Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழக தமிழரின் பார்வையில் ஈழமும் மக்களும்

Featured Replies

#பயணங்கள்_முடிவதில்லை
#இலங்கை

சுமார் ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து கொழும்புவில் சென்று இறங்கிவிடக்கூடிய ஃபாரின் தான் இலங்கை.

அந்த ஒரு மணி நேரத்திற்குள் சரக்கு விற்கிறார்கள். சைட் டிஷ் விற்கிறார்கள். மக்களும் வாங்கிக் குடித்து சைட் டிஷ் ஒரு வாய் போடுவதற்குள் கொழும்புவில் தரை இறங்குகிறோம் என்று கேப்டனின் அறிவிப்பும் வந்துவிடுகிறது. 50 எம் எல் குப்பி ₹500 + சைட் டிஷ் ஒரு ₹400 டாஸ்மாக்கைப் போலவே ப்ளாஸ்டிக் டம்ப்ளர் எல்லாம் கொடுத்து உபசரிக்கிறார்கள்.

கொழும்புவில் மட்டுமே தற்பொழுதைக்கு சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. (  
மற்ற இடங்களில் ஏர்ப்போர்ட் சிவிலியன்களுக்கு இல்லை.கூடியவிரைவில் செயல்படுமென்கிறார்கள். முக்கிய இடங்களில் ஏர்போர்ட் இருந்தாலும் உள்ளுர் விமானக்கள் சாமானியருக்கு கட்டுப்படியாகாது. பெரும்பாலும் ராணுவப்பயன்பாட்டிற்கானது. ) அது தென் கோடி. அங்கிருந்து வடக்கிலிருக்கும் ஜாஃப்னா என்றழைக்கப்படும் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணப்பட 395 கிலோமீட்டர்கள் பயணிக்கவேண்டும்.

நம்மூரில் 3லிருந்து அதிகபட்சம் 5 மணி நேரங்கள் ஆகும். இலங்கையில் கிட்டத்தட்ட 8 மணி நேரங்கள் ஆகிறது.

காரணம் அங்கிருக்கும் போக்குவரத்து விதிமுறைகள், ஒழுங்கு மற்றும் தனித்தனியாக போக, வர நம் ஊரைப்போல ஹைவேஸ் இல்லாமல் ஒரே பாதையாக இருப்பது.

போக வர ஒரே ஒரு சாலை. இருபக்கமும் சைக்கிள் அல்லது பைக் ஓட்டுபவர்களுக்கு கோடு போட்டிருக்கிறார்கள். சாலை நடுவில் ஒரு கோடு இதற்குள்ளாக விதிமுறைப்படி வாகனத்தை அனைவரும் ஓட்டவேண்டும். நம்ம ஊரிலும் இப்படித்தானே என்று தோன்றுகிறதல்லவா? ஆனால், இங்கே நாம் செல்வதுபோல கட்டுப்பாடற்ற வேகத்தில் அங்கே செல்ல முடியாது. அதிகபட்ச வேகம் 70கிமீ. கண்ட இடத்தில் ஓவர் டேக் செய்ய முடியாது. இடதுபக்கம் சைக்கிளோ, பைக்கோ ஓட்டும் நபர் எக்காரணம் கொண்டும் நடு சாலைக்கோ, திடீரென்று திரும்புவதோ இல்லை. அனைத்து வண்டிகளிலும் இண்டிகேட்டர் பயன்படுத்தியே ஓட்டுகிறார்கள். ஸீப்ரா க்ராஸிங் எனப்படும் மக்கள் சாலையைக் கடக்கும் இடங்களில் அவர்களுக்கே முன்னுரிமை. திடீரென்று ஒருவர் சாலையைக் கடக்க நேர்ந்தாலும் டேய் உங்கப்பா பாதர் உங்கம்மா மதர் என்று திட்டாமல், சண்டை போடாமல் ப்ரேக் மேல சகல சரீரத்தையும் செலுத்தி வண்டியை நிப்பாட்டி சாலையைக் கடக்கும்வரை காத்திருக்கிறார்கள்.

புளியோதரையோ, லேஸ் பாக்கெட்டோ, வாழைப்பழமோ தின்றுவிட்டு கார் கண்ணாடியை இறக்கி வெளியே சாலையில் தூக்கிப் போடுவதில்லை. சாலைகள் அனைத்தும் படு சுத்தம். இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். காரில் முன்னால் உட்கார்ந்திருப்பவர் இருவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணியவேண்டும்.

யாருமற்ற சாலையில் எவன் பார்க்கப்போகிறான் என்று ஆக்ஸிலரேட்டரை அழுத்த முடியாது. ஏதேனும் ஒரு புதரிலிருந்து ஹெல்மெட் மாட்டிய போலீஸார் டார்ச் அடித்து வண்டியை நிப்பாட்டி அபராதம் விதிப்பார். அல்பத்தனமான குறைந்தபட்ச அபராதமே ₹2000 என்றால் மற்றவற்றிற்கு கணக்குபோடுங்கள்.

கர்மசிர்த்தையாக இலங்கை போலிசாரின் இந்த போக்குவரத்து பரிசோதனைகள் தொய்வின்றி நடக்கிறது. இரவு 1.30 மணிக்குக் கூட ஆளறவமற்ற சந்தில் பரிசோதிக்கிறார்கள்.

எங்கு வேண்டுமானாலும் செக்கிங் இருக்கும் என்ற எண்ணமே ஒழுங்குமுறைகளை தன்னிச்சையாக வாகன ஓட்டிகளிடத்தில் கொண்டுவந்துவிடுகிறது.

இதன்காரணம் கண்ட இடங்களில் ஸ்பீட் ப்ரேக் எனும் ஹம்ப்கள் இல்லை. கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை ஒன்றைக்கூட நான் பார்க்கவில்லை. எந்த நேரத்திலும் எங்களை அழைத்துச்சென்ற நண்பர் 70கிமீ வேகத்தைத் தாண்டவில்லை. விதிவிலக்காக பேருந்துகள் மட்டும் கொஞ்சம் அதிவேகத்தில் சென்றதைப் பார்த்தேன். அவர்களையும் போலிஸார் பிடித்து அபராதம் விதித்ததையும் பார்த்தேன்.

இந்த சாலை விதிமுறைகள் மற்றும் சுத்தம் இலங்கையில் என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம்.

-@-

பொதுவாக இலங்கை நமக்கு வெளிநாடென்றாலும் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இடங்களுக்கு நாம் சென்றால் ஏற்படும் புது இடம், புதிய மொழி, மக்கள் என்ற பிரமிப்பு கூட இலங்கையில் வரவில்லை. 99% அது கேரளாவைப் போன்றே இருக்கிறது. வீடுகள், சாலைகள், மரங்களை நேசிப்பது, உணவு, நீர்நிலைகள் என்று ஒரு வித்தியாசமும் இல்லை.

போதாதகுறைக்கு எங்கெங்கு காணினும் தமிழ் அறிவிப்புகள் காணமுடிவதும், பேசமுடிவதும் சொந்த ஊரிலொரு பயணம் போன்றே உணரமுடிந்தது.

நம்மூர் அம்மா உணவகம் போல, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களைக் கொண்டு ஹோட்டல்கள் அரசாங்கம் அமைத்திருக்கிறார்கள். இலங்கையின் பாரம்பரிய உணவுகள் அங்கே சல்லிசு விலையில் சுவையாகக் கிடைக்கிறது. 

உணவகங்களில் என்ன கிடைக்கும் என்பதை சமைத்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். நாம் கேட்பதை எடுத்துத் தருகிறார்கள். காலை சமைத்து வைத்து விட்டார்கள் என்றால் அது தீரும்வரை அதுதான் நமக்கு சப்ளை ஆகிறது. சுடச்சுட என்ற பேச்சுக்கு இடமில்லை. இது பெரும்பாலான சிறிய கடைகளின் நிலை. ஆப்பத்தை எல்லாம் அடுக்கி வைத்து அதை மக்கள் பார்சல் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. 

போட்டப்ப சூடாதான் சார் இருந்துச்சி என்று பொய் சொல்லி வடையை கொடுத்து பில்போடும் நம்மூர் ஓட்டல்காரர்களுக்கு இலங்கை நல்ல வியாபாரஸ்தலம் என்றாலும். கைகளால் உணவுப்பதார்த்தங்களைத் தொட்டு மக்களுக்கு விற்பனை செய்து செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு மெனெக்கெடுகிறார்கள். 

யாழ்ப்பாண பிரதான உணவாக புட்டு, மீன் உணவுகள், தோசை, சிகப்பரிசி சோறு, தேங்காய் என்று காரசாரமாக சுவையாக இருக்கிறது. கேரள சுவை இங்கே கிடைக்கும்.

தமிழ் மொழி இங்கே பேசப்படுவதற்கும் மற்ற இடங்களில் பேசப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இலங்கை தமிழ் மக்கள் பேசும் தமிழ் இனிமையானதென்றால் யாழில் அது பேரினிமையாக இருக்கிறது. 

தேநீர் சாப்பிடலாமா என்றுதான் கேட்கிறார்கள். டீ குடிக்கலாமா என்ற நவீன தமிழ்நாட்டுத் தமிழ் அங்கே வழக்கிலில்லை. ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்கள், சிங்கள மக்கள் நிறைய உண்டு. 

எல்லா கருங்கல்லிலும், வேப்பமரத்திலும் விபூதி, குங்குமம் தடவி சாமியாக்குவதைப் போல ஆலமரத்தைக் கண்டால் பவுத்த கொடியைக் கட்டி புத்தம் சரணம் கச்சாமியாக்கிவிடுவதைக் கண்டேன்.

மரங்களின் மீது தீராக்காதல் இருக்கிறது. சிங்கள மக்களும் மரங்கள், இயற்கையை பெரிதும் நேசிப்பவர்கள் என்று சொல்லக்கேட்டேன். பார்க்கும்பொழுதும் அது தெரிகிறது.

ஊட்டியைப் போன்ற குளிரான டீ எஸ்டேட் மலைவாசஸ் ஸ்தலங்கள் முதல், கோவாவைப் போன்ற நல்ல பீச்கள் வெயிலடிக்கக்கூடிய இடங்கள், அடர்ந்த காடுகள் என்று பல பகுதிகளை உள்ளடக்கியதாக இலங்கை இருக்கிறது.

சிங்களப் பெண்கள் குறிப்பாக டீச்சர்கள் சிங்களப் பாரம்பரிய புடவைகளை அணிகிறார்கள். 

கல்வி என்ன மேற்படிப்பாக இருந்தாலும் அரசாங்கத்தால் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்விகளில் அவரவர் மத சமயங்களுக்கேற்ப ஒரு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றையும், கிறித்தவ மற்றும் இஸ்லாமியர்கள், சிங்கள மக்கள் அவரவர் சமயம் சார்ந்த விஷயங்களை தெளிவுறக் கற்கிறார்கள். சிங்கள மொழியில் எம் பி பி எஸ் கூடப் படிக்கமுடியும்.

அரசு மருத்துவமனைகள் சுத்தமாக இருக்கிறது. சிகிச்சைகள் அவற்றிற்கான பதிவேடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் குறிப்புகள் தெளிவாக இருக்கிறது.

அரசாங்கப் பரிந்துரைப்படி குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு லோக்கல் கோலா விளம்பரத்தைப் பார்த்தேன். இனிப்பைக் குறைத்து உடல்நலம் பேணுங்கள் என்ற ஒரு பொது அறிவிப்பினையும் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் அருகாமையில் கண்டேன்.

-@-

சிங்கள மக்கள் உணவு மூன்று வேளையும் சிகப்பரிசி சோற்றைக் கொண்டதாக இருக்கிறது. இனிப்புகளை தவிர்க்கும் அம்மக்கள். ப்ளாக் டீயை சர்க்கரை இல்லாமல் குடிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள தேவைப்பட்டால் பனைவெல்லம். வில்வமரத்தின் பூ மற்றும் பட்டைகள் கொண்டு ஒரு கஷாய பானம் ப்ளாக் டீ போலக் கொடுக்கிறார்கள். அருமையாக இருந்தது. இது ஹேங் ஓவர் மற்றும் வாயுத்தொல்லைகளுக்கு நல்ல மருந்தென்று கூடுதல் டிப்ஸும் சொன்னார்கள். சிவசம்போ.

மீன் அனைவருக்குமான பிரதான உணவாக இருக்கிறது. கேரளாவைப்போன்றே பல கோவில்களில் மேல் சட்டை அனுமதி இல்லை. நல்லூர் போன்ற கோவில்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தீபாராதனை நடைபெறுகிறது. வி ஐ பிக்களுக்கு பெரிய கற்பூரம், சாமானியர்களுக்கு ஜருகண்டி போன்றவைகள் இல்லை. கோவில்கள் சுத்தமாக இருக்கின்றன. எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் நல்லூர் கந்தசாமி கோவிலில் அர்ச்சனைக்கு ₹1 மட்டுமே வாங்குகிறார்கள்.

பல இடங்களில் புத்த ஆலயங்களும் இருக்கின்றன. சிங்கள மக்கள் பலர் தமிழ் கோவில்களில் பக்திப்பரவசமாக வழிபாடுகள் செய்வதைக் கண்டேன். பழக இனிமையானவர்கள், செய்நன்றி மறவாதவர்கள் என்று சிங்கள மக்களைப் பற்றிக்கூறும் நம் சகோதரர்கள் கூற்றையும் இங்கே பகிர்கிறேன்.

 அரசியல், சுயலாபத்திற்காக அடித்துக்கொண்டு பகை வளர்க்கும் மக்கள் இதில் சேர்த்தி இல்லை. அமீரகத்தில் ஒரே அறையில் ஒன்றாக உண்டு வேலை செய்யும் இந்திய பாகிஸ்தானிய மக்கள் நிலையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டிய வெகுஜன செய்தி மட்டுமே இது.

கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் பிறகு மட்டக்களப்பு பிறகு கண்டி இதற்கு முந்தைய பயணத்தில் நுவரலியா சுற்றுவட்டாரப் பகுதிகள் என்று இலங்கையின் நீள அகலமாக இவ்விரு பயங்களும் அமைந்தது. 

போருக்குப் பிறகான காலகட்டம் என்பதை மக்கள் பிரச்னை இல்லாத எதிர்காலத்திற்கான அனுக்கமான வழி என்ன என்பதாகத்தான் பார்ப்பதாகத் தெரிகிறது ( வேறு வழியில்லை) போர் நடந்த இடங்களில் பயணப்படவில்லை என்றாலும் மிக முக்கிய இடங்கள் வழி சென்றோம். ஆனையிறவு, கிளிநொச்சி, பராந்தன், அநுராதபுரம் துவங்கி, முதன் முதல் கரும்புலி தாக்குதல் நடத்திய பாடசாலை, புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த வீடு, யாழ் கோட்டை, காங்கேசன் துறைமுகம், திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த இடம், அவரின் நினைவிடம், இப்படிப் பல இடங்கள். ஓரிடத்தில் புலிகள் கேம்ப்பில் இலங்கை ஆர்மி அடித்த ஷெல் ஒன்று வெடிக்காமல் சுவற்றில் குத்தி இருந்ததை அபப்டியே நினைவுச்சின்னமாக்கி இருக்கிறார்கள்.

சுலபமாக இதைச் சொல்ல முடிந்தாலும், நாங்கள் பயணப்பட்ட சாலைகள் ஒருகாலத்தில் 100 மீட்டர் பயணப்படவே மரணத்தைச் சந்திக்கவும் தயாராக இருந்ததென்பதை சொல்லக் கேட்டபோது பெருந்துயரமாக இருந்தது. தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிபொருள், தொடர் சண்டை, தாக்குதல்கள், ரெய்டு என்று போர்க்கால அனுபவங்கள் மேலோட்டமாகச் சொல்லும்பொழுதே மனது கலங்கியது. அதைத் தொடர்ந்து விரிவாகக் கேட்க தெம்போ , மனமோ இல்லை என்பதால் அவர்களாகச் சொன்னதை உள்வாங்கிக்கொண்டேன்.

சிங்கள மக்கள் கூட வந்து பார்த்து அங்கிருந்த மண்ணை பொட்டலம் கட்டி எடுத்துச் சென்ற காட்சிகளால் தலைவர் பிரபாகரன் பிறந்த வீடு முற்றிலுமாக இடிக்கப்பட்டு ஒரு சிறிய சுவர் மட்டுமே அந்த வல்வெட்டித்துறை வீட்டில் எஞ்சியுள்ளது. 

-@-

ஊட்டி ரயில் போல சிறப்பான காட்சிகளூடே பயணப்படும் மலைப்பகுதி ரயில் துவங்கி, கொழும்பு யாழ் இடையேயான ரயில் சேவையும் உள்ளது. ரயிலோ பஸ்ஸோ பர்த் வசதிகளற்ற இருக்கை வசதிகள் மட்டுமே. கொழும்பு யாழ்ப்பாண இரவு பேருந்துகளில் இரவு முழுக்க கர்ண கொடூர ஒலியில் தமிழ் இளையராஜா பாடல்களை தெறிக்கவிடுகிறார்கள். நான் மட்டும் நித்திரைகொள்ளாமல் வண்டி ஓட்ட நீங்க மட்டும் உறங்கலாமா என்ற டிரைவரின் நல்லெண்ணம் அது. போக சைலன்ஸரில் ஒரு விஸிலைப் பொருத்திவிடுகிறார்களா என்று தெரியவில்லை. அப்பகுதி கனரக வாகனங்களில் உய்ய்ய் என்ற விஸில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

சந்தித்த மக்கள் அனைவருமே இனிமையான பாசக்கார மக்களாக இருந்தார்கள். புதிய நிலத்தில், கலாச்சாரத்தைக் காண்கிறோம் என்ற எண்ணமே ஏற்படவில்லை. மும்பை, தில்லியை விட பாதுகாப்பாக சொந்த ஊரைப்போல இலங்கையில் உணர்ந்தேன்.

கொழும்புவில் சீனா மிகப்பெரிய அளவில் கடலில் ஒரு நிலப்பரப்பை உருவாக்கி ஒரு நகரை நிர்மாணிக்கும் பணியில் இருக்கிறார்கள். இந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு வானளாவிய கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஜப்பானிய வாகனங்கள் ஆக்கிரமித்த இலங்கையில் இந்திய வாகனமும் போட்டிபோடுகிறது. டாட்டா நாநோ இலங்கையில் ஈ எம் ஐ ல் வாங்க அவர்கள் பணத்தில் 9 லட்ச ரூபாய் ஆகுமென்றார்கள்.

இந்திய ரூபாயை 2.50 ஆல் பெருக்கினால் இலங்கை ரூபாய் மதிப்பு கிடைக்கும். 

பால் என்பதே காணக்கிடைக்கவில்லை. அனைவருக்கும் பவுடர் பால்தான்.

-@-

இலங்கையின் இறந்தகால பிரச்னைகள், தடயங்கள், அரசியல், சூழ்ச்சி, மீட்சி, இன்றைக்கு அது சார்ந்து நடைபெறும்/ அரங்கேறும் விஷயங்கள் அதன் எதிர்காலம், சிங்கள, தமிழ் அரசியல், பாதிப்புகள் போன்றவற்றிற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியாக நான் கண்டவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

தைரியமாக குடும்பத்துடன் ஒரு சுற்றுலா செல்ல அருகாமையிலிருக்கும் இலங்கை ஒரு நல்ல தேர்வு. 

டுயூட்டி ஃப்ரீ ஷாப்புகளில் விற்கப்படும் சாக்லெட் விலைகளைப் பார்த்ததும் பாரின் போய்விட்டு வருபவர்களிடம் எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? என்று கேட்பது எவ்வளவு பெரிய பிழை என்பது புரிந்தது.

சுபம்.

சங்கர்ஜி

முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி!....அபராஜிதன்.!

மிகவும் சரியாக எழுதியிருக்கிறார் போலத்தான் தெரிகின்றது!

அந்தக்காலத்தில்.......இதயம் பேசுகிறது...மணியன் எழுதியதை விடவும்....ஆயிரம் மடங்கு....உண்மையாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அபராஜிதன் said:

இந்திய ரூபாயை 2.50 ஆல் பெருக்கினால் இலங்கை ரூபாய் மதிப்பு கிடைக்கும்.

என்ன கன்றாவி இது ....?
ஆள் சரமாரியா அடிச்சு விட்டிருக்கிற மாதிரி தெரியுதே ....😁😁😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.