Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்சூரியன் (MV SUNSEA) உருவாக்கிய கொந்தளிப்பு...!!!

Featured Replies

"ஒரு உண்மைச் சம்பவம் காலத்தின் அவசியத்தினால் மிக அவசரமாக எழுத்துக்களால் மீண்டும் உயிர் பெறுகின்றது...!"

Ship_CI.jpg

( உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் ஒரு நல் உள்ளத்தினை காப்பாற்றுவதற்காக ஒரு உண்மைச் சம்பவம் காலத்தின் அவசியத்தினால் மிக அவசரமாக எழுத்துக்களால் மீண்டும் உயிர் பெறுகின்றது...! )

கனடாவின் கரையைத்தொட்ட கடற்சூரியன் (MV SUNSEA) என்ற கப்பல் பற்றி யாவரும் அறிந்திருப்பீர்கள். அதன் எதிரொலி, அதில் சென்ற ஏதிலிகள் பற்றி அறிந்த யாவருக்கும் அதன் தொடுகையால் வாழ்வினை தொலைத்தவர்களை பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.

கடலில் கொந்தளிப்பு பற்றி அறிந்த உங்களுக்கு கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் கரையைத்தொட்டு பின் தரையில் அடங்காமல் இருக்கும் கொந்தளிப்பு பற்றி தெரியுமா...? இன்னும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தரையில் சிக்கி ஆட்டம் காணும் உயிர்களின் துன்பத்தை துலக்கும் உண்மைத்தொடர்...!

தொடர்ச்சியாக மூன்றரை ஆண்டுகளாக, "கடற்சூரியன்" சிந்திச்சென்ற எச்சத்தில் வழுக்கி விழுந்து எழுந்து கொள்ள முடியாமல் சிக்கித்தவிக்கும் உறவுகளின் நிதர்சனக்காவியம்...!

உயிர் துறந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றும் நின்று வேடிக்கை பார்த்து ரசிக்கும், உயிரை உலர்த்திச்சலவை செய்யும் உயிர் இயந்திரங்களின் காவலில் சிக்குண்ட அப்பாவியின் உதிரம் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் கொடுமைகளைப் பறை சாற்றும் இந்த தொடர் மேல் நாட்டு அரசின் மனிதாபிமானம் அற்ற செயல்களையும் திரையிட்டுக்காட்டுகின்றது.

அதிகார வர்க்கத்தின் அசமந்த போக்கும், நியாயமற்ற தன்மையும் காட்டிக் கொடுப்புக்களுக்கும், சித்திரவதைகளுக்கும் பலியான உறவுகளின் காணாமல் போன இன்பங்களும், தொலைந்து கொண்டிருக்கும் வாழ்வும் , கண்ணீரில் முகம் கழுவிப்போகும் கடைசி அத்தியாயமாய் தாங்கி வரும் உண்மைச்சம்பவம்....!!

(குறிப்பு : இது முழுக்க முழுக்க உண்மைச்சம்பவமே...! இதில் உள்ள ஒவ்வொரு சொற்களும் வரிகளும் வலிகளால் செதுக்கப்பட்டவையாகும். சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் போன்று திரிபு படுத்தப்பட்டது அல்ல. இதில் பொய்கள் புளுகுகள் வர்ணனைகள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது அதைத்தவிர தனிப்பட்ட மோசமான வலிகள் சில மறைக்கப்பட்டாலும் உண்மைகள் இங்கு மறைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதுடன் இதில் குற்றம் சாட்டப்படும் நபர்களோ அமைப்புக்களோ அரசுகளோ சட்டப்படி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எழுதும் என் மேல் எடுத்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்களின் வலியினையும் துன்பத்தினையும் எழுதி உண்மையினை எடுத்துக்காட்டுபவர்கள் மேல் சட்டம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி எடுப்பதாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.

அடுத்து, தற்சமயம் பாதிக்கப்பட்ட உறவின் உயிராபத்தான நிலையினைக் கருத்தில் கொண்டு மிக மிகக்குறுகிய கால இடைவெளியில் எழுதப்பட்டு பிரசவிக்கப்படும் இந்த்தத்தொடரில் சொற்பிழை , பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும். )

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!!

அந்த இருட்டிய அறைக்குள் எதுவுமே புலப்படவில்லை. இருட்டியது அறை மட்டுமல்ல மதுரனின் கண்களும் தான். உப்பிய வயிறும் குழி விழுந்த நெஞ்சுமாய் மெல்ல தன் எலும்பாய் போன உடலை இழுத்து இழுத்து வந்து கம்பிகளுக்கிடையே கையிச்சொருகி கையசைத்தான்.

 " சேர்........... சேர்................"

என்ற குரல் அவனுக்குள்ளேயே அடங்கி போனது..சத்தம் வெளியே வரவில்லை. கை எட்டி எட்டி அசைக்கவே முடியாத வலுவற்ற வனாய் கம்பிகளை இறுகப்பற்றியவாறு சோர்ந்து போனான். இரு மாதங்களுக்கு மேலாக உணவின்றி காய்ந்து போன குடல் இப்போது நீரைக்கூட திருப்பி அனுப்பி வைக்கின்றது வாந்தியாக. 

மரத்து போனது மனம் மட்டுமன்றி இரைப்பையும் தான். எந்தவித சிகிச்சையும் இன்றி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவன் மரணித்துக்கொண்டிருக்கின்றான். நெஞ்சுக்குழிக்குள் ஏதோ உருண்டு பிரண்டு வருவது போன்று ஒரு உணர்வு. வாந்தி எடுத்தாலும் உருளுவது நிற்கின்றதே இல்லை. பசியால் பிசைகின்ற வயிறு, உணவை தன்னிடத்தில் தங்க அனுமதிக்காத கொடுமையினை இவன் பல நாட்களாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். தேசம் விட்டு தேசம் நலம் நாடி வந்து நலமின்றி தினம் நலிந்து கொண்டிருக்கின்றான்.

சாதரணமாக பெண்களே ஐம்பது கிலோவிற்கு குறைவாக இருப்பது இக்காலத்தில் அரிது. ஆனால் ஒரு முப்பத்து மூன்று வயது ஆண்மகன் முப்பது கிலோவிற்குள் அடங்கியிருப்பதை எவராலும் நிச்சயம் நம்ப முடியாது. மொத்த என்புகளின் நிறையே அந்த முப்பதும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

செவி வழியே தினமும் இறங்கி கதறும் அவனது ஈனக்குரல் கேட்க சக்தியற்று உருக்குலைந்து போகும் அவனின் அன்பு  மனைவி நிலாவால் எழுத்துக்களைத்தான் அவனுக்காகக்கொடுக்க முடியும். பரிவாக அருகில் இருந்து ஆறுதல் உரைக்கவோ அன்றி நீர் , ஆகாரம் கொடுக்கவோ முடியாத கொடுமை நிலையில் அவன் துடித்துக்கொண்டிருக்கும் அதே  நாட்டில் இருந்து செய்வதறியாது ஒவ்வொரு கணமும் துன்புறுகின்றாள். பத்து கிலோ மீற்றர் தூரத்தில் அடைபட்டு அல்லல் படும் அவனை எட்டிப்பார்த்து அவன் நிலை அறிய முடியாத பாவியாக நடு நிசிகளில் கண்ணீரில் தோயும் விசைப்பலகையில் கை நனைக்கின்றாள். தன் உயிரானவனுக்காக குரல் கொடுக்கும் படி மனித உரிமைகள் , ஐக்கிய நாடுகள் என்று அமைப்புக்களுக்கு வரைகின்ற மடல்களும் கண்ணீரோடு திரும்பி கை விரித்து நிற்கின்றன.

ஈழத்தை விட்டு  நீங்கிச்சென்றாலும் மனித உரிமை ஆணைக்குழுவும்,  ஐக்கிய நாடுகளும் நம்மவரை விட்ட குறை தொட்ட குறையாய் தொடருகின்ற இல்லையில்லை  அவற்றை நாடி நம்மவர் தொடருகின்ற தொடர்கதை எப்போது தான் முடிவுறுமோ.?

உயிரிலே கலந்தவன் ,  சுவாசமானவன் சுவாசிக்கச்சக்தியற்று உயிருக்காய் போராடும் கணத்தில் இணையம் புகுந்திருந்து பதிவு எழுதும் ஒரு துரதிஷ்டசாலி மனைவியாக நிலா. தன் பதியானவனின் தற்போதைய மோசமான நிலையினைப்பகிர்ந்து அவனது விடுதலைக்கு வழிவகுக்க தன்னால் முடிந்தவாறு வலிகளைப்புறந்தள்ளி வைத்து எழுத்துக்களில் நியாயம் கேட்கின்றாள். தொலைந்து கொண்டிருக்கும் மதுரனின் முகவரியினை முகப்புத்தகத்தில் முழு மூச்சாய் தேடிக்களைத்து ஓய்ந்து விட்டாள்.

எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அவன் முகத்தை உடனடியாக பார்த்திட முடியாத தேசத்தில் சிக்கித்தவிக்கின்ற அவள் தன் நெஞ்சத்தில் அவனின் வலிகளையும் சுமந்து கொண்டு அவனது இரு பச்சிளம் பாலகர்களையும் ஏந்தியவாறு தாய்லாந்தின் தார் வீதியெல்லாம் தடம் பதித்து அலைகின்றாள். எந்த நேரத்திலும் அவள் பாதம் அச்செடுக்க முடிந்த நிலையில் ரேகை படிந்த வீதிகளாய் காட்சி அளிக்கின்றன.

 கொலைக்களம் என்ற இலங்கையில் கூட பணத்தை இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் என்ற முகமூடிக்குள் சிறைப்பட்டவர்களை  ஒளித்து வைத்து கடத்திச் சிறை மீட்கலாம். அல்லது  அவ்வப்போது சென்று பார்த்திடலாம். ஆனால்  பணம் மட்டுமன்றி அரசியல் பிரமுகரும் பரிந்துரை செய்ய முடியாத தேசமாய்  தாய்லாந்து தேசம் உணர்வற்றுக்கிடக்கின்றது.

விட்டு விட்டு ஒலிக்கின்ற அவன் குரல், நிலாவின் உயிரின் ஆணிவேரைப்பிடுங்கி எறிந்து மீண்டும் நட்டுச்செல்கின்றது. கதறுகின்ற குரல் கேட்கச்சக்தியற்று சாய்ந்து போகின்றாள். என்ன தான் செய்ய இயலும்? அவர்களுக்கு  உதவிடக் கூடும்  என்ற சந்தேகத்தின் பேரில் கடவுளும் பல காலமாய்  அங்கு தடுப்புக்காவலில் தான். நான்காண்டாய் நாயாய் பேயாய் அலைந்து அடிபட்ட வாழ்வது கண்ணீரில் முகம் கழுவி நிற்கின்ற கடைசி அத்தியாயத்தில் மூச்சு வாங்கியபடி ஓய்ந்து நிற்கின்றது.

தொலைபேசியில் சிணுங்கி மெல்ல மெல்ல வலிகளால் ஓய்ந்து உயிரற்றுப்போகின்ற  அவனின் அழுகுரலும் கதறலும் இங்கே எழுகின்றது வரிகளாக............

இரவுகளின் மடியில்

இறுதி ஊர்வலம்...!!

கண்ணீரில் முகம் கழுவிப்போகும்

கடைசி அத்தியாயம்...!!!

பிசைகின்ற வயிறு

பிடித்துப்போகின்றது...

பிணியாகிப்போகும் உள்ளம்

பிய்ந்து போய் கிடக்கின்றது...!

மரத்துப் போன பாதங்கள்

முள்ளும் கல்லும் கொண்டு

உரமாய் கிடக்கின்றன - இறுதிப்

பயணத்தினை எதிர் பார்த்து

அந்த நாலு பேரை கை ஏந்தாது

அந்தம் வரை பயணிக்க முடியாதோ??

அந்தோ தெரிகின்றது மயானம்...!

நான் என்ன விதி விலக்கா??

பிணம் எழுந்து நடக்குமோ??

நடந்து சென்று படுத்து கொள்ளி

நட்டு வைக்குமோ தனக்கே....?

என்ன பைத்தியக்காரத்தனம்...?

எழும்பும் தோலுமாய் உடல்

எறும்பு மொய்த்திடாமல்

எழுந்து உட்காருகின்றது...!

அசைந்து போகும் நிலை

அடுத்த நிமிடங்களில்

நிறுத்தப்படலாம்....!!

எனக்கு நானே ஒப்பாரி வைக்கின்றேன்...!

எந்த நேரத்திலும் விடைபெறுவேன் அல்லவோ?

ஒரே ஒரு வருத்தம் மட்டுமே...

பாவம்...!

என்னை கல்லிலும் முள்ளிலும் மழையிலும்

வெயிலும் பார்த்து பார்த்து தாங்கிய உடல்....!

தீயில் துயில் கொள்ள போகின்றது - எதையும்

தீண்டாமல் எனைக்காத்த உடலை - தீ

தீண்டி தன் பசிக்கு இரையாக்குவதை

தடுக்க முடியாத கையாலாகதவனாய் நான்...!

தரணி நீங்கிப்போகின்றேன்....!!!

மன்னித்து விடு உடலே என் பொருளே..!

எழுத முடியாத பல வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கின்றன. உருக்குலைந்து போவது அவன் மட்டுமல்ல. இரும்புப்பிடியாய் நான்காண்டாய் நிலா  பற்றி வைத்திருந்த அசையாத நம்பிக்கையுமே. .!

அவன் செய்த குற்றம் என்ன..?

தமிழனாய் ஈழத்தில் பிறந்தது மட்டுமே. ஐ நாவின் அகதியில் ஒருவனாய் ஐந்தாண்டு காலமாய் தாய்லாந்து தேசத்து குடிவரவு தடுப்பு மையத்தில் அல்லலுறும் நூற்றுக்கணக்கான அகதிகளில் ஒருவனாய் அனுபவித்த கொடுமைகள் போதாதென்று கடந்த மூன்று மாதங்களாய் உடல் உருக்குலைந்து போகும் நிலையில் தவிக்கும் இவனை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல அனுமதிக்காத இறுக்கமான சட்டங்களை கொண்ட தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் இறுக்கமான மனிதாபிமானம் அற்ற மனங்களையும் தம்மகத்தே கொண்டிருப்பது தான்  இன்னும் வேதனையும் வருத்தமுமாகும்.

 ஐ.நாவினால் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டும் குடிவரவு தடுப்பு மையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன தாதி சிகிச்சைக்கு அனுமதி அளிக்காமல் மதுரனைப்  பைத்தியம் என்று வதந்தி கிளப்பி அதிகாரிகளோடு சேர்ந்து இயங்கிக்  கொண்டிருக்கின்றாள். எல்லாவற்றுக்கும் பின்புலமாக கனேடிய காவல் துறை அதிகாரிகள் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். ஆமாம், வெறும் எண்ணங்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கும் வடிவம் கொடுத்து செயலாற்றும் கனேடிய அரசின் செயல்களுக்கு, தாய்லாந்து பக்க பலமாய் நிற்பதும் அதற்காகப்  பல இலட்சம் ஊதியம் பெறுவதும் யாருக்கும் தெரியாத உண்மை ஆகும்.

ஒருவன் உயிருக்குப்  போராடும் நிலையில் அவனை உடல் உள ரீதியாக உளைச்சல் பட வைத்து வேடிக்கை பார்க்கின்ற மேல் நாட்டு யுக்தியினை தற்போது ஆசிய நாடுகளும் பின்பற்றத்  தொடங்கியுள்ளமை வருந்தத் தக்க விடயமாகும்.

ஒரு உயிர் துடிப்பதை நின்று வேடிக்கை பார்த்து சிரிக்கின்ற அந்த தாதியை அடித்துக்கொன்று புதைக்க மனம் எண்ணுகின்றது. அதற்கு கூட அங்கு நாம் செல்ல முடியாதே. எதற்காக நாம் ஈழத்தில் பிறந்தோம் எதற்காக நாம் தமிழனாய் பிறந்தோம்..? வாழ்வில் முதன் முறையாக வேதனைப் படுகின்றேன். தமிழன் என்று சொல்...! தலை நிமிர்ந்து நில்..! என்றார்கள். நாம் தலை குனிந்து உள்ளம் குமுறிக்குமுறி அழுதோம். அழுகின்றோம். அழுவோமா? 

எதிர்காலம் மங்கலாய் தூரத்தில் அசைவது மட்டும் தெரிகின்றது...............!

மதுரனின் குரல் அடிக்கடி எனக்குள்  அவனாக இருந்து பிரசவிக்கின்றது அவன் எண்ணங்களை கவிதைகளாக....

உறைவிடமாகிப்போன சிறையிடத்தில்

உற்றவள் உயிரை சுமந்து நற்றவம் புரிகின்றேன்...!

ஆலம் விழுதுகள் போன்று கடக்கின்ற

நொடிப்பொழுதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன....!

வதனங்கள் வடிவிழந்ததாய் காட்சி- நீர்

வற்றிப்போன தொண்டைக்குழிக்குள் சிக்கி

வார்த்தைகள் தடுத்து வைக்கப்படுகின்றன - நா

வறண்டு போய் கூச்சல் போடுகின்றேன்...

வந்து வந்து போகின்றது காற்று மட்டுமே...

கனவுகளில் கூட

கண்மணிகளை கண்பார்த்திடலாம்

கரம் தொட்டு அணைக்கலாம் என்றால்

கண்ணயர முடியவில்லை...!!

கனவாகி போகின்றன நினைப்புக்களும்...!

மனம் இங்கு தினம் தினம்

மடிந்து கொண்டிருப்பதனை விட

மரணத்தை தொட்டு விளையாடிடலாம்...!

மரணம் தன்னும் என்னை அணைக்க

மறுக்கின்றதே....!!!

மண்ணுலகம் நீங்கி அந்தரிக்கின்றேன்

மரணிக்காமலேயே...

மடி சாய்ந்து உறங்க தேடும் என்னவளின் முகம்

மறந்து போகின்றது  அடிக்கடி...

யார் யாரோ வருகின்றார்கள்...

யான் எங்கிருக்கின்றேன்...?

நிலை தெரிகின்றது ஆனாலும்

நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது..

நினைத்து பார்க்க நினைவுகள்

நினைவின்றி போகின்றதே...!

தாகம் எடுக்கவில்லை

பசி வாட்டவில்லை

பட்டினியாய் கிடக்கின்றேனா?

பல காலம் ஆயிற்றோ...?

நினைவுகள் இருக்கின்றன...ஆனால்

நினைத்து பார்க்க நினைவுகள்

நினைவின்றி போகின்றதே...?

யார் யாரோ வருகின்றார்கள்...

யான் எங்கிருக்கின்றேன்...??

உலகம் நீங்கியவனாக அவன் சித்தம் கலங்கி நித்தம் வாடிக்கிடக்கின்றான். அருகில் இருப்பவனை நோக்கினாலும் அவன் மிரட்டுவது போன்றும் கொல்ல வருவதும் போன்றதுமான பிரமை. தொலைபேசி எடுத்தால் எந்த நேரமும் அழுகுரலே. இப்போதெல்லாம் அழுவதற்கு கூட சக்தியற்று விட்டான். தொலைபேசியின் ஒலி அமைப்பினை அதிகரித்தாலும் அவன் குரல் அனுங்கியபடி குற்றுயிராய் கடந்து செல்கின்றது. 

மஞ்சள் பூத்துகிடக்கும் உடலில் பிண வாடை வீசுவதாக அடிக்கடி உரைக்கும் அவனின் உடலுக்கு என்ன நலக்குறைவு என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மாத முயற்சியின் பின் சாதாரண ஒரு வைத்தியர் அதாவது இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனை செய்பவர் அவனைப்பரிசோதிக்க சென்றார்.  இதற்காக  மதுரனின் மனைவி தன்னிரு பச்சிளம் குழந்தைகளுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு வாரமாக அலைந்து திரிந்து தொடர்பு எடுத்து அவரை அங்கு அனுப்ப பெரிதும் சிரமப்பட்டிருந்தாள்.  

அந்த வைத்தியரின் அறிக்கையின் பிரகாரம் மதுரனுக்கு இரத்த அழுத்தம் மிகக்குறைவான நிலையில் இருப்பதாகவும் உடலில் உள்ள இனிப்பின் (குளுக்கோஸின்) அளவும் மிகக்குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களாகியும் இன்னும் அவன் எடுத்துச்செல்லப்படவில்லை. அத்துடன் அந்த வைத்தியரால் தற்காலிகமாக எழுதிக்கொடுக்கப்பட்ட விற்றமின் மாத்திரைகள் மற்றும் உடல் வலுவிற்கான மாத்திரைகள் (குளுக்கோசு) என்பன அவனுக்கு அந்தத் தாதியினால் வழங்கப்படவில்லை. அதனை வழங்குமாறு கேட்டுக்கொண்ட மதுரனைப் பார்த்து பரிகசித்து சென்ற தாதி இன்று வரை அவனைச்சென்று பார்வையிடவில்லை. 

என்ன காரணம் ? என்றே புரியாத ஒரு குழப்பத்தில் மதுரன் மட்டுமன்றி நானும் குழம்பியுள்ளேன். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பது அகதிகள் மற்றும் உதவி அற்றுத் தவிப்போருக்கு வலிந்து சென்று உதவி செய்வதற்கான அமைப்பாகும். ஆனால் இங்கு அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவனை பரிகசிக்கும் அளவிற்கு அதில் பணி புரிகின்ற தாதிக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை. தாதி என்றால் அவருக்கு இளவயது அல்ல. மதுரனுக்கு தாய் வயதில் ஒத்த அவர் , பல தடவை மதுரனின் மனைவி நிலா  அங்கு சென்ற போது விரட்டிக் கலைத்த துண்டு. அவனைப்பார்வையிட அனுமதிக்காத போதும் சாப்பிடவென்று அவனுக்காக செய்த உணவுகளை அவரிடம் கொடுத்து மதுரனிடம் ஒப்படைக்குமாறு கெஞ்சிய நிலாவினை ஏறெடுத்தும் பார்க்காமல்   அந்த உணவுகளை திருப்பி அனுப்பிய கல் நெஞ்சக்காரி.

ஒரு சில தமிழர்களோடு நல்லுறவு பேணித் தன்னை ஒரு சேவையாளி என்று காட்டிக்கொள்ளும் அந்த தாதி கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக அந்த குடியேற்ற தடுப்பு மையத்தில் பணி புரிகின்றார் .

அவனோடு மட்டுமன்றி அங்குள்ள ஈழத்தமிழர்களோடும் அவள் வெறுப்பையே கொட்டி வருகின்றார். 2013 தைத்திருநாளுக்கு அவரின் அனுமதியோடு இலங்கை ரூபாய் இருபத்தைந்தாயிரம் செலவில் தயாரித்து எடுத்துச்செல்லப்பட்ட எழுபத்தைந்துக்கு மேற்பட்ட பொங்கல் பிரசாத பொதிகளை   உள்ளே அகதிகளுக்கு வழங்காது  அவற்றினை அவர்கள் கண் முன்னாலேயே குப்பைத்தொட்டியில் போட்டு வீணடித்த அந்த தாதியினை இந்த நிகழ்வில் இருந்து  என்ன மன நிலையில் உள்ளவள் என்பதனை நன்கறிந்து  கொள்ள முடியும்.

நிச்சயம் இவற்றுக்கு பின்னால் கனேடிய அரசின் சதி உண்டு என்பதனை மதி உள்ளவர்கள் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் உயிர் வரை வந்து அறுக்கின்ற நிலைக்கு மதுரன் பெரிதாக குற்றம் இழைத்து விடவில்லை.

அவன் இழைத்த குற்றம் என்ன? கனேடிய அரசின் நோக்கம் என்ன.? என்ன காரணத்திற்காக மதுரன் உள உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றான்? இவற்றுக்கு முதல் மூல காரண கர்த்தாக்கள் யார்? இவற்றுக்கான விடையோடு அடுத்த பாகம் விரைவில் தொடரும்...........

தாய்லாந்திலிருந்து 

அரசி நிலவன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101925/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வாசிக்கமுடியவில்லை,வேதனை தான் மிஞ்சுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

வலிக்கிறது என்பதற்காக, விலகிப்போய்விட முடியவில்லை!

 

திட்டமிட்ட கொலையொன்று, சட்ட பூர்வமாக அரங்கேறுகின்றது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது!

 

தொடருங்கள், பகலவன்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மட்டுமா இன்னும் பலருக்கு இப்படி நடிக்கிறதா ????

  • தொடங்கியவர்

 

பாகம் 2

 

அமைதியாய் விடிந்த அந்த விடிகாலைப்பொழுது என்றும் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் நிலாவிற்கு தேசம் விட்டு தேசம்  இடம் மாறி விடிந்திருந்தது. தாய் மண்ணை விட்டு முதன் முதலாய் காலடி எடுத்து வைத்துப் போகும் தாய்லாந்து நாட்டில் புலர்ந்த பொழுது வைகாசி முதல் நாள் 2010.  முதன் முதல் பறந்த விமானப்பயணம் சற்று வித்தியாசமான அனுபவத்துடன் காலடி வைத்த புகுந்த வீடாய் தாய்லாந்து நிலாவின் தாய் மடியினைத்தள்ளி அவளைத்தன் மடியில் மடியில் இருத்திக்கொண்டது. ஏதோ ஒரு புதிய உலகத்தில் மிதப்பதான உணர்வில் நிலா பறந்து கொண்டாள். குட்டி குட்டியாய் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்த அந்த அழகிய தாய்லாந்தின் மக்களைப்பார்த்தும், அகன்று விரிந்த மிகப்பிரமாண்டமான சுவர்ணபூமி விமான நிலையத்தினையும் கண்ணுற்று வியந்து நின்ற அவள் தனது வாழ்வின் துணையினைத்தேடி தன் விழிகளை தூது விட்டாள். 

 

அவளின் வருகையினை எதிர்பார்த்து காத்திருந்த மதுரன் மற்றும்  அவனின் நண்பர்கள் உறவுகள் எல்லோரும் சந்தித்து, பயண அனுபவங்களை விசாரித்துக்கொண்டு இருந்த அந்த கணப்பொழுதுகளில் ஒரு வித தயக்கமாய் நெளிந்து கொண்டு இருந்த மதுரன் எப்போது வாகனத்தரிப்பில் நின்று கொண்ட வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் என்று யாருமே கவனித்துக்கொள்ளவில்லை. எல்லோரும் பின்னர் தான் மதுரனை தேடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பைந்தமிழ்

 

"மதுரன் வானிலிருந்து நிலாவை சைட் அடிக்கிறாராம்..அதை ஏன் குழப்புறீங்கள்..."

 

 என்று கடிந்து கொள்ள, அங்கு ஒரு சிரிப்பலை எழுந்து ஓய்வதற்குள் எல்லோரும் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். 

 

தாய் லாந்தின் உயர் நெடுஞ்சாலைகளில் துள்ளிக்குதித்து எழும்பிய அந்த வாகனத்தில் இருந்து தாய்லாந்தின் அழகுத்தோற்றத்தினைக் கண்டு இரசித்துக்கொண்டிருந்தவர்கள் இடையிடையே மதுரனையும் நிலாவினையும் கடிச்சொற்களினால் கடித்தும் கொண்டனர். 

 

ஒருவாறு இருப்பிடம் அடைந்தவர்கள் மதிய உணவின் பின்னர் அடுத்து திருமண பதிவு பற்றிப்  பேசிக்கொண்டனர். தாய்லாந்தின் சட்டப்படி இங்கு அகதிகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து உறுப்புரிமை இல்லாத நாடாகும். இக் காரணத்தினால் அகதி அந்தஸ்து கோருபவர்களும், அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களும் சட்ட விரோதமான முறையிலேயே தாய்லாந்தில் தங்கி இருகின்றார்கள். இதில் தாய்லாந்தின் குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.

 

 

 

இங்கு அகதிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் தாய்லாந்தில் நுழைந்து இங்குள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதி என அங்கீகரிக்கப்பட்டவர்களே. அதன் பின்னர் அவர்கள் மீள் குடியேற்றத்திற்காக அமெரிக்கா, நெதர்லாந்து, பின்லாந்து, நியூசிலாந்து சுவீடன்  மூன்றாம் நாடுகளுக்கு ஐ.நாவால் பரிந்துரை செய்யப்பட்டு  அந்தந்த நாடுகளினால் நேர்முகத்தேர்வு இடம்பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டால் உரிய நாட்டிற்கு உள்வாங்கப்படுவார்கள். இதுவே இங்குள்ள அகதிகளின் நடைமுறை ஆகும்.

 

மதுரன் ஈழத்தைச் சேர்ந்தவன்.அவனிடம் கடவுச்சீட்டு கூட இருந்திருக்கவில்லை. ஆனால் அவன் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட மூன்றாம் நாட்டு மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு அகதி. எனவே அவனால் பதிவுத்திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே அவசர அவசரமாக கோயிலில் மாலை மாற்றி திருமணம் முடிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் கப்பலுக்கு செல்லும் அழைப்பு வரலாம் என்ற காரணத்தினால்.

 

ஆம்..!

கனடா செல்வதற்காக தாய்லாந்தில் இருந்து கப்பலினை கொள்வனவு செய்து அதில் ஈழத்தமிழர்களை ஏற்றி அனுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இலங்கையில் இருந்து பெருமளவில் மக்கள் தாய்லாந்தில் குவிந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆனால் அதற்கு முதலே ஐரோப்பிய நாடுகளுக்கென்று பல ஆட்கடத்தல் காரர்களினால் பணம் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாகிப்போன நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக தாய்லாந்தின் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்திருந்தனர். அதில் மதுரனும் ஒருவன். உறவுகளால் கை விடப்பட்டு ஐ . நாவின் உதவியில் அவன் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்த பொழுதில் ஏற்கனவே அவனைப்போன்ற கைவிடப்பட்ட இரு இளைஞர்களுக்கும் அவன் அடைக்கலம் கொடுத்திருந்தான்.

 

மதுரன் தங்கியிருந்த அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் பல தமிழர்கள் தங்கி இருந்தனர். தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்களுக்கு தென்படாதவாறு அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் கடினப்பட்டு பயணிக்கும் தொலை தூரத்தில் அதாவது புறநகரின் பிரதான வீதியில் இருந்து உள்ளே ஒதுக்குப்புறமாய் பல மைல்கள் பயணிக்கும் சபான்மை பெர்ம்சீன் என்னும் இடத்தில் தான் எல்லோரும் தங்கி இருந்தனர். கிட்டத்தட்ட 1500 இலிருந்து 2000 வரையான தாய்லாந்து பாத்திற்கு (இலங்கை ரூபாய் ஆறாயிரத்து ஐந்நூறு இலிருந்து எண்ணாயிரம் ரூபாய் வரை ) அங்கு வாடகைக்கு அறைகள் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு கூட்டுக்குடும்பத்தினை ஒத்து ஒற்றுமையாய் வாழ்ந்த அந்த தொடர்மாடி குடியிருப்பில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் உட்பட மதுரனும் இருந்து வந்தான்.

 

அச்சமயத்தில் தான் அங்கு தங்கி இருந்த சசி என்ற ஒருவர் தான் கனடாவிற்கு கப்பல் செல்லும் விடயத்தை கூறி பணம் வசூலித்து கொண்டிருந்த போது மதுரனும் அவரின் வலையில் விழுந்தான். மதுரனிடம் பணப்  பின்புலம் இல்லாத காரணத்தினால் சசியிடம் கனடா  சென்றதும் பணம் கொடுப்பதாய் கூற சசியோ அதை ஏற்றுக்கொள்ளாது மதுரனிடம் அவனுக்கு  தெரிந்த இங்கிருக்கும் ஆட்களை தனக்கு  அறிமுகப்படுத்தி உதவி செய்தால் அவனை கனடாவுக்கு ஏற்றி அனுப்புவதாக நம்பிக்கை வளர்த்தான். உதவும் மனப்பாங்கு கொண்ட மதுரன் தனக்கு தெரிந்த தாய்லாந்து வாழ் நண்பர்களிடம் இதனை தெரிவித்து சசியுடன் இணைத்து விட்டான். அதன் பின் சசி மதுரனை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டான். எனவே  தான் திருமணம் செய்யவிருக்கும் நிலாவினை அழைத்துச் செல்ல முடிவு பண்ணி மிக அவசர அவசரமாக அவளை தாய்லாந்திற்கு அழைத்துக்கொண்ட மதுரன் நிலாவின் உறவுகளையும் ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி வைத்ததுடன் நிலாவின் சகோதரனை அனுப்ப  சசியிடம் பணமும்  கொடுத்தான்.

 

அதற்கிடையில் ஐ. நாவில் அகதியாய் பதிந்து கொண்ட நிலா தாய்லாந்தில் தன் தனிமையினையும் தாயின் பிரிவினையும் எண்ணி தினம் கலங்கினாள். மதுரன் அல்லும் பகலும் தன் சுயநலம் நோக்காது உறவுகளுக்காக உணவு வழங்கல் இருப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல் என்று ஓடித்திரிந்தான். கனடாவை அடைந்து நிம்மதியாய் தானும் நிலாவும் தம் வாழ்வினை இன்பமாய் ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் தூக்கத்தை தொலைத்து ஓடிக்கொண்டே இருந்தான். கூடவே அவனின் மைத்துனனும் விசா இல்லாத தாய்லாந்தில் தங்கியிருந்த  பல உறவுகளை தாய்லாந்து  குடிவரவு அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படாத வகையில் காப்பாற்றி பூங்கா ,கடை என்று அழைத்துச் செல்வதும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கெங்கு அதிகாரிகளின் வரவு உள்ளதென்று அறிந்து செயற்படுவதுமாய் தம் நிலை மறந்து செயற்பட்டு கொண்டிருப்பார்கள். இந்த துன்பங்கள் யாவும் அந்த உறவுகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆகும். தாய்லாந்தில் இருந்த ஏனைய உறவுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனையோ தடவை நிலாவின் சகோதரனுக்கு கப்பலுக்குச் செல்லும் பயணிகளோடு செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை புறந்தள்ளி இறுதியாக செல்ல முடிவு பண்ணி இருந்த அந்த நல்ல எண்ணத்தின் துயரம் இன்று வரை தொடருகின்றது.

 

நடுக்கடலில் அதாவது சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்றிருந்த  "கடற்சூரியன்" என்ற கப்பலின் உள்ளே ஏறுவதற்கு  தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து மணித்தியால பேருந்து பயணம் மேற்கொண்டு கரையோரத்தினை அடைந்து அங்கிருந்து சிறு ட்ரோலர் மூலம் கப்பலினை அடைய வேண்டும். சொங்கோலா என்னும் தாய்லாந்தின் கரையோரத்திற்கே பயணிகள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கடற்சூரியன் கப்பலுக்கு ட்ரோலர்கள் மூலமாக ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

 

 

சொங்கோலா என்னும் இடம் மலேசியாவிற்கு அருகாமையில் உள்ள கரையோரப்பகுதியாகும். எனவே தலைநகர் பாங்காக்கில் இருந்தே தங்கியிருக்கும் பயணிகள் பெரிய சொகுசுப் பேருந்து மூலமாக வாரத்திற்கொரு தடவை அல்லது இரு தடவை என்று நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஒருநாள் கப்பலுக்காக பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்து ஒரு சிலருக்காக வீதியில் தரித்து நின்ற சமயம் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது. அவர்களிடம் விசாரணை இடம்பெற்று கொண்டிருந்த சமயம் பயணிகள் வழங்கும் தகவல்களால் காத்திருக்கும் ஏனைய பயணிகளுக்கும் ஆபத்து வரும் என்பதைக்கேள்விப்பட்டு அவசரமாக தன் பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது   மதுரன் அந்த நடு நிசி வேளையிலும் அதாவது இரவு பன்னிரண்டு மணியிலும், பயணிகளையும் அவர்களது உடமைகளையும் காப்பாற்றி பூங்காவில் தங்க வைத்து அடுத்த நாள் வரை தனது மைத்துனனுடன் அங்கு கண் விழித்து காவல் காத்தான். அந்த முப்பது தொடக்கம் நாற்பது வரையான பயணிகளில் முக்கால் வாசி நபர்களை அவனுக்கு முன்பின் தெரியாது. யாவரும் ஈழத்திற்காகப்போராடிய உன்னதமான போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அநாதரவாய் அங்கிருந்து போரினால் துரத்தி எறியப்பட்டவர்கள். சரியாக நடக்க முடியாத ஒரு பெண் போராளியும் கரம் இழந்தவர்கள் என போரின் வடுக்களாகி நின்ற ஈழத்து உறவுகளே . எதற்காக காப்பாற்ற வேண்டும் என்று இதனை எழுதும் என்னால்  எல்லோரும் ஒரு நல்ல வாழ்வினை அடைந்திட வேண்டும் என்று தன்னை உருக்கிய அந்த ஜீவனின் உள்ளம் புரிந்து கொள்ள முடிகின்றது. இருந்தும் ஏன் இன்னும் அனாதரவாய் சிறையில் வாடுகின்றது என்பது தான்  என் அறிவிற்கு  இன்னும் புலப்படவில்லை.

 

 ஒரே தடவையில் ஐம்பது பயணிகள்  செல்லும் பயணத்தில் கரையோர அலுவல்கள் சரியாகும் போது இங்கு பெரிய ஏற்பாட்டாளர்கள் தகவல் அறிவிக்கப்பட  குறிப்பிட்ட பயணிகள் செல்லுவார்கள். கப்பல் ஏற்பாட்டாளர் ஒருவர் தன் மனைவி சுற்றங்களுடன் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டு தனக்கு விரும்பிய தனது பயணிகளை முதலில் அழைத்துக்கொண்டார். இதனால் பல பயணிகள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். மதுரனும் நிலாவும் கூட அவ்வாறே பின்னுக்கு தள்ளப்பட்டனர். வேறு யாராவதாக இருந்திருந்தால் நச்சரிப்பு கொடுத்தே ஏறி போய் இருந்திருப்பார்கள். எல்லோரும் ஏறட்டும் இறுதியாய் ஏறுவோம் என்று காத்திருந்த மதுரன் இன்று வரை காத்திருக்கின்றான் தாய்லாந்தில்....!

 

அதற்குக்காரணம் "காட்டிக்கொடுப்பு"

 

ஆம்..! கப்பல் ஏற்பாட்டளர்களான தாய்லாந்தில் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரை   ஏற்கனவே கப்பலில் ஏறி அமர்ந்து கொண்ட அந்த "ஒருவர்" செய்மதி (சற்றலைற்) தொடர்பாடல் மூலம் தாய்லாந்தின் காவல்துறை பிரிவுகளுக்கு காட்டிக்கொடுத்து விட்டார். அவர்களை சிறையில் தள்ளி விட்டு தான் தப்பித்துக்கொள்ள அதாவது பணத்தினைச் சுருட்டத் தீட்டிய திட்டம் அது. தாய்லாந்து காவல் துறையிடம் அகப்பட்ட ஏற்பாட்டாளர்கள் கப்பலுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் ஒரு தொகை உணவுப்பொதிகளுடனுமே சிக்கினர்.

 

அன்றைய இரவில் மதுரனும் நிலாவும் கண்ணீரோடு தாய்லாந்தின் தக்சின் வீதி எங்கும் உலவிக்கொண்டே இருந்தனர். எங்கே கப்பல் பிடிபட்டு நாம் போக முடியாமல் போய் விடுவோமா...??  என்று தெய்வங்களின் நாமங்களை உச்சரித்து நா வறண்டு விடிந்தது கூட தெரியாமல் அலைந்தனர். அந்த வீதியினை எப்போது கண்ணுற்றாலும் மதுரனும் நிலாவும் சலனமற்றுப் போய்விடுவார்கள். .இரு நாட்களின் பின் அந்த ஏற்பாட்டாளர்கள் பிணையில் வெளியே வந்தனர். அதற்கிடையில் அடுத்த தவணைக்கிடையில் அவர்கள் தாய்லாந்து  நாட்டினை விட்டு வெளியேறியாக வேண்டும் கப்பலும் புறப்பட வேண்டும். திடு திடுப்பென நடந்து முடிந்த ஏற்பாடுகளால் ஏற்பாட்டாளர்கள் வெளியேறி விட கிட்டத்தட்ட அறுபது எழுபது பயணிகள் அதாவது இலங்கையிலிருந்து வந்தவர்கள் தவற விடப்பட்டுப்போனார்கள். இதில் பல போராளிகளும் அடங்கினர்.

 

தாய்லாந்தின் கரையோரத்திலிருந்து கப்பலுக்கு செல்லும் பயணத்திற்கு பல ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகும். இறுதிப்பயணத்தில் அதாவது அந்த ட்ரோலர் இரவு ஒன்பது மணிக்கு செல்ல இருக்கின்றது அதில் செல்ல உடனடியாக தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு வருமாறு பகல் ஒரு மணிக்கு அழைப்பு வந்தது. நிலா மதுரன் இருவருமே விமானம் ஏறிச் சென்று இருக்கலாம். கூடவே இருந்த அதாவது விடுபட்டு போன சிறுவர்களை அழைத்து கொண்டு விமான நிலையம் சென்றால் அங்கு விமானச்சீட்டு இரண்டு தான் இருந்தது. அன்று அந்த   சிறுவர்களுக்காக தம் வாழ்வினை தொலைத்துப்போன முட்டாள்களாக மதுரனும் நிலாவும்.....!

 

அன்றைய ட்ரோலர் புறப்பட்டு போகும் போது ஏற்கனவே பயணிகளில் ஒருவனாக கரையோரத்தில் நின்றிருந்த நிலாவின் சகோதரன் அதில் ஏறிப் புறப்பட்டு போயிருக்கலாம். விதி யாரை விட்டது. அக்கா அத்தான் நாளை வருவார்கள் நான் அவர்களோடு வருகின்றேன் என வாசற் கதவினை தட்டிய வாழ்வினைத்  திருப்பி அனுப்பிய புண்ணியவான் அவன். அதன் பின் ட்ரோலர் செல்லவேயில்லை.

 

ஆம்..! அந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவனான கப்பலில் ஏறி உட்கார்ந்த அந்த நல்ல மனிதன் ட்ரோலர் பயணத்திற்கு பணம் கொடுக்க மறுத்து விட்டான். அத்தனை பயணிகளிடமும் வசூல் செய்த பணத்தினை கப்பலில் இருந்தவாறே இலங்கையில் முதலீடு செய்தால் பயணத்திற்கு பணம் எப்படிகொடுக்க முடியும்...?? (இங்கு அந்த கப்பல் ஒழுங்கமைப்பாளரின் பெயரைக்குறிப்பிடக் கூறி எனக்கு பலர் வேண்டுகோள் விடுத்தும் நான் இதில் குறிப்பிடவில்லை. )

அந்த மனிதன் 2012 இல் இலங்கையில் விபத்தில் அடிபட்டு இறந்தும் போய் விட்டான். ஒருவன் இறந்த பின்னும் தூற்றப்படுகின்றான் என்றால் அவன் எத்தகையவன் என்பதனை விளக்கிக்கூற வேண்டிய அவசியம் இல்லை. (அவரின் இறப்பிற்கான காரணமும் அதற்கான சூத்திரதாரிகளும் பற்றிய விளக்கம் அடுத்து வரும் பாகங்களில் இடம்பெறும்.)

 

 இறுதியான ட்ரோலர் பயணம் 22.06.2010 தான் இடம்பெற்றது. அதன் பின் அழைக்கின்றோம் புறப்பட்டு வாருங்கள் என்ற ஏற்பாட்டாளர்கள் பின்னர் அழைக்கவேயில்லை. ஆட்களை விட கப்பலுக்குச் செல்லும் உணவுப்பொதிகள் அதிகமாக அறைகளில் நிரம்பி வழிய  வளி மேல் செவி வைத்து கரையோரத்தொலைபேசி அழைப்பிற்காக மதுரனும் நிலாவும் அந்த சிறுவர்களும் காத்திருந்தார்கள்.

 

தொடரும்.........

 

தமிழன் முயற்சியால் அந்த பெரிய கப்பல் கனடாவிற்கு சென்றது என்பதனை விட அதே தமிழனின் ஒரு விசேடமான அம்சமான "காட்டிக்கொடுப்பு " நிகழ்த்திய கொந்தளிப்பு எவ்வித தாக்கத்தை தாய்லாந்தில் ஏற்படுத்தியது என்பது விரைவில் அடுத்த பாகத்தில்  தொடர்கின்றது........!

 

அரசி நிலவன்

தாய்லாந்திலிருந்து

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102014/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.