Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரியாணி - சிறுகதை

Featured Replies

பிரியாணி - சிறுகதை

மலையாள மூலம்: சந்தோஷ் ஏச்சிக்கானம், தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீஓவியங்கள்: அனில் கே.எஸ்

 

p180a.jpg

கோபால் யாதவ் செருக்களையில் இருந்து இப்போதுதான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும் மூன்று வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.

பஸ் தீயாய்ப் பாய்ந்துவந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும்.

அதுவரைக்கும் நாம் கலந்தன் ஹாஜியாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம்.

கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார், அந்தக் காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது எல்லாம், ஞாபகசக்தியை இழந்துவிட்டதில் சேராது. கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூட காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயம் இருந்தது.

ஹாஜியாருக்கு ஆமினாவினால் பிறந்த மகள், ருக்கியா. ருக்கியாவோட மகன், ரிஸ்வான். அமெரிக்காவில் கார்டியாக் சர்ஜன். அவனுடைய கல்யாணம் போன வாரம்தான் பெங்களூரில் நடந்தது.
சொந்த ஊரில் பேரனுக்கு ஒரு வரவேற்பு நடத்தி, ஊர்க்காரர்களுக்கு நல்ல பிரியாணி போட்டுவிட வேண்டும் என்பது ஹாஜியாரின் ஆசை. அது நிறைவேறாமல்போனால், அவர் செத்ததுக்கு அப்புறமும் மனதில் அது ஒரு பேஜாராக் கிடக்கும் என உம்மா சொன்னதால், ரிஸ்வான் சம்மதித்தான். இன்னக்கி சாயங்காலம் ஆறில் இருந்து ஒன்பதுக்குள்ளதான் வரவேற்பு.

இதோ இதுதான் கலந்தன் ஹாஜியோட பெரிய வீடு. வீடு அல்ல... இது, மாளிகை.

தற்காலிகமாகப் போடப்பட்ட ஷாமியானா பந்தலைத் தாண்டி வீட்டுவாசலுக்கு வர, நாம ரொம்பத் தூரம் நடந்தாகணும். சும்மாயில்ல, நாலாயிரம் பேர் வரப்போகும் நிகழ்ச்சி இது. வெள்ளை விரிப்புகளால் மூடப்பட்ட மேஜைகளும் நாற்காலிகளும் அந்த  இடத்தை வேறு ஒன்றாக மாற்றிக் காண்பித்தன.

வெளிநாட்டில் இருந்து  வரவழைக்கப்பட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை. வரவேற்பு முடிந்து எத்தனை நாட்களானாலும், ஊர்க்காரர்கள் அந்த மேடையைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஈடேறிவிட்டது கலந்தன் ஹாஜியாருக்கு.

இவற்றைப் பற்றிய பெருமிதத்தோடு ஹாஜியாரின் நம்பிக்கைக்கு உரியவனும், ரியல் எஸ்டேட் தொழில் கூட்டாளியுமான ஹசைனார்ச்சா அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார். பரபரப்பான அவர் நடை, மாலையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியை முன்கூட்டியே பறைசாற்றுகிறது.

இடையே ஏதோ ஞாபகம் வந்தது மாதிரி ராமச்சந்திரன் நம்பருக்கு டயல் செய்கிறார்.

பொய்நாச்சி என்ற சிறு கிராமத்தின் சிறு வியாபாரிதான் அந்த ராமச்சந்திரன் பெரும்பள.

தினசரிகளில் ஆரம்பித்து ஸ்டேஷனரி, வார, மாத இதழ்கள், சர்பத், சிகரெட், வெத்தலைப்பாக்கு என, பல்பொருள் அங்காடி. அவர் கடை யதேச்சையாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்ததால், ஜனநடமாட்டத்துக்கு ஒன்றும் குறைவில்லை. அதனாலேயே எல்லோருமே அவரை நன்கு அறிந்திருந்தார்கள் வீட்டுக்குத் திரும்பும்போது கொண்டுபோகவேண்டிய டார்ச்லைட்டில் ஆரம்பித்து, மாதச்சீட்டு வசூல் பணம், கையில் எப்போதும் சில தபால் உறைகள், ரெவின்யூ ஸ்டாம்புகள் என, எங்கே போறோம், எப்போ திரும்புவோம் என்ற விவரங்களை, தன் மனைவிகளிடம்கூட சொல்லிவிட முடியாத மற்றவர்களின் ரகசியங்களைத் தனக்குள்ளேயே அழுத்தி, பணப்பரிமாற்றமும் பண்டமாற்றிகளுமாக, கிளைகளும் உபகிளைகளுமாகச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு நடமாடும் டவர்தான், ராமச்சந்திரன் பெரும்பள.

அவர் ஹசைனார்ச்சாவின் தொலைபேசி அழைப்பை ஏற்பதற்கும், சுக்ரியா பஸ் குறித்த நேரத்துக்கு  வந்துசேருவதற்கும் சரியாயிருந்தது.

முதலில் கதிரேசனும், பின்னாலேயே அந்த வங்காளிப் பையன்களும், கடைசியாக கோபால் யாதவும் இறங்கிவந்தார்கள்.

வங்காளிகள் மூவரும் ரோட்டைக் கடந்து வந்து நமஸ்கார் சொன்னதும், ராமச்சந்திரன் அவர்கள் முன் நன்றாகக் கசக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த மூன்று கஞ்சா  பொட்டலங்களை நீட்டினான்.

அதில் ஒன்றைப் பிரித்து ஒரு துகளை எடுத்து நாக்கில் வைத்து, அதன் காரத்தை உணர்ந்தவர்களாக, விரல்நுனியை அப்படியே தங்கள் ஜீன்ஸ் பேன்ட்டில் துடைத்துக் கொண்டார்கள். எதிர்பார்த்தபடி வந்த பிக்கப் வேனில் இருந்த, ஒரு தடித்த ஆள் அவர்களை அதற்குள் நுழைத்துக்கொண்டு வேகமெடுத்தான்.

சற்று நேரத்துக்குள் பிளம்பிங் வேலை மிச்சம் இருப்பதாக, நேற்றிரவு போனில் அழைத்திருந்த தோமாச்சன், கதிரேசனுக்கு முன்னால் தன் ஜீப்பை நிறுத்தி ஹாரன் அடித்தான். கதிரேசனும் அவனோடு போன பின் கோபால்யாதவ் தனித்துவிடப்பட்டான். அவன் முதுகில் கீறலாக விழுந்த இளவெயில் பெரிதாகிக்கொண்டே போனது.

இந்த இரண்டு வருடங்களாக கதிரேசனின் மச்சான் அண்ணாமலையுடன்தான் இருந்தான் கோபால் யாதவ். அண்ணாமலைக்கான வேலை குறைந்த பின் உடல் உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் தெரியாத கோபால் யாதவுக்கு, யாதொரு பிடிமானமும் இல்லாமல்போனது.

அப்படி விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்த ஒரு நாழிகையில்தான், கதிரேசனைப் பற்றி அவனுக்குச் சொன்னான் அண்ணாமலை.

நேரே செருக்கள நோக்கிக் கிளம்பிவிட்டான் கோபால். காஞ்சாடு பக்கமாக வரும்போது வித்யாநகர் கடந்தால் வரும் ஓரளவு நல்ல டவுன் செருக்கள. உளியத்தடுக்கையைப்போல வேலைவெட்டியின்றி ஈயடிச்சிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியிருக்காது என கதிரேசனும் உறுதி அளித்தான்.

கதிரேசனின் ஒற்றையறை உள்ள வீட்டின் பின்புறம் போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில்தான் கோபால் யாதவ் தங்கிக்கொள்கிறான். மழைக்காலத்துக்கு முன்னர், வேறு எங்கேயாவது அறை பார்த்துப் போய்விட வேண்டும். தனி அறைக்கே இப்போது ஐயாயிரம் ரூபாய் வாடகை கேட்கிறார்கள்.

யாராவது வருவதற்குள் ஒரு மீட்டாபான் வாங்கி மெல்லலாம் என நினைத்து, அருகில் இருந்த பெட்டிக்கடையை நோக்கி நடந்தான்.

‘‘இதர் நயா ஹை தும்?’’

‘‘ஹா… பாயி.’’

வெற்றிலையின் நரம்பைக் கிள்ளியபடியே ராமச்சந்திரன் விசாரித்தான்.

‘‘கிதர் கா ஹை தும்?’’

‘‘பீஹார்.’’

‘‘ஓ… ஆப்னா லாலூஜீக்கா தேஸ்யேனா.’’

கோபால் யாதவ் சிரித்தான். அப்போது அவன் கீழ்த்தாடையில் மூன்று பற்கள் விழுந்துவிட்டிருப்பதை ராமச்சந்திரன் கவனிக்கத் தவறவில்லை.

‘‘தும் கித்னா சால் ஹோகயா இதர்?’’

‘‘சாத்’’

கோபால் யாதவ் மீட்டாபானை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான்.

‘‘அபி தும் மலையாளம் சீக்கா?’’

அவன் வெற்றிலைச் சாறை உள்ளிழுத்து விழுங்கியவாறே, ‘‘கத்துக்கிட்டேன்’’ எனத் தலையாட்டினான்.

‘‘இன்னக்கி ஒரு வேலை இருக்கு... செய்றியா?’’

‘‘செய்றேன்’’ எனப் பலமாகத் தலையாட்டினான்.

சுண்ணாம்பு தோய்ந்த விரலைத் துணியில் துடைத்துக்கொண்டே, ராமச்சந்திரன் தன் மொபைலை எடுத்தான். ஹசைனார்ச்சாவைக் கூப்பிட்டு, தனக்கு ஆள் கிடைத்துவிட்டதைச் சொன்னான். 
அவசரமா கலந்தன் ஹாஜியோட வீட்டுக்கு ஒரு வேலையாள் கிடைப்பானா எனத்தான் சுக்ரியா பஸ் வந்து நின்னப்ப, ஹசைனார்ச்சா போன்ல கேட்டிருந்தார். அரை மணி நேரத்துக்குள் ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனர் கார், அவர்கள் முன் வந்து நின்றது. வண்டியில் இருந்து ஹசைனார்ச்சா இறங்கினார்.

எப்போதும் செய்வதுபோல, தன் ட்ரௌசர் பாக்கெட்டில் கையைவிட்டு தொடைக்கும் விதைப்பைக்கும் இடையே சொறிந்துகொண்டே ராமச்சந்திரனின் கடைக்கு வந்தார். ராமச்சந்திரன் ஏற்பாடு செய்திருப்பது, தன் முன் பவ்யமாக வணங்கிநிற்கும் இந்த நடுத்தர வயதுக்காரனைத்தான் என்பது அவருக்கு ஒரே பார்வையில் புரிந்துவிட்டது. 

‘‘எரநூத்தைம்பது ரூபா தர்றேன். ரெடியா?’’ என கோபால் யாதவின் முகத்தைக்கூடப் பார்க்காமல் ஹசைனார்ச்சா கேட்டார்.

‘‘சாப்… முன்னூத்தம்பதா குடுங்க சாப்...’’

‘‘டேய், மலையாளிக்கு 600, தமிழனுக்கு 500, பெங்காலிக்கு 350, பீஹாரிக்கு 250. இதான் இங்கத்தய ரேட்டு. நாலைஞ்சு மணி நேர வேலைதான் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாய்க்கு மேல நம்மால குடுக்க முடியாது. வர்றியா... இல்லியா? அதைச் சொல்லு’’ - ஹசைனார்ச்சா ஒரு வில்ஸ் எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.

‘‘என்ன ஹசைனார்ச்சா, விருந்து ஏற்பாடு எல்லாம் பயங்கரமா நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். பிரியாணி செய்ய ஹைதராபாத்லேருந்தும், அபுதாபியிலேருந்தெல்லாம் ஆளுங்களைக் கூட்டியாந்திருக்கீங்கன்னு பேசிக்கிறாங்க...’’ - அருகில் நின்ற ராமச்சந்திரன் கேட்டான்.

‘‘வெறும் பிரியாணி மட்டும் இல்ல மவனே... `குழிமந்தி’கூட இருக்கு. இது இங்கே இருக்கிற லோக்கல் இக்காங்க வீட்டுக் கல்யாணத்துல போடற சவசவ பிரியாணி இல்லை. நம்பர் ஒன் பாசுமதி ரைஸ் ஒரு லோடு பஞ்சாப்லேருந்து அப்படியே எறக்கியிருக்கோம்.’’

‘‘ஒரு லோடா?’’

ராமச்சந்திரன் நம்ப முடியாமல் கேட்டான்.

‘‘நேத்து ராத்திரி லாரி வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னப்போ... டேய் ராமச்சந்திரா நீ நம்ப மாட்ட, மல்லிப்பூ பூத்த வாசனை ஊரையே நெறப்பிடுச்சு. இப்பவும் அந்த வாசனை என் மூக்குலேருந்து போகலைடா. அதான் பஞ்சாப் பாசுமதி.’’

நூறு ரூபாய் அதிகம் கேட்டிருந்தாலும், பேரம் படிந்து ஹசைனார்ச்சாவின் ஃபார்ச்சூனரின் பின்ஸீட்டில் கோபால் யாதவ் குந்தியிருந்தான்.

p180b.jpg

பள்ளிக்கரைக்கான சாலையை அடைந்தவுடன் ஹசைனார்ச்சா திரும்பி கோபால் யாதவிடம் கேட்டார்...

‘‘கோபாலா, நீ பீஹார்ல எங்கே இருந்த?’’

‘‘லால் மாத்தியா?’’

‘‘அங்க என்ன வேலை?’’

‘‘நிலக்கரி அள்றது’’

கோபால் யாதவ், லால் மாத்தியின் ராஜ்மஹால் கோல் மைனிங் பற்றி சொல்லத் தொடங்கினான். சுரங்கம் வெட்டுவதைப் பாதியிலேயே விட்டுவிட்டு, கம்பெனி காலி செய்த இடங்களில் இரண்டாம்தர நிலக்கரி நிறைய மிச்சம் இருக்கும்.

சட்டவிரோதம் எனினும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஊர்க்காரர்கள் அவற்றை அள்ளிக்கொண்டு போவார்கள்.
 
கரி அள்ள பெண்கள்தான் அதிகம் பேர் வருவார்கள். மாதங்கியை கோபால் யாதவ்  சந்தித்ததுகூட அப்படி ஒரு தருணத்தில்தான்.

லால் மாத்தியில் இருந்து இருநூற்றைம்பது கிலோ நிலக்கரியை ஏற்றிக்கொண்டு ‘கொத்தா’ வரை நாற்பது கிலோ மீட்டர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே போகவேண்டும். சில நாட்களில் அந்தப் பயணம், மேலும் இருபது கிலோ மீட்டர் நீண்டு ‘பாங்கா’ வரை போகும்.

‘‘எல்லாம் போக டெய்லி பத்து ரூபா மீறும் சாஹிப்.’’

‘‘அடக்கடவுளே, வெறும் பத்து ரூபாயா?’’

‘‘நூத்தம்பது கெடைக்கும். அதுல போலீஸுக்கும் ரவுடிங்களுக்கும் கொடுத்ததுபோக, சைக்கிள் ட்டியூப் மாத்தி, பால்பேரிங் சரிபண்ணிட்டுப் பாத்தா... கையில பத்து ரூபாதான் மிஞ்சும் சாப்.’’

‘‘இதுல நீ எங்கிட்ட நூறு ரூபா சேத்துக் கேக்கிற?’’ - ஹசைனார்ச்சா தன் தலையைப் பின்புறம் திருப்பி, கோபால் யாதவைக் கோபமாய்ப் பார்த்தார்.

‘‘சரி நீ ஊரைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு?

‘‘பதினஞ்சு வருஷம் சாப்.’’

‘‘அன்னக்கி பத்துன்னா இன்னக்கி அது நூறாயிருக்கும். அவ்வளவுதான். இதுல நான் எரநூத்தம்பது குடுக்கிறேன்னா, உனக்குப் பத்தலையா?’’

வண்டி ஓட்டுவதற்கு இடையே அவர் யாரிடம் என்று இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டுவந்தார்.

தன் கஷ்டங்களை எல்லாம் இந்த ஆளிடம் சொல்லியிருக்க வேண்டாமோ என, கோபால் யாதவ் நினைத்துக்கொண்டான்.

‘கொத்தா’வில் இருந்து நடுராத்திரிகளில் சைக்கிளை மிதித்துக்கொண்டு வீடு வந்து சேர்வதற்குள், தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு கடைசியில் மண்ணை வாரித் தின்றுவிட்டுத் தூங்கும், பைத்தங்கொடியைவிட வற்றிய கழுத்தும், துருத்தி நிற்கும் வயிறுமாக ஒரு மகள் இவனுக்கு இருக்க வாய்ப்பு இல்லையே!

ஒருத்தனிடம் நம் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்துச் சொல்லும்போது, கேட்பவன் அதே அளவு இல்லை எனினும், அப்படிச் சில வேதனைகளைத் தன் வாழ்வில் கடந்தவனாகவேனும் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாத யாரிடமும், இவற்றைச் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து, கோபால் யாதவ் அமைதியானான்.

இதெல்லாம் தன் வாழ்வில் பட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்கள்தான். மாமூல் பிரித்து எடுக்கையில், எத்தனை முறை போலீஸ்காரர்களின் கால்களில் விழுந்து கெஞ்சியிருக்கிறேன். ஓர் அற்பப் புழுவைப்போல உதறித் தள்ளியதைத் தவிர, என்றுமே என்மீது அவர்கள் கரிசனம் காட்டியது இல்லை.

அதற்குள் ஃபார்ச்சூனர் கலந்தன் ஹாஜியாரின் வீட்டின்முன் நின்றது. காற்றில் பாசுமதியின் வாசனை அப்போதும் பரவியிருந்தது.

லால் மாத்தியில், ஹீக்கூர் மியாவின் கடையில்தான் முதன்முதலில் கோபால் யாதவுக்கு மாதங்கி இந்த அரிசியைக் காட்டினாள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணி.

சாக்குப்பையிலிருந்து ஒரு பிடி அள்ளி மூக்கிற்கு நேரே கொண்டுவந்த போது, அதன் வாசனையேறி அவள் கண்கள் லேசாக மூடிக்கொண்டது. அது ஒரு மாதிரியான கிறக்கம். தங்களைப் போன்றவர்களால் அதை விலைக்கு வாங்கிச் சாப்பிட முடியாது என அவளுக்கு உறுதியாகத் தெரியும். ஆனாலும் அவள் நிராசைப்பட அவன் விடவில்லை.

ஐம்பது கிராம் அரிசியை அளந்து தருமாறு ஹீக்கூர் மியாவிடம் கேட்டான்.

வீடு வந்து சேரும் வரை மாதங்கி அதை வாயில் போட்டு மென்று கொண்டே வந்தாள்.
 
பசுவின் பால்போல அரிசி மாவு அவள் கடைவாயில் இருந்து ஒழுகியபோது, அதைத் துடைக் கவிடாமல் ஒரு கன்னுக்குட்டியைப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

கோபால் யாதவைப் பின்னால் இருந்து யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தபோது ஓர் இளைஞன் நின்றிருந்தான்.

அவன் முன்னால் நின்றபோது, அத்தர் பாட்டில் கீழே விழுந்து உடைந்ததுபோல கோபால் யாதவுக்குத் தோன்றியது.

அவன் கலந்தன் ஹாஜியின் மூன்றாவது மனைவி பாத்திமா வுக்குப் பிறந்த தாஹாவின் மகன் சினான்.

‘‘அரே பாயி... தும் மேரா சாத் ஆவோ.’’

கையில் இருந்த கடப்பாரையையும் மண்வெட்டி யையும் கோபாலிடம் கொடுத்துவிட்டு, பக்கத்தில் இருந்த கார் கண்ணாடியில், புது ஸ்டைலில் மேல் பக்கமாய் நீட்டிச் சீவிய தன் கோல்முடியைச் சரிபார்த்துக் கொண்டான். அதில் திருப்தி அடைந்தவனாக  ஒருமுறை தனக்குத்தானே சிரித்துக்கொண்டான்.

அந்தப் பகுதி, விழாவுக்கு வரும்  வண்டிகள் நிறுத்துவதற்காக ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.

கொஞ்ச தூரம் நடந்தவுடன் தென்னந்தோப்பில் பச்சைப் புற்கள் வளர்ந்து நின்ற ஓர் இடத்தைக் காட்டி சினான் சொன்னான்.

‘‘இங்கதான், இங்க குழிவெட்டு பாயி.’’

ஒரு பெரிய குழியை வெட்டத்தான் இங்கு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பதே கோபால் யாதவுக்கு அப்போதுதான் புரிந்தது.

‘‘ஆழம் எவ்வளவு வெட்டணும் பாய்?’’

‘‘உன்னோட ஆழம் போதும்.’’

சினான் அவனுடைய எண்ணற்ற காதலிகளில் ஒருவளான ரியாராஃபிக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிக்கொண்டே கோபால் யாதவிடம் சொன்னான்.

‘‘அகலம்?’’

‘‘உன்னோட அகலமே போதும்’’

கோபால் யாதவ் கடப்பாரையின் கூர்முனையால் வெறுந்தரையில் கோடிட்டான்.

கோடை ஆரம்பித்துவிட்டாலும் வெய்யிலை மண்ணுக்குக் கடத்தாமல் தடுத்து நிறுத்தியிருக்கும் தென்னை ஓலைகளுக்கு நன்றி சொல்லி, தன் வேலையைத் தொடங்கினான் கோபால் யாதவ். மண்ணின் இறுக்கத்தை வைத்துப்பார்த்தால், ஓர் ஆள் ஆழத்துக்கும் அகலத்துக்கும் குழிதோண்டி முடிக்க இருட்டிவிடும்.

p180c.jpg

இதற்கு இடையே தன்னைப் பற்றிய சிறு விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட சினான், நேராக கூகுளில் நுழைந்து லால் மாத்திக்குப் போனதை கோபால் யாதவ் அறிந்திருக்கவில்லை.
‘‘பீஹாருல லால்மாத்தினு ஒரு எடமே இல்லயே பாயி.’’

மண்ணில் குத்திட்டு நின்ற கடப்பாரையை வெளியே எடுக்காமலேயே கோபால் யாதவ் சொன்னான்.

‘‘லால் மாத்தியா பீஹார்லதான் இருக்கு. யே மேரா காவ் ஹை.’’

‘‘தும் ஜோக் மத் போலோ. அது ஜார்க்கண்ட்லதான் இருக்கு. தோ பாரு...’’

விபத்தில் செத்துப்போனவனின் முகத்தை மூடியிருக்கும் வெள்ளைத் துணியை விலக்குவதைப் போல, தன் மொபைல் ஸ்க்ரீனை விலக்கி, பீஹாரில் இருந்து ஜார்க்கண்டுக்குப் போய்விட்டிருந்த லால்மாத்தியை, கோபாலிடம் காண்பித்தான் சினான்.

தன்னைப்போலவே தன் கிராமமும் மாநிலம் விட்டு மாறியிருக்கிறது என நினைத்து, கோபால் யாதவ் ஒரு பெருமூச்சை உள்ளிருந்து விட்டான். தனக்குப் பிரியமானவர்களின் மரணத்தின்போது எல்லாம் கோபால் யாதவ் இப்படித்தான் செய்வான். இப்போது இது லால் மாத்தியின் மரணத்துக்காக.

மண்ணில் ஊன்றியிருந்த கடப்பாரையை வெளியே எடுத்தான். அதில் இருந்து பெயர்ந்த ஈரமான மண்கட்டியை பீஹாராகக் கற்பனை செய்தான். அவனுடைய கண்கள் நிறைந்தன. ஆத்திரத்தோடு கடப்பாரை முனையால் மண்கட்டியை ஓங்கி அடித்தான். அது ஒரு மனித மண்டையோட்டைப்போல இரண்டாகப் பிளந்தது.

ஒன்று பீஹார்; இன்னொன்று ஜார்க்கண்ட்.p180d.jpg

இவை இரண்டில் எங்கு இருக்கிறேன் நான்? தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

அப்புறம் எதுவும் நினைவில் இல்லை. அவர்கள் வரிசை வரிசையாகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யாதவர்கள், கொயேறிகள், சாந்தாள்கள்…

பெடல் கழற்றிவிடப்பட்ட ஒவ்வொரு சைக்கிளிலும் 250 கிலோ கிராம் நிலக்கரி மூட்டை இருக்கிறது. செங்குத்தான மலைப்பாதைகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

மூச்சிரைக்கிறது.

வெறும் காற்று நிறைந்த நுரையீரல், விலா எலும்புகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடும் என கோபாலுக்குத் தோன்றியது.

அரிசியோடு சேர்த்து காய்கறிகளைப் போட்டுப் பொங்கிய சோற்றைத் தவிர, காலையில் இருந்து வேறு எதையும் சாப்பிடவில்லை. தலை சுற்றுகிறது.

முன்னால் நடந்துகொண்டிருந்த மஞ்சி லேசாக நடுங்கினான்.

‘‘என்னாச்சு’’ எனக் கேட்பதற்குள், முடிச்சவிழ்ந்து வீழ்ந்த நிலக்கரிச் சரிவோடு, அவனும் செங்குத்தான மலைப்பாதையில் இருந்து கீழே விழுந்தான். சுற்றிலும் கும்மிருட்டு. பள்ளத்தின் ஆழ அகலத்தை நிதர்சனமாகப் பார்த்தபோது, யாதவுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

பார்க்கிங்கில் இருந்து வண்டிகள் அகன்று செல்லும் சத்தம் மட்டும் கேட்கிறது. விருந்து கிட்டத்தட்ட முடிந்திருக்கக்கூடும். பேச்சு சத்தம் முற்றிலும் இல்லை.

அவன் வெட்டிய குழியின் பச்சை மண்ணில் மல்லாந்து படுத்தான். தென்னை ஓலைகளின் இடைவெளிகளில் இருந்து நிலவொளி ஒரு சிறு கீற்றுபோல குழிக்குள் இறங்குகிறது.

வாரி வெளியேகொட்டிய மண் மீது கால் பதித்து சினான் கேட்டான்.

‘‘ஹோகயா?’’

‘‘ஹா... ஜி.’’

கோபால் மேலெழுந்தான். சினான் அவன் கைப்பற்றி மேலே இழுத்தான்.

அவன் மேலே ஏறவும், எங்கிருந்தோ நான்கு பேர் ஒரு நீலநிற பாரலைத் தாங்கிப்பிடித்து உருட்டியபடி குழியில் கவிழ்த்தனர். எலும்புத் துண்டுகளோடு கூடிய பிரியாணி சிறுகுன்றுபோல குழிக்குள் கொட்டப்பட்டது.

கோபால் யாதவின் இதயத்துடிப்பு அநியாயத்துக்கு எகிறியது.

ஒரு மண் குவியலுக்குள்ளிருந்து மேலெழுந்து வருவதுபோல அவன் தலையுயர்த்திப் பார்த்தபோது, மீண்டும் ஒரு பாரல் வந்தது. அதன் பிறகு வந்ததை எல்லாம் அவன் கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. கடைசியிலும் கடைசியாக தம் போட்டுப் பிரிக்கப்படாத ஒரு அண்டா பிரியாணியும் குழிக்குள் வந்து விழுந்தது.

எச்சில் பருக்கைகளால் குழி நிறைந்தது.

‘‘இப்ப இதை மிதிச்சி லெவல் பண்ணிடு பாய்’’ -சினான் சொன்னான்.

எதையோ நினைத்துக்கொண்டு குழியையே பார்த்துக்கொண்டு நின்றான் கோபால்.

‘‘மிதிச்சு அழுத்து பாய், மணி பதினொண்ணு ஆச்சு.’’

மிதித்தான். அதன் நெஞ்சில் தன் பலம் கொண்ட மட்டும் மிதித்தான். முதலில் ஓர் அழுகைச் சத்தம் எழுந்தது. பின் அது முனகலானது. இறுதியில் அதுவுமற்ற வெற்றிடமானது.

p180e.jpg

‘‘இப்ப மண்ணைப் போட்டு மூடிடு பாய்.’’

வியர்த்து வழியும் கால் பாதங்களில் நெய்யும் மசாலாவுமாக நிற்கிற கோபால் யாதவைப் பார்த்து, தன்னோடு அணைத்து நிற்கவைத்தபடி ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டே சினான் கேட்டான்.
``பாயிக்கு எத்தன புள்ளைங்க?’’

‘‘ஒரே மக.’’

‘‘என்ன பேரு?’’

‘‘பாசுமதி.’’

‘‘நிக்காஹ் முடிஞ்சிடிச்சா?’’

‘‘இல்ல.’’

அதைக் கேட்டபடியே மொபைலைத் தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கோபால் யாதவை எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டே,

‘‘படிக்கிறாளா?’’ என்றான்.

‘‘இல்ல.’’

‘‘அப்பறம்?’’

‘‘செத்துட்டா.’’


‘‘செத்துட்டாளா?’’

பெரிய இரக்கம் ஒன்றும் கசியவில்லை எனினும் சினானை அது லேசாகத் தளர்த்தியது.

‘‘எப்படி?’’

‘‘பசியில...’’

கோபால் யாதவ் இன்னும் ஒரு மண்வெட்டி மண்ணை எடுத்து பாசுமதியின் மீது போட்டான்.

பிறகு தன் மூச்சை ஆழமாக உள்ளுக்கு இழுத்தான்!

 * குழிமந்தி - அரேபியன் பிரியாணி

http://www.vikatan.com/anandavikatan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு சிறுகதை . பகிர்வுக்கு நன்றி நவீனன்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.