Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரீடத்தை இழக்கும் கிரீஸ்

Featured Replies

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 1

 
 
ஏதென்ஸில் உள்ள சாக்ரடீஸ் சிலை.
ஏதென்ஸில் உள்ள சாக்ரடீஸ் சிலை.

உலகின் தலைசிறந்த காவியங்கள் என்ற பட்டியலில் நிச்சயம் இடம் பெறக்கூடிய இரண்டு, இலியட் மற்றும் ஒடிஸி. இவற்றை எழுதியவர் ஹோமர். பார்வை இல்லாமலேயே இந்தச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.

மேற்கத்திய இசை ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பெயர் யானி. அவரது ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்கள் தொடர்ந்து விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தன. இசைத்துறைக்கு வருவதற்கு முன்பேகூட சாதனை படைத்தவர் இவர். தனது 14வது வயதிலேயே தேசிய அளவில் 15 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றவர்.

மேற்கத்திய தத்துவத்தின் பிதாமகன் என்று இன்றளவும் கருதப்படுபவர் சாக்ரடீஸ். பல நூறாண்டுகளைத் தாண்டியும் இவரது சிந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இன்றைய அரசியல் இயங்குதளத்தை அந்தக் காலத்திலேயே தெளிவாகப் பதிவு செய்தவர் ப்ளாட்டோ. ஜனநாயகத்துக்கு எதிரானவர். என்றாலும் சாக்ரடீஸின் சிஷ்யரான இவரது சிந்தனைகள் இன்றளவும் மதிக்கப்படுகின்றன. உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது ப்ளாட்டோ அகாடமி.

ஹிபோக்ரடிஸ் பெரும்புகழ் பெற்ற ஒரு மருத்துவர். நோய்களைப் போக்குவதற்கு மருத்துவம், தத்துவம் இரண்டையுமே பயன்படுத்தியவர்.தன்னையே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் மனித உடலுக்கு உண்டு என்றவர். இன்றளவும் இந்திய மருத்துவர்கள் கூட இவர் பெயரில்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்.

குளியல் அறையிலிருந்து, `யுரேகா, யுரேகா’ என்று கத்தியபடி ஓடிவந்த ஆர்கிமிடிஸின் அறிவியல் விதிகளை மாணவர்கள் அறிவார்கள். இவர் ஒரு தலைசிறந்த வானியல் நிபுணரும்கூட.

நிகோஸ் கஸன்ட்ஜாகிஸ் என்ற எழுத்தாளரின் நூல்கள் மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்டவை. இவர் எழுதிய “தி லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிரைஸ்ட்’’ என்ற நூல் மிகவும் மதிக்கப்பட்ட ஒன்று. அதிர்ச்சி அலைகளையும் இது கிளப்பியது. ரோமன் கத்தோலிக்க தேவாலயம் இந்த நூலைத் தடை செய்தது. இவர் இறக்கும்போதுகூட இவரது உடலை நகர எல்லையில் அடக்கம் செய்ய தேவாலய தலைமை அனுமதிக்கவில்லை. தனது கல்லறையில் “நான் எதற்கும் ஆசைப்படவில்லை. நான் எதற்கும் பயப்படவில்லை. நான் சுதந்திரமானவன்’’ என்ற வாக்கியங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதிவிட்டுதான் இறந்தார்.

அரிஸ்டாட்டில் ஒனாஸிஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். அமெரிக்க அதிபர் கென்னடி இறந்த பிறகு அவரது மனைவி ஜாக்குலினைத் திருமணம் செய்து கொண்டபோது ஒனாஸிஸ் மேலும் அதிகமாக அறியப்பட்டார்.

ஜியாமெட்ரியின் தந்தை என்று கருதப்படும் யூக்லிட் உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவர்.

ஈஸாப் கதைகளை அறியாதவர் உண்டா? மாபெரும் பலம் கொண்ட ஹெர்குலிஸ் என்ற மாவீரனைக் கேள்விப்படாதவர்கள் உண்டா? டென்னிஸ் ரசிகர்களிடம் பீட் சாம்ப்ராஸ் என்று கூறிப்பாருங்கள். அவர்கள் முகத்தில் ஓர் ஒளி பாயும்.

இதெல்லாம் சரி, நாடுகள் குறித்த தொடரில் எதற்காக பல்வேறு வி.ஐ.பிக்களைப் பற்றிய குறிப்புகள் என்று நீங்கள் கேட்பீர்களாஎன்ன? விடையைத்தான் நீங்கள் இந்நேரம் ஊகித்திருப்பீர்களே. அது சரியானதுதான். மேலே குறிப்பிட்ட அத்தனை சாதனையாளர்களும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆங்கிலத்துக்கும், அறிவியலுக்கும் எண்ணற்ற வார்த்தைகளை நன்கொடையாக அளித்துள்ள மொழி கிரேக்கம்.

இப்படிப் பலவிதங்களில் மணிமுடி சூட்டிக் கொண்ட கிரீஸ் இன்று உலக அளவில் தலைகுனிந்து நிற்கிறது. பொருளாதார நெருக்கடியில் திவாலாகும் நிலைக்கு அது வந்து விட்டது.

பெருங்காயமாய் கிரீஸ் உலக அரங்கில் மணத்துடன் வலம் வந்த நாட்கள் உண்டு. பெரும் காயத்துடன் இன்று அது தள்ளாடும் காட்சி விசனத்துக்கு உரியதுதான்.

‘ஐரோப்பாவின் நோயாளி’ என்று துருக்கியைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட கோமா கட்டத்தில் இயங்குகிறது கிரீஸ். அப்படி ஒரு பொருளாதாரச் சிக்கல்.

வங்கிகளுக்கெல்லாம் விடுமுறை. பங்குச் சந்தை மூடப்பட்டது. ஏ.டி.எம்.களை வைத்துக் கொண்டு பணத்தை எடுத்துக் கொள்வதில் கட்டுப்பாடுகள்.

என்ன நடந்தது கிரீஸில்? என்ன நடக்கிறது அந்த நாட்டில்?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-1/article7402591.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 2

 
ஏதென்ஸில் பூட்டியுள்ள கிரீஸ் தேசிய வங்கிக்கு முன்பு காத்திருக்கும் ஓய்வூதியதாரர். (கோப்புப் படம்)
ஏதென்ஸில் பூட்டியுள்ள கிரீஸ் தேசிய வங்கிக்கு முன்பு காத்திருக்கும் ஓய்வூதியதாரர். (கோப்புப் படம்)

அமெரிக்க பங்குச் சந்தையின் தாயகமான வால் ஸ்ட்ரீட் 2008ல் சரசரவென சரிந்தது. அங்கு சீர்குலைந்த பொருளாதாரப் பிரதிபலிப்பு கிரீஸில் வெகு பயங்கரமாகவே வெளிப்பட்டது.

அக்டோபர் 2009ல் கிரீஸ் அரசு வெளியிட்ட ஒரு வாக்குமூலம் உலகெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ‘’பல வருடங்களாகவே நாங்கள் எங்கள் நாட்டின் நிதி நிலைமையை பொய்யாகத்தான் குறிப்பிட்டு வந்திருக்கிறோம். நாங்கள் வெளியிட்டதைவிட எங்கள் நாட்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை மிக அதிகம்தான்’.

அவ்வளவுதான், கிரீஸுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். எச்சரிக்கை மணி பலமாகவே ஒலித்தது. கிரீஸுக்கு கடன் கொடுக்கும் அமைப்புகள் ஒவ்வொன்றாகத் தங்கள் கதவுகளை மூடிக் கொள்ளத் தொடங்கின.

வளரும் நாடுகள் கடன் பெறுவது சகஜம்தான். (ஏன், இந்தியா மட்டும் கடன் வாங்கவில்லையா என்ன?) ஆனால் கிரீஸின் நிதி நெருக்கடி மேலும் கடுமையானது. அது தன் கடன்காரர்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்த முடியாமல் தவிக்கிறது. அடப் பாவமே என்று பர்ஸைத் திறக்க வேண்டாம்.

கிரீஸின் கடுமையான பொருளாதாரச் சிக்கலை சரி செய்ய மூன்று அமைப்புகள் உதவிக்கரம் நீட்டின. அவை பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன். 240 பில்லியன் யூரோக்களை கடனாக இவை அளித்தன.

ஆனால் இவ்வளவு பெரிய தொகையை சும்மாவா கொடுக்கும்? நிபந்தனைகள் விதித்தன. ‘’உங்கள் நாட்டின் நிதி நிலைமையைச் சரி செய்ய நீங்கள் கடுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். வரி விகிதத்தை மிகவும் அதிகமாக்க வேண்டும். வரி ஏய்ப்பு நிகழாமல் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் நாட்டில் ஓய்வு பெறுவதற்கான வயது 57 ஆக இருக்கிறது. இதை மேலும் 10 வருடங்களுக்கு நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் வயதானவர்களுக்கு அரசு அளிக்கும் மானியத் தொகையை கணிசமாகக் குறைத்துக் கொள்ளலாம். வெளிநாடுகள் கிரீஸுடன் வணிகம் செய்வதற்கு வசதியான சூழல்களை கிரீஸ் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’’.

எப்படியோ கோடிக்கணக்கான யூரோக்கள் கிரீஸ் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. பிறகென்ன என்கிறீர்களா? இது சமுத்திரத்தில் கரைத்த உப்புபோல ஆனது. கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் நான்கில் ஒரு பங்கு வீழ்ச்சி கண்டது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது 25 சதவீதம் அதிகமானது.

ஏற்கெனவே ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் எக்கச்சக்கமாக கடன் வாங்கியிருந்தது கிரீஸ். அதற்கான கெடு தேதிகள் ஏற்கெனவே கடந்திருந்தன. இப்படி பிற நாடுகளில் வாங்கிய கடனை (அதாவது கடனில் ஒரு பகுதியை) அடைப்பதற்கே அத்தனை யூரோக் களையும் செலவிட்டது கிரீஸ். பிறகு எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்குப் பணம் கிடைக்கும்?

வேறொரு காரணமும் உண்டு. இடதுசாரி எண்ணங்கள் கொண்டவர் கிரீஸ் நாட்டின் பிரதமர். பொருளாதார மேம்பாடு என்கிற பெயரில் மக்களை கசக்கிப் பிழிய அவருக்கு மனத்தடைகள் இருந்தன. அதைவிட முக்கியமாக இப்படியெல்லாம் செய்தால் அது எதிர்கட்சிகளுக்குச் சாதகம் ஆகிவிடும் என்கிற பயம் வேறு.

கிரீஸ் மக்கள் அதிர்ச்சியின் எல்லைகளைத் தொட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நாட்டின் பணவீக்கத்தால் நொந்துபோய் இருக்கும் அவர்கள் மேலும் என்னென்ன வரிகளைக் கட்ட வேண்டி இருக்குமோ என்ற திகைப்பில் இருக்கிறார்கள்.

ஜுன் மாதமே பன்னாட்டு நிதியத்துக்கு ஒன்றரை பில்லியன் யூரோ தொதையை கிரீஸ் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் கடும் நிதி நெருக்கடி காரணமாக கிரீஸ் இதைச் செய்யவில்லை. தங்களுக்குக் கடன் கொடுத்த அத்தனை அமைப்புகளிடமும், நாடுகளிடமும், கடனைத் திருப்பித் தரும் தேதிகளை மேலும் மேலும் தள்ளிப் போடச் சொல்கிறார் கிரீஸ் பிரதமர். இரண்டு வருட அவகாசம் கேட்கிறார்.

ஐரோப்பிய மத்திய வங்கிக்கு இதை ஏற்பதில் சில சிக்கல்கள் உள்ளன.

ஏ.டி.எம்.களில் பணம் பெறவும் கட்டுப்பாடு. மிகவும் குறைந்தபட்சத் தொகையைத்தான் அப்படி எடுத்துக் கொள்ள முடியும் (சுற்றுலாமூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து விடக்கூடாதென்பதால் வெளிநாட்டு கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் மட்டும் இவற்றிலிருந்து பணம் பெற முடியும்).

மக்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். ஓய்வூதியத்தைக் கூட பெற முடியாமல் அதிர்ச் சியில் உறைந்துள்ளனர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-2/article7410640.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 3

 
தனது வாழ்க்கைத் துணை பெரிஸ்டெராவுடன் கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ்.
தனது வாழ்க்கைத் துணை பெரிஸ்டெராவுடன் கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ்.

ஐயோ பாவம்! கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் இந்த வருடம் ஜனவரி 26 அன்றுதான் பிரதமராக பதவியேற்றார். அதற்குள் கிரீஸின் நிலைமை பொருளாதார கோமாவுக்குச் சென்றுவிட்டது. சிவில் பொறியாளரான சிப்ராஸினால் கிரீஸ் என்ற மாபெரும் கட்டிடத்தைச் செப்பனிட முடியவில்லை.

கிரீஸ் அரசியலில் தெளிவாக அவர் நுழைந்தது 2006-ல்தான். சிரிஸாவின் ஆதரவில்தான் அவர் உள்ளூர் முனிசிபாலிடி தேர்தல் ஒன்றில் நின்றார், வென்றார். (சிரிஸா என்பது கிரீஸில் உள்ள ஓர் அரசியல் கட்சி. 2004-ல் உருவாக்கப்பட்ட இது இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு). அவர் போட்டியிட்ட முனிசிபாலிடி ஏதென்ஸ்.

சிப்ராஸ் பிரதமரா, அதிபரா என்ற சந்தேகம் நாளிதழ்களைப் படிக்கும் சிலபேருக்கு வந்திருக்கலாம். அவர் பிரதமர்தான். ஆனால் அந்த நாட்டு வழக்கப்படி அவர் ‘அரசின் அதிபர்’. எனவே அவரை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘மிஸ்டர் பிரசிடென்ட்’ என்றுதான் கூப்பிடுவார்கள். மற்றபடி கிரீஸ் நாட்டுக்கு என்று தனியாக ஓர் அதிபரும் உண்டு.

2007-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றபோது சிப்ராஸ் அதில் போட்டியிட வில்லை. ‘’முனிசிபாலிடி உறுப்பினருக்கான காலகட்டத்தை நான் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே இந்தக் கடமையை முடித்துவிட்டுதான் அடுத்த பதவி’’ என்று அவர் கூறியது பலரையும் கவர்ந்தது.

2015 தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் சிப்ராஸ். இதற்குள் அவர் புகழ் பெற்று, சிரிஸாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். இந்தத் தேர்தலில் 149 இடங்களில் அவரது கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இரண்டு சுயேச்சைகளின் ஆதரவு கிடைத்தது. (நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 உறுப்பினர்கள்). இதைத் தொடர்ந்து அவர் நாட்டின் பிரதமர் ஆனார். இப்படி மயிரிழையில் அவர் அரசை அமைத்ததால் சில விஷயங்களில் மதில் மேல் பூனையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தன்னை பெரும் போராளியாக வெளிப்படுத்திக் கொண்டவர் சிப்ராஸ். பள்ளியில் படிக்கும்போதே மாணவர் தலைவர். அப்போது அவர் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கூட்டிக் கொண்டு எதற்காகப் போராடினார் தெரியுமா? ‘’நினைத்தபோது விடுப்பு எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் மாணவர் களுக்கு வேண்டும்’’. கிரீஸ் உயர்நிலைப் பள்ளிகளில் அப்போது ஒரு பழக்கம் இருந்தது. மாணவர்கள் என்றாவது பள்ளிக்கு வரவில்லை என்றால் இது குறித்த தகவல்கள் அந்த மாணவனின் பெற்றோருக்குத் தெரிவித்துவிடுவார்கள். இந்தச் செயல் முறையிலிருந்தும் மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று களத்தில் குதித்தவர் சிப்ராஸ்.

ஏதென்ஸில் உள்ள தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பிறகு ‘நகர மற்றும் மண்டல திட்டம் வரைதல்’ படிப்பில் முது கலைக் கல்வியை முடித்தார்.

அதிபர் கார்லோஸ் என்பவரால் பிரதமருக் கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் சிப்ராஸ். மிகவும் பழைய சரித்திரத்தை விட்டுவிட்டால் கிரீஸின் மிக இளமையான பிரதமர் இவர்தான்.

உறுதிமொழி எடுத்துக் கொண்டபோதே சில பிரிவினரிடம் அதிர்ச்சி அலைகளைப் பரப்பினார் இவர். பொதுவாக மத வழியில் தான் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். ‘’கவலை வேண்டாம். கிறிஸ்தவ மத உயர்நிலையுடன் நான் மோத மாட்டேன்’’ என்று கூறியவர் உறுதிமொழியை மட்டும் நவீனமான முறையில் எடுத்துக் கொண்டார்.

‘’நான் ஒரு நாத்திகன். மதச் சடங்குகளைப் பின்பற்றி என் திருமணம் நடக்கவில்லை. என் குழந்தைகளுக்கு ஞான ஸ்நானமும் செய்ததில்லை. எனவே வழக்கமான முறையில் நான் உறுதிமொழி எடுத்துக் கொள்ள முடியாது’’ என்று கூறினார்.

சிப்ராஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் பெரிஸ்டெரா என்ற பெண்ணைத் தனது பங்குதாரராக பதிவு செய்து கொண்டிருக்கிறார். (இருவரும் எந்த நிறுவனத்தையும் தொடங்கிவிடவில்லை. ‘தனிப்பட்ட வாழ்வின்’ பங்குதாரர்). இருவரும் ஒரே உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். பிறகு இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர் ஆனார்கள்.

அதன்பின் வாழ்க்கைத் துணைவர்களாக இருக்க முடிவு செய்தார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகனுக்கு எர்னெஸ்டோ என்று பெயர் வைத்திருக்கிறார். இது சே குவேராவுக்கு அவர் செலுத்திய அஞ்சலி. (சே குவேராவின் முழுப் பெயர் எர்னெஸ்டோ சே குவேரா).

பிரதமர் ஆனவுடன் தான் கூட்டிய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் தன்னுடைய முன்னுரிமைகளை இவர் தெளிவாக விளக்கினார். முதலில் கிரீஸில் உள்ள மனித உரிமைமீறல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். அடுத்து கிரீஸ் பட்டுள்ள பிரம்மாண்டமான கடனைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக முந்தைய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு ஏற்கனவே நடைபெற்ற சில தனியார்மயங்களையும் வாபஸ் பெறவேண்டும்.

ஆனால் இவற்றில் இரண்டாவது பிரச்சினை பூதாகரமாக எழுந்து நின்று மற்ற இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-3/article7420610.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 4

 
 
பொருளாதார சிக்கலால் உடைந்துபோன கிரீஸை ஐரோப்பிய யூனியன் ஓட்டவைப்பதாக நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கருத்துப் படம்.
பொருளாதார சிக்கலால் உடைந்துபோன கிரீஸை ஐரோப்பிய யூனியன் ஓட்டவைப்பதாக நியூயார்க் டைம்ஸ் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கருத்துப் படம்.

கிரீஸ் நாட்டின் பிரதமரான பிறகு சிப்ராஸ் முதலில் சென்றது இத்தாலிக்கு. அந்த நாட்டின் பிரதமருடன் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கை விட்டார். “கடன் சிக்கலில் இருந்து தீர்வதற்கான ஒரே வழி நிறைய வளர்ச்சித் திட்டங்களை நாடுகளில் அறிமுகப்படுத்துவதுதான்’’ என்றனர். (இத்தாலியும் நிறைய கடன் வாங்கியிருக்கும் ஒரு நாடுதான்).

சிப்ராஸ் விடைபெறும்போது இத்தாலிய ஜனாதிபதி ரென்ஸி அவருக்கு ஒரு டையை அன்பளிப்பாக அளித்தார். சிப்ராஸ் டை அணிவதில்லை. அது முதலாளித்துவத்தின் சின்னம் என்ற எண்ணம். இருந்தும்கூட இத்தாலிய அதிபரின் ஒத்துழைப்பை நெகிழ்ந்து அந்த டையைப் பெற்றுக் கொண்டார். “கடன் தொடர்பாக நாங்கள் பல அமைப்புகளுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்த பிறகு அதற்கான கொண்டாட்ட நாளின்போது இந்த டையை அணிந்து கொள்வேன்’’ என்றார். பாவம்!

பிறகு ஏப்ரல் மாதத்தில் மாஸ்கோவுக்கு விஜயம் செய்யவும் திட்டமிட்டார். ரஷ்யாவின் ஆதரவை நாடுவது முக்கியக் காரணம். ஜுன் 22 அன்று சிப்ராஸ் கொஞ்சம் கொஞ்சமாக தன் நாட்டு மக்களின் ஓய்வு வயதை 67 ஆக உயர்த்துவதாக ஒப்புக் கொண்டார். தவிர வாட் வரி முறையை முழுமையாக அமல்படுத்துவதாகவும் ஒத்துக் கொண்டார். இந்த வரி 23 சத வீதமாக இருக்க வாய்ப்பு உண்டு என்றும் அறிவித்தார்.

1981ல் ஐரோப்பிய யூனியனில் இணைந்த நாடு கிரீஸ். அதற்குமுன் கிரீஸின் கடுமையான நிதிநிலைமை அதிகமாக வெளியில் தெரியவில்லை. இதற்குக் காரணம் அது தன் கரன்ஸியான ட்ராஷ்மாவை இஷ்டத்துக்கு அச்சிட்டுக் கொண்டதுதான். இதனால் பணவீக்கம் மிகவும் அதிகரித்தது.

ஆனால் 2002ல் அது யூரோ கரன்சிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராவதற்கான நிபந் தனைகளில் அது ஒன்று. தவிர அப்படி மாறினால்தான் ஐரோப்பிய வங்கி கடன் அளிக்கும். அதற்குப் பிறகு கிரீஸின் நிஜமான பொருளாதார நெருக்கடி தெரியவந்தது.

‘’சிக்கன நடவடிக்கைகளை எடுங்கள். வரிகளை அதிகப்படுத்துங்கள். பொருளாதாரம் மேம்பட இதுவே வழி’’ என்றன கடன் கொடுத்த அமைப்புகள். ஆனால் கிரீஸ் ஆட்சியால் இவற்றை அமல்படுத்த முடியவில்லை. மக்களின் எதிர்ப்பை சந்திக்க பயம். காரணம் அவர்கள் ஏற்கனவே பணவீக்கத்தால் நொந்து போயிருக்கிறார்கள்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸ் வெளியேற வாய்ப்பு உண்டா? அப்படி வெளியேறினால் அது எந்தத் தரப்பை அதிகம் பாதிக்கும்? ஐரோப்பிய யூனியனில் உள்ள பிற நாடுகள் இது குறித்து என்ன நினைக்கின்றன?

கிரீஸைப் பொருத்தவரை ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது அதற்கு மேலும் பாதகங்களை விளைவிக்கும். காரணம் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு உதவ வேண்டுமென்ற தார்மிகக் கடமைகூட பிற உறுப்பினர் நாடுகளுக்குக் கிடையாது. தவிர பிரான்ஸ், ஜெர்மனி போன்ற சக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கிரீஸுக்குப் பெரும் தொகையை கடனாகக் கொடுத்துள்ளன. இப்போது ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸ் வெளியேறினால் ஐரோப்பிய மத்திய வங்கியின் மூலமாக போதிய அழுத்தத்தை கிரீஸ் மீது கொடுக்க முடியாமல் போகலாம்.

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மேற்படி நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைகளை கிரீஸ் மேலும் தள்ளிப் போடலாம். தவிர கிரீஸ் வெளிப்படையாகவே தான் திவாலாகிவிட்டதாக ஒத்துக் கொண்டால் அதன் பிறகு கிரீஸிடமிருந்து கொடுத்த கடனைப் பெறுவது மேலும் கடினமாகிவிடும்.

அதே சமயம் கிரீஸின் நிலையை பிற ஐரோப்பிய நாடுகளெல்லாம் அப்படி யொன்றும் கருணையோடு பார்க்கவில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் சக ஐரோப்பிய நாடுகளுக்கு இப்படி ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். அதில் கிரீஸ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளி யேறுவதைத் தடுக்க வேண்டாமென்றும், அப்படி வெளியேறினால்தான் கிரீஸை ஆட்சி செய்பவர்களுக்குப் பொறுப்புணர்வு வரும் என்றும் அதில் அழுத்தமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

‘’ஐரோப்பிய யூனியனிலிருந்து நாங்கள் வெளியேற விரும்பவில்லை. யூரோவைத்தான் தொடர்ந்து எங்கள் தேசிய நாணயமாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்’’ என்று கிரீஸ் பிரதமர் கூறியிருக்கிறார்.

பிற ஐரோப்பிய நாடுகளுக்கு வேறொரு சங்கடம். “பலவித இன்னல்களுக்கு நடுவேதான் பெரும் முயற்சி செய்து ஐரோப்பிய யூனியன் உருவானது. இந்த நிலையில் கிரீஸ் வெளியேறினாலோ அல்லது வெளியேற்றப்பட்டாலோ அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். நாளைக்கு வேறு ஏதோ காரணத்துக்காக வேறொரு ஐரோப்பிய நாடு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்து போக வேண்டுமென்று முடிவெடுக்கலாம்’’. இது தான் அவர்கள் கவலை.

இப்போதும்கூட சில விஷயங்களில் சில ஐரோப்பிய நாடுகள் தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டவே ஆசைப்படுகின்றன. இதன் காரணமாக பொதுவான போக்கிலிருந்து அவை விதிவிலக்கு பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக ஷெங்கன் விசாவைக் குறிப்பிடலாம்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-4/article7424583.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 5

 
 
மலைகள் சூழ அமைந்துள்ள கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் ஒரு பகுதி.
மலைகள் சூழ அமைந்துள்ள கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் ஒரு பகுதி.

முன்பெல்லாம் நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் விசா பெற வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் ஷெங்கன் எனப்படும் பொதுவான விசாவைப் பெற்றால் இத்தனை நாடுகளுக்கும் தடையின்றிச் செல்லலாம். இவற்றை இணைக்கும் நீண்ட தூர வேக ரயில்களும் உண்டு. போர்களினால் சிதறுண்ட ஐரோப்பா ஒருவழியாக பாடம் கற்றுக் கொண்டதன் ஓர் அடையாளமாகவும் இதைக் குறிப்பிடலாம்.

ஒருவரது எல்லையை மற்றவர் மதிப்பதற்கான குறியீடாகவும், தங்களது ஒன்றுபட்ட சிந்தனையை வெளிக்காட்டுவதாகவும் ஷெங்கன் விசா இருப்பதாக இவை கருதுகின்றன. ஆனால் பிரிட்டன் செல்ல வேண்டுமானால் நீங்கள் அந்த நாட்டிலிருந்து தனியானதொரு விசாவைப் பெற வேண்டும். ஒரு காலத்தில் பல காலனி நாடுகளைக் கொண்டிருந்ததாலும் இப்போதும் அவற்றில் சிலவற்றில் (நாடாளுமன்ற ஜனநாயகம் இருந்தால்கூட) அரசியின் தலைமையை ஏற்கும் இயல்பு இருப்பதாலும் பிரிட்டனுக்கு தான் தனித்தன்மை கொண்ட நாடு என்ற எண்ணம்.

தவிர கடலால் சூழப்பட்ட நாடு என்பதால் பிற நாடுகளுடன் எல்லைப் பிரச்னை என்பது தனக்கு இல்லையென்று கருதுகிறது பிரிட்டன். இதன் காரணமாக பொதுவான ஐரோப்பிய அமைப்பின் ராணுவ பட்ஜெட்டுக்கு அது போதிய நிதி ஒதுக்குவதில்லை.

ஆக ஐரோப்பிய யூனியனில் இருந்தும் கூட சில நாடுகள் தங்கள் தனித்தன்மையை இழக்க மறுக்கின்றன. எனவே வேறுபாடுகளையும் கொண்ட ஒற்றுமை.

என்றாலும் பொருளாதார விஷயத்தில் சக உறுப்பினருக்கு கருணைகாட்ட சில நாடுகள் முன்வரவில்லை. எனினும் அவற்றுக்கு வேறொரு உறுத்தல் தோன்றியிருக்கிறது. கிரீஸ் அளவுக்கு இல்லையென்றாலும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் நிதி நெருக்கடியில் உள்ளன. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்றவற்றை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். அப்படியானால் அடுத்தது அவர்களும் வெளியேற்றம்தானா?

நாடுகளின் எண்ணிக்கை குறையக் குறைய (அவை பொருளாதாரக் கோணத்தில் பலவீனம் கொண்டவையாக இருந்தாலும்கூட) ஐரோப்பிய யூனியனில் வலிமை குறையும். அரசியல் ஒற்றுமை என்கிற கோணத்தில் ஐரோப்பாவில் அமைதி நிலவ வைக்க அது எடுக்கும் முயற்சிகளில் தாக்கம் குறையும். போர் மூளும் சூழல் வருங்காலத்தில் உண்டானால் அப்போது ஐரோப்பிய யூனியன் குரல் உலக அளவில் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியாது.

‘‘கிரீஸ் ஒரு மிகச் சிறிய நாடு. அது ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகினாலோ யூரோவை இனி தனது நாணயமாக கொள்ளவில்லை என்றாலோகூட ஐரோப்பாவுக்குப் பெரிதாக எந்த பாதகமும் இருக்காது. சொல்லப்போனால் எப்போது பார்த்தாலும் சக உறுப்பினர் நாடுகளிடம் நிதி உதவி கேட்டுக் கொண்டே இருக்கும் கிரீஸ் வெளியேறினால் ஐரோப்பிய யூனியனுக்கு நல்லதுதான்’’ என்பவர்களும் உண்டு. பிரிட்டன் பிரதமரும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் கிரீஸ் ஆதரவாளர்கள் வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்கள். ‘‘ஒரு நாட்டில் பல மாநிலங்கள் இருந்தால் பின்தங்கிய மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக உதவி அளிக்கும். முன்னேறிய மாநிலத்தின் வருமானத்திலிருந்து பின்தங்கிய மாநிலத்துக்கு செல்வத்தைப் பாய்ச்சும். அமெரிக்காகூட தனது மாநிலங்களை அப்படித்தான் நடத்துகிறது.

ஐரோப்பிய யூனியன் என்பது பல்வேறு நாடுகளைக் கொண்டிருந்தாலும் ஒர் ஒருமித்த அமைப்பு. எனவே பொருளாதாரச் செழிப்பு மிகுந்த நாடுகளை கிரீஸ் போன்ற நாட்டுக்கு உதவி செய்யுமாறு வற்புறுத்துவதுதான் ஐரோப்பிய யூனியனுக்கு அழகு. மானியமாக இல்லையென்றாலும் கடனாகவாவது (கிரீஸின் நிதிநிலைமை சரியாகும் வரையில்) அதற்கு நிதி உதவி அளிக்கத்தான் வேண்டும். வசூலிப்பதில் கெடு கூடாது. தவணைத் தொகைகளைக் குறைத்துக் கொண்டு தவணைக் காலத்தை நீட்டிக்க வேண்டும்’’.

கிரீஸ் அவ்வளவு எளிதில் வாழ்ந்துவிடக் கூடிய ஒரு நாடு அல்ல. தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் குறிப்பிடவில்லை. இயற்கையின் நெருக்கடிகளைக் குறிப்பிடுகிறோம். அங்குள்ள மண் தானியங்கள் விளைவதற்கு ஏதுவானதாக இருப்பதில்லை.

நிறைய மலைகள் கொண்ட நாடு. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அதிக சக்தி தேவைப்படும்- அதிக நேரமும்.

கிரீஸில் நிறைய கடற்கரைகள் உண்டு. அந்த நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒரு நாள் பயணம் செய்தால் கடலை அடைந்து விடலாம். இதன் காரணமாகவே கிரீஸில் தொடக்கத்தில் தங்கிய பலரும் கடற் பயணிகளாகவே இருந்தனர்.

ஆனால் போதிய குடி தண்ணீர் வசதி கிரீஸ் நாட்டில் இல்லை.

விவசாயமும் போதிய அளவு இல்லை என்பதால் கடலை அடிப்படையாகக் கொண்ட விஷயங்களில்தான் வருமானம் காண்கிறார்கள் கிரேக்கர்கள். மீன் வணிகம் முக்கியமானதாகிறது. தவிர கடல் பயணங்களின் மூலம் அண்டைப் பகுதிகளில் உள்ள பொருள்களை வாங்கி விற்பதன் மூலம் வருமானத்துக்கு வழி செய்து கொள்கிறார்கள்.

உடல் பலம் மிக்க கிரேக்க ஆண்கள் பிற நாட்டு ராணுவத்தில் சேர்ந்து சிப்பாய்களாக பணிபுரிய முன் வருகிறார்கள். (எகிப்து மற்றும் மேற்காசிய நாடுகளில் சில இவர்களை ராணுவத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன). இன்னொரு சங்கடமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டுதான் ஆக வேண்டும். கடற் கொள்ளைகளில் ஈடுபடும் கிரேக்கர்கள் இன்னமும் உண்டு.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-5/article7433381.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 6

 
 
 
பண்டைய கிரீஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதி
பண்டைய கிரீஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடத்தில் உள்ள பார்வையாளர்கள் பகுதி

நிலத்துக்கு அடியில் சில முக்கியமான படலங்கள் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருக்கிறது. ஐரோப்பிய நிலத்தடிப் படலமும், ஆப்ரிக்க நிலத்தடிப் படலமும் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருப்பதால், அங்கு எரிமலைகளும், நில நடுக்கங்களும் அவ்வப்போது தோன்றுகின்றன. எப்போது எந்தவிதமான இயற்கைப் பேரழிவு நடைபெறுமோ என்ற பயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாகவோ என்னவோ அவர் களது மதமும் சில சுவாரசியங்களை உள்ளடக் கியதாக இருக்கிறது. அந்த மதத்தை ஆரகிள்ஸ் என்கிறார்கள். இதன்படி கடவுளர் நேரடியாகவே மக்களுடன் பேசுவார்கள். அப்படிப் பேசும் முறைகளில் ஒன்றுதான் சின்னச் சின்ன நில நடுக்கங்கள். இவற்றின் மூலமாகவும் இவற்றைத் தொடர்ந்தும் கடவுள் மக்களிடம் பேசுவார் என்று நம்பப்படுகிறது.

கடவுள் இயற்கைச் சீற்றங்களின் மூலம் மறைமுகமாகப் பேசினாரோ என்னவோ, கிரீஸ் நாட்டின் தொடக்க காலத்தில் அங்கு வெடித்த ஓர் எரிமலை அந்த நாட்டின் சரித்திர மாற்றத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. அந்த நாட்டில் சன்டோரினி என்ற தீவு ஒன்று உண்டு. அங்கு எரிமலை ஒன்று கி.மு.1400ல் வெடித்தது. இது அலைகளை ராட்சத அளவுக்கு உயர்த்தியதுடன், நில நடுக்கத்தையும் ஏற்படுத்தியது. இவற்றின் பயங்கர விளைவால் அதுவரை அங்கு நிலவிய மினோவன் எனப்படும் நாகரீகம் முற்றிலுமாக அழிந்தது.

நெடிய சரித்திரம் கொண்ட கிரீஸில் நடைபெற்ற சில முக்கிய வரலாற்று நிகழ்வுகளைப் பார்ப்போம்.

கி.மு. 776-ல் முதல் ஒலிம்பிக் விளையாட்டுகள் கிரீஸில் நடைபெற்றன. அவை நடைபெற்ற நகரம் ஒலிம்பியா (அதனால்தான் ஒலிம்பிக்ஸ் என்று பெயர்).

ஒலிம்பிக்ஸுக்கும், மதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வழிபாட்டுக்காக மக்கள் கூடிய இடம்தான் ஒலிம்பியா. அங்கு ஜியஸ் என்ற கடவுளின் ஆலயமும் இருந்தது.

ஒலிம்பியாவில் உள்ள மைதானத்தில் ஒரே சமயத்தில் 40 ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.

பண்டைய ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு பனைமரக் கிளை ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. தலையில் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டது. பார்வையாளர்கள் வெற்றியாளர்களை நோக்கி பூக்களை எறிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பந்தயத்தின் இறுதி நாளில் இந்தப் ‘பரிசு வழங்கும் விழா’ ஜியஸ் ஆலயத்தில் உயரமானதொரு மேடையில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மெகரா என்ற தளபதியும் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார். மாசிடோனியாவின் இளவரசனும், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொண்டார். டெமாக்ரிடஸ் என்ற தத்துவ ஞானியும் பங்கெடுத்துக் கொண்டார். பாலினிஸ்டோர் என்ற ஆட்டு இடையனும் பங்கெடுத்துக் கொண்டார்.

ஆஹா என்னவொரு சமத்துவம் என்று நீங்கள் வியப்படையும்போதே மற்றொன் றையும் கூறிவிடுவதுதான் நியாயம்.

பெண்கள் யாருமே ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாது. முழுக்க முழுக்க அது ஆண்களின் களனாகவே விளங்கியது.

இதைவிடக் கொடுமை திருமணமான பெண்கள் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்ப்பதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. திருமணமாகாத பெண்கள் போட்டிகளைக் காணலாம்.

பெண்களுக்கு அங்கீகாரம் என்ற கோணத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. குழந்தைச் செல்வத்தின் கடவுள் என்று கிரேக்கர்களால் வழிபடப்பட்ட பெண் தெய்வம் டெமீடர். அந்த பெண் தெய்வத்தின் கோவிலுக்கு பூசாரியாக ஒரு பெண் மட்டுமே நியமிக்கப்பட முடியும். அந்தப் பெண் பூசாரிக்கு மட்டுமே ஒலிம்பிக் பந்தயங்களின்போது சிறப்பிடம் உண்டு.

ஆனால் கைநிஸ்கா என்ற பெண்மணிக்கு ஒலிம்பிக் விருது வழங்கப்பட்டது. ஸ்பார்ட்டா என்ற பகுதியின் மன்னனான ஆர்கிடமோஸின் மகள் இவள். போட்டியில் கலந்து கொள்ள இவளரசிக்கும் தடைதான். என்றாலும் அவள் விருது பெறுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்பது காரணமல்ல. இதன் பின்னணியே வேறு.

குதிரை ஏற்றப் போட்டிகளிலும் (குதிரை களால் இழுக்கப்பட) ரதப் போட்டிகளிலும் வென்றால், அந்தக் குதிரை ஓட்டிகளுக்கோ, ரதத்தை ஓட்டியவர்களுக்கோ பரிசு கிடை யாது. அந்தக் குதிரைகளின் சொந்தக்காரர் களுக்குதான் பரிசு. அந்த விதத்தில்தான் கைநிஸ்கா முதல் ஒலிம்பிக்ஸில் விருது பெற்ற பெண்மணி என்ற சிறப்பை அடைந்தார். இன்னொரு விஷயம் யாருக்கும் தெரியாமலோ, ஆண் உடை அணிந்தோ எந்தத் திருமணமான பெண்மணியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து விட்டால், அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை எது தெரியுமா? மரண தண்டனைதான்.

எதற்காகத் தொடக்கத்திலிருந்தே நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது தெரியுமா? அக்காலத்தில் காலத்தை ஒலிம்பியார்டு என்ற கணக்கில்தான் அளந்தார்கள். இது நான்கு வருட இடைவெளிகளை அடிப்படையாகக் கொண்டது. அவ்வப்போது அண்டை நாடுகளுடனும், உள் நாட்டிலும் போர்கள் நடந்து கொண்டிருந்ததால், நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்பது வசதியாக இருந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-6/article7440429.ece

  • தொடங்கியவர்

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 7

 
 
கிரீஸில் உள்ள லியோனிடஸ் சிலை.
கிரீஸில் உள்ள லியோனிடஸ் சிலை.

கிரேக்கத்தின் தனித்தனி நகரப் பகுதிகள் (இவற்றை City States) என்பார்கள்) நன்கு செழித்து வளர்ந்தன. பலவித ஆட்சி முறைகள் ஆங்காங்கே தோன்றின. அவற்றில் ஜனநாயகமும் உண்டு. அறிவியல், பண்பாடு, நுண்கலைகள் போன்றவை கி.மு.500லேயே அங்கு மலரத் தொடங்கி விட்டன.

கி.மு.546ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம் கிரீஸின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது. தொடங்கின தொடர் யுத்தங்கள். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு போர்தான்.

இந்த யுத்தம் தொடங்குவதற்கு 50 வருடங்களுக்குமுன் ‘சைரஸ் தி கிரேட்’ என்ற மன்னன் ஆசியா மைனர் பகுதியின் மேற்கில் இருந்த கிரேக்கக் காலனிகளை தன் வசம் ஆக்கினார் (ஆசியா மைனர் என்பது ஒரு தீபகற்பம். இது தற்கால துருக்கி மற்றும் அர்மீனிய உயர்மட்ட நிலங்களையும் கொண்டது). பதிலுக்கு இந்தக் கிரேக்கப் பகுதிகள் அரிஸ்டாகொரஸ் என்ற மன்னனின்கீழ் இணைந்து எதிர்த்தன. ஏதென்ஸ், எரிட்ரியா போன்ற பகுதிகள் பாரசீகப் பகுதியில் தலைநகரான சர்டிஸ் என்பதை எரித்தன. பாரசீக மன்னனாக பிறகு அரியணையில் ஏறிய டரியஸ் தி கிரேட் என்ற மன்னன் இதற்குப் பழிவாங்க சபதம் எடுத்தான்.

இங்கே டரியஸைப் பற்றி சில வார்த்தைகள். சரித்திரத்தில் அழுத்தமான இடம் பெற்ற மன்னன் இவன். இவன் ஈரானின் ஷா ஆன பிறகு பாரசீக சாம்ராஜ்யத்தை இருபது பகுதிகளாகப் பிரித்தான். ஒவ்வொன்றிற்கும் ஓர் ஆளுநரை நியமித்து ஆட்சி செய்தான். தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தினான். நாட்டுக்குள்ளேயே வணிகம் வளர உதவினான். ஜெருசலேம் நகரில் யூதர்கள் சாலமன் ஆலயத்தை எழுப்புவதற்குக்கூட அனுமதித்தான்.

எப்படியோ போர்கள் தவிர்க்க முடியாதவை ஆகின. கி.மு. 449ல் மேற்படி போர்கள் முடிவுக்கு வந்தாலும், இந்த இரண்டு வித்தியாசமான நாகரிகங்களும் தொடர்ந்து 100 வருடங்களுக்காவது இணையாகவே தொடர்ந்தன.

ஸ்பார்ட்டா என்பது இன்றைய கிரீஸின் ஒரு பகுதி. அதற்கும் ஏதென்சுக்கும் அடிக்கடி உரசல்கள் உண்டாயின. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது பாரசீகம்.

கிரேக்கத்துக்கும், பாரசீகத்துக்கும் நடைபெற்ற போரில் ஒரு மாபெரும் ஹீரோவாகக் கருதப்பட்டவர் லியோனிடஸ். இவர் ஸ்பார்ட்டா பகுதியின் மன்னர். துணிவுக்கும், தியாகத்துக்கும் பெயர்போன வராக விளங்கியவர். இவர் பல ஓவியர்களால் வரையப்பட்டிருக்கிறார். பல திரைப்படங்கள் இவர் கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

பாரசீக மன்னரான ஜெர்ஜெஸ் கி.மு. 480ல் தனது மாபெரும் ராணுவத்துடன் வடக்கு கிரீஸை தாக்கத் தொடங்கினார். கிரேக்கர்கள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்தனர்.

மத்திய கிரீஸில் உள்ள ஒரு பகுதி தெர்மோபயிலே. அந்தக் குறுகிய பகுதியை ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோனிடஸுவும் அவரது 300 ராணுவ வீரர்களும் அடைந்தனர். அங்கு ஏற்கெனவே 4,000 கிரேக்க வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பாரசீக ராணுவ வீர்ர்களின் எண்ணிக்கை 80,000 - கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்

தாக்குவதற்கு முன் பாரசீக மன்னன் நான்கு நாட்கள் காத்திருந்தார். எப்படியும் கிரேக்கர்கள் சரணடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை. யாரும் வரக்காணோம். அளவுக்கு மீறிய பயம் என நினைத்தார் பாரசீக மன்னர். தன்னுடைய சில பிரதிநிதிகளை அனுப்பினார். ‘‘கிரேக்கர்களின் ஆயுதங் களைப் பெற்று வாருங்கள்’’ என்றார். எந்த எதிர்ப்பும் இருக்காது என்ற நினைப்பு. ஆனால் ஸ்பார்ட்டா மன்னர் லியோனிடஸ் ‘‘நீங்கள் அத்தனைபேருமே வந்து எங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள முடியுமா என்று முயற்சி செய்து கொள்ளுங்களேன்’’ என்றார். அதாவது போர் முழக்கம்!

தொடக்கத்தில் கிரேக்கப்படை தாக்குதலைத் தொடங்கவில்லை. உள்ளே நுழையும் பாரசீகப் படையை தடுப்பதில் மட்டும்தான் ஈடுபட்டனர். அந்தச் சமயத்தில் அங்கும் ஒரு துரோகி இருந்தான். கிரேக்கவாசியான அவன் பாரசீகப் படையினருக்கு ஒரு ரகசிய வழியைக் காட்டிக் கொடுத்தான். ‘அதன் வழியாகச் சென்றால் நீங்கள் கிரேக்க ராணுவத்தை வட்டமாக முற்றுகையிடலாம். ஜெயிப்பது எளிது’ என்றான்.

பாரசீகப்படை பேரார்வத்துடன் ரகசிய வழிக்குள் நுழையத் தொடங்கியது.

மன்னன் லியோனிடஸ் யாரும் எதிர்பாராத ஒரு ஆணையை உதிர்த்தார். ‘‘.இங்கே நானும் என்னுடன் வந்த 300 ராணுவ வீரர்களும் மட்டும் இருந்தால் போதுமானது. பிற ராணுவ வீரர்கள் இங்கிருந்து கலைந்து விடுங்கள். வருங்காலத்தில் பாரசீகத்தை எதிர்த்து வெற்றி கொள்ள அவர்கள் தேவைப்படுவார்கள்’’ என்றார். வீரத்திலும் ஒரு தியாகம்.

4,000 வீரர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டாலும் அவர்களில் 700 பேர் நகர மறுத்தார்கள். பாரசீகப் படையுடன் தாங்கள் அப்போதே மோதுவோம் என்பதில் பிடிவாதம் காட்டினார்கள். ஆக 1000 பேருடன் மன்னன் லியோனிடஸ் அங்கே இருந்தார். பாரசீகப்படை வட்டமிட்டு முற்றுகையிட்டது. சிறந்த வியூகம், மிக அதிக அளவில் படையினரின் எண்ணிக்கை ஆகிய இரண்டு காரணங்களால் பாரசீகப்படை வென்றது. மன்னன் லியோனிடஸ் இறுதிவரை மிக வீரமாகப் போரிட்டு பின்னர் இறந்தார்.

ஸ்பார்ட்டா பகுதியினருக்கு இதில் பெரும் சிலிர்ப்பு ஏற்பட்டது. காரணம் ‘வெற்றி அல்லது வீர மரணம்’ என்பதுதான் அவர்களது யுத்தத் தீர்மானமாக விளங்கியது. இன்றும் தெர்மோபயிலே பகுதியில் மன்னன் லியோனிடஸின் சிலை கம்பீரமாக நிற்கிறது. ஸ்பார்ட்டாவில் அவரது நினைவுச் சின்னம் கம்பீரமாக காட்சி தருகிறது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-7/article7446929.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 8

 
 
 
அலெக்சாண்டருக்கு பாடம் கற்பிக்கும் அரிஸ்டாட்டில். பிரபல ஓவியர் ஜீன் லியோன் வரைந்த படம்.
அலெக்சாண்டருக்கு பாடம் கற்பிக்கும் அரிஸ்டாட்டில். பிரபல ஓவியர் ஜீன் லியோன் வரைந்த படம்.

கி.மு. 480ல் டெலியன் கூட்டமைப்பு (Delian League) உருவானது. அதாவது கிரேக்கத்தில் அமைந்த சின்னஞ்சிறு பகுதிகள் (City-States) சுமார் 160 ஒன்றிணைந்தன. பாரசீக சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதுதான் அந்த இணைப்பின் ஒரே லட்சியமாக இருந்தது.

ஆனால் இந்த ஒற்றுமை அவ்வப்போது நீர்த்துப் போனது. கி.மு. 420ல் கிரேக்கப் பகுதிகளான ஏதென்ஸுக்கும், ஸ்பார்ட்டாவுக் குமிடையே கடும் போர் உண்டானது. இதன் காரணமாக பிற கிரேக்கப் பகுதிகளெல்லாம் இரண்டாகப் பிரிந்து நின்றன. இரு கிரேக்கப் பகுதிகளுக்கிடையே நடைபெற்ற மிக பயங்கரமான யுத்தம் என்று கருதப்படும் அதை ‘பெலோப்னேஷியன் போர்’ என்று அழைக்கிறார்கள்.

ஏதென்ஸ் பிரிவின் கூட்டு நாடுகளில் பலவும் தீவுகள். இதன் காரணமாக ஏதென்ஸ் பிரிவினர் கடற்படையில் பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஸ்பார்ட்டா அணியின் நண்பர்கள் கிரேக்கத்தின் உள்ளார்ந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தரை ராணுவத்தில் தலைசிறந்தவர்களாக இருந்தார்கள். எனினும் ஏதென்ஸ் அணியினரிடம் பொருளாதார பலம் அதிகமாகவே இருந்தது.

‘30 வருட அமைதி ஒப்பந்தம்’ என்ற ஒன்றில் இருதரப்பினரும் கையெழுத் திட்டாலும் அதைச் சீக்கிரமே மீறத் தொடங்கினர். குறிப்பாக ஏதென்ஸ் ஒப்பந்த மீறலை கொஞ்சம் அதிகமாகவே செய்தது.

இதனால் போர் வெளிப்படையாகவே மேலும் பெரிய அளவில் தொடங்கியது. இதன் காரணமாக சில கிரேக்க நகரங்கள் அழிந்தன. ஏதென்ஸ் அழிவை அதிகம் சந்தித்தது.

பின்னர் மன்னர் இரண்டாம் பிலிப் மாசிடோனியாவிலிருந்து வந்து ஸ்பார்ட்டாவைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளையும் தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டபோது மேற்படிப் பகைமை முடிவுக்கு வந்தது. மன்னர் இரண்டாம் பிலிப்ஸை நாம் அறிவோம் - அலெக்ஸாண்டரின் அப்பா அவர்.

இந்த இடத்தில் அலெக்ஸாண்டர் குறித்து ஒரு விளக்கம். அவரை கிரேக்க வீரர் என்று கருதுகிறோம். ஆனால் அவர் கிரேக்கத்தை வெற்றி கொண்டார் என்கிறது வரலாறு. அப்படியானால் அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். கிரேக்கம் எனப்படும் கிரீஸின் மேற்குப் பகுதியில் உள்ளது மாஸிடோனியா. அலெக்ஸாண்டரின் இனம் கிரேக்க இனமே தவிர அவரது சொந்த நாடு மாஸிடோனியாதான். அப்போது கிரீஸ் என்ற நாடு (இப்போது உள்ளதைப்போல) கிடையாது. இப்போதைய கிரீஸ் பகுதியில் உள்ள பல ராஜாங்கங்களும் அப்போது மாஸிடோனியாவின் உயர்வை ஏற்றுக் கொண்டிருந்தன. (அலெக்சாண்டரைத் தனது மண்ணின் மைந்தன் என்று இப்போது உரிமை கொண்டாடுகிறது கிரீஸ். தவிர தத்துவ அறிஞர் அரிஸ்டாடிலையும் தனது மண்ணின் மைந்தன் என்கிறது).

மாஸிடோனியா என்ற நாடு பாரசீகத்தைத் தாண்டி இருந்தது. (பாரசீகம் என்பது தற்போதைய ஈரான்). அதன் மன்னர் இரண்டாம் பிலிப். அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பெரிய ஆசை உண்டு. தன் நாட்டின் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு.

அண்டை நாடுகளுக்கு விஜயம் செய்து அவற்றின் சில பகுதிகளை வசப்படுத்திக் கொண்டார். எபிரஸ் என்ற அண்டை நாட்டின் (அந்த நாட்டின் தற்போதைய பெயர் அல்பேனியா) இளவரசி ஒலிம்பியாஸ் என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். மன்னர் பிலிப்புக்கும் ஒலிம்பியாஸுக்கும் பிறந்தவர்தான் அலெக்ஸாண்டர்.

ஒலிம்பியாஸ் சிகப்பான உடல் கொண்டவள். அவள் இளவரசிதான் என்றாலும் அவளது தந்தையின் பரம்பரை பலவிதமான காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களைக் கொண்டது. பாம்புகளோடு விளையாடுவது ஒலிம்பியாஸுக்குப் பிடிக்கும். தூங்கும்போது கூட அவள் பக்கத்தில் பாம்புகளைப் படுத்துக் கொள்ள அனுமதிப்பாள். இப்படி ஒலிம்பியாஸைப் பற்றிப் பலவித செய்திகள் பரவியிருக்கின்றன.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் பிலிப்பின் மகன் அலெக்ஸாண்டரும் போர்த் தந்திரங்களில் சிறந்து விளங்கினான். ஆனால் மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் கூட அவன் சிறந்து விளங்கியதற்குக் காரணம் உண்டு.

கிரீஸில் அரிஸ்டாட்டில் என்ற சிறந்த தத்துவ ஞானியிடம் பலவித பயிற்சிகளைப் பெற்றதால்தான் பல கலைகளில் வல்லவனாக அலெக்சாண்டர் திகழ்ந்தான். பெல்லா நகருக்கு வந்து தன் மகனுக்குப் பாடங்களை கற்றுத் தரவேண்டுமென்று அரிஸ்டாட்டிலிடம் ஏற்பாடு செய்து கொண்டார் மன்னர் பிலிப். அரிஸ்டாட்டிலும் மன்னர் பிலிப்பும் இளம் வயது நண்பர்கள். அரிஸ்டாட்டிலின் தந்தை ஒரு மருத்துவர். பிலிப்பின் அப்பாவுக்கு மருத்துவம் பார்த்தவர்.

தனது பன்னிரண்டாவது வயதிலேயே அலெக்ஸாண்டர் குதிரை ஏற்றத்தில் மிகச் சிறந்து விளங்கினான். அப்போதுதான் அவனுக்குச் சவாலாக வந்தது புஸிபேலஸ் என்ற பெயர் கொண்ட குதிரை.

கறுப்பு உடல், ஒரு கண் புருவத்துக்கு மேல் வெள்ளை நட்சத்திரக் குறி, பெருத்த தலை இப்படிக் காட்சி அளித்தது அந்த பலம் பொருந்திய குதிரை. குதிரை வணிகர் ஒருவர் அதை மன்னன் இரண்டாம் பிலிப்புக்கு விற்பதற்காகக் கொண்டு வந்தார். தன் குதிரைப் பிரிவுத் தளபதியை அழைத்து அந்தக் குதிரையை சோதிக்கச் சொன்னார் மன்னர்.

குதிரையின் பற்களை ஆராய்வதிலிருந்து, அதன் மீது ஏறி ஒரு சுற்று வலம் வருவது வரை பலவித சோதனைகளை முதலில் அந்தத் தளபதி செய்து பார்க்க வேண்டும். அவனுக்கு திருப்தி அளித்தால் மன்னர் குதிரைக்கான தொகை என்ன என்பதைத் தீர்மானிப்பார். அதற்கு வணிகன் ஒத்துக் கொண்டால் மன்னர் அந்தக் குதிரையில் ஏறி சவாரி செய்து பார்ப்பார். அதில் திருப்தி அடைந்ததால் அந்தக் குதிரையை வாங்கிக் கொள்வார். இதுதான் மரபு.

பின்னொரு காலத்தில் அந்த குதிரை சரித்திரத்தில் இடம் பெறப் போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-8/article7450984.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ்- 9

 
 
பாரசீக அரசன் 3-ம் டாரியஸுடன் அலெக்ஸாண்டர் போரிடுவதைச் சித்தரிக்கும் கி.மு. 2-ம் நூற்றாண்டு ஓவியம்.
பாரசீக அரசன் 3-ம் டாரியஸுடன் அலெக்ஸாண்டர் போரிடுவதைச் சித்தரிக்கும் கி.மு. 2-ம் நூற்றாண்டு ஓவியம்.

மன்னர் இரண்டாம் பிலிப் தனது ராணுவத் தளபதியை அந்தக் குதிரையின் மீது ஏறி ஒரு வலம் வரச் சொன்னார். ஆனால் தன்னைக் கையாள அந்தக் குதிரை அனுமதிக்கவில்லை. அதன் வாயைத் திறந்து பார்க்க தளபதி முயற்சித்தபோது முரண்டு பிடித்தது. பின்னர் அந்தத் தளபதி தன்மீது ஏற முயற்சித்தபோது அது தன் இரண்டு முன்னங் கால்களையும் உயரே தூக்கி அவனைக் கீழே விசிறிப் போட்டது. தளபதிக்கு இதனால் பெரும் காயம் ஏற்பட்டது.

அந்தக் குதிரையை வாங்க மன்னர் மறுத்தார். வணிகர் சோகத்துடன் அந்த இடத்திலிருந்து தன் குதிரையுடன் நகர முயற்சித்தார். அப்போது மன்னர் பிலிப்பின் அங்கியைப் பிடித்து இழுத்தது ஓர் இளம் கை. அது மன்னரின் மகன் அலெக்ஸாண்டரின் கை.

பதிமூன்று வயது அலெக்ஸாண்டருக்கு அந்தக் குதிரை மிகவும் பிடித்து விட்டது. “அந்தக் குதிரையை சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்'' என்றான் அலெக்ஸாண்டர். முதலில் தயங்கினாலும், பிறகு ஒப்புக் கொண்டார் மன்னர் பிலிப்.

அந்தக் குதிரைக்கு அருகே சென்றான் அலெக்ஸாண்டர். பின்பு அதைப் பார்த்த படியே ஒரு வலம் வந்தான். அந்தக் குதிரை யைத் தட்டிக் கொடுத்தான். அதன்மீது ஏறுவதற்கு அவன் முயற்சி செய்யவே இல்லை. பிறகு மெல்ல மெல்ல அந்தக் குதிரையை சூரியனை நோக்கித் திருப்பி னான். குதிரை அமைதி அடைந்தது. ஏனென் றால் இதுவரை அந்தக் குதிரை தன் நிழலைப் பார்த்து தானே பயந்து கொண்டி ருந்தது. இப்போது சூரியனைக் காணும் நிலை வந்ததும், அதன் நிழல் அதற்குத் தென்படவில்லை. பிறகு அலெக்ஸாண்டர் அந்தக் குதிரையில் ஏறி மைதானத்தை பல சுற்றுகள் வலம் வந்தான். பார்த்தவர்கள் அனைவருமே கை தட்டிப் பாராட்டினார்கள்.

தந்தைக்கு இதில் மிகப் பெருமை உண் டானது. மகனைக் கட்டிக் கொண்டார். “மகனே, உனக்கேற்ற பெரும் சாம்ராஜ்யங் களை நீ உருவாக்கிக் கொள். மாஸிடோனியா என்பது உனக்கு மிகச் சிறிய எல்லைப் பகுதி'' என்றார்.

பதிமூன்று வயது அலெக்ஸாண்டர் புத்தி சாலியாக இருந்ததோடு ஆணவம் பிடித்தவனாகவும் இருக்க, அவனை நல்வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பும் அரிஸ்டாட்டிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

மன்னர் பிலிப் மாபெரும் சைனியத்துடன் அண்டை நாடான திரேஸை ஆக்கிரமித்தார். அப்படிச் செல்லும்போது பதினாறே வயது நிரம்பிய அலெக்ஸாண்டரை மாஸிடோனியாவின் ஆட்சியில் அமர்த்திச் சென்றார். மன்னர் பிலிப் நினைத்த அளவுக்கு எளிதாக திரேஸை கைப்பற்ற முடியவில்லை. அங்கிருக்கும் பழங்குடி மக்கள் பலமாக எதிர்த்தனர்.

அலெக்ஸாண்டர் தானும் ஒரு படைக்குத் தலைமை தாங்கிச் சென்று அந்தப் புரட்சியாளர்களை அடக்கினான். புரட்சியை அடக்கியதோடு, அவர்கள் வசித்த மேடி (Maedi) என்ற பகுதியையும் தன்வசம் கொண்டு வந்தான். இந்த வெற்றிக்கு அடையாளமாக அந்தப் பகுதியின் பெயரை அலெக்ஸ்டாண்ரோபோலிஸ் என்று மாற்றியமைத்தான். பின் கிரேக்கத்தை நோக்கிச் சென்ற மாஸிடோனிய ராணுவத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவனாக நியமிக்கப்பட்டான் அலெக்ஸாண்டர்.

தொடங்கியது போர். செரோனியா போர் என்று அழைக்கப்பட்ட இந்த யுத்தத்தில் கிரேக்கர்கள் தோல்வியுற்றனர். மாஸிடோனியா படையின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவன் அலெக்ஸாண்டர்தான்.

இதைத் தொடர்ந்து தன் நாட்டின் பிரதம தளபதியாக தன் மகனை ஆக்கினார் பிலிப்.

அடுத்ததாக பாரசீகத்தைத் தன் வசம் கொண்டு வர முடிவெடுத்து தன் படையுடன் அந்தப் பகுதியை அலெக்ஸாண்டர் சென்றான். வென்றான்.

அதேசமயம் அலெக்ஸாண்டரின் குடும்பத்தில் குழப்பங்கள் கூடிக்கொண் டிருந்தன. அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் பிற பெண்களிடம் தொடர்பு கொண்ட சேதி அவர் மனைவி ஒலிம்பியாஸை எட்டியிருந்தது.

அடுத்ததாக மன்னர் பிலிப், கிளியோபாட்ரா என்பவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் சேதி வந்தது. (வாசகர்கள் ரோமானியச் சரித்திரத்தில் ஜுலியஸ் சீஸரோடு இணைந்து வாழ்ந்த பேரழகி கிளியோபாட்ராவோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இருவரும் வெவ்வேறு நபர்கள்).

“நான் கேள்விப்பட்டது உண்மையா?'' என்று கேட்டாள் ஒலிம்பியாஸ். மன்னர் ஃபிலிப் தடுமாறவில்லை. “உண்மைதான். நான் மாஸிடோனியாவைச் சேர்ந்த ராஜ குடும்பத்தில் பிறந்த கிளியோபாட்ராவைத் திருமணம் செய்து கொள்வதாக இருக்கி றேன்'' என்றார் அவர் தெளிவாக. “உங்கள் முடிவு எனக்குப் பிடிக்கவில்லை'' என்றாள் ஒலிம்பியாஸ். “அது பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்றார் ஃபிலிப்.

அலெக்ஸாண்டர் தாயை சமாதானப் படுத்தினான். அதுமட்டுமல்ல தந்தையின் திருமணத்தில் கலந்து கொள்ளவும் செய்தான். ஆனால் அவன் பொறுமையை உடைத்த நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது.

பிலிப் - கிளியோபாட்ராவின் திருமணம் ஆடம்பரத்துடன் முடிந்தது. அலெக்ஸாண்டர் மீது மக்கள் மதிப்பு வைத்திருந்தனர். என்றாலும் மன்னர் ஃபிலிப் மறுமணம் செய்து கொண்டதை அவர்கள் வெறுக்க வில்லை. எப்படியிருந்தாலும் நாட்டை அடுத்து ஆளப்போவது இளவரசர் அலெக்ஸாண்டர்தானே!

திருமணம் முடிந்தபின் திருமண ஊர்வலம் நடந்தது. குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றில் பிலிப்பும் - கிளியோபாட்ராவும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தனர். அருகிலேயே இளவரசன் அலெக்ஸாண்டர் குதிரையின்மீது அமர்ந்து கொண்டு கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்தான்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-9/article7455588.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 10

 
புசிபேலஸ் குதிரையுடன் அலெக்சாண்டர் சிலை. ஸ்காட்லாந்தில் இந்த சிலை உள்ளது.
புசிபேலஸ் குதிரையுடன் அலெக்சாண்டர் சிலை. ஸ்காட்லாந்தில் இந்த சிலை உள்ளது.

மன்னர் பிலிப்புக்கும், கிளியோபாட்ரா வுக்கும் திருமண ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது கிளியோபாட்ராவின் சித்தப்பாவான தளபதி அட்டாலஸ் உரத்த குரலில் இப்படிக் கூறினார்.

''உங்கள் மன்னர் பிலிப்புக்கும் எங்கள் நாட்டு இளவரசி கிளியோபாட்ராவுக்கும் இப்போது திருமணம் நடக்கிறது. விரைவில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும். அதுதான் உங்கள் நாட்டுக்கு விடிவு காலம்'' என்றார்.

அருகில் இருந்தவர்களுக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. அவர்களில் ஒருவர் “எங்கள் நாட்டுக்குதான் ஏற்கெனவே இளவரசர் அலெக்ஸாண்டர் இருக்கிறாரே? ஆக எங்களுக்கு விடிவு காலம் ஏற்கெனவே வந்துவிட்டது'' என்றார்.

தளபதி அட்டாலஸ் வஞ்சகமாகச் சிரித்தார். “அடடா, புரிந்து கொள்ளவே மாட்டீர்களா? மாசிடோனியாவுக்கு ஒரு கவுரவமான வாரிசு இனிமேல்தான் கிடைக்கப்போகிறது” என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் கடும் கோபம் அடைந்தார். அதாவது தன் தாய் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் இல்லை என்கிறார். தன்னையும், தன் தாயையும் அவமானப்படுத்துகிறார். கோபமடைந்த அலெக்ஸாண்டர் தன் அருகில் இருந்த பீங்கான் கோப்பையை எடுத்து அதை தளபதி மீது வீசினான்.

கோப்பை வேகமாக அட்டாலஸின் நெற்றியில் மோதியது. அங்கு காயம் ஏற்பட்டு லேசாக ரத்தம் சிந்தியது. இதைப் பார்த்த மணமகள் கிளியோபாட்ரா ‘ஓ’வென்று அலறினாள்.

புது மாப்பிள்ளையான மன்னர் பிலிப் அவசரமாகச் செயல்பட்டார். தன் வாளை நீட்டியபடி மகன் அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்தார். அப்படி வேகமாக வரும்போது கால் தடுக்கி கீழே விழுந்தார்.

அலெக்ஸாண்டர் கிண்டலாக நகைத்தார். “அடடா, இந்த புது மாப்பிள்ளை ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை படையெடுத்து ராஜ்யங்களைப் பிடிக்கப் போகிறாராம். ஆனால் எனக்கு எதிரிலிருக்கும் கொஞ்ச தூரத்தைக்கூட ஒழுங்காக கடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டாரே''.

மன்னர் பிலிப்பின் கோபம் எல்லை மீறியது. புது மனைவியின் முன்னால் தன் மகன் தன்னை இவ்வளவு அவமானப்படுத்துகிறானே!. அலெக்ஸாண்டர் தன் வா ளை எடுத்துக் கொண்டார். பொதுமக்கள் கலவரம் அடைந்தனர். மன்னரின் திருமண ஊர்வலத்துக்கு வந்திருக்கிறோம். அது துக்க ஊர்வலமாக மாறிவிடக் கூடாதே என்று கவலைப்பட்டனர். இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

எப்படியோ அப்போதைக்கு ஒரு கைகலப்பு தவிர்க்கப்பட்டது. ஆனால் மன்னனுக்கும், இளவரசனுக்குமிடையே வெறுப்பு மூண்டுவிட்டது.

ஒரு நாள் ஒலிம்பியாஸ் மகனிடம் தனிமையில் பேசினாள்.

''அலெக்ஸ், இங்கிருந்து சென்றுவிடலாம் என்றிருக்கிறேன்'' என்றாள்.

''கொஞ்சம் பொறுமை காட்டலாமே. ஒருவேளை அப்பாவின் மனம் மாறலாம். புதிய மனைவியை அனுப்பிவிட்டு உங்களிடமே அவர் திரும்பலாம்'' என்றான் அலெக்ஸாண்டர்.

''நான் இனிமேல் என் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. உன்னைப் பற்றித்தான் யோசிக்கிறேன்''. “உன் தந்தையின் வெறுப்பு எந்த எல்லைக்குச் செல்லக் கூடும் என்பது உனக்குத் தெரியாது''.

“என்ன என்னை நாடு கடத்திவிடுவாரா? அப்படிச் செய்தால் இந்த நாடே கொந்தளிக்கும்'' என்றான் அலெக்ஸாண்டர்.

“அது உன் தந்தைக்கும் தெரியும். எனவே அவர் உன்னை நாடு கடத்த மாட்டார். கொன்றுவிடுவார் - யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி'' என்றாள்.

அலெக்ஸாண்டர் உறைந்து போனான். தாயும், மகனுமாக நீண்ட நேரம் பேசினர். பின்னர் தன் அம்மாவோடு மாசிடோனியாவை விட்டுக் கிளம்பினார். எபிரஸ் தேசத்துக்குச் சென்றார். அதுதான் அலெக்ஸாண்டரின் தாய் வழித் தாத்தாவின் நாடு.

அங்கிருந்து தொடங்கியது அலெக்ஸாண்டரின் போர் விஜயம். புசிபேலஸ் குதிரையுடன் அடுத்தடுத்து பல பகுதிகளை (பாரசீகம் உட்பட) வெற்றி கண்டபடி சிந்து பிரதேசத்தருகே முன்னேறினார்.

தான் வெற்றி பெற்ற பகுதிகளை கிரேக்கத்தோடு இணைக்கவில்லை அலெக்ஸாண்டர். கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டார். வெற்றி பெற்ற நாடுகளின் செல்வங்களைக்கூட அவர் கிரேக்கத்துக்கு எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை (அவர் கிரேக்கத்துக்குத் திரும்புவதைவிட அடுத்தடுத்துப் பல நாடுகளை வெற்றி கொள்ளும் வெறியுடன்தான் இருந்தார் என்பது வேறு விஷயம்). தான் வெற்றி கண்ட ஒவ்வொரு நாடும் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.

‘அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உள்ளூர் மன்னன் உயிர் தப்பிக்கலாம். அலெக்ஸாண்டரின் பிரதிநிதி ஒருவர் அந்த நாட்டில் தங்கியபடி இயங்குவார். அவர் கட்டளைப்படி அந்த அரசன் இயங்க வேண்டும்’. இதுதான் அலெக்ஸாண்டரின் வழிமுறையாக இருந்தது.

சிந்து பிரதேசத்திலிருந்து மகாசகாவதி என்ற இடத்தைத் தாண்டிச் செல்ல முயன்றார். அந்த வழியாகச் சென்று கேகய நாட்டைத் தாக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். `கேகய நாட்டை வசப்படுத்தினால், அடுத்து காந்தாரம்தான். காந்தாரத்தின் இளவரசனோ என்னுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார். அதற்கடுத்து காஷ்மீரகத்தை நம் வசப்படுத்தி விடலாம். பிறகு மகதம், கலிங்கம் என்ற வேட்டையைத் தொடரவேண்டியதுதான்'. இதுதான் அலெக்ஸாண்டரின் திட்டமாக இருந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-10/article7459959.ece

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 11

 
 
அலெக்சாண்டரின் படையெடுப்பை காட்டும் ஓவியம்.
அலெக்சாண்டரின் படையெடுப்பை காட்டும் ஓவியம்.

கி.மு.356லிருந்து 323வரை அலெக்ஸாண்டர் பெற்ற வெற்றிகள் கொஞ்ச நஞ்சமல்ல. தோல்வியையே காணாத வெற்றிகள் அவை. கிரீஸில் தொடங்கி எகிப்தைத் தாண்டி இன்றைய துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தான்வரை படர்ந்த நீண்ட வெற்றிகள் அவை. ஒருவிதத்தில் கிழக்கையும், மேற்கையும் அவர் தனது படையின் மூலம் இணைத்தார் என்றே கூறலாம்.

அலெக்ஸாண்டர் வாழ்ந்தது 32 வருடங்கள்தான். ஆனால் தன் வாழ்வின் பிற்பகுதியில் அவர் ஒரு கடவுளாகவே கருதப்பட்டார். அவரது வாழ்க்கையைப் பற்றி பல கதைகள் நிலவுகின்றன. மிகவும் தொன்மையான காலம் என்பதாலும், ஆவணப்படுத்தப்படாததாலும் உண்மை எது பொய் எது என்பதைப் பிரித்தறிய வரலாற்று ஆசிரியர்களே சிரமப்படுகின்றனர். அக்காலப் போர்களைப் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. அலெக்ஸாண்டரின் தனி வாழ்வு குறித்துதான் பல வேறுபாடுகள்.

தனது வெற்றிகளை அலெக்ஸாண்டர் கொண்டாடிய விதமே அலாதியானது. தான் வெற்றி கண்ட பல்வேறு நாடுகளில் டஜன் கணக்கில் நகரங்களை உருவாக்கி அவற்றுக்குத் தன் பெயரையே சூட்டிக் கொண்டார். பெரும்பாலும் அலெக்ஸாண்டரியா என்பதுதான் இந்த நகரங்களுக்கு சூட்டப்பட்ட பெயராக இருந்தது. என்றாலும் அதே பெயருடன் இன்றளவும் இருக்கும் பெரிய நகரம் எகிப்தில் உள்ளது. நைல் நதிக்கரையில் உள்ள இந்த நகரம் எகிப்தின் இரண்டாவது பெரிய நகரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிந்துப் பிரதேசத்திலிருந்து மகாசகாவதியைத் தாண்டி கேகய நாட்டை வசப்படுத்த வேண்டுமென்று அலெக்ஸாண்டர் திட்டமிட்டிருந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை.

மகாசகாவதியின் மன்னருக்கு மாற்றான் ஒருவன் தனது நாட்டைத் தாண்டி இந்தியப் பகுதிகளை வசப்படுத்துவது பிடிக்கவில்லை. அலெக்ஸாண்டரை எதிர்க்கத் தீர்மானித்தார். தனது ராணுவ எண்ணிக்கை குறைந்ததாக இருந்ததால் கூலிப்படையினரையும் அமர்த்திக் கொண்டார் மகாசகாவதி மன்னர்.

அலெக்ஸாண்டர் தரப்பிலும் கூலிப்படையினர் இருந்தனர். அதாவது இந்திய மன்னர்களுக்கு எதிராகப் போரிட்டது கிரேக்கப்படை மட்டுமல்ல, இந்திய கூலிப்படையினரும்தான்.

மகாசகாவதி மன்னரின் எதிர்ப்பைக் கண்ட அலெக்ஸாண்டர் யோசித்து கொஞ்சம் வித்தியாசமான போர் தந்திரத்தைப் பயன்படுத்தினார். போரில் பிரம்மாண்டமான கல் எறியும் கருவிகளைப் பயன்படுத்தினார். தொலை தூரத்திலிருந்தே மகாசகாவதி கோட்டையின்மீது வீசப்பட்ட அந்தக் கற்கள் எதிரணியினரை நன்றாகவே தாக்கின. தொடர்ந்த உக்கிரமான போரில் அலெக்ஸாண்டரின் சேனை வெற்றி பெற்றது.

தன் படையிலிருந்த கூலிப்படையினரின் உதவியையும் சேர்த்துக் கொண்டுதான் அடுத்ததாக கேகய நாட்டினை வசப்படுத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் எண்ணி இருந்தார். ஆனால் அவர் ராணுவத்திலிருந்த கூலிப்படையினர் மனநிலை வேறாக இருந்தது. “நாங்கள் கிளம்புகிறோம். எங்கள் குடும்பத்தோடு இருக்க விரும்புகிறோம்’’ என்றனர் அவர்கள். தான் என்ன கூறியும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவே “சரி, பாக்கி இருக்கும் கூலியைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கிளம்பி விடலாம்’’ என்றார். அவர்கள் அப்படிக் கிளம்பிச் செல்ல அடுத்த ஆணையை தனது படைத்தளபதிகளுக்கு இட்டார்.

“நம்மிடமிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் கூலிப்படையினரை வளைத்துப் பிடியுங்கள். அவர்களில் ஒருவர்கூட உயிரோடு இருக்கக் கூடாது’’.

ஆணையும் நிறைவேற்றப்பட்டது. ஏழாயிரம் வீரர்கள் கிரேக்கப் படையினரால் வெட்டி சாய்க்கப்பட்டனர்.

பின்னர் அலெக்ஸாண்டர் சிந்து நதியைக் கடந்தார். வழியில் எதிர்ப்பட்ட சிறு சிறு நாடுகளைத் தன் வசம் ஆக்கிக் கொண்டார். ஜீலம் நகருக்கு மேற்கே இருந்த பல இந்தியப் பகுதிகளை (பெரிதாக யுத்தம் என்று எதுவும் இல்லாமலேயே) தன் பிடிக்குள் கொண்டு வந்தார் அலெக்ஸாண்டர். பல குறுநில மன்னர்கள் பயத்தின் காரணமாகவே அலெக்ஸாண்டருக்கு அடி பணிந்தார்கள்.

ஆனால் கேகய நாட்டு மன்னன் இப்படிப்பட்டவர் அல்ல. அவர் பெயர் பர்வதேஷ்வரன். இந்தப் பெயர் வாயில் நுழையாததால் கிரேக்கர்கள் அவரை வேறொரு பெயரில் அழைத்தனர். அந்தப் பெயர் போரஸ்.

கேகய மன்னருடன் போரிடுவதற்கு முன்னால் தன் படை வீரர்களுக்கு முழுமையாக இரண்டு மாத ஓய்வளித்தார் அலெக்ஸாண்டர். இந்த ஓய்வு தன் தரப்புக்கு மிகவும் சாதகமாக இருக்குமென்றும் தனது வீரர்கள் புத்துணர்வுடன் போரிடுவார்கள் என்றும் அலெக்ஸாண்டர் கருதினார்.

ஆனால் போரில் ஈடுபடாத இந்த இரண்டு மாதங்களில் கிரேக்க வீரர்கள் வேறு மாதிரி யோசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு வந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. அலெக்ஸாண்டரின் ஆக்கிரமிப்பு வெறி அடங்குவதாக இல்லை. இந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரை பார்க்காமலேயே செத்து விடுவோமோ என்ற எண்ணம் அவர்களை அச்சுறுத்தியது. கேகய நாட்டுப் படையில் வெற்றி கண்ட பிறகு மன்னரிடம் இதுபற்றிப் பேச வேண்டுமென்று நினைத்தார்கள்.

இந்த இரண்டு மாத இடைவெளி வேறொரு விபரீதத்தையும் அலெக்ஸாண்டர் தரப்புக்கு கொண்டு வந்திருந்தது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-11/article7463847.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறுதலாக அமைதியாக இருந்து படிக்கவேண்டிய கட்டுரை...நேரம் வரும்போது வாசிக்கலாம் என்றிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

திரியைத் திறந்ததும் அதன் நீளம்கண்டு சோர்ந்துவிட்டேன். வாசிக்கும் பொறுமையற்று படங்களைமட்டும் நோட்டம் விட்டபோது ஒரு சில வரிகளையும் கண்கள் வாசித்தன. வாசித்த கண்கள் அகலவில்லை. ஒவ்வொரு சொல்லாக அனைத்தையும் வாசிக்கவைக்கிறது நவீனன் அவர்களின் பதிவு. 

reading stories smiley

 

Edited by Paanch

மிகவும் முக்கியமான பதிவு, கிரீசை முன்னுதாரணமாக எடுத்து ஏனைய நாடுகளும் தங்களை சரிசெய்துகொள்ளவேண்டும்....

இவர்கள் தங்கத்தை வெளியில் விட்டதாலே தங்கத்தின் விலை சரிந்துவிட்டது...

உலகவரலாற்டிலில் பெயர்போன நாடு இப்படிவீழ்ச்சியடைந்து கவலைக்குரிய விடயம்...

இவர்கள் ஐரோப்பிய யூனியனில் ஓசி இரத்தம் குடிக்கவெளிக்கிட்டதுதான் முக்கியகாரணம் என நினைக்கிறேன்..... 

  • தொடங்கியவர்

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 12

 
அலெக்ஸாண்டர் முன்பு நிறுத்தப்பட்ட போரஸ் (இடது).
அலெக்ஸாண்டர் முன்பு நிறுத்தப்பட்ட போரஸ் (இடது).

இரண்டு மாத காலம் தன் படைக்கு ஓய்வு கொடுத்தார் அலெக்ஸாண்டர். ஆனால் இதைத் தொடர்ந்து மழைக் காலம் வந்து விட்டது. ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

அலெக்ஸாண்டர் ஜீலம் நதியின் ஒரு புறத்தில் தன் படையினருடன் கூடாரத்தில் தங்கியிருக்க, எதிர்ப்புறத்தில் கேகய மன்னனின் தளபதியும் வேவுப் படைகளும் இவர்களது நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்தன.

வெள்ளத்தில் அந்த இடத்தில் படையுடன் நதியைக் கடந்தால் தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை உணர்ந்தார் அலெக்ஸாண்டர். வேறொரு திட்டத்தைத் தந்திரமாகத் தீட்டினார்.

தன்னைப் போலவே வேறொருவனுக்கு வேடமிட்டார். பிறகு சப்தமில்லாமல் இரவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தன் படையினரை ஜீலத்தின் மற்றொரு பகுதிக்கு வரவழைத்துக் கொண்டார்.

அலெக்ஸாண்டர் ஒரே இடத்தில் இருப்ப தாக கேகய நாட்டு ஒற்றர்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்க, அலெக்ஸாண்டர் அந்தக் கூடாரத்திலிருந்து 17 மைல் தொலைவில் அமைந்திருந்த பகுதிக்குச் சென்று விட்டிருந்தார். அந்தப் பகுதி ஜலால்பூர். அங்கிருந்து ஜீலம் நதியை எளிதாகக் கடக்க முடியும் என்று கணித்திருந்தார் அலெக்ஸாண்டர். 5,000 குதிரைகள் மற்றும் 10,000 காலாட் படையினரோடு இரவோடு இரவாக ஜீலம் நதியை கடக்க முடிவெடுத்தார்.

தாமதமாகவே இதை உணர்ந்தாலும் கேகய மன்னன் புதிய பகுதிக்கு தன் படையை அனுப்பத் தொடங்கினார்.

அலெக்ஸாண்டரின் சேனைக்கு வேறொரு பிரச்சினை உண்டானது. அவரது குதிரைப் படையினர் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், யானைப் படையை அவர்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை. கேகய மன்னனின் 200க்கும் மேற்பட்ட போர் யானைகளைக் கண்டதும் அலெக்ஸாண்டர் சைனியத்தின் குதிரைகள் மிரண்டன. எனவே குதிரை வீரர்கள் குதிரைகளைவிட்டு இறங்கி கால்நடையாகவே சென்று யானைகளைத் தாக்க வேண்டியிருந்தது. அப்போது பல வீரர்கள் யானைகளின் காலடியில் மிதிபட்டு இறந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் யானைப் படை திடீரென உன்மத்தம் கொண்டது. யார் தனது படை, யார் எதிரிப்படை என்ற வேறுபாடு அறியாமல் செயல்பட்டன. இதன் காரணமாக கேகய நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள்கூட தங்கள் தரப்பு யானைகளாலேயே இறக்க நேரிட்டது.

‘ஜீலம்’ யுத்தம் என்று சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட இந்தப் போர் சுலபத்தில் ஓய்வதாக இல்லை. கேகய மன்னர் பர்வதேஷ்வரன் மிகவும் வீரத்தோடு போரிட்டார். என்றாலும் எப்போதும் வெற்றிகளையே சுவைத்த அலெக்ஸாண்டர் அப்போதும் வெற்றி பெற்றார்.

ஆனாலும் கேகய மன்னனைப் பற்றி அவர் மனதில் ஒரு நல்ல கருத்து உருவாகி யிருந்தது. போரில் அவன் படை சளைக் காமல் இறுதிவரை திறமை காட்டிய விதம் அலெக்ஸாண்டரைக் கவர்ந்திருந்தது. எனவே கைவிலங்கிடாமல் பர்வதேஷ்வரனை (போரஸை) அழைத்து வரக் கட்டளையிட்டார் அலெக்ஸாண்டர். ஏழு அடி உயரம் கொண்ட ஆஜானுபாகுவான கேகய மன்னனின் முகத்தில் கலக்கமே இல்லாதது அலெக்ஸாண்டருக்கு வியப்பை அளித்தது.

‘‘போரஸ், உங்களை எப்படி நடத்த வேண்டும்?’’ என்று கேட்டார் அலெக் ஸாண்டர். பளிச்சென வந்தது பதில். ‘‘ஒரு மன்னனை மற்றொரு மன்னன் எப்படி நடத்து வானோ அதுபோல் நடத்த வேண்டும்’’.

‘‘அப்படியே ஆகட்டும். உங்களுக்கான மரியாதை குறையாது’’ என்றார் அலெக் ஸாண்டர். கூடவே ‘’உங்கள் நாட்டை நீங்களே ஆளலாம். ஆனால் என் பெயரில் அங்கு ஆட்சி நடக்க வேண்டும்’’ என்றும் கூறினார். போரில் தோற்ற கேகய மன்னனுக்கு வேறு மாற்று இல்லை.

ஆனால் எதிர்பாராத விதத்தில் அலெக்ஸாண்டருக்கு வேறொரு ‘தோல்வி’ காத்திருந்தது. கிரேக்க வீரர்கள் தாங்கள் இனி தொடர்ந்து போரிடப் போவதில்லை என்றார்கள். அலெக்ஸாண்டரால் இதை ஜீரணிக்க முடியவில்லை. ‘‘மகத நாட்டை மட்டும் நம் கைவசம் கொண்டு வந்து விடலாம். பிறகு கிரேக்கத்துக்குத் திரும்பலாம்’’ என்றார்.

அலெக்ஸாண்டரின் நீண்ட நாள் கனவு அது. மகதம் பரந்து விரிந்த நாடு. (கிழக்கில் மேற்கு வங்காளத்திலிருந்து மேற்கே பஞ்சாப் வரை படர்ந்த பகுதி மகதம். தெற்கே விந்திய மலைப் பகுதி வரை விரிந்திருந்தது அது). அதன் அண்டை நாடான காந்தாரம் தானாகவே அலெக்ஸாண்டர் பிடியில் வந்துவிட்டது. இந்தச் சூழலில் பிரம்மாண்டமான மகதமும் தன் வசம் வந்துவிட்டால்? நினைப்பே இனித்தது அலெக்ஸாண்டருக்கு. ஆனால் அவன் படையினருக்கு இந்தத் தகவல் பெரும் கசப்பை அளித்தது.

இதற்கிடையில் அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் கொலை செய்யப்பட்டார். மாசிடோனியாவின் பிரபுக்களில் ஒருவர் அலெக்ஸாண்டரின் தந்தையை திருமண நிகழ்ச்சி ஒன்றில் படுகொலை செய்தார். கொலை செய்தவரையும், அவரது கூட்டாளி களையும் அலெக்ஸாண்டரின் நண்பர்கள் வளைத்துப் பிடித்து உடனடியாகக் கொன்றனர்.

என்றாலும் அலெக்ஸாண்டர் மீது சந்தேக நிழலைப் பாய்ச்சுகிறார்கள் சில சரித்திர ஆராய்ச்சியாளர்கள். ‘கொலை செய்தவர் களை மாசிடோனியாவின் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கலாம். ஏன் அப்படிச் செய்யவில்லை? காரணம் இந்தக் கொலை திட்டத்தை தீட்டியதே அலெக்ஸாண்டர்தான். நீதிமன்றத்தில் இது குறித்து கொலைகாரர்கள் உளறிவிடக் கூடாது என்பதால்தான் இந்தப் படுகொலைகள்’ என்கிறார்கள்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-12/article7466796.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 13

 
ஏதென்ஸில் 1896-ம் ஆண்டு நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டி.
ஏதென்ஸில் 1896-ம் ஆண்டு நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டி.

தனது ராணுவ வீரர்கள் மேலும் போர் புரிவதற்கு ஒத்துழைக்காமல் போகவே தன் பிரதிநிதிகளை ஆங்காங்கே நியமித்துவிட்டு தாயகமான மாசி டோனியாவுக்கு அலெக்ஸாண்டர் கிளம்பினார். வழியில் பாபிலோனில் உள்ள மன்னர் இரண்டாம் நெபுகட்நெசாரின் அரண்மனையில் தங்கினார்.

‘‘இங்கு நிறைய நாட்கள் தங்க வேண்டும்’’ என்று பாபிலோனிய மன்னர் வேண்டுகோள் விடுக்க, அலெக்ஸாண்டர் மறுத்தார். தன் வீரர்கள் தாய்நாடு திரும்பு வதில் மிகுந்த ஆர்வம் காட்டி னார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே அடுத்த நாளில் கிளம்புவதாகச் சொன்னார்.

அன்று மாலை அரண்மனையில் சிறப்பான களிப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மது பொங்கி வழிந்தது.

மறுநாள் காலையில் அலெக் ஸாண்டருக்குக் கடும் காய்ச்சல். உடலில் வெப்பம் மேலும் மேலும் அதிகமானது. எழுந்திருக்கவே முடியவில்லை. தன் படை வீரர்களைப் பார்த்து ‘‘நீங்கள் மாசிடோனியாவுக்குச் செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன்’’ என்றார்.

முழுமையாக 11 நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தார் அலெக்ஸாண்டர். கடுமையான மலேரியா நோய். உடல் உபாதை மேலும் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் அந்தப் பேராசைக்காரர் மாவீரனின் உயிர் அடங்கியது. (அலெக்ஸாண்டரின் முடிவு குறித்து மாறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன. விஷம் கொடுக்கப்பட்டது, டைபாய்ட் நோய் என்றும் சில சரித்திர முடிவுகள் கூறுகின்றன)

32 வயதுக்குள் உலகச் சரித்திரத்தில் தன் முத்திரையை அழுத்தமாகவே பதித்துச் சென்று விட்டார் அலெக்ஸாண்டர்.

தன் பிடிக்குள் கொண்டு வந்த பகுதிகளில் கிரேக்க கலாச் சாரத்தை புகுத்த முயற்சித்தார் அலெக்ஸாண்டர். கிரேக்கம், கிரேக்க மொழி மிகவும் பரவியது. ஆசியாவின் பல பகுதிகளில் படித்த வர்க்கத்தினர் கிரேக்க மொழியைத் தெரிந்து வைத்தி ருப்பதை ஒரு கெளரவமாகக் கருதினர்.

காலம் கடந்தது. ரோமானி யர்கள் கிரேக்கப் பகுதியை ஆக்கிர மித்தார்கள். பல போர்கள் நடைபெற்றன. ரோமானியர் களின் பலத்துக்கு முன்னால் கிரேக்கம் மண்டியிடத்தான் வேண்டியிருந்தது. ஆனால் வேறு சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். ரோமானியச் சக்ரவர்த்திகளின் ஆட்சியில் கிரேக்கப் பகுதிகள் செழித்தன. கிரேக்க கலாச்சாரத்தை ரோமானியர்கள் மதித்தனர்.

கி.பி. 1453ல் ஒட்டாமன் துருக் கியர் ஆசியாவை ஆக்கிரமித் தார்கள். இவர்கள் கிரீஸையும் தன் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இது அந்த நாட்டின் வரலாற்றில் அடுத்த முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு துருக்கியர்கள்தான் கிரேக்க நகரங்களையும், துறைமுகங் களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வளம் மிக்க செழுமையான நகரமாக ஒரு காலத்தில் இருந்த ஏதென்ஸ் மிகவும் ஏழ்மையான ஒரு விவசாய கிராமமாக மாறியது.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு (1821ல்) கிரேக்கர்கள் சுதந்திரப் போரைத் தொடங்கினார்கள். பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் கிரீஸுக்கு உதவ முன்வந்தன. கிரீஸோடு பெரிய அளவில் வணிகம் செய்து வந்தவர்களும் கிரீஸுக்கு உதவ முன்வந்தனர்.

ஒருவழியாக ஒட்டாமன் சாம்ராஜ்யம் சரிந்தது. 1832ல் பவேரியாவைச் சேர்ந்த இளவரசர் ஒட்டோ என்பவர் சுதந்திர கிரீஸ் நாட்டின் முதல் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரீஸ் சரித்திரத்தில் அடுத்த முக்கிய நிகழ்வு 1896ல் அறிமுக மானது. அதாவது ஒலிம்பிக்ஸின் மறுபதிப்பு.

இதன் தொடக்க விதை பிரான்சில் எழுந்தது. அந்த நாட்டைச் சேர்ந்த பியர்து கூபர்டின் என்ற விளையாட்டு ரசிகருக்கு ஒரு தீவிர ஆசை எழுந்தது.

'மீண்டும் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறலாமே. அதில் அரசியல் பகைகளை மனதில் கொள்ளாமல், எல்லா நாடுகளும் கலந்து கொள்ள வேண்டும். இந்த விதத்தில் விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்' என்பதுதான் அந்த ஆசை. இதற்காக உலகெங்கும் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.

கிரீஸ் நாட்டு அரசுக்கே அந்த எண்ணம் வலுப் பெற்றது. அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல வணிகரான ஐார்ஜ் அபேராஃப் போன்ற சிலர் தாராளமாக நிதி உதவி செய்ய, கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கியது.

'முதல் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏதென்ஸ் நகரில் துவங்கியதாக நான் அறிவிக்கிறேன்' இப்படிக் கூறி, ஏப்ரல் 16, 1896 அன்று கிரீஸ் நாட்டு முதலாம் ஜார்ஜ் மன்னர் நவீன ஒலிம்பிக்ஸுக்கு பிள்ளையார் சுழி இட்டார்.

மொத்தம் 14 நாடுகள் கலந்து கொண்டன. அவை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பல்கேரியா, சிலி, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், கிரீஸ், ஹங்கேரி, இத்தாலி, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா.

ஆனால் தடகள வீரர்களில் பெரும்பாலானவர்கள் கிரேக்கர் களாகவே இருந்தார்கள். அந்த ஒலிம்பிக்ஸின் உச்சமாக அது தொடங்கிய பதினோராவது நாள் கருதப்பட்டது.

அன்று நீண்ட தூர நடை ஒட்டப் பந்தயம் நடைபெற்றது. அதைக் கண்டுகளிக்க ஒரு லட்சம் மக்களுக்கு அதிகமாக வந்திருந் தனர். மராத்தன் நகரிலிருந்து ஏதென்ஸ் நகரம் வரை உள்ள சுமார் 25 மைல் தூரத்தைக் கடந்தாக வேண்டும். அதில் வென்றது கிரேக்க தடகள வீரரான ஸ்பிரிடோன் லூயி. உள்ளூர் மக்களின் உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரு விளையாட்டைக் காண மிக அதிகம் பேர் கூடியது அதுவரை அன்றைய தினத்தில்தான்.

மிகவும் வெற்றிகரமான விளையாட்டு வீரராக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கார்ல்ஸுமேன் விளங்கினார். குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் இரண்டிலுமாக நான்கு போட்டிகளில் வென்றார் இவர்.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-13/article7473350.ece

  • தொடங்கியவர்

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 14

 
 
இரண்டாம் உலகப் போரில் இத்தாலியின் தாக்குதலை எதிர்த்து தீவிரமாக போரிட்ட கிரீஸ் ராணுவ வீரர்கள்.
இரண்டாம் உலகப் போரில் இத்தாலியின் தாக்குதலை எதிர்த்து தீவிரமாக போரிட்ட கிரீஸ் ராணுவ வீரர்கள்.

கிரீஸ் நாட்டு மன்னரும் மற்றும் பலரும் தொடர்ந்து தங்கள் நாட்டிலேயே நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக்ஸ் நடைபெற வேண்டும் என்று விருப்பப்பட்டனர்.

ஆனால் நவீன ஒலிம்பிக்ஸுக்கு வித்திட்ட கூபெர்டின் உலகெங்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். அதனால் 108 வருடங்களுக்குப் பிறகு 2004ல்தான் ஒலிம்பிக்ஸை நடத்தும் வாய்ப்பு கிரிஸுக்கு மீண்டும் கிடைத்தது.

உலக சாதனை எதுவும் முதல் நவீன ஒலிம்பிக்ஸில் முறியடிக்கப் படவில்லை. தலைசிறந்த போட்டியாளர்களில் சிலர் மட்டுமே ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டது ஒரு முக்கிய காரணம்.

அன்றைய வெற்றியாளர்களுக்குக் கிடைத்த பரிசுகள் கொஞ்சம் மாறுபட்டி ருந்தன. முதலிடத்தைப் பிடித்தவருக்கு வெள்ளிப் பதக்கம், ஒரு ஆலிவ் கிளை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கு தாமிரப் பதக்கம் மற்றும் சான்றிதழ். மூன்றாவதாக வந்தவர்களுக்கு அறிவிப்போடு சரி, பதக்கம் கிடையாது. மராத்தான் பந்தயத்தை வென்ற ஸ்பிரிடோன் லூயிக்கு ஒரு சிறப்புக் கோப்பை வழங்கப்பட்டது.

முதல் ஒலிம்பிக்ஸ் முடிவுக்கு வந்ததாக மன்னர் அறிவிக்க, கிரேக்க நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட, மக்கள் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.

கிரேக்கம் சுதந்திரம் பெற்றிருந்தது என்றாலும் அது பெயரளவில்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கிரேக்கப் பகுதிகள் ஒட்டாமன் துருக்கியர் வசம் இருந்தன. 1912ல் க்ரேடே மற்றும் தெற்கு மாசிடோனியா ஆகிய இதுபோன்ற பகுதிகளை கிரீஸ் மீண்டும் தன் வசம் கொண்டு வந்தது. இந்தப் போர் ‘‘பால்கன் யுத்தம்’’ என்று குறிப்பிடப்படுகிறது. ஏபிரஸ், வடக்கு ஏஜியன் தீவுகளும் கிரீஸ் வசம் மீண்டும் வந்தன.

1924ல் மன்னராட்சி வேண்டாம், குடியரசு தான் தேவை என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 1935லேயே மீண்டும் மன்னராட்சி உதயமானது. அதற்கு அடுத்த ஆண்டு மெடக்ஸாஸ் என்பவர் கிரீஸின் பிரதமர் ஆனார். இவர் வலதுசாரி கருத்துகள் கொண்டவர். சர்வாதிகாரியும்கூட.

கிரேக்கச் சரித்திரத்தின் அடுத்த கட்டமாக நாம் 1948-ஐ எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் கிரேக்கத்தில் மன்னர் ஆட்சி முடிந்து, குடியரசு உண்டாகி, பின் மீண்டும் சர்வாதிகாரம் ஏற்பட்டது. ராணுவத் தலைவர் மெடக்ஷாஸ், ஒரு பிரதமரை நியமித்தார்.

இந்த நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இத்தாலிய அதிபர் முசோலினி கிரீஸ் மீது படையெடுத்தார். இது பலருக்கும் வியப்பான ஒன்றாகவே இருந்தது. சொல்லப் போனால் முசோலினி கூட்டாளியான ஹிட்லருக்கேகூட இது அப்போது எதிர்பார்த்திராத ஒன்றுதான்.

‘‘முசோலினி செய்தது முட்டாள்தனம்’’ என்றார் ஹிட்லர். கிரீஸ் மீது கொண்ட கருணை யினால் அல்ல. போர்த் தந்திரம் என்ற கோணத் தில்தான் இந்தக் கருத்தை வெளிப்படுத் தினார். முசோலினி வடக்கு ஆப்பிரிக்காவில் தான் தன் கவனத்தைச் செலுத்தி இருக்க வேண்டும். எகிப்தை நோக்கித்தான் தன் படையை அனுப்பி இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

என்றாலும் முசோலினி கிரீஸ்மீது படையெடுக்க வேண்டும் என்ற தனது தீர்மானத்திலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் அவரது ராணுவத் தலைவர்களே இதுகுறித்து எச்சரித்தார்கள். இதற்கு முக்கிய காரணம் கிரீஸ் ஒரு மலைப் பாங்கான பகுதி. அங்கு போரிடுதல் கஷ்டம். மலைப் பகுதியில் முன்னேறிவரும் எதிரணி வீரர்களை மேற்புறம் இருக்கும் உள்நாட்டு வீரர்களால் சுலபமாக வீழ்த்த முடியும். தவிர அப்போது மழைக் காலமாகவும் இருந்தால் போரிடுவது மிகவும் சிரமமாக இருக்கும். மேலும் கிரீஸ் ராணுவத்தையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இருந்தும்கூட முசோலினி மிகவும் தீர்மானமாக இருந்தார். கிரீஸை சில நாட்களிலேயே தங்கள் வசம் கொண்டு வந்துவிட முடியும் என்று நம்பினார். இதற்குக் காரணம் தன் ராணுவத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்பது மட்டுமே அல்ல. அதைவிட முக்கியமான வேறொரு காரணம் இருந்தது. அது அவர் தரப்பில் பிறருக்குத் தெரியாத ரகசியம் ஒன்று இருந்தது.

கிரீஸ் தரப்பில் சில கறுப்பு ஆடுகள் இருந்தார்கள். இவர்கள் ராணுவத்திலும் இருந்தார்கள், அரசியல்வாதிகளாகவும் இருந்தார்கள். இவர்களுக்கு எக்கச்சக்கமான பணத்தை ரகசியமாகக் கொடுத்திருந்தார் முசோலினி. இதற்கு பதிலாக இத்தாலி கிரீஸை ஆக்கிரமிக்கும்போது எதிர்த் தரப்பிலிருந்து எந்த ஒரு தடையும் வரக்கூடாது என்று கூறப்பட்டது!

ஆனால் இந்த கறுப்பு ஆடுகளையும் மீறி கிரேக்க ராணுவம் செயல்படும் என்பதை முசோலினி எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஒரே வாரத்தில் கிரீஸுக்குள் நுழைந்த இத்தாலிய ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டார்கள். சொல்லப் போனால் உயிர் பயத்தில் அவர்கள் பின்வாங்கி ஓடினார்கள் என்றே கூறலாம். அவ்வளவு வீரத்தைக் காட்டியது கிரீஸ். போதாக் குறைக்கு அந்தப் பகுதியின் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த இத்தாலியப் போர்க் கப்பல்கள் மீது பிரிட்டன் வேறு தாக்குதல் நடத்தியது.

மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மானியப் படைக்குக் கிடைத்த தொடர் வெற்றிபோல இத்தாலிக்கும் நிகழ வேண்டும் என்ற முசோலினி விருப்பம் நிறைவேறவில்லை. கிரீஸை இணைத்து இத்தாலியின் பரப்ப ளவை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவர் ஆசை நிராசை ஆனது. அல்பேனியாவை ஆக்கிரமித்ததன் அடுத்த கட்டமாக கிரீஸை ஆக்கிரமித்து விடலாம் என்ற அவர் எண்ணம் நிறைவேறவில்லை.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-14/article7488714.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

 

 
 
 
 

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 15

 

 
 
முசோலினி, ஹிட்லர்.
முசோலினி, ஹிட்லர்.

கிரீஸைத் தனது நாட்டுடன் இணைத்து இத்தாலியின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று முசோலினி தீர்மானித்துச் செயல்படுத்தத் தொடங்கினார். இந்தத் தாக்குதல் அல்பேனியா - கிரீஸ் பகுதியில் நடைபெற்றது. முசோலினி வேறொரு உத்தியையும் பயன்படுத்தினார்.

கிரேக்க ராணுவத்தின் கவனம் அல்பேனிய எல்லையில் இருக்க, அப்போது வடக்கு கிரீஸில் இத்தாலிய ராணுவத்தின் மற்றொரு பகுதி தாக்குதல் நடத்தியது.

ஆனால் பலரும் எதிர்பாராதபடி இத்தாலியப் படையெடுப்பை தடுத்து நிறுத்தியதோடு எதிர்த் தாக்குதலையும் கச்சிதமாகச் செய்தது கிரீஸ்.

1941 மார்ச் மாதத்தில் நடைபெற்ற இத்தாலியின் தாக்குதலை அடுத்த பத்தே நாட்களுக்குள் கிரீஸ் முறியடித்தது. முசோலினியின் போர் வியூகங்களுக்கு அடிமேல் அடி. பிறகு ஹிட்லரின் உதவியை நாடினார் முசோலினி. ஜெர்மனி ராணுவம் கிரீஸ்மீது படையெடுத்தது.

ஜெர்மனியுடனும் கிரீஸ் தொடர்ந்து போரிட்டது. என்றாலும் ஒரு கட்டத்தில் தனக்குப் பல விதங்களில் போரினால் உண்டாகிக் கொண்டிருக்கும் நஷ்டங்களை உணர்ந்த கிரீஸ் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டது. முதலில் ஜெர்மனிக்கும், கிரீஸுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இத்தாலியுடனும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கிரீஸ்.

ஆனால் இந்த உடன்படிக்கை மிகவும் ஒருதலைபட்சமாக இருந்தது. அச்சு நாடுகள் கிரீஸை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இத்தாலிய, ஜெர்மானிய, பல்கேரியப் படைகள் ஒரு சேர கிரீஸுக்குள் நுழைந்தன. பேராசை சற்றும் குறையாத இத்தாலி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கிரீஸில் மூன்றில் இருபங்கு பரப்பை ஆக்கிரமித்தது.

தொடரும் கிரீஸின் வரலாற்றில் நிகழ்ந்த மேலும் சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.

1941ல் ராணுவத் தளபதி மெடக்சாஸ் இறந்துவிட, கிரீஸ் பலவீனமடைந்தது. ஜெர்மனி கிரீஸை முழுமையாக ஆக்கிரமித்தது. அதே ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கிரீஸில் இறந்தனர்.

அதற்கு மூன்று வருடங்கள் கழித்து பிரிட்டனின் உதவியைக் கோரியது கிரீஸ். பிரிட்டனும் கைகொடுத்தது. தனது ராணுவத்தை கிரீஸுக்கு அனுப்பியது. அந்த ராணுவத்துடன் இணைந்து நாஜிக்களை தனது எல்லையிலிருந்து வெளியேற்றியது கிரீஸ்.

1952ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் கிரீஸில் அறிமுகமானது. இதன்படி கிரீஸ் ஒரு ராஜாங்கம். எனினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி அது ஆட்சி செய்யும். இதைத் தொடர்ந்து நேட்டோ எனப்படும் வடஅட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பிலும் உறுப்பினரானது கிரீஸ்.

அடுத்த முக்கிய நிகழ்வு என்று 1973-ல் நிகழ்ந்ததைக் கூறலாம். ஜார்ஜ் பபடோபவூலஸ் என்பவர் அப்போது கிரீஸ் நாட்டின் அதிபராக விளங்கினார். ஒரு காலத்தில் அவரே அந்த நாட்டின் ராணுவ அதிகாரியாக இருந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்தான். அதிபரான ஆனபிறகும் ராணுவ அதிகாரத்தை அவரால் விட முடியவில்லை மூலம் அதீத அடக்குமுறை, சர்வாதிகாரம். மக்களின் பெரும் வெறுப்பைச் சம்பாதித்திருந்தார்.

தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல இவரும் ராணுவப் புரட்சிக்கு பலியானார். ஏதென்ஸ் நகருக்குள் ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள அரசுக் கட்டடங்களையெல்லாம் 1973 நவம்பர் 25 அன்று கைப்பற்றியபோது அவர்களுக்கு கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை - அரசிடமிருந்தும் சரி, மக்களிடமிருந்தும் சரி.

புரட்சி ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர் டெமெட்ரியோஸ் என்பவர். மக்கள் இதற்கு சிறிய அளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்புதான் இந்த ஆட்சிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்த கலவரத்தில் பொது மக்களில் சிலர் இறக்க, நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயத்துக்கு உள்ளானார்கள்.

லெப்டினன்ட் ஜெனரல் ஃபேடோன் கிஜிகிஸ் என்பவர் ராணுவத்தால் கிரீஸ் நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தகவல் தொடர்பு சிதைக்கப்பட்டது. தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஒரு நாள் முழுவதும் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது.

நாட்டுத் தலைவரான டெமெட்ரியோஸ் தன்னிடம் அதிக அதிகாரங்களை குவித்துக் கொண்டார். 1974ல் இவரது ஆட்சியும் கலைக்கப்பட்டது. இந்த முறை துருக்கியர்கள் கிரீஸை கைப்பற்றியிருந்தனர். டெமெட்ரியோஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-15/article7491845.ece?homepage=true&relartwiz=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 16

 
 
 
கிரேக்க மக்களின் நாயகன் ப்ரோமெதியஸ்.
கிரேக்க மக்களின் நாயகன் ப்ரோமெதியஸ்.

பால்கன் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் 1400 தீவுகளுக்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கு பலவித பொருளாதார மற்றும் சமூக மாறுதல்கள். சுற்றுலாவும், கப்பல் கட்டுதலும் கிரீஸுக்கு வருமானத்தை அளித்தது. ஆனால் 2008-ல் தொடங்கிய பொருளாதாரச் சரிவு அந்த நாட்டை பாதாளத்துக்குக் கொண்டு சென்றது.

அண்டை நாடான துருக்கியோடு எல்லைப் பிரிச்னை கிரீஸுக்கு உண்டு. முக்கியமாக சைப்ரஸ் தீவை இரு நாடுகளும் பிரித்துக் கொண்டுள்ளன. என்றாலும் இந்த நாடுகள் ஒருசேர ஒரு விபரீதத்தை சந்தித்தன.

1999-ல் அந்தப் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டன. காலத்தின் கட்டா யமாக ஒன்றுக்கொன்று உதவின.

கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே இருந்த பல கடவுளர்களை வழிபடும் மார்க்கத்தைச் சேர்ந்த பலர் கிரீஸில் இன்னமும் உண்டு. ஒலிம்பஸ் குன்றை புனிதமாக வழிபடுகிறார்கள். ப்ரோமெதியஸ் என்பவர் கிரேக்கர்களின் நாயகன். அதாவது கடவுளர்களிடமிருந்து நெருப்பை திருடிக் கொண்டு வந்து கிரேக்க மக்களுக்கு இவர் நன்மை செய்தான் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இவருக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விழா எடுக்கின்றனர்.

இந்த விழாவில் முழுக்க கிரேக்க உடை அணிந்த ஆறு தடகள வீரர்கள் (ஈட்டிகள், கேடயங்கள்கூட இவர்கள் வசம் இருக்கும்) ஒலிம்பஸ் குன்றை வேகமாக ஏறிக் கடப்பார்கள். சுமார் 10 கி.மீட்டர் தூரம் கொண்ட பாதை அது. 98 சதவீதம் கிரேக்க மக்கள் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவத்தை மதமாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இந்த மதத்தைச் சேர்ந்த வர்கள் அமைதியை அழிப்பவர் களாகப் பிறரால் கருதப்பட்ட வர்கள். இன்று அவர்களே அமைதி இழந்து கிடப்பதுதான் சோகம்.

கிரீஸ் பொருளாதாரத்தில் நிலை குலைந்து நிற்பது குறித்து இந்தத் தொடரின் தொடக்கத்தில் சற்று விளக்கமாகவே குறிப்பிட்டோம்.

ஜூலை 12, 2015 அன்று ஐரோப்பிய யூனியனின் தலை வர்கள் கிரீஸ் பொருளாதாரத்துக்கு உதவ மீண்டும் ஒப்புக் கொண்டார்கள். கிரீஸ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கப்பட்டது.

பலவிதப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கிரீஸ் ஒப்புக் கொண்டது. வாட் வரிவிதிப்பு, ஓய்வூதியத்துக்கான வயது மற்றும் அந்தத் தொகையில் பெரும் மாற்றம் போன்ற பல மாறுதல்கள் அறிமுகமாக உள்ளன.

ஜெர்மனி அளித்த அழுத்தம் காரணமாக ஐரோப்பிய யூனியன் வேறொரு நிபந்தனையையும் கிரீஸுக்கு விதித்தது. இதன்படி 50 பில்லியன் யூரோ மதிப்புள்ள கிரேக்க சொத்துக்கள் ஒரு புதிய சிறப்பு நிதிக்கு மாற்றப்படும். கடனை அடைப்பதற்காக மட்டுமே இந்த நிதி உருவாக்கப்பட வேண்டும்.

பதிலாக பிற ஐரோப்பிய நாடுகள் சுமார் 85 பில்லியன் யூரோ தொகையை கிரீஸின் பொரு ளாதார நெருக்கடியை சரி செய்ய அளிப்பார்கள்.திரைமறைவில் வேறுபல நிபந்தனைகளுக்குக்கூட கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் உடன்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக தனது இடதுசாரிக் கொள்கைகளை கிரேக்க அரசு கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

கடந்த ஐம்பது வருடங்களாகவே நிதிச் சீர்திருத்தத்திற்கு கிரீஸ் முயன் றாலும் அது நடைமுறையில் ஏனோ அறிமுகப்படுத்தப்படவே இல்லை.

இந்த நிலையில் வேறொரு உள்நாட்டுக் குழப்பமும் கிரீஸில் சேர்ந்திருக்கிறது. அந்த நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரவுஃபகிஸ் என்பவர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. யூரோ மண்டலத்தி லிருந்து வெளியேறுவதற்கு முன்னோடி போல இவர் ஒரு மாற்று நாணயத்தை அறிமுகப்படுத்தவி ருந்தார் என்பதுதான் அது.

கிரேக்க வழக்கறிஞர் ஒருவர் இந்த முன்னாள் நிதி அமைச்சர் மீது அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

முன்னாள் நிதி அமைச்சர் ஒரு மார்க்ஸியவாதி என்பதனாலோ என்னவோ ஐரோப்பிய மத்திய வங்கிக்கு எதிர் நிலையையே தொடர்ந்து எடுத்து வந்தார் என்பதை நிரூபிக்கப் போகிறார்களாம். போதாக்குறைக்கு தனது சிறு வயது நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்துக் கொண்டாராம். அந்த நண்பர் இப்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணிபுரிபவர். என்ன உதவி? அரசின் கணினிகளை கொஞ்சம் மாற்றி அமைத்து பெரும் வரி செலுத்துபவர்கள் குறித்த விவரங் களை தான் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டதாம். நாட்டுக்குள்ளேயே ஓர் இணைப் பொருளாதாரத்தை நடத்த முயற்சி செய்திருக்கிறார்.

‘‘தேச துரோகம் எனக் குற்றம் சாட்டி என்னை தூக்கில் போடவும் வாய்ப்பு உண்டு. எல்லாம் இந்த ஐந்து மாத தவறான ஆட்சியின் விளைவுதான்’’ என்றும் இவர் கூறி இருக்கிறார். சென்ற மாதம் ராஜினாமா செய்தபோது நடந்ததை எல்லாம் அரசு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அவை நாட்டின் நலனுக்காகத்தான் என்றதாகவும் அவர் கூறுகிறார். சர்வதேச நிதியத்தின் மறைமுக தலையீட்டில்தான் தனக்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இன்னும் என்னென்ன ரணங்களை கிரீஸ் சந்திக்க வேண்டி இருக்குமோ! இப்போதைக்கு அந்த நாட்டு மக்கள், தங்கள்மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு தடை நீங்கியதற்காக பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் ஏ.டி.எம். அட்டைகளையும், கடன் அட்டைகளையும் அவர்கள் பயன்படுத்தலாம்.

தேசமே மறைமுக ‘கடன் அட்டைகளை’ தடையில் லாமல் பயன்படுத்திக் கொண்டிருக் கும்போது மக்களை மட்டும் அது தடுத்துவிட முடியுமா என்ன?

(உலகம் உருளும்)

http://tamil.thehindu.com/world/கிரீடத்தை-இழக்கும்-கிரீஸ்-16/article7498963.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.