Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

Featured Replies

தென்னிந்திய தலைவராக முயல்கிறாரா கமல்?

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தனது அரசியல் கட்சியின் விவரத்தை நேற்று வெளியிட்டார் கமல் ஹாசன். ஆறு கைகள் ஒன்றோடொன்று பிடித்துக் கொண்டிருப்பது போலவும் அதன் நடுவில் நட்சத்திரம் ஒன்று இருப்பது போலவும் உள்ள கொடியை தனது கட்சிக் கொடியாக அறிமுகம் செய்தார்கமல்.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

கட்சியின் கொடி மற்றும் பெயர் காரண விளக்கமளித்த கமல் ஹாசன், ஆறு கைகள் தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களை குறிக்கும் என்றும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும் என்றும் கூறினார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்?

பிற மாநிலங்களில் அரசியல் தடம் பதிக்க முயல்கிறாரா கமல்? அல்லது திராவிட நாடு என்ற கொள்கையை முன் வைக்கிறாரா என பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.

"சி்றுபிள்ளைத்தனமான செயல்"

"இது வழக்கம்போல் குழப்பமானதாகவே உள்ளது. திராவிட கொள்கையை மீண்டும் உயிர்பிப்பது சாத்தியமற்றது. திராவிடம் என்று பேசுவது தமிழ்நாட்டில் முடிந்து போன ஒரு விஷயம். கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்கள் சென்னை மாகாண காலத்திலேயே திராவிடம் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதில்லை. ஆகவே, இன்று திராவிடம் என்ற அடையாளத்தின் மூலம் அதை ஒன்று சேர்ப்பது ஒருவித சுய ஏமாற்றுதனமாகத்தான் இருக்கும்" என தெரிவிக்கிறார் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி கட்சியை நடத்த வேண்டும் என்றால் அனைத்துக்கு பொதுவாக கட்சியின் பெயரையும் வைத்திருக்க வேண்டும். பொதுவாகவே அவர் குழப்பவாதியாக இருக்கிறார் என்பதன் அடையாளமாகதான் இது உள்ளது என்கிறார் செந்தில்நாதன்.

தமிழகத்தை தாண்டி காலூன்ற நினைக்கிறாரா கமல்?

"ஒரு கட்சியை அகில இந்திய அளவில் தொடங்குவதில் தவறில்லை ஆனால், ஒரு கொடியில் உள்ள சின்னம் ஆறு மாநிலங்களையும் குறிக்கும் என கமல் கூறியது சிறுபிள்ளைத்தனமான செயலாகத் தான் தோன்றுகிறது"என்கிறார் செந்தில்நாதன். மேலும் இது ஒரு அரசியல் முதிர்ச்சியற்றதன்மையை காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

கொடியை பொறுத்தவரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது அவ்வகையில் திராவிடத்தை உணர்த்தும் விதமாக கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை பயன்படுத்தியது புரிந்துக் கொள்ள முடிகிறது ஆனால் கொடியில் கைகளை பயன்படுத்தியது ஒரு குழப்பத்தின் வடிவமாகவே பார்க்க முடிகிறது என்கிறார் செந்தில்நாதன்.

"அவகாசம் தர வேண்டும்"

எந்த ஒரு கட்சியும் தங்கள் மாநிலம், மாநிலத்தின் பிரச்சனை குறித்தே பேசுவார்கள், பிற மாநிலங்களை சேர்த்து இதுவரை யாரும் பேசியதில்லை என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி.

மொழி பிரச்சனைக்காக அந்த அந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததே, தவிர யாரும் ஆறு மாநிலங்களையும் இணைத்து குரல் கொடுத்தது இல்லை என்கிறார் அவர்.

 

ஆறு மாநிலங்களை இணைத்து பேசினால் அதிக உரிமை கோர கூடும் என்ற தொனி கமலின் பேச்சில் தென்பட்டது என்று கூறும் மணி, நதிகளை இணைக்க வேண்டும் என்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் கோருவதாக தனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் கமலுக்கு சிறிது நேரத்தை வழங்க வேண்டும். பின்பே, அவரின் அரசியல் பாதையை கணிக்க முடியும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மணி.

காவிரி சிக்கலை தீர்ப்பதற்கான வழி என்ன?

தமிழக மக்களின் பிரச்சனைகள், மத்திய அரசுடனான பிரச்சனைகள் ஆகியவற்றைக் காட்டிலும் மாநில ஊழலை மையப்படுத்திதான் அவரின் பேச்சுகள் இருந்தன எனவே, மாநில அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாடகவே அது தெரிகிறது எனவே கட்சிக் கொடி ஆறு மாநிலங்களை குறிப்பதாக கூறுவது குழப்பமான நிலைப்பாட்டையே காட்டுவதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் தியாகு.

"இந்திய தேசிய கட்சிகள் என்று கூறும் கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளாகத்தான் தங்களின் முடிவுகளை எடுக்கின்றன."

http://www.bbc.com/tamil/india-43151089

  • தொடங்கியவர்

இடதுமில்லை, வலதுமில்லை - மய்யம் கொண்ட கமல்

 
கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இடதுபக்கம் போகப்போகிறாரா, வலதுபக்கம் நகரப்போகிறாரா, திராவிடப் பாதையில் செல்லப்போகிறாரா என்று கமலஹாசனைச் சுற்றிப் பல கேள்விகள் சூழ்ந்திருக்க, "இடதுமில்லை, வலதுமில்லை, மையத்தில் இருப்போம்" என்று சொல்லி, "மக்கள் நீதி மய்யம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் கமலஹாசன்.

மதுரையில் வைத்து கட்சி தொடங்கிய கையோடு, கட்சியின் கொடியையும் அறிவித்து, நிர்வாகிகள் பெயர்களையும் வெளியிட்டிருக்கிறார். கூடவே, கட்சிக் கொள்கைகள் என சில அம்சங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். இந்த இடத்தில் கமலஹாசனையும் அவருடைய கட்சி, கொடி, கொள்கை பற்றியும் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

கமலஹாசன் கட்சிக்கொடி எப்படி இருக்கிறது?

மய்யம் என்ற பெயர் ஏன்? - கமல் ஹாசன் விளக்கம்

கருப்பு, சிவப்பு நிறங்கள் இல்லாமல் தமிழகத்தில் கட்சி தொடங்குவது விஷப்பரீட்சை எழுதுவதற்கு ஒப்பானது என்பதில் கமலஹாசனுக்கும் நம்பிக்கையிருக்கிறது என்பது அவருடைய கட்சிக்கொடியில் இருக்கும் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் வெளிப்படுத்துகின்றன. கொடியில் வட்டமாக இணைக்கப்பட்ட ஆறு கைகளும் நடுவில் நட்சத்திரமும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களையும் அதன் ஒற்றுமையையும் ஆறு இணைந்த கைகள் குறிப்பதாகச் சொல்கிறார் கமல்.

அண்ணா காலத்து திமுக முன்வைத்த திராவிட நாட்டைப் புதிய வார்த்தையில் சொல்கிறார் என்றும் புரிந்துகொள்ளலாம். அல்லது அண்ணா காலத்து "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" முழக்கத்துக்கு புதிய முலாம் பூசுகிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசை நோக்கி வலுவான உரிமைக்குரல் எழுப்ப ஆறு மாநிலங்களின் ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்த விரும்புகிறார் என்றும் சொல்லலாம். காவிரி நீர், முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுத்துவரும் நிலையில், கமலஹாசன் முன்வைக்கும் ஆறு மாநில ஒற்றுமை முழக்கம் என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கமலஹாசனின் கட்சிப் பெயர் எடுபடுமா?

மக்கள் நீதி மய்யம் என்ற பலரும் யோசித்திராத பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமலஹாசன். இதில் மய்யம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஒருகாலத்தில் கமல் நடத்திய பத்திரிகையின் பெயர், மய்யம். திராவிடம், கழகம், பொதுவுடைமை என்பன போன்ற ஏதேனும் ஒரு பதம் இருக்கும் என்றுதான் பலரும் கணித்தனர். ஆனால் அவரோ களத்தில் இருக்கும் கட்சிகள் பயன்படுத்திய சொல்லாடல்களத் தவிர்த்து விட்டு, மக்கள் நீதி மய்யம் என்று வைத்திருக்கிறார்.

மதுரை பொதுக்கூட்டத்தில் கமல் Image captionமதுரை பொதுக்கூட்டத்தில் கமல்

கட்சியின் பெயரோ, கட்சிப் பெயரின் சுருங்கிய வடிவமோ அல்லது ஆங்கிலச் சுருக்கமோ மக்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் வகையில் பெயர் வைப்பதுதான் பொதுவான வழக்கம். திமுகவும் அப்படித்தான், அதிமுகவும் அப்படித்தான், பாஜகவும் அப்படித்தான், புதிய தமிழகமும் அப்படித்தான். ஆனால் உச்சரிக்கச் சுலபமான மூன்று வார்த்தைகளைக் கொண்டதாகக் கட்சிப் பெயர் இருந்தாலும், மூன்றையும் சேர்த்து உச்சரிப்பதில் சற்று சிரமம் தெரிகிறது. கட்சிப் பெயரின் சுருங்கிய வடிவமும் கவரக்கூடியதாக அமையவில்லை.

ஆனாலும் கமலஹாசன் என்ற பெயரும் அவருடைய பிராபல்யமும் கட்சியின் பெயரை மக்கள் மத்தியில் கொண்டுசென்றுவிடும் என்றே தோன்றுகிறது.

ஏனென்றால், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பெயரும் அப்படித்தான் ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் அந்தப் பெயர் எடுபட்டு விட்டது. அதற்குக் காரணம், கட்சியின் பெயரில் திராவிடமும் கழகமும் இருந்தது. கமல் கட்சியின் பெயரில் இரண்டும் இல்லை.

கட்சியின் கொள்கை என்ன?

கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்படத்தின் காப்புரிமைTWITTER Image captionகட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

ஆரம்பகாலம் முதல் தன்னை ஒரு கொள்கையாளராக அடையாளப்படுத்தியவர், திராவிடம் பற்றி நிறைய பேசியவர், தனது சித்தாந்தத்தைத் திரைப்படத்திலும் வெளிப்படுத்த விரும்பியவர் என்ற அடிப்படையில் கமலஹாசனின் கட்சிக்கொள்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

விந்திய மலைக்கு இந்தப் பக்கம் இருக்கும் தென்னிந்தியா சுயமரியாதை இந்தியா என்று பேசி பெரியாரிஸ்டுகளை உற்சாகப்படுத்தினார். திராவிடம் என்றும் நிலைத்து நிற்கும் என்று சொல்லி திமுகவுக்குத் தெம்பூட்டினார். கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியதைக் கம்யூனிஸ்டுகள் கொண்டாடித் தீர்த்தனர். திடீரென கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தார். ஆகவே, அவருடைய கொள்கை எப்படியாக இருக்கும் என்று யாராலும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கட்சி தொடங்கும் நாளன்று கொள்கைகள் முக்கியமல்ல, செயல்திட்டம்தான் முக்கியம் என்று பேசினார். அதுவே ஒரு விவாதப்பொருளாக மாறிய நிலையில், கட்சி தொடங்கும் விழாவில் பேசிய கமல், தன்னுடைய கட்சியின் கொள்கைகள் என்று சில அம்சங்களைப் பட்டியலிட்டார்.

என்ன செய்ய போகிறார் கமல்?

ஊழல்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதால் அதை ஒழிப்பதற்கே முன்னுரிமை என்று பேசினார். ஊழல் ஒழிப்பு முழக்கம் என்பது ஜெயப்ரகாஷ் நாராயணன் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகின்ற விஷயம்தான் என்பதால் கமலின் இந்த முழக்கத்துக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஈர்ப்பு இருக்கும் என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நல்ல தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்கப் பாடுபடுவேன் என்றார். சாதிமதம் அறவே நீக்கப்படும் என்றார். ஊழலை ஒழித்தால் மின்சாரம் வருமென்றார். இலவசம் கிடையாது என்றார். மக்களுக்கு ஸ்கூட்டர் தரமாட்டேன், மாறாக, மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றார். இன்னும் இன்னும் பல விஷயங்களைச் சொன்னார். இவை எல்லாமே பொதுவான அம்சங்கள்தான்.

இந்தக் கொள்கைகளைச் சொல்லாத ஒரு கட்சி தமிழகத்திலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை. ஆனாலும் கமல் முன்வைத்த அம்சங்கள் நல்ல அம்சங்கள். இங்கே கேள்வி என்னவென்றால், கொள்கை என்று சொல்லிவிட்டு, செயல்திட்டங்களைத்தான் சொன்னார். கொள்கை பற்றிப் பேசும்போது, என்னுடைய கொள்கை இடதுமல்ல, வலதுமல்ல, மையத்தில் இருப்போம் என்று சொல்லியிருக்கிறார். அதென்ன, மையத்தில் என்பதற்கு கமலஹாசன்தான் நிறுத்தி, நிதானமாக எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கவேண்டும்.

கேஜ்ரிவாலுடன் கமல் Image captionகேஜ்ரிவாலுடன் கமல்

கூடவே, கமலஹாசன் சொன்ன மற்றொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். கொள்கை என்ன, கொள்கை என்ன என்று திரும்பத் திரும்பக் கேட்பவர்களுக்குப் புத்தகம் போட்டுப் பதிலளிக்கமுடியும், அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார் கமலஹாசன்.

ஆக, கமலஹாசன் கட்சியின் கொள்கைகள் பற்றிப் பேசவும் விமரிசிக்கவும் புத்தகம் வெளியாகும்வரை காத்திருப்போம்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான நீதிக்கட்சியின் கொள்கைகளில் இருந்து தன்னுடைய கட்சிக்கான கொள்கைகளை வடிவமைகப்படுவதாகச் சொன்னார் கமலஹாசன்.

அதுமட்டுமின்றி, "நான் உங்கள் வீட்டு விளக்காக இருப்பேன்" என்றும் மக்களிடம் சொன்னார். திமுகவின் தேர்தல் அறிக்கையில், "திமுக: உங்கள் வீட்டுக்கு விளக்கு, நாட்டுக்குத் தொண்டன்" என்று குறிப்பிட்டிருப்பார் அண்ணா. அதைத்தான் கமலஹாசன் பயன்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, கமலஹாசன் கடந்த சில மாதங்களாகப் பேசிவருகின்ற பல அம்சங்கள் திராவிட இயக்கத்தினர் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் அமல்படுத்தியும் வருபவைதாம். ஆகவே, அவர் வடிவமைக்கப்போகும் அல்லது வடிவமைத்துக்கொண்டிருக்கும் கொள்கைத் திட்டத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளே பிரதானமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. கொஞ்சம் பொறுப்போம். புத்தகம் வரட்டும்!

(கட்டுரையாளர், ஆர்.முத்துக்குமார். எழுத்தாளர். "திராவிட இயக்க வரலாறு", "தமிழக அரசியல் வரலாறு", "இந்துத்வ இயக்க வரலாறு" முதலான நூல்களின் ஆசிரியர். )

 

http://www.bbc.com/tamil/india-43153116

  • கருத்துக்கள உறவுகள்

 

உற்றுப் பார்த்தால்................

கை இருக்கு - எனவே காங்கிரசுக்கு ஆதரவு
நடுவில் சக்கரம் இருக்கு - வடிவாக பார்த்தால் அது இராணுவ இலட்சனை; ஆகவே இராணுவ ஆட்சிக்கும் ஆதரவு
சிவப்பு இருக்குது - எனவே செங்கொடி சிந்தனை; அதாவது ,மார்க்சிய லெனினிசிய மாவோசிய புரட்சி சிந்தனைக்கும் ஆதரவு 
வெள்ளையும் இருக்கு - கதர் நிறம் எனவே  காந்தியத்துக்கும் ஆதரவு
வெள்ளையும் சிவப்பும் சேர்ந்தால் காவி- எனவே இந்துத்துவாவுக்கும் ஆதரவு
நடுவில் இருக்கும் சக்கரத்தின் நுனியை பிடிச்சு சுத்தி விட்டால் எல்லாம் சேர்ந்து என்ன வரும்

சாம்பார் வரும் :5_smiley:

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பேசும் இயக்குனர் ராசி அழகப்பன் ஒரு ஆள் போதும்.. கமலின் அரசியலை விளங்கிக்கொள்வதற்கு.. tw_blush:

  • தொடங்கியவர்

'மக்கள் நீதி மய்யம்' செல்லும் பாதை எத்தகையது? கமலின் அரசியல் பயணம் குறித்து ஓர் அலசல்

 

 
KAMAL1jpg

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் காட்சி.

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்தவண்ணம் உள்ளன.

இதுவரை கமல்மீது எந்தவித முடிவும் எடுக்கமுடியாத நிலையில்தான் மக்கள் உள்ளனர். ஆனால் துணிந்தவர்களுக்கு துக்கமில்லையென ஒரு புதிய பாதையை தொடங்குபவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

அந்த வகையில்தான் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரில் எழுதிக்கொண்டே வந்தார். நேரடியாக பேட்டிகளும் தந்தார். மேடைகளில் தோன்றி துணிச்சலாக அரசின் நிர்வாகத்தை விமர்சனம் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமல் கூறியது சர்ச்சைக்குள்ளானது. விரும்பியோ விரும்பாமலோ அவர் கொளுத்திப்போட்ட சர்ச்சை ட்ரெண்டாகி வலைதளங்களில் பற்றிக்கொண்டதும் உண்டு.

கமலின் சமூக அக்கறை

வார இதழ்களிலும் சமூகம் சார்ந்து அரசியல் நிலைகள் சார்ந்து, வாசிப்புகள் சார்ந்து தனது புரிதல்கள் எவ்வாறு உள்ளன, மாற்றங்களை எப்படி செய்ய முடியும் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும் விதமாக கேள்வி பதில்கள், தொடர் கட்டுரைகள் என எழுதினார்.

''ஊதுகிற சங்கை ஊதுவோம்... காதிருப்பவர்கள் கேட்கக் கடவது'' என்றுதான் சமீபகாலங்களில் அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்து வந்துள்ளன. தமிழக அரசின் நிர்வாகத்தை தொடர்ந்து அவர் விமர்சிப்பதும் அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பதும் பதிலுக்கு கமல் ஒன்று சொல்வதுமென கடந்த சில மாதங்களாகவே மாலை நேர செய்திகளின் தலைப்புச் செய்தியானார் கமல்.

சென்னை மழை வெள்ளத்தின்போது கருத்துசொல்லத் தொடங்கிய பின்னர், அவ்வப்போது தூவானமாக தூவப்பட்ட அவரது கருத்துக்கள் கடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி ஆரம்பித்த அவரது கருத்து அடைமழை இன்றுவரை நிற்கவில்லை.

இனி விடாது கருப்பு என்கிற ரீதியில் அனிதா மரணம், ஆர்கே நகர் தேர்தல் எதைப் பற்றியும் மக்கள் உணர்வதை துணிச்சலாக சொல்லத் தொடங்கினார்.

அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பது சிலர் அல்ல பலர் என்ற நிலைதான் இருந்துவந்தது. ஆனால் இதுவரையில் இல்லையென்றாலும் இனியாவது கமலுடன் நாமும் கைசேர்க்கலாமா என சிலர் தற்போது முன்வருவதைப் பார்க்கமுடிகிறது.

ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேச்சு

நியூயார்க் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்ற சென்ற அங்கேயாவது புரியற மாதிரி பேசுவாரா என்று கேட்டவர்கள்தான் அதிகம். ஆனால் அங்கே தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய கமல், ''கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.'' என்று பேசியபோது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். ''அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு'' என்று கூறியபோது அவரது அரசியல் பயணம் உறுதியானது.

''திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது'' என்ற அவருடைய பேச்சு அவரது சமுகப் பார்வை, புரிதல்கள் மீதான நம்பிக்கைக்கு அவரே பாதை அமைத்துத் தருவதை பார்க்கமுடிந்தது.

வெறுமனே பேச்சாக மட்டுமில்லாமல் அங்கு சில விஞ்ஞானிகளையும் சந்தித்தார் கமல். தமிழகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரம் தாங்களே தயாரித்துக்கொள்வதற்கான முன்னேறிவரும் விஞ்ஞான சாத்தியங்களை அறிய விஞ்ஞானிகளிடம் அவர் கலந்துரையாடினார்.

காகிதப் பூவா? விதையா?

நேற்றுமுன்தினம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் தற்போது புதிய கட்சிகள் தொடங்கப்படுவது குறித்து குறிப்பிடும்போது, ''காகிதப் பூ மணக்காது'' என குறிப்பிட்டிருந்தார். இதை கமலைப் பற்றி கூறுவதாக நினைத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்குக் கமல் உடனே சொன்ன பதில் சற்று அவரைத் திரும்பிப் பார்க்கும்விதமாகத்தான் இருந்தது. ''என்னைப் பற்றி அவர் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், நான் காகிதப் பூ அல்ல; விதை. முளைத்து, பூவாகி, மணப்பேன். எனது கட்சியின் கொள்கைகளுக்கு உடன்படும் பட்சத்தில், பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்.

எவ்வகையான கேள்விகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல், கோபப்படாமல் சிரித்துக்கொண்டே பதில்சொல்லும் பாங்கு நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்... நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்கிற அவரது சலியாத உற்சாகத்தைப் பார்க்கமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ''தசாவதாரம்'' திரைப்படத்தில் 10 அவதாரங்களைப் பார்த்த நமக்கு இந்த புதிய அவதாரம் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்றாக அவரது 11வது அவதாரம்தான் இது தள்ளிவிட வாய்ப்பு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

இனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார். ''இனி நான் திரை நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு'' என அவர் பேசும் வார்த்தைகளில் வழக்கம்போல அவரது பாணியிலான உருவகங்கள் இருக்கலாம். ஆனால் அதன் நோக்கத்தின் வீரியம் எத்தகையது என்பதை குறைத்துமதிப்பிட முடியாது.

அவரது மய்யம் இணைய தளம் இப்படி சொல்கிறது, ''70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே!

தமிழக சினிமா தலைவர்கள்

ஆனால் கமலின் அரசியல் ஈடுபாட்டை உற்றுக் கவனித்து வரும் சிலர், சார் சினிமாக்காரங்களுக்கு வார்த்தைகளுக்காக சார் பஞ்சம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தராத நம்பிக்கை வார்த்தைகளா? ஆனால் அவர்களது அரசியல் நிர்வாகிகள் பிற்காலத்தில் எடுத்த அவதாரங்கள் என்ன?

தமிழகம் கண்ட காட்சிகள் என்ன? மிகப்பெரிய இயக்கப் பின்புலம் உள்ள அவர்களே தங்கள் அமைப்புகளில் தூய்மையை நேர்மையை கடைபிடிக்க இயலாத நிலையை தமிழகம் காணநேர்ந்தது என்பதுதானே உண்மை. திராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்தது என பலரும் பேசி துணிந்தபிறகு கமல் வந்துள்ளார்.ஆனால் இந்தக் கமல் எம்மாத்திரம்? என்றும், அப்பேற்பட்ட நடிகர்திலகம் சிவாஜியையே நம் மக்கள் தோற்கடிக்கத்தானே செய்தார்கள். அவ்வளவு ஏன் பின்னர் வந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் எனப் பலரும் அரசியலுக்கு வந்து கண்டது என்ன?'' என்று கேட்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எந்தவிதிமுறைகளும் கிடையாது. அதேநேரத்தில் நமது இன்றைய தமிழ் சினிமா 'நாயக வழிபாட்டை' கோரும் ஒரு ஊடகம் என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாவில் நாம் காணும் வசனங்களும் சாகசங்களும் உண்மையில்லை. மிகப்பெரிய போராளிகளும் சிந்தனையாளர்களும் தலைவர்களும் நிறைந்த இன்றைய தமிழகத்தில் நல்ல சிந்தனையுள்ள தலைவர்களுக்கா பஞ்சம் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

திரைக்கதைப் புனைவு மிளிரும் இரண்டரை மணிநேரத்தில் உலகை புரட்டும் சினிமா போலி நம்பிக்கையை ஊட்டி வளர்க்கவே பயன்படும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

புதிய கட்சி செல்லும் பாதை?

எந்த மாதிரியான விருட்சமாக இது வளரவேண்டுமென மண் தீர்மானிக்கப்போகும் இந்த விதை சிறிய விதைதான். எந்தமாதிரியான அரசியல் முன்னெடுப்பு இது என மக்கள் தீர்மானிக்கப்போகும் இந்தக் கட்சி புதிய கட்சிதான். கமலின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அவதாரம் விஸ்வரூபம் எடுக்குமா? அல்லது புஸ்வானமாகிப்போகுமா என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கமலின் கட்சி முன்னெடுப்புச் செயல்களில் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைப் பார்க்கமுடிகிறது. நானே செய்வேன். நானே சாதிக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. தமிழகம் மாற வேண்டும் என்று சிந்திக்கும் இளைஞர்களோடு அவர் கைகோர்க்க விரும்புகிறார்.

தான் கற்றுகொள்ளவேண்டிய அனுபவப் பாடங்களுக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என பலரையும் சந்தித்துப் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையிலேயே தனது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அனுபவப் பாடம்

இந்த சந்திப்பு இன்னும் விரிவடைய வேண்டும். தமிழகத்தின் அப்பழுக்கற்ற பல நல்ல அரசியல் சிந்தனையாளர்களையும் ஆலோசகர்களாக இடம்பெறச் செய்து அவர்களது அனுபவ பாடங்களையும் இவர் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் தளம் வலுவான அஸ்திவாரத்தில் எழுப்பப்படக்கூடியதாக அமையும்.

தற்போது, கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகளாக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் , பத்திரிகையாளர் ராஜநாராயணன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஆர்.ஆர். சிவராமன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்பலரும் நாம் அறிந்தவரை தங்கள் கருத்துக்களை துணிச்சலாக பேசக்கூடியவர்கள்.

இவர்களது பங்களிப்பு சிறந்த முறையில் அவர்களது அனுபவம் கைகொடுக்கும்வகையிலேயே கட்சிக்கான நிர்வாகிகள் வட்டம் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

இவர்கள் உருவாக்கப்போகிற கட்சிக் கட்டமைப்பும் அதன் இளம்தலைமுறையின் உண்மையான ஆர்வமும் எதிர்வரும் நாட்களும் அரசியலுமே தீர்மானிக்கப்போகிறது புதிய கட்சி செல்லும் பாதையை. 'மக்கள் நீதி மய்யம்' கடந்து செல்லவேண்டிய அரசியல் பாதை அகலமானது ஆழமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும்கூட.

அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு களம் இறங்கியுள்ள கமல் ஆர்வத்தைக் காணும்போது ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?'' எனும் பாரதி பாடலே நினைவுக்கு வருகிறது,

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article22823440.ece?homepage=true

  • தொடங்கியவர்

சமூக ஊடகங்களில் கமல்: இளம் வாக்காளர்கள்தான் இலக்கா?

நடிகர் கமல்படத்தின் காப்புரிமைSTRDEL Image captionநடிகர் கமல்

அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, தொடர்ந்து இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் கமல். அவர் மட்டுமல்ல அவர் ஆரம்பித்த #MakkalNeedhiMaiam கட்சியும் ட்ரெண்டிங்கில் உள்ளது. கமல் தொடர்ந்து பதிவிட்டு வரும் வித்தியாசமான வீடியோக்களும், ட்வீட்டுகளும்தான் இதற்கு காரணம்.

கமலின் அரசியல் பிரவேசம் குறித்த சலசலப்பு, சமூக ஊடகங்களில் அடங்குவதாக இல்லை. பெரும்பாலும் இளம் தலைமுறையினரே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் அதிகமாக உள்ளனர். கமல் அரசியலில் நுழைந்தது ஒருபுறமிருக்க, சமூக ஊடகங்களில் இவருக்கு இருக்கும் ஆதரவும், எதிர்பும் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறி.

இது குறித்து சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு பேசியது பிபிசி தமிழ்.

சமூக ஊடகங்களில் கமலும், ரஜினியும் ஒரு பேசுபொருள்தான்

கமலின் அரசியல் பிரவேசத்தை சமூக வலைதளங்கள் எப்படி பார்க்கிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் விவரித்தார் எழுத்தாளர் அராத்து.

சமூக ஊடகங்கள் என்பது எப்பவுமே தீவிரமாக இயங்குவது இல்லை என்றும் இன்றைக்கு யார் கிடைப்பாரகள், யாரை வைத்து பிழைப்பு ஓட்டலாம் என்று தான் இருக்கும் எனக் கூறுகிறார் அராத்து.

அராத்துபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஎழுத்தாளர் அராத்து

ஃபேஸ்புக், ட்விட்டரில் கமலும், ரஜினியும் ஒரு பேசுபொருள்தான் என்று குறிப்பிட்ட அவர், சோஷியல் மீடியாவை வைத்து பெரிய அறுவடை எல்லாம் செய்துவிட முடியாது என்கிறார்.

"சமூக வலைதளங்களுக்கு என ஒரு முகம் உள்ளது. இங்கு பெரும்பாலானோர் முற்போக்காக காட்டிக் கொள்ள முயல்பவர்கள்தான். இதை வைத்து கமலால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால், கமலை இங்கு பாராட்டுபவர்கள் தேர்தலில் அவருக்கு ஓட்டு போடாமல் இருக்கலாம். திட்டுபவர்கள் ஓட்டு போடலாம்" என்றும் எழுத்தாளர் அராத்து குறிப்பிட்டார்.

"அரசியலுக்கு வந்துவிட்டால் களப்பணிதான் ஆற்ற வேண்டும். வீட்டில் அமர்ந்து வீடியோ பதிவேற்றினாலோ அல்லது ட்வீட் செய்தாலோ சோஷியல் மீடியாவை பரபரப்பாக வைத்திருக்க முடியுமே தவிர மக்களிடம் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்கிறார் அவர்.

ஃபேஸ்புக், ட்விட்டரில் இருப்பவர்களை மகிழ்விக்கவே கமல் இவ்வாறு பல்வேறு வீடியோக்களையும் ட்வீட்களையும் பதிவிடுகிறார் என்றும் அவர் கூறினார்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த சமூக ஊடக பிரச்சார அரசியல், அதனை பெரிதும் பயன்படுத்தும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, "தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கம் கிடையாது. சமூக நீதியின் அர்த்தமோ அரசியல் தெளிவோ, இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பதோ அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் கமலை நம்பி சிலர் வாக்களிக்க வாய்ப்புள்ளது" என அராத்து தெரிவித்தார்.

இதுகுறித்து ஊடகவியாளர் உமாமகேஷ்வரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, சமூக ஊடகங்களில் கமல் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பது நிச்சயம் ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்.

ஊடகவியாளர் உமாமகேஷ்வரன்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஊடகவியாளர் உமாமகேஷ்வரன்

கமலை திரும்பிப் பார்த்த மக்கள்

"களத்தில் அனைவரும் வேலை செய்கிறார்கள். ஆனால், அதனை யார் விளம்பரப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் வேலை செய்பவர்கள் என்ற அதீத நம்பிக்கை இந்தத் தலைமுறையினருக்கு உண்டு. வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளரின் பணி என்ன என்று கேட்டால் இவர்களுக்கு தெரியாது. ஆனால், ஏதாவது சின்ன வேலை செய்துவிட்டு அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டால், அவர் தீவிரமாக வேலை செய்பவர் என்ற இமேஜ் வந்துவிடும். ஆதலால், கமலின் சோஷியல் மீடியா பிரவேசம் நிச்சயம் முதல் தலைமுறையினர் வாக்காளர்களிடம் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார் உமாமகேஷ்வரன்.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிதாக ட்விட்டரில் செயல்படாமல் இருந்த கமல் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ஆக்டிவாக இருந்ததை குறிப்பிடுகிறார்.

ஒரு காலகட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளுமே சோஷியல் மீடியாவில் செயல்பட தொடங்கிய நிலையில், கமலின் தொனி மக்களை ஈர்த்ததாகவும், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விமர்சித்த கமலை மக்கள் திரும்பி பார்க்க ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகிறார்.

கமல் சுமார் ஒரு வருடமாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த காரணத்தினால்தான், அவர் இப்போது வெளியிடும் வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெறுகிறதாகவும் உமா தெரிவித்தார்.

இந்நிலையில், சோஷியல் மீடியாவில் இளம் தலைமுறையினர் சிலர், இவரை புகழ்ந்து கொண்டிருந்தாலும், வாளின் மறுமுனை கூர்மையாக உள்ளது. அவர் களத்துக்கு வராமல் ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்கிறார் என்கின்றனர் ஒரு பகுதி மக்கள்.

 
 

கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே.

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.

இணைவதற்க்கு http://Www.maiam.com 
#naalainamadhe#maiam#tamilpride

 

தனது இருப்பை உறுதிப்படுத்தும் கமல்

ட்விட்டரில் சுறுசுறுப்பாக இருக்கும் கமல், தானும் களத்தில் இருக்கிறேன் என அனைவருக்கும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட உமா, இதற்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது அவர் இருத்தலை உறுதிப்படுத்தி வருகிறது என்றார்.

"கமல் களப்பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அவர் ஒரு சினிமா நட்சத்திரம். ஒவ்வொரு முறை வெளியே வரும்போதும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அவர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமர்ந்து வெளியிடும் வீடியோக்களால், மக்களிடம் அவரால் நேரடியாக இணைந்திருக்க முடியும்" என்றும் உமாமகேஷ்வரன் தெரிவித்தார்.

இதுகுறித்து எழுத்தாளர் சரவண கார்த்திகேயனிடம் பேசியபோது, சோஷியல் மீடியாவில் கமல் தீவிரமாக செயல்படுவது, அவர் படித்த இளைஞர்களை குறிவைப்பதாகவே தாம் பார்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் பதிவிடும் தமிழ் புரியவில்லை என்பதுதான் பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு என்கிறார் அவர்.

எழுத்தாளர் சரவண கார்த்திகேயன்படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஎழுத்தாளர் சரவண கார்த்திகேயன்

அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதுதான் கமலின் நோக்கம்

"சமூக வலைதளங்களில் தீவிரமாக ஈடுபடவில்லை என்றாலும், கமல் ரசிகர்கள் அவருக்குதான் வாக்களிப்பார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, கமல் இளம் தலைமுறை வாக்காளர்களை மட்டும்தான் குறி வைப்பதாக கருத முடியாது என்று குறிப்பிட்ட சரவண கார்த்திகேயன், பத்திரிக்கையில் தொடர் எழுதி வெகுஜன மக்களையும் அவர் சென்றடைந்ததாக கூறுகிறார்.

தென்னிந்திய ஊடகங்கள் மட்டும் அல்லாது வடஇந்திய ஊடகங்களுக்கும் தொடர்ந்து கமல் நேர்காணல் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதுதான் கமலின் நோக்கம் என்கிறார் சரவண கார்த்திகேயன்.

எதிராளியை பற்றி கவலைப்படாமல் இருக்கும் யுக்தியை அவர் கையாளுவதாகவும், ஆனால் இவையெல்லாம் வாக்குகளாக மாறி தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சரவண கார்த்திகேயன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-43167558

  • கருத்துக்கள உறவுகள்

 

28058485_2474136699278995_19412074307467

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.