Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையுலகத்தால் மறக்கடிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sschandran.jpg

          நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள்.  

வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன்.

"கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்தி வரை பரவியது வாழைப்பழக் காமெடி.

இந்தி சினிமாவோடு முற்றுப்பெறவில்லை என்பதுதான், வாழைப்பழக் காமெடியின் சீரியஸான ஹைலைட். ஆம்! அந்தக் காமெடியை மிகவும் ரசித்த தாய்லாந்து நாட்டின் சினிமா கம்பெனி ஒன்று, மொழிமாற்ற உரிமையை முறையாகப் பெற்று, தாய்லாந்து மொழியில் டப்பிங் செய்து வீடியோ கேஸட்டாக வெளியிட்டது. அந்தக் காமெடி கேஸட் அங்கும் விற்பனையில் "அட்றா சக்க அட்றா சக்க' என்று சக்கைப் போடு போட்டுச் சாதனை படைத்தது. இது வேறெந்த இந்திய சினிமா நகைச்சுவைக்கும் கிடைக்காத பெருமை. 

இனி "கரகாட்டக்காரன்' படத்தை டி.வி.யில் போடும்போது டைட்டிலைக் கவனியுங்கள். நகைச்சுவைப் பகுதி வசனம்- காமெடி ஏ. வீரப்பன் என்று ஒரு கார்டு வரும்.

இப்படி தனியாக இவர் நகைச்சுவைப் பகுதி வசனம் எழுதிய படங்கள் 28. வசனம் எழுதிய படங்கள் 12. நடித்த படங்கள் 36. திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ஒரே படம் "தெய்வீக ராகங்கள்'.

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை ஆவணமான வீரப்பன் பிறந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது. சிறு வயதில், ஊருக்குள் முதன்முதலிலில் வந்த கிராமபோன் கருவியில் ஒலிலிபரப்பானது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் என்ற "மீரா' படத்தின் பாடல். அதைக் கேட்டதிலிலிருந்து வீரப்பனுக்கு சினிமாவின்மேல் தீராத காதல். மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் அந்த வயதிலேயே பாட்டு கற்றுக்கொண்டார்.

1944-ஆம் வருடம் புதுக்கோட்டை சக்தி நாடக சபாவின் முதல் நாடகமான "ராமபக்தி' தயாராகிக் கொண்டிருந்தது. நடிகர்கள் தேர்வின்போது பாலராமர் வேஷத்துக்கு, பாடத் தெரிந்த ஒரு பையன் தேவைப்பட்ட சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவரால் வீரப்பன் பரிந்துரைக்கப்பட்டார். சக்தி நாடக சபாவின் நடிகர்கள் சிலர் வீரப்பனைப் பாடச் சொல்லிலி குரல் தேர்வு நடத்தினார்கள். தோடி ராகத்தில் வீரப்பன் பாடிய பாடல், அவர்களை சபாஷ் போடவைத்தது. பாலராமர் வேஷத்துக்கு வீரப்பன் அப்போதே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை அன்று நடிகனாக்கிப் பாராட்டிய மூன்று பெரும் நடிகர்கள் எஸ்.வி. சுப்பையா, நம்பியார், எஸ்.ஏ. நடராஜன். வசனம் சொல்லிலிக் கொடுத்தவர் நடிகர் எஸ்.ஏ. கண்ணன். நாகப்பட்டினம் ராபின்சன் ஹாலிலில் அரங்கேற்றம் ஆன அந்த நாடகத்தையும், பாலராமராக நடித்த வீரப்பனையும் பாராட்டி "ஹிந்து' நாளிதழ் விமர்சனம் செய்திருந்தது. 

1945-ஆம் ஆண்டு, மங்கள கான சபாவிலிலிருந்து சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி கணேசன் வந்துசேர்ந்தார். வீரப்பனும்- சிவாஜியும் அப்போதிலிலிருந்தே நண்பர்களானார்கள். சினிமாவில் மாலைக் காட்சி,  இரவுக் காட்சி என்பதுபோல அப்போதுதான் நாடகத்திலும் இரண்டு காட்சிகள் நடைமுறைக்கு வந்தது.

முதல் காட்சியில் சிவாஜி நடித்த வேடத்தில் இரண்டாம் காட்சியில் வீரப்பன் நடித்துள்ளார். ஓய்வு நேரங்களில் சிவாஜியும் வீரப்பனும் உலக சினிமா, ஆங்கில நடிகர்கள் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்களாம்.

1950-ல் "என் தங்கை' என்ற நாடகத்தில் சிவாஜி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போது, அவருக்கு "பராசக்தி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சினிமாவில் நடிக்கப் போனதால், வீரப்பனுக்கு அந்த வேஷம் கொடுக்கப்பட்டு, 25 வாரங்களுக்குமேல் தமிழகத்தின் பல ஊர்களிலும் அந்த நாடகம் நடத்தப்பட்டது. வீரப்பனின் நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தன் நண்பன் சிவாஜி தன் நடிப்பைப் பார்க்கவில்லையே என்ற மனக்குறை வீரப்பனுக்கு இருந்தது.

வீரப்பனின் நடிப்பைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை சிவாஜிக்கும் இருந்தது. ஆனால் "பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது நடந்து கொண்டிருந்ததால் நேரம் கிடைக்கவில்லை. ஒருநாள் வேலூரில் வீரப்பன்  நடித்த அந்த நாடகம் நடந்து  முடிந்ததும்,பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்து வீரப்பனின் நடிப்பை ரசித்துக் கொண்டிருந்த சிவாஜி, மேடைக்கு ஓடிவந்து வீரப்பனைக் கட்டிப் பிடித்து, ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். தன் உற்ற நண்பனின் எதிர்பாராத பாராட்டில் வீரப்பனும் திக்குமுக்காடிப் போனார். வீரப்பனுக்கும் சிவாஜிக்கும் அவ்வளவு அன்யோன்யமான நட்பு.

அவர்களுடைய நட்பு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள்...

சக்தி நாடக சபாவில் இருவரும் இணைந்து நடித்த காலத்தில் வீரப்பனிடம் இரண்டு சட்டைகளும் சிவாஜியிடம் ஒரு சட்டையும் மட்டுமே உண்டு. இருவரும் அந்த மூன்று சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொள்வார்கள். இரவு நேரங்களில் சட்டைகளைத் துவைத்துப் போடுவதும், காய்ந்ததும் எடுத்து, பித்தளை சொம்புக்குள் சூடான கரிக்கட்டிகளைப் போட்டு இஸ்திரி போடுவதும் வீரப்பனின் வேலை.

நாகேஷ் என்னும் உன்னத நகைச்சுவைக் கலைஞனை தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் வீரப்பன் என்பது, திரையுலகிற்கு அப்பாற்பட்டோர் அறியாத உண்மை. இப்படி சினிமாவில் புதைந்துபோன உண்மைகளின் வரலாறு ஏராளம் உண்டு.

அந்த அனுபவத்தை வீரப்பனின் வார்த்தைகளிலேயே கேட்பது, கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும்: "சிவாஜியைப்போலவே எம்.ஜி.ஆர் அவர்களும் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். சக்தி நாடக சபாவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். அடிக்கடி நான் நடிக்கும் நாடகங்களைப் பார்க்க வருவார். 1960-களில் நான் நடித்த "பூ விலங்கு' நாடகம் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. சினிமாவுக்காக "பணத்தோட்டம்' எனப் பெயர் மாற்றப்பட்ட, அந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதி வசனத்தை என்னையே எம்.ஜி.ஆர். எழுதச் சொன்னார்.

சேது - மாது என இரண்டு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு அந்த காமெடி ட்ராக்கை எழுதினேன். ஒரு ரோலிலில் நான் நடிப்பதென முடிவாயிற்று. இன்னொரு ரோலுக்கு நடிகரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் எம்.ஜி.ஆர் என்னிடமே ஒப்படைத்தார். சென்னைப் பொருட்காட்சி கலை நிகழ்ச்சி மேடையில் ஒருநாள் "கப் அண்ட் சாசர்' என்று ஒரு நாடகம் பார்த்தேன். அதில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்தார். அவரின் காமெடி நடிப்புக்கு இடைவிடாது கைத்தட்டிய ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாடகம் முடிந்ததும் அவரைச் சந்தித்துப் பாராட்டிவிட்டு, "பணதோட்டம்' காமெடி ட்ராக்கின் இன்னொரு ரோலிலில் நடிக்க முடியுமா என்றேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் காலை, ஒரு வாடகை சைக்கிளை நாகேஷ் ஓட்ட நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். ஆழ்வார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, சரவணா ஃபிலிலிம்ஸ் படக் கம்பெனி முதலாளியை அந்நாட்களில் பல சினிமா தயாரிப்பாளர்கள், முதலாளி என்றே அழைக்கப்பட்டனர். ஜி.என். வேலுமணியை சந்தித்தோம்.

நாகேஷின் நடிப்பைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரித்த வேலுமணி, அப்படியே எம்.ஜி.ஆரைப் போய்ப் பாத்திடுங்க என்றார். 

சத்யா ஸ்டுடியோவில் அப்போது எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர் மேக்கப் மேன் பீதாம்பரம். இயக்குநர் பி. வாசுவின் தந்தை. காமெடி சீனை நாங்கள் சேர்ந்து நடித்துக் காட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நீங்க ரெண்டு பேரும் இந்த காமெடி ட்ராக்ல சேந்து நடிங்கன்னு எம்.ஜி.ஆர் அங்கேயே சொல்லிலிவிட்டார். நாங்கள் நடித்தோம். 

படம் வெளியாகி சூப்பர் சக்ஸஸ். தொடர்ந்து எனக்குக் காமெடி எழுத வாய்ப்புகள் வந்தன. நாகேஷ் பெரிய காமெடி நடிகரானார்.'

எம்.ஜி.ஆரிடமிருந்த பரோபகாரமிக்க பல நல்ல குணங்களுள் ஒன்று, தன் சக கலைஞர்களில் யார், ஏதேனும் க்ரியேட்டிவாக செய்தாலும் மனம் திறந்துப் பாராட்டி, அதற்கு ஒரு ஊக்கத் தொகையை உடன் வழங்கிவிடுவது...

1964-ல் "படகோட்டி' படப்பிடிப்பில் நாகேஷும் வீரப்பனும் நடித்துக் கொண்டிருந்தனர். நாகேஷுக்கு மீனவத் தலைவர் வேஷம். வீரப்பன் அவருக்கு உதவியாளர். ஒரு காட்சியில் அவர்கள் சக மீனவர்களுடன் கடலிலில் மீன் பிடிக்கப் போய்க் கொண்டிருப்பார்கள். படகின் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் நாகேஷ், அலைகளின் ஏற்ற இறக்கத்தில், சட்டென நிலை தடுமாறி கடலிலில் விழுந்து விடுவார். பக்கத்தில் இருக்கும் வீரப்பன் உடனே எழுந்து, நாகேஷைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல், 

"அடுத்த தலைவர் நான்தான்!' என சந்தோஷமாகக் குரல் கொடுப்பார்.

கரையில் நின்று படப்பிடிப்பைக் கவனித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ஓவென்று சத்தமாக சிரித்து, வீரப்பனின் அந்த டைமிங் காமெடி பஞ்ச் டயலாக்கை கைதட்டி ரசித்தார்.

படப்பிடிப்பு முடிந்து படகு கரை திரும்பியது. எம்.ஜி.ஆர். வீரப்பனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். "வீரப்பா நாட்டுல நடக்குற அரசியல ஒரு சின்ன டயலாக்ல பளிச்சுன்னு சொல்லிட்டியே. பிரமாதம்!' என்று சொல்லிலி ஒரு 5,000 ரூபாய் பணக்கட்டை எடுத்துக் கொடுத்தார். 5,000 ரூபாய் பணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு மதிப்பு என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

பாட்டுக் கோட்டை என புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முதன்முதலாக நாடகத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கேட்ட தருணத்தில், அங்கிருந்தவர் வீரப்பன் என்பதும், பட்டுக்கோட்டைக்கு அன்று முதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்ததற்கு, அவரே முக்கிய காரணம் என்பதும் ஒரு சுவையான சம்பவம்...

1955 -ஆம் ஆண்டு...

நடிகர் டி.கே. பாலச்சந்தர் என்பவர் "கண்ணின் மணிகள்' என்று ஒரு நாடகம் தயாரித்துக் கொண்டிருந்தார். பாடலாசிரியர் ஆவதற்குமுன் பல வேலைகள் பார்த்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அந்த நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டி.கே. பாலச்சந்தரைச் சந்தித்தார். அப்போது நாடகத்தின் பாடல் தொடர்பான டிஸ்கஷன் அங்கு நடந்தது. பாலச்சந்தருடன் அங்கிருந்தவர்களுள் ஏ. வீரப்பனும் ஒருவர். "உங்கள் நாடகத்தில் எனக்கு ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தாருங்கள்' என கல்யாண சுந்தரம், பாலச்சந்தரிடம் கேட்டார். 

அவருடைய கவிதை எழுதும் ஆற்றலை ஏற்கெனவே அறிந்திருந்த வீரப்பன் இவர் நன்றாக எழுதுவார். ஒரு வாய்ப்பு கொடுங்கள் என அழுத்தமாக பாலச்சந்தரிடம் பரிந்துரைத்தார்.

உடனேயே நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடலிலின் சூழலைச் சொல்லிலி கல்யாணசுந்தரத்தைப் பாடல் எழுதும்படி பாலச்சந்தர் சொல்ல, சற்றும் யோசிக்காமல் சிறிது நேரத்திலேயே அவர் பாடல் வரிகளை எழுதிக் காட்டினார்.

"கதிராடும் கழனியில் சதிராடும் பெண்மணி சுவைமேவும் அழகாலே கவர்ந்தாயே கண்மணி'  எனத் தொடங்கும் அந்தப் பாடலே நாடகத்தில் அரங்கேறிய, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடல்.

கம்யூனிசக் கருத்துகளை மையக் கருவாகக் கொண்ட அந்த நாடகத்தில்,  பதுக்கல்காரர்களை சாடும் விதமாகவும், ஏழை மக்களின் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் விதமாகவும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய, "தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்ற வரிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் எழுத்தாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கதை, வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டுப் பாராட்டினார்.

அதோடு நிற்கவில்லை. அப்போது அவர் கலந்துகொண்ட, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை விவாதம் ஒன்றில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அந்தப் பாடல் வரிகளைப் பாடியும் காண்பித்தார். அதை ரசித்துக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தார் இந்த மாதிரி பாட்டு  எழுதும் ஆளைத்தான் இப்போது நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி, ஏ.எல். நாராயணன் மூலம் உடனடியாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை சேலம் வரவழைத்து, ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் அவரே எழுத வாய்ப்பளித்தார்கள். பகுத்தறிவுப் பாவலரான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துக்கு அதிர்ஷ்டம் அடித்த கதை இதுதான்!

1960-களில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் தொடங்கிய ஏ. வீரப்பனின் திரைப்பட வாழ்க்கை 1980-களில் கவுண்டமணி- செந்தில் ஜோடி காமெடியால் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் வீரப்பனை, தயாரிப்பாளர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியிடம் அறிமுகம் செய்துவைத்தார். சுந்தர்ராஜன் இயக்கத்தில் கோவைத்தம்பி தயாரித்த "நான் பாடும் பாடல்' படத்தின்  நகைச்சுவைப் பகுதிக்கு வீரப்பன் வசனம் எழுதினார். அந்தப் படத்தில்தான் வீரப்பனுக்கு கவுண்டமணியுடன் நட்பு ஏற்பட்டது.

கோவைத்தம்பி தயாரித்த "உதயகீதம்' படத்தில்தான் முதன் முதலாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து நடித்தனர். இருவரின் நகைச்சுவை நடிப்பையும் அவதானித்து, அவர்களின் தமாஷான உடல்மொழிகளை உள்வாங்கி வீரப்பன் எழுதிய காமெடி டிராக் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து கவுண்டமணி- செந்திலை வைத்து வீரப்பன் காமெடி டிராக் எழுதிய எல்லா படங்களுமே பெரிய ஹிட் ஆயின.

"உன்னை நான் சந்தித்தேன்', "இதயக்கோவில்', "அமுத கானம்', "மருது பாண்டி', "சின்னத் தம்பி', "கரகாட்டக்காரன்', "பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்', "கீதாஞ்சலி'லி, "வைதேகி காத்திருந்தாள்', "வண்டிச் சக்கரம்' என வீரப்பன் காமெடி டிராக் எழுதிய வெற்றிப்படங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தன.

நடிகர்களுக்காக, பாட்டுக்காக, வசனத்துக்காக, கிளாமருக்காக பல  திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதுண்டு. அதைப்போலவே காமெடிக்காக மட்டும், படங்கள் ஓடியது கவுண்டமணி- செந்தில் காம்பினேஷனில், வீரப்பன் நகைச்சுவை வசனம் எழுதிய படங்கள் மட்டுமே.

கவுண்டமணியும் செந்திலும் மாதத்தின் 30 நாட்களும் படங்களில் நடிக்குமளவுக்கு பிஸியான நடிகர்கள் ஆனார்கள். பணமும் புகழும் குவிந்தது. ஆனால் வீரப்பனின் வாழ்க்கை?

அவர் மனைவி பொற்கொடியின் வார்த்தைகளில் இந்தக் கேள்விக்கான பதில் இதுதான். "அவரு எழுதுன வசனத்தப் பேசி நடிச்சவங்கள்ளாம் லட்சம் லட்சமா பணம் சம்பாதிச்சுக் குவிச்சிட்டாங்க. ஆனா அவரு கடைசி வரைக்கும் பொழைக்கத் தெரியாதவராதான் இருந்தாரு. தயாரிப்பாளர்கள் கொடுக்கறத வாங்கிக்குவாரு. காமெடி நடிகர்களும் அவரை சரியா கண்டுக்கவே இல்ல. அவரும் அவங்ககிட்ட ஒரு உதவியையோ நன்றியையோ கடைசிவரைக்கும் எதிர்பாக்கவே இல்ல! இதையெல்லாம் நீ யாருகிட்டேயும் வெளியே சொல்லக்கூடாதுன்னு எங்கிட்ட அடிக்கடி கண்டிப்பாரு!'

இவையெல்லாவற்றையும்விட வீரப்பனைப் பற்றிய ஒரு வியப்பான செய்தி உண்டு. அது...

உலகப் புகழ்பெற்ற இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளி விழா கண்ட இந்தித் திரைப்படம் "பாம்பே டூ கோவா'. தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற "மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் ரீமேக்தான் அந்த "பாம்பே டூ கோவா'. "மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' படத்தின் கதை- வசனகர்த்தா ஏ. வீரப்பன். வீரப்பனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் ஜெயகாந்தன், ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சிகரமாகத் தெரிவிக்கும் வரை இந்தத் தகவல் யாருக்கும் தெரியாது.

குலுங்கக் குலுங்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்த என்.எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன் போன்ற உன்னதக் கலைஞர்களின் இறுதி வாழ்வு, மிகவும் துயரம் தோய்ந்ததாகவே இருந்திருக்கிறது. ஏ. வீரப்பனும் இதற்கு விதிவிலக்கல்ல.

வீரப்பனுக்கு சேமிப்பு பழக்கம் இல்லை. சம்பள விஷயத்திலும் கறாரில்லை. உடல்நலனில் அக்கறை இல்லை. குடும்பப் பொருளாதாரத்தில் சிரத்தை இல்லை. வரும் வருவாயை மனம் போன போக்கில் செலவழிப்பது, நண்பர்களுக்கு உதவிசெய்வது என்றே வாழ்வைக் கழித்தார்.

தனக்கு சர்க்கரை நோய் இருப்பதை மிகவும் முற்றிய நிலை யிலேயே அறிந்தார். அப்போதும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் கண் பார்வையை இழந்தார். பார்வை இழந்த நிலையிலும் சில காலம்  உதவியாளரின் துணையுடன் சில திரைப்படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதினார்.

2005-ஆம் ஆண்டு ஏ. வீரப்பன் மறைந்தபோது அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பகிர்ந்து கொண்ட கருத்து நெகிழ்ச்சியானது...

"வீரப்பன் அவர்களின் வாழ்வை மனதில் கொண்டு, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் வாழ்வை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். வருவாய் வளமாக உள்ளபோது சேமித்தல், உடல்நலனில் கவனம், முதலிலில் குடும்பத்துக்காக வாழ்வது என்பன அவற்றில் முக்கியமானவை. அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும், எழுதிய நகைச்சுவைக் காட்சிகளின் கணக்கும் அவரது குடும்பத்துக்கு எந்த வகையில் உதவி செய்தது? தனக் காக வாழாது பிறர்க்காக வாழ்ந்த, அந்த அற்புதக் கலைஞனின் கலைச்சேவை சொந்த வீடு, பிள்ளைகளின் வளர்ச்சிக்கென எந்த வகையில் உதவியது என்ற கேள்விகள் நம்மிடையே பதிலற்றவையாவே துயரம் தருகின்றன!'

சிரிப்பையே வாழ்க்கையாக்கிக் கொண்ட ஒரு நகைச்சுவைக் கலைஞனின் வாழ்வு குறித்த இந்தக் கட்டுரையை, அவரோடு எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்...

2001-ஆம் ஆண்டு "சப்தம்' என்ற ஒரு திரைப்படத்தில் நான் இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன். அப்படம் ரிலீஸாகி பெரிதாக சப்தம் எழுப்பாமல் பெட்டிக்குள் சுருண்டது! கோடம்பாக்கம் சாமியார் மடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வீட்டிற்குப் பின்பக்கத் தெரு அந்தப் பட நிறுவனத்தின் அலுவலகம். அந்தப் படத்துக்கு காமெடி டிராக் எழுதுவதற்கு ஒப்பந்தமாகி, தினமும் ஆட்டோவில் அலுவலகம் வருவார் ஏ. வீரப்பன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் 

அவருடன் நெருக்கமான பழக்கம். அப்போது பார்வையற்றிருந்தார். ஆனாலும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. கேள்விகளால் அவருடைய பழுத்த திரை அனுபவங்களை நிறைய உள்வாங்கினேன்.

அப்போது அவர் சொன்ன- திரையில் வரத்தவறிய ஒரு நகைச்சுவைக் காட்சியை இப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"கரகாட்டக்காரன்' காமெடி காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்... அதில் உச்சக்கட்ட காமெடி கற்பனையாக, வீரப்பன் எழுதி படமாக்க இயலாமல் போன காட்சி ஒன்று...

கரகாட்டக்குழு வைத்திருக்கும் அந்த ஓட்டைக் காரை சாலையில் கஷ்டப்பட்டுத் தள்ளிக்கொண்டு போவார்கள். சாலையின் பக்கவாட்டில் காருக்கு இணையாக ஒரு தவளை, தாவித் தாவி அந்தக் காரை ஓவர்டேக் செய்து போகும்! இதைப் பார்த்துவிடும் கவுண்டமணி அவமானம் தாங்காமல் தலையில் துண்டைப் போட்டுக்கொள்வார்!

இப்படியெல்லாம் தமிழ்த் திரையுலகில் சத்தமில்லாமல் சாதனைகளை நிகழ்த்திய வீரப்பனை, தனது நூற்றாண்டைக் கொண்டாடிய திரையுலகம் மறந்துவிட்டது.  இல்லை இல்லை அவரை வேண்டுமென்றே மறக்கடித்துவிட்டது.

 

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=18482

http://www.youtube.com/watch?v=2uZvfAI6Kqo ரயில் சீட்டுக்கு அடியில் பிடிபடுவர் தான் வீரப்பன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நகைச்சுவை நடிகர்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=2uZvfAI6Kqo ரயில் சீட்டுக்கு அடியில் பிடிபடுவர் தான் வீரப்பன்

 

சில படங்களில் இவர் தோன்றி நடித்துள்ளார். நல்ல நகைச்சுவை நடிகர். பெரும்பாலான திரைக் கலைஞர்களின் இறுதிகட்ட வாழ்க்கை ஏனோ சுபிட்சமாக இருப்பதில்லை.

மேற்கண்ட நாகேசு பயணச் சீட்டு இல்லாமல் தொடருந்தில் பயணிக்கும் காணொளியின் கடைசி சில நொடிகளில் வரும் தொழுப்பேடு என்ற தொடருந்து நிலையத்தின் பெயர் பலகையில், இந்தி எழுத்துக்களை மட்டும் தார் பூசி அழித்திருக்கும் நிலை, 60 களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எச்சங்களை சாற்றி ஆவணமாக நிற்கிறது.

 

திரு. ஏ.வீரப்பன் பற்றிய தகவல் பகிர்விற்கு நன்றி.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.