Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெல்லிக்கட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தது..

கனன்று கொண்டிருக்கும் 'சல்லிக்கட்டு' போராட்டத்தின் காரணிகளை சற்றே அலசியிருக்கிறது..!

 

டெல்லிக்கட்டு!

 

delhikattu_3121491f.jpg

 

லுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை என்று தமிழகம் எங்கும் பரவியது?

ஒட்டுமொத்த இந்தியாவும் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. மெரினா கடற்கரையை நோக்கிச் செல்லும் சென்னையின் ஒவ்வொரு சாலையும் மனிதத் தலைகளால் நிரம்பி வழிகிறது. இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மெரினாவில் உட்கார்ந்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்குப் பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. இது தவிர, பல்லாயிரக்கணக்கானோர் நாளெல்லாம் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பேரணியாக வர முடியாதவர்கள் ஆங்காங்கே தெருமுக்குகளில் கையில் கருப்புக் கொடியுடன், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளுடன் கூடி நிற்கிறார்கள். சைதாப்பேட்டையில் பணி முடித்து சீருடையைக்கூடக் கலைக்காமல் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் ‘தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றதைப் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் கருப்புச் சட்டையர்கள். எங்கும் பறை, மேளதாள முழக்கங்கள். ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே அறிந்திராத எதிர்வீட்டு ஐந்து வயது சிறுமி கையில் பென்சிலால் எழுதப்பட்டு, மாடு வரையப்பட்ட காகிதத்துடன் தெருவுக்கு ஓடுகிறாள். ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் பலரை முடக்கும் காயங்களைத் தந்துச் செல்லக் கூடியது; சிலரது உயிரையும் உடன் எடுத்துச் செல்லக் கூடியது. ஜல்லிக்கட்டை அறிந்த பெண்கள் அதை உவகையோடு அணுகிப் பார்த்ததில்லை. இன்று மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தன்னெழுச்சியாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்! திருச்சியில் முக்காடிட்ட முஸ்லிம் சிறுமிகள் சிலம்பம் சுற்றியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அத்தனையையும் ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்வினையாக மட்டுமே பார்க்க முடியுமா?

அப்படிப் பார்ப்பது மிக எளிமையான, மேலோட்டமான, தட்டையான ஒரு பார்வையாகவே அமையும் என்று நினைக்கிறேன். இந்தப் பிரம்மாண்டம் முன்னுதாரணம் அற்றது என்றாலும், ஒரு குறிப்பிட்ட அளவில், குஜராத்தின் உனாவில் கைகளில் மாட்டுப் படத்துடன் பல்லாயிரக்கணக்கில் குவிந்த தலித் இளைஞர்களின் போராட்டத்துடன் இன்றைய தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை ஒப்பிட முடியும். போராட்டத்தில் நிற்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் மாட்டின் படம் இருந்தாலும், கோபம் மாட்டின் மீதான உரிமை சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. பல பரிமாணங்கள் இதற்குப் பின்னே இருக்கின்றன.

இந்தப் பெருங்கூட்டத்திடமிருந்து வெளிப்படும் அரசியல் தெளிவின்மையும், பின்னணியில் எந்த அமைப்பும் தலைமையும் அற்ற தன்விழைவுப் போக்கும் கலக்கமூட்டுவது என்றாலும், பொதுப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து போராட்டக் களத்தில் அவர்கள் அடியெடுத்து வைத்திருப்பதே வரவேற்புக்கு உகந்ததாகிறது. என்ன மாதிரியான கட்டமைப்பில் இவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். “அரசியல் சாக்கடை; போராட்டம் பொறுக்கித்தனம்” என்று சொல்லி வளர்க்கப்பட்ட தலைமுறை இது. பெரும்பாலானவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்; படிப்பவர்கள். அவற்றில் பல நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுபவை. வகுப்பறைகள் முற்றிலுமாக அரசியல்நீக்கம் செய்யப்பட்டவை. அங்கிருந்தே வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் இன்று அவற்றின் வழி அரசியல் உரையாடல்களில் பங்கேற்கிறார்கள். ஓரிடத்தில் ஒன்றுகூடுகிறார்கள். ஒன்றுகூடலின் வழி, முழக்கங்களின் வழி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். போராட்டக் களத்தில் அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து, போராட்டத்தின் மீது எந்த அரசியல் கட்சியின் சாயமும் ஏறாத வரைக்கும்தான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள். பொதுச் சமூகமும் ஊடகங்களும் இன்று வாரி வழங்கும் வரவேற்பு அரசியல் சாயமற்றதன் பின்னணியில் நிகழ்வது என்பதை நாம் உணர வேண்டும். மேலெழுந்தவாரியாகக் காளைப் படங்களோடு, ஜல்லிக்கட்டு பெயரில் முழக்கத்தோடு கூடுபவர்களாகத் தோன்றினாலும், கூட்டத்தின் முழக்கங்களும் உரையாடல்களும் ஜல்லிக்கட்டோடு முடிந்துவிடவில்லை. அன்றாடம் சில மணி நேரமேனும் மெரினா சென்று வருகிறேன். நாட்டின் பன்மைத்துவத்தைத் தகர்க்கும் வகையில், ஒற்றையாட்சியை நோக்கித் தள்ளும் டெல்லியின் ஆதிக்கத்தைத் துல்லியமாக அடையாளம் கண்டு தாக்கும் குரல்களும் ஒலிக்கின்றன. மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் பாஜக, பறிகொடுக்கும் அதிமுக இரு அரசுகளையுமே விளாசித் தள்ளுகிறார்கள்.

இப்படியான போராட்டங்களின்போது உடனடியாக ஒரு முத்திரைக் குத்தி அவற்றைப் புறங்கையால் ஒதுக்க முற்படுவதைக் காட்டிலும் இத்தகைய போராட்டங்களின் பல்வேறு அசைவுகளையும் கவனிப்பதே முக்கியம் என்று நினைக்கிறேன். இதுவரை மிகக் கண்ணியமான ஒழுங்கோடும் சுயக்கட்டுப்பாட்டோடும் இந்தப் போராட்டம் போய்க்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் அண்ணா சாலையின் பாதுகாப்புக்கு நின்ற காவலர்களின் கைகளில் முத்தமிட்டவாறு சில இளைஞர்கள் சென்றதைப் பார்க்க முடிந்தது. எல்லா இடங்களிலும் போராட்டக்காரர்கள் மத்தியில் காவலர்கள் நிற்கிறார்கள். இரு தரப்பிலும் வன்மமற்ற உணர்வைப் பார்க்க முடிந்தது. பொதுவாக வட கிழக்கு மாநிலங்களில் இப்படியான சூழலைப் பார்க்க முடியும். மாநிலத்தின், மக்களின் உரிமை சார்ந்து கேள்வி எழுப்புவோர், போராடுவோரிடம் காவல் துறையினர் மூர்க்கமாக நடந்துகொள்ள மாட்டார்கள். தமிழகத்துக்கு இது புதிது. என் வாழ்நாளில் முதல்முறையாகப் போராட்டக்காரர்களைத் தமிழகக் காவல் துறை கண்ணியமாக அணுகுவதைப் பார்க்கிறேன். செய்தித் தொலைக்காட்சிகள் விளம்பரங்களைப் புறக்கணித்து, இடைவிடாது நேரலை ஒளிபரப்பு செய்தன. வெயிலிலும் பனியிலும் அங்கேயே தங்கிக் கிடப்பவர்களுக்கு வாழைப்பழங்கள், ரொட்டிப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், காபி, டீ, சாப்பாடு என்று தங்களால் இயன்றதை மக்கள் கொடுத்தனுப்புகிறார்கள். பொதுப்புத்தியில் நேற்று வரை ஒரு இழிச்சொல்லாகப் பதிவாகியிருந்த போராட்டத்துக்கான அர்த்தம் இன்று மாறத் தொடங்கியிருக்கிறது. இவை எல்லாமும்தான் நாம் கவனிக்க வேண்டியவை.

சித்தாந்த அடிப்படையிலோ, அமைப்புரீதியிலோ திரளாத ஒரு கூட்டம் தன்னளவில் பெரிதாக எதையும் சாதிப்பதில்லை. அது நீடிப்பதும் இல்லை. மிக விரைவில் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடலாம். மாணவர்கள் எப்படித் திடீரென்று கூடினார்களோ அப்படியே திடீரென்று கரைந்தும் போவார்கள். ஆனால், இந்த வரலாற்றுப் போராட்டம் தமிழக அரசியலின் போக்குக்கு நீண்ட காலத்துக்குத் திசை காட்டும் என்றே நினைக்கிறேன்.

1938-ல் நடந்த முதல் மொழிப் போராட்டத்தில் சிறையில் அடிவாங்கி உயிர் விட்ட நடராஜன், தாளமுத்துவால் அவர்களுடைய குடும்பங்கள் அடைந்த பயன் என்ன? பெரியார் தலைமையில் 1938 ஆகஸ்ட் 1 அன்று தொடங்கி செப்டம்பர் 11 வரை 42 நாட்கள் 577 மைல்கள் நடந்து, ஊர் ஊராக இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைக் கொண்டுசென்ற நூற்றுக்கணக்கான போராளிகளும் காலத்தில் கரைந்தே போனார்கள். 1964 மொழிப் போராட்டத்தில், “ஏ தமிழே, நீ வாழ வேண்டும் என்பதற்காக நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று முழக்கமிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சின்னச்சாமியின் நினைவிடம் வெகு சீக்கிரம் சீந்துவாரற்றுப் போனது. 1965 போராட்டங்களில் காவல் துறையின் கடும் அடக்குமுறைக்கும் சிறைச் சித்திரவதைகளுக்கும் ஆளானவர்கள், குண்டடிப்பட்டவர்கள் அத்தனை பேரும் ஒரே அமைப்பின் கீழ் திரண்டவர்கள் அல்ல. அந்தப் போராட்டம் அதன் இறுதிக் கட்டத்தில் திக்கற்று, சிதறுண்டு சிதைந்தது. ஆனால், இந்தச் சமூகத்துக்கு அந்தப் போராட்டங்கள் காட்டிச் சென்ற திசை எத்தனை மகத்தானது!

அன்றைக்குத் தமிழ் இளைஞர்களின் மொழிப் போராட்டம் பெருமளவில் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ‘இந்து, இந்தி, இந்துஸ்தான்’ செயல்திட்டத்தில் இந்தி எவ்வளவு முக்கியமான ஒரு கருவி என்பதன் தீவிரத்தை இன்றுதான் முழு அளவில் உணர்கிறோம். ‘இந்தி மட்டுமே ஆட்சிமொழி, அலுவல் மொழி’ என்று சொல்லி இந்தியாவின் இந்தி பேசாத ஏனைய அத்தனை சமூகங்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக உருமாற்றவிருந்த டெல்லியை மறித்து நிறுத்தியதன் மூலம், உண்மையில் இந்த ஒட்டுமொத்த நாட்டையும் கட்டிவைத்திருக்கும் பன்மைத்துவத்தின் முக்கியமான கண்ணியை நம்முடைய முன்னோடிகள் பாதுகாத்திருப்பதை இன்றுதான் உணர்கிறோம். இன்றைய ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மையத்திலும் அப்படி பல முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன.

முதல் நாள் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது அதன் வாசலில் பிரதமர் மோடி தரையில் விழுந்து வணங்கிய காட்சியை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். கூடவே அவர் சொன்ன வார்த்தைகளையும். “அரசியலமைப்புச் சட்டம் எங்கள் புனித நூல்’’ என்றார் மோடி. தம்முடைய ஆதிக்க நோக்கங்கள் ஒவ்வொன்றையும் சட்டத்தின் வழியே நுழைத்து, நீதிமன்ற வாதங்கள் வழி அதை உறுதிசெய்து, அரசியல் சட்ட சாசனத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனித நூலாக மாற்றுவதன் வழியே ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக்குவது மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட நுட்பமான அரசியல். தமிழக இளைஞர்கள் இன்று அறிந்தோ, அறியாமலோ எங்கே தம் கையை வைத்திருக்கிறார்கள் என்றால், அங்கே வைத்திருக்கிறார்கள்! ஒருவகையில் அவர்கள் நடத்திக்கொண்டிருப்பது சட்ட மறுப்பு இயக்கம்.

தமிழகத்துக்கு இதில் ஒரு தொடர்ச்சியான மரபும் இருக்கிறது. 1951-ல் அரசியலமைப்புச் சட்டம் வந்த வேகத்தில், “தமிழகத்தில் நீண்ட காலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது” என்று தீர்ப்பளித்தன சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும். திராவிட இயக்கங்களின் எதிர்ப்பின் தொடர்ச்சியாக, இளைஞர்கள் வீதியில் இறங்க தமிழகம் கொந்தளித்தது. பிரதமர் நேருவைப் பார்க்க டெல்லி சென்றார் காமராஜர். அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்தது தமிழகம். இன்றைக்கு “மக்களை மீறிய சட்டம் ஒன்று இல்லை. எங்களுக்கு ஏற்றபடி சட்டத்தை மாற்று. அதையும் உடனே செய்” என்று விடாபடியாக உட்கார்ந்து நாட்டுக்கே முன்னுதாரணமாக ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வைக்கிறார்கள் என்றால், அடிப்படைச் செய்தி தெளிவானது: டெல்லி தன் ஆட்டத்தை விடாத வரை தமிழகமும் தன் ஆட்டத்தை விடவே விடாது.

டெல்லிக்கு எதிரான இன்றைய கோபமானது ஒரே நாளில் சூல் கொண்டது அல்ல. ஒரு நீண்ட கால அழுத்தமும் கோபமும் இன்றைய போராட்டங்களிலிருந்து வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் முடங்கிய நாள் முதலாகவே மத்திய அரசின் தலையீடுகளைத் தமிழக மக்கள் பெரிய அளவில் உணர்ந்தனர்.

மோடி அரசு பொறுப்பேற்றதுமே “அரசு இனி சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டபோது அதைக் கடுமையாகக் கண்டித்தவர் ஜெயலலிதா. தொடர்ந்தும் மோடி அரசு மாநிலங்களின் உரிமை யில் தலையிடும் ஒவ்வொரு விவகாரத்திலும் எதிர் வினையாற்றிவந்தார். முக்கியமாக, பொதுச்சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விவகாரத்தில் மாநிலங்களின் உரிமைப் பறிப்பை முன்னிறுத்தித் தனித்தும் உறுதியாகவும் நின்றார் அவர். ஆனால், அவர் மருத்துவமனையில் முடங்கிய நாள் முதலாகக் காட்சி கள் மாறின. ஆளுநர் திடீரென விஸ்வரூபம் எடுத்தார். ஜெயலலிதா மாநிலங்கள் உரிமை சார்ந்து மத்திய அரசுடன் முரண்பட்டு நின்ற பல விவகாரங்களிலும் அவருடைய கட்சி திடீர் சரணாகதி அடைந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழகத்தின் ஆட்சியையே ஆளுநர் வழியாக மத்திய அரசு பின்னின்று இயக்குவதான பேச்சுகள் அடிபடத் தொடங்கின. தலைமைச் செயலகத்தில் துணை ராணுவப் படைகள் சூழ வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாகப் பதவி நீக்கப்பட்ட தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அளித்த பேட்டி இந்த அரசின் பின்னுள்ள கரங்களை உறுதிப்படுத்தியது. பொது விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகை இல்லாதது இந்த ஆண்டு வெளியே தெரியவந்தது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றவர்களிடம், “சிங்கங்களைத் தருகிறோம், அடக்குகிறீர்களா?” என்று கேட்டார்கள் நீதிபதிகள். இடையில், மோடி பணமதிப்பு நீக்க அறிவிப்பை அறிவித்த பின்னர் கடுமையான பணத்தட்டுப்பாட்டை எதிர்கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றானது.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் தமிழர்களின் உரிமைகளை டெல்லி தொடர்ந்து புறக்கணித்துவருவதையும் அவர்கள் கவனித்துவந்தார்கள். இந்த ஆண்டு தமிழகம் வரலாறு காணாத வறட்சியில் சிக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த சூழலில் இதுவும் தீ கனழக் காரணமானது. எல்லாக் கோபங்களும் சேர்ந்தே காளை வடிவில் இன்று சீறிப் பாய்வதாகத் தோன்றுகிறது.

1965 போராட்டத்தில் உயிரைக் கொடுத்த சின்னசாமியும் அன்றைக்கு மாணவர்கள் தலைவராக இருந்த ரவிச்சந்திரனும் இன்றைய தமிழக அரசியலோடு எந்த வகையிலும் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள். ஆனால், டெல்லி ஆதிக்கத்துக்குத் துணை போன காங்கிரஸ் அடுத்த அரை நூற்றாண்டுக்கு ஆட்சிக் கனவு காண முடியாதபடி பிடுங்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தேசியக் கட்சிகளால் இன்றும் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல் இருக்கும் காரணம் மேலோட்டமானது அல்ல. 2017 போராட்டமும் ஒரு செய்தியைத் தந்திருக்கிறது. மௌனமாகவும் தீர்க்கமாகவும்!

அரசியல் களத்துக்கு வெளியில் இருப்பவர்களுக்கு அது புரியாமல் இருக்கலாம். அரசியல்வாதிகளுக்குப் புரியும்!

 

தமிழ் இந்து

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலத்து ஜில்மார்ட் அரசியல் இனி சரி வராது.

படித்த அரசியல் வாதிகள் தான் இனி ஆள முடியும். சசிகலா கும்பல் கடை மூட வேண்டி வரலாம்.

சந்திரபாபு நாயுடுவின் தீர்க்கமான அரசியல், கடல் கடந்து இலங்கையையும் கவர, அவர் இலங்கை அரசால் அழைக்கப் பட்டிருந்தார்.

சிங்களவனுக்கு புத்தி புகட்ட எந்த நாயுடுவாலும் முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, TNT said:

சிங்களவனுக்கு புத்தி புகட்ட எந்த நாயுடுவாலும் முடியாது

 

 

சிங்களத்துக்கு புத்தி புகட்டிடவா வந்தார்?

IT தொழில் துறையில் தமிழகம் ஒத்துழைக்காது என்ற வகையில் சிங்களம் அவரை நாடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலமுறை நான் எழுதினேன் ..........
யாரும் அதை உள்வாங்கினார்களோ தெரியவில்லை 
யாரவது இனியாவது உள்வாங்கலாம் எனும் எண்ணம் எனக்கு உண்டு என்பதால் எதை எழுதுகிறேன்.
நாம் உலகில் நடக்கும் மாற்றங்களை கொஞ்சம் அவதானிக்க வேண்டும்.

எகிப்த்து நாட்டு மன்னர் ஆடசி பிப்ரவரி 2011இல் தூக்கி ஏறிய முக்கிய காரணியாக இருந்தது 
எது?
தற்போதைய சிரியா நாட்டு போர் சிரிய அரசுக்கு சாதகம் ஆக்கியது எது ?

"சோசல் மீடியா" என்னதான் பிரீ ஸ்பீச் .... பிரீ ஸ்பீச் என்று கத்தினாலும் 
எல்லா நாட்டு ஊடகங்களும் ஒரு கட்டுக்குள்தான் கிடக்கின்றன.
இன்று ட்ரம்பிட்கு எதிராக எழுதும் எந்த ஊடகமும் .... நாளை அமேரிக்கா 
எங்காவது படை எடுத்தால் அந்த நாட்டில் அழியும் மக்களை காட்ட போவதில்ல்லை.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்ட்து ............
கட்டுக்குள் அடங்காத தனிமனித பேச்சு உலகம் கேட்க கூடியதாக இருக்கிறது 

நேற்று எமக்கு குரல் இல்லை நாமே பேசி ... நாமே கேட்க முடியும்.
இன்று மாணவர்கள் மெரினாவில் பேசினால் ..... மினியாபொலிஸ் இல் இருந்து 
நான் கேட்க்கிறேன். இது ஒரு பெரிய திருப்பம். 

இதில் இப்போதும் பெரிய லாபம் ஆதிக்க அரசுகளுக்கு உண்டு .......
நீங்கள் எதுவுமே செய்ய தேவை இல்லை பாட்டரி சார்ஜில் உள்ள ஒரு ஸ்மார்ட் போனை 
உங்கள் அருகில் வைத்திருந்தால் போதும். அவர்களே உங்கள் போனின் மைக் கை ஆன் செய்து 
நீங்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் .... இப்போது எங்கு இருக்கிறீர்கள் என்பதையும் 
அறிந்து கொள்வார்கள். 
சீமான் போன்றவர்கள் ஒரு விடயத்தை செய்யுமுன்பு .....அதட்கான பதில் வேலையை அதட்கு முன்பே 
ஹிந்திய அரசு செய்ய தொடங்கிவிடும்.

ஆனால் எந்த ஒளிவு மறைவும் இல்லாத மக்கள் எழுச்சி ஆகும்போது ...
அதை இருட்டு அடிப்பு செய்ய முடியாத ஒரு நிலை மக்களுக்கு சாதகமாக அமைந்து 
இருக்கிறது. தனியா தனிய பேசினால் கேட்க மாடடார்கள் .......
நாம் எல்லோரும் இறங்கினால் பதில் சொல்ல வேண்டிய கடடாயம் வந்திருக்கிறது.

சோசல் மீடியாவில் நாம் புத்திசாலி தனமாக போராட தொடங்கினால் 
சிங்கள அரசை நிச்சயம் முடக்க முடியும். 
எங்களுடைய பலம் சோசல் மீடியாவில் அவ்வளவில் இருக்கிறது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.