Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நித்தியானந்த குருவும் சீடர்களும்

Featured Replies

த்தியானந்த குருவும் சீடர்களும் ஆர்.அபிலாஷ்

Abilash.jpg

ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன்

ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர். பாபுவின் “Sex,Lies, and Video Tape” என்கிற கட்டுரையை புதியகாற்று என்கிற பத்திரி கைக்காகத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றிக் குறிப்பிட்ட போது என் காதலி “தயவுசெஞ்சு அதைப் பண்ணாதே” என்று கெஞ்சினாள். அதனால் ஏதேனும் கேடு நேரும் என்று அவள் அஞ்சினாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவள் தீவிர சாய் பக்தை ஒன்றும் இல்லை; பெற்றோர் வற்புறுத்தினால் மட்டும் கோயிலுக்குப் போகும் வகை. அவள் நாத்திகை அல்ல; ஆஸ்திகையும் அல்ல. ஆஸ்திகமும் நாஸ்திகமும் ஐரோப்பிய வகைப்பாடுகள். இந்தியாவில் இருப்பவர்கள் மரபாளர்கள். மரபை ஒட்டி சிந்திப்பவர்கள்.

உண்மையில் சிந்தனை என்பதே ஒரு ஐரோப்பிய கருத்துநிலை. இந்தியர்கள் மரபை ஒட்டி சிந்திக்காமல் ஒழுகுபவர்கள். இதற்காக இந்தியர்கள் முட்டாள்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தர்க்க சிந்தனை, அலசல் இதெல்லாம் ஐரோப்பிய இறக்குமதிகள். இந்தியாவில் முன்னர் இதற்கு இடம் இருந்தது; ஆனால் ஒரு மிகச்சின்ன சிறுபான்மை மக்கள் தர்க்கரீதியாக மதத்தை எதிர்கொண்டார்கள். அவர்கள் தோற்று அழிந்தார்கள். இந்தியர்கள் ஒரு ஜீக்ஷீமீ-னீஷீபீமீக்ஷீஸீ நிலையில் இருப்பவர்கள். நவீன விழுமியங்கள் கொண்டு அவர்களை அளவிடவே கூடாது. சிசுக்கொலை, ஜாதி அடக்குமுறை, படிநிலை உள்ளிட்ட பல சீரழிவுகளை, அநியாயங்களை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்:

ஒரு அசல் இந்தியனுக்கு இதெல்லாம் சீரழிவே அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாய் பின்பற்றி வந்த ஒரு மரபின் தொடர்ச்சியாக யோசிப்பவன் அவன். இங்கு மெத்தப் படித்தவர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள்தாம் சிசுக்கொலையிலும் ஆணாதிக்கத்திலும் சாதியத்திலும் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். கல்வியை நாம் சம்பாதிக்கும் மார்க்கமாகப் பார்க்கிறோம். இது நம் கல்வி அமைப்பின் தவறு மட்டுமல்ல. பிரதானமாக கல்வியை நாம் ஒரு சிந்தனை மார்க்கமாகப் பார்க்க முடியாது. ஏன் என்றால் முன்னே சொன்னது போல் நமக்கு சிந்தனையில் ஈடுபாடில்லை. உடனே இந்தியாவில் தத்துவஞானிகள் இல்லையா என்று கேட்காதீர்கள். 99.99% இந்தியர்களைச் சொன்னேன். இங்கே ஒரு சிந்தனை கருத்தாக்கமாக வளர்ந்தால் அதை ஒரு மித்தாக மாற்றி கேள்வி கேட்காமல் பின்பற்றத் துவங்குவார்கள் - கதை, இதிகாசமாக, பெருங்கதையாடலாக மாற்றி அதையே வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஆர்த்தி ராவ்: தொன்ம சிந்தனையும் பெண்ணியமும்

ஆர்த்தி ராவ் என்கிற ஒரு நித்தியானந்தா சிஷ்யை அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பது நமக்குத் தெரியும். அவர் நித்தியானந்தா தன்னைப் பாலியல் ரீதியாய் பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். நீங்கள் ஏன் அதை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் அவர் மதுர பாவா எனும் ஒரு கருத்தாக்கத்தை வலியுறுத்தி என்னை ஈடுபட வைத்தார் என்கிறார். இந்த மதுரபாவா என்பது பக்தையைக் கடவுளின் காதலியாக சித்தரிக்கும் ஒரு கருத்தாக்கம். எல்லா உலக சமூகங்களிலும் இப்படியான கருத்தாக்கம் உள்ளது. கடவுளைக் குழந்தையாக, காதலனாகக் காண்பது இதில் பிரபலம். மீரா, ஆண்டாளில் இருந்து சமீபமாக ஏசுதாஸ் வரை இந்த மித்தை நீட்டித்திருக்கிறார்கள். சற்று உன்னிப்பாகப் பார்த்தால் இது ஒரு உருவகம் என்பது விளங்கும். இறைவன் எனும் பிரபஞ்ச உண்மையுடனான/நிலையுடனான உறவாடலை உக்கிரமாக சித்தரிக்க இந்த (காதல், தாய்-சேய்) உறவுநிலையை உருவகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கருத்துநிலை இப்படி உருவகமாக மாறிய உடன் இந்தியர்கள் அதை மறைமுக கருத்து என்று மறந்து தொன்மமாக மாற்றி விடுவார்கள். அடுத்து இந்த தொன்மத்தை நேரடியாக உணர்வுரீதியாக நம்புவார்கள். குருவுக்குத் தந்தை ஸ்தானம் கொடுப்பது, சாமியின் லௌகீக உருவான சாமியாரைக் கணவனாக வரிப்பது எல்லாம் இதன் விளைவுகள்தாம். நித்தியானந்தா போல ஒரு சாமியாரால் அமெரிக்காவில் எம்.டெக். படித்த ஒரு பெண்ணை எளிதில் இந்த தொன்மத்தை நேரடி உண்மையாக நம்ப வைக்க முடியும். ஆர்த்தி ராவ் ஒன்றும் முட்டாளோ பேதையோ அல்ல. அவள் பல்லாண்டு கால இந்திய மரபின் ஒரு பிரதிநிதி. அவள் அப்படி செயல்படுவதில் ஒன்றும் விநோதமில்லை. நித்தியானந்தா சமீபமாகத் தன் சந்நியாசினிகளை மீடியாவுக்கு பேட்டி கொடுக்கச் செய்தார். அப்போது ஒவ்வொருவரின் Phd, B.tech. போன்ற பட்டங்களைக் குறிப்பிடுவதில் கவனம் செலுத்தினார். தன்னை நம்புகிறார்கள் மெத்தப்படித்தவர்கள்; ஆக, தன்னை மறுக்கிறவர்கள் முட்டாள்கள் என்று காட்டுவதற்காக அவர் இதைச் செய்தாலும் இந்தியாவின் கல்விபெற்ற உயர்வர்க்க இளந்தலைமுறையினரின் சாயம் வெளுத்துப் போகவே அது பயன்பட்டது.

Nithi%202.jpg

நித்தியானந்தாவிடம் மாட்டாமல் இருக்கும் பிற பெண்கள் கூட சந்தர்ப்பம் வாய்த்தால் பாலியலாக அல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒருவகை சுரண்டலுக்கு ஆளாகி விடுவார்கள். நமது மரபு, பெண்களின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக இந்தியப் பெண்கள் கணவனுடனான உறவையே ஒரு மித்தின் நீட்சியாகத்தான் பார்க்கிறார்கள். கணவனின் தவறுகளை, அத்துமீறல்களைப் பொறுத்துக் கொள்ளும் பெண்கள் பாமரர்கள் அல்ல. நன்கு படித்த, மேற்தட்டைச் சேர்ந்த அநேகம் பெண்கள் தாம் இப்படி அடிமைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். சமீபமாக ஒரு பிரபல தமிழ் பெண்ணியவாதி தன் கணவனால் கடுமையான (பெல்டால் விளாசுவது, சிகரெட் சூடுகள், கழுத்தை நெரிப்பது உள்ளிட்ட) உடல் வதைகளுக்கு உள்ளாகியும் அதை ஒரு மாதமாகப் பொறுத்துக் கொண்டு விட்டுதான் வெளியே வந்தார். ஏன் முதல் நாளே வெளியேறவில்லை? ஏனென்றால் கணவன் என்னதான் வதை செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது இந்தியப் பெண்ணின் நனவிலியில் உள்ளது. அவள் தர்க்கரீதியாக அல்ல, தொன்மத்தின் மொழியில் சிந்திப்பவள். சமீபமாக “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியில் இதுபோல் கணவனின் கொடுமைகளை நீண்டகாலமாகப் பொறுத்துக் கொண்ட எத்தனையோ பெண்களின் உதாரணங்களைக் காட்டினார்கள். அமெரிக்காவில் வாழும் ஒரு வட-இந்தியத் தம்பதி. கணவன் தன் மனைவிக்கு மாதக்கணக்கில் போதுமான உணவு தர மறுக்கிறான். அவள் இருபது கிலோவுக்கு மேல் மெலிகிறாள். கழுத்தை நெரித்து வதைக்கிறான். பின்னர் ஒருநாள் அவளை உணவு, தண்ணீர் ஏதுமில்லாமல் வீட்டில் வைத்துப் பூட்டி விட்டுப் போகிறான். அப்பெண் தொலைபேசியில் தன் பெற்றோரை அழைக்கவில்லை. போலீசைக் கூட அழைக்கவில்லை. தினமும் கணவனை நுண்பேசியில் அழைத்துக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். ஒரு வாரம் இப்படி உணவு தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்த பின்னர்தான் அவள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தாள்; காப்பாற்றப்பட்டாள். இப்பெண் நன்கு படித்த மேற்தட்டைச் சேர்ந்த பெண். மேற்சொன்ன பெண்ணியவாதியையும் சேர்த்து, இந்தப் பெண்களை விமர்சிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை. நமது இந்திய மன-அமைப்பின் உதாரணமாகவே இவர்களைப் பார்க்கிறேன். இவர்கள் வேறெப்படியும் செயல்பட்டிருக்க முடியாது. இவர்களில் விதிவிலக்குகள் இருப்பார்கள். அவர்கள் இயல்பிலேயே நவீன மனநிலை கொண்டவர்கள். அவர்கள் 1% சதவீதம்தான். மீசையில்லாத போலீசைப் பார்த்தால் என்னால் போலீஸ் என்றே ஏற்றுக் கொள்ள முடியாது என்று மலையாள நகைச்சுவை நடிகர் இன்னெசண்ட் ஒருமுறை பேட்டியில் சொன்னார்; அது போல் இந்த 1 சதவீதத்தை நாம் இந்தியர்கள் என்றே கருத முடியாது.

Cult அடிமைத்தனமும் தூய்மைவாதமும்...

ஆர்த்தி தான் “ஒரு மிக உயர்ந்த பிராமணிய மரபில் வளர்க்கப்பட்ட பெண். அப்படிப்பட்ட பெண்ணாகிய தான் cult abuseக்கு பலியாக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை' என்று கூறுகிறார். யோசித்துப் பார்த்தால் இது அவராகவே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சினைதான். மீண்டும் அதே குழியில் விழுவதற்கான உளவியல் கூறுகளும் அவரிடம் உள்ளன.

ஒரு cultஇல் முதலில் உறுப்பினர்களின் ஆளுமை அழிக்கப்படுகிறது; ஈகோவை அழிக்கிறோம் என்கிற பெயரில் சுயஅடையாளம் தரைமட்டமாக்கப்படுகிறது. நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண் சாமியார்கள் ஊன்றுகோலால் விளாசப்படுவதாகவும் (ஜென் பாணியில் என்று அதை வேறு அசிங்கப்படுத்துகிறார்கள்) அதை அவர்கள் மௌனமாக ஊன்றுகோல் துண்டுதுண்டாக உடைவது வரை ஏற்பதாக ஆர்த்தி சொல்கிறார்; சம்போகத்தின்போது பெண்களை நித்தியானந்தா அறைவாராம். இப்படி வதை செய்யப்படுவதை நாம் ஏன் அனுமதிக்கிறோம்? ஏன் என்றால் அதற்குப் பின் மனிதன் தான் தூய்மையற்றவன் என்கிற குற்றவுணர்வு இருக்கிறது. இந்தக் குற்றவுணர்வை வலுப்படுத்தும், நியாயப்படுத்தும் தொன்மக் கதைகள் இந்து மரபிலும் கிறித்துவத்திலும் கூட உள்ளன. சுவாரஸ்யமாக இது அறிவியலுக்கு மாற்றான கருத்து. மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம்; தீமை என்பது அவனது ஒரு இயல்பான பகுதி. மனிதனிடம் கேவலமாக இழிவானதாக ஒன்றுமே இல்லை என்று நம்பும் நபர்களை நித்தியானந்தா போன்ற cult குருக்களால் ஒன்றுமே செய்ய முடியாது. யோசித்துப் பார்த்தால் நூற்றாண்டுகளாய் மனிதனை “களங்கமற்றவனாக” ஆக்குவதற்காகத்தான் உச்சபட்ச வன்முறைகளும் கொடுமைகளும் உலகம் பூரா நடந்திருக்கின்றன. இன்றும் நடக்கின்றன. இந்த வதையின் ஒரு எளிய வடிவம் கூட்டத்தின் முன் உங்களை மனம் திறந்து வாழ்வின் தவறுகளை ஒப்புக் கொள்ள வைப்பது. இதன் மூலம் உங்களை அடையாளமே அற்ற ஒருவனாக மாற்ற முடியும். நித்தியானந்தா ஆசிரமத்தில் மட்டும் அல்ல, பல குருக்கள் இந்த சுய-அழிப்பு எனும் வதைப்பயிற்சியை ஊக்குவிக்கிறார்கள். ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் Art of Living வகுப்புகள் எங்கள் ஊரில் நடந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன். என் நண்பர்கள் லூசு போல் காரணமில்லாமல் கூட்டத்தின் முன் சிரித்து அசட்டுத்தனமாக அழுது தங்கள் ஈகோவை இழந்ததைக் கண்டேன். யோசித்துப் பாருங்கள்: வாழ்வில் நீங்கள் பண்ண ஆசைப்படும் அத்தனையும் அடிப்படையில் மிருக இச்சையின் திரிபு வடிவங்கள். நமது அறிவு இயக்கங்கள் “நான்” என்கிற ஈகோவின் அடிப்படையில் எழுந்தவை. இவை இல்லாமல் நீங்கள் இல்லை. ஆசிரமவாசிகளுக்கு மாநித்ய கோபிகானந்த மயி போல் புதுப்பெயர் அளிப்பது, தொன்ம மரபுகளில் ஈடுபடுத்துவது, மரபுவழி அடையாளங்களில் பெருமை கொள்ள வைப்பது இது எல்லாமே இந்தப் பயிற்சிகள் மூலம் அடையாளம் அழிக்கப்பட்ட ஒருவனுக்குப் பற்றிக் கொள்ள தரப்படுகிற பலவீனமான பிடிமானங்கள். தன்னைத் தீமை என்று அறிந்து வெறுக்கிற மனிதன் தன்னையே அழிப்பான். நீuறீtகளில் இதுதான் நடக்கிறது.

தன்னைத் தீமை என்று உணர்ந்து அப்படி இருப்பது இயல்பு என்று ஏற்று நடக்கிறவன் தன்னிறைவுடன் வாழ்கிறான். இப்படி ஈகோ அழிக்கிற அடிமைத்தன கிறித்துவத்துக்கு எதிராகக் கலகம் செய்தவர்தான் நீட்சே. அவர் ஈகோவைக் கொண்டாடச் சொல்கிறார். “தன்னை அழிக்க நினைப்பவர்கள்” அடிமை வர்க்கம் என்றார் நீட்சே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியர்கள் ஈகோ என்றாலே “அகம்பாவம்” என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இத்தகையவர்கள் தாம் நீuறீtகளில் மாட்டி அழிகிறார்கள். அவர்கள் வெளியே வந்தாலும் வேறொரு அமைப்புக்குள் மாட்டி அவஸ்தைப்பட தயாராகவே இருக்கிறார்கள்.

அடுத்து cult அமைப்புகள் இந்தியாவைப் போல் வேறு எங்கும் இவ்வளவு பரவலான மக்கள் ஆதரவுடன், பண, அதிகார பலத்துடன் இயங்குவதில்லை. நித்தியானந்தா ஆசிரமத்தில் பல உளவியலாளர்கள் கூட அவருக்குத் துதிபாடியாக இருந்ததை ஆர்த்தி குறிப்பிடுகிறார். சுயவெறுப்பு, தன் மீதான கூச்சம், அவமான உணர்வு ஆகியவை மனித மனதின் அடியாழத்தில் இருக்கும் சில பண்புகள். இவை எப்படி கனவுகளில் வெளியாகின்றன என்பதை பிராயிட் சித்தரித்துள்ளார். இந்த உணர்வுகளைக் கிளர்த்தி வலுவான ஒரு மனப்போக்காக மாற்றும் ஆற்றல் மதத்துக்கு உண்டு. ஒருவருக்கு ஊனம் வந்தால், ஒரு பெண் விதவையானால் அது போன ஜென்ம பாவம் என்று மதம் நம்மை நம்ப வைக்கும். இதை இன்னொரு படிக்கு எடுத்துச் சென்று பக்தர்களை அடிமையாக்கி சாடிஸக் கொடுமைகள் செய்வது சாமியார்களுக்கும் cult குருக்களுக்கும் எளிது. அந்த பக்தர்கள் உளவியலாளர்களாகவும் பொறியியலாளர்களாகவும் இருந்தாலும் கூட அடிப்படையான சிந்தனைக்கோளாறு இருந்தால் எளிதில் வீழ்ந்து விடுவார்கள்.

நான் மதங்களைத் துறக்கச் சொல்லவில்லை. நாம் இந்த சாமியார்களிடம் உஷாராக இருந்தால் போதாது; சுயவெறுப்பு மனநிலை மிக ஆபத்தானது என்று உணர வேண்டும். நாம் செய்கிற அத்தனை குற்றங்களுக்கும் ஒரு உயிரியல் காரணம் உள்ளது. சமூக விதிகளுக்கு ஒழுகும் அதே வேளையில் நாம் அடிப்படையில் மிருகம்தான் என்கிற புரிதல் இருந்தால் நீuறீt பிடியில் இருந்து தப்புவது சுலபம். ஆர்த்தியின் பேட்டியைப் பார்க்கையில் “ஒரு தூய பண்பாட்டில் தோன்றின நான் எப்படி பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டேன்” என்கிற சுயவெறுப்பும் கோபமும் அவருக்கு இருப்பதைக் காண முடியும். தூய்மை என்பது மிகப்பெரிய கற்பனை மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் வன்முறையும் கூட.

ராமகிருஷ்ண மடமும் இயல்பு மறுப்புவாதமும்

சாமியார்களும் சரி, வேறு எந்த cult அல்லது அரசியல் அமைப்புகளும் சரி மக்களை ஒன்று சேர்த்து அதிகாரத்தை அடைவது, அவர்கள் இருக்கும் உலகு தீங்கானது, தவறானது என்று சொல்லித்தான். இப்படிக் கோருகிறவர்களை நாம் அடிப்படையில் ஐயப்பட வேண்டும். ஒருமுறை ராமகிருஷ்ண மடத்தின் அமைதியில் அமர்ந்திருந்தேன். திடீரென்று ஸ்பீக்கர் செட்கள் கொண்டு வைத்து சத்தமாக பூஜை செய்தார்கள். அதெல்லாம் முடிந்த பின் தலைமை சாமியாரிடம் சென்று “சுற்றிலுமுள்ள மரங்களை, பறவைகளை, இயற்கையை நாம் வாழும் வாழ்க்கையைப் பாருங்கள். அத்தனையும் அழகாகத்தானே உள்ளது. மனித வாழ்வு அதன் அத்தனை கோளாறுகளுடன் அர்த்தபூர்வமாகத்தான் தோன்றுகிறது. மனிதன் தன் இயல்பிலே வாழ்வின் பொருளைக் காணலாமே. எதற்கு இவ்வளவு சட்டதிட்டமாக சடங்குகளின் அடிப்படையில் வாழ வேண்டும்” என்று கேட்டேன். அதற்கு அவர் திரும்பத் திரும்ப “ஒரு கட்டுப்பாடான முறையில்தான் கடவுளை அடைய முடியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது ஏதோ பத்து மாடி ஏறினால் பதினோராவது மாடியை அடையலாம் என்பது போல் இருந்தது. நான் சொல்ல வந்தது நீங்கள் இவ்வளவு சத்தமாகப் பாட்டுப் போட்டு பூஜை துவங்குவதற்கு முன் இங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர், பறவைகள் கத்திக் கொண்டிருந்தன, மரங்கள் அசைந்தன, மக்கள் அமைதியாக மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தார்கள். இதில் என்ன குறை என்பதுதான். Anarchyயின் மத்தியில் ஒரு ஒழுக்கம் உள்ளது. ஆனால் இயல்பான ஒழுக்கத்தின் இடத்தில் anarchy ஏற்படுத்துபவர்கள் சாமியார்கள். உலகம் கீழ்மையானது, அதை வேறு வகையில் வாழ வேண்டும் என்கிற அவர்களின் நிலைபாடே அடிப்படையில் எதிர்மறையானது. சாமியார்களைப் பார்த்து நாம் உஷாராக வேண்டியதில்லை; ஒருவர் இந்த வாழ்க்கை கீழானது, தவறானது என்று சொன்னாலே உடனே உஷாராகுங்கள். இவர்கள் வாழ்க்கை வெறுப்பாளர்கள். உங்களைக் கொண்டே உங்களை வெறுக்க வைத்து அதன் மூலம் “அனுபூதி” நோக்கி செலுத்த முனையும் தற்கொலை மனநிலையாளர்கள் இவர்கள். மதத்துக்கும் சாமியார்களுக்கும் உலகம் முடியும் வரைக்கும் ஒரு இடம் இருக்கும். நாம் எதிர்க்க வேண்டியது மேற்சொன்ன அணுகுமுறையைத்தான்.

Nithi%203.jpg

சாமியார்கள் மீது தவறு உண்டா?

இந்தியர்கள் போலிசாமியார்களிடம் ஏமாறுவதாய் கூறப்படுகிறது. இது ஏமாற்றுதானா என்றே எனக்கு சந்தேகம் உள்ளது. முதலில் பக்தர்களில் மிகச்சில பேர்தான் புகார் அளிக்கிறார்கள் அல்லது ஏமாற்றப்பட்டதாகவே ஒத்துக் கொள்கிறார்கள். இருதரப்பினர்களும் ஏற்றுக் கொண்ட ஒரு சுரண்டலாகவே நாம் இதைப் பார்க்க முடியும். நித்தியானந்தா போன்றவர்கள் நமது பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு கருதினால் ஒழிய இதனால் கேடு விளைவதாக நாம் கருதவும் முடியாது. இந்தியா உண்மையில் சட்டை பேண்ட் அணிந்த ஒரு மிகப்பெரிய பழங்குடி சமூகம். நம்மூரில் ஒரு கலைஞனோ சிந்தனையாளனோ இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு எழுத்தாளனோ சட்டென்று இறைநம்பிக்கையாளனாகி விட்டால் (இளையராஜா, ஜெயகாந்தன்) “சோரம் போய் விட்டதாக” விமர்சிக்கிறார்கள். இது தவறானது. இவர்கள் சட்டென்று தம் ஆதி-இந்திய மனநிலைக்குத் திரும்புகிறார்கள், நாட்டுப் பூனை ஒரு நாள் காட்டுக்குத் திரும்பி காட்டுப்பூனையாக ஆவது போல். தெருநாய்கள் சட்டென்று ஒன்று சேர்ந்து கூட்டமாக குழந்தைகளையும் சிறுமிருகங்களையும் வன்மனநிலையுடன் வேட்டையாடுவது போல். மனிதன் அடிப்படையில் ஒரு மிருகம் என்று டார்வின் சொன்னது போல் இந்தியன் அடிப்படையில் ஒரு இந்தியன். அவன் சில வருடங்களில் மாறிவிடப் போவதில்லை. எங்களூர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முக்காடு போட்ட படி விடிகாலையில் குமாரகோயிலுக்குப் போய் வழிபட்டு வருவார்கள். திமுககாரர்கள் இன்றும் வெளிப்படையாக மஞ்சள் நீராட்டுவிழா நடத்தி அதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களையும் அழைத்து சிறப்பிக்கிறார்கள். மார்க்ஸும் பெரியாரும் மாபெரும் ஆளுமைகள்தாம். அவர்களால் இங்கு நிகழ்ந்த சில ஆக்கபூர்வ மாற்றங்களை நாம் மறுக்கவில்லை; ஆனால் நமது உள்ளார்ந்த சிந்தனை அமைப்பை அவர்களால் மாற்ற இயலவில்லை. பாறையில் விதை தூவினால் முளைக்காது. விளைவாக, இந்திய சமூகத்தின் ஒட்டுமீசையாக மட்டுமே அவர்களால் இருக்க முடிந்துள்ளது.

நித்தியானந்தாவின் தவறுதான் உண்மையில் என்ன?

நித்தியானந்தா மக்களின் தொன்ம சிந்தனை மரபைப் பயன்படுத்துவதற்கும் நமது கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் குறியீட்டு மனதை விளம்பர பிம்பங்கள் மூலமாக ஆகர்சித்து தமக்கு சாதகமாக சிந்திக்க வைப்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? சுரண்டல் என்பது இன்றைய திறந்த சந்தைக் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. ‘தோல் வெளுப்பாக்குகிறோம் வகை’ காஸ்மடிக் விளம்பரங்கள் ஏமாற்றுவதை விட அதிகமாகவா இவர் ஏமாற்றி விட்டார்? இவரை விட அதிகமாக அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். சொல்லப்போனால் ஒப்பீட்டளவில் நித்தியானந்தா குறைவாகவே விளம்பரம் செய்கிறார். ஆண்டாண்டுகாலமாய் சாமியார்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிபட்டு வந்த நாம் அவரை நோக்கிப் படையெடுக்கிறோம். ஆட்கள் அதிகமாக வருவதால்தான் அவர் குறைந்தது பத்தாயிரம் கட்டணம் இல்லாமல் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை.

உண்மையில் நித்தியானந்தாவை வெறுக்கிறவர்கள் அவர் நமது நீண்ட மரபை அசிங்கப்படுத்துகிறாரே என்றுதான் கொந்தளிக்கிறார்கள். அதாவது அவர் பெண்களுடன் உறவு கொள்வதல்ல சிக்கல், புண்ணிய காவி ஆடைக்குள் இருந்தபடி அதைச் செய்கிறாரே என்று தான் அவரது விமர்சகர்களில் அநேகம் பேர் அவரை எதிர்க்கிறார்கள். நித்தியானந்தா விமர்சகர்கள் அடிப்படையில் நம்பிக்கையாளர்கள். உண்மையில் இது ஒரு “குடும்பப் பிரச்சினை”. நவீன சிந்தனையாளர்கள் இந்தப் பிரச்சினைக்கு வெளியேதான் இருக்கிறார்கள். நித்தியானந்தாவின் தன்னம்பிக்கை ஒளிரும் புன்னகையின் பொருள் அதுதான். அவர் சொல்கிறார்: “என்னை எதிர்க்கிறவர்களும் என் பிள்ளைகள்தாம். என்ன, அவர்கள் மந்தையில் இருந்து பிரிந்துபோன ஆடுகள். நிச்சயம் திரும்பித்தான் ஆக வேண்டும்.”

சரி, நீங்கள் சொல்வது போல் நித்தியானந்தா ஒரு சமூக விரோதி என்றே கொள்வோம். அவர் ரகசியமாக ஊழல் செய்யவில்லை. திருடவில்லை. பிக்பாக்கெட் அடிக்கவில்லை. செக்ஸைத் தவிர வேறு எல்லாவற்றையும் பகிங்கரமாக மேடை போட்டுத்தான் செய்கிறார். அவர் யாரையும் ஏமாற்றி அழைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அவரை நோக்கிச் சென்று ஏமாறுகிறார்கள். அவர் ஒரு நீuறீt அமைப்பை நடத்தி சீடர்களை வதைத்தாலும் அதை அவர்களின் சம்மதத்துடனே செய்திருக்கிறார்; மொட்டை போடுவது, கோயில் சந்நிதானம் முன் உருண்டு கர்மத்தைக் கழிப்பது போல், சாட்டையால் தன்னைத்தான் விளாசுவது போல “கடவுள் கையால்” அடிவாங்குவதிலும் மனிதனுக்கு ஒரு பழங்குடி உன்மத்தம் உள்ளது. இதுவும் நம் ஆழ்மனதில் உள்ள விழைவுதான். அவராகக் கடத்திக் கொண்டு தனது ஆசிரமத்தில் வைத்து அடிக்கவில்லையே? இது ஒரு கூட்டுச்செயல்.

நித்தியானந்தாவும் பாக்டீரியாவும்

உண்மையில் நீங்கள் நித்யானந்தாவை அழிக்கவே முடியாது. அவர் ஒரு வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமி. இந்தக் கிருமிகளை எல்லாம் யாரும் அழித்ததில்லை. தற்காப்பு சக்தி இல்லாதவர்களை (அல்லது தமக்குத் தோதானவர்களை) இக்கிருமிகள் தாக்குகின்றன. அப்படித் தாக்குவது அக்கிருமிகளின் தர்மம். வாழ்க்கை மார்க்கம். அதை மறுக்க நமக்கு என்ன உரிமை? நீங்கள் வேண்டுமானால் தூய்மையான நீரை அருந்தி, நல்ல உணவு உண்டு, தடுப்பூசி போட்டு, கொசுவத்தி கொளுத்தி, உடற்பயிற்சி செய்து, மருந்து உண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதை இந்தக் கிருமிகள் தடுக்கவில்லையே? நித்தியானந்தாக்களை நீங்கள் அழிக்கவே முடியாது. கிருமிகளும் மனிதனும் சேர்ந்தே வாழ்வது போல் நித்தியானந்தாவும் நீங்களும் சேர்ந்தே உய்ய வேண்டும் என்பது ஒரு இயற்கை நியதி. இந்தியர்கள் தமது மரபின் அடிப்படையில் இது போன்று “நோய் ஏற்புத் தன்மையை”க் கொண்டவர்கள். நம் மக்களாகப் போய் அவரிடம் “என்னை ஏமாற்று ஏமாற்று” என்று ஏன் கெஞ்சுகிறார்கள் என்பதே நாம் ஆராய வேண்டிய விசயம். மாறாக, அவரது படுக்கை அறைக் காட்சிகளை அல்ல.

நம் ஊரில் பரஸ்பர சம்மதத்துடனான, வளர்ந்தவர்களுக்கு இடையேயான செக்ஸ் ஒன்றும் குற்றமல்ல. தனது ஆசிரம சிஷ்யைகளின் சம்மதத்துடன் அவர் உறவு கொண்டால் அது தவறல்ல. இப்போது குற்றம் சாட்டும் ஆர்த்தியும் கூட "கற்பழிக்கப்படவில்லை”. தெரிந்தேதான் உறவு கொண்டேன்; ஆனால் மூளைச்சலவை செய்யப்பட்டேன் என்கிறார். மூளைச்சலவை என்பது ஒரு சிக்கலான குற்றச்சாட்டு; அதை எளிதில் நிரூபிக்க முடியாது. மேலும் பொதுவாக பிராமணர்கள்தாம் தமது இறுக்கமான மரபார்ந்த நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எளிதில் சாமியார்களிடம் சரணடைகிறார்கள். நித்தியானந்தா போன்ற சாமியார்களிடம் வந்து சேர்பவர்களின் பின்னணியை விசாரித்தால் இது போன்று இறுக்கமான சம்பிரதாய வளர்ப்பும் மத விழைவும் இருக்கும். இயல்பிலேயே பீவீஸ்மீக்ஷீரீமீஸீt ஆன மரபு எதிர்ப்பாளர்களை மூளைச்சலவை செய்வது நித்தியானந்தா போன்றவர்களுக்கு மிக மிக சிரமம்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கும் மத்தியில் உண்மையில் பிரச்சினை ஒரு சாமியார் எப்படி செக்ஸ் வைக்கலாம் என்பதே. இதைக் கேட்பவர்கள் சாமியார்களின் களங்கமின்மை பற்றின தொன்ம நம்பிக்கைகள் கொண்ட அக்மார்க் இந்தியர்கள். இது மீண்டும் ஒரு “குடும்ப பிரச்சினையே”. நித்தியானந்தா ஒரு புது தொன்மத்தை உருவாக்கி இவர்களை “சமாதானம்” செய்யலாம். வீட்டுக்கு வீடு வாசல்படி! இதற்கெல்லாம் காவல்நிலையம் செல்லக் கூடாது!

கார்ப்பரேட் சாமியார் மீது மீடியா என்கவுண்டர்!

தொன்மங்களால் நித்தியானந்தா உருவாக்கிக் கொண்ட இடத்தைப் பார்த்தோம். அது தகர்க்க முடியாதது. நித்தியானந்தா போலி சாமியாரா? போலி சாமியார் என்கிற அடையாளக் குறி குழப்பமானது. ஒழுக்கமாகத் தெரிகிறவர்கள் மட்டும் நிஜசாமியார்களா? அதை எப்படி அறிவீர்கள்? இறைமார்க்கத்தில் ஆத்மார்த்தமாக இருந்ததாய் நம்பப்படுகிற சாமியார்கள் பற்றி ஆய்வுபூர்வமான எந்த ஒரு வாழ்க்கை வரலாறும் நமக்கு இல்லை. இருப்பதெல்லாம் தொன்மங்கள்தாம். மேலும் ஒருவரின் ஆன்மீக மெய்மையை எப்படி அளக்க, நிரூபிக்க முடியும்? ஆக, போலி சாமியார் என்பது நல்ல அரசியல்வாதி Vs கெட்ட அரசியல்வாதி, வியாபாரத் தமிழ் சினிமா Vs எதார்த்த தமிழ் சினிமா போல் ஒரு அசட்டு வகையமைப்பு. எதார்த்தத்தில் இரு சாமியார்கள்தான் இருக்கிறார்கள்:

1. இந்தியாவில் வர்ணாசிரம அமைப்பின்கீழ் வந்த மரபான சாமியார்கள்

2. கார்ப்பரேட் சாமியார்கள்

இருவரும் அடைந்த அதிகாரமும் அதற்கான வழிமுறைகளும் வேறுவகையானவை. மரபான சாமியார்களில் விரிவான தகவல்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட சாமியார் காந்திதான். ஆம், காந்தி கூட ஒருவகை சாமியார்தான். Life of Gandhiயில் லூயிஸ் பிஷர் அநேகம் இந்தியர்கள் காந்தியை ஒரு சாமியாராகவே கருதி அவர் இந்தியப் பயணம் சென்றபோது கூட்டமாகத் தேடி வந்தார்கள் என்கிறார். காந்தி தாழ்த்தப்பட்டவர்களை மேலே கொண்டு வையுங்கள் என்று சொல்லவில்லை. படிநிலையை மாற்ற வேண்டாம். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை இரக்கத்துடன் அன்புடன் நடத்துங்கள் என்றார் (மிருகங்களைத் துன்புறுத்துவதை மேனகா காந்தி எதிர்ப்பது போல்). காந்தி இந்தியர்களிடம் அவர்களின் Pre-modern மொழியில் பேசினார். அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்போது வரும் சாமியார்கள் இதே மொழியை ஒரு மிகப்பெரும் அளவில் கோடிக்கணக்கான பணம் மற்றும் அரசியல் அதிகாரத்துடன் பேசுகிறார்கள். கார்ப்பரேட் சாமியார்கள் என்பதால் அவர்கள் லாபத்தின் அடிப்படையில் யோசிக்கிறார்கள்; மக்களைச் சுரண்டுவது நியாயம் என்று நம்புகிறார்கள். அவர்களைப் போன்று நானும் இதை “சுரண்டல்” என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். பரஸ்பர புரிதலுடன் கூடிய ஒரு இணக்கம் (coexistence) மக்களுக்கும் இவர்களுக்கும் இடையே உள்ளது. பிற கார்ப்பரேட் சாமியார்களுக்கு அமோக ஆதரவு தரும் நாம் ஏன் நித்தியானந்தாவை எதிர்க்கிறோம் என்றால் அவர் அடக்கி வாசிக்கவில்லை, அடாவடித்தனம் பண்ணுகிறார் என்பதால்தான். பொல்லாதவன் படத்தில் செல்வம் எனும் தாதா தன் தம்பியிடம் சொல்வான்: “public முன்னாடி நாம் அமைதியாதான் இருக்கணும். வன்முறை காட்டக்கூடாது.” பப்ளிக் முன்னாடி பொதுப்படையில் செய்தால் என்கவுண்டர் செய்வார்கள். நித்தியானந்தாவுக்கு நடப்பது ஒரு மீடியா என்கவுண்டர்.

கறுப்புப் பணமும் மறைமுக மக்கள் அரசியல்வாதிகள் ஆதரவும்

கார்ப்பரேட் சாமியார்களுடன் நமக்குள்ள பிரச்சினை செக்ஸோ, மக்களை ஏமாற்றுவதோ அல்ல. அது குடும்பப் பிரச்சினை. ஆனால் பொதுப் பிரச்சினை வேறு. அவர்களிடம் கோடிக்கணக்கான கறுப்புப் பணம் உள்ளது. அவர்கள் கணக்கு காட்டுவதோ வரி செலுத்துவதோ இல்லை. நமது சட்டம் இயற்றப்பட்ட ஐம்பதுகளில் இப்படி மதநிறுவனங்களின் சொத்துக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற விதியை ஒரு தரப்பினர் உள்ளே கொண்டு வந்தனர் என்கிறார் “காந்திக்குப் பின் இந்தியா” நூலில் ராமசந்திர குஹா. அந்தக் காலத்திலேயே இதை யாரோ தெளிவாகச் செய்திருக்கிறார்கள். இனி சட்ட மாற்றங்கள் கொண்டு வருவது எளிதல்ல. முதலில் தமது கறுப்புப்பண வங்கிகளுக்கு எதிரான சட்டத்திருத்தத்துக்கு எந்த அரசியல்வாதியும் ஆதரவளிக்க மாட்டார். அடுத்து கடுமையான சட்டரீதியான கண்காணிப்புக்குள் சாமியார் சொத்துக்களில் இருந்து கோயில் சொத்துக்கள் வரை கொண்டு வரப்படுவதை இந்தியர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட பல சீரழிவுகளுடன் இந்த மத அடிப்படையிலான அநியாயங்களும் இந்தியாவில் இன்னும் சில நூறு ஆண்டுகளேனும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மக்கள் பணம் மக்கள் நலனுக்கானது என்பது ஒரு நவீன சிந்தனை. மக்கள் பணம் சிலரின் நலனுக்கானது என்பது ஜீக்ஷீமீ-னீஷீபீமீக்ஷீஸீ இந்திய சிந்தனை. முதல் வகை சிந்தனையை ஏற்றுக் கொண்டு நவீன நிலைக்கு இந்தியா வருவது எதிர்வரும் காலங்களில் நிகழாது. அதுவரை நாம் இந்த நாடகத்தைக் கீழிருந்து பார்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த சிக்கலான பிரச்சினைக்கு தற்போது எந்தத் தீர்வும் இல்லை. நித்தியானந்தாவைக் கரித்துக் கொட்டுவதை விட அவரை வளர்த்து விட்டு தக்க வைக்கும் மனநிலையையும் மரபையும் கூர்ந்து கவனிப்போம்.

முதல் படியும் மீதிப் படிகளும்

நம் இயல்பை நாமே ஏற்றுக் கொள்வது தான் சாமியார்களிடம் விழாமல் இருப்பதற்கான முதல் தேவை. நாம் சுயமேம்பாட்டுக்கு அடுத்தவர்களை நம்புவதை நிறுத்த வேண்டும். ஜெ.கே. சொன்னது போல் ஆயிரமாயிரம் நிறுவனங்களும் சாமியார்களும் வந்தாலும் மனிதன் இவ்வுலகில் தனியாகத்தான் தன்னை அறியவும் மேம்படுத்தவும் முடியும். சுயவெறுப்பு காரணமாக இன்னொரு ஆளுமையின் கீழ் சரணடைவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அடுத்து நித்தியானந்தா கூடாரத்துக்கு வெளியே Vs உள்ளே என்கிற அணுகுமுறை கைவிட வேண்டும். ஏனென்றால் நித்தியானந்தா எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் அடிப்படையில் ஒன்றுதான். If you dine with the devil, bring a long spoon என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது சாத்தானை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஒன்றுதான். சாத்தானுடன் ஒரே உணவு மேஜையில் அமர்ந்தால் நீண்ட கரண்டியைப் பயன்படுத்து. சாத்தானை விலகி நின்று எதிர்கொள். நித்தியானந்தாவை எதிர்கொள்ள நமக்குத் தேவை ஒரு நீண்ட ஸ்பூன் - அதாவது விலகல் மனநிலை. அதுதான் முதல் படி. இன்னும் பல படிகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் நம் எதிர்கால சந்ததியினர் ஏறுவார்கள்.

abilashchandran70@gmail.com

http://www.uyirmmai....s.aspx?cid=5817

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]"ஆர்த்தி ராவ் ஒன்றும் முட்டாளோ பேதையோ அல்ல. அவள் பல்லாண்டு கால இந்திய மரபின் ஒரு பிரதிநிதி. அவள் அப்படி செயல்படுவதில் ஒன்றும் விநோதமில்லை. நித்தியானந்தா சமீபமாகத் தன் சந்நியாசினிகளை மீடியாவுக்கு பேட்டி கொடுக்கச் செய்தார். அப்போது ஒவ்வொருவரின் Phd, B.tech. போன்ற பட்டங்களைக் குறிப்பிடுவதில் கவனம் செலுத்தினார். தன்னை நம்புகிறார்கள் மெத்தப்படித்தவர்கள்; ஆக, தன்னை மறுக்கிறவர்கள் முட்டாள்கள் என்று காட்டுவதற்காக அவர் இதைச் செய்தாலும் இந்தியாவின் கல்விபெற்ற உயர்வர்க்க இளந்தலைமுறையினரின் சாயம் வெளுத்துப் போகவே அது பயன்பட்டது. [/size] "

யாழ் படிப்பாளர் சங்க தலைவருக்கு இதில் எழுதி இருப்பது விளங்குமா?

இந்த மரபு ரீதியான கல்வி முறையே யாழிலும் உண்டு.

டிகிரி இருந்தால் வேலை கிடைக்கும். அதைவைத்து கொண்டு நாடகம் ஆடுபவர்களை கூடி ஒரு நாடகம் போட்டு அதை எதோ தர்க்க ரீதியான சிந்தனையாளர்களின் சிந்தனைகள்போல். விளம்பரம் செய்ய இங்கே அண்ணா பலமுறை முயற்சி செய்தார்.

கல்வியாளர்களின் கருத்துக்கு இவர் என்ன பதில் எழுதுவது?

என்ற பில்டப்பில் நிர்வாகமும் எனது கருத்தை தூக்கிவிடும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். என்று நானும் மனம் ஆறி கொள்வேன்.

நடுநிலைமை என்றால் என்ன என்பதற்கு தகுந்த வரைவிலக்கணம் வரைந்தால்தான். நடுநிலைமையோடு நடக்கமுடியும்.

எந்த ஆதாரமும் அற்ற வெறும் வாந்தி கட்டுரையை இங்கே இணைத்துவிட்டு. ஒரு ஆக்கபூர்வமான கருத்தாடலை செய்யமுடியாது. அதற்கு கருத்தெழுதினால் எனது கருத்தும் வாந்திதான். அதில் மாற்று கருத்து என்னிடம் இல்லை.

ஆனால் எந்த ஆதாரமும் அற்ற வெறும் பொய் என்று படிக்கும் நிர்வாகத்திநேருக்கே புரிய கூடிய கட்டுரையும். அதற்கு வக்காலத்து வாங்கும் கருத்துக்களும் அப்படியே இருக்க எனது வாந்திமட்டும். துடைத்து துப்பரவு செய்யபட்டிருக்கும்.

இந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்றால்?

இவர் எழுதிய மரபு வழி சிந்தனையாகத்தான் இருக்கிறது.

அதாவது மாற்று கருத்துக்கும் ஆதரவு கொடுக்கிறோம் என்கிற ஒரு நாடகத்தில் தம்மை நடிகர்கள் ஆக்குவதால் நிர்வாகத்தினர் இந்த சகதிக்குள் விழுகிறார்கள்.

நான் முன்பும் ஒருமுறை எழுதினேன். "இலை பச்சை நிறம் இல்லை " என்பது தர்க்கரீதியான வாதம் அதை மாற்று கருத்தாக ஏற்றுக்கொள்ளலாம்.

மரத்தில் இருக்கும் "இலை இல்லை" என்பது பித்தலாட்ட கருத்து இதன் கீழ் ஒரு நல்ல கருத்தாடலை செய்யமுடியாது.

இதன் கீழ் ஒரு கருத்தை நீக்க முடிவு செய்தால்? இங்கே நீக்க படவேண்டியது தலைப்புதான். இப்படி ஒரு தலைப்பை வைத்து அதன் கீழ் நாம் நாகரீகமானவர்கள் என்று நாடகம் ஆட சில கருத்துக்களை தவிர்த்து சிலதை நீக்க வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வருகிறது?

இந்த அருமையான கட்டுரை சில தவறுகளை புரிந்துகொள்ள சிலருக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அநாகரீகமான ஒரு எருமையுடன் நாகரீகமாக கருத்தாடுவதில் எந்த பலனும் இல்லை என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அதற்கு நான் எப்போதும் முயற்சி செய்ததில்லை.

என்னுடைய இந்த நிலைப்பாடு என்னால் சில தொல்லைகளை நிர்வாகத்தினருக்கு விளைவிக்கிறது.

கருத்துக்களம்

நாகரீகமாக இருப்பதா?

அநாகரீகமாக இருப்பதா?

இன்பதட்கு விடை வந்தால் இந்த தொல்லை இல்லாது போய்விடலாம் என்பதையும் நம்புகிறேன்.

விஷம் கலக்காத தண்ணீரும். விஷம் கலந்த தண்ணீரும் இருக்க முடியுமே தவிர. இரண்டிற்கு இடைபட்டு ஒரு தண்ணீர் இருக்க முடியாது. (இரண்டையும் அளவுகளில் கலந்து)

"இங்கே ஒரு சிந்தனை கருத்தாக்கமாக வளர்ந்தால் அதை ஒரு மித்தாக மாற்றி கேள்வி கேட்காமல் பின்பற்றத் துவங்குவார்கள் - கதை, இதிகாசமாக, பெருங்கதையாடலாக மாற்றி அதையே வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவார்கள்."

இதுதான் இந்தியன் ,நாங்களும் செய்வது .என்ன ,ஏது என்று தெரியாமலே தேவாரம் பாடத்தொடங்கிவிடுவார்கள் .பின்னர் அது புராணம் ,சிவபுராணமாகி சிஞ்சிஞ்சா போட வேறு அடிபடுவார்கள் .

இப்ப உலகம் முழுக்க சிஞ்சிஞ்சா போட்டிதான் நடக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணும் புரியலீங்க கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.