Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசித்தல் எனும் பெருவெடிப்பும் (வாசித்தல் மனநிலை விவாதமும்)

Featured Replies

PiraSath

 

 

முதல்,இறுதிப் பாக்கங்கள் சிதைந்தும், நடுபக்கம் நைந்தும் முண்டமான ரானி காமிக்ஸை ஒரே மூச்சில் மின்னல் வேகத்தில் படித்து, அதன்  முடிவு தெரியமல்  மூன்று நாள் தூங்கமலும், முப்பது நாட்கள் மண்டையோட்டுக் குகையில் குள்ளர்களோடும் , பல பின்நேரங்களை ரிஷியுடன் மாநகர நூலகத்தில் பழைய புத்தக இடுக்குகளில் தொலைந்த பாக்கங்களை தேடிய அலைந்ததும், அங்கே மேலும் முண்டமான பல புத்தகங்களை தொல்பொருள் ஆய்வாளனின் பெருமிதத்துடன் மீட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது.அப்பு ஆசையாக வளர்த்த கருப்பு நாய் மில்லர் - டெவில் ஆனதும்,வீட்டுக் கொல்லையில் வாழ்ந்து மடிந்த அப்பாவின் காளைமாடு மாயாவியின் குதிரையாகியதும்,சூடடித்து வெறுங்காணியில் குவித்திருந்த வைக்கோல் மண்டையோட்டு குகையாகியதும் சாத்தியமற்றதக தெரியவேயில்லை  நிகழ்ந்துவிட்ட ஒன்றாகவே மனதில் இருக்கிறது. மாயாவியின் மண்டையோட்டு முத்திரையில் ஆரம்பித்த வாசித்தலின் தீவிரம் இணையம் வரை தன் மென் வேர்களை பரப்பி நீர் மூலங்களை  தேடிக்கொண்டிருக்கிறது. வாசித்தல் பரிசளித்த கிளர்ச்சி, தந்த போதை, கொடுத்த ஆசுவாசம்  தாடையில் பதிந்த மண்டையோட்டுக் குறியாய் அதே ஈரலிப்புடனும், அதே வலியுடனும் இருக்கிறது.

 

பள்ளிநாட்களில் அருமையாக கிடைக்கும் ரானி காமிக்ஸை வாசிப்பதில் நண்பர்களிடையே அடிதடிதான். அதிலும் இணைப்பாக  குட்டிக் கதைகளும் , வாசகர் கடிதங்களும் வேறு இருக்கும். அதை வாசிக்காவிட்டால் எனக்கு புத்தகம் வாசித்து முடித்த திருப்த்திவராது. புத்தகம் கையில் கிடக்கும் இருபது நிமிடத்தில் இவ்வளவும் வாசிக்க வேண்டு. அதற்கு வாசிப்பில் வெறியும் , வாத்தியை உச்சும் தனித்  திறமையும் வேண்டும். எனக்கு வெறியிருந்தது. வாத்தியை உச்சும் திறமை கைகூடவில்லை. அதில் துசி கில்லாடி. எப்படியும் வாத்தியை உச்சிவிட்டு பாடநேரத்திலேயே முழுக்கதையையும் வாசித்துவிடுவான்.வாசிப்பது மட்டுமல்லாமல் மூன்று வாங்கு தள்ளியிருக்கும் திருவுக்கு அஞ்சாறு இட்டுக்கட்டலுடன் கதையையும் சொல்லி முடித்திருப்பான். அவனுக்கு இடைவேளைக்கு திருவின் செலவில் ஒரு ரீயும் , போண்டவும் கிடைக்கும்.  நானும் திருவுக்கு கதைசொல்லி இடைவேளைக்கு  இலவசமா ஒரு ரீ குடிப்பம் என்றால் அது எனக்கு எட்டாத ‘ரீ’. இருப்பதிலே ஒடிசலான ஆங்கில வாத்தியை உச்சி , நானும் வாசிப்பில் தாதா தான் என்று  சாதிக்க திட்டமிட்டேன். கடைசியில் தாத்தாவாகி முட்டுக்காலில் நின்றதுதான் மிச்சம். நானோ நடுப்பக்கம் தாண்டி மாயாவியின் கும்மாங் குத்தில் மூழ்கியிருந்தேன். மாயாவி சுட்ட தில் ஒரு  குண்டு என் நெற்றியை பதம்பார்த்தது. நிமிர்ந்து பார்த்தால் முழுச் சோக்கட்டி ஒன்று நான்காய் உடைந்து நிலத்தில் சிதறியது. அப்புறம் என்ன வாத்தி அடித்து,நொருக்கி விட்டார். மாயாவின் புத்தகத்தை வேறு நாலு துண்டாய் கிழித்து முகத்தில் வீசினார். நான் வகுப்பறை முகட்டைப் பார்த்தபடியிருந்தேன்.  கடைசிவரை ஓட்டைப்பிரித்து  மாயாவி வாத்தியின் இந்த அநியாயத்த தட்டிக்கேட்க வரவேயில்லை.மாயாவி தங்க மணற்கொள்ளயரை பிடிக்க போன இடைவெளியில் ஆங்கிலவாத்தியும் இருப்பதிலே ஒடிசலான என்னை அடித்து தனும்  'ரவுடி' என்று போர்ம் ஆகிவிட்டார். சூது கவ்வும்.

 

அம்மம்மா கையெழுத்து போட இரண்டு பேப்பர் போதாது. உதயன் முதல்பக்க தலையங்கம் போல பிலாக்கொட்டை அளவிலிருக்கும் அவாவின் ஒவ்வொரு எழுத்தும். அதை வாசித்து புரிந்து கொள்ள மலையாளாம் கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும். இரண்டு கோடுகளையும் மீறி வழியும் தடைதாண்டிய எழுத்து. ஆனால் வாசிப்பில் புலி. அதற்கு புலி எங்காவது புத்தகம் வாசிக்குமா என்று கேட்கக் கூடது. புலிப்பாச்சல் போல் வேகமாக வாசிப்பார். அதுவும்  மூன்றுநாள் பட்டினிகிடந்த புலி மானைதுரத்துவது போலிருக்கும் அவாவின் வாசிப்பு. அய்யாவும் அப்படித்தான். மகாபாரதத்தை இருவரும் திரும்ப திரும்ப வாசிப்பார்கள். எப்போழுதும் மகாபாரத புத்தகத்தினுள் வாசித்த அடையாளத்துக்கு  இரண்டு பனை ஓலைகள் சொருகப்பட்டிருக்கும்.  மகாபாரதம் வாசித்து அவர்கள் ஒருபோதும் சலிப்படைந்ததேயில்லை. அவர்களால் இப்படி திரும்ப திரும்ப வாசிக்க முடிகிறது என நான் ஆச்சரியபட்டிருக்கிறேன். மகாபாரதம் பல புதிர் கதைகள்  கொண்ட புதைகுழி போலும். ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு புதிர் விலகிக் கொள்ளும். மேலும்  ஐந்தாறு புதிர்கள் புதிதாய் வந்திருக்கும். அதை அவிழ்க திரும்ப வாசிக்க வேண்டும்.அவர்கள்  மகாபாரத புதைகுழியினுள் சதா முத்துக் குளித்துக் கொண்டிருப்பார்கள். அது அவர்களின் உலகம். நான் இரவு சாப்பாட்டிற்கு சோறு வேண்டாம் பிட்டுத்தான் வேனும் என்று அடம்பிடித்தால் அய்யா "சோறு தின்றவன் சொன்னால் சொர்க வாசலே திறக்கும்" என்பார். இது மகாபரதத்தில் வருகிறதா தெரியவில்லை. இப்படி அய்யாவிடம் பல சோ/சொ/சொ வகை செவிவழிக்கதைகளிருந்தது.

 

மகாபாரதத்தை தாண்டி அம்மம்மா திரும்ப, திரும்ப வாசித்தது பெரிய புராணமும் , கருவாச்சி காவியமும். அம்மம்மா கலங்கி ஒளிரும் கண்களுடன் கருவாச்சி காவியத்தை  திரும்ப திரும்ப வாசிப்பார் . ஒரு முறை நான் பாதி படித்து மூடிவைத்ததை தற்செயலாய் புரட்டியவர் அதனுள் அமிழ்ந்து போனார். எது கிடைத்தாலும் வாசிப்பது அய்யாவின் இயல்பு. எழுப்புதற் கூட்ட நோட்டிசில் இருந்து, விஞ்ஞாபன மலர்கள் வரை எதை,யார் கொடுத்தாலும் வாங்கி வருவார். விதிவிலக்கு இயக்க நோட்டீஸ்கள்.  அம்மாம்மா நிரூபனிடம் புத்தகம் வாங்கி வரும்படி சதா நச்சரித்துக் கொண்டேயிருப்பார். வெளியில் போனால் ஏதவதொரு புத்தகத்துடன் தான் வரவவேண்டும்.  இல்லையேல் இரவு பிட்டுக்கு முட்டைபொரியல் கிடையாது. ஆனால் அப்பாவும் , அம்மாவும் உதயன் , வலம்புரி தலையங்கம் வாசிப்பதோடு சரி தங்கள் வாசித்தல் கடமையை முடித்துக் கொள்வார்கள். அப்பா அரிதாக விளையாட்டு செய்தி வாசிப்பார். எனக்கு இந்த வாசிப்பு அம்மம்மா/அய்யாவிடமிருந்து தொற்றியதுதான்.

 

காமிக்ஸ் எனும் காட்டாற்றிலிருந்து என்னை மடைதிருப்பியவர் சுஜாதா. இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் துண்டிக்கப் பட்ட பிரதேசம். விகடன் இதழ்கள் ஓரிரு மாதங்கள் தாமதித்து மெல்ல வந்து சேரும்(ரமணா படம் வெளியாகி ஒரு கிழமையில் யாழிலும் ஓடிவிடும் ). ஆறிப்போன செய்திகளை அசுவரசியத்துடன் வாசிக்க வேண்டிய சூழல்.  கற்றதும் பெற்றதும் விதிவிலக்கு.  அதில் உரைநடை பிரவாகமெடுத்து ஓடும். ஆறிப்போனவையும் சுஜாதாவின் கைப்பட்டு புதிதாய் மலர்ந்தவை போலிருக்கும். சுஜாதவிற்கு சிவரமணியை தெரிந்திருக்கிறது. எங்களூரின் பின்னாலிருக்கும் நிலாவரை கிணற்றை தெரிந்திருக்கிறது. தருமு சிவராமை (பிரமிள்) ஆழம் காணவே முடியாத 'நிலவறை'கிணறு என்றார். அடுத்த இதழில் அது நிலவறை அல்ல , நிலாவரை கிணறு என்று திருத்தம் சொன்னார். எனக்கோ ஆச்சரியம் எப்படி இந்த மனுசனால் இவ்வளவும் சொல்ல முடிகிறது. அவ்வளவும் வாசிப்பு, தேடல்.சிவரமணியின் கவிதை ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தார். அதுவரை நான் வாசித்தது  'மித்திரனில்' வரும் காதல் கவிதைகளும் , உதயனில் ஞாயிறுகளில் ஓவியங்களுக்கு எழுதப்படும் கவிதைகளும்தான். உதயன் கவிதைகளின் சாரம் தடைகளையும் / சங்கிலிகளையும் உடைப்பதாயிருக்கும். ஓவியங்கள் பெரும்பாலும் நீண்ட கரங்களையும் , கால்களையும் சங்கிலி/விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும். கவிதைபாடி தடைகளை உடைக்க வேண்டும். நான் பாடிய கவிதைகள் எவையும் சங்கிலிகளை உடைக்கும் வல்லமை பெறவில்லை. பிரசுரமாகவுமில்லை.

 

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர்

- சிவரமணி

இந்த கவிதையை வாசித்ததிலிருந்து கவிதை இன்னொரு பரிமானமாய் என்னுள் விரிந்தது. இதிலிருந்து தொடங்கிய தேடல் இன்றுவரை புதினம், நாவல் , கட்டுரை என  தொடர்கிறது. வாசித்தல் எனும் போதை ஒரு தீராநதிபோல வேட்கையுடன்  ஓடிக் கொண்டிருக்கிறது. இணையம் வந்த பின்னர் எல்லாமும் விரல் நுனியில் கிடைத்துவிடும், எனினும் அச்சடித்த புத்தகங்களில் கிடைக்கும் சுகமே தனி. மின்நூல்களை கைதொலைபேசிகளிலும் , கின்டிலும் வாசிப்பது இன்னும் வசப்படவில்லை.  அப்பாவிற்கு சாரத்திலிருந்து ஜீன்ஸிக்கு மாறும் போதிருந்த சங்கடம்போலத்தான் இதுவும். வாசிக்க வாசிக்க பிடித்துப் போகலாம். அதுவரை அச்சடித்த புத்தகங்களை முகர்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

 

* கடந்த ஞாயிறு(03.11.2013) பாரிஸில்  நடந்த வாசிப்பு மனநிலை விவாதத்திற்கு போயிருந்தேன். வாசித்தலின் பிடிமானம் வாசித்ததை நாலு பேருடன் பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தருணமது .  இதுவரை வாய்தது எல்லாம் என்னளவில் வாசிப்பது மாத்திரம்தான். வாசித்ததை பகிர்ந்து/ விவாதித்துக் கொள்வது என்பது அலாதியானதாயிருந்தது. இதனால் வாசித்தலின் களம் இன்னும் விரிகிறது. நான் கவனிக்க மறந்தவைகள் எல்லாம் வேறு ஒருவரால் நுனுக்கமாக கவனிக்கப்பட்டு  சிலாகிக்கப்படும். இது வாசிப்பில்  பல புதிய  வாசல்களை திறக்க உதவும். கடந்த பகிர்வில் இரண்டு புத்தகங்கள் விவாதிக்கப்பட்டது.  ஒன்று “உப்பு நாய்கள்” , மற்றது “இலங்கையின் வன்னி மாவட்டங்கள்”.  முதல் பகிர்வு என்பதால் என்னால் இந்த இரண்டு புத்தகங்களையும் வாசிக்க முடியவில்லை. ஆனால் அந்த பகிர்வின் முடிவில் அந்த இரு புத்தகங்களையும் உடனடியாக வாசித்திட வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அடித்துப் பிடித்து இலங்கையின் வன்னி மாவட்டங்கள் புத்தகத்தை வாங்கியும் விட்டேன்.  இது எமக்கு ஒரு முக்கியமான வரலாற்று புத்தகம். ஜே.பி. லூயிஸ் எனும் ஆங்கில அதிகாரி எழுதிய புத்தகம். மனுசன் வன்னிக் கிராமங்களின் இலைகளிலிருந்து , கிராம மக்களின் வாழ்க்கை முறை , சாதியம் , மதம் எல்லாவற்றையும் மிக  நுனுக்கமாக அவதானித்துக் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழ் பொளத்தர்கள்’ , ‘சிங்கள சைவர்கள்’  பற்றிய குறிப்புக்களுமிருக்கின்றனவாம். இதை விட ஆச்சரியம் இந்த புத்தகம் எழுதிய ஆண்டு 1895.  எம் மூதாதையரின்  வாழ்வை ஒரு குறுக்குவெட்டில் அறிந்து கொள்ளலாம். வன்னியின் வரலாற்றை கொறித்து கொண்டிருக்கிறேன். 

 

 

வாசிப்பில் ஆர்வமுடைய யாவரும் ஞாயிறுகளில் நடக்கும்  இவ் விவாதத்தில்  கலந்து கொள்ளலாம்.

அடுத்த விவாதம் மார்கழி 15. (மலேசிய சிறப்பு விவாதம்)

 

விவாதிக்கும் புத்தகங்கள்

01.  கே.பாலமுருகனின் “இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்” - சிறுகதைகள்

02. ம.நவீனின் “விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு” -  கட்டுரைகள்

03.நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி வீரன்

 

http://www.dpirasath.com/2013/11/blog-post_7.html

உண்மையிலே வாசித்தல் என்பது ஒரு அலாதியான இன்பம் தான். அதுவும் வாசித்ததை பிறருடன் விவாதிக்கும் பேறு கிடைத்தால் பேரின்பம்.  

  • கருத்துக்கள உறவுகள்

'ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்துக்கும்' தியானத்துக்கும் தொடர்பிருப்பதாகப் பல தடவைகளில் அவதானித்துள்ளேன்!

 

ஒரு விடயத்தில் ஆழமாக ஊன்றும் போது மனம் ஒரு நிலைப்படுகின்றது போல உள்ளது!

 

நன்றிகள் நிழலி! ஏன் எனக்கு ஒருநிலைப் படுகுதில்லை என்று கேட்கக்கூடாது! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.