Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்(பத்தி)

Featured Replies

தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.  என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன்.  

 

இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது.  ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன்.  முழுமையாக பார்ப்பதற்காக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன. 

 

பாரிசின் புறநகரில்  இருந்து தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் லாசெப்பல் செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும்  தினமும் இந்த தொடருந்து நிலையத்தை தான் பாவிப்பதுண்டு. வீட்டில் இருந்து புறப்பட்டால் தானியங்கி போல ஒவ்வொன்றாக நிகழும். தொடருந்து நேரத்தைப் பார்ப்பது மாத பயணசீட்டை அதற்கான இயந்திரத்தில் பொருத்தி கதவினை திறந்துகொண்டு தொடருந்து நிலையத்துள் நுழைவது பின்னர் ஓரிரு நிமிடங்களில் வரும் தொடருந்தில் ஏறி லாசெப்பலில் இறங்கிக்கொள்வது. அல்லது வேலைத்தளத்திற்கு சென்றுவிடுவது. . 

 

ஆனால் இன்று எதேற்சையாக கண்ணில் பட்ட  அந்த செருப்பு ஒருகணம் உடலை சில்லிட வைத்தது. விழிகளை விட்டு விலகாமல் கண்களுக்குள்ளேயே ஆடிக்கொண்டு கிடந்தது. இதற்கு முன்னும் சிலசந்தர்ப்பங்களில் இப்படி ஒற்றை செருப்பினை கண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத உணர்வு ஏன் இப்போது மட்டும் ஏற்பட்டது. புரியவில்லை. 

 

மனித மனங்கள் விந்தையானவை. தனக்கு ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் சூழலை ஆறுதலாகவும் அமைதியாகவும் அணுகுகின்றன. அலைந்து உலைந்து குழம்பி நிற்கும் சந்தர்ப்பங்களில் சூழலின் ஒன்னொரு பக்கங்களை தமக்கு சார்பாக்கி பார்க்கின்றன. இப்போது எனது மனநிலை என்னவாக இருக்கிறது. தனிமையா? பிரிவா ? ஏக்கமா ? தற்கொலையொன்றின் மீதான ஈடாட்டமா ? 

 

திடீரென முகத்தில் பட்ட காற்றின் உதைப்பு என்னை இயல்புக்கு கொண்டுவந்தது. மிக வேகமாக என்னைக்கடந்துகொண்டிருந்தது தொடருந்து. தண்டவாளத்தைப் பார்க்கிறேன் செருப்பு அப்படியே கிடக்கிறது. தொடருந்தின் சில்லுகள் அதன் மேலாக சீரான ஒரு இடைவேளிகொண்டு பாய்கின்றன. அமைதியாக, தனிமையாக, எதுவித அசைவுக்களுமின்றி நிர்ப்பயமாக செருப்பு அப்படியே கிடக்கிறது. 

 

மனதில் உருவாகிய கிலேசத்துடன்  இருக்கையை விட்டு எழுந்து  அடுத்தபக்க தரிப்பில் நின்ற தொடருந்தில் ஓடிச்சென்று ஏறி ஒரு இருக்கையில் அமர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆற்றுப்படுத்திவிட முனைகையில், அங்குமிங்கும் அலைந்து திரியும் மனிதர்களிடையே இருந்து மீண்டும் அந்த தனியாக கிடந்த செருப்பு எழுந்து கொண்டது. லாசெப்பலில் இறங்கி நடக்கதொடங்குகிறேன். பின் தலையோடு ஒட்டியபடி அந்த தனிச்செருப்பு என்னைத்தொடர்வதுபோல இருந்தது. 

 

லாசெப்பல் பாரிஸில் வாழும் தமிழர்களின் கடைகளால் நிறைந்திருக்கும் ஒரு நகரம். அந்த தமிழ்க்கடைகளிலும் கண்கள் செருப்பையே தேடுகின்றன. யாழ்ப்பாணத்து மிளகாய் தூளில் இருந்து கொழும்பு சித்தாலேப, கோடாலித் தைலம் போன்ற  மூலிகை மருந்துகள்  மட்டுமல்ல நாக்கு வழிக்கும் மெல்லிரும்பு கூட இங்கு கிடைக்கும். ஆனால் செருப்பு மட்டும் இந்த தமிழர்களின் கடைகளில் இல்லை. திரும்ப திரும்ப யோசித்தும் இந்தக் கடைகளில் ஏன் செருப்பு விற்பனைக்கு இல்லை என்பது புரிபடவே இல்லை. பட்டுவேட்டியும் பட்டுக்கூறையும் பஞ்சாபியும் குர்தாவும் அவற்றுக்கான ஏனைய அணிகலன்களும் தாரளமாகவே கிடைக்கும் இந்த வர்த்தகப் பெருநகரத்தில் ஏன் ஊரில் போடும் செருப்பு மட்டும் இல்லை. மிக உயரந்த அலங்கார காலணிகள் எல்லாம் கிடைக்கும் அவற்றுக்கான பிரத்தியேக பெயர்களில் அவற்றை அழைப்பார்கள். ஆனால் செருப்பு மட்டும் இல்லை.

 

சாதரணமாக பாரிஸில், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் இருக்கும் செருப்பை ஏனோ தெரியவில்லை மனது நாடுவதில்லை. அதன் அலங்காரத்தன்மை ஒரு அன்னியத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது போலும். அல்லது  ஊரின் நினைவுகளும் ஊரின் பொருட்களுமே திருப்ப திருப்ப பாவனையில் கொண்டிருப்பதாலோ என்னவோ செருப்பையும் அங்கிருந்து பெறவேண்டும் என்றே மனது அவாவுகிறது.

 

செருப்பு இந்த தமிழ்க்கடைகளில் விற்கப்படாதிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும். செருப்பு போன்ற வேறு என்ன பொருட்கள் இங்கே இல்லை என்று தேடிப் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் யாழ்ப்பாணத்தில் செருப்பு என்ன சமூகப் பெறுமானம் கொண்டிருந்தது என்று யாரிடமாவது கேட்டுப்பார்க்க வேண்டும்.

 

தேவகாந்தன் எழுதிய நினைவேற்றம் என்ற பத்தியில் 1959- 1960 களில் இந்த செருப்பு யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமானது என்று எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எனக்கு அறிமுகமாகியது 93 களில் தான் அதுவும் என் நண்பன் ஒருவனின் மூலம். அவன் அப்போது கொழும்பில் இருந்து வந்திருந்தான். எமது ருக்குள் செருப்புடன் வந்த எமது வயதொத்தவன் அவனாகத்தான் இருப்பான். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். எனது வயதேயான எல்லோரும் வெறும் காலுடன் தான் பாடசாலைக்கு செல்வோம் ஒரு சிலர் அரிதிலும் அரிதாக கால் முழுவதும் மூடியிருக்கும் படியான காலணிகளை அணிந்திருப்பார்கள். பாடசாலையில் பொதுநீர்த் தாங்கியிலிருந்து குழாய்வழியாக வரும்  தண்ணீரை, கால்களை அகலவிரித்துக்கொண்டு  கொஞ்சம் குனிந்து நின்று கைகளால் ஏந்திக் குடிப்பைதைப் பார்க்க மாடுகள் சிறுநீர் கழிக்கும் போது நிற்கும் கோலம் தான் நினைவுக்கு வரும்.

 

கொழும்பில்இருந்து வந்தவனும் நானும் நல்ல நண்பர்களானோம். முதன் முதலாக அவனது  செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் மிதி (பெடல்) கால்களில் எதுவித வலிகளையும் தரவில்லை. "மெத்" என்று இதமாக இருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அன்றிலிருந்து சைக்கிளில் போகும் போது அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு ஓடுவது வழமையாகியது. எப்போதாவது கால் பிறேக் அடிக்கும் போது செருப்பு "ரியூப்வால்வில்" பட்டு காற்றினை வெளியேற்றிவிடும். 'வால்கட்டை' என்ற அந்த பகுதி எங்காவது தூரத்தில் விழுந்து தொலைந்துபோகும். 

 

இவ்வாறான நாட்களில் தான் எனக்கும் ஒரு செருப்பு வேண்டிப் போடும் ஆசை வந்தது. அம்மாவிடம் காசினைக் கேட்டேன். மூன்றோ நான்கோ நாளின் பின் அம்மா தானும்  வந்து செருப்பினை வேண்டித்தருவதாக சொன்னார். அம்மாவுடன் சென்றால் விரும்பிய செருப்பினை வேண்டமுடியாது என்று அடம்பிடித்து காசினை வேண்டிக்கொண்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு  உடுப்பிட்டியில் பண்டிதர் கடை என்ற ஒரு அங்காடியில் முதல் முதலாக எனக்கென்று ஒரு  செருப்பை வேண்டுகிறேன். விலை முப்பத்தொன்பது ரூபா தொண்ணூற்று ஒன்பது சதம். அந்த நாள்களில் ஒரு ரூபாவுக்கு மூன்று கல்பணிஸ் தருவார்கள். 

 

அது ஒரு நீலக் கலர் செருப்பு. குதிக்கால் படுமிடத்தில் நீள்வட்டத்திற்குள் BATA என்று எழுதி இருக்கும். ஒரு இஞ்சி உயரம். அதன் நடுவில் இரண்டு வெள்ளைக் கோடுகள் வளைந்து வளைந்து சுற்றிவர இருக்கும். மெல்லிய இரண்டு பட்டிகள் (பார்கள்). அவற்றில் ஒன்று நடுவில் கொஞ்சம் முட்டை வடிவில் அகன்று அதில "BATA" என  எழுதி இருக்கும். அவசரத்தில் செருப்பினை காலில் கொழுவும் 

போது அந்த அகன்ற பகுதி சிலநேரம் முறுகிவிடும். கையால் நிமிர்த்திவிடவேண்டும்.  நடக்கும் போது ண்ணில் சிறு சிறு பெட்டிகளாக நிறைய தோன்றும். அதற்காகவே வீதியின் புழுதி ஓரங்களால் நடந்து திரிவதும் உண்டு.

 

பின் சிலகாலங்களில், ஓரளவு வெளியூர் பொருட்கள் யாழிற்கு வரத்தொடங்கியபின் "முள்ளு முள்ளு செருப்பு"  என்ற ஒன்று வந்து சேர்ந்தது. மற்றையதை விட விலையும் அதிகம். கருப்பு மற்றும் மென் நீல நிறத்தில் அதிகம் கிடைத்த அந்த செருப்பு மென்மையானது இலகுவில் வளைந்து கொடுக்க கூடியது. தண்ணீரில் கழுவியவுடன் போட்டுக்கொண்டு நடந்தால் "சர்க் சார்க்" என்று சாத்தம் எழுப்பும். ஆனால் விரைவில் தேய்ந்துவிடும். சைக்கிள் ஓடும்போது சைக்கிள்மிதி இந்த செருப்பை நடுவில் மட்டும் கிழித்தும் விடும். கொஞ்சம் கௌரவமான ஒரு உணர்வை இந்த செருப்பு தந்தது என்பது என்னவோ உண்மைதான். 

 

அந்த நாட்களில் பாடசாலை சீருடை நீலக் கலர் காற்சட்டையும் வெள்ளை சேட்டுமாக இருந்தது. எங்களுடைய வகுப்பறை மண் நிலத்தில் தான் இயங்கியது. கடைசி மேசையில் இருக்கும் நானும் நண்பனும் மண்ணில் செருப்பின் முன் பக்கத்தை மடித்து மண்ணைக் கிளறி விடுவோம் வகுப்பறை மற்றும் முன்னால் இருக்கும் நண்பனின் ஆடைகள் எல்லாம் மண்ணில் தொய்ந்துவிடும். விளையாடப் போகும் போதெல்லாம் சைக்கிள் பூட்டின் உள்ளே இரண்டு செருப்பின் பட்டிகளையும் விட்டுதான் பூட்டினைப் பூட்டுவது. அப்போதெல்லாம் செருப்பு என்றால் ஒரு அரிய ஆடம்பரமான பொருளாகத்தான் இருந்தது தெரிந்தது.  ஆனால் அந்தக் காலத்திலும் செருப்பினை விட விலை கூடிய பல பாதணிகளை அணியும் பல மாணவ நண்பர்கள் இருந்தனர். தாங்கள் அணிந்திருக்கும் காலனியின் விலையினை சொல்லி கொண்டாடும் ஒரு மனநிலை அவர்களிடம் இருந்தது. இருந்தபோதும்   அதனை ஏக்கத்தோடு பார்க்கும் மனநிலை மட்டும் எம்மிடம் வரவேயில்லை. காரணம் அப்போதெல்லாம் எமது தேவைகளும் பொழுதுபோக்குகளும் வேறாக இருந்தன என்பதுதான். இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனையோ தோழிகளுடன் தனகி முரண்பட்டு இருப்போம். அவர்களில் ஒருத்தி கூட அந்த நாளில் செருப்பால் அடிப்பேன் என்றோ, குறைந்தது செருப்பை எடுத்துக் காட்டியதோ இல்லை. சிலநேரம் அவர்களுக்கும் அந்த செருப்பு முக்கியமான பொருளாக இருந்திருக்குமோ அல்லது அந்த செருப்பின் பெறுமதி எங்களுக்கு இல்லையோ தெரியவில்லை.

 

அந்த நாட்களில்,நண்பர்களை வீட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்படி சென்றால் நண்பனின் அப்பாவிடம் அல்லது அக்காவிடம் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. சில நேரம் படித்த பாடங்களில் கூட கேள்விகளை கேட்பார்கள். வீதியால்  சைக்கிளில் எட்டிப் பார்ப்பது வாசலில் செருப்பு இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று விசில் அடித்துவிட்டு  சென்றுவிடுவோம். சைக்கிளில் செல்லும் போது யாராவது தோழிகளைக் கண்டால் செருப்பினை தெரியாதமாதிரி கழற்றி விழுத்தி விட்டு சைக்கிளால் இறங்கி ஆறுதலாக நின்று அவர்களை வடிவாகப் பார்த்து பின் செருப்பினை எடுத்துக்கொண்டு போவோம். சிலநேரம் அவர்களே "பொடியா செருப்பு விழுந்துகிடக்கு' என்றும் சொல்வார்கள். அந்த பொடியாவில் இருக்கும் இன்பம் இப்போது தோழி அல்லது தோழா என்று சொல்லும் போது கிடைப்பதில்லை.

 

இந்தக் காலப்பகுதியில் இராணுவம் யாழ்குடாவை கைப்பற்றிக் கொண்டது. நாங்களும் செருப்பு என்ற  பொருளை சாதரணமாகவே பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லாமல் எங்கேயும் போவதில்லை. அதேவேளை எங்கே போனாலும் காலில் செருப்புதான். அதற்கு மாற்றும் இல்லை. உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதென்றால் குறைந்தது முப்பத்து இரண்டு இடங்களில் இராணுவ சோதனைச்சாவடி இருந்த காலம் அப்பவும் நாம் செருப்புடன் தான் திரிந்தோம். கல்யாணத்தில் இருந்து கருமாதி வரை செருப்புடன் தான் போவோம்.

 

பலதடவைகள் செருப்புக்காகவே ராணுவத்தினர் மறித்து சோதிப்பதும் வெருட்டுவதும் என கடந்திருக்கிறோம். ஒருதடவை நூலக வாசலில் செருப்புகள் இரண்டும் கிடக்க நண்பனொருவன்  காணாமல் போயிருந்தான். சைக்கிளில் சென்ற இராணுவத்தினர் அவனை கைது செய்து சென்றிருந்தனர். செருப்பு மட்டும் இருப்பதை பார்த்தே அவனுக்கு எதோ நடந்துவிட்டது என்று அப்போதைய பிரஜைகள் குழுவில் முறையிட்டு அவர்கள் எடுத்த நடவெடிக்கைகளால் பின்னர் பருத்தித்துறை முகாமிலிருந்து அவனை விடுதலை செய்தனர். இன்னொரு நண்பன் தனது செருப்பில் தனது பெயரையும் காதலிப்பவள் பெயரையும் வெட்டி வைத்திருந்தான். அதனை பார்த்த இராணுவத்தினர் எதோ பெரிதாக கண்டுபிடித்துவிட்டதுபோல அவனை நான்குநாட்கள் வல்வெட்டித்துறை முகாமில் தடுத்து வைத்திருந்தனர். செருப்பில் பேர் எழுதியதற்காக கண்மண் தெரியாமல் அடிவேண்டியவன்  அவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்.

 

ஒருதடவை விடுதலைப்புலிகள் உடுப்பிட்டி சந்தியில்  இராணுவத்தினரை சுட்டுவிட்டார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பன் அவசரத்தில் இரு வேறு செருப்புக்களை மாறிப் போட்டுக்கொண்டு வீடுநோக்கி ஓடிச்சென்ற சென்றபோது  பிடித்த இராணுவம் அவன்தான் சுட்டுவிட்டு எங்கோ கிடந்த செருப்பை போட்டுக் கொண்டு வருவதாக கூறி கைதுசெய்து இரண்டரை வருடங்கள் காங்கேசன்துறை சிறையில் அடைத்திருந்தனர். பருத்தித்துறையில்  இராணுவத்தினர் நடத்திய  மலிவுவிற்பனைக்  கடையில் கொக்கோ கோலா குடிக்கவென்று  சென்ற நண்பனை அவர்களே கைது செய்து சிறைக்கு அனுப்பியபின், அவனின் உடைமைகள் என்று அவனுடைய செருப்பையும் கறுத்தபட்டி மணிக்கூட்டையும் தொப்பியையும் தந்திருந்தனர். அவனது தாயை சைக்கிளில் ஏற்றிவரும்போது அந்த செருப்பின் கனம் மனமெங்கும் புதைந்துகிடந்தது. 

 

கணவனுடன் சண்டைபிடித்துக்கொண்டு முதல் நாள் வீட்டைவிட்டு வெளியேறிய மலர் அக்காவின் செருப்பு வயல் கிணற்றில் கிடந்ததைப் பார்த்தவர்கள் மலர் அக்காவின் கணவரிடம் அதை சொல்ல, அவர் குழறியபடியே ஓடிவந்து  கிணற்றடியில் மயங்கி விழுந்து கிடந்ததும் நாங்கள் எல்லாம் கிணற்றுக்குள் இறங்கி மூச்சடக்கி தேடியதும் புகையிலை உணத்தும் (பதப்படுத்தும்) குடிலுக்குள் ஒளித்திருந்த மலர் அக்கா சிரித்துக்கொண்டே வெளியாலை வந்ததும், பிறகு சாப்பிடக் கூப்பிட்டு தான் வேணுமென்றே செருப்பை கிணற்றில் போட்டதாக கூறி எங்களை பார்த்து சிரித்ததும் கூட நேற்றுப் போலவே இருக்கிறது.

 

ஐயோ என்ர பிள்ளை செருப்பு கேட்டவள் என்றபடி வெள்ளைப்பூரான் கடித்து மரணித்த ஆறுவயது ரம்யாவை  பாடையில் வைத்து தூக்கும் போது புதுச்செருப்பை எடுத்துவைத்த தந்தையின் அழுகையும், கழிப்பு கழிச்ச இடத்தில இருந்து செருப்பை எடுத்துவந்திட்டான் என்று ஏசியதை தாங்கமாட்டாமல் வீட்டு வளையில் துக்குப் போட்டு இறந்துபோன சுமனையும், அதை சொல்லி சொல்லியே அழுது அரற்றிய அவன் தாய் கமலா அக்காவையும் எப்படித்தான் மறப்பது.

 

அன்றும் அப்படித்தான் காலைவேளை உதைபந்தாட்ட பயிற்சி முடிந்து கோவிலடியில் தண்ணீரைக் குடித்துவிட்டு பக்கத்தில் இருந்த மடத்தில் கூடியிருந்தோம். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் இருவர் எங்களைப் பார்த்து எதோ கேட்க முனைந்த அதே கணத்தில் எமது சிரிப்பு சத்தத்தை ஊடறத்து மூன்று துப்பாக்கி வேட்டுக்கள் விழுந்தன. படுத்திருந்த நான் நிமிர்ந்து எழும்பவும் பக்கத்தில் இருந்த நண்பன் விழுந்தான். ஏனையவர்களும் என்னைப்போல திகைத்து நிமிரமுதல் எங்களைத்தாண்டி மோட்டார் சைக்கிள் மிக வேகமாக சென்று மறைந்தது.  முழங்காலிலும் நெஞ்சிலும் சன்னங்கள் துளைபோட்டு கிடக்க கால்கள் நிலம் நோக்கி தொங்கியபடி இருந்த அதே நிலையில் விழுந்து கிடந்தான் அவன். செய்வதறியாது திகைத்து  அவனது உடலை தூக்கியபோது காலின் கீழே இருந்த  முள்ளு முள்ளு செருப்பின் பள்ளங்களில் எல்லாம் இரத்தம் தேங்கி நிறைந்து  போய் நின்றது. 

 

அன்றிலிருந்து மூன்றாவதுமாதம் எனது தாய்மடியில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஆம் ஊரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்த நான்கு மாதங்களும் செருப்பினை என் கால்கள் காணவே இல்லை விலை உயர்ந்த சப்பாத்துக்களால் கால்களை மூடிக்கொண்டேன். மனதையும்கூட.

 

எப்படியோ பாரிஸ் வந்தடைந்த போது வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்ற நண்பன்,  வாசலில் சப்பாத்தை கழற்றியபின் வெறும் காலுடன் உள்நுழைந்த என்னைப் பார்த்து அந்த செருப்பை போட்டுக்கொண்டு வா குளிரும் என்றான். வீட்டுக்குள் செருப்பை எப்படி போடுவது என்று யோசித்த என்னை புரிந்துகொண்டு, அது வீட்டுக்க போடுற செருப்புதான் போடு என்றான். வீட்டுக்குள் செருப்பை போடுவதா என்று எண்ணியபடி செருப்பை காலில் அணிந்துகொண்ட கணத்தில் மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு பிசையல் எழுந்தது.  செருப்பு சரியில்லை. 

 

 

லாசெப்பலில் இருந்து  வீடுதிரும்பும் போது தொடருந்து நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தில் இருந்த ஒற்றை செருப்பை பார்க்கிறேன். காணவில்லை. சற்றுத்தொலைவில் தண்டவாளத்தில் குப்பைகளைப் அகற்றிக்கொண்டு ஒரு சுத்திகரிப்பு தொழிலாளி சென்றுகொண்டிருந்தார். அவரிடம் இப்போது அந்த செருப்பும்  ஒரு மனிதனின் நினைவை பகிரக்கூடும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிடுக்கில் சிக்கி வர மறுக்கும் பனங்கிழங்கு நார் போல் செருப்பும் உங்கள் வாழ்வில் பிரிக்க முடியாதபடி பிணைந்து விட்டது..., ஒவ்வொரு சம்பவங்களும் ஒரு சோகத்துடன் கடக்கின்றன....!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பகிர்வு.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

செருப்புக்கு பின்னாலேயும் இவ்வளவு கதை இருக்குது என்று எனக்கு இன்டைக்குத் தான் தெரியும்.

  • தொடங்கியவர்
On 2/21/2016 at 2:41 PM, suvy said:

பல்லிடுக்கில் சிக்கி வர மறுக்கும் பனங்கிழங்கு நார் போல் செருப்பும் உங்கள் வாழ்வில் பிரிக்க முடியாதபடி பிணைந்து விட்டது..., ஒவ்வொரு சம்பவங்களும் ஒரு சோகத்துடன் கடக்கின்றன....!

நன்றியும் அன்பும் சுவி ஐயா 

On 2/21/2016 at 4:24 PM, சுவைப்பிரியன் said:

நல்லதோர் பகிர்வு.நன்றி

நன்றி தலை 

On 2/21/2016 at 9:57 PM, ரதி said:

செருப்புக்கு பின்னாலேயும் இவ்வளவு கதை இருக்குது என்று எனக்கு இன்டைக்குத் தான் தெரியும்.

செருப்புக்கு முன்னாலையும் கனக்க கதை இருக்கு அக்கா 

நன்றியும் அன்பும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, படிக்கும் பொழுது மனதில் தாயகத்தில் நான் கண்ட காட்சிகள் மனதில் நிழலிட்டன. இப்படி எழுத எம் நெற்கொழுதாசனால் தான் முடியும். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட பதிவு. அரைக்கால் சட்டையோடு காலில் செருப்புப் போட்டு பள்ளிக்கூடம் போனதேயில்லை! அதை பெருமையாகத்தான் இப்போதும் நினைக்கின்றேன்.

பதிவில் உள்ளதுமாதிரி ஏன் தமிழ்க்கடைகளில் ஊரில் கிடைக்கும் பாட்டா செருப்பு விற்பதில்லை என்று யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனது கருத்தில் கர்வமும்,அகங்காரமும் தொனிக்கிறது

செருப்பு என்டாலே bata கம்பனியின் முள்ளு செருப்பு தான் நினைவில் இருக்கிறது 

உங்கள் நினைவுகள் என்னை 15 வருடங்கள் பின்நோக்கி  இழுத்துச் சென்று விட்டது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.