Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் அறிக்கைகள் பயன் தரப்போவதில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் அறிக்கைகள் இனி பயன் தரப்போவதில்லை

-சங்கரன் - சிவலிங்கம்-

ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. இரு தரப்பும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஜெனீவாவிற்கு சென்ற போது பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும், சர்வதேச சக்திகளின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் சர்வதேச சக்திகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களைக் கொடுத்து ஒரு சில விடயங்களிலாவது இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தையின் தொடர்நிலையினை பேண முயல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. குறிப்பாக மனித அவலங்களை குறைக்கும் வகையில் ஏ-9 பாதை திறக்கப்படும், இடம் பெயர்ந்தவர்களின் அவலங்கள் சீர் செய்யப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது.

சர்வதேச சக்திகளின் சார்பில் நோர்வே அதற்கேற்ற வகையில் நிகழ்ச்சி நிரலுக்கான கோட்பாட்டு முன்வரைபினை வரைந்து பேச்சுவார்த்தை மேசையில் வைத்தபோதும் ஸ்ரீ லங்கா அரசு அதனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. சர்வதேச சக்திகள் தம்மை எதுவும் செய்து விட முடியாது என்ற நினைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் இவ்விட்டுக் கொடுக்காத தன்மையினால் எந்தவித இணக்கமும் காணப்படாததோடு அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதியும் தீர்மானிக்கப்படாமல் பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கின்றது. ஏ-9 பாதை திறக்காமல் அடுத்த பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என புலிகள் திட்டவட்டமாகவே அறிவித்து விட்டு நாடு திரும்பியிருக்கின்றனர். பேச்சுவார்த்தை முறிவு காரணமாக தங்களது நோர்வே, ஐஸ்லாந்து பயணங்களையும் ரத்து செய்துவிட்டு புலிகள் திரும்பியிருக்கின்றனர். புலிகளின் இம் முடிவு தொடர்பாக நோர்வே எச்சரிக்கையுடனான அழுத்தங்களைப் பிரயோகித்த போதும் புலிகள் அதற்குப் பணியவில்லை. இது விடயத்தில் புலிகள் சர்வதேச சக்திகளுக்கும் தங்கள் அதிருப்தியினை இராஜதந்திர மொழியில் தெரிவித்திருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

சர்வதேச சக்திகளைப் பொறுத்தவரை சாண் ஏற முழம் சறுக்குவது போல சமாதான நடவடிக்கைகள் தொடர்பான ஒவ்வொரு முன்நகர்விலும் தொடர்ச்சியான தோல்விகளை தழுவிக்கொண்டு வருகின்றனர். கடல்கோள் பொதுக்கட்டமைப்பிலிருந்து வட, கிழக்கு பிரிப்பு என்ற நீதிமன்றத் தீர்ப்பினூடாக ஜெனீவா - 2 வரை அவர்களால் தோல்விகளையே தழுவிக் கொள்ள முடிந்தது.

சமாதான நடவடிக்கைகள் என்பவை தனி நடவடிக்கைகளில் மட்டும் தங்கியிருப்பவை அல்ல. ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்த வேண்டிய பல தொடர் நடவடிக்கைகளில் தங்கியிருப்பவை ஆகும். இவ்வாறு தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் ஏற்கனவே எய்தப்பட்ட வெற்றிகளைக் கூட தக்க வைக்க முடியாத நிலை ஏற்படும். இலங்கையின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை யுத்த நிறுத்த உடன்படிக்கை எய்தப்பட்ட மிகப்பெரிய வெற்றிதான். அந்த வெற்றி கூட தொடராக முன்னெடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளில்தான் தங்கியிருந்தது. அந்த நடவடிக்கைகள் வெற்றியைக் கூட தக்கவைக்க முடியாதநிலை இன்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு வகையில் சறுக்கு மரத்தில் ஏறுவதைப் போன்றது. தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளாவிட்டால் சறுக்கிக் கொண்டு கீழே வர வேண்டிய நிலை ஏற்படும். இலங்கையின் சாமதான முயற்சிகள் சறுக்கிக் கொண்டு கீழே வருகின்றது என்று தான் கூற வேண்டும். சர்வதேச முன்னெடுப்பின் பேரில் உருவாக்கப்பட்ட முயற்சி என்ற வகையில் ஒப்பந்தம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், அது மயிரிழையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

சமாதான செயற்பாடுகளின் போது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒரு அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை தொடர்ச்சியாக கருத்திற் கொள்வதாகும். இனப்போர் என்பதே ஓர் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்காக நடக்கின்ற ஒன்றுதான். நடைமுறையிலுள்ள ஓர் அரசியல் அதிகார கட்டமைப்பிற்குள் தனது அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது எனக்கருதுகின்ற போது சம்பந்தப்பட்ட இனம் முதலில் பாராளுமன்ற அரசியல் வழிமுறைகளின் ஊடாகவும் பின்னர் ஆயுதப்போராட்ட வழிமுறைகளினூடாகவும் போராட முற்படுகின்றது. அப்போராட்டத்தின் உச்சநிலையில் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் அதாவது இனியும் போர் தொடர்ந்தால் தமது அரசின் இருப்பையே பேண முடியாது என்ற நிலை வருகின்ற போது தான் ஒடுக்கும் அரசு சமாதானச் செயற்பாட்டுக்கு வருகின்றது. நிர்ப்பந்தங்கள் இல்லாமல் ஒடுக்கும் அரசுகள் சமாதான செயற்பாட்டுக்கு வந்தன என்பதற்கு வரலாற்றில் ஆதாரம் கிடையாது.

சமாதான செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னர் போராடும் சக்திகளை விட ஒடுக்கும் அரசிற்குத் தான் அதிக பொறுப்பு உள்ளது. எந்தக் காரணத்திற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தான் அரசின் பிரதான பொறுப்பாகும். இதன்மூலம்தான் போராடும் மக்களினதும் போராளிகளினதும் நம்பிக்கையினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த விடயத்தில் போராளிகளது கடமை அரசின் முயற்சிகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய ஒத்துழைப்பினை வழங்குவது மட்டும்தான்.

நான் ஏற்கனவே, கூறியது போல சமாதானத்திற்கான வேலைத்திட்டங்கள் என்பவை ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தப்பட வேண்டிய படிமுறை வேலைத்திட்டங்களாகும். போரின் போது போரின் தாக்கம் காரணமாக மக்கள் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்திருப்பர். அவர்களது இயல்பான வாழ்க்கை நிலை குழம்பி ஆயிரக்கணக்கான வகையில் அவர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருப்பர். அவர்களது வீடுகள் உட்பட அடிப்படை வளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருக்கும். எனவே, சமாதான முயற்சிகளின் போது யுத்த நிறுத்த செயற்பாடுகளின் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியினையே மிகுந்த கவனமெடுத்து மேற்கொள்ளல் வேண்டும். இந்த இயல்பு நிலைப் பணிகள் மூலம் தான் போராடும் மக்களுக்கு சமாதானத்தின்பால் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். ஒரு இடைக்கால ஏற்பாடுகளை உருவாக்கி மக்களின் பிரதிநிதிகள் அதனை முன்னெடுக்கின்ற நிலையினை ஏற்படுத்தும் போதே இயல்பு நிலையினை கொண்டு வருதலை நடைமுறை சாத்தியமாக்கமுடியும். இதன்பின்னரே நிரந்தர தீர்வுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த நிரந்தர தீர்ப்பு போராடும் மக்களின் அபிலாஷைகளை அதிகூடிய வகையில் தீர்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். இது விடயத்தில் ஒரு வேலைத்திட்டம் முடிந்ததன் பின்னர் தான் அடுத்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு வேலைத்திட்டம் நியாயமான அளவு நகர்த்தப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் போதே அடுத்த வேலைத்திட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்யலாம். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதேயாகும்.

சுருக்கமாகக் குறிப்பிட்டால் யுத்தத்தினை நிறுத்துதல், இயல்பு நிலையினை கொண்டுவருதல், நிரந்தரத் தீர்வு காணுதல் என்ற தொடர் வேலைத்திட்டங்களை படிப்படியாக செய்வதேயாகும். போராடும் மக்களைப் பொறுத்தவரை இதுதான் சமாதானச் செயற்பாடுகளாக இருக்கும்.

ஆனால், இலங்கையின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை இத்தொடர் வேலைத்திட்டம் என்பது நடைபெறவில்லை. யுத்த நிறுத்த உடன்படிக்கை சமாதான செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான நல்ல அடித்தளமாக இருந்தபோதும் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் முன்னேறாததனால் அந்த நல்ல அடித்தளத்தில் இருந்து கூட பயனைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது அவ்வடித்தளமே ஆட்டம் காண தொடங்கியுள்ளது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை பொறுத்தவரை அது எழுத்தில் இருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் அது செயற்படவும் வேண்டும். ஆனால், உடன்படிக்கையிலுள்ள பல விடயங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை. குறிப்பாக பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு அதாவது கோயில்கள், பாடசாலைகள், வீடுகள் பொது நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து இராணுவம் வெளியேறுவதற்கு கால எல்லைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றை நிறைவேற்ற படையினர் சம்மதிக்கவில்லை. அரசினாலும் நிறைவேற்ற முடியவில்லை. ரணில் அர சாங்கம் பலவீனமான அர சாங்கமாக உள்ளது என இதற்குக் காரணம் கூறப்பட்டது. உண்மையில் படையினரும் ஓர் அரசியல் சக்தியாக இருந்தமையே இதற்கு காரணமாகும். பிரேமதாசா காலத்திலேயே படையினர் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துவிட்டனர். அதன்பின்னர் அரசியல் தலைமைகள் எடுக்கும் முடிவுகளின் படி படைகளின் அமைவை மாற்ற அவர்கள் சம்மதிப்பதில்லை. சந்திரிகா சமாதான முயற்சிகளில் இறங்கியபோதும் இதுவே நடைபெற்றது. தற்போது படையினரே அரசாகி விட்ட நிலைமை காணப்படுகிறது. அரசியல் தலைமைகளின் கட்டளைகளை படையினர் நிறைவேற்றுவதற்குப் பதிலாக படையினரின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களாக அரசியல் தலைமகள் அண்மைக் காலத்தில் காலத்தில் மாறிவிட்டிருந்தனர். சிங்கள மக்கள் பேரினவாத கருத்து நிலைகளிலிருந்து விலகாத நிலைமையும் நீதித்துறையும் பேரினவாத இயந்திரங்களில் ஒன்றாக மாறிமையும் படையினரின் நிலைபாடுகளுக்கு துணையாக அமைந்தன. தொடர்ச்சியாக போர் நடக்கும் ஒரு நாட்டில் தவிர்க்க முடியாத வகையில் இராணுவம் முதல் நிலைக்கு வருவது சாதாரணமாக நடைபெறுகின்ற ஒன்று தான். பாகிஸ்தான் இதற்கு நல்ல உதாரணமாகும். அங்கு அனைத்து அரசயந்திரமும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. ஷ்ரீலங்காவும் அவ்வாறு மாறி வருகின்றது என்றே கூற வேண்டும்.

சமாதானச் செயற்பாட்டின் முதற் சறுக்கலே இங்கு தான் ஏற்பட்டது. படையினர் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நின்றதனால் தரையில் இயல்பு வாழ்க்கை குழம்பியதோடு கடல் பாதுகாப்பு வலயம் கடலிலும் இயல்பு வாழ்க்கையினை குழப்பியது. போதாக்குறைக்கு ரணில் அரசாங்கம் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளில் எட்டிய முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் எதிர்க் கட்சிகள் விடவில்லை. அவை விட வில்லை என்பதற்கு அப்பால் ரணில் அரசாங்கம் அச் செயற்பாட்டில் விசுவாசமாக இறங்கியது எனவும் கூறிவிடமுடியாது.

மொத்தத்தில் யுத்தம் நிறுத்தம் மட்டும் இருந்ததே தவிர ஏனைய எதுவும் நகரவில்லை. இதனால் சமாதான நகர்வுகள் முன்னுக்கு செல்வதற்குப் பதிலாக எல்லாமே பின்நோக்கிச் சென்றன. மறுபக்கத்தில் புலிகளைப் பலவீனப்படுத்தும் பணிகளை அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் முடுக்கிவிட்டது. சர்வதேச வலைப்பின்னல் செயற்பாடுகளுக்கு அப்பால் புலிகள் அமைப்பில் உடைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த உடைந்த குழுக்களைப் பயன்படுத்தியே நிழல்யுத்தமும் முடுக்கிவிடப்பட்டது. தமிழ்த் தேசம் பலாத்காரமாக மீண்டும் யுத்தத்துக்குள் இழுத்து வரப்பட்டது. சமாதான செயற்பாடுகளின் அடுத்தடுத்த நகர்வுகளே இல்லாத நிலையில் எதிர்நிகழ்வுகள் தூண்டிவிடப்பட்டமை எல்லா செயற்பாடுகளையுமே யுத்தத்தை நோக்கித் தள்ளின. யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்களின் எண்ணிக்கை தொடர்பாக புலிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் பண்புரீதியான மீறல்கள் அரசு பக்கத்திலேயே இருந்தன. உடன்படிக்கையில் உள்ளதே நடைமுறையில் நிறைவேறாத போது உடன்படிக்கையை மீறும் தார்மீக உரிமை போராடும் தரப்புக்கு இருக்கின்ற போதும் அதனை விரைவு படுத்தும் செயற்பாட்டினை அரசு தரப்பே செய்து முடித்தது. இதனூடாக இன்று பண்புரீதியான மீறல்களில் உச்சநிலையில் அரசு இருக்கின்றது. சம்பூரிலும் முகமாலையிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் நுழைந்து ஆக்கிரமித்து நிற்பது பண்புநிலை மீறலின் உச்சமாகும். ஒரு கட்டத்துக்கு மேல் இப்பண்பு நிலை மீறல் ஏ-9 பாதைத்தடுப்பு என்ற வடிவத்தை எடுத்து குடாநாட்டு மக்களை பட்டினிச்சாவுக்குள் ளும் தள்ளியுள்ளது

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சி

பண்பு நிலைமீறல்கள் இவ்வாறு உச்சநிலையில் இருந்தபோது தான் ஜெனீவா - 2 பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்த்தரப்பினைப் பொறுத்தவரை இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாமலேயே கலந்து கொண்டது. நம்பிக்கை வைப்பதற்கு எவற்றையுமே அரசு அவர்களுக்கு விட்டுவைக்கவில்லை. சர்வதேச சக்திகளின் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது.

தேசிய அரசியல் இலங்கை மட்டம், பிராந்திய மட்டம் என்பவற்றை தாண்டி இன்று சர்வதேச மட்டத்துக்கு வந்துள்ளது. இதனால் சர்வதேச சக்திகளும் அவர்களது நடவடிக்கைகளும் தான் தமிழ்த் தரப்புக்கு பிரச்சினை. சர்வதேச சக்திகள் தரும் அழுத்தங்களிலிருந்து அது விடுபட வேண்டும். அப்போதுதான் அடுத்தகட்ட செயற்பாடுகளை நோக்கி அது நகரமுடியும். சர்வதேச சக்திகள் முன்வைக்கும் வேலைத்திட்டங்களினூடாகவே சென்று அவர்களது அழுத்தங்களிலிருந்து விடுபட தமிழ்த் தேசம் முயற்சிக்கின்றது.

இந்தத் தடவை ஆரம்பத்திலிருந்தே ஷ்ரீலங்கா அரசுக்குதான் சர்வதேச சக்திகளின் அழுத்தம் இருந்தது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை, ஜப்பானிய தூதுவர் அகாசியின் வருகை, அமெரிக்க வெளியுறவு செயலாளரின் வருகை, அமெரிக்க கடற்படையின் பயிற்சிகள் ரத்து, பேச்சுவார்த்தை மேசையில் பேச்சுவார்த்தை கோட்பாட்டு வரைபடம் என தொடர்ச்சியாக அழுத்தங்கள் அரசுக்கு வந்தன. புலிகளுக்கு பேச்சுவர்த்தைக்கு செல்லுங்கள் என்ற அழுத்தம் மட்டுமே இருந்தது. அதைவிட வேறு அழுத்தங்களை கொடுப்பதற்கு காரணங்கள் எதுவும் இருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மேசையில் புலிகள் அதிக விவாதங்களுக்கு இடம் வைக்காமல் ஏ-9 பாதை திறப்பு பிரச்சினையை மட்டும் கறாராக முன் வைத்தனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையின் ஒரேயொரு பயனுள்ள ஏற்பாடு என்பதற்கு அப்பால் மனிதாபிமான பிரச்சினையையும் ஏ-9 பாதை மறிப்பு விவகாரம் கிளப்பிவிட்டிருந்தது. குடாநாட்டினை ஏனைய பகுதிகளோடு இணைக்கும் ஒரேயொரு நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் உணவுப் பற்றாக்குறை, ஏனைய பிரதேசங்களுடனான மக்கள் தொடர்பு, தலை நகருடனான மக்கள் தொடர்பு என பல நெருக்கடிகள் உருவாகியிருந்தன. இவ்விவகாரம் மிகப் பெரும் மனிதாபிமான பிரச்சினையாக உள்ளமையினால் சர்வதேச சமூகத்தினாலும் இக் கோரிக்கையினை உதாசீனம் செய்ய முடியவில்லை. இந்த கோரிக்கையில் இணக்கம் காணாததனால் புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இரு தரப்பையும் இணைத்து ஒரு கூட்டறிக்கையை கூட நோர்வே அனுசரணையாளர்களினால் வெளியிட முடியாத அளவிற்கு விவகாரம் சூடாக இருந்தது. நோர்வேயினால் அவசரப்பட்டு தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ள மட்டும் முடிந்தது.

புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து திரும்பி வந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புலிகளை சந்தித்த இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம் என வேண்டிக் கொண்டனர். பேச்சுவார்த்தை தோல்வியினால் இந்திய இராஜதந்திரியின் இலங்கைப் பயணமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இணைத் தலைமை நாடுகளும் அவசர அவசரமாக கூட்டமொன்றினை கூட்ட இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அரசாங்கம் ஏ-9 பாதை திறக்க மறுத்தமைக்கு இராணுவ நலன்களே காரணமாக இருந்தன. பாதையைத் திறந்தால் சோதனைச் சாவடிகளை எங்கே அமைப்பது என்ற பிரச்சினை வரும். ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் 800 மீற்றர் வரை ஊடுருவி பாதுகாப்பு அரண்களை அவர்கள் அமைத்துள்ளனர். சோதனைச் சாவடிகள் அமைப்பதாயின், உடன்படிக்கை எல்லைகளுக்கே செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதாயின் ஏற்கனவே அமைக்கப்பட்ட முன்னரங்க முகாம்களை அழித்து விட்டு பின் நகர வேண்டும். படைகள் இதற்கு தயாராக இல்லை. பல படையினரை இழந்து தான் இவ் விடங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பின் நகர முயற்சிப்பது படையினரின் போர் புரியும் ஆற்றலை உளவியல் ரீதியாக குறைக்கும் என அவர்கள் நினைக்கலாம்.

இரண்டாவது காரணம் படையினரின் கடல் வழிப் போக்கு வரத்தாகும். கடலில் கடற்புலிகளின் ஆதிக்கம் வலுவாக உள்ளதனால் எப்போதுமே புலிகளின் அச்சுறுத்தல் அங்கு உள்ளது. இதனால் படையினருக்கான உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வது மட்டுமன்றி படையினரின் விடுமுறை பயணம் உட்பட படை இடமாற்றங்களும் கடினமாக இருந்தன. தற்போது குடாநாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் படையினருக்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதோடு படையினரும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். பயணிகள் கப்பலில் 300 பயணிகள் பயணம் செய்யும் போது 1,500 படையினரும் கூடவே பயணம் செய்கின்றனர். கீழ்த் தட்டில் மக்கள் அடைக்கப்பட்டு வெளியே வராமல் தடை செய்யப்படுகின்ற அதேவேளை மேல் தட்டு முழுவதும் படையினரே பயணம் செய்கின்றனர்.

கொழும்பிலிருந்து 300 ரூபாவுடன் பயணம் செய்யக் கூடிய யாழ்ப்பாணத்திற்கு திருகோணமலை வரை பயணம் செய்வதற்கு மட்டும் கப்பல் கட்டணமாக 1,500 ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணத்திற்கான அலைச்சல் வேறு கொழும்புக்கு பயணம் செய்வதாயின் காலையிலேயே யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்துக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டும். அதன் பின்னர் தான் பதிவு செய்து டிக்கட் தருவார்கள்.

இதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்திற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். யூனியன் கல்லூரியில் படையினரின் பரிசோதனை, விசாரணை என்பன நடைபெறும். சந்தேகத்திற்கு இடமானவர்கள் அங்கேயே தடுத்து வைக்கப்படுவர். இரவு முழுவதும் பயணிகள் அங்கேயே தங்கி நிற்றல் வேண்டும். மறு நாள் காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஒரு சோதனையின் பின் கப்பலில் ஏற்றப்படுகின்றனர். கப்பல் பி.ப. 3 மணிக்கு திருகோணமலைக்கு வந்தடையும். திருகோணமலையில் பஸ் ஏறினால் நள்ளிரவில் கொழும்பை வந்தடையலாம். 8 மணிநேர பயணத்திற்கு 36 மணித்தியாலத்தை செலவிட வேண்டிய தலை விதி பயணிகளுக்கு. கொழும்பிற்கு வந்தால் கொழும்பின் கெடு பிடிகளுக்கு வேறு முகங்கொடுக்க வேண்டும். லொட்ஜில் தங்குபவர்கள் புகைப்படத்துடன் பொலிஸில் பதிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் எதிரி நாட்டில் பயணம் செய்ய வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகின்றது.

எனவே, சமாதான செயற்பாடுகளை முன்நகர்த்த வேண்டுமென சர்வதேச சக்திகள் நேர்மையாக விரும்பினால் ஒரு படிமுறை வேலைத் திட்டத்திற்கு இப்போதே அழுத்தம் கொடுப்பது நல்லது. அதற்கான மாதிரி வரை படம் ஒன்றை வரைந்து, அதன் படி நகருவதற்கு முயற்சிக்க வேண்டும். அறிக்கை ரீதியான அழுத்தங்கள் இனிமேல் பயன் தரப் போவதில்லை. செயல் ரீதியான அழுத்தங்களே தேவை. குறிப்பாக ஷ்ரீலங்கா அரசுக்கு செயல் ரீதியான கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும்.

ஷ்ரீலங்கா அரசுக்கு புலிகள் தமிழீழம் என்ற இலக்கினை நோக்கி வளர சர்வதேச சக்திகளும் இந்தியாவும் விடாது என்ற நம்பிக்கை இருக்கின்றது. இனப் பிரச்சினையில் அவர்களின் நலன்களும் அடங்கி இருப்பதே இதற்கு காரணமாகும். பொருளாதார நெருக்கடிகளையும் ஆயுத உதவிகளையும் சீனா, பாகிஸ்தான் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என ஷ்ரீலங்கா அரசு நினைக்கின்றது. மாறி வருகின்ற உலக சூழலில் அமெரிக்கத் தலைமையிலான மேற்கு சக்திகளுக்கு எதிரான ஒரு நாடாக சீனா வளர்ந்து வருவதால் அது தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என ஷ்ரீலங்கா அரசு நினைக்கலாம்.

இந்த நம்பிக்கைகள் பொய்யானவை என்பதை சர்வதேச சக்திகள் அரசுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல் ரீதியான அழுத்தங்கள் வழங்குவதை நோக்கி சர்வதேச சக்திகள் முன்னேறாவிட்டால் சமாதானம் என்பது இப் போதைக்கு வரப் போவதில்லை.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.