Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாங்க நாலு பேர்... எங்களுக்கு ஈகோவே கிடையாது!”

Featured Replies

"நாங்க நாலு பேர்... எங்களுக்கு ஈகோவே கிடையாது!”

 

p38a.jpg

மிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத வேறு ஒரு கூட்டணி இத்தனை பரபரப்பாக இருந்ததே இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து செய்தியின் மையமாக இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன் நான்கு தலைவர்களும் மாநிலம் முழுக்க சுற்றிச் சுழல்கிறார்கள். இவர்களின் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையில் தங்கியிருக்கும் பேச்சுலர்களைப் போல எந்நேரமும் ஒன்றாகவே சுற்றும் இவர்களின் தனிப்பட்ட நட்புப் பயணம் எப்படி இருக்கிறது?

1.jpg

திருமாவளவனைச் சந்திக்க வேளச்சேரி அலுவலகத்துக்குப் போனால், நம்மிடம் பேசத் தொடங்கும்போதே வைகோவிடம் இருந்து அவருக்கு அலைபேசி அழைப்பு. ``தாயகத்தில் கூட்டம். வாங்க, கார்லயே பேசிட்டுப் போயிரலாம்'' என்றார். கார் புறப்பட்டது. போக்குவரத்து நெரிசல் கடந்து கார் வேகமெடுக்க...பேசத் தொடங்கினார் திருமா.

“ஒரே வாகனத்தில் பயணம்செய்வது, ஒரே விடுதியில் தங்குவது, ஒன்றாகவே நடைப்பயிற்சி போவது, ஒன்றாக உணவு அருந்துவது, வழியில் காரை நிறுத்தி இளநீர் குடிப்பது, தேநீர் அருந்துவது என எங்கள் கூட்டணியின் பயணம் போய்க்கொண்டிருக்கிறது. சாப்பிடுவதற்காக ஒருவர் தயாராகிவிட்டார் என்றாலும், மற்ற மூவர் தயாராகும் வரை அவர் காத்திருப்பார். நால்வரில் நான்தான் வயதில் இளையவன். ஆனால், அவர்கள் மூவரும் என்னை தங்கள் வயதுக்குச் சமமான ஒருவனாகக் கருதி, என் மீது அன்பு காட்டுகிறார்கள்.

p38b.jpg

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், ‘அண்ணே, ஒரு மகிழ்ச்சியான செய்தி’ என்று வைகோவிடம் சொன்னேன். அடுத்த நொடியே, ‘ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு ரெண்டு சவரன்ல மோதிரம் போடுறேன்’ என்றார். சொன்னபடியே, தென்மாவட்ட சுற்றுப் பயணத்தில் ஒரு மேடையில் வைத்து எனக்கு மோதிரம் அணிவித்தார். ‘அண்ணா போட்ட மோதிரத்தை கலைஞர் எப்படி கழற்றவில்லையோ, அதுபோல நீங்கள் இதைக் கழற்றக் கூடாது’ என்றார். நான் நெகிழ்ந்துபோனேன்'' என்ற திருமாவின் விரலில் மோதிரம் இல்லை.

``எங்கே மோதிரத்தைக் காணோம்?'' என்றால், சட்டைப் பையில் இருந்து எடுக்கிறார்.

``எனக்கு மோதிரம் போட்டுப் பழக்கம் இல்லை. இது 16 கிராம் மோதிரம். விரல் வலிக்கிறது. அதனால் அதை அவ்வப்போது எடுத்து பைக்குள் வைத்துக்கொள்வேன். வைகோ எப்போது என்னைப் பார்த்தாலும் முதலில் என் விரலைத்தான் பார்ப்பார். அப்படி அவர் பார்ப்பதற்கு முன் எடுத்துப் போட்டுக்கொள்வேன்'' என்று சொல்லிவிட்டு குலுங்கிச் சிரிக்கிறார்.

“பயண நேரங்களில் அரசியல் தவிர வேறு என்ன பேசிக்கொள்வீர்கள்?”

“வைகோ எம்.பி-யாக இருந்தபோது நடந்த முக்கியமான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வார். காமராஜர், ஓமந்தூரார் போன்ற முதலமைச்சர்கள் எல்லாம் அவர் வீட்டில் வந்து தங்கியது, ஈழத்துக்குப் பயணம் சென்றது, காயம் அடைந்த புலிகள் அவரது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றது, ஒபாமாவைச் சந்தித்தது என ஏராளமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்வார். தோழர் ஜி.ஆர்., தோழர் முத்தரசன் ஆகியோரைப் பார்த்து, ‘உங்கள் கட்சித் தலைவர்கள் எல்லாம் எவ்வளவு தியாகங்கள் செய்திருக்கிறார்கள்...’ என்று வியப்போடு சொல்வார்.

p38c.jpg

தோழர் சங்கரய்யாவின் குடும்பத்தில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும் திருமணம் செய்திருக் கிறார்கள். ஜி.ஆர் குடும்பத்திலும் சாதி மறுப்புத் திருமணம் நடந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் தங்கள் மொத்தச் சம்பளத்தையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி தரும் 5,000, 10,000 ரூபாயை வாங்கிக்கொண்டுதான் வேலை செய்கிறார்கள். இது வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. இப்படியாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

இது எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கவுன்சலிங் மாதிரியும், வகுப்பு மாதிரியும் இருக்கும். ‘உங்களோடு சேர்ந்த பிறகு, நான் நிறைய மாறிட்டேன். எதையுமே ஈஸியாக எடுத்துக்கொள்ளக் கத்துக்கிட்டேன்’ என்று வைகோ அடிக்கடி சொல்வார்.''

“உங்கள் திருமணத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது உண்டா?”

“ `ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ என மூன்று பேருமே கேட்பார்கள். ‘அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்களே...' என்பார்கள். வழக்கம்போல, சிரிப்பு மட்டுமே என் பதிலாக இருக்கும்.”

“பயணங்களில் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுவீர்கள்?”

“நான் முழுமையான சைவமாக மாறி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. பயணங்களின்போது தோழர் ஜி.ஆர் அசைவம் சாப்பிட மாட்டார். அதனால், ‘திருமாவுக்கும் ஜி.ஆருக்கும் வெஜ் அயிட்டங்களை ரெடி பண்ணிருங்க. எனக்கும் முத்தரசனுக்கும் மட்டன், சிக்கன், மீன் அயிட்டங்களை ரெடி பண்ணுங்க’ என வைகோ சொல்வார். விருந்து உபசரிப்பதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம். சாப்பிடும்போது அந்த இடம் அவ்வளவு கலகலப்பாக இருக்கும். `அதைச் சாப்பிடுங்க... இதைச் சாப்பிடுங்க' என ஆர்வத்துடன் கவனிப்பார்.”

p38d.jpg

“தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பயணம் செய்கிறீர்கள். ஓய்வெடுக்க, போதுமான நேரம் ஒதுக்குகிறீர்களா?”

“எப்போதுமே இரவு 1 மணி, 2 மணிக்குத் தூங்குவதுதான் என் வழக்கம். மூன்றரை மணி நேரம், நான்கு மணி நேரம்தான் தூக்கமே. அதனால்தான் சில நேரங்களில் மேடையிலேயே கண் அயர்ந்துவிடுகிறேன். அதுவும்கூட ஒருசில நிமிடங்கள்தான். அதைக்கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.

எங்கு சென்றாலும், என்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அவர்களிடம் வைகோ சண்டை போடுவார். ‘என்னப்பா, அவரை கொஞ்சம் நேரமாவது ஃப்ரீயா இருக்க விடுங்கப்பா. சாப்பிடும் போதும் 30 பேர் நிக்கிறீங்க... டிரெஸ் பண்ணும்போதும் 30 பேர் நிக்கிறீங்க. அவர் ரெஸ்ட் எடுக்கவிடுங்கப்பா’ என்பார். சில நேரங்களில், ‘திருமா மாட்டிக்கிட்டுத் தவிப்பார். நான் போயி அவரை விடுதலை பண்ணிக் கூட்டிட்டு வர்றேன்’ என தோழர்கள் ஜி.ஆர்., முத்தரசன் ஆகியோரிடம் சொல்லிவிட்டு என் அறைக்கு வந்து என்னை அழைத்துச் சென்று, `பகலில் கொஞ்ச நேரமாவது ரெஸ்ட் எடுங்க' என ஓய்வெடுக்கச் சொல்வார்.''

“மேடையில் பேசுவது பற்றி முன்கூட்டியே திட்டமிடுவீர்களா?”

“ `நீங்க அந்த சப்ஜெக்ட் பேசுங்க... நான் இந்த சப்ஜெக்ட் பேசுறேன்' என எங்களுக்குள் திட்டமிட்டுக்கொள்வோம். நான்கு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்களை எல்லோரும் சொன்னால் அதுவே நீண்ட நேரமாகும். எனவே, அதை ஒருத்தர் சொன்னால் போதும் என முடிவு செய்திருக்கிறோம். ‘இன்னைக்கு `அட்டெண்டன்ஸ்' எடுக்கப்போறது யாரு?’ என வைகோ நகைச்சுவையாகக் கேட்பார்.

ஒருமுறை வைகோ ‘அட்டெண்டன்ஸ்’ எடுக்க வேண்டும் என வந்துவிட்டது. அவர் எல்லோருடைய பெயர்களையும் வாசித்தார். உரையாற்றி முடித்து இருக்கையில் அமர்ந்ததும், ‘பத்து நிமிடம் வீணாகிவிட்டது. இனி நான் அட்டெண்டன்ஸ் எடுக்க மாட்டேன்ப்பா. அந்த வேலையை முத்தரசன்கிட்டயே விட்ருங்க. அவர்தான் பொறுமையா அட்டெண்டன்ஸ் எடுப்பார்’ எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.”

p38e.jpg

“கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அதற்கும் இவர்கள் மூவரோடு பழகுவதற்கும் என்ன வித்தியாசம்?”

“கலைஞர் ஒரு மூத்த தலைவர். அவருடன் பத்து, பதினோர் ஆண்டுகள் பழகியிருக்கிறேன். இயல்பாக என்னை அழைத்துப் பேசுவார். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் எனப் பேசுவோம். ஆனாலும், உளவியல்ரீதியாக அவருக்கும் எனக்கும் ஓர் இடைவெளி இருந்தது. கலைஞரிடம் கலகலப்பாக ஒரு நண்பரிடம் பேசுவதுபோல் மனம்விட்டுப் பேச முடியாது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு என்றுதான் பேசுவார். `சாப்பிட்டீர்களா, அப்பா-அம்மா எப்படி இருக்காங்க, உடல் நலம் எப்படி?' என்றெல்லாம் பேசும் நபர் அல்ல ஜெயலலிதா. விஷயத்தை மட்டும் பேசுவார்.”

“சினிமா, இலக்கியம் பற்றி எல்லாம் நீங்கள் நால்வரும் பேசுவது உண்டா?”

“அண்ணன் வைகோவும் தோழர் முத்தரசனும் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் எல்லா கதாபாத்திரங்களையும் பாடல்களையும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அதுபற்றி நிறையப் பேசுவார்கள். எனக்கும் தோழர் ஜி.ஆருக்கும் அதில் ஆர்வம் இல்லை. நான் சினிமா பார்ப்பது இல்லை. வைகோ எப்போதாவது சினிமா பார்ப்பார். ஆனால், எப்போதும் பாடல்கள் கேட்பார். தூங்கும்போதுகூட பாட்டு  கேட்டுக் கொண்டே தூங்குவாராம். எங்களையும் பாடல்கள் கேட்கச் சொல்வார். நாங்கள் நால்வரும் கல்லூரித் தோழர்கள் போல, வயது வித்தியாசம் இல்லாமல், ஈகோ இல்லாமல் அன்பான நட்போடு, ஆழமான புரிதலோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்'' என கைகுலுக்குகிறார் திருமா.

http://www.vikatan.com/anandavikatan/2016-apr-20/election-2016/118069-tholthiruvalavan-talks-about-makkal-nala-kottani.art

பயனர் செயல்கள்
  பின்தொடர்
K0bT0Pqh_bigger.jpgமணியன் சிற்றறிவாளன்@sltmani

@AnandaVikatan நாலு பேருல ஒருத்தரு முதல்வர் வேட்பாளர்னு பேசியிருந்தா மானம் கெட்டுப்போயிருக்கும்

 

:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, வாசன், கப்டன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.