Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ண உணவில்லை என்றாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

உண்ண உணவில்லை என்றாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

 

பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் , அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை  எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண சுற்றுலாத்துறை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் இவ்வருடத்தைய கருப்பொருளானது சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. “பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் பத்து இலட்சம் வாய்ப்புக்கள்” என்பதே அது. சென்ற வருடம் “சமூக அபிவிருத்திக்குச் சுற்றுலா” என்றிருந்தது. இவ்வருடம் பயணிகள் அதிகரித்தால் வாய்ப்புக்கள் அதிகரிப்பன என்ற விதத்தில் கருப்பொருள் அமைந்துள்ளது.

சுற்றுலாவானது சமூகத்தை உருமாற்றம் செய்யக் கூடிய ஒரு சக்தியாக வாழ்வாதார வாய்ப்புக்களையும், வறுமையை நீக்கவல்ல சூழலையும் இலட்சோப இலட்சம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தவல்லது. பல்லின கலாசாரப் புரிந்துணர்வையும் கலாசார இயற்கைப் பராம்பரியங்களைப் பாதுகாக்கும் சக்தியாகவும் சுற்றுலா இன்று வளர்ந்துள்ளது. தொடர்ந்து செல்லும் பொருளாதார விருத்தியை மேம்படுத்த உதவி வருகிறது.

சமுத்திரங்கள், கடல்கள், கரையோர வளங்கள் போன்றவற்றை தொடர் அபிவிருத்திக்கு உள்ளடக்கி வருகிறது. வனப்பாதுகாப்பு, பாலைவனங்கள் உருவாகமல் தடுத்தல், நிலைச் சிதைவைத் தடுத்தல், வனஜந்துக்கள் பாதுகாப்பு என்று பலதையும் சுற்றுலா பாதுகாத்துப் பரிபாலிக்க உதவிவருகின்றது.

இந்த உலக சுற்றுலாத் தினமானது ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தால்  1980ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் செப்ரெம்பர் 27ந் திகதியன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கொண்டாடப்படுவதற்குக் காரணம் இருக்கின்றது. 1980ம் ஆண்டிலிருந்து பத்து வருடங்களுக்கு முன்னர் அதே செப்ரெம்பர் 27ந் திகதியன்றுதான் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனமானது முதன் முதலில் தான் இயங்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவந்து அவற்றை ஏற்றுக் கொண்டது.

அத்துடன் உலக நாடுகளில் சுற்றுலாவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி அத்துறையானது எவ்வாறு உலக ரீதியில் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அப்பொழுதே உலகத்திற்கு எடுத்துக் காட்டியது அந் நிறுவனம்.


உலகமானது சுருங்க முக்கிய காரணமாய் இருந்தது தொலைத் தொடர்பு என்றால் மக்களை அந்தச் சுருங்கிய உலகத்தினுள் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள வைத்தது சுற்றுலாத் துறையே. இன்று பல நாடுகளின் பொருளாதார விருத்திக்கு அத்திவாரமாகச் சுற்றுலாத் துறை அமைந்துள்ளது.

இன்று நாம் ஏதேனும் ஒரு காரணத்திற்காகப் பிரயாணிக்கும் போது நாம் ஒரு உலக ரீதியான செயற்பாட்டின் அங்கமாகவே பயணிக்கின்றோம். அந்தச் செயற்பாடானது  அபிவிருத்திக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது, வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது, நிலை பெற்றிருக்கக்கூடிய வருங்காலச் சமுதாயங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. அதன் பொருட்டு மக்களிடையே புரிந்துணர்வும் கலாசார, சூழல் சம்பந்தமான அறிவும் விருத்தியடைகின்றன.


சுமார் 72 வருடங்களுக்கு முன்னர் நான் என் பெற்றோருடன் கதிர்காமம் சென்றேன். காட்டுப் பகுதியில் மாட்டு வண்டியில் பயணித்தமை இன்னும் நினைவில் இருக்கின்றது. நெடிய பெரிய மரங்கள் வீதியின் இரு மருங்கிலும். அவற்றின் நெருக்கத்தால் பகலில்கூட இருண்ட ஒரு சூழலில் பிரயாணம் செய்தோம்.

மாட்டு வண்டி பள்ளத்திலும் திட்டியிலும் விழுந்து விழுந்து எழுந்தது. கோஷ்டியாகத்தான் அந்தக் காலத்தில் கதிர்காமம் செல்வோம். காட்டு மிருகங்கள் கிட்டே வராதிருக்க எல்லோரும் சேர்ந்து “அரோகரா” போடுவோம். “அரோகரா”ச் சத்தம் வானத்தை அதிரச் செய்யும்! அன்றைய பயணத்திற்கும் இன்றைய பயணத்திற்கும் இடையில் இருக்கும் வேற்றுமையைப் புரிந்து கொண்டீர்களானால் சுற்றுலாத் துறை வந்து எம்மிடையே ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை, தாக்கத்தைப் புரிந்து கொள்வீர்கள்.

கதிர்காமம் போவது வெறும் இந்து மத ரீதியான சடங்காக இருந்திருந்தால் அது தொடர்ந்து மாட்டு வண்டில் காலத்திலேயே நின்றிருக்கும். ஆனால் காலம் போகப் போக கதிர்காமம் ஒரு சுற்றுலா இலக்காக மாறியது. பின்னர் சுற்றுலாத் தரிப்பிடமாக்கப்பட்டது. அது ஒரு பௌத்த தலமாக மாற்றப்பட்டது. தற்பொழுது அத்தலம் சுற்றுலாத்துறையில் கேந்திர முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வெளியில் இருந்து வருபவர்களை கதிர்காமம் நோக்கி ஆற்றுப்படுத்துகின்றது அரசு. மாகாண ரீதியாக எம்மிடம் தலங்கள் இருக்கின்றன. காட்சிதரும் வனங்கள் இருக்கின்றன. கடற்கரைகள் உள்ளன. துறைமுகங்கள் உள்ளன, இத்யாதி பல கருத்துக்கமைவான இடங்கள் இருக்கின்றன. அவற்றை சுற்றுலாத் தரிப்பிடமாக்குவதே எமது சுற்றுலாத்துறையினரின் கடப்பாடு.

அன்றைய மாட்டு வண்டில் கதிர்காமப் பிரயாணம் எவ்வாறு இன்று 21ம் நூற்றாண்டின் விசைக்கேற்ப அதிவேகப் பயணமாக மாறியுள்ளதோ அதேபோன்று நிலைமையை மாற்றி வருமானத்தை விருத்தி செய்ய முடியும் என்று தான் சுற்றுலாத்துறை கூறுகின்றது.

ஆனால் சூழல் மாசடையாமல் சுற்றுப்புறம் அழுக்கடையாமல், கலாசாரம் விலைபோகாமல், பண்பாடு சிதைந்து போகாமல் நாங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுலா நல்லதையும் நல்கும் கெட்டதையுங் கொண்டு வரலாம்.

அங்குதான் நீங்களும் நானும் வருகின்றோம். நன்மையைப் பெற்று, தீமைகளைக் குறைப்பதும் அவற்றை இல்லாதாக்குவதுமே எமது கடமை.


ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் “பொருளாதார விருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்கும், நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தவும், யாவருக்கும் மதிப்புடைத்தான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்குமாக நாங்கள்; யாவருஞ் சேர்ந்து சுற்றுலாவுக்கு இருக்கும் உள்ளார்ந்த திறனை மேம்படுத்த முன்வருவோமாக!” என்று கூறியுள்ளார்.

இன்று சர்வதேச சமூகம் 2015ம் ஆண்டுக்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலில் நிலையான அபிவிருத்தி இலக்காக சுற்றுலாவையும் அடையாளப்படுத்தி அத்துறை வேலைவாய்புக்களையுந் தரவல்லது என்றும் உள்ளூர் கலாசாரத்தையும்உள்ளூர் உற்பத்திப்பொருட்களையும் மேம்படுத்த வல்லது என்றும் கூறியிருக்கும் இக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் செயலரின் கூற்று தனி முக்கியத்துவம் பெறுகின்றது.

சுற்றுலாவானது பொருளாதார ரீதியாகப் பல வாய்ப்புக்களை உண்டுபண்ணக் கூடியது. அது நாட்டின், பிரதேசத்தின் அபிவிருத்திக்கு வழி வகுக்கும். நேரிடை நன்மை என்று பார்த்தால் சுற்றுலாப் பயணி கொண்டு வந்து விடுதிகளிலும் வீதிகளிலும் செலவழிக்கும் அன்னியச் செலாவணியில் இருந்து எமக்கு வரும் வருமானமாகும்.

ஆனால் அவர்கள் வருகையால் பலவிதமான மறைமுக நன்மைகளும் வாய்ப்புக்களும் கிடைக்கின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. விடுதிகளுக்கு விதவிதமான உணவு வகைகளையும், பழங்களையும் மேலும் சில சேவைகளையும் வழங்கும் போது அவற்றின் முன்னேற்றமும் உத்தரவாதப் படுத்தப்படுகின்றன.

பண்ணைகள், கடலுணவு உற்பத்தி நிலையங்கள், கைத்தொழில் மையங்கள் போன்றவை அபிவிருத்தி அடைகின்றன. மேலும் தேவையான முதலீட்டுப் பொருட்களின் உற்பத்தி, பொது மக்கள் கட்டுமானப் பணிகள், கட்டிடத் தொழில் போன்ற பலதும் மறைமுகமாக நன்மை பெறுகின்றன. தற்போது எல்லாவற்றையும் மதிப்பீட்டுக்குள் நாம் கொண்டு வந்துள்ளோம்.

 சுற்றுலாத் துறையை எடுத்தால் அதனால் எப்பேர்ப்பட்ட தாக்கங்கள் ஏற்படுகின்றன, அவை நற்தாக்கங்களா தீதானவையா என்று எல்லாம் ஆராய்ந்து பார்ப்பது என்பது இப்பொழுது ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் வருமானத்தில் சுற்றுலா ஏற்படுத்துந் தாக்கம், தொடர் பயணிகள் வராமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்று எல்லாவற்றையும் பூதக் கண்ணாடிக்குள்ப் போட்டு ஆராய்ந்து பார்க்கின்றோம்.

மறைமுகத் தாக்கங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தால் மூன்று கட்ட ஆராய்வு நடாத்தப்படுகிறது. ஒன்று தாக்கங்கள் பற்றி  ஆராய்ந்தறிவதற்குத் தற்போது கைவசமுள்ள வழிமுறைகள் எவை என்பது பற்றியது.

இதுபற்றிய தாக்கங்கள் யாவை என்று பார்த்தால் நேரடித் தாக்கங்கள் ( மறைமுகத் தாக்கங்கள் என்பது போல் இன்னுமொரு தாக்கமும் உண்டு. அதுதான் தூண்டுகைத் தாக்கங்கள் இவை யாவற்றையும் கணித்துப் பார்க்க இருக்கும் வழிமுறைகளைக் குறித்த நிறுவனம் முதலாவதாகப் பரிசீலிக்கின்றது.

அடுத்து மறைமுகத் தாக்கங்கள் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மேலும் பல துறைகளிலும் எப்பேர்ப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்கின்றது. பொருட்கள், சேவைகள், நிதிமுதலீடு, மக்கள் செலவு செய்யும் முறைகள் என்று பலதையும் ஆராயும் போது எப்பேர்ப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அறிந்து கொள்வதே இந்த வகையினம்.
 
மூன்றாவதாக நாட்டின் வருமானம் - செலவு போன்றவற்றில் இத்தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்;களைப் பரிசீலிக்கின்றது இந்த ஆய்வு மையம். மேற்படி ஆய்வறிக்கை மூலமாக நாடுகளுக்கு மறைமுக நன்மைகள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்க முன்வந்துள்ளது மேற்படி ஐ.நா. நிறுவனம்.

இவற்றை எல்லாம் உட்கொள்ளக் கூடிய அறிவு எமக்கு அவசியம்.  நான் அண்மையில்; கொழும்பில் உள்ள ஒரு பெரிய ஹொட்டேலின் பிரதம சமையல்காரரைச் சந்தித்தேன். அவர் சுவிற்சர்லாந்து சென்று தமது படிப்பை முடித்துக் கொண்டு வந்தவர். சமையலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவரின் ஒரு மாதச் சம்பளம் சுமார் ஐந்து இலட்சத்திற்குக் குறையாது என்று கேள்விப்பட்டேன்.

என்னுடைய பால்யப் பருவத்தில் “படி” “படி” என்று பெற்றோர்கள் நச்சரிக்கும் போது கூறுவார்கள். “நீ கிரிக்கெட் விளையாடி பரீட்சையைக் கோட்டை விட்டாயானால் சமையல் காரனாகத்தான் போக வேண்டும்” என்று. இன்று கிரிக்கட் விளையாடுபவனும் இலட்சங்களில் வருமானம் பெறுகின்றான். சமையல் செய்பவனும் அவ்வாறே பெறுகின்றான். “படி” “படி” என்று படித்தவன் வெறும் “படி”யையே பெற்றுக் கொண்டிருக்கின்றான் அடிப்படைச் சம்பளத்துடன்!

அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கிறிக்கெட் விளையாடுபவர் கையாலாகாதவர். சமையல்க்காரர் மிகக் குறைந்த தொழிலைச் செய்பவர்; யன்னல் கழுவுபவர் கடையிலும் கடையானவர். ஆனால் இன்று அவர்கள் யாவரும் சமூகத்தால் மிகவும் மதிக்கப்படுபவர்கள்.

காலம் மாறியுள்ளதை எம் மக்கள் உணர வேண்டும்.
இதே போன்று தான் இன்று பெண்கள் சுற்றாடல் விடுதிகளில் வேலை பெறுவதைக் தரக் குறைவாக நாம் எண்ணுகின்றோம். ஆனால் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதந் தரும் விதத்தில் அவர்களின் கடமை நேரங்கள், இருப்பிட வசதிகள் போன்றவை பாதுகாத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல பெண்கள் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால் அவர்களின் பாதுகாப்பு உறுதியாக்கப்படுகிறது.

முன்னர் போல் நாங்கள் சிந்திக்கத் தேவையில்லை. இயக்கங்களில் போராடச் சென்ற எம் பெண்கள் ஏன் இப்பேர்ப்பட்ட தொழில்களில் தமது திறமைகளை வெளிக்காட்டக் கூடாது?

இன்னொன்றையும் நான் கூற வேண்டும். எமது சூழலில் பல கண்டனங்களுக்கு இலக்காகும் எமது இளைஞர் யுவதிகள், எமது சமூகத்தால் கண்டிக்கப்படும் தொழில்களையே வெளிநாடுகளில் இன்று செய்து இங்கு பணம் அனுப்புகின்றார்கள்.

நான் Brussels விமான நிலையத்தில் விமானத்திற்காகக் காத்து நிற்கும் போது என்னுடன் பக்கத்தில் இருந்து பேசியவர் அங்கு கழிப்பிடஞ் சுத்தம் செய்பவர்.

அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்;. வீடொன்றை அங்கு தவணை முறையில் வாங்கி இருந்தார். தனது குடும்பத்தினருக்கு எவ்வளவு பணம் மாதாமாதம் அனுப்புவார் என்பது பற்றி எல்லாம் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தார்.

அவரின் அந்த வேலையை அவர் இங்கு செய்திருந்தால் அவரை அழ வைத்திருப்பார்கள் நம்மவர்கள். ஆனால் அவர் வேலை செய்யும் நாட்டில் தொழிலுக்கு மதிப்புக் கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு தொழிலும் மதிப்பார்ந்த தொழிலே என்ற எண்ணம் அங்கு நிலை கொண்டுள்ளது. இவை இவ்வளவையும் நான் இங்கு கூற வேண்டி வந்தது சுற்றுலாத் துறையினை இங்கு மேம்படுத்துவதென்றால் எம் இளைஞர் யுவதிகள் மனமுவந்து சுற்றுலாச் சேவையில் ஈடுபட முன்வர வேண்டும்.

 விரைவில் உணவகக் கல்லூரி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதில் எமது இளைஞர் யுவதிகள் சேர்ந்து உணவகத் துறையில் சரித்திரம் நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உங்கள் விழுமியங்களுக்கும் பண்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்ய வல்லவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

சுற்றுலா பற்றிய போதிய விபரங்கள் எமக்குக் கிடைப்பதில்லை. இதனால்த்தான் எம்மிடையே சுற்றுலா சம்பந்தமாகத் தவறான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சுற்றுலாப் பயணிகள் எம்மிடையே செலவு செய்யும் பணமானது பலவிதங்களில் எமக்கு நன்மை அளிக்கின்றது.

உணவகங்கள் அப்பணத்தை வைத்தே விருத்தி அடைகின்றன. சம்பளம் செலுத்துகின்றனர். ஆகவே சுற்றுலாத் துறையே எமக்கு எமது சம்பளங்களைத் தர உதவி புரிகின்றன. நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் பணம் இறைவரியாக எமக்குச் செலுத்தப் படுகின்றன.

பொருட்கள் விற்பனையாகும் போது வரி செலுத்தப்படுகின்றது. உணவகம் வரி செலுத்த வேண்டும். அதுவும் வருமானந்தான். மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வாழ்வது உகந்ததெனக் கண்டால்  தொடர்ந்து பல  காலம் வாழத் தலைப்படுவர். காணிகளைக் குத்தகைக்கெடுப்பர். இவ்வாறு சுற்றுலாவானது எமது சமூகத்திற்குப் பலவிதங்களில் நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. நாம் கவனமாக இருந்தால் அவர்கள் பிழையான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கலாம்.

உதாரணத்திற்குப் போதைப் பொருளை பயணிகள்  அறிமுகப்படுத்தக் கூடும் என்பதற்காக சுற்றுலா தேவையில்லை என்று கூறுவது மடமை. பிழையான வழிகளில் நடப்பவர்களை உரிய அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுக்கலாம். உண்மையில் சுற்றுலாப் பொலிஸ் சேவையொன்றை இதற்காக நாங்கள் வகுத்து நடைமுறைப் படுத்தலாம்.

சுற்றுலா உணவகங்களுடன் தொடர்புடைய பல தொழில்கள் எம் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் ஆதாயத்தையும் கொடுப்பன. விற்பனை நிலையங்கள், களியாட்ட இடங்கள், போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் வருமானத்தை நல்க வல்லன.

சுற்றுலா வளர வளர சுற்று வட்டாரச் சூழல் வளரும். தெருக்கள் பதனிடப்படுவன. பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தீப்படைப் பாதுகாப்பு கிடைக்கும். வைத்தியக் கட்டமைப்பு சீராகும். இவ்வாறு பல நன்மைகள் கிடைப்பன.

சுற்றுலாவில் பணத்தை முதலீடு செய்பவர்கள் தமது பணத்தையும் வருமானங்களையும் மேம்படுத்தவே நடவடிக்கை எடுப்பர். இது வணிகம் என்பதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்களின் வணிகம் பெருக, வளர அவர்கள் தமது நிறுவனங்கள் இருக்கும் உள்ளூரை  நல்ல விதத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் இருக்கின்றார்கள். இது எமக்கு நன்மை பயக்கும். உணவகத்தில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் சிலரைத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இன்னும் பலர் வேலைகளில் ஈடுபட்டுள்ளர்கள் என்பது எமக்குத் தெரிவதில்லை. லிகிதர்கள் மற்றும் பணிப்பெண்களைக் காணும் நாங்கள் உள்ளேயிருக்கும் முகாமையாளர், மேலாளர், கணக்காளர், சந்தைப்படுத்தும் அலுவலர்கள் போன்றோரைப் பார்ப்பதில்லை.

மேலும் விளம்பரப்படுத்தும் முகவர் நிலையங்கள், கணக்காளர் நிலையங்கள், பொருட்களை விநியோகிப்பவர்கள், சந்தைப்படுத்துபவர்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் செய்பவர்கள் என்று பலரும் சுற்றுலா உணவகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறு கைத்தொழில்கள் செய்பவர்கள், குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் யாவருமே சுற்றுலாத் தொழிலால் தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலை வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். சுற்றுலாத் துறையானது அப்பேர்ப்பட்டவர்களுக்கு நல்ல சிறப்பு வாய்ப்புக்களைத் தரவல்லது.

இது சம்பந்தமாக எமது சுற்றுலா அதிகாரமையமானது யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் அல்லது வெளிவந்த எமது பட்டதாரிகளுக்கு என்று சுற்றுலா வேலை வாய்ப்புக்கள் பற்றியதும் தேவையான திறன்கள் பற்றியதுமான கருத்தரங்கங்களை பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நடாத்த முன்வர வேண்டும்.

பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது எனக்கு வியப்பைத் தருகின்றது.

அரசாங்க உத்தியோகங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. சிங்கள அலுவலர்களைத் தெற்கில் இருந்து அண்மையில் வடக்குக்கு அரசாங்கம் அனுப்பியது நினைவிருக்கலாம். எப்பொழுது அவர்கள் இடத்திற்குத் தமிழ் மக்களை பதிலீடு செய்ய முன் வருவார்களோ தெரியாது.

ஆனால் அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்கின்றார்கள்.

ஓய்வூதியம் கிடைக்குமாம். 40,50 வருடங்களின் பின்னர் கிடைக்கும் ஓய்வூதியத்திற்காக வலிய வரும் ஸ்ரீதேவியை உதாசீனம் செய்கின்றார்கள்.

ஓய்வூதிய திட்டங்கள் பல இருக்கின்றன.


இன்று கூடிய வருவாயைப் பெற்று இத் திட்டங்களுக்கு மாதாந்தத் தொகையாகத் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்தால் உங்களுக்குக் கூடிய ஓய்வூதியத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆனால் என் நண்பர் ஒருவர் கூறினார் - அதுவல்ல காரணம்! வேலை ஏதும் செய்யாத வேலை வேண்டும் என்பதால்த்தான் எம்மவர் அரசாங்க வேலைகளை நாடுகிறார்கள் என்று. அது சரியோ பிழையோநானறியேன்.


ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் சுற்றுலாத் துறையில் போதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம் என்பதைக் கூறிவைக்கின்றேன்.

எனவே சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதில் பொது மக்களும் அலுவலர்களும் சேர்ந்து ஒத்துழைத்தால்த்தான் எம்மால் இந்தத் துறையை மேம்படுத்த முடியும். இத்துறை எமக்கு வருவாயைத் தரவல்லது.

அதே நேரம் கட்டுக்கடங்காமல்ப் போனால் எம்மால் கட்டிக் காக்கப்பட்ட எமது பாரம்பரியங்கள், பண்பாடுகள், விழுமியங்கள் யாவும் காற்றோடு காற்றாய்ப் பறக்க விடப்படவும் முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித்தான் இன்றைய பல விற்பன்னர்கள், நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க இருக்கின்றார்கள். சென்ற வருடம் நான் பேசிய போது சுற்றுலாவினால் ஏற்படக் கூடிய நன்மைகள் பதினொன்றை இனங்கண்டேன். அவையாவன –

வேலைவாய்ப்பு
அனுசரணைத் தொழில்கள் விருத்தி
உள்ளூர்  வாழ்வாதார வளர்ச்சி
திறைவரி வருமானம்
நவீன தொழிற்துறை முன்னேற்றம்
உள்ளூர்  கட்டமைப்புக்களின் விருத்தி
உள்ளூர்  பொருட்கள் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புக்கள்
உள்ளூர்  மக்களுக்கான இளைப்பாறல் வசதிகள்
கலாசார பண்பாட்டு மையங்கள் விருத்தி
சூழல் பாதுகாப்பு
உள்ளூர்க் கலைகளின் மறுமலர்ச்சி
அதே நேரம் நாம் நிலை தவறி நடக்க முற்பட்டால் ஏற்படக் கூடிய எட்டுவிதமான பாதிப்புக்களை இனங்கண்டேன்.

வாகன நெரிசல்
சூழல் மாசடைதலும் வன ஜந்துக்கள் மீதான தாக்கமும்
நிலத்தடி நீர்ப் பாதிப்பு
குப்பை அப்புறப் படுத்தலில் சிக்கல்கள்
உள்ளூர் மக்களை உதாசீனஞ் செய்யத் தலைப்படுதல்


அருங் காட்சியகங்கள் பராமரிப்புக்கு உள்ளாகாமல் விடப்படுவதால் வரக்கூடிய சிக்கல்கள் கலாசாரத் திரிபுகள்,

கலைப் பிறழ்வுகள், சமூகச் சீரழிவுகள் வெளியிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்ளூர்  பாதிப்புக்குள்ளாதல்.


ஆகவே நாங்கள் திட்டமிட்டு எமது சுற்றுலா மையத்தை கவனமாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

மாற்றங்கள், முறைமைகள், திட்டங்கள் ஆகியன எமது பாரம்பரியத்தையும், சூழலையும், சுற்றாடலையும் கவனத்திற்கு எடுத்து வகுக்கப்பட வேண்டும். இதனால்த்தான் சுற்றுலா சம்பந்தமான சகலதையும் உள்ளடக்கிய மேன்மைத் திட்டமொன்றை  வடமாகாணத்திற்கு வகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124358/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மேய்க்கிற வேலையானாலும் கோறணை வேலை வேணும். 

நல்ல கருத்துக்களை ஐயா முன்வைத்துள்ளார், அதிலும் நம்மவர்கள் அரசாங்கவேலை வேண்டும் என்று அடம்பிடிக்காமல் எத்தனையோ பணம் ஈட்டக்கூடிய வேலைகளை செய்யலாம். ஒன்றில் அரசாங்கவேலை அல்லது வெளிநாட்டுபணம் என எமது மக்கள் வாழ்க்கையை இலகுவாக ஓட்டப் பார்க்கிறார்கள்.

ஐயா கருத்துக்கந்தசாமியாக வாழ்க்கையை ஓட்டாது கொஞ்சமேனும் வடமாகணதிற்காக வேலைசெய்யணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தெளிவாக உண்மையையும் சொல்லியுள்ளார் .

ஆனால் என் நண்பர் ஒருவர் கூறினார் - அதுவல்ல காரணம்! வேலை ஏதும் செய்யாத வேலை வேண்டும் என்பதால்த்தான் எம்மவர் அரசாங்க வேலைகளை நாடுகிறார்கள் என்று. அது சரியோ பிழையோநானறியேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.