Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருசொட்டுக் கண்ணீர் - சயந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசொட்டுக் கண்ணீர் - சயந்தன்

02.12.2012 பனிகொட்டிய காலை

தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும் இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை.

அவன் மழையின் ஓசையைத் திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச் செல்லத்தான் அலுப்பாயிருந்தது.

விழிப்பு வந்துவிட்டதால் இனிஅலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல நேற்றிரவு கட்டிலில் விழுந்தபோது ஒருமணி. நேற்றென்றில்லை, அது தினப்படியான வழமைதான்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முடியும் வேலையொன்றை இரண்டாவது வேலையாக ரொக்கெற் செய்தான். அது மரக்கறிகளை வெட்டிப் பொதிசெய்யும் தொழிற்சாலை. பகல் வேலைநேரம் முடிந்து தொழிலாளர்கள் திரும்பிய பிறகு அவனது வேலை ஆரம்பித்தது.

தொழிற்சாலையின் இயந்திரங்களைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவன் கழுவுவான். உள் சக்கரப் பற்களில் படிந்திருக்கும் மரக்கறிச்சக்கைகளை வழித்தெடுத்து பளிச் என்று துடைப்பான். “இரவில் தண்ணியடிக்கின்ற வேலைதான்” என்று பகிடிக்கு சொன்னாலும் தடித்த தண்ணீர்க் குழாய்களை இழுத்துத்திரிவதும் உடலைக் குறுக்கி இயந்திரங்களுக்குள் நுழைவதும், நின்றுகொண்டே வேலை செய்வதும் ரொக்கெற்றை வருத்தியெடுத்தன.

வேலையிடத்திலிருந்து இரண்டு நிமிட நடைதூரத்தில் பஸ் தரிப்பிடமிருந்தது. அன்றைய நாளின் கடைசி பஸ்ஸின் சாரதி தலையே போனாலும்கூடப் பிசகாமல் பன்னிரண்டு பத்திற்கு அதனைக் கடப்பான். ஏறிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடலாம். தவறவிட்ட நாட்களில் நடந்துதான் வரவேண்டும். அம்மாதிரியான நாட்களில் ஸ்நேயும் கொட்டினால், அதைவிடுத்தொரு அரியண்டமில்லை.

மிருதுவான வெள்ளை நிறத்தேங்காய்த் துருவல்கள் காற்றில் கீழிறங்குவது போலான ஸ்நேயை அப்படியானதொரு இரவிற்தான் ரொக்கெற் முதன்முதலாக அனுபவித்தான். அதுவொரு நரக இரவு. மதியத்திலிருந்தே ஸ்நே கொட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிச் சாளரங்களின் வெளியே தெரிந்தது.

வேலையை முடித்து வெளியேறியபோது பஸ் போயிருந்தது. நடைபாதை முழுதும் வெண்ணிறக் களியைக் குழைத்து நிறைத்ததுபோல முழங்காலளவு ஸ்நே. வீதியின் நடுவே பனியை வழித்து ஓரமாகக் குவித்த வாகனம் உப்பைத் தூவிச்சென்றது.

கால்களைத் தூக்கி பனிக் குழையலில் பொத்துப் பொத்தென்று வைத்தபோது சப்பாத்தினுள் ஸ்நே நுழைந்து காலுறைகளை ஈரமாக்கியது. கழுத்தின் பின்புறத்தில் தூவல்கள் விழுந்து நீராகி முதுகில் இறங்கின. நக இடுக்குகளில் கூதல் ஊசியாய்க் குத்தியது. குளிரில் விறைத்திருந்த காது மடல்களைக் கைகளால் தேய்த்துச் சூடாக்கியபடி ரொக்கெற் நடந்தான்.

ஸ்நே மழையைப் போலில்லை. மழையில் ஆசை தீர நனைந்து அலைந்த காலமொன்றிருந்தது. மழை ஒரு நண்பனைப்போலவே கூடப் பயணித்தது. திடீரென்று ஒரு நாளில் கொழும்பில் அது காணாமற் போயிற்று. கருமையைப் போர்த்தியிருந்த வானம் பொத்துக்கொண்டு பொழிந்த நாட்களில் கடலில் சளக் சளக் என்று தோளில் மோதி மடிந்து விழும் அலைநீரில் நின்றபடி நனைந்த நாட்களை நினைத்தால் சிலிர்க்கிறது.

ஸ்நே அப்படி இல்லை. அது ஒருபோதும்உற்சாகம் தருவதில்லை. வின்ரர் காலங்களில் மூஞ்சை விடியாத நிலத்தைப்போல சோபையிழந்து கிடக்கின்றது. தடித்த கம்பளி ஆடைகள் இரும்பைப்போல கனக்கின்றன. அவற்றிற்கு உள்ளே எப்பொழுதும் உடல் அழுந்தி நசுங்குகிறது. ஸ்நேயை ரசிக்க முடியவில்லை. தூஷணத்தால் திட்டவேண்டும் போலிருக்கிறது.

கைத்தொலைபேசி கிணுகிணுத்து ஓய்ந்தது. பிறகு மறுபடியுமொருதடவை ஆரம்பித்தது. ஏதேதோ எண்ணங்கள் குறுக்குமறுக்குமாக ஓட உதட்டு விளிம்பில் சிரிப்போடு கிடந்தவன் சுதாகரித்தான். தலைமாட்டில் கைகளால் தடவித் தூக்கினான். வெளிர்பச்சைப் பின்னணியில் திரையில் அருணன் என்ற பெயருக்கு மேலே 5.57 கி.வி என்று ஒளிர்ந்தது. இன்னொரு முப்பத்து மூன்று நிமிடங்கள் இருக்கின்றன. உடலைச் சோர்வாக்கி அழைப்பை ஏற்றான்.

“சொல்லு அருண்”

“அண்ணன், காக்கா செத்துப்போய்விட்டான்.”

ரொக்கெற் போர்வையை உதறித்தள்ளி எழுந்தான். சாரம் இடுப்பில் வழிந்தது. தோளை உயர்த்திக் காதோடு தொலைபேசியை அழுத்தியபடி சாரத்தை இறுக்கி முடிந்தான். “என்ன.. ஏன்..”

“அவன் நரம்பை அறுத்துச் செத்துக்கிடக்கின்றான். அறை முழுவதும் இரத்தமாயிருக்கிறது. யாரிடம் சொல்வதென்றும் தெரியாமல் எப்படிச் சொல்வதென்றும் தெரியாமல் இப்பொழுதுதான் தீபன் தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு சுவிஸ்காரர்களைக் கூட்டிவந்திருக்கிறான். அவர்கள் மூக்கைப் பொத்தி நின்று பார்த்துவிட்டு பொலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் ஒருமுறை வரமுடியுமா”

“நீ வை. நான் வருகிறேன்.” ரொக்கெற் குளியலறையை நோக்கி ஓடினான். வெறுமனே வாயைக் கொப்பளித்து சுடுநீரால் முகத்தைத் துடைத்துவிட்டு வந்தான். ஒரு பதட்டம் நுழைந்து ஆர்முடுகிக்கொண்டிருந்தது. எட்டுமணிக்கு வேலை.

ஊத்தை உடுப்புக்களைப் போடுகிற வாளியின் அடியில் கையை நுழைத்துத் துழாவி ஜீன்ஸ் ஒன்றைக் கண்டடைந்தான். மூக்கில் பொச்சுமட்டைத் தும்பொன்றை நுழைத்துச் சுழற்றுவதுபோல கூசியது. மூக்கைச் சுருக்கித் தும்மத் தொடங்கினான்.

மூக்குத்துடைக்கும் ரிசுப்பேப்பர் பைக்கற் ஒன்றை புதிதாக எடுத்து பொக்கற்றில் சொருகினான். அறை முழுவதும் ரிசுக்கள்தான் வீசப்பட்டிருந்தன. சுற்றி நோக்கினான். ஒற்றைக் கட்டிலின் மெத்தை நடுவில் பள்ளமாயிருந்தது. தரையில் இரண்டு புறத்தும் மூக்குச்சிந்திய கசங்கிய ரிசுக்கள் கிடந்தன. முந்தநாள், ஓர் அதிகாலைக் கனவின் விழிப்பின் பிறகான இயக்கத்தில் - குளியலறைக்குப் போகிற பஞ்சியில் துடைத்தெறிந்த ரிசுப்பேப்பரும் இங்கெங்கோதான். “ச்சிக்.” என்றான் ரொக்கெற்.

தூசு அப்பிய குகையொன்றினுள் நிற்பதான உணர்வு அவனைப்பற்றியது. இந்த அலுமாரியும் கட்டிலும் இல்லாவிட்டால் வெலிக்கடைச் சிறையின் இருள் சுவர்களுக்கு நடுவிலான வெளியைப்போன்றதுதான் இதுவும்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்தபோது சனங்களில்லை. ஓட்டுனருக்குப் பின்னிருந்த இருக்கையொன்றில் அமர்ந்தான். “காக்கா கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாம்” என்று தோன்றியது.

அவனைப் பொறுத்தவரை மரணமென்பது சந்திப்புக்களினதும் சம்பவங்களினதும் தொடர்ச்சியில் விழுமொரு நிரந்தரத் திரை. அல்லது மனிதர்களோடான ஊடாட்ட இழைகளில் ஒன்று அறுந்துபோவது. அவனுக்கு அதுவொரு மரத்த உணர்வு. நினைவுகள்தேங்கியிருக்கும், ஆனால் அழுதுபுரள்வதில்லை. இன்றுவரை அவனுக்குப் பலரைச் சந்திக்க முடியாமற்போயிருந்தது. அதிகமதிகம் நண்பர்களை.

கடைசியாக யாருடைய மரணத்தில் அழுதேன் என்று காலத்தின் உள்நுழைந்து நினைவுகளைத் தேடினான். ரொக்கெற்றின் தகப்பன் செத்துப்போனபோது, அவனுக்கு ஐந்து வயது. எதுவும் நினைவில்லை. ஆனால் அப்பொழுதும் அவன் அழவில்லை என்றும் ஓரமாக ஒதுங்கியிருந்தான் என்றும் பின்னாட்களில் அம்மா ஒப்பாரியில் சொன்னாள். அவள் தனித்திருக்கிற வேளைகளில் பிசிறலாகக் கசியும் மெல்லிய அழுகை சீரான சந்தத்தோடு ஒப்பாரியாக உச்சக் குரலைத்தொடும்.

“தென்னைமரத்தின் கீழிருத்தி ராசாவைத் தெருவே அழுதநேரம், உன்னைப் பெத்த ராசனுக்காய் நீ ஒருசொட்டும் கண்ணீரும் அழவில்லையே..”

29.11.1988 மழை நாட்கள்

நினைவுதெரிந்த நாட்களில் தோழமையொன்றின் முதல் மரணம் ரொக்கெற்றின் இருபதாவது வயதில் நடந்தது. அவனது பெயர் அம்மப்பா. பெயரில்தான் வயதேறியிருந்தது. நேரில் மெல்லிய இளைஞன். நினைவில் முகம் தோன்றுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு தெரிகிற கத்தை மீசை அவனுக்கிருந்தது. ரொக்கெற்றை விடவும் மிகச்சரியாக ஏழு மாதங்கள் மூத்திருந்தான்.

அது இரண்டு துப்பாக்கிகளையும் நான்கு கிரேனைட்டுக்களையும் சுமந்து ஊர் ஊராக அலைந்தும் மறைந்தும் திரிந்த நாட்கள். அம்மப்பா ரொக்கெற்றின் இன்னொரு கையாகவே திரிந்தான். மூசுகிற கடல் அலையைப்போல இதயம் பொங்கிவழிந்த அமைதியற்ற நாட்கள் அவை. அடுத்த நிமிடம் நிச்சயமாயிருக்கவில்லை. பசிக் களையில் சோற்றில் கை வைத்த கணத்தில் சுற்றி வளைத்துத் துரத்தினார்கள். தெருவின் முகப்பில் புதிதாக முளைத்த சோதனைக் கூண்டிலிருந்து முகத்தைத் துணியால் சுற்றி மறைத்த ஒருவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டிக் காட்டிக்கொடுத்தான். அவர்கள் ஒரு பொழுதேனும் கண்மூடித் தூங்க முடியாமல் ஒரு வெறிநாயைப்போல இரவுகளை விழுங்கிக்கொண்டிருந்தார்கள். கெடுபிடி நாட்களில் ஏதோ ஒரு வயலோரக் குடிசையில் பசிக்கின்ற வயிற்றோடு யாரேனும் ஒருபிடி சோறு கொண்டுவந்து தரமாட்டார்களா என ஏங்கிக்கிடந்தார்கள்.

ரொக்கெற்றின் வெட்க சுபாவம் இயக்கத்தில் பிரசித்தம். உதவி கேட்டுத் தானாக யாரையும் அணுகமாட்டான். அம்மப்பா அப்படியே நேர்மாறு. திடீரென்று சைக்கிளை நிறுத்தி அகப்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்துவிடுவான். வெளியேறும் போது அவனிடம் இரண்டு பதில்கள் இருக்கும்.

“வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆமிக்குத் தெரிந்தால் ஆபத்து. அதனால் இன்றும் இனிமேலும் இங்கு வரவேண்டாமென்றார்கள்”

“வந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்கிறார்கள்”

அவை இரண்டினது தொனி களும் ஒரே மாதிரியிருக்கும்.

“வரச்சொன்னார்கள் என் பதற்காக எவரென்று தெரியாமல் உள்ளட முடியுமா. என்றாவது ஒரு நாளைக்குக் கொழுவும் ஒட்டுமொத்தமாக எங்களைப் போடுவார்கள்.”

“அவர்கள் எங்களுடைய மக்கள்” என்று மட்டும் அம்மப்பா சொல்வான்.

அவர்கள் சாப்பாட்டிற்கு அடிக்கடி போகும் ஒரு வீடிருந்தது. அது சியாமளா அக்கா வீடு. வீதியிலிருந்து விலகி உள்ளே போகின்ற குச்சொழுங்கையில் நான்கு வீடுகளே இருந்தன. ஒழுங்கையின் முடிவில் சியாமளா அக்காவின் வீடு தொடங்கியது. பின்னால் நெடிய பனை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த கூடலொன்றிருந்தது. பிறகு வயல் விரிந்தது. தப்பியோடுவதற்குப் பொருத்தமான வீடு.

சியாமளா அக்கா எங்கேனும் வழியில் இவர்களைக் கண்டாலும் “இன்றைக்குச் சாப்பிட வாருங்கள்” என்று அழைத்துச் செல்வார். வீட்டின் புறத்தால் பந்தி இறக்கி கிடுகு வேய்ந்திருந்தார்கள். மாட்டுச்சாணத்தினால் மெழுகிய நிலத்தில் உச்சிவெயிலிலும் குளிர்ச்சியாக இருக்கும். கீழே புற்பாய் விரித்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சியாமளா அக்காவின் அப்பா முன்விறாந்தையில் ஒரு வாங்கில் எப்பொழுதும் படுத்திருப்பார். பேசமாட்டார். சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வாய் ஒரு பக்கம் கோணியிருக்கும். இவர்களைக் கண்டால் சிநேகமாகத் தலையை அசைப்பார்.

அன்று காலையிலிருந்து இடியும் மின்னலுமாயிருந்தது. கருமேகங்கள் திரண்டு இராட்சத மிருகங்களாக அலைந்தன. தூரத்துக் கிராமமொன்றில் நான்கு இராணுவத்தினரை முடித்தாயிற்று என்ற செய்தியோடு மூன்று துப்பாக்கிகளையும் கொண்டுவந்திருந்தான் மிரேஸ். எப்போதாவது அவன் இவர்களைச் சந்திப்பதுண்டு.

அம்மப்பா துப்பாக்கிகளை வாஞ்சையோடு தடவிப்பார்த்தான். அவற்றிலொன்றைத் தோள்களில் தாங்கித் தலையைச் சரித்துத் கண்களைப் பொருத்தி ரொக்கெற்றைக் குறிபார்த்துச் சிரித்தான். பின்னர் துப்பாக்கியை அழுத்தி முத்தமிட்டான்.

துப்பாக்கிகளை பொலித்தீனால் சுற்றினார்கள். சீமெந்து மணக்கும் பையொன்றில் வைத்து மடித்தார்கள். பத்தானைக் கேணிக்குப் பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.

மேகங்கள் அப்பொழுது மழையாகக் கொட்டத் தொடங்கின. உரைப்பையைத் தலையில் முக்காடிட்டபடி மிரேஸ் காவலுக்கு நின்றான். அம்மப்பாவும் ரொக்கெற்றும் உள்ளே சென்றார்கள். வெள்ளம் தேங்கத் தொடங்கவில்லை. குழிதோண்டியபோது நிலம் சேறும் சகதியுமாயிருந்தது. புதைத்து முடித்தபோது மதியம் தாண்டி மூன்று மணியாயிருந்தது.

“பசிக்கிது. சியாமளா அக்கா வீட்டிற்குப் போகலாம்.” என்றான் அம்மப்பா. “சிலநேரம் அவர் இன்றைக்குச் சுறா வறை செய்திருப்பார் என்று என்ர மனசு சொல்லுது” பசியைச் சொல்லும்போது அவனது விரல்கள் வயிற்றைத் தடவின.

ரொக்கெற் மிரேஸை ஏற்றிக்கொண்டான். அம்மப்பா தனியே வந்தான். பார்த்தால் இயக்கமென்று அனுமானிக்க முடியாத மூன்று அமைதியான இளைஞர்கள் சைக்கிளில் பயணித்தார்கள்.

சியாமளா அக்கா வீட்டின் ஒழுங்கைத் தெருவில் ஏறுமிடத்தில் பச்சை உடைகளை அம்மப்பா கண்டபொழுதிற்தான் நாய்களும் குரைக்கத்தொடங்கின. சப்பாத்துக்களைத் தொடும் பச்சை நிறத்தாலான மழைக்கோர்ட்டை அணிந்தபடி பதினைந்துக்கும் மேலான இந்திய இராணுவத்தினர் ஒழுங்கையிலிருந்து ஏறினார்கள்.

ரொக்கெற் பிரேக்கை அமத்தினான். “பதறாதே, சூட்டு வளையத்திற்குள் நிற்கிறோம். அப்படியே வா” என்று அம்மப்பா அருகாக வந்து கிசுகிசுத்தான். அவர்கள் தொடர்ந்தும் பயணித்தார்கள். துணுக்குற்ற ஒரு சிப்பாய் மிரேஸை அடையாளம் காணும்வரைக்கும் இராணுவத்தினர் இயல்பாகத்தான் நடந்தார்கள். ஆனால் அந்தச் சிப்பாய் இந்தியில் கத்தத் தொடங்கிய கணத்தில் துப்பாக்கிகள் ஒரு சொட்டுத் தாமதமுமின்றி வெடிக்கத் தொடங்கின. வெளியேறிய ரவைகள் எவையும் வீணாகவில்லை. அவை அம்மப்பாவைத் துளைத்தன. முதற் குண்டுகள் பசித்த அவனது வயிற்றில் நுழையும் ஒவ்வொரு கணத்திலும் புயற் காற்றைப்போல உடலைப் பின்தள்ளிப் பின்தள்ளி விழுத்தின. வானத்தைப் பார்த்தவாறு அம்மப்பா விழுந்து கிடந்தான். மழை பெய்துகொண்டிருந்தது.

ரொக்கெற்றிலும் மிரேஸிலும் ஒரு சன்னம் தன்னும் உரசவில்லை என்பதற்கு இந்திய இராணுவத்தின் கவனக்குவிப்பிற் பழி சொல்லுங்கள். உயிரோடும் உயிரற்றுமிருந்த அம்மப்பாவின் உடலைக் குறிவைத்தே அவர்கள் இயங்கிக்கொண்டிருக்கப் பாய்ந்து இறங்கிய ரொக்கெற்டும் மிரேசும் கருக்குமட்டை வேலியை ஒரே பாய்ச்சலில் கடந்தார்கள். வாளின் பற்களையொத்த கருக்கின் விளிம்புகள் மிரேஸின் வலது தொடையை ஆழத்துக்கு இழுத்துக் கிழித்தன. நாய்கள் குரைத்துக்கொண்டேயிருந்தன.

மழை நீண்டுகொண்டிருந்த அன்றைய இரவில் எங்கோ தொலைதூரத்தில் ரொக்கெற் கொட்டக்கொட்ட விழித்திருந்தான். அவ்வப்போது தலை தன்னிச்சையாகத் திரும்பி பின்னால் அம்மப்பாவைத் தேடியது. அவன்அழவில்லை.

அம்மப்பாவைக் கொன்ற துப்பாக்கிகள் அதற்குச் சற்று முன்பாகத்தான் சியாமளா அக்காவையும் முதிய தந்தையையும் சல்லடையிட்டுத் துளைத்திருந்தன என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை. அறியநேர்ந்தபோதும் அழவில்லை.

0 0 0

12.07.1991 சாவுகளை வழியனுப்பிய காலம்

ரொக்கெற் வருடத்தின் தொடக்கத்திலேயே கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தான். அவனுக்குள் ஒரு மிருகம்போலிருந்த ஓர்மமும் அதனைச் சிறு அசைவிற்கூட வெளிச்சொல்லாத முகபாவமும் அவனை அங்கு அனுப்பின. வெகு சீக்கிரமே தன்னில் ஒரு நாகரீகத் தோற்றத்தை அவன் உடுத்திக்கொண்டான். ஓர் உல்லாசப்பேர்வழியின் நடை உடை பாவனைகள் அவனில் மிகச்சரியாகப் பொருந்தின.

குண்டுத்தாக்குதல்களின் இணைப்பாளனாக ரொக்கெற் இருந்தான். பயிற்சிகள் மட்டக்களப்பில் நடந்தன. தயாரானவர்கள் புதுப்புதுப்பெயர்களில் கொழும்பிற்கு வந்தார்கள். வெடிமருந்து நிரப்பிய லொறிகள் எங்கெங்கோ இருந்து வந்தன. மனிதர்களையும் லொறிகளையும் ரொக்கெற் ஒருங்கிணைத்தான். துண்டுதுண்டாய்க் கிடைக்கிற தகவல்களைச் சீர்செய்து இறுதிவடிவத்தை உறுதிசெய்தான்.

அவன் வழியனுப்பி வைத்தவர்கள் திரும்பி வரவில்லை. ஆனால் எங்கோ சிக்கிய தடயமொன்றைச் சிக்கிக்கிடந்த நூற்குவியலின் ஓர் இழையாய்ப் பற்றிக் கொண்ட இராணுவப் புலனாய்வுக்காரர்கள் அதைப் பிடித்துப்பிடித்து கிட்ட நெருங்கினார்கள். நூலிற்குப் பல அந்தங்கள் இருந்தன. அதிலொன்று இவனாயிருந்தான். ஒன்பதாவது மாதத்தில் ஒரு கோழியை அமுக்குவதுபோல ரொக்கெற்றைக் கைது செய்தார்கள்.

அதுவரை அவன் மூன்று பேரை வழியனுப்பியிருந்தான். அவர்களது தோளைத்தட்டி “போயிற்று வாங்கோ”என்றிருக்கிறான். அவர்கள் போனபிறகு இரவில் கொட்டக்கொட்ட விழித்திருந்திருக்கிறான். அப்படியொரு இரவில் இரத்மலானையில் மழையும் பெய்தது. அம்மப்பாவின் நினைவுகள் கிளர்ந்தன. ஆனாலும் அழாமல் வெறித்திருந்தான்.

25.07.2011 வெம்மை தகித்த காலம்

காதலும் கனவும் பொங்கும் இந்தியச் சினிமாக்களின் நாயகர்களும் நாயகிகளும் தம் “கேரியரில்”ஒருமுறையாவது ஆடிப்பாடிய சுவிற்சர்லாந்தின் அழகிய நகர் அது. இந்துக் கடவுள் சிலையொன்றைப் பிரதிஷ்டை செய்தால் சுவாமி உள்வீதியில் வலம் வரும் விஸ்தீரணம் கொண்ட தமிழ்க்கடையொன்று அந்நகரத்தில் இருந்தது. அதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மிளகாய்த்தூளும் பாகிஸ்தானிலிருந்து அரிசியும் தூத்துக்குடியிலிருந்து மீனும் இறக்குமதியாயிற்று. மீன் விற்பனைப் பகுதியில் ரொக்கெற் காக்காவைக் கண்டான்.

வெண்ணிறப் பொலீத்தீனாலான அங்கியொன்றைப் பின்கழுத்தில் முடிந்து உடலின் முன்பக்கத்தை மறைத்திருந்தான் காக்கா. அங்கியில் மீனின் மினுங்கும் செதில்களும் சிவப்பு இரத்தமும் பரவலாக ஒட்டியிருந்தன. அவ்வப்போது புறங்கையால் அவன் நெற்றியைத் தேய்த்தான். அப்பொழுது நெற்றியிலும் செதில்கள் ஒட்டின.

“அக்கா வாங்க, என்ன வேணும். நல்ல பாலை மீன் வந்திருக்கிறது. சாப்பிட்டுப்பாருங்க, ருசியில் விடமாட்டீர்கள்” என்று தனக்கு முன்நின்ற பெண்ணிடம் காக்கா சொன்னான்.

“வேண்டாம் தம்பி, பாலை மீன் முழுவதும் முள்ளு.” அவள் தலையாட்டி மறுத்தாள்.

“அப்ப, அறக்குளா எடுங்கவன். இந்தா பாருங்க.. ரத்தச்சிவப்பு. இன்றைக்கு அரைமணி நேரத்திற்கு முதல் வந்தது.” கண்ணாடிப்பெட்டிக்குள் பரவியிருந்த குறுணிக் கற்களைப்போலான ஐஸ்கட்டிகளுக்கு மேலே சீராக அடுக்கப்பட்டிருந்த மீன்களில் ஒன்றின் காதினை விரித்து உள்ளே சிவந்த இறகுகளைக் காட்டினான்.

“நான் சின்னமீனாகப் பார்க்கிறேன்”என்றாள் அவள்.

“பாரையும் விளையும் இருக்கின்றது. எத்தினை கிலோ என்று சொன்னால் வெட்டித் தருகின்றேன். ”

ஒரு முடிவுக்கு வராதவளாக அந்தப்பெண் யோசித்தபடி நின்றாள். அவ் இடைவெளியில் காக்கா ரொக்கெற்றிடம் திரும்பினான். “அண்ணன், பாலை மீன் வந்திருக்கிறது.”

என்று முதலிலிருந்து ஆரம்பித்தான். பிறகு பதிலுக்குக் காத்திராதவனாக மீண்டும் “அக்கா, தலை வெட்டிச் சுத்தம் செய்த சூரைமீன் பைக்கிங் செய் திருக்கிறது. ஆணத்திற்கு நன்றாயிருக்கும்” என்று இரண்டு சிறு மீன்பொதிகளைப் பெண்ணிடம் நீட்டினான்.

“ஆணமோ, அதெல்லாம் நாங்கள் சமைக்கிறதில்லை”அவள் ஒரு வினோதப் பொருளைப் பார்ப்பதுபோல முகத்தைச் சுருக்கி காக்காவைப் பார்த்தாள். பிறகு “இல்லை தம்பி, ரண்டு கிலோ விளைமீனை வெட்டும்..” என்றாள்.

ஐஸ்கட்டிகளுள் புதைந்திருந்த ஒரேயளவான இரண்டு மீன்களைக் காக்கா இழுத்தான். மேசையில் அழுத்திக் கூரான அரத்தினால் அவற்றின் உடலை இடமும் வலமுமாகத் தேய்த்தான். செதில்கள் மீனினின்றும் சொரிந்து விழுந்தன. கண்களுக்கு அருகாயிருந்த இறக்கைகளைக் கத்தரித்தான்.

“தம்பி, இது இலங்கை மீனா.. அல்லது இந்தியா மீனா..” கண்ணாடிப்பெட்டிக்கும் மேலாகத் தலையை உயர்த்தி அவன் மீன்வெட்டுவதைப் பார்த்தபடி கேட்டாள் அப்பெண்.

“சைனா மீன் அக்கா..” என்று சிரித்தான். பிறகு “உலகம் முழுதும் ஒரே கடல்தானே. அதில் மீனுக்கு என்ன நஷினாலிற்றி”என்று கேட்டான். பிறகும் ஏதோ சொல்ல வாயெடுத்தவன் அமைதியானான். வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு வேலையில் மூழ்கினான்.

மீன் வெட்டும் இயந்திரத்தை இயக்கினான். இரைச்சலோடு வாள் கீழிருந்து மேலாக ஓடியது. வாளிற்கு மீனைக் கையாற் தள்ளித் துண்டுகளாக்கி அறுத்தான். சற்றுக் கவனம் பிழைத்தாலும் விரல்கள் துண்டாகிவிடும், ஆயினும் கண்களில் அவதானம் தெரியவில்லை. மீன் துண்டுகளின் உடலில் விரலால் நோண்டிக் கழிவுகளை வெளியிலெடுத்துக் கீழிருந்த வாளிக்குள் போட்டான். துண்டுகளை ஒருமித்து பொலித்தீன் பையொன்றினில் போட்டு பெண்மணியிடம் கொடுத்தான்.

“நன்றி அக்கா.”

ரொக்கெற்றைப் பார்த்து “அண்ணன் சொல்லுங்க..” என்றான்.

ரொக்கெற் அருகாகப் போனான். சற்றுநேரம் காக்காவையே பார்த்தபடி நின்றான். ஐஸ் துகள்களை அள்ளி மீன்களின்மீது தூவிய காக்கா “என்ன வேணும் அண்ணன்” என்றான்.

“நீங்கள் கொம்பனி ஆள்த்தானே..”

காக்காவின் கண்களில் வெளிச்சம் ஒருகணம் ஒளிர்ந்து பின் கறுத்தது.

0 0 0

ரொக்கெற்றின் வீடு, ஓர் அறையை ஒரு பக்கத்திலும், இரண்டுபேர் ஒரே நேரத்தில் நின்றால் இட்டுமுட்டாகும் சமையலறையையும் குளியலறையையும் இன்னொரு பக்கத்திலும் கொண்டிருந்தது. இடையிலிருந்த ஒரு துண்டு வெளியில் பழைய ரிவியொன்றும் உட்புதைந்து, ஓரங்கள் முறுகிக் கிழிந்த, கருநிற சோபா ஒன்றும் இருந்தன. அதன்ஓர் ஓரத்தில் காக்கா உட்கார்ந்திருந்தான். அவன் பேசத்தொடங்கிய அரைமணி நேரத்தில் கண்ணீரைச் சிந்தலானான்.

அவன் கண்களில் வழிந்த தனிமையுணர்வு அவனிடத்தில் நெருக்கத்தை உருவாக்கிற்று. இருபத்தைந்து வயது இருக்கலாம். வயதிற்குத் தொடர்பின்றி குழந்தைமை முகத்தில் அப்பியிருந்தது. அன்றைக்குக் கடையில் அவன் பேச அஞ்சினான். முதலாளிக்குப் பயம். தொலைபேசி இலக்கத்தை வாங்கிய ரொக்கெற் சமைக்கிற நாளொன்றில் அழைப்பதாகச் சொன்னான்.

ரொக்கெற் தினமும் சமைக்கிறவன் அல்ல. வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்துக் குளிர்பதனப்பெட்டியில் நிறைத்து விடுவான். அதுபற்றி ரொக்கெற்றோடு வேலை செய்யும் தமிழ் மனிதர் சொல்வார். “நானும் முந்தி இப்படித்தான். ஒவ்வொருநாளும் சமைக்கிறதில்லை. பிறகு கல்யாணம் செய்து அவவைக் கூப்பிட்டாப் பிறகு தினச்சமையல்தான். இப்ப உடன்சோறு இல்லாட்டி உள்ளடாது. அதனால நீரும் ஒரு கல்யாணத்தைக் கெதியில செய்யும்.”

“ஏன். அவ வேலைக்குப் போறதில்லையா ”

“போறவதான். இந்த நாட்டில் இரண்டுபேர் வேலைக்குப் போகாமல் குடும்பத்தைச் சமாளிக்க முடியுமோ. பில் கட்டுறதுக்கே ஒருவர் தனியாக உழைக்க வேணுமெல்லோ”

மீன் அல்லது கோழிக்கறியும் கீரையும் ரொக்கெற் சமைப்பான். தமிழ்க் கடைகளில் இறைச்சிச் சரக்கு, கறி மசாலா எல்லாம் தாராளமாகக் கிடைக்கின்றது. கைப்பக்குவம்தான் வாய்க்கவில்லை. அது நேரக்கணிப்பிற்கும் மனநிலைக்கும் நடுவில் எங்கோ ஒளிந்திருக்கிறது. அவன் கோழி இறைச்சியைத் தடித்த விரலளவு துண்டுகளாக வெட்டிக் கறியில் இடுவான். அம்மா சமைக்கும்போது அப்படியல்ல. அவள் சோற்றோடு பிசைகிற மாதிரி இறைச்சியைச் சின்னஞ்சிறு துண்டுகளாகப் பொறுமையாக வெட்டி மண்சட்டியில் சமைப்பாள். இருபது வருடங்கள் கழிந்தும் சுவை நாவில் நிற்கிறது. சியாமளா அக்காவின் மீன்பொரியலும் வலு திறம். தலையைக் கத்தரித்த சிறிய சூடை மீன்களை எண்ணெயில் மொறுமொறுக்கப் பொரிப்பார். வெள்ளைச் சோற்றை வெறும் பால்சொதியோடும் மீன்பொரியலோடும் சாப்பிடலாம்.

காக்காவை அடுத்தநாள் சாப்பிட வருமாறு சனிக்கிழமை இரவு ரொக்கெற் தொலைபேசியில் அழைத்தான். அப்பொழுது ஒன்பது மணியாகியிருந்தது.

“அண்ணன். இன்னமும் வேலை முடியவில்லை. அரைமணி நேரத்தில் அழைக்கட்டுமா”என்று காக்கா கிசுகிசுத்தான்.

“இன்று சனிக்கிழமையல்லா. கடை நான்கு மணிவரைதானே..”

“கடையை மூடியாயிற்று. இன்னமும் கழுவி முடியவில்லை அண்ணன். சரி. நான் கூப்பிடுகிறேன்” பதிலுக்கும் காத்திராமல் காக்கா துண்டித்தான். பத்துமணிக்குப்பிறகு அழைத்தான்.

“மன்னிச்சுக் கொள்ளுங்க. முதலாளி நின்றவர். பிறகு அவர் திட்டுவார்.” என்றான்.

0 0 0

இருண்டு ஒடுங்கிய மரப்படிகளில் காக்கா தயங்கித் தயங்கியே மேலேறி வந்தான். கதவைத்திறந்து வாசலில் காத்திருந்த ரொக்கெற் அவனது கையைப் பற்றி உள்ளே அழைத்தபோது வெட்கப்பட்டு உடலைச் சுருக்கினான். சோபாவின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டான்.

“ஆளைப்பார்த்தால் அப்படிக் கறுப்பில்லையே. அதென்ன காக்கா என்ற பெயர்.. ” ரொக்கெற் கேட்டான்.

சுவாரசியம் ததும்பும் கதையொன்றைச் சொல்வதற்கு அந்தரப்பட்டிருந்தவன்போல காக்கா சட்டென வாய்திறந்தான். அக்கதை மேற்சுவரில் எழுதப்பட்டிருந்தது போல கண்கள் அங்கேயே நிலைகுத்தி நிற்க, ஆரம்பித்தான்.

“அதுவொரு பெரிய கதை. நான் மட்டக்களப்பிலிருந்து வந்தவன் என்பதையும், காக்கா என்ற பெயரையும் மட்டும் தெரிந்துகொண்டு என்னை முஸ்லீம் பையன் என்று நினைத்தவர்களும் உண்டு. முகாமில் இயக்கம் என்று சொல்லி முஸ்லீம் பெடியனொருவன் வந்துள்ளான் என்றொரு கதையும் தொடக்கத்தில் உலாவியது. அது வேறொன்றுமில்லை. கானா.கானா உதயகுமார் என்ற முழுப்பெயரின் முதற்பெயர்களே காக்கா ஆயின. முகாமில்தான் அப்படி அழைக்க ஆரம்பித்தார்கள். பிறகது பரவிற்று.”

ரொக்கெற் சிரித்துக் கொண்டேயிருந்தான். அவனின் தாத்தாவினதும் அப்பாவினதும் பெயர்கள் முறையே பெரியவன், புண்ணியம் என்றவாறாக இருந்தன. அவனது சிரிப்பு அறை முழுதும் பரவிற்று. காக்காவின் வார்த்தைகள் அவற்றை இறுக்கிச் சுருக்கின.

“எனக்கு இன்னுமொரு பெயரும் முன்னர் இருந்தது. தென்னவன். இப்பொழுது யாரும் அப்படி அழைப்பதில்லை. எனக்குள் மட்டும் அந்தப்பெயர் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.”

0 0 0

“நீங்களும் இயக்கத்திலிருந்து வந்தவர்தானே. கேட்கிறேன் என்று குறை விளங்காதீர்கள். அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது அண்ணன். அவர்கள் எங்களை அம்மணமான ஒருவனைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளை நாங்கள் அனுபவித்ததே இல்லையே. உங்களுக்குத் தெரியாமலா. நாங்கள் பனிஷ்ட்மென்டைக்கூட விளையாட்டாகத்தானே செய்தோம். நண்பனின் வீரச்சாவுச் செய்தியைச் சொல்லப்போனபோது சனங்கள் எங்களை அடித்துத் திரத்தியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அநாதையாக உணர்ந்ததில்லையே. தோல்வி ஒரு பெரிய கொடுமை அண்ணன்.

முன்னாள் போராளி என்பதை அறிகிற ஒருவரின் முதற்கேள்வி எதுவென்று உங்களுக்குத் தெரியுமா. நீர் ஏன் சயனைட் சாப்பிடவில்லை என்ற அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும். சயனைட்டைக் கடித்திருக்கலாம் என்றுதான் நினைப்பேன்.

முதலாம் நம்பர் பஸ்ஸிட கடைசிக் ஹோல்ற்றுக்குப் பக்கத்துக் களஞ்சிய அறையின் கீழ்த்தளத்தில் ஒரு பிள்ளையார் கோயிலிருக்கின்றது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூசை நடக்கும். போயிருக்கிறீங்களா. நான் தவறாமல் போனேன். ஏனென்றா அங்கு அரிசிச்சோற்றில் உருளைக்கிழங்கும் பயிற்றங்காய்க் கறியும் பருப்பும் குழைத்துச் சாப்பாடு போடுவார்கள். தயிரும் அப்பளமும் உண்டு.

அப்படியொருநாள் தட்டிலிருந்து கவளம் சோற்றை வாயருகில் கொண்டு போனபோது சோற்றையிட்டவர் சொன்னார். “கஸ்ரப்பட்டு இந்தக் குளிரிலையும்

பனியிலையும் உழைத்த காசையெல்லாம் உங்களை நம்பித்தானே அனுப்பி வைத்தோம். கரியாக்கி விட்டீங்களே”அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு தொண்டைக் குழிக்குள் எனக்குஎப்படிச் சோறு இறங்கும். அதன்பிறகு நான் கோயிலுக்குப் போறதில்லை. அண்ணன், யாருக்காக நாங்கள் துப்பாக்கிகளைத் தூக்கினோம்? கடைசியில் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மட்டும்தானா..?”

காக்கா அமைதியாகி நகத்தைக் கடிக்கத்தொடங்கினான். ரொக்கெற் தன்னுடைய கால்களைத் தூக்கி மடித்து சோபாவில் குந்தினான். சாதாரணமாக கால்களை விரித்து நீண்டநேரம் அவனால் உட்காரமுடிவதில்லை. அவனைச் சிறைப்பிடித்த மூன்றாவது மாதம் ஒரு விசாரணையில் உடலைச் சுழற்றிச் சுவரோடு வீசியதால் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

“இயக்கம் இருந்திருந்தால் நாடு கிடைத்திருக்குமா என்பதை சரியாச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் அனாதைகள் ஆயிருக்க மாட்டோம்.” காக்கா அழத்தொடங்கினான். “ச்சீ, என்ன இது சின்னபிள்ளைமாதிரி அழுகின்றேன் ” என்று பிறகு அவனே சொன்னான். அழுகையை அடக்க சொண்டுகளைக் கடித்தபடி கண்களை மூடியிருந்தான். “ஒவ்வொருநாளும் விடியும்போதும் பழகிச்சிரித்த யாரோ ஒருவனது நினைவு நாளாகத் தொடங்குகிறது. பகல் அவமானங்களோடு போகிறது. இரவு அழுகையோடு முடிகிறது. பயிற்சி பயிற்சியென்று உடம்புக்கு மட்டும் வைராக்கியம் தந்துவிட்டு மனதை அப்பிடியே பஞ்சுபோல விட்டுவிட்டார்கள் ” அவனால் ஒருபோதும் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக்குமுறி அழுதான். ரொக்கெற் காத்திருந்தான்.

“நாங்கள் எங்கட வாழ்க்கை முழுவதும் சாவைத்தாண்டித்தான் வந்திருக்கிறம். உண்மையில் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்ந்தேயிருக்கிறம். யோசித்துப் பார்த்தால் நாங்கள் மட்டுமில்லை. எல்லோரும் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். சாவு தன்பாட்டில் நடக்கட்டும். அப்படித்தான் முந்தியும் நடந்தது என்று நினைச்சுக்கொள்ளுங்க. கனக்க யோசிக்க வேண்டாம்” என்றான் ரொக்கெற். பின்னர் பேச்சை மாற்றும்பொருட்டு “இப்ப எங்கையிருக்கிறீங்கள்”என்று கேட்டான்.

“நிறையத் தூரத்தில் மலையில் ஒரு வீடு. மூன்று பேர் தங்கியிருக்கிறோம். தொலைவுக் கிராமமென்பதால் ஒருமணிநேரத்திற்கொரு பஸ்தான் போகும். இரவில் ஒன்பது மணிக்குப் பிறகு பஸ் இல்லை. வேலைமுடிந்து நடந்துதான் போவேன். குளிர்காலங்களில் பயங்கரம். இன்னமும் விசா கிடைக்கவில்லை . அதற்கொரு வழிபிறந்தால் நல்லதொரு வேலையும் வேலைக்குப் பக்கத்தில் வீடும் எடுக்கலாம்.”

“எல்லாம் சரியாகிவிடும்.”

“ஆயுதப்போராளிகளுக்கு விசா அனுமதி கொடுக்கமாட்டார்களாம் என்று அன்றைக்கு சலூனில் பேசிக்கொண்டார்கள்.”

“அதொன்றுமில்லை. நான் இங்கேதானே இருக்கின்றேன்.”

“நீங்கள் பதினொரு வருஷம் சிறையில் இருந்தீர்கள். செஞ்சிலுவைச் சங்கம் தானே உங்களை அனுப்பி வைச்சது. அதனால் அவர்களின் தலையீடு இருந்திருக்கும். எங்களுக்கு அப்பிடியில்லைத்தானே. உங்களுக்கு இளங்கீரனைத் தெரியுமா. அவர் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவுக்காரர். அவர் ஆயுதத்தோடு பயிற்சி செய்யும் காட்சி முன்னர் பி.பி.சியில் ஒளிபரப்பானதாம். அதனாலேயே அவருக்கும் இன்னமும் விசா கொடுக்கவில்லை. அவர் அன்றைக்கு கடைக்கு வந்திருந்தார். மட்டக்களப்பிலேயே இன்னமும் இருக்கின்ற மனைவியையும் மகளையும் எங்காவது ஆபிரிக்க நாடொன்றுக்காவது அவசரமாக எடுக்கவேண்டுமென்றார்.”

ரொக்கெற் “சாப்பிட லாமா”என்றான். குசினிக்குச் சென்று பீங்கான் கோப்பையில் சோறிட்டுக் கறிகளை மேலே ஊற்றிக் கொண்டுவந்தான். ஒரு முட்டை அவித்திருக்கலாம் அல்லது மீனைப்பொரித்திருக்கலாம் என்று அப்பொழுதுதான் தோன்றியது.

காக்கா தொடைகளின் மேலே கோப்பையை வைத்து மெதுவாக விரல்களால் அளைந்தான்.

“வெட்கப்படாமல் சாப்பிடுங்க.”

முதற்கவளத்தை வாயிலிட்ட காக்கா தொடர்ந்து பேசலானான்.

“பதிவு செய்யாமல்தான் தமிழ்க்கடையில் வேலை செய்கிறேன். கள்ள வேலை. இன்னமும் இரண்டுபேர் வேலை செய்கிறோம். அவர்களிடமும் விசா இல்லை. விடிய ஒன்பது மணிக்குத் தொடங்கும் வேலை, கடையை மூடிக் கழுவித்துடைத்து முடிவதற்கு இரவு எட்டுமணியாகும். பரவாயில்லை. நேரக்கணக்குப் பார்த்தா இயக்கத்தில் வேலை செய்தோம். ஆனால் எங்கட பொறுப்பாளர்கள் எப்போதாவதுதானே திட்டியிருக்கிறார்கள். இங்கே முதலாளி எப்பவும் திட்டுகிறார். எல்லோருக்கும் இறைச்சியை விற்றனுப்பு, மீனை விற்றனுப்பு என்றால் என்ன செய்யிறது. ஒருநாள், ஒரு ஐயரம்மாவிடம், நிறைய நாளுக்குப் பிறகு முரல் வந்திருக்கின்றது. சொதி வைத்துக் கொடுத்தால் கணவர் சமைத்த கையிற்கு மோதிரம் போடுவார் என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். ஐயரம்மா சன்னதமாடிவிட்டா. அவவின் முகத்தைப் பார்த்தால் உனக்கு ஐயராட்கள் என்று தெரியவில்லையா என்று முதலாளி என்னைத் திட்டித் தீர்த்தார். உண்மையில் அப்படித் தெரியுமா அண்ணன்”என்று நிறுத்தினான். ரொக்கெற் சிரித்தான்.

“கால்வாசி சம்பளம்தான் கிடைக்கிறது. பதியாமல் வைத்திருப்பது முதலாளிக்கும் ரிஸ்க் என்பதனால் அந்தச் சம்பளமாம். ஆனால் அவருக்கு விசா இல்லாத ஆட்கள்தான் வேண்டியிருக்கிறது. எனக்கென்ன கவலையென்றால் விசா இல்லையென்பதற்காக எனது உழைப்பின் பெறுமதி மற்றாட்களை விடவும் காற்தூசியாகிவிட்டது என்பதுதான். விசா கிடைத்தால் முதல்வேலையாக ஒரு வெள்ளைக்காரனிடம் வேலைக்குச் சேர வேண்டும்.”

“முதலாளிகளில் தமிழென்ன, வெள்ளையென்ன.. எல்லோரும் ஒரேமாதிரித்தான். என்னை மட்டும் சும்மாவா விடுகிறான் வெள்ளைக்காரன். பிழிந்தெடுக்கின்றான். அதிலும் இரண்டு வேலை. இரண்டு முதலாளி. பின்னச் சொல்லவா வேணும்.”

“வெள்ளைக்காரன் நல்ல சம்பளம், பென்சன், இன்சுரென்ஸ் எல்லாம் தருவானே.”

“அவர்களுக்கு சிஸ்ரமாகச் சுரண்டுவது எப்படி என்று நல்லாத் தெரியும். தமிழனுக்கு அந்தப் பக்குவம் இல்லை. வேலைக்காரனைச் சாதி குறைந்தவன் என்று பார்க்கிற மனதுதானே தமிழனுடையது.”

காக்கா சற்று நேரம் அமைதியாயிருந்தான். பிறகு “இன்றைக்குப் பென்சன், இன்சுரென்ஸ் என்றெல்லாம் யோசிக்கின்றேன். இயக்கத்தில் இருந்தபோது பிற்காலத்தில் என்ன செய்யிறதென்ற நினைப்பே இருந்ததில்லை. ஒரு நம்பிக்கை இருந்தது. செத்துவிடுவோம் அல்லது அண்ணை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை.”

காக்கா பின்னேரம்தான் புறப்பட்டுப் போனான். பிறகு நீண்டநாட்களாக அவனைக் காணவில்லை. ரொக்கெற்றும் கடைப்பக்கம் போகவில்லை. கோடைகாலத்தில் ஒருநாள் அவனைக் கண்டபோது அவன் அந்தரமாயும் பதற்றமாயும் இருந்ததாக ரொக்கெற் உணர்ந்தான்.

குளக்கரையின் நடைபாதை வாங்கில் காக்கா அமர்ந்திருந்தான். கையில் கால்ஸ்பெர்க் பியர் போத்தலொன்றை வைத்திருந்தான். கண்கள் ஒருவகை மிதப்பில் நிலையற்று அலைந்தன. ரொக்கெற்றைக் கண்டதும் போத்தலைப் பின்னால் ஒளிக்க முயற்சித்துப் பிறகு கைவிட்டான்.

“இந்தக்கருமம் சரியான கய்ச்சல் அண்ணன் ”குழந்தையொன்றின் வார்த்தைகளாக அவையிருந்தன. ரொக்கெற் அவனது தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டு நின்றான். “தஞ்சக் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று கடிதம் வந்திருக்கிறது அண்ணன். எனக்குப் பயமாக இருக்கிறது.” குரல் உடைந்திருப்பதாகப்பட்டது.

ரொக்கெற்றிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “எல்லாருக்கும் இங்கைஅப்படித்தான். முதல்ல சறுக்கும். நம்பிக்கையோடு இருங்கள். தெரிந்த லோயர் இருக்கிறார். அப்பீல் செய்யலாம். மனதை உற்சாகமாக வைத்திருக்க வேணும்.” காக்காவைப் பற்றிய ஓர் எச்சரிக்கையுணர்வு அவனில் தொற்றியிருந்தது.

“புத்தகங்கள் படிப்பீரா, இங்கையிருக்கிற லைபரெறியில் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன.”

காக்கா அமைதியாக இருந்தான். மெதுவாக “விடுதலைப்புலிகள் பேப்பர் மட்டும் முன்னர் படிப்பேன்.” என்று சொன்னான்.

இரண்டாவது வேலைக்கு நேர மாகிக்கொண்டிருந்தது. காக்காவை விட்டுப்போகத் தயக்கமாயிருந்தது. காக்கா அவனின் முன்னாலேயே ஒரு மிடறு பியர் குடித்தான்.

“செத்துப் போகலாம் போல இருக்கிறது.” என்றவன் “சாவது என்றால் எப்பிடி.. கடிப்பதற்குக் குப்பியா இருக்கின்றது..” என்று சிரித்தான்.

உதடுகள்தான் சிரித்தன. மனதின் அலைச்சலை ரொக்கெற் முழுமையாக உணர்ந்திருந்தான். அவன் சிறையிருந்த நாட்கள் நினைவில் மிதந்துகொண்டு வந்தன. சாவு பெரும் விடுதலை எனத் தோன்றிய நாட்கள் அவை. உடலின் உச்சபட்ச வலியைத் தாங்கும் எல்லையைச் சித்திரவதைகள் கிழித்துத் தாண்டும் ஒவ்வொரு கணத்திலும், சாவு தன்னை விடுவிக்கப்போகிறது என்று அவனது மனது கொந்தளிப்பை அடக்கித் தெளிந்த நீரைப் போல ஆகியிருக்கிறது. மூச்சுக்கள் சீராகியிருக்கின்றன. வாயில் இலேசாகப் புன்னகையும் கசியும். ஆனால் ஒவ்வொருமுறையும் சாவு அவனை ஏமாற்றியது.

“உங்களுக்குப் பாலனைத் தெரியுமா” திடீரென்று காக்கா கேட்டான்.

“அவன் அம்பாறைப் பெடியன். இப்ப ஆள் இல்லை. மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குப் போன ஒரு கடற்பயணத்தில் அவனும் போனான். இரவுப்பயணம். திருகோணமலைக் கடலில் நேவி மறித்து அடிக்கத் தொடங்கியதில் படகு சிதைந்துபோனது. பாலனைத்தவிர ஒருவரும் மிஞ்சவில்லை. அவன் நீந்தினான். ஓயாமல் நீந்தினான். அதிகாலை வெளிச்சம் பரவமுதலே கரையைத் தொட்டவன் அப்படியே மயங்கிப்போனான். கண்விழித்தபோது ராணுவம் கைது செய்திருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் குப்பி இல்லை. இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்கிவிடும். பாலன் ஒரு கரும்புலி. விசாரணையின் கொடுமை தாங்கமுடியாமல் எதையாவது சொல்லிவிடுவேன் என்று அவன் அஞ்சத்தொடங்கினான்.

அப்பொழுதுதான் பாலன் அதைச் செய்தான். அவன் நாக்கை வெளியில தள்ளி பல்லால் கடித்தபடி தாடையை நிலத்தில் ஓங்கி அடித்தான். நாக்குத் துண்டாயிற்று. ஆமி அவனைத் தூக்கிச்சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. எப்படியும் தன்னிடமிருந்து இரகசியங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று பாலன் நம்பினான். அவன் இன்னுமொன்றையும் செய்தான். ஆஸ்பத்திரியில் அவனை வளர்த்தியிருந்த கட்டிலின் தலைமாட்டின் இரும்புக் கம்பியில் தலையை மோதி உடைக்கத்தொடங்கினான். ஆறாவது தடவை மோதிய கணத்தில் அவனது கண்கள் மேலே செருகி மண்டை ஓடு சிதைந்து செத்துப்போனான்.”

ரொக்கெற் பெருமூச்சொன்னை விடுவித்தான். இப்படிப்பலதும் நடந்தாயிற்று.

“நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் சாகவேணுமென்று முடிவுசெய்தால் குப்பிதான் அவசியமென்றில்லை.”

0 0 0

02.12.2012 பனி உருகிய காலை

காக்காவின் அறை வாசலை மஞ்சள் நிறத்தாலான பிளாஸ்ரிக் வரியல்களால் மூடியிருந்தார்கள். மூன்று பொலிஸ்காரர்கள் மிகச் சாதாரணமாக நடமாடினார்கள். அருணின் முகம் இன்னமும் திகைப்பிலிருந்தது. காக்காவின் உடலை சற்றுமுன்னரே அம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதாக அவன் சொன்னான். ரொக்கெற் அறைவாயிலில் நின்று பார்த்தான்.

பெரிதாகப் பொருட்கள் இல்லை . மூலையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. ஒருவர் மட்டுமே படுக்க முடிகிற மெத்தையொன்று சுவரோரமாகத் தரையில் கிடந்தது. நீலநிறப் போர்வை கால்மாட்டில் குமைந்திருந்தது. மெத்தையின் அருகே தரையில் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் தெரிந்தது.

மொழிபெயர்ப்பாளர் வந்திருந்தார். பொலிஸ் அருணிடம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தார்கள்.

“அகதி முகாமிலிருந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு இந்த வீட்டிற்கு வந்தோம். எனக்கும் தீபனுக்கும் காக்காவிற்கும், இல்லை அது அவரது பட்டப்பெயர். உதயகுமாருக்கும் இந்த வீட்டை நகரசபை ஒதுக்கியிருந்தது. நானும் தீபனும் ஒரு அறையில் தங்கினோம். அவர் எங்களோடு பெரிய நெருக்கமில்லைதான் ஆனால் பிரச்சனையொன்றுமில்லை. நாங்கள் கொஞ்சம் ஜொலிப் பேர்வழிகள். அவர்அப்படியல்ல. யாராவது அவரது மனம் நோகும்படி கதைத்தால் அன்றைக்கு முழுவதும் எதையாவது யோசித்துக் கொண்டிருப்பார். பழசெல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்று நான்கூட ஒன்றிரண்டு முறை சொல்லியிருக்கிறேன். அதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு தோழனின் நினைவுநாளாகவே விடிகிறது. பழையதை எப்படி மறக்க என்று கேட்டார். நேற்று இரவு நானும் தீபனும் படம் பார்த்துவிட்டுத் திரும்பியபோது இரவு ஒரு மணியாகவிட்டது. கொஞ்சம் குடித்திருந்தோம். விடிய பாத்ரூமுக்கு எழும்பிப் போனபோதுதான் லைற் போட்டேன். உதயகுமார் மெத்தைக்கு வெளியே கையை நீட்டியபடி படுத்திருந்தார். கீழே ரத்தமாயிருந்தது. கையிலிருந்து ரத்தம் வடிவது நின்றிருந்தது. அவர் அப்பவே செத்துப்போயிருந்தார். எனக்கு என்ன செய்யிறதென்று தெரியவில்லை. பயந்தும்போனேன். தீபன்தான் வெளியே ஓடிப்போய் இரண்டு சுவிஸ்காரர்களைக் கூட்டிவந்தான். நான் ரொக்கெற் அண்ணைக்கு சொன்னேன்.”

ரொக்கெற் நேரத்தைப் பார்த்தான். ஐந்து நிமிடத்தில் பஸ் எடுத்தால்தான் மட்டுமட்டான நேரத்திற்கேனும் வேலைக்குச் செல்லமுடியும். அவன் சோர்ந்துபோயிருந்தான். உடலுக்கு முடியவில்லை. இன்று வரமுடியாதென்று சொல்லலாமா என யோசித்தான். செப் நூறு கேள்விகள் கேட்பான். பிறகு சுடுதண்ணியை மூஞ்சையில் கொட்டியவன் போல நாளைக்குக் கடுகடுப்பான்.

ரொக்கெற் பஸ்ஸில் ஏறிஉட்கார்ந்தான். வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கண்களை மூடியபோது கைகளை மெத்தையின் வெளியே நீட்டியபடி காக்கா நிமிர்ந்துகிடந்தான். கைகளிலிருந்து இரத்தம் ஒவ்வொரு துளியாக தரையில்சொட்டியது. காக்காவின் திறந்து கிடந்த உறைந்த கண்களின் பார்வைக் கோணத்தில் சுவரில் எம் 16 ரகத் துப்பாக்கியோடு சீருடையில் பிரபாகரனின் சிறிய படமொன்று கொழுவியிருந்தது.

ரொக்கெற் படரும் எண்ணங்களை அழிக்க முயற்சித்தான்.

பஸ் அவனது வீட்டைக் கடந்தபோது தன்னிச்சையாக மணியை அழுத்தி அடுத்த இறக்கத்தில் இறங்கினான். கால்கள் தம்பாட்டுக்கு நடந்து வீட்டுக்கு ஏறின. கதவைத்திறந்து நுழைந்து சோபாவில் விழுந்தான். கண்களில் உடைத்துக்கொண்டு நீர் பொங்கத் தொடங்கியது.

கைகளை நெஞ்சிலடித்து மெல்லிய தீனக்குரலில் அழுகை வெடிப்புற்றது. கேவிக்கேவி அவன் ஒப்பாரி வைக்கலானான்.

“பாடையில நாயகமா நீ படுத்தால் இந்த நாடே கதறியளும் என் ராசா, ஆருமில்லாப் பிணமா நீ போய்ச் சேர்ந்தாய், இங்கை அழுது துயர் கரைக்க ஒரு ஆளில்லையே.... ”

http://www.kalachuvadu.com/issue-170/page64.asp

இந்தக் கதையினை அறிவுத்தளத்திற்குள் கொண்டு செல்லின், ராக்கற்றும் காக்காவும் ஒரே மனிதரின் இரு வெளிப்பாடுகள் தாம். அதாவது ராக்கெற்றின் 'Alter ego'  தான் காக்கா. உணர்வுத் தளத்தில்--தந்தையின் சாவிற்கு அழாத ஐந்து வயதுச் சிறுவன் சார்ந்து அன்னை எழுப்பும் ஒப்பாரியும் இறுதியில் ராக்கற் எழுப்பும் ஒப்பாரியும் இத்தகைய ஒரு நிலையிற்கு இட்டுச் செல்லும்--ராக்கற்றும் காக்காவும் பல பத்தாயிரம் முகங்களுள் இரு சாட்சியங்கள். 
 
அறிவுத்தளமாயினும், உணர்வுத் தளமாயினும் கதை கனதியாக அருமையாக இருக்கிறது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்
நல்லதொரு எழுத்தமைப்பு.சயந்தனின் எழுத்தில் முன்னேற்றமும்,ஆளுமையும் தெரிகிறது
 
ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி எழுதின கடைசிப் பந்தி தான் இடிக்குது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரியை வைத்துத்தான் கதையையே எழுத ஆரம்பித்தார் என்று நான் நினைக்கின்றேன். ஆயாச்சியை போன வருடம் போய்ப் பார்த்தவராக்கும். அவவிடம் இருந்து ஒப்பாரி வரிகளை வாங்கியிருக்கலாம்!

http://sayanthan.com/index.php/2013/10/%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தக் கதையினை அறிவுத்தளத்திற்குள் கொண்டு செல்லின், ராக்கற்றும் காக்காவும் ஒரே மனிதரின் இரு வெளிப்பாடுகள் தாம். அதாவது ராக்கெற்றின் 'Alter ego'  தான் காக்கா. உணர்வுத் தளத்தில்--தந்தையின் சாவிற்கு அழாத ஐந்து வயதுச் சிறுவன் சார்ந்து அன்னை எழுப்பும் ஒப்பாரியும் இறுதியில் ராக்கற் எழுப்பும் ஒப்பாரியும் இத்தகைய ஒரு நிலையிற்கு இட்டுச் செல்லும்--ராக்கற்றும் காக்காவும் பல பத்தாயிரம் முகங்களுள் இரு சாட்சியங்கள். 
 
அறிவுத்தளமாயினும், உணர்வுத் தளமாயினும் கதை கனதியாக அருமையாக இருக்கிறது.

 

 

இன்னுமொருவன், நீங்கள் உங்கள் ஆரம்ப கருத்தை என்ன காரணத்துக்காக மாற்றினீர்கலொ தெரியாது ஆனால் நீங்கள் முதல் குறிப்பிட்ட மழை பற்றிய விபரிப்பும் சயந்தனின் வரிகளை வாசித்த போது  எனது மன நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. சில வேளைகளில் அமைதியாக எதையாவது வாசிக்கும் போது Tropical Rain என்று youtube இல் தேடி கேட்பதுவும் இதே மன நிலையைக் கொடுத்திருக்கிறது.

சயந்தனின் எழுத்துக்கள் வழமை போல அருமை. இணைப்புக்கு நன்றி கிருபன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

"அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது அண்ணன்.

முன்னாள் போராளி என்பதை அறிகிற ஒருவரின் முதற்கேள்வி எதுவென்று உங்களுக்குத் தெரியுமா. நீர் ஏன் சயனைட் சாப்பிடவில்லை என்ற அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும். சயனைட்டைக் கடித்திருக்கலாம் என்றுதான் நினைப்பேன்.

தோல்வி ஒரு பெரிய கொடுமை அண்ணன்."



மேற்கண்ட வரிகளை வாசிக்கும்போது சனங்களின்மேல் ஆவேசமான கோபம் வருகிறது. திரும்பிப் பார்க்கிறேன்..... நான் சமீபத்தில் சென்றுவந்த பிறந்தநாள், பூப்புனித நீராட்டுவிழா, திருமண அழைப்பிதழ்கள் சுவரில் அழகாகத் தொங்குகின்றன.

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது அண்ணன். அவர்கள் எங்களை அம்மணமான ஒருவனைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளை நாங்கள் அனுபவித்ததே இல்லையே. உங்களுக்குத் தெரியாமலா. நாங்கள் பனிஷ்ட்மென்டைக்கூட விளையாட்டாகத்தானே செய்தோம். நண்பனின் வீரச்சாவுச் செய்தியைச் சொல்லப்போனபோது சனங்கள் எங்களை அடித்துத் திரத்தியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அநாதையாக உணர்ந்ததில்லையே. தோல்வி ஒரு பெரிய கொடுமை அண்ணன்..
 
முன்னாள் போராளி என்பதை அறிகிற ஒருவரின் முதற்கேள்வி எதுவென்று உங்களுக்குத் தெரியுமா. நீர் ஏன் சயனைட் சாப்பிடவில்லை என்ற அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும். சயனைட்டைக் கடித்திருக்கலாம் என்றுதான் நினைப்பேன்.
 
முதலாம் நம்பர் பஸ்ஸிட கடைசிக் ஹோல்ற்றுக்குப் பக்கத்துக் களஞ்சிய அறையின் கீழ்த்தளத்தில் ஒரு பிள்ளையார் கோயிலிருக்கின்றது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூசை நடக்கும். போயிருக்கிறீங்களா. நான் தவறாமல் போனேன். ஏனென்றா அங்கு அரிசிச்சோற்றில் உருளைக்கிழங்கும் பயிற்றங்காய்க் கறியும் பருப்பும் குழைத்துச் சாப்பாடு போடுவார்கள். தயிரும் அப்பளமும் உண்டு.
 
அப்படியொருநாள் தட்டிலிருந்து கவளம் சோற்றை வாயருகில் கொண்டு போனபோது சோற்றையிட்டவர் சொன்னார். “கஸ்ரப்பட்டு இந்தக் குளிரிலையும்
பனியிலையும் உழைத்த காசையெல்லாம் உங்களை நம்பித்தானே அனுப்பி வைத்தோம். கரியாக்கி விட்டீங்களே”அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு தொண்டைக் குழிக்குள் எனக்குஎப்படிச் சோறு இறங்கும். அதன்பிறகு நான் கோயிலுக்குப் போறதில்லை. அண்ணன், யாருக்காக நாங்கள் துப்பாக்கிகளைத் தூக்கினோம்? கடைசியில் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள மட்டும்தானா..?”
 
“இயக்கம் இருந்திருந்தால் நாடு கிடைத்திருக்குமா என்பதை சரியாச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் அனாதைகள் ஆயிருக்க மாட்டோம்.” அழத்தொடங்கினான்
 
“ஒவ்வொருநாளும் விடியும்போதும் பழகிச்சிரித்த யாரோ ஒருவனது நினைவு நாளாகத் தொடங்குகிறது. பகல் அவமானங்களோடு போகிறது. இரவு அழுகையோடு முடிகிறது. பயிற்சி பயிற்சியென்று உடம்புக்கு மட்டும் வைராக்கியம் தந்துவிட்டு மனதை அப்பிடியே பஞ்சுபோல விட்டுவிட்டார்கள் ” அவனால் ஒருபோதும் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக்குமுறி அழுதான்.
 
“இன்றைக்குப் பென்சன், இன்சுரென்ஸ் என்றெல்லாம் யோசிக்கின்றேன். இயக்கத்தில் இருந்தபோது பிற்காலத்தில் என்ன செய்யிறதென்ற நினைப்பே இருந்ததில்லை. ஒரு நம்பிக்கை இருந்தது. செத்துவிடுவோம் அல்லது அண்ணை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை..
 
 
 
##இந்த இரவு இந்த சிறுகதை படித்து தூக்கம் தொலைத்த இரவாகக் கழிகிறது.. மனதின் மெல்லிய இழைகளில் துயரம் ஒரு நெருப்புத் திரவத்தைப்போல சுடுகிறது..சாம்பலைப்போல சொற்களில் உதிர்கிறது...வெந்து எரிந்து தணிந்து மீண்டும் வெந்து....எங்களுக்காய் எல்லாம் இழந்தமனிதர்களிடம் எதுவுமில்லை..எம் கைகளுக்கிடையில் கனத்துக்கிடக்கிறது அவர் துயர்..மிகப்பெரிய குற்றஉணர்வு..மிகப்பெரிய அவமானம்..மிகப்பெரிய வேதனை...

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.