Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 8 – பெண்கள் தினம் – அம்மாவிடம் ஒரு நேர்காணல்!

Featured Replies

பெண்: மகள்… சகோதரி… காதலி… துணைவி… மனைவி…. தாய்… மாமி… அம்மம்மா

 

அம்மா அவரது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரைச் சந்திப்பதற்காக போனபோது குசினியில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் இருப்பது எனக்கு ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் அவர் கூறியவாறு சிறுவயது முதல் இதைத்தான் செய்து வந்திருக்கின்றார். எனக்குத் தெரிந்தவரையிலும் அம்மா தனது பெரும்பான்மையான நேரங்களை குசினியில் தான் கழித்திருக்கின்றார். ஆகவே அவர் குசினியில் இல்லாதிருந்தாலே ஆச்சரியமாக இருந்திருக்கும். நான் இங்கு போகின்றபோதும் “என்ன சாப்பிடுகின்றாய்” என எப்போதும் கேட்பதற்கு மறந்ததில்லை அவர். இவ்வாறு கேட்டுவிட்டு இருக்கின்ற சாப்பாடுகளின் வகைகளை காட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருப்பா. என் மீது இவ்வாறு அக்கறை காட்டுவதற்கு நான் ஆணாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் நமது ஆண் மைய சமூகங்களில் ஆண்களாக இருப்பதனால் பெண்களைவிட அதிக சலுகைகள் கிடைப்பது மட்டுமல்ல கவனத்தையும் பெறுவார்கள். ஒவ்வொரு முறையும் ஏதையாவது சாப்பிடுவதற்காக இந்த சலுகையை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்வேன்.


 

பெரும்பான்மையான நேரங்களில் அவர் என்னை உபசரிக்க வேண்டும் என்பதை எதிர்பார்பதுமில்லை. கேட்பதுமில்லை. மேலதிக வேலைகளை அம்மாவுக்கு வழங்குவதற்கு விரும்பாததே காரணம். ஆகவே நான் சென்ற குறிப்பிட்ட நாளில் அம்மா காண்பித்த உணவில் சிலதை எடுத்துக் கொண்டு, “உங்களது வாழ்க்கை தொடர்பாக கதைக்க வேண்டும். செய்கின்ற வேலையை முடித்து விட்டு வாருங்கள். காத்திருக்கின்றேன்” எனக் கூறினேன். அவரது வாழ்க்கை தொடர்பாக அறிவதோ கேட்பதோ எனக்கு புதிய விடயமல்ல. ஏனெனில் அவர் விரும்புகின்ற நேரங்களில் எல்லாம் தனது கடந்த கால வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்திருக்கின்றார். இதனால் அவரது வாழ்க்கை தொடர்பாக நாம் சிறிது ஏற்கனவே அறிந்தே இருக்கின்றோம். அதேவேளை அம்மா தொடர்பாக ஒரு பதிவை எழுதவேண்டும் என நீண்ட காலமாக நினைத்ததும் உண்டு. ஆனால் இந்த முறை வேறு ஒரு நோக்கத்திற்காக இதை தவிர்க்க முடியாது செய்ய வேண்டி ஏற்பட்டது அதிர்ஸ்டமே.


 

ஒரு அம்மாவாக இப்பொழுது சமைத்துக் கொண்டும், அம்மம்மாவாக தனது மகளின் குழந்தைகளைக் பார்த்துக் கொண்டும், வார இறுதிகளில் முதியோரின் நிகழ்வுகளுக்கு சென்றும், மிகுதி நேரங்களில் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்துக் கொண்டும் காலங்களைக் கடத்தவில்லை. வாழ்கின்றார். இன்று அமைதியாக போகின்றது போல் தெரிகின்ற அவரின் (கடந்த கால) வாழ்வு அமைதியானதல்ல.


 

அம்மாவின் இளமைக் காலம் பெரும்பான்மையான எல்லாப் பெண்களினதும் வாழ்வைப் போல கஸ்டமானதுதான். அதுவும் குடும்பத்தின் முத்த பெண் குழந்தையாக இருந்துவிட்டால் அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அந்தக் காலங்களில் பெரும்பாலான குடும்பங்களில் பெண் குழந்தைகளின் கல்வி தொழில்துறை மட்டுமல்ல அவர்களது வாழ்க்கை தொடர்பாக கூட அக்கறையற்றதாகவே சமூகங்கள் இருந்தன. இன்றும் அப்படித்தான். ஆனால் ஒரு வித்தியாசம். இன்று பெண்கள் தமது சமூகத்தால் தம் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு மத்தியிலும் தாமாகவே தமது கல்வியிலும் தொழில் துறையிலும் முயற்சி செய்வதுடன் அக்கறையாகவும் இருக்கின்றார்கள்.


 

கொடூரமான இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு, 1946ம் ஆண்டு இலங்கையின் தலைநகரமான கொழும்பில் அம்மா பிறந்தார். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஐந்து தம்பிகளுமாக ஏழு சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள். எட்டுக் குழந்தைகளில் மூத்தக் குழந்தையாக இருந்த இவரிடம் வீட்டுப் வேலைகளையும் தம்பி தங்கைகளை கவனிக்கின்ற பொறுப்பும் வழங்கப்பட்டது.  காலையில் எழும்பி சமைத்து, சகோதரங்களை பாடசாலைக்கு செல்லதற்கு ஆயத்தம் செய்து, பின் தானும் வெளிக்கிட்டு பாடசாலைக்கு செல்வார். அப்பா மகன் முரண்பாடுகள் போல தாய் மகள் முரண்பாடுகளாலும் பிரச்சனைகளை எதிர்நோக்கினார் இவர். (தணிக்கை) இந்தப் பொறுப்புகள் மற்றும் பிரச்சனைகள் எல்லாம் அந்தச் சிறுவயதில் மிகப் பெரும் சுமையாகவே இருந்ததாக இப்பொழுதும் உணர்கின்றார். இவர் கல்வி கற்பதில் ஆற்றல் இல்லாமையால் பத்தாம் வகுப்புடன் நின்றுவிட்டார். ஆனால் பல்வேறு விளையாட்டுக்களில்  ஆர்வமாக ஈடுபட்டதுடன் அதில் சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றார். இதையெல்லாம் எங்களுக்கு காட்டி தன்னிடமிருந்த ஆற்றல்களை வெளிப்படுத்த அவருக்கு விருப்பம். ஆனால் துரதிர்ஸ்டமாக அதை அறிவதில் எங்களுக்கு அக்கறை இருக்கவில்லை. இதனால் அவரும் அவற்றைக் காட்டுவதில் அக்கறை எடுப்பதில்லை.


 

சிறுவயதில் சிலாபத்தில் வாழந்து கொண்டிருக்கும் பொழுது முதன் முதலாக ஒரு இனக் கலவரத்திற்கு முகம் கொடுத்தார். 1958ல் தமிழர்களுக்கு எதிராக இனவாத சிங்களவர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்களே இந்தக் கலவரம். அப்பொழுது பலரின் சொத்து எரிக்கப்பட்டு கொலைகளும் நடந்தன. இக் காலங்களின் தனது தம்பி தங்கைகளுடன் ஹெலிக்கப்படரில் இருந்து வீசப்படுகின்ற சாப்பாட்டு பார்சல்களுக்காக ஓடியதை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றார். இதன் பின் 1977, 1983 காலங்களில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களை தனது கணவருடனும் குழந்தைகளுடனும் எதிர்கொண்டார்.


 

அம்மாவின் அப்பா கண்டிப்பான மனிதராக இருந்தபோதும் அம்மாவில் அக்கறையானவராக இருந்திருக்கின்றார். இவர் அப்பொழுது இலங்கை புகையிரத திணைக்களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா இப்படி படிக்காது வீட்டு வேலைகள் மட்டும் செய்து காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இவரது வாழ்க்கை இன்னுமொரு தளத்திற்கு சென்றது. இவரது தகப்பனார் தனக்குத் தெரிந்த உறவுக்காரப் பையன் ஒருவரை இவருக்கு திருமணம் செய்ய நிச்சயித்தார். ஆனால் அம்மாவின் விருப்பங்கள் கனவுகள் ஒன்றையும் யாரும் கேட்கவில்லை. அதைப்பற்றி யாரும் அக்கறையும் படவில்லை. தனக்கென சில விருப்பங்கள் கனவுகள் இருக்கின்றன என்பதை தனது பெற்றோருக்கு கூறுகின்ற தைரியம் அன்று அம்மாவிடம் இருக்கவில்லை. இதனால் தனது தகப்பனாரின் தெரிவை ஏற்றுக் கொண்டார். இது நமது குடும்பங்களில் நிலவுகின்ற ஐனநாயகமின்மையையே சுட்டி நிற்கின்றது. குறிப்பாக குடும்பத்திற்குள் பெண்களுக்கான ஐனநாயம் என்பது முழுமையாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. இவர்கள் தந்தையினதோ அல்லது முத்த ஆண் சகோதரத்தினதோ அல்லது வேறு பெரிய ஆண்களினதோ அல்லது பிற்காலத்தில் மகனினதோ கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியவர்களாகவே பெரும்பாலான பெண்கள் இருந்துள்ளனர்.  இதனால் தனது அப்பா தெரிவு செய்த கணவரையே திருமணம் செய்து கொண்டார். திருணமத்திற்கு முதல் தனது எதிர்கால கணவரை ஒரு தரம் சந்தித்தார். அப்பொழுது அவர் கோட்டும் சுட்டும் போட்டு டையும் கட்டிக் கொண்டு இருந்த அழகில் மயங்கி விட்டார்.


 

அக் காலத்திலிருந்த பெரும்பாலான மத்தியதர வர்க்கப் பெண்களைப் போல அம்மாவுக்கும் தனது எதிர்காலம், கல்வி, தொழில் தொடர்பாக பெரும் கனவுகளும் சிந்தனைகளும் நோக்கங்களும் இருக்கவில்லை. எல்லோரையும் போல அவருக்கு “நல்ல மனிதர்” ஒருவரை திருமணம் செய்வதே கனவாக இருந்தது. மேலும் இந்த மனிதர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கவேண்டும் எனவும் குடி சிகரட் பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார். அதாவது அன்று பெண்கள் தம்மைப் பற்றி சிந்திப்பதை விட எப்படி நல்ல மகளாக, மனைவியாக, மருமகளாக, தாயாக இருப்பது என்பதையே சிந்தித்தனர். இன்றும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. அம்மாவுக்கு பத்தொன்பதாவது வயதில் திருமணமாகியது. இதன் பின் நான்கு வருடங்களுக்குள் மூன்று குழந்தைகளுக்குத் தாயுமானார். பெண்கள் குழந்தைகளைப் சுமந்து பெற்றபோதும் அவர்கள் குழந்தை பெறுவதையும் எத்தனை குழந்தைகளைப் பெறவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்ற அதிகாரமும் முடிவும் ஆண்களாகிய அவர்களது கணவர்களின் கைகளிலையே (பெரும்பாலும்) இருக்கின்றன. பெண்களுகள் அம் முடிவுகளை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமே இருக்கின்றார்கள். இன்று நிலமை மாறி வருகின்றமை நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றது.


 

அம்மாவின் கணவருக்கு திருமணம் செய்யும் பொழுதே வேறு ஒரு வாழ்க்கை இருந்தது. ஆம்! அவர் முழு நேர கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார். அக் கட்சியின் பத்திரிகையில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தார். பொதுவாக இப்படி முழு நேர அரசியல் வேலை செய்பவர்களை பேச்சு மூலமாக இப்பொழுதுகூட திருமணம் செய்ய மாட்டார்கள். இவ்வாறானவர்கள் பெரும்பாலும் காதல் திருமணமே செய்து கொள்வார்கள். ஆனால் அம்மாவின் தகப்பனார் இவர் மீது கொண்ட விருப்பத்தினால் இவரிடம் தனது மகளைப் பொறுப்புக் கொடுத்துவிட்டு அவர் இறந்து போனார் எனக் கூறுகின்றார்.


 

தனது தகப்பின் மறைவுக்குப் பின் அம்மாவுக்கு தனது குடும்பத்துடனான தொடர்புகள் பல்வேறு காரணங்களால் இல்லாது போனது. இவர்கள் வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர். இதன் பின் 15 வருடங்களின் பின் 1983ம் ஆண்டில் இவரது ஒரு சகோதரியும் மூன்று சகோதர்களும் தாயும் இவரை சந்திப்பதற்கு வந்தனர். இதன் பின் தனது தாயை சந்திக்கவேயில்லை. 1993ம் ஆண்டு இவரது தயார் சிலாபத்தில் இறந்தபோனார். அப்பொழுது அம்மா கொழும்பிலிருந்தும் இந்த மரணத்தைப் பற்றி அறியவில்லை. மீண்டும் 2008ம் ஆண்டே தனது இரண்டு சகோதரிகளை சந்தித்தார். அதில் ஒரு சகோதரியை 40 வருடங்களின் பின் முதன் முதலாக சந்தித்தார். ஆண் சகோதர்கள் மூவரை பல ஆண்டுகளாக இன்னும் சந்திக்கவேயில்லை.


 

கணவருடைய அன்பைத் தவிர திருமண வாழ்வும் இவருக்கு வெளிச்சத்தையோ மகிழ்ச்சியையோ முன்னேற்றத்தையோ கொடுக்கவில்லை. இப்பொழுது தனது கணவரின் அரசியலினால் புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டார். திருமணம் முடித்த சில மாதங்களில் யாழில் அமெரிக்க அதிகாரிக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கணவர் கைதாகி சிறை சென்றார். குறிப்பாக 1966ம் ஆண்டிலிருந்து 1972ம் ஆண்டுவரை கணவர் வேலை செய்த கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலங்கள். அம்மாவும் கணவருடன் சேர்ந்து கட்சிப் பத்திரிகை விற்கவும் சுவரொட்டிகள் ஒட்டவும் அலைந்தார். (அதூன் எனது மரபணுவிலும் ஒட்டிக் கொண்டதாக்கும்.) இக் காலங்களில் நடைபெற்ற சேகுவேரா கிளர்ச்சி எனப்படும் ஜே வி பி கிளர்ச்சியாலும் கணவரின் தீவிரவாத செயற்பாடுகளாலும் பல முறை அவர் சிறைக்கு சென்றார். இவ்வாறு சிறைக்குப் போவதும் வருவதுமாக இரண்டரை வருடங்கள் சிறை வாழ்க்கையாக கணவருக்கு கழிந்தது. இக் காலங்களிலில் பெரும்பாலும் அம்மா தனது மூன்று குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்டார்.


 

தனது குடும்பத்துடன் உறவும் தொடர்பும் இல்லாமையால் கஸ்டமான காலங்களில் அவர்களிடம் உதவிக்குப் போக முடியவில்லை. கட்சியின் தலைவர்கள் சிறையில் இருந்தபடியாலும் மற்றும் கட்சிக்குள் பல முரண்பாடுகள் நடைபெற்றதாலும் கட்சியின் உதவியும் கிடைக்கவில்லை. சில கட்சித் தோழர்கள் தனிப்பட உதவி செய்ததைத் தவிர. ஆகவே கடைசிப் புகலிடமாக இருந்த ஒரே இடம் கணவரின் குடும்பம். இங்கு போனாலும் இவருக்கு பிரச்சனைதான். தென்னாசிய சமூகங்களில் கையில் பணமுமில்லாமல் சீதனமும் கொண்டு போகாமல் கணவரின் வீடுகளில் வாழ்வது என்பது கற்பனை செய்ய முடியாதது. அதிலும் கணவர் சிறையிலிருக்கும் பொழுது சென்று வாழ்வது என்பது அதிகமான திட்டுக்களுக்கு ஆளாகவேண்டி வரும். “நீ வந்த சகுனம் தான் என்ட பிள்ளை சிறைக்குப் போய்ட்டான்” என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவேண்டி வரும். இருப்பினும் வேறு வழியில்லாமல் கணவரின் வீட்டுக்குப் போய் சில காலம் இருந்தபின் அங்கிருப்பது சரிவராது என வெளிகிட்டு திருகோணமலைக்கு மீளவும் வந்தார்.


 

திருகோணமலையில் இருந்தபோது அயல் வீடுகளில் வேலைகள் செய்தும் அவர்களது உதவியுடனும் தனது குழந்தைகளை வளர்த்தார். இக் காலங்களில் தன்னிடமிருந்த நகைகளையை எல்லாம் அடகுவைத்தார். இதன் பின் இவர் சாரி உடுப்பதிலும் மாற்றம் உருவானது. கழுத்தில் நகை இல்லாதிருப்பதை மறைப்பதற்காக தனது சாரியால் கழுத்தைச் சுற்றிப் போர்த்துவிடுவார். காதில் கருவேப்பிலை தண்டினை குத்திக் கொண்டார். தனது பெண் குழந்தைகளுக்கும் அதனையே குத்தினார். இவ்வாறு வாழ்ந்து கொண்டு தனது கணவரை சிறையில் சென்று பார்ப்பது மட்டுமல்ல அவரை வெளியில் எடுப்பதற்காகவும் முயற்சிகள் செய்தார். இராணுவப் பொறுப்பாளர்களையும் கட்சித் தலைவர்களையும் சென்று சந்தித்தார். சிலர் உதவினர். பலர் கையை விரித்தனர். இன்றும் பல தாய்மார்கள் இவ்வாறான அலைச்சல் படுவதை நாம் காணலாம். எப்பொழுது இந்த அவலங்கள் தீருமோ?


 

இப்படிக் காலம் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் கணவர் விடுதலையாகி வெளியே வந்தார். கட்சிக்குள் பல முரண்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சில காலத்தின் பின் கணவர் கட்சியிலிருந்து விலத்தப்பட்டார் அல்லது வெளியேறினார். இதன் பாதிப்புகளாலும் தனிப்பட்ட காரணங்களாலும் கணவர் குடிக்கும் சிகரட்டுக்கும் அடிமையாகிப் போனார். இது அம்மாவிற்கு மேலும் பிரச்சனைகளைக் கொண்டு வந்தது. வாழ்வதற்கு ஒழுங்கான வீடில்லை. இருக்கின்ற அறைக்கும் வாடகை கொடுக்கவும் வழியில்லை. கையில் காசில்லை. பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத நிலை. என அவரைச் சுற்றி பல பிரச்சனைகள். இருக்கின்ற வீடோ ஐந்து பேருக்குமே படுக்க காணாத இடம். இதைவிட குடும்பத்திற்குள் இருந்த வன்முறைகள். இவ்வாறு 15 வருடங்களாக ஒழுங்கான வீடு இல்லாது வருமானம் இல்லாது தனது கணவர் சென்ற இடம் எல்லாம் அவரின் பின்னால் தனது குழந்தைகளுடன் இழுபட்டார். இவர் இது வரை தனது சொந்த வீட்டில் வாழ்ந்ததில்லை. அது அவரது கனவில் மட்டுமே சாத்தியமானது.


 

1983யில் இருந்து 1990வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் மேலும் புதிய பிரச்சனைகள் வந்தன. இப்பொழுதும் சிறிலங்கா மற்றும் இந்திய இராணுவ முகாம்களுக்கும் இயக்க முகாம்களுக்கும் சென்றார். தனது கணவரை விடுதலை செய்வதற்காக அல்ல. தனது மகனை விடுவிப்பதற்காக அலைந்தார். தலைமுறைகள் கடந்தும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் முயற்சி செய்யத் தவறவில்லை. நாவற்குழியில் அகதியாக கொட்டில் ஒன்றில் வாழ்ந்தபோது, அகதிப் பணம் கிடைத்தது. அதில் ஒரு பசு மாட்டை வாங்கினார். ஆனால் அது ஒரு முரட்டு மாடு. வயல் வெளிகளில் அதன் பின்னால் ஓடித் திரிந்தார். தனது கணவரையும் மகனையும் போல. இவர்களிடம் வாங்கிய அடி போதாது என்று அதனிடமும் உதை வாங்கினார். வாங்கிய உதையில் தோற்றுப்போனார் மீண்டும்.


 

1990ம் ஆண்டு கொழும்பில் வாழ ஆரம்பித்த பின் இவரது வாழ்வில் சிறிது அமைதி பிறந்தது. ஆகக் குறைந்தது மூன்று நேரங்கள் தனது பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தது. ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 1994ம் ஆண்டு மார்கழிமாத இரவொன்றில் அவரது கணவரை இனந்தெரியாத ஆயுத்தாரி ஒருவர் இவரின் முன்னால் சுட்டுக் கொண்டார். இதற்கு அரசியல் முரண்பாடுகளும் நாட்டில் நிலவிய முரண்பாடுகளும் காரணமாக இருந்தன. இவரது கணவரின் கொலை இவர் வெளி நாட்டிற்கு குடி பெயர்வதற்கான விமானச் சீட்டைப் பெற்றுக்கொடுத்தது. ஆகவே தனது பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.


 

இப்பொழுது அவருக்கு 65 வயது. தனது பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு வார இறுதி நாட்களில் முதியோர் ஒன்று கூடல்களுக்கு சென்று வருவதுடன் தொலைக் காட்சி நாடகங்கள் பார்ப்பதிலும் காலங்கள் கழிகின்றன. இவர் ஐந்து வயது வரையான குழந்தைகளை நன்றாக கவனிக்கும் திறனுள்ளவர். ஆனால் அதன் பின் இவரால் சமாளிக்க முடியாது. இதற்கு இவரது அறியாமையும் ஒரு காரணமாகும். அதேவேளை தனது கடந்த கால அனுபவத்தில் இருந்து பாடம் கற்றமையால் தனது மருமகளுடன் நல்ல உறவைப் பேணுகின்றார். தான் இறப்பதற்கு முன் தனது சகோதர்கள் சகோதரிகள் அனைவரையும் ஒன்றாக சந்தித்து அவர்களுடன் ஒரு நாளாவது ஒன்றாக இருப்பதற்கு விரும்புகின்றார்.


 

இந்த நேர்காணலிலும் சில விடயங்களை அவர் கூற மறுத்துவிட்டார். அதற்கான காலம் இன்னும் கணியவில்லைபோல……


 

இவர் தான் செய்கின்ற சமையல் தொழிலுக்கு ஊதியம் கிடைக்காத போதும், அத் தொழிலுக்கு சமூகத்தில் மதிப்பில்லாதபோதும், அதன் பெருமதியை சமூகம் உணராதபோதும், அதிலிருந்து இதுவரை ஒரு நாளும் ஓய்வு பெற்றதில்லை. தொடர்ந்தும் சமைத்துக் கொண்டிருக்கின்றார்.


 

இன்றுவரை சமூகம் தனக்கு கொடுத்த பாத்திரத்தையும் அது சுமத்திய பொறுப்புகளையும் மற்றவர்களது விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒரு பெண்ணா மனுசியாக நிறைவேற்றி வந்திருக்கின்றார். ஆனால் ஒருவரும் அவருக்கு என்ன விருப்பம் என்று இன்று வரை கேட்டதில்லை. ஏனெனில் அதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

 

இது அம்மாவிடம் இருந்து பெற்ற நேர்காணல்.


 

இதுபோன்று…


 

பல அம்மாக்கள் தங்களது கதைகளை பகிர்வதற்கு விருப்பமுள்ளவர்களாகவும் தயாராகவும் இருக்கின்றார்கள்.


 

நாங்கள் கேட்பதற்கு தயார் எனின்…


 

ஒவ்வொரு அம்மாவுக்கு ஒரு கதை உள்ளது. அது நாம் அறியாதது.


 

அதை அறிய உங்களுக்கு விருப்பமா?


 

உங்கள் அம்மாக்களும் தயாராக இருக்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.


 

1960ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள். 1970ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள். 1980ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள்.1990ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள். இந்த அம்மாக்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். பல அம்மாக்கள் தனது தகப்பனின் அரசியலுக்கு உதவி செய்திருப்பார்கள். பல அம்மாக்கள் தனது கணவரின் அரசியலுக்கு உதவி செய்திருப்பார்கள். சில அம்மாக்கள் தனது மகன்களின் அரசியலுக்கு உதவி செய்திருப்பார்கள். சில அம்மாக்கள் தாமும் இவர்களுடன் சரிசமமாக செயற்பட்டிருப்பார்கள். இவர்களின் அனுபவங்கைளை பதிவு செய்வோம்.


 

ஈழத்து தழிழ் சமூகத்தில் வாழந்த அம்மாக்களின் பல கதைகள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் அம்மாக்களைப் பற்றி நேர்காணல் செய்தால். அதை நாம் தொகுப்பாக வெளியீடலாம். இப் பொழுது பல பதிப்பகங்கள் இவ்வாறனவற்றை வெளியீடுவதற்கு செயற்படுகின்றன.


 

பெண்களின்…அம்மாக்களின்  பார்வை ஒரு புதிய பார்வையை எங்களுக்குத் தரும் என நம்புவோமாக. ஏனெனில் இந்தப் பக்கம் இன்றுவரை கவனிக்கப்படாமலே இருக்கின்றது. ஆகவே நண்பர்களே நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.


 

மீராபாரதி

08.03.2013

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு

நன்றி

  • தொடங்கியவர்

யாழ் கள நண்பர்கள் 

விசுகு, நிலாமதி and esan

 

மிகவூம் நன்றி

அந்தப் பாவப்பட்ட சீவனை(பாரதியின் அம்மா) நினைக்க இதயம் கனக்கிறது.  :(

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் நேர்காணலைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் மீராபாரதி. படிக்கும்போது மனம் நெகிழ்ந்துதான் போனது.

 

யுத்த காலத்தில் எனக்கு பதின்ம வயதாக இருந்த போதிலும், நடுச்சாமத்தில் எழுந்து வந்து பாயில் படுத்திருக்கின்றானா என்று அடிக்கடி கால்களைத் தடவி உறுதிப்படுத்திய எனது அம்மாவின் செய்கை நினைவுக்கு வந்துபோனது.

  • தொடங்கியவர்

நட்புடன் கிருபனுக்கும் ஈசனுக்கும்...
தங்கள் குறிப்புக்கு நன்றிகள்...
உங்கள் அம்மாக்கள் தொடர்பாக நீங்களும் ஒரு பதிவை எழுதலாமே.....
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் மீரா பாரதி அம்மாக்களின் பின்னால ஆயிரம் கதைகள் இருக்கும் அதையெல்லாம் கேட்க எங்கை நேரம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்றவுடன் பல அலைகள் மனதில் மீண்டு மீண்டும் வந்து மோதும்

பகிர்விற்கு நன்றி

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.