Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி

abdullah.jpg



பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாடல் திறன் என்றாலும், முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கும் வலி மிகுந்தவை அவை. ‘லண்டன் உங்களை வரவேற்பதில்லை’ என்ற இவருடைய கட்டுரை நூல் பிரிட்டனின் இன்னொரு முகத்தைச் சொல்வது.

ஒருநாள் தொலைக்காட்சி அறிவிப்பாளர், மறுநாள் டாக்ஸி ஓட்டுநர்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பிரிட்டன் வந்து இருபது வருஷம் ஆகிறது. ஒரு கன்டெய்னரில் வந்து லண்டனில் இறங்கினேன். டெலிபோன் காட் விற்றேன். ஊருக்கு அப்போதெல்லாம் தொலைபேசி அட்டை மூலம்தான் போன் பேச முடியும். அதில் வாரத்துக்கு 200 பவுண்டு சம்பாதித்தேன். பிறகு, உருளைக்கிழங்கு ஆலையில் வேலை செய்தேன். அடுத்து, பெட்ரோல் நிலையம். பிறகு, ‘தீபம் தொலைக்காட்சி’. 12 வருஷங்களுக்குப் பிறகு ‘தீபம் தொலைக்காட்சி’யைப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு அதன் உரிமையாளர்கள் விற்றார்கள். அதற்குப் பிறகு வேலை நெருக்கடி ஏற்பட்டது. பழைய வேலையாட்களை நீக்கினார்கள். நான் விமான நிலையத்துக்கு ஆட்களை ஏற்றி இறக்கும் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்தேன். இப்போது ஐபிசி தொலைக்காட்சியில் வேலை பார்த்தபடி டாக்ஸியும் ஓட்டுகிறேன். இது நல்ல வித்தியாசமான அனுபவம். எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்துவிட்டபடியால் இதில் கஷ்டம் ஏதும் தெரியவில்லை. உருளைக்கிழங்கு ஆலையில் இருந்தேனே, அங்கு எனக்கு என்ன வேலை தெரியுமா? இயந்திரத்திலிருந்து தோல் உரித்து வரும் உருளைக்கிழங்கில் இருக்கும் கறுப்புப் புள்ளிகளை அகற்றும் வேலை. சின்ன கூரான கத்தி கொடுப்பார்கள். கத்தி கையில் வெட்டும். ரத்தம் கொட்டும். கை குளிர் தண்ணீரில் எரியும். கிழங்குகளை வெட்ட வேண்டும். வெட்டி வெட்டி கைகள் குளிரில் விறைத்துப்போகும். அந்த வட இந்திய முதலாளி பதினைந்து வினாடிகள்கூடச் சும்மா இருக்க விடமாட்டார். ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பவுண்டுதான் சம்பளம். நான் வேலைக்குப் புதிது என்பதால், இந்த நாட்டின் குறைந்தபட்சக் கூலிச் சட்டவுரிமை இதெல்லாம் எதுவும் அப்போது தெரியாது. அந்த வேலையோடு ஒப்பிட இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு எழுத்தாளனால் சும்மா இருக்க இயலாது. இந்த அனுபவங்கள் எல்லாம் அதற்கு நன்றாகவே தீனி போடுகின்றன. அனுபவங்களைச் சொல்ல இந்தப் பேட்டியில் இடம்போதாது. அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை… இந்த இடத்துக்கு வந்து சேர எவ்வளவு நீண்ட பயணம்… அப்பாடா!



பிரிட்டனுக்கு கன்டெய்னரில் தமிழர்கள் வந்து சேரும் கொடுமை இன்னமும் நீடிக்கிறதா?
கன்டெய்னர் பயணம் என்ற வார்த்தைகளைக் கேட்கும் மாத்திரத்தில் என் முதுகு இப்போதும் வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. கொடுமைதான் அது... பெருங்கொடுமை. சாமான்கள் கொண்டுவரும் கன்டெய்னருக்குள் மறைந்து பெட்டிபோலச் செய்து ஆட்கள் உட்கார்ந்துவருவது லேசு அல்ல. கன்டெய்னருக்குள்ளேயே சிக்கி செத்துப்போனவர்கள் கதையெல்லாம் நான் கேட்டிருக்கிறேன். பலருக்கு இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றே தெரியாது. நானும் அப்படித்தான் வந்தேன். இலங்கையிலிருந்து ஒரு இலக்கியச் சந்திப்புக்காக ஜெர்மனி வந்திருந்தேன். நண்பர்கள், “இங்கேயே நில்லுங்கோ” எண்டு சொன்னார்கள். “அகதி அந்தஸ்தோடு இங்கேயே தங்கிவிடலாம்” என்று அதற்கு அர்த்தம். ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ அகதி அந்தஸ்து கோரினால் கிடைக்காது என்பதால், லண்டன் போகச் சொன்னார்கள். அப்படித்தான் லண்டனுக்கு வந்தேன். ஹாலந்திலிருந்து பெல்ஜியத்துக்கு காரில் கொண்டுவந்தான் எனது நண்பனொருவன். பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் இருக்கச் சொன்னார்கள். இருந்தேன். நான்கு தமிழர்கள் அங்கே ஏற்கெனவே இருந்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்களோடு காரில் ஏற்றி இன்னொருவன் கொண்டுபோனான். கார் போகிறது புகைபோல. ஓரிடத்தில் காரை நிறுத்தி, “இறங்கி ஓடுங்கோ” என்று சொன்னான். இறங்கி ஓடினோம். “பற்றைக்குள் படுங்கோ”... படுத்தோம். அங்கிருந்து லண்டனுக்கு சரக்கு கன்டெயினரில் கொண்டுவரப்பட்டோம். லண்டனுக்கு கன்டெய்னரில் வருவது பெரும் ஆபத்து. இப்படி வருவது குற்றம், பிடிபட்டால் கடும் தண்டனை. தெரிந்தேதான் ஆட்களைக் கடத்துகிறார்கள். எல்லையில் பொலிஸ்காரர்கள் நிற்பார்கள். எக்ஸ்ரே கருவிகள், மோப்ப நாய்கள், உள்ளே ஆட்கள் இருந்தால் அவர்களுடைய மூச்சுக்காற்றைக் காட்டிக்கொடுக்கும் கருவி இவ்வளவோடும் பொலிஸார் நிற்பார்கள். இத்தனையும் தெரிந்தே கன்டெய்னர் சாரதிகள் அகதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இங்கே கொண்டுவந்துவிடுகிறார்கள். ஆனால், இப்போது இந்தப் பாதையில் வர முடியாது. எல்லா எல்லைப் பகுதிகளிலும் கடும் காவல். பயங்கரவாதிகள் உள்ளே வந்துவிடுவார்கள் என்ற அச்சம் எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது. ஆகவே, எல்லைப் பகுதிகள் எல்லாம் கடும் காவல் போட்டுவிட்டார்கள்.

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட தமிழ்ச் சமூகம் பொருளாதாரரீதியாகக் கீழ்நிலையில் இருப்பதை இங்கே காண முடிகிறது. என்ன காரணம்?
உண்மைதான், ஊரில் யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பில் கல்விச் சமூகமாக வாழ்ந்தோம். அங்கு கல்விதான் மூலதனம். இங்கு அப்படி அல்ல. நான் கண்டேன் உணவு விடுதி ஒன்றில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஒருவர் வரவேற்பு மேஜையில் நின்றார். நாம் பெரிய வாணிபச் சமூகம் இல்லை. போரால் புலம்பெயர்ந்து இங்கு வந்தவர்கள்தான் நம்மில் அதிகம். ஒற்றுமையும் இல்லை. தமிழர்கள் என்று ஒரே சொல்லால் நீங்கள் குறித்தாலும் இங்கே பிரிவினை இருக்கிறது. ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள் வாழ்க்கை பெரிய சோபிதமாய் இல்லை. இலங்கையில் உள்ளவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்களின் தலையில் இருக்கிறது. இலங்கையிலிருந்து ‘காசு... காசு’ என்று தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கும். உடனே, இவர்கள் கிரிடிட் கார்டில் லோன் எடுத்து அனுப்பிப்போட்டு, படுக்கக்கூட இடமில்லாமல் ஓட்டாண்டியாகத் திரிவார்கள். ஒரு அறைக்குள் நான்கு இளைஞர்கள் படுத்திருப்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேலை சார்ந்து இங்கே வருவதால், கொஞ்சம் வசதியாக இருப்பார்கள். ஆனால், ஈழத் தமிழரையும் தமிழகத் தமிழர்களையும் இணைக்கிற புள்ளிகள் குறைவு. இருவருக்குமான உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, கலாச்சாரம் வேறாக இருப்பதால் இருவரும் பிரிந்துதான் வாழ்கிறார்கள். இருவருக்கும் தொப்புள்கொடி உறவென்றாலும்கூட பேச்சுவழக்கைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத சிக்கல் இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள், கோயில்கள் என எல்லாமும் இருவருக்கும் தனித்தனியாக இருக்கின்றன. இது தவிர, நமக்கே உரிய சாதிப் பாகுபாடு இருக்கிறது. எங்கே வந்தாலும், இந்த மூட்டையையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

சாதி வெறியானது சமூகப் பொருளாதாரத் தளத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் எவ்வளவு கீழே வைத்திருக்கிறது என்பதை இப்படிப் புலம்பெயர்ந்து வெளியே வந்த பிறகும்கூட நம்மாட்கள் உணரவில்லையா?
எங்கே உணர்கிறார்கள்.. ஒரு தமிழன் இருக்கிற பகுதியில் இன்னொரு தமிழன் வீடு வாங்க யோசிக்கிறான்; தொல்லை என்று நினைக்கிறான். பிரான்ஸில் இருக்கும் தமிழ்ப் பையன் ஒருவன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்து, கல்யாணம் முடித்து இங்கே அழைத்துவந்துவிட்டான். இருவரும் வேறுவேறு சாதி. “அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து ஊருக்கு அனுப்பாவிட்டால், ஊரில் உள்ள பெண்ணுடைய அப்பா - அம்மாவை வெட்டிப்போடுவோம்” என்று அந்தப் பையனைப் பயமுறுத்தி, ஊருக்குப் பெண்ணைத் திரும்ப அனுப்பவைத்தார்கள் அவனுடைய பெற்றவர்கள். இத்தனைக்கும் அந்தப் பையன் பிரான்ஸில் டொக்டர். இலங்கையில் தாழ்த்தப்பட்ட சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் - அவன் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான் - அவனோடு வேலைசெய்யும் தமிழ்ப் பெண் - அவளும் இலங்கையைச் சேர்ந்தவள், உயர்ந்த சாதியாகப் பார்க்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவள் - கல்யாணம் முடித்தாள். இருவரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். பெற்றோருக்கு முன்னறிமுகமே கிடையாது. கல்யாணத்தைக் கேள்விப்பட்டதும் பெண் வீட்டு ஆட்கள், அந்தப் பையன் ஊருக்குத் தேடிச் சென்று மிரட்டுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் ஆஃப்கன், ஆப்பிரிக்கப் பிள்ளைகளைக் கல்யாணம் முடித்தால்கூடத் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், சாதிக்கு வெளியே சக தமிழ்ப் பிள்ளையைக் கல்யாணம் முடிப்பது அவமானமாகிவிடுகிறது. இதையடுத்து, வர்க்கப் பிரிவினை வேறு. மருத்துவர்கள், பொறியாளர்களாக இங்கே உத்தியோகம் கிடைத்து வருபவர்களுக்கு தாங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்தது போன்ற எண்ணம் இருக்கிறது. அகதிகளாக வந்த தமிழர்களை அருவருப்பாகப் பார்க்கும் போக்கு இவர்களிடம் இருக்கிறது. வெட்கத்தைவிட்டுப் பேச வேண்டும் என்றால், ‘‘நீங்கள் யார்?” என்று கேட்டுப் பழகும் அவல நிலை தமிழர்களிடையே இருக்கிறது. இப்படி இருந்தால், எப்படி இந்தத் தமிழ் இனம் முன்னேறும்? குஜராத்திகள், பஞ்சாபிகள் எல்லாம் இங்கே குழுமங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்கள் குடும்பத்துக்குள் உழன்றுகொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள மேற்கத்தியக் கலாச்சாரம் இங்கு வருபவர்களிடம் நிறைய மாற்றங்களை உண்டாக்கும் இல்லையா?
நீங்கள் நினைப்பதுபோல ஆக்கபூர்வமாகச் சொல்ல நிறைய இல்லை. பிரிட்டனுக்கு வந்ததும் ஒரு தமிழனுக்கு முதலில் ஏற்படுவது கலாச்சார அதிர்ச்சி. மிக அடிப்படையானது ஆண் - பெண் உறவுமுறை. பொதுவெளியில் பிரிட்டிஷார் நீண்ட நேரம் உதட்டில் அழுத்திக் கொடுத்துக்கொள்ளும் முத்தம் உண்டாக்கும் அதிர்ச்சியிலிருந்தே ஒரு தமிழனால் விடுபட முடிவதில்லை. இங்குள்ள பையன்கள் இந்தியாவிலிருந்தோ, இலங்கையிலிருந்தோதான் பெண் தேடுகிறார்கள். பலர் சீதனம் பேசுவதில் அக்கறை காட்டுவதில்லை என்று சொன்னாலும், அதற்குப் பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? ‘கன்னிகழியாத பெண்கள்’ வேண்டும். இதற்கு அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தை  ‘குடும்பப் பாங்கான பெண்’. அப்படியென்றால், இங்கேயுள்ள பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற பெருங்கேள்வி எழுகிறது. இங்கே உள்ள தமிழ்ப் பெண்களையே இப்படிப் பார்க்கிறார்கள் என்றால், ‘கே’,  ‘லெஸ்பியன்’ போன்ற தன்பாலின உறவாளர்களை ஒரு தமிழ் மூளை எப்படிப் பார்க்கும்? இங்கே தன் பாலின உறவாளர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் குழந்தைகளை எடுத்து வளர்ப்பார்கள். ‘‘எனக்கு இரண்டு அம்மா அல்லது இரண்டு அப்பா’’ என்று அந்தப் பிள்ளைகள் சொல்லும். ஒரு தமிழ் மூளைக்குள் இதெல்லாம் நுழைவதே இல்லை. அதேநேரத்தில், கோளாறாக நிறைய நுழைகிறது. வெள்ளைக்காரர்களிடம் தவறாக உள்வாங்கிக்கொள்வது நடக்கிறது. குடும்ப உறவுகள் உடைகின்றன. நிறைய விவாகரத்து நடக்கிறது. கணவன் மனைவியை மதிப்பதில்லை. மனைவி கணவனை மதிப்பதில்லை. இங்கே ஒரு சின்ன குடும்பத்தை நடத்தக் குறைந்தது 1,200 பவுண்டுகள் வேண்டும். இந்த அடிப்படைத் தேவைக்காகவே கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போவதால், இருவர் இடையேயான பிணைப்பில் பெரிய இடைவெளி உண்டாகிறது - அதேசமயம், இருவர் மத்தியிலும் பொருளாதாரச் சுதந்திரமும் உண்டாகிறது. தனி வாழ்க்கை சுகம் தரும் என்ற மனநிலை பலரிடமும் ஏக்கமாக வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாமும் தடித்த கட்டுப்பெட்டித்தன மூளைக்குள்ளேயேதான் நடக்கிறது. நாங்கள் மனப் பிரச்சினை தொடர்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடாத்தினால், தொலைபேசி அழைப்புகள் வந்து குவியும். தமிழர்கள் மத்தியில் அவ்வளவு மனச் சிக்கல் இருக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் வீடுகளில் தமிழ் என்னவாக இருக்கிறது? இளைய தலைமுறையினர் தமிழை எப்படிப் பார்க்கிறார்கள்?
சிக்கலான கேள்வி. தமிழ்தான் இங்கே அடையாளம். ஆனால், வீட்டுப் பயன்பாட்டில்கூட தமிழ் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் படிப்பு வந்துவிட்டது, வசதி வந்துவிட்டது என்றால், அந்தக் குடும்பங்களில் முதலில் நடப்பது தங்கள் பிள்ளைகளைத் தமிழ் பேச விடாமல் பெற்றோர்கள் திசைதிருப்புவதுதான். ‘‘நான் பிரிட்டிஷ்” என்று பிள்ளைகள் சொல்வதைத் தமிழர்கள் பெருமையாக வெளியே சொல்லிக்கொள்கிறார்கள். வெள்ளைத்தோல் அல்லாத ஐரோப்பியர் என்று தங்களை எங்களுடைய மூன்றாம் தலைமுறை நினைக்கிறது. தமிழ் மொழி தொடர்பான எவ்விதக் கரிசனமும் அவர்களுக்கு இல்லை. தமிழ் மொழி தேவையில்லை என்றே நினைக்கிறார்கள். என்னதான் இந்த ஊரோடு நாம் கலந்தாலும், நம்முடைய கறுப்புத் தோல் ஐரோப்பிய சமூகத்தோடு ஒட்டவே விடாது. அப்போது தமிழ் வேரையும் அவர்கள் இழந்திருப்பார்கள். எப்படியும் இது வருங்கால சந்ததிக்குப் பிரச்சினையாகத்தான் இருக்கப்போகிறது.

போர்ச் சூழலிலோ, பிழைப்பின் நிமித்தமாகவோ இங்கு வந்து குடியேறியிருக்கும் தமிழர்கள் மத்தியில் சொந்த நாடு திரும்புகிற எண்ணம் எந்த அளவுக்கு இருக்கிறது? குறிப்பாக, அடுத்தடுத்த தலைமுறையினர் சொந்த நாட்டுக்குத் திரும்பும் எண்ணத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?
இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறைக்கு நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிரிட்டன் ஒழுங்குமுறைக்குள் வாழ்ந்தவர்கள் திரும்பிப்போய் அங்கே வாழ முடியாது. எவ்வளவுதான் செலவு இருக்கிறது என்றாலும், இங்கே ஒரு சொகுசான வாழ்க்கை இருக்கிறது. ஒழுங்குமுறை, நேர்த்தி, அடுத்த ஆட்களிடம் கரிசனம் காட்டுவது, மனித உரிமைகளுக்கு மதிப்பு இருக்கிறது. ஊருக்குப் போனால் ஒன்றுமில்லை. ஆர்மிக்காரரைக் கண்டால் பயம், போலீஸ்காரரைக் கண்டால் பயம், ரோட்டில் நடந்தால் பயம். கொசுக்கடி, நாய்க்கடி. எங்கள் தலைமுறையே அதைக் கண்டு அஞ்சும்போது, அடுத்த தலைமுறை எப்படி அங்கே போக விரும்பும்? ஆனால், ஒரு சில நண்பர்கள் ஊரில் போய் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாங்கள் இன்னும் ஊரின் மாறா நினைவுகளுடனேயே வாழ்கிறோம். அங்கு போய் கிராமத்தில் வாழ எனக்கு ஆசையாக இருக்கிறது. மகளோ, மகனோ வரத் தயாராக இல்லை.

ஆசியாவிலிருந்து, ஒரு மூன்றாம் உலக நாட்டிலிருந்து பிரிட்டன் வந்து, இங்குள்ள வாழ்க்கையைப் பார்க்க நேர்ந்தபோது, ஐரோப்பிய சமூகத்திடமிருந்து நாம் என்ன மாதிரியான விழுமியங்களை வளர்த்துக்கொள்ள / மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தமிழ்ச் சமூகம் இனி எப்படி அடுத்தகட்ட நகர்வுக்குத் தயாராக வேண்டும்?
விழுமியங்கள் என்று சொன்னால், இங்கு நான் பார்த்ததைச் சொல்கிறேன். முதலில் மனிதனை மனிதன் மதிக்கக் கற்க வேண்டும். அது நமது சமூகத்தில் மிக அரிதாகவே இருக்கிறது. சாதி பார்த்து வெட்டிச் சாய்த்துவிடுகிறோம், இது பேரவலமில்லையா! வெள்ளைக்காரச் சமூகத்தில் நான் பார்த்த முதல் விடயம் மனித மதிப்பு. இங்கு நாங்கள் அரசுக்கு வரி கட்டுகிறோம். எனவே, அரசைவிட பொதுமகனுக்கு உரிமை அதிகம் இருக்கிறது. நாங்கள்தான் அரசை நடத்துகிறோம் என்ற எண்ணம் இருக்கிறது. தவறைச் சுட்டினால் அதற்கான நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முடியும். நீதித் துறை நன்றாக இயங்குகிறது. நல்ல கல்வி, சுகாதாரத்தைக் கட்டணமில்லாமல் அரசு கொடுக்கிறது. முக்கியமாக, உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோருக்கான வேலைவாய்ப்பு இருக்கிறது. வேலை இல்லாவிட்டால், அதற்கான கொடுப்பனவு இருக்கிறது. உதாரணத்துக்கு, சாதாரண வருமானமுள்ள ஒருவர் அவர் சாப்பிட ஆசைப்படும் உணவை வாங்கி உண்ணலாம். இது சொல்வதற்குச் சாதாரணமாக இருந்தாலும், எத்தனை நாடுகளில் சாமானிய மனிதர்களுக்கு இந்தச் சூழல் சாத்தியம்? பயமற்ற வாழ்வு என்பதும் மனித வாழ்வுக்கான உத்தரவாதம் என்பதும் பெறுமதியானது அல்லவா? தமிழ்ச் சமூகம் அடுத்தகட்டம் நோக்கி நகர வேண்டும் என்றால், உலகப் போக்குக்கு ஏற்ப நம்முடைய மனப் போக்குகள், அணுகுமுறைகள் மாற வேண்டும். ஏன் போரில் நாம் தோற்றோம்? உலகமயமாக்கல் போக்கையோ, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய புவியரசியல் மாற்றங்களையோ பிரபாகரன் உணரவில்லை. இறுதிவரை வாழ்வா சாவா போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இருந்த காரணத்தினாலேயே அவர்களால் அரசியல் நீரோட்டத்தில் நுழைய முடியாமல் போய்விட்டது. விமானப்படை, கடற்படை, தரைப்படை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை எந்தக் காரணம் கொண்டும் அமெரிக்காவோ, சீனாவோ, இந்தியாவோ ஏற்றுக்கொள்ளாது என்பதை உணரத் தவறிவிட்டார்கள். அதேமாதிரியான புத்தியோடுதான் இன்னமும் நாமும் இருப்போம் என்றால் அது பெரிய சிக்கல். பிரபாகரன் இறந்துவிட்டதையே இன்னும் நம்பாமல் கதைத்துக்கொண்டிருப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள். ஏன் அங்கே தமிழ்நாட்டிலும்கூட அப்படிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? இந்த முட்டாள்தனத்திலிருந்தெல்லாம் வெளியே வர வேண்டும். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில், பொருளாதாரரீதியாக அவர்கள் மேலெழும்பி வருவதற்கான வேலைத் திட்டம் ஒன்றை எல்லாத் தமிழர்களும் இணைந்து முதலில் முன்னெடுக்க வேண்டும். ஈழத்தில் முதலீடுகளைக் கொட்டி அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொருளாதாரரீதியாக நாம் மேலெழும்பினால்தான் அரசியல்ரீதியாகவும் மேலெழும்ப முடியும். இதற்கெல்லாம் அடிப்படையாகத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை உருவாக வேண்டும்.

- டிசம்பர், 2018, ‘இந்து தமிழ்’

 

http://writersamas.blogspot.com/2018/12/blog-post_87.html?m=0

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அனலைத்தீவுக் கடலில் மீன் பிடித்திருக்கிறேன், மாத்தளையில் பாமஸி வேலை, உடுப்பிட்டியில் தச்சு வேலை, வல்வெட்டித்துறையில் கொத்து வேலை, ‘சிந்தாமணி’ பத்திரிகையில் எழுத்து வேலை, இலங்கை வானொலியில் நிகழ்ச்சி வேலை…

எந்த பள்ளியில் மட்டும் படித்தவர் என்பதை குறிப்பிட மறுக்கிறார் ..............!

எப்படி புலம்பெயர் தமிழனுக்கு சாணி அடிப்பம் என்று திரிபவர் இம்முறை பிரான்ஸ் சாதி புளுகுடன் களம் இறங்கியுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

தான் இருக்கும், வேலை மற்றும் சமூக நிலையில் இருந்து தனது பார்வையை செலுத்தியுள்ளார் என தெரிகிறது.

இவரது பார்வைக்கு அப்பால், மிக வளர்ச்சி அடைந்த தமிழ் சமூகம் இருப்பது இவருக்கு தெரியவில்லை போலுள்ளது. 

இலங்கை தமிழ் சமூகம் போல எந்த சமூகமும் மிக குறைந்த காலத்தில், கல்வியில், வேலைவாய்ப்புகளில், வியாபார முயற்சிகளில்,  அரசியலில் முன்னேறி வரவில்லை என்பதை இவர் அறிந்திருப்பதாக தெரியவில்லை. 

அருகிவரும், பேசி முடிக்கும் திருமணங்கள் தவிர்த்து தாமே அமைத்துக் கொள்ளும் திருமணங்கள் சாதியவாதம் இல்லாமல் அல்லது புரியாமலே நடப்பதை இவர் புரிந்திருப்பதாக தெரியவில்லை. 

முதலில் டாக்டரான ஜரிஸ் வெள்ளையர் ஒருவரை டேட்டிங் செய்த டாக்டர் மகள், தாயாரின் தயக்கத்தை பார்த்து..... சில மாதம் கழித்து.... உங்கள் விருப்பப்படி இலங்கையர் ஒருவரை டேட் பண்ணுகிறேன், கலியாணம் செய்கிறேன் என்றார். அவர் சிங்களவர் என்று தாய் தந்தையர் சொன்னபோது, அதனால் என்ன, நாம் ஆங்கிலத்தில் தானே பேசுகிறோம் என்று சொல்லுமளவுக்கு அவர்கள் பார்வை உள்ளது. 

இந்த சாதீயம் புரியாத புதிய சமுக நிலை இவருக்கு தெரியவில்லை போலுள்ளது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதை

இந்தக் கதையை நான் அறியவில்லை. அனஸ் என்றுதான் தீபத்தில் இருந்தார்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இந்தக் கதையை நான் அறியவில்லை. அனஸ் என்றுதான் தீபத்தில் இருந்தார்!

அவர் முதலில் இந்து பல சித்தாள் வேலைகளும் செய்ததாக மூச்சுக்கு நூறு தடவை சொல்வார் பல இடங்களில் வேலை செய்யும்போது உளவாளி என சந்தேகிக்க தகுந்த ஆதரம்களுடன் இயக்கம்களுக்குள் மாட்டுபட்டு வந்தவர் அதையும் அவர்தான் சொன்னார் திருமணத்தால் முஸ்லிமாக மாறியவர் என்பதை அவர் சொல்ல நம்ப முடியாது அவ்வளவு தீவிரம் முக்கியமாய் பிரதேசவாதம் யாழ்ப்பாணம் அதிலும் வடமராட்ட்சி ஆட்களை கண்ணில் காட்டவே முடியாது .எங்கு படித்தவர் என்பதை மட்டும் எவ்வளவுதான் குடைந்து கேட்டாலும் சொல்ல மாட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருடைய அங்கலாய்ப்பு அவர் பின்புலம் என்னவென்று தெரியவில்லை என்பதாக இருக்கிறது! அவர் சொல்கிற தரவுகள் சரியாக இருக்கின்றனவா? அவர் இரண்டாம் தலைமுறையை சாதி அந்தஸ்துப் பால்பட்டவர்களாகச் சித்தரிக்கவில்லை, புலம் பெயர்ந்த பெற்றோரையே குறை கூறுகிறார்! இதில் உண்மை இருக்கிறதா இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

இங்கே பலருடைய அங்கலாய்ப்பு அவர் பின்புலம் என்னவென்று தெரியவில்லை என்பதாக இருக்கிறது! அவர் சொல்கிற தரவுகள் சரியாக இருக்கின்றனவா? அவர் இரண்டாம் தலைமுறையை சாதி அந்தஸ்துப் பால்பட்டவர்களாகச் சித்தரிக்கவில்லை, புலம் பெயர்ந்த பெற்றோரையே குறை கூறுகிறார்! இதில் உண்மை இருக்கிறதா இல்லையா? 

நீங்கள் அவரின் மற்றைய கட்டுரைகளை படிக்கவில்லை போல் உள்ளது ஒருவித மனவக்கிர நிலையில் இருந்து எழுதுவது அல்ல காறி உமிழ்வது போன்று இருக்கும் எப்படித்தான் செம்படித்தாலும் யார் அவருக்கு வேண்டாதவர்களோ அவர்களின் ஊடகத்துறையில் புகுந்து குழப்பம் விளைவிப்பது அவரின் திறமை . ஆனாலும் புலியை எதிர்க்கும் கோஸ்ட்டி யில் இருப்பதால் எதிர்காலத்தில் இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தில் இந்திய மத்திய அரசுக்கு புகழ் பாடும் bbc தமிழ் போன்றவை இவரின் கட்டுரைகளை தூக்கி வைத்து கொண்டாடும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 1:51 AM, Justin said:

இங்கே பலருடைய அங்கலாய்ப்பு அவர் பின்புலம் என்னவென்று தெரியவில்லை என்பதாக இருக்கிறது! அவர் சொல்கிற தரவுகள் சரியாக இருக்கின்றனவா? அவர் இரண்டாம் தலைமுறையை சாதி அந்தஸ்துப் பால்பட்டவர்களாகச் சித்தரிக்கவில்லை, புலம் பெயர்ந்த பெற்றோரையே குறை கூறுகிறார்! இதில் உண்மை இருக்கிறதா இல்லையா? 

ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்று பீடிகையோடு இருப்பதால்தான் கேட்டேன். கட்டுரையில் சிறு விளக்கம் கூடக் கொடுக்காமல் தவிர்த்துள்ளார்தானே. 

மேலும் நாதமுனி இவர் தனக்குத் தெரிந்தவர்கள், பழகியவர்களை அளவுகோலாகக் கொண்டுதான் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றிச் சொல்லியுள்ளார் என்று  தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கு மேல் சொல்லவேண்டுமென்றால் சரியான தரவுகளைக் கொண்ட சமூக ஆய்வுதான் செய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.