Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை நடத்துகிறது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை நடத்துகிறது இராணுவம்

rajapakse_soldiers_440-150x150.jpg1958 ஜுன் மாதம் 3ம் தேதி இலங்கைப் பிரதமர் பண்டாரநாயகாவின் வாயிலிருந்து ஒரு உண்மை வெளிவந்தது.

1956-ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டம் வந்தபின் தமிழ்ப் பிரதேசமெங்கும் கொந்தளிப்பில் இருந்தது.

1936-ல் பண்டாரநாயகாவுக்கு கூட்டாட்சிக் கொள்கை பற்றி தெளிவான கருத்து இருந்தது. கூட்டாட்சி அமைப்பு பற்றி அப்போது அவரின் பேச்சுக்களும் எழுத்துக்களும்தான் இப்போது தமிழ் அரசியல்வாதிகள் கூட்டாட்சிக் கோருவதற்குக் காரணம் என்று தமிழ்த் தலைவர்களில் ஒருவரான வி.நவரத்தினம் சுட்டிக் காட்டினார்.

S_W_R_D_Bandaranayaka”அச்சமயத்தில் அது எனது கருத்தாக இருந்தது. இப்போது 1956-ம் ஆண்டுத் தேர்தலில் மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டுமே” பண்டாரநாயகா பதில் அளித்தார்.

இலங்கைத் தீவில் நிலையான ஆட்சி அமைத்திட, பெரும்பான்மை சிங்களரின் பெரும்பான்மை வாக்குகள் பெற்று விட்டால் போதுமானது. சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தீர்மானகரமான பங்காற்றுவதில்லை: அவர்கள் வாக்குகள் போலவே அவர்களும் உதாசீனம் செய்யப்பட வேண்டியவர்கள் என்றாகிறது . சிங்களரின் நலன்களைப் பேணி வளர்ப்பதில் சிங்கள அரசியல் கட்சிகளும், தலைமைகளும், குறியாக இருந்தனர் என்ற உண்மையை பண்டார நாயகாவின் பதில் உறுதிப்படுத்தியது. அது சிங்களரின் ஆதிக்கக் கனவுகளுக்கு தீனிபோட்டு ஊதிப் பெருக்க வைத்து ஆட்சியதிகாரத்தில் அமர வைத்தது.

மாகாண சபைகள் அமைக்கப்பட வேண்டுமென்ற நகல் வரைவுத் திட்டத்தை 1956-ல் தமிழரசுக் கட்சியினர் அளித்திருந்தனர். வெளியுறவு, பாதுகாப்பு, நாணயம், முத்திரை, சுங்கவரி, மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து ஆகியன, பிரிட்டிஷ் நிர்வாகத்திடமும், மிகுதி உரிமைகள் அயர்லாந்திடமும் கொடுக்கப்படுதல் என்ற அடிப்படை அன்று பிரித்தானியாவில் செயல்பாட்டுக்கு வந்திருந்தது. (பின்னர் அயர்லாந்து தனி நாடாக விடுதலையடைந்தது) அதே அடிப்படையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு பிரதேச சபையாக செயல்படும் என்று வரைவு நகலில் கண்டிருந்தது. பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து 1957ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் தேதி பண்டார நாயகாவும், தமிழர்களின் பிரதிநிதியாக செல்வநாயகமும் கையெழுத்திட்டனர்; இது பண்டா-செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, புத்த பிக்குகளைத் திரட்டி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி யாத்திரை தொடங்கினார். 1958 ஏப்ரல் மாதம் ஒன்பதாம் நாள் புத்த பிக்குகள் 200 பேர் யாத்திரையின் முடிவில், பண்டாரநாயகாவின் இல்லத்தை முற்றுகையிட்டு பண்டா—செல்வா ஒப்பந்தத்தை கிழித்தெறியும்படி கோரினர்.

“தவறு நடந்து விட்டது குருமார்களே, உங்கள் விருப்பப்படியே செய்கிறேன் ” என்று கூறி, பண்டார நாயக ஒப்பந்தக் காகிதத்தை அவர்கள் முன் கிழித்தெறிந்தார். பெரும்பான்மைச் சிங்கள முகங்களே அவரை அச்சுறுத்தின. சிறுபான்மைத் தமிழர்களின் வேதனை படிந்த முகங்கள் கண்ணில் படவில்லை. கொழும்பிலும் இதர சிங்களப் பகுதியிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் நிம்மதியிழந்து அச்சமடையுமளவுக்கு பண்டா-செல்வா ஒப்பந்தக் கிழிப்பின் வெற்றிக்களிப்பில் சிங்களர் தமிழர் மீது வெறிகொண்டு பாய மூர்க்கம் கொண்டு நின்றனர்.

சிங்களக் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்றிருந்த கல்லேயா, பொலனறுவை, பதவியா போன்ற இடங்களிலும் கொழும்பிலும் 1958 மே மாதம் தமிழர் மீது இனவெறித் தாக்குதல் தொடங்கிற்று. இனத் தாக்குதல் தீவிரப்பட்டதால், கொழும்பிலிருந்தும், தென்னிலங்கையிலிருந்தும், சிங்களக் குடியேற்றங்கள் நடந்த தமிழ்ப்பகுதிகளிலிருந்தும், கப்பல் கப்பலாக, தமிழர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஏற்றி அனுப்பப்பட்டனர். 1958-ல் நடந்த இனத் தாக்குதல் பற்றிய விவரங்களை, எஸ்.எம்.கோபு என்ற கோபாலரத்தினம் “முடிவிலாப் பயணத்தின் முடியாத வரலாறு “என்ற தனது நூலில் விரிவாக (பக் 123 முதல் 148 முடிய) எடுத்து வைக்கிறார்.

சிங்கள ஸ்ரீ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் ஓட வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து தமிழர்கள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்துகளில் ஸ்ரீ -யை அகற்றி தமிழ் எழுத்துக்களைப் பொருத்தினர்.தமிழர் பகுதிகளில் அரச நிர்வாகத்தை எதிர்த்த போராட்டம் தீவிரப்பட்டது. தமிழரசுக் கட்சியைத் தடை செய்ய வேண்டுமென்று சிங்கள எம்.பி.க்கள் அப்போது நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர். “தமிழரசுக் கட்சியினர்தான் நன்கு திட்டமிட்டு இனக் கலகம் செய்தனர். இந்தத் தலைவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்காததால் அரசாங்கத்துக்கே அவமானம் ஏற்பட்டிருக்கிறது” என்று உரை நிகழ்த்தினர்.

“தமிழரசுக் கட்சியினரும் மற்ற சக்திகளும் அரசைக் கவிழ்த்துவிட்டு வடக்கிலும் கிழக்கிலும் தனியாக ஒரு நிர்வாகத்தை அமைக்கத் திட்டமிட்டார்கள்” என்று இதற்குப் பதிலளித்து பண்டார நாயகா உரையாற்றினார்.

“இனக் கலகத்தினால் தமிழர்களை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்குத் திருப்பி அனுப்பியதால் கூட்டாட்சி வடிவில் தமிழர்கள் தனி அரசு அமைக்க நீங்கள் இணங்கி விட்டதாக அவர்கள் சொல்லித் திரிகிறார்கள். மிக விரைவில் கூட்டாட்சி அமையும் என்று நாடு முழுதும் நம்புகிறது” என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி செய்தார்கள் . அப்போது நாடாளுமன்றத்திலே பண்டாரநாயகா பிரகடனப்படுத்தினார். “கூட்டாட்சி அமைப்பை நான் அனுமதிக்க மாட்டேன்”

1958 ஜுன் மாதம் 3ம் தேதி வரலாற்று முக்கியத்துவமுள்ள அந்த உண்மை நாடாளுமன்றத்தில் பிரதமர் வாயிலிருந்து வெளியில் விழுந்தது .

“ஆனால் அதையெல்லலம் நான் முறியடித்து விட்டேன். இப்போது வடக்கிலும் கிழக்கிலும் எனது ராணுவம்தான் இருக்கிறது. அங்கு ஆளுநர்களைக் கொண்டு ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் இராணுவ ஆளுநர்கள். அந்த இரு மாகாணங்களிலும் நிர்வாகத்தை இனி எனது ராணுவத்தின் மூலம் பார்த்துக் கொள்வேன்”

1958லிருந்து இராணுவச் சுற்றி வளைப்புக்குள்தான் தமிழர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 1958 கலவரத்தில் ராணுவம் சிங்களருக்குப் பாதுகாப்பாய் நின்று, தமிழர்களை வேட்டையாடியது. 1958 தாக்குதலில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு எல்லாமும் இழந்து ஒரு குடும்பம் காங்கேசன் துறைமுகத்தில் வந்திறங்கிய போது “எங்கட நாட்டுக்கு வந்திட்டம்” என்று அந்தப் பெண் கதறியழுதார்.

“நாட்டை நினைப்பாரோ,

எந்த நாள் இனி அதைப் பார்ப்பதென்று

அன்னை வீட்டை நினைப்பாரோ-அவர்

விம்மி விம்மி விம்மியழுத குரல்

கேட்டிருப்பாய் காற்றே” என்பதாக அவர்கள் விம்மி விம்மியழுதார்கள். தாய் மண்ணை முத்தமிட்டார்கள்.

சிதம்பரநாதன் லண்டனில் அகதிகள் பணியகத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். மனித உரிமைகளுக்கான வழக்குரைஞர். ஈழத்துக்குச் சென்று திரும்பிய அவருடைய மனநிலையை வெளிப்படுத்தினார். ” நான் பல இடங்களில் வழி மறிக்கப்பட்டு இராணுவச் சோதனைச் சாவடிகளில் சோதனையிடப்பட்டேன். அங்கு கேள்விகள் என்னை முற்றுகையிட்டன. பலமுறை எனது கடவுச் சீட்டு பரிசோதிக்கப்பட்டது. எமக்கென்று ஒரு நாடு கிடைத்தாலொழிய இலங்கைக்குத் திரும்புவதில்லை என்ற முடிவுடன் நான் லண்டன் திரும்பினேன். எனது முடிவு எவ்வளவு சரியானது என்பது இங்கு நான் வந்தபின் மேலும் உறுதியாகியுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைத் தவிர்த்து நான் சென்ற இடமெல்லாம் இராணுவ முற்றுகைக்குள்ளான இடங்களில் பயணித்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. பல இராணுவ முகாம்கள், பல இராணுவ சோதனைச் சாவடிகள் எங்கும் சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்”.

1958-ல் சிங்களக் கொழும்பிலிருந்து அனைத்தும் இழந்து தப்பித்து அகதியாய்த் திரும்பிய காங்கேசன் துறைத் தமிழச்சியின் மனவேதனையும், 2002, அக்டோபரில் ஈழம் போய் லண்டன் திரும்பிய ஒரு தமிழனுடைய முடிவும் சமகோட்டில் பயணிக்கின்றன. இலங்கை எமக்கு நாடல்ல, ஈழமே எமது நாடு என்ற தனி நாட்டை நோக்கிய சிந்தனைப் பயணம் தமிழ் மக்களின் உளவியலில் அக்காலம் முதல் அழுத்தமாகக் கீறத் தொடங்கியது.

பாகிஸ்தான், மியான்மர், சில ஆப்பிரிக்க நாடுகளில் வெளிப்படையாக இராணுவ ஜெனரல்கள் தலைமையில் இராணுவ ஆட்சி நடந்தன. நடைபெறுகின்றன. 1958 முதல் சனநாயகத்தின் பேரில் இலங்கையில் இராணுவ ஆட்சியே நடக்கிறது. ஒரு உண்மையை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். 50 ஆண்டுக் காலமாய் இராணுவ ஆட்சி நடைபெறுகிற இலங்கைக்கு அன்று முதலாக இன்று வரை இந்தியா முட்டுக் கொடுத்து தாங்குகிறது. அமெரிக்கா ஒப்புக்கு கொண்டு வந்த ஜெனிவா தீர்மானத்தில் திருத்தங்கள் செய்து இன்னும் கைத்தாங்கலாய்-இடுப்பில் கைபோட்டு கூட்டிக் கொண்டு அலைகிறது இந்தியா.

- 2 -

”தேசிய ஒன்றிணைப்பு என்பது குடிமக்கள் இதயங்களில் பிறந்திட வேணடிய ஒன்று; அங்கே அது இறந்து போகையில், இராணுவமோ, அரசமைப்போ, அரசாங்கமோ அதனைக் காப்பாற்ற முடியாது” என்று இந்தியாவின் அறியப்பட்ட வழக்குரைஞர் நானி பல்கிவாலா கூறினர். (1990, நவம்பர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரை)

இலங்கைப் பேரினவாத அரசு செய்த மிகப்பெரிய சாதனை இறந்து போன தேசியத்தை இராணுவத்தால் மீட்க முயன்றதுதான். உருவிழந்த இலங்கைத் தேசியத்தை இராணுவ ஆட்சியால் உருக்கொடுக்க முயன்றனர்.

1985-ல் இராணுவம் வடமராட்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றியது. கைவசப்படுத்தியவுடன், வடமராட்சியை சுற்றிவளைத்து, இளைஞர்களையெல்லாம் கடற்கரைக்குக் கொண்டுசென்றது. அவர்கள் கைகளில் சிங்கள “சிங்கக் கொடியைக் கொடுத்து “ஸ்ரீலங்கா வாழ்க” என முழக்கமிடச் சொன்னது. அவர்கள் “ஸ்ரீலங்காவாழ்க“ என முழக்கமிட்டதை, தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினர். இலங்கை தேசியத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் இத்தமிழ் இளைஞர்கள் என்று பிரச்சாரம் செய்ய அது பயன்பட்டது. சிங்கள மக்களை பெருமிதம் கொள்ளச் செய்யவும், தமிழர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்திய பின்னர் இராணுவம், அவர்களில் 50 பேரை கடற்கரைக்கு அணிவகுக்கச் செய்து சுட்டுக் கொன்றது. அதில் ஒரு ஊமைப் பையனும் அடங்குவான். தேசிய இனங்களின் இணைப்பைப் பேண உள்நுழைக்கப்பட்ட இராணுவம், அதன் இராணுவ குணாதிசயத்தின்படி இருப்பதையும் உடைத்துச் சிதற வைத்தது.

“பத்து தமிழர்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற கணக்கில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என 2002-ல் சிதம்பரநாதன் கூறினார். இன்று அந்தக் கணக்கு மாறியுள்ளது.. மூன்று பேருக்கு ஒரு இராணுவச் சிப்பாய்; பத்து ஊர்களுக்கு ஒரு இராணுவ முகாம் . நகரமாயினும், கிராமமாயினும். கல்யாணமானாலும், கருமாதி வீடாயினும் இராணுவம் வருகிறது. எந்த குடும்ப நிகழ்வும் சுதந்திரமானதாக இல்லை. சிரிக்கவும், அழுகவும் அது தொடர்பான விசேடங்களுக்குப் போகவும் இராணுவத்தின் அனுமதி பெற்றுச்செல்ல வேண்டியுள்ளது. இராணுவம் அந்த இடங்களிலெல்லாம் நேரடியாக வந்து கண்காணிக்கிறது. சிவில் நிர்வாகம் அறவே நடைமுறையில் இல்லை.

“தமிழர் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இலங்கை ராணுவச் சிப்பாய்கள்தான் தங்கியுள்ளனர். சமூக ரீதியாகவும் வேறு வகையிலும் இது தமிழ்ச் சமூகத்தினருக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் சுட்டிக் காட்டுகிறார். இலங்கையில் நிலவும் சனநாயகம், மனித உரிமைகள் மறுப்பு பற்றி ஏப்ரல் 30, 2012 அன்று பிரிட்டன் வெளியுறவுத்துறை வெளியிட்ட விரிவான அறிக்கை இது பற்றி விவரிக்கிறது.

“தமிழர்களுக்காகப் பரிந்து மட்டுமல்ல, பொதுவாக இலங்கை அரசின் போக்கை விமரிசிக்கும் சனநாயகவாதிகள் கூட கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். இந்த விசயத்தில் தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர். தமிழர்களின் வசிப்பிடங்களில் குவிக்கப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. உலக அளவில் ஆண்-பெண் விகிதத்தில் இலங்கை படுமோசமாகச் சரிந்து (இது தமிழ்ப் பிரதேசம் பற்றியது) 16வது இடத்திலிருந்து 31வது இடத்துக்குப் போய்விட்டது.”

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கின் இந்தக் கவலை அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதாகும். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்ச வேறொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். ”நாங்கள் பிற நாடுகளில் ராணுவ முகாம்கள் அமைக்கவில்லையே எங்கள் நாட்டில்தானே வைத்திருக்கிறோம்” என்று எகத்தாளம் கொள்கிறார். இப்படிப் பேசுவதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற வல்லரசுகளை எள்ளலுக்கு ஆளாக்குவதாக நினைக்கிறார். இராணுவ முகாம்கள் இருப்பதால் அந்தப் பகுதிகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறுகின்றன என்ற இன்னொரு கொத்துக் குண்டையும் வீசுகிறார் கோத்தபய.

“கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் அங்குள்ள மக்கள் முகாம்களை அகற்ற வேண்டுமென கூச்சல் போடவில்லை. தியோத்தலோவ் போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் இருப்பதினாலேயே பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதுபோல் ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பிரதேசங்கள் வளர்ச்சி பெறும்”

கோத்தபயவின் இந்த வார்த்தைகள் மூலம் ஏகாதிபத்தியங்களின் இராணுவ முகாம்கள் இன்னொரு நாட்டில் இருப்பதால் அந்த நாடுகளும் பொருளாதார ரீதியாகவும் மற்ற அம்சங்களிலும் வளர்ச்சி பெறுகின்றன என்று அர்த்தம் கொள்ள இடம் ஏற்படுகிறது. இவ்வகை தர்க்கபூர்வமற்ற வாதங்களும் குரூர மன அமைப்புகளும் கொண்டவர்களாய் எந்த மனக் கலக்கமும் இல்லாமல் ராசபக்சேக்கள் இராணுவ வெறியாட்டம் போடுகிறார்கள் என்பது யதார்த்தம்.

எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றங்களைப் பார்வையிட்டுத் திரும்பிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்னைச் செய்தியாளர்களிடம் சொன்னார்கள் ( 21.4.2012)

“தமிழர்கள் கோவில் மற்றும் விழாக்களுக்குச் செல்லும்போது ராணுவம் தொடர்ந்து கண்காணிக்கிறது. அவர்களைத் தடுத்து கேள்விகளும் கேட்கின்றனர். இதுவே தமிழர்களிடம் ஒரு வித பயத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டுமென இலங்கை அரசிடம் வலியுறுத்தினோம். இதை இலங்கை அரசு ஏற்று நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது”

ஈழத் தமிழருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்தையிலும் செயலிலும் உருக்கொடுத்து, இரவு பகல் பாராது அயராது உழைத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (!) டி.கே. ரங்கராசன் எம்.பி, தனியாக செய்தியாளர்களைத் சந்தித்தார்.( 22-4-2012)

“யாழ்ப்பாணம் பகுதிகளில் கோயில்களிலும் ராணுவம் நுழைந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் ராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதை மக்கள் குறையாகக் கூறினார். இந்த இடங்களில் ராணுவம் திரும்பப் பெறவேண்டும் என ராஜபக்சேவிடம் அனைவரும் வலியுறுத்தினோம். ராணுவத்தைத் திரும்பப் பெறுவதாக ராஜபட்சே உறுதியளித்தார்” என்கிறார்.

குழுத் தலைவரான சுஷ்மா ஸ்வராஜும் இராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தியதை ராஜபக்சே ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தப்படி அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் தெரிவித்துள்ளவாறு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று நாடாளுமன்றக் குழுவிடம் ராஜபட்சே உறுதியளித்தாகவும் சுஷ்மா தெரிவித்தார்.

“ராஜபக்சே இராணுவத்தைத் திரும்பப் பெறுவது பற்றியோ 13வது சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவது பற்றியோ எந்த உறுதியும் அளிக்கவில்லை” என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஐலேண்ட் பத்திரிக்கை தெரிவித்தது. “இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்வது சாத்தியமில்லை” என்று எம்.பி.க்கள் குழுவிடம் ராசபக்சே தெரிவித்துவிட்டார் என்பதாகவும் அந்த பத்திரிகை எழுதியது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் மே 18-ஐ இலங்கை அரசு வெற்றி விழாவாகக் கொண்டாடிற்று. விடுதலை நாள் விழா, குடியரசு நாள்விழா வரிசையில் தேசிய விழாவாக இந்த வெற்றியைக் கொண்டாடிய அன்று ராசபக்சே பேசினார்; “நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென பலரும் வலியுறுத்துகின்றனர். இப்போதுள்ள சூழலில் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இங்குள்ள ராணுவ முகாம்களைத் திரும்பப்பெற முடியாது ”

இன்னும் ஒருபடி மேலே போய் ” அய். நா மன்றத்தில் மற்ற நாடுகளைப் போல் இலங்கையும் உறுப்பு நாடு தான். மற்றவர்களுக்கு அளிக்கப்படும் கௌரவமும் மரியாதையும் இலங்கைக்கும் அளிக்கப்பட வேண்டும். எங்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளும் வலிமை எங்களுக்கு உள்ளது”என்றார். இது எங்கள் விவகாரத்தில் யாரும் தலையிடாதீர் என மேற்கு நாடுகளை எச்சரிப்பதாக அமைந்தது.

இராணுவத்தை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூக்கிலும், வாயிலும் ரத்தம் வரும்படி குத்திய பிறகு, நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களோ, இந்திய ஆட்சியாளர்களோ ஏன் வாய்திறக்கப் போகிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு,கிழக்கு பகுதிகளில் ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டதாக தன்னுடைய அரசுக்கு அறிக்கை அனுப்பிய இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் ஜான் ரான்சின்னை இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் அழைத்து எச்சரித்ததும் இதையே அறிவிக்கிறது.

“ராணுவம் தமிழர் பகுதிகளில் தொடர வேண்டும். ராணுவத்தை வெளியேற்றுமாறு தமிழ்க் கட்சிகள் கோரக்கூடாது. 200 தீவிரவாதிகள் சேர்ந்தால் குண்டு வெடிப்பதன் மூலம் இப்போதிருக்கும் நிலையை தலைகீழாக மாற்றி விட முடியும்” விடுதலையான பொன்சேகா இராசபக்சே வழியிலும், அதை விஞ்சியும் வலியுறுத்துகிறார்.

“தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை. பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். பத்து இருபது ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.”

பொன்சேகாவின் அறிவிப்பின்படி, தமிழர்கள் அனைவரும் சிங்களராக மாற்றப்பட ஆகும் காலமாகிய பத்திருபது ஆண்டுகள் வரை – தங்களின் மொழி, அரசியல் பண்பாட்டுத் தனி அடையாளங்களை சிங்களத்தில் கரைக்கும் வரை காத்திருக்க வேண்டுமென்பது அர்த்தம்.

இனக்கொலை, அதனை நியாயப்படுத்தல் என்ற ஒரு வாயின் இரு உதடுகள் தாம் இராஜபக்சே, பொன்சேகா ஆகிய இரு கொலையாளிகள். உள்ளுக்குள் இருப்பதை உதடுகள் மாற்றி உச்சரிக்காது தானே.

- 3 -

ஊடகவியலாளர் நடேசன் கொல்லப்பட்ட நினைவு நாள். 30.5.2012. நடேசன் வீரகேசரியின் பத்தி எழுத்தாளர். சுதந்திரமான ஊடகவியலாளர் “இராணுவத்துக்கெதிரான செய்திகளை வெளியிட்டால் கைது செய்யப்படுவீர்” 17.6.2003-ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராணுவ அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார் என “ஊடகவியலாளர் பாதுகாப்பு சர்வேதேச அமைப்பு” சுட்டிக் காட்டி இருந்தது. 2004 மே 31ல் நடேசன் படுகொலை செய்யப்பட்டார். இராணுவத்தினரின் துணையோடு, கருணாவின் ஒட்டுக்குழு அதைச் செய்து முடித்திருந்தது. லசந்த விக்கிரமசிங்கே என்ற ஊடகவியலாளரின் படுகொலை பட்டப்பகலில் வெளிப்படையாக நடந்தது. இராசபக்சேக்களின் நிர்வாக ஊழல்களை, குறிப்பாக இராணுவத்தின் சீர்கேடுகளை லசந்த வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார். பொன்சேகா அப்போது இராணுவ ஜெனரல் “போர் நடைபெற்ற காலத்தில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுககு எதிரான தாக்குதல்களை ராணுவமே முன்னெடுக்கிறது என்ற தோற்றத்தை ராசபக்சே ஏற்படுத்தினார்” என்று சொல்கிறார் பொன்சேகா.

“ராசபக்சே ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு (ஜனாதிபதி மாளிகை) அழைத்து நீங்கள் ராணுவத்தினருடன் மோதி பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டால் அதனை என்னால் தீர்க்க முடியாது என பொறுப்பற்ற வகையில் அச்சுறுத்தியிருந்தார்” என்று வெளிப்படுத்தியிருக்கிறார். கூட்டுக் கொலையாளியான பொன்சேகா இதன் மூலம் தன்மேல் படிந்திருக்கும் கொலைகாரப் பட்டத்தை ராசபக்சேவுக்கு மாற்றிவிட முயல்கிறார். இராணுவ ஜெனரலின் விசமத்தனம் புரிகிறது. ஆனால் இரு ராணுவ சர்வாதிகாரிகளின் நீயா நானா போட்டியில் இப்போதைக்கு இராசபக்சே பொன்சேகாவை கீழே கீழே தள்ளிவிட்டார்.

பொன்சேகா சொல்வதில் ஆயிரம் பொய்கள் அடுக்கியிருந்தாலும் ஒரு உண்மை திறந்து விடப்பட்டிருக்கிறது. சிங்களர்கள் தமிழர்களுக்கு எது செய்தாலும், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மையே. பேரின அரசியலை முன்வைத்து ஒவ்வொரு இலங்கை அதிபரும் அவரின் அரசியல் கட்சியும் இது காலமும் சிங்கள மனோவியலைக் கட்டியமைத்து எடுத்து வந்துள்ளார்கள். வன்னியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதும் முள்ளிவாய்க்கால் படுகொலையும் தமக்குச் சாதகமான சரியான செயலென சிங்களர்கள் ஏற்கிறார்கள். படுகொலை மீது அவர்களுக்கு வெறுப்புணர்வு இல்லை. கொல்லப்பட்டதைக் கொண்டாடும் வகையில் இலட்சம் இலட்சமாய் கொழும்பில் மே 18ல் இணைந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இணைவார்கள்.

இன்றைக்கு இலங்கை இனவெறிக் காட்டாட்சியின் முன்னணி நட்சத்திரங்களாய் ஜொலிப்பவர்கள் ராசபக்சேக்களும் பொன்சேகாவும். திரைமறைவில் ஒளிந்திருக்கிற சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே என்ற நபர்களைப் பேசாது விடமுடியாது.. சிங்களரின் மனோவியல் தெரிந்த இவர்களுக்கு குவியல் குவியலாய்க் கிடக்கும் பிணங்களுக்காக பேசத் தயக்கம்; கொலை செய்யப்பட்ட மனிதர்களுக்காகப் பேசப் போய், சிங்களர்கள் தமக்கு எதிராக எழுந்து விடுவார்களோ எனும் பயம் முதுகுத்தண்டில் ஓடுகிறது. சேனல்-4 ஒளிபரப்பிய கொலைக்களக் காட்சிகளைக் கண்டு “நான் ஒரு இலங்கை நாட்டவன் என்று சொல்லிக் கொள்ள அவமானப்படுகிறேன்” என லண்டனில் படிக்கும் தன் மகன் சொன்னதைக் குறிப்பிட்ட சந்திரிகா அதன் பின் தொடர்ச்சியாய் எதையும் கூறவில்லை. அவருடையதும் ரணில் விக்கிரமசிங்காவினுடையதுமான தொடர்ச்சியான செயல்பாடு இராசபக்சேக்களின் கொலைக் குற்றத்தை சுட்டிக் காட்டவோ, எதிர்க்கவோ, உலகப் பார்வைக்கு அம்பலப்படுத்தவோ இல்லை.. சந்திரிகாவின் மகனாக இல்லாமல் வேறு யாராக எப்பகுதியிலிருந்து பேசியிருந்தாலும் உயிர் பறித்திருப்பார்கள். இந்த உயிர் அச்சம் இருவருக்கும் உள்ஓடுகிறது. ஆனால் சந்திரிகாவும், ரணிலும் சர்வ தேசங்களால் அறியப்பட்டவர்களாதலால் பிரபலங்களின் உயிர்நீக்கம் அவ்வளவு எளிதல்ல. ராசபக்சேக்களுக்கு எதிர்ப்பு என்று ஆரம்பித்து, முடிவில் அந்த அரசியல் தங்களுக்கான எதிர்ப்பு அரசியலாக பூமராங் ஆகி விடுதல் கூடாது என்ற அச்சத்தில் மௌனித்திருக்கிறார்கள். இறுதியில் அது தமிழர் எதிர்ப்பு அரசியலாக மிச்சப்பட்டு நிற்கிறது.

சிங்கள மனோவியலின் பிரதிபலிப்புத்தான் இராணுவம். அது உளவியலாக மட்டுமல்லாமல் குடும்ப வாழ்வாகவும் ஆகிவிட்டது. இராணுவத்தில் இருக்கிற சிங்களச் சிப்பாயின் குடும்பம் வளமாக வாழ்கிறது. இன்று சிங்களச் சமுதாயத்தின் மதிப்புறு வட்டத்துக்குள் சிங்களச் சிப்பாய் கம்பீரத்துடன் நிற்கிறான். தென் இலங்கையின் பெரும்பாலான சிங்களக் குடும்பங்கள் இராணுவ வருமானத்தில் செழிப்பாய் கடத்துகிறார்கள்.

இராணுவத்தைப் பார்க்கும் ஒவ்வொரு சிங்களவனும் தனக்கானதாய் நேசபாவத்தோடு பார்க்கிறான். நெருக்கமான உணர்தலின் பார்வை அது. இராணுவத்தை எதிரில் காணுகிற ஒவ்வொரு தமிழனும் அச்சத்தோடு பார்க்கிறான். அவனைக் கழுவேற்றிய ராணுவம் என்ற உணர்தலின் பயம் அது.

இராணுவத்தையும் சிங்களக் கூட்டு உளவியலையும் ஒரு சேர பாதுகாப்பாய் வைத்திருக்கும்வரை ராசபக்சேக்களுக்கு எதிர்ப்பு வந்தாலும் பயமில்லை. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி சிந்திக்கவோ கவலையோ கொள்ள வேண்டாம். ராசபக்சே 18.3.2011 சொன்னார். “சமஷ்டி (கூட்டாட்சி) என்ற பேச்சுக்கே இடமில்லை. அதை நாங்கள் எப்போதோ தூக்கியெறிந்து விட்டோம். எமது மக்கள் ஏற்றக் கொள்ளக்கூடிய தீர்வையே வழங்குவோம்”

இங்கு `எமது மக்கள்` என்ற அடைமொழியை சிங்களருக்கு உரித்தானதாகவே காண முடியும். ஒற்றை இனத்தினது ஒற்றைச் சிந்தனை வழியில் நடப்பதற்கு பிற இன மக்களும் முன்வந்தார்களாயின் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது அதன் சாரம்.

“தமிழருக்கான அரசியல் தீர்வென்பது சிறிலங்காவைப் பொருத்தவரை அறுவறுப்பான சொல். அது பிரிவினைக்கு வழிவகுக்கும். நான் ஓய்வுபெற்று வீட்டுக்கு செல்ல வேண்டுமானால் அதைப் பேசினாலே போதும்”

இதுவும் 18.3.2011ல் ராஜபக்ஷே சொன்னது.

- 4 -

ராசபக்சேக்கள் தமிழ்ப்பிரதேசத்தில் 5-ம் கட்டப்போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நான்காம் கட்டப் போரை முடிவுக்கு கொண்டுவந்த, இராணுவம் வழியாக இரு வகையில் 5-ம் கட்டப்போரை முன்னகர்த்துகிறார்கள்.

முதலாவது

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம்களை அதிக எண்ணிக்கையில் நிறுவுகிறார்கள்; சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்கள். இராணுவ நிழலில், சிங்களக்குடியேற்றங்கள் நிகழ்த்தப்பெறுகின்றன. புதிய புத்தவிகாரைகள் அதற்கு ஏதுவாய் நிர்மாணிக்கப்படுகின்றன. இராணுவம் + புத்தவிகாரை + சிங்களக் குடியேற்றம் எனும் முக்கூட்டில் நான்காம் கட்டப்போர் நடக்கிறது.

தமிழர் நிலங்கள், இந்தச் சிங்கள மயமாக்கலுக்காய் அபகரிக்கரிப்புச் செய்யப்படுகின்றன. யாழின் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்த எதிர்ப்புப் போராட்டம், அது நடைபெறமுடியாமல் தடுத்த இராணுவம், இராணுவத்தின் பரிந்துரையில் தடைசெய்த நீதிமன்றம்; கூட்டமும் பேரணியும் நடத்த முடியாமல் போய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் அலுவலகத்தில் நடத்திய கூட்டம், நில அபகரிப்புக்கு எதிராக 18.06.2012-ல் கவன ஈர்ப்புப் போராட்டம், முறிகண்டி பிள்ளையார் கோயில் திடலில் 26.06.2012-ல் நடைபெற்ற எதிர்ப்புப் போரட்டம் என மக்களின் எழுச்சி நடவடிக்கைகள் உயர்ந்தும் அதிகரித்தும் வருகின்றன.

மாறாக தமிழ்க் குடும்பங்களின் குடியேற்றம் தடுக்கப்பட்டு வருகிறது. வலிகாமம் பகுதியில் 7067 குடும்பங்களின் 26,338-பேர் இன்னும் குடியேற அனுமதிக்கப்படவில்லை. மீள்குடியேற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் சில இடங்களிலும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொது அமைப்புக்களது நடமாட்டம் அனுமதிக்கப்படவில்லை. வடக்கின் மீள்குடியேற்றப் பகுதிகளில், குடிநீா் விநியோகத் திட்டங்களை செஞ்சிலுவைச் சங்கம் செயல்படுத்திட தடை விதிக்கப்பட்டது. 2010-ல் வடக்கில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன. வன்னிப் பேரழிவின் பின் ”எமக்கு வந்த முறைப்பாடுகளில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 15,780. இதில் 1494-பேர் சிறுவர்கள், 751-பெண்கள்” என்கிறது செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011-அறிக்கை. இது தொடர்பில் அரசுக்கு பல தடவை முறைப்பாடுகள் செய்தும், பதில் ஏதும் கிடைக்கவில்லையென்கிறது செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புத் தலைமையகம்.

இரண்டாவது;

வடக்குப் பகுதிகளில் அபிவிருத்தி என்ற ஸ்லோகத்தில், உலகநிதி மூலதனங்களை உள்ளிறக்கும் முயற்சிகள் துரிதமாய் நடைபெறுகின்றன. இதன் பொருட்டான காய்நகர்த்தலே, ஐ.நா. மனித உரிமை அவையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம். விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு எல்லா வகைகளிலும் உதவிய சீனா, இந்தியா போன்றவை, உள்ளிறங்கலுக்காகவே யுத்தத்தை விரைவுபடுத்தின. தமக்கான கடல்வழியையும் நிலவழியையும் திறந்து வைத்தன. முன்னர் இந்த இருக்கைக்காகக் காத்திருந்து, பலவிதமான சூழ்ச்சி செய்தும் இயலாதுபோன அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள் மூலதனத்தை இறக்கத் தயாராகிவிட்டன. பிரமாண்டமான திட்டங்களை வடக்குப் பிரதேசத்திற்குள் கோர்த்து, உலகமயமாக்களுக்குள் இழுத்து, தமிழ்ப் பகுதியின் இருப்பை இல்லாமல் செய்வது தான் வடக்கின் வசந்தம். மிகப் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த சிங்கள வட்டாரத்தின் மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை சிங்கள மக்கள் வரையிலும் கொண்டுவரப் படுவார்கள். இப்போதைய சீன, இந்தியக் கட்டுமாணங்களிலும், வேலைகளிலும் தமிழா்கள் இல்லை; அந்தத் தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் பின்னர் சிங்களர் தன்வயமாக்கப்பட்டு நிரந்தர வசிப்பாளர்களாக மாறுவார்கள். உண்மையில் இது தெற்கின் வசந்தம்!

சிங்கள இனத்துக்கு தமிழர்கள் ஒரு கறை தீராஅழுக்கு; கையிலிருக்கும் கறையை சோப்புத் தண்ணீரால் கழுவுதல்போல உலகமயமாதல் வழியே தமிழரின் இருப்பைத் தேய்த்துத் துடைக்க இலங்கை தயார்.

ஜூன் 2012 முதல் வாரம்; இந்தியாவின் சென்னைக்கு அருகிலுள்ள தாம்பரம் விமானப் படைப் பயிற்சி நிலையத்தில், இலங்கை விமானப் படையினர் ஒன்பது பேருக்கு பயிற்சி தரப்பட்டது. கேள்விப்பட்டதும், விசை கொடுத்ததுபோல், ம.தி.மு.க.வனர் விமானப்படை பயிற்சி முகாமுக்குப் போய் எதிர்ப்புத் தெரிவித்து, ஆா்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி தவிர தமிழக முதல்வா் ஜெயலலிதா முதல், ஏன் பேராயக்கட்சியினர் (காங்கிரஸ்) உட்பட, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்கள். இலங்கைவிமானப் படையினரை, பெங்களுரிலுள்ள “எலகங்கா“ விமானப் படை நிலையத்தின் முகாமுக்கு மாற்றி அனுப்பி பயிற்சி தருகிறது இந்தியா.

இலங்கைக்கு இன்று எந்த வெளிநாட்டுப் படையெடுப்பும் இல்லை; வேறு எந்தவொரு நாட்டுடனும் அது போரிடவில்லை; இன்னொரு நாட்டோடு பொருதுவதாக இருப்பின் இராணுவம் தேவைப்படும். ஒரு நாடு, இன்னொரு நாட்டுப் படையுடன் போரிட்டு வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, பிறநாடுகளில் இராணுவப் பயிற்சி பெறுவதுண்டு; பிறநாடுகளும் இராணுவப் பயிற்சி தருவதுண்டு, ஆனால் இலங்கை ராணுவம் தன் நாட்டுத் தமிழர்களை அடக்கவும் கொல்லவுமே இருக்கிறது. கொடூரமாய் அடக்கவும், கொலை செய்யவும் ஒரு ராணுவத்துக்கு இந்தியா தருகிற பயிற்சி, உண்மையில் கொலைகாரக் கூட்டாக மட்டுமே கருதக் கூடியது.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசைக் கொண்டிருந்த நாடு பிரிட்டன். இன்றும் உலகப் பெரும் வல்லரசுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. இன்று பிரத்தானிய ஏகாதிபத்திய இராணுவ வலிமை 80 ஆயிரம் படையினர் மட்டுமே. ”அந்த எண்ணிக்கையை இன்னும் குறைத்திடவும், இராணுவச் செலவினத்தை கட்டுப்படுத்தவும் வேண்டும்” என பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து, அரசும் அதற்கான பரிசீலனைகளில் ஈடுபட்டுள்ளது.

சுண்டைக்காய் தீவான இலங்கையில் தரைப்படையினர் மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம்; இதன்னியில் கடற்படை, விமானப் படை என பல பத்தாயிரக் கணக்கிலிருக்கிறார்கள். இலங்கை என்ற நாட்டில் இராணுவச் செலவினமே முதலில் நிற்கிறது. மேலும் மேலும் படைப் பெருக்கம் நிகழ்ந்து கொண்டே போகிறது. இந்திய அரசு, சனநாயக அரசாக இருக்குமானால், செய்யவேண்டிய எது? இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கு பதில், இராணுவ வேட்டையை விசைப்படுத்த பயிற்சி அளிக்கிறது.

”நாங்கள் உதவி செய்யாவிட்டால், உதவி என்ற பெயரில் சீனா காலூன்றிவிடும்” என்ற இந்திய வாதம் சிறுபிள்ளைத்தனமானது. சீனாவை, பாகிஸ்தானைக் காட்டி, தன் விரிவை வலுப்படுத்தும் தந்திரம் அல்லாமல், உண்மையாய் நம்பும் பேச்சு அல்ல. இந்தியா “ரேடார்“ கொடுத்தது; போராளிகளின் நடமாட்டம் அறிய “ஆளில்லா வேவுவிமானம்“ தந்தது. கனரக ஆயுதங்கள் முதல் கொத்துக் குண்டுகள் வரை அளித்தது என்பதெல்லாம் அனைவரும் அறிந்த விசயம். கேள்வி எதுவெனில், சீனா கொடுக்கிற குண்டு வெடிக்கும்; இந்தியா கொடுக்கும் குண்டுகள் வெடிக்காதா? சீனா கொடுக்கிற ஆயுதங்கள் தமிழா்களைக் கொல்லும்; இந்தியா கொடுக்கும் ஆயுதங்கள் தமிழா்களைக் “கொல்லாமை“ என்ற கோட்பாட்டுடன் பயணித்தவையா? எந்த உயிரையும் பறிக்காததும், எவரையும் நோக வைக்காத்துமான நல்லெண்ணக்குண்டுகளை” காந்திதேசம் தயாரித்து அனுப்புகின்றதா? என்பவையே கேள்விகள்.

அங்கே புத்தனும் புதைந்துபோய் விட்டான்; இங்கு காந்தியும் கொல்லப்பட்டு விட்டான். இதன் காரணமாகவே பிரபாகரன்கள் உருவானார்கள்.

இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழருக்கும் ஈழத் தமிழருக்கும் சீனா ஒரு அந்நியநாடு. சீனாக்காரன் உதவியால் சாகடிக்கப்படுவதால், அந்த அந்நியன் மேல் ஈழத்தமிழரின் கொடுஞ்சாபம் பொங்குகிறது. ஆனால் அதே உயிர் கொல்லும் வேலையை இந்தியா செய்யலாமா என்ற அவர்களின் கேள்வி நியாயமானது. அவர்களின் தொப்புள்கொடி உறவான தமிழகம், இந்தியாவுக்குள் இருக்கிறது என்பதால், இந்தியாவை நேசபுர்வ நாடாய் நம்பினார்கள். காமுகருக்கு தாயென்றும், தங்கையென்றும் பேதமில்லை என்பது போல, வணிக மூலதனத்தில் கொழுக்கும் இந்தியாவுக்கு தன்னவா் என்றோ அயலவா் என்றோ, பேதமில்லை.

இது நம்தாய்நாடு – இங்குள்ள தமிழருக்கு நம்பிக்கை உடைகிறது;

இது நம் அண்டைநாடு – ஈழத்தமிழருக்கு நம்பிக்கை தகர்கிறது.

இந்தியா நம் பகைநாடு – இரு தமிழர்களும் வந்து நிற்கிறார்கள்.

2013-வரை இருந்தாலும் அதனை ரத்து செய்து, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளார் ராசபக்சே. வடக்கு மாகாணசபைத் தேர்தலை, 2014-க்கு தள்ளிப்போடுவதாக அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் ஏறக்குறைய நிறைவுக் கட்டத்தை வந்தடைந்துவிட்டது. தமிழ் மக்களுக்கு சமமாக சிங்கள எண்ணிக்கை பெருகி, தமிழர் தொகைக்கு கழுத்தளவு உயரம் வந்துள்ளது. இன்னும் சில வருடங்கள் தமிழரைச் சிறுபான்மையாக்கி, சிங்களப் பெரும்பான்மை தமிழரைத் தோற்கடித்துவிடும். கிழக்கைப் போலவே வடக்கையும் ஆக்குவதற்கு, சிங்கள மக்களை பெருமளவில் குடியேறச் செய்து, புதிய வாக்காளர்பட்டியல் தயார் செய்ய 2014 வரை தேவைப்படுகிறது. இதைச் செய்துமுடிக்க, முற்றமுழுக்க நிரந்தர ராணுவப் பிரசன்னம் அங்கு தேவை.

இராணுவ ஆட்சியைத் தொடருவதற்கான சனநாயக ஜோடனைகள் என இதை வேறொரு அர்த்தத்தில் விவரிக்கலாம்; சனநாயகத்தின் பேரால் இராணுவ ஆட்சி செய்யும் சிங்களத்தின் இராசதந்திர வல்லமை, தமிழின மக்களை தோல்விக் குழிக்குள் செலுத்தியது. நாம் ஏமாந்தது மட்டுமல்ல, உலகமும் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறது என்பது விந்தையானது.

நிலவுவது சனநாயகம் அல்ல; இராணுவ ஆட்சி என்பதை உலகின் கவனத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்து, உலகைத் திருப்பி வைக்கவேண்டிய கடமை நம் மீது உள்ளது. இராசதந்திர வல்லமையுடன் இக்கடமையையேனும் செய்து முடிப்போமா?

-பா.செயப்பிரகாசம்

http://www.padalai.com/?p=10903

இராணுவ ஆட்சியைத் தொடருவதற்கான சனநாயக ஜோடனைகள் என இதை வேறொரு அர்த்தத்தில் விவரிக்கலாம்; சனநாயகத்தின் பேரால் இராணுவ ஆட்சி செய்யும் சிங்களத்தின் இராசதந்திர வல்லமை, தமிழின மக்களை தோல்விக் குழிக்குள் செலுத்தியது. நாம் ஏமாந்தது மட்டுமல்ல, உலகமும் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறது என்பது விந்தையானது.

[size=4]இதில் இலாபம் அடைந்தது - சீனா[/size]

[size=4]மிகவும் ஏமாறிய நாடு - இந்தியா[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எமது, விடுதலைக்கான போராட்டத்தில், இழந்தவன் தமிழன் என்பதிலும் பார்க்கச், சராசரிச் சிங்களவன் என்பதே உண்மையாகும்!

ஏனெனில், எம்மிடம் இழப்பதற்கு, எதுவுமே, இருக்கவில்லை! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.