Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதி முகாம்: தகிப்பில் உழலும் வாழ்வு

Featured Replies

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும் அகதிமுகாம்களில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு அடைக்கப்படுகிறவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை அடகுவைத்துவிட்டே கண்காணிப்புக் கூடாரத்தில் வாழ ஆரம்பித்தார்கள். இந்தியா ‘டிஜிட்டல் இந்தியா’வாகவும் மாறிவிட்டது. ஆனால், இன்றும் முகாமில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.

அகதி முகாம்களில் தஞ்சமடையும் மக்கள் பல்வேறான சூழல்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம், கன்னியாகுமரி ஞாறாம்விளை முகாம். அது ஒரு பழைய நெற்களஞ்சியம். சீட்டுகளையும் தகரங்களையும் வைத்து அடைத்து, அதுவே இன்று அகதிமுகாமாக அறியப்படுகிறது. இதேபோல் கோழிப்பண்ணை, மில் ஆகியவையும் முகாம்களாகி இருக்கலாம்.

agathi-01.jpg

அகதிகளின் முதல் பிரச்சினை அவர்கள் நிரந்தரமற்றவர்கள் என்பது. அகதிகள் வெவ்வேறு நிலங்களில் இருக்கும் முகாம்களில் இந்தியச் சமூகத்தோடு ஒட்டக்கூடிய அளவில் இருந்தாலும், நிரந்தரமான ஒரு வாழ்வை அவர்களால் வாழ முடிவதில்லை. நடைமுறைச் சிக்கல்களே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். வாழிடம், சமூக உறவுகள் என எதுவும் அவர்களுக்கு ஆரோக்கியமானதாய் இல்லை. நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துவிட்ட சூழலில் அகதிகள் பற்றிய பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்கிறதா என்பது பதிலற்ற கேள்விதான்.

பலவீனமானவர்களை உற்பத்திசெய்தலும் வளர்த்தெடுத்த லும்தான் அரசின் நோக்கமாக உள்ளது. பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், ஆண்கள் என்று எந்த வரைமுறையையும் உருவாக்கிகொண்டு அரசு செயல்படுவதில்லை என்பது மட்டும்தான் ஆறுதலான செய்தி. உண்மையில் முகாம்களில் இருக்கிற மக்கள்தொகை பற்றியே சரியான தகவல் கிடைப்பதில்லை. முகாம்களிலிருந்து தப்பித்து வெளியேறியவர்கள் குறித்த தகவல்களே இன்னும் சீராக்கப்படவில்லை.

பொதுவாக சமூக அமைப்பு குடும்பத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகிறது. பெண்ணின் கடப்பாடுகள் சமூகக் கட்டமைப்பில் முக்கியப் பொறுப்பிலிருப்பதாக, கற்பிக்கப்படுகிற ஆணுக்கு பணிவிடை செய்வது என்ற அபத்தமான சிந்தனை முறையால் வடிவமைக்கப்பட்டவை. இலங்கைத் தமிழ்ச் சமூகமும் அதிலிருந்து விடுபட்டதில்லை. மற்றபடி அகதிகள், அரசுக்கும் க்யூபிராஞ்சுக்கும் முகாமிலிருக்கும் அனைவரும் பிண்டங்களே. பெண்கள் என்றால் கொஞ்சம் விசேசமான பிண்டங்கள். அவ்வளவே.

க்யூபிராஞ்சுக்காரர்களை இந்தியர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டின் இலங்கை அகதிகளுக்கு நன்றாகவே தெரியும். ஒரு நாளைக்குப் பத்து தடவை ‘க்யூபிராஞ்சுக்காரர்’ என்று உச்சரிக்காவிடில் அவர்களுக்கு நாள் விடியாது. திருச்சி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, ஈரோடு போன்ற இடங்களில் இருக்கக்கூடிய ஏழு முகாம்களில் பார்த்த நேரிடையான அனுபவம்தான் இது. அங்கிருக்கும் பெண்கள் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் முகாம், ஈழ விவகாரம், தங்கள்மீது நடத்தப்படும் வன்முறைகள் எவற்றைக் குறித்தும் அக்கறையற்று இருப்பவர்களாக முதல் பார்வையில் தெரிந்தனர். ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளில் அந்தப் பெண்கள், பேசும் வலிமை கொண்டவர்கள், அவர்களால் பகிர்ந்துகொள்ளவும் அதற்காகப் போராடவும் முடியும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவெளியில் அரசு மேற்கொள்ளும் வன்முறையைக் காட்டிலும் க்யூபிராஞ்சுக்காரர்கள், முகாம் ஆண்களால் அன்றாடம் நிகழ்த்தப்படும் உடல், உளரீதியிலான பிரச்சினைகள் அவர்களைச் சோர்வடையச் செய்கிறது. யாரிடம் எதற்காகப் பேச வேண்டும் என்பது கூடச் சமூக ஆண்களாலேயே தீர்மானம் செய்யப்படுகிறது.

இலங்கையில் இருந்தபோதாவது அவர்களின் வாழ்பரப்பு கொஞ்சம் அதிகமாகவிருந்தது. ஆனால் முகாம்களில் பெண்கள் அறைகளில், துண்டுபட்ட பாதுகாக்கப்பட்ட வெளியேற முடியாத ஒரு வெளிக்குள் கட்டுப்படுத்தப்படிருக்கின்றனர். ஆண்கள் மறைந்தோ அல்லது அரசிடம் முறையான அனுமதி வாங்கியோ வெளியிடங்களுக்குச் செல்லலாம். பெண்களுக்கு அதுகூடச் சாத்தியமில்லாததுதான். வெளியி டங்களில் பணியில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் தாங்கள் தமிழ் அகதி என்பதை எங்கும் தெரிவிப்பதில்லை. முகாம் அமைந்திருக்கும் பகுதிகளிலிருக்கக்கூடிய அகதிகளுக்குப் பெரும்பாலும் இந்தியர்களோடு நல்ல உறவுநிலை கிடையாது. ‘கேம்புக்காரர்’ என்ற சொல் இழிசொல்லாகவே பார்க்கப்படுகிறது. அதனாலேயே அவர்கள் தாங்கள் யார் என்பதை மறைத்துப் பணிபுரிகிறார்கள். பெண்கள் தங்களை, முகாமைச் சேர்ந்தவர்கள் என எங்கும் தெரியப்படுத்த விரும்புவதில்லை. பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொந்தரவுகளும் இளக்காரப் பேச்சுகளும் அவர்களைத் தங்களை மறைத்து வாழ நிர்ப்பந்திக்கிறது.

agathi-02.jpg

வீட்டிலும் பொதுவெளியிலும் நிகழ்த்தப்பட்டது இந்த நேர்காணல். முகாமின் பெயர்களும் பெண்களின் பெயர்களும் வயதும் மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல் இங்கு நேர்காணல் செய்யப்பட்ட இரு பெண்களின் பிரச்சினைகள் வேறு வேறாக இருக்கிறது. பிரச்சினையைச் சொல்லும்போது அவர்கள் குடும்பம் என்கிற சிந்தனையூடாகவே அவர்களால் உரையாட முடிந்தது. உடல்வழி நிகழ்த்தப்படுகிற வன்முறைகள் பற்றி இருவரும் கவனப்படுத்துகின்றனர். இரு நேர்காணல்களின் அடிப்படையும் இதுதான். பெண், உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறை.

மேலும் முகாமின் இறுக்கம் பற்றிய சிறு புரிதலுக்காக:

முகாம்: -திருவண்ணாமலை நண்பகல் 11:20

க்யூபிராஞ்சுக்காரங்கள் விடமாட்டாங்கள். அவங்களுக்கு என்ன நடந்தாலும் தெரிஞ்சு போயிரும். சனம் சொல்லிக்குடுத்துடுங்கள்.

முகாம்: பவானி பிற்பகல் 03:05

க்யூபிராஞ்ச் வருவான். அவன் வந்தானெண்டால் கேள்விகேட்டே கொண்டுபோடுவான். இன்னொன்று, அவங்கள் (க்யூ) எங்களுக்கு எல்லாமே செஞ்சு தாராங்கள். பிறகென்ன, இங்கயிருக்கிற நிறையப் பெடியங்கள் அவங்களுக்கு நல்ல சப்போட். இப்ப நான் எதாச்சும் கதைச்சு, அது பேப்பர்ல வந்துச்செண்டால் க்யூகாரங்கள் ஒண்டும் சொல்லமாட்டாங்கள்தான். ஆனாலும் நாளைக்கு அவங்கள் வந்து ‘உங்கள நல்லாத்தானே வச்சிருக்கிறம். பிறகு ஏன் பத்திரிகைக்குப் பேட்டியெல்லாம் குடுக்கிறீங்க எண்டு கேட்டால் நான் என்ன சொல்லுறது, சொல்லுங்கோ. நாளைக்கு எதுவுமெண்டால் அவங்கதானே வந்து நிப்பாங்கள். நாங்களும் அவங்களிட்டதான் போய் நிக்கோனும். பயம் இல்லை, அவங்களுக்கு விசுவாசமா இருக்கத்தானே வேணும். எங்கள் வச்சு பாக்கிறாங்கள் எல்லோ.

முகாம்: மாவீரன், நண்பகல் 1:15

இங்க 39 குடும்பங்கள் இருக்குது. யார், யாரத் தேடி வாராங்கெண்டு எல்லாருக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியிற நேரத்தில அவங்களுக்கு (க்யூ) மட்டும் தெரியாதா? எங்கள அவங்கள் எப்பவும் கன்றோல்ல வச்சுக்கொள்றதுதான் அவங்கட வேல. மற்றப்படி நான் எதுவும் கதைச்சால் அவனுகள் நினைச்சால் என்ன வேண்டுமெண்டாலும் செய்யலாம். ஏன் பெரிய கதையள், நீங்கள் எப்பவாது பத்திரிகைல இந்த முகாமில, இந்த பொலிஸ் ஸ்டேசன்ல தமிழ் அகதி தற்கொலையெண்டு எந்தச் செய்தியையாவது பாத்திருக்கிறீங்களா? ஆனா, இங்கயும் லாக்அப் சாவுகள் நடக்கிறது. . .

இவற்றை இங்கு குறிப்பிட்டுவதற்குக் காரணம், அவர்கள் பயப்படுவது விசுவாசத்தின் அடிப்படையில். விசுவாசத்திற்கு மூல காரணம் அச்சம். மிகவும் பலவீனமான மனிதர்கள் முகாம்களுக்குள் இருக்கிறார்கள். பலமானவர்கள் எனக் கருதப்படும் அகதிகள் சிறப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு பலவீனமான, அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட மனிதர்களாக உருவாக்கப்படுகிறார்கள். முகாம் பெண்களின் வாழ்வுச் சிக்கல்கள் பொதுப்பரப்பில் மிக அரிதாகவே பேசப்பட்டிருக்கிறது. அதற்கான கவன ஈர்ப்பு முயற்சிகளும் மிகக் குறைவே. கவனப்படுத்தலின் தொடர்ச்சியாகவே நான்கு குறிப்புகளும் இரு அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறுகின்றன.

நாங்களும் தொப்புள்கொடி உறவுகள்தான்- லதா, சிறுகடை முதலாளி.

என்னுடைய பெயர் லதா. நாலு வருசத்துக்கு முதல் நாங்கள் - நான், மகள், மகன் - மகனுக்குக் கால் ஏலாது, இந்த முகாமுக்கு வந்தோம். மகன் இங்கதான் பிறந்தவர். அவர் போகேக்க மகனுக்கு மூன்று வயது. மகள்தான் எங்கள் ரெண்டுபேரையும் பாக்கிறது. நாங்கள் எல்லாரும் திருவண்ணாமலை முகாமிலதான் இருந்தனாங்கள். அந்த முகாம் கொஞ்சம் ஊருக்கு வெளியில இருக்கிற கேம்ப்தான். அவர் போனபிறகு அங்கதான் எல்லாரும் இருந்தம். அவர் இலங்கைக்குப் போயிட்டு வாரன் - அங்கயிருக்கிற சனம் இல்லாத காணிகள ஆமி பிடிச்சு வச்சிக்கொண்டு ‘இது இராணுவ நிலம் - அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற போர்ட வைத்துவிடுவார்கள். பிறகு ஒரு காலம் அங்க போயிருக்கிறதெண்டா கட்டாயம் இருக்கிறதுக்கு ஒரு துண்டுக் காணியாவது இருக்கத்தானே வேணுமெண்டு மனுசன் சொல்லிட்டு வெளிக்கிட்டுப் போச்சு. போனது போனதுதான். சரியா ஆறாம்ஆம் மாசம் 22ஆம் திகதி அவரோட போனில கதைச்சனான். மனுசன், இங்க இருக்கவே பயமா இருக்குது. நான் கடல்வழியாலயாவது வந்து சேர்ந்துவிடுவேன், யோசிக்காத எண்டு சொல்லிச்சு. அதுக்கு குறி தட்டிருக்குமெண்டு நினைக்கிறன். ‘மகள் எப்பயும் உன்னோட இருப்பாள். கவலப்படாத’ எண்டெல்லாம் கதைச்சுது. அந்தாள் கதைச்சு ரெண்டு நாள்ல, மனுசன் இயக்கத்தில இருந்ததாம். பழைய உறுப்பினரெண்டு சொல்லி ஆமிக்காரங்கள் பிடிச்சிருப்பாங்கள் எண்டு ஒரு ஊகமா அவர்ட சொந்தக்காரச்சனம் சொல்லிச்சுதுகள். அப்ப ராசபக்ச படு கொண்டாட்டத்தோட இருந்த நேரம். அவன் கை வச்சா முத்தாத மாங்காகூட டமாலெண்டு கீழ விழுமெண்டு சனம் சொல்லிச் சிரிக்குங்கள்.

agathi-03.jpgஅதாவது பறவாயில்ல. சனம் நக்கலடிக்குது. ஆனால் இந்தியன் தமிழ்ப் பற்றாளர் ஒருவர் இடையில வந்தார். அங்க சனம் செத்துக் கொண்டிருக்குது. உங்களுக்கு உணர்வில்லையா? இங்க இருந்து காட்ஸ் கூட்டம் ஆடுறீங்கள். அது இதுவெண்டு ஒரே கரைச்சல். ஒரு பொடியன் விளையாடிக்கொண்டிருந்தவன் போய் ஏன் அண்ண இங்க இப்பிடியொரு முகாமிருக்கெண்டு உங்களுக்குத் தெரியுமா? இப்ப வந்து ஏன் கத்துறீங்கள்? எண்டு கேட்டுட்டான். அதுக்குப் பிறகு அந்தாளும் போயிட்டுது. ஒரு பிரச்சினையும் நடக்கேல. ஆனால் நாலைஞ்சு நாள் கழிச்சு பொடியன் முகம் வீங்கிப்போய் கையெல்லாம் சுத்தி மாக்கட்டு போட்டுட்டு வந்து சொன்னான். இதுதான் நாட்டுப்பற்றில்லாம இருக்கிறவங்களுக்குத் தண்டனையாமெண்டு சொல்லி தமிழ்ப் பற்றாளர் வெளுத்தாராம் எண்டு. இதுவரைக்கும் இங்க இப்பிடியொரு முகாம் இருக்கு அங்க தொப்புள் கொடி உறவுகள் வாழுதுகள் எண்டு வராதவங்கள், கீழ இருக்கிறவக்களுக்குக் கை குடுக்கத் தயாரில்லை. குற்றம் கண்டுபிடிச்சு உனக்கு பற்றில்ல எண்டு சொல்ல மட்டும் வருகினம். இங்க இந்த கியூப்ராஞ்சுக் காரங்கள் செய்யிற சேட்டைக்கு வழி கண்டுபிடிக்கத் தெரியேல. அகதிக்கு புத்திமதி சொல்லுறதுக்கு மட்டும் வெளிக்கிட்டுருங்கள்.

நாங்கள் அவர் இருந்த சந்தர்ப்பத்தில பெரும்பாலும் அவரோட உழைப்ப நம்பித்தான் இருந்தனாங்கள். அதுவும் இங்கால இருக்கிற பழைய கட்டிடங்கள் உடைக்கிறது, சித்தாள் வேலைகள் எண்டுதான் அவர் பாத்துக்கொண்டிருந்தவர். இப்ப நான் மீன் விக்கப் போறனான். மீன் விக்கத் தொடங்கின காலத்தில நான் அனுபவிக்காத கஷ்டம் இல்ல. ஏனடா பிறந்தம்? பிறந்தும் இங்க வந்து துலைஞ்சம் எண்டு இருக்கும். சொன்னால் நம்பமாட்டீர், நாய் மோப்பம் பிடிச்சித் திரியிறமாதிரித் திரிவாங்கள். அது இலங்க ஆம்பிளையலாகட்டும். கியூப்பிராஞ்ச் ஆம்பிளையலாகட்டும். எல்லாம் ஒரே உலக்கையள்தான்.

சில நேரங்கள்ல பட்டுக் கூடெடுக்கவும் இவர் போறவர். அப்பெல்லாம் நான் வீட்ட விட்டு வெளியால போகேல. அவர் போனதுக்குப் பிறகுதான் இந்தச் சனத்துக்கு முகங்குடுக்க வெளிக்கிட்டன். ஒருநாள் மனுசன் கூடெடுத்துட்டு வர கொஞ்சம் லேட் ஆயிட்டுது. ஒம்பது மணி இருக்கும், திடீரெண்டு செக்கிங். அவர எங்கபோய் நான் தேடுறது. உவங்கள் வந்தாங்கள், எங்க எண்டாங்கள், ஆள் வெளிய போயிருக்கு வந்தோன உங்களிட்ட வரச் சொல்லுறன் எண்டு சொன்னன். என்ன ஒண்டும் செய்யேல. ஆனால் அதுக்குப் பிறகுதான் எனக்கும் பிள்ளைகளுக்கும் கஷ்ட காலம் வந்தது. அவர் இல்லாத நேரத்த அறிஞ்சு வச்சுக்கொண்டு ஒரு க்யூபிராஞ்சுக்காரன் ஒருத்தன் உங்களுக்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்க... கேளுங்க... எண்டு சொல்லி வர வெளிக்கிட்டான். சனமும் ’நெருப்பிலாத எண்டைக்குமே புகையாது’ என்ற மாதிரி தொடர்ந்து கதைச்சுக்கொண்டு இருந்துதுகள். இண்டைக்கு வரைக்கும் கதைச்சுக்கொண்டுதான் இருக்குங்களெண்டு நினைக்கிறன் (சிரிக்கிறார்).

விசாரணை, இருட்டடி இதெல்லாம் இங்க சாதாரணம். இப்பதான் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இந்த ‘சிறைச்சாலை’யெண்டு ஒரு படம் வந்திருக்கு, பாத்திருக்கிறீங்களா? அதில ஒரு சீன், கால் கொறகொறவெண்டு இழுபட ஒருத்தன அடித்து தூக்கிட்டுப் போவாங்கள் அந்தமாதிரி இங்க ஆரம்பத்தில நிறைய நடக்கும். இப்ப கொஞ்சம் குறைவுதான். சனத்துக்கும் தன்மானம் குறைஞ்சிட்டு. அடியும் குறைஞ்சிட்டுது. எதுக்கு இவங்களிட்ட அடிபடோனுமெண்டிட்டு நாங்க யாருமே இவர் உட்பட வெளியில போறேல. ஆனால் சிலபேத்துக்கு மட்டும் உவங்கள் க்யூபிராஞ்சுக் காரங்கள் - சத்தமாக் கதைக்கேலாது. எங்களுக்குத் தெரியாமலேயே வீட்டுக்குள்ள ஸ்பீக்கர் வச்சிருப்பாங்கள். இவங்களுக்கு கேம்ப்புக்காரங்கள், ஸ்கொட்லண்ட் யார்ட் என்டுதான் பேர் வச்சிருக்கிறாங்கள். ஸ்கொட்லண்ட் யார்ட் சிலருக்கு மட்டும் சிறப்பு அன்பளிப்புத் திட்டங்கள் வச்சிருக்கினம். அவங்கள் எல்லாரும் வெளியில போகலாம் வரலாம். அதேமாதிரி அவங்களுக்குக் கொஞ்சம் வேலையளும் இருக்குத்தானே. இங்க யார் வாறாங்கள் - போறாங்கள், வெளியல இருக்கிர ஊரார்ச் சனங்களோட தொடர்பில இருக்கிறவை, பெரிய கதைகள்- பெரிய கதையளெண்டால் இந்த இயக்கக் கதை, அரசியற்கதை கதைக்கிறவங்கள், இயக்கத் தில இருந்தவையள், உதவி செஞ்சவையள் யார் யார் அவையளெண்ட டீட்டெய்ல்ஸ அவங்களுக்கு இந்தக் கொழுத்துத் திரியிறவங்கள் குடுப்பாங்கள். க்யூபிராஞ்சுக் காரங்களுக்கு என்ன ஏதெண்டு தெரியாது. எல்லாத்துக்கும் அவங்களிட்ட இருக்கிற ஒரே பதில் பொல்லு (லத்தி) தான். அதுதான் விசாரணையோட முதல் வார்த்தையையும் தொடங்கும். அதுதான் முடிச்சும் வைக்கும்.

பெடியளுக்கு இப்பிடியெண்டால், பெட்டையளுக்குக் கொஞ்சம் விசேசம். அதில எல்லாம் குறையெல்லாம் சொல்லேலாது. பகவதி அம்மாளையும், தொரௌபதையையும் கும்பிடுரவங்கள் எல்லோ. பொம்பிளையளுக்கு மரியாத குடுக்கத் தெரியாதா என்ன? இவனுகளத் தாண்டிப் போகுதுகள் எண்டால் இந்த வெறிக்குட்டிகள், அவளுவைக்கு முன்னால எதையாவது தூக்கி எறிஞ்சுபோட்டு, அத எடுத்துக் குடுத்துட்டுப் போ எண்டு சொல்லுவானுகள். அவள் எடுத்துக்குடுக்கும்போது அவளோட மாரோட நிறையெண்ணண்டு விசாரிச்சு, வாய்த்தண்ணி காவாயில ஓடுற வரைக்கும் பல்ல காட்டிட்டு நிப்பாங்கள். இதுகளுக்கும் தெரியும் பாக்கிறதுக்குத்தான் அவன் செய்யிறான் எண்டு. ஆனால் அதுகள் பெருசா ஒண்டையும் கண்டுகொள்றதில்ல. சில விசமேறினதுகள், பிள்ளையளோட வீட்ட போய் வேண்டா விருந்தாளியாய் தாய் தேப்பன் சகோதரங்களிட்ட அலம்பிட்டு தாந்தான் இந்த கேம்ப்போட குட்டி ராஜா எண்டு பயமுறுத்துவாங்கள். ஆனால் பிள்ளையள் மேல கை வைக்கத் துணியிறேல. அதுவரைக்கும் சந்தோசம். ஆனால் அங்க இங்க எண்டு ஒவ்வொரு கேம்பிலயும் பயன்படுத்திறது நடக்கத்தான் செய்யிது. பிள்ளையள் இவங்களப் பாத்து கேவலாமாத்தான் சிரிக்குங்கள். தூரத்தில ஒரு கியூப்ராஞ்சுக்காரன் வரானெண்டால் அவண்ட பார்வ எங்க இருக்குமெண்டு அவனவிட இவளுவைக்குத் தெரியும். எல்லாத்தையும் ஒண்டும் தெரியாதமாதிரி பம்பலடிச்சுக்கொண்டே போகுங்கள். என்ர பிள்ளையும் அப்பிடித்தான்.

இதவிட சிறப்பு முகாமில இருக்கிற கதைகள் சிக்கலான கதைகள். நீங்கள் போய் ஒருத்தரிட்டயும் எந்த விடுப்பும் புடுங்கேலாது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். உள்ளுக்க நீங்க வரும்பொதே தகவல் போயிருக்கும். இன்னார் வீட்டுக்கு யாரோ வந்திருக்கினம். நீலச்சேட்டுக்காரனும் கண்ணாடிக்காரனும் உள்ளுக்க போறாங்கள். இவ்வளவுதான். அது செய்தி மாதிரி வீட்டுக்குவீடா மாறிமாறிப் போகும். இங்க இருக்கிற யாருக்கும் எந்தவிதமான அந்தரங்கங்களும் இல்ல. அந்தரங்கம் பொதுப்படையானது. பெரிய ஆக்கள் எங்களுக்காகத் தொடர்ந்து யோசிச்சுக்கொண்டே இருக்கினம். எங்களுக்கு நல்லது செய்யோணுமெண்டு ஆசப்படுறாங்கள். ஆனால் அத இங்க இருந்து தொடங்கினாங்கள் எண்டால் வலு சந்தோசம். இன்னொண்டு, இன்னொரு சந்ததி இங்க பிறந்துச்செண்டால் அதுவும் துடைய ஆட்டிக்கொண்டுதான் பிறக்கும் மகன்.

இங்க பெடியங்களும் சும்மா இல்ல. எதாவது க்யூபிராஞ்சுக்காரங்களோட கதவழிப்பட்டு சேட்டையள் எதுவும் விட்டால் அவங்களிட்ட கதைக்கக்கூட பயப்பிடுவாங்கள். ஆனால் 97கள்ல பொடியங்கள் கொஞ்சம் உரமானவங்கள். அதப் பத்தி கதையொண்டு இங்க இருக்கு. இங்க பொலிஸுக்கார இன்ஸ்பெக்டர் ஒருத்தன் பொம்பிளையள் - அது குமருகள் ஆகட்டுமென், கிழவியள் ஆகட்டும் - இன்ஸ்பெக்டர் அவளுகள் பேண்டு வச்சதுக்குப் பிறகு அள்ளித் தின்னப்போறவன் மாதிரி அவாப் பிடிச்சு அலைஞ்சான். மதுசூதனன் எண்டு ஒரு இலங்கப் பொடியன். வலு திறமான சண்டக்காரனெண்டு முகாமுக்குள்ள பேரெடுத்த ஆள். பொலிஸு கொண்டுபோய் சண்டித்தனமா காட்டுறாய் எண்டு அடிச்சுத்தானே பாத்தாங்கள். அவன் உதுக்கெல்லாம் பணியிற ஆள் இல்ல. ஈபிஆர்எல்எஃப்-இல இருந்த பொடியன் அவன். அவன் இண்டைக்கு போட்ல வெளிக்கிடுறானெண்டால், முதல்நாள் இரவு பொலிஸுக்காரனப் பிடிச்சு வேப்பமரக் குத்திக்குள்ள தலையச் செருவி, ஜீன்ஸ, அந்த காக்கி ஜீன்ஸக் கழட்டி குண்டி சிவந்து, பனங்கா மாதிரி ஆகிரவரைக்கும் அடிச்சுப்போட்டு, இன்ஸ்பெக்டர நிண்ட நிலையிலயே கையையும் காலையும் மரத்தோட கட்டிவிட்டுட்டு விடியக்காலையிலயே சாமான் ஏத்திறவங்களோட ஆள் சுலோனுக்குப் பாஞ்சிட்டான். ஆனால் பொலிஸுக்காரன் விடியவிடிய உரிஞ்சாங் குண்டியோட அங்கயேதான் நிண்டான். அந்த வன்மத்தோடயே அந்த பொடியோட சுத்தினவங்கள பிடிச்சு அடி அடியெண்டு அடிச்சான். என்ன பிரியோசனம் அடிச்சவன் இல்ல. அது பொலிசுக்காரனுக்கு ஒரு பெரிய பாடம். பொலிஸ்காரன் இந்த ஏரியால இருக்கிறவரைக்கும் இங்கால வந்து கேஸுக்கு ஆக்கள் இல்லயெண்டு ஆள் பிடிக்கிற வேலையும் செஞ்சவன். அதுக்குப் பிறகு ஆளே இல்ல.

குமருகள் - பொம்பிளையள படுத்திறதுக்கு வெளியில இருந்து பொலிஸுக்காரந்தான் வரோனும்மெண்டில்ல. இங்க கொஞ்சம் கோடாலிகள் இருக்குதுகள். அதுகளுக்கு வேலயில்ல. அரசாங்கம் குடுக்கிற சாமானுகள வாங்கித் திண்டுபோட்டு, கலியான வீடு, செத்தவீடு, சாமத்திய வீடு, சங்கக் கட எண்டு ஒண்டையும் விடுறதில்ல. நாலு சில்லுகள சேத்துக்கொண்டு, போற வாறவள் - அவள் இங்க போனாள் - நான் அவளோட படுத்தன் - இவளோட படுத்தன் எண்ட கதையள். பொம்பிளையளப் பத்தி புறணி கதைக்கிறதெண்டால் உவங்கள விட்டால் ஆக்கள் இல்ல. ஆனால் இவங்களால் ஒரு பொலிஸ் கதைக்கிறானெண்டால் எதிர்த்துக் கதைக்கேலாது. அத்தின பேருக்கும் நரம்ப அறுத்துத்தான் இங்க வச்சிருக்கிறாங்கள். ஆனால் ஆம்பிள நரம்ப இன்னும் அறுக்கேல இதுகள். நல்ல பெடியங்கள் இருக்கிறாங்கள். ஆனால் அவங்களுக்கும் பொம்பிளையள் எண்டால் கொஞ்சம் தங்களுக்குக் கீழதான் என்ட எண்ணமும் இளக்காரமும். ஏனெண்டால், இங்க எங்கட சனம் பாலோட ராஜ விசுவாசத்தையும் சேத்துத்தான் குடிச்சதுகள்.

வாளக்குட்டி - குருவி - செல்வமக்கா, மீன் வியாபாரி

இந்தியா வரக்குள்ள எனக்குப் பத்து வயது. எனக்கெ நெறயப் பேர் இருந்துச்சு. வாளக்குட்டி, குருவின்னுல்லாம் கூப்புடுவாங்க. நான் சுயஉதவிக்குழுக்கள்ல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பன். அப்பெல்லாம் செல்வ மக்கான்னு கூப்பிடுவாங்க. என்ர அப்பா பழைய இயக்க உறுப்பினர். அதனாலயோ என்னமோ சின்னது இருந்தே வீட்டில ஆம்பிளையள் கதையலுக்குள்ளால ஊரில நடக்கிர இயக்கச் சண்டைகள் நிறையத் தெரிய வந்துச்சு. எனக்கு ஊரெண்டு எதுவும் பெருசா ஞாபகம் இல்ல. ஆனா ஊரப் பத்தி எனக்கு ஒரு நினைவு உண்டு அது ரொம்ப ஆழமான ஒண்டா, எப்பயும் என்னத் திரத்திக்கொண்டே இருக்குதெண்டுகூட பயந்திருக்கிறன். எங்கட வீட்டுக்குக் கிட்ட நெறைய கன்னாப்பத்த இருந்துச்சு. கன்னாப்பத்தைக்குள்ள மின்மினிப்பூச்சி விட்டுவிட்டு எறியிற மாதிரி ஏதோ ஒண்டு சடாரெண்டு தெரிஞ்சுது. என்னடி இதெண்டு விடுப்புப் பார்க்கிற அவாவுல கிட்டப் பாத்தன். எங்கட வீட்டில இருந்து நாலாவது வீட்டில இருக்கிற சத்தியமூர்த்தி அண்ணர் குடல் சரிஞ்சுபோய்க் கண்ணெல்லாம் மேல ஏறிப்போய்க் கிடந்தார். எனக்குத் தெரிஞ்சு நான் பார்த்த, கண்டுபிடிச்ச முதல் பிரேதம் அதுதான். ஊரில இருந்த காலத்தில பெரியாக்கள் சின்னாக்கள் எண்ட வித்தியாசமில்லாம எல்லாரும் எப்பிடியாவது இப்பதான் செத்தவர் எண்ட போர்டோட ஒரு பிரேதத்த பாத்திருப்பாங்களெண்டுதான் நினைக்கிறன். நாங்க நாலு பேரு - மாமி, நான், சின்ன மகள், பெரிய மகள் - பெரிய மகள், இங்க கார்மெண்ட்ஸ்ல துணி வெட்டிற பொடியன கலியாணம் கட்டி வெளியால இருக்கிறாள். பெடியன் சாதிகுறைஞ்ச பெடியந்தான். முதல்ல இந்தியாப் பொடியன், அதிலயும் சாதி

குரைஞ்சவன், சனம் என்ன கதைகுமெண்டு பயப்பிடத்தான் செஞ்சனான். இந்தப் பாழடைஞ்ச முகாமுக்குள்ள நரக வாழ்க்க வாழுறதுக்கு வெளியில எப்பிடியிருந்தாலும் வாழட்டும் எண்டு அனுப்பிவிட்டுட்டன். முதல்ல கொஞ்சம் பயம்தான். எங்க ஏமாத்திக்கீமாத்திப்போட்டு பெட்டையத் திரத்திடுவானோ எண்ட பயமொண்டு இருந்ததுதான். ஆனால் பொடியன் நல்லம். என்னோடயும் சரி மச்சாள்காரியோடயும் சரி.

என்னதான் நான் 14, 15 வருசமா தனியா இருந்தாலும் ஒரு நேரத்தில அப்பா, அம்மா, பிறகு புருசன் எண்டுதான் எண்ட வாழ்க்கையும் ஓடினது. அம்மா என்னயக் கூட்டிவந்து பவானில விட்டுட்டு வேற ஒராளோட போயிட்டா. ஆனா அவையையும் குறையொண்டும் சொல்லேலாது. அவவும் நல்ல வடிவு. நான் பிறந்ததுக்குப் பிறகு அவவும் கொஞ்சம் தனிச்சுத்தான்

போயிட்டா. எனக்கெ ஞாபகத்தில இருந்து அவ என்னத் தூக்கி விளையாடினமாதிரி எந்த நினைவும் இல்ல. அதாலதான் மொழி தெரியாட்டிலும் அவைய விளங்கிக் கொண்டதா நினைச்ச ஒருத்தரோட போக முடிஞ்சது அவாவால. சில நேரம் நானும் நினைக்கிறதுண்டு. நானும்

போயிரலாமே எண்டு, ஆனால் எண்ட காலில ஒரு பெரிய குடும்பமொண்ட கட்டியிருக்கிறாங்க. நான் போகேலாது. விரும்பவும் ஏலாது. சனத்துக்கெ என்ன மீன்காரியாத்தான் தெரியும். இந்தியாச் சனங்கள்தான் எனக்கு கட போட, நடத்த வழி செஞ்சதுகள். இந்தியாக்காரங்களெண்டால் ஏதோ ஒருவித ஜந்து என்ற மாதிரி ஒரு எண்ணம் என்னட்டையும் இருந்ததுதான். ஆனால் அதுகள் இல்லையெண்டால் நானும் பிள்ளையளும் இல்லதானே. எனக்கெ பரமேஸ்லயும் பெரிய வருத்தம் ஒண்டும் இல்ல. ஏனெண்டால் அந்தாள் வெளிநாட்டுக்கு வெளிக் கிட்டது எங்களுக்காகத்தான். ஆனால் அவருக்கு அங்க இன்னொரு வாழ்க்க அவசியாமாப்பட்டிருக்கும்போல. ஏழு வருசம்தான் அவர் என்னோட இருந்தார் (நீண்ட நேர்காணலின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகள்...)

 

http://www.kalachuvadu.com/issue-191/page52.asp

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன்.

பகிர்வு நிஜத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. எமது வலிகள் ஆயிரமாயிரம்.

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

கொடுமையிலும் கொடுமை .

கியூ பிரான்ச் முகாம்களுக்கு உள்ளே வந்தது அந்த ஒரு கொலையின் பின்னர்தான் என்று நினைக்கின்றேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.