Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி

Featured Replies

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக பணமும் அமைச்சுப் பதவியுமா..? – இரவி
கட்டுரைகள் | DECEMBER 27, 2014 5:53 AM

sumanthiran-300x210.jpgமைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்

தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது.

பொது எதிரணி தரப்பிலிருந்து ரணில் விக்கிரமசிங்கா, சந்திரிகா பண்டாரநாயகா குமாரணதுங்க, மைத்திரிபால சிறிசேன, மங்கள சமரவீர, ஜெயம்பதி விக்ரமரட்ன முதலானோர் பங்கேற்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தரப்பிலிருந்து தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், ரெலோ கட்சியின் தலைவர் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

மைத்திரிபாலவுக்கு ஆதரவு

மைத்திரிபாலவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக சுமந்திரனால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைத்திரியின் வாக்களிப்பு நிலைய மற்றும் வாக்கு எண்ணும் நிலைய பிரதிநிதிகளாக கூட்டமைப்பு ஆட்களை நிறுத்த வேண்டும் என்ற சுமந்திரனின் விருப்பத்திற்கு அமைய, அவை பற்றிய கூட்டமைப்பின் விருப்பத்தை மைத்திரிபால அணிக்கு தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பை சுமந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

சந்திப்புக்கு போவதற்கு முன்னர் தனது வீட்டிற்கு ஏனைய எல்லோரையும் வரவைத்து சுமந்திரன் இரண்டு மணி நேரம் கதைத்தார். எல்லோருமாகச் சென்று மைத்திரிபால குழுவினருடன் கதைத்து, அவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத் தெரிவிப்போம் என்று சுமந்திரன் கூறினார்.

“அவர்களைச் சந்தித்து, என்னவிதமான உதவிகளை நாம் அவர்களுக்கு வழங்கலாம் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுவோம். அவர்களுக்கான ஆதரவை நாம் பகிரங்கமாக அறிவிப்பதை அவர்கள் விரும்புகின்றார்களா, அல்லது, நாம் நடுநிலை வகிப்பது போல இருந்துகொண்டு மக்களிடம் தங்களது விருப்பப்படி வாக்களிக்கச் சொல்லுவதை அவர்கள் விரும்புகின்றார்களா என்பதை நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுவோம்” என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

அப்போது, “மைத்திரிபால ஏற்கெனவே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விட்டாரே. அதில் தமிழர் பிரச்சினை பற்றி எதுவுமே இல்லையே. இனி அங்கு போய் பேச என்ன இருக்கின்றது?” என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் சுமந்திரனிடம் கேட்டனர். அப்போது, சுமந்திரன் சொன்னார், “மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் குழுவுக்கு நானும்தான் ஆலோசனைகளை வழங்கினேன். இந்தத் தேர்தலில் நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஒர் ஓரத்தில் தூக்கி வைத்து விடுங்கள். முதலில் மைத்திரிபாலவை வெல்ல வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். தேர்தல் முடிந்த பிறகு, புதிய அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன செய்யலாம் என்று பேசிப் பார்ப்போம்;” என்றார்.

சுமந்திரனின் பங்களிப்பு

அப்போது, “மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் குழுவுக்கு ஆலோசகராக ஏற்கனவே சுமந்திரன் செயற்படுவது உங்களுக்குத் தெரியாதா?” என்று மாவையைப் பார்த்து செல்வம் அடைக்கலநாதன் கேட்டார்.

அப்போது, சினமடைந்த மாவை சேனாதிராஜா, “இப்போது இந்த சந்திப்பு வேண்டாம், சம்பந்தன் அண்ணர் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த பின்பு அவருடன் கதைத்து ஒரு முடிவு எடுத்துவிட்டு மைத்திரி ஆட்களைப் போய் சந்திக்கலாம்” என்றார்.

உடனே பதற்றமடைந்த சுமந்திரன், “நான் அவர்கள் எல்லோரையும் ஏற்கனவே அழைத்துவிட்டேன். ரணில், மைத்திரி, சந்திரிகா, மங்கள, பொன்சேகா ஆகியோர் அங்கு வந்து காத்திருப்பார்கள். இந்த சந்திப்புக்கு கட்டாயம் போக வேண்டும். போகாமல் விட்டால் பிரச்சினையாகிவிடும்” என்று வற்புறுத்தினார்.

“மைத்திரிபால குழுவினருடன் ஏற்கெனவே இவ்வளவு கடுமையாக இணைந்து நீங்கள் வேலை செய்கின்றீர்களே, அரசாங்கத் தரப்பினருடன் பேசுவதற்கு முயற்சிகள் ஏதாவது எடுத்தீர்களா?”என்று சுமந்திரனிடம் கேட்டார் சுரேஸ் பிறேமச்சந்திரன். அப்போது, “நாளைக்கு, மகிந்தவே திரும்பவும் வென்று விட்டால், அவருடன் தானே நாம் கதைக்க வேண்டியிருக்கும்? இப்போது நாம் மைத்திரிக்கு வேலை செய்யும் விடயம் அவருக்குத் தெரியவரும் போது, எம்மோடு பேசுவதற்கான கதவை அவர் அடைத்து விடுவாரே!” என்று கேட்டார் சித்தார்த்தன்.

அப்போது பேசிய சுமந்திரன், அரசாங்கத் தரப்பிலிருந்தும் மகிந்தவுக்கு நெருக்கமான முக்கியமான ஆள் ஒருவர் தன்னைச் சந்தித்துப் பேசக் கேட்டதாகவும், ஆனால் எதிர் தரப்புடன் இணைந்து வேலை செய்ய தான் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டிருந்ததால், அரசாங்கத் தரப்பு அழைப்பை தான் உதாசீனப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அப்போது, சினமடைந்த, மாவை உட்பட ஏனையவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பான முடிவுகளைத் தங்களுடனும் கதைத்தே சுமந்திரன் எடுத்திருக்க வேண்டும் என்றும். அவர் தனிப்படச் செயற்பட்டிருக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

“இந்த விடயம் சம்பந்தன் ஐயாவுக்கும் தெரியுமா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

கடைசியில், மைத்திரிபால குழுவின் மனதை முறிக்கக் கூடாது என்பதற்காக அவர்களைச் சந்திக்கச் செல்வது என்றும், ஆனால் முடிவு எதுவும் தெரிவிப்பதில்லை என்றும் தீர்மானித்து எல்லோருமாக மைத்திரி குழுவைச் சந்திக்கச் சென்றனர்.

தேனீர் பரிமாற்றம்

இரு தரப்பு பெருந் தலைவர்களும் சந்தித்துக் கொண்ட இந்த முக்கிய சந்திப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்களுக்கு வெறும் தேனீர் மட்டுமே பரிமாறப்பட்டது. சிற்றுண்டிகளும் கொடுக்கப்படவில்லை. சந்திப்பு பற்றி பின்னர் கருத்து தெரிவித்த வன்னி தேர்தல் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவர், “தமிழ் கூட்டமைப்புக்கு தந்த தேனீருக்கு பால் கூட கலந்து தராதவர்கள், தமிழ் சனத்துக்கு எதைத்தான் செய்யப் போகிறாங்கள்? இந்த அளவுக்குத் தரம் குறைந்து நாம் அவர்களிடம் போயிருக்கக்கூடாது” என்று எரிச்சல்பட்டார்.

இந்தச் சந்திப்பில் வைத்து, “தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் இல்லையே. உங்களுக்கு வாக்களிக்குமாறு எப்படி தமிழ் மக்களை நாம் கேட்க முடியும்?” என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் மைத்திரியிடம் கேட்ட போது, “உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், தமிழர் பிரச்சனை பற்றி விஞ்ஞாபனத்தில் எதுவும் சேர்க்க வேண்டாம். அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அது பற்றி எமக்கு இப்போது அக்கறை இல்லை என்று சுமந்திரன் தானே எங்களுக்குச் சொன்னார்” என்று சுமந்திரனைப் பார்த்தே முகத்தில் அடித்தாற்போல கேட்டார் சட்டத்தரணி ஜெயம்பதி.

சந்திரிகா எதற்கும் பொறுப்பு இல்லை

அப்போது, “இந்த தேர்தல் விஞ்ஞாபன விடயம் தொடர்பாக நீங்கள் ஏதாவது சொல்லுகின்றீர்களா?” என்று சந்திரிகாவைப் பார்த்து சித்தார்த்தன் கேட்ட போது, மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தான் வாசிக்கவேயில்லை என்றும், அதில் என்ன இருக்கின்றது என்று தனக்குத் தெரியாது என்றும் சந்திரிகா சொன்னார். ஜாதிக ஹெல உறுமயவினாலேயே மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் இறுதியாக எழுதப்பட்டதாகவும், அதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சந்திரிகா மேலும் சொன்னார்.

இராணுவத்தினர் பிடித்து வைத்திருக்கும் நிலங்களை விடுவித்தல் மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள்குடியேற்றுதல் பற்றிய விவகாரத்தை பிறேமசந்திரனும் சித்தார்த்தனும் எடுத்த போது –

“நான் அதிகாரத்தில் இருக்கப்போவதில்லை. அதனால், உங்களுக்கு பொய் வாக்குறுதிகள் எதனையும் நான் தர முடியாது. இந்த நில விவகாரம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறிய சந்திரிகா, உடனே திரும்பி மைத்திரிபாலவைப் பார்த்து, “இது பற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்?” என்று கேட்டார். அப்போது சங்கடப்பட்ட மைத்திரி, திரும்பி ரணிலைப் பார்த்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன், “எமக்கு வாக்குறுதிகள் தருவதில் உங்களுக்கு சங்கடங்கள் இருந்தால் எதுவும் சொல்ல வேண்டாம்” என்றார்.

இராணுவத்தினர் பிடித்துள்ள நிலங்கள்

அப்போது பேசிய ரணில், “தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக எடுக்கப்படும் நிலங்கள் திருப்பித் தரப்பட முடியாதவை. அவை தவிர்ந்த ஏனைய காணிகளை நாம் மீளக் கொடுக்கலாம்”என்றார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைவர் பின்னர் கருத்து வெளியிடுகையில், “தேசிய பாதுகாப்புக்கு நிலங்களை எடுத்து வைத்திருக்கின்றோம் என்றும், மிகுதியை விட்டுவிட்டோம் என்றும்தானே கோட்டாயவும் சொல்லுகின்றார். அப்பிடிப் பார்த்தால், இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கொதிப்புடன் வினவினார்.

இராணுவத்தினர் பிடித்துள்ள நிலங்கள் தொடர்பாக மட்டுமே இந்தச் சந்திப்பில் கதைக்கப்பட்டதே அல்லாமல் – காணாமற் போனோர் தொடர்பாகவோ, சிறைகளில் இருப்போர் தொடர்பாகவோ, மீள்குடியேற்றம் தொடர்பாகவோ, அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவோ, வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பாகவோ ஒரு வார்த்தை கூட இந்தச் சந்திப்பின் போது இங்கு பேசப்படவில்லை.

“அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக ஏதும் பேசினீர்களா? தீர்வு தருவது தொடர்பில் அவர்கள் ஏதும் சொன்னார்களா?” என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஒருவரைக் கேட்ட போது, “நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான், என்னையும் பிடிச்சுக்கொண்டு போங்கோ என்று பொலிஸ்காரனிட்ட கெஞ்சுகிற வடிவேலு கொமெடி மாதிரிதான் நாங்க அங்க போய் நின்றம். வெறும் பிளேன் ரீ மட்டும் தந்து எங்களை அனுப்பினவங்கள், அரசியல் தீர்வா எங்களுக்கு தரப் போறாங்கள்? அந்தக் கதையே அங்கு வரவில்லை” என்று சினந்தார்.

கூட்டமைப்பின் ஆதரவு வேண்டாமா என்ற கெஞ்சல்

கடைசியில் – “30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தரப்பில் யாரையும் உரையாற்ற அழைக்கப் போகின்றீர்களா?” என்று மைத்திரிபாலவைப் பார்த்து சந்திரிகா கேட்டார். அப்போது, அதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் மைத்திரிபால நெளிந்த போது, குறுக்கிட்டுப் பேசிய சுமந்திரன், “உங்களுக்கு அது விரும்பமில்லையென்றால், வேண்டாம் விட்டுவிடுவோம்” என்று மிகவும் தயவாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய சுமந்திரன், “உங்களுக்கு ஏதும் வழிகளில் நாம் உதவலாமா? அல்லது நாம் விலகி நிற்பதையே நீங்கள் விரும்புகின்றீர்களா? எங்களது உதவிகள் உங்களுக்குது பிரச்சாரங்களுக்குத் தேவை இல்லையா?” என்று திரும்பத் திரும்ப வினயமாகக் கேட்டார். அதற்கு, ஆளை ஆள் திரும்பி திரும்பி பார்த்த ரணில், மைத்திரி, சந்திரிகா, மங்கள ஆகியோர் எதுவும் சொல்லாமல் மௌனமாய் இருந்தனர்.

ஒட்டு மொத்தத்தில், தாங்கள் ஒரு வேண்டாத விருந்தினர்கள் போலவே அங்கு நடத்தப்பட்டதாவும். கூட்டமைப்பின் ஆதரவு இருந்தாலும் இல்லாதுவிட்டாலும் தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கே கிடைக்கப் போகின்றன என்ற திமிருடனும், அலட்சியப் போக்குடனும் மைத்திரிபால குழுவினர் நடந்துகொண்டதாகவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்புத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அங்கு கருத்துக் கூறிய சுமந்திரன், “எங்களிடம் 480 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்கள் எல்லோருடனும் நான் பேசிவிட்டேன். அவர்களில் ஒரு சிலர் தவிர ஏனைய எல்லோரினது ஆதரவையும் உங்களுக்காக நான் பெற்றுவிட்டேன்” என்று கூறினார்.

இது பற்றி, வடக்கு மாகாண சபையில் பொறுப்பு வகிக்கும் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண முக்கிய பிரமுகர் ஒருவர் பின்னர் கருத்து தெரிவித்த போது, “மைத்திரிக்காக சுமந்திரன் இரகசியமாக வேலை செய்துகொண்டிருந்த விடயமும், மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் குழுவில் சுமந்திரன் பங்கேற்றிருக்கும் விடயமும் மாவை அண்ணருக்கே இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் தெரியும். சுன்னாகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் அவரே இதை வாய்தடுமாறி சொல்லிவிட்டுப் பின்னர் சமாளித்தார். இந்த விடயம் மற்ற கட்சி ஆக்களுக்கு இந்தச் சந்திப்புக்கு போவதற்கு முன்னர்தான் தெரியும். அப்படியிருக்க, சுமந்திரன் எப்போது 480 பேரோடு கதைத்து மைத்திரிக்கு ஆதரவு தேடினார்? ” என்று கேள்வி எழுப்பினார்.

ஊடக சுதந்திரம்?

சந்திப்பு முடிடைந்த பின்னர், கொழும்பு தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை அiழைத்த சுமந்திரன், இந்தச் சந்திப்பு பற்றிய எதுவித செய்திகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவரது வேண்டுதலுக்கு இணங்க தமிழ் பத்திரிகைகளும் இந்த சந்திப்பு பற்றிய செய்திகளையோ கட்டுரைகளையோ பிரசுரிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமது கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதிய சில ஆய்வாளர்களின் கட்டுரைகளைப் பிரசுரிக்க சில பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மிகவும் தயக்கத்துடன் மறுத்தும்விட்டனர்.

சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி!

இதற்கிடையே, மைத்திரிபால தரப்புடன் ஏற்கெனவே தனியான புரிந்துணர்வு ஒன்றுக்கு வந்துள்ள சுமந்திரன், தமிழர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தாக அவருக்குப் பெற்றுத் தருவதாக ரணிலுக்கு வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அந்தப் பொறுப்பு தன்னுடையது என்று உறுதியளித்திருப்பதாகவும் மைத்திரிபால கூட்டணியில் இருக்கும் கொழும்பைத் தளமாகக் கொண்ட முக்கிய தமிழ் அரசியற் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அவ்வாறாக, தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுத்தருவதற்குப் பிரதியீடாக, அமையப் போகின்ற புதிய அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தனக்கு ஒர் அமைச்சர் பதவி வழங்குமாறு சுமந்திரன் கோரியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவருக்குப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சை வழங்குவதற்கு ரணில் இணங்கியிருப்பதாகவும் அந்த கொழும்பு தமிழ் அரசியற் தலைவர் மேலும் தெரிவித்தார். இவற்றுக்கு முன்னோடியாக, ஐந்து கோடி ரூபா பெறுமதியான வீடு ஒன்று மூன்று வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் சுமந்திரனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

மைத்திரிபால குழுவுடன் நடைபெற்ற சந்திப்பு பற்றி கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர், “தான் வாக்குறுதி அளித்தபடி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கொண்டுவந்து சேர்த்து விட்டதாக ரணில், மைத்திரி, சந்திரிகாவுக்குக் காட்டுவதற்காகவே எங்களை எல்லாம் ஏமாற்றி அழைத்துச் சென்று சுமந்திரன் இப்படி ஒரு நாடகத்தை ஆடியிருக்கின்றார். அந்த விடயத்தை கூட அங்கு சென்ற பின்னர்தான் நாம் கண்டறிய முடிந்தது. இந்த விடயங்கள் தொடர்பாக ஒரு அளவுக்கு மேல் எதுவும் தெரியாதவராகவே மாவை அண்ணரும் இருந்தார்” என்று மிகுந்த விசனத்துடன் பொருமினார்.

டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா), சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு அமைச்சுக்கள் வழங்கி அவர்களை அரசாங்கத்துடன் இணைக்கக் கூடாது என்று சுமந்திரன் ஏற்கெனவே மைத்திரிபால தரப்பிடம் கோரியிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குச் சாதகமாக பதில் அளிக்காத மைத்திரிபால தரப்பு, விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் தொடர்பாக யோசிக்கலாம், ஆனால் டக்ளஸ் தேவானந்தா இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக மிக நீண்ட வருடங்களாகப் பாடுபடுகின்ற ஒருவர். அதனால், அவரைப் பற்றிய வாக்குறுதி எதனையும் நாம் உங்களுக்குச் சொல்ல முடியாது என்று சந்திரிகாவும் ரணிலும் சுமந்திரனிடம் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பணப் பகிர்ந்தளிப்பு

இதற்கிடையே, இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சுமந்திரனுக்கும் மாவைக்கும் ஆறு கோடி ரூபா பணம் மைத்திரிபால குழுவால் கடந்த வாரம் கொடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன. இந்தப் பணத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாகாணசபை உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் வேலையை சுமந்திரனும் மாவையும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வவுனியாவிலிருந்து தொடங்கினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதே இன்னமும் தீர்மானிக்கப்படாத நிலையில், அந்த முடிவு என்ன என்பது தமிழ் மக்களுக்கே இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில் சுமந்திரனாலும் மாவையாலும் இவ்வாறு பணம் வாங்கப்பட்டிருப்பது கூட்டமைப்பில் உள்ள இதர கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

“சம்பந்தன் ஐயா இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர், அவருடன் கலந்துரையாடி முடிவெடுத்த பின்னர், அந்த முடிவை மக்களுக்கு முதலில் அறிவிக்க வேண்டும் என்றுதானே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பார்த்தால், வாங்கிய பணத்தை வைத்துத்தான் எமது முடிவு என்ன என்பதே தீர்மானிக்கப்பட்டது போல அல்லவா இருக்கின்றது?” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கோபத்துடன் கருத்து வெளியிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மைத்திரிபால குழுவிடம் கை நீட்டி காசு வாங்கி விட்டால், இனி மகிந்தவிடம் போக முடியாது. மகிந்த வென்றுவிட்டால், அவர் எம்முடன் பேசவும் மாட்டார். மைத்திரிபாலவிடம் போய் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவார். இதே தவறைத் தான் நாம் 2010ஆம் ஆண்டும் செய்தோம். பணத்துக்காகவும் தனிப்பட்ட சிலரது நலன்களிற்காகவும் பொன்சேகாவுக்கு ஆதவரவளித்ததன் விளைவை நன்றாக அனுபவித்துவிட்டோம். அதே தவறையே கூட்டமைப்பு மீண்டும் செய்கின்றது” என்று கூறினார்.

ஏனைய கட்சிகளின் முடிவுகள்

இதற்கிடையே – தற்சமயம் தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியாவில் இருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், தனது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை அழைத்து, சுமந்திரன் கொடுத்த மூன்று இலட்சம் ரூபா பணத்தை உடனடியாக அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுமாறு பணித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாகப் பணத்தைப் பெற வேண்டாம் என்று தனது கட்சியின் ஏனைய தலைவர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில், புளொட் அமைப்பைச் சேர்ந்த பவன், மாவை தனக்கு பணம் கொடுக்க அழைத்த போது, சித்தார்த்தனிடம் அனுமதி பெறாமல் தன்னால் பணத்தை வாங்க முடியாது என மாவையிடம் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் – மாவையிடம் பணத்தைப் பெற்றுவிட்ட செல்வம் அடைக்கலநாதன், அதன் பின்னர் தனது ரெலோ தலைவர்களிடம் கலந்து பேசியதைத் தொடர்ந்து, வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில் – வவுனியாவில் வைத்து, வட மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் ஏனைய தமிழரசுக் கட்சி பிரமுகர்களுக்குப் பணத்தை வழங்கிவிட்டு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருக்கும் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் யாழ. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பணத்தை வழங்கும் பணியை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தபடி உள்ளன.

இது பற்றி கருத்து தெரிவித்த, கொழும்பில் இருக்கும் முன்னணி அரசியல் ஆய்வாளர் ஒருவர், “வாங்கிய ஆறு கோடி ரூபாவில், பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்களுக்கும் மூன்று இலட்சம் படி கொடுத்தாலும், மிகுதி ஐந்தரைக் கோடி யாருக்குப் போனது?!” என்று கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட இன்னொரு முதன்மை ஆய்வாளர் குறிப்பிடும் போது, “இந்த முழு விவகாரமுமே, தமிழ் தேசியக் கூட்டமைப்புச் செய்யும் அரசியற் தற்கொலைதான்”என்று குறிப்பிட்டார்.

இங்கு முக்கிய விடயம் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். பல வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, வடக்கில் பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைப்பது போன்ற சில விடயங்களை மஹிந்த ராஜபக்ஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்திருக்கின்றார். அவரது 10 வருட கால ஆட்சியில் இதனை மேற்கொள்ளாமல் தற்போது உறுதியளித்துள்ளமைக்கு காரணம் கண்டறிவது சிரமமானதல்ல. இன்று பிரிந்து, சரிந்து போயுள்ள தனது நிலையை சற்று சீரமைப்பதானால் தமிழ் மக்களின் வாக்குகள் அவருக்கு இன்றியமையாதது. இதனாலேயே இவ்வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சிலவற்றை அவர் நினைத்தால், தேர்தலுக்கு முன்னரே நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மஹிந்தவிற்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு இப்போதே விடுதலை செய்ய முடியும்.

தமிழ் மக்களின் நலனுக்காக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிரமான பேரம் பேசுதல் ஒன்றை மஹிந்த அரசுடன் இப்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொள்ளலாம். அவரது வாக்குறுதிகள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னதாகவே நிறைவேற்றும் படி அவரிடம் கோரலாம். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென்ற முடிவை தமிழ் மக்களிடமே அவர்கள் விட்டுவிடலாம். இதனைச் செய்யாமல், தனிப்பட்ட நலன்களுக்காக ‘டீல்’ பேசுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமே.

(இக் கட்டுரையிலிருக்கும் சில பல உண்மையான தகவல்கள் வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன்)

http://thesamnet.co.uk/?p=61987

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாகவிருந்தால், சுமந்திரன் தமிழர்களது மலத்தினத் திண்டு வாழ்வதற்க்குச் சமம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்கொழு, செயற்குழு, மத்தியகுழு என்று எதுவும் இல்லாமல் சேர்ந்து முடிவெடுக்கும் கட்சி ஜனநாயகம் இல்லாமல் கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கும்போது இப்படியான அதிகாரத்தைக் கையுக்குள் வைத்திருக்கும் நிழல் டீலிங் செய்யும் சுமந்திரன் போன்றவர்கள் மேலே வருவார்கள். அவர் கூட்டமைப்பின் தலைவர்களையும் தனது பிடிக்குள் கொண்டுவந்து எதேச்சாதிகாரமாகச் செயற்படுவதை நிறுத்தமுடியாத நிலையில் மாவை போன்றவர்கள் உள்ளதையும் பார்த்தால் கூட்டமைப்பு விரைவில் சரணாகதி அரசியல், இணக்க அரசியல்தான் செய்யும் என்று சொல்லலாம்.

இந்த செய்தி நம்பகமாக இல்லை .

 

இந்த செய்தி உண்மையானதாக இல்லாவிட்டாலும் கூட்டமைப்பு தலைவர்களே இவ்வாறான செய்திகள் வருவதற்கு பொறுப்பு. கிருபன் கூறியதுபோல் ஒரு ஜனநாயக கட்சிக்குரிய உட்கட்சி ஜனநாயகம் இல்லாத சர்வாதிகார முடிவுகளை எடுக்கும் கட்சியாகவே தொழிற்பட்டு வருகிறது. கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கை கள்ள மெளனத்தின் மூலம் உதாசீனம் செய்யபட்டது. இன்று கூட அதுபற்றி கூட்டமைப்பு தலைவர்களிடம் இருந்த பொறுப்பான தெளிவான முடிவு எடுக்கபடவில்லை. தமிழரசு கட்சியின் ஆதிக்கத்திலேயே எல்லாம் நடைபெறுகிறது. சரி அதுதான் பரவாயில்லை என்றால் தமிழரசு கட்சிக்குள் ஒரு உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு சில தலைவர்களின் முடிவுகள் கட்சியின் முடிவுகளாக அறிவிக்கபட்டுவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தி நம்பகமானதல்ல எனில் புலம்பெயர்தேசத்துச் சுமந்திரனது அடிப்பொடிகள் சுமந்திரனுடன் தொடர்புகொண்டு பகிரங்க மறுப்பறிக்கை கொடுக்க முயலலாமே. கனடாவில்தான் கூத்தமைப்புக்கு அதரவுத்தளமும் நிதிமூலமும் அதிகமாக இருக்கின்றது. ஆகவே கனடாவின் மாற்ருக்கருத்தாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் அனைவரும் சுமந்திரனிட்டை கேட்டுப்பாருங்கோவன்.

 

அண்ணர் மில்லியன் கணக்கா மகிந்தவிட்ட  வாங்கிப் பிழைவிட்டுட்டார் எனக் கூவுகிறவர்கள் இப்போ சுமந்திரன் வெறுந்தேத்தண்ணியோட தமிழரை வித்ததாக செய்திவருகுது என்ன பம்முகிறியள்.

 

சரி ஒரு கதைக்கு வைப்பம், மகிந்த கோஸ்டிதான் இந்தக்கதையை வேணுமெண்டு வதந்தியாகப் பரப்புகிறது என அப்போ சந்திரிகா மைத்திரிபாலா ரணில் வகையறாக்களுடனான சந்திப்பில் என்ன நடந்தது என்பதற்கான வெள்ளை அறிக்கையை கூத்தமைப்பு வெளியிடுமா.

 

கடந்தகாலங்களில் நடந்த திருகுதாளங்கள் அனைத்துக்குமே கூத்தமைப்பினது பின்பக்கத்துக் கதவுக்காலை உட் புகுந்த சுமந்திரன்தான் காரணம் என்பதை இப்போதாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

......... பயல் சுமந்திரனை எங்காவது கண்டால் ....... தோச்ச ...........பாலதான் அடிப்பேன்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.