Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 22

தூய்மைப்படுத்துவதற்கு ஆயத்தமாகுமுன் 

 

ஒட்டடைக்குச்சியால்

உங்கள் தலையில் படிந்துள்ள

பூச்சிக்கூடுகளைத் துடைத்தெறியுங்கள்

 

துடைப்பத்தால் பெருக்கி

மனசின் குப்பைகளை

வெளியே தள்ளுங்கள்

 

ரத்த வாடை போகும்வரை

கைகளை நன்றாகக்

கழுவிக்கொள்ளுங்கள்

 

ரத்தக்கறை படிந்த ஆடைகளை

சவக்காரத்தில் ஊறவைத்துவிட்டு

ஒருபொழுதாவது அம்மணமாய் நில்லுங்கள்

 

 

(பின்குறிப்பு : இந்தியாவில் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டத்தின் பின்புலத்தில் வாசிக்கவும்)

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 23

விளிம்பின் தாகம்

 

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறையும் வரை

விளிம்பு குடிப்பதற்குள்

பானம் வழிந்துவிடுகிறது.

விளிம்பு

காத்திருக்கிறது

கோப்பை நிறைய

இருக்கும் பானம்

தன்னைக் கடந்து செல்லுகையில்

ருசித்து விட.

விளிம்பைத்

தொடும் கணத்திலேயே

பானம் உறிஞ்சப்பட்டுவிடுகிறது

விளிம்பு

காத்திருக்கிறது

கடைசிச். சொட்டு வரை

கடைசிச் சொட்டையும்

ஒரு நாக்கு

நீண்டு ருசித்துவிடுகிறது

விளிம்பின்றி

எதுவுமில்லாதபோதும்

விளிம்புக்கு எதுவுமில்லை

விளிம்பு நிலை

வாழ்க்கை

ஒவ்வொரு கோப்பைக்குமிருக்கிறது

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 24

அவன்

 

 

அவன் இதயம்

எப்போதும்

முகத்திற்கு

இடம் பெயர்ந்திருக்கும்

நீங்கள் அதை

அறிய முடியாதபடி

தாடி மயிர்

மறைத்திருக்கும்

 

அவன் நெஞ்சிலிருக்கும்

கனல்

சில நேரம்

விரலிடுக்கு வரை

இறங்கி வந்துவிடும்

 

அவனைச் சிலர்

கவிஞன் என்று

அழைப்பதுண்டு

 

உங்களைப் பெரும்பாலும்

தாமதமாகவே

அடையாளம் கண்டுகொள்ளும்

அவன் மேல்

வருத்தப்பட  வேண்டாம்

 

காகிதம் தேடிக்

கிடைப்பதற்குள்

தன்  கவிதைகளையே

மறந்து விடுபவன் அவன்

 

ஏதாவது

பூங்கா  மரத்தடியில்

எழுதிக்கொண்டிருப்பவனைப்

பார்க்க நேர்ந்தால்

சாப்பிட்டாயா

என்று கேட்பது தப்பில்லை

 

நீங்கள் உண்பதைக்

கொஞ்சம்

அவனுக்கும் கொடுத்தால்

தன்மானம் பார்க்காமல்

வாங்கித் தின்றுவிட்டு

இன்னும் கொஞ்சம் -

எழுதுவான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 25

முதலும் கடைசியும்

 

கடைசி ஆசை

என்னவென்று கேட்டனர்

வாழணும் என்றான்.

முதலும் முடிவுமான

ஆசையென்னவோ

அது மட்டும் தானே?

ஒருவன் மட்டுமே

உயிர் பிழைக்க

வாய்ப்பென்றதும்

பல லட்சம் பேரை

முந்திக்கொண்டு

முன் வந்து

அண்டத்துக்குள்

நுழைந்ததும்

அதனால்தானே?

முந்நூறு நாளுக்குப் பக்கம்

மூச்சடக்கி உள்ளிருந்து

பின் உதிரம் சொட்டச் சொட்ட

முட்டி மோதி தலைகுப்புற

மண்ணில் விழுந்ததும்

அதற்குத்தானே?

எதற்கிந்த நிலையில்லா வாழ்வென்ற

தத்துவங்களையெல்லாம்

ஊறுகாயாய்த் தொட்டுக்கொண்டு

வாழ்வை ருசிப்பதும்

அதனால்தானே?

இது என்ன தனிப்பட்ட

இவன் ஒருவனின் ஆசையா என்ன,

இவனுக்குள் இருக்கும்

கோடான கோடி செல்களுக்கும்

இருக்கின்ற ஆசைதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 26

இரவுக்கு நிறம் தரும் இறகு

கூடடைந்த காகங்களின்

கறுப்பினைப்  பெற்றுக்கொண்ட

இரவு

கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின்

வெண்மையைப் பெற்றுக்கொள்ளும்

விடியலில்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 27

மறந்து விடாதே

 

இன்னுமா என்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய்

ஆச்சரியமாய் அவள் கேட்டது

அதிர்ச்சியாக இருந்தது.

மறந்துவிடாதே என்று

நீ தானே சொன்னாய்

விடைபெறும் போது

நூறு முறை என்றேன்.

அப்படியா சொன்னேன் என்று

ஐயத்தோடு கேட்டாள்.

நன்றாக யோசித்துப் பார்த்தேன் –

மறந்து விடாதே என்றுதான் சொன்னாள்.

மறக்க மாட்டேன் என்று சொல்லவேயில்லை.

 

-    சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com

 

  • கருத்துக்கள உறவுகள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்  :rolleyes: 

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது.

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பொழிப்புரை, தெளிவுரை, அகராதியின்றி எந்தப் பாமரனுக்கும் எளிதாக விளங்கிவிடும் கற்பனையற்ற கவிதைகள்தான்! சேயோனின் அசாதாரணக் கவிதைகள்!!. தொடருங்கள்   "  Paanch

 

அன்புத் தோழர்  Paanch- ன்.  உள்ளத்தின் ஆழத்திலிருந்து தோழமையுடன் வந்த இந்த வரிகளை நான் மாலையாகச் சூடிக் கொள்ளவா? மகுடமாகச் சூட்டிக்கொள்ளவா?

தம் கவிதை புத்திசாலிக்குக் கூடப் புரியக்கூடாது என்று நினைக்கின்ற கவிஞர்களுக்கு மத்தியில், நம் கவிதை முட்டாளுக்குக் கூடப் புரியவில்லையெனில் நாம் கவிஞர் இல்லை என்று நினைக்கும் சாதாரணர் நாம்.

 

தொடர்ந்து படியுங்கள். உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேயோனின் அசாதாரணக் கவிதைகளெல்லாம் அற்புதமான வரிகளுக்குள் அர்த்தமுள்ள பொருள் கொண்டு எம்மை அசத்துகின்றன. பாராட்டுக்கள்.  காவல்லூர் கண்மணி அவர்களின் உளமார்ந்த பாராட்டு மொழிகளுக்கு நன்றி.  உங்கள் வரிகள் இன்று இரண்டு கவிதைகளையாவது எழுத என்னைத் தூண்டலாம்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அருமை, புரட்சிகரமான வரிகள் தோழா. கருப்பு என்னும் அடிப்படை (பகுத்தறிவு) வர்ணம் இருந்ததால் தான் நாம் இன்று பெயரிலும், வார்த்தையிலும் வர்ணம் பூசுபவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்க முடிகிறது."

 

-செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

நன்றி. அருமையான  கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

நான்காவது வர்ணம் என்று சொல்லப்படும் சூத்திரர்களைக் குறிக்கவே "நான்காவது வர்ணம் கறுப்பாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தேன்.  இந்த வரிகளுக்கு செந்தமிழன் அன்புச்செல்வன் சொல்லும் பொருள் புதுமையானது மட்டுமல்ல, மிகவும் பொருத்தமானதும் கூட.  நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

 

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

  • கருத்துக்கள உறவுகள்

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

 

சிவப்பு பச்சை நீலம்

அடிப்படை வர்ணங்கள்

மூன்றென்கிறது

அறிவியல்

நான்காவது

கறுப்பாக இருக்கலாம்

 

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

seyon yazhvaendhan, on 18 Feb 2015 - 07:07 AM, said:snapback.png

அடிப்படை வர்ணங்கள் சிவப்பு மஞ்சள் நீலம். மஞ்சளும் நீலமும் சேரும்போது பச்சை வெளிப்படும். பாடத்தில் மட்டுமல்ல அனுபவத்திலும் கண்டது. கவனிக்க வேண்டுகிறேன்.

 

 

LcBvQ.gif

 

 

சேயான் 'புலவர்' சொல்வது சரிதான்.

 

அறிவியல்படி சிவப்பு(Red), பச்சை(Green), நீலம்(Blue) தான் வண்ணங்களின் அடிப்படை. :)

 

இவற்றை பலவிகிதங்களில் தேவைக்கேற்றபடி கலந்தால், மற்ற வண்ணங்களை உருவாக்கலாம்.. தொலைக்காட்சி குழாய்களில் RGB என்ற மூன்று ஒளிபாய்ச்சிகள்(Guns) உண்டு, அவற்றில் சில விகிதாசாரப்படி இந்த அடிப்படை வண்ணங்களின் சிறு மின்னழுத்தத்தை(voltage) செலுத்துவதன் மூலமே நாம் பலவித வண்ணக் கலவைகளை படமாக பார்க்கிறோம்..

கவிதைக்கும், எனக்கும் காத தூரம், 'பெரியவாள்' என்ன எழுதியுள்ளார் என தற்செயலாக பார்த்ததால் இத்திரியில் சுட்ட நேரிட்டது.. Escape..! :icon_mrgreen:

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் ஒரு தோழரை கவிதைக்குள் இழுத்து வந்த Paanch அவர்களுக்கும், எனக்கு உதவுவதற்க்கு வந்த ராசவன்னியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

 

அனுபவத்தில் மஞ்சளும் நீலமும் சேர்ந்தால் பச்சை கிடைக்கும்.  அறிவியல்படி ராசவன்னியன் சொன்ன விளக்கம்தான் சரி.

 

 

எனது கவிதை நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்ட இந்து மத வர்ணாசிரம முறையையும், நிறத்தை வைத்து வர்ணத்தை அனுமானிக்கும் மனப்பான்மையையும் பற்றியது.  RGB மட்டுமல்ல  சூத்திரனின் கறுப்பும் அடிப்படை வர்ணமாக இருக்கலாம் என்று நையாண்டி செய்வது. செந்தமிழன் அன்புச்செல்வன் சொன்ன புதிய கருத்தான,  நான்கு வர்ணங்களை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களின் "கருப்பு",  அடிப்படை வர்ணங்களில் நான்காவது என்பதும் பொருத்தமானதுதான்.

 

நன்றி.

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 29

பிரச்சனைகள் ஒன்றும் பெரிதாயில்லை

 

பிரச்சனைகள் ஒன்றும்

பெரிதாய் இல்லை

 

சாலையோரத்தில்

முதுகைக் காட்டிக்கொண்டுதான்

சிறுநீர் கழிக்கிறார்கள்

 

முகத்தில் மோதும்

பட்டாம்பூச்சிகளை

வாகன ஓட்டிகள் சபிப்பதில்லை

 

வாயாரவாவது

நண்பனின் மனைவியை

சகோதரி என்கிறார்கள்

 

எழுத முடியாததையும்

எழுதக்கூடாததையும்

எவரெவரோ

எழுதிவிட்டபோதும்

எழுதுவதற்கு இன்னும்

ஏதாவது இருக்கத்தான் செய்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 30

சுதந்தரப் புறா

 

சுதந்தர தினத்தைக் கொண்டாட

புறாவைப் பறக்கவிட்டார்கள்

சென்ற வருடம்

பறக்கவிட்ட

அதே புறாதான் இது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 31

 

நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழி வந்ததா?

என்ன முயன்றும்

விடை காணேன்

என் மகன் சொன்னான்:

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து

கோழி வராது

கோழிக்குஞ்சுதான் வரும் என்று

கேள்வியை மாற்றினேன்:

கோழியிலிருந்து

முட்டை வந்ததா

முட்டையிலிருந்து

கோழிக்குஞ்சு வந்ததா?

கோழியிலிருந்து தான்

முட்டை வந்தது

முட்டையிலிருந்து வந்தது

சேவல்குஞ்சாகவும் இருக்கலாம் என்றான்

கேள்வியை இன்னும் செதுக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

முட்டை முதலில் வந்ததா?

கோழி பிறகுதான் வந்தது

கோழி வருவதற்குமுன்பே

பலவித முட்டைகள் வந்துவிட்டன என்றான்

கேள்வியை இன்னும் கூர்மையாக்கினேன்:

கோழி முதலில் வந்ததா

கோழி முட்டை முதலில் வந்ததா?

கோழி முட்டை மூன்றாவதாக வந்தது

கோழியும் சேவலும்

முதலாவதாகவோ இரண்டாவதாகவோ

வந்தபின் என்றான்.

கேள்வி கேட்கத் தெரியாமல்

பதிலை ஏன் தேடுகிறேன் ?

Edited by seyon yazhvaendhan

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 28

பிறவி மறதி

நான் பாறையாக இருந்தபோது

இந்தப் பறவை

பலமுறை அமர்ந்திருக்கிறது

என்மீது

நான் மரமாக இருந்தபோது

என் கிளையொன்றில்

அது கூடுகட்டியிருந்தது

நான் நதியாக ஓடுகையில்

சிலசமயம்

சிறகை நனைத்து

சிலிர்த்திருக்கிறது

இப்போது என்னை

அடையாளமே தெரியாததுபோல்

பறந்துகொண்டிருக்கிறது

அப்பறவை

ஞாபக மறதி ஒரு நோய்

பிறவியை மறப்பது

பெரிதினும் பெரிய நோய்

 

வாழ்த்துக்கள் seyon yazhvaendhan.

. பறவைக்கு ஞாபக மறதி இருக்காது.  சில மனிதர்களுடன் சேர்ந்த பறவையாக இருக்கலாம்.

 

சேயோனின் கவிதைகளுக்குப் பாராட்டுக்கள்.

 

திரியில் குறுக்கிட்டு திசை திருப்ப விரும்பவில்லை. நிறங்கள் பற்றி இங்கு உள்ளதைப் பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/62201-photoshop-பாவிக்கும்-முறை-photoshop-tamil/?p=532191

(படங்கள் அழிந்து விட்டன)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகுந்த பயனுள்ள கடினமான் தகவல்களை எளிய தமிழில் தந்துள்ளீர்கள். நிறங்களைப் பற்றி இன்னும் அதிக தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.  இணையவனுக்கு மிக்க நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 32

தூக்கத்துக்கு கனவே சாட்சி

தூக்கம் 
தினமும் வருகிறது 
இரவைப்போல் 

தூக்கம் 
படுக்கையைப்போல் 
இருக்கிறது 

நான் அதில் 
கனவாய்ப் புரள்கிறேன் 

தூக்கம் 
கரும்பச்சைப் புல்வெளியாய் 
படர்கிறது 

புல் நுனிகளில் 
அங்கங்கே 
பனித்துளிகளாய் 
கனவுகள் அமர்கின்றன 

தூக்கம் 
இருண்ட 
மா மரமாய் எழுகிறது 
மின்மினிகளாய் 
கனவுகள் 
அதன் கிளைகளில் அமர்கின்றன 

நள்ளிரவு வானமாய் 
தூக்கம் இருள 
விண்மீன்களாய் 
கனவுகள் பளிச்சிடுகின்றன 

தூக்கம் 
கருமுகிலாய்க் கூடுகிறது 
கனவு 
மின்னலாய்த் தெறிக்கிறது 


தூக்கம் 
மேல் போர்வை தேட 
கனவு 
என்னையே துகிலுரிக்கிறது 
 

தூக்கம் 
என்னைப் படுக்கையில் 
வீழ்த்தப் பார்க்கிறது 
கனவு 
என்னை 
வானில் பறக்கவைக்கிறது 

இருளறைக்குள் 
தூக்கம் 
கருக்கொள்கிறது 
பின் 
கனவுக் குழந்தைகளைப் 
பிரசவிக்கிறது 

தூக்கம் 
நிழலாய் வருகிறது 
அந்த நிழலுக்கே 
காரணமான வெளிச்சமாய் 
கனவு மேலே இருக்கிறது 

கனவுதான் 
நான் தூங்கினேன் 
என்பதை நினைவூட்டுகிறது 

தூக்கம் 
இருளடர்ந்த கானகத்துக்குள் 
என்னை இட்டுச் செல்கிறது 
ஆங்கே 
நெடுமரமாய் நிற்கும் 
கனவுகள் மீதே 
மோதி விழுகிறேன் 

தூக்கத்திலேயே 
நான் செத்துவிடவில்லை என்பதை 
கனவுகள் மூலமே 
உறுதிசெய்துகொள்கிறேன்
கனவுகள் இல்லாத தூக்கம் 
மரணம் மட்டும் தானே

தாயின் அணைப்பே 
என்னைத் தூங்கவைத்துவிடுகிறது 
அவள் தாலாட்டு 
என்னை விழிக்க வைக்கிறது 

நினைவு 
புகைப்படமாய் 
என் அழகைக் காட்டுகையில் 
கனவு 
எக்ஸ்-கதிர்ப் படமாய் 
என் உள் அசிங்கங்களைக் காட்டுகிறது 

கனவில் 
சிலப் போழ்தில் 
ஆள் மாறாமல் 
என் பால் மாறுகிறது 
மற்றைச் சில கணங்கள் 
உரு மாறாமல் 
என் திணை மாறுகிறது

தூக்கம் 
உன்னைப்போல் 
என்னிடமிருந்து 
விலகியே இருக்கிறது 

கனவு 
என்னைப்போல் 
என்னுடனே இருக்கிறது 
 

தூக்கம் 
எப்போதாவது 
தூக்கம் போல் 
வருகிறது 
ஆனால் 
கனவைப் போல் 
வெகுவிரைவில் 
கலைந்துவிடுகிறது.

-seyonyazhvaendhan@gmail.com

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 33

கவி மரபு

 

புறநானூறு

பொதுமக்களுக்கும்

அகநானூறு

மன்னர்களுக்கும்

எழுதப்பட்டது

 

எதிர்க்கேள்வி கேட்காமல்

சக மனிதனைக் கொல்வதற்கு

வீரம் கற்பிக்கப்பட்டது

விழுப்புண் புகழப்பட்டது

 

பூனையை விரட்டியது

முறத்தால்

புலியை விரட்டியதாக

மிகைப்படுத்தப்பட்டது

 

மன்னனுக்காகச் சாவது

நாட்டுக்காகச் சாவதாக

நாடகமாடப்பட்டது

 

நல்ல மன்னனிடம்

அடிமைப்பட்டுவிடாமலிருக்க

நமது மன்னனிடம்

அடிமையாய் வாழ்வது

நாட்டுப்பற்றென்று

நம்பவைக்கப்பட்டது
 

போர்களில்

மாண்டனர் மக்கள்

வென்றனர் மன்னர்

 

துதிபாடிகளும்

அடிவருடிகளும்

தூக்கிப்பிடித்த

மன்னர் மரபை

கொஞ்சமும்

பெருமை குலையாமல்

கட்டிக் காக்கிறதெங்கள்

கவிமரபு.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அசாதாரணக் கவிதைகள் எளிமையாய் இருப்பதால்தான் என் போன்றவர்களையும் உள்வாங்குகின்றது...!

 

மேலேயுள்ள கவிமரபு கவிதையின் பொருள்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு...!

 

தொடருங்கள் வாழ்த்துக்கள்  சேயோன்...! :D :D

 

கவிதையின் பொருளில் தங்களின் கருத்து வேறுபாட்டை வரவேற்கிறேன்.  எனது கவிதை சொல்லும் பொருள்களில் எனக்கே கருத்து வேறுபாடு இருக்கிறது.

 

இப்போது மக்களாட்சி என்ற பெயரில் உலகமெங்கும் பெரும்பான்மையான நாடுகளில்  மன்னராட்சி நடக்கிறது.  பதவியிலிருப்பவர்களின் வாரிசுகள்தாம் குடியரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும், மாநிலங்களின் முதலமைச்சர்களாகவும், மட்டுமல்ல, மாவட்டச் செயலாளர்களாகவும், வார்டு கவுன்சிலர்களாகவும் கூட வர முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  ஆட்சிக்கட்டிலில் சுகபோகமாக இருக்கும் இந்த மன்னர்களுக்காக, பொதுமக்களிடம் நாட்டுப்பற்றும் வீரமும் போதையைப் போல் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.  எல்லையில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் வீரனுக்கு பக்கத்து நாட்டு வீரனுடன் என்ன பகை இருக்கப்போகிறது? ஆட்சியாளர்களின் சுயநலத்துக்காக பொதுமக்கள் பலியிடப்படுகிறார்கள்.

 

இனவாதத்துக்கு எதிராக, இன அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்டங்களைக் குறித்து இந்தக் கவிதையை நான் எழுதவில்லை.

 

இது தொடர்பாக உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன். எனது கருத்தில் பிழை இருந்தால் திருத்திக்கொள்கிறேன். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.