Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆதங்கம்

- உஷா கனகரட்ணம்

30 மே 2014

சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது.

நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா கண்ணா.. மனதுக்குள் நினைத்தபடி குழந்தையின் கைகளைப் பிடித்துக் கொள்கையில் கண்கள் கலங்கின. அது உடனே அவளை இறுகக் கட்டிப் பிடித்து அவளுக்கு மூச்சு முட்டும் வரை முத்தம் கொடுத்து விட்டுத் தன் எழுத்து வேலையைத் தொடர்ந்தது.

தான் வீட்டை விட்டு எப்படி வெளியேறினோம் என்று அதிசயமாக இருந்தது கயலுக்கு. திருமணமாகும் போதோ, ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நாட்டில் வந்து இறங்கிய போதோ, ரங்கன் எப்படியானவனாக இருந்தாலும் நம்மால் அனுசரித்து வாழ முடியும். அந்தப் பக்குவம் நமக்கு இருக்கிறது இது தான் நிரந்தரம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது, இப்படித் தனித்து வீட்டை விட்டு வெளியேறித் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தரும் அந்த அமைப்பில் வந்து இருக்கக்கூடும் என்று நினைத்தே பார்த்திருக்கவில்லை. அதற்கு அவளது அம்மா ஒரு காரணம். சின்ன வயதிலேயே விதவையாகி இரண்டு பிள்ளைகளையும் தனி ஆளாக வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து விட்டோம். பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியில் அப்பாடா என்று

இருக்கிறாள். தன் கடைசிக் காலத்தை அவள் அதே நிம்மதியுடன் கடக்க வேண்டும். இன்னொரு காரணம் கயலின் வயது. முதிர்கன்னி என்பார்களே, அப்படிப் பக்குவமடைந்து பல வருடங்கள் கழிந்த வயதில் தான் அவளுக்குத் திருமணம் கூடி வந்தது. என்ன இருந்தென்ன. இப்போது வெளியேறி விட்டாளே. “எங்கடை குடும்பத்திலயே இல்லாத பழக்கம் எல்லாம் எப்பிடி உனக்கு வந்தது? ஊர் கண்டதையும் பேசும் கயல்...உன்ர அண்ணியே மரியாதை போட்டுது அது இதுவெண்டு கத்திக் கொண்டிருக்கிறாள். இவ்வளவு காலம் பொறுத்திட்டாய். இனி என்ன..பொம்பிளைப் பிள்ளை வேறை. தனியா வளக்க ஏலுமா? ரங்கன் திருந்துவான். கொஞ்சம் பொறுமையா இரு. வீட்டுக்குப் போ கயல்.” அண்ணாவால் இப்படித் தான் பேச முடியும் என்று தெரிந்திருந்தும் இங்கு வந்த அடுத்த நாளே தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதை ஒரு செய்தியாகச் சொல்ல எண்ணித் தொலைபேசியில் அழைத்த போது அவன் சொன்னது இது தான். அடைக்கலம் தேடித் தன் வீட்டிற்கு வராதவரை தப்பித்தோம் என நினைப்பாள் அண்ணி. கயலுக்கு அண்ணியின் எண்ணம் தவறாகத் தெரியவில்லை.

கைத்தொலைபேசி வெகு நேரமாக அடித்துக் கொண்டிருந்ததில் அவளது சிந்தனைகள் கலைந்தன. நேற்று மாலை அந்த அமைப்பிற்குப் பதட்டமும் அழுகையுமாக வந்து சேர்ந்த ஒரு இளம் பெண். தொலைபேசி அழைப்பை ஏற்கத் தயங்கியிருப்பாளாயிருக்கும். தொடர்ந்து அங்கு தங்கியிருப்பவர்கள் எல்லாம் மாதக்கணக்கில் அங்கே இருந்திருப்பார்கள் போல் இருக்கிறது. அனேகமாக கயலையும் நேற்று வந்த அந்தப் பெண்ணையும் தவிர மற்றைய பெண்கள் எல்லோருமே உற்சாகமாக கலகலப்பாக, உணவு தயாரிப்பதிலோ, ஒருவருக்கொருவர் முடியலங்காரம் செய்து விடுவதிலோ, ஸ்வெட்டர் பின்னுவதிலோ ஈடுபட்டிருந்தனர். அடைக்கலம் தேடி வந்த பெண்களா இவர்கள் என்று அதிசயமாக இருந்தது. எத்தனை சித்திரவதைகள், மிரட்டல்கள், மன உளைச்சலுக்கு உள்ளானவர்களோ.... கடந்த காலத்தை

மறந்து மற்றவர்கள் போலத் தாமும் சந்தோஷமாக வாழத் துடிப்பவர்கள். இங்கு வந்து சில காலமானதுமே விட்டுப் போன நிம்மதி, சுதந்திரம் எல்லாம் திரும்பக் கிடைத்த சந்தோஷத்தில் தமது எதிர்காலத்தைப் பற்றிய பயமெதுவும் இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள்.

தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்ததால், அதை எடுத்த அந்தப் பெண் அழுது அழுது கரகரத்துப் போன குரலில், “ஹலோ..” என்கிறாள். அந்த மூலையில் அவளது கணவனாக இருக்க வேண்டும். வீட்டிற்குத் திரும்பி வந்து விடும்படி கெஞ்சியிருக்க வேண்டும். “நை நை” என்ற பதிலுடன் அந்தப் பெண் தொலைபேசியில் விசும்பிக் கொண்டிருந்தது. இதே போல் ரங்கனும் இவளைத் தொலைபேசியில் அழைத்தால்.....? மனசு ஒரு கணம் ஏங்கியது. அழைத்து நடந்ததெல்லாமே தவறு தான் என்று வருந்தி, அவளைத் திரும்பவும் வீட்டிற்கு வரும்படி அழைத்தால்.....? நினைக்கையில் சுகமாகத் தான் இருந்தது. எத்தனை வேடிக்கையான கற்பனை.... அப்படியெல்லாம் அவளைக் கூப்பிடக் கூடியவனாக அவன் இருந்திருந்தால் இவள் இந்தப் பிஞ்சுக் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இருந்திருக்காதே.

ரங்கனுக்கு அவளைப் பிடிக்காமல் போனதற்குக் காரணம் இன்னது தான் என்று அத்தனை சுலபமாகக் கூறிவிட முடியாது. கயல் பார்ப்பதற்கு சுமாராகத் தான் இருப்பாள். பெற்றோரால் முடிவு செய்யப்படும் அனேகமான திருமணங்கள் போல அவளின் திருமணமும் புகைப்படப் பரிமாற்றத்தின் மூலம் முடிவானது தான். சீதன விவகாரத்தில் ஏதோ குறை என்று ஆரம்பித்தது தான். அதன் பிறகு புகைப்படத்தில் பார்த்த அளவுக்கு நேரில் பொம்பிளை அவ்வளவாக அழகாக இல்லையாம் என்றார்கள். இது எல்லாம் சகஜம் என்று யாரோ அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். ரங்கன் வந்து திருமணத்தை முடித்துக் கொண்டு சென்ற பின்னர் அவளை நோர்வேக்கு

கூப்பிட்டுக் கொள்ளவே இரண்டு வருடங்களானது. அந்த இரண்டு வருடங்களில் நான்கோ ஐந்து தடவைகள் தான் ரங்கன் அவளுடன் தொலைபேசியில் பேசியிருப்பான். அதுகூட அவசியத்தின் நிமித்தம் தான். திருமணம் என்ற பேச்சு ஆரம்பமான பொழுதே கண்ணுக்குத் தெரியாத ஒரு கற்பனை மனிதனைக் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ரங்கனை அவளுக்குப் பிடித்ததா இல்லையா என்பது ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இனிமேல் அவனும் அவன் சம்பந்தப்பட்டதும் தான் தனது வாழ்க்கையாக இருக்கப் போகிறது என்று நம்பியவளுக்கு காத்திருந்த அந்த இரண்டு வருடங்களும் ஏமாற்றங்களும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும், நிச்சயமின்மையுமாய் நரகமாகவே கழிந்தது. அவள் நோர்வேக்குச் சென்று விட்டால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் எனவும், ஆண்கள் அப்படிப் பட்டுக் கொள்ளாமல் தான் இருப்பார்கள் எனவும், அவர்களின் அன்பைப் பெறுவது மனைவியின் திறமை எனவும் சொன்னாள் அம்மாவுடன் தினமும் மாலை நேரங்களில் திண்ணையில் உட்கார்ந்து பேச வரும் பக்கத்து வீட்டுக் கிழவி.

நோர்வேக்கு வரும் போது இருந்த படபடப்பெல்லாம் வந்து சில நாட்களில் அடங்கிப் போய் விட்டது. ரங்கன் அதிகம் சிரித்துப் பேச மாட்டேனே தவிர ஆரம்பத்தில் அவளுடைய தேவைகளைக் கவனிக்கவே செய்தான். அவனது உலகம் தனியானது. எதையும் எப்போதும் கயலுடன் வெளிப்படையாகப் பேசியதில்லை. எப்போதுமே ஓரிடத்தில் நிற்காமல் அவன் ஓடித் திரிந்தமையால் கயலுக்கு அது ஆரம்பத்தில் வித்தியாசமாகத் தெரியவில்லை. நிறைய உழைத்தான். அவன் எப்போது வேலைக்குப் போகிறான் வருகிறான் என்ற விபரம் எதுவும் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. கயலுக்கு வீட்டு வேலை, சமையல் என்று உலகம் குறுகிப் போனது. விபரம் தெரியும் வயதில் இருந்து அம்மாவைத் தனியாகவே பார்த்துப் பழகியவளால் திருமண வாழ்க்கை என்றால் இப்படித் தான் போலும் என்று தான் நினைக்க முடிந்தது.

பக்கத்து வீட்டுக் கிழவி சொன்னது போல் தன் அன்பால் அவனது மனம் மாற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஓரிரண்டு மணி நேரமாவது அவன் வீட்டில் தங்க வேண்டாமா... அவளுக்குக் குழந்தை உண்டான பின் ரங்கன் வீட்டிற்கு வருவதை இன்னமும் குறைத்துக் கொண்டான். அதுவும் வெள்ளி சனிக்கிழமைகளில் வீட்டிற்கே வரமாட்டான். அவனுக்கு நண்பர்கள் பலர். நோர்வேஜியப் பெண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்தான்.

அவள் காரணம் கேட்டதற்கு, தனக்குத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் இருக்கவில்லை, அதுவும் தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒருத்தியைக் கட்டிக் கொடுத்துத் தன் வாழ்க்கையைத் தன் பெற்றோர் சீரழித்து விட்டனர். அதற்குள் பிள்ளை குட்டி என்று தன்னைக் கட்டிப் போட்டுவிட எல்லோரும் சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று பொரிந்து தள்ளிவிட்டான். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, அவன் மனதுக்குள் வெகு காலமாகவே புகைந்து கொண்டிருக்கிற வெறுப்பு என்று தெரிந்து கொண்டபின் கயல் துடித்துப் போய் விட்டாள். எத்தனை உறவுகள் இருந்தென்ன.....? கணவனின் அன்பைப் பெற முடியாவிட்டால் அதை விடவும் வேறு என்ன கொடுமை இருக்கப் போகிறது..... பெண்ணுக்குத் திருமணமானாலே அவள் இனித் தனி ஆள் கிடையாது. எல்லாவற்றுக்குமே இப்போது கணவன் என்றொருவன் இருக்கிறான். என்ன மனக்குறை இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான் அல்லது பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போல் யாரும் அவளை நினைத்துப் பார்ப்பது கூட இல்லையே... பிரசவத்தின் போதும், தொடர்ந்து கழிந்த வருடங்களும் ரங்கன் அவள் நெருங்க முடியாத அளவுக்குத் தொலைவாகிப் போனான்.

அப்போது தான் மருத்துவத் தாதியாகப் பணிபுரிந்த மீராவின் சினேகம் அவளுக்குக் கிடைத்தது. மொழி புரியாத காரணத்தினால் மாதாந்த மருத்துவப்

பரிசோதனைகளுக்கு மீராவிடமே கயல் சென்றாள். நோர்வேயில் அத்தனை காலம் வாழ்ந்தும் இந் நாட்டு மொழியினைக் கயல் படிக்க முடியாமல் போனது பற்றிப் பேச ஆரம்பித்து அவர்களது நட்பு வெளியேயும் தொடர்ந்தது. ரங்கனுக்கு மீராவைச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. காரணம் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாததல்ல. மீரா விவாகரத்தானவள். எங்காவது கயல் அவளோடு பேசுவதைக் கண்டால் போதும். அன்று வீட்டிற்கு வந்து அவளை அசிங்க அசிங்கமாகப் பேசத் தொடங்கினான் ரங்கன். அவளுடன் சேர்ந்து வாழப் பிடிக்காவிட்டாலும் எங்கே மீராவுடன் பழகுவதால் அவளைப் போலவே கயலும் விவாகரத்து அது இது என்று போனால் இங்கு வாழும் தமிழர்களிடையே கௌரவமான ஒரு குடும்பஸ்தன் என்ற பெயருடன் தான் வலம் வருவது வெளிச்சமாகி விடுமே என்ற கவலை அவனுக்கு. மீராவுக்கும் அது தெரியும்.

«விவாகரத்தான ஒரு பெண் எண்டதுமே எங்கடை சனம் அவளை ஒரு பிடிவாதக்காரியா, அனுசரித்துப் போகத் தெரியாதவளா, பண்பாடற்றவளா, ஏன்.. எந்த எல்லை வரையும் போகக் கூடியவளாக எல்லாம் யோசிக்கும். இது என் வாழ்க்கை இல்லையா? அதில் எனக்கு இல்லாத அக்கறையா..? நம் அறிவுக்கும் மனசுக்கும் தெரிந்தவரை இந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ள எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்துத் தோற்றுப் போனதால வேறு வழியில்லாமல் கடைசியாத் தான் விவாகரத்து என்ற முடிவை எடுக்கிறோம் என்றெல்லாம் இந்தச் சனம் ஏனோ யோசிப்பதில்லை. எனக்கு இதெல்லாம் பழகி விட்டுது கயல்” என்பாள்.

அவளது குழந்தையும் கயலின் குழந்தையும் அதே மழலைகள் பூங்காவிற்குச் சென்றதால் அவர்களின் நட்புத் தொடர்ந்தது. அவ்வப்போது தமது ஏக்கங்களை, ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ரங்கனது புறக்கணிப்பைத் தாங்க முடியாமல் அவமானத்தில் எங்காவது புறப்பட்டுப் போகப் போகிறேன் என்று கயல் புலம்பும் போதெல்லாம் அவளை நிறுத்தி வைத்தது மீராவின் வார்த்தைகள் தான்.

«நான் பிரிஞ்சு வந்ததை என்ர மனுசன் என்னமோ நான் அவரை அவமானப்படுத்தி விட்டதா நினைக்கிறார். இண்டைக்கு வரையும் எப்ப எப்ப முடியுதோ அப்ப எல்லாம் முடிஞ்சளவுக்கு ஏதாவது இடையூறு செய்தபடி தான் இருக்கிறார். அவரோடு வாழேக்கை கொடுமையா இருந்தது எண்டா, பிரிஞ்சு வாழேக்கை வேறை விதத்தில நிம்மதி இல்லை. இந்த ஜென்மத்தில இந்தக் கோபம் அவருக்குத் தீரப் போறதும் இல்லை. முழுமையா அவரிட்டையிருந்து எனக்கு விடுதலை வேணுமெண்டால் அது சாவு ஒண்டால தான் சாத்தியம். குழந்தைகள் பிறந்த பிறகு கணவன் மனைவிக்குள்ளை ஒத்து வராது என்று ஆகிவிட்டால் உண்மையில இந்த விவாகரத்து எல்லாம் பேச்சுக்குத் தான். மிச்ச வாழ்க்கை முழுக்க குழந்தைக்குத் தகப்பன் எண்ட வகையில அவருடன் தொடர்புகள் இருக்கும். போராட்டம் தான் வாழ்க்கை எண்டு ஆகிவிட்டபிறகு நாங்க கொஞ்சம் சுயநலமாத் தான் யோசிக்க வேண்டியிருக்கு. எப்படிப் பட்டவராக அவர் இருந்தாலும் என் குழந்தைக்காக சும்மா பெயருக்காகவாவது ஒரு கூரைக்குக் கீழ அவரோட வாழ்ந்திருக்கலாமோ என்று இப்ப தான் நினைக்கிறேன் கயல். அவரால எனக்கு இப்ப இருக்கிற இந்த அழுத்தங்களைத் தவிர்த்திருக்கலாம். அவர் இருக்கும் வரை ரெண்டு பேரின் உழைப்பு எண்டதால வசதியான வீடு எடுக்க முடிஞ்சுது. குழந்தைக்குத் தேவையான வசதிகளை நல்ல படியா செய்து கொடுக்க முடிஞ்சுது. சமுதாயத்தில குடும்பம் என்ற அங்கீகாரம் கிடைச்சுது. இப்ப தனித்தனியா ரெண்டு பேரும் வாடகை வீடுகளில இருக்கிறோம். இந்த நாட்டில எதற்குப் போய் நின்றாலும் தனி ஒருவரின் உழைப்பு என்று காரணம் காட்டி நிராகரிச்சிடுவினம். வெளிநாட்டவர்களுக்குத் தான் இதனால பாதிப்பு கூட. பெரியவர்கள் எங்கடை சுயநலத்துக்காக குழந்தைகளை தண்டிக்கிற மாதிரி இருக்கு.. தங்கள் வயதை ஒத்த மற்றப் பிள்ளைகளைப் போல இல்லாமல் எங்கடை பிள்ளைகள் எத்தனையோ

வசதிகளை விட்டுக் குடுத்துத் தான் வளர வேணும். நான் செய்த பிழையை நீயும் செய்திடாத கயல்” மீரா சொல்வதில் கயலுக்கு எப்போதுமே அழிக்க முடியாத நம்பிக்கை இருந்தது. குழந்தைக்கு நான்கு வயதாகும் வரை பொறுமையாகத் தான் இருந்தாள். எப்போதாவது வீட்டிற்கு வரும் அப்பாவிடம் குழந்தையும் ஒட்டவில்லை. இப்போது நிரந்தரமாக அவன் இன்னொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டான் என்று அறிந்ததும் எல்லாம் தன் கை மீறிப் போய் விட்டதை உணர்ந்தாள் கயல். தான் கேள்விப்பட்டதை ரங்கனிடம் கேட்கப் போக, எனக்கு உன்னைத் தேவை இல்லை. «நீ தாராளமாக வெளியே போய் உனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்குத் தடையாகத் நான் இருக்கப் போவதில்லை!” என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டான்.

தான் நிதானமாகப் பதிலளித்தால் உடனே கயல் நியாய அநியாயங்கள் பேசத் தொடங்கி விடுவாளோ என்ற பயத்தில் அவளின் வாயை அடைப்பதற்காக அப்படிப் பேசினானோ என்னவோ. ஆனால் கயலைப் பொறுத்த வரையில் எல்லாமே முடிந்து போய் விட்டது போலத் தான் இருந்தது. சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட வேண்டாத பொருளாய்ப் போனாற்போலச் சிறுத்துப் போனாள். தினசரி பேரூந்தில் கூடப் பயணம் செய்யும் முன் பின் தெரியாத ஒருவரே மனதில் ஆழமாகப் பதிந்து விடுவதுண்டு. இத்தனை வருடங்களாக அவனுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்திருக்கிறாள். ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அப்படியிருந்தும் அவன் மனதில் இதுவரை சின்னதாய் ஒரு பாதிப்பையும் தன்னால் ஏற்படுத்த முடியாமல் போய் விட்டதே என்று நினைக்கையில் தன்னிலேயே வெறுப்பு ஏற்பட்டது கயலுக்கு. தன் வாழ்வில் பல வருடங்கள் அர்த்தமற்றுப் போய் விட்டது புரிந்தது. மனம் விட்டுப் போன

பின் எத்தகைய உறவாக இருந்தாலும் அன்னியமாகத் தானே தெரிகிறது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தில் கூசிப் போனாள். அப்பாவைக் கண்டதும் ஏதோ மிருகத்தைப் பார்த்தது போல ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொள்ளும் குழந்தை மேல் ரங்கனுக்கு எரிச்சல் தான் அதிகமாக இருந்ததே தவிர, தன் மகள் என்ற பாசம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. புறப்பட்டு விட்டாள்.

«கா..யல்..” திடீரெனப் புன்னகையுடன் முன் வந்து நின்ற பெண்ணைக் கண்டு சுய நினைவுக்கு வந்தவளுக்கு அந்தப் பெண்ணை அடையாளம் தெரிய சில விநாடிகளானது. அங்கு இரவு நேர வேலை செய்யும் பெண்களில் ஒருத்தி. மிகவும் பழக்கமானவள் போலத் தன் பெயரை நினைவு வைத்துக் கொண்டு தன்னை அவள் அழைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது கயலுக்கு. அவளது பெயர் போட்ட தபால் உறை ஒன்றை கயலின் முகத்திற்கு நேரே உற்சாகமாக அந்தப் பெண் ஆட்டிக் காட்டினாள். நோர்வேஜிய மொழியைக் கற்பதற்குப் பாடசாலையில் இருந்து வந்த அனுமதிக் கடிதம் அது. அப்பாடா ஒருபடியாக இந்த மொழிப் பிரச்சனை தீர வழி கிடைத்து விட்டது. மிக்க நன்றி எனக் கூறிக் கடிதத்தை வாங்கிக் கொண்டாள். எழுதிக் கிறுக்கிக் களைத்துப் போன சின்னது அவளின் கைகளைப் பிடித்து இழுத்தது.

அங்கு தங்கிய பத்து நாட்களுக்கும் சேர்த்துக் கயல் ஏற்கனவே கட்டிய பணத்தின் ரசீதை அவளிடம் நீட்டிய அந்தப் பெண், «நீ உன் கணவனை விட்டுப் பிரிந்திருக்கும் ஒரு வருஷமும் நீ இங்கேயே இருப்பது சாத்தியப்படாது. உனக்குக் கட்டுப்படியும் ஆகாது. வாடகைவீடு பார்ப்பதற்கு உதவி தேவையென்றால் காலையில் அலுவலகத்திற்கு வா» என்றாள் கனிவாக. பதில் சொல்ல அவள் தயங்கி நிற்பதைப் பார்த்து, “ உன் கணவன் மனம் மாறி உன்னை அழைத்துப் போக வருவான் என்று நினைத்துக்

கொண்டிருக்கிறாயா? அன்பும் விசுவாசமும் அவரவர் நினைத்து வர வேண்டும் கா..யல். இத்தனை காலத்தையும் வீணாக்கி விட்டாய். இனியாவது நீ உனக்காக, உன் குழந்தைக்காக வாழ வேண்டும். ஒன்றும் அவசரமில்லை. ஆறுதலாக யோசி.” என்று ஆதரவாகத் தட்டிக் கொடுத்து விட்டுப் போனாள்.

குழந்தையைச் சமையலறைக்கு அழைத்துச் சென்று இரவு உணவைத் தயாரித்துக் கொடுத்தாள் கயல். வேலை ஒன்றுக்குப் போவதானால் முதலில் மொழி தெரிந்திருக்க வேண்டும். அதைப் படிக்கும் வரை சமூகநல உதவிப் பணத்தை நம்பி இருக்க வேண்டும். அது வரை ஊரில் இருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்வேன்? தன்மானம் பாராட்டாமல் ரங்கன் ஏதோ கோபத்தில் கூறியதைப் பெரிது படுத்தாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ? ஊரில் பக்கத்து வீட்டுக் கிழவி சொன்னது போல் அவன் நம்மை நாளடைவில் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதே. மீரா கூட இதைத் தான் சொல்வாள் என்று நினைத்த போது தான் தான் வீட்டை விட்டு வெளியேறிய விஷயத்தை மீராவிடம் இன்னமும் தெரிவிக்காதது நினைவுக்கு வந்தது. நாளைக்கு முதல் வேலையாக அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி விட வேண்டும்.

ஏதேதோ நினைவுகளில் குழம்பியபடி கயல் தூங்கிப் போனாள்.

*************************************************************************************************************************

முடிவு:

காலையில் மீராவுடன் பேசும்போது கயலை அவள் வீட்டிற்குத் திரும்பிப் போகும்படி கூற, அவளுக்கும் அதுவே சரியாகப் பட, குழந்தையுடன் புறப்பட்டுத் திரும்பிப் போய் ரங்கனின் மன மாற்றத்திற்காக அவள் காத்திருக்கலாம்.

அல்லது.....

மொழியைப் படித்தபடியே சமூகநல உதவிப்பணத்தில் வாடகை வீடு ஒன்றை எடுத்துக் கொண்டு, படிப்படியாக.. வேலை செய்யத் தொடங்கித் தனி ஆளாகக் கயல் குழந்தையை நல்லபடியாக வளர்க்கலாம்.

அல்லது.........

மொழி அவசியமற்ற வேலை ஒன்றை எடுத்துக் கொண்டு மீராவுடன் இணைந்து ஒரு வீட்டை வாங்கி ஒருவர் மற்றவருக்குத் துணையாகத் தமது குழந்தைகளைச் சேர்ந்தே வளர்க்கலாம்.

எல்லாமே சாத்தியம். பெண்களால் எதுவும் ஆகாதது என்றில்லை. ஆனால் என் வருத்தம் அதுவல்ல. வெளிநாடுகளில் இருக்கும் ஒரு சில ஆண்கள் ஊருக்குச் சென்று ஏனோ தானோவென்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வருவதும், அதன் பிறகு அந்தப் பெண்ணைத் தன்னுடன் அழைத்துக் கொள்ளாமல் அப்படியே ஊரில் விட்டு விடுவதும்.... அல்லது பெண்ணைப் பிடிக்காததால் திருமணம் செய்து கொண்டு பின்னர் அவளின் வாழ்க்கையை இப்படிக் கேள்விக்குறியாக்குவதும்... ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது ? எத்தனையோ கற்பனைகளுடன் கணவன் (என்ற சொந்தத்தின்) மேல் அத்தனை நம்பிக்கையுடன், ஒரு புதிய நாட்டிற்கு வரும் பெண்ணுக்குக் குறைந்த பட்சம் அந் நாட்டு மொழியை (இலவசமாகவே இருந்தாலும்) படிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுக்காமல் முடக்கி வைத்திருப்பது என்ன நியாயம்? பெண்ணைப் பிடிக்கா விட்டால் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஒரு குழந்தையையும் பெற்ற பின்பு ஏதோ அவளுக்குக் கிடைக்க முடியாத வாழ்க்கையைக் கொடுத்துத் தியாகம் செய்து விட்டது போல், «உன்னைப் பிடிக்காமலே திருமணம் செய்து கொண்டேன்” எனக் மார்தட்டிக் கொள்வது எவ்வளவு அயோக்கியத்தனம்! திருமணம் செய்யும்போது சீதனம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் லட்சக்கணக்கான பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் சில ஜென்மங்கள் விவாகரத்தானால் அதன் பின் பெண்ணைச் சமூகநல உதவிப்பணத்தை நம்பி இருக்க விட்டு விடாமல் நஷ்ட ஈடாக அதைத் திருப்பிக் கொடுத்தால் என்ன?

பெற்றோராக நாம், நம் குழந்தைகள் மனம் ஏங்கிப் போய்விடாதபடி அவர்களுடைய தேவைகளைக் கவனித்து, குருவிக் குஞ்சுகளைப் போல நம் இறக்கைகளுக்குள் கதகதப்பாய், பாதுகாப்பாய்ப் பேணி வளர்த்து அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் அதே பாதுகாப்பை, வாழ் நாள் முழுதும் நீடிக்கும் அன்பான உறவுகளை, திருமணம் அவர்களுக்குத் தொடர்ந்து தரப் போகிறது என்று தானே நம்புகிறோம். ஒரு சிலரின் வக்கிரப்புத்தியை, அயோக்கியத்தனங்களை சகித்துக் கொண்டு வாழ முடியாமல் திருமணமானவர்கள் பிரிந்து செல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அற்பமான, சின்னச் சின்னக் காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து தான் முடிவா? இந்த அவசர உலகில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது தான் இப்படி விவாகரத்துகள் சாதாரணமாகிப் போய் விட்டதற்குக் காரணமா? பெற்றோர், சகோதரர்கள் என்று மற்ற உறவுகளிடையே நமக்கு இருக்கும் சகிப்புத்தன்மை இலகுவில் முறித்துக் கொள்ளக் கூடியதொன்றாக இருப்பதால் தான் திருமண உறவில் இல்லையோ?

ஒரு குழந்தை சந்திக்கும் முதல் உறவு-- தன் தாய் தந்தையின் கணவன் மனைவி உறவு. அதை வைத்தே அது வெளி உலகில் மற்றைய உறவுகளையும் மதிப்பிடுகிறது. அதைக் கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் திருமணபந்தம் மதிக்கப்பட வேண்டும். ஆணோ, பெண்ணோ.. ஒவ்வொருவருள்ளும் அன்புக்கான தேவை ஒன்று இருக்கவே செய்கிறது. வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் எத்தனையோ சவால்களை, பிரச்சனைகளை எதிர்பாராமலே சந்திக்க நேர்கிறது. முடிந்தவரை நம் மனக்கதவுகளைத் திறந்தே வைப்போமே. பிறர் உணர்வை மதித்து, குறை, நிறைகளுடன் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ள முன் வந்தால் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிழல் கிடைப்பதுடன் அனாவசிய விவாகரத்துகள் குறையக் கூடுமே.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107589/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.இணைப்பிற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருடைய ஆதங்கங்களும் வித்தியாசமானவை. அவற்றைப் புரிந்து கொள்ளும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது.
 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.