகிறீர்கள்....' என்று ஒரு வழக்கு இருக்கின்றது......🤣
-
தேனும் விஷமும்
👍... நன்றி. இந்தப் பயண அனுபவத்தை எழுதலாம் என்று தான் நினைக்கின்றேன். 'இதயம் பேசுகிறது' மணியன் தான் அன்று பயணக் கட்டுரைகளில் ஒரே ஒரு நட்சத்திரம். ஆனால் அவரின் பாணி இன்று தேய்வழக்காகி விட்டது. இங்கு பலர், நீங்கள் உட்பட, பயணக் கட்டுரைகளில் அசத்துகிறீர்கள்.
-
சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு
🤣.......... 19ம் திகதி மட்டும் எல்லா கிளிகளும் சிங்காரித்துக் கொண்டு தான் இருப்பினம் போல....அதற்குப் பிறகும் exit poll எல்லாம் சுத்தப் பொய், தாங்களே வெல்லப் போகின்றோம் என்பினம்........கடைசியில் வாக்குகள் விலை போய் விட்டன என்று முடிக்கப் போகின்றார்கள். இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் கட்சி கூட அவர்களின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை நிற்பாட்டி விடுவோம், மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கொடுக்க மாட்டோம் என்று சொல்லுவது இயக்குனர் ஷங்கர் கூட இதுவரை செய்யாத ஒரு புதுமை.....😀
-
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம்
👍.... சேக்கிழார் பற்றிய இந்த விடயத்தை சிறு வயதில் சைவசமய பாடத்தில் படித்தது இப்பொழுது ஞாபகம் வருகின்றது. முற்றாகவே மறந்து இருந்தேன்....🙏 ** 'சேக்கிழார் இயற்றிய கம்பராமாயணம்' என்று தேர்தல் மேடைகளில் பேசப்படுவது என்றும் மறக்காது....😀
-
சிவப்புக்கல்
👍... இந்த வகை புனைவுகளில் சில விடயங்கள் சொல்லப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கும். அப்படியே நானும் முயன்றேன்.....😀 'கடவுள்கள்' என்று கருதப்படும் சில ஒரு காலத்தில் பூமிக்கு வந்து போன சில ஏலியன்கள்/வேற்றுக் கிரகவாசிகள் என்ற ஒரு கருதுகோளும் உண்டு....
-
சிவப்புக்கல்
(குறுங்கதை - அறிவியல் புனைவு) சிவப்புக்கல் -------------------- 'அம்மா.....' 'என்ன பிள்ளை.... போக வேணுமா?' அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 'ம்ம்.......' என்று இழுத்தான் அவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகியிருந்தது. அன்றைய இரவும் அவன் படுக்கையை ஈரமாக்கியிருந்தான். இதுவரை அவனின் அம்மா எதற்கும் சிறிதளவும் முகம் சுழித்தது இல்லை. ஒரே பிள்ளை, நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்தவன் என்று தங்கள் பிள்ளையை ஒரு தாம்பாளத்தில் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மாவும், அப்பாவும். அவனின் படுக்கையை ஈரமாக்கும் பழக்கம் பற்றி அம்மாவோ அல்லது அப்பாவோ உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது வேறொரு ஊரில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் அவனைக் கூட்டிச் சென்றனர். அந்த வைத்தியர் இது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை, இந்தப் பழக்கம் இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவாகவே நின்று விடும் என்று சொன்னார். இரவு நித்திரைக்கு போகும் முன் ஒரு தடவை கழிவறைக்கு போய் வருவது, இரவில் நேரம் பிந்தி எதையும் குடிப்பதை தவிர்ப்பது என்று சில ஆலோசனைகளையும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னார் அந்த மருத்துவர். மருந்துகளோ அல்லது வேறு சிகிச்சைகளோ வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் விட்டார். முக்கியமாக இந்த விடயம் அவன் மனதில் ஒரு குற்றமாக பதிந்து, அதனால் எதிர்காலத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேறு எதுவும் உளச் சிக்கல்களோ வருவது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற ஆலோசனையையும் சொல்லியிருந்தார். அம்மாவும், அப்பாவும் வேறு எவருடனும் இதைப் பற்றி கதைக்காமல் இருந்ததற்கு அயலூர் வைத்தியரின் இந்த அறிவுரையும் ஒரு காரணம். ஊரில் பலருக்கும், கிட்டத்தட்ட எல்லோருக்கும், ஏதோ ஒரு பட்டபெயர் இருந்தது. ஒருவர் இல்லாத நேரத்தில் அந்த நபரைப் பற்றிய கதை ஏதும் வந்தால், அவரின் பட்டப் பெயரை சொல்லிக் கதைப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். பல பட்டப் பெயர்கள் அந்தந்த ஆட்களின் உடலில் இருக்கும் குறைபாடுகளை குறிப்பன. இது பிழையென்று கருதும் அளவிற்கு இதை ஒரு பெரிய விடயமாக அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. வேறு சில பட்டப் பெயர்கள், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தவுடன், சிரிப்பை உண்டாக்கும். ஒருவரின் பட்டப் பெயர் - 11 மணி. அந்த நபர் இரவு 11 மணிக்கு இன்னும் ஒரு வீட்டின் கதவை அடிக்கடி தட்டினாராம், அதனால் அவரை '11 மணி' என்றே எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள். அவனின் பெற்றோர்கள் இப்படியான ஒரு பட்டப் பெயர் தங்களின் ஒரே மகனுக்கு வந்து விடக் கூடாது என்ற இன்னொரு காரணத்திற்காகவும் இந்த விடயம் பற்றி எவருடனும் கதைப்பதில்லை. ஆனாலும் அந்த வைத்தியர் சொன்னதிற்கு அடுத்த வருடமும், அவனின் ஒன்பது வயதில், அவனிடமிருந்து அந்தப் பழக்கம் போய் விடவில்லை. இன்னொரு ஊரில் ஒரு கோவில் இருக்கிறது என்றும், அங்கே போய் ஒரு நேர்த்திக் கடன் வைத்தால் நினைப்பது கிட்டும் என்றும் யாரோ வேறு ஏதோ ஒரு விடயத்தில் சொன்னதைக் கேட்டு, அவனின் அம்மாவும், அப்பாவும் அவனை அங்கு கூட்டிச் சென்றனர். அந்தக் கோவில் ஒரு பெரும் ஆலமரத்தின் உள்ளே இருந்தது. ஓங்கி அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் சில கிளைகள் பூமியை தொட்டும் தொடாமலும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளே கோவிலுக்குள் செல்லும் வாசல்கள். கோவில் என்பது தகரத்தால் கூரை போடப்பட்ட ஒரு சிறு மேடை மட்டுமே. மேடையின் நடுவில் கடும் சிவப்பு நிறத்திலான சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையின் தலை ஒரு பாம்பின் தலை போன்றும், உடல் பல கைகள் உடைய ஒரு மனித உடல் போன்றும் இருந்தது. அதை ஒரு பாம்பு தெய்வம் என்றே அங்கே உள்ளவர்கள் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கும்பிட்டு, சில தடவைகள் அந்தச் சிறு மேடையை சுற்றி வந்த பின், அங்கு பூசாரி போன்று இருந்த ஒருவர் அவனின் அம்மாவிடமும், அப்பாவிடமும் ஒரு சிவப்பு நிற துணித் துண்டைக் கொடுத்தார். அதை அவர்கள் ஆல மரத்தின் ஒரு சிறு கிளையில் சுற்றி, இறுக்கமான ஒரு முடிச்சு போட்டனர். பாம்புக் கோவிலில் நேர்த்தி வைத்து இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. சில நாட்களில் நடு இரவில் முழித்து எழுந்து அம்மாவை கூட்டிச் செல்லும் அவன், வேறு பல நாட்களில், இன்னும் அவனை அறியாமல், பழைய பழக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தான். சில காலை வேளைகளில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அம்மாவின் முகத்தில் வந்து போவதை அவன் பார்த்தான். தன்னாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவனுக்குள்ளும் இருந்தது. பின்னர், திடீரென சில நாட்களாக அவன் நடு இரவில் எழும்புவது இல்லை, அவனின் பழக்கமும் முற்றாக நின்று போனது. 'பிள்ளை, நீ இப்ப இரவில் எழும்புவதில்லை...' என்றார் அம்மா ஒரு நாள் காலையில். 'நீங்கள் அன்று கொடுத்த கல்லை நான் என்னுடனேயே வைச்சிருக்கிறன், அம்மா.' முகத்தில் திகைப்புடன், 'நான் எப்ப உனக்கு கல்லு கொடுத்தேன்...?' என்று அவனையே கூர்ந்து பார்த்தார் அவனின் அம்மா. 'அது தான், சரியாக இரண்டு கிழமைக்கு முன், இரவு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போனீர்கள். அன்று இரவு ஒரே வெளிச்சமாக இருந்தது. சந்திரன் எங்கட வீட்டிற்கு கொஞ்சம் கிட்ட வந்து பெரிதாக இருந்தது.' இரண்டு கிழமைக்கு முன் முழு அமாவாசை நாளே என்று அவனின் அம்மா திடுக்கிட்டார். 'அன்று கல்லை கொடுத்து நான் என்ன சொன்னேன், பிள்ளை?' 'இந்தக் கல்லை என்னுடன் வைத்திருக்கச் சொன்னீர்கள். இது என்னோட இருந்தால் என் பயமும், பழக்கமும் போயிடும் என்றும் சொன்னீர்கள்.' அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக அவனின் அம்மாவிற்கு நினைவில் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கவும் முடியாது என்றவர், 'எங்க, அந்தக் கல்லை எடு பார்ப்பம்...' என்றார். அவனுடைய காற்சாட்டைப் பையிலிருந்து அவன் ஒரு கல்லை எடுத்தான். அழுத்தமான, உருண்டையான அந்தக் கல் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது.
-
தேனும் விஷமும்
🙏... மிக்க நன்றி, கோஷான். இங்கு நீங்கள் பலர் மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். சிலருக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது. ஜஸ்டின் போன்ற சிலர் ஒரு கலைக்களஞ்சியம் அளவிற்கு தகவல்களை அறிந்து வைத்திருக்கின்றனர். கவிஞர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், சிந்தனையாளர்கள்..........எல்லாவற்றிற்கும் மேலாக பலர் நட்புடன் ஆதரவளிப்பவர்கள்... இந்த வெள்ளியிலிருந்து அடுத்த மூன்று வாரங்களுக்கு களத்திற்கு நான் வருவது குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஊருக்கு போகின்றேன். அதன் பின்னர், விட்ட இடத்திலிருந்து ஒடி உள்ளே வந்து விடுவேன்....😀
-
தேனும் விஷமும்
😀... 'தேன் தடவிய விஷம்' என்று நீங்கள் சொல்லியிருப்பது மிகப் பொருத்தம்....
-
குரு தட்சணை
🙏... பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, சில இரவுகளில் அவர்களின் கதைப் புத்தகங்களை அவர்களுக்கு வாசிக்கச் சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் அதுவும் நின்று விட்டது. அப்பிள் நிறுவனம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது......😀