Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!

Featured Replies

சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!

31 மார்ச் 2012

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Eltan1_CI.jpg

நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போயிருக்கிறான்.

2003 ஆம் உயர்தரம் படிக்கும் காலத்தில் அறிவமுது கல்வி நிலையத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொழுதே எல்ரனை முதன் முதலில் பார்த்திருக்கிறேன். எல்ரனும் நானும் 2004 உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றிருக்கிறோம். அப்பொழுது அவன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தன். அன்றைய காலத்தில் நடந்த வௌ;வேறு தனியார் கல்வி நிலையங்களில் எல்ரனுடன் படித்து பழகியிருக்கிறேன். படிக்க வேண்டும் படித்தாலே வாழ்க்கையிலே எதாவது செய்யலாம் என்று அவன் அந்த நாட்களில் சொல்லுவான். அவன் பேசும் பொழுது பேச்சிலும் முகத்திலும் மெல்லிதாக நடுக்கம் காணப்படும். படிப்பதற்கான துடிப்பு எப்பொழுது அவனில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வகுப்பில் இருந்து படிக்கும் பொழுது அவனது கையெழுத்தைப் பார்த்த நினைவுகள் எனக்குள் இன்னும் நிற்கின்றன.

2004ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலை அடித்த பொழுது இழப்பை சந்தித்த மாணவர்களில் எல்ரனும் ஒருவன். தனியார் கல்வி நிலையம் செல்வதற்காக அவன் கிளிநொச்சியில் நின்ற பொழுதே சுனாமிப்பேரலை அவனது ஊரில் அடித்தது. அந்த சுனாமிப்பேரலையின் பொழுது அவனது ஒரு சகோதரி இறந்து போயிருந்தாள். அவனின் வீடு முதலிய சொத்துக்களும் அழிந்து போயிருந்தன. சுனாமிப் பேரலை ஏற்படுத்திய தாக்கமும் வலியும் அவனது முகத்தில் நிழல் போலப் படிந்திருந்தது.

உயர்தரம் முதல் பரீட்சையில் பல்கலைக்கழத்திற்கு செல்லுவதற்கான போதிய புள்ளிகள் எல்ரனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவனுக்கு நல்ல பெறுபேறு கிடைத்ததது. தொடர்ந்தும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் எல்ரன் படிக்கத் தொடங்கினான். கிளிநொச்சி நகரத்தில் புத்தகங்களுடன் திரிந்து கொண்டு படித்தான். கிளிநொச்சி நகரத்தில் அவனை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். சைக்கிளில் கூடையிலும் கரியலிலும் புத்தகங்களை வைத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பான். சைக்கிளை நிறுத்திக் கொண்டு வந்து பேசுவான். நானும் அவனும் தமிழ் பாடம் எடுத்திருந்தோம். தமிழ்ப்பாடம் பற்றி காண்கிற நேரத்தில் எல்லாம் பேசுவான். ஒருநாள் கிளிநொச்சி நகரத்தில் வைத்து 'மச்சான் நான் கம்பசுக்கு எடுபட்டிருக்கிறேன்' என்று அவன் சொல்லிய பொழுது அவனது நடுக்கத்தில் சிரிப்பு கலந்திருந்தது.

அந்த வெற்றிக்காக படித்திருந்திருந்த எல்ரன் அதில் வெற்றி கண்ட மகிழச்சி அவனது முகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அவன் பெரும் மகிழ்ச்சியில் இருந்தான். அவனின் எல்லா துயரங்களுக்கும் முடிவு கிடைத்து விட்டது என்று அவன் நம்பிக்கை அடைந்திருந்தான்.

யாழ் பல்கலைக்ழகத்தில் மாணவர் ஒன்றியச் செயலாளராக இருந்த 2009ஆம் ஆண்டில் என்னை சந்திப்பாதற்காக ஒரு அருட்தந்தை வந்திருந்தார். அவரது கையில் ஒரு கடிதம் இருந்தது. அவர் தெல்லிப்பளையில் உள்ள முன்னாள் போராளிகளின் தடுப்புமுகாமிலிருந்து அந்தக் கடிதத்தை கொண்டு வந்திருந்தார். அந்தக் கடிதத்தை எல்ரனே எழுதியிருந்தான். எல்;ரன் எங்கிருக்கிறான்? எப்படியிருக்கிறான்? இருக்கிறானா? என்ற நிலையில் அவன் ஒரு முனனாள் போராளியாக தடுப்புமுகாமில் இருப்பது தெரிந்தது. தன்னை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அவன் எழுதியிருந்தான்.

அந்த தடுப்புமுகாமில் பல பல்கலைக்கழக மாணவ - முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தெல்லிப்பளை தடுப்புமுகாமிலிருந்து அந்த மாணவர்களை மீட்பதற்கு அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் நடவடிக்கை எடுத்த பொழுது எல்ரனும் பல்கலைக்கழகம் திரும்பியிருந்தான். அது ஒரு கொடுமையான காலம். எப்படி மீளக் கலவியைத் தொடங்குவது? எப்படி வாழ்வை ஆரம்பித்தது என்று மாணவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். முகாமிலிருந்து மாணவர்கள் வெளியில்வரத் துடித்துக் கொண்டிருந்த காலம். எல்டனின் குடும்பத்தினர் தடுப்புமுகாமிலிருந்த பொழுது அவன் வெளியில் வந்திருந்தான். படிக்க வேண்டும் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் இருந்தான். படிப்பதற்று எப்படியான உதவிகள் கிடைக்கின்றன அவற்றை எப்படி பெறுவது என்று கேட்பான்.

முன்னாள் போராளிகளாக இருந்து பல்கலைக்கழகம் வந்த மாணவர்கள் இயல்பான கல்வி கற்கும் நிலைக்குச் செல்லுவது என்பது மிகவும் சிக்கலாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினை அவர்களை பெரும் இடருக்கு முகம் கொடுக்கப் பண்ணியது. குடும்பத்தினர் தடுப்பு முகாம்களில் இருந்தது இன்னொரு பிரிவையும் மன நெருக்கடியையும் கொடுத்தது. தடுப்புமுகாம்களில் இருந்து காலத்தை வீணடித்ததும் மாணவர்களிடத்தில் மனச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் போராளி, அகதி என்ற அடையாளங்கள் அவர்களை இவ்வாறான பல சிக்கலுக்குள் தள்ளியிருந்தன. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாதல், தற்கொலையில் ஈடுபடுதல் என்பன மிக சாதரணமாகியது.

பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவர்களுக்கான மூன்று நேர உணவு அப்பொழுது வழங்கப்பட்டதுடன் சில தொண்டு நிறுவனங்கள் நிதி உதவியினை வழங்கின. பல்கலைக்கழமும் மாணவர்களுககு நிதி உதவியை செய்து வந்தது. போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களின் நலனில் அப்போதைய துணைவேந்தர் சண்முகலிங்கன் கடுமையாக அக்கறை காட்டியிருந்தார். இவைகள் வைத்து கல்வியைத் தொடரும் போராட்டம் மிகுந்த வாழ்க்கைக்குள் மாணவர்கள் பயணித்தார்கள்.

யாழ் பல்கலைக்கழக நலச்சேவையில் பதிவாளராக இருந்த ஜெயக்குமார் ஒருநாள் என்னை அழைத்து எல்ரன் ஏன் சோகமாக இருக்கிறார் என்று கேட்டார். எல்ரன் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பல துயரங்களால் சோகம் படிந்தவானக இருந்தான். பொருளாதார ரீதியான பிரச்சினையும் குடும்பப் பிரிவும் அவனை சோகத்தில் தள்ளின. எல்ரனின் நிலவரத்தில் பல்கலைக்கழகம் முழுமையான அக்கறையெடுத்தது.

சோர்வான நிலையில் இருந்த பல மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறார்கள். யாராலும் தளிர்க்கச் செய்ய முடியாத சில மாணவர்களை அன்றைய காலத்தில் பல்கலைக்கழகம் இழந்தது. யுத்தம் பாதித்த அந்த மாணவர்கள் அதன் வலியிருந்தும் தாக்கத்திலிருந்தும் மீளாமல் துடித்தார்கள்.

இந்தக் கட்டங்களை தாண்டி வெற்றிகரமாய் பயணித்து வந்தவனே எல்ரன். எல்ரனின் முகத்தில் ஒரு வருடம் கடந்த பொழுது பிரகாசம் பிறந்திருந்தது. எல்டன் ஒரு முன்னாள் போராளி. அவனிடம் அவனின் அனுபவங்களைத் குறித்து ஒரு பொழுதும் பேசியதில்லை. அவற்றை நினைவுபடுத்துவதும் இல்லை. போராளியாக இருந்த அவனை ஒரு மாணவனாக்குவதும் கல்வியிலே ஈடுபாடு கொள்ளச் செய்வதுமே அன்று அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அவன் பெரும் யுத்த ஆற்றைக் கடந்து வந்தவன். முட்களையும் சிறைகளையும் கடந்து வந்தவன். மிகவும் வறிய கடல் தொழில் செய்யும் அவனது குடும்பம் சுனாமியாலும் யுத்ததாலும் பாதிக்கப்பட்டிருந்தது.

என்னை காணும் பொழுதெல்லாம் செய்திகளைக் குறித்தும் அரசியலைக் குறித்தும் பேசுவான். என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. எல்ரன் நல்ல ஆங்கில அறிவுள்ள மாணவன். பொதுக்கலை படித்த பொழுதும் முதல் வகுப்பில் ஆங்கிலப்பாடத்தில் சித்தியடைந்திருந்தான். யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளர் நேர்முகத் தேர்வுக்காக செல்ல இருந்தான். ஊரில் உள்ள சின்னப் பின்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பித்துள்ளான். ஊரில் பள்ளிக்கூடம் செல்லாமல் உள்ள குழந்தைகளை பள்ளிக்குச் செல்லுமாறு சொல்லுவான்.

இறுதியாக அவனைப் பார்க்கும் பொழுது தலை நிறைய முடி வளர்த்திருந்தான். அவனுக்கு அப்படி முடி வளர்ப்பது அழகாக இருந்தது. உயர்தரம் படித்த காலத்திலும் இடையிடை இப்படி முடி வளர்த்திருப்பான். பின்னர் வெட்டிக் கொள்ளுவான். 'தலைமுடியை வெட்டப்போறனடா' என்று சொல்லிக் கொண்டு சென்றான்.

அதிகமதிகமாக இழக்கும் ஒரு சமூகத்தில் உள்ள பல்கலைக்கழகம் இத்தனை இழப்புக்குகளுக்கு முகம் கொடுக்கிறது என்கிற பொழுது சக மாணவர்களையும் இந்த சமூகத்தையும் வலி கொள்ள வைக்கின்ற பெரும்துயரமாக வலிக்கின்றது.

பெரும் அதிர்ச்சியைத் தரும் அவனது மரணம் இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. தனது ஊரான வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு கடலில் தனது சகோதரியின் குழந்தைளை குளிப்பாட்டி கரையில் நிக்க விட்டுச்சென்று கடலில் மூழ்கியிருக்கிறான். அப்பொழுது அவனைக் காணவில்லை என்று அழுதபடி குழந்தை சொன்னதைக் கேட்டு கடலைச் சென்று பார்த்த பொழுது அவன் சடலமாய் கடலில் மிதந்து கொண்டிருந்தான். கடலோடு வாழ்ந்த அவனை கடல் எப்படி மூழ்கடித்துக் கொன்றது என்பதே எல்லோரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அவனைக் கடல் கொன்று விட்டது என்கிற பொழுது கடலின்மீது பெரும் கோபம் வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி கல்வியில் முன்னேறி வந்தவனைத்தான் கடல் கொன்றுவிட்டது. கடலில் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவனையா கடல் கொன்றது? சுனாமிப்பேரலையால் சகோதரியைப் பலியெடுத்த கடலா அவனைக் கொன்றது? கடலுடன் வாழ்ந்து எப்பொழுதும் அதில் நீந்தியும் கடலின் மீது படகிலும் செல்லும் அவனையா கடல் கொன்றது? யுத்தத்தின் முடிவில் கடலில் நீந்திச் சென்ற அவனையா கடல் கொன்றது?

இரக்கமற்ற கடல் எங்கள் நண்பனைக் கொன்று விட்டது. அதன் மூலம் ஒரு வறிய மீனவக் குடும்பத்தின் நம்பிக்கை வெள்ளிச்சத்தை அணைத்து விட்டது. கட்டைக்காடு என்கிற கிராமத்தின்மீது அக்கறை கொண்ட, அந்தக் கிராமத்தின் குழந்தைகளின் கல்விமீது அக்கறை கொண்ட துடிதுடிப்பான இளைஞனைக் கொன்றுவிட்டது. போரால் பாதிக்கப்பட்ட இனத்தில் தளைத்து வந்த மாணவனைக் கொன்றுவிட்டது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75576/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தீபச் செல்வன், நீ எழுதிய முக்கியமான ஒரு mono graft. இப்படி போர்க்காலத்து நாயகர் நாயகிகள் பற்றி mono graft வரலாற்றுப் பதிவாக நமக்குத் தேவை.

இன்றைய காலக் கட்டத்தில் சண்முகலிங்கம் உப வேந்தராக இருந்திருக்க வேண்டும். பல்கலைக் களக விடயங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு செய்த கேடுகளில் சண்முகலிங்கத்தின் சேவையை நமது கல்விச் சமூகம் இழந்தமையும் ஒன்று.

பகிர்வுக்கு நன்றி நிழலி ...

  • கருத்துக்கள உறவுகள்

எல்ரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்,

இவர்ர் வாழ்ந்த கிராமம் எனக்கு மிகவும் பரிட்சயமானது ...... அடிப்படை வசதிகள் அற்ற கிராமம் அத்தோடு சுனாமி தாக்கம் ஏற்பட்டவேளை நான் பக்கத்து கிராமத்தில் நின்றமையால் அதன் தாக்கத்தை நானும் உணர்ந்துள்ளேன் அதன் ஆறாதவடுக்கள் என்னும் ரணமாக இருந்து கொண்டே இருக்கின்றது ......

அப்போதைய துணைவேந்தர் சண்முகலிங்கன் செயல்கள் போற்றுதற்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தீபன், எல்ரன் யார் என்பதை எம்கண்முன்னே கொண்டுவந்ததற்கு நன்றி எமதினத்தின் நடுவே வாழ்ந்திருந்த ஒரு போர்க்குறியீட்டைப்பற்றிய நினைவுகள் தங்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது ஆத்மா பிறவிப்பயனடைய எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறேன். முன்னைநாள் துணைவேந்தர் அவர்களது, செயற்கரிய நற்செயல்களுக்கு சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். இச்செய்தியை யாழ்முற்றத்தில் பரப்பிய, நிழலிக்கு வாழ்த்துக்களுடன்கூடிய நன்றிகள்.

ஒரு இலட்சியத்துடன் கல்வியைப் பயின்றவர் அமரர் எல்ரன் - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்...!

30.03.2012 - வெள்ளிக்கிழமை

ஒரு இலட்சியத்துடன் கல்வியைப் பயின்ற அமரர் எல்ரனின் அகால மரணம் கட்டைக்காட்டு பகுதி மக்களுக்கான, உறவினருக்குமான இழப்பு மட்டுமல்ல வடமராட்சி கிழக்கிற்கு பெரும் வீழ்ச்சி என ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவனான அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் எல்ரனின் அஞ்சலி நிகழ்வில் இரங்கல் உரையாற்றும் போது தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கடலில் குளிக்கச் சென்ற சமயம் அகால மரணமடைந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் கட்டைக்காட்டைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட் எல்ரனின் இறுதி அஞ்சலி நிகழ்வு வடமராட்சி கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (29) பிற்பகல் 2.30 மணியளவில் கட்டைக்காடு பொது மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு இரங்கல் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இரங்கல் தெரிவிக்கையில் இங்கு அஞ்சலியுரை நிகழ்த்திய அமரர் எல்ரனின் சக மாணவர்கள் மாணவத் தலைவர்கள் நண்பர்கள் எமில்ரன் எவ்வாறான இலட்சியத்துடன் கல்வியைக் கற்றார் என மிகவும் தெளிவாக பதிவு செய்தனர். தான் ஒரு கல்வியாளனாக வரவேண்டும் எமது சமூகம் கல்வியில் உயரவேண்டும். எனது பிரதேசம் அபிவிருத்தியில் வளரவேண்டும் என ஒரு இலட்சியத்துடன் கல்விப் பயணத்தை தொடர்ந்துள்ளார். அவருக்கு ஆங்கிலம் சிங்களம் பிரெஞ் மொழி ஆகியவற்றை மிகவும் சரளமாகப் பேசக் கூடிய திறமைசாலி. அவருடைய சிந்தனைகள் ஒரு கல்வியாளனுக்கு இருக்க வேண்டிய சகல ஆற்றலையும் பண்புகளையும் கொண்டிருந்துள்ளது. எனவே அமரர் எல்ரனின் எதிர்பார்ப்புக்களை கனவுகளை நனவாக்குவதே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும் எனத் தெரிவித்தார்.

பல மாணவத் தலைவர்களின் அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து பூதவுடல் கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்றது. அதன் பின்னர். சென்.மேரிஸ் சேமக்காலையில் 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமரர் எல்ரன் அன்று விடுவிக்கப்படாத பகுதியான கட்டைக்காட்டிலிருந்து மிகவும் துணிச்சலுடன் கடலில் கட்டுமரத்தில் வலித்து வலித்து வந்து பின்னர் நீந்தி பருத்தித்துறை கரையை வந்தடைந்து இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்து தனது நிலையை விளக்கி பின்னர் பல்கலைக்கழக சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்று வந்த ஒரு இலட்சிய மாணவன் என அவரது உறவினர்கள் சொல்லி அழுவதைக் கேட்டு சக மாணவ மாணவிகளும் கதறியழுததை. பார்ப்போரின் நெஞ்சத்தையும் நெகிழ வைத்தது.

SAM_0185.JPG

SAM_0223.JPG

SAM_0208.JPG

SAM_0237.JPG

SAM_0203.JPG

SAM_0235.JPG

SAM_0204.JPG

E.P.D.P யின் இணைய பக்கத்தில் இருந்து கொப்பி பண்ணினேன் .

துயரமான பதிவு. கடல்மடியிலேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்தனை கடலே ஆகுதியாக்கிக்கொள்வது கொடுமை. கட்டைக்காடுப் பகுதி தப்புக்கடலா அல்லது சமுத்திரத்தின் கரையா? சமுத்திரக்கரை என்றால் அலைகளின் உயரமும், வீரியமும் காரணமாக அங்கு குளிப்பதற்கு உகந்தது இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி. நானும் உதயனில் செய்தியைப் பார்த்தேன். ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

உள்ளத்தை உலுக்கும் நிகழ்வு.எல்ரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.