Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

court.jpg

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தை கலைத்திருந்தார்.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைக்கும் விதமாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது அரசியலமைப்புக்கு முரணானது என சவாலுக்குட்படுத்தி, ஆர்.ஏ.எஸ்.டி. பெரேரா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கபீர் ஹாசிம், மாற்றுக் கொள்கைக்கான நிலையம் சார்பில் பாக்கியசோதி சரவணமுத்து, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோகணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், சிவில் நபர்களான லால் விஜயநாயக்க, ஜீ.சி.டி.பெரேரா, சட்டத்தரணி அனுர லக்சிறி, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல், சுமனபால, சட்டத்தரணி இந்திக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி 13 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில் பொறுப்புக் கூறத்தக்கவர்களாக ஜனாதிபதி, அப்போது ஜனாதிபதியனால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவால் அம் மனுக்கள் மீதான விசாரணை ஆராயப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை  இடை நிறுத்த, கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது.

இந் நிலையில் பிர­தம நீதி­ய­ரசர் நலின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­யர்­சர்கள் குழாம் இம்­ம­னுக்கள் விசா­ரிக்­கப்பட்டு வந்தது.

அத்துடன் கடந்த 07 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம், வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே  இன்று மாலை இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/46318

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு மாலை 4 மணிக்கு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும். நீதியரசர்கள் உரிய நேரத்துக்கு வருகைத்தராத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட  வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வௌியாகவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில்  கூடுதலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தீர்ப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் பலரும் நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்துள்ளனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலொன்றை நடத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, இன்று (13) மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், கடந்த வௌ்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தி முடிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதான வர்த்தமானி அறிவித்தலுக்கு, ஏற்கெனவே இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்பிக்கை பிரேரணை மீதான வாக்களிப்பில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக பெரும்பான்மை உள்ளமை நிரூபிக்கப்பட்டதற்கமைய, ரணில் தனதுரையை நிகழ்த்தியதையடுத்து, சபையை எதிர்வரும் 18 ஆம் திகதி  பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது. இதற்கமைய,117 வாக்குகள் கொண்ட பெரும்பான்மையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக எவரும் வாக்களிக்கவில்லை என்பதுடன் ஜே.வி.வி வாக்களிப்பில் கலந்துகொள்ளதாக அதேவேளை கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையக்கமைய மேற்கொள்ளப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் இன்று சபையில் நம்பிக்கைப் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, எத்தகையை நிலைப்பாட்டை ஜே.வி.பி கொண்டிருந்ததோ அதே நிலைப்பாட்டையே தற்போதும் கொண்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் எதிர்காலம் நாடாளுமன்றத்திடமே உள்ளது.  நாடாளுமன்றம் குறித்து மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாக, சஜித் பிரேமதாச சபையில் சமர்பித்த பிரேரணையை, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆமோதித்தார். இதனையடுத்து உரையாற்றிய அவர், 

 1948 ஆம் ஆண்டிலிருந்து எமது நாடு பல்வேறு அரசியல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. எமது நாட்டுத் தலைவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 1962 இல் ஏற்பட்ட இராணுவ சதிமுயற்சி, அதன் பின்னரான தெற்கில் பூதாகரமாகிய இளைஞர்கள் புரட்சி அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட யுத்தம் இவை எல்லாவற்றையும் விட பெரிய சதியானது, கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்டது. ஒக்டொபர் 26 ஆம் திகதி இலங்கையில் கறுப்பு வௌ்ளியாக பெயரிடப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான பிரதமரும், சட்டப்பூர்வமான அமைச்சரவையும் நீக்கப்பட்டமையானது, நாட்டில் இதுவே முதல் தடவையாகும். இதன் காரணமாக நாடு இன்று அழிவின் விழிம்பில் உள்ளது என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை காணப்படுவதனால் அவரையே பிரதமராக நியமிக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சஜத்  பிரேமதாச தெரிவித்தார்.

ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் அமைந்த, நம்பிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தும் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு வீழ்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடையும் வழங்கப்படாதுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இவற்றை வேடிக்கை பார்க்காது, ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை  நாட்டில் மீண்டும்  ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையிலான, நம்பிக்கைப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்று முன்னர் ஆரம்பமானவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக நம்பிக்கை   உள்ளதென்பது குறித்த பிரேரணையொன்றை சமர்பித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் அதிகம் நம்பிக்கையுள்ளதெனக் குறிப்பிடப்படும் நம்பிக்கைப் பிரேரணை யோசனையொன்று இன்று நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பதியூதின் ஆகியோரால் இந்த யோசனையில் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன் அரசமைப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றம் பிரேரிக்கும் மற்றுமொரு பிரேரணையும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை 11.30 மணியளவில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினத்தில் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன் இன்று நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் கலரிகள் மற்றும் விசேட பிரமுகர்களுக்கான சபாநாயகர் கலரிகள் என்பன மூடப்பட்டிருக்கும் என்பதுடன் ஊடகவியலாளர்களுக்கான கலரிகள் மாத்திரமே திறக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, தற்காலிகமாக இடைநிறுத்தி, உயர்நீதிமன்றத்தினால், இன்று (07) வரையிலும், கடந்த 13 ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நாளை (08) வரையிலும் நீடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாள்கள் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே, இந்த தடையுத்தரவை, ஏழு நீதியசர்கள் கொண்ட குழாம், நேற்று(06) மாலை நீடித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கமை, நாடாளுமன்றம் நவம்பர் மாம் 9ஆம் திகதி இரவு கலைக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியின் அந்தத் தீர்மானத்துக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் 13உம், அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, 5 அடிப்படை உரிமை மனுக்களும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய குழாம், ஜனாதிபதியின் அந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரையிலும் (இன்று வரையிலும் ) தற்காலிகமாக இடைநிறுத்தி, கடந்த 13 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு முழு நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு அன்றிருந்த அரசாங்கம் மனுத்தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுக்கள், பிரதம நீதியரசர் நளீன் பெரேரா, நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் நவம்பர் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டே ஏழு நீதியசர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், பிரதம நீதியரசர் நளீன் பெரேரா, தனது தலைமையில் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனெக்க அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டி அஃப்ரூ மற்றும் முதுரூ பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்களை நவம்பர் 26 ஆம் திகதி நியமித்தார்.

இதேவேளை, மேற்படி மனுக்களை ஏற்கெனவே பரிசீலனைக்கு எடுத்துகொண்ட மூன்று நீதியரசர்கள் குழாம், அறிவித்திருந்ததன் பிரகாரம், டிசெம்பர் 4 ஆம் திகதி தொடக்கம் நேற்று (06) வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, ஏழு நீதியசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், பல சிவில் அமைப்புகள் உள்ளடங்களாக, 13 அடிப்படை உரிமை மனுக்கள், கடந்த 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, வர்த்தமானிக்கு ஆதரவாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன, அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் 5 மனுக்களை கடந்த 13ஆம் திகதியன்று தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுக்கள் மீதான விசாரணையின் போது, கடந்த இரண்டு நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்த விவகாரத்தை கையாள முடியாது.

அதன் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கிலிருந்து நீதிமன்றம் வெளியேறவேண்டும் எனக் கோரியிருந்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (05)  மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.

தன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.

தாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சால்ஸ் நிர்மலநாதன் எம்.பி

ஜனாதிபதி எடுக்கின்ற தீர்மானங்களினாலேயே நாட்டில் இவ்வாறான நிலை  ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே இது ஆரம்பமானது. இவ்வாறான நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

அரசாங்கம் அமைக்க சதித்திட்டம் தீட்டுவோரின் ஒரு செயற்பாடே, மட்டகளப்பில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த சதித்திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய தினமே இடம்பெற்றது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்தேன்.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். இது தவறாகும். மாவீரர் தினத்தை அனுஸ்டித்த பெற்றோருக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இருவரை கைது செய்தனர் என்றார்.  

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோன் அமரதுங்க எம்.பி

அரசமைப்பின்படி பிரதமர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில், அடுத்த அதிகாரம் சபாநாயகருக்கே உண்டு. மாலை 5 மணிக்கு முன்னர் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரை நாடாளுமன்றத்துக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தை சுற்றிளைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அன்று சபாநாயகரை சபைக்குள் வரவிடாது குழப்பம் விளைவித்தவர்கள் இதனையும் செய்வார்கள்.

நாம் நீதிமன்றத்தை பாதுகாக்க வேண்டும்.பொலிஸாரும், இராணுவத்தினரும் இதற்கு இடமளிக்கக்கூடாது. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க  சபையில் தெரிவித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய  அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

குறித்த விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு, நிதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை கடைபிடிக்காது செயற்பட்டு வருகிறார் எனவும் குறிப்பிட்ட அவர், இரண்டு, மூன்று தடவைகள் கூறியும் அதனை கவனத்தில் எடுக்காது தன்னிச்சையாக செயற்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விஜித ஹெரத் எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல்வாதிகளுக்கும், நீதிமன்றில் பிணையில் விடுதலையானவர்களுக்குமே அமைச்சுப் பதவிகளையும், தலைவர் பதவிகளையும் வழங்கினார் என, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் இன்று (05), உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்கள் அன்று சபாநாயகர் ஆசனத்தை சுற்றிவளைத்து, மிளகாய் தூள் தாக்குதல் நடத்தினர் என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நளின்த ஜயதிஸ்ஸ எம்.பி

ஜனாதிபதி அரசமைப்புக்கு அமைய நடந்துக்கொள்வாராயின், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்க்கலாம்.

அரசமைப்பை ஒருபுறம் வைத்துவிட்டு செயல்படும் ஜனாதிபதியினால், உலக நாடுகளில் இலங்கைக்கு இருந்த வரவேற்று இல்லாது போயுள்ளது.

சிலருக்கு மஹிந்த ராஜபக்ஷவே இன்னும் நாட்டின் பிரதமர். சதித்திட்டத்தின் பக்கம் இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அநுரகுமார திஸாநாயக்க எம்.பி

நாடாளுமன்றில் இன்றைய தினம் விவாதம் ஒன்று நடத்தப்படவிருந்தது. அதனை வாபஸ் பெற்றனர். அடுத்து செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாகும். தற்போது நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இடமளியாது ஒரு சிலர் எழுந்து பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அதற்கு இடமளியாதீர்கள் என, சபாநாயகரை கேட்டுக்கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

அவ்வாறாயின் நாம் ஒத்திவைப்பு விவாதத்துக்கு செல்வோம் என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நளின் பண்டார எம்.பி

நாடாளுமன்றத்துக்கே நாட்டின் நிதி சம்பந்தமான பொறுப்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் நிதியை பயன்படுவதாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

26 ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதும், பொலிஸ்மா அதிபர் சென்று மரியாதை செலுத்தி அவருக்கு பாதுகாப்பு வழங்கினார். நாடளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை குறைத்தனர்.

நாட்டில் பிரதமர் ஒருவர் இல்லாத போது, பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை மாத்திரம் வழங்குங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு எதிராக ஆங்காங்கே சென்று பல்வெறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விடயம் குறித்து நான் எழுத்து மூலம் சபாநாகருக்கு அறிவித்தேன். இந்த வகையில் அது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்துவார் என, கருதுகிறேன் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்:-

தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கருத்துரைத்த சரத் பொன்சேகா,

ஒவ்வொரு நாளும் அவர் கொலை செய்திடுவார் இவர் கொலை செய்திடுவார் என, பயந்து வாழ மாட்டேன். அவ்வாறு பயந்து வாழ்வது ஒரு வித நோயாகும் என குறிப்பிட்ட அவர், நாம் அரசமைப்பை மாற்றியாவது, அமெரிக்காவைப் போன்று பிரதான அதிகாரிகளை மனநோய் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான முறையொன்று தயாரிக்க வேண்டும் என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜே.சி.அலவத்துவல எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சுகளின் செயலாளர்களை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளார். அது அரசமைப்பை மீறிய செயலாகும். ஜனாதிபதிக்கு தனது அமைச்சுகளின் செயலாளர்களுக்கு மாத்திரமே ஆலோசனை வழங்க முடியும். தற்போது நாட்டில் அரசாங்கம் என்பது இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் பங்குபற்றலின்றி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற அமர்வு,  இன்று(05), காலை 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. அதற்கு முன்னதாக காலை 9.30 க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற அமர்வை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, மஹிந்த ராஜபக்‌ஷ  எம்.பியால், உயர் நீதிமன்றத்தில், மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர், இடைக்கால நீதிப்பேராணை உத்தரவு பிறப்பித்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு தொடர்பான தீர்ப்பு, இன்று (03) பிற்பகல் 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியகட்சிகளைச் சேர்ந்த 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, ஒரு நீதிப்பேராணை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியே, மேற்படி யாதுரிமைப் பேராண்மை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, கடந்த வௌ்ளிக்கிழமையன்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிற்பகல் 3 மணிக்கு, மீண்டும் இந்த மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அப்போதே, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமெனவும் நீதிமன்றம் அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில், இந்த மனு பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்று, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணை, 122 வாக்குகளால், சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை வரை, சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எம்.ஏ.சுமந்திரன்: இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், தாமும் பேசவேண்டியுள்ளதாகக் கூறினார்.

“கருணா அம்மான், இவ்வளவு நாளும் தூங்கிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது தான் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், தற்போது உயிரிழந்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில், புத்துயிர் பெற்றுள்ள புதிய ஜந்துக்கள் தொடர்பில், எமக்கும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலைமை, ஒக்டோபர் 26ஆம் திகதிக்குப் பின்னரே உருவாகியுள்ளது. ஈபிடீபி குழுவினரும், தற்போது புத்துயிர் பெற்றுள்ளனர்.

“இவ்வாறானதொரு நிலையில், யாழ்ப்பாணத்தில் சில தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அமைச்சரென்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், “நான் மீண்டும் வந்துவிட்டேன்” என்று கூறுகிறார். இது, தமிழ்த் திரைப்படமொன்றின் பிரசித்த வசனமாகும். இது, மக்களை அச்சுறுத்தும் நோக்கிலான நடவடிக்கையாகும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சபாநாயகர்: இது விடயத்தில், ஜனாதிபதிக்குத் தான் அறிவிப்பதால், நலின் பண்டார எம்.பிக்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும், இது தொடர்பில் அறிவிப்பதாகக் கூறினார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்று, நாடாளுமன்றத்தில் இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நலின் பண்டார எம்.பி கூறியதாவது,

 “மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், தனது டுவிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் “நான், மட்டக்களப்பின் கருணா அம்மான் என்பதை, எவரும் மறந்துவிட வேண்டாம்” எனப் பதிவிட்டிருந்தார். இதனால், பொலிஸாரின் படுகொலைக்கும் கருணாவுக்கும் இடையில் தொடர்பிருப்பதாகவே சந்தேகம் எழுகின்றது. இது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்.

“நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில், கருணா அம்மான் போன்றோர், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்படுகின்றனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டியது அவசியம். இது பற்றி, வீரவன்சரும் கம்மன்பிலயும் மௌனம் சாதிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபரொருவர் இருக்கின்றாரா என்பது குறித்தும் தெரியாதுள்ளது.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகச் செயற்பட்டு வரும் கருணா அம்மான், முன்னைய காலத்தைப் போன்று, மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளார்” என்றார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, அதிகார மோக நோய் ஏற்பட்டுள்ளதென்று,  ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியினர், தேர்தலுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதுமில்லை என, அவர் கூறினார்.

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்று, நாடாளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது,

“அரசமைப்பு பிரகாரம், நாடாளுமன்றத்துக்கு இருவேறு அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று, சட்டங்களை உருவாக்கும் பொறுப்பு, நாடாளுமன்றத்துக்கு உண்டு. அதேபொன்று, அரச நிதி அதிகாரங்கள் தொடர்பான பொறுப்பும், நாடாளுமன்றத்துக்கே உண்டு.

“இவ்வாறானதொரு நிலையில், நிதி அமைச்சராகச் செயற்படுவதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எந்தவோர் அதிகாரமும் இல்லை. இந்நிலையில், நிதிக் கையாளுகை தொடர்பில் அமைச்சரொருவர் இல்லாத நிலையில்,

 
Views (3648) | Comments (0)
  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available. Bildergebnis für maiththri

ஜனாதிபதி மாளிகையில் இருந்து.... இதனைப் பற்றிய  கருத்துக்கள்  இதுவரை வெளியாகமால் இருப்பதை பார்க்க...
வெட்கத்தில்..  வெளியே தலை காட் டாமல் இருக்கின்றார்கள் போலுள்ளது.
அதற்கிடையில்... நாளை மறுதினம்   ஜனாதியால்,   விருது வழங்கி... நடத்தப்பட இருந்த...  
கலாபூஷணம் விருது .விழா காலவரையறையின்றி ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. 

வரலாற்றுத் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களின் புகைப்படங்கள் வெளியானது!

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து இலங்கையின் அதி உச்ச நீதி ஸ்தாபனமான மீயுயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பொன்றினை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்றுத் தீர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுளன.

இதில் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிகாரே, விஜித் மலல்கொட, சிசிர டி ஆப்று, மற்றும் முறுது பெர்னாண்டோ ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அங்கம் வகித்திருந்தனர்.

ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் கடந்த டிசெம்பர் 4 ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரையிலான நான்கு நாட்களாக ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே டிசெம்பர் 13 ஆம் திகதியான இன்றைய தினம் வியாழக்கிழமை சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம்,ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தஉத்தரவு அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று தெரிவித்து தீர்ப்பை அறிவித்திருக்கின்றது.

இந்த தீர்ப்பு வெளியானதை கேள்வியுற்ற ஐக்கிய தேசிய முன்னணி உட்பட எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள் கொண்டாடடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை நீதிமன்றத்தை சூழ ஏராளமான விசேட அதிரடிப்படையினரும், ஆயுதம் தாங்கிய பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு என்றுமில்லாத அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/110752

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்புக்கு முரணானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு- சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மைத்திரி தீர்மானம்

நீதியரசர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென மகிந்த தரப்பு விளக்கம்
 
 
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை தவறானது என்றும், அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அடுத்து இந்தத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை மாலை ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நவம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் பொது அமைப்புகளும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

 

இந்த மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டு மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிட்ட இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இதனால் நாடாளுமன்றம் மீண்டும் 14 ஆம் திகதி கூடியது. ரணில் விக்கிரமசிங்கவை மீ்ண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தன.

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைகளும் நாடாளுமன்றத்தில் நான்கு தடவைகள் நிறைவேற்றப்பட்டுமிருந்தன.

ஆனாலும் அதனை ஏற்க முடியாதென மைத்திரிபால சிறிசேனவும் தொடர்ச்சியாக மறுத்து வந்தார்.

இந்த நிலையில் ஏழு நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம் இன்று மாலை அந்த இடைக்காலத் தடை உத்தரவை உறுதிப்படுத்தி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தத்தச் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட நீதியர்குழு மனுக்களை விசாரித்தனர்.

குறித்த மனுக்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 13 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தபோது மூன்று நீதியரசர்களே விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

ஆனால் இந்த மனுக்கள் அரசியல் யாப்பு நெருக்கடி தொடர்பானது என்பதால் முழு நீதிமன்றமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மகிந்த தரப்புக்கு சார்பான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனால் ஏழுபேர் கொண்ட நீதியர்களை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசா் நியமித்திருந்தார்.

அதேவேளை, அரசியல் யாப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்ற அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை என மகிந்த தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரியிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தலாமா இல்லையா என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

https://www.koormai.com/pathivu.html?therivu=599&vakai=1

  • கருத்துக்கள உறவுகள்

அட... இந்தப் பிரச்சினை,  இப்போதைக்கு... ஓயாது போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அட... இந்தப் பிரச்சினை,  இப்போதைக்கு... ஓயாது போல இருக்கு.

இனித்தான் பிரச்சனையே இருக்கு.

16 minutes ago, தமிழ் சிறி said:

அட... இந்தப் பிரச்சினை,  இப்போதைக்கு... ஓயாது போல இருக்கு.

இனித்தான் பிரச்சனையே இருக்கு.

34 minutes ago, nunavilan said:

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே, விஜித் மலல்கொட, சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட நீதியர்குழு மனுக்களை விசாரித்தனர்.

பார்ரா இந்த ஏழுபேரில் ஒருத்தன் கூட தமிழன் இல்லை.

25 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்ரா இந்த ஏழுபேரில் ஒருத்தன் கூட தமிழன் இல்லை.

தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.