Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரே உயிரே - ஆநதி // நன்றி: http://www.dinamani.com

Featured Replies

ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?!

:)

Untitled-1.jpg1.jpg

நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை.

அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்குள் என் முன்னால் நீண்டிருக்கும் துப்பாக்கி என்னைத் தீர்த்துக் கட்டிவிட்டால் இனிமேல் என்னால் எழுத முடியாமல் போய்விடுமே. அந்தக் கவலை தவிர வாழும் ஆசை அதிகம் இல்லை எனக்கு.

போரின் இறுதிநாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாழ்ந்தவர்கள் எவரும் இப்பாத்திரப் படைப்புகளை உண்மை என்று ஏற்றுக் கொள்வார்கள். அந்த வாழ்க்கையை நான் மீள எழுதும்போது மீண்டும் வன்னி மண்ணில் குருதி நெடியோடும், பிண வாடையோடும் எறிகணை வீச்சுக்குள்ளும், வாழ்ந்த உணர்வைப் பெற்றேன்.

அந்த உயிராபத்தான சூழலுக்குள் மீண்டும் வாழ்ந்த உணர்வு எழுதி முடித்தபோது இருந்தது.

இந்த நாவல் எப்படி, எங்கு வெளிவரும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. வாய்ப்புக் கிடைத்தால் வாழ்ந்து காட்டலாம் மரணத்திலாவது என்ற சின்ன விருப்பத்தோடு இதைப் பிரசுரிக்க ஒப்புகிறேன்.

உயிரே உயிரே.... (1)

ஆநதி

(First Published : 6 May 2012)

சுமதி வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது இருந்த மன வைராக்கியத்தில் அவளுக்கென்றான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டேதான் வந்தாள். அவளே உழைத்து தனக்கென்று செய்த நகைகள், அவள் படித்துப் பெற்ற சான்றிதழ்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்ற அவசியமானவற்றோடு மேலதிகமாக நான்கைந்து உடைகள்தான் எடுத்துக்கொண்டாள். ஒற்றைப் பையினுள் அனைத்தையும் திணித்துத் தூக்கிக்கொண்டு, போகிறேன் என்றுகூடச் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

அவளுக்கு நட்பும் கிடையாது; தோழியும் கிடையாது. அவளது தனிப்போக்கு எந்த நட்பையும் அவளுக்கு ஏற்படுத்தவுமில்லை. அதுகுறித்து அவளுக்கு வெட்கமுமில்லை, துக்கமுமில்லை, அக்கறையுமில்லை. ஆனாலும் அமுதாவை ஏனோ பிடிக்கும். சுமதி படிப்பில் ஒன்றும் அதிகமான உச்சத்தைத் தொடவில்லைதான். அதற்காக வீட்டில் முடங்கிக்கிடக்க விரும்பவில்லை. அவளது தாயார் வேலை செய்த மருத்துவமனையில் கதைத்து சலுகையின் அடிப்படையில் தாதியாக வேலைக்கமர்ந்தாள். என்றாலும் அந்த வேலை அவளுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. நோயும் நொடியுமான மனிதர்களை எந்த நேரத்திலும் பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கு எரிச்சலூட்டியது.

எந்நேரமும் வேலை வேலை என்று மாயும் அமுதா நல்ல பண்புள்ளவளாக இருந்தாள். சுமதியோடு நட்புடன் பழகினாள். ஊசி போடுவது எப்படியென்று சுமதிக்குப் பழக்கியவள் அமுதாதான். நோயாளிகளை அனுசரித்துப் போகும் பக்குவத்தைத்தான் அமுதாவால் அவளுக்குப் பழக்கவே முடியாமல் போயிற்று. அமுதாவை தன் நண்பி என்று சுமதி சொன்னது கிடையாது. அமுதா சுமதியை விளங்கிக் கொள்கிறாள். அதனால் முரண்பாடுகள் இல்லை.

சுமதியைக் கண்டால் நோயாளிகள் 'கப்சிப்' என்று அடங்கிவிடுவார்கள். தப்பித் தவறி சுமதிதான் அன்று மருந்துகட்ட வருகிறாள் என்றால் காயத்தின் கட்டை அவிழ்க்கும் முன்னரேயே கதறத் தொடங்கிவிடுவார்கள். வலியைப்பற்றி கொஞ்சம்கூட பொருட்படுத்தமாட்டாள். வெடுக்கென்று இழுத்துக் கழற்றி, தேய்த்துவிட்டு இறுக்கிக் கட்டுவாள். இவளெல்லாம் ஒரு தாதி இவளுக்கெல்லாம் ஒரு கூலி என்று இவளின் காதுபடவே பலர் புறுபுறுத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைகளெதுவும் இவளைத் தாக்கியதில்லை. உண்மையாகவே அமுதாவைப் போன்றவர்கள்தான் இந்தத் தொழிலுக்கு ஏற்றவர்கள் என்று சுமதிக்கும் தெரியும். சுமதியையும் அமுதாவைப் படைத்த கடவுள்தானே படைத்திருக்கிறார். இதுவரைக்கும் துன்ப துயரங்களென்று தராமல் அவளைச் சுயமாக வாழ வைக்கும் கடவுளுக்கு விரதங்கள் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்வாள். அது அவளது குடும்ப வழமை. ஆனால் அந்த வழமைகளைக்கூட மீறிவிட எப்படித் துணிந்தாள்.

புதிதாக வேலையில் இணைந்த வாமன்தான் அவளை மாற்றினான். வாமனின் இளநகை, அவனது மாநிறம், அவனது உயரம், அவனது பேச்சு என்று எல்லாமுமே சுமதியைக் கவர்ந்தன. அமுதாவைப்போல அவனும் கடமையில் கருத்தாகத்தான் இருந்தான். ஆனாலும் அவன் அவளை வசீகரித்தான். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் "ஹாய், குட்மார்னிங். டியூட்டி முடிஞ்சிதா? இப்பதான் வாறிங்களா?'' என்று ஒற்றைச் சொற்களில் அவளுடன் பேசியிருக்கிறான். ஆனால் அந்த ஒற்றைச் சொற்களுக்காக சுமதி காத்திருக்கத் தொடங்கிவிட்டாள். அவனுக்கு குட்மார்னிங் சொல்வதற்காகவே வாசலில் காத்துக்கொண்டும் நின்றிருக்கிறாள்.

எப்படியோ ஊர் பேர் கேட்டு, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாகப் பேசி உறவை வளர்த்துக்கொண்ட பின்புதான் அவளது உள்மனம் சொன்னது, 'அடியேய் சுமதி நீ வாமனைக் காதலிக்கிறாய்' என்று. உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன. அவளது நடையில் புதிதாக ஒரு துள்ளல் தெரிந்தது. முகத்தில் மகிழ்ச்சி பொழிந்தது. மாற்றங்கள் அப்பட்டமாய்த் தெரிந்தன. அவளை அவளே அதிசயமாகப் பார்த்தாள். கண்ணாடியின் முன்னால் அதிக நேரத்தைச் செலவழித்தாள். தன்னையே தான் ரசித்தாள். அதைவிட வாமனை ரசித்தாள்.

வாமன்கூட சுமதியை விரும்பத்தான் விரும்பினான். எதற்காக என்று தெரியாது. வாமனைக் கவரும் ஏதோவொன்று சுமதியிடம் இருக்கிறது. அது என்னவென்று அவனுக்கே புரியவில்லை. அதை புரிந்துகொள்வதற்காகவே அவன் சுமதியுடன் நிறையத் தடவைகள் கதைத்திருக்கிறான்.

சுமதிக்கு தான் செய்யும் வேலையில் அதிக ஈடுபாடு இல்லை என்பது வாமனுக்கும் தெரியும். அவனோ தான் செய்யும் கடமைக்காக உயிரையே விட்டுவிட வேண்டுமானாலும் விடக்கூடியவன். இப்போதும் தன் கடமை நிமிர்த்தமாகத்தான் தொழில் கற்க வந்திருக்கிறான். அதைப்பற்றியெல்லாம் இன்னமும் அவன் சுமதிக்குச் சொல்லவில்லை. சொன்னால் அவள் அவனையே புறக்கணித்துவிடவும் கூடும். இருவரும் கதைக்கும் நேரங்களில் போராட்டம் பற்றிய கதை வந்தால் சரி சுமதிக்கு முகம் கடுகடுத்துவிடுகிறது.

"அதுகளப்பத்தி என்னோட கதைக்க வேண்டாம்'' என்று கறாராகச் சொல்லிவிடுவாள்.

வாமன் ஒருநாள் அவளை இருத்தி வைத்து விளக்கம் கேட்டான்.

"எனக்கு இயக்கமெண்டாலே பிடிக்காது.''

"பழகப் பழகப் பிடிக்கும்'' என்றான் அவன்.

"இல்ல பிடிக்காது'' என்று உறுதியாகச் சொன்ன சுமதியைப் பார்த்து அவன் சிரித்துக்கொண்டு எழுந்து சென்றான்.

இரவு படுக்கையில் கிடந்தபோது சுமதி வாமனுடன் அன்று கதைத்ததைப் பற்றி நினைத்தாள். அப்போதுதான் அவளுக்கு அவனது அந்தச் சிரிப்பில் ஏதோ பொருள் இருப்பதாகப்பட்டது.

அவனது மர்மப் புன்னகை.

அப்படியானால்...? சிலவேளை அவனுக்கு இயக்கத்தை பிடிக்குமோ? அவனை இவளுக்குப் பிடிக்கும் என்றால் அவனுக்குப் பிடித்தது இவளுக்கும் பிடிக்கத்தானே வேண்டும் என்ற அர்த்தத்தில் சொன்னானோ?

பலவாறான கேள்விகளோடேயே உறங்கி, விழித்து, சுமதி அடுத்தநாள் வேலைக்குச் சென்றபோது வாமன் பலவிதமான வேலைகளோடு ஓடித் திரிந்தான். அன்று அவர்கள் கதைப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை.

பின்பொருமுறை ஆறுதலாகக் கதைக்கக் கிடைத்தபோது கேட்டாள்:

"ஏன் அண்டைக்கு அப்பிடிச் சொன்னியள்?''

"எப்பிடிச் சொன்னனான்?''

"இயக்கத்தை எனக்குப் பிடிக்கும் எண்டு?''

"ஏன் பிடிக்காதா?''

"இல்ல. பிடிக்கவே பிடிக்காது. அதைப்பற்றித்தான் தெளிவாய் சொல்லியிருக்கிறனே''

"......''

"அவங்கள் தேவையில்லாமல் மின்னக்கெடுறாங்கள்''

".....''

"ஏன் அப்பிடிச் சொன்னீங்க என்றல்லவா கேட்டனான்? ஏன் உங்களுக்கு அவையளப் பிடிக்குமே?''

அவனது முகத்தில் பலவாறான சிந்தனைக் கோடுகள்.

"சொல்லுங்களேன். இயக்கத்துக்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கோ?'' என்று சுமதி சந்தேகத்துடன் கேட்டாள். அவன் இல்லை என்பது போலத் தலையசைத்தான்.

"ஏன் இதச்சொல்ல இவ்வளவு யோசிக்கிறிங்கள்?''

"இயக்கத்தைப் பற்றித்தான் யோசிச்சேன்''

"நீங்களேன் அதைப்பற்றி யோசிக்கணும்? எங்களுக்கும் அவைக்கும் எந்தத் தொடர்பும் தேவையில்லை. அவங்களோட எந்தச் சோலிக்கும் போகக்கூடாது'' என்றாள் சுமதி.

இவர்களது காதலை அமுதாவும் அறிவாள் என்பதால் சுமதி வாமனனைப்பற்றி அமுதாவுடன் மட்டும்தான் கதைப்பாள். அமுதாவுக்கு இருவரையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பொருத்தப்பாடற்ற இடங்களில் அவசரப்பட்டு அன்பைப் பகிர்ந்துகொண்டார்களோ என்று யோசிப்பாள். ஏனெனில் சுமதியின் சுயநலப் போக்குகள் வாமனுக்குக் கொஞ்சமும் ஒத்துவரப்போவதில்லையே.

வாமன் மருத்துவமனையில் இருந்து புறப்படும்போது சுமதியிடம் சொல்லிக் கொள்ளாமல்தான் புறப்பட்டான். அவளிடம் சொன்னால் அவள் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க அவனால் முடியாது. அதனால்தான் அவளின் விடுமுறை நாளாகப் பார்த்து புறப்பட்டுவிட்டான். அந்தப் பயணத்தைப் பற்றி அவனேகூடத் திட்டமிட்டிருக்கவில்லை. திடீரெனத்தான் அவனுக்கான அழைப்பே வந்திருந்தது. சொன்ன திகதியில் அவன் புறப்பட்டுவிட்டான். எப்படியும் சுமதி தன்னைத் தேடுவாள் என்பதால் அமுதாவிடம் கடிதமொன்றைக் கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டான்.

அடுத்த நாள் காலை சுமதி கடிதத்தை அவசரமாகப் பிரித்து படித்தபோது, "உடனடியாக வீட்டுக்குப் போகவேண்டி இருக்கிறது. புறப்பட்டுவிட்டேன். நேரில் சொல்லவில்லை என்று கோபிக்க வேண்டாம். அதற்கு அவகாசம் இருக்கவில்லை' என்று தகவலாக மட்டுமே இருந்தது. கீழே ஒரு முகவரியும் இருந்தது. அவனது பயணம் பற்றி அமுதாவிடம் கேட்டபோது அதைப்பற்றி தெரியாது என்றாள்.

அவனது வீட்டில் ஏதும் சிக்கலோ? யாரும் செத்துக்கித்துப் போனார்களோ? அல்லது யாருக்கும் வருத்தம் என்றுதான் அழைத்தார்களோ? பலவாறான காரணங்களைச் சொல்லி தேற நினைத்தாலும் அவன் சொல்லாமல் சென்றது அவளுக்கு வேதனையாகத்தான் இருந்தது. அவளிடம் தொலைபேசியில்கூட கதைக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன அவசரம் நேர்ந்தது அவனுக்கு? அந்த முகவரியை மட்டும் கொடுத்துவிட்டுப் போனவன்தான். ஒருமாதம் கழித்து கடிதமொன்றை அனுப்பியிருந்தான். தான் நலமாக இருப்பாதகவும் ஏன் அவள் கடிதம் ஏதுவும் எழுதவில்லை என்றும் அதில் கேட்டிருந்தான்.

'உங்கள் கடிதம் கிடைத்தது. என்னிடம் விவரம் சொல்லிவிட்டுச் சென்றதற்கு நன்றி' என்று மட்டும் எழுதி பதிலனுப்பினாள். சுமதிக்கு அவனில் கோபம் இருந்தது. அவளெழுதிய இந்த இரண்டு வரிகள் அவனுக்குக் கிடைத்ததா இல்லையா என்றுகூட சுமதிக்குத் தெரியவில்லை. ஏனெனில் பல மாதங்களாக அவனிடமிருந்து எந்தத் தகவலுமில்லை.

எனினும் சில கடிதங்களை அவள் எழுதியனுப்பினாள். அவற்றிலெல்லாம் விரைவில் யாழ்ப்பாணத்துக்கே திரும்பி வரச்சொல்லி வற்புறுத்தியிருந்தாள். நீண்ட நாட்களின் பின் அவனிடமிருந்து இன்னுமொரு மடல் வந்தது.

தொலைபேசி இருப்பது கூடவா அவனுக்கு நினைவுக்கு வராமல் இருக்கிறது? என்று அவளுக்கு எரிச்சல் வரும். அவனது கணீரென்ற குரலைக் கேட்க அவள் எவ்வளவு ஏங்குகிறாள் தெரியுமா? அவனைப் பார்க்க வேண்டும்போல இருக்கும் சமயங்களில் அவளுக்கு அழுகைகூட வந்துவிடுகிறது. ஆனால் அவனுக்கு தான் துடிப்பது புரியவில்லையே என்று சுமதி தனக்குள் குமுறுவாள். ஏதோ உள்ளுணர்வு அவற்றையெல்லாம் எழுதத் தடுக்கிறது. என்ன மண்ணாங்கட்டிக் காதல் இது என்று விட்டுத்தள்ளவும் முடியவில்லை. ஏதோ ஒன்று அவன்மேல் அன்பைப் பொழிய வைக்கிறது.

மந்தமாய்க் கிடக்கும் தன் காதலின் நிலை பற்றி அமுதாவிடம் சொல்லி அழுவாள் சுமதி.

"கவலைப்படாதே சுமதி. வாமன் உன்னை ஒருநாளும் ஏமாத்த மாட்டான். அவன் நல்ல பெடியன். தனக்கே தான் விசுவாசமாய் நடத்து கொள்ளுறவன். அவனிட்ட நேர்மை இருக்கு. நீ நம்பியிரு''

"என்னை வன்னிக்கு வரச்சொல்லி எழுதியிருந்தான் அமுது. எனக்கென்னவோ அங்க போக பிடிக்கேல்ல''

"ஏன் பிடிக்கேல்ல? பட்டிக்காடெண்டு நினைக்கிறியா?''

".....''

"நீ நினைக்கிற மாதிரி வன்னி ஒண்டும் அவ்வளவு மோசமான இடமில்ல சுமதி. அங்கயும் இங்க இருக்கிறதுபோல எல்லாமே இருக்கு''

"அது இயக்கத்தின்ர இடம்''

"ம்...அதுவா பிரச்சினை? ஒருக்கா வந்துதான் பாரன்''

"நீ உன்ர இடம் என்றதால விட்டுக்குடுக்க மாட்டாய்தானே. அவங்களப்பற்றி கதைச்சாலே பிடிக்கிறதில்லை. அதான்...''

"அதான் சொன்னேனே சுமதி ஒருக்கா வந்துபார் எண்டு'' என்று அமுதா புன்சிரிப்போடு சொன்னாள். என்னதான் சொன்னாலும் சுமதிக்கு வன்னிக்குப் போகும் எண்ணமெல்லாம் வரப்போவதில்லை என்று அமுதாவுக்கு நன்றாகத் தெரியும்.

"இந்தா சுமதி. இதுதான் என்ற முகவரி. நான் அடுத்த மாதம் மாற்றலாகிறேன் போல. பெரும்பாலும் வன்னியிலதான் ஏதாவதொரு ஆஸ்பிட்டல்ல வேலை செய்வன். அதால நீ எப்ப வந்தாலும் என்ர வீட்டுக்கு வரணும்''

"ஏனப்பா இந்தத் திடீர் மாற்றம்?'' என்று அதிர்ந்து கேட்டாள் சுமதி.

"சொந்த ஊர்ல வேலை செய்றதும் ஒரு திருப்திதான். இங்க விட அங்க வேலை கூட நிறைய கஸ்ரப்படணும். ஆனாலும் அதில நிறையவே மனநிறைவு கிடைக்கும் சுமதி''

"எனக்கெல்லாம் இப்பிடிப்பாக்க முடியாது. நீயொரு விசித்திரப் பிறவிதான் அமுது. சும்மா இருப்பதே சுகம் என்றதுதான் என்ர பொலிசி''

"வாமனத்தேடி ஒருநாள் இல்லாட்டிலும் ஒருநாள் வன்னிக்கு வரத்தானே போறாய் சுமதி. அப்ப என்னட்டயும் வா'' என்று அவளின் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றாள் அமுதா.

(தொடரும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]மிகவும் நன்றாக இருக்கிறது ,தொடருங்கள்.[/size]

[size=1]

[size="4"]முன்னாள் போராளியின் எழுத்து என்பதால் [/size][/size][size=1]

[size="4"]உண்மைகள் அதிகம் இருக்கும்.மிகுதியை [/size][/size][size=1]

[size="4"]வாசிக்க ஆவலாய் உள்ளோம்.[/size][/size]

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (2)

ஆநதி

(First Published : 13 May 2012)

12kd9.jpg

பிரச்சினைதான் அவளை வீட்டை விட்டே கிளப்பியது. அக்காமார் திருமணம் செய்யாததெல்லாம் பிரச்சினை இல்லையாம். இப்போது பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைக்கு இவள்தான் தலையாட்ட வேண்டுமாம். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு. உறவுவிட்டுப் போகக்கூடாதாம். பரம்பரை சொத்துகள் தங்கள் பரம்பரையோடேயே இருக்க வேண்டுமாம். அதற்கு இவளா கிடைத்தாள்? மாட்டேன் என்று மறுத்தாள் என்பதற்காக அவளை என்னவெல்லாம் ஏசிவிட்டார்கள்.

"எவனுக்காவது தலையாட்டிப் போட்டியோடி?'' என்று எவ்வளவு அசிங்கமாய் கேட்டார்கள்.

"ம். தலையாட்டி விட்டேன்தான்'' என்று அவளும் திமிராகத்தான் சொன்னாள்.

"உனக்கு உழைக்கிறன் என்ற திமிரடி'' என்று அம்மா முதுகில் அறைந்தாள்.

"ம். அதே திமிர்தான். நீங்க சொல்றவனுக்கு கழுத்தை நீட்ர ஆள் நானில்ல. அதுக்கு வேற யாரையும் பாருங்கோ''

"வாயைப் பார். குடும்பத்தின்ர மானத்தையே வாங்கவெண்டு பிறந்திருக்கு சனியன்''

"அம்மா அசிங்கமாய் கதைக்காதேங்கோ''

"என்னடி அசிங்கமாய் கதைக்கிறேன்? எந்தச் சாதியோ? என்ன சமயமோ எண்டு தெரியாதவனுக்கு தலைய ஆட்டிப்போட்டு வந்து நிக்கிறியே, அது தானடி அசிங்கம்''

"சாதி சமயமெல்லாம் சோறு போடுவதில்லை'' என்று கறராகச் சொன்னாள் சுமதி.

"யாரு சொன்னா? அப்ப நீ திங்கிறது எது போடுறது?''

"சே. இந்த வீட்டுல வந்து பிறந்தது என்ர குற்றம், என்ர குற்றம்'' என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள் சுமதி.

"ஓகோ. வளந்திட்டாய் தானே. இதுவும் சொல்லுவ இன்னும் சொல்லுவ'' என்று பெரியக்காவும் கத்தத் தொடங்கினாள்.

"இப்ப என்ன? இந்த வீட்டுல நான் இருக்கிறதுதானே பிரச்சினை? எங்கயாவது நான் போய்த்துலையுறன்.''

"போவன். போக்கத்தவளே போ. இஞ்ச உனக்காக ஒருத்தரும் அழுது கொண்டிருக்கமாட்டம்'' என்று அந்தக் கொடூர வார்த்தையைச் சொன்னது அவளின் அம்மாவேதான்.

கலங்கிவிட்டாள் சுமதி. பற்களை இறுகக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

"அம்மா, போகத்தான் போறன்.''

"போ. ஆனா சொத்து சீதனம் எண்டு கேட்டுக் கொண்டு மட்டும் இங்க வராத. எக்கேடும் கெட்டுத் துலை.''

"உன்ர ஆசீர்வாதத்துக்கு நன்றியம்மா'' என்றுவிட்டு அறைக்குள் புயலாகப் புகுந்து கதவை அறைந்து சாற்றினாள். உள்ளே கிடந்து அழுதாள். அவ்வளவுதானே என்று வீட்டார் நினைத்தது தப்பாகிப் போனது. அடுத்த பத்தாவது நிமிடமே வெளியே போன அவளை எல்லோரும் புதினமாகப் பார்த்தார்கள்.

எங்கே போய்விடுவாள்? மருத்துவமனையில் வேலை செய்யும் தெரிந்தவர்கள் வீட்டில் எங்காவது நிற்கலாம் என்று போகிறாள். இவள்தான் எவருடனும் ஒத்திருக்க மாட்டாளே. விரைவில் திரும்பி வருவாள். சிலவேளை மருத்துவமனையிலேயே இடம் கேட்டு தங்கிக் கொள்வாள். நிச்சயமாகக் காதலனின் வீட்டுக்குப் போகமாட்டாள். இன்றைய நிலையில் எந்த ஆண்மகனும் சீதனமே இல்லாமல் வந்திருக்கிறேன் என்றால் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ஆளாளுக்கு மனதைத் தேற்றிக் கொண்டார்கள்.

ஆனால் சுமதியோ வீதிக்கு வந்த வேகத்தில் ஓட்டோவைப் பிடித்து, பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். அதே வேகத்தில் முகமாலைப் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் குந்திவிட்டாள். அவளது மனம் இன்னும் படபடத்துக் கொண்டிருந்தது. ரத்தம் கொதிப்பதாக உணர்ந்தாள். பெற்றெடுத்த அம்மாவே எப்படி ஏசிவிட்டாள்? நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறியது. அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. பொது இடத்தில் கலங்கிக் கொண்டு நிற்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் மனதை தேற்றிக் கொள்ள முயன்றாள்.

பேருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே அவளுக்கு வீடு மறந்துபோனது. வன்னி எப்படி அவளை வரவேற்கப் போகிறதோ? வன்னியை பசுமையான இடம் என்று நினைத்தபோது வாமனின் ஊர் எப்படியோ? என்று ஏக்கமாய் இருந்தது. பொதுவாக கிளிநொச்சியை அண்டிய பகுதிகள் நகராகத்தான் இருக்கும். நகர்ப்புறத்தை அண்டிய கிராமம்தானே வாமனனின் ஊர்? அதென்ன உ...உ...உதயநகர். நல்ல பெயர்தான். உதயநகர் காடோ வீடோ என்று எண்ணிக்கொண்டு வந்ததில் நேரம் கடந்ததே தெரியவில்லை.

முகமாலை ராணுவ சோதனைச் சாவடி கடந்து போராளிகளின் சோதனைச் சாவடியிலும் பதிவுகளைச் செய்துவிட்டு கிளிநொச்சிப் பேருந்தில் ஏறிக்கொண்டாள். பேருந்து ஆனையிறவை நோக்கி வேகமெடுத்தது. சுமதி பசுமையை தேடினாள். ஏமாற்றம்தான். கடலும் காய்ந்த நிலமும், தலையறுந்த மொட்டைப் பனைகளுமே கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தன. பரந்தன் வரைக்கும் இதே கோலம்தான். அவள் வன்னி பற்றி அதுவரை நினைத்திருந்ததும்கூட தப்போ எனப்பட்டது. அவளுடைய கற்பனையையும் மீறிய வறட்சியைத்தான் அவள் கண்டாள். பரந்தனில் இருந்த சில, பல கடைகள் தவிர வேறு எதுவுமே அவளுக்கு இரசிக்கவில்லை.

இப்படி இன்னும் எத்தனை ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டி வருமோ என்று நினைத்துக்கொண்டு பெருமூச்செறிந்தாள்.

தொடர்ந்த பயணத்தில் அவளின் கண்களுக்குப் பசுமையான காட்சிகள் தெரிந்தன. வயல் நிலங்களின் பசுமை. இனித்தானே கிளிநொச்சி வரப்போகிறது என்று கொஞ்சம் ஆர்வமானாள்.

அவள் எதிர்பார்த்திருந்ததற்கு மாறாக கிளிநொச்சி "ஓகோ'வென்றிருந்தது.

பேருந்து நிலையத்தில் இறங்கியபோது சுமதிக்கு களைப்பாய் இருந்தது. தலை வலித்தது. தேநீர் பருகினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எப்படிக் குடிப்பது? வாழ்நாளில் ஒரு தடவை கூட கடையில் தேநீர் குடித்தறியாதவள் ஆயிற்றே. என்றாலும் கடைக்குச் சென்று தண்ணீர்ப் போத்திலொன்றை வாங்கிக் கொண்டாள். பேருந்து நிலையத்தில் நின்ற பெண் ஒருவரிடம் உதயநகர் எங்கே இருக்கிறது என்று கேட்டாள். அந்தப் பெண் நின்ற இடத்தில் நின்றே கைகாட்டி, "அதுதான். நீங்க யார் வீட்டுக்குப் போகணும்?'' என்று விசாரித்தாள். சுமதி தன் டயரியை எடுத்துப் பார்த்து முகவரியைத் தெளிவாகச் சொன்னாள்.

"அது ஓவியர் வீடுதான். இதுதான் ரயில் ரோட். இதாலயே போங்க. கல்லுப் பாதையாலேயே நேராகப் போக கோயில் இருக்கும். கோயிலடியால வலப்பக்கம் திரும்புங்க. அவடத்த கேளுங்களேன். கேற்றையே காட்டுவாங்க.'' அவ்வளவு விளக்கமாக வழிகாட்டிய பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு சுமதி நடக்கத் தொடங்கினாள். ஆனால் அந்தப் பெண் சொன்னதுபோல அதுவொன்றும் கிட்டிய தூரமாக இருக்கவில்லை. நடக்க நடக்க பாதை நீள்கிறதே தவிர வீட்டை நெருங்கவிடவில்லை.

இடத்தை இனங்கண்டு படலையடியில் நின்றபோது வீட்டாரை எப்படி அழைப்பது என்று புரியவில்லை. அழுகை வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. இலகுவில் எதற்கும் கலங்கிவிடாத அவள் இப்போது அழுவதற்கு ஒரு மடி கிடைத்தால் ஓவென்று கதறியே விடுவாள். வீதியில் வந்த சின்னப் பையன் ஒருவன் அவளைப் புதினமாகப் பார்த்தபடி அருகில் வந்து கேட்டான்.

"யாரையாவது தேடிவந்திருக்கிறிங்களா அக்கா?''

"அம்... இந்த ஒழுங்கையில் ஓவியர் வீடு...?''

"இதுதானக்கா. உள்ளுக்க வாங்க'' என்றவன் படலையை தள்ளிக்கொண்டு உள்ளே போனான்.

"ராசண்ணோய்...ராசண்ணோய்...'' என்று அந்தப் பையன் சத்தமாய் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். சுமதி வாசலிலேயே நின்றுகொண்டாள்.

"என்ன சின்னவா?'' என்ற ஓவியரின் குரலும் ""இராசண்ண யாரோ ஒரு அக்கா வந்திருக்கு'' என்று சின்னவன் சொல்லுவதும் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.

"யார்ரா?''

"தெரியாதண்ண. ஊருக்குப் புதுசுபோல..''

"புதுசா?'' என்றபடி ஓவியர் வாசலுக்கு வந்தார். நீலநிற ரீ சேர்ட்டும் மடித்துக் கட்டிய சாறமுமாக நின்ற அந்த ராசண்ணையில் பல வர்ணங்களில் பெயின்ட் தெளிப்பு சித்திரம் வரைந்திருந்தது. அவரது கையில் தூரிகை ஒன்று, 'இப்போதுதான் மஞ்சள் நிறம் தீட்டிக் கொண்டிருந்தேன்' என்று சொன்னது.

"வந்து...நான் ஜவ்னால இருந்து வாறன். என்ர பேர் சுமதி... இஞ்ச வாமன் எண்டு...'' என்று தயக்கத்துடன் கேள்வியை முடிக்காமலேயே நிறுத்தினாள்.

"வாமனா? எந்த வாமன்?'' என யோசனையோடு அந்த ஓவியர் கேட்டார். சுமதிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. என்ன எந்த வாமன் என்கிறார். வாமனையே தெரியாதென்கிறாரா அல்லது இங்கே ஐந்தாறு வாமன்கள் இருக்கிறார்கள், அதில் எந்த வாமன் என்று கேட்கிறாரா?

"வந்து...அவர் ஒரு ரெண்டு வருசம் ஜவ்னா கொஸ்பிட்ரல்ல வேலை செஞ்சார்.''

"கொஸ்...பிட்ரல்லயா...அவர் இந்த ஊரா?''

"ம்...அப்படித்தான்'' என்றுவிட்டு பற்களை இறுக்கிக் கொண்டாள். தான் இந்த ஊர் என்று வாமன் சொன்னானா? இல்லையே. முகவரி மட்டும்தானே கொடுத்தான். என்னை ஏமாற்றி விட்டானோ? என்று சுமதிக்குள் பீதி கிளம்பியது. பொழுது வேறு இருட்டிக்கொண்டு வருகிறது.

"இருங்க அக்கா'' என்று சின்னவன் கதிரை ஒன்றைக் கொண்டுவந்து முற்றத்தில் வைத்தான். அந்தச் சிறுவனே இரக்கப்படும் அளவுக்கு தான் பாவியாகத் தெரிகிறேனா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். கதிரையில் இருந்ததெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு அவளுக்குப் பொறுமை இருக்கவில்லை. நின்றுகொண்டே கதைக்குமளவுக்கும் திடமில்லை. கதிரையை கையால் பிடித்துக்கொண்டு தன் தோள்ப் பையைக் கழற்றி கதிரையில் வைத்தாள்.

"வாமன் தான் உங்கட முகவரிய தந்தவர்.''

"நீங்க யாரைச் சொல்றிங்க எண்டே விளங்கவில்லையே'' என்று ஓவியர் தன் பிடரியைச் சொறிந்தார்.

"டேய் ஓடிப்போய் பெரியம்மாவ வரச்சொல்லு' என்று சின்னவனை ஏவினார். சின்னவன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென வெளியேறினான்.

"எனக்கு யாரெண்டு ஞாபகம் வரயில்லை தங்கச்சி. கொஞ்சம் இருங்க...யாழ்ப்பாணத்தில இருந்து நேரா இங்கதான் வாறிங்களா?''

"ம்''

"வேற தெரிஞ்சாக்கள், உறவு...யாரும் கிளிநொச்சியில இருக்கிறாங்களா?''

"இல்ல'' என்றவளின் கண்கள் பொசுக்கென கலங்கின.

ஓவியர் உள்ளே சென்றார். சற்று நேரத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கொன்றுடன் வந்து திண்ணையில் அமர்ந்துகொண்டார். மளமளவென்று அதனைத் துடைத்து, எண்ணெய் பார்த்து, தீக்குச்சியைத் தட்டி வைத்து, காற்றடித்தார். படலையால் சின்னவனுடன் அந்த பெரியம்மாவும் வந்தார். அந்த வயோதிக மாதினுடைய பார்வை, எல்லாவற்றையும் சின்னவன் சொன்னான் என்பதாகத் தெரிந்தது. சுமதிக்கு தயக்கமும் கொஞ்சம் குற்றவுணர்வுமாக இருந்தது.

"பெரியம்மா, வாமன் எண்டு யாரையும் தெரியுமா? நானும் கன நேரமாய் மூளையைப் போட்டுக் கசக்கிறன். விளங்கலையே'' என்று சோகமாக இழுத்தார் ஓவியர்.

"அவனே எழுதித் தந்தானாம்மா இந்த முகவரி'' என்றார் அந்தப் பெரியம்மா.

"ம்'' என்றபடி கைப்பையை திறந்து வாமனின் கடிதத்தை எடுத்து முகவரி தெரியும்படி மடித்து நீட்டினாள். அதைப் பார்த்தவுடன் பொற்றலைக் கண்ட நெருப்புப்போல தாவிப்பற்றிக்கொண்டது ஓவியருக்கு வாமனின் நினைவு.

"பெரியம்மா இது நம்மட வானவர்மனின்ர கையெழுத்து'' என்று சிரித்தார்.

"அட அவனா? அவன இங்க வர்மன் எண்டாத்தான் எல்லாருக்குந் தெரியும்'' என்று பெரியம்மா விளக்கினார்.

"இப்ப எங்க இருக்கிறார்?'' என்று சுமதி ஆவலோடு கேட்டாள் எங்கோ பக்கத்தில்தான் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு. அவர்களது முகத்தில் சற்றுமுன் இருந்த சிரிப்பை காணவில்லை.

"பெரியம்மா அடுப்பில தண்ணி வைச்சிருக்கு. தேத்தண்ணி போட்டு குடுங்க'' என்ற ஓவியர் ராசனின் குரல், சுமதிக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை.

"ஏனண்ணா வாமன் இப்ப எங்க இருக்கிறார்?'' என்று தவிப்புடன் வந்தது அவளது வார்த்தை.

"இருக்கிறான். அவனுக்கொரு ஆபத்துமில்ல எண்டுதான் நினைக்கிறன். ஆனா...''

"ஆனா?''

"அவன் இங்க வந்து ஆறேழு மாசமாச்சிது.''

"ஆறேழு மாசமா?'' சுமதிக்கு ஒரே பதற்றமாக இருந்தது.

"ஆனால் அவனுக்கு இங்கதான் கடிதமெல்லாம் வாறது ஆ...யாழ்ப்பாணத்தில இருந்தும் அவனுக்குக் கடிதமெல்லாம் வாறதுதான். சு...மி...அ...அது நீங்கதானா?'' என்று அவளை இனங்கண்டுவிட்ட மகிழ்ச்சியில் புன்னகைத்தார் ஓவியர். அந்தப் புரிதலுடன் அவருக்கு அவள் பற்றிய பல முடிச்சுகள் அவிழ்ந்தன.

"அவர் எங்க நிக்கிறார் எண்டு...?''

"எங்க நிக்கிறானெண்டு தெரியலேம்மா. ஆனால் கண்டுபிடிச்சிரலாம்'' என்று சொல்லிக்கொண்டே பெரியம்மா ஆவி பறக்கும் தேநீரை நீட்டினார். புரியாத குழப்பங்கள் அலைக்கழித்ததால் மிகவும் களைத்துப் போயிருந்த சுமதி தேநீரை வாங்கிப் பருகினாள். ஓவியரும் கூட தனக்கான தேநீரைப் பருகியபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"ராசண்ணோய்....'' என்ற குரலும் சைக்கிள் மணியும் ஒன்றாக அழைத்தது ஓவியரை. அந்தக் குரலிலேயே அழைப்பவரை இனங்கண்ட ஓவியர் ஓரு நீலநிறத் துணியை உதறி மடித்துக்கொண்டு வெளியே சென்றார். அதில் ஏதோ வெளியீட்டு விழா என்று சிவப்பு வர்ணத்தால் எழுதப்பட்டிருந்ததையும் அவதானித்தாள் சுமதி.

"ராசண்ணோய்...'' என்ற குரலுடன் ஒருவன் உள்ளே வந்தான். உள்ளே பெண்ணொருத்தி இருப்பதை அவதானித்துவிட்டு அமைதியாக நின்றான்.

"கொஞ்சம் பொறு தம்பி. இப்ப தாறன்'' என்ற ஓவியர் மஞ்சள் தூரிகையை கையில் எடுத்துக்கொண்டு தரையில் விரித்திருந்த துணிக்குக் குனிந்தார்.

புலியின் குகை ஒன்றுக்குள் தானாகவே வந்து வீணாக நுழைந்துவிட்டேனோ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் கையிலிருந்த குவளையை வாங்கிய பெரியம்மா, "இந்தப் பிள்ளைய இப்ப எங்க விடப்போறிங்க?'' என்றார்.

"யாரண்ண இந்த அக்கா?'' என்று வந்திருந்த போராளி ஓவியரிடம் குசுகுசுத்தான்.

"உனக்கு வாமனத் தெரியுமா? வானவர்மன்...''

"வான வர்மன்...வானவர்மன்...எந்த வானவர்மன்? எங்கட படையணியா? இம்ரான் பாண்டியனா அல்லது மாஸ்ரா டீமா?''

அட இத்தனை வானவர்மர்களா என்று சுமதி அசந்தே போனாள். அடுத்த கணமே அதிர்ந்தும் போனாள். காரணம் அவர்கள் சொல்லும் அத்தனை வாமனர்களும் போராளிகள் போல் இருக்கிறதே.

"ஆள் மருத்துவப் பிரிவுபோல'' என்று ஓவியர் சொன்னது கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போன்றிருந்தது சுமதிக்கு.

"வாமன் டொக்டரா?''

"இல்ல. இவருக்குக் கால் இருக்கு. கிளிநொச்சிப் பெடியன்.''

"ம்...தெரியல்லையே. இவ அவற்ர தங்கச்சியா?'' என்று வந்தவன் கேட்க, ஓவியர் இவளைப் பார்த்தார். அந்தப் பார்வையால் கூனிக் குறுகிப்போய் நின்றாள் சுமதி.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே... (3)

ஆநதி

(First Published : 20 May 2012)

y.jpg

முதாவின் நினைவு அப்போதுதான் வந்தது சுமதிக்கு.

"அமுதாவத் தெரியுமா? நேஸ். இங்கதான் எங்கயோ ஒரு கொஸ்பிட்ரல்ல வேலை செய்யிறா, முதல் ஜவ்னாவில வேலை செய்தவ.''

"அப்ப எங்கட அமுதாக்காவத்தான் கேக்கிறிங்க போல. உயரம், வெள்ளை, இதில ரெண்டு தெத்திப் பல். வடிவாய் சிரிப்பா. அவவையா கேக்கிறிங்க?'' என்று அந்தப் போராளிப் பையன் நடித்துக்

காட்டிக்கொண்டு கேட்டவிதம் அத்தனை துயரத்துக்குள்ளும் அவளுக்குச் சிரிப்பை ஏற்படுத்தியது.

"அவளேதான்'' என்று புன்னகையோடு சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அந்தப் பையனுக்கு கொஞ்சம் முகம் கோண வைத்தது.

"அமுதா எங்க இருக்கிறா எண்டு சொல்லுங்க ப்ளீஸ். நான் இப்பவே அவளிட்ட போறேன்'' என்றபடி எழுந்து பையைத் தூக்கி தோளில் மாட்டிக் கொண்டாள்.

"எங்கட அமுதாக்கான்ர வீடு ஒண்டு ராசண்ணை வீட்டுக்கு பக்கத்து வீடில்லை. அவ புதுக்குடியிருப்புல நிக்கிறா! நீங்க கிளிநொச்சியில நிக்கிறிங்க. இனி நாளைக்குத்தான் நீங்க பஸ்ல ஏறணும்.

ப்ரண்ட் என்றிங்க. அவட சொந்த இடமே சரியா சொல்லத் தெரியேல்ல'' என்று குசுகுசுத்தபடி நிறுத்தினான் அந்த போராளிப் பையன்.

"அண்ணா பேனர் காய்ஞ்சிட்டுதா? நான் போகணும்'' என்றான் தன் குறும்புச் சிரிப்பை அதக்கிக்கொண்டு.

"போய்ட்டு வாறனண்ண'' என்றுவிட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான். சுமதிக்கு ஏனோ எரிச்சல் வந்தது.

"உடனே போகணுமா அக்கா?'' என்று கேட்டான்.

"அவவுக்கு இங்கால தெரிஞ்சாக்கள் வேற ஒருத்தரும் இல்லப் போலடா. பெரியம்மா வீட்ட அனுப்பி விடுரன். நீ எதுக்கும் அறிவிச்சு விடுறியா?'' என்றார் ஓவியர்.

சற்று யோசித்துவிட்டுச் சொன்னான், "ம்...மருத்துவப் பிரிவுக்காரரிட்டச் சொல்லிவிடட்டோ?''

"என்னெண்டு சொல்லுவாய்?''

"இப்பிடி இன்னுமொரு நேஸ் இயக்கத்துக்கு வந்திருக்கிறா. இன்ன இடத்தில நிக்கிறா. வந்து கூட்டிக்கொண்டு போங்கோ எண்டுதான்.''

சுமதி பல்லைக் கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள். பின்பு எதற்கு வீண் வம்பு என்று தலையைக் குனிந்து கொண்டாள்.

அதுவரை குசினிக்குள் அலுவல் பார்த்துக் கொண்டு நின்ற பெரியம்மா வந்தார்.

"வாம்மா போவம்'' என்ற அம்மாவை பின்தொடர்ந்தாள் சுமதி. அந்த ஓவியரிடம்கூட போய் வாறன் என்று சொல்ல மறந்தவளாய் நடந்தாள்.

அந்த பெரியம்மாவின் வீடு அருகில்தான் இருந்தது.

"சீலன் கட்டாயம் அறிவிப்பான். யாராவது பிள்ளைகள் உன்னய கூட்டிக் கொண்டு போக வருவாங்க'' என்று ஆறுதல் வார்த்தை சொன்ன அந்தத் தாயாரின் வீட்டைக் கண்களால் அளந்தாள் சுமதி.

சுவர் முழுவதிலும் சட்டமிடப்பட்ட படங்கள்தான் தொங்கின. எல்லாவற்றிலும் யாரோ ஓர் அழகான பையன் துப்பாக்கியோடு சிரித்துக் கொண்டிருந்தான். அவனில் பெரியம்மாவின் சாயலடித்தது.

படங்களைப் பார்த்துவிட்டு பெரியம்மாவைப் பார்த்தாள் சுமதி.

"என்ர பெடியள்தான். மூத்தவனும் கடைசியும்'' இருவரும் ஒரே சாயலில் இருந்தாலும் பெயர்கள் வெவ்வேறே."

"எத்தின பிள்ளைகளம்மா உங்களுக்கு?''

"இவைய ரெண்டுபேருந்தான். அப்பாவை ஆர்மி சுட்டாங்கள். இவையளவும் விலை குடுத்திட்டன்'' என்றுவிட்டு பெருமூச்சு விட்டார் அந்தத் தாயார்.

"பெரியம்மா'' என்றழைக்கும் குரல் வீதியில் கேட்டதும் அந்தப் பெரியம்மாவின் வதனத்தில் புன்னகை.

"பாத்தியாம்மா நான் சொன்னன். உன்னை கூட்டிக்கொண்டு போக ஆள் வந்திட்டுது'' என்றபடி வாசலுக்கு விரைந்தார் பெரியம்மா.

இரவு எட்டு ஒன்பது மணிக்குப் பிறகு ஒற்றைப் பெண்ணாய் உள்ளே வந்தவள் சிரித்துக்கொண்டு கேட்டாள்,

"அமுதாக்காட்ட கூட்டிக்கொண்டு போகணுமா?''

சுமதிக்கு எல்லாம் அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும்தான் இருந்தது. ஆறுமணிக்குள் அடங்கிவிடும் யாழ்ப்பாண வாழ்க்கைக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதுதான் என்றது

சுமதியின் உள் மனது. பெரியம்மா அவித்த இடியாப்பமும் பொரித்த முட்டையும் சொதியுமாக தட்டுகளை நீட்டினார்.

"ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வெக்கிடுங்க.''

வந்த பெண் எந்த மறுப்பும் சொல்லாமல் தண்ணீர்ச் செம்புடன் வாசலுக்குப் போய் கைகழுவிவிட்டு வந்தாள். சுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுக்கவும் தயக்கமாக இருந்தது.

மெதுவாக எழுந்து சென்று கையலம்பிவிட்டு வந்தமர்ந்தாள்.

"உங்களுக்கு என்ன பேரக்கா?'' என்று இயல்பாகக் கேட்ட அந்தப் போராளிப் பெண் உண்ணத் தொடங்கினாள்.

"சுமதி'' என்றுவிட்டு தானும் உணவுத் தட்டை எடுத்துக்கொண்டாள். பசித்த பிள்ளை பால் குடிக்கும் என்பதைப் போல அவளும் மளமளவென உண்டு முடித்தாள்.

"போவமாக்கா?'' என்ற போராளியின் அழைப்புக்குக் கட்டுண்டவளைப் போல தலையை ஆட்டிக்கொண்டு பையையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டாள்.

"அம்மா போய்ட்டு வாறன்'' என்று சொன்ன சுமதியை, அந்தத் தாய் கன்னத்தில் தடவி "நல்லா இரம்மா'' என்று விடை பகர்ந்தார். சுமதிக்கு இதுகூட அதிர்ச்சிதான்.

அந்தப் போராளி வேகமாய் ஏறிக்குந்தி தன் கொண்டா மோட்டார் சைக்கிளை உயிரூட்டினாள்.

"ஏறுங்கோ அக்கா'' என்றுவிட்டு "பெரியம்மா நான் பிறகு வாறன்'' என்றாள்.

சொன்னால் வெட்கம்தான். சுமதி அன்றுதான் இந்தப் பெரிய மோட்டார் சைக்கிளில் முதன் முறையாக ஏறப் போகிறாள். சுமதியின் கையிலிருந்த பையை பெரியம்மாதான் வாங்கிக்கொண்டு அவளை

இருக்கைக்கு ஏறச்செய்து பையை மடியில் வைத்து உதவினார். அவர்கள் புறப்பட்டபோது சுமதியின் கண்கள் கலங்கியிருந்தன.

"என்னக்கா?'' என்றாள் அந்தப் போராளி மோட்டார் சைக்கிளின் வேகத்தை சற்று தளர்த்தியபடி.

"ஒ...ஒண்டுமில்ல...நாங்க...நாங்க இப்ப எங்க போறம்?'' என்று தடுமாறினாள்.

"புதுக்குடியிருப்புக்குத்தான்'' என்று பதிலளித்தாள் கவிமதி.

"எதுக்காக?'' என்று பிதற்றினாள் சுமதி.

"என்னக்கா நடந்தது? அமுதாக்காவச் சந்திக்கத்தானே வந்தநீங்கள்?'

"ம்...ஓ...அமுதாட்டத்தானே போறம் அக்...கா... தங்கச்சி...'' என்று தடுமாறினாள் சுமதி.

அந்தப் போராளி சிரித்தாள்.

"அவாட்டக் கூட்டிக் கொண்டு போய் விட்டிட்டு வரச் சொல்லித்தான் பொறுப்பாளர் அனுப்பிவிட்டா. ஏன் நீங்க அங்க போகேல்லையா?''

"இல்ல இல்...ஓ...நான் அங்க அமுதாட்டத்தான் போகணும்''

"எனக்குப் பேர் கவிமதி. கவி எண்டே நீங்களும் கூப்பிடலாம்.''

சுமதி தன்னை அறியாமல் கவிமதியின் தோளைப் பற்றிக்கொண்டாள்.

"அக்கா இறங்குங்கோ'' என்று கவிமதி சொன்னபிறகுதான் எப்படி தான் ஒரு கோழிக்குஞ்சாக அவளின் முதுகோடு ஒண்டிக் கிடக்கிறேன் என்ற தன்னுணர்வு வந்தது சுமதிக்கு.

அவசரமாக கீழே பையைப்போட்டுவிட்டு பாய்ந்து இறங்கிக் கொண்டாள். இதற்குள் மோட்டார் சைக்கிள் வந்து நின்ற சத்தம் கேட்டு யாரோ கையில் டோர்ச் வெளிச்சத்துடன் வீட்டுக்குள் இருந்து

வந்தார்கள்.

"அம்மா அமுதாக்கா நிக்கிறாவா?'' என்றாள் கவிமதி.

"அவ இன்னும் வேலையால வரேலயே குஞ்சு. நீங்க உள்ள வாங்க '' என்றபடி வந்தபெண் உள்ளே சென்றாள். கவிமதி கீழேகிடந்த சுமதியின் பையை தூக்கிக் கொண்டு போக சுமதியும் பின்

தொடர்ந்தாள்.

"இரவுக்கே வருவாவா அல்லது காலையிலதானா?'' என்று சிரித்த முகத்துடன் விசாரிக்கும் போராளிக்கு, "என்னெண்டு தெரியேல்லையே. பெரும்பாலும் வந்திருவா எண்டுதானடா நினைக்கிறன்''

என்று யோசனையோடு பதில் சொன்னாள் வீட்டுப் பெண்.

"சரியம்மா, இந்த அக்கா அமுதாக்காட்டத்தான் வந்தவ. கொண்டுவந்து விட்டுட்டன். நான் அப்ப வெளிக்கிடுறன்'' என்று தன் பொறுப்பு முடிந்துவிட்டதைப்போலச் சொன்னாள் போராளி.

"என்ன இந்த இரவில தனியவோ?'' என்று புரியாமல் விழித்த சுமதி தன்னை மறந்து எழுந்தே நின்றுவிட்டாள்.

"நீங்க இருங்கோ அக்கா. நான் போட்டுவாறனம்மா. அமுதாக்காவை நானும் சுகம் கேட்டன் எண்டு சொல்லுங்கோ. கண்டு கனநாள் ஆகிவிட்டுது'' என்றபடி கவிமதி வெளியேறினாள்.

பின்னோடேசென்ற வீட்டுப்பெண் அவளை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார்.

"இரனம்மா நான் அமுதான்ர அம்மாதான்'' என்றபின்தான் சுமதி சுயநினைவுக்கு வந்தவளாய், "அட இப்பவும் நின்று கொண்டுதான் நிற்கிறேனா?' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு கதிரையில்

அமர்ந்தாள்.

"அமுதாவுக்கு நைற் டியூட்டியா?'' என்று சுமதி கேட்டபோது, சுமதிக்கே தன் குரல் கேட்கவில்லை. அவ்வளவு மெதுவாகத்தான் அவளது குரல் வெளிப்பட்டது. கேள்வியோடு பார்த்த அம்மா,

"தூரத்தில இருந்து வந்திருக்கிறீங்கபோல'' என்றார்.

"ம்.... ஜஃவ்னா'' என்று தோளைக் குலுக்கினாள்.

"அமுதாவோட பழக்கமோ?''

"ஜஃவ்னா கொஸ்பிரல்ல ஒண்டாய் வேலை செய்திருக்கிறம்.''

"சரியம்மா. சாப்பிடுங்களன்" என்று கேட்டவரை மறுத்து, "இப்பதான் கிளிநொச்சியில சாப்பிட்டிட்டு வந்தனான்'' என்றாள்.

"அப்ப தேத்தண்ணியாவது குடியுங்க'' என்ற அம்மா உள்ளே சென்றார்.

சுமதிக்கு எல்லாமே ஒரு கனவுபோலத்தான் புதினமாக இருந்தது. தன் வாழ்நாளில் இப்படியெல்லாம் அவள் பிறரால் உபசரிக்கப்பட்டதில்லை. அவளும் பிறரை உபசரித்ததில்லை. இங்கானால்

யாரென்றே அறியாதவர்களைக்கூட எப்படி உபசரிக்கிறார்கள் என்று வியந்தாள். வீடு அமைதியாக இருந்தது. அமுதாவுக்கு சகோதரிகள் இருக்க வேண்டுமே. இங்கே அம்மா தன்னந்தனியே

இருக்கிறார். இவளேன் இன்னும் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தவளின்முன் அம்மா தேநீரையும் பிஸ்கெட்களையும் வைத்தார்.

"சாப்பிடம்மா'' என்ற தாயாரை மேலும் நோக்காமல் தேநீரை மட்டும் எடுத்துக்கொண்டாள் சுமதி. வாசலில் மோட்டார்சைக்கிள் ஒன்றின் ஒளி வந்து நின்றது. அம்மா டோர்ச் லைட்டுடன் வெளியே

எட்டிப்பார்த்தார்.

சுமதி தேநீரைக் குடித்து விட்டு குவளையை வைக்கும்போது அம்மா உள்ளே வந்தார்.

"அமுதா காலமைதான் வருவாவாம். இப்பதான் சிவா வந்து சொல்லிட்டுப் போறான். நீங்க காலமைதான் அவளச் சந்திக்கலாம். அப்ப படுப்பம் என்னடா?'' என்றவாறு தாயார் படுக்கையைத் தயார்

படுத்தினார்.

"வாம்மா படுத்துக்கொள். முகம் கழுவப் போறிங்களா? உடுப்பேதும் மாத்திக் கொள்ளணுமா? பேக்கை அமுதான்ர அறையிலயே வைச்சிக் கொள்ளலாம். ம்..... இதுக்க வையுங்க'' என்று பணிவிடை

செய்தாள் தாய்.

உறங்கப் படுத்தபின் வாமன் கண்ணுக்குள் வந்து எரிச்சலையூட்டினான். அவனை நம்பி நான் நல்லாய் ஏமாந்துபோனன்.அவனை நம்பி நான் வீட்டைவிட்டுப் புறப்பட்டிருக்கக் கூடாது.

மனம் பலவாறு குழம்பத்தொடங்கியது. என்றாலும் உடலும் மனமும் களைத்துச்சோர்ந்த அவளை நித்திரை போர்த்த உறங்கிப்போனாள்.

பொழுது நன்றாக விடிந்திருந்தது.

"முகம் கழுவிட்டோ குளிச்சிட்டோ வாம்மா. தேத்தண்ணி குடிப்பம்'' என்ற அம்மாவின் குரல்கூட அவளுக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. குளித்தால் நன்றாக இருக்குமே. தன்னிடமிருந்த உடை,

சவர்க்காரங்களோடு கிணற்றடிக்குச்சென்றவள் நன்றாக அள்ளி முழுகினாள்.

சுருள் சுருளான நீண்ட தன் கூந்தலை துடைத்தபடி வாசலுக்கு வரும்போதே அம்மா ஆவி பறக்கும் தேநீரை நீட்டினார். அவளது வீட்டில் இப்படியொரு அம்மாவை அவள் கண்டதில்லை.

விரும்பியவர்கள் விரும்பியபோது தேநீர் ஆற்றி குடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

எதையும் ஏற்கவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் மனம் பலவிதமாக குழம்பிக்கொண்டே இருந்தது சுமதிக்கு. எல்லாம் இந்த வாமனால் வந்த வினை. என்னபேர் சொன்னர்கள்

வானவர்மனா?

என் வாழ்க்கையைப் பாழாக்கிய முட்டாள் என்று வாமனை மனதுக்குள் ஏசிக்கொண்டிருந்தவளின் முன்னே அமுதா வந்துநின்றாள்.

"ஏய் நீ...... நீ..... '' என்று மகிழ்ச்சியில் தடுமாறிய அமுதாவை சுமதி பாய்ந்துசென்று அணைத்துக்கொண்டாள்.

மனதில் இறுக்கம் உடைந்துசிதற "ஓ'வென்று அழத்தொடங்கிய சுமதியை சமாதானப்படுத்துவதற்குள் அமுதாவுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவளைச் சமாளித்து இருத்திவிட்டு, ஒருசில

வார்த்தைகளில் நலம் விசாரித்துவிட்டு, குளிப்பதற்கு ஓடினாள்.

"என்ன அமுது திரும்பவும் போகப்போறியா?'' என்று ஏக்கத்துடன் கேட்ட சுமதியின் பார்வை அவளது உடையைப் பார்த்தது. ஏனெனில் அமுதா மருத்துவமனைக்கான சீருடையை அணிந்திருந்தாள்.

"ம்..... போகத்தான் வேணும். ஆனாலும் உன்னோட கதைக்க எனக்கு நேரமிருக்கு. சரி இப்ப சொல்லு'' என்று சுமதியின் எதிரே அமர்ந்தாள் அமுதா. சுமதிக்குத்தான் என்ன சொல்வது எப்படிச்

சொல்வது எங்கே தொடங்குவது எதைச்சொல்லி முடிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை.

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தக் கதையை ஒரு இணையத்தில் வாசித்திருந்தேன் ஆனால் பாகம் எட்டுக்குப் பிறகு காணவில்லை :unsure: ஒருவேளை "தினமணியின் கதிரில்" எழுதுவதால் அதில் எழுதுவதை நிப்பாட்டினாவோ தெரியவில்லை...தொடர்ந்து இணையுங்கள் சோழியன்

நன்றி.. தொடர்ந்து இணையுங்கள் சோழியன்...

  • தொடங்கியவர்

நான் இந்தக் கதையை ஒரு இணையத்தில் வாசித்திருந்தேன் ஆனால் பாகம் எட்டுக்குப் பிறகு காணவில்லை :unsure: ஒருவேளை "தினமணியின் கதிரில்" எழுதுவதால் அதில் எழுதுவதை நிப்பாட்டினாவோ தெரியவில்லை...தொடர்ந்து இணையுங்கள் சோழியன்

24.6.2012 ஞாயிறுவரை தினமணியின் கதிர் வார வெளியீட்டில் 8 பாகங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு ஞாயிறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.. 8 பாகங்களையும் ஒரே தடவையில் இணைத்தால் வாசிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் சில நாட்கள் இடைவெளிவிட்டு இணைத்துக்கொண்டிருக்கிறேன்.. வாசிப்பதை அறியத் தந்ததுக்கு நன்றி.. ஏனெனில் ஒரு சிலராவது வாசிப்பது தெரிந்தால்தான் இணைக்கவும் உற்சாகமாக இருக்கும். : :)

நன்றி.. தொடர்ந்து இணையுங்கள் சோழியன்...

நிச்சயமாக.. ஏனெனில் அனுபவரீதியாக எழுதப்பட்ட நாவல்.. நானும் அதனுடன் ஒன்றி வாசித்துக் கொண்டிருப்பதால் இணைப்பது சாத்தியப்படும். :)

ஓம்.. இவர்களும் தினமணியில் வர வரத்தான் பிரதி செய்து போடுகிறார்கள்.. தினமணி தமிழகத்திலிருந்து வெளிவருவதால்.. எமது பேச்சுத் தமிழில் ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உள்ளன. நான் அவற்றை இயலுமானவரை திருத்தியே இங்கு மீள்வெளியீடு செய்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாகத் தொடர்கிறது அன்றைய வன்னியை அப்படியே கண்முன் கொண்டுவருகிறது. இந்நாவலை நானும் படிக்கிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி [/size]

  • தொடங்கியவர்

உயிரே உயிரே... (4)

ஆநதி

(First Published : 27 May 2012)

s8.jpg

"வீட்டை வெறுத்து வெளிக்கிடுற அளவுக்கு அப்பிடி என்ன பிரச்சினை உனக்கு? வாமனத் தேடி வந்தியா?'' என்று மெதுவாகக் கேட்டாள் அமுதா. தலையை மட்டும் ஆட்டிய சுமதியைப் பார்க்கப் பாவமாய் இருந்தது அமுதாவுக்கு.

"அமுதாம்மா சாப்பிட்டுக்கொண்டே கதையுங்களேன். பிறகு கூட்டிக்கொண்டுபோக வந்திருவாங்க'' என்ற தாயாரின் ஆலோசனையை ஏற்று அமுதா எழுந்து சென்றாள். இரண்டு தட்டுகளில் உப்புமா கொண்டுவந்தாள். பின்னோடு தேநீரும் வந்தது.

"இப்ப வாமன் எங்கை எண்டு உனக்காவது தெரியுமா?''

நம்பிக்கையீனமாய் வெளிவந்தன சுமதியின் வார்த்தைகள்.

"ஆள் ஆரெண்டு தெரியுமா?'' என்று ஏதோ இரகசியம் தெரிந்துவிட்டதைப்போலக் கேட்ட அமுதா மீதும் இப்போது கோபம் வந்தது சுமதிக்கு.

"நீயாவது சொல்லியிருக்கலாம்தானே? நீயும் சேந்து எனக்கு துரோகம் செய்திட்டாய்'' என்று குற்றம் சுமத்தினாள் சுமதி.

"அடக்கடவுளே. எனக்கென்னப்பா தெரியும்? ஏன் என்னைக் கேட்டா வாமனுக்கு ஓமெண்டு சொன்ன நீ? அப்ப எனக்கும் வாமனப்பற்றி தெரியாது''.

"பொய் சொல்லாத அமுது. உனக்கு எப்பவோ தெரியும்''.

"இல்லப்பா. உண்மையாவே தெரியாது. இங்க வந்தும் கன நாளைக்குப் பிறகுதான் தெரிஞ்சது. ஆனால் முதலிலயே சந்தேகப்பட்டன்''.

"எத வைச்சு?''

"ஆளின்ர நடையுடை பாவனைகள் அப்பிடி இருந்திச்சிது''.

"அதென்னப்பா நடையுடை பாவனை எல்லாரையும் போலத்தானே இருந்தார்?''

"இல்ல. எல்லாரை விடவும் வித்தியாசமாய் இருந்தார். அந்த வித்தியாசம்தான் உன்னையும் கவர்ந்திருக்கு''.

சுமதி எதிர்ப்பேச்சுப் பேசாமல் உப்புமாவை உண்ணத்தொடங்கினாள்.

"எப்பிடியும் ஆளைச் சந்திக்கலாம். நீ கவலைப்படாத''.

".........''

"அதுசரி இங்க எத்தின நாளைக்கு நிப்பாய்?''

அமுதாவின் அந்தக் கேள்வி அவளை அடித்து வீழ்த்தியதுபோல் தாக்கியது. மனசு வலித்தது. விம்மத் தொடங்கிய சுமதியை மீண்டும் ஆற்றுப்படுத்தினாள் அமுதா.

"எங்க போறது. எப்பிடி வாழ்றது எதுவுமே தெரியேல்ல அமுது. நான் வீட்டைவிட்டே வந்திட்டன். வாமனை நம்பித்தான் வந்தனான். வாமன் இப்பிடி எண்டு தெரிஞ்சிருந்தா நான் கடைசிவரைக்கும் வந்திருக்கமாட்டன். இனிமேல் என்னால் வீட்டுக்கும் போக முடியாது. என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல'' என்று விம்மலும் விசும்பலுமாக சொல்லிமுடித்தபோது சுமதி மிகவும் சோர்ந்துபோயிருப்பதை அமுதா நன்றாகப் புரிந்துகொண்டாள்.

அவளது வீட்டார் இவளை எப்படி தலைமுழுகியிருப்பார்கள் என்பது அமுதாவுக்குப் புரிந்தது.

"வீட்டை வெறுத்து வெளிக்கிடுற அளவுக்கு அப்பிடி என்ன பிரச்சினை உனக்கு?'' என்று உரிமையோடு கேட்டாள் அமுதா.

தனக்கு திருமணம் பேசிவந்த கதையைச் சொன்னபோதும் வாமன் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பினாள். தன் வாழ்க்கையையே கெடுத்துவிட்டான் என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தோடு சொன்னாள் சுமதி.

கவிமதியைப் போன்ற ஒரு பிள்ளை வாசலில் வந்துநின்றாள்.

"போவமா அக்கா?'' என்று புன்னகைத்தாள்.

"ஓம் நான் தயார். கொஞ்சநேரம் இருங்க. அம்மா! தமிழரசி வந்திருக்கிறா'' என்று குரலுயர்த்திவிட்டு அறைக்குள் போன அமுதா கைப் பையுடன் வெளியே வந்தாள். தாயார் அந்தப் போராளிக்குத் தேநீர் கொடுத்தார்.

"இவ என்ர சினேகிதி. யாழ்ப்பாணத்தில வேலை செய்யும்போது ரெண்டு பேரும் ஒண்டாத்தான் வேலை செய்தம். பெயர் சுமதி'' என்று அவளை வந்திருப்பவளுக்கு அறிமுகப்படுத்தினாள் அமுதா.

"வணக்கமக்கா'' என்று அறிமுகச் சிரிப்பை உதிர்த்தாள் தமிழரசி.

"வ......வணக்கம்..'' என்று சொல்லிவிட்டு சுமதி வேகமாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.

அது அமுதாவுக்கு வேதனையாக இருந்தது. பின்னாலேயேசென்ற அமுதா அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்,

"சுமதி நீ இனியும் இப்பிடி நடந்துகொள்ளக்கூடாது. வாமன்ல உள்ள கோவத்தை வாமனிலமட்டும் காட்டு. மற்ற மனுசர அவமானப்படுத்தாத..''

"உனக்கு என்னப் பற்றித் தெரியும்.''

"தெரியும் நல்லாவே தெரியும். உன்ர மோட்டுப் பிடிவாதம்பற்றி நிறையவே தெரியும்'' என்று எரிச்சலோடு சொன்ன அமுதாவை மீறி சுமதி குரலை உயர்த்தினாள்,

"இயக்கம் இயக்கம் இயக்கம்தானா? இங்க தடுக்கி விழுந்தாலும் இயக்கத்தின்ர காலிலதான் விழவேணும்போல.. எங்க பாத்தாலும் அவங்கதானா?'' என்று சுமதி பொரிய, அமுதா சிரித்தே விட்டாள்.

பின்பு நிதானமாகச் சொன்னாள்,

"நானும் போராளிதான். கழுத்தில குப்பி கட்டாத போராளி.''

"ஏன் அமுது?'' என்று ஏதோ சொல்லத்தொடக்கியவள் அதைச்சொல்ல தனக்கு உரிமையில்லை என்பதை உணர்ந்து நிறுத்திவிட்டாள்.

"சுமதி நீ என்னோட நிக்கறதால எனக்கொரு சிக்கலுமில்ல. ஆனாலொண்டு எங்கட வீட்ட போராளிகள்தான் அடிக்கடி வருவாங்க. என்ர சிநேகிதியாய் உன்னை நடத்தினால்தான் எனக்கும் அழகு.

போராளிகள நீ அவமதிக்கிறதை அம்மாவால எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது எனக்கும் பிடிக்காது. அதுக்காக உன்னை மாறச் சொல்லி நான் கட்டாயப்படுத்தமாட்டன். இப்ப நான் போகணும் சுமதி. பின்நேரம் உனக்காக நான் நேரத்துக்கே வரப் பாக்கிறன்'' என்றுவிட்டு அமுதா வெளியேறிவிட்டாள்.

சுமதிக்கு எரிச்சலும் சினமும் பொங்கிக் கொண்டு வந்தது. முன்பெல்லாம் எவ்வளவு பதுமையாக இருந்தாள். இப்போது வெட்டொன்று துண்டிரண்டாக எப்படிச் சொல்லிவிட்டாள், முகத்தில் அடித்த மாதிரி. ஏன் எனக்கு வேறு போக்கிடம் இல்லை என்ற நினைப்பா? என்று பலமாக யோசிக்கத்தொடங்கினாள்.

பற்களைக் கடித்துக்கொண்டு நின்ற அவளது இயலாமை கண்ணீராய் வழிந்தது. அப்படியே கட்டிலில் விழுந்து அழத்தொடங்கினாள்.

எல்லாம் எல்லாமே இந்த வாமனால் வந்ததுதான். அவன்மட்டும் என்னை ஏமாற்றியிராவிட்டால் இப்படி வந்து அவமானப்பட நேர்ந்திருக்காது. நானும் என்பாடும் என்று இருந்த என்னை மாற்றித் தொலைத்து என் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டானே.

அவனை காணும்போது நாக்கைப் பிடுங்கும்படி நாலு கேள்வி கேட்கவேண்டும்.

உனக்காக என் குடும்பத்தையே இழந்து தெருவில் நிற்கிறேன் பார். இப்போது உனக்கு சந்தோசம்தானே என்று கத்தவேண்டும் என்றெல்லாம் நினைத்தபோது தலையைக் குனிந்து கொண்டு பதில் பேச முடியாமல் அவன் நிற்கும் தோற்றத்தை எண்ணி தனக்குள் கொஞ்சம் ஆறுதலடைந்தாள். அப்படியே உறங்கியும் போனாள்.

மதிய உணவுக்காக அம்மாவந்து அழைத்தபோது காலையில் நடந்ததெல்லாம் வெறும் கனவுபோல இருந்தது. உண்மையாகவே பசித்தது. கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிவிட்டு வந்து சாப்பிட்டாள். அம்மா அன்பாக உணவு பரிமாறினார். அவரது முகத்தில் அத்தனை அன்பும் தெரிந்தது.

"உன்ர வீடுமாதிரி நினைச்சு தாரளமாய்ச் சாப்பிடம்மா. நிறையத்தான் சமைச்சிருக்கிறன்'' என்றார் புன்னகையுடன்.

இயக்கத்தைப்பற்றி தான் கதைத்தால் அம்மாவுக்கும் பிடிக்காதாமே. அப்படி இந்த இயக்கம் என்னதான் இவர்களுக்குக் கொட்டிக்கொடுக்கிறதாம் என்று சுமதி நினைத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வாசலில் வாகனச் சத்தம் கேட்டது. அம்மா வெளியே சென்றார்.

"அம்மா எப்பிடி இருக்கிறீங்கள்?'' என்ற அட்டகாசமான குரல் அவளுக்கும் கேட்டது.

"நல்லாய் இருக்கிறனப்பு. வா, உள்ள வா, சுடச்சுடச் சாப்பாடிருக்கு. நல்ல நேரத்திலதான் வந்திருக்கிறாய்'' என்றவாறு உள்ளேவந்த அம்மாவின்பின்னே அந்தக் குரலுக்குரியவனும் வந்தான்.

யாரிவன் அம்மா அம்மா என்று இவ்வளவு அன்புரிமையோடு அழைக்கிறான் அம்மாவும் அவ்வளவு அக்கறையாக உருகுகிறார். அவருடைய மகனாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே கடைக்கண்ணால் நோட்டம்விட்டாள். அவன் போராளிதான் என்பதுமட்டும் அப்பட்டமாய் தெரிந்தது. வரியுடை தரித்திருந்தான். உள்ளே வந்தபோதிருந்த கலகலப்பு இவளொருத்தி இருப்பதைக் கண்ட பின்பும் குறையவில்லை. அவள் தன்னை பார்க்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவளைப்பார்த்தும் புன்னகைத்தான். சுமதிக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. ஏனோ தடுமாற்றமாய் இருந்தது. பதிலுக்குச் சிரிப்பதா வேண்டாமா என்று சிந்தித்துக்கொண்டே மெதுவாக புன்னகைத்தாள்.

"அம்மா நீங்கள் சிரிக்கிறத்துக்குக்கூட காசு கேப்பிங்கள்போல இருக்கு'' என்று அவன் சொல்வது உண்மையிலேயே அம்மாவுக்கல்ல தனக்குத்தான் என்பதை புரிந்துகொண்டபோது தலையைக் குனிந்துகொண்டு அமைதியாக இருந்துவிட்டாள். அவன் அம்மாவின் பின்னாலேபோய் குசினிக்குள் நுழைந்துவிட்டான்.

சுமதி தான் உணவுண்ட தட்டைக்கழுவி வெளியிலே ஊற்றிவிட்டு குசினிக்குள் போக தயங்கியவளாய் விறாந்தை மேசையிலேயே வைத்துவிட்டு அறைக்குள்போய் இருந்துவிட்டாள்.

தனக்கு ஒரு தம்பி இருப்பதாக அமுதா சொன்னதே இல்லையே. என் குடும்பத்தைப்பற்றி நான் ஏற்கனவே அவளிடம் சொல்லியிருக்கிறேன். அவளது குடும்பம்பற்றி...... அண்ணா தம்பி இருப்பதாக அவள் சொன்ன ஞாபகமே இல்லை. தன் தம்பி போராளி என்பதால்தான் சொல்லாமல் விட்டிருப்பாளாக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.

"அம்மா நான் போட்டுவாறன். அந்தக் கஞ்சப்பிசினாரி அக்காவுக்கும் போட்டுவாறனெண்டு சொல்லி விடுங்கோ..'' என்று விறாந்தையில் நின்று சத்தமாய் சொல்லிவிட்டுப்போனான் வந்தவன்.

யாரந்த அக்கா? யாருக்குச் சொல்லச் சொல்கிறான் என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது அந்தக் கஞ்சப்பிசினாரி அக்காள் தானே தான் என்பது. எதற்காக அப்படிச் சொன்னான் தான் அவனைப்பார்த்து இளிக்கவில்லை என்றா நானும் ஈ...... என்று பல்லைக் காட்டியிருந்தால் நல்லவள் என்று சொல்லியிருப்பானோ? கொள்ளைக்காரக் கூட்டம். வரி வட்டி என்று சனங்களிடம் பறிக்கும் இவன் யார் தன்னை பிசினாரி என்று சொல்ல? என்று ஆத்திரத்தோடு நினைத்துக் கொண்டாள். அடுத்த கணமே அவளது உள்மனம் சொன்னது, இந்த வீடு சரிவராது என்று.

அமுதாவை மலைபோல நம்பித்தான் வந்தாள். ஆனால் இது மடுவாக இருக்கிறது. எப்படியும் வேறுவழி தேடத்தான் வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினாள்.

என்னதான் மண்டையைப்போட்டு உடைத்தாலும் சுமதிக்கு அமுதாவைத்தவிர வேறுவழி எதுவுமே தெரியவில்லை. அவள் என்னை சகித்துக் கொள்வதைப்போல நானும் அவளை சகித்துக் கொள்ள வேண்டியதுதான். அமுதா இயல்பாகவே பொறுமைசாலி என்பதால் பொறுத்துப் போவாள். முன்பெல்லாம் அவள் என்னுடைய வேலைகளையும்கூட பங்குபோட்டுக்கொண்டு செய்தவள் ஆயிற்றே.

இப்போதுகூட அன்பாகத்தானே என்னை வரவேற்கிறாள். அந்தப் போராளிப்பிள்ளையுடன் தான் இருந்து கதைக்காததுதானே அவளுக்கு கோபம். பிடிக்காவிட்டாலும் சும்மா கொஞ்சநேரம் இருந்திருக்கலாம்தானே. இது அவள்வீடு. அவளுக்குப் பிடித்தவர்கள், அவளுடைய அம்மாவுக்குப் பிடித்தவர்கள் இந்த வீட்டுக்கு வருவதில் நான் தலையிட முடியாதுதான் என்றெல்லாம் எண்ணி தன் மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள்.

மாலை அமுதா வந்தபோதும் சுமதி அறைக்குள்ளேயேதான் அடைந்து கிடந்தாள்.

"ஏன் சுமதி மூலைக்கயே கிடக்கிறாய் வெளிய வாவன். முற்றத்தில நிண்டு பூக்கண்டுகளப் பாரன். நல்ல காற்றையும் உணரமுடியும்'' என்று அவளின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றாள் அமுதா.

நாற்காலிகளை முற்றத்தில் போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பதும் நன்றாகத்தான் இருந்தது. மனப்பாரம் குறைந்ததுபோன்ற உணர்வு எழத்தான் செய்தது.

"வாமனைப்பற்றி விசாரிச்சன் சுமதி. எப்பிடியும் ஆளுக்கு தகவல் கிடைக்கும் எண்டுதான் நம்புறன். ரெண்டு மூண்டு பேரிட்ட சொல்லி விட்டனான்''.

"என்னவெண்டு?''

"உங்களத் தேடி சுமதி வந்திருக்கிறாள். உடனே அமுதா வீட்டுக்கு வரவும் என்றுதான்''.

"கடவுளே'' என்று ஏங்கினாள் சுமதி.

"அப்ப நீ அவரைத் தேடி வரேல்லயா?'' என்று கண்சிமிட்டினாள் தோழி.

"இல்ல...... நான்....... வந்து......''

"என்னப்பா இல்லை என்கிறாய் காலமதானே வாமன் தேடி வந்தன் இனி நான் என்ர வீட்டுக்கே போகமாட்டன் எண்டுசொன்னாய்''

"ஓ சொன்னனான்தான்''

"அதாலதான் வாமனுக்கு நானும் தகவல் சொல்லிவிட்டன்''.

"எங்க இருக்கிறாராம்?''

"தெரியாது'' என்று தோளை குலுக்கினாள் அமுதா.

அன்றிரவு தோழியர் இருவரும் பழைய கதைகளையும் புதுக்கதைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அம்மாவும்கூட அவர்களது கதையுடன் சேர்ந்து தனது கருத்துக்களையும் சொன்னாள்.

"அதுசரி அம்மா, மத்தியானம் வந்தது உங்கன்ர மகனா?''

"ம்''

"யாரம்மா வந்தது?'' என்று ஆவலோடு கேட்டாள் அமுதா.

"கீர்த்திகன்''

"ஆ.... கீர்த்தி வந்தானா அவனின்ர சின்னக்கா இண்டைக்கும் வந்து கேட்டிட்டுத்தான் போறா. இன்னொருக்கா வந்தானெண்டா அவனையொருக்கா வீட்ட போகச் சொல்லுங்கம்மா. அம்மா கொஞ்சம் ஏலாம இருக்கிறாபோல. இவனக்கண்டால் மனுசிக்கு மருந்தும் தேவையில்லை''.

சுமதிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கென்ன ரெண்டு அம்மாவா அவனுடைய அம்மா நான் என்கிறார் இந்த அம்மா. அவனைப்போய் அம்மாவை பார்க்கச்சொல்லு என்று இந்த அம்மாவிடமே சொல்லுகிறாள் அமுதா. இதென்ன புதிர்?

"ஏனமுதா அவனுக்கு எத்தனை அம்மாக்கள் இருக்கினம்?'' என்று கேட்டேவிட்டாள் சுமதி. அமுதாவும் அம்மாவும் சத்தமாகச் சிரித்தார்கள்.

"அவனுக்கா எனக்குத் தெரிய அஞ்சாறு. தெரியாமல் பத்துப் பதினைஞ்சோ அம்பதோ நூறோ இருக்கலாம்'' என்றாள் அமுதா.

"என்னெண்டடி'' என்று வாயைப்பிளந்த அவளைக் குறும்போடு பார்த்தபடி தன் தாயாருக்கு பதில் சொன்னாள் அமுதா,

"இது ஒரு யாழ்ப்பாணத்துப் பட்டிக்காடு அம்மா, ஊருலகம் தெரியாத பாப்பா. போராளிகளின் கடமை, நேர்மை, விடுதலைக்காக அவர்கள் பட்ட பாடும் படும்பாடுகளும் இவளுக்குத் தெரியாது அம்மா'' என்றாள் அமுதா சோகமாக.

கீர்த்திகன் வந்தபோது சுமதி அறிமுகத்துக்குக்கூடச் சிரிக்கமாட்டாமல் இருந்தாள் என்பதை அம்மா இப்போது புரிந்துகொண்டாள்.

(தொடரும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]மிகுதியையும் விரைவில் பதியுங்கள் [/size]

[size=1]உண்மையின் தரிசனங்கள் [/size]

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (5)

ஆநதி

First Published : 03 Jun 2012

r7.jpg

"ஏன் சுமதி சும்மா இருந்து என்ன செய்யப் போறாய்? ஆஸ்பத்திரியில வேலை செய்வியா? வேணுமெண்டா ஒழுங்கு படுத்தித்தாறன்'' என்று கேட்ட அமுதாவை நன்றியோடு பார்த்து "ஓம் ஓம் ஓம்' என்று தலையாட்டினாள் சுமதி.

"இதப்பத்தி டொக்டரோட கதைக்கிறன். ஆனால் சுமதி இது யாழ்ப்பாணம் மாதிரி இருக்காது'' என்றாள் நகைப்புடன் அமுதா.

"சும்மா இருக்கேலாது அமுது'' என்று சுமதி அலுப்புக்காட்டி உடல் வளைத்து நிமிர்ந்தாள்.

"அதான் வேலை செய்யப் போறியே சுமதி. இனித்தான் நீ வேலையே செய்யப் போறாய் பார்'' என்ற அமுதாவின் நையாண்டிகூட சுமதிக்கு இப்போது ஆறுதலாகத்தான் இருந்தது.

எண்ணி நான்கே நாட்களில் சுமதிக்கான வேலைக்கு அமுதாவே அழைத்துச் சென்றாள். அமுதாவின் மருத்துவமனையிலேயே தானும் வேலை செய்யலாம் என்பது அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. நேரடியாக வைத்திய அதிகாரியிடமே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினாள்.

"நல்லது சுமதி. உங்கட வேலை அனுபவம் பற்றி அமுதா தேவையானளவு சொல்லியிருக்கிறா. கொஞ்ச நாளைக்கு வாட் பாருங்கோ. என்ன சிக்கல் எண்டாலும் என்னோடவந்து நீங்களே கதைக்கலாம். அல்லது அமுதாட்டயும் சொல்லலாம். அமுதா நர்ஸாக இருந்தாலும்கூட இங்க அவ ஒரு டொக்டருக்கு நிகரான ஆள்தான். அந்த அளவுக்கு அவளுக்கு அனுபவமிருக்குது'' என்றுவிட்டு இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார் வைத்திய அதிகாரி.அமுதா லேசாகப் புன்னகைத்து அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டதை சுமதியும் அவதானித்தாள்.

யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்குமான மருத்துவமனையில்கூட மாற்றங்கள் தெரிந்தன. பார்க்குமிடமெல்லாம் விடுதலைப் போராளிகள் தெரிந்தார்கள், யாழ்ப்பாணத்தில் படையினர் திரிவதைப்போலத்தான். அதுமட்டுமல்ல, மருத்துவமனை நிர்வாகம் கொண்டுவரும் சட்டதிட்டங்களுக்குப் போராளிகள் மதிப்பளிக்கிறார்கள். இராணுவ உபகரணங்களுடனோ சீருடைகளுடனோ உள்ளே வரக்கூடாது என்றால் வரமாட்டார்கள். பொது நிர்வாகங்களை போராளிகள் மதித்து நடக்கிறார்கள் என்ற முதல் அபிப்பிராயம் சுமதிக்கு அங்குதான் மனதில் விழுந்தது. சாதாரணப் பணியாளர்களைப்போல கடமை செய்பவர்களில் பலரும் போராளிகள்தான் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டாள் சுமதி. இப்படித்தானே வாமனும் இருந்திருக்கிறான். இந்த மருத்துவமனையிலும்கூட எவரையும் போராளியா? பொதுமகனா? என்று தெரிவதில்லைத்தான். ஆனாலும் அவர்கள் போராளிகள் என்று அறிந்தபின் புரிகிறது அவர்களுக்கென்று ஒரு நடையுடை பாவனை இருக்கிறதுதான் என்று.

அந்த மருத்துவமனையில் பல் வைத்தியர் இல்லை என்பதற்காக மருத்துவ நிர்வாகம் நோயாளிகளின் நலன்கருதி போராளி மருத்துவர் ஒருவரை அழைத்தபோது பல் மருத்துவராக ஒரு பெண் போராளிதான் வந்திருந்தார். பார்த்தால் அவரைப் போராளி என்று எவரும் சொல்லிவிட முடியாது. சேலை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கடமைக்கு வந்து செல்லும் அவர் ஏனைய மருத்துவர்களைப்போலவே இருந்தார். பார்த்தால் சாதுவாகவும் மெலிந்த உடல்வாகும்கொண்ட அவரால் எப்படி பற்களை இழுத்துப் பிடுங்க முடிகிறதோ என்றுகூட ஆச்சரியப்பட்டிருக்கிறாள் சுமதி.

அவளை முன்பின் அறிந்திராதவர்கள் என்றாலும்கூட "அக்கா அக்கா' என்று வார்த்தைக்கு வார்த்தை அன்பாக அவளை அழைக்கும் பாங்கு, "வணக்கமம்மா' என்று அன்பொழுகக் கைகூப்பும் முறை, சின்னச் சிக்கல் என்றாலும்கூட, "ஏதாவது உதவி தேவையா அக்கா'' என்று அருகில் வந்து உதவுகின்ற அக்கறை என்று எல்லாமே அவர்களை இன்னார் என்று இனங்காட்டிவிடும். போராளி என்பவனுக்குள்ளும் ஏதோவொன்று வித்தியாசமாக இருக்கிறது.

வாமன் தன்முன்னால் வந்து நிற்பான் என்று சுமதி கனவிலும் நினைக்கவில்லை. ஏன் வாமனும்கூடத்தான் நினைக்கவில்லை அமுதாவின் வீட்டில் சுமதி நிற்பாள் என்று. இரவு ஏழு மணியிருக்கும் மருத்துவமனையிலிருந்து வந்து குளித்துவிட்டு உணவுண்பதற்காக அமுதாவுடன் அமர்ந்தாள். வெளியே கேட்ட மோட்டார் சைக்கிளின் ஒலி இங்குதான் யாரோ வருகிறார்கள் என்று அறிவித்தது.

வீட்டுக்குள்ளிருந்து அம்மாவோ அமுதாவோ வெளியே போகுமுன் அவன் உள்ளே வந்துவிட்டிருந்தான். வாசலின் நிலை தலையில் முட்டுமளவுக்குநின்ற வாமன்தான் "அம்மா'' என்று கூவிவிட்டு "ஹாய் அமுதா'' என்ற பின் அருகில் இருந்தவளை பார்த்தான். அந்தக் கணமே அரண்டுவிட்டான். கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்ட கள்வனைப் போல செய்வதறியாது திகைத்தான். அவன் அணிந்திருந்த வரிச்சீருடையைப் பார்த்து அவனே ஒருகணம் திண்டாடினான். அவனை எரித்துவிடுவதைப்போல பார்த்த சுமதியைப் பிடித்து உலுக்கிய அமுதா, ""இருங்க வாமன். என்ன அப்பிடி அதிர்ச்சி ஆகிட்டிங்க? சுமதி இங்க வந்ததப் பற்றி உங்களிட்ட ஒருத்தருமே சொல்லயில்லையா?''

"இல்லையே'' எனும் பாவனையில் உதட்டைப் பிதுக்கி தலையை ஆட்டினான். அவனுடைய திண்டாட்டத்தைப் புரிந்துகொண்டு அமுதாதான் சமாளிக்க வேண்டி இருந்தது. வாமனும் சுமதியும் எதிரெதிர் கதிரைகளில்தான் அமர்ந்திருந்தாலும் எதுவுமே கதைக்கவில்லை. "அம்மா முட்டை பொரிக்கிறா, எல்லாருக்கும் சேர்த்து சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வாறன்'' என்றபடி அமுதா குசினிக்குள் நுழைந்தாள்.

வாமனுக்கோ சுமதியை நிமிர்ந்து பார்க்கவே அச்சமாக இருந்தது. தலையைக் குனிந்தபடியே இருந்தான்.

"இன்னும் எவள காலத்துக்கு என்னை ஏமாத்தலாம் எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தியள்''

சுட்டுவிடும் தொனியில் கேட்டாள் சுமதி. அவன் தொண்டையைக் கனைத்துவிட்டு மெதுவாகச் சொன்னான்:

"நானேன் ஏமாத்தணும்''

"ஓ இவளவு நாளும் எனக்கு கடும் நேர்மையாய்தானே நடந்தியள்'' -என்று பல்லைக்கடித்தபடி உறுமினாள் அவள்.

"நேர்மையாத்தான் இருந்தன், இப்பவும் இருக்கிறன்'' என்றான் அவனும் அமைதியாக.

"ஓ அப்பிடித்தான் தெரியிது'' என்றாள் அவளும் அவனை ஏற இறங்கப் பார்த்தபடி.

"ஓ இதைச் சொல்றிங்களா?'' என்று சிரித்தபடி அவன் தன் சீருடையைத் தடவினான்.

சுமதிக்கோ அதைப் பாய்ந்து கிழித்துவிடவேண்டும்போல ஆத்திரம் வந்தது. பற்களைக் கடித்து கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் அவளை இலகுபடுத்த விரும்பினான்.

"மன்னிச்சுக் கொள்ளுங்க சுமதி, நான் உங்கள ஏமாத்த நினைக்கேல்ல. அதுக்காக பொய் சொல்லவும் இல்ல. நான் போராளிதான் என்ற உண்மையை சொல்லாமல்விட்டது பிழைதான். அப்பிடி நான் சொல்லியிருந்தால் இண்டைக்கு நீங்கள் எனக்காக வந்திருக்க மாட்டிங்க''.

"நானா? உங்களுக்காகவா? ஏமாத்துக்காரர்களுக்காக ஒண்டும் நான் இங்க வரேல்ல'' என்று நெருப்பாய் எரிந்தாள் அவள்.

"அப்பிடியெண்டா யாருக்காக வந்தீங்கள்?''

"உங்களத்தான் தேடிக் கொண்டு இங்க நிக்கிறன் எண்டு கனவொண்டும் காணாதிங்கோ. நான் அமுதாட்டத்தான் வந்தனான்''

"அப்பச் சரி. அதுவும் நல்லதுதான். நான் இண்டைக்கு இருக்கிறன். நாளைக்கு எதுவும் நடக்கலாம். இப்பவெல்லாம் மரணமும் நானும் அருகருகாக ஒரே பாதையிலதான் நடந்துகொண்டிருக்கிறம்'' என்றவன் சட்டென எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

அமுதாவிடம்கூட சொல்லிக் கொள்ளாமலா? என்று சுமதி நினைத்தபோதும் கையாலாகாதவளாய் இருந்த இடத்திலேயே சிலையென இருந்தாள். எவ்வளவு நேரமாக அப்படியே இருந்தாளோ தெரியாது. நிலையாக இறுகிப் போயிருந்த அவளது மனமோ கொதித்துக் கொந்தழித்துக் கொண்டிருந்தது.

ஏமாற்றுக்காரன் ஏமாற்றுக்காரன் என்று அவனை குத்திக் குத்திப் பேசியது மனது. நன்றாக அடி கொடுத்துவிட்டாள். அவன் அதை தாங்கமுடியாமல் எழுந்து செல்லும் அளவுக்கு அடித்துவிட்டாள்.

வலிக்கட்டும், நன்றாக வலிக்கட்டும். அவளை எவ்வளவு வேதனைப்படுத்திவிட்டான். அவளுடைய வேதனை அவனுக்குப் புரியுமா? அதற்கீடான வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும் என்று கறுவிக்கொண்டாள். அவளுக்குள்ளிருந்து சூடான பெருமூச்சொன்று வெளியேறியது.

அப்போதுதான் திடீரென அவளுக்குள் புதுவித அதிர்வொன்று கிளம்பியது. ஏன் இவ்வளவு குரூரமாய் இருக்கிறேன் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். தான் பெற்ற இன்பங்களைத்தான் பிறரும் பெறவேண்டும் என்று நினைப்பதுதான் நல்ல பண்பு. இவளானால் துன்பம் பெறவேண்டும் என்று நினைக்கிறாளே. அவனுக்கு நன்றாக வலிக்கட்டும் என்பதை விரும்புகிறாளே.

முன்பொருநாள் யாழ்ப்பாணத்தில் இருவரும் கதைத்துக்கொண்டே வேலை செய்தபோது அவனது கையிலிருந்த ஊசி குத்தி குருதி வரவே என்ன பாடுபட்டாள். அவனில் அப்போதிருந்த காதலும் கருணையும் இப்போது எங்கே போய்விட்டன. மனசு நிறைய இருந்த காதல் சில காரணங்களுக்காக ஒன்றுமே இல்லாமல்கூட காணாமல் போய்விடுமா என்ன? அவனது கையில் ஊசி குத்தியதற்கே தாங்க முடியாமல் தவித்தாளே, இப்போது அவனது இதயத்தில் அல்லவா ஓங்கி ஓங்கிக் குத்துகிறாள்.

உணவுத் தட்டுகளோடு வந்து நின்ற அமுதாவையும் கவனிக்காமல் மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. அவளது மனமே அவளுடன் நியாயம் பேசிக் கொண்டிருப்பதை அறியாத அமுதா,

"என்ன சுமதி வாமன் எங்க?'' என்றாள்.

"போட்டார்.''

"என்னட்டக்கூட ஒரு வார்த்தை சொல்லாமலா? சமைக்கிறம் எண்டு உனக்குத் தெரியும்தானே?'' என்று கேட்கும் அமுதாவை ஏறெடுத்தும் பார்க்காமல் குந்திக் கொண்டிருந்தாள் சுமதி.

"சரி நீ வா சாப்பிடுவம்''.

"எனக்கு வேண்டாம்''.

"பிடிவாதம் பிடிக்காத சுமதி. நாளைக்கு வேலைக்குப் போகணும்.''

"வேண்டாம் எண்டால் விடனப்பா'' என்று சினந்த சுமதியின் கண்கள் கலங்கிவிட்டன.

அன்றிரவு வீட்டில் எவருமே சாப்பிடவில்லை. நண்பிக்காக நண்பியும் பிள்ளைக்காக அம்மாவும் சாப்பிடாமல் கிடந்தார்கள். அதைப்பற்றி சுமதி எள்ளளவும் சிந்திக்கவில்லை. அவள் கவலை அவளுக்கு.

அழுது கொண்டும் குமுறிக்கொண்டும் உறங்கிப் போனாள்.

அடுத்தநாள் மாலையில் வாமன் வருவான் என்று சுமதியும் எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் வரமாட்டானா? வரமாட்டானா? என்று மனசென்னவோ அடித்துக் கொண்டுதான் கிடந்தது.

வந்துவிட்டபின் உணர்வு முறுக்கிக்கொண்டு அவனை முறைக்கிறது. அமுதாதான் புன்னகையோடு வரவேற்றாள்.

"உங்கட ஆளோட கோவிச்சுக்கொண்டு எங்களோடையும் கதைக்காமல் போறதா? இண்டைக்கு சாப்பிட்ட பிறகு இருந்து சண்டைபிடியுங்க'' - என்ற அமுதாவிடமும் சுமதிக்கு கோபம்தான் வந்தது. அவளைப் பார்த்தும் முறைத்துக் கொண்டு நின்ற சுமதியை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்துக் கொண்டு போனாள் அமுதா.

வாமன் இன்று சாதாரண உடையில் வந்திருந்தான். யாழ்ப்பாணத்தில் சுமதி சந்தித்த தோற்றத்திலேயே தெரிந்தான். அதே உடையில் அவள் அவனைக் கண்ட நினைவுகள் அவளுக்குள் ஓடிவந்தன.

அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. முகத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றாள். வாமனோ முதல்நாள் நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டவன் போல அவளின் முன்னால் அமர்ந்துகொண்டான். வதனம் எந்தக் கள்ளங்கபடமும் அற்று மிகத் தெளிவாக இருந்தது. அடிக்கடி சுமதியின் முகத்தை பார்த்துக்கொண்டான். தேநீரோடு வந்த அமுதாவிடம் அதை வாங்கிக்கொண்டே சொன்னான்.

"இந்த மேடமும் இங்க நிக்கறது தெரிஞ்சிருந்தால் நான் அந்தக் கோலத்தில வந்திருக்க மாட்டன்.''

"உடுப்பிலமட்டும் மாறினால் அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்ற நினைப்பாக்கும். நீங்கள் கொடுத்திருந்த முகவரியிலயே உங்களப்பற்றி அக்குவேறு ஆணிவேறாய் விளக்கம் சொல்லித்தான் அனுப்பியிருக்கிறாங்கள்'' என்றுவிட்டு அமுதா விலகிக் கொண்டாள்.

தொண்டையை எத்தனை தடவைகள்தான் செருமிக்கொண்டாலும் வார்த்தைகள் ஏனோ வெளிவரத் தயங்குகின்றன. சுமதி எதைச் சொன்னாலும் சண்டைக்குத்தான் நிற்பாள் என்பது புரிந்தது.

"அதான் சொன்னனே சுமி, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. இப்ப கதையுங்கோ..... வீட்ட என்ன நடந்தது...... என்னால ஏதும் பிரச்சினையா?''

"நேரத்தை வீணாக்காத சுமதி'' என்றபடிவந்த அமுதா இரண்டு தட்டுகளில் மாம்பழத் துண்டுகளை நீட்டினாள்.

"எனக்கு வேண்டாம் அமுது.''

"இல்ல நீயும் சாப்பிடத்தான் வேணும். இந்தா பிடியப்பா. கதைச்சுக் கொண்டிருங்க. அம்மாவும் நானும் சமைக்கிறம். நேற்று மாதிரி உங்கடபாட்டுக்கு எழும்பிப் போயிராமல் சாப்பிட்டிட்டுத்தான் போகணும். சரியா?''

என்றாள் அமுதா.

வாமன் தேநீரையும் குடித்து மாம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டான். ஆனால் சுமதி ஒன்றைக்கூட தொடவில்லை.

"சாப்பிடாம இருந்தால் என்ன நினைப்பாங்க? டீயாவது குடியுங்க சுமி. வேணுமெண்டால் பழத்தை நானே சாப்பிட்டு முடிச்சிடுறன்'' -என்றபடி தேநீரை அவளருகே தள்ளி வைத்தான். அது ஆறியிருந்தது.

"சுடுதா ஆத்தித் தரவா?'' -என்று அக்கறைபோல கேட்டான். அவன் கேட்டவிதம் அவளுக்குச் சிரிப்பு வந்தது. அதை கொடுப்புக்குள் அடக்கிக் கொண்டாள்.

"கொஞ்சம் சிரியுங்களன். முத்தா கொட்டிடும் எண்டு பயப்படுறிங்க பரவாயில்ல கொட்டினால் நான் உடன பொறுக்கித்தாறன். ப்ளீஸ் சிரிங்க'' -என்று கெஞ்சினான். எதிரே இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து அவன் மீது விட்டெறிந்தாள் சுமதி.

"ஏய், புத்தகத்தை எறியலாமா?'' என்று அதைப்பிடித்து தன் மடியில் பத்திரமாக வைத்துக்கொண்டான் வாமன்.

"சரி சரி டீயைக்குடியுங்க, சூடேறப்போகுது'' என்றவன்மீது அடுத்த புத்தகத்தையும் தூக்கி எறிந்தாள்

"ச்சே, புத்தகத்தை எல்லாம் எறியலாமா'' என்றபடி அதையும் பிடித்து பக்குவமாக வைத்துக்கொண்டான். அவன் புத்தகங்களில் காட்டிய அக்கறை அவனது நற்பண்பைத்தான் பறைசாற்றியது அவளுக்கு. அவளது கண்கள் அவனை நோக்க இதழ்களில் புன்னகை பரவியது.

"நன்றி நன்றி. இப்பதான் வடிவாய் இருக்கிறீங்க'' என்றான்.

எதற்காக என்று விழித்த சுமதியை புன்னகையோடு பார்த்துக்கொண்டு சொன்னான்,

"நீங்க சிரிச்சால்தான் வடிவு சுமதி''

அந்த வார்த்தை அவளுக்குள் மேலும் சிரிப்பையே விளைவித்தது.

"வடிவு எண்டு சொன்னால் காணுமே. உடனே சிரிப்பு'' என்று ஏதோ சொல்லப் போனவனை தொடர விடாமல் அவள் முறைத்தாள்.

"ஓ கடவுளே. சும்மா சும்மா முறைக்காதிங்க. அதான் சொன்னனே சிரிச்சால் மட்டும்தான் என்ர சுமி வடிவெண்டு''

"யார் சொன்னது உங்கட சுமி எண்டு?''

"ஏன் நான்தான் சொல்றன்..''

"அத நான் சொல்லல்லையே..''

"அதத்தான் எப்பவோ சொல்லிட்டிங்களே..‘'

"அது அப்ப அறியாமல் சொன்னது. இப்பத்தானே உங்கட வண்டவாளமெல்லாம் எனக்குத்தெரியிது''

"என்ன தெரியிது?'' என்று சுரத்தின்றி வெளிவந்தன அவனது வார்த்தைகள். அவனது முதத்திலிருந்த புன்னகை சடுதியில் காணாமல்போய் விட்டிருந்தது.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (6)

ஆநதி

First Published : 10 Jun 2012

10kd9.jpg

"எல்லாமே தெரியிது. பழைய நினைப்புகள விட்டிட்டு விலகிட்டிங்க எண்டால் நான் நல்லாவே இருப்பன்.''

"என்ன கதைக்கிறிங்க எண்டு யோசிச்சுத்தான் கதைக்கிறிங்களா?''

"நல்லாய் யோசிச்சுத்தான் கதைக்கிறன். உண்மையத்தான் சொல்றன்.''

"என்ன பெரிய உண்மை?'' என்று கேட்ட வாமன் அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டு மனசுக்குள் நொந்துபோனான்.

"எனக்கு பெரிய உண்மைதான் வாமன். நான் உங்களை நேசிச்சன்தான். கைநிறைய சலரி வாங்கிற, கவர்ன்மென்ற் ஜாப்ல இருக்கிற, இயக்கத்தின்ர தொடுசல் ஒண்டுமே இல்லாத, என்னை பெரிசாய் மதிக்கிற...'' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிக்கொண்டு போனவளில் அவனுக்கு எரிச்சல் வந்தது.

"நீங்க சொல்றது, எதிர்பார்க்கிறது எல்லாம் உங்களப் பொறுத்தவரைக்கும் சரிதான் சுமதி. எனக்கும் விருப்பு, வெறுப்புகள் இருக்கும் என்றதை ஏன் புரிய மறுக்கிறிங்க?''

"நீங்கள் மட்டுமென்ன என்னை புரிஞ்சுகொண்டா இருக்கிறீங்க இல்லை தானே?''

"என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்க சுமி. இயக்கத்தை மட்டும் என்னால கைவிட முடியாது.''

"அப்பிடியெண்டால்?'' வெருட்டுவதுபோல கேட்டாள்.

"எனக்கு இயக்கம்தான் பெருசு.''

"அப்ப நான் பெரிசில்ல?''

"நீயும் பெருசுதான். ஆனால் உன்னைவிட இயக்கம்தான் பெரிசு'' என்று படபடத்துவிட்டான்.

ஆ... நீ என்றுவேறு சொல்லிவிட்டானே என்று அவளுக்குக் கோபம் வந்தது. ஆத்திரத்தில் பதற்றமாகவும் இருந்தது.

"என்னைவிட இயக்கம்தானா பெரிசு?'' என்று சத்தமிட்டாள்.

"ஓம். அப்பிடித்தான்'' என்று அவளைவிடவும் சத்தமாகச் சொன்னான் வாமன். அவளுக்கு சட்டென்று வெடித்தது அழுகை. எழுந்து ஓட்டமாய் ஓடிச்சென்றுவிட்டாள் அறைக்குள்.

சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு அவனும் எழுந்து அடுக்களைக்குள் நுழைந்தான்.

தட்டுகளில் உணவை பரிமாறிக்கொண்டிருந்த அமுதா தாயாரிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்திருப்பாள்போலும்.

"லேசில யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டாள். சரியான பிடிவாதமம்மா'' என்ற அமுதாவின் குரலை திசைதிருப்பும் விதமாக வாமன் செருமிவிட்டு வாசலில் நின்றான்.

"யாரை சுமதியைத்தானே சொல்றிங்க?'' என்றவாறு உள்ளே வந்து அம்மாவுக்கு அருகில் கிடந்த பலகைக்கட்டையில் அமர்ந்துகொண்டான்.

அம்மா அன்போடு தலையைத் தடவிவிட்டு செம்புத்தண்ணீரையும் கோப்பையையும் எடுத்து நீட்டினார். அவன் கை கழுவிக் கொண்டான்.

"சாப்பிடப்பா'' என்று உணவுத்தட்டை கையில் கொடுத்தார் அம்மா. வாமனுக்கும் சுமதியில் கோபம்தான். புறப்படும்போது அவளிடம் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விட்டான். வீடு அமைதியாகவே இருந்தது. அம்மாதான் உணவு பரிமாறினார். அதனால் சுமதியால் மறுக்க முடிவில்லை. கொஞ்சமாய் சாப்பிட்டாள்.

அன்றிரவும் தோழிகள் இருவரும் அருகருகேதான் படுக்கையில் கிடந்தார்கள் என்றாலும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. உறங்கவுமில்லை. ஒரு போராளியை அவமதிக்கிறாளே என்ற கோபம் அமுதாவுக்கு. என்னைவிட தனக்கு இயக்கம்தான் பெரிது என்கிறானே என்ற ஆத்திரம் சுமதிக்கு. எதுவோ நினைத்துக்கொண்டு அமுதாவை உசுப்பினாள் சுமதி,

"அமுதா..''

"ம்..''

"நீ ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறாய்?''

".............''

"என்னில கோபமா?''

".............''

"வாமன் இயக்கத்தில இருக்கிறவரைக்கும் நான் அவர செய்யமாட்டன்'' என்ற சுமதியின் வார்த்தைகேட்டு அமுதா தன் உதடுகளை பற்களால் கடித்துக்கொண்டாள்.

"யோசிச்சுப்பார் அமுது. நீ என்ர இடத்தில இருந்தாலும் இப்பிடித்தான் சொல்லுவாய்'' என்றாள் சுமதி நிதானமாக.

"எப்பிடி இடத்தில இருந்தாலும் நான் அப்பிடிச் செய்யமாட்டன்'' என்றாள் அமுதா உறுதியாக.

"நான் இப்பிடித்தான்.''

"நான் உன்னை மாதிரி இல்ல சுமதி. தயவுசெய்து வேற ஏதாவது கதை.''

"நீயுமா என்னைய விளங்கிக் கொள்றாய் இல்ல? '' என்று ஆதங்கத்தோடு கேட்டாள் சுமதி.

"நீதான் சுமதி எங்களை விளங்கிக் கொள்ள வேணும். மாறவேண்டியது நீதான்.''

".............''

"முதல்ல மற்றவைன்ர மனச புரிஞ்சுகொள். இன்னும்தான் உனக்கு வாமனத் தெரியேல்ல. உண்மையான விடுதலைப் போராளி காதலுக்காக எதையும் இழப்பான். நாட்டுக்காக அந்தக் காதலையும் இழப்பான். நீ அதை விளங்கிக் கொள். போராளியின்ர காதல் புனிதமானது சுமி. அந்த புனிதத்தைவிட மேலான புனிதமா அவன் தன்ர கொள்கையை நினைக்கிறான். மதிக்கிறான். வாழ்றதுக்காகத்தான் காதலிக்கிறான். ஆனா கொள்கைக்காக அவன் சாகவும் தயங்கமாட்டான். காதலுக்காக கடமையை மறக்கிறவன் போராளி இல்லையே!''

".............''

"அவங்கள் மக்களுக்காக வாழப் பிறந்தவர்கள் சுமதி. போராளிகளுக்கு நாங்கள் ஆறுதலாய், சுமைதாங்கியாய் இருக்கணுமே தவிர, அவங்களின்ர கொள்கைக்கு எதிராய் நிற்கக்கூடாது.''

".............''

"காதலுக்காக கொள்கையை விடுறவன் எல்லாம் மனுசனே இல்ல. அப்பிடிப்பட்டவனுக்கு காதலை விடுறதும் பெரிசில்ல. ஆனா இலட்சியத்துக்காகக் காதலை விட்டவன் எப்பவுமே உயர்ந்தவன்தான்'' என்ற அமுதாவின் நிதானமான, தெளிவான வார்த்தைகள் சுமதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

சற்று தெளிவு பெறுவதைப்போலவும் உணர்ந்தாள் சுமதி. அவள் யோசித்து தெளியட்டும் என்று அமுதா தன் விளக்கத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

கடந்த நாட்களில் சுமதியும் பல போராளிகளோடு பழகியிருக்கிறாள்தான். இயல்பாக சிரித்துப் பேசும் அவர்களுக்குள் கடமையுணர்வும் கொள்கைப்பிடிப்பும் ஆழப்பதிந்திருக்கின்றன. பெற்ற தாயை விடவும் பிறந்த பொன்நாடே பெரிதென்று பலபேரும் சொல்ல கேட்டிருக்கிறாள்தான். எனினும் அதெல்லாம் வெற்று வாசகங்கள் என்றல்லவா நினைத்தான். அந்த வாசகத்தின் உண்மைத்தன்மையை இந்தப் போராளிகளிடம் அல்லவா காண்கிறாள். ஒருமுறை அவளது பகுதியில் தங்கியிருந்த போராளி ஒருவன் தான் எழுதியதாக கவிதையொன்றைக் காட்டினான்.

"மிஸ் இது எப்பிடி இருக்கெண்டு படிச்சுப் பாருங்களன்'' என்று காகிதமொன்றை நீட்டினான். சுமதியும் வாங்கிப் படித்தாள்.

அம்மா அழாதே

உன் கண்ணீர் ஆறு

என் மலையை கரைத்து

மடுவாக்கிவிடும்.

உன் கண்ணீரின் சக்தி

என் தாங்குதிறனைத் தகர்த்துவிடும் அம்மா.

அதனால்தான் கேட்கிறேன்

அழாதே அம்மா.

உன் கண்ணீரைக் காணாத இடத்திற்கு

என்னை விலகிப்போகும்படிக்கு

விரட்டிவிடாதே,

என்ற அந்த வரிகளை வாசித்துவிட்டு நிமிருமுன் அவன் கேட்டான்,

"எப்பிடி இருக்கு மிஸ் என்ர அம்மாவுக்குத்தான் எழுதினன்'' என்று சோகமாகச் சிரித்தான்.

"அம்மா பாவம்தானே?'' என்றாள் சுமதி.

"அதான் மிஸ் என்ர கவலையும்'' என்றவனுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் நின்றாள்.

"எனக்கு அம்மா எண்டால் உயிர்தான். அம்மாவுக்கும் நானெண்டால் உயிர். அவ அழுதால் என்னால தாங்கமுடியாது மிஸ். துப்பாக்கிச் சன்னத்தைவிட பயங்கரமாய் தாக்கக்கூடியது அம்மாவின்ர கண்ணீர். என்னை காணும்போதெல்லாம் அழுவா மிஸ். அதாலதான். அவள் காணாமலேயே நான் தூரத்தில இருந்திட்டா....'' என்ற அவன் நடுங்கிய உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டான். அவனது கண்களில் இலேசான கலக்கம்.

தன் அம்மாவில் இத்தனை அன்பை வைத்திருப்பவன் எதற்காக அவரைவிட்டுப் பிரிந்தான்? இனியாவது அம்மாவிடம் சென்றுவிடலாம்தானே? எதற்காக இவன் இயக்கத்தில் இருக்கவேண்டும்? அப்படி இவனுக்கென்ன கட்டாயம் இருக்கப் போகிறது? இப்படியெல்லாம் அவனிடமே கேட்கத் தோன்றியதுதான். ஆனால் கேட்டுவிட முடியவில்லை. தாயின் அன்பைவிட மேலாக எது இருந்து அவனை இழுக்கிறது? எதற்காக இப்படி தங்களைத்தாங்களே வருத்திக் கொள்கிறார்கள்? அம்மாவைவிட மேலான எதையோ இயக்கம் இவனுக்கு கொடுக்கிறதா? என்ன எதற்காக இந்த இளந்தலைமுறை போராட்டம் போராட்டம் என்று சாகிறது சுமதிக்கு அந்தக் கேள்விக்கான பதில் புரியவே இல்லை. அன்று புரியாததெல்லாம் இப்போது அமுதாவின் விளக்கத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் தொடங்கிவிட்டது.

அதுமட்டுமல்ல, அவன் சுமதி மேற்பார்வைசெய்த விடுதியில் மாதக்கணக்காய் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதால் அவர்களுக்குள் நல்ல உறவும் இருந்தது. அவன் நிதிப்பிரிவைச் சேர்ந்தவன் என்று தெரிந்த பின் சுமதி அவனிடமும் தன் வரி வட்டி பற்றிய விசனத்தை தெரிவிக்கத்தான் செய்தாள். கடுகு சின்னதென்றாலும் காரம் பெரிதென்பதை அவனும் நிரூபித்தான். வரி நடைமுறைகள் பற்றி சுமதிக்கு புரியும்படி விளக்கிச் சொன்னான். தங்களது நடைமுறை அரசு பற்றிய விளக்கங்களை தெள்ளத் தெளிவாக விளக்கினான். அரசு அறவிடும் சோளவரி, சந்தைவரி போன்ற இன்னோரன்ன வரிகளைப்பற்றி தெளிவாகச் சொன்னதோடு தங்களின் வரி விதிகளையும் சொன்னான். சுமதியால் மறுப்புச்சொல்ல முடியாதபடியும் அவனது விளக்கம் அமைந்திருந்தது.

சுமதி வன்னிக்குவந்த புதிதில் ஓவியர் வீட்டில் சந்தித்த அந்த குறும்புக்காரப் பையன் அமுதா வீட்டுக்கு வந்திருந்தான். சுமதியாக அவனிடம் கதைக்கவில்லை என்றாலும் அவனோடு கதைக்கத்தான் வேண்டியிருந்தது.

"நீங்கள் எந்த இடம் எங்கட அமுதாக்கா உங்களுக்கு கனநாளையப் பழக்கமா? நீங்கள் தேடிவந்த அண்ணனைச் சந்திச்சிட்டிங்களா? அவரார் உங்களுக்கு இப்ப உங்கட வீட்டாக்கள் எங்க இருக்கிறாங்க?'' என்றெல்லாம் அவன் தொணதொணத்துக் கொண்டிருந்தது அதிகப்பிரசங்கித் தனமாக தெரிந்தாலும் சுமதி பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"உனக்கு வாய் கூடீற்றிது. கொஞ்சம் குறைச்சுக்கொள்'' என்று தன் அபிப்பிராயத்தையும் சொன்னாள் சுமதி.

"அமுதாக்கா அமுதாக்கா அந்தக் கண்ணாடிய ஒருக்கா கொண்டுவந்து தாங்க'' என்றபடி துள்ளியெழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தான்.

"என்னடா'' என்ற அமுதாவுக்கு, "என்னக்கா அப்பிடியெல்லாமில்லையே. அமுதாக்கா என்னை வடிவாய்ப் பாருங்க. எனக்கு எத்தின வாய்கள் தெரியிது'' என்றான். பிறகு சுமதியைப்பார்த்து அப்பாவியாய் சொன்னான்: "என்னக்கா நீங்கள் எனக்கும் உங்களுக்குப்போல ஒரேயொரு வாய்தானே அக்கா இருக்கிது'' என்று.

எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.

"நல்லாய் ட்ராமா போடுவாய்'' என்றாள் சுமதி.

"உண்மையா நீ எப்பதான் உன்ர வாய குறைக்கப்போறியோ தெரியேல்ல'' என்ற அமுதாவிற்கு அவன் சொன்ன பதில் சுமதியை பேசா மடந்தையாக்கிவிட்டது.

அமைதியிலும் அமைதியாகிவிட்ட சுமதியின் உள் மனமோ போராளிகளின் இயல்புகளைப் பற்றி பெரிதாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டது.

"நான் செத்த பிறகுதானக்கா குறையும். ஆனாலொண்டு என்ர வாய் மூடினாப் பிறகு நிறைய வாய்கள் திறக்கும். ஏன் சொல்லுங்க பாப்பம். இந்த அக்காகூட என்னைப் பத்தித்தான் கதைச்சிக்கொண்டே இருப்பா. அடடா அவன் உயிரோட இருக்கேக்க எப்பிடியெல்லாம் பேசிப்போட்டன் எண்டு கவலைப்படுவா. என்ர வித்துடலுக்கு முன்னால நிண்டு தம்பி ஒருக்கால் வாயத்திறந்து கதையனடா தம்பி எண்டு அமுதாக்காவோட சேத்து இவவும் புலம்பாட்டிப் பாருங்களன்'' என்று அவன் கெக்கட்டமிட்டு சிரித்தான்.

"தம்பி கதையவிட்டிட்டு எழும்பிப்போய் சாப்பிடு'' என்றாள் அமுதா அந்தக் கதையை திசைதிருப்பும் நோக்குடன்.

"என்னக்கா நீங்க நெருப்பெண்டால் நாக்கு வெந்திடாது அக்கா. எண்டைக்கோ ஒருநாள் சாகத்தானே போறம். ஆனாலொண்டக்கா நீங்கள் என்ர வெத்துடலுக்கு துயிலுமில்லம் வரேக்க, இந்த அக்காவையும் மறக்காமல் கூட்டிக்கொண்டு வாங்க, என்ன..''

."வாய கொஞ்சநேரம் பொத்திக்கொண்டு இரடா'' என்று அவனின் தலையில் குட்டப் போனாள் அமுதா.

"ஐயோ தலையில எல்லாம் குட்டாதீங்க. எனக்கு அம்மாக்கள் இருக்கிறாங்க'' என்றபடி எழுந்துகொண்டு அவன் குசினிக்குள் ஓடினான்.

"அ அ எனக்கும் பிடிச்ச ஐற்றங்கள்தான் சமைச்சிருக்கிறீங்கள் அம்மா'' என்று அவன் அடுக்களைக்குள் நின்று சொல்வது இவர்களுக்கும் கேட்டது.

"பொல்லாத வால்'' என்று அமுதாவும் சிரித்தாள். ஆனால் அந்தச் சிரிப்பில் சோகம் வழிந்தது.

"எதுக்காக அமுது இவங்கள் ஒரே சாவப்பற்றி சாதாரணமாய் கதைக்கிறாங்கள்? வாமனும்கூடசொன்னார், மரணமும் தானும் பக்கத்த பக்கத்ததான் நடந்துகொண்டிருக்கிறாங்களாம் எண்டு. நானும் இவங்களின்ர கதைகளக்கேட்டு யோசிச்சுப்பாக்கிறன், எதுக்காக இப்பிடி சாவோட போட்டி போட்டுக்கொண்டு நிக்கினமெண்டுதான் தெரியேல்ல''.

"அவங்கள் இப்பிடித்தான் சுமதி. இலட்சியக் கிறுக்குகள். தங்களின்ர உழைப்புக்கு பின்னால சனத்தின்ர வாழ்விருக்கு என்கிற கற்பனைகளும் விருப்பங்களும்தான் இவங்கள இயக்குது. தங்களின்ர உயிர்போனாலும் பரவாயில்ல மக்களுக்கு கெளரவமான வாழ்வு கிடைக்கணும் என்றதுதான் இவங்கட ஆசை. கொள்கைக்காக உன்னையும் என்னையும் ஏன் பெற்ற அம்மாவையும்கூட தூக்கி எறிஞ்சிட்டும் போவாங்கள். அப்பிடி நடந்துமிருக்குத் தெரியுமா?''

"உண்மையாவா?''

"ம். எனக்குத்தெரிஞ்ச பையன் ஒருநாள் தன்ர காதலியோட சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சிட்டான். காரணம் அவளுக்கு போராட்டத்தில பற்றில்லையாம். தனக்கு வாறவள் தன்னைவிட போராட்டத்தை நேசிக்கிறவளாய் இருக்கணுமாம்.''

"ஏய் அமுது, நீ எனக்காகச் சொல்றாயா என்ன? என்னைய வெருட்டிப் பாக்கிறியா?'' என்று அப்பாவியாகக் கேட்டாள் சுமதி.

"ஐயோப்பா அப்பிடியெல்லாம் இல்ல. நான் வெருட்டி நீ வெருண்டுருவியா என்ன? நான் சொல்ற கதை உண்மையாவே நடந்ததப்பா. அந்தப்பிள்ளைக்கும் அவனுக்கும் கனநாளைய காதல். அதுக்குப் பிறகுதானாம் அவன் இயக்கத்துக்கே போனவன். பிறகு போராளியாய் பெட்டையச் சந்திக்கப் போயிருக்கிறான். அப்ப அவள் சொன்னாளாம் எண்டைக்கு நீ விலத்திவாறியோ அதுக்குப் பிறகுதான் நமக்கு கல்யாணம் எண்டு. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?''

"என்ன சொன்னான் நீயும் இயக்கத்துக்கு வந்தால்தான் கட்டுவனெண்டா?''

"அவன் என்ன சொன்னானாமெண்டா 'என்னோடசேத்து இயக்கத்தையும் காதலிக்கிற ஒருத்தியத்தான் நான் கட்டுவன். அப்பிடி உன்னால ஏலாட்டி உனக்கேற்ற சுயநலவாதி யாரையும் நீ கட்டிக்கொள். நான் சரிவர மாட்டன். இதுதான் இப்பவும் எப்பவுமான என்ர முடிவு' எண்டு'' என்று அமுதா கதையளந்து கொண்டிருந்தாள். ஆனால் சுமதிக்கோ அந்தக் கதையில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதாக தெரியவில்லை.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (7)

ஆநதி

First Published : 17 Jun 2012

1kd9.jpg

காதலித்தவர்கள் பிரிந்து வேறுவேறு கல்யாணம் கட்டிக்கொள்வதென்றால் அதென்ன காதல்? உண்மையான அன்பில்லாமல்தான் காதலித்தார்களா? என்று எண்ணியவள்,

"அதுசரி பிறகு யார் யாரை கல்யாணம் செய்தாங்க?'' என்றாள்.

"தங்கட தங்கட கொள்கைக்கேத்தவங்களத்தேடி திருமணங்களையும் செய்துகொண்டார்கள். இப்ப குடும்பமும் குடித்தனமுமாய் அவை அவைன்ர வாழ்க்கைய வாழுறாங்க'' என்று கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அமுதா.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்தான். அதுசரி இதையேன் அமுதா எனக்குச் சொன்னாள்? வாமன் ஒருக்காலும் மனம்மாற மாட்டான், உன்னாலயும் மாறேலாது எண்டால் நீ உனக்கேத்த வேற யாரையாவது பார் என்று அறிவுரை சொல்கிறாளா? சேச்சே. அமுதா அப்படி நினைத்துச் சொல்லக்கூடியவள் அல்ல. என்னைத்தான் மாறச்சொல்லுவாள். வாமனை சொல்லவே மாட்டாள். ஏனென்றால் இவளுக்கும் அந்த இயக்க விசர் இருக்கிறதே. நாடு நாடு என்று எதற்காகத்தான் இப்படிக்கிடந்து மாய்கிறார்களோ தெரியவில்லை. அதற்காக உயிரையும் கொடுப்பேன் என்று மாய்கிறார்களே என்றெல்லாம் பலவாறும் யோசித்துக்கொண்டிருந்தாள் சுமதி.

"ப்பே'' என்ற சத்தம் காதோரம் வந்து மிரட்ட, திடுக்கிட்டுப்போனவளைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றான் அந்த வால் சீலன்.

"என்னக்கா பயந்திட்டிங்களா? இதுக்கே இவ்வளவு பயம் எண்டால் நான் நினைக்கேல்ல'' என்றான் பெரிய தோரணையில்.

அவனுடைய காதைப்பிடித்து இழுத்து கதிரையில் இருத்தினாள் சுமதி. ஏனெனில் அவனிடம் கேட்பதற்காய் அவளிடம் சில கேள்விகள் இருந்தன.

"இப்ப உனக்கு எத்தின வயது?'' என்றாள் சுமதி சீலனிடம். அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

"எதுக்கு இந்த ஆராய்ச்சி?''

"சொல்லன்''

"பதினெட்டு''

"இந்த வயசில இது உனக்குத் தேவைதானா?'' என்ற சுமதியைப்பார்த்து அவன் முகம் இறுகினான்.

"எது தேவைதானா?'' என்று பதில்கேள்வி கேட்டான்.

"இந்த உடுப்பு, ரைபிள், இயக்கம்...'' என்று அடுக்கிக்கொண்டு போனவளை ஆழமாக பார்த்தான்.

"தேவைதான். அதாலதான் இதுகள எடுத்திருக்கிறன். இயக்கம் இப்பவும் சொல்லுதுதான் உனக்கு ரைபிள் வேணாம் புத்தகம் தாறன் படி எண்டு. ஆனா எனக்கு ரைபிள்தான் வேணும். ஏனெண்டால் அதாலதான் என்ர கண்ணுக்கு முன்னால அவங்கள் சனங்களச் சுட்டுக்கொண்டாங்கள்'' என்று பற்களை நெருமினான். சுமதிக்கு ஏனடா அவனை கேள்வி கேட்டேன் என்று அச்சமாகக்கூட ஆகிவிட்டது.

"சாரி, சாரி'' என்றாள் மெதுவாக.

அவனும் மெல்லச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் நெருப்புத் தெரிந்தது. அறியாப்பெண்ணை பார்ப்பதுபோல பார்த்தான். அந்தப் பார்வையில் பெரிய மனிதன் தெரிந்தான்.

அமுதாவும் வந்துசேர்ந்துவிட அவளை அக்கா அக்கா என்றழைத்து ஏதேதோ பகிடிகள் சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான்.

"சரி ஐயா கிளம்பப்போறார். அமுதாக்கா கொஞ்ச நாளைக்கு இங்கால தொடர்பிருக்காது. சும்மா சும்மா எல்லாரிட்டயும் என்னைப்பற்றி விசாரிச்சுக்கொண்டு இருக்காதிங்க என்னக்கா. ஃவ்ப்ரியா நிண்டால் நானே வருவன் சரியா?'' என்றுவிட்டு அம்மா கொடுத்த அன்பு முத்தத்தையும் வாங்கிக்கொண்டு போய்விட்டான்.

அவன் சென்று நீண்டநேரமாகியும் அவனது கலகலப்பும் சிரிப்பும் அந்த வீட்டைவிட்டுப் போகவில்லை. ஏனோ அவனது குறும்புகளை நினைத்து இரசிக்கத் தோன்றியது சுமதிக்கு.

அந்த வாண்டுப்பையன் வீட்டுக்கு வந்துபோன நான்காவது நாளே அமுதா அழுதுகொண்டு வீட்டுக்கு வந்தாள்.

"அம்மா நம்மட சீலன்குட்டி நம்மள விட்டிட்டு போட்டானம்மா'' என்று அழுதாள்.

அம்மாவும் சற்றுநேரம் சிலையென நின்றுவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு சாமியறைக்குள் சென்றுவிட்டார். அமுதா அழுதழுதே பூக்களைக் கொய்தெடுத்து மாலை கட்டினாள். அமுதா அழைக்காமலேயே சுமதியும் புறப்பட்டு அமுதாவுடன் சென்றாள். அன்றுதான் சுமதி தன் வாழ்க்கையிலேயே முதன்முறையாக ஒரு வீரச்சாவு வீட்டிற்குச் செல்கிறாள்.

சீலன் மாறாத குறும்புப் புன்னகையுடன் பேழைக்குள் கிடந்தான். அவனைச்சுற்றி குழுமி நின்றவர்கள் ஏதேதோவெல்லாம் சொல்லி புலம்பினார்கள். கதறினார்கள். தம்பி தம்பி என்றும், என்ர குஞ்சு என்ர ராசா எங்கள விட்டுட்டுப் போயிட்டியே மகனே என்றும் குமுறிக்குமுறி விம்மினார்கள்.

அமுதாவையே ஒட்டிக்கொண்டுபோன சுமதியின் விழிகள் அவனது வெத்துடலில் பதிந்தன. கால்மாட்டிலேயே நின்றுகொண்டாள். அவனது மார்பில் போர்த்தப்பட்டிருந்தது புலிக்கொடி. மாலை அணிகையில் அமுதா விம்பிக்கொண்டிருந்தாள். வெளியேவந்து கதிரையில் இருந்தபோது அவளது விழிகள் நீரைக்கொட்டின. சுமதியின் கண்களிலும் கண்ணீர். சுமதி தன் வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு போராளியின் மரணத்துக்காக அழுகிறாள். அவனை இவ்வுலகில் இனிமேல் காணமுடியாது. அந்தக் குறும்பழகன், குட்டிப்புலி தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டான். இனி அவனைப்போல இன்னொரு பிள்ளை கிடைக்கப்போவதில்லை என்றெல்லாம் நினைத்து நினைத்து பெருமூச்சுகளை வெளித்தள்ளிக்கொண்டிருந்தாள் சுமதியும். அமுதா இன்னமும் அழுது தீரவில்லை.

அந்த வீரச்சாவு நிகழ்விற்கு ஏராளமானவர்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். எங்கெங்கோ தூர இடங்களில் இருந்தெல்லாம் வந்துகொண்டிருந்தார்கள். முக்கியமான பிரமுகர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருப்பதைப்போல சமூகத்தின் பெரிய மனிதர்கள்கூட வந்திருந்தார்கள். வந்தவர்களெல்லாம் போட்டுவிட்ட பூமாலைகள் சீலனின் உடலை முழுமையாக மறைத்து பெட்டியையும் நிறைத்துக்கொண்டு வெளியே தொங்கின. இந்தச் சின்னப்பையனுக்கு இத்தனை உறவுகளா என்று வியப்பாக இருந்தது சுமதிக்கு.

பென்னாம்பெரிய மூக்குத்தியும் காதுக்கம்மலும் அதிர ஓடோடிவந்த ஆச்சி ஒருவர் பெட்டிக்குள்கிடந்த சீலனின் முகத்தை தடவித்தடவி அழுதாள். பின்னர் தன் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்புச்சொல்லி அழத்தொடங்கினாள்.

"என்னப்பெத்த ராசா நீ என்னவிட்டுப் போனதெங்கே சண்டைக்கெல்லோ போறனெண்டு, என்னட்ட நீ ஓடிவந்து, சொல்லிப்போட்டுப் போனபின்ன சாமியெல்லாம் கும்பிட்டனே. என்ர குஞ்சக் காப்பாத்தெண்டு. ஏத்திவைச்சன் நெய்விளக்க. விளக்கும் அணையல்லயே உனக்குச் சா வந்ததென்ன? பொன்னு பெரிசுகள, திண்ணுருசி கண்ட பேய, கொல்லணுண்ணு சொல்லிக்கிட்டே, இருப்பியேடா என்ரகுஞ்சு. கொன்னுட்டியா ஆசதீர உன்ர குலக் கொடியறுத்த பாவிகளத் தீத்திட்டியா தனிமரமா நிண்ணியேன்னு தலதடவி வளத்தோமே. எந்திரிச்சுப் பாரு கண்ணா, எம்புட்டுச் சனங்கவுன்ன, கதைகேக்க வந்திருக்கு'' என்றெல்லாம் அந்தத் தாய் ஒப்புச் சொல்லி அழுதபோது பலரது விழிகளிலும் கண்ணீர் வழிந்தது.

சுமதி சிலையென அமர்ந்திருந்தாள். சுற்றியிருந்த அம்மாக்களில் எந்த அம்மா சீலனைப்பெற்றவள் என்று அவளுக்கு தெரியவில்லை.

எந்தத் தாய் பெற்ற பிள்ளையோ என்று சுமதியின் மனம் வேதனைப்பட்டபோதே, ஒப்புச்சொன்னபோது அந்த ஆச்சி சொன்னாரே அநாதை என்று என நினைத்துக்கொண்டாள். எதையும் கேட்டறியும் நிலையில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் இறுதியாக வீட்டுக்கு வந்தபோது அமுதா தலையில் குட்டப்போக எனக்கு அம்மாக்கள் இருக்கினம் என்றானே, இவர்களைத்தானா?

அப்போது அவளருகே அமுதாவுக்கு பழக்கமான ஒரு போராளி வந்தான். அமுதா கண்களை துடைத்துக்கொண்டு அருகே இருந்த நாற்காலியை காட்டினாள். அதில் அமர்ந்துகொண்டவன் சற்று நேரம் அமைதியாக எதையோ யோசித்தான்.

"எவ்வளவு துடியாட்டமான பெடியன். அநியாயமாய் போயிட்டான். சண்டைக்குப் போகணும் என்றது அவனுக்குள்ள இருந்த பிடிவாதமான கொள்கை. ஒருதருக்கும் தெரியாமல்தான் லைனுக்குப் போனவன். அங்க நிண்ட அப்பா சேராதான் ஆள் இங்க வந்திட்டான் உடனவந்து கூட்டிக்கொண்டு போங்க எண்டு அறிவிச்சவர். இவனை கூட்டிக்கொண்டுவரப்போன தூயவனும் அந்த இடத்திலயே சரி''.

"என்ன நடந்தது கனி?''

"ஆமி அம்புஸ் குடுத்திட்டான். தூயவன் மோட்டார் சைக்கிளில போய் ஏத்திக்கொண்டு வந்தான். பின்னேரப் பொழுதாகிட்டுது. வழமையா போய்வார பாதைதானே எண்டு ஆக்கள் சாதாரணமாத்தான் வந்திருக்கிறாங்க. அம்புஸ்ல மாட்டிட்டாங்க.''

"நீங்கள் அவனுக்கு சண்டைக்கு வயசு காணாது எண்டு வைச்சிருக்கப் பாத்திங்கள். ஆமி அவனுக்கு சாகுறதுக்கு வயசு காணுமெண்டு முடிவெடுத்திட்டான். ம்....''

"................''

"அம்மாக்கள் என்னவாம்?''

"அம்மாவுக்கு அறிவிச்சிருக்கு. ஆனால் அவையால வரமுடியாதுபோல தெரியிது'' என்றான்.

"அப்ப என்ன செய்யப்போறிங்க?''

"இன்னும் ஒருமணித்தியாலத்தில எடுப்பம் எண்டுதான் பாக்கிறம்.''

"ஓம். அதுதான் நல்லது. அவையள் வராட்டில் அவனையேன் சும்மா வைச்சிருப்பான். அவனை இப்பிடி பார்த்துக்கொண்டிருக்க ஏலாது'' என்று மீண்டும் அழுதாள் அமுதா.

"சீலன்ர அக்காமார் அவனில சரியான பாசம். இண்டைக்கு அவனுக்கு பக்கத்தில ஒருத்தர்கூட இல்ல'' என்றான் அந்தப் போராளி.

"கூடப்பிறந்தாக்கள் இல்லாட்டியும் கூடி வளந்தாக்கள் நிறையப்பேர் இருக்கிறாங்க கனி. அவன்ர உறவுகள பாக்கிறீங்கள்தானே?'' என்று திருப்தியோடு சொன்னாள் அமுதா.

'அப்படியானால் அவனது வீடே இது இல்லையா? சுற்றிநின்று கதறியழும் எவரும் அவனது அம்மாவோ சகோதரர்களோ இல்லையா? இப்படித் துடிதுடிக்கிறார்களே இவர்களெல்லாம் யார் அவனுக்கு? எப்படி இது சாத்தியம்?' இவ்வாறான பலகேள்விகள் சுமதியை குடைந்தன.

சீலனின் வித்துடல் பேழையை ஊர்வலமாக எடுத்துச்சென்று மண்டபமொன்றில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. உரையாற்றிய எல்லோருமே சீலனின் கெட்டித்தனத்தையும் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டிப்பேசி அவனது வாழ்க்கை வரலாற்றையே சொல்லி முடித்தார்கள். துயிலுமில்லம்வரை சென்று இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டு, அவனது விதைகுழியில் மூன்றுபிடி மண்போட்டுவிட்டுத்தான் வீட்டுக்கு வந்தார்கள் அமுதாவும் சுமதியும்.

குளித்துவிட்டுவந்து, நடந்தவற்றையெல்லாம் அம்மாவுக்குச் சொல்லி, சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுந்தபின்புதான் சுமதி மெல்லக் கதையை தொடங்கினாள்.

"சீலனின்ர அப்பா அம்மா எங்க இருக்கினம்?''

"கொழும்பில''

"ஏன் வரேல்லயாம்?''

"திடீரென்டு வெளிக்கிட்டு வன்னிக்கு வாறது அங்க பயம்தானே. இப்பிடி ஒரு நிகழ்வுக்குத்தான் வன்னிக்கு வந்தவை எண்டு தெரிஞ்சால் அது குடும்பத்துக்கே பிரச்சனைதானே. அதோட சீலன்ர அப்பா மற்றாக்களோடதான் ஒட்டு. இவன்ர உயர்வுகள் அப்பருக்கு நேர்மாறு. அப்பரை அவனுக்கு பிடிக்காது. அவர் இயக்கத்துக்கு எதிராய் செயற்படுகிறார் எண்டு. முதல்ல தாயோட ஒரே சண்டை பிடிப்பானாம். இயக்கத்துக்குப்போய் இவரை நான்தான் சுடுவன் எண்டு சொல்லுவானாம். அம்மா அழுதுகொண்டிருப்பாவாம். அப்பாவின் அதிகாரம்தானாம் வீட்டுல''.

"அதுக்காக அப்பாவையே சுடுவன் எண்டானாமா?''

"ம்..... அவன் சொல்லியிருக்கக்கூடிய ஆள்தான். வெளியால பாத்தா குறும்பும் குழப்படியுமாத்தான் தெரிவான். ஆழமாய் கதைக்கும்போதுதான் அவனுக்குள்ள இருக்கிற பெரிய மனுசனத் தெரியும். அப்பரைப்பற்றி கதைச்சாலே நெருப்புமாதிரி நிப்பான். சீலனின்ர பேரே அவன்ர சித்தப்பாட பேர்தானாம். அவர் பழைய போராளி. அவர்லதான் இவனுக்கு சரியான பாசம். அதோட அவன்ர சினேகிதப் பெடியனையும் ஆமி சுட்டவனாம். அவன் செத்தத இவன் நேர கண்டவனாம். ஆனால் தாங்க சுடேல எண்டு ஆமி சொல்லிப்போட்டாங்களாம். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள பொடிய அடக்கம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினவங்ளாம். அதெல்லாம் இவனுக்கு ஆமியில ஆத்திரமாய் வளந்திட்டுது. அதாலதான் படிக்கக்கொண்டுபோய் விட்டாலும் சண்டைக்களத்துக்கு ஓடிருவான். இவனக் கூட்டிக்கொண்டு வரப்போன பெடியனும் அநியாயமாய் செத்திட்டான். சீலன்ர ஆத்துமா அடங்காது சுமதி. சண்டையிலயே அவன விட்டிருக்கலாம். ஒரு ஆமியக்கூட சுடாமல் செத்திட்டான் என்றத நினைக்க எனக்கே கவலையாய் இருக்கு''

அண்டைக்கு சீலனைப்பற்றியே கதைத்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. "போறதுக்காகத்தானே இயக்கத்துக்கே வந்தவன்'' என்று அமுதா, சீலன் கதை சொல்லியபடியே உறங்கிப்போக சுமதி சாமக்கோழி கூவியபின்புதான் நித்திரையானாள்.

திடீரென்று ஒருநாள் அமுதா சொன்னாள்.

"சுமதி நான் ஒரு கிழமைக்கு வீட்டுப்பக்கம் வரமாட்டன். நீ எப்பவும்போல வீட்ட வந்து போகலாம்''.

"என்னப்பா அப்பிடி எங்க போகப்போறாய்?''

"ஒரு இடத்துக்குத்தான். வந்தபிறகு சொல்றனே'' என்று உடைகளில் சிலவற்றை எடுத்து பையில் அடுக்கினாள் அமுதா.

"என்னப்பா என்னட்டக்கூடச் சொல்லக்கூடாதா?''

"ம்''

சுமதிக்கு அந்த "ம்' முகத்திலடித்த மாதிரிபோய்விட்டது. அத்தோடு கதையை நிறுத்திக்கொண்டாள். ஏனோ மனசுக்குள் சங்கடமாய் இருந்தது. அமுதா தன் பயணத்துக்கான ஏற்பாடுகளிலேயே கவனமாக இருந்தாள். இரவு பத்துமணியானபின்பு வீட்டுக்குவந்த வாகனத்திலேயே புறப்பட்டு சென்றுவிட்டாள் அமுதா. சுமதியின் குழப்பமான மனநிலையை புரிந்துகொண்ட அம்மாதான் அவளுக்கு ஆறுதல் சொன்னார்.

"இப்பிடித்தான் சுமதி. அமுதாவ திடீர் திடீரெண்டு வந்து கூட்டிக்கொண்டு போவாங்க. காயப்பட்ட போராளிகள் யாரையாவது தனியவைச்சு பராமரிக்க வேண்டியிருக்கும். அமுதாவில அவைக்கு சரியான நம்பிக்கை. கடமையில நேர்மையாவும் போராளிகள்ல அன்பாயும் இருக்கிறதால அவைக்கும் இவவ நல்லாய் பிடிக்கும். போராளிப் பிள்ளைகளுக்கெண்டால் இவவும் உயிரையும் குடுக்கிறன் எண்டுதானே நிப்பா'' என்றெல்லாம் அந்தத்தாய் தன் மகளைப்பற்றி பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இப்போது சுமதிக்குக்கூட மனசுக்குள் குறுகுறுத்தது.

ஒரு போராளியைப்போல இரகசியம் காப்பவளாகவும் தேசப்பற்றுடனும் அமுதா கடமையாற்றுகிறாளே. முக்கியமான தங்களின் இடங்களுக்குக் கூட்டிச்செல்லும் அளவுக்கு இவளை அவர்கள் நம்புகிறார்கள். அந்தளவுக்கு அமுதா அவர்களுக்காக சேவை செய்கிறாள். அமுதாவுக்கு நல்ல மனம்தான். சாதாரண நோயாளிகளிடமே அவ்வளவு அக்கறை காட்டுகிறவள் சொந்த பந்தங்களையே விட்டுவிட்டு தேசத்துக்காக உழைப்பவர்களுக்காக உருகுவதிலொன்றும் அதிசயமில்லையே!

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (8)

ஆநதி

First Published : 24 Jun 2012

t7.jpg

ரு வாரமாக அமுதா வீட்டில் இல்லாதது வீடே வெறிச்சோடித்தெரிந்தது. அவள் வந்த பின்பும் எந்தக் கலகலப்புமில்லாமல் இருந்தது. மனசுக்கு சங்கடமாகவும் இருந்தது. போன இடத்தில் நடந்தவைபற்றி வெளியில் சொல்லாமல் மனசுக்குள் மருகிக்கொண்டு தவிக்கிறாள் என்பது புரிந்தும் சுமதியால் எதையும் கேட்க முடியவில்லை. தன்னிடம் அதுபற்றி அமுதா எதுவும் சொல்லப் போவதில்லை என்பதுதான் சுமதிக்குத் தெரியுமே. அதனால் சுமதியும் அதிகம் பேசாமல் அமுதாவை புரிந்து நடந்து கொண்டாள்.

அமுதா தன் தாயாரிடம் தன் பயணம்பற்றி சாடைமாடையாக கதைக்கிறாள் என்பதைச் சுமதியால் புரிந்துகொள்ள முடிந்தபோது மனசு வலித்தது. அப்போதுதான் சுமதி அந்த வீட்டில் தான் விலக்கி வைக்கப்பட்டிருப்பதைப்போன்ற உணர்வைப் பெற்றாள். மனம் ஒன்றுமேயில்லாமல் வெறுமையில் கிடப்பது போலவும் தானொரு அநாதை போலவும் உணர்ந்தாள்.

அழுகை வந்தது. அவளுக்கு உடனே வாமனைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அவனிடம் கதைக்க வேண்டும் போன்ற தவிப்பு வேகமாய் வளர்ந்தது. அதைப்பற்றி அமுதாவிடம் கதைக்கவும் கூடத் தயக்கமாகத்தான் இருந்தது.

அமுதா சில நாட்களிலேயே பழைய கலகலப்பைப் பெற்று விட்டபோதும் சுமதி தனக்குள்ளேயே முடங்கித்தான் கிடந்தாள். அதையுணர்ந்து அமுதாதான் வலியக்கேட்டாள்.

"என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறாய்? கொஞ்ச நாளாய் முகம் சரியில்லாமல் கிடக்கு?''

"அது ரகசியம்'' என்று சுமதி பகிடிக்குத்தான் சொன்னாலும் அவளது முகம் இறுகித்தான் கிடந்தது.

"எனக்கே தெரியாத ரகசியமோ?'' என்று துருவினாள் அமுதா.

"ம்.... எனக்குத் தெரியக் கூடாத ரகசியம் உனக்கு இருக்கலாம் எண்டால் உனக்குத் தெரியக் கூடாதது எனக்கு இருக்கக்கூடாதா?'' - என்று நியாயம்கேட்ட சுமதியைப்பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள் அமுதா.

"நான் சும்மா பகிடிக்குத்தானப்பா சொன்னனான். சீரியஸாய் எடுத்துப்போடாத. ஆனாலொண்டு, நான் முந்திமாதிரியான ஆளில்ல. நிறையவே மாறிப்போயிட்டன் எண்றது எனக்கே தெரியிது''

"................''

"அமுது உனக்கு என்னை விளங்கிக்கொள்ள முடியேல்லையா?'' என்று சுமதி தயக்கத்தோடு சொன்னபோது அமுதாவுக்கு அவள்மீது இரக்கமாய் இருந்தது. உடனே சுமதியின் கையைப்பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்.

"எனக்குத் தெரியும் சுமதி. இப்ப நீ யாழ்ப்பாணத்தில இருந்த சுமதியில்லை. நீ மாறுவாய் என்ற நம்பிக்கை ஆரம்பத்தில எனக்கு இருக்கேல்லத்தான். ஆனால் போராளிகளின்ர வரவு, அறிமுகம் உன்னை மாத்தும் என்றது எனக்குத்தெரியும். இப்பச்சொல்லு உனக்கு இயக்கத்தை பிடிக்கேல்லையா? ம்''

"சொல்லத் தெரியேல்ல அமுது''

"ஆனா பிடிச்சுமிருக்கு. அப்பிடித்தானே''

"ரெண்டும் சொல்லலாம். பிடிக்கிது சிலநேரங்களில. பிடிக்கேல்ல எப்பவுமே''

"போராட்டத்தின்ர நோக்கத்தையும் வரலாறையும் புரிஞ்சுகொண்டால், தெரிஞ்சுகொண்டால் உன்ர மயக்கமும் தெளிஞ்சிரும்''

"நான் ஒண்டும் மயக்கத்தில இல்ல அமுது. என்னை ஒண்டுமே தெரியாதவள் எண்டு நினைக்காதை''

"அடியோட பிடிக்காமலிருந்த இயக்கத்தை இப்ப கொஞ்சமெண்டாலும் பிடிச்சிருக்கே. எப்பிடி சிலத புரிஞ்சுகொண்டாய். அதாலதான் சுமதி அப்பிடிச்சொன்னன். மத்தப்படி எப்பவும் நீ விழிப்பாய்த்தான் இருக்கிறாய், இயக்கத்தை பிடிச்சிருக்கு எண்டுமட்டும் சொல்லிரக்கூடாது எண்டு'' என்ற அமுதா மெதுவாகச் சிரித்தாள்.

உண்மையில் போராட்டத்தை பிடித்திருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத மயக்கம் இப்போது சுமதிக்கு. பிடிப்புக்கும் பிடிப்பின்மைக்கும் இடையில் தான் நிற்பதை முதன்முதலாக உணர்ந்தாள் சுமதி. அப்போது அவளுக்குள் பலத்த கேள்வி ஒன்று எழுந்தது, தான் தோற்றுவிட்டேனோ என்று. எனினும் மெல்ல மெல்ல அந்த உணர்வுகளும் மறையத்தொடங்கின.

எப்போதாவது வாமனின் கடிதங்கள் வந்தன, வாமன்தான் வரவேயில்லை. அவனை பார்க்கவேண்டும் என்ற உணர்வு தவிப்பாய் மாறி சுமதியைப்போட்டு அலைக்கழித்தது. பொறுமையிழந்து அமுதாவிடம் வாய்திறந்தாள்.

"ஏனமுது வாமன் வாறதில்ல வேலை கூடவோ?''

"அடடே, எங்கட சுமதி இப்பவும் வாமனுக்காகத்தான் காத்துக் கொண்டு இருக்கிறா என்ன?'' என்று அமுதா கிண்டலில் இறங்க சுமதிக்கும் சிரிப்பு வந்தது. இருவரும் வாமனைப்பற்றி நீண்டநேரம் மனம்விட்டு கதைத்ததும் அறுவை கதைகளால் காலைவாரிச் சிரித்ததும் மனதை கொஞ்சம் இலேசாக்கிவிட்டதுதான்.

"தவிர்க்கேலாது சுமதி. நீ வாமனோட சேத்து இயக்கத்தையும் கட்டிக்கொள்ளத்தான் வேணும்'' என்று கண்சிமிட்டிய அமுதாவை முறைத்துக்கொண்டு கிள்ளினால் சுமதி.

"அது கஸ்ரம் அமுது. ஏன் விலத்தவே மாட்டாரா நான் இப்பவும் சொல்ரன், ஆள் விலத்தி வந்தப்பிறகுதான் கல்யாணம். அதுவரைக்கும் இப்பிடியேதான் இருப்பன்''

"ஏய், என்னப்பா நீ?'' என்று அதிர்ந்தாள் அமுதா.

"ஏன் அப்பிடிப் பாக்கிறாய் அமுது? நானிப்ப தட்டத்தனி மனுசியாகிட்டன். நீ இங்க இருக்கிறபடியால உன்னோட இருக்கிறன். வாழ்நாள் முழுக்க உன்னோடையே இருக்க முடியுமா? எனக்கு இனி எல்லாமே வாமன்தானே. வாமன் போராளி எண்டால் சண்டைக்கெல்லாம் போகவேணும். போராளி இல்லாட்டில் போகத்தேவையில்ல''

"போராளியாய் இருந்தால் செத்திருவார். இல்லாட்டில் சாகமாட்டார். அதத்தானே சொல்ல வாறாய்?''

"ம்''

"சண்டைக்குப் போற எல்லாருமே சாகிறதில்ல சுமதி. பத்து இருபது ஆண்டுகளாய் சண்டைக்களத்தில தொடர்ந்து நிக்கிறவங்களும்கூட திருமணம் செய்துதான் இருக்கிறாங்க. போராளியே இல்லாத சாதாரண சனங்கள்கூட அநியாயமாய் செத்திருக்கிறாங்க. என்னால இதுக்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களச் சொல்ல முடியும்'' என்று படபடத்தாள் அமுதா.

"என்னமோ அமுது. எனக்கொண்டும் நம்பிக்கையில்ல. என்னில அக்கறை காட்ரதே ரெண்டாம் பட்சம்தான் என்றவரை நம்பி நான் என்னெண்டு கழுத்தை நீட்டுறது சொல்லு. நாளைக்கு பிள்ளை குட்டியோட என்னை தத்தளிக்க விட்டிட்டு போயிட்டாரெண்டால் எனக்கு யார் இருக்கினம் சொல்லு''

சுமதி சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் வாமன் இதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டான் என்பது அமுதாவுக்கு மிக நன்றாகவே தெரியும்.

"அப்பிடியெண்டால் நீங்க ரெண்டுபேரும் இப்பிடியே இருக்கவேண்டியதுதான் ''என்றாள் அமுதா யோசனையோடு.

"முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு அமுது''

"யார்ர முயற்சி சுமதி உன்ரயா வாமன்ரயா?''என்று அமுதா கேட்டதும் சுமதி மெளனியானாள்.

"என்னவோப்பா உன்னைய நினைச்சால் எனக்கு கவலையாத்தான் இருக்கு. உன்ர இடத்தில நானிருந்தால் இந்நேரம் கல்யாணம் கட்டியிருப்பன் சுமதி. அவனுக்கு ஆறுதலாயும் இருந்திருப்பன்''

சட்டென்று கேள்விகளை தொடுக்கத்தொடங்கினாள் சுமதி.

"அதுசரி அமுது நீயேன் இன்னும் கல்யாணமே செய்யேல்லை? இதுக்கும் ரகசியமா?'' என்று சிரித்தபடி அமுதாவை நோக்கிய சுமதி நிலைதளும்பிப் போனாள். ஏனென்றால் அமுதாவின் கண்கள் குளமாகிவிட்டிருந்தன.

"ஏய் உன்னை வேதனைப்படுத்த நினைச்சு நான் இதக்கேக்கேல்லையப்பா'' என்றபடி அவள் அமுதாவின் தலையைத் தடவினாள். அமுதாவோ விம்மியழத் தொடங்கிவிட்டாள்.

அமுதாவுக்கும் ஒரு காதல்வாழ்வு இருந்ததுதான். நான்காண்டு காலக் காதல், கல்யாணநாள் குறிக்கும்வரை கனிந்ததுதான். ஆனால் அவனது வரவு சாத்தியமற்றுப்போனது. கடல்கடந்து வரும் வழியில் அவன் காற்றோடு கரைந்த செய்தி மீண்டும் மீண்டும் எழுந்து வந்து அவளில் பேரலையாய் மோதியது. இதயமே வெடித்துவிடக்கூடாதா என்றளவு வேதனை அவளை ஆட்கொண்டு விம்மித் துடிக்கச் செய்தது.

வெளிநாடொன்றுக்கு வேலையாகச் சென்று வெற்றிகரமாக வேலையையும் முடித்துக் கொண்டு திரும்பிவரும்பொழுதுதான் சிறிலங்காவின் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டான். தன்னையும் தன் கடமையின் இரகசியத்தையும் சேர்த்து கப்பலோடு அழித்துக் கொண்டான்.

அவனுக்காக எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். அவனுடைய தியாகத்தின் செய்தி மட்டுமே வந்து அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றிவிட்டது. அவர்களைப்போலவேதான் இவளும் பொய்யாகக் கூடாதா? அந்தச்செய்தி என்று ஏங்கித்தவித்தாள். தனக்காக இல்லாவிட்டாலும் நாட்டுக்காக அவன் வந்திருக்க வேண்டுமே. வரவில்லையே. எந்த ஊடகங்களுமே அவனைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. எந்தத் துயிலறையுமே அவனுக்கான பெயரை தாங்கவில்லை. அலையெறியும் ஓசையே அவனது பேச்சு. அமுதாவுக்குள்ளும் அலையெறியும் ஓசை அவனது பாசையாகி திடமூட்டியது.

"உனக்கு நான் சொல்லத்தான் வேணும் சுமதி. ஆனால் இப்ப இல்ல..'' என்று பெருமூச்சொன்றுடன் அமைதியாகிவிட்டாள் அமுதா.

அதிக நாட்களுக்கு சுமதியை யோசித்தபடி காத்திருக்க வைக்காமல் அடுத்தநாள் இரவே படுக்கையில் விழுந்தபோது மெல்ல சொல்லத்தொடங்கினாள் அமுதா. அழாமல் அமுதாவால் பேசவே முடியவில்லை. விம்மலும் வேதனையுமாக அமுதா சொன்ன கதையைக்கேட்க சுமதிக்கு ஓவென்று கதறவேண்டும்போல இருந்தது.

"நீ இவ்வளவு ஆழமான காயத்தோட இருக்கிறாய் எண்டு நான் நினைக்கவேயில்ல அமுது. உன்னை அழவைச்சிப்போட்டன். என்னை மன்னிச்சுக்கொள் அமுது'' என்றாள் சுமதியும் விம்மலுடன்.

"உள்ளுக்குள்ளயே அழுறதை நேற்றும் இண்டைக்கும் வெளிய அழுதிருக்கிறன். அவ்வளவுதான் சுமதி. நீ வேதனைப்படாத'' என்று அவளை தட்டிக்கொடுத்தாள் அமுதா.

"நானொண்டு சொன்னால் குறை நினைக்க மாட்டியே?''

"இப்பிடியொரு நிலைமை எனக்கும் வரக்கூடாது என்றதுக்காகத்தான் அமுது நான் வாமனை விலத்தி வரச்சொல்லிக் கேக்கிறன்''

"ஏய் மடத்தனமாப் பேசாதையப்பா. நீ இன்னுமே போராளிகளை புரிஞ்சு கொள்ளேல்ல.''

"ஏனமுது போராளிகளாய் இருந்தாக்கள் விலத்தவே இல்லையா? விலத்திப்போய் கலியாணம் செய்யவே இல்லையா? வெளிநாடுகளுக்குந்தான் போகவே இல்லையா?''என்று விளக்கம் கேட்டாள் சுமதி.

"அப்பிடியெல்லாம் நடந்துதானப்பா இருக்குது. இப்பவும் நடக்கிதுதான். நான் இல்லையெண்டு சொல்லேல்ல. ஆனா மற்றவைக்காகவே தங்கள வருத்தி எல்லாச் சனத்துக்காகவும் விடுதலையப் பெற்றுத்தர தங்களை அர்ப்பணிக்கிற போராளிகளும் இருக்கிறாங்க. தங்கன்ர அப்பா, அம்மா, உறவுகள், வசதி, வாய்ப்பு, கல்வி, அந்தஸ்து எண்டு அத்தனையையும் தூக்கி எறிஞ்சுபோட்டு அல்லது ஒதுக்கி வைச்சுப்போட்டு தங்களையே விலையாய் குடுக்கிற உன்னதமான போராளிகள் இருக்கிறாங்க. இடையில விலகிப்போறாக்களையும் அந்த உன்னதமானவங்களையும் ஒப்பிட்டுப்பாக்க ஏலுமா சுமதி? உனக்கு வாமன்ர பெறுமதி புரியேல்ல. அந்த உயர்ந்த உள்ளத்தை நீ சரியாய் புரிஞ்சுகொள்ள முயற்சிக்கவே இல்ல''

"வாமனை புரிஞ்சு கொள்ளேல்லை எண்டில்லை அமுது. நான் என்ன சொல்ல வாறனெண்டால்''... என்று தொடரப் போனவளை நிறுத்திய அமுதா தானே பேசினாள்.

"நீ என்ன நினைக்கிறாய் எண்டு எனக்கு நல்லாய் விளங்குது சுமதி. நான் என்ன தெரியுமா நினைக்கிறன், என்னை நேசிச்சவரோட, அந்த இலட்சியப் போராளியோட, ஒரு நாள், ஒரேயொரு நாளாவது வாழ்க்கையப் பகிரயில்லையே எண்டுதான் ஏங்கிறன். ஒரே ஒருநாள் வாழ்ந்திருந்தாலும் அவருக்கு நான் நிறைவாய் இருந்த நான் என்ற நிம்மதியாவது எனக்குக் கிடைச்சிருக்கும். அவர்ர மனைவி என்ற பெயரோட, சாகும்வரைக்கும் அவரையே நினைச்சுக் கொண்டு வாழ்ந்திருப்பன்.''

அமுதாவின் வார்த்தைகள் சுமதிக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஒரே ஒருநாள் வாழ்ந்த நிறைவோடு வாழ்நாளெல்லாம் விதவையாக இருக்கப்போகிறேன் என்கிறாளா? அதிலென்ன இன்பம் கிடைக்கப்போகிறதாம்? இவளுக்கு என்று சுமதி தனக்குள்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

"அதிலயும் ஒரு சுகம் இருக்குது சுமதி. பெண்ணொருத்தியை நேசிக்கிறவன், அவவோட தான் வாழ்ந்தநான் என்ற திருப்தியோட சாகணும். காதலிக்கிற எல்லாருமே சேந்து வாழணும். அப்பிடி வாழாமல் செத்தாங்கள் என்றதை என்னால ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியிறதில்ல. நான் என்ர மனநிலையத்தான் சொல்ரன் சுமதி. போராளிகள் தங்கன்ர வாழ்க்கைய முற்றுமுழுதா மற்றாக்களுக்காக தியாகம் செய்யேக்க, அவைக்காக மற்றாக்கள் மட்டுமேன் சின்ன தியாகத்தைக் கூடச் செய்யக்கூடாது? ஒரு போராளிய அவனுக்குரிய இயல்புகளோட ஏற்று உந்து சக்தியாய் காதலியொருத்தி கிடைப்பாள் எண்டால் அது பெரிய விசயம் சுமதி. ப்ளீஸ் சுமதி. நீ வாமனைப் புரிஞ்சு கொள். சாவைப்பற்றி நீ யோசிக்காத. வாழ்வைப்பற்றி யோசி'' என்றபடி சுமதியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் அமுதா. சுமதியும் தன் தோழியின் கையை இறுக்கிக்கொண்டாள்.

ஏனோ சுமதிக்கு வாமன்மீது பேரன்பைப் பொழியவேண்டும் போன்றிருந்தது. அவனை உடனே பார்க்கவேண்டும் என்று தவிப்பாக எழுந்த உணர்வை சொல்லத் தெரியாமல் கண்களை மூடிக்கொண்டாள். மூடிய இமைகளிடையே கண்ணீர் கசிந்தோடியது.

யுத்தத்தை ஓய்வுநிலையில் வைத்திருந்த சமாதானப் பூட்டுக்கள் தெறித்துவிழுந்தபோது அமுதாவுக்கும் சுமதிக்கும்கூட ஓய்வே இருக்கவில்லை. அப்போதுதான் சுமதி ஒரு பேருண்மையைப் புரிந்துகொண்டாள், வன்னி முழுவதுமே போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள்தான் இயங்குகிறது என்று. வன்னியில் இயங்கிய அரசின் சகல நிர்வாக அலகுகளையும் அங்கே மிகநேர்த்தியாக இயக்கிக்கொண்டிருந்தது இயக்கமே என்பதை அறிந்தபோது அவளுக்கு பெருமையாகக்கூட இருந்தது.

மருத்துவமனையைக் காயப்பட்ட போராளிகள் நிறைத்தபோது போராளி மருத்துவர்களும் அதிகம் வந்துபோனார்கள். பொது மருத்துவமனைகளைவிடவும் பாரிய மருத்துவமனைக்குரிய செயற்பாடுகளை இயக்கத்தின் மருத்துவப்பிரிவே செய்துவருவதுபற்றி அப்போது அறிந்தாள்.

படையினருக்கும் விடுதலைப் போராளிகளுக்குமான யுத்தம் கண்மண் தெரியாத கடும் போர்ச்சூழலை உருவாக்கிவிட்டது. விளைவு அளவு கணக்கற்று மக்களும் வகைதொகையாக பாதிக்கப்பட்டனர்.

திடுதிப்பென போர் விமானங்கள் வீசும் குண்டுகளில் உடல்கள் கிழிந்தபடி வந்து குவிந்த மக்களைக்கண்டு அருண்டுவிட்டாள் சுமதி. அதிர்ச்சியில் மூர்ச்சையுற்று வீழ்ந்த அவளையும் தூக்கி இன்னொரு கட்டிலில்போட்டு அவளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டியதாய் ஆயிற்று.

மயங்கிவிழுந்த சுமதி தெளிவுற்று எழுந்தபோது, மருத்துவமனையே கதறலாலும் கண்ணீராலும் குருதியாலும் நெரிசலாயுமிருந்தது. நடைபாதையெங்கும் ரத்தம் சிதறிக் கொட்டிக் கிடந்தது. குஞ்சுகளும் குழந்தைகளும் சிறுவர்களுமடங்கிய, உடல்கள் கிழிந்த மனிதர்கள் கதறித் துடித்தார்கள். வழமையாக மருத்துவமனையில் நிற்கும் பணியாளர்களைவிட பலபேர் கழுத்துகளில் பரிசோதனை கருவிகளை மாட்டிக்கொண்டு சிகிச்சையளிப்பதில் மும்மரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். காயமடைந்தவர்களைத் தவிர அவர்களை தூக்கிக்கொண்டு வந்தவர்களும் பார்க்க வந்தவர்களுமாய் நிறையும் சனங்களை இயக்கத்தின் காவல்துறையினரே வந்துநின்று வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (9)

ஆநதி

First Published : 30 Jun 2012

30kd7.jpg

சுமதி கட்டிலில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கி நின்றாள். தான் என்னசெய்யவேண்டும் என்பதே அவளுக்கு புரியவில்லை. அடுத்த கட்டிலோரத்தில் தாதியொருத்தி நின்றிருந்தாள். அவள் காயமடைந்து முகமே அடையாளம் தெரியாமல் கிடந்த சிறுமியொருத்திக்கு நாளத்தில் ஊசியேற்றுவதற்கு முயன்றுகொண்டிருந்தாள். அந்தத் தாதியினுடைய உடைகளெல்லாம் இரத்தத்துளிகள். தாதியின் கைகளோ தடுமாறிக் கொண்டிருந்தன. அவளால் ஊசியைச் சரியாக நாளத்திற்குள் செலுத்த முடியவில்லை. அதைத் தன்னால் செய்யமுடியும் என்று சுமதியும் நம்பவில்லை. இவளின் கைகளிலும் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தாள். வெளியே ஆம்புலன்ஸ்கள் அலறிக்கொண்டிருந்தன. அவ்வளவு மோசமான அளவு காயப்பட்டவர்களை சுமதி அதற்கு முன்பு பார்த்ததேயில்லை.

"இங்க விடுங்கோ மிஸ்'' என்று அந்தத் தாதியின் கையிலிருந்த ஊசியை வாங்கிய அடுத்தகணமே பட்டென நாளத்தில் இறக்கினாள் ஒரு போராளிப் பிள்ளை.

"சரி மிஸ். பிளட் பேக்கை கொழுவுங்கோ. ஆ... இதை இப்பிடி செய்யணும்'' என்று வேகமாகவும் நிதானமாகவும் செயற்பட்ட போராளியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு நின்ற சுமதியை அமுதா வந்து இழுத்துச் சென்றாள்.

"நீ தியேட்டர்ல நில்லு சுமதி. டொக்டர்ஸ் கேக்கிற இன்ஸ்ருமன்கள கடகடண்டு எடுத்துக்குடு'' என்று சத்திரச் (அறுவை) சிகிச்சைக் கூடத்துக்குள் தள்ளினாள். செய்வதறியாது விழித்துக் கொண்டு நின்ற அவளை மருத்துவர்களே இயக்கத் தொடங்கினார்கள். சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள் செயற்பட்ட அநேக இளையவர்களும் போராளிகளே. வைத்திய அதிகாரியிடமும் கதைத்துக் கதைத்து அவரிடமும் ஆலோசனைகளை கேட்டும் சொல்லியும் கடும் வேகத்தில் செயற்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக சுமதியும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்யத் தொடங்கினாள். தம் கை கால்களில் சக்கரங்களைப் பூட்டிக்கொண்டவர்களைப்போல அவர்கள் இயங்கிய வேகத்திற்கு ஈடுகொடுத்து அவளும் பம்பரமாய்ச் சுழன்றாள். கத்தரிக்கோல், பாண்டேஜ், பஞ்சு, காயந்தைக்கும் நூல் கோர்த்த ஊசி, பொசெப்ஸ், பிளேற் என்று அவர்கள் பெயர் சொல்லும் பொருட்களை எடுத்துக் கொடுப்பதைக்கூட நிதானமாகச் செய்யமுடியவில்லை.

"மிஸ் சிசரத் தாங்க'' என்றபடி நீண்ட கைக்கு அவள் ஊசியைக் கொடுத்தாள்.

"ஊசியத் தாங்க'' என்றால் அவள் பஞ்சை நீட்டினாள். அதற்காக வைத்தியர்களிடம் ஏச்சும் வாங்கினாள். சிதறிக் கிடக்கும் காயங்களைப் பார்க்காமல், வாய் மூக்கை மறைத்துக் கட்டிய துணிக்கு மேலாய் கேட்கும் குரல்களை கிரகித்தும் அவர்களின் கண்களைப் பார்த்துமே உதவினாள். கசாப்புக் கடையாகக் காட்சி தந்த அந்த சத்திரச் சிகிச்சைக் கூடத்தை தான் முழுதுமாகப் பார்க்கக் கூடாது என்று நினைத்தபடியே தன்னைத் திடப்படுத்திக் கொண்டு நின்றாள்.

"டஸ்பின் நிறைஞ்சிட்டு.. உடன மாத்துங்க'' என்ற குரல் வந்த திசையை நோக்கின சுமதியின் கண்கள். சொன்னவர் தன் கையிலிருந்ததை கூடையில் எறிந்துவிட்டுத் திரும்பினார். 'ஆ' அது கட்டிலில் கிடக்கும் குழந்தையின் அறுந்த கை. குழந்தையொன்றின் கையை அகற்றி குழந்தையைக் காப்பாற்றிவிட்டார்கள்தான். ஆனால் பிஞ்சுக் கையொன்று தனியே குப்பைக்கூடையில் கிடந்தது, அவளை என்னவோ செய்தது. சிகிச்சை செய்துகொண்டிருந்த பெண்போராளி ஒருவரின் தோளில் மயங்கிச் சரிந்தாள் சுமதி.

"ஓ இந்த கேசையும் கவனியுங்கப்பா. ஆள் மயங்கிட்டா'' என்று யாரோ சொல்வது சுமதிக்கும் கேட்டது. அவள் வெளியே தூக்கிச் செல்லப்பட்டாள்.

அடுத்த ஒரு வாரத்திற்கும் சுமதியால் அமைதியாக இருக்க முடியவில்லை. அமுதாவோ மருத்துவ மனையிலேயே நின்றுவிட்டாள். அவள் எப்போதுமே இப்படித்தானாம். சத்திரசிகிச்சைக்கூட உதவியாளுக்கு பெயர்பெற்ற தாதி அமுதாதான். அவள் அருகில் நின்றால் எந்தச் சவாலான காயத்தையும் பொறுப்பெடுத்து செய்யமுடியும் என்றும் சமயத்தில் அவளே தைரியமூட்டுவாள் என்றும் வைத்திய அதிகாரியே சொல்லியிருக்கிறார்.

அமுதா ஒரு தாதியாக இருந்தாலும் வைத்தியருக்குரிய பல விடயங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவ்வளவு அனுபவங்களைப் பெற்றிருந்தாள். அவசரத்திற்கு தனியே நின்றுகூட அவளால் பலரைச் சமாளித்துக் கொள்ள முடியும்.

அடிக்கடி வீட்டுக்கு வந்துபோகும் சுமதியால் சரியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. உணவைக் கண்டாலே பிடிக்குதில்லை. பெரும்பாலும் தேநீரை மட்டுமே பருகினாள். பயங்கரத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அமுதாவின் அம்மாதான் அவளை அன்போடு உபசரித்துத் தேற்றினார்.

ஆறுதலாக இருந்து கதைத்த சந்தர்ப்பத்தில் சுமதி மயங்கி விழுந்த கதையைச் சொல்லி அமுதா சிரித்தாள். அதன் பிறகு அம்மா இருவருக்குமாக காலையில் முட்டைக் கோப்பி ஆற்றிக்கொடுத்து வேலைக்கனுப்பினார்.

வாமன் வடபோர் முனையில் களமுனைப் பொறுப்பாளர்களில் ஒருவனாக நிற்கிறானாம் என்ற தகவலை அறிந்தபோது சுமதி துடிதுடித்துப்போனாள். சந்தித்து எத்தனையோ மாதங்களாகிவிட்டன. அவன் இவளைப்பற்றிய எண்ணமேயின்றி களமுனையில் நிற்கிறானாமா? அமுதாவிடம் கேட்டு எப்படியாவது அவனை, ஒரேயொரு முறையாவது சந்திக்க வேண்டும். சந்தித்து அவனிடம், "நான் பழைய சுமதியில்லை வாமன்'' என்று சொல்ல வேண்டும். "நீங்கள் இயக்கத்தைவிட்டு விலகி வரத் தேவையில்லை. இனிமேல் எப்போதுமே அப்படி நான் கேட்கமாட்டேன். ஆனால் எனக்காக உங்கள் உயிரில் அக்கறையாக இருங்கள்'' என்று அவனிடம் சொல்லவேண்டும் என்றெல்லாம் சுமதி நினைத்துக் கொண்டிருந்தாள்.

அமுதா எப்போதாவது இருந்துவிட்டு தன்னவனைப்பற்றிக் கதைப்பாள். இது என் பிறந்தநாளுக்கு அவர் தந்தது. இதுதான் அவர் முதல் முதலாய் எனக்குத் தந்த மணிக்கூடு. இதுதான் அவர் முதலும் கடைசியுமா எனக்குத் தந்த புத்தகம் என்று சில நினைவுப் பொருட்களைக் காட்டியிருக்கிறாள். சுமதியிடம் அப்படிச் சொல்லிக் கொள்ளத்தக்க பொருட்கள் எதுவுமே இருக்கவில்லை. வாமனிடமிருந்து பறித்தாவது ஒரு நினைவுப்பொருளை வைத்துக்கொள்ளவேண்டும் என்றது சுமதியின் உள் மனது.

நீண்ட நாட்களின் பின் வாமனிடமிருந்து சுமதிக்குக் கடிதமொன்று வந்தது.

"சுமி, இப்போதும் என்னிடம் கோபம்தானா? ஏனோ சுமி, உன்னை நினைக்கும்போது கவலைதான் வருகிறது. உன் மீதான காதல்மட்டுமே பெருகவேண்டிய இதயத்தில் கவலைகளை நிரப்பிக்கொள்ள விருப்பமே இல்லை. சுமதி உன்னிடம் நேரில் வந்துதான் நிறையக் கதைக்கவேண்டும். வரும்போது என்னுடன் ஏட்டிக்குப் போட்டியாக கதைக்காமல் இருப்பாயென்றால் கொஞ்சமேனும் மனம்விட்டுக் கதைக்கலாம்.

நான் போராளி என்று உனக்குச் சொல்லாமல் விடவோ, வேண்டுமென்று உன்னை ஏமாற்றவோ இல்லையம்மா. என் கடமை அப்போது என்னை இனங்காட்டிக்கொள்ள விடாமல் தடுத்துவிட்டது. பழகிய பின்புதான் உன்னுடைய விருப்பு வெறுப்புகள், போராட்டம் மீதான உனது தப்பபிப்பிராயம் எல்லாம் புரிந்தது. எனக்குள்ளும்கூட அப்போது குழப்பமாகத்தான் இருந்தது சுமி. எத்தனையோ பெண்கள் இருக்கையில் என் இலட்சியத்தையே வெறுக்கின்ற ஒரு பெண்ணிடமா இதயத்தை இழந்தேன் என்று என்னையே நான் நொந்துகொண்டதுண்டு. ஆனாலும் உன்னை நான் ஏமாற்றிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.

நீ என்னை நம்பியே வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்தவள். அதனால் நான் உனக்கு ஒருபோதும் துரோகம்செய்ய முடியாது. அதற்காக இயக்கத்தை விட்டுவிடவும் என்னால் முடியாது சுமி. தயவுசெய்து என்னை புரிந்துகொள் சுமி.''

கடிதம் கடிதமாய் எழுதிய சுமதி யாரிடமும் சொல்லக்கூட இல்லாமல் குறிப்பேட்டை தன் அடிப்பையில் போட்டுவைத்தாள். விரும்பியபோதெல்லாம் அதை எடுத்து வாமன் மீதான தன் உண்மைக் காதலை எண்ணியபடி வாசித்து மகிழ்ந்தாள். வாமன் வருவான் என்ற எதிர்பார்ப்பு மட்டும் ஏமாற்றமாகவே இருந்தது.

களமுனை வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் வாமனால் நினைத்தவுடன் வரமுடியாது என்று அமுதா விளக்கம் சொன்னாள். ஆனாலும் நேரம் கிடைத்தால் நிச்சயம் வருவான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த ஆறுதல் வார்த்தைகளால் சுமதியை ஆற்றுப்படுத்த முடியவில்லை. காரணம் வடபோர்முனையான கிளாலி, முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் அடிக்கடி சண்டை நடந்துகொண்டிருந்தது.

நடக்கும் சண்டைகள் ஒவ்வொன்றும் சுமதியின் இதயத்தில் சுடச்சுட நெருப்பைத்தான் அள்ளிக்கொட்டும். தடதடக்கும் வெடியோசைகளில் அவளது இதயம் அதிரும். ஓவ்வொரு சண்டையும் நடந்து முடிந்தபின் ஊருக்குள் வீரச்சாவு நிகழ்வுகள் நடக்கும். கிளிநொச்சி விளையாட்டு மைதானம் எதிரிப்படையினரின் உடலங்களாலும் கைப்பற்றப்பட்ட ஆயுதத் தளபாடங்களாலும் அவற்றை பார்வையிடவரும் மக்களாலும் நிரம்பி வழியும். வானொலி, தொலைக்காட்சிகள் எல்லாம், அந்தச் சண்டைகள் பற்றியே பேசும். அப்போதெல்லாம் சுமதியை அச்சம் ஆக்கிரமிக்கும். இத்தனைக்குள்ளும் நின்று வாமன் உயிர் தப்ப வேண்டுமே என்று உள்ளம் பதறும். அவளது மனம் எப்போதும் வாமனுக்காகவே மன்றாடிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தபோது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

சண்டைக்களம் ஓய்வுக்கு வந்த சில மணித்தியாலங்களில் காயப்பட்ட தன் போராளிகளைப் பார்ப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவானாம் வாமன். அவனுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த போராளிகளுடன் பேசுவானாம். அந்தத் தகவலை அறிந்தபின் சுமதிக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவன் புலனாய்வுத்துறை படையணியில் ஒரு பொறுப்பதிகாரி என்பதையெல்லாம் அன்றைய நாட்களில்தான் சுமதி அறிந்துகொண்டாள். அதனால் அவனுக்கெல்லாம் களமுனையைவிட்டு வெளியே வர பொழுதே கிடைப்பதில்லை. தன்னுடன் நின்ற போராளிகள் காயமடைந்து கிடக்கும்போது, அவர்களுக்கு மனத்தெம்பை ஊட்டுவதற்காக அவன் செல்வான்தானே. அதற்காக வாமன் அடிக்கடி கிளிநொச்சிக்கு வருவான். தானோ அவன் வரவேண்டிய தேவையே இல்லாத புதுக்குடியிருப்பு மூலைக்குள் முடங்கிப்போய் கிடக்கிறாள்.

கண்டவாறு யோசித்து மண்டையை குழப்பியடித்து ஒருவாறு வழியொன்றையும் கண்டுபிடித்துவிட்டாள் சுமதி. அதை அமுதாவிடம் சென்று எடுத்துரைத்தாள்.

"அமுது, நான் கிளிநொச்சிக்கு வேலைய மாத்திக்கொண்டு போகட்டுமா அமுது?''

"என்னப்பா திடீரெண்டு என்ன நடந்தது உனக்கு இங்க ஏதும் பிரச்சினையா சொல்லுப்பா'' என்று புரியாமல் புலம்பினாள் அமுதா.

"ஒரு சிக்கலும் இல்ல அமுது. நான்தான் அங்க போனா என்ன எண்டு..''

"ஏனப்பா ஓவியர் வீட்டுக்கு போகப் போறியா?''

"ஏய் பகிடி விடாதையப்பா. நான் சீரியஸாய்தான் கேக்கிறன்.''

"அதான் என்ன காரணம்? எங்கட வீட்டில இருக்கப் பிடிக்கேல்லையா?''

"ஐயையோ அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல அமுது. இந்த வீட்டவிட்டா எனக்குத்தான் வேற எந்த வீடுமே இல்லையே''

"அப்ப அது'' என்று தொடங்கியவள் மெதுவாய் நாணினாள்.

"என்னப்பா வெக்கமெல்லாம் வருது வாமன்தான் அழைப்பு அனுப்பியிருக்கிறாரோ?''

"சே சே. அப்படியெல்லாம் ஒண்டுமில்ல'' என்றாள். அவளது அவசர மறுப்பை இரசித்தவளாய் சீண்டினாள் அமுதா.

"கிளிநொச்சியில வாமன் தான் ஏதும் வீடுகீடு கட்றாரோ?''

"இல்ல. நான் கிளிநொச்சியில நிண்டால் வாமனை அடிக்கடி காணலாம். கதைக்காட்டிலும் காணலாமே எண்டுதான்...''

"கடுமையா யோசிச்சுத்தான் முடிவெடுத்திருக்கிறாய்போல. அதுசரி வாமன கேக்காமலயே போகப் போறியா?''

"கண்டால்தானே அமுது கேக்கலாம்..''

"அ... அ... அப்ப காதல்தான்.''

"ஏன் உனக்கு இன்னும் சந்தேகமா?''

"ம்... ம்... அதுசரி. கிளிநொச்சியில எங்க தங்கப்போறாய்?''

"மருத்துவமனை விடுதியிலேயே தங்கேலாதா? நீ என்ன சொல்றாய் அமுது நீதான் எனக்கிந்த உதவியை செய்யணும்..''

"என்ன சுமதி, என்னையும் அம்மாவையும் விட்டிட்டு போகப்போறியா?'' என்று அப்பாவியாய் அமுதா கேட்க அது சுமதிக்கும் சங்கடமாய்த்தான் இருந்தது.

"உன்னையும் அம்மாவையும் மறக்கேலுமா அமுது, கிளிநொச்சிக்குத்தானே போகப்.போறன். லீவு கிடைக்கிற நேரம் உங்களிட்ட வந்துபோவன் சரியா?''

"உன்ர விருப்பத்துக்கு நான் கட்டாயம் உதவுறன். காதலச் சேத்துவைக்க உதவுறதுக்கு நான்தான் குடுத்துவைச்சிருக்க வேணும். எங்கள மறக்காமல் இருந்தியெண்டால் காணும்'' என்று குறும்பாகச் சிரித்த அமுதா, தானே இடமாற்ற ஒழுங்குகளை செய்து தருவதாகவும் சொன்னாள்.

எண்ணி ஏழே நாட்களில் சுமதி கிளிநொச்சி வைத்தியசாலையில் நின்றாள். அத்தகவல் அவள் வரமுன்னரேயே வடபோர்முனையில் நின்ற வாமனுக்குப் போய்விட்டது. அமுதாதான் சொல்லி விட்டிருந்தாள். வாமனுக்கும் அது மகிழ்ச்சியளித்தது. சுமதி அங்கே சத்திரசிகிச்சை கூடத்துக்குரிய தாதியாகப் பணிக்கமர்த்தப்பட்டாள்.

கிளிநொச்சியின் பிரமாண்டமே அறியாத சுமதி, மருத்துவமனையே தன் உலகமென்றெண்ணி உழைக்கத் தொடங்கினாள்.

திடீரென்று ஒருநாள் இரவு பத்துமணிக்குப் பின் அவளை யாரோ அழைக்கிறார்கள் என்ற தகவல் வந்தது. வாமனாக இருக்குமோ என்று உள்ளம் துள்ள ஓடிப்போனவளுக்கு வாமனே வந்துநின்றது ஆனந்தமாக இருந்தது.

"வணக்கம் மெடம். கதைக்கலாமோ?'' என்றான்.

"வாங்கோ'' என்று அழைத்துச்சென்று தன் விடுதியின் முன் விறாந்தையில் இருத்தினாள்.

"என்ன திடீரென்டு மாற்றம்.. புதுக்குடியிருப்பு வெறுத்துப்போட்டுதோ?''

"இல்ல. கிளிநொச்சி இழுத்திட்டுது'' என்றாள் அவள். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பே அத்தனைநாள் மனப்பாரத்தையும் வெளியே எறிந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியது.

"டீ குடிக்கிறிங்களா?'' என்றாள் அக்கறையோடு.

"பசிக்கிதே'' என்று வாமன் வயிற்றை தடவினான்.

"கொஞ்சம் பொறுங்கோ'' என்று ஓடோடிச் சென்றவள் மகி (maggi) நூடில்ஸ் தயாரித்து தட்டில்வைத்து எடுத்துவந்தாள்.

"அட என்ர ஆள் கடும் வேகந்தான்'' என்று அவன் கண்ணடித்தான். அவள் உதடுகளை நெளித்துக்கொண்டு அவனிடம் கொடுத்தாள். குளிரக் குளிர கொதித்தாறிய தண்ணீரையும் கொண்டுவந்து வைத்தாள். பின்பு அவன் உண்பதையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளுக்குத் திருப்தியாக இருந்தது. கைகழுவிய கையோடு அவசரமா போகணும் என்று வாமன் புறப்பட்டுவிட்டான். அவளும் புன்னகையோடு விடை கொடுத்தாள்.

மருத்துவமனைக்கு வந்துசெல்லும் நேரங்களில் அதிகம் கதைக்க முடியாவிட்டாலும் தன்னை ஒருதடவை எட்டிப் பார்க்காமல் போகமாட்டான் என்பது சுமதிக்குச் சந்தோசத்தையும் ஆறுதலையும் கொடுத்தது. ஆனால் அவனே காயத்தோடு வந்து விழுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அடிக்கடி காயங்களோடு வரும் மக்களுக்கும் போராளிகளுக்கும் நேரகாலமின்றி சிகிச்சையளிப்பது அவளுக்கும் பழகிப்போயிருந்தது. சாம ஏமத்திலும் எழுந்தோடுவதும் விடிய விடிய பணிசெய்வதும்கூட சாதாரண நிகழ்வாகிப்போனது. அன்றும் அப்படித்தான். நித்திரையில் கிடந்தவளை திடீரென்று அழைத்தார்கள்.

"சுமதி மிஸ் உடனே வாங்க'' என்ற குரல் அவளை வாசலுக்கு இழுத்தது. எழுந்தோடிச்சென்று விபரம் கேட்டாள்.

"டொக்டர்தானக்கா வரச்சொல்றார்'' என்றுவிட்டு போனான் ஒரு தம்பி. உடனேயே உடை மாற்றிக்கொண்டு ஓட்டமாய் ஓடி சத்திரசிகிச்சைக்கூடத்தை அடைந்தாள். ஸ்ரெச்சரில் கிடந்த வாமனைக் கண்டதும் விதிர்விதித்துப் போனாள்.

"மிஸ் லப் கேஸ். உடன ஒழுங்கு படுத்துங்க'' என்ற மருத்துவரின் வார்த்தைதான் அவளை உசுப்பியது. கடகடவென சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தாள். அருகில் நின்று, சிகிச்சைக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்தாள். முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீரைமட்டும் மருத்துவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டாள். அவசர சிகிச்சையை முடித்துக்கொண்ட மருத்துவர் அவனை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவசர அவசரமாய் சிகிச்சை இடத்தை துப்பரவு செய்துவிட்டு வாமனிடம் ஓடினாள். சுமதியிடம் இன்னும் பதற்றம் தெரிந்தது.

அவசர சிகிச்சைப்பிரிவுக்குள் சுமதி சென்றபோது வாமனுக்கு மயக்கம் தெளியத் தொடங்கி இருந்தது.

"அடி. அடி. பாத்துப்பாத்து சுடு மச்சான். இறங்கு இறங்கு, விடாதை மச்சான் சுடு... சுடு... சுடுடா தம்பி' என்று சத்தமிடத்தொடங்கிவிட்டான்.

போராளிகள் பொதுவாக இப்படித்தான். மயக்கம் தெளியும்போது பெரும்பாலும் போர்க்கள நினைவுகளையே பிதற்றுகிறார்கள். எதிரியுடன் சண்டையிட்டுக்கொண்டே அரைமயக்கத்தில் கிடக்கும் அவர்களைப் பார்த்து முன்பு அழுதுமிருக்கிறாள் சுமதி. பிறகு அது பழகிப்போன ஒன்றானது. இப்போது வாமனும் அப்படிக் குழற அவள் விம்மினாள். அவன் கத்திக் கத்தி களைத்துப்போகிறான் என்பதை உணர்ந்து நித்திரைக்கான ஊசிமருந்தை ஏற்றிவிட்டாள். தான் விடுதிக்குச்செல்வதா? அவனருகிலேயே நிற்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் திண்டாடினாள். அவனுடைய தலைக்கேசத்தை கோதிவிட்டாள். கண்ணிமைகளை நீவிவிட்டாள்.

குழந்தையைப்போல உறங்கும் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க அவளால் தாங்கவே முடியவில்லை. தனது விடுதிக்குச்சென்று கட்டிலில் விழுந்துகிடந்து அழுதாள். மனப்பாரம் சற்றுக்குறையும்வரை அழுதுவிட்டு, எழுந்து முகம் கழுவிக்கொண்டு மீண்டும் வாமனிடம் சென்றாள். அவனது உதடுகள் மெல்ல அசைந்தன. "சுமி... சுமி... சுமி...'' என்று அவன் அணுங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கன்னத்தில் தட்டினாள்.

"வாமன் கண்ணைத் திறந்து பாருங்க. சுமிதான் நான். இந்தப் பாருங்கோ. உங்களுக்கும் பக்கத்தில் இருக்கறன். உங்களுக்கு எந்தச் சிக்கலுமில்ல'' என்று அவன் காதோடு சொன்னாள்.

(தொடரும்)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகின்றது இது கதையாக இருக்காது உண்மையில் நட‌ந்த சம்பவமாக இருக்கும் ஒரு போராளியான ஆனதிக்கு இவ்வளவு எழுத்துத் திறமை உள்ளது ஆச்சரியப்பட‌ வைக்குது...தொட‌ர்ந்து இணையுங்கள் சோழியன்

  • தொடங்கியவர்

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. சிலசமயம் அவர் நேரில் சந்தித்த சம்பவங்களாகவும் இருக்கலாம். நன்றி.

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (10)

ஆநதி

First Published : 08 Jul 2012

7kd8.jpg

வாமன் மெதுவாய் கண்களைத்திறந்து பார்த்தபோது சுமதி அவனெதிரே நின்றாள். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. எதை நினைத்து வேதனைப்படுகிறானோ என்று அவள் தவித்தாள்.

காயத்தின் வேதனையால் அழுகிறவனாக இருக்கலாம்.

"சே சே. அழக்கூடாது. உங்களுக்கு இனி பிரச்சினையில்ல வாமன். கொஞ்ச நாளைக்குள் சுகம் வந்திடும். பயப்பிடவேண்டாம்'' என்று அவனது கன்னங்களின் ஓரங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டாள். கடும் பிரயத்தனப்பட்டு கேட்டான்,

"தண்ணி''

"தண்ணி குடிக்கக்கூடாது செல்லம்'' என்றவள் அடுத்த கணமே தண்ணீரில் பஞ்சை நனைத்து அவனது உதடுகளை துடைத்துவிட்டாள். அந்த ஈரப்படுத்தல் அவனுக்குத் தாகத்தை தீர்க்காது என்றாலும் அதிகரிக்கும் தாகத்தை குறைக்கும் அல்லவா? பின்பு ஈரத்துணியால் முகத்தையும் கழுத்தையும் துடைத்தாள். வாமன் அவளது கைகளை பிடித்துக் கொண்டான். மீண்டும் அவனது கண்களில் கண்ணீர்.

"நீங்க அழக்கூடாது வாமன். அழுதால் காயத்துக்குக் கூடாது. வயிறு நோகும். ம். நான் இருக்கிறன். அழாதிங்க'' என்ற சுமதியின் கண்களும் கலங்கிவிட்டன. சற்றுநேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

"சரி. நான் வேலைக்குப் போகணும். இடைக்கிட வருவன். ஏலாமல் இருந்தால் சொல்லிவிடுங்கோ'' என்றாள். அவனும் சரி என விழிகளையசைத்தான். நேர்த்தியாக போர்வையை இழுத்துவிட்டுத் தலையை தடவினாள்.

"யோசிக்காதிங்க வாம். நான் இருக்கிறன் என்ன?'' என்றுவிட்டுச் சென்றாள்.

குளித்துப் புறப்பட்டு சத்திர சிகிச்சைக்கூடத்திற்குள் நுழைந்தவள் கூடத்தை சுத்தப்படுத்தினாள். சிகிச்சைக்குரிய கருவிகளை நேர்த்தி பார்த்து அடுக்கிவைத்தாள்.

"மிஸ் உங்கள ஐ சி யு வோட்ல கூப்பிடுயினம்'' என்ற குரல் காதில் விழுந்ததுதான் தாமதம். அடுத்த நிமிடமே அவள் வாமனருகில் நின்றாள். அவன் கடுமையாக ஓங்காலித்துக் கொண்டிருந்தான்.

முகமெல்லாம் வியர்த்துக் களைத்துப் போய்க் கிடந்த அவனுக்கு உடனடியாக ஊசியேற்றினாள். பின்பு ஈரத் துணி கொண்டு உடலைத் துடைத்துவிட்டாள். சற்று நேரத்திலேயே அவன் உறங்கிப்போனான்.

அந்த ஒரு வாரமும் சுமதிக்கு நித்திரையே இல்லை. தன் கடமையிலும் குறையின்றி வாமனையும் கவனித்ததில் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். மூன்றாம்நாள் வாமனுக்கு குடிக்க பானங்களை கொடுத்தாள். ஐந்தாம் நாள் கஞ்சி காய்ச்சிக் கொடுத்தாள். வாமனை பராமரிக்க என்றே நின்ற போராளிகள்கூட அவளைத்தான் எதிர்பார்த்தார்கள். "மிஸ் தண்ணி கேக்கிறார்.. குடுக்கலாமா மிஸ்?''

"இப்ப ஜூஸ் குடுக்கட்டுமா? டீ குடுக்கலாமா? டீதான் கேக்கிறார். மிஸ் கொஞ்சநேரம் நிமித்தி வைச்சிருக்கச் சொல்றார். எவளவு நேரம் மிஸ் நிமித்தி வைச்சிருக்கலாம்'' என்றெல்லாம் அவளை தேடிவந்து கேட்டுக் கேட்டுத்தான் செய்தார்கள். அந்த போராளிப் பையன்களது பண்பும் பணிவும் அக்கறையும் சுமதிக்கு மிகவும் பிடித்துப் போனது.

ஏழாம்நாள் வாமன் போராளிகளுக்குரிய அவர்களது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். சுமதிக்கு மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. என்ன செய்வதென்றே புரியவில்லை.

அந்தநேரம்தான் வடிவு சுமதியிடம் பேசினாள். அவளும்கூட சுமதியோடு நேரத்தை பகிர்ந்துகொண்டு கடமையாற்றும் சிறந்த தாதிதான். அவளுடைய புரிந்துணர்வான பேச்சு சுமதிக்கு தெம்பூட்டியது.

வடிவை சுமதிக்கு நீண்டநாட்களாக தெரியும்தான். சக பணியாளர் என்ற அறிமுகம் மட்டுமே. சத்திர சிகிச்சைக்கூட வைத்தியருக்கு நம்பிக்கையான தாதிகளில் வடிவும் ஒருவர். மருத்துவ அதிகாரியுடன் கதைத்து சுமதி வெளியே சென்று வாமனை பார்த்துவர அனுமதியும் வாங்கிக்கொடுத்தாள் வடிவு. கிளிநொச்சியின் இடவலம் புரியாத சுமதியை தானே அழைத்துச்சென்று போராளிகளின் மருத்துவமனையில் விட்டார். வடிவின் உதவியால்தான் சுமதிக்கு வாமனைப் பார்த்துவர முடிந்தது. எல்லோருக்குமே அப்படிச்சென்று பார்வையிட அனுமதியில்லை. இவளொரு மருத்துவத்தாதி என்பதாலும் வாமனை விரைவில் மணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதாலும் அவள் எப்போது சென்றாலும் வாமனைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டாள்.

அதுவும் உண்மைதான். குணப்பட்டதும் அவன் களமுனையில் நிற்கவேண்டியவன். ஆகவே அவனது ஓய்வு காலத்திற்குள்ளேயே திருமணம் நடப்பதுதான் நல்லது. அவனுக்கான ஓய்வு நாட்களே அவனுக்கான குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கத் தோதாக இருந்தது. யாராவது கரும்பு தின்ன கூலி கேட்பார்களா? இருவரும் பச்சைக்கொடி காட்டிவிட போராளி நண்பர்கள் திருமண ஏற்பாடுகளை தொடங்கிவிட்டார்கள்.

அழைத்தாலும் வரமுடியாத சுமதியின் பெற்றோர் தமக்கொரு பிள்ளை சுமதியென்ற பெயரில் இருப்பதையே மறந்துவிட்டிருப்பார்கள். ஆனால் திருகோணமலையிலிருந்து வாமனின் தாயாரும் தங்கையின் குடும்பத்தினரும் வந்துசேர்ந்தார்கள். சுமதிக்குத்தான் அமுதாவும் அம்மாவும் இருக்கிறார்களே. அமுதா என்றுமில்லாதவாறு ஒருவாரத்துக்கு விடுமுறை எடுத்திருந்தாள். மணமகள் வீட்டாருக்குரிய அனைத்து வேலைகளையும் அமுதாவே பொறுப்பெடுத்து செய்தாள். போராளி அமைப்பின் திருமண ஏற்பாட்டுக் குழுவே கட்டிக் கொடுத்த சிறியவீட்டில் வாமனும் சுமதியும் தம் குடும்ப வாழ்க்கைக்கான காலடியை எடுத்துவைத்தனர்.

சரியாக ஒருமாதம் வீட்டிலேயே நின்ற வாமன் சுமதியின் அக்கறையான பராமரிப்பால் நன்றாக தேறியிருந்தான். அவனது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தன. உற்சாகத்தோடு பணிக்குப் புறப்பட்டான். சுமதிகூட நம்பிக்கையோடு விடைகொடுத்தாள். வாமனுடன் நின்ற போராளிகளுக்கும் சுமதிக்குமிடையில்கூட ஆரோக்கியமான புதிய உறவுப்பிணைப்புகள் ஏற்படத்தொடங்கின. "அக்கா அக்கா' என்று அன்பைப்பொழிந்தார்கள். வீட்டுக்கு வந்தால் அவளுடன் சமையலிலும் உதவிசெய்து, குசினிக்குள் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். தான் போராளிகள்மீது எப்படிப்பட்ட தப்பபிப்பிராயத்தை முதலில் கொண்டிருந்தாள் என்பதை நினைத்து இப்போது தன்னைத்தானே மக்குச் சுமதி என்று மனதுக்குள் சொல்லி நையாண்டி பண்ணிக் கொண்டாள்.

வடிவுகூட அப்படித்தானாம். தானும் தன்பாடும் என்றுதானாம் திருகோணமலையில் வாழ்ந்தாளாம். தன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டியவர் தன் மாமன் மகன்தான் என்பதில்மட்டும் உறுதியாக இருந்தாளாம். அது இருவீட்டாருக்குமிடையில் சிறியவயதிலேயே தீர்மானிக்கப்பட்ட விடயமாக இருந்ததாம். என்றாலும் அவளது மச்சான் பெடியனும், வயதும் வளர்ந்து வர வாலிபத்தின் முறுக்கும் வர வன்னிக்கு வேலைக்குப்போகிறேன் என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டுவிட்டானாம். அடுத்த மாதம் இங்கயே வருகிறாயா? வீடு வளவெல்லாம் உண்டு. இங்கேயே திருமணம் செய்துகொண்டு வாழலாமே என்று கடிதம் எழுதியதோடு தொலைபேசியிலும் அழைத்தானாம். வன்னிக்கு வந்த பிறகுதான் தன் ஆசை மச்சான் போராளி என அறிந்து அவன்மீது சொல்லவொண்ணாக் கோபம் வந்து திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்தானாம். ஆனால் அவனை வெறுத்தொதுக்கிவிட முடியாமல் தன் மச்சானுக்காக மாறினாளாம்.

போர்முனைகள் யுத்தச் சன்னதமாடும் போதெல்லாம் சுமதியும் வடிவும்கூட ஓய்வுறக்கமின்றி கடமை செய்யத் தொடங்கினார்கள். சாதாரண காயங்களையெல்லாம் அவர்கள் காண்பதேயில்லை.

வயிறு கிழிந்து, தலை பிளந்து, கால், கை உடைந்து, உறுப்பிழந்து, முள்ளந்தண்டு நைந்ததால் உணர்வுமிழந்து வந்துகொண்டிருப்பவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக இவர்களும் யமனுடன் போராடுவார்கள். சண்டைகளெல்லாம் சொல்லிக்கொண்டு நடப்பதில்லை. ஆனால் திடீர் திடீரென்று வந்து குவியும் தொகையான காயக்காரர்களை சமாளிக்கும் திறமை பொதுவாக வன்னி மருத்துவர்களுக்கும் தாதிகளுக்கும் அனுபவத்தால் வந்துவிட்டது. கால நேரம் பாராமல் இக்கடமையை செய்யவேண்டி இருந்ததால், அது அவர்களையும் வாட்டத்தொடங்கியது.

அவ்வேளைகளிலெல்லாம் சுறுசுறுப்பும் ஆற்றலும்மிக்க மருத்துவ போராளிகள்வந்து கைகொடுப்பார்கள். அவர்களுக்கும் இவர்களுக்குமான உறவு தோழமையாகித் தோள்கொடுத்தது.

சில சமயங்களில் வாமன் சுமதியை சந்திக்க வருவான். எப்போதாவது இருந்துவிட்டுவந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்வான். அப்போதெல்லாம் சுமதிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துகொடுப்பான். இரண்டு மூன்று வாரங்களுக்குத் தேவையான விறகுகளை கொத்தி மழை நனைக்காத இடத்தில் அடுக்கிவைப்பான்.

மரக்கன்று ஒன்றை நட்டு, "இந்த மரம் வளர்ந்து காய்த்துப் பழுத்துக் குலுங்கும்போது என் குழந்தைகள் குருவிகளோடு விளையாடுவார்கள் பார்'' என்றான்.

"ஐயே நினைப்பு'' என்று அவள் அவனை இடுப்பில் கிள்ளினாள்.

"எங்கட பிள்ளைகள் விளையாடத் தேவையான எல்லாமே எங்கட வளவில இருக்கணும். குருவிகள கூட்டுல அடைச்சுவைச்சுப் பாக்கிறது எனக்குப்பிடிக்காது. குருவிகளே சுதந்திரமா எங்கடவீட்ட வந்துபோகணும். அதுகள்ர சுதந்திரத்தையும் சுதந்திரமான மொழியையும் என்ர பிள்ளைகளும் உணரணும். பாத்துக்கொண்டிருக்க இந்த ஜாம் மரம் முற்றத்தில வளரும். நிறைய்ய்ய்யப் பூக்கும்.

தேன்குடிக்க தேன்சிட்டும் பழம் தின்ன மற்ற குருவிகளும் வரும்'' என்றெல்லாம் அவன் கற்பனை வானில் மிதந்தபடி சொல்லிக் கொண்டிருக்க சுமதி புன்முறுவலோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எல்லாம் சரி சுமி. அதை ரசிக்க, அந்தக் குருவிகளோட கதைச்சு விளையாட எப்ப சுமி எனக்கு பிள்ளைகள பெத்துத் தரப்போறாய்'' என்று ஏக்கத்தோடு கேட்டவனை கன்னங்களில் செல்லமாய் பிடித்து கிள்ளிவிட்டு துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிவிட்டாள் சுமதி.

காலம் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட சன்னம்போல கடுகதியாய் விரைந்தது. சுமதி ஏனோ தாயாகவில்லை. அதைப் பற்றியெல்லாம் ஆற அமர இருந்து பேசிக் கொள்ள நேரமும் இருக்கவில்லை.

என்றாலும் கவலை இருக்கத்தான் செய்தது. அப்படி பிள்ளைபூச்சியென்று எதுவுமில்லாததும் கடமைக்கு வசதியாகத்தான் இருந்தது என்ற உண்மையை இருவரும் புரிந்து கொண்டார்கள்.

அதனால்தான் கிளிநொச்சி மாநகரமே இடம்பெயர்ந்தபோது இவர்களும் கிளிநொச்சிக் களமுனையிலேயே கடமையாற்றத் தீர்மானித்தார்கள்.

வடிவு புதிய இடமாற்றப்பட்ட மருத்துவமனையிலும் சுமதி பழைய மருத்துவமனையிலுமாக சத்திரசிகிச்சைக் கூடங்களில் கடமையாற்றினார்கள்.

ஒருநாளின் இருபத்துநான்கு மணிநேரமும் சத்திர சிகிச்சைக்கூடம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். பாரிய காயங்களையும் சிக்கல் மிகுந்த காயங்களையும் பிரதான மருத்துவர்கள் செய்தார்கள்.

சாதாரண காயங்களையெல்லாம் விடுதிகளை பராமரித்துவந்த மருத்துவ போராளிகளே பார்த்துக் கொண்டார்கள். இடைப்பட்ட காயங்களை சுமதியே சரிக்கட்டி அனுப்பிவைத்தாள்.

சில நேரங்களில் தனக்கு நேரம் கிடைத்ததென்று அவளைச் சந்திக்க வாமன் வந்துநிற்பான். சுமதியோ உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் யாருடையதோ உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நிற்பாள். வாமனுடன் கதைக்கவேண்டும் என்று நினைத்தாலும் அவள் இடையில்விட்டுவிட்டு வரவே மாட்டாள். அவன் நீண்டநேரம் காத்திருந்துவிட்டு அவளை சந்திக்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டதும் உண்டு. சுமதிக்கு ஏனைய எல்லாவற்றையும்விட கடமையே கண்ணாகிப்போனது. அவள் மட்டுமா? அங்கிருந்த ஒவ்வொருவருமே கடமைகளில் ஒருவரை ஒருவர் விஞ்சித்தான் நின்றனர்.

ஆறுதலாக ஒருநாள் சுமதியுடன் கதைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் வாமன் கேட்டான்,

"என்னைவிட உனக்கு இப்ப வேலதான் முக்கியமாப் போச்சுதென்ன?''

"என்னைவிட உங்களுக்கு உங்கட வேலைமட்டும் முக்கியமாப் படலாம். என்ர வேலை எனக்கு முக்கியமாப் படக்கூடாதோ?'' என்று நியாயம் கேட்டாள் அவள்.

"அப்ப நீ எனக்கு போட்டியாத்தான் வேலை செய்யிறாய் என்ன நானும் நினைச்சிட்டன் என்ர மனுசி என்னைவிடச் சிறந்த போராளிபோல வேலை செய்யிறா எண்டு..''

"ஐயெ காணும் உங்கட கதை. நிப்பாட்டுங்கோ''

"சே சே சேசே இப்பிடிப் பகிடியெல்லாம் விடுறநேரம் விட்ரணுமடியப்பா. அடுத்த நிமிசம் நான் உயிரோட இருக்கிறனோ நீ உயிரோட இருக்கிறியோ யாருக்குத் தெரியும்?'' என்றான். சுமதி பாய்ந்து விழுந்து அவனது வாயைப்பொத்தினாள்.

"இப்பிடிமட்டும் சொல்லாதிங்க. நாங்க ரெண்டுபேருமே இருக்கணும். ஏனெண்டால் ரெண்டுபேருமே இப்ப நாட்டுக்குத் தேவை'' என்றவளின் கண்கள் கலங்கிவிட்டன. வாமன் பெருமையோடு அவளை அணைத்துக் கொண்டான்.

பியதாஸ என்ற இராணுவவீரன் ஒருவன் சுமதியால் பராமரிக்கப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஐந்தாறு போராளிகளும் இரண்டு படையினரும் சுமதிக்கு பிள்ளைகளைப் போன்றவர்கள்.

அதில் ஒருவருக்கு ஒன்றென்றாலும் அவள் துடித்துக் கொண்டு நிற்பாள். பியதாஸவிற்கு சுத்தமாய் தமிழ் தெரியாது. மிக மோசமான காயங்களைக் கொண்டிருந்த கேப்டன் பியதாஸ உணவுக்கும் ஊசிக்கும் மட்டும் ஒத்துழைக்கவே மாட்டான். அங்கு பராமரிப்பவர்களாக நின்ற போராளிகள் அவர்களையும் நோயாளிகள் என்ற ரீதியில் பராமரித்தாலும் மதிவாணனைப் போன்றவர்கள் சிலவேளைகளில் முறைக்கத்தான் செய்கிறார்கள். பியதாஸவிற்கு சுமதி மட்டும்தான் ஊசிபோடலாம். வேறு எவரையும் ஊசி குத்த விடமாட்டான். சுமதிமட்டும் என்ன சொன்னாலும் தலையசைத்துக் கொண்டு சம்மதிப்பான்.

"எங்களக் கொல்ரவரைக்கும் கொண்டு போட்டு உனக்கு ஊசிபோட அக்காமார் கேக்கிது என்னடா?'' என்று மதிவாணன் தமிழில் ஏசுவான். அவன் இலகுவில் படையினருக்கு உதவப் போகவும் மாட்டான். பராமரிப்பாளர்கள் வேறு வேலையாக நின்றால் மட்டுமே இவன் உதவ நேரிடும். அப்போதும் அவன் எதையாவது புறுபுறுத்துக்கொண்டுதான் செய்வான். அது பார்த்துக்கொண்டிருக்கும் ஏனைய போராளிகளுக்கே எரிச்சலூட்டும். அதுபற்றி ஒருநாள் சுமதி அவனை இருத்திவைத்துக் கதைகேட்டாள்.

"நீங்களேன் தம்பி இப்பிடி அவங்களோடை குரோதமாய் நடந்துகொள்றிங்க? மனுசனுக்கு மனிதாபிமானம் இருக்கணும். அதுவும் வைத்தியத் தொழில் செய்யிறவனுக்கு அவசியமாய் இருக்கணும்'' என்று எடுத்துரைத்தாள்.

"அக்கா, இங்க வாங்க அக்கா. மனிதாபிமானத்தைபத்தி நீங்க சொல்லியாக்கா எனக்கு தெரியணும். அந்தச் சிங்களவனுக்குத்தான் விளங்கப்படுத்துங்கோ. இஞ்ச பாருங்க. இந்தக் கால் எனக்கு எப்பிடி இல்லாமப் போனதெண்டு உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கிளிநொச்சியை மீட்ட சண்டையிலதான் காலை இழந்தன். எப்பிடியெண்டு கேக்கயில்ல சண்டையெல்லாம் வெற்றிகரமாய் முடிஞ்சிட்டுது.

நான் கிளியரிங் செய்துகொண்டு போறன். எங்கடையாக்கள் ஏதும் காயம்கீயம் பட்டுக்கிடந்தாலும் தூக்கிக் கொண்டுவரலாம். ஆமியேதும் சாகாமக் கிடந்து இழுபட்டால் பாவம்தானேயெண்டு சுட்டும் போடுவன். உண்மையா சொல்றனக்கா. எனக்கு உயிர்கள வதைக்கிறது பிடிக்காது. கொல்ல வேண்டியதுகள கொல்லத்தான் வேணும். ஆனால் உயிரை வதைக்கக்கூடாதுதானே. அப்ப நான் போய்க்கொண்டிருக்க பள்ளமொண்டுக்க ஆமியொருத்தன் கிடந்தான். என்னயக் கண்ட உடன அவன் சரியாய் பயந்து போயிட்டான். எனக்கு பாக்கவே பாவமாய் இருந்திது. சுடுவமெண்டு தூக்கின துவக்கை கீழவிட்டிட்டன். அவன் டப்பெண்டு என்னயச் சுட்டான். நானும் அவனச் சுட்டன். அவன் சுட்டதில எனக்கு கால் சரி. நான் சுட்டதில அவன் ஆளே சரி. யுத்தத்தில தோத்துப்போய் கீழ கிடக்கிறவன ஏறி மிதிக்கக்கூடாது எண்டு நான் மனிதாபிமானமாய் யோசிச்சன். இந்தா அதுக்கான பரிசப் பாத்திங்களா டம்மிக்கால்..''

"அது போர்க்களம் தம்பி. நீ துப்பாக்கியோட நிண்டதால அவன் உன்னை நம்பியிருக்கமாட்டான். இங்க அப்பிடியில்ல.''

"எப்பிடியில்ல உங்கட பியதாஸ எதுக்காக எங்களிட்ட வாங்கித் தின்னப் பயப்பிடுறான் தெரியுமா? நாங்களேதும் நஞ்சைக்கிஞ்சை போட்டுத் தந்திடுவம் எண்டுதான். அவனக் கொல்றதெண்டால் இங்க எதுக்காக வைச்சு எங்கட மருந்தையும் நேரத்தையும் செலவழிக்கிறம்? இந்த முட்டாளுக்கு இதுகூட விளங்கேல்லையே'' என்று பொரிந்து தள்ளினான் மதிவாணன்.

"அட, இவனும் உன்னய நம்பாமல் இருக்கிறானே என்றதுதான் இப்ப உன்ர பிரச்சினையா?'' என்று சிரித்தாள் சுமதி.

"மல்லி'' என்று முனகினான் பியதாஸ. அவனை பார்த்துவிட்டு எழுந்துசென்றான் மதிவாணன். பியதாஸவின் உடல்மொழியை புரிந்துகொண்டு அவனது அத்தியாவசியப் பிரச்சினையாக அப்போதிருந்த இயற்கைக் கடன் கழிப்பிற்கு உதவினான் மதிவாணன். சுமதி புன்முறுவலுடன் வெளியேறினாள்.

(தொடரும்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (11)

ஆநதி

First Published : 15 Jul 2012

11ஆம் அங்கத்தில் அதற்குரிய படத்தை இணைத்துவிட்டு சம்பந்தமில்லாத ஆக்கம் ஒன்றை பிரசுரித்துள்ளார்கள். அது குறித்து எழுதிய எனது கருத்தையும் பிரசுரித்துள்ளார்கள். ஆனால் அக் கருத்துக்கான பதிலையோ அல்லது நடவடிக்கையையோ இதுவரை காணவில்லை. எனினும் அந்த அங்கம் கதையின் போக்கை மாற்றவில்லை என்ற நம்பிக்கையில் 12ஆம் அங்கத்திற்குப் போவோமா?!

உயிரே உயிரே.... (12)

ஆநதி

First Published : 22 Jul 2012

22kd9.jpg

வர்கள் கதைக்கட்டும் என்று வயிற்றுச் சுமையோடும் வடிவு தன் கடமைகளை செய்யத்தொடங்கினாள். சுமதி அவசர அவசரமாக சமைத்து வாமனுக்கு உணவளித்தே அனுப்பி வைத்தாள். அவன் புறப்பட்டுப் போய்விட்டபின் மனது முன்னரைவிட வலித்தது. பாதுகாப்பாக சென்று சேர்ந்துவிட்டானா? இல்லையா? என்றறியாமல் அவளால் நிதானமாக இருக்கமுடியவில்லை.

"வடிவு உங்கட வயதும் காலம் பிந்திய கருத்தரிப்பும் கட்டாயம் ஓய்வு தேவை எண்டு சொல்லுது. தாயும் பிள்ளையும் உயிரோட இருக்கோணுமெண்டா, நீங்க இஞ்ச இருந்து சரிவராது. நீங்கள் எங்க இருந்தாலும் சனத்துக்கு சேவை செய்யலாம். நீங்கள் இருக்கிற நிலைமையில தொடந்து உங்களால இஞ்ச நிண்டு வேலை செய்யமுடியாது. உங்கட கணவரிட்ட நான் எல்லாம் கதைச்சிட்டனம்மா. உங்கள அனுப்பினால் அது தனக்கும் நிம்மதி எண்டுதான் அவரும் சொல்றார். உங்கள வவுனியாவுக்கு அனுப்பிறன் வடிவு. நீங்கள் அங்கபோய் திருகோணமலைக்கு உங்கட வீட்டாக்களிட்டயே போங்க. உங்கட ஆள் பிறகு தொடர்புகொள்ளுவார். சரிதானே'' என்ற மருத்துவரின் வார்த்தைகளை நாசூக்காக மறுத்துவிட்டாள் வடிவு.

ஆனால் அடுத்த மாதமே அவள் கட்டாயம் புறப்படவேண்டிய தேவை எழுந்தது. போதிய அளவு ஓய்வும் உணவுமற்றதால் அவளது உடல்நிலை கணிசமான பாதிப்பை காட்டியது. வடிவின் கணவரும் போவது நல்லது என்பதை வலியுறுத்துவதாலும் தலைப்பிரசவம் பற்றிய அச்சம் காரணமாகவும் செல்வதற்குச் சம்மதித்தாள். அவளது பாதுகாப்பு பற்றியும் பராமரிப்பு பற்றியும் அவனே கவனமெடுக்க வேண்டியதால் அவனது கடமை நேரங்கள் குறைந்தன. போதாக்குறைக்கு அவளால் அவனது பாதுகாப்பும் கேள்விக்குறியானது. களமுனையில் நிற்பதொன்றும் அடிக்கடி பின்னே வந்து போவதைப்போல ஆபத்தான விடயமில்லை. ஆகவே அவனுடைய பாதுகாப்பையும் கருதித்தான் அவள் புறப்பட்டாள்.

மனைவியைச் சிக்கலான சூழலில் இருந்து அகற்றிவிட்ட திருப்தியோடு அவளின் துணைவன் களமுனைக்குச்சென்றான். அவனைப் பற்றிய கவலைகளையே சுமந்தவண்ணம் வடிவு வவுனியாவிற்கு சென்றாள்.

இப்போதெல்லாம் அந்த மருத்துவமனையில் சுமதிதான் அதிகமாக மாய்ந்து கொண்டிருந்தாள். தொடர்ச்சியான இடப்பெயர்வும் வசதிகளற்ற சத்திர சிகிச்சைக் கூடமும் அவளுக்கும் சிரமத்தைக் கொடுத்தன. மனிதாபிமானம் அவளை எப்போதுமே சும்மா இருக்கவிடாமல் துரத்தித் துரத்தி வேலை வாங்கியது. எறிகணைகளே பலரது உயிர்களைக் காவுகொண்டன. கிபிர் மிக் போன்ற யுத்த விமானங்களும் சரமாரியாக குண்டுகளை வீசித் தள்ளின. குறுகிய இடமும் நெரிசலான மக்கள் தொகையும் பாதிப்பு விகிதத்தை அதிகரித்தன. விளைவு மருத்துவமனைகள் அனைத்துமே காயப்பட்ட மனிதர்களால் நிரம்பி வழியத் தொடங்கின.

இப்போது அமுதாவுடன் நின்றால் நன்றாக இருக்குமே என்றிருந்தது சுமதிக்கு. ஆனால் அவள் வேலைசெய்யும் மருத்துவமனையும் ஓய்வொழிச்சலின்றி இயங்கிக் கொண்டிருக்கிறது. இவளின் கடமையையும் விட்டுவிட்டு அவளிடம் செல்ல முடியாதே. ரிலே ரேஸ் மாதிரி மருத்துவமனையின் செயற்பாடுகள் மாறி மாறி இடம் மாறிக் கொண்டிருக்கையில் தலைக்கு மேலே வேலைகள் குவிந்து கொண்டிருக்கையில் சும்மா மன ஆறுதலுக்குக்கூட அமுதாவிடம் போய்வர முடியாது. அதற்கு அவகாசமே இல்லை.

உடல்கள் கந்தலாகிய மனிதர்களைப் பார்த்துப் பார்த்து மருத்துவத் தொழிலே வெறுத்துப் போன பலர் வேலையை விட்டுவிட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். இதிலும் பொதுமக்கள் போராளிகள் என்ற வேறுபாடே இருக்கவில்லை. மனிதாபிமானம் இருந்தாலும்கூட பலரால் அந்த காயங்களின் கடுமையைச் சகித்துக் கொண்டு வேலை செய்ய முடியவில்லை. எனினும் பலர் கடமை என்றுணர்ந்து கருத்தூன்றிச் செய்யத்தான் செய்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகத் தம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்த பலர் எல்லாவற்றிலிருந்தும் விலகியோடத் தொடங்கினார்கள்.

மருத்துவமே தெரியாத பல நல்ல உள்ளங்கள் தேடிவந்து உதவ நின்றார்கள். அதனால் யார் யார் வேலை செய்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை.

யார் யார் கடமையிடத்தில் நின்று உழைக்கிறார்களோ அவர்களையெல்லாம் மருத்துவ நிர்வாகம் சலுகையுடன் ஏற்றுக் கொண்டது.

எறிகணைகள் துரத்தத் துரத்த மக்களோடு இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து வந்த மருத்துவமனைகள் வரலாறு காணாத சாவுகளைக் கண்டன.

தொடர்ந்து அழைப்பு விடுத்ததன் பயனாய் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கப்பலில் வந்து காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்கிறோம் என்றார்கள். மாத்தளன் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் நிரம்பி வழியத் தொடங்கிய பிறகுதான் முதலாவது கப்பல் மாத்தளனுக்கு வந்தது. உடனடி சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட முடியாமல் போன காரணத்தாலேயே பலர் உயிரிழந்தார்கள். சில மருத்துவர்கள் மட்டும் நின்று உயிருக்காகப் போராடும் ஆயிரக்கணக்கான மனிதர்களை எப்படி காப்பாற்றுவது?

மருத்துவர்கள் தம்முடன் கடமையாற்றிய போராளிகளுக்குப் பெரிய பெரிய வேலைகளைக் கொடுத்தார்கள். உடல்களுக்குள் இறங்கிய சிதறு துண்டுகளையும் சன்னங்களையும் ஆளையே மயக்கநிலையில்வைத்து மணித்தியாலக்கணக்கில் மினக்கெட்டு வெளியே எடுக்கும் பக்குவத்திலும் பக்குவமான வேலைகள்கூட தாராளமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. முக்கால்வாசி வேலைகளையும் போராளிகளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள். சத்திர சிகிச்சைகளின்போது காயந் தைக்க நூல் கோர்த்த ஊசியை எடுத்துக் கொடுக்க உதவிக்கு நின்றவர்களே காயங்களுக்கு தையல் போடத் தொடங்கிவிட்டார்கள். அத்தொழிலில் கைதேர்ந்த சுமதியோ ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கீடாக வேலை செய்தாள். வைத்திய அதிகாரி ஓய்வெடுக்கும் நேரங்களில் சுமதியே தனித்து நின்று சில சிகிச்சைகளை செய்துவிடுவாள். சிக்கலான காயங்களை மட்டுமே மருத்துவரிடம் அனுப்பி வைத்தார்கள். சுமதிக்கு இப்போதெல்லாம் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உந்துதலைத் தவிர மற்றெதைப் பற்றிய நினைவோ கவலையோ இருக்கவில்லை. எனினும் காயப்பட்டு வருபவர்களின் கதைகள் அவளை வருத்தின.

எப்போதாவது அவளைப் பார்க்க வருகின்ற வாமன் அவளது கடமையைப் புரிந்து கொண்டு காத்திருப்பான். சத்திர சிகிச்சை அறையில் வேலையாக நிற்கும் சுமதிக்கு தகவல் கிடைத்தாலும்கூட அவளால் ஓடோடி வந்துவிட முடியாது. அப்போதுதான் காயத்தை சீர்படுத்தத் தொடங்கியிருப்பாள். இடையில் விட்டுவிட்டு வரமுடியுமா? அவளுக்காக வாமன் மணித்தியாலக் கணக்கில் காத்துக் கொண்டும் நின்றிருக்கிறான். பல மணிநேரம் காத்திருந்து சில நிமிடங்களே கதைத்துவிட்டுச் சென்றதும் உண்டு. சில சமயங்களில் ஒருமுறை பார்த்துவிட்டு வந்தாலே போதும் என்றிருக்கும். அதற்காக இருவருமே முயற்சிக்க விரும்புவார்கள்தான். ஆனால் வாமன் மட்டுமே முயற்சிப்பான். சுமதியும் பார்க்க வேண்டும் கதைக்க வேண்டும் என்ற தவிப்புடன்தான் இருந்தாலும் தலையை நிமிர்த்தக்கூட முடியாத கடமைகளில் நிற்கும்போது என்ன செய்ய முடியும்?

மாத்தளன் மருத்துவமனையில் ஒருமுறை வாமன் வந்து நின்றான். களமுனையும் கூப்பிடு தொலைவில்தான் இருந்தபடியால் அவனால் தாராளமாக நிற்கமுடிந்தது. எனினும் காத்திருந்து காத்திருந்து களைத்துப் போனான். இப்போது வருவாள்; பிறகு வருவாள் என்று வாசலையே பார்த்துப் பார்த்து இருந்தபோது சுமதி வேகமாய் வெளியே வருவதை கண்டான். அவள் தன்னிடம்தான் வருகிறாள் என்று அவன் இருந்த இடத்தில் நின்று எழுந்து நிற்க அவளோ அவனையும் விலக்கிக் கொண்டு ஓடினாள். அவனுடைய புன்முறுவலுக்கு யாரோ ஒருத்தியைப்போல தலையாட்டிவிட்டு செயற்கை சுவாசமளிக்கும் சாதனமொன்றோடு மீண்டும் சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள் நுழைந்துவிட்டாள். அதற்கும் பின் அவள் வெளியே வர நீண்டநேரமாகும் என்பது வாமனுக்கும் புரிந்தது. சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் யாரையோ காப்பாற்றிய பின்புதானே வெளியே வருவாள். அவ்வளவு நேரத்திற்கும் அவனால் காத்திருக்க முடியாது. சென்றுவிட்டான். சுமதி வேலை முடிந்து வாமனைப்பார்க்கும் ஆவலில் வெளியே வரும்போது இருட்டி நீண்டநேரம் ஆகிவிட்டிருந்தது. வாமனையும் அங்கே காணவில்லை.

இன்னுமொருநாள் வந்த வாமன் பிடித்த பிடியாய் நின்று சுமதியை தன்னுடன் அழைத்துச் சென்றான். தனக்குத் தெரிந்தவர்களின் வீடொன்றில் அவளை நிற்குமாறு சொல்லி விட்டுவிட்டு உடனே வருவதாக சென்றான். சற்றுநேரத்தில் கையில் கோழியொன்றுடன் வந்து நின்றான். வாமனின் மேற்பார்வையில் சமையல் தொடங்கியது. அப்போது சுமதி உறங்க தொடங்கியிருந்தாள். உறக்கமென்றால் அப்படியொரு உறக்கம். மாதக் கணக்காய் சீரற்று இருந்த உறக்கத்தை ஒரு பகலிலேயே உறங்கித் தீர்த்துவிடுவதைப்போல உறங்கினாள். பகல் மணி ஒன்றை தாண்டிய பின்னும் அவளாகவே விழிக்கட்டும் என்று வாமன் காத்திருந்தான்.

மாலை மூன்று மணிக்கு சுமதி விழித்தபோது சோப்பும் டவலுமாக நின்றான். அவள் முகம் கழுவிக்கொண்டு வந்தபோது தண்ணீரும் உணவுமாக நின்றான். ஆறுதலாகச் "சாப்பிடு'' என்று அவனே பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டான். சுமதிக்கு அன்றைய பகல் நிறையவே ஆறுதலாக இருந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சுமதி திருப்தியாகச் சாப்பிட்டாள். அவனுடைய அன்பின் பெறுமதியை எண்ணியபோது வாமன் மனதுக்குள் உயரமான இடத்தில் இருந்தான். "வாம் நீங்கள் மிக மிக நல்ல மனிதர்' என்று உள்ளம் சொல்ல அவனைக் கனிவோடு பார்த்தாள்.

அவன் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் எல்லோருமே சாப்பிட்டுவிட்ட பின் கொஞ்சநேரம் இருந்து கதைத்தார்கள். அந்தச் சிறிய குடும்பத்தைப்பற்றி வாமன் ஏற்கெனவே சுமதிக்கு சொல்லியிருக்கிறான். அன்பான உள்ளங்களின் அனுசரிப்பு எத்தனை மன அமைதியை தருகிறது என்பதை அவள் மீண்டும் மீண்டும் உணர்ந்தாள். வாமனே அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் விட்டுவிட்டுச் சென்றான். நல்லதொரு ஓய்வை எடுத்துவிட்ட புத்துணர்வுடன் சுமதி தன் பணியைத் தொடர்ந்தாள்.

எந்த விருப்பு வெறுப்புமற்ற இயந்திரத்தைப்போல சுமதியும் இயங்கினாள். தன்னைப்பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, அடுத்த நாளைப்பற்றி, ஏன் அடுத்த மணித்தியாலத்தைப் பற்றிக்கூட எவரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் சுமதி வாமனைக்கூட எப்போதாவதுதான் நினைத்தாள்.

திடீரென ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வாமன் வந்து நின்றான்.

"சுமதி இவடம் திடீரெண்டு விடுபடலாம். எந்தநேரமும் போறதுக்கு தயாராய் இருங்க. இப்பிடியே கடக்கரையப் பிடிச்சு போனீங்கள் எண்டால் அந்த அரிசிக் கப்பல் நிக்கிற இடம் வரும். கப்பலடிவரைக்கும் போயிருங்க. அந்தக் கப்பலடில ஒரு கொஸ்பிட்ரல் இயங்கிது. அங்க போயிட்டிங்கள் எண்டால் சரி. அங்க எங்கடயாக்கள்தான் நிக்கிறாங்க. பயப்பிடாமல் போங்க என்னம்மா..''

"நீங்கள்?'' என்றாள் தயக்கத்துடன்.

"சாகாமல் இருந்தனெண்டால் வருவன்.''

"நான் மற்றாக்களுக்காக செய்யிற புண்ணியம் எனக்காக உங்களை கூட்டிக் கொண்டு வரும். களத்தை விட்டிட்டு எனக்காக என்னோட வாங்க எண்டு நான் உங்கள கேக்கமாட்டன். இப்பவும் சொல்றன் வாம். எனக்காக உங்களில கொஞ்சம் கவனம் எடுங்க. அதுகாணும்.''

"நாளாந்தம் சாகிற நூற்றுக்கணக்கான சனமும் கவனமே இல்லாமலா சாகிதுகள் சுமி, அது விதி.''

"ம். உண்மைதான்.''

"வெறுப்பா இருக்கிதம்மா. பங்கர் பங்கராய் சனம் செத்துக் கிடக்கிதுகள். எடுக்கவோ புதைக்கவோ ஆக்களில்லை. பிணங்களையே பாத்துப் பாத்து பிணங்களோடையே வாழுற மாதிரி இருக்கிது.''

"......... ''

"ஏன் எனக்கின்னும் சாவு வரயில்ல?'' என்றவனின் முகம் இறுகிக் கிடந்தது. அதில் எந்த உணர்ச்சிகளையுமே காணவில்லை.

"நீங்கள் உயிரோடை இருக்கணும் என்றதுதான் உங்கட விதிபோல. ப்ளீஸ் வாமன் இப்பிடி மனதை உடைய விடாதிங்க.''

"சரி சுமி. நீங்க கவலைப்படாதிங்க. எனக்காக இல்லாட்டியும் உங்களுக்காக நான் கவனமா இருக்கிறன். எனக்கேதும் நடந்திட்டால் அதுக்காக நீங்க அழாதிங்க. ஏனெண்டால் சாகாமல் இருக்கிறது எனக்கு அவமானமா இருக்கிது'' என்ற வாமனின் கண்களில் சிவப்பு.

".......'"

"இதவிடவும் என்னை வேற எப்பிடி அர்ப்பணிச்சு உழைக்கிறதெண்டு எனக்கு தெரியேல்லச் சுமி. இவளவு காலத்துக்கும் நான் சாகப் பயந்து சண்டையில நிக்கேல்ல. சாக்களத்துக்குள்ளதான் வாழ்ந்தன். வாழுறன். பயப்பிடுறவனை எல்லாம் சாவு தின்னிது. என்னப் போல ஆக்களையெல்லாம் திரும்பிக் கூடப் பாக்காமல் போகுது. உண்மையா சொல்றன் சுமி சாகாமல் இருக்கிறதே எனக்கு அவமானமாத் தெரியிது. எனக்கேன் சுமி சாவு வரேல்ல?'' என்று வாமன் சின்னப் பிள்ளை போலக் கேட்டான். சுமதிக்கு அவனது வேதனையின் ஆழம் புரிந்தது.

"கவலப்படாதிங்கப்பா. வாழுறதும் சாகிறதும் நம்மட கையில இல்ல. நீங்கள் மனப்பூர்வமாத்தான் உங்கட கடமைகள செய்திங்கள். அதை நினைச்சு திருப்திப்படுங்க. முடிந்த வரைக்கும் முயற்சிசெய்திங்கள். இந்த தாக்கங்களுக்கு காரணம் நானோ நீங்களோ இல்லையே..''

"தோத்துக் கொண்டு போறம். இன்னும் கொஞ்ச நாட்களில எதுவும் நடக்கலாம் சுமி.''

"விளங்கிது வாம். அதுக்கு நீங்களேன் கவலப்படுறிங்க லட்சக்கணக்கான சனங்களுக்கும் கிடைக்கப் போறது ஒரே முடிவுதான். வெற்றியோ தோல்வியோ அதை வீரனாகவே ஏற்றுக் கொள்ளணும் வாமன்.''

"என்னெண்டம்மா எத்தின தியாகம் எத்தின ஈகம் எவ்வளவு அர்ப்பணிப்பு. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான உயிர்கள கொட்டி வளர்த்திருக்கிறம் சுமி. கொட்ட்ட்ட்டி வளர்த்திருக்கிறம். எல்லாமே எல்லாமே வீண்தானா? அந்த உயிர்களுக்கெல்லாம் எந்தப் பெறுமதியுமே இல்லையா? நம்பவே முடியுதில்ல சுமியம்மா..''

"இல்ல வாமன். எப்பவுமே வெற்றி வரலாறு. தோல்வி பாடம்.''

"என்ர ஐயோ. உயிர்களிலயா பாடம் படிக்கோணும்?''

"அதுக்கு நீங்கள் மட்டும் பொறுப்பில்லையேப்பா''

"நானும்தான் பொறுப்பு. நானும்தான். இந்த மண்ணுக்குரிய ஒவ்வொரு தமிழனும் பதில் சொல்லணும்.''

"அதப்பற்றி இப்ப ஒருத்தருக்குமே கவலையில்ல தெரியுமா?''

"விளங்கிது சுமி.''

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (13)

ஆநதி

First Published : 29 Jul 2012

29kd7.jpg

''பெரும்பாலும் எல்லாருமே படையினரிட்ட போகத்தான் விரும்புயினம்.''

"சனங்களும் என்னதான் செய்யிறது? அதுகளுக்கு யார் சாப்பாடு போடுறது? நடக்கிற சாவுகள் காணாதெண்டு பட்டினி கிடந்தும் சாகணுமா?''

"அப்ப ஏனப்பா போறதுகள சுடுறிங்கள்?''

"நான் சுடயில்ல.''

"நீங்கள் சுட்டா என்ன? வேற பெடியள் சுட்டால் என்ன? யார் சுட்டாலும் இயக்கம் சுட்டதுதான்'' என்ற சுமதியின் வார்த்தைகள் வாமனை காயப்படுத்தின.

வாமன் நீண்ட நாட்களின் பின் சுமதியோடு மனம்விட்டுக் கதைத்தான்.

"இல்ல சுமி நீங்கள் பிழையாய் விளங்கிக் கொள்றிங்க. நிறையப்பேர் சேர்ந்ததுதான் இயக்கம். எல்லாருமே இப்ப ஒரே கொள்கையோட கொள்கைப் பிடிப்போட இல்ல. இப்ப ஒவ்வொருத்தனும் ஒவ்வொருமாதிரி இருக்கிறான். சில போராளிகள் தாங்களே பாதையக்காட்டி இதால போங்க எண்டு அனுப்புறாங்க. சிலபேர் சுடுறாங்க. இதில எதுசரி எது பிழை எண்டு என்னாலையே இப்ப விளங்கிக் கொள்ள முடியேல்ல சுமதி. மண்டை விறைக்கிது. யார் உண்மையான போராளி? யார் ஆமிக்கு வேலை செய்யிறான்? எண்டு ஒண்டுமே விளங்கேல்ல. ஆனா இப்பவும் உடம்பில குண்டை கட்டிக் கொண்டு விடுதலைக்காக வெடிக்க போராளிகள் நிக்கிறாங்க.''

"கவலப்படாதிங்க வாமன். இத மட்டும்தான் இப்ப உங்களுக்குச் சொல்லமுடியும். நீங்கள் மனசை வீணாய் அலட்டிக் கொள்ளாதிங்க. நடக்கிறதுதான் நடக்கும். கொஞ்சம் பொறுங்கோ. டீ போட்டுக் கொண்டு வாறன்'' என்று சமையலறைப் பகுதிக்குச் சென்றாள் சுமதி.

அவளது மனம் வாமனுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.

தன் தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டிருந்த வாமனின் கண்கள் வெற்றுத் தரையை வெறித்துக் கொண்டிருந்தன. போகத் துடிக்கும் மக்களைச் சுடுவதில் உண்மையில் அவனுக்கு உடன்பாடில்லை. இத்தனை காலமும் தம்மை நம்பியிருந்த மக்களுக்கு இந்த இறுக்கத்தில் இருந்து உங்களை மீட்போம் என்று உத்தரவாதம் கொடுக்க யாராலுமே முடியாதே. அவர்களை வாழ வைப்போம் என்று இனி எந்த முகத்தோடு சொல்ல முடியும் வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க வாருங்கள் என்றபோது நூறு பேர் வராவிட்டாலும் பத்துப் பேர் வந்தார்களே. இந்தக் கட்டத்தில் தோற்றுவிட்டோம். நினைத்தும் பார்க்க முடியாத பின்னடைவு இது. விடுதலைப் போராட்டம் இந்தக் கட்டத்தை வெல்லுமா? சிலர் நினைப்பதைப்போல ஐ.நாவும் வராது அமெரிக்காவும் கேட்காது. கேட்கும் என்றால் இந்நேரம் கேட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் மனதால் பேசிக்கொண்டிருந்த வாமனின் கண்கள் பஞ்சடைந்து போவதை உணர்ந்தவனாய் கையால் கசக்கிக்கொண்டான்.

சுமதி தனக்காக நிர்வாகத்தினர் கொடுத்த பிஸ்கட்களையும் சுடச்சுட பால் தேநீரையும் கொண்டுவந்து வாமனுக்குக் கொடுத்தாள். வாமன் எதுவுமே பேசாமல் அதைப் பருகினான். போகும்போது மீண்டும் கப்பலடியை நினைவுபடுத்தினான்.

"இனிமேல் என்னை எதிர்பார்க்கக்கூடாது சுமி'' என்றவன் கைகாட்டிவிட்டு போய்க்கொண்டிருந்தான். சுமதி அவனையே கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டு நின்றாள். பின்பு அவன்பற்றிய நினைவுகளை கட்டுப்படுத்திக் கொண்டு கடமைகளை நினைத்தாள்.

கிணற்றடிக்குச் சென்று வாளிகளில் தண்ணீரை நிறைத்தாள். திடீரென எறிகணைமழை பொழியத் தொடங்கியது. பல பத்து எறிகணைகள் தொகை தொகையாக வீசப்பட்டன. சுமதியோ குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். அவளுடன் சத்திர சிகிச்சைக்கூடத்தில் வேலை செய்யும் போராளியொருவன் ஓட்டமாய் ஓடிவந்து அவளை பளாரென்று அறைந்தான். அதே வேகத்தில் அவளை இழுத்துச் சென்று பாதுகாப்பு அகழிக்குள் தள்ளினான். அதன் பின்புதான் அவளுக்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது.

மருத்துவமனை முழுவதும் அதிர்வாலும் புகையாலும் சிதறு துண்டுகளாலும் நிறைந்தன. எறிகணை வீச்சு ஓய்ந்த பின் சுமதி கிணற்றடிக்கு ஓடினாள். அங்கே வாளிகளில் நிறைத்த தண்ணீரைக் காணவில்லை. பல சிதறு துண்டுகள் வாளிகளைத் துளையிட்டுவிட்டிருந்தன. கிணற்றுக்கட்டில் வைத்திருந்த அவளது உடைகள் கிணற்றுக்குள் விழுந்துகிடந்தன. அவற்றை வாளியால் எடுக்க முயற்சித்தபோது அவை நீரில் அமிழ்ந்துவிட்டன. சுமதி வேறு உடைகளை எடுத்துக் கொண்டோடி வந்து அவசர அவசரமாகக் குளித்தாள். அவசர அவசரமாக இயங்கி இயங்கி சுமதி இப்போதெல்லாம் அவசரத்திற்கே பழக்கப்பட்டுப் போயிருந்தாள். தேநீரை சுடுநீர்ப் போத்தலில் ஊற்றுவதைப் போலவே வாயில் ஊற்றிக்கொண்டு சத்திர சிகிச்சை கூடத்துக்குள் ஓடினாள். அவளுக்கு வேலைகள் வந்து குவிந்தன. சற்றுமுன் நடந்த கண்மண் தெரியாத எறிகணை வீச்சில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உடல் கிழிந்தவர்களாய் கொண்டுவரப்பட்டார்கள். அவளும் புயல் வேகத்தில் கடமையாற்ற வேண்டியிருந்தது. காயங்களைத் துடைத்தும் தைத்தும் நோண்டிக் குடைந்து சிதறுதுண்டுகளை எடுத்தெறிந்தும் அவர்களது கதறல்களைக்கேட்டும் சுமதியும் களைத்துப் போய்விட்டாள்.

பகல் நேரம் பன்னிரண்டு மணியை தாண்டிய பிறகுதான் தான் இன்னமும் ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது நினைவு வந்தது. களைப்பு மிகுதியால் கதிரையில் அமர்ந்துவிட்ட அவள்முன் சுடச்சுட தேநீரை நீட்டினான் காலையில் அவளைக் கன்னத்தில் அறைந்தவன்.

அவன் அவளுடன் மிகச்சொற்பமான நாட்கள்தான் அறிமுகமானவன். ஆனால் நீண்டநாட்கள் நெருங்கிப் பழகிய நல்ல நண்பனைப்போல நடந்துகொள்வான். அவனுக்கு வாமனை நன்றாகத் தெரியுமாம். வாமனில் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த அந்தப் போராளி சுமதிமீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தான். அவள் வேலை செய்யும்போது தனக்கான வேலைகள் குறைவாக இருந்தால் அவளுக்கு வந்து உதவுவான். அவன் மட்டும் காலையில் சுமதியை காப்பகழிக்குள் தள்ளி விழுத்தாமல் விட்டிருந்தால் அவள் காயப்பட்டிருப்பாள்.

"அறிவு'' என்று அழைக்குமுன்பே "சொல்லக்கா'' என்று வந்து நிற்பான். சுமதிக்கும் அவனில் அன்பும் அக்கறையும் இருந்தன. சுமதி எதுவுமே பேசாமல் மெலிதாய் சிரித்துவிட்டு தேநீரை வாங்கிப் பருகினாள். சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டுச் சொன்னான்.

"சாகிறதெண்டால் முன்னுக்குப்போய் அஞ்சாறு ஆமியையாவது சுட்டுப் போட்டுச் சாகலாமே. அநியாயமாய் செல்லடியில சாகப்போறன் எண்டு நிக்காதிங்க'' என்றுவிட்டு போய்விட்டான்.

தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த சண்டைச் சத்தங்களும் எறிகணை வீச்சுகளும் களம் கொதிநிலையிலேயே இருப்பதை உணர்த்தியது. வாமன் என்ன செய்கிறானோ? என நினைத்து பெருமூச்சு விடுகையில் அடுத்த தொகை காயப்பட்டவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

நான்கைந்து பேராகக் காயங்களுக்கு கட்டுப் போட சுமதி பெரிய காயங்களை மருத்துவருடன் சேர்ந்து கவனித்தாள். மாத்தளன் வீதியை அண்டி பலநூறு எறிகணைகள் வெடித்தன. வீதிக்கு அருகாய் இப்புறமிருந்த மருத்துவமனை ஓயாமல் அதிர்ந்துகொண்டே இருந்தது.

களத்தின் முன்னரங்க வரிசைக்கும் மாத்தளன் மருத்துவமனைக்கும் இடையே இருநூறு மீட்டர் இடைவெளிதான் இருந்தது. அதனால் துப்பாக்கிச் சன்னங்கள் மருத்துவமனைக்குள்ளும் சீறிப்பாய்ந்தன. பலர் மருத்துவமனைக்குள்ளேயே காயமடைந்தனர்.

காயப்பட்டவர்கள் மருத்துவமனையில் மீண்டும் காயப்பட்டனர். எறிகணைகள் நிமிடத்துக்கு நிமிடம் அவர்களின் தலைகளுக்கு மேலாகக் கூவிச்சென்று தூரத்தே வெடித்தன. மரணத்தின் கிடுக்குப்பிடிக்குள் நின்றுகொண்டு சுமதியும் உயிர்களை காப்பாற்ற தன்னாலான வேலைகளை செய்தாள். அன்றைய பகல் முடிந்து இருள் கவ்வி இரவும் கழிந்துகொண்டுதான் இருக்கிறது. சண்டையும் ஓய்ந்த பாடில்லை சத்திரசிகிச்சைக் கூடமும் ஓய்ந்தபாடில்லை.

சுமதி அல்லும் பகலுமாய் சத்திர சிகிச்சைக் கூடத்துக்குள்ளேயே நின்றாள். கட்டிலில் கிடந்த குழந்தையொன்றுக்கு வயிற்றுக் காயத்தை துப்பரவாக்கிக் கொண்டிருக்கையில் சீறிவந்த சன்னங்களில் ஒன்று குழந்தையின் விலாவில் தைத்து உள்ளிறங்கியது.

அந்தக்குழந்தை சிகிச்சையிடத்திலேயே அவளின் கண்முன்னால் உயிரிழந்தது. அந்தக் குழந்தையின் சடலத்தை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டு அடுத்த காயக்காரரை கட்டிலுக்கு ஏற்றச்சென்னாள். அதே நிதானத்தோடும் அவசரத்தோடும் காயங்களை சுத்தப்படுத்தத் தொடங்கினாள்.

அந்த இரவு விடிந்ததே தெரியவில்லை அவளுக்கு. கிணற்றடிக்கு முகம் கழுவச் சென்றவள் அப்போதுதான் அதிர்ந்தாள். தொடர்ச்சியாக சண்டை நடந்துகொண்டிருந்ததால் சத்தத்தை வைத்தெல்லாம் நிலைமையைக் கிரகிக்க அவளால் முடிந்திருக்கவில்லை. வெளியே வந்தபின்தான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. வெளிச்சூழலே கலகலத்துக் கொண்டிருந்தது. "அந்தா வந்திட்டான் இந்தா வந்திட்டான்'' என்று சொல்லிக் கொண்டு சுவர்களோடு ஒட்டிக் கொண்டு நின்றவர்கள் பார்த்த திக்கை சுமதியும் பார்த்தாள்.

"ஐயோ ஆமிக்காரர்'' என்று அவளது இதயம் அலறியது. சுமதி என்ன வேகமாய் அறைக்குள் ஓடிவந்தாள் என்பது அவளுக்கே தெரியாது. தனது பை ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினாள். அவளது கால்கள் கடற்கரையை நோக்கி ஓடின. மனமோ 'வாமன்... வாமன்' என்று அவனை நோக்கியே ஓடியது. "எதிரியைக் கண்டால் நிற்காதே என்னையும் எதிர்பார்க்காதே. கடற்கரையைப் பிடித்துக் கொண்டு போ. கப்பலடிக்குப் போ' இவைகள்தானே வாமனின் கட்டளைகள். இதயத் துடிப்பின் வேகம் பன்மடங்காகி அவளைப் படபடக்கச் செய்தது. சரக் புரக்கென சீறிவந்த சன்னங்கள் அவளையும் விழுந்தெழும்பச் செய்தன. என்ன நடக்கிறதென்பதே புரியாத நிலையில் அவள் நகர்ந்து கொண்டிருந்தாள்.

தொகையான மக்கள்கூட்டம் கடற்கரை முழுவதையும் நிறைந்திருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையை அண்டியேதான் இருந்தார்கள். மருத்துவமனைக்கு படையினர் எறிகணைகளை வீசமாட்டார்கள் என்ற நம்பிக்கையினாலல்ல. படையினர் முன்னேறும் பட்சத்தில் போராளிகள் அந்த இடத்தையும் விட்டுவிடுவார்கள். மடிந்தவர்கள் போக எஞ்சியவர்களாவது மருத்துவமனையைப் பிடிக்கப் போகும் படையினரிடம் சரணடைந்துவிடலாம் அல்லவா? அதனால் மருத்துவமனைகளை அண்டியே தறப்பாள் கொட்டில்களை போட்டுக் கொண்டு இருந்தார்கள். அவைகளிலும் பெரும்பாலானவை வெள்ளத்தில் கிடந்தன. வெள்ளத்திற்குத் தப்ப மேடான இடங்களில் கொட்டில் போட்டவர்கள் பலர் துப்பாக்கி ரவை பாய்ந்ததால் உயிரிழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் போக விரும்பாத மக்கள் அவ்விடத்தைவிட்டு நகரத் தொடங்கிவிட்டார்கள். படையினரிடம் சரணடையத் தீர்மானித்தவர்கள் தூர இடங்களில் இருந்தும் மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கிவிட்டிருந்தார்கள்.

கண்மண் தெரியாமல் இரண்டு நாட்களாக நடக்கும் சண்டையில் போராளிகளால் நின்று பிடிக்க முடியாது என்பது மக்களுக்குத் தெரியும். இலட்சக்கணக்கில் போராளிகளாலும் எறிகணைகளை ஏவமுடியாதே. படையினரோ எண்ணுக்கணக்கின்றி எறிந்து தள்ள போராளிகளோ விரல்விட்டு எண்ணித்தான் எறிகணைகளை ஏவுகிறார்கள். போராளிகளால் தொடர்ந்து கள வரிசைகளைத் தக்க வைத்திருக்க முடியாது. ஆகவே படையினர் வரப்போகும் பகுதியில் சனத்தோடு சனமாக கூடியிருந்தால் தனிப்பட்ட விசாரணைகளிலிருந்தும் தப்பலாம் என்று எண்ணியே மக்கள் மருத்துவமனைக்குள் குவிந்தார்கள். இதற்குள் காயப்பட்டு வார்ட்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பலர் தத்தம்பாட்டில் புறப்பட்டு போயும் விட்டிருந்தார்கள். படையினரிடம் சரணடைய முடிவெடுத்தவர்கள் நூற்றுக்கணக்கான பிணங்களின் மத்தியில் அந்தப் பிணவாடையையும் சகித்துக் கொண்டு நிலத்தோடு கிடந்தார்கள்.

மாத்தளன் மருத்துவமனையில் கடமையாற்றிய பல பத்துப் பணியாளர்களும் ஏன் போராளிகளும்கூட அங்கேயே நின்றுவிட்டார்கள். அவர்களெல்லாம் படையினரிடம் சரணடையப் போகிறார்கள். சுமதியோ ஆயிரக்கணக்கான மக்களோடு நகர்ந்தாலும் மனதளவில் தனித்தவளாய் கடற்கரையில் நகர்ந்து கொண்டிருந்தாள். அவளையொத்த மனதுடைய எத்தனையோ பேரின் கால்கள் கப்பலடியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.

கடற்கரையோ மனிதக் கழிவுகளால் அசிங்கப்பட்டுக் கிடந்தது. எனினும் சனத்தோடு சனமாய் தன்னால் இயன்றவரை வேகமாய் நடந்தாள் சுமதியும். அவளை எதிர்ப்பட்டுவந்த மக்களில் பலர் அவளை மறித்து நின்று கேட்டார்கள்.

"பிள்ள ஏனம்மா இனியும் இங்கால போறாய்? திரும்பி ஆஸ்பத்திரிக்கே வா.''.

"இல்ல. வரேல்ல'' என்று தனக்குள் மட்டும் சொல்லிக் கொண்டு அகன்றாள். தன் பிள்ளைகளோடு வந்த இன்னொரு தாயார் சுமதியின் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினார்.

"இனியும் ஏன் பிள்ள இங்கால போறாய் அநியாயமாய் சாகப் போறியே. எங்களோட வா..''

"இல்லம்மா நான் என்ர பிள்ளைகளத் தேடிப்போறன்'' என்றாள். அதற்கு மேல் அந்தத் தாய் எதுவும் கேளாமல் நகர்ந்தாள். கடற்கரையிலும் எறிகணைகள் விழுந்துகொண்டுதான் இருந்தன. எறிகணைகளால் ஏற்பட்ட கரும்புகையும் சத்தங்களும் சன்னங்களும் அச்சமும் சனங்களை விரட்டிக் கொண்டே இருந்தன. சுமதி உடலாலும் மனதாலும் மிகவும் களைத்துப் போய் இருந்தாள். போவோர் வருவோரது முகங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே சென்றாள். தெரிந்தவர்களைக் கண்டால் உடனே நின்றுவிடுவாள். அதிலும் குறிப்பாக போராளிகளிடம் சொன்னாள்.

"வாமனக் கண்டால் மறக்காமல் சொல்லுங்க நான் கப்பலடிக்கு போறனாம் எண்டு..'' அந்த ஒற்றை வசனத்தையே ஐம்பதுக்கு மேற்பட்டவர்களிடம் செல்லியிருப்பாள். அவள் பற்றிய செய்தியை ஒருவராவது வாமனிடம் சொல்ல மாட்டார்களா? என்ற நம்பிக்கைதான்.

அத்தனைபேரும் சொல்லுவார்கள் என்று அவள் நம்பவேயில்லை. காரணம் எல்லோருமே காணமாட்டார்கள். அல்லது அதில் பாதிப்பேர் இடையில் படையினரிடம் சரணடைந்துவிடலாம். அல்லது படையினரின் எறிகணைத் தாக்குதலிலோ துப்பாக்கிச்சூட்டிலோ செத்தும்விடலாம். உயிரோடு இருக்கின்ற அந்தக்கணம் மட்டுமே உண்மையானது. அடுத்தகணத்தில் எவருடைய உயிர் பறிக்கப்படுமோ? யாரறிவார்? நாளுக்கு நூறு பிணங்களாவது விழுகின்ற சூழலில் இப்படித்தான் தகவல் பரிமாற்றங்கள் நடந்தன.

திடீரென்று அவளது காலின் செருப்பொன்று அறுந்து தொலைத்தது. என்ன செய்வது? மற்றையதையும் அப்படியே கழற்றி விட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தாள். கடற்கரை மணல் அத்தனை சனக்கூட்டத்திலும் அப்படிச்சுடும் என்று அவள் நினைக்கவேயில்லை.

அலையடித்து கரை நனைக்கும் ஓரமாக நடந்தாள். சூரியன் உச்சிக்கேறிக்கொண்டிருந்தான். வெய்யில் அகோரமாய் எரித்தது.

வாமன் என்னைப் போலவே வந்துகொண்டிருப்பானா? எனக்குப் பின்னால்தான் நிற்பான். அவனை விட்டுவிட்டு நான் போகிறேன். அவன் எரியும் நெருப்பில் நிற்கிறான் என்று அவளது மனது வாமனுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெய்யிலோ ஒரேநாளில் எல்லோரையும் கருக்கித் தள்ளுகிறேன் பார் என்று கொளுத்தித் தள்ளியது. சுமதி அந்த அரிசிக் கப்பலடிக்கு வரும்வரையில் ஓர் இயந்திரம் போலத்தான் வந்தாள். கப்பலடியில் நின்று பார்த்தபோது மலைப்பாய் இருந்தது இவ்வளவு குவியலான தறப்பாள் காடுகளுக்கிடையே மருத்துவமனை இயங்கும் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது கேள்வியோடு நின்ற அவளுக்குக் கால்கள் தொய்ந்தன. தலையை வலித்தது. அருகில் நின்றவர்களிடம் விசாரித்தாள். அவர்கள் கைகாட்டிய இடம் பக்கத்தில்தான் இருந்தது. கணமும் தாமதிக்காமல் விரைந்தாள்.

(தொடரும்)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (14)

ஆநதி

First Published : 05 Aug 2012

a8.jpg

''சுமதியக்கா வாங்க'' என்று யாரோ அழைப்பது அவளது காதில் விழுந்தது. அக்கணமே அவள் கண்களை இருட்டு அப்பியது. உலகம் வேகமாய் சுழல்வதாய் தலைக்குள் கிறுகிறுப்பு. மயக்கம் அவளை முழுதுமாய் ஆட்கொள்ள சரியத் தொடங்கினாள்.

சுமதி கண்விழித்தபோது அமுதா அருகில் இருந்தாள். அமுதாவைக் கண்டவுடன் பொலபொலவென சுமதியின் கண்கள் கண்ணீரைக் கொட்டின.

அமுதா அவளின் தலைதடவி ஆறுதல் படுத்தினாள். தேநீரை கொடுத்து வற்புறுத்தி குடிக்கச் செய்தாள்.

"அம்மா எங்க அமுது?''

"அம்மாவுக்கு காயம் சுமதி. ரெண்டுநாளைக்கு முதல்லதான் கப்பலில அனுப்பிவிட்டன்.''

"அம்மாவுக்கு காயமா?''

"ம். சமாளிச்சுக் கொள்ளுவா. எண்டாலும் தனிய போறாவே எண்டு மனசுக்கு கஸ்ரமாத்தான் இருந்திது. என்ன செய்யிறது?''

"நீயும் அம்மாவோட போயிருக்கலாமே அமுது?''

"எனக்கு போகணும் போல இருக்கேல்ல சுமதி. அம்மா ஒரே அழுகைதான் என்னையும் தன்னோட வரச் சொல்லி. என்னெண்டு சுமதி இதவிட்டிட்டுப் போறது போயிருக்கலாம்தான். நான்தான் நிண்டிட்டன்.''

"வாமன் என்னவாம்? எப்ப கண்ட நீ?''

"நேற்று கொஸ்பிட்ரலுக்கு வந்தவர். அவர் சொன்ன குறிப்பிலதான் இங்க வந்தனான்''.

"நீ இங்க வந்ததும் நல்லதாய்ப் போச்சுது சுமதி. எனக்கும் மனசுக்கு சரியான கஸ்ரமாய் கிடந்திது. உன்னயக் கண்ட உடன அது பாதியாய் குறைஞ்சமாதிரி இருக்கிது'' என்று சிரித்தாள் அமுதா.

"எனக்குந்தான். உன்னக்கண்டது எவள ஆறுதலாய் இருக்குத் தெரியுமா உன்னய இங்க சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்ல அமுது.''

"வா. முகம் கழுவிட்டு வந்திரு'' என்று அழைத்த அமுதாவை இதமாகப்பார்த்த சுமதி, ""எனக்கு குளிக்கணும்போல இருகப்பா. தண்ணி இருக்குமா?'' என்றாள்.

"தட்டுப்பாடுதான். ரெண்டு வாளியெண்டாலும் தரலாம் வா'' என்று சுமதியை பிடித்தெழுப்பி அழைத்துச் சென்றாள்.

"அண்ண உங்கடயாள் முள்ளிவாய்க்கால் பக்கம் போய்க்கொண்டிருக்கிறா. கப்பலடிக்குப் போறனெண்டு சொல்லிவிடச் சொன்னவ'' என்ற அந்த ஒற்றைத் தகவலையே குறைந்தது இருபது பேராவது அவனிடம் சொல்லிவிட்டிருந்தார்கள். உண்மையில் அத்தகவல் வாமனுக்கு ஆறுதலாகத்தான் இருந்தது. தகவல் சொல்லப்பட்ட நேரங்களையும் இடங்களையும் வைத்தே அவள் நிச்சயம் அந்த மருத்துவமனையை அடைந்திருப்பாள் என்று தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது.

போராளிகள் பின்வாங்கி பின்வாங்கி வந்தாலும் களமுனைக்கான வரிசையொன்றை போட்டுக் கொண்டேதான் வந்தார்கள். தொடர்ச்சியான தாக்குதல்கள் பலநூறு போராளிகளின் உயிர்களைக் குடித்துவிட, "அநியாயமாக சாகும் மக்களே களத்துக்கு வாருங்கள்' என்று போராளிகள் அழைத்தார்கள். என்னதான் பிணங்களின் மத்தியில் வாழ்ந்தாலும் போராட வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாய் இருந்தாலும் எவரும் களமுனைக்குவரும் துணிச்சலில் இருக்கவில்லை. அவர்கள் எதிரியின் எறிகணை மழைக்குள் இருந்து தப்புவதற்காக மட்டுமல்ல, போராளிகளின் ஆட்சேர்ப்பு அணியினரிடம் இருந்தும் தப்புவதற்காகவும் ஓடி ஒளிந்தனர். எதிரியை ஓரளவுக்காவது தடுத்துவரும் போராளிகள் கட்டாய ஆட்சேர்ப்பிற்காகவும் உழைக்கவேண்டியிருந்தது. "மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா போடாது. பிடுங்கித்தான் எடுக்கவேண்டும். பிடுங்கத் தயங்காதீர்கள்' என்ற கட்டளைகள் ஆட்சேர்ப்புப் போராளிகளை வேகப்படுத்தின. போராடக்கூடிய வயதெல்லையில் இருந்த எந்த இளையோரும் பிடித்து இழுக்காதபட்சத்தில் வரமாட்டார்கள். சிலர் பலதடவை அழைத்தால்தான் வருவார்கள். சிலர் அகப்பட்டுவிட்டால் மட்டும் வருவார்கள். பலரை இழுத்துச் சென்றால்தான் வருவார்கள். என்றாலும் சென்ற ஓரிரு நாட்களில் அவர்கள் இன்னொரு வழியால் ஓடி வீட்டாரிடமோ உறவினர்களிடமோ படையினரிடமோ போய்விடுவார்கள். தமிழினத்தில் இப்படியும் கோழைகள் இருக்கிறார்களா? என்று வேதனையாக இருக்கும். அதேவேளை அப்படி ஒளிந்திருந்தால்தான் உயிர்வாழ முடியும் என்ற உண்மையும் இருந்தது.

எதிரிப்படையினரின் அகோரமான எறிகணைத் தாக்குதலால் குடும்பம் குடும்பமாகச் செத்தாலும் பரவாயில்லை, நாங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரியமாட்டோம் என்ற உச்சகட்டப் பாசத்தில் இருப்பதாய் அந்தச் சனங்கள் நம்பினார்கள்.

போராளிகளுக்கும் தெரியும். ஓவ்வொரு வீட்டிலும் தீபமேற்றத் துடித்த தாங்கள் இப்போது தீயை வீசிக் கொண்டிருக்கிறோம் என்பது. போரில் இதுவெல்லாம் அநியாயம் இல்லை. நான் எனக்காகவா ஒருவனை பலவந்தப்படுத்தி களத்துக்கு இழுக்கிறேன்?அவனுக்காகவும்தானே? அவனது குடும்பத்துக்காகவும்தானே? என்று தம்மை ஆறுதல்படுத்திக் கொண்டார்கள். நியாயம் என்றவகையில்தான் அப்பணியைச் செய்தார்கள்.

தாக்குதல் நடவடிக்கைகளைப் போலவே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் திட்டமிட்டு நடந்தன. நாளுக்கு ஆயிரம் பேரையாவது அள்ளிக் கொண்டு வாருங்கள். ஐந்நூறு பேர் ஓடினாலும் மிகுதி ஐந்நூறு பேரைவைத்து மறிப்புச் சண்டையாவது செய்யலாம் என்பது கட்டளையாய் இருந்தது.

"அநியாயமாய்ச் சாகிறவர்கள்தானே நாங்கள்? அந்தச் சாவைக் களத்திலேயே சந்திப்போம் வாருங்கள்' என்றார்கள் ஆட்சேர்ப்பாளர்கள்.

உணவுகொடுத்து போராட்டத்தை ஊட்டி வளர்த்தவர்களே அவர்களின் பிள்ளையைக் கேட்டபோது துள்ளியெழுந்தார்கள். "உணவை கொடுத்தோம் உயிரைப்பறிக்க நிற்கிறீர்களே'' என்று நியாயம் கேட்டார்கள். மனச்சாட்சி அவரவர் நிலைமைக்கேற்ப வித்தியாசப்பட்டது.

தன் பிள்ளையை ஒளித்து வைத்திருந்து வைத்திருந்து ஒருநாளில் பிள்ளையைப் போராளிகள் பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் போதும், அதே குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆள் மாறி ஆள்வந்து தங்கள் தறப்பாள் கொட்டிலுக்கருகில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஐந்தாறு இளைஞர்களின் பதுங்கிடங்களைக் காட்டிக் கொடுத்தார்கள். காட்டிக் கொடுப்பவர்களை முன்னே பாராட்டிவிட்டு பின்னே போராளிகளே சொல்லிக் கொள்வார்கள்:

"இந்தத் தமிழினத்துக்கு சுதந்திரம் கிடைக்கிறது சந்தேகம்தான். சனத்தின்ர சுயநலத்தை பாக்க இப்பிடியொரு போராட்டம் தேவைதானா எண்டிருக்கு? நாங்கள் யாருக்காக வாழுறம்? யாருக்காகச் சாகிறம் என்றதே விளங்கேல்லடா சாமி?'' என்று தலையில் கைவைத்தார்கள்.

அவர்களை ஆள்சேர் ஆள்சேர் என்ற குரல்கள் முடுக்கின. களத்தின் தேவையும் அப்படித்தான் இருந்தது. இவர்களோ சமையல் பிரிவினர் அனுப்பும் நாலுபேருக்கு ஒரு சொப்பிங் பை கஞ்சியைக் குடித்தார்கள். போராட்டமோ நாளுக்கு நூறு இருநூறு உயிர்களைக் குடித்தும் பசியாறாமல் வயிறெரிந்தது.

பலர் ஒளித்திருந்த இடத்திலேயே உயிர் மாண்டார்கள். பலர் போராளிகள் பிடித்துக்கொண்டு சென்றதால் உயிர் தப்பினார்கள். களத்தில் நின்றவர்கள் எல்லோரும் சாகவுமில்லை. வெளியிலிருந்த எல்லோரும் தப்பவுமில்லை. அந்தக் குறுகிய தரைத் துண்டில் எங்கு நின்றாலும் அது

நெருப்பில் நிற்பதற்கு ஒப்பானதே. படையினர் முன்னரைவிடவும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். விளைவு ஆயிரக்கணக்கான பிணங்கள் தரையில் விழுந்தன.

சுமதியால் மட்டும் சும்மாவா இருக்க முடியும்? நூற்றுக்கணக்கில் வரும் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் அவளும் தொடர்ந்து ஈடுபட்டாள். சுமதி, அமுதா போன்ற பலரும் மருத்துவர்களுக்கீடாக வேலை செய்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அனுபவத் தேர்ச்சி பெற்றிருந்தது மட்டுமல்ல, தேவையும் அவ்வளவுக்கிருந்தது. அங்கும்கூட சுமதிக்குப் புதிய அறிமுகங்கள் கிடைத்தன. ஒத்த இயல்புடையவர்களைச் சந்திக்கும்போது மனசுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியும் கிடைக்கத்தான் செய்கிறது. அப்படியொருத்தியாகத்தான் மாலாவும் அவளுக்கு அறிமுகமானாள்.

மாலா என்ன பெரிய அனுபவசாலியா? இல்லவே இல்லை. திடீர் தாதி. ஆனால் நாளுக்குப் பத்துப் பிரசவம் பார்க்கிறாள். மாலா தன் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்த்தவளில்லை, தானொரு தாதியாக கடமையாற்றுவேன் என்று. தொட்டதற்கெல்லாம் நூதனம் பார்க்கும் அவள் ஒரு பிரசவ விடுதியில் கடமைசெய்கிறாள் என்றால் அது அவளுக்கே அதிசயம்தான். முள்ளியவளை அ.த.க. பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில்தான் திடுதிப்பென வந்து சேர்ந்தாள். அவளின் கதையே ஒரு தனிக்கதைதான்.

"இனியும் பொறுக்கேலாது மாலா. வா மாலா ஆமிக்காரரிட்ட போயிருவம்'' என்று மாலாவின் தாயார்தான் நச்சரிக்கத் தொடங்கினார்.

"என்னால தங்கத்த விட்டிட்டு வர ஏலாதம்மா'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள் மாலா.

"என்னடி நீ? அவன் எங்க நிக்கிறானோ? எப்பிடி நிக்கிறானோ? யாருக்குத் தெரியும் சண்டையில நிக்கிறவங்கள் சிலநேரம் காட்டுக் காலயும் தப்பிருவாங்கள். நீ இங்க அவனப் பாத்துக் கொண்டு கிட'' என்றுபொரிந்து தள்ளினார் தாயார்.

"அம்மா நான் தெளிவாய்த்தான் சொல்றனம்மா. தங்கம் வராமல் நான் எந்த முடிவும் எடுக்கமாட்டன்.''

"என்னடி நீ. சாகிற கட்டத்தில நிண்டு கொண்டிருக்கிறம். இப்ப போய் தங்கமும் பவுனும் எண்டு கொண்டு நிக்கிறாய். உனக்கு அறிவிருக்கா?'' என்று இருபது தறப்பாள் கொட்டில்களுக்குக் கேட்டச் சத்தமிட்டாள் தாய்.

"இல்லம்மா. எனக்கு அறிவே இல்ல. நான் போறன். தங்கம் வரும்போது நானும் வாறன். நான் எப்பிடியும் போறனம்மா. நீங்கள் இனி என்னப் பற்றிக் கவலப்படாமல் தம்பியோட போங்க.''

அப்படிச் சொல்லும்போது அவளுக்கே தெரியாது தான் எங்கே போகப் போகிறாள் என்று. உடைகளைத் தூக்கி பையொன்றினுள் திணித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டாள். ஓவென்று அழுத அம்மாவை அணைத்துக் கொண்டு தானும் அழுதாள். பின்பு தன் துவிச்சக்கர வண்டியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.

புதிய போராளிகள் இணையும் செயலகத்திற்குச் சென்றாள் மாலா. அங்கிருந்த செல்வி என்ற போராளி அவளை அழைத்து இருத்தி கதைகேட்டாள்.

"அக்கா என்னை இயக்கத்துக்கு சேருங்கோ. எனக்கு பயிற்சியெல்லாம் தேவையே இல்லையக்கா. கிராமப் பயிற்சியில சூட்டுப் பயிற்சியெல்லாம் செய்திருக்கிறன்'' என்றாள் தெளிவாக. அந்தப் போராளியே மாலாவை அதிசயமாகப் பார்த்தாள்.

"என்ன வேலை தந்தாலும் செய்விங்களா தங்கச்சி?'' என்றாள் போராளி.

"ஒம்'' என்று திடமாக வந்தது மாலாவின் பதில்.

"அப்ப என்னோட ஒருக்கால் வாங்க'' என்ற செல்வி மாலாவுடன் அதே துவிச்சக்கர வண்டியில் முள்ளியவளை மருத்துவமனைக்குச் சென்றாள்.

அப்போது அங்கு இடம்பெயர்ந்துவந்து இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனையை மாஞ்சோலை மருத்துவமனை என்பார்கள். அது முன்னர் முல்லைத்தீவில் மாஞ்சோலைக்கு மத்தியில் இயங்கியதால் வந்த காரணப் பெயர்போலும். அதற்கு முதல்நாள் செல்வியில் பட்டு உள்நுழைந்த சிதறுதுண்டை எடுக்கப் போன போதான மருத்துவர்களின் சம்பாசனைதான் செல்வியை இப்போது மாலாவுடன் அங்கே அழைத்துச்செல்கிறது.

சத்திரசிகிச்சைக் கூடத்தில் ஒரே நேரத்தில் எட்டுப் பத்துப் பேரைக் கிடத்தி வெட்டிக்கொத்தி சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள் பலர். மயக்க மருந்தோ விரைப்பூசியோ ஏற்றப்படாமல் காயக்காரர்கள் குளறக் குளற கத்தரிக்கோல்களும் கத்திகளும் காயங்களில் இறங்கின. கவ்விகளை பழுத்துக்கிடக்கும் காயங்களில் சொதக்கெனக் குற்றிச் சுழற்றி உள்ளிருந்த சன்னங்களையோ சிதறு துண்டுகளையோ கவ்விப்பிடித்து இழுத்து வெளியில் போட்டார்கள். அந்தக் காயம்பட்ட மனிதர்களின் அலறல் ஒலிகளோ காதுச் சவ்வுகளை அதிரச் செய்து அச்சத்தை ஏற்படுத்தின.

கசாப்புக் கடையொன்றைப்போல காட்சி தந்த அந்தச் சிகிச்சை அறையில் செல்வியும் நின்றபோதுதான் வைத்திய அதிகாரி வாசலுக்கு வந்தார்.

"மற்ற வோர்ட்டையும் நானேதான் கவனிக்க வேணுமெண்டால் இந்த வேலைகள எல்லாம் யார் பாக்கிறது? பொறுப்பாத்த ரெண்டு நேர்ஸ்மாரும் இரவு நந்திக் கடலால உள்ள போட்டுதுகளாம். இப்பவே நாலைஞ்சு டெலிவரிகேஸ்கள் இருக்கு '' என்றுவிட்டு சிகிச்சைக் கூடத்தில் நின்ற ஏனைய மருத்துவர்களைப் பார்த்தார். அனைவரும் தத்தம் முன்னால் கிடந்த காயக்காரர்களுக்குச் சிகிச்சையளிப்பதிலேயே குறியாய் இருந்தார்கள். மருத்துவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிலர் விரக்தியாகப் புன்னகைத்துவிட்டு தம் கடமைகளிலேயே இறங்கிவிட வைத்திய அதிகாரி அங்குமிங்கும் நடைபழகினார்.

"சே. இப்பிடி இக்கட்டான நேரத்தில கையவிட்டிட்டுப் போகுதுகளே. மனிதாபிமானம் இல்லாததுகள். ரெண்டுபேரும் ஒண்டாப் போட்டுதுகளே. அதுகளப் போராளிகள் சுட்டுக் கொண்டாலும் தப்பில்லை. அதுகள நம்பி இங்க எத்தினி சனம் கிடக்கு. தங்கட உயிர்தான் பெரிசெண்டு ஓடுதுகள்''.

"சிலநேரம் போராளிகள் போராக்கள மறிச்சிருந்தாலும் கடலோரந்தான் எங்கயும் நிக்கிங்கள் டொக்டர். ஒருக்கால் வோக்கியில நான் கேட்டுப் பாக்கட்டோ'' என்றான் ஒரு போராளி மருத்துவன்.

"சே அந்த நாய்கள இனி கொஸ்பிட்ரலுக்க எடுக்க மாட்டன். இண்டைக்கு வந்தாலும் நாளைக்கு ஓடிருங்கள். எப்பிடியும் போய் துலையட்டும்'' என்று சொன்ன வைத்திய அதிகாரியில் நிதானமின்மையும் சினமும் அப்பட்டமாய்த் தெரிந்தது. பின்பு வெளியே சென்று நடைபாதையில் உலாத்தினார்.

"அவசரத்தில வார டெலிவரக் கேஸ இப்ப என்ன செய்யிறது?'' என்ற மருத்துவர் மீண்டும் சிகிச்சைக்கூட வாசலில் நின்றார். அவசியப்பட்ட நேரத்தில் இல்லாமல் போகும் சேவைகள் உயிர்களை அல்லவா குடித்துவிடும்? அந்த வைத்திய அதிகாரி செய்வதறியாது நின்ற கோலம் செல்விக்கு வேதனையாய் இருந்தது. அப்படி எத்தனை பணியாளர்கள் இடைநடுவில் விட்டுவிட்டு தம்முயிரை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று ஓடிப்போய்விட்டார்களோ? மருத்துவமனைக்குள் முக்கால்வாசிக் கடமைகளையும் செய்தவர்கள் போராளிகள்தான். மருத்துவச் செயற்பாட்டின் சகல இடங்களிலும் உயிர்காக்கும் போராளிகள் ஊன் உறக்கமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் போராளிகள் எல்லாம் ஏன் இவ்வளவுபேர் இங்கு நிற்கிறார்கள்? இவர்கள் களத்திற்குப் போகலாம்தானே? என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்குச் சனங்களின் உயிர்கள் மருத்துவப் போராளிகளின் கைளிலும் இருந்தன. அந்தக் கவலைதான் செல்வியை மருத்துவமனைக்கு மாலாவை அழைத்துச் செல்ல வைத்தது. போகும்போதே மாலாவிற்கு செல்வி விளக்கம் சொன்னாள்.

"மாலா நீங்கள் போராளியாகி செய்யிறதைவிடவும் மேலான பணியொண்டு செய்ய வேண்டியதாய் இருக்கிது. ஆஸ்பத்திரிலதான் இப்ப அதிகமாய் வேலை இருக்கு. டொக்டரோட கதைச்சி விடுறனம்மா. அவர் என்ன வேலை சொன்னாலும் செய்விங்கள்தானே என்ன?''

"எனக்கு ஒண்டுமே தெரியாதக்கா. எதை எப்பிடிச் செய்யணும் எண்டு சொல்லித் தந்தால் நான் செய்யிறனக்கா.''

"அது காணுமம்மா. அந்த மனசு காணும். ம். இதால திரும்புங்க. இதில சைக்கிள விடுங்கம்மா'' என்ற செல்வி சைக்கிளை விட்டுவிட்டு வந்த மாலாவை மருத்துவமனைக்குள் அழைத்துச்சென்றாள்.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (15)

ஆநதி

First Published : 12 Aug 2012

12kd19.jpg

"டொக்டரை சந்திக்க வேணும். வேலை விடயமாய்'' என்ற செல்வியின் குரலைக் கேட்டு வைத்திய அதிகாரியே எட்டிப் பார்த்து உள்ளே அழைத்தார். போனவர்களைக் கதிரையைக் காட்டி இருக்கச் சொல்லிவிட்டு, "சொல்லுங்கம்மா. என்ன விடயம்?'' என்றார்.

"இவட பேர் மாலா. போராளியாய் இணையப் போறன் எண்டு என்னட்ட வந்தா. உங்கட இடத்தில இப்ப போராளின்ர மனநிலைக்கொத்த பணியாளர்கள் தேவைப்படும் எண்டு நினைக்கிறன். அதாலதான் உங்களிட்டக் கூட்டிக் கொண்டு வந்தன். தானாய் வந்து போராளியாய் இணையப் போறன் எண்டு கேட்டவ. ஆனால் இவட குடும்பத்தில ஏற்கெனவே ரெண்டு மாவீரர் இருக்கிறாங்க. தாக்குப் பிடிக்கிற உள்ளம் இவட்ட இருக்கு''.

"ஓ நன்றியம்மா, நன்றி. தங்கச்சி என்ன வேலையம்மா செய்விங்கள்?'' என்ற மருத்துவரின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மாலா திகைத்து நின்றாள். பின்பு மெதுவாய் சொன்னாள்.

"டொக்டர் எனக்கு கொஸ்பிட்ரல் வேலை எண்டு எதுவுமே தெரியாது டொக்டர். ஆனால் சொல்லித் தாறதை சரியாய் செய்வன்.''

"குட். அது காணும். டெலிவரி கேஸஸ்தான் பாக்கிறதுக்கு ஆள் வேணும். சொல்லித் தாறன் செய்றிங்களா?'' என்ற மருத்துவரின் கேள்வி மாலாவுக்கு முழுமையாகப் புரியவில்லை. அவள் தன்னை அழைத்து வந்திருந்த செல்வியைப் பார்த்தாள்.

"அப்பிடியெண்டால் என்னக்கா?'' என்று கிசுகிசுத்தாள்.

"அதெல்லாம் செய்யலாம். நீ செய்வாய். ஓமெண்டு சொல்லம்மா'' என்றாள் போராளி. அவர்களை மருத்துவர் புரிந்து கொண்டு புன்னகைத்தார்.

அவரே தெளிவாகச் சொன்னார்.

"குழந்தை பெற்றுக் கொள்ள வார தாய்மாரைப் பராமரிக்க வேணும். அதெல்லாம் இப்ப சிம்பிள் வேலைதான். எல்லாம் நான் சொல்லித் தாறன். துணிச்சலாய் நிண்டு செய்தால் சரி'' என்ற மருத்துவரிடம் மாலா உடனே "ஓம்'' என்று தலையாட்டினாள்.

"இந்த வார்டில் இருந்து வேலை பார்த்த ரெண்டு நேர்ஸ்மாரும் விட்டிட்டுப் பொட்டுதுகளம்மா. இப்ப எனக்கு குழந்தைப் பேற்றுப் பகுதியிலதான் பொறுப்பான ஆக்கள் தேவைப்படுது. நீங்கள் போய் உங்களுக்குத் தேவையான உடுப்புகள எடுத்துக் கொண்டு உடனயே வேலைக்கு வாறிங்களா?''

"சரி டொக்டர். இன்னும் ஒரு மணித்தியாலத்தில வேலைக்கு வந்து சேர்ரன்.''

"நான் உங்களுக்குச் சம்பளமும் போட்டுத் தரலாமம்மா. உடன வந்து சேருங்க.''

"சரி டொக்டர்'' என்றுவிட்டு வெளியே வந்த மாலா, போராளி செல்வியின் கையைப் பற்றிக் கொண்டாள்.

"நன்றியக்கா. நீங்கள் இங்கால வந்தால் என்னையும் சந்திச்சிட்டுப் போங்க.''

செல்வி புன்னகையுடன் அவளது நன்றியை ஏற்றுக் கொண்டு, "நல்லாய் வேலை செய்து டொக்டரிட்ட நல்ல பேர் எடுக்கணும். என்ன?'' என்று விடை கொடுத்தாள்.

அந்த மாலாதான் டெலிவரி என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் வேலையைப் பொறுப்பெடுத்த மாலா - முப்பதே நாட்களுக்குள் ஐம்பதுக்கு மேற்பட்ட பிரசவங்களைப் பார்த்தாள். ஆரம்பத்தில் அச்சமும் அருவருப்பும் அவளை வதைத்தாலும் இப்போது பிரசவம் பார்ப்பது அவளுக்கு கை வந்த கலை மாதிரி ஆகிப் போனது. இரவு பகல் என்றில்லாமல் கர்ப்பிணிகளோடு மினக்கெட்டாள். நேரம் கிடைத்த போதெல்லாம் சத்திரசிகிச்சைக் கூடத்தில் மருத்துவர்கள் அணிவதற்கான மேலாடைகளையும் தொப்பிகளையும் வாய் மூக்கிற்கான துணியினாலான கவசங்களையும் தைத்துக் கொடுத்தாள். கால நேரம் பாராமல் அவளும் கடமை செய்தாள். அன்றைய நாட்களில்தான் அவளுடைய தங்கம் வீரச்சாவு என்ற செய்தி வந்தது. துடித்துப் போனாள் மாலா. அழுகையும் கண்ணீரோடும் நின்ற அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

வைத்திய அதிகாரியே வந்து அவளுக்கு ஆறுதல் சொன்னார்.

"வீட்ட போயிட்டு வரப் போறிங்களாம்மா? வேணுமெண்டால் போயிட்டு வாங்களன். நாளைக்கு காலமை இங்க நிண்டால் காணும்'' என்றவர் அவளின் கையில் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார்.

மாலா வீட்டுக்குப் போனபோது வீட்டில் எந்தப் பரபரப்புமில்லை. தாயாரோ தம்பியோ எதையும் புலம்பவில்லை. அவளை நலம் விசாரித்தார்கள். சாப்பிடச் சொன்னார்கள். ஆகவே அறிவித்தல் தர இன்னும் எவரும் வீட்டுக்கு வரவில்லை. அவன் இவளின் முகவரியைத்தான் கொடுத்திருக்கிறான். அவனுக்கு ஏதுமென்றால் இந்த முகவரிக்குத்தான் அறிவிப்பார்கள். அவனது சாவு உண்மையென்றால் இந்நேரம் தேடிவந்து சொல்லியிருப்பார்களே. தங்களுடைய காதலைத் தெரிந்த அவனுடைய நண்பர்கள் இந்நேரம் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருப்பார்களே.

ஒருவரும் வராத காரணத்தால் தங்கம் சாகவில்லை. அல்லது அந்தச் செய்தி இன்னும் அவன் சார்ந்த எவருக்கும் உறுதியாகத் தெரிய வரவில்லை. அன்றிரவு முழுவதும் மாலா ஒருவருக்கும் தெரியாமல் அழுதுகொண்டே கிடந்தாள். மருத்துவமனையிலேயே நின்றிருக்கலாம்போல இருந்தது. விடிந்தவுடன் போய்விடவே விரும்பினாள். அம்மா ஆற்றிக் கொடுத்த கோப்பியை மட்டுமே குடித்தாள்.

அம்மாவுக்குப் பணம் கொடுத்தாள்.

"கொஸ்பிட்ரல்ல தானம்மா நிப்பன். போட்டு வாரன்'' என்றவள் மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தாள். பிறந்ததிலிருந்து சேர்ந்துவாழ்ந்த அம்மாவால்கூட தரமுடியாத ஏதோவொரு ஆறுதலை சில நாட்களே அறிமுகமான அந்த வேலைத்தளம் தருவதாய்ப்பட்டது. மாலா, மாங்குயில் என்ற போராளியிடம்தான் மகப்பேற்றுப் பகுதியில் கடமையாற்றினாள். இப்போது மாங்குயிலைக் கண்டதும் அவளிடம் சொல்லிக் கொண்டு ஒருமூச்சு புலம்பித் தீர்த்தாள் மாலா.

மாலை மயங்கிய கடினமான பொழுதொன்றில் கர்ப்பிணிப் பெண்ணொருவரைத் தூக்கிக் கொண்டு ஒருவர் ஓடிவந்தார். அந்தக்கணமே குழந்தை பிறந்துவிடும்போல் இருந்தது. மாங்குயிலும் மாலாவும் மருத்துவருக்குச் சொல்லியனுப்பிவிட்டு அவசர சிகிச்சைக்கு அப்பெண்ணைத் தயார்ப்படுத்தினார்கள்.

"அடுத்த மாதம் தானக்கா திகதி. இண்டைக்கு எங்கட பக்கம் செல் பராஜ் பண்ணிப் போட்டான். இவ சரியாப் பயந்திட்டா. அதான் பயமாய் இருக்கிதக்கா?'' என்று பரிதவித்தான் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தவன்.

அந்தப் பெண்ணின் முகத்தில் அச்சம் மட்டுமே அப்பிக் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் வந்ததால் பிரசவத்துக்குரிய எந்தப் பொருளையுமே கொண்டு வந்திருக்கவில்லை. மாங்குயில்தான் வந்திருந்தவரிடம் கேட்டாள், "நீங்கள்தான் இவட கணவரா?''

"இல்லக்கா. தம்பி. அக்காட மனுசன் போன கிழமை செல்லடியில அம்பிட்டு செத்திட்டார்.''

அவனிடம் போய், "மகப்பேற்றுக்கான பொருட்களைச் சேகரித்து வா'' என்று சொல்லக் கூடிய மனநிலையில் மாங்குயிலுமில்லை. அவளே ஓடோடிச் சென்று தங்கள் மருத்துவமனைக் களஞ்சியத்தில் தேவையான பொருட்களைத் தேடிப் பொறுக்கினாள். மலையாய் குவிந்திருக்கவேண்டிய களஞ்சியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலப்பல துணிமணிகளே கிடந்தன. தாய்க்கும் சேய்க்கும் தேவையான போர்வையையும் துவாலைகளையும் எடுத்து வந்தாள். மாலாவுக்கு இப்போது வேலைதான் மருந்து. அவளது கவலைகளை நினைக்கக்கூட நேரமற்றுப் போன மருத்துவமனைச் சூழலில் தன் நாட்களையும் கரைத்துக் கொண்டு தன்னை மறந்தாள் மாலா.

திடுதிப்பென முள்ளிவாய்க்கால் மருத்துவமனையிலும் எறிகணைகள் விழத்தொடங்கின. அந்த மருத்துவமனையின் இருப்பும் கேள்விக்குறியானது. காயப்பட்டவர்களில் பலர் மீண்டும் காயப்பட்டார்கள். பலர் அங்கேயே உயிரையும் இழந்தார்கள். மருத்துவமனை இயங்கிய பாடசாலையின் கட்டிடங்கள் பகுதி பகுதியாய் உடையத் தொடங்கின. அங்கு பணியாற்றிய பல பணியாளர்களும் காயமடைந்தார்கள்.

அந்த மருத்துவமனையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில்தான் மருத்துவப் போராளி செவ்வானம் உயிரிழந்தாள். செவ்வானம், அழகான அற்புதமான போராளி. எப்போதும் புன்னகையுடன் வலம் வந்த செவ்வானம் நீண்டகால மருத்துவ அனுபவம் பெற்றவள். பின்தங்கிய கிராமங்களுக்கான மருத்துவ சேவைக்காக தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் செயற்படுத்தப்பட்ட நாட்களிலிருந்து ஒரு மருத்துவமனைக்கே பிரதான மருத்துவராகக் கடமையாற்றிய பொறுப்பு வாய்ந்த போராளி செவ்வானம். அந்த அருமையான மருத்துவரை இழந்த சோகம் மருத்துவமனை முழுவதிலும் தெரிந்தது.

வைத்திய அதிகாரி மருத்துவமனையை இடமாற்றம் செய்யத் தீர்மானித்தார். ஆனால் மக்கள் தொகையால் பிதுங்கி வழியும் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் தறப்பாள் கொட்டிலொன்று போடக் கூட இடமில்லையே. ஆகவே பணியாளர்களை ஆங்காங்கே ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளில் சென்று சேர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டார். அனைத்துப் பணியாளர்களுக்குமான கொடுப்பனவுகளையும் கொடுத்து தற்காலிகமாகச் சேர்ந்து பணி செய்த மாலா போன்றவர்களுக்கான ஆதாரப் பத்திரங்களையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அதன் பின்பு அவரும் தன் மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு நடையைக் கட்டினார். அவ்வளவுதான் மாலாவின் மருத்துவ சேவைக்காலம். ஒரு கனவுபோல ஆரம்பித்து முடிந்துவிட்டது. தாயாருடன் வந்துசேர்ந்து கப்பலடியில் ஒரு தறப்பாளுக்குக்கீழ் இருந்த மாலாவை அறிமுகமான உடனேயே சுமதிக்கு பிடித்துப் போனது.

அதிர்ந்து கொண்டே இருக்கும் வேட்டோசைகளும் குண்டுகளும் எறிகணைகளும் எந்த உயிருக்கும் உத்தரவாதமில்லை என்பதை கணத்துக்குக் கணம் சொல்லிக் கொண்டிருந்தது.

சுமதிக்குத் தெரிந்த போராளி மருத்துவர்கள் பலர் பணியிடத்திலேயே உயிரிழந்தார்கள். சாவடைந்த ஒருவருக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரங்கள் குறைந்து போயின. சாவுகள் சாதாரண நிகழ்வாகிப் போயின. மருத்துவமனைப் பகுதி முழுவதிலும் தாராளமாகப் பிணங்கள் கிடந்தன. கிடப்பதில் பிணங்களெவை இன்னும் உயிரிருக்கும் உடல்கள் எவை என கண்டுபிடிப்பதே சிரமமாகிப் போனது.

முள்ளிவாய்க்கால்வரை பிணங்களை அகற்றும் கடமையை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பொறுப்பெடுத்துச் செய்ததுதான். பின்னர் அந்தப் பணியாளர்களும் காணாமல் போய்விட்டார்கள். அவர்களின் பிணங்கள்கூட அநாதைப் பிணங்களாக நாறிக் கிடக்கின்றனவோ, யாரறிவார்?

மருத்துவமனையாக இயங்கிய வளாகத்துள் கிடக்கின்ற பிணக்குவியலை அகற்ற வேண்டிய தேவையும் இப்போதில்லை. அடிக்கடி இடம் மாறி மருத்துவமனையே சென்றுவிடுமே. ஒரு பனங்கூடலோ ஒரு பற்றைக்காடோ கிடத்த ஒரு சிறிய இடம் கிடைத்தால்போதும் நான்கு காப்புக்குழிகளை வெட்டி தறப்பாள்களை மேலும் கீழும் விரித்தால் அதுதான் மருத்துவமனை. அதுதான் சத்திரசிகிச்சைக்கூடம். அங்கேயும் சாவுகள் நடக்கும். பிணங்கள் நிறையும். அடுத்த இடம் மாறுவார்கள். முன்னர் கிலோ மீற்றர் கணக்கான தூரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இப்போது மீற்றருக்கு மீற்றர் இடம் மாறினார்கள். சாவுகளைப் போலவே இடப்பெயர்வும் நிமிடத்திற்கு நிமிடம் நடந்து கொண்டுதான் இருந்தது.

மருத்துவமனையின்றி பனங்கூடல் முழுவதும் காயக்காரர்களால் நிரம்பிவிட்டபோது சுமதி, அமுதா போன்றவர்களும் போராளிகளுடன் நின்று ஒவ்வொரு காப்பகழியாகச் சென்று மருந்து கட்டினார்கள். மருந்தென்றால் உண்மையாகவே காயம் துடைத்து மருந்து வைத்து காயம் கட்டுவதில்லை. கிடைக்கும் சிறுதுண்டுப் பஞ்சையோ கோûஸயோ வைத்து குருதி அதிகம் வெளியேறாமல் கட்டிவிடுவது மட்டும்தான்.

ஓரளவுக்கு உயிர் தப்பக் கூடியவர் என்று இனங்கண்டால் வலி நிவாரணியையோ ஊசியையோ போட்டுவிட்டார்கள். மரணத்தின் தருவாயில் கிடப்பவர்களுக்கு கருணைக் கொலை செய்யக்கூட அங்கு மருந்தில்லை. பொழுதுமில்லை. எவருக்காகவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள முடியாது. உடலை குனிந்து கொண்டுதான் ஒரு பனையடியில் இருந்து இன்னொரு பனையடிக்கு மாற வேண்டும். நிமிர்ந்து நடந்தால் தலையை எறிகணை கொண்டு போய்விடலாம். அல்லது ஆயிரக்கணக்கில் சீறி வரும் சன்னங்களில் ஒன்றாவது தலையில் இறங்கிவிடலாம்.

எந்தக்கணமும் சாவு வரலாம். செத்தால் பரவாயில்லை. சாகத் தயார்தான். ஆனால் காயப்பட்டு விட்டு மட்டும் சாகாமல் கிடந்து விடக்கூடாது என்றுதான் அதுவரை காயமடையாதவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

எவருக்குமே சொல்லிக் கொள்ளாமல் போரின் அந்தக்கட்டம் முடியப் போகிறது என்ற உண்மையை அவர்களில் எவரும் அறியவில்லை.

இன்னும்தான் நம்பினார்கள் அந்த அப்பாவிகள். ஐ.நா தலையிடும்; அமெரிக்கா தலையிடும்; உலகம் இந்தக்கொலைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்காது என்று கதைத்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஐ.நாவின் எந்த அதிகாரிக்காவது மனச்சாட்சி துடித்ததா? உலகத்தின் எந்த நாட்டுத் தலைவனுக்காவது இதயம் கொதித்ததா? என்று எவருக்கும் தெரியாது. பிணங்களுக்குள் கிடந்த காயமடைந்தவர்களுக்கு அந்த மருத்துவப் போராளிகளின் கைகள் ஓயாமல் சிகிச்சை செய்து கொண்டுதான் இருந்தன. இரவில்கூட ஒருகண் மூடவில்லை. காயம்பட்டவர்களோ எறிகணைகளோ அவர்களை ஒருகணமும் ஓய்வெடுக்க விடவில்லை. அன்றைய நாட்களில் அமுதா பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

காயம்பட்டு வருபவர்களில் பலருக்கும் பல மருத்துவர்களைத் தெரிந்திருந்தது. அதனால் அவர்களின் பெயரைச் சொல்லிக் கதறுவார்கள். அப்படி எல்லா மருத்துவர்கள் மட்டுமல்ல, சாதாரண தாதிகளும் அகப்பட்டுக் கொள்வார்கள். தாராளமாகக் கொடுப்பதற்கு பனடோல்கூட இல்லாத நிலையில் இருக்கும் அவர்கள் நடந்து போகையில் நிலத்தில் கிடப்பவர்கள் காலைப் பிடித்துக் கொண்டு கதறுவார்கள்.

"டொக்ரர் எங்களக் காப்பாத்தாட்டியும் பரவால்ல டொக்டர். சாக்கொல்ல மாட்டிங்களா தாங்கேலாமல் இருக்கே. நஞ்சூசியாவது அடிச்சுவிடுங்க டொக்டர்.''

அமுதாவால் கணநேரமும் அமைதியாக இருக்க முடியாது. "அப்பாடா' என்று நிலத்தில் குந்தினாலும் அடுத்த செகண்டே அவளது பெயர் கூவியழைக்கப்படும்.

அமுதாக்கா அமுதா அமுதாக்கா என்ற வேதனையும் அவலமுமான குரல்கள் அவளின் முழு நேரத்தையும் வலி நிரம்பியதாயே வைத்திருந்தன.

"அமுதாக்கா எனக்கு உயிர் வேணாமக்கா. ஊசியொண்டப் போட்விடனக்கா. என்ர அக்கா குப்பியொண்டாவது தாக்கா'' இப்படியெல்லாம் கதறுவது போராளிகள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான்.

"அமுதாக்காச்சி என்னடி செய்யிறாய்? எனக்கொரு ஊசி போடனடி அக்காச்சி'' அவள் அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் குழிக்குள் மறைந்திருந்தாலும் குரல்கள் மூளையை வருத்தும். தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்பாள். யாருக்கு எதைச் செய்வது என்றறியாமல் தத்தளித்துக் கொண்டு நின்றாள். ஏலுமானளவு ஓடிப்போய் உதவத்தான் செய்தார்கள். அமுதாவை அழைத்தவர்களை சுமதியும் சுமதியை அழைத்தவர்களை அமுதாவும்கூட கவனித்தார்கள். நூற்றுக்கணக்கான காயக்காரரை இல்லாத மருந்துகளுடன் எப்படித்தான் சமாளிப்பது?

அமுதாவுக்காகச் சில ஆண்டுகளாகக் காத்திருந்து அவளின் பிடிவாதம் தெரிந்தபின் விலகி திருமணம் செய்துவிட்ட ஒருவனும் காயத்தோடு கிடந்தான். அவனுடைய இரண்டு குழந்தைகளும் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள். அவன் அமுதாவிடம் கெஞ்சினான்,

"என்ர ஒரு பிள்ளையையாவது காப்பாத்தித் தாங்க அமுதா. நான் செத்தாலும் பரவாயில்ல அமுதா. என்ர ரத்தத்த எடுத்து ஏத்தியாவது ஒரு பிள்ளைய காப்பாத்துங்க ப்ளீஸ் என்ர மனைவிக்காக'' என்றவன் அருகில் நின்றவளின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

அவனது மனைவியும் குழறி அழுதாள். உடனேயே அமுதா அவனது இரண்டு குழந்தைகளையும் பார்வையிட்டாள். ஓரளவு உயிர் பிழைக்கக்கூடிய நிலையில் இருந்த ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். அவசரமாகக் காயங்களை துடைத்து வெறுந் துணிகளால் கட்டுப் போட்டு குருதியின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தினாள். பனடோல்கள் சிலவற்றை காகிதத்தில் சுற்றிக் கொண்டு குழந்தையையும் தூக்கிக் கொண்டுவந்து அவனது மனைவியிடம் கொடுத்தாள்.

"பிள்ளையக்கொண்டு உடனபோங்க. இதில நிக்கவேணாம்'' என்று விரட்டாத குறையாகச் சொன்னாள் அமுதா.

(தொடரும்)

  • தொடங்கியவர்

உயிரே உயிரே.... (16)

ஆநதி

First Published : 19 Aug 2012

18kdr7.jpg

"என்ர மூத்தவனம்மா. இவனையும் ஒருக்கால் பாருங்கம்மா. அவரக் காப்பாத்துங்கம்மா'' என்று கண்ணீருடன் கதறினாள் அந்தப் பெண்.

"சொன்னால் கேளுங்க. அவை பிறகு வருவினம். முதல்ல நீங்க இந்தப் பிள்ளையக் கொண்டு இவடத்தவிட்டு வெளிய போங்க'' என்றவாறு அவளை முதுகில் தள்ளிக் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பி வந்தவளிடம் பேச்சு மூச்சற்று தன்னருகில் கிடக்கும் தன் மூத்தவனைக் காட்டி, "அமுதா என்ர மகன் செத்திட்டானா?'' என்றான் நம்பிக்கை இழந்தவனாய்.

அமுதா அவனைப் பார்த்து ஆமெனத் தலையசைத்தாள்.

"என்ர பிள்ளைய ஒருக்கா எனட்டத் தூக்கித் தாங்க அமுதா'' என்று கெஞ்சிய அவன் எழுவதற்கு எத்தனித்தான். அவனால் தலையை மட்டும்தான் சற்றுத் தூக்க முடிந்தது. உடலின் வலிமுழுவதும் அவனது முகத்தில் தெரிந்தது. அவனது உடலின் காயங்களிலிருந்து குருதி தாராளமாக வெளியேறிக் கொண்டிருந்தது. தனது காயங்களைக் கட்டுவதன் மூலம் அவனை யாராலும் காப்பாற்றிவிடமுடியாது என்பதை அவனும் உணர்ந்தான் போலும்.

"என்ர பிள்ளைய ஒருக்கா தூக்கிக் காட்டுங்க. அவன்ர முகத்தை காட்டுங்க அமுதா.''

அவனுடைய இறுதி ஆசையை அவளால் மறுக்க முடியவில்லை. மெதுவாக அந்தக் குழந்தையைத் தூக்கினாள். மூன்று வயதுக் குழந்தை உயிரறுந்த மலர்ப் பிணமாய் அமுதாவின் கையில் கிடந்தது. அருகில் இழுத்து அந்தக் குழந்தையின் வதனத்தை கண்களில் நிறைத்தவன் நெற்றியில் தன் குருதி தோய்ந்த விரல்களால் வருடினான். அவனது கண்கள் மழையெனப் பொழிந்தன. பெற்றவனல்லவா? தன் மழலையின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான். அந்த முத்தத்தின் மூலம் தன் அத்தனை பாசத்தையும் கொட்டிக் கொடுத்தானா? அவனது பாசத்தின் துயரத்தை அமுதாவால் தாங்கவே முடியவில்லை. அவளது பார்வையையும் கண்ணீர் மறைத்தது. அவனும் வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன் கேட்டான்.

"என்ர பிள்ளைய புதைச்சி விடுறிங்களா அமுதா?''

'ஆம்' எனத் தலையசைத்த அமுதா குழந்தையுடன் அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தாள். அவள் ஏந்திச் சென்ற குழந்தைப் பிணத்தை குவிந்து கிடந்த பிணங்களோடு வைத்தாள். ஆங்காங்கு காயப்பட்டபடி கிடந்தவர்கள் 'டொக்டர் டொக்டர்' என்று அவளையும் கூவியழைத்தார்கள். அவள் நிற்காமல் ஓடிவந்து சத்திரசிகிச்சைக் கொட்டிலுக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள். ஓரமாக நின்று ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்தாள்.

அவனது கண்ணீரும் குழந்தை பிணத்தை அவன் கொஞ்சிய விதமும் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத துயரமாக மனதில் வலித்தது. அதை மறக்க நினைத்துத்தான் மீண்டும் காயக்காரரைப் பார்க்கப் போனாள். அங்கேயும் அவளுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

"டொக்டர் என்ர பிள்ள சாகேல்லத்தானே டொக்டர்? வடிவாப் பாருங்க டொக்டர். என்ர பிள்ளைக்கு உயிர் இருக்கிதுதானே டொக்டர். பாருங்க டொக்டர் பாருங்க டொக்டர் '' என்று கதறிக் கொண்டு நின்றாள் ரதி.

பல ஆண்டுகளாகப் பழக்கமான ரதியை இந்த நிலையில் கண்டது அமுதாவுக்குத் தாங்க முடியவில்லை. ரதியும் தேர்ந்த மருத்துவத் தாதிதான். இருந்தும் அவளால் பிள்ளையின் உயிர்த்துடிப்பை நாடி பிடித்தறிய முடியவில்லை. ரதியின் கணவன் மரணமடைந்தும் ஒரு வாரம்கூட கழியவில்லை. இதோ இப்போது இரண்டு குழந்தைகளையும் நிலத்தில் கிடத்திவிட்டு மருத்துவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

"டொக்டர் என்ன டொக்டர். என்ர பிள்ளைகள பாக்க மாட்டிங்களா டொக்டர்? ட்ரீட்மென்ட் செய்யுங்க டொக்டர். ஒண்டையெண்டாலும் காப்பாத்தித் தாங்க டொக்ட..ர்.. எனக்காகச் செய்யுங்க டொக்டர்'' என்று அவள் உயிரே உருக அழுதாள்.

அமுதாவைக் கண்டதும் ஓடோடி வந்து அவளின் காலில் விழுந்தாள் ரதி.

"அமுதா அமுதா என்ர குஞ்சுகளக் காப்பாத்தித் தா அமுதா. நான் கேக்கக் கேக்க டொக்டரப் பார் சும்மா நிக்கிறார். நீயாவது ட்ரீட்மென்ட் செய் அமுதா'' என்ற ரதியின் ஓலம் அத்தனை எறிகணை வெடிப்பொலிகளையும் விஞ்சி எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமுதா ரதியை தள்ளிவிட்டு குழந்தைகளிடம் ஓடினாள். அவசரமாகக் குழந்தைகளைப் பரிசோதித்த அவளுக்குக் கைகள் நடுங்கின. செத்துப் போய்விட்ட குழந்தைகளைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு, 'உயிராகத் தா' என்றால் எந்த மருத்துவரால்தான் உயிர்கொடுக்க முடியும்? செய்வதறியாது குழந்தைகளின் பிணங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா.

"அமுதா... அமுதா நீயும் என்னய கைவிட்டிராத அமுதா'' என்ற ரதி நிலத்தில் கிடந்து அமுதாவின் பாதங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

அவளொரு மருத்துவத் தாதியாக இருந்தும் தன் பிள்ளைகள் இறந்துவிட்டதை அவளால் இன்னுந்தான் உணர முடியவில்லையா? அப்போதுதான் அமுதா மற்றவர்களை அவதானித்தாள். ரதியைத் தெரிந்த எவருமே அவளின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து நின்று கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டாள். அமுதாவின் இதயம் அந்தக் கணம் கல்லாகிக் கனத்தது. என்ன பாவம் செய்தாள் இந்தப் பெண்? படித்து முடித்த காலத்திலிருந்து மருத்துவப்பணிதானே செய்தாள். எத்தனை உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கிறாள். இப்போது அவள் நிற்கும் நிலை?? ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்பார்களே? இவள் எத்தனை பிள்ளைகளுக்குத் தன் குருதியையே கொடுத்து உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறாள். இருந்தும் அவளின் இரண்டு குழந்தைகளுமே பறிக்கப்பட்டு விட்டார்களே. கணவனையும் இழந்து பிள்ளைச் செல்வங்களையும் இழந்து தன்னந் தனிமரமாய் நிற்கிறாளே. சாவு இவளை மட்டும் எதற்காக விட்டுவைத்தது? என்றெல்லாம் அமுதாவுக்கும் ரதி மீது அனுதாபப்பட மட்டுமே முடிந்தது.

ரதியை கை பிடித்துத் தூக்கி அழைத்துச் செல்ல முயன்றாள்.

"என்ன அமுத.. என்ர பிள்ளைகளப் பாக்கமாட்டியா அமுதா?'' என்று கெஞ்சிய ரதியோ குருதியால் நனைந்திருந்தாள்.

அவள் அழும் கண்ணீர் அவளில் படிந்திருந்த குருதியைக் காயவிடாமல் ஈரமாகவே வைத்திருந்தது.

"முதல்ல நீ வா ரதி'' என்ற அமுதா அவளை தரதரவென இழுத்துச்சென்று குழந்தைகள் கண்ணில்படாத இடத்தில் இருத்தினாள்.

"ரதி உனக்கொண்டும் நான் புதுசாய் சொல்லத் தேவையில்லை. ட்ரீட்மென்ட் செய்யக்கூடிய கட்டத்தில உன்ர பிள்ளைகள் இல்லை எண்டது உனக்குத் தெரியேலையா? கொஞ்சம் யோசிச்சுப்பார். நீ எத்தின பேருக்கு ட்ரீட்மென்ட் செய்திருக்கிறாய்? எத்தினை பேரை செய்யயேலாமல் விட்டிட்டு.. விட்டிட்டு ஓடியிருக்கிறாய்? தயவுசெய்து அழாத ரதி. இப்ப நான் தண்ணி ஒழுங்கு படுத்துறன். நீ கட்டாயமாய் குளிச்சிட்டு உடுப்ப மாத்திறாய். சரியா?'' என்று தன்னிடமிருந்த சவர்க்காரம் உடை என்பவற்றைக் கொடுத்து கிணற்றடிக்குத் தள்ளிச் சென்றாள்.

"சரி அமுதா நான் குளிக்கிறன் அமுதா. ஆனால் உன்னத்தானமுதா நம்பியிருக்கிறன். நீ ஓடிப் போய் என்ர பிள்ளைகள தியேட்ருக்கு எடு. என்ன?'' என்றபடியே தலையில் தண்ணீரை ஊற்றினாள்.அடுத்த ஐந்தாவது நிமிடமே அமுதாவை வந்து பிடித்துக்கொண்ட ரதி குழந்தையைப்போல கெஞ்சியழுதாள்.

"அமுதா என்ர பிள்ளைகள தியேட்டரால கொண்டந்தாச்சே? நான் பாக்கலாம்தானே? என்ர பிள்ளைகள்... பிள்ளைகள்'' என்று பிதற்றியவளை அமுதா பிடித்து இருத்தினாள்.

"ரதி உனக்கு விளங்கேலையாம்மா? பிள்ளைகளக் காப்பாத்த முடியேல்ல ரதி. அதுகளும் தங்கட அப்பாவோட நிம்மதியாப் போய்ச் சேந்திட்டுதுகள்'' என்று அமுதா சொல்லி வாய் மூட முதல் ரதி நிலத்தில் விழுந்து குளறத் தொடங்கினாள். பயித்தியம் பிடித்தவளாய் அழும் ரதியை பார்க்கப் பார்க்க வேதனையும் வெப்பியாரமும் பொங்கியது அமுதாவுக்குள். அவளது அழுகுரல் ஓலமாகி அத்தனை வேட்டோசைகளையும் வெடியோசைகளையும் விஞ்சி பேரண்டத்தை நிறைப்பதாய் இருந்தது.

ரதியைப்போல நூற்றுக்கணக்கான தாய்களின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒரு துளியேனும் கேட்டிருக்குமா?

அவளின் அழுகை இப்போதைக்கு ஓயப் போவதில்லை. அதற்காக அமுதா அங்கேயே குந்தியிருக்க முடியுமா? மெதுவாக ரதியின் தலை தடவிச் சொன்னாள்: "ரதி எனக்கு வேலை இருக்கடா. நீ இங்கயே இரு வாரன்'' என்று அவளை நிலத்திலேயே கிடத்திவிட்டுப் புறப்பட்டாள் அமுதா.

என்னதான் முயன்றும் அமுதாவால் நிதானமாக இருக்க முடியவில்லை. சுமதியைத் தேடிக் கொண்டு போனாள். ஒருவரை ஒருவர் கண்டதும் இருவரும் அழத் தொடங்கிவிட்டார்கள்.

"என்னால எதையுமே தாங்க முடியேல்ல அமுது. லோலோன்ர மனுசி அவன்ர கையில குப்பியக் குடுத்திட்டுப் போறா.''

"ஆர் மலைமகளா?''

"என்ன நடக்கிதெண்டே தெரியேல்ல. எங்கே போய் முடியப் போகுதோ?'' என்று பெருமூச்சுவிட்டாள் சுமதி.

"சுமதி வா போய் காயங்களைக் கட்டுவம். காயப்பட்ட சனங்களெண்டா வந்து மலையாக் குவியுது. இனிக் கப்பலும் வராது. கருமாதியும் வராது. தப்பிறதுகள் தப்பட்டும். ஏலுமானளவு ஏதாவது செய்வம் வா'' என்றவள் அங்கு நின்ற சிலரைப் பிடித்து சிகிச்சையளித்த காப்பகழியருகே கிடந்த பிணங்களை அகற்றினாள். காயப்பட்டவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து மருந்து கட்டச் சொல்லி கேட்டவர்களுக்கு காயந்துடைத்துக் கட்டுகளைப் போட்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு பனையோடும் பற்றையோடும் காப்பக குழிக்குள்ளுமாய் கிடந்த ஆயிரக்கணக்கான காயமடைந்தவர்களையும் எந்த மருத்துவர்களாலும் உபசரிக்க முடியவில்லை. என்றாலும் மாறி மாறி பலரையும் பார்வையிட்டார்கள். சுமதியும் அமுதாவும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருந்தார்கள். குறைந்தது பெனடோலையாவது கொடுத்து அவர்களின் ஆத்ம வலிக்குச் சிறிது ஒத்தடம் கொடுக்க விரும்பினார்கள். ஒருவரை பார்த்துக் கொண்டிருக்கும்போதே நிலத்தில் கிடக்கும் இன்னொருவர் டொக்டர் டொக்டர் என்று பின்னால் சட்டையைப் பிடித்து இழுத்தார்கள். எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலையிலும் அவர்களால் சும்மா இருந்துவிட முடியவில்லை.

அவர்களின் கண்கள் லோலோவைத் தேடின. லோலோ மருத்துவப் பிரிவில் ஒரு முக்கியமான போராளி. அவன் படையினரின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தான். அவனது காயங்கள் அவனை நடக்கவோ இருக்கவோ முடியாமல் படுக்கையில் கிடத்திவிட்டது. அவனது துணைவியான மலைமகள் ஓர் எழுத்தாளராக இருந்ததால் பலருக்கும் தெரிந்தவளாக இருந்தாள். லோலோவிடம் இவர்கள் சென்றபோது அவன் கரும்புகை குவிந்த ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு கிடந்தான். அவனருகேயே சில பிணங்களும் கிடந்தன. காயப்பட்டவர்களின் வேதனை அலறல்களிடையே அவன் தன் வேதனையைத் தாங்கிக் கொண்டு மெளனமாய் கிடந்தான். இவர்களை அருகில் கண்டதும் அவன் குப்பியை மறைத்தான்.அமுதாவுக்கு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

போராளிகள் காயப்பட்டவுடன் அவர்களிடமிருந்து குப்பியை பறித்தெடுப்பதெல்லாம் ஒரு காலம். இப்போது அப்படியில்லை. பறித்துவிட்டு இன்னும் இழுபட்டுச் சா என்று விட்டுவிடுவதா? எதுவானாலும் அது காயப்பட்டவரே முடிவெடுக்கட்டும் என்று விட்டுவிட வேண்டிய சூழலல்லவா இது?

"பறிக்க மாட்டன். வைச்சிருங்க. ஆனால் அவசரப்பட்டுக் கடிக்க வேணாம். ஏனெண்டா இங்க கிடக்கிற ஆயிரக்கணக்கான காயப்பட்ட ஆக்களும் குப்பி கடிச்சே சாக ஏலாதுதானே?'' என்றாள்.

அவன் சோகமாய்ச் சிரித்தான். அவர்கள் மீண்டும் தங்கள் கொட்டிலுக்குள் வந்து முடங்கியபோது இதயம் பாறையாய்க் கனப்பதை உணர்ந்தார்கள்.இப்படி இன்னும் எத்தனை நாட்களை எதிர் கொள்ள வேண்டி வருமோ?

கஞ்சியும் பருப்புத் தண்ணீரும் குருநெல் அரிசிச்சோறும் நாளுக்கு இரண்டுதடவை கிடைப்பதே கேள்விக்குறியாகிப் போனது. மருந்தும் ஆகாரமுமின்றி யாராலும் உயிர் வாழ முடியாது. படையினர் சொன்ன அத்தனை பாதுகாப்பு வளையங்களும் மரணத்தின் வளையங்களாகவே மாறி மாறி விரட்டினாலும் அடுத்த பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்க படையினருக்கும் இடமில்லை. ஆகவே மக்களை தங்களிடம் வரச்சொல்லி படையினர் அழைத்தார்கள். அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

கொல்வது மாதிரி கொன்று கொண்டே பாதுகாப்பது மாதிரி அழைத்துக் கொண்டும் இருந்தார்கள்.

போராளிகளோ, பொதுமக்களோ அடிப்படை உணர்வில் இப்போது ஒன்றுபோலவேதான் இருந்தார்கள். விட்டு விட்டு ஓடிப்போன போராளிகளும் இருந்தார்கள். நான் செத்தாலும் சாவனே தவிர ஆமியிட்டப் போகமாட்டன் என்று கதறிய பொதுமக்களும் இருந்தார்கள்.

அவளது கொட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிலில் கேட்ட அழுகைச் சத்தம் சுமதியை உலுப்பி எழுப்பியது.

"நீ வேணுமெண்டால் போ. போடா. ஆனா நான் வரமாட்டன். வரவே மாட்டன். என்ர குமருகளக் கூட்டிக் கொண்டு நான் கடலுக்க வேணுமெண்டாலும் விழுந்து சாகிறன். ஆமிட்ட மட்டும் வரமாட்டன். குமருகளக் கெடுத்ததக் கண்ணால பாத்தவடா நான் கண்ணால பாத்தவ. ஒருக்காலும் வரமாட்டன். நீ போ.''

அந்தக் குரலுக்குரிய பெண்ணின் தம்பியோ, மகனோ இவர்களையும் படையினரிடம் செல்ல அழைக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தாயின் மனவெடிப்புத்தான் அது.

சுமதி வாமனை நினைத்துக் கொண்டாள். வாமன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? பிணங்கள் குவியும் நந்திக் கடலோரம் நிற்பானா அல்லது பாதையெடுத்து அணியொன்று போகப் போகிறது என்று கதைக்கிறார்களே அங்கேதான் நிற்பானா? அவர்களோடு இவனும் போய்விடுவானா? அல்லது என்னைத் தேடி வருவானா? யாருக்குப் பாதுகாப்பு வழங்க யாரால் முடியும்? அவரவர் பாதுகாப்பே கேள்வியாகிவிட்ட இந்நிலையில் வாமன் ஏன் இன்னும் வரவில்லை? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வாமனைப்பற்றிய கவலை மட்டுமே இருந்தது.

சுமதிக்கு காதுகள் வலித்தன. வலிதாங்க முடியாமல் அமுதாவிடம் காட்டினாள்.

"சரியா நோகுது அமுது. ஸ்டெதஸ்கோப காதில மாட்டவே முடியேல்ல. ஒருக்கா பார்..''

பார்த்த அமுதா தன் காதுகள் எப்படியிருக்கும் என்பதையும் பார்த்தமாதிரி இருந்தது. ஏனெனில் அவளுக்கும் காதின் உள் மடல்கள் கன்றிச் சிவந்து வலித்தன.

"எனக்கும் சரியாய்த்தான் நோகுது சுமதி. ஸ்டெதஸ்கோப் தொடர்ந்து கொளுவுறதால தோல் உராய்ஞ்சு போட்டுது. இப்ப ஸ்டெதஸ்கோப்ப காதில கொளுவுறத நினைக்கவே உயிர் போகுது'' என்றாள் அமுதாவும்.

(தொடரும்..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.