Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )

Featured Replies

கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த  காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய்  குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது.

 
இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது.

 

அவன் கொல்லப்பட்டவன்! ஆம் ஒரு மாலையின் முடிவுக்கும் இரவின் ஆரம்பத்துக்கும் இடையில்,முகத்தில் முடியேதுமில்லாதவர்களால் கொல்லப்பட்டவன். எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேரில் ஒருவனாக கொல்லப்பட்டவன். காற்றின் கனதிகளாய் சாவின் செய்திகள் நிறைந்துபோய் நின்ற நாட்களில், எங்காவது சென்று வாழ்ந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டலைந்த நாளொன்றில் கொல்லப்பட்டவன்.

 
நான்

 
பரிசின் புறநகரொன்றில், ஓரளவு நெருக்கம் குறைந்த அடுக்குமாடிகள் கொண்ட இடத்தில் வசிக்கிறேன். இங்கேயே இந்த ஒதுக்கமான இடத்திலேயே யாருமறியாமல் இறந்துபோகவும் விரும்புகிறேன். எப்போதும் பூட்டப்பட்ட கதவுகளின் பின் ஒரு பூனையைப் போல சத்தமின்றி நடந்து பழகிய கால்கள் எனதாயின. படிகளிலோ க்கத்து வீடுகளிலோ சப்தம் ஏதும் கேட்டால் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொள்ளவும்,அமைதியாக கதவின் துவாரத்தின் ஊடாக  அவதானிக்கவும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன்.

 
இந்த ஆண்டின் வரும் மாதத்தின் முதல் கிழமையோடு நான் பிரான்ஸில் அகதியாகி சரியாக இரண்டு வருடங்களாகின்றன. நான் குடியிருக்கும் இந்தவீடு ஒரு தமிழருடையது. ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களால் இந்த அடுக்குமாடித்தொடர் நிறைந்தபோது தன்னால்,  தனது பிள்ளைகளை இனியும் இந்த இடத்தில் வைத்திருந்து வளர்க்க முடியாது  எனவும், அதனால் தான் வாடகைக்கு கொடுக்க முன் வந்ததாகவும் கூறினார். தமிழரைத்தவிர வேற்றினத்தவருக்கு வாடகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அதைஎங்கட ஆக்களுக்கு செய்யும் உதவியாகத் தான் நினைப்பதாகவும் பேச்சின் இடையில் குறிப்பிட்டதாக நினைவு.

 
இருக்கும் இடத்தை வீடென்பவர்களுக்கு மத்தியில், குடிக்கவும் படுக்கவும் நினைத்தபோது சமைக்கவும் எனக்குக் கிடைத்திருப்பது வீடென்றபோதில் பேறுதான்.

 
 வீட்டுக்குக் குடிவந்த மூன்றாவதுநாளில் மெத்தைக்கும் கட்டில் விளிம்புக்கும் இடையில் கிடந்த ஒரு கொப்பியை எடுத்து விரித்தபோது முதற்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தது; ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்.

 
நான் குடியிருக்கும் வீட்டுக்கு நேரே கீழ் வீட்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். காதலர்களோ அல்லது திருமணம் முடித்து இருப்பவர்களோ தெரியவில்லை. களையான அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஒருமென்மையான சிரிப்பு இருக்கும். அனேகமாக அவர்கள் இருவரும் சம வயதுடையவர்களாக இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் என்னைக் கடக்கும்போது மட்டும்தான் மெல்லியதாகப் புன்னகைப்பதைக் கண்டுகொண்டேன்.

 
எனக்கும் அந்தப் பெண்ணைக் பார்க்கையில் பெரியம்மாவின் மகள் அமுதா அக்காவின் நினைவுகள் தான் வரும் . அவளைப் போலவே  ஒற்றைநாடி உடல். மெல்லிய கழுத்து. நடக்கும்போதும், திரும்பும்போதும் எந்த ஒரு அதிர்வுமில்லாமல் இலகுவாக திரும்புவது என இந்தப் பெண், எனக்கு என் ஒன்றுவிட்ட அக்காவை நினைவூட்டிக் கொண்டிருந்ததால் நானும் பதிலுக்கு சிரிப்பதுண்டு. என்றாவது ஒருநாள் அமுதா அக்காவின் போட்டோவினை அவளுக்குக் காட்டவேண்டும் என்றும் நினைத்ததுண்டு.

 
 ஒருநாள் மதியம், மெதுவாக  வீட்டுக்கதவினைத் தட்டும் ஓசைகேட்டது.  பூனைமாதிரி சப்தமில்லாமல் நடந்துசென்று கதவின் துளையூடாகப் பார்த்தேன். தலையை துணியினால் சுற்றி மொட்டாக்கு போட்டபடி கீழ்வீட்டில் வசிக்கும் பெண் பதற்றத்துடன் நின்றாள். கணநேர சிந்தனையின்பின் கதவினைத்திறந்தேன். சடாரென உள்ளே நுழைந்த அவள், கதவை மெல்லியதாக சாத்தி விட்டு கையில் இருந்த ஒரு பெரிய பையை இங்கே வைக்கமுடியுமா என்று கேட்டாள். நாளை காலை தான் வந்து எடுத்துக்கொள்ளுவதாகவும் அதுவரை கவனமாக வைத்திருக்கமுடியுமா என்றும் கேட்டாள். என்னை மீறி தலையை ஆட்டினேன்.

 
வீட்டின் வரவேற்பறையில் ஓட்டப்படிருந்த காலம் தந்த தலைவன் என எழுதியிருந்த பிரபாகரனின் படத்தையும், அருகிலேயே இருந்த  கேர்ணல் பருதியின் மாலைபோட்ட படத்தையும்பார்த்தவள், தன் மார்பில் கைவைத்துவிட்டு, எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு "நீ செய்யும் இந்த உதவிக்காக நன்றி நன்றி" என்று பல தடவைகள் கூறினாள். சட்டென்று அவள் சப்தமில்லாமல் சென்றுவிட, கனம் மிகுந்த அந்தப் பையை இழுத்துச்சென்று கட்டிலின் கீழ் தள்ளி வைத்தேன். கீழ்வீட்டில் இரண்டு நாள்களும் புதிய புதிய மனிதர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள்.

 
சில நாள்கள் கழிந்த நிலையில், இணையத்தளமொன்றின் தமிழ் செய்தியில், கீழ்வீட்டில் வசித்த பெண்ணின் படத்துடன், பாரிஸின் புளோமினில் என்ற புறநகர்ப் பகுதியில்  யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,உள் முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்றும் கொலையாளிகளை தேடிவருவதாகவும் காவல்துறை அறிவித்திருப்பதாக இருந்தது.  திகைப்புடன் படத்தினைப் பார்த்தேன்.  எழுந்துசென்று அவள் கொண்டுவந்துதந்திருந்த பையை இழுத்தெடுத்துத் திறந்தேன். அதற்குள் அப்துல்லா ஒச்சலானின் புகைப்படங்களும்,  பல குறிப்புப் புத்தகங்களும் அந்தப்பெண்ணின் அல்பம் ஒன்றும் பாஸ்போட்,  வங்கி அட்டை மற்றும்  இன்னும் பல ஆவணங்களும்கிடந்தன. அல்பத்தினை புரட்டியபோது இராணுவ உடையில் மிக அழகான புன்னகையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள்.

 
என்னையறியாமல் எனது விரல்கள் அந்தப் புகைப்படத்தை வருடின. எழுந்து எனது நாட்குறிப்புப்புத்தகத்திலிருந்து அமுதா அக்காவின் படத்தினை எடுத்தேன். அமுதா அக்காவும் அதேபோன்றதான ஒரு சீருடையில் அதேபோன்றதானதொரு புன்னகையுடன்  நின்றிருந்தாள்.

 
அவர்கள் 

 
அவர்கள் யாருமல்ல, எனது மொழி பேசுபவர்கள்தான். எனது இறைவனை வணங்கியவர்கள்தான். எனக்கும் - அவனுக்கும் -  அவர்களுக்கும் இடையில் இடைவெளியேதும் இருந்ததில்லை. மொழியில் நிறத்தில் மாறுபட்டிருந்ததுமில்லை.  ஆனால் அவர்கள் கொல்லத் தூண்டினார்கள்.  ஏனென்றால் அவர்களிடம் ஆயுதம் இருந்தது. ஆயுததாரிகளின் சிநேகத்தால் ஊட்டப்பட்ட தைரியம்  இருந்தது. கொலை ஒன்றை சிநேகிப்பதற்கான மனதும் இருந்தது.

 
முதல் முறை வாசிகசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்கள். இரண்டாம் முறை கூட்டத்தினை நடாத்த  உதவிசெய்தார்கள். மூன்றாம் முறை கூட்டத்தினை நடாத்தினார்கள். முதல்முறை மக்களுடன் இருந்தார்கள். இரண்டாம்முறை ஒரு குழுவாக இருந்தார்கள். மூன்றாம்முறை எல்லாவற்றிலிருந்தும் விலகி அப்படியாகிய எல்லாவற்றிக்கும் மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள்.

 
அவர்கள் முதலில் மக்களிடம் உணவு கேட்டார்கள். இரண்டாம்முறை ஆடுமாடுகளை பிடித்துச் சென்றார்கள். மூன்றாம்முறை நகை, பணம், கார், சைக்கிள் என கிடைப்பதை எடுத்துச்சென்றார்கள்.

 
முதல் தடவை மக்கள்  பேசினார்கள். பின்  முனுமுனுத்தார்கள்,  இறுதியாக மௌனித்தார்கள். ஆனாலும் தமக்குள் பேசிக்கொண்டார்கள் "இது ஒன்றும் மேலிடத்திற்கு தெரியாது. இவங்கள் இங்கை இருக்கிற சில்லறயள பிடிச்சுக்கொண்டு துள்ளுகினம். ஒருக்கால் அறிவிச்சால் காணும்". மக்கள் நம்பினார்கள். நம்பிக்கையோடிருந்தார்கள். பின்னொரு நாளில் துணைப்படை அணிவகுப்பில் அவர்களைப் பார்த்தபோது அவர்களே  பெருமூச்சுடன் தலைகுனிந்தனர்.

 
எங்கும் யுத்தத்தின் வேர்கள் மீண்டும் உயிர்த்தன.  பின் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைபோல இறுக்கத்தொடங்கியது. நாட்டின் எந்த ஒரு மூலையிலும் எந்த நேரத்திலும் என்னவும் நடந்துவிடக்கூடும் என்ற அச்சம் மிகுந்திருந்தது. எல்லவழிகளும் துண்டாடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் யாழ்குடா நாட்டில் குறிகாட்டிகளை  வைத்துக் கொலைசெய்யத்தொடங்கினர்.

 
அவர்களில் சிலர் இராணுவத்துடன் நட்பாகினர். சிலர் மக்களிடம் போர்க்கால நிதி என்று மிரட்டிப்பெற்ற பணத்துடன் தலைமறைவாகினர். பணத்திற்காக, அனைத்தையும் துறந்து சிலுவை சுமந்தவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள்.  மிஞ்சியோரில் சிலர் கொல்லப்பட்டனர்.

 
அவன் 

 
இராணுவத்தால்  நீ கொல்லபடக்கூடும், எதற்கும் நீ  போறது நல்லம் மச்சான் அவங்கள் வேற உவங்களோட திரியுறாங்கள் - இதுதான் அவன் இறுதியாக எனக்குச் சொன்ன வார்த்தை. அன்று மாலை கிரவுண்டில் இருந்து திரும்பும் போதும் இப்படித்தான் கூறினான். எனக்கும் காரணம் தெரியும்.  அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே செய்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நிச்சயம் இதனைச் செய்வார்கள் என்பதை அவன்  ஊகித்தே இருந்தான்.

 
எனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. அவனின் காதல் கடித்ததைக் கூட அவன் சொல்லச்சொல்ல எழுதி இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவனுடன் துணைக்குச் சென்றும் இருக்கிறேன். நான் செல்லும் திசை குறித்த கேள்விகள் நிறைய அவனிடம் இருந்தது. சிலவற்றை கேட்டும் இருக்கிறான்.

 
ஆரம்பம் முதலே அவர்களின்  நடடிக்கைகள் குறித்த அச்சத்தை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தவன், இப்போது அதிகம் என்னைத் திட்டவும் தொடங்கி இருந்தான். அப்போதெல்லாம் எல்லாம் சரி வரும், வடிவா பழகுவினம் என்று சிரித்த நான் இப்போது மௌனமாகவே இருக்கத் தொடங்கியிருந்தேன்.

 
எனது மௌனிப்பு கையறுநிலை தான் என்று தெளிவாக புரிந்துகொண்டு பேசாமல் இருப்பதும்,  எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தரப்படுவதுமாகவே அவனது பொழுதுகள் இருந்ததன.

 
அவனுடன்  பிறந்தவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட, தாய் தந்தையர் தனித்துப் போவார்கள் என்று அவர்களுடனேயே இருந்தவன். கல்லூரி முடித்து வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தான்,கிடைக்கும் முதல் வேலைக்கே செல்வது என்றும், பிற்காலத்தில் ஒரு சிறுவர் இல்லம் மற்றும் பெரியதொரு பண்ணை அமைக்கவேண்டும் என்றும் தன் கனவுகளை எப்போதாவது தன்னை மீறிச் சொல்லுவான்.

 
அந்த இரவின் ஆரம்பப் பொழுதில்,  அவனைப் பேர் சொல்லி அழைத்தவர்களுடன் அவர்களும் வந்திருந்தார்களாம். அவனை அழைத்து எனது வீட்டுக்கு போகவேண்டும் தங்களுடன் கூட வரும்படி அழைத்தார்களாம். விளக்குடன் வந்த தன்னை  "ஒன்றுமில்லை, நீங்கள் போங்கோ அம்மா இவன் இப்ப வந்திடுவான்" என்று அவர்களில் ஒருவன்தான் சொன்னானாம். அப்படிச் சொன்னவன் சிலகாலத்திற்குமுன் தினமும் வீட்டுக்கு வந்திருந்தவன் என்பதால் தான் உள்ளே சென்றுவிட்டதாக அம்மா பின்னொருநாளில் சொன்னாள். அப்படிச் சொன்னவனுக்கு, முன்பொருநாள்  தான் கடும்புப்பால் காய்ச்சி காவலிருந்து கொடுத்ததைச் சொன்னபோது ஓங்கி அழுதிருந்தாள்.

 
 அவன்  மறுத்திருக்கிறான். அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உரையாடல் நீண்டுவலுத்த அந்தவேளையில் எழுந்த வெடியோசை எனது வீட்டின் சுவர்களில் எதிரொலித்தபோது நான் எனது வீட்டில் அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டேன்.

 
************************************************************

 
 
மேல் வீட்டில் ஒரு மனிதன் தனித்து  இருப்பதாகவும், அவன் சிலசமயங்களில் கூச்சலிடுவதாகவும், "கொண்டுட்டாங்கள், கொண்டுட்டாங்கள் என்று அழுவதாகவும், ஆனால் அநேகமான வேளைகளில் தலைகுனிந்தபடி எல்லோரையும் கடந்துபோவதாகவும் அந்த மனிதரால் இதுவரை ஒருவருக்கும் பிரச்சனை வந்தது இல்லை என்றும் கீழ் வீட்டில் புதிதாக குடிவந்தவர்கள் என்னைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் ஒருநாள் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டேன்.

 
இன்னொருநாள் தபால்பெட்டிக்குள் இருந்து கடிதங்களை எடுத்தபோது எப்போதோ தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு  இயக்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான துண்டுப்பிரசுர அழைப்பிதழ் கிடந்தது.

 
இன்னொரு நாள், தமிழர் இனப்படுகொலைக்கு  நீதிகேட்கும்பேரணி, ஐநாவே பதில் கூறு என்ற இரு தலைப்புக்களில் தமிழிழுலும் பிரெஞ்சிலும் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இருந்தது.

 
அன்றைய தினமே, குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக  உதவிசெய்வதாகவும் அதனாலேயே அவர்களின் தாக்குதல் பலம் அதிகரித்திருப்பதாகவும் இணையச்செய்தி ஒன்றில் வாசித்தேன்.

 
உலகளாவிய  பெருந்தமிழ்தேசியத்தை அமைக்க முன்வாருங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் பிரான்ஸ் என்ற அமைப்பினரால்  உரிமை கோரப்பட்ட தனியான கடிதமொன்று கதவின் கீழ்இடுக்கினூடாக இன்னொருநாளில் தள்ளப்பட்டிருந்தது.

 

 

இன்று, கடந்த மூன்றுநாள்களாக அலைவுறும் அவாந்திர மனநிலையோடு மாடியில்இருந்து சூரியன் மறையும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்குவானம் அமைதியாக இருளடையலாயிற்று. வரவேற்பறை சுவரில் இருந்த  படங்களைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் மீண்டும் கதவு தட்டப்படும் என்ற அச்சம் எழலாயிற்று. விரைந்து சென்று அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த உடுப்புக் குவியலுக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினேன்..



நன்றி;  புதியசொல் சஞ்சிகை 
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதுவது எனத் தெரியவில்லை:unsure:...உங்கள் எழுத்து நன்றாக மெருகேறி உள்ளது:mellow:...வேற எங்கேயாவது எழுதிப் போட்டு அதை யாழில் மறக்காமல் கொண்டு வந்து போட்டதிற்கு நன்றிகள்:rolleyes:

  • தொடங்கியவர்
On 2/23/2017 at 0:15 AM, ரதி said:

வேற எங்கேயாவது எழுதிப் போட்டு அதை யாழில் மறக்காமல் கொண்டு வந்து போட்டதிற்கு நன்றிகள்:rolleyes:

அக்கா ஒரு அச்சு ஊடகத்திற்கு அனுப்புவம் என்ற நினைப்பில் அப்படி செய்தது.... மன்னிக்கணும் 

யாழ் இணையம் என்னை அடையாளப்படுத்திய ஒரு தளம் இதனை எப்பவும் மறப்பதில்லை. 

நன்றியும் அன்பும் அக்கா 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது கதை. இன்றுதான் பார்த்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.