Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும். இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர். எனவே 60 வயதுக்கு உட்பட்டவர்களும் இளையோர் தான். 2018ஆம் ஆண்டு தொடங்கிய எமது கட்சியில் யாப்பில் தன்னாட்சி , தற்சார்பு , தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை காரணங்களை முன் வைத்துள்ளோம். அதன் அடிப்படையில் தான் எமது கட்சி தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. இம்முறை தேர்தலிலும் அதனை முன்னிறுத்தியே போட்டியிடுவோம். எங்களின் கொள்கைகளை நாங்கள் எமது கட்சியின் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் செயற்படுகிறோம். புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் 300 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை இருக்கிறது. எமது சுயநிர்ணய உரிமைகளை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால், அவர்களுடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என மேலும் தெரிவித்தார். தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு ஆகியவற்றை முன்னிறுத்தியே போட்டி - சி. வி விக்னேஸ்வரன் | Virakesari.lk
  2. 09 Oct, 2024 | 05:33 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக சங்கு சின்னம் அமைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் சங்கு சின்னம் அமைந்துள்ளது. இப்போது அந்த சங்கு சின்னம் என்பது ஒரு கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனநாயகம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது குத்து விளக்கு சின்னத்தை விட்டு விட்டு சங்கு சின்னத்தை எடுத்திருக்கின்றனர். இந்த பொதுமக்கள் சபை சார்பாக நிறுத்தப்பட்ட அந்த தமிழ் வேட்பாளருக்கு ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தனர். இன்னுமொரு பகுதியில் இந்த தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியை வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துவிட்டது. இப்போது நாங்கள் சங்கு சின்னத்தையோ அல்லது தொலைபேசி சின்னத்தையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இப்போது நாங்கள் தமிழரசு கட்சியின் சார்பாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். என்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அந்த தமிழர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருக்கின்றது. பொதுமக்கள் கட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரின் சின்னமாக இருந்த சங்கு சின்னம் இப்போது ஒரு கட்சியின் சின்னமாக அதாவது குத்துவிளக்கில் சின்னமாக இருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது சங்கு சின்னத்தை எடுத்துள்ளது. எனவே தமிழ் மக்கள் குழப்பம் அடையாமல் நீங்கள் இந்த முறை தமிழரசு கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். இதில் குழப்பம் அடைய வேண்டாம் என்பதை மிகவும் அர்த்தம் சக்தியுடன் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.தமிழரசு கட்சி தமிழரசு கட்சியாகத்தான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இந்த நிலையில் தமிழரசு கட்சிக்காக பல விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக அனுப்பப்பட்டிருந்தன அதில் 8 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. நியமன குழுவினர் 8 விண்ணப்பங்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையிலும் அதில் தெரிவுகள் இடம்பெறாத நிலையில் வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்கு வேறு சின்னங்களில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. எது எப்படியாக இருந்தாலும் தமிழரசு கட்சியைப் பொறுத்தவரையில் சகல கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு இருக்கின்றது. இந்த தேர்தல் அவசர அவசரமாக ஏற்பட்டு ஒரு தேர்தல் என்று சொல்லலாம். ஜனாதிபதி தேர்தலை அடுத்து இந்த தேர்தல் இங்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றதனால், பல கட்சிகளையும் இணைத்து செயல்படுகின்ற செயற்பாட்டில் அவர்களுடன் இணைக்கின்ற அந்த முயற்சியில் சில இழுப்பறிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவர்கள் தனித்துப் போட்டியிடுகின்ற போது அவர்களோடும் சில வேட்பாளர்கள் இணைந்திருக்கின்றார்கள். எனவே இனி வருகின்ற காலத்தில் சகல கட்சிகளும் இணைந்து பயணிக்க கூடிய விதத்தில் சகல கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்கின்ற பொது மக்களின் விருப்பம் இருக்கின்ற காரணத்தினால் அடுத்த தேர்தலுக்காக இந்த அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும். தற்போது தமிழரசு கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமாக தாய் கட்சியானது ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செல்வதற்குரிய சந்தர்ப்பத்திலே நாங்கள் ஏற்படுத்த வேண்டும். என்னுடைய விருப்பமும் சகல கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும் அதில் தனிப்பட்ட சில தன்முனைப்பு சிந்தனைகள் குறித்து நாங்கள் எல்லோரும் அடுத்த கட்டமாவது அடுத்த தேர்தலுக்காக வேண்டி ஒற்றுமையாக செயற்பட வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. எனவே தமிழரசிக் கட்சியின் பலத்தின் ஊடாக ஏனைய கட்சிகளையும் அரவணைத்து செல்வதற்கான நடவடிக்கையில் எடுக்கப்படும் என்பதை கூறிக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார். சுயேட்சை சின்னமாக இருந்த சங்கு சின்னம் தற்போது கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது – சிறிநேசன் ஆதங்கம் | Virakesari.lk
  3. 09 Oct, 2024 | 05:20 PM கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்று புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தைச் சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாறை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த பிரதேசத்திற்கு வருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பெரியநீலாவனையில் சவப் பெட்டியை ஏந்தி மக்கள் மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  4. இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகியோருக்குத் தொல்லை தருதல், காணி பறிப்பு, இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளைத் தடுத்தல் போன்ற எழுந்தமானமான பொலிஸ் நடவடிக்கைகள் போன்ற மனித உரிமை மீறல்கள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்துவோம் என்று அரசாங்கம் அளித்த உறுதிமொழியையும் மீறி இச்சட்டம் தொடர்ந்தும் பிரயோகப்படுத்தப்படுகிறது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த 18 மாதங்களில் மட்டும் 46 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; 2,845 துன்புறுத்தல் சம்பவங்களும் 21 சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் 26 தடுப்புக் காவல் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காணாமற் போனோர் அலுவலகத்தின் திறனின்மை, போதாமை போன்ற குணாதிசயங்களைத் தான் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்டிருந்தும் ஒரே ஒருவரது மரணத்தையும், 4 பேர் கணாமற் போனமை பற்றியுமே இவ்வலுவலகம் இதுவரை கண்டறிந்திருக்கிறது. தமது விசாரணை அதிகாரங்களைப் பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறிவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் மேலதிக தகவல்களைக் கேட்டு கோப்புக்களை மூடுவதற்கான முயற்சிகளை எடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் மன உளைச்சலுக்கு இவ்வலுவலகம் ஆளாக்குகிறது. பிரேதப் புதைகுழிகளும் ஆணையரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கடந்த பல பத்தாண்டுகளாகப் பல புதைகுழிகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் முடிந்திருந்தாலும் மனித எச்சங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவரவர் குடும்பங்களிடம் கையளிக்கப்படவில்லை என இவ்வறிக்கை கூறுகிறது. அகழ்வுகள் மற்றும் அடையாளம் காண்பதற்குத் தேவையான மனித, பண, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி சரவதேச நியமங்களுக்கேற்ப இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் தேவையானால் இவ்விடயத்தில் அரசாங்கம் சர்வதேச உதவிகளைக் கோரவேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையர் சிபார்சு செய்திருக்கிறார். இவ்விடயம் தொடர்பாக தாம் நேசித்தவர்களுக்காக உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டும் எனப் பல தசாப்தங்களாகப் பொறுமையோடு காத்திருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் கோரிக்கைகள் பற்றி “இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்” (Accountability for Enforced Disappearances in Sri Lanka) எனப்பெயரிடப்பட்டு மனித உரிமை ஆணையரால் மே 2024 இல் வெளியிடப்பட்ட அறிக்கையை உலகத் தமிழர் பேரவை பெரிதும் மெச்சுகிறது. இக்குடும்பங்களுக்கு உண்மையைத் தெரிவிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது எனவும் இக்குற்றங்கள் மீது விசாரணைகள் நடத்தப்படுவது இக்குடும்பங்களுக்கு மட்டுமல்ல இலங்கையின் சமூகங்களிடையேயான ஆற்றுப்படுத்தலுக்கும் ஆவசியம் என ஆணையர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உண்மையும் நீதியும் கிடைக்கவேண்டுமென்பதற்காகப் பல தசாப்தங்கள் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரக்தியே எஞ்சி நிற்கிறது. “பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு வேறு வழிகள் கண்டறியப்படவேண்டும்”, “தண்டிக்கப்படாமை என்ற சுழற்சிக்குள் இருந்து வெளியே வர சர்வதேச சமூகம் அதிகம் பிரயோகிக்கப்படாத சர்வதேச விதிகளின் எல்லை தாண்டிய பிரயோகம் போன்ற மாற்று உத்திகளைப் பிரயோகிக்கவேண்டும்” என்பன போன்ற மேற்கோள்கள் இவ்வறிக்கையில் காணப்படுவதை அவதானிக்கையில் ஆணயரின் விரக்தியும் இதில் அம்பலமாகிறது. ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் (Sri Lanka Accountability Project (SLAP)) வெற்றிகரமான அமுலாக்கமே மேற்கூறப்பட்ட விடயங்களைச் சாத்தியமாக்கும். மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) ஆகிய அமைப்புகளின் கோரிக்கைகளின் பிரகாரம் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ (SLAP) வழங்கப்பட்ட ஆணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது விஸ்தரிக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் சபை அங்கத்துவ நாடுகளிடம் கோருவதோடு இம்முக்கியமான செயற்பாடு நிதிக் குறைபாடுகளால் முடக்கப்படாதவாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பார்த்துக்கொள்ளவேண்டுமெனவும் உலகத்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் வெற்றிகரமான அமுலாக்கலைத் தொடர்ந்து இதன் பெறுபேறுகளை, வட கொரியா மற்றும் மியன்மார் நாடுகள் மீதான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் மற்றும் விசாரணைக் கமிசன் அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டதைப் போன்று, மனித உரிமைகள் ஆணையர் இவ்வறிக்கையையும் இதர ஐ.நா. அமைப்புகளுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்க வேண்டுமென உலகத்தமிழர் பேரவை வலியுறுத்துகிறது. இதன் மூலம் தசாப்த கால செயற்பாடுகள் சர்வதேச உயர்மட்ட கண்காணிப்புகளுக்குட்படுத்தப்பட்டு தொடர்ச்சியும் பேணப்படுமெனவும் தொடர்ச்சியான சர்வதேச அவதானம் மற்றும் அர்த்தமுள்ள செயற்பாடுகளும் இலங்கை உண்மையான பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எட்ட உதவிசெய்யுமெனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது. புதிதாகத் தெரிவாகிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவை உலகத் தமிழர் பேரவை வாழ்த்தியிருந்ததோடு , ஊழலை ஒழித்து தண்டனை வழங்கப்படாமையை முடிவுக்குக் கொண்டுவந்து இந்நிர்வாகம் நல்லாட்சியைப் பேணுமென நாம் நம்புகிறோம் எனவும் தெரிவித்திருந்தோம். பல தசாப்தங்களாக இலங்கையில் குற்றங்கள் – அவை பொருளாதாரக் குற்றங்களாகவிருந்தாலென்ன அல்லது மோசமான மனித உரிமை மீறல்களாகவிருந்தாலென்ன – எவரும் தண்டிக்கப்படாமல் இருப்பது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இது எந்த வடிவத்தில் வந்தாலும் அவை முறியடிக்கப்படும்போது மட்டுமே உணமையில் ‘தண்டிக்கப்படாமை’ என்பது நிரந்தரமாக ஒழிக்கப்படும். ஐ.நா., சர்வதேச சமூகம், இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் மூலம் மட்டுமே புதிய அரசாங்கம் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதோடு இச்சிரமமான பயணத்தின்போது சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும் எனவும் உலகத் தமிழர் பேரவை நம்புகிறது. இதைச் சாத்தியமாக்குவதற்காக உலகத் தமிழர் பேரவை தனது பங்கை செவ்வனே ஆற்றும் எனவும் உறுதி செய்கிறது. ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு’ வழங்கப்பட்ட ஆணையை விஸ்தரிக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை | Virakesari.lk
  5. 09 Oct, 2024 | 06:21 PM தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு | Virakesari.lk
  6. (எம்.மனோசித்ரா) நாட்டில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றின் விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இறக்கு செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்தோடு அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு கட்டம் கட்டமாக 25,000 ரூபா உர மானியக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விரைவில் மீனவர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே தான் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரியை 50 ரூபாவிலிருந்து 60 ரூபா வரை 10 ரூபாவால் அதிகரிப்பதற்கும், வெங்காயதுக்கான இறக்குமதி வரியை 10 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இந்த தீர்மானத்தால் தேசிய உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தமது விளைச்சலை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியும். அத்தோடு விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. எனினும் தேர்தல் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியது. எவ்வாறிருப்பினும் விவசாயிகள் மற்றும் ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய தேர்தல் ஆணைக்குழு அதற்கு அனுமதியளித்துள்ளது. அதற்கமைய தற்போது ஒரு ஹெக்டயாருக்கு 10,000 ரூபாவாகக் காணப்படும் உர மானியம் 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான நடவடிக்கை அடுத்த வாரம் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். முதற்கட்டமாக 15,000 ரூபாவும், இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை, மகாவலி வலயத்திலுள்ள விவசாயிகளுக்கு படிப்படியாக உர மானியக் கொடுப்பனவு வழங்கப்படும். இதுவரையில் 2 பில்லியன் ரூபா அந்தந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய தொகையும் விரைவில் வழங்கப்படும். மேலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்களால் மீனவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும் கடந்த வாரம் டீசல்மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன. விலை குறைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள நிவாரணத்துக்கு அப்பால், எரிபொருள் விலை நிவாரணத்தை வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நியாயமான முறையில் இந்த எரிபொருள் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது ; அடுத்த வாரம் முதல் 25 000 ரூபா உர மானியம் - அரசாங்கம்! | Virakesari.lk
  7. புதுடெல்லி: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் வெற்றியை நெருங்குவதால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 50 தொகுதிகளை நெருங்குவதால் உமர் அப்துல்லா தலைமையில் அங்கு கூட்டணி அரசு அமைய உள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 😎 காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, மாலை 4.30 மணி அளவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களை கைப்பற்ற உள்ள நிலையில், தேமாக துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்க உள்ளார். 90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது. ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி; ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா! | BJP's hat-trick victory in Haryana - Omar Abdullah becomes Jammu Kashmir CM - hindutamil.in பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மாலை 4.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்சி 42 இடங்களை கைப்பற்றுகிறது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. முதல்வராகிறார் உமர் அப்துல்லா: இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட முடிவை (சட்டப்பிரிவு 370 நீக்கம்) மக்கள் ஏற்கவில்லை என்பதும் இந்த தேர்தலில் தெளிவாகி இருக்கிறது என குறிப்பிட்டார். 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீரைப் பொருத்தவரை, இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது; முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் இந்துக்கள் என்பதும் இண்டியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  8. மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன், தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது. மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். Tamilmirror Online || 51/1க்கு அனுர அரசாங்கமும் எதிர்ப்பு
  9. இடமாற்றம் கிடைத்துள்ள கலால் வரி திணைக்கள ஆணையாளர் இடமாற்றத்தில் செல்லாமல், மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரி பிரதேச செயலர்களை எச்சரிப்பதாக வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் செயலாளர் செல்லையா குமாரசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் சங்கானையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சங்கானையில் புதிதாக ஒரு மதுபானசாலையை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டது. இந்த விடயம் எமக்குத் தெரியவந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி சர்வதேச நல்லொழுக்க தினத்தன்று சங்கானை பிரதேச பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தோம். இது இவ்வாறு இருக்கையில் கொழும்பு மதுவரித்திணைக்கள ஆணையாளர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களான சங்கானை, கோப்பாய், தெல்லிப்பழை, கரவெட்டி மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியுள்ளார். குறித்த மதுபானசாலைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், அல்லது உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலர்களுக்கு கடிதம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தனி சிங்களத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கலால் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கமானது ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக மதுவுக்கு எதிராக செயற்படுவதாக கூறியது. அவர்கள் கூறியது போலவே செய்யப்படும்போது அதற்கு கலால் திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்து, பிரதேச செயலர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக ஒற்றைக்காலில் நிற்கிறது. அதனால் பிரதேச செயலர்கள், வழக்குக்குள் சிக்கினால் தங்களுக்கு பிரச்சினை என பயப்படுகின்றார்கள். கலால் திணைக்கள ஆணையாளருக்கு இடமாற்றம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் அந்த பதவியை விட்டு போகின்றார் இல்லை. எனவே உடனடியாக கலால் திணைக்கள ஆணையாளரின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தி, இவ்வாறான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை கருத்துச் செய்ய வேண்டும். ஜனாதிபதியின் அறிவித்தல்ளுக்கு ஏற்ப செயற்படுவதா, கலால் திணைக்களத்தின் அறிவிப்புக்கு ஏற்ப செயற்படுவதா, மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதா என பிரதேச செயலர்கள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த அறிவிப்பானது, பிரதேச செயலர்களுக்கு எழுத்து வடிவில் கிடைக்கப்பெறுமானால் அவர்கள் அதற்கேற்ப செயற்பட்டு அனுமதிப் பத்திரங்களை வழங்காமல் இருக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (ப) மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குமாறு மிரட்டல்! (newuthayan.com)
  10. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் .போதனா மருத்துவமனையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கொரோனா தொற்று காலப்பகுதியில் யாழ்.போதனா மருத்துவமனையில் இவர் சிறந்த சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா (newuthayan.com)
  11. யாழில் பழமை மிக்க மரத்தை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது. அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மர கூட்டம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மரமானது பல்லாண்டு காலமாக பாடசாலைகளாகத்தில் நிற்கின்றது. மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை. பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற நேரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன? குறித்த மரம் நிற்கின்றதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் ஒட்சிசனை பெறுவதற்கும், வெப்பநிலையை சீர் செய்வதற்கும் குறித்த மரம் அளப்பரிய பங்காற்றுகின்றது. குறித்த மரத்தினை வெட்டுவதால், பாடசாலையில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாதிப்புகள் உள்ளன. அவர்களது உடல் ஆரோக்கியமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது. மரங்களை நாட்டவேண்டு என்ற எண்ணக்கரு மாணவர்களிடத்திலே விதைக்கப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் நன்மை பயக்கும் இந்த மரத்தினை வெட்டுவது நியாயமா இதனால் மரக் கூட்டுத்தாபனத்துக்கு என்ன இலாபம் இருக்கின்றது எனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதிக்கான கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி , நாளையதினம் (09) இந்த மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த வேண்டும் என்றனர். யாழில் பழமை மிக்க மரத்தை வெட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு! (newuthayan.com)
  12. திகாமடுல்ல மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளாருமான செல்லையா இராசையா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஈபிடிபி கட்சியின் முதன்மை வேட்பாளராக இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.அதுமாத்திரமன்றி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வருகின்றேன். கடந்த காலங்களில் தேசியத்துடன் நாங்கள் சென்றவர்கள்.தற்போதுள்ள காலகட்டத்தில் எமக்கு தேசியத்துடன் உடன்பாடு இல்லை.காரணம் மக்களை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற நிலைதான் தொடர்ந்து வருகின்றது. தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்களுக்கான வாழ்வாதாரங்களை பெற்றுக்கொடுப்பது தான் எமது முதல் நோக்கமாகும். இதை விட்டுவிட்டு வெறுமனே தேசியத்தை பேசிவிட்டு காலத்தை கடத்துவது ஒரு உசிதமான விடயமல்ல.எமது மாவட்டத்திற்கு கடந்த கால தேர்தல்களில் பல கட்சியினர் வருகின்றார்கள்.போகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள்.அத்துடன் அவர்களின் விடயங்கள் முடிந்து போகும்.ஆனால் இங்கு நாங்கள் மாத்திரமே மக்களுக்காக உண்மையாக செயற்பட்டு வருகிறோம். இம்முறை தேசியத்தை விட்டு ஈபிடிபி கட்சியினை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் கடந்த 30 ஆண்டு காலமாக தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எம்.பியாக வெற்றி பெற்று பல்வேறு அமைச்சுகளை பெற்று மக்கள் சேவை செய்து வருகின்றார். அவருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினால் எம்மக்கள் நன்மை பெறுவார்கள்.சிலர் அவரை நோக்கி இங்கு என்ன அபிவிருத்திகளை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர். அது பொருத்தமான கேள்வி அல்ல என்றே கூறுவேன்.வடகிழக்கில் அவர் தனது சேவை காலத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். ஆனால் அவரிடம் இங்குள்ளவர்கள் அணுகி எதுவும் கேட்டதாக எனக்கு தெரியவில்லை.மக்களோ அல்லது சங்கங்களோ அவருடன் சந்தித்து கதைத்து அவரிடம் பெறுவோம் என்றும் நினைத்ததில்லை.ஆனால் மக்களின் அபிலாஷைகளை எம்போன்ற தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும். இதற்கு மக்கள் எம்மை ஆதரிக்க வேண்டும்.அந்த நம்பிக்கையில் தான் இன்று தேர்தலில் இறங்கியுள்ளோம்.மக்கள் இவ்விடயங்களை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். எனவே 74 வருடங்களாக விடுதலை உரிமைகளை பேசிக்கொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிடுவதை விட்டுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பாதையை நோக்கி செல்ல வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூட்டங்களை நடாத்திக்கொண்டு தற்போது மக்களை குழப்ப முற்படுகின்ற சம்பவமும் இடம்பெற்று வருகின்றது. இந்த பொதுக்கட்டமைப்பு தேர்தல் காலத்தில் முளைத்த ஒரு அமைப்பு தான்.மக்களுக்கு கிடைக்க வேண்டியதையும் இல்லாமல் செய்ய முற்படுகின்றார்கள். அவர்கள் உள்நோக்கம் கொண்ட அமைப்பு.தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இத்தேர்தல் காலங்களில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.மக்கள் விழிப்படைய வேண்டும். உங்கள் வாக்ககள் பெறுமதி மிக்கது.பெறுமதி மிக்க தலைவர்களுக்கு வாக்களிக்க முற்பட மக்கள் முன்வர வேண்டும் என்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ; செல்லையா இராசையா! | Virakesari.lk
  13. முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் பல இலட்சமான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் இது திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின்னினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு , மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன் போது பொலிஸார் தெரிவித்திருந்தனர். முல்லைத்தீவு - சிலாவத்தையில் கடை ஒன்று எரிந்த சம்பவம் தொடர்பில் விசாரணை | Virakesari.lk
  14. (எம். மனோசித்ரா) சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு கடற்படையினர் வரவேற்பளித்தனர். கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள சீன இராணுவ பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது 86 மீற்றர் நீளமானது. சீன இராணுவ கடற்படையின் 35 அதிகாரிகள் உட்பட 130 சிப்பாய்கள் குறித்த கப்பலில் இலங்கை வந்துள்ளனர். இதே வேளை சீன கப்பலின் கட்டளை அதிகாரி மாஹ வெங்யோங், இலங்கை கடற்படையின் மேற்கு கட்டளை அதிகாரி ரியர் அத்மிரால் சிந்தக குமாரசிங்கசை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். அதே போன்று இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. அத்துடன் இலங்கையின் சிறப்பு மிக்க கடற் பகுதிகளுக்கும் குறித்த சீன கப்பல் விஜயம் மேற்கொள்ள உள்ளதுடன், வெள்ளிக்கிழமை இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு பயிற்சி ; கடற்படை தலைமையகம் அறிவிப்பு! | Virakesari.lk
  15. மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! ஸ்டாக்ஹோம்: மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் கமிட்டி செயலாளர் இன்று அறிவித்தார். மரபணு செல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்காற்றும் மைக்ரோ ஆர்என்ஏ என்ற சிறிய மூலக்கூறினைக் கண்டுபிடித்தற்காக விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமெரிக்க உயிரியியலாளர்கள் இவர்கள் இருவரும் மைக்ரோ ஆர்என்ஏ மற்றும் படியெடுத்தலுக்கு ( transcription) பின்பு மரபணு வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதில் அதன் பங்களிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தற்காக கூட்டாக உயரிய இந்த விருதினை பெறுகின்றனர். நோபல் கமிட்டி, இவர்களின் கண்டுபிடிப்பு, உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்கான அடிப்படை முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன" என்று தெரிவித்துள்ளது. நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரே மரபணு மூலக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், தசைகள் மற்றும் நரம்புகள் போன்ற பல்வேறு வகையான செல்கள் பல்வேறு வகையான செயல்களைச் செய்கின்றன. மரபணு ஒழுங்குமுறை செயல்படுகள் மூலம் இது சாத்தியமாகிறது. அப்போது இந்த செல்கள் அவற்றுக்குத் தேவையான மரபணுவை மட்டும் செல்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. அம்ரோஸ் மற்றும் ருக்குன் ஆகியோரது மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்பு, இந்த செயல்பாட்டின் போது புதிய வழியை வெளிப்படுத்தியது. அவர்களது கண்டுபிடிப்புகள் உயிர்கள், குறிப்பாக மனித உயிர்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முக்கிய பங்காற்றுகின்றன என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும் (செவ்வாய்க்கிழமை) வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14-ம் தேதி திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். மைக்ரோ ஆர்என்ஏ கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்! | Nobel Prize in Medicine 2024: Victor Ambros, Gary Ruvkun win for microRNA - hindutamil.in
  16. இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 'சுப்பர் கிண்ண' கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றினார். இந்நிலையில் மாலைதீவினை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை அணி 74:72 என்ற எண்ணிக்கையில் மாலைதீவை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாலைதீவின் மாலே நகரில் செப்டம்பர் 26 முதல் 30 வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நான்கு நாடுகளின் அணிகள், குறிப்பாக உலகின் வலிமையான வெளிநாட்டு கூடைப்பந்து வீரர்களுக்கிடையே இந்தப் போட்டி நடாத்தப்பட்டது. இவ்வாறான நிலையில் இலங்கை அணிகள் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தன. இவ்வாறான பின்னணியில் போட்டியில் கலந்துகொண்ட பின்னர் இலங்கை அணிகள் நாட்டிற்கு திரும்பின. இலங்கை அணிகளை வரவேற்பதற்காக இலங்கை விமானப்படையின் கூடைப்பந்தாட்ட அணியின் தலைவர் விமானப்படை கொமாண்டர் அமல் பெரேரா உட்பட இலங்கை விமானப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. (ப) இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி! (newuthayan.com)
  17. சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிடம் விடுக்கும் கோரிக்கை எனும் தலைப்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என சகல தரப்புகளும், மக்களின் நலன் கருதி நீண்ட காலமாகவே எமது மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் அபிலாசைகளை உண்மையாகவும் உறுதிப்பாட்டுடனும் அடைவதற்கான இன்றியமையாத பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை தமிழ்மக்களின் நலன் கருதி எம் அமைப்பானது முன்வைக்கின்றது. இதற்கமைய குறிப்பிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளர்களுக்கும் எமது அமைப்பானது ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கும் என்பதனை பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி நிற்கின்றோம். முழுநாட்டிலும் மாற்றத்தை எதிர் பார்க்கின்ற மக்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் தலையாய கடமையாகும். இதற்கான அழுத்தங்களினை பொது அமைப்புக்கள் இந்தக் குறுகிய நாட்களில் மிக வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான எந்த முன்னெடுப்பும் திம்பு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயம் உள்ளடங்கலான இறுதித்தீர்வை எட்டும் நோக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டும். நடைபெற்று முடிந்த இன அழிப்பிற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பிற்குமான பரிகார நீதியைப்பெறும் நோக்குடன் சர்வதேச நீதிக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டும். இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினைப் பெறும் நோக்குடன் சிங்கள அரசாங்கத்தோடு தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்படும். எந்தவொரு பேச்சு வார்த்தையிலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பு நாடு ஒன்றின் நடுநிலையுடன் முன்னெடுக்கப்படவேண்டும். நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பழைய அரசியல் பிரமுகர்கள் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட்டு சமூகப் பொறுப்புள்ள அறிவார்ந்த இளைஞர், யுவதிகள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவது எம் இனத்தின் எதிர்காலத்திற்குத் தவிர்க்கப்படமுடியாத தேவையாக உள்ளது. அத்தோடு இதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆண்களுக்கு நிகராக 50 வீதம் வழங்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமாக கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ப). சிங்கள தேசம் போன்று தமிழர் தேசத்திலுல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்! (newuthayan.com)
  18. 07 Oct, 2024 | 12:57 PM ஞாயிற்றுக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் இன்று (07) காலை 07.00 மணி வரையான 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 162.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட (112.5 மி.மீ) மற்றும் ஹொரணை (111.5 மி.மீ) ஆகிய பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் நெலுவ (109.5 மி.மீ) மற்றும் மாத்தறை மாவட்டத்தில் களுபோவிட்டியான (84.0 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அயன அயல் ஒருங்கல் வலயமானது நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும், சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொழும்பில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவு | Virakesari.lk
  19. 07 Oct, 2024 | 03:50 PM ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம். தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.அந்த அழை தற்போது எங்களிடம் பரவியுள்ளது. ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அந்த வகையில் எமது இன பிரச்சினையாக இருக்கலாம்,எமது நிலங்கள் அபகரிக்க படுகின்ற விடையங்களாக இருக்கலாம்,கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது என்றார். ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை ; ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்! | Virakesari.lk
  20. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 8 வேட்பாளர்களும் 3 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் 8 பேர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சுரேஷ், சுப்பிரமணியம் சத்தியநாதன், கணபதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் இம்முறை தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்ளில் இருவரை தவிர ஏனைய 6 பேரும் புதுமுகங்களாக உள்ளனர். வேட்பாளர்கள் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதேவேளை சுயேச்சை குழு சார்பில் வஜ.லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழுவொன்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. இம்மாவட்டத்தில் 3 சுயேச்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 8 வேட்பாளர்களும் 3 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் | Virakesari.lk
  21. Published By: Digital Desk 7 07 Oct, 2024 | 07:04 PM வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை என்பவரே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2007ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததுடன் ருஹுனு பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை விஞ்ஞான பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக பெண் அதிகாரியின் பெயர் பரிந்துரை | Virakesari.lk
  22. 07 Oct, 2024 | 06:21 PM நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது. ஆறுகட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாது - வெளியானது வர்த்தமானி அறிவித்தல் | Virakesari.lk
  23. 07 Oct, 2024 | 06:52 PM தனியார் பேருந்தொன்றில் பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (7) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரின் கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தில் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக நடத்துநர் மீது தனியார் பேருந்து உரிமையாளர் குற்றஞ்சாட்டி கடமையிலிருந்த இளைஞரை இன்று பகல் ஓந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து, பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். அதன் பின்னர், மரத்தில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி நடத்துநரை மரத்தில் கட்டிவைத்து அடித்த தனியார் பேருந்து உரிமையாளர் | Virakesari.lk
  24. இஞ்ச பாருங்கோ ஏராளன், உதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க கூடாது. எம் பணி, செய்திகளை இணைப்பது, அதுவும் நம்பகமான தளங்கள் என நாம் நம்பும் தளங்களில் இருந்து. ஒவ்வொரு செய்தியையும் உண்மைச் செய்தியா என்று தேடிப்பிடித்து, ஆராய்ந்து எல்லாம் போட முடியுமா எங்களால்? இல்லைதானே. அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு செய்திகள் பிழையாக வரத் தான் செய்யும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. வாசிப்பவர்களில் பலர் புத்திக் கூர்மையுடன் செய்திகளை அணுகி, பிழையான செய்தியா இல்லையா என கண்டு பிடித்து விடுவர். இப்படி மன்னிப்பு கேட்பதென்றால் இந்த பிழம்பு எத்தனை செய்திகளுக்கு கேட்டு இருக்க வேண்டும் 🤣 (அதுவும் முன்னர் பதிவின் செய்திகளையும் புதினத்தின் செய்திகளையும் இணைத்த காலத்தில்)
  25. // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.// இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.