Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது?

Featured Replies

காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது?

 

ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி, உதவிக்கரம் நீட்டினார்.

காலையில் காலேஜ்...மாலையில் மீன் விற்பனை...திடீர் சினிமா சான்ஸ்...ஆனால், ஹனானுக்கு என்ன நடந்தது?
 

துயரங்களைத் தூசியாக்கித் தலைநிமிர்ந்த இளம் பெண்ணின் கதை இது. தினமும் குடித்துவிட்டு வரும் தந்தை, மனநிலை சரியில்லாத தாய், தம்பியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, விடாது துரத்திய வறுமை. இவற்றுக்கிடையே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஹனானுக்கு, டாக்டர் ஆகவேண்டும் என்று கனவு. 

மீன் விற்ற கல்லூரி மாணவி

pic courtesy ; mathrubhumi

 

 

திருச்சூரைச் சேர்ந்த ஹனானின் தந்தை ஹமீது, ஒரு பிசினஸ்மேன். சித்தப்பா குடும்பத்தினருடன் ஹனான் குடும்பமும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்தனர். வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்துகொண்டிருந்தது. கூட்டுக்குடும்பத்தில் பிரச்னை வர, தந்தை ஹமீது மனைவி ஷைரபி, மகள், மகனை அழைத்துக்கொண்டு தனி வீடு பார்த்துக் குடியேறினார். ஊறுகாய் கம்பெனி, எலெக்ட்ரானிக் கடை, கவரிங் நகை தயாரிப்பு எனப் பல்வேறு தொழில்களில் ஹமீது ஈடுபட்டுக்கொண்டிருந்தார். திருச்சூரிலேயே பணக்காரப் பள்ளியில் தன் மகள் ஹனானைச் சேர்த்துப் படிக்கவைத்தார். திடீரென, ஹமீதுவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அளவுக்கு மீறி மது குடிக்க ஆரம்பித்தார். தந்தையின் குடிப்பழக்கம், ஹனான் வாழ்க்கையைப் பாழாக்கியது. 

ஹமீது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்தார். ஒருமுறை ஷைரபியின் தலையைப் பிடித்து சுவரில் அடித்துவிட, அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. அப்போது, ஹனானுக்கு 8 வயது. மனைவி, குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஹமீது குடித்துக் குடித்துப் பணத்தை அழிக்கத் தொடங்கவே வீட்டில் வறுமை தாண்டவமாடியது.

வீட்டிலேயே கவரிங் நகைகள் செய்து அக்கம்பக்கத்தில் விற்கத் தொடங்கினார், ஹனான். அதில் கொஞ்சம் வருமானம் வந்தது. தன் படிப்பு, சகோதரர் படிப்பு, தாயின் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ஹனான் சம்பாதித்தார். அதேவேளையில் நாளுக்குநாள் தந்தையின் கொடுமையும் அதிகமானது. ஹனான் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது,  தாயார் ஷைரபியை தந்தை ஹமீது விவகாரத்து செய்தார்.

தந்தை ஹமீது, தாய் ஷைரபியை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட, ஹனானும் தாயுடன் வெளியேறினார். அவர்களுக்கு, அன்றைய இரவு தங்குவதற்குக்கூட இடம் கிடைக்கவில்லை. ஆதிரா என்கிற நெருங்கிய தோழிதான் அப்போது அவருக்குக் கைகொடுத்தார். மனநிலை சரியில்லாத  தாயுடன், தோழியின் வீட்டில் ஒரு மாதகாலம் ஹனான் தங்கியிருந்தார். தேர்வு முடிவு வெளியானது. கல்லூரி சென்று படிக்க, கையில் பணம் இல்லை. இதனால் ஓர் ஆண்டுக்காலம் வேலைபார்த்து பணம் சம்பாதிக்க முடிவுசெய்தார். 

கொச்சியில் கால் சென்டர் ஒன்றில் பணியில் சேர்ந்தார். இரவும் பகலும் வேலைபார்க்க, முடிவில் ஹனானுக்குக் காது கேட்காமல்போனது; கிடைத்த வேலையும் பறிபோனது. அடுத்ததாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்தது. அன்றாடத் தேவையைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு இந்தப் பணியில் சம்பளம் கிடைத்தது. திருச்சூரில் இருந்த தாயை கொச்சிக்குத் தன்னுடன் அழைத்து வந்து, தங்கவைத்துக்கொண்டார். ஹனானுக்கு மருத்துவம் படிக்கதான் ஆசை. ஒரு வேளை சாப்பாடுக்கே அல்லல்படும் அவரால், நீட் தேர்வுக்குத் தயாராக இயலவில்லை. நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது இந்த மாணவியின் எண்ணம். பிற்காலத்தில் மருத்துவம் படிக்கத் தயாராகும் வகையில், கொச்சியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொடுபுழாவில் ஒரு கல்லூரியில் சேர்ந்து வேதியியல் படிக்க ஆரம்பித்தார்.

மீன் விற்ற இளம் பெண் ஹனான்

ஹனானுக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும். கல்லூரியில் படித்துக்கொண்டே சிக்கன் பொரித்து விற்பனை செய்தார். கல்லூரி கேன்டீனில் ஹனான் சமைக்கும் கே.எஃப்.சி மாடல் சிக்கன் ரொம்பவே பிரபலம். ஹனானின் கைப்பக்குவத்தை அனைவரும் மெச்சினர். அவரின் சின்சியாரிட்டியும் உழைப்பும் ஆர்வமும் அனைவரையும் கவர, உடன் படிக்கும் தோழர், தோழிகள், பேராசிரியர்கள் அவர் மீது தனி அக்கறைகொண்டனர். முதலில் ஹனானின் காது அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவைசிகிச்சை வெற்றிக்கரமாக முடிய, ஹனானுக்கு மீண்டும் காது கேட்டது. உழைக்கும் பெண்ணுக்கு ஓய்வு ஏது... கல்லூரி நேரம் தவிர, மற்ற நேரத்தில் ஆலுவா கடற்கரையில் பஜ்ஜி சமைத்து விற்பனை செய்தார். 

இங்கேதான் ஹனானின் வாழ்க்கை திசை திரும்பியது. பஜ்ஜி சாப்பிட வந்த ஒருவர், `மீன் விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யுங்கள் ஏற்பாடு செய்து தருகிறேன்' என்றார். ஹனான் மீன்கடை தொடங்கியதும் இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருந்தது. ஹனானின் ஒருநாள் வாழ்க்கை அதிகாலை 3 மணிக்கே ஆரம்பித்துவிடும். வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைக்கு சைக்கிளில் சென்று மீன்களை வாங்கி, அருகில் இருக்கும் கடையில் பாதுகாப்பாக வைத்துவிடுவார். பிறகு, வீட்டுக்கு ஓடிவந்து சமையல் செய்து எடுத்துக்கொண்டு பஸ் பிடித்து கல்லூரிக்குச் செல்வார். மாலை 3:30 மணிக்குக் கல்லூரி முடியும். மீண்டும் கொச்சி வந்து கல்லூரி யூனிஃபார்மை மாற்றவெல்லாம் அவருக்கு நேரம் இருக்காது. மாலை 5:30 மணியளவில் மீன் கடையைத் திறப்பார். இரவு 8 மணிக்குமேல் வீட்டுக்கு வந்து தாயையும் கவனித்துக்கொண்டு சமையலையும் பார்க்க வேண்டும். 

இப்படியாக வாழ்க்கையில் போராடிக்கொண்டிருந்த ஹனானின் வாழ்க்கையில் திருப்பம் மலையாள மீடியாக்கள் வழியே வந்தது. இளம்பெண் ஒருவர் யூனிஃபார்முடன் மீன் விற்பனை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த மீடியாக்கள், ஹனானின் துயரக் கதையைச் செய்தியாக்க, உதவிக்கரம் குவிந்தது. மொரீஷியஸ் நாட்டில் மருத்துவம் படிக்க 35 லட்சம் ரூபாய்  செலவாகும். அங்கு சென்று மருத்துவம் படிக்கும் அளவுக்கு ஹனானுக்கு நிதி திரண்டது. டிவி ஆங்கர் ஆகும் ஆசையும் இவருக்கு உண்டு. தொலைக்காட்சிகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருந்தார். அப்போது, சில நடிகர்-நடிகைகளுடன் எடுத்த புகைப்படங்களை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹனான் பதிவிட்டிருந்தார்.

ஹனானின் நடிப்புத் திறமையை அறிந்த  `ராம்லீலா' இயக்குநர் அருண் கோபி,  உதவிக்கரம் நீட்டினார். தன் அடுத்த தயாரிப்பான `21-ம் நூற்றாண்டு' என்ற படத்தில் ஹனானுக்கு நல்ல கதாபாத்திரம் அளிக்க முன்வந்தார். இந்தப் படத்தின் ஹீரோ, பிரணவ் மோகன்லால். அவ்வளவுதான்... இங்கேதான் வினையே ஆரம்பித்தது. அதுவரை, ஹனானின் உழைப்பை மெச்சிக்கொண்டிருந்த சமூக வலைதளத்தின் முகம் மாறியது. படவாய்ப்புக்காகத்தான் கஷ்ட ஜீவனம் பற்றி ஹனான் பொய்த்தகவல் அளித்ததாகக் குற்றம்சாட்டியது. ஹனான்பட்ட கஷ்டங்களைப் பற்றிப் படித்துவிட்டு கண் கலங்கிய கைகளே, இப்போது அவரை நோக்கி கல் எறியத் தொடங்கின. ஹனானுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்து, தன் படத்துக்கு புரொமோஷன் செய்துகொண்டதாக இயக்குநர் அருண் கோபி மீதும் சிலர் பாய்ந்தனர். ஆக, ஹனானின் வேதனை தீராமல் தொடர்ந்துகொண்டிருந்தது. 

மீன் விற்ற கேரள மாணவி

`ஹனான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உண்மைதானா?' என்கிற கேள்வியும் எழுந்தது. தொடுபுழாவில் ஹனான் படித்த அல் நாஸர் கல்லூரியின் தலைவர் மிஜாஸைச் சந்தித்து உண்மை நிலவரம் கேட்டனர். ``இப்படியெல்லாம் ஒரு பெண்ணை டார்ச்சர் செய்யலாமா?'' என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்த அவர், ``ஹனானுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்தான் காது அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. எங்கள் பேராசிரியர்கள், மாணவர்கள்தாம் அதற்கு உதவினர். காது அறுவைசிகிச்சைக்கு நானும் உதவினேன். அவரை இங்கு இலவசமாகவே படிக்க நான் கூறினேன். ஆனால், ஹனான் அதை மறுத்துவிட்டாள். அத்தகைய நேர்மையான பெண். தொலைக்காட்சிகளில் சின்னச் சின்ன ரோல்களிலும் நடித்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறாள். தெருவில் பஜ்ஜியும் விற்கிறாள். இதுபோன்று கஷ்ட ஜீவனத்தில் வாழும் பெண்களை தயவுசெய்து டார்ச்சர் செய்யாதீர்கள்'' என்று கோபத்துடன் சொல்லியிருக்கிறார். 

ஹனானோ, ``நீங்கள்தான் ஒரே நாளில் என்னை ஸ்டார் ஆக்கினீர்கள். அடுத்த நாளே என் மீது கல் எறிகிறீர்கள். இனிமேல் நான் என் கடையில் மீன் விற்க முடியுமா? என்னை இனிமேல் ஒரு சாதாரண வியாபாரம் செய்யும் பெண்ணாகப் பார்ப்பார்களா? என் பெற்றோரால்கூட எனக்கு நல்ல வாழ்க்கையைத் தர முடியவில்லை. எல்லாம் நானே சம்பாதித்து நானே அமைத்துக்கொண்டது. படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் தொடர்ந்து மீன் விற்கத்தான் செய்வேன்'' என்கிறார் ஆணித்தரமாக.

https://www.vikatan.com/news/india/132203-hanan-kerala-college-girl-selling-fish-in-street-gets-cinema-chance.html

  • தொடங்கியவர்

ஹனனை கேரளாவே ஆதரிக்கும்: மீன் விற்கும் கல்லூரி மாணவிக்கு பினராயி விஜயன் ஆதரவு

 

 

Hanan-Hamidjpg

கேரளாவில் கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வரும் மாணவி ஹனனுக்கு கேரளாவே ஆதரவு அளிக்கும். அவரைப் பார்த்துப் பெருமைப்பட வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு கொடுத்துள்ளார்.

எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் (19 வயது). இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

     
 
 

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். அதிகாலையில் எழும் ஹனன் மீன் மார்க்கெட்டுக்குச் சென்று மீன் வாங்கி வருகிறார். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் ஹனன், 60 கி.மீ. தொலைவில் இருக்கும் தனது கல்லூரிக்குச் சென்று படித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து, மீன் விற்பனையைக் கவனித்து வருகிறார்.

hanan

மீன் விற்பனை செய்யும் கல்லூரி மாணவரி ஹனன்   -  படம் உதவி: பேஸ்புக்

 

இந்த மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். அவரின் தந்தை மதுபோதைக்கு அடிமையாகி உள்ளார், தாய் உடல்நலம் இல்லாமல் வீட்டில் இருப்பதால், ஹனன் கடுமையாக உழைத்தும், படித்தும் வருகிறார்.

ஹனன் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் ஹனனின் நடவடிக்கையைப் புகழ்ந்து உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனன் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். ஹனனின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி அவரைக் கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.

ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான். ஹனன் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

vijayanjpg

கேரள முதல்வர் பினராயி விஜயன்

 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஹனனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''ஹனன் குறித்து அறிந்தேன். ஒரு பெண் இளம் வயதில் உழைத்து, சொந்தக்காலில் நிற்பது என்பது பெருமைக்குரியது. தனது உழைப்பினால் கிடைக்கும் பணத்தின் மூலம் குடும்பத்தையும், படிப்பையும் ஹனன் கவனித்துக் கொள்கிறார் என்பது மகிழ்ச்சி.

இதேபோன்ற சூழலில் இருக்கும் மக்கள் நிச்சயம் ஹனனின் நிலைமையைப் புரிந்து கொள்வார்கள். ஆனால், ஹனின் சூழல் அனைத்தில் இருந்தும் மேலானது. ஹனன் தனது கல்விக்காக மட்டும் உழைக்கவில்லை, தனது குடும்பத்துக்காகவும் சேர்த்து உழைக்கிறார்.

நான் ஹனனின் சூழலைப் புரிந்துகொண்டதால் அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஹனன், நீங்கள் கண்டிப்பாக துணிச்சலுடன் நீங்கள் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். எந்தவிதமான கடினமான சூழலிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன். கேரளாவே உங்களுக்கு ஆதரவு அளிக்கும்''  என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உண்மையைப் புரிந்துகொள்ளாமல், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் நம்புவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இந்தப் பழக்கம் எதிர்காலத்தில் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கும் என்று இறுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/india/article24530831.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில தும்படித்தல் என்றால் டெயிலி மூன்று வேலை, இடையில பள்ளிக்கூடம். வீட்ட போனா மெஸ் சமையல்...

 

  • கருத்துக்கள உறவுகள்

எழுபதுகளில் மேல் படிப்புக்காக லண்டன் சென்ற எனது உறவுக்காரர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த வரிகள் இன்னும் எனது மனதில் இருக்கிறது.

லண்டன் வந்தும் ஏழையாகவே இருக்கிறேன். இரவு முழுவதும் குளிரில் இருந்து கிறிஸ்மஸ் மரத்தை காவல் செய்வதே எனது தற்போதைய வேலை. இந்த வேலையும் கொஞ்ச நாட்களுக்குத்தான்இது முடிய ஏதாவது  வேறு வேலை தேடவேண்டும்இந்த வேலைகளை வைத்துத்தான் படிப்பு, வாழ்வு எல்லாம் போகிறது

ஆக மீன் விற்றுப் படிப்பதை என்னால் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை வைத்து மற்றொன்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. சிறு வயதிலேயே வாழ்க்கையின் கோர முகத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் மனம் தளராதவர்கள் போற்றுதலுக்குரியவர்களே. ஒரு விளையாட்டில் போராடுபவர்களுக்கு எவ்வளவு கை தட்டுகிறோம் ? அது நியாயமான கைதட்டல்தான். குறியீடாக வாழ்க்கைப் போராளிகளையும் சமூகப் போராளிகளையும் ஊக்குவிக்கவே விளையாட்டுகள். கை தட்டுவோம். அதிலும் இந்தியச் சூழலில் ஒரு பெண் குழந்தைக்கு நிறையவே.

 

Edited by சுப.சோமசுந்தரம்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கேரளாவுக்கு 1.5 லட்சம் நிதியளித்த ஏழை மாணவி ; நெகிழ்ச்சி கதை.!

 

 
 
Image

கல்லூரியில் பயின்று வந்த கேரள மாணவி ஹனான் குடும்ப வறுமை காரணமாக காலை பொழுதில் மீன் விற்றுக் கொண்டு தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வந்ததாக கடந்த மாதம் செய்திகள் பரவின. இதனைத் தொடா்ந்து அவருக்கு பல்வேறு தளங்களில் இருந்தும் உதவிகள் வந்தடைந்தன.

ஆனால், வெகு சில நாள்களிலேயே ஹனான் தொடா்பான எதிா்மறை கருத்துகளும் இணையதளத்தில் பரப்பப்பட்டது. இதனைத் தொடா்ந்து தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று ஹனான் மறுத்துவிட்டாா். அதனைத்தொடர்ந்து அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் ஹனானை நேரில் அழைத்து அவரது மன உறுதியை பாராட்டியதுடன், ஹானானுக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில், கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் அம்மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு உதவும் விதமாக தனக்கு கிடைத்த நன்கொடை ரூ.1.5 லட்சத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மாணவி ஹனான் தெரிவித்துள்ளார்.

ஹானானின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

https://www.ibctamil.com/india/80/104927

  • கருத்துக்கள உறவுகள்

" ஓடி விளையாடு பாப்பா " என பாரதி சொல்கையில் " நீ கண்ட புதுமைப் பெண்ணாக்கும் நான் " என அந்த மீசைக்காரனையே மிரட்டும் பெண்ணடி நீ ! நீ விளையாடு செல்லம். இனி இந்த உலகமே உன் கையில். 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

விபத்தில் சிக்கிய கேரள மாணவி ஹனன்; ஐசியு-வில் ஃபேஸ்புக் லைவ் செய்த நபர்


 

 

hanan-meets-with-accident

 

மீன் விற்பனை செய்துகொண்டே படித்து வரும் மாணவி ஹனன் விபத்தில் சிக்கினார். முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது அவருக்கு அருகில் நின்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ எடுத்த நபரால் சர்ச்சை உருவாகியுள்ளது.

அந்த வீடியோவில் அந்த நபர் ஹனனிடம் ஏதேதோ கேள்வி எழுப்ப ஹனன் பதில் கூற முடியாமல் போதும் போதும் என்பதுபோல் கையைக் காட்டுவதாக காட்சிகள் அமைந்துள்ளன. 

 

அந்த நபரைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை அப்புறப்படுத்தினர். ஆனால், அவர் மீது இதுவரை எந்த வழக்கும் பதியப்படவில்லை. அந்த நபர் ஃபேஸ்புக் லைவ் வீடியோ செய்யும் பிரபல நிறுவனத்தின் ஊழியர் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

1536054680.jpg

படம்: சிறப்பு ஏற்பாடு

ஹனனுக்கு வாழ்க்கையே போராட்டம்தான்..
எர்ணாகுளம் அருகே தொடுபுழாவைச் சேர்ந்த இளம் பெண் ஹனன் (19 வயது). இவர் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

கல்லூரிக்குச் சென்ற நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில் மீன் விற்பனை செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்த மீன் விற்பனையின் மூலம்தான் ஹனன் தனது படிப்பையும், தனது குடும்பத்தையும் கவனித்து வருகிறார். ஹனன் குறித்து கடந்த வாரம் மாத்ருபூமி நாளேட்டில் சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மலையாள திரை நட்சத்திரங்களும் அவரைப் பாராட்டி, உதவி செய்ய முன்வருவதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு சிலர் கல்லூரி மாணவி ஹனனின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். அவரின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர். இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பாக உருவெடுத்தது.

ஆனால், ஹனனின் கல்லூரி முதல்வர், தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான். அவர் உண்மையில் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரின் பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்தச் செய்தி போலியானது அல்ல என்று ஆதரவு தெரிவித்தனர்.

இருந்தாலும், நெட்டிசன்கள் தொடர்ந்து ஹனனைப் புண்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இது குறித்து அறிந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஃபேஸ்புக்கில் ஹனனுக்கு ஆதரவு அளித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆதரவு தெரிவித்து, ஹனனுக்கு கேரள அரசு துணையிருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

''ஹனனுக்குத் தேவையான அனைத்து வகையான ஆதரவையும் நான் அளிப்பேன். துணிச்சலுடன் தனது படிப்பையும், தொழிலையும் தொடரலாம். ஹனனுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் தரக்கூறி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'' என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதற்கிடையில் கேரள மழை வெள்ளம் வந்தபோது தனக்கு மக்கள் தானமாக அளித்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக அளிக்கப்போவதாக கூறியிருந்தார். இதற்காக மக்களின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

https://www.kamadenu.in/news/india/5554-hanan-meets-with-accident.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.