Everything posted by பிழம்பு
-
வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர்
Published By: Vishnu 17 Oct, 2024 | 11:23 PM வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வியாழக்கிழமை (17) பொது அமைப்புக்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. அக்கூட்டத்தில் இராணுவ வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடி யேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அதன் போது, காணி தொடர்பாகவும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பல கோரிக்கைகளை முன் வைத்து பலர் தமது மன ஆதங்கங்களையும் வேதனைகளையும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரரிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். அதன் போது கருத்து தெரிவித்திருந்த சந்திரசேகர், வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பான விவரங்களையும் கோரியுள்ளார். எனவே வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள காணிகள் பெரும்பாலானவற்றை விடுவித்து தருவதாக அங்கு கூடியிருந்த பொது அமைப்புக்கள் மற்றும் மக்களிடம் உறுதிமொழி அளித்தார். வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
-
மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமா? - உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வாதங்கள்
புதுடெல்லி: கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால் அது குற்றமாகக் கருத வேண்டுமா என்பது குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இதில் கவனிக்கத்தக்க வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 18 வயதுக்குக் குறையாத மனைவியுடன் கணவன் கட்டாய பாலுறவு கொள்வது அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமல்ல என பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 375, விதிவிலக்கு 2 கூறுகிறது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது திருமண உறவுகளை பாதிக்கும்; கடுமையான இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இதனை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, அதை இறுதியில் பார்ப்போம் என குறிப்பிட்டார். அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (All India Democratic Women's Association) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கருணா நண்டி, பாலியல் செயலில் பெண்ணின் சம்மதம் மிகவும் முக்கியம் என வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி, ஒருவர் தன் மனைவியிடம் பலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டதாக நீதித் துறை அறிவித்தால் அது புதிய குற்றமாக உருவாக்குமா என்று கேள்வி எழுப்பினார். பாலியல் வன்கொடுமை என்பதற்கான வரையறையை எவ்வாறு நிர்ணயிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து தனது வாதத்தை முன்வைத்த கருணா நண்டி, "பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 375-ல் உள்ள விதிவிலக்கு 2, பெண்ணின் உரிமையை பறிக்கிறது. பாலியல் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு, கணவனாக இருந்தாலும், வேறு நபராக இருந்தாலும் ஒன்றுதான். ஒரு பெண் லிவ்-இன் உறவில் இருந்தால், சம்மதமின்றி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது. ஆனால், ஒரு திருமணமான பெண் மீண்டும் மீண்டும் மிகக் கொடூரமான செயலுக்கு கணவனால் உள்ளானால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்று சட்டம் கூறுகிறது. திருமண உறவில் இருக்கும் பாலியல் வன்கொடுமை விதிவிலக்கு, பாலின சமத்துவத்தை மீறுவதாக உள்ளது. பாலியல் வன்கொடுமையை பிஎன்எஸ் குற்றமாகக் குறிப்பிடுகிறது. ஆனால், கணவன் என்ற அந்தஸ்தின் அடிப்படையில் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அவரை முழுவதுமாக குற்றத்தில் இருந்து விலக்கி வைக்கிறது. எனவே, இதனை அரசியலமைப்புக்கு ஏற்ப கொண்டு வர வேண்டும். இங்கிலாந்தின் தலைமை நீதிபதியாக 1736-ல் இருந்த மேத்யூ ஹேலி, அளித்த தீர்ப்புதான் இன்றைக்கும் இந்த விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர் தனது தீர்ப்பில், கணவன் - மனைவியை ஓர் உடல் என கருதினார். கணவன் பாலியல் வன்கொடுமை குற்றவாளியாக இருக்க முடியாது என்றும் அவர் அளித்த தீர்ப்பு கூறுகிறது. பரஸ்பர திருமண சம்மதம் மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் மனைவி, கணவனுக்கு உரிமையை கொடுத்துள்ளார் என அதில் உள்ளது. எனனும், மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்வதை 2003-ல் குற்றமாக இங்கிலாந்து மாற்றிவிட்டது" என குறிப்பிட்டார். மனைவியுடனான பாலியல் வன்கொடுமையை குற்றமாகக் கருதுவது திருமண உறவை பாதிக்கும் என மத்திய அரசு கூறி இருப்பதற்கு பதில் வாதத்தை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து வாதிட்ட கருணா நண்டி, திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது திருமணம் எனும் நிறுவனத்தை அழிக்காது என்றும், திருமணம் தனிப்பட்டது; நிறுவன ரீதியானது அல்ல என்றும் குறிப்பிட்டார். மனைவியை கணவன் பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமா? - உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வாதங்கள் | Marital rape SC hearing: Harm no different if raped by stranger or husband - hindutamil.in
-
தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு!
தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு! தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் இன்று மாலை ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமாகிய இராமலிங்கம் சந்திரசேகரம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதோடு யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களும் மேள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு அலுவலகத்தின் நாடாவை வெட்டி திறந்து வைத்தார் முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன்,மற்றும் முன்னாள் மருத்துவ நிர்வாக அதிகாரி எஸ்.சிறீ.பவனந்தராஜா,அதிபர் ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன்,தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி மகளீர் அணி அமைப்பாளர் வெண்ணிலா இராசலிங்கம்,ஆசிரியர் காரளசிங்கம் பிரகாஸ்,மென்பொருள் பொறியாளர் உதயகுமார் கீர்த்தி ஆகிய வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். (ப) தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் திறந்து வைப்பு! (newuthayan.com)
-
இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகிறது. தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள். அதனால், தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் காணப்படுகின்றனர். வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும். நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் செயற்படுவோம். தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்துச் செல்வோம். கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை, பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் சென்றோம். நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில்தான் கொரோனா தொற்றும் அதை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடர் மிகுந்த காலப்பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம். நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன்தான் காணப்படுகின்றன. எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார். அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும்போது, தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு, பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும்போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதார பலமும் காணப்பட்டது. அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்சக்கணக்கான மக்களை இழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது. தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் அடுத்து வருவோரும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை. மீண்டுமொரு இனக்கலவரமோ, தனி சிங்கள சட்டமோ கொண்டுவரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாள்வது? ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன் | Virakesari.lk
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு!
Published By: Digital Desk 7 17 Oct, 2024 | 05:16 PM ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகம் இன்று வியாழக்கிழமை (17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் இந்த கட்சி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு! | Virakesari.lk
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் தேங்காய் மொத்த விலை 160க்கு கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு | Virakesari.lk
-
மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம்
17 Oct, 2024 | 05:59 PM கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்தபடியாக பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது. இந்நிலையில் என் மீதும் எனது தந்தையார் மீதும் பழி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரமுமற்ற வீண் குற்றச்சாட்டுகளை தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக முன்வைத்து வருகின்றனர். இந்த ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது யார் என பார்த்தால் கடந்த காலத்தில் எம்மோடு நேரடியாக போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளும், எமது சமூக சேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுமே இவ்வாறு பொய்யாக வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். இவ்வாறானவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு பதில் கூறவேண்டிய தேவை எமக்கில்லை. ஆனாலும் நம் மக்களை தெளிவுபடுத்தவேண்டிய தேவை நமக்குண்டு. அதனால்தான் சத்திய கடதாசி ஊடாக நாம் எமது ஆதாரங்களை முன்வைத்து, புதிதாக எந்த ஒரு மதுபானசாலை அனுமதியையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம் | Virakesari.lk
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ] அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com) அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)
-
நாடுவானில் தொழில்நுட்ப கோளாறு ; மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்பியது விமானம்
11 Oct, 2024 | 01:10 PM சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கிப் பயணித்த விமானம் ஒன்று சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னர் தொழினுட்ப கோளாறினால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாது. இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல் - 265 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் வேறு விமானத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொழினுட்ப கோளாறுக்குள்ளான விமானத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கைகளைப் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாடுவானில் தொழில்நுட்ப கோளாறு ; மீண்டும் கட்டுநாயக்கவிற்கு திரும்பியது விமானம் | Virakesari.lk
-
மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால்
மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் 11 Oct, 2024 | 02:06 PM யாருக்கும் மதுபானசாலைஅனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான் என்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டேன். உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. அத்துடன் நான்; எனக்கோ என்னுடைய குடும்பத்துக்கோ, உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ அல்லது எனக்குத் தெரிந்த யாருக்கோ மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தைக் கோரவோ அல்லது மத்தியஸ்தம் பண்ணவோ இல்லை என்பதை உறுதிப்படுத்தி வெளிப்படையாக ஒரு வாக்குமூலத்தை வழங்குகிறேன். மாவட்டத்தின் என் சக வேட்பாளர்கள் குறிப்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே செய்ய வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். அண்மைய மாதங்களில் வடக்கில் பல மதுபானக்கடைகள் தோன்றியதன் காரணமாக நாளாந்தக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால் | Virakesari.lk
-
வன்னியில் 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 423 பேர் களத்தில்!
11 Oct, 2024 | 04:19 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 சுயேட்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத் சந்திர தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த வகையில் இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகள், 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தன. அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 423 பேர் களத்தில்! | Virakesari.lk
-
சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால் சவால்களும் தொடர்கின்றன - உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா
11 Oct, 2024 | 04:26 PM ரொபட் அன்டனி இலங்கையில் பொதுவாக நோக்குமிடத்து சாதகமான வளர்ச்சி நிலை தெரிகிறது. வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால், மறுபுறம் வறுமை அதிகரிப்பு உள்ளிட்ட சவாலான நிலையும் நீடிக்கிறது என்று உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால வாய்ப்புகள் தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான புதிய அரையாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள உலக வங்கியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் இலங்கைக்கான பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் பல துறைகள் பங்களிப்பு செலுத்துகின்றன. கட்டட நிர்மாணத்துறையில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னரான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சி தேவைப்படுகிறது. சேவைகள் துறை பங்களிப்பும் அதிகரித்திருக்கிறது. சுற்றுலாத்துறை மற்றும் அந்நிய செலவாணி வருகை என்பன அதிகரித்திருக்கின்றன. இந்த செயற்பாடுகள் காரணமாக நடைமுறை கணக்கு மீதி சாதகமாக பதிவாகி இருக்கின்றது. அத்துடன் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்திருக்கிறது. வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்படவில்லை. தனியார் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. அரச வருமானமும் அதிகரித்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும்போது ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது சாதகமான பக்கமாக இருக்கிறது. ஆனால் மறுபுறம் வறுமை தொடர்ந்து அதிகரித்த மட்டத்தில் இருக்கிறது. பேரண்ட பொருளாதார வளர்ச்சி வறுமை குறைப்பில் தாக்கம் செலுத்தவில்லை. தொழிற்படை பங்களிப்பும் குறைவடைந்து இருக்கிறது. குடும்ப அலகு பட்ஜெட் அதிகரித்து இருக்கின்றது. சுகாதார மற்றும் கல்வித்துறைக்கான செலவுகள் குறைவடைந்து இருக்கின்றன. பொருளாதார வளர்சசி 4.4 வீதமாக இவ்வருடத்தில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், வாகன இறக்குமதி அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும்போது மேலும் டொலர் வெளிச்செல்கை அதிகரிக்கலாம். சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால் சவால்களும் தொடர்கின்றன - உலக வங்கியின் இலங்கை குறித்த பொருளாதார நிபுணர் ஸ்ருதி லக்டகியா | Virakesari.lk
-
திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சை குழுக்கள் களத்தில்!
11 Oct, 2024 | 05:48 PM எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகள், 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 17 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதேவேளை மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களுமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன. சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை, சரியான முறையில் விண்ணப்பத்தை கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடந்த 4ஆம் திகதி தொடக்கம் இன்று (11) வரை மதியம் 12 மணி வரை இந்த வேட்புமனு தாக்கல் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள், 14 சுயேட்சை குழுக்கள் களத்தில்! | Virakesari.lk
-
வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி?
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). போதைப் பொருள் பிரச்சினை குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்கிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து, அவரை என்கவுன்டர் செய்ய முடிவு செய்யும் ரஜினி, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் ‘வேட்டையன்’ சொல்லும் கதை. ’ஜெய்பீம்’ மூலம் கஸ்டடி மரணத்தை பற்றிய உண்மைக் கதையை தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற ஞானவேல் தற்போது போலி என்கவுன்டர் பிரச்சினையை அதுவும் தமிழகத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்திருக்கும் ஒரு சூழலில் சரியான நேரத்தில் கையில் எடுத்திருக்கிறார். ரஜினி என்ற ஒரு பிரம்மாண்ட பிராண்டின் மூலம் முடிந்தவரையில் தான் சொல்லவந்த கருத்தை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். படம் தொடங்கிய முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கான மாஸ் திருவிழா. ரஜினியின் இன்ட்ரோ தொடங்கி, அடுத்து ‘மனசிலாயோ’ பாடல் வரை ரஜினி ரசிகர்களுக்கு விருந்து. குறிப்பாக வில்லனின் சுருட்டு பறந்து கீழே விழும்போது அதன் துளை வழியே ரஜினியை காட்டும் ஷாட்டில் தியேட்டர் தெறிக்கிறது. தேவையற்ற ‘வளவள’ காட்சிகள் எதுவுமில்லாத கதாபாத்திர அறிமுகம் முடிந்து படம் ஞானவேல் பாணிக்கு மாறிவிடுகிறது. துஷாராவின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் பிறகான விசாரணை என படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துகொண்டே செல்கிறது. என்கவுன்டருக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை போகிற போக்கில் பேசாமல் ஆழமாக பேசிய விதம் அருமை. முதல் பாதி முழுவதுமே ஒரு சில யூகிக்க கூடிய காட்சிகளை தவிர பெரிதாக குறைசொல்ல எதுவும் இல்லை. படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. ஒன்று, முழுமையான ரஜினி படமாக இருந்திருக்க வேண்டும் அல்லது ’ஜெய்பீம்’ பாணியிலான படமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி இந்த இரண்டுக்கும் பல இடங்களில் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கிறது. சீரியசான இன்வெஸ்டிகேட் த்ரில்லர் முயற்சியில் இடையிடையே சொருக்கப்பட்ட ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. ரஜினி ரசிகர்களுக்காகவே வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் அவர்களே அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தனர். உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நகரவேண்டிய கதையில் இப்படியான பரிசோதனை முயற்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அவை இரண்டாம் பாதியை தொய்வடையச் செய்கின்றன. ரஜினி வழக்கமாக ஸ்டைலாக நடந்து வருவது, கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது ஆகியவற்றை தாண்டி இந்தப் படத்தில் தனது நடிப்பு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஃபஹத் ஃபாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு முன்னால் வெளியான ‘ஆவேஷம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும் இதுபோன்ற ஒரு கேரக்டர்களிலும் தயங்காமல் நடிக்கும் ஃபஹத் போற்றுதலுக்குரியவர். ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் தனது தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங் இருவருக்குமே வலுவாக கதாபாத்திரம். இருவருமே அதை நிறைவாக செய்துள்ளனர். படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியர்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை. க்ளைமாக்ஸுக்கு முன்பாக அவருக்கு வைக்கப்பட்ட ஒரு ‘மாஸ்’ காட்சி மட்டுமே ஓகே ரகம். அதேபோல ராணாவுக்கான காட்சிகளும் வலுவாக எழுதப்படவில்லை. படம் தொய்வடையும் பல இடங்களில் காப்பாற்றுவது வழக்கம் போல அனிருத். ஏற்கெனவே வைரல் ஹிட்டான ‘மனசிலாயோ’, ‘ஹன்டர்’ பாடல்கள் படத்தில் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. படத்தின் பெரிய பலவீனங்களில் ஒன்று, யூகிக்க கூடிய வகையில் பல காட்சிகள் இருப்பது. படத்தின் இன்னொரு பிரச்சினை, எந்த இடத்திலும் எமோஷனலாக தொடர்புப்படுத்திக் கொள்ளமுடியாதது. அப்படியாக வைக்கப்பட்ட காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. யூடியூப் வீடியோ, டிவியை பார்த்து பொதுமக்கள் பேசிக் கொள்வதாக வரும் காட்சிகளும் அதீத சினிமாத்தனத்துடன் இருக்கின்றன. க்ளைமாக்ஸில் காட்டப்படும் ஹீரோயிச காட்சியெல்லாம் படம் பேசும் கருத்தியலுக்கு அழகானதாக படவில்லை. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது போலீஸ் என்கவுன்டரை நியாயப்படுத்துவது போன்ற வசனங்கள் வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் படத்தில் தெளிவான பதிலை கொடுத்தது சிறப்பு. படத்தின் குறைகளை தாண்டி படம் பேசியுள்ள கருத்து மிக முக்கியமானது. அதை ரஜினி என்ற ஆளுமையைக் கொண்டு பேசியிருப்பது வரவேற்கப்படவேண்டிய முயற்சி. நாட்டுக்கு தேவை விரைவான நீதியே தவிர அவசரமான நீதி அல்ல என்ற கருத்தை உரக்க பேசிய ஞானவேலை மனதார பாராட்டலாம். மாஸ் காட்சிகளுக்காக மெனக்கெட்டதை தவிர்த்து இரண்டாம் பாதியில் வரும் சில தொய்வுகளில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிதாக கொண்டாடப்பட்டிருப்பான் இந்த ‘வேட்டையன்’. வேட்டையன் Review: ஞானவேலின் ‘மெசேஜ்’ + ரஜினியின் ‘மாஸ்’ கலவை எப்படி? | Vettaiyan Movie review - hindutamil.in
-
“இலங்கையின் பொருளாதாரம் 4.4 % வளர்ச்சியை எட்டும்” - உலக வங்கி
இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய முன்னறிவிப்புகளை விஞ்சும் என்று உலக வங்கி (WB) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 'எதிர்காலத்திற்கான திறப்பு' என்ற தலைப்பிலான இலங்கையின் இரு ஆண்டுகால மேம்படுத்தல், எவ்வாறாயினும், மீட்சி பலவீனமாக உள்ளது என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்தல் மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் சார்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது. கொழும்பில், வியாழக்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்துரைத்த போதே உலக வங்கியின் பிரநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
-
மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
இன்று (ஒக்டோபர் 10) முதல் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. R Tamilmirror Online || மீண்டும் பொலிஸ் சேவையில் ஷானி அபேசேகர
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். மருத்துவர் அர்ச்சுனா கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாறி மாறி ஆதரவு தெரிவித்ததுடன் இறுதி நேரத்தில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்து இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்! (newuthayan.com)
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
10 Oct, 2024 | 03:04 PM ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது, எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதி பெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன். அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:- 01. வனஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல். 02. முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல். 03. இந்திய முதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல். 04. வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல். 05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல். 06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல். 07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல். 08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல். 09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடிய பாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல். 10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல். 11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல். 12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல். 13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல். 14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல். 15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல். 16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல். 17. இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல். 18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல். 19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல். 20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல். 21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல். 22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல். 23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல். 24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல். 25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல். 26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல். 27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல் 28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல். 29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல். 30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல் 31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல் 32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல். 33. அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல். ஆகிய விடயங்கள் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்! | Virakesari.lk
-
இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் - சிறீதரன்
10 Oct, 2024 | 04:58 PM (எம்.நியூட்டன்) இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் காலம் மக்கள் கைகளில் உள்ளது. அவர்களே முடிவெடுப்பார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தி மக்கள். அவர்கள் யார் வேண்டும், வேண்டாம் என்பதை முடிவெடுக்கும் காலம் இது. அவர்களே அதனை தீர்மானிப்பார்கள். நாங்கள் தனித்தனியாக, அணி அணியாக பிரிந்து வாழ்தல் என்பது எமது இனத்துக்கான பண்பு அல்ல. இவ்வாறு பிரிந்து எமது இலக்கை அடையமுடியாது. எங்களுக்கு பிடிக்காதவர்களை ஓரங்கட்டக்கூடிய ஜனநாயக உரிமை இருக்கிறது. அதன் மூலம் இனத்தின் விடுதலையை அடையக்கூடியவர்களை அல்லது பிடித்தவர்களை அருகில் வைத்திருக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்துள்ளது. மக்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் ஒற்றுமையான பலமான தமிழ் தேசிய சக்தியை கட்டியெழுப்புவதற்கு பலத்தை உருவாக்க வேண்டும். இதனை விடுத்து சின்ன சின்ன அணியாக குழுக்களாக பிரிந்து செல்வதன் மூலம் எங்கள் இனத்தின் அடுத்த நகர்வுகள் பாழடைந்து செல்லும் நிலை அல்லது அது இல்லாமல் போகும் நிலை உருவாகிவருகிறது. ஆகவே, நீதிபதிகளான நீங்கள் என்ன தெரிவு செய்யப்படவேண்டும், எதை தெரிவு செய்யவேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் எடுத்து முடிவெடுத்தால் பொருத்தமானதாக இருக்கும். மூத்தவர் ஒருவர் கூறிய முதுமொழி... அயோக்கியர்களை தெரிவுசெய்கிறோமா? நல்லவர்களை தெரிவு செய்கிறோமோ என்பது தெரிவுசெய்பவனுடைய மன நிலையில் இருக்கிறது. தெரிவு செய்பவர்கள்தான் அதற்குரிய நீதிபதிகள். ஆகவே, உங்களுடைய கடமையை சரியாக செய்தால் உங்களுக்கான சரியான பக்கத்தையும் இனத்துக்கான வரலாற்று தொடக்கத்தையும் தரும் என்றார். அத்தோடு, முன்னாள் கட்சித் தலைவருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள், பாராளுமன்றத்துக்குப் பின்னரான செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தயாரித்தல், மக்களிடம் செல்லுதல் போன்ற பல விடயங்களை பேசியுள்ளதுடன் அவரது நல்லாசியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். இனத்தின் விடுதலைக்காக யார் செயற்படுவார்கள் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள் - சிறீதரன் | Virakesari.lk
-
யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்
10 Oct, 2024 | 06:53 PM தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) கையளித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் க. இளங்குமரன், எம்.மோகன், பூ. சிறிதரன், கா. பிரகாஷ், இ. வெண்ணிலா, ஜெ.ரஜீவன், எஸ்.சிறிபவானந்தராசா, தே.தஜீவன், உ. கீர்த்தி ஆகியோர் போட்டியிடவுள்ளனர். யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
-
பொதுத்தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் - செல்வம் அடைக்கலநாதன்
10 Oct, 2024 | 07:07 PM எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்டோம். தமிழ் மக்களுக்கு தலைமைதாங்குவதற்கு நாங்கள் இருக்கிறோம். நீங்கள் கவலையடைய வேண்டாம். இனத்தின் விடுதலையினை நோக்கிச் செல்லும் சின்னமாக சங்கு சின்னம் இருக்கிறது. இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களை பெறாது. எனவே, தமிழர்களாகிய நாங்கள் அதிக ஆசனங்களை இனத்தின் சார்பாக வெல்கின்றபோது நிர்ணயிக்கும் சக்தியாக நாங்கள் மாறுவோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது. எமது கூட்டமைப்பு இந்த தேர்தலில் 11 ஆசனங்களை பெறும். 10 ஆசனங்கள் மக்களால் தெரிவுசெய்யப்படும் என்பதுடன் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கும். பதினொரு ஆசனங்களை கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை நாம் எடுப்போம். இதேவேளை அரசுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை என்றார். பொதுத்தேர்தலில் 11 ஆசனங்களை பெறுவோம் - செல்வம் அடைக்கலநாதன் | Virakesari.lk
-
வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல்
10 Oct, 2024 | 08:25 PM வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு,முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய தோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார். புதன்கிழமை(9) குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார். தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்ற மையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை (10) இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
-
Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள்
'கொடிபிடித்த காம்ரேட்டுக்கள்.. கொதித்த சாம்சங் நிறுவனம்!' காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்கிற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே 'தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு, 8 மணி நேரம் வேலை' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இதற்கு நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 9-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கினார்கள். இந்த போராட்டமானது தொழிற்சாலையிலிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொடங்கியது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஒப்பந்த பணியாளர்களை வைத்து சுமார் 60% அளவுக்கு மட்டுமே சாம்சங் நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடிந்தது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் இதையடுத்து 'போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும். வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதாகத் தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என நிர்வாகம் எச்சரித்தது. மறுபக்கம், "தொழிற்சங்கம் தொடங்கியது சட்டப்படியான நடவடிக்கைதான். தினம்தோறும் 12 மணி நேரம் வேலை கொடுத்து சக்கையாகப் பிழிகிறார்கள். எனவேதான், 8 மணி நேர வேலை, சராசரி ஊதியம் ரூ.36,000 வழங்க வேண்டும்" எனத் தொழிலாளர்கள் கொதித்தார்கள். இதற்கிடையில் தொழிலாளர் நலத்துறை, சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோருக்குள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம், 'தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க முடியாது' என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க., செய்திருப்பது துரோகம்.. கருங்காலித்தனம்..! இதனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கோரிக்கைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகத் தொழிலாளர்கள் சென்றனர். அவர்களை காவல்துறை கைது செய்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. பிறகு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இச்சூழலில், கடந்த 7-ம் தேதி அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், வி.சி.கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு போராட்டம் முடிவுக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதற்குத் தொழிற்சங்கத்தினர் தரப்பிலிருந்து, "தொழிலாளர் வர்க்க வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம் கருங்காலித்தனம்" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் தலைவர் முத்துக்குமார், "பேச்சுவார்த்தையின்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சங்கத்தோடு பேசுவதற்கு நிர்வாகம் சம்மதிக்க வேண்டும். அரசின் முன்னால் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். அப்போது 'உங்களது கோரிக்கைகள் குறித்து சாம்சங் நிர்வாகத்திடமும், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டு எங்கள் முடிவைச் சொல்லுகிறோம்' என அமைச்சர் த.மோ.அன்பரசன் தெளிவுபடச் சொன்னார். பிறகு வெளியே வந்து பேச்சுவார்த்தையில் நடந்த அனைத்து விஷயங்களையும் ஊடகங்களில் தெரிவித்தோம். இதற்கிடையில் ஏற்கனவே அமைச்சர்களும், சாம்சங் நிறுவனமும் ஏற்படுத்தி வைத்திருக்கக் கூடிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை சாம்சங் தொழிற்சாலையிலிருந்து முன்கூட்டியே அழைத்து வரப்பட்ட ஒரு சில அப்பாவி தொழிலாளிகளை வைத்துச் செய்திருந்தார்கள். இரவோடு இரவாகக் கைது! இதன் மூலமாகவே தொழிற்சங்கத்துக்கும் சாம்சங் நிறுவனத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியிட்டார்கள். மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்தும் தலைவர்கள் குறித்தும் அவதூறு செய்திகளை சாம்சங் நிர்வாகம் திட்டமிட்டு உருவாக்கி வைரல் செய்து வருகிறது. இதற்கு அமைச்சர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இது தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் தி.மு.க., அரசு செய்திருக்கிற மாபெரும் துரோகம், கருங்காலித்தனம். பெரும்பான்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள். முதலில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். பிறகு அமைச்சர்கள் புறவழியான சதித் திட்டத்தின் மூலம் நிர்வாகத்துக்கு ஆதரவான ஒரு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு உடன்பாடு ஏற்பட்டதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். இது குழப்பம் ஏற்படுத்தும் செயல். சாம்சங் நிறுவனம் மற்றும் அமைச்சர் பெருமக்களின் இந்த இழிவான செயலை சி.ஐ.டி.யூ., வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். டி.ஆர்.பி.ராஜா இதற்குத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "சாம்சங் ஊழியர்களின் கோரிக்கை சார்ந்து 7 முறை பேச்சுவார்த்தை நடந்தது. முதலமைச்சரின் உத்தரவுப்படி 3 அமைச்சர்களும் 10 மணி நேரத்திற்கு மேலாகப் பேசியிருக்கிறோம். எதற்காகப் போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான ஊதியம் மறுக்கப்படும்" என்றார். ஆனாலும், பின்வாங்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடுப்பான ஆளும் தரப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கத் திட்டமிட்டது. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுவதற்காகச் சென்ற தொழிலாளர்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எச்சூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலை காவல்துறையினர பிய்த்து எறிந்திருக்கிறார்கள். இரவோடு இரவாகத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பலரது வீடுகளுக்குச் சென்று அவர்களில் பலரைக் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக தொழிலாளர்கள் சென்ற லோட் வண்டி விபத்தில் சிக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது கொடுமையிலும் கொடுமை. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி குற்றங்களைச் செய்தவர்களைப் பிடிப்பதில் விடியா தி.மு.க அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்? போராட்டங்களைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்கத் திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்குச் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரியப் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்" என வெடித்திருந்தார். அடக்குமுறை.. கொதித்த தலைவர்கள்! இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் பெரு நிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து தேடித் தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் தி.மு.க., அரசின் கொடுங்கோன்மைச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், "கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலைக் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரைக் கைது செய்து சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சீமான் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் தங்களின் முதன்மை நோக்கம் என்று கூறி வந்த தமிழக அரசு, இப்போது அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது" எனக் கொதித்துள்ளார். இச்சூழலில் தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகவே களத்துக்குச் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அப்போது தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை எனக் காவல்துறை பதில் அளித்தது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும் போல் காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதேபோலத்தான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார். Samsung Employees Strike | சாம்சங் போராட்டம் முன்னதாக தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது மீட்புப் பணிக்கு வந்த காவல்துறையுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் சூர்யா பிரகாஷ், எலன் ஆகியோர் காவல்துறையைத் தள்ளிவிட்டதாக சுங்கவார் சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை அவர்களைச் சிறையில் அடைத்தனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும் ஏற்கெனவே தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன. தற்போது சாம்சங் விவகாரம் அவர்களை மேலும் சூடாகியிருக்கிறது. இது தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Samsung Employees Strike: கார்பரேட்டுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா திமுக? - கொதிக்கும் காம்ரேட்டுகள் | dmk alliance communist parties condemns dmk in Samsung Employees Strike issue - Vikatan
-
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும்,இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது. இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில், தமிழரசுக் கட்சியின் முடிவு, வியாழக்கிழமை(10) இறுதிபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. Tamilmirror Online || மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
-
சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்ட 20 மாடுகள்
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறி வாகனத்தில் கடத்தப்பட்ட 20 மாடுகளை கடந்த திங்கட்கிழமை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், வாகனச் சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் (newuthayan.com)