Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்குப் பல்லாண்டு கூறுதுமே!!

Featured Replies

தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்குப் பல்லாண்டு கூறுதுமே!!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"ஆ ஊன்னா ஊர்ப்பேர மாத்தறேன்னு கெளம்பிருவானுக துப்புக்கெட்டவனுக!", என்று சிடுசிடுத்தார் நண்பர்! 'ஏம்பா! காலேல டென்சனாவுற", என்றார் நண்பரின் சித்தப்பா!

"ட்ரிப்ளிக்கேன்-ன்னு ஈஸியா சொல்றத உட்டுட்டு, 'திருவல்லிக்கேணி'-ன்னு சொல்லனுமா இனி", என்றார் நண்பர் வெறுப்பாக.

"அப்ப எம்பேத்திய இனி 'பிஷ்'-னு கூப்புடலாம்ல",என்றார் நண்பரின் சித்தப்பா.

"வெளையாட்டுக்குக்கூட அப்பிடி சொல்லாதேங்க சித்தப்பா! எங்கம்மா "மீனாட்சி" பேரல்ல அவளுக்கு வெச்சிருக்கேன்.", என்றான் நண்பன்.

"அதுமாறித்த்தானேப்பா சிதைஞ்சுபோன நம்ப பாரம்பரியப் பெருமையும் பண்பாடும்! மீட்டெடுக்கப் பாடுபடும் அமச்சரப் பாராட்டலேன்னாக்கூட பரவால்ல. திட்டாம இருந்தாப் போறும், என்றார் நண்பரின் சித்தப்பா! ஒன்றும் பேசாமல் அமைதியானார் நண்பர்.

ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியாளர்கள் சாதிக்காத வெற்றியை சத்தமில்லாமல் சாதித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள். ஆங்கிலேயனின் வளையாத நாக்கு உளறிய 'Triplicane', 'Tuticorin' என்ற வேடிக்கைப் பெயர்களை அவமானச்சின்னங்கள் என்றுகூடத் தெரியாமல் சுமந்துகொண்டு வலம்வந்தது தமிழினம்.

தெள்ளுதமிழ்ச் சொற்களால் ஐம்பது ஆண்டுகாலம் கோலோச்சிய தலைவர்கள், மதராஸ் மாகாணம் என்பதன் தலைநகருக்குச் சென்னை என்றொரு பெயர் மாற்றி, தமிழ் மாநிலத்துக்குச் தமிழ்நாடு என்று பெயர்சூட்டி, மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தெய்வ வணக்கப்பாடலை தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்றமைத்துச் செய்தது போதும் என்று உறங்கி விட்டன திராவிட ஆட்சிகள்.

அண்டை மாநிலங்களான கேரளாவில் உள்ள அனைத்து ஊர்களின் பெயர்களும் தூய மலையாளப் பெயர்களாக சத்தமில்லாமல் மாற்றம் பெற்றுவிட்டன. 'Trivandrum'('ற்றிவன்றம்') 'Thiruvananthapuram'('திருவனந்தபுரம்') என்றும், Aleppi(அலெப்பி) Alappuzhai(ஆலப்புழை) என்றும் மாறிவிட்டன;

Bangalore(பெங்களூர்) Bangaluru(பெங்களூரு) என்றும், Bombay(பாம்பே) Mumbai(மும்பை) என்றும்   Calcutta(கல்கத்தா) kolkaththa(கொல்கத்தா) என்றும் இந்தியாவெங்கும் ஆங்கிலேயர் இட்ட காலனி ஆதிக்க அவமானச் சின்னங்கள் களைந்தெறியப்பட்டன,

காலனி ஆதிக்கத்தின் அவமானச் சின்னங்கள் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை தொடர்ந்து வருகின்றது. அது இப்போது முழுமையாக நீக்கப்படுவது பெரிதும் பாராட்டுக்குரியது. இச்செய்தி பெரும் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். தமிழர்களின் அறியாமைத் துயரம் அகலாமல் இருக்கின்றது என்பதற்கு இச்செய்தி ஊடகங்களின் கவனத்தைக் கவரவில்லை என்பதும், ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்படவில்லை என்பதும் தமிழகமே வெட்கித் தலைகுனிய வேண்டியதாகும்.

ஆங்கிலேய அவலச்சொற்களால் அசிங்கப்பட்டுக் கிடந்த ஊர்ப்பெயர்களைத் தூய தமிழ்ப்பெயர்களால் அலங்கரித்து, உயரச்செய்வது, தாழ்ந்து கிடந்த தமிழினத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்வதாகும்.

தனது திறமையான ஆளுமை மூலம் ஆவன செய்து நேர்செய்து தமிழகத்தைத் தலைநிமிரச் செய்திருக்கும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களைத் தமிழகம் வணங்கி மகிழ்கின்றது; அன்னாருக்குத் தமிழகம் மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றது.

முன்னூறு ஆண்டு காலமாக ஆக்கிரமித்திருந்த ஆங்கிலக் காலனிப் பெயர்கள் என்னும் கருத்தியல் விலங்குகளை உடைத்துத் தமிழன்னையின் கரங்களை விடுவித்து மேன்மை நிலையை அடையச்செய்த அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தமிழன்னைக்குச் செய்யவேண்டிய இன்னுமொரு கடமை காத்திருக்கிறது; ஆரியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தூய தமிழ்ப் பெயர்களால் அமைந்த தமிழக ஊர்களின் பெயர்களையும், கோயில்களின் பெயர்களையும், தமிழர் வழிபடு தெய்வங்களின் பெயர்களையும் நீக்கிவிட்டு, வடமொழிப் பெயர்கள் இட்டுச் சிதைத்த வரலாற்று அவமானச் சின்னங்களை நீக்கி, மீண்டும் தூய தெள்ளுதமிழ்ப் பெயர்களைச் சூட்டும் கடமை காத்திருக்கின்றது.

ஆரியப்பற்றாளர்களின் சமற்கிருதமாக்கக் கடும்பற்றால் தொன்மையான அழகிய தமிழில் வழங்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களெல்லாம் பொருட் சிதைவுண்டு சமற்கிருதப் பெயர் மாற்றம் பெற்ற  அவலத்தைக்கண்டு, வருந்தினார் வள்ளலார் இராமலிங்கசுவாமிகள். இது தொடர்பாக, வள்ளல் பெருமான் அருளிய இருபாடல்களை இப்போது காண்போம்.

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழில் காலம்காலமாகப் பழமலை என்று வழங்கப்பட்ட இவ்வூர் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக விருத்தாச்சலம் என்று ஆரியப்பற்றாளர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த பழமலை என்னும் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது சைவசமயச் சிவன் கோயில். மூலவர் பெயரை பழமலைநாதர் என்பதிலிருந்து இப்போது விருத்தகிரிஸ்வரர் என்றும், தாயார் பெரியநாயகியின் பெயரை விருத்தாம்பிகை என்றும்  மற்றும் இளையதாயார் இளையநாயகியின் பெயரை பாலாம்பிகை என்றும் பெயர் மாற்றம் செய்துவிட்டனர் ஆரியப் பற்றாளர்கள். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டுச் சிவத்தலங்களில் முக்கியமானதாகும்.

வழிப்பறிக் கொள்ளையருக்கு அஞ்சிய சுந்தரமூர்த்தி நாயனார், இறைவனிடம் பரவை நாச்சியாருக்காகப் பெற்ற பொன்னை, இக்கோயிலில் உள்ள மணிமுத்தாற்றில் இட்டு, திருவாரூர் கமலாலயத்தில் மீட்டு எடுத்தார் என்னும் தொன்மம் கோயில் தலவரலாற்றில் காணக்கிடைக்கின்றது.

பழமலை ஒரு ஆகமக்கோயில்

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

விருத்தாச்சலம் என்று தற்போது அழைக்கப்படும் பழமலையில், பழமையும் சிவனுக்கே உரிமையும் உடையதாயிருக்க, உலகவர் அதனைக் கிழமலை என்னும் பொருள்படும் (விருத்தம்+அசலம் =விருத்தாச்சலம், விருத்தன் என்றால் கிழப்பருவம் எய்தியவன் என்று பொருள்;) என வடமொழியிலும், முதுகுன்றம் என்று தமிழிலும் கூறுவதை இரு அருட்பாக்களில் நகைச்சுவை ததும்பப் பாடியுள்ளார் வள்ளல் பெருமான்.

பழமலை கிழமலையானது!
இப்பாடலில் பெருமான் கூறுகிறார்: மலைகட்கெல்லாம் முதலான மலை; ஆயினும் என்று தோன்றியது என்றறியமுடியாத தொடக்கமற்ற மலை, அன்பே உருவான அன்புமலை; எங்கும் பரந்து விளங்கும் மலை, ஞானமாகிய மலை, இன்பமயமான மலை;  பெருமை சான்ற வான்சோதி மலை, துரிய நிலையமான மலை, துரிய நிலையின் உச்சிக்கப்பால் விளங்கித் தோன்றும் மலை;  கருவிக்கரணங்களாற் காணப்படாத நுட்பம் பொருந்திய மலை, திருநீற்றுமலை; சுத்தாவத்தைக் கண்ணின்று பெறும் அனுபவ மலை; எல்லாவற்றையும் படைத்தளிக்கும் மலையரசன் மகளாய கொடியென்று புகழப்படும் மலைமகளைத் திருமேனியிற் பாதியாகவுடைய பழமலைநாதரின் மலை; முத்திப்பேறு பெற்றவர்கள் சிக்கெனப் பற்றும் மலை எனப் புகழ்பெற்ற பழமலையை உலகினர் கிழ(ட்டு)மலையாகக் கூறுவது ஏனோ?  வியப்பாகவுள்ளது என்கிறார் வள்ளல் பெருமான்.
      ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
          ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
     ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்              
       தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்         
    பூதிமலை சுத்தஅனு பூதிமலை எல்லாம்
          பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
   பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
          பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.–வள்ளலார் திருவருட்பா. 

பழமலை என்னும் பெயரின் பொருள் உணராத குறையறிவுடையோர், தமிழின்மேல் உள்ள வெறுப்பு ஒன்றே காரணமாகக் கொண்டு ‘சமற்கிருத’மாக்கவேண்டும் என்ற நோக்கில் தவறாகப் பெயரிட்டிருப்பதை நயம்பட சுட்டும் வள்ளலாரின் அன்பும், பாங்கும் இங்கு உணரத்தக்கது.

வள்ளல் பெருமான் இப்பழமலையின் பெருமையைப் பற்றி மேலும் கூறுகிறார்: இப்பழமலை எப்பேர்ப்பட்ட பெருமை உடையமலை தெரியுமா? சாக்கியநாயனார் எறிந்த கற்களைச் சகித்த மலை; இறைவனைத் தம் தெள்ளிய அமைதியான மனத்தால் போற்றும் அன்பர்கள் சார்ந்தமையால் ஓங்கி உயர்ந்த தனித்துவம் பெற்ற மலை; இம்மலையின்கண் அமைந்துள்ள மன்றத்திலே அருள்தரும் தூக்கிய திருவடியுடன் இறைவன் அன்பர்களுக்குக் காட்சிதரும் தூயமலை; அறம் முதலாகிய வேதம் சொன்ன மலை; வாக்குகளுக்கு அப்பாற்பட்ட துரிய நடுமலை; மாறாத வானிலிருந்தே அனைத்தையும் படைத்து, காத்து, துடைக்கும் மலை; என்றும் அழியாத மலை; மெய்யன்பர்களுக்கு இன்பம் தரும் ஓர் அற்புதப் பொன்மலை; உயிர்கள் விரும்பும் நற்பேறுகள் அனைத்தும் கனிந்து பழமாகப் பழுத்த மலையாகிய இந்தத் தொன்மையான பழமலையை உலகினர் கிழ(ட்டு)மலையாகக் கூறுவது ஏனோ?  வியப்பாகவுள்ளது.

   சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த     
சாந்தர்உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
     தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
     ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநேல்
அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
     பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே – வள்ளலார் திருவருட்பா.

தொடக்கம், இறுதியற்ற தொன்மையின் காரணமாகவே 'பழமலை' என்று கூறப்படுகின்றதேயன்றி முதுமையின் காரணமாக அன்று. “தொன்மையான பொருள்கள் அனைத்தையும் காட்டிலும் தொன்மையானவனாகவும், புதுமையும் இளமையுமாக, இனியும் வரயிருக்கின்ற, தோன்றப்போகும் எந்தப் பொருட்களைக் காட்டிலும் புதுமையாகவும், இளமையாகவும் இருப்பவன் இறைவா! நீயே அல்லவா!!” என்று இறைவனின் புகழ்பாடும்

மணிவாசகரின் திருவாசகத் திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கன. வள்ளலார் வாழையடி வாழையாக வந்த மாணிக்கவாசகரின் திருக்கூட்ட மரபைச் சார்ந்தவரன்றோ!

“முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!”

இரண்டு பாடல்களிலும் 'பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் உலகே’ என அருளியதில் அரிய நயம் காணலாம். இத்தலத்தின் பெயர் பழமலை. ஆயினும் ஆரியப்பற்றாளர்களின் வடமொழி வெறியால் ‘பழமலை’ என்ற தமிழ்ப்பெயர் மாற்றப்பட்டு, 'விருத்தாச்சலம்’ என்று சமற்கிருதத்தில் பெயர் மாற்றிவிட்டனர்; இன்றுவரைத் தமிழகம் இதனை இன்றுவரை 'விருத்தாச்சலம்’ என்ற பெயரிலேயே வழங்குகின்றது என்பது வேதனையான செய்தி. 

இதைவிட வேதனையானது பழமலை (விருத்தாசலம்) பழமலைநாதரை " விருத்தகிரீஸ்வரர்" (கிழட்டு ஈஸ்வரர் என்றே பொருள்படும் இப்பெயர்) என்றும் மாற்றியுள்ளனர் வடமொழிப்பற்றாளர்கள்.

‘விருத்தம்’ என்ற சொல் 'முதுமை’ எனப் பொருள்பட்டு கிழத்தன்மையைக் குறிக்குமேயன்றிப் ‘பழைமை’யைக் குறிக்காது. விருத்தாச்சலத்தைத் தமிழில் பெயர் மாற்றம் செய்கிறேன் என்று கிளம்பிய ஒருசிலர் அறியாமையின் காரணமாக இதன் இயற்பெயரை அறியாமல், ‘விருத்தம்’ என்பதை ‘முது’ என்றும் ‘அசலம்’ என்பதை ‘குன்றம்’ என்றும் சமற்கிருதத்தினின்று தமிழுக்கு மொழிமாற்றம் செய்து ‘முதுகுன்றம்’ என்று அழைக்கின்றனர். இத்தவறு ஏழாம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்துவிட்டது.

Hamilton–ஆமில்டன்-ஆகி, ஆமில்டன்-அம்பட்டன் ஆகிப் பின் அம்பட்டன்- Barber ஆன கதை:

சென்னையில் இதைப்போல் நடந்த ஒரு பெயர் மாற்றக் கேலிக்கூத்து நினைவுக்கு வருகின்றது. ஆங்கிலேயர்களால் ‘Hamilton Bridge’ என்று பெயரிடப்பட்ட ‘ஹாமில்டன் பாலம்’ தமிழில் ‘ஆமில்டன் பாலம்’ என்று அழைக்கப்பட்டுக் காலப்போக்கில் ‘‘அம்பட்டன் பாலம்” என்று மருவியது. இப்பெயரைத் தரம் உயர்த்தக்கருதிய அறிவாளிகள்  ‘‘அம்பட்டன் பாலம்” என்பதை “Barber’s Bridge” என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு ‘Hamilton’-ஐ ‘Barber’-ஆக மாற்றிப் புனிதப்படுத்திவிட்டனர்.

வடமொழி வெறியர்களுக்குத் தமிழ் தெரியாத காரணத்தால் ‘பழமழை’ ‘விருத்தாச்சலம்’-ஆகிப் போனது. ஆதலின் முதுகுன்றைப் பழமலை என்னல் சிறப்பேயன்றி ‘விருத்தாசலம்’ என்னல் சிறப்பன்று.

வடமொழிப் பற்றாளர்களாலும், சொல் மருவியதாலும் பெயர்மாற்றம் பெற்ற சில ஊர்களின் இயற்பெயர்கள்

தன்செய்யூர் – தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாரை " பிரகதீஸ்வரர்" என்று  மாற்றியுள்ளனர் வடமொழிப் பற்றாளர்கள்.

பொழில் ஆட்சி – பொள்ளாட்சி,

செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு ஆனது.

ஒத்தை கால் மண்டபம், ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல் என்பதேயாகும்

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான தொன்மையான தமிழ்ப்பெயர் "திருமறைக்காடு"

மதி என்றால் நிலவு,  பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்களின் வழிவந்தவர்கள். எனவே ‘மதி’- என்ற சொல்லின் அடியினை ஒட்டி ‘மதிரை’ என்று பெயரிட்டனர். காலப்போக்கில் மதுரை என மருவியது.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரே.

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.

மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

ஏரகமும் நீங்கா இறைவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம்பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்

ஏர்க்காடு - சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

தேவாரத்தில் தூய தமிழ்ப் பெயர்களால் வழங்கப்பட்ட சிவபெருமானின் திருக்கோயில்களின் மூலவர்களின் தூய தமிழ்ப்  பெயர்களை நீக்கிவிட்டு, வடமொழியில் பெயர்சூட்டினார்கள் வடமொழிப் பற்றாளர்கள். (இது ஒரு வடமொழி வெறியர்களின் செயல் என்றாலும், பண்பு கருதி நாம் அவர்களை வடமொழி வெறியர்கள் என்று சொல்லாமல் வடமொழிப் பற்றாளர்கள் என்கிறோம். ஆனால், தமிழ்மொழியைப் பாராட்டுபவர்களை தமிழ்மொழி வெறியர்கள் என்று அவர்கள் கூறத் தயங்குவதில்லை. இதுதான் தமிழ்ப்பண்பாட்டுக்கும், வடவர்களின் பண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு. இறைவனை வழிபடத் தாய்மொழியாம் தமிழே சிறந்தது என்பது 'அருச்சனை பாட்டேயாகும்; எம்மைத் தமிழில் பாடுக என்று சிவபெருமான் சுந்தரருக்குச் சொன்ன சொல்லே நமக்கெல்லாம் மந்திரம்.)

நாமெல்லாம் திருக்கோயில் வழிபாட்டைச் செந்தமிழில் மட்டுமே செய்யவேண்டும். இதில், வைணவம் மிகவும் பாராட்டுக்கு உரியது. ஆழ்வார்களின் பாசுரங்களையே திருமாலுக்கு முதல் அருச்சனையாக நிறுவி, புனிதர் இராமானுசர் நிறுவிய இறைவனுக்கும், மனிதனுக்குமான தனிவெளியை ஆழ்வார்களின் பாசுரத் தமிழால் புனிதப்படுத்திய வைணவர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள். தமிழருக்கெல்லாம் அவர்களே முன்னோடி.

அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் எம்மைச் சொற்றமிழில் பாடுக என்று சுந்தரரைப் பார்த்து சிவன் கூறியதாக சேக்கிழார் பாடியிருக்கிறார். தமிழ்மொழி தொன்மையான மொழி. செம்மொழி தகைமை பெற்ற மொழி.  தமிழே இறைமொழி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நமக்கும் இறைவனுக்குமான தனிவெளியில் நம்மை இணைக்கும் ஒரே சக்தி தமிழன்னை மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

உணர்வுக்கு ஒட்டாத புரியாத மொழியில் இறைவனிடம் தொடர்பு கொள்ள இடைத்தரகர்கள் தேவையில்லை என்று உணரவேண்டும். மொழிப்பற்று வேறு; மொழிவெறி வேறு. நாம் மொழிப் பற்றாளர்களாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை; அதுவே இயல்பானது. ஒரு தாய்மொழிப் பற்றாளன் பிறமொழிகளையும் மதிக்கத் தெரிந்தவனாகத்தான் இருப்பான்.

கேரளாவிலும், கர்நாடகாவிலும், வங்காளத்திலும், மராட்டியத்திலும் அவரவர் தாய்மொழியில் ஊர்ப்பெயர், கோவில் பெயர்களை சத்தமில்லாமல் மீட்டெடுத்து விட்டனர். அமைச்சர் பெருமகனார் மபா பாண்டியராஜன் அவர்கள் இக்குறைபாட்டையும் நீக்கித் தமிழ் மண்ணுக்கும், தமிழ் அன்னைக்கும் பெருமிதம் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, அன்னார் ஏற்கனவே செய்த தமிழ்ப்பணிக்கு தமிழர் அனைவரின் சார்பிலும் வாழ்த்தி மகிழ்கின்றோம்! விரைவில் செயல்படுக; விரைந்து செயல்படுக! என்று வேண்டுகின்றோம்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

தமிழ்ப்பணி அறம்செய்த அமைச்சர் பெருமகனாருக்குத் தொடர்க வெற்றி என வாழ்த்துவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான அருகிய தகவல்கள். அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்கள் முன்னெடுத்த நற்பணியை முழுமையாக்க வேண்டும். 'வாழ்க நீ எம்மான்' என தமிழர் தம் உள்ளங்களில் பாண்டிய ராசனாய் அவர் பாடல் பெற வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மாபா பாண்டியராஜன் அவர்களின் குரலை தொலைக்காட்சி விவாதங்களில் கேட்டிருக்கின்றேன்.
அவரின் குரல் வளம் மிக இனிமையாக  கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல்...
அழகிய தமிழில், உணர்சிவசப்படாமல்  உரையாடுவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.