Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சொல்ல… வா…

Featured Replies

காதல் சொல்ல… வா… – சிறுகதை

 

139315979915059873761753512486sirukathai.jpg

கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முயற்சிக்கவில்லை.  அது தற்செயலான சம்பவம்தான் அவனைப் பொருத்தவரை. எதேச்சையாக கல்லூரி வளாகத்தினுள் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் தெரிந்தவர்கள் என்பது போல் ஒரு பரஸ்பர புன்னகை பரிமாற்றம். அத்தோடு சரி.  அந்த ஆண்டும் முடிந்துவிட்டது.  மூன்றாம் ஆண்டுதான் கல்லூரியில் நடந்த, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என அனைத்திலும் அவனுக்கு ஈடாக மேடையேறி நின்றாள். பெயரைத் தெரிந்து கொண்டான். குழலி. நல்லாத்தானிருக்கிறது. மனதுக்குள் சொல்லிக் கொண்டான். சந்திக்கும் இடங்களில் ஒரு “ஹலோ.. ஹவ் ஆர்.. யூ..” மேடையேறிவிட்டால், வெல்லப்போவது நீயா? நானா? போட்டிதான் நிறைந்திருந்தது அவர்களுக்குள். கல்லூரி நாட்களின் கடைசி நாளில்தான் கை குலுக்கிப் பிரியும் போது தெரிந்து கொண்டான் அவளது முழுப் பெயரையும். “வண்டார் குழலி” என்பதை.

வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில், நினைப்பதும் நடக்கிறது. நினைக்காததும் நடந்து விடுகிறது.

நகரின், பிரசித்திப் பெற்ற வணிக நிறுவனமாய் இருந்தது அவனது தந்தை முருகுவேள் நடத்திக் கொண்டிருந்த அந்த நிறுவனம். நிறுவனத்தில் அமர்ந்து, வளவனின் தந்தை முருகுவேள் தன் தொழிலை, கவனித்துக் கொண்ட நேரத்தைவிட.  சங்கம்.. தேவையென தேடிவந்து கேட்பவர்களுக்கு தாராளமான நிதி உதவி, பள்ளி.. கல்விகளுக்கு தேவையானது.. இலக்கியவாதிகளுக்கு விருது வழங்குதல், அனைத்து அரசியல் வாதிகளிடமும் அதீத நெருக்கம், உள்ளூர் பத்திரிக்கைகளும், சேனல்களிலும் தான் கொண்டாடப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் முருகு. பங்கு சந்தை வீழ்ச்சி.. கடன் சுமை.. கொடுத்தவர்களின் அழுத்தம்… இரவோடு இரவாக உறவுகளும்.. நட்புகளும் எளிதாக அறிந்து கொள்ளமுடியாதபடி, கண்ணுக்கெட்டாத  தொலைவில் வளவனின் குடும்பம் புலம் பெயர்ந்தது.

மேல்படிப்பு கனவிலிருந்தவனுக்கு, குடும்பத்தை சுமக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி தந்திருந்தது வாழ்க்கை. பெரிய காரில், எப்போதும் பத்து பதினைந்து சக மனிதர்கள் என வலம் வந்த தந்தை முருகுவேள், முடக்கு வாதம் வந்தவன்போல் வீட்டுக்குள் முடங்கி கிடந்ததை  பார்க்கும் போதேல்லாம், “எப்படி வாழ்ந்த மனிதர் இப்படி விழுந்து கிடக்கிறாரே” என்ற கவலைதான் வரும் அவனுக்கு. விதியோ?

மதியோ? நிலைகுலைந்து போன குடும்பத்தை கரை சேர்க்க வேண்டும். தந்தையின் தொழில் அறிவு. தனயனின் உழைப்பு, களத்தில் இறங்கினான் வளவன்.

ஆயிற்று... வருடங்களும் ஆறு... ஏழுயென.. பழைய நிலை மீண்டு வரவில்லை என்றாலும், பஞ்சத்திலிருந்து மீண்டும் வந்து விட்டது குடும்பம்.

திருநெல்வேலியின், ஈரடுக்கு திருவள்ளுவர் மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருக்கும் போதே, வளவனின் மனதுக்குள் பழைய நினைவுகள். தாமிரபரணியாற்றின் நீரலைகளின் தடவலாக. தந்தை முருகுவின் தரிசனத்திற்காக உதவி வேண்டி வந்தவர்கள் காத்து கிடந்த அந்த நாள் நினைவுகள். விழிகளின் ஓரத்தில் கசிந்த நீர்த்துளிகள்… டிரைவர் பார்க்காத வண்ணம் துடைத்துக் கொண்டான் வளவன்.

காலை நேரத்து பனிக்காற்றின் மெல்லிய வருடல். அந்த நேரத்து மன நிலைக்கு மருந்திடுவது போலிருந்தது. தொலைவில் நெல்லையப்பர்

கோவில் கோவிலின் கோபுரம் நியான் ஒளி வெளிச்சத்தில். “டிரைவர், இங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சன்னதியைக் கடக்கும்வரை, எவ்வளவு மெதுவாக போக முடியுமோ அப்படி போனால் போதும். இப்போது போக்குவரத்து நெருக்கடி எதுவும் இல்லைதானே?” என்று சொன்னவனை, கூர்ந்து கவனித்த டிரைவர், பிறகு என்ன நினைத்துக் கொண்டாரோ.. ''சரிங்க தம்பி...'' என்றபடி காரின் வேகத்தைக் குறைத்தார்.

சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு, காந்தி சிலையின் பக்கம், ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, மலரும் நினைவுகளோடு வீதியின் இரு திசைகளிலும் பார்வையை ஓடவிட்டவன் மனதில் ஏக்கம் குடிபுகுந்தது. “பரவாயில்லை.. நம்ம நெல்லை மக்களுக்கும் உடல் நல பராமாரிப்பில் அக்கறை வந்திருக்கிறது. இல்லையென்றால், இந்த அதிகாலை நேரத்தில் ஆண்களும்.. பெண்களும்.. இத்தனைக் கூட்டம் கூட்டமாக நடைபயிற்சியில் ஈடுபட்டிருப்பார்களா?” தன்னைக் கடந்து செல்பவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

அது ஒரு கனாக் காலம். எவ்வளவு அழகானது.  அப்பாவின் புகழ் வீச்சால் பஜாரில் எங்கே நின்றாலும், தெரிந்தவர்கள் தெரியாதவர்களென எல்லா மனிதர்களும் நலம் விசாரித்ததும், காபி சாப்பிடுங்களேன் என உபசாரித்ததும். இங்கேதான் காரியமாணிக்கப் பெருமாள் கோவில் தெருவில் தன் வீடு இருப்பதாக, அவனிடம் குழலி சொன்னதாக ஞாபகம். அவளிடமிருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே போய் காலம் எத்தனை ஆயிற்று. அவளுக்கும் தனக்குமிடையே இருந்த பழக்க வழக்கமே முழுமையானது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சக மாணவர்களில் ஒருவனாகவும், பல நேரங்களில் சக போட்டியாளர்களாகத்தான் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்கள். குழலி, படிக்கிற காலத்தில் நல்ல படித்தவள். எதிலும் துடிப்பாக இருந்தவள். எதாவது போட்டித் தேர்வு எழுதி நல்ல வேலையில் அமர்ந்திருப்பாள். திருமணம்கூட ஆகியிருக்கும். ஒன்றோ… இரண்டோ குழந்தைக்கு தாயாகியிருப்பாள். மீண்டும் அவளை சந்திப்பது சாத்தியம்தானா? சந்தர்ப்பம் வாய்க்குமா? தனக்குத்தானே கேட்டுக் கொண்டான் வளவன்.

நீண்ட நாளைக்குப் பின், வளவனுக்குள் ஒரு ஏக்கம் வந்திருந்தது. இரவோடு இரவாக இங்கிருந்து புலம் பெயர்ந்து, நசிந்து கிடந்த குடும்பத்தையும் இந்தக் காலங்களில் சற்று நிமிர்த்தி வைத்தாகி விட்டது. இனி, ஒன்றிரண்டு நாட்களாவது, வாழ்ந்த மண்ணிலும், வாழ்ந்த நண்பர்களோடும் மீண்டும் வலம் வரவேண்டுமென்ற ஆசை. அவனது இந்த பயணத்தின் நோக்கமும் அதுதான். திருநெல்வேலிக்குச் செல்வதாக அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். பழைய நண்பர்களை இனிதான் தேடி கண்டு பிடிக்க வேண்டும். யாரேனும் ஒருவர் கிடைக்காமலா போய் விடுவார்கள் என்பது அவனது நம்பிக்கை. அதனால்தான் அன்று நண்பர்களோடு கூடி கும்மியடித்து தேர் இழுத்து உல்லாச பறவைகளாய் ஊரைச் சுற்றிய  அந்த நினைவுகளோடு வளவன் காரைவிட்டு இறங்கி அங்கு நின்று கொண்டிருக்கிறான். காலையிலேயே குளித்து பூச்சூடி.. திருநீற்று கீற்றுகளும்.. குங்கும தீற்றல்களுமாய் பளீச்சென்று சந்தி விநாயகனைத் தரிசிக்க வரும் நம்ம ஊர் பெண்களைப் பார்க்கும் போது, எதிர் மறையாக, அலுவலகம் செல்லும் பரபரப்பு, ஆட்டோவுக்குள் பிள்ளைகளை திணித்து வைத்து, பிரஷ் செய்து அனுப்பும் அப்பா அம்மாமார்கள் என தினத்துக்கும் பார்த்து.. பார்த்து, பழகி, என்ன இயந்திர வாழ்க்கையோ இதுவென அலுத்துப் போயிருந்தவனுக்கு, இந்த காட்சிகள் ஒரு புத்துணர்வைத் தந்தது.

மனதை எங்கெங்கோ சுழலவிட்டப்படி, தன்னை மறந்து நின்று கொண்டிருந்தவனை, அந்த குரல் தான் சுயஉணர்வுக்கு கொண்டுவந்தது. “ஏய் வளவன்… இங்க என்ன செஞ்சுகிட்டிருக்கே..” உற்சாகத்துடன் பழக்கப்பட்டதாய் குரல் இருந்தது. கேட்ட திசையில் பார்த்தான். குழலி… வண்டார் குழலியேதான்.

“ஓ..! வாட் எ சர்ப்ரைஸ். யா..” வளவனும் மெலிதாக சிலிர்த்துக் கொண்டான். சற்று முன்தான் பார்க்க முடியுமா? என்று தனக்குள் கேட்டுக் கொண்டவனைத் தேடிவந்து  காட்சித் தரும் தேவதையாய் நின்று கொண்டிருந்தாள் குழலி.

“ஆமா.. நீ எங்க இந்த காலை நேரத்தில்…”  பூஞ்சிரிப்பை மலர்த்தினாள் குழலி.

தான் இப்போதிருக்கும் நிலை. திருநெல்வேலி தேடி வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படையாக எந்தவித போலி பூச்சுகளும் இல்லாமல் சொன்னான் வளவன்.

“அவ்வளவுதானே.. என் வீடு இருக்கு. என்ன காரை விடத்தான் தனியாக இடம் கிடையாது. தெருவில் வீட்டு வாசலில்தான் விட வேண்டும்… அத பார்த்துக்கலாம்…கிளம்பு.. கிளம்பு…” உற்சாகத்துள்ளல் நிறைந்து காணப்பட்டாள் குழலி.

இறைவனின் நாடகமா? ஏற்பாடா? பின் இணைப்பா…

வீட்டுக்குள் வேற்று மனிதர்களின் நடமாட்டமோ.. வாசமோ இருப்பதாகத் தெரியவில்லை. சின்னதாக இருந்தாலும் அத்தனை நேர்த்தியாக ஒவ்வொரு பொருளும் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது. வாசலில் வண்ண கோலம்… துளசி மாடம்… அந்தக் காலத்து பழமையை நினைவுபடுத்தினாலும்… மனசுக்கான நிம்மதியை அந்த வீடு சுமப்பதாகவே தெரிந்தது. வந்ததுமே குழலிக் குறித்து கேட்க வேண்டாம் என்று கருதியவன் அமைதியாக இருந்தான். “டிரைவர் அண்ணா! கொல்லைப் புறமாய் போனால் குளித்து விடலாம். சீக்கிரம் வாங்க.. சுடச்சுட… சாப்பிடலாம்.. இப்போதைக்கு இட்லியும் சட்னியும்தான்.” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் குழலி. கூடத்துக்கும், சமையல் கட்டுக்குமாய் விறுவிறுவென்று சுழன்று கொண்டிருந்தவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வளவன்.

குழலியின், அப்பா அம்மாவின் மரணம். அதன்பின், மனைவிச் சொல்லே மந்திரமென நடந்து கொண்ட உடன்பிறப்புகள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, போனால் போகட்டும் இந்த சிறிய வீட்டை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். ''வாழப் பயந்தவனுக்கு பக்கத்தில் பத்துபேர் இருந்தாலும் பயம் போகாது. துணிந்தவனுக்கு எதுவும் தேவையில்லை. அவர்களின் துணிவே போதுமானது.'' குழலி விசயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

பிறந்து வளர்ந்த ஊர். இந்த மண்ணில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் எனக்குத் தெரியும். அவைகளுக்கும் என்னைத் தெரியும். பின் நான் பயப்படவேண்டும். பக்கத்திலிருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியை. மாலையில் பத்து பதினைந்து பிள்ளைகளுக்கு டியூசன் மிஸ். கள்ளம் கபடமற்ற அந்த பிஞ்சு மழலைகளுடன் ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கழிந்து விடுகிறது. பிறகு எனக்கென்ன கவலை?  கல்யாணமாகியிருந்தால் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கு மட்டுமே அம்மாவாக இருந்திருப்பேன். இப்ப எத்தனை குழந்தை செல்வங்களுக்கு அம்மாவாக தெரிகிறேன் பாருங்கள். சொல்லிவிட்டு கலகலவென சிரிக்கும் குழலியைப் பார்க்கும் போது, வளவன் நினைத்துக் கொண்டான், அன்று மேடையில் துணிச்சலான கருத்துக்களைச் சொல்லும் போது மட்டுமல்ல, இன்று, நிஜ வாழ்க்கையிலும் குழலி துணிச்சலான பெண்தான்.

எதோ ஒரு வேலையின் பொருட்டு குழலி வெளியே சென்றிருந்தாள். எதாவது புத்தகங்கள் கிடைத்தால் பொழுதை கழிக்கலாம் என்ற நினைப்பில் வளவன் தேட ஆரம்பித்தான். மரப்பீரோவில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த டைரிகள். கதவை சற்று விசையாக இழுத்தபோது வரிசையிலிருந்து ஒரு டைரி கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தான். அது, அவர்களின் கல்லூரி காலத்தின் கடைசி வருடத்திற்கானது. அனிச்சையாக ஒரு பக்கத்தை திருப்பினான். கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் அவர்கள் இருவரும் கலந்து கொண்டதையும், முதல் பரிசு அவளுக்கு கிடைத்திருந்த போதும், வளவனின் கவிதைவரிகள் கொண்டிருந்த சிறப்பை பாராட்டி அந்த வரிகளை  சிலாகித்தும் எழுதியிருந்தாள். தொடர்ந்து அவள் இப்படி எழுதியிருந்தாள், “வளவன் என் போட்டியாளன்தான். ஆனால், பொறாமைக்காரனில்லை. வஞ்சமும் இல்லை. வழிதலும் இல்லை.” இதுபோதும் எந்த பெண்ணுக்கும் அவனை பிடித்துவிட.”  டைரியின் கடைசி இரண்டு பக்கங்கள் முழுவதும் வளவனைப் பற்றியே குறிப்பிட்டிருந்தாள் குழலி.

''கல்லூரி முடிந்த பின் உன்னை நான் இதுநாள் வரை மீண்டும் காணவில்லை. இப்பவெல்லாம் உன்னை அடிக்கடி பார்க்க ஆசைப்படுகிறேன். கேள்விப்படுகிறேன். வியாபார நொடி. வேறு இடம்தேடி குடும்பம் நகர்ந்துவிட்டதாக. நம்புகிறேன். நீயும் நானும் ஒரு நாள் கண்டிப்பாக சந்திப்போம். அப்போது, கொஞ்ச நாட்களாகவே நான் உன்னிடம் சொல்லத்  தவித்த, சூழலால் சொல்ல தவிர்த்த அந்த ஒற்றைச் சொல்லை நிச்சயம் சொல்லுவேன். நான் நிச்சயம் காத்திருப்பேன். காலம் காத்திருக்குமா?''

ஊர் திரும்பும் நேரம். காரின் பின் இருக்கையில் அமர்ந்தவன் பக்கமாய் வந்து நின்றாள் குழலி. அவளைப் பார்த்து சிரித்தபடியே கூறினான் வளவன், “குழலி! இப்போதாவது சொல்லலாமா அந்த ஒற்றைச் சொல்லை…” நாணம் படர கால்விரல்களால் தரையில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் அந்த நவநாகரீக நங்கை.

http://www.dinamalarnellai.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.