Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் பன்மைத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் பன்மைத்துவம்

கட்டுரை
எம்.ஏ.நுஃமான்

72_1.jpg

தமிழ்ப் பற்றாளர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டைச் சிரத்தையோடு கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், தமிழின் பன்மைத்துவம் பற்றிப் பேசுவது அவர்களைச் சீண்டுவதற்கான முயற்சி என்று சிலர் கருதக் கூடும். எனது நோக்கம் அது அல்ல. தமிழின் பெருமைகள் பற்றிப் பலரும் பேசுவதுபோல அதன் தொன்மை, தூய்மை, இனிமை, இளமை, கன்னிமை பற்றியெல்லாம் நானும் பேசவேண்டியதில்லை. இவைபற்றி ஏற்கனவே நிறையப் பேசியாகிவிட்டது. அவ்வாறு பேசுவதற்கான கற்பனை வளமும் என்னிடம் இல்லை. அதற்கு வேண்டிய அளவு மொழி உணர்வு, பற்று, பாசம் என்பனவும் என்னிடம் இல்லை. எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவகையில் தமிழின் முக்கியமான பெருமை அல்லது  அதன் பலம் என்று நான் கருதுகின்ற அதனுடைய பன்மைத்தன்மை பற்றிச் சில கருத்துகளைச் சொல்வதுதான் இங்கு எனது நோக்கம்.

 

தனித்தமிழ் அல்லது தமிழின் தூய்மை என்பதும் தமிழின் பன்மைத்துவம் என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிர்நிலையான கருத்தாக்கங்கள் என்பது ஓர் எளிய உண்மை. இவற்றுள் ஒன்றை ஏற்பது மற்றதை நிராகரிப்பதாகவே அமையும். தமிழ் மொழி தூய தனித் தமிழாகவும் அதேவேளை பன்முகப்பட்டதாகவும் இருத்தல் சாத்தியமல்ல.

 

தனித் தமிழ் என்பது பிறமொழிக் கலப்பற்ற, திரிபுகளற்ற, ஒருமுகப்பட்ட தூய தமிழையே குறிக்கும். இத்தகைய ஒரு கற்பனைத் தமிழை உருவாக்குவதற்காகவே தனித்தமிழ் இயக்கம் கடந்த ஒரு நூறு ஆண்டுகளாக அயராது உழைத்துவந்திருக்கின்றது. தமிழ்த் தேசியமும் திராவிட இயக்கமும் அதற்குப் பக்கத்துணைகளாக இருந்திருக்கின்றன; என்றாலும் அதன் சாதனைகள் வியப்பூட்டுவன அல்ல. ஏனெனில், அது மொழியின் இயல்புக்கு மாறானதும் அதனால் காரிய சாத்தியமற்றதுமாகும். பழைமையை நோக்கிய எல்லாவகையான தூய்மையாக்கக் கருத்துநிலைகளையும் அடிப்படைவாதம் என்று தற்கால அரசியல் கலைச்சொல் சுட்டுகின்றது. அவ்வகையில் மொழித் தூய்மையாக்கக் கருத்துநிலையை மொழி அடிப்படைவாதம் எனலாம். மத அடிப்படைவாதம் சில அம்சங்களில் வெற்றியடைந்தாலும் மொழி அடிப்படைவாதம் வெற்றியடைவது முற்றிலும் சாத்தியம் அல்ல.

 

மொழி, மனித வாழ்வுடன்  ஒன்றிணைந்தது. சமூக வளர்ச்சியுடன், பண்பாட்டு வளர்ச்சியுடன் இணைந்து இடையறாது மாற்றமடையும், வளர்ச்சியடையும் ஒரு தொடர்பாடல் கருவி அது. இதை மெய்ப்பிக்க உலக மொழிகளின் வரலாற்றுக்கு நாம் போகவேண்டியதில்லை. நமக்குத் தெரிந்த கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழின் வரலாறு போதும். சங்ககாலத் தமிழன் அல்ல இன்றையத் தமிழன். இன்றையத் தமிழனின் மொழித் தேவைகளைச் சங்கத் தமிழால் நிறைவேற்ற முடியாது. பன்முகப்பட்ட இன்றையத் தமிழ் பேசும் சமூகத்தின் பன்முகப்பட்ட தொடர்பாடல் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் இன்றையத் தமிழ் பன்முகப்பட்டு வளர்ச்சியடைந்திருக்கிறது. இதுவே தமிழின் பலம். இத்தகைய நெகிழ்ச்சியும் வளர்ச்சியும் இல்லாவிட்டால் தமிழ் எப்போதோ செத்த மொழியாகியிருக்கும்.

 

தமிழின் பன்முகத் தன்மையைத் தீர்மானிக்கும் காரணிகள்பற்றி இனி நாம் நோக்கலாம். தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தமிழ்ச் சமூகத்தின் பன்முகத் தன்மைதான் அதன் அடிப்படை. தமிழ்ப் பேசும் சமூகம் ஒருமுகப்பட்டதல்ல, அது பன்முகப்பட்டது. உலகெங்கும் சுமார் ஏழு கோடித் தமிழர்கள் தமிழைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். இவர்கள் பல்வேறு தேசத்தினர், பல்வேறு மதத்தினர், பல்வேறு இனக்  குழுமத்தினர், பல்வேறு சாதிப்பிரிவினர், பல்வேறு சமூக அடுக்கினர். இவ்வாறு பல்வேறுபட்ட சமூகக் குழுவினரால் பயன்படுத்தப்படும் ஒரு மொழி, வேறுபாடுகள் அற்று ஒருமுகப்பட்டதாய் இருத்தல் சாத்தியமே அல்ல. கால அடிப்படையிலும் இட அடிப்படையிலும் சமூக அடிப்படையிலும் பயன்பாட்டு அடிப்படையிலும் தமிழ் வேறுபடுகின்றது. இந்த வேறுபாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளம்தான் தமிழ். உலகின் ஏனைய வளர்ச்சியடைந்த மொழிகளைப் போலவே தமிழும் பல்வகைத் தமிழாக உள்ளது. இதுவே தமிழின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைச் சற்று விரிவாகப் பேசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

 

தமிழைச் செம்மொழி என்று கொண்டாடுகின்றோம். செம்மொழிகள் எல்லாம் செத்த மொழிகள்தான். அதாவது, இன்று வழக்கில் இல்லாதவை. லத்தீன், சமஸ்கிருதம் என்பன அத்தகையன. தமிழ் அத்தகைய ஒரு செத்த  மொழி அல்ல; அது ஒரு வாழும் மொழியும்தான். கிரேக்கம், அரபு, சீனம் முதலிய மொழிகளைப்போல் தமிழும் ஒரு செம்மொழியாகவும் அதேவேளை வாழும் நவீன மொழியாகவும் உள்ளது. உலகின் சில மொழிகள் செம்மொழிகளாக மட்டும் பேசப்படுபவை, பல மொழிகள் நவீன மொழிகளாக மட்டும் பேசப்படுபவை. தமிழ் போன்ற சில மொழிகள்தான் செம்மொழி, நவீன மொழி என்ற இரட்டை அடையாளத்துக்குரியவை. இத்தகைய சில மொழிகள் பழைமையின் சுமையினால் தத்தளிக்கும் அபாயத்துக்கும் ஆளாகின்றன. தமிழ் அதில் முதன்மையானது எனலாம்.

 

எழுத்து வரலாறு உடைய மிகச்சில தொன்மையான  மொழிகளுள் தமிழும் ஒன்று என்பதில் மறுப்புக்கு இடமில்லை. இரண்டாயிரம் வருடத்துக்குக் குறையாத தொடர்ச்சியான எழுத்துச் சான்று உடைய வரலாறு தமிழுக்கு உண்டு. இதன் அடிப்படையில் தமிழைப் பழந்தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என்று நாம் வகைப்படுத்துகின்றோம். சங்க இலக்கியம் பழந்தமிழுக்குரியது. காவியங்களும் புராணங்களும் தேவார திருவாசகங்களும் இடைக்காலத் தமிழுக்குரியவை. ஏழு கோடித் தமிழர்களில் எத்தனை சதவீதத்தினர் இந்த இலக்கியத் தொகுதியைச் சுயமாகப் படித்து ஓரளவுக்கேனும் புரிந்துகொள்வர் என்பது சுவையான ஆய்வுக்குரியது. சங்க இலக்கியத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களும் இடைக்கால இலக்கியத்தை அதைவிடச் சற்று அதிகமானவர்களும் புரிந்துகொள்ளக்கூடும் என்று கூறலாம். இவர்கள் பல்கலைக் கழகங்களில் அல்லது கல்லூரிகளில் சங்க இலக்கியத்தையும் இடைக்கால இலக்கியத்தையும் பாடமாகப் பயின்றவர்கள் அல்லது சுய விருப்பத்தின்பேரில் சிரமம் எடுத்துக் கற்றவர்களாக இருப்பர். இன்று நாவல், சிறுகதைகளைப் படித்துப் புரிந்துகொள்வதைப்போல் இப்பண்டைய இலக்கியங்களை இலகுவில் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. அவ்வகையில் பழந்தமிழ், இடைக்காலத்தமிழ் என்பன இன்றைய வழக்கில் இல்லாத தமிழ் என்று கூறிவிடலாம். இலக்கிய வரலாறு, மொழிவரலாறு சார்ந்த முக்கியத்துவமும் பெருமையும் அவற்றுக்கு உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், பழைமையில் திளைக்கும் தமிழ்ப்பற்றாளர்கள் பழந்தமிழை முதலிடத்திலும் இடைக்காலத் தமிழை அதன் அடுத்த இடத்திலும் வைத்துக்கொண்டாடுகின்றனர். அவற்றையே செந்தமிழ், உயர் தமிழ், சரியான தமிழ், தூய தமிழ் என்று நம்புகின்றனர். இதுதான் பிரச்சினைக்குரியது. அவர்களைப் பொறுத்தவரை தற்காலத் தமிழ் திரிபுகளும் சிதைவுகளும் மிக்க ஊறுபட்ட தமிழாகும். இதனாலேயே இவர்கள் செம்மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறிதளவாவது தற்காலத்  தமிழுக்குக் கொடுப்பதில்லை.

 

சுமார் 1800 ஆண்டுகளில் தமிழ் அடைந்த மாற்றங்களைவிட, கடந்த 200 ஆண்டுகளில் அது அடைந்த மாற்றம் மிகப் பெரிது. பண்டைய, இடைக்காலத் தமிழ் முற்றிலும் செய்யுட் தமிழ்தான். உரைநடையின் பயன்பாடு அக்காலத்தில் அபூர்வமானது. ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழில் நடைபெற்ற மாற்றம் அதைத் தலைகீழாகப் புரட்டிவிட்ட மாற்றம் எனல் பொருந்தும். செய்யுளின் இடத்தை உரைநடை முற்றாகப் பிடித்துக்கொண்ட மாற்றம் இது. இதை அமைதியாக நடந்த மொழிப் புரட்சி எனலாம். பழந்தமிழ், இடைக்காலத் தமிழ் என்பனவற்றின் முகத்தை முற்றாக மாற்றிய புரட்சி இது. இன்றையத் தமிழில் செய்யுளுக்கு இடமில்லை என்றாகிவிட்டது. கடைசியாகக் கவிதையையும் உரைநடை பிடித்துக்கொண்டது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தமிழ் உரைநடை வளர்ச்சி மேலைப் பண்பாட்டுக் கலப்பின் உடன் விளைவு எனலாம். தமிழின் பன்முகப்பாட்டை ஊக்குவித்த முக்கியமான காரணியாகவும் அது அமைந்தது.

 

தமிழின் பன்முகப்பாட்டைத் துரிதப்படுத்திய பிறிதொரு காரணி ‘தமிழ் கூறும் நல்லுலகின்’ எல்லை விரிவாக்கமாகும். தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” எனத் தமிழ் உலகின் எல்லையை வரையறுக்கிறார். அக்காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகின் ஒரு பகுதியாக இருந்த ஈழத்தை அவர் ஏனோ உள்ளடக்கவில்லை. சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழ் கூறும் நல்லுலகின் எல்லை கடல்கடந்து ஈழத்திலும் மலாயா, பர்மா, தாய்லாந்து முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஓரளவு விரிவடைந்தது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமன்றி, மேற்கே மொறீசியஸ், ஃபீஜி, சீசெல்ஸ், தென்னாபிரிக்கா என அது மேலும் விரிவடைந்தது. 1980களிலிருந்து இலங்கைத் தமிழர்கள் யுத்தம் காரணமாக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா என மேற்கு நாடுகளில் இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்து குடியமர்ந்தனர். இன்று தமிழ்கூறும் நல்லுலகு ஐந்து கண்டங்களையும் அளாவி விரிந்திருக்கக் காண்கிறோம்.

 

அவ்வகையில் இன்றையத் தமிழ், உலகின் பல்தேசிய மொழிகளுள் (transnational language) ஒன்றாக மாறியுள்ளது. ஓன்றுக்கு அதிகமான நாடுகளில் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக, கல்விமொழியாக, சிறுபான்மையினர் மொழியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மொழிவளர்ச்சி நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. பல்வேறு புவியியல், பண்பாட்டுச் சூழல்களில் வழங்கும் மொழி என்றவகையில் அதனுடைய பன்மைத் துவம் மேலும் விரிவடைந்திருக்கின்றது. இது இன்றைய தமிழின் ஒரு முக்கியமான வளர்ச்சி நிலையாகும்.

 

தமிழின் பன்மைத்துவத்தின் பிறிதொரு அம்சம் அது பன்னெடுங்காலமாக ஒரு பல்மத, பல்லின, பல்பண்பாட்டு மொழியாகப் பரிணமித்திருப்பதாகும். பழந்தமிழ் பெரிதும் மதச்சார்பற்ற மொழியாகவே காணப்படுகின்றது. காலப்போக்கில் அது சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதக் குழுவினரின் மொழியாக வளர்ச்சிபெற்றது. அவ்வகையில், தமிழில் இம்மதங்கள் எல்லாவற்றினதும் முத்திரை ஆழப் பதிந்துள்ளது. அதுபோல் பல்வேறு இனக் குழுமத்தினரின் மொழியாகவும் பல்வேறு சாதிப் பிரிவினரின் மொழியாகவும் அது வளர்ச்சிபெற்றுள்ளது. அவ்வகையில் தமிழ் உலகின் மிகச் சில பல்பண்பாட்டு மொழிகளுள் ஒன்றாகும். இப்பன்மைத்துவம் தமிழின் பலத்துக்கும் வளத்துக்கும் பலமான அடித்தளமாக அமைகின்றது.

 

தமிழின் பன்மைத்துவத்தைத் தீர்மானித்த பிறிதொரு காரணி பிறமொழித் தொடர்பு எனலாம். ஒரு மொழிச் சமூகத்தினர் பல்வேறு காரணங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பிறமொழிச் சமூகத்தினருடன் தொடர்புகொள்ள நேரும்போது மொழித் தொடர்பும் மொழிக் கலப்பும் நிகழ்கின்றன. மொழித் தொடர்பு இல்லாமல் மொழிக்கலப்பு நிகழாது. ஒரு மொழிச் சமூகத்தினர் வேற்று மொழிச் சமூகத்தினருடன் எவ்வகையிலும் தொடர்பும் கொள்ளும் வாய்ப்பு இல்லாத நிலையில் மொழிக்கலப்பு நிகழாது. தமிழ் வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே அதற்குப் பிறமொழித் தொடர்பு இருந்ததைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய வடமொழிகளுடனும் கிரேக்கம், ரோமன் முதலிய ஐரோப்பிய மொழிகளுடனும் தமிழ் தொடர்புகொள்ள நேர்ந்தது. இடைக்காலத்தில் தமிழ் தொடர்புகொள்ள நேர்ந்த பதினேழு மொழிகளை நன்னூல் குறிப்பிடுகின்றது. காலனித்துவக் காலத்திலும் பூகோளமயப்பட்ட தற்காலத்திலும் தமிழ் ஐந்து கண்டங்களின் பிரதான மொழிகள் பலவற்றுடனும் தொடர்புகொள்ள நேர்ந்துள்ளது. இத்தொடர்பு தமிழின் சொல்வளப் பெருக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது; அதன் ஒலியமைப்பிலும் வாக்கிய அமைப்பிலும் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது; அதன் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்துள்ளது.

 

செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற பாகுபாடு தொன்மையானது. செந்தமிழ், செந்தமிழ் நிலம் என்பன பற்றித் தொல்காப்பியமே முதலில் பேசுகின்றது. செந்தமிழ் அல்லாத தமிழ், கொடுந்தமிழ் எனப் பின்னர் வரையறுக்கப்பட்டது. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற இப்பாகுபாடு சமூக அதிகார அடுக்கு சார்ந்தது எனலாம். சமூக உயர் குழாத்தினரின் மொழிவழக்கே செந்தமிழ் என வரையறுக்கப்பட்டது எனக் கருதமுடியும். “வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட்டு ஆகலான” என்பது தொல்காப்பியச் சூத்திரம். செந்தமிழே நிலைமொழியாக, பொதுமொழியாகக் கருதப்பட்டது. பாண்டி நாட்டை (மதுரை) சூழ உள்ள சமூக உயர் குழாத்தினரின் வழக்கே செந்தமிழாகக் கருதப்பட்டுப் பொதுமொழி ஆயிற்று என ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.  செந்தமிழ் தவிர்ந்த ஏனைய பிராந்தியப் பேச்சு வழக்குகள் கொடுந்தமிழ் என ஒதுக்கப்பட்டன. இதையே தொல்காப்பியம் திசைச்சொல் எனக் கூறுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் செந்தமிழ் நிலத்தைச் சூழ பன்னிரண்டு கிளைமொழிப் பிரதேசங்கள் இருந்ததாகத் தெரிகின்றது. “செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச் சொற் கிளவி” என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதை உணர்த்துகின்றது. திசைச்சொற்களும் செய்யுளில் இடம்பெறலாம் என தொல்காப்பியம் ஏற்றுக்கொண்டாலும் இருபதாம் நூற்றாண்டுவரை இலக்கியப் படைப்புக்குரிய மொழியாக ‘கொடுந்தமிழ்’ ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நெடுங்காலமாகச் செந்தமிழே இலக்கிய மொழியாக வழங்கியது. அதன் அமைப்பையே தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் விளக்கின. கொடுந்தமிழ் இலக்கணமற்றது, கொச்சை என ஓரங்கட்டப்பட்டது. தமிழில் ஆழ வேரூன்றியுள்ள இரட்டைவழக்கின் அடிப்படை இதுவே.

 

செந்தமிழ் யாருடைய பேச்சுத் தமிழாகவும் இல்லாதுபோய் நெடுங்காலமாயினும் இன்றும் அதுவே பொதுத் தமிழாகவும் எழுதுவதற்குரிய மொழியாகவும் நிலைபெற்றுவிட்டது. அதன் இலக்கண அமைப்பே நியமமாகக் கருதப்படுகின்றது. அதையே பேச்சு மொழியாகவும் பயன்படுத்த வேண்டும், ‘கொச்சை’ மொழியைப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என வலியுறுத்தும் பழமைவாதிகள் கல்வித்துறையில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளனர். பள்ளிப் பாடநூல்களில் இக்கருத்து மீண்டும்மீண்டும் வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

 

இது எவ்வாறு இருப்பினும் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து பொதுவெளியில் ‘கொடுந்தமிழ்’ பற்றிய மனப்பாங்கு படிப்படியாக மாற்றமடைந்து வந்திருப்பதைக் காண்கிறோம். இன்று கொடுந்தமிழ் என்ற வழக்கு மெல்லமெல்ல மறைந்துவிட்டது. பேச்சுத் தமிழ், கிளைமொழி ஆகிய சொற்கள் முன்னணிக்கு வந்துள்ளன. பேச்சுத் தமிழ் இலக்கியத்துள் வந்தபோது இருந்த பதற்றம் இன்று இல்லை. பேச்சுத் தமிழை ‘இழிசனர் வழக்கு’ என்றும், பேச்சுத்தமிழ் பயன்படுத்தப்பட்ட இலக்கியத்தை ‘இழிசனர் இலக்கியம்’ என்றும் பழித்தவர்கள் இன்று இல்லை. கடந்த நூற்றாண்டில் தமிழ்மொழி ஜனநாயகமயப்பட்டதன் விளைவு இது. இன்று தமிழ்க் கிளைமொழிகள் எல்லாம் படைப்பிலக்கிய மொழியாகிவிட்டன. அதன்மூலம் தமிழின் பன்மைத்துவம் மேலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

 

ஒரு மொழி பன்முகப்பட்டு வளரும்போது அம்மொழியின் முழு அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகின்றது. ஒலியமைப்பு, சொல்லமைப்பு, வாக்கிய அமைப்பு, சொற்பொருள் அமைப்பு என எல்லாம் மாற்றமடைகின்றன. அம்மொழிக்கு எழுதப்பட்ட பழைய இலக்கண விதிகள் செல்லுபடியற்றுப்போகின்றன. புதிய இலக்கண விதிகள் தோன்றுகின்றன; புதிய ஒலிகள், புதிய எழுத்துகள், புதிய ஒலிச்சேர்க்கைகள் வந்துசேர்கின்றன; புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது கடன்வாங்கப்படுகின்றன; புணர்ச்சி விதிகள் நெகிழ்ச்சியடைகின்றன; புதிய வாக்கிய அமைப்புகள் உருவாகின்றன; புதியபுதிய துறைகள் சார்ந்த மொழிநடைகள் விருத்தியடைகின்றன. மொழி, காலத்தின் தேவைக்கேற்ப இசைவாக்கம் பெறுகின்றது. இதையே மொழியின் நவீனமயமாக்கம் என்பர்.

 

கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளாகத் தமிழ்மொழி இவ்வாறுதான் நவீனமாகி வந்திருக்கின்றது. அதன் வளர்ச்சிப் போக்கில் பழைமைக்கும் புதுமைக்கும் இடையிலான மோதலை எதிர்கொண்டிருக்கின்றது. பழமைவாதிகள் அதன் பன்முகத்தை மறுத்து அதைச் செம்மொழி யுகத்துக்கே இழுத்துச்செல்ல முயன்றனர்; இன்னும் முயல்கின்றனர். தமிழின் ‘நல்லூழ்’ காரணமாக அது முற்றிலும் சாத்தியமாகவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சிதரும் செய்தியாகும்.

 

http://www.kalachuvadu.com/current/issue-200/தமிழின்-பன்மைத்துவம்

 

 

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and water

மழையில்... எத்தனை வகை உள்ளது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: text and water

மழையில்... எத்தனை வகை உள்ளது தெரியுமா?

இதை விடவும்.....மீன் மழை, அமில மழை....ஆலங்கட்டி மழை என்பனவும் உண்டு...!

வெயிலும்...மழையும்...மாறி மாறி...வருவதை...ஆங்கிலத்தில்...Monkey's Wedding'  என்று கூறுவதுண்டு..!

தமிழில் ...குரங்குக் கலியாண மழை என்று சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புங்கையூரன் said:

இதை விடவும்.....மீன் மழை, அமில மழை....ஆலங்கட்டி மழை என்பனவும் உண்டு...!

வெயிலும்...மழையும்...மாறி மாறி...வருவதை...ஆங்கிலத்தில்...Monkey's Wedding'  என்று கூறுவதுண்டு..!

தமிழில் ...குரங்குக் கலியாண மழை என்று சொல்லலாமா?

நரிக்கு,  கலியாணம் நடக்கும்  போது.... 
வெயிலும்...மழையும்...மாறி மாறி... வருவருவதாக,  ஊரில் ஏற்கெனவே கூறுவார்கள் புங்கையூரான்.  ?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.