Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரழிவைத் தவிர்க்க: ஜூட் பிரகாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு இனமாக, ஒரே சனமாக எங்களுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கிறது. இருப்பதை விட்டு விட்டு இல்லாததைத் தேடி அங்கலாய்ப்பது அதில் ஒன்று. எதைத் தந்தாலும் அதில் நொட்டை நொசுக்கு பார்த்து குறை கூறித் திரிவது இன்னுமொன்று.
 
சந்தோஷத்தை சத்தமாக கொண்டாடமல் அடக்கி வாசித்து விட்டு, அவலத்தை அகிலமெல்லாம் கேட்கத் தக்கத்தாக அழுது ஒப்பாரி வைப்பதும் மற்றுமொரு கெட்ட பழக்கம். எங்களுக்கு எந்த சின்ன நல்லதும் நடந்து விடக் கூடாது, நடந்தால் தப்பாகி விடும் என்ன மனநிலையும் அதில் அடக்கம்.
 
2015 தேர்தலில் மைத்ரி-ரணிலை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று அலட்டித் திரியும் நாங்கள், மறுவளமாக மகிந்த ஆட்சி பீடமேறியிருந்தால் அரங்கேறியிருக்கக் கூடிய அவலங்களைப் பற்றி கதைக்க மாட்டோம். 
 
உடைந்து போன இதயங்களின் உடன்படிக்கைகள் பற்றியும், நாங்கள் போட்ட உப்பை மறந்தவர்கள் பற்றியும் பேசும் எங்கள் நாக்குகள், 2015 தேர்தலை ஒட்டிய காலங்களில் வலுப்பெறத் தொடங்கியிருந்த மகிந்தவின் சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியின் கொடூர கரங்களைப் பற்றி பேசவே பயப்படும்.
 
TNAயுடனான பேச்சுவார்த்தைகளை ஒரு தலைப்பட்சமாக முறித்து, முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களையும் மாவீரர் தின நினைவேந்தலையும் தடுத்து, முஸ்லிம்களிற்கு எதிராக பேருவளையில் இனக்கலவரம் நிகழ்த்தி, சர்வதேசத்தின் நியாயத்திற்கான குரல்களையும் புறந்தள்ளி, அரசியலமைப்பை தமக்கு சாதகமாக மாற்றி, இன்னும் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தங்கள் குடும்பத்தை எந்தக் கொம்பனாலும் ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்ற இறுமாப்பில், தேர்தலிற்கு இரண்டு வருடங்கள் இருக்கத் தக்கதாகவே, தேர்தலை சந்தித்த மகிந்தவின் இருண்ட காலம், 2015 தேர்தலில் அவர்கள் வென்றிருந்தால் இன்றும் தொடர்ந்து கொண்டிருந்திருக்கும்.
 
2015 தேர்தலில் மகிந்த வென்றிருந்தால், எங்கள் மீதான அடக்குமுறையும் ஒடுக்குதலும் இன்னும் வலுவடைந்திருக்கும். அவர்களது தோல்வி, மூச்சு விட எங்களுக்கு கிடைத்த அவகாசமாகவும் பார்க்கப்பட வேண்டும். அதற்கும் மேலாக அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அழிவிற்குள்ளான இனத்தின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதற்கான வாய்ப்பாகவும் நோக்கப்பட வேண்டும். 
 
மூச்சு விட கிடைத்த அந்த ஜந்நாண்டுகளில் விடுவிக்கப்படவே படாது என்று சொல்லப்பட்ட சம்பூர், மயிலிட்டி துறைமுகம் உட்பட பல காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, நூறுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வெளியே வந்திருக்கிறார்கள், அதிகாரப் பரவலாகத்தின் அடிப்படையிலான அரசியல் யாப்பின் நகல் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதார செயற்பாடுகள் முளை விடத் தொடங்கியிருக்கின்றன.
 
நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?
 
மகிந்த தோற்று, ரணில் வென்று ஆட்சி நடாத்திய அதே காலப்குதியில், நாங்கள் நடாத்திய வட மாகாண சபையின் சீத்துவம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாராளுமன்றம் சென்றவர்கள் அரசியல் தீர்வை பற்றிப் பேச, வட மாகாண சபை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தீர்க்கும் என்று பார்த்தால், வினைத்தினற்ற நிர்வாகத்தை கொண்டு நடாத்திக் காட்டி தமிழினத்திற்கே அவப்பெயர் தேடித்தந்து விட்டார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
 
மழை விட்டும் தூறல் நிற்காத மாதிரி, வட மாகாண சபையின் ஆட்சி முடிந்தும், தனது அரசியல் முதிர்ச்சியற்ற செயற்பாட்டால் இன்றும் மகிந்த தரப்பிற்கு மேலும் மேலும் சிங்கள இனவாத வாக்குகளை அள்ளிச் சேர்க்கும் கைங்கரியத்தை செய்து, எங்களின் அழிவிற்கு விக்னேஸ்வரன் அடித்தளமிட்டுக் கொண்டிருக்கின்றார். 
 
2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடித்தது தவறு என்ற உணர்வு எங்கள் மனங்களில் உறங்கிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவை வெளிப்படையாக விமர்சிக்க எங்களுக்கு மனம் வராது. தங்கள் உயிரைக் கொடுத்து எங்களுக்காக போராடியவர்கள் செய்ததில் ஏதாவது நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கை எந்த எதிர்மறையான விமர்சனத்தையும் முறியடித்துவிடும்.
 
“பிரேமதாசவை ஏன் கொன்டவங்கள் என்று தெரியேல்ல.. “ என்ற வினாவும் அதே போலத் தான். ஆழ் மனம் கேட்கும், நண்பர்களுக்குள் கதைபடும், ஆனால் பகிரங்க வெளியில் விமர்சிக்கப்படாது. விடுதலைப் புலிகளை ஆழமாக நேசித்த மக்களின் மனப்போக்கு அது. அப்பா பிரேமதாச தீர்க்காமல் போன பிரச்சினையை மகன் பிரேமதாச தீர்த்து வைக்க மாட்டாரா என்ற ஆதங்கமும் எதிர்பார்ப்பும் மெல்ல மெல்ல எழத்தான் செய்கிறது. 
 
தேர்தல் விஞ்ஞாபனங்களும் வாக்குறுதிகளும் ஆட்சி பீடம் ஏறிய மறு நாளே மறக்கப்பட்டு விடும் என்பது நாமனைவரும் அறிந்த வரலாற்றுப் பாடம். அதே வரலாறே, கோத்தா வந்தால் எப்படி ஆட்சி நடாத்துவார், ராஜபக்‌ஷ குடும்பம் எப்படி ஆட்டம் போடும் என்பதற்கான சான்றுகளையும் தந்து விட்டு சென்றிருக்கிறது. 
 
கோத்தா வந்தால், அவலம் வரும், அவலம் வந்தால் சனம் அழும், சனம் அழுதால் சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் என்று தவறான கணக்கு போட்டு அவல அரசியல் நடாத்த முனையும் தரப்புக்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் சஜித் பிரேமதாசவிற்கு சார்பான அறிவிப்பை எதிர்த்து நிற்கின்றன. 
 
பகிஷ்கரிப்பு கோஷமும், எந்த சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு மக்களை கோர முடியாது என்ற பிரகடனமும், மக்களிற்கு அவலத்தை கொடுத்து தாங்கள் அரசியல் பிழைப்பு நடாத்த போடப்பட்ட திட்டங்களின் வெளிப்பாடாயாகும்.
 
சஜித் வந்தால் ஈழம் தரமாட்டார் ஆனால் எல்லாம் தருவார் என்பதல்ல. சஜித்தின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளையும் அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவர்கள் தந்த அவலங்கள் மகிந்த தரப்பு தந்த அவலங்களை விட எத்தனையோ மடங்கு குறைவானது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
“இது என்னடா மோட்டுத் தனமா இருக்கு, அவனும் அவலம் தாறான் இவனும் அவலம் தாறான், அப்ப ஏன் அவனுக்கு போடணும்” என்று கேட்டால், எவனுக்கும் அவலத்தை கொடுத்து எங்களது அவலத்தை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் நாங்கள் இருக்கும் பொழுது, எங்களிற்கு எவனொருவன் குறைவான அவலத்தை தருவான் என்று எதிர்பார்க்கிறோமோ அவனுக்கே வாக்குகளை வழங்குவதே நல்லது என்பது பதிலாகும். 
 
இது சிங்களத்தின் தேர்தல்.. நாங்கள் வாக்களிப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை.. நாங்க வேற நாடுடா அவங்க வேறு நாடுடா” என்று பறையும் நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள். கொழும்பில் நடக்கும் ஆட்சி வடக்கிலும் கிழக்கிலும் வாழும் எங்களின் தலைவிதியை நிர்ணயிக்கவல்லது என்றால் அந்த ஆட்சியை தீர்மானிப்பதில் நாங்களும் பங்குபற்றியே ஆகவேண்டும். எங்களது ஜனநாயக கடமையை நாங்கள் சரியாக செய்வோம். நாங்கள் சரியானதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் எங்களுக்கும் எதிர்காலத்தில் சரியானதே நடக்கும். 
 
2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவனம் முழுவதும் அரசியல் தீர்வை பெறுவதிலேயே இருந்ததால், வடக்கு கிழக்கின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்தப்படாதது ஒரு குறைபாடே.
 
 கடந்தாண்டு இறுதியில் கம்பரெலிய திட்டத்தின் ஊடாக கிடைத்த கணிசமானளவு நிதியையும், எங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வாழ்வாதார முயற்சிகளில் முதலீடு செய்வதற்கான சரியான திட்டங்களை குறுகிய காலத்தில் வகுப்பதற்கான வளங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இல்லாமல் போனதால் தான், இலகுவில் ஒப்பேற்றக் கூடிய வீதிகள் புனரமைப்பிலும் பாடசாலைக் கட்டிடங்கள் கட்டுவதிலும் செலவிடப்பட வேண்டியதாகி விட்டது போலிருக்கிறது.
 
கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசியல் யாப்பு முயற்சிகளைத் தொடர சஜித் வாக்குறுதியளித்திருப்பதாலும், வடக்கையும் கிழக்கையும் மீளக்கட்டியமைக்க சர்வதேச உதவ வழங்கும் நாடுகளின் மாநாட்டைக் கூட்டவும் சஜித் வாக்குறுதியளித்திருப்பதாலும், இரண்டையும் அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், எங்களின் கவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் சமூக பொருளாதார அபிவிருத்தி நோக்கியும் நகர வேண்டும்.
 
புலம் பெயர் ஈழத் தமிழர்கள், தமிழகம், சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழ் சமூகங்களை ஒன்றிணைத்து, யுத்தத்தால் சிதைந்து போன தமிழர் தாயகப் பிரதேசங்களின் அபிவிருத்திக்கான திட்டங்கள நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்த நாங்கள் முனைய வேண்டும். 
 
பின்னடைந்து போயுள்ள எங்கள் கல்வி தரத்தை முன்னேற்றுதல், எங்களூர் விவசாயிகளதும் மீனவர்களதும் அறுவடைகளை சந்தைப்படுத்துதல், தொழில் வாய்ப்புக்களை வழங்கவல்ல சிறிய தொழில்முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று முனைகளில் எங்கள் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், இழந்து போன எங்கள் மண்ணின் மாட்சிமை நிட்சயமாக மீண்டும் மலரும். 
 
எங்கள் மண்ணில் மாட்சிமை மீண்டும் மலர வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்றால் மகிந்தவின் மொட்டு மலரவே கூடாது. கோத்தாவும் சஜித்தும் பேரினவாதப் பிசாசுகள் தான், ஒன்று நாங்கள் நன்கு அறிந்த, எங்கள் இனத்தை கருவறுத்த பூதம், மற்றது வெள்ளையும் சொள்ளையுமாக வந்து நின்று காதல் பாட்டு பாடும் குட்டிப் பிசாசு.
 
பேரழிவுகளைத் தந்த, நாங்கள் அறிந்த பூதம் வேண்டுமா இல்லை குறையான தீமைகளைத் தரவல்ல குட்டிப் பிசாசு வேணுமா என்ற தேர்வுகளே நம்முன் வைக்கப்பட்டுள்ளன. 
 
தேர்வுகளே வேண்டாம் என்று ஓடி ஒளிந்து பேரழிவுகளை தந்த, மீண்டும் தரவல்ல, பூதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்காமல், தொடர்ந்து நாங்கள் மூச்சு விடவும், நமக்காக மரணித்தவர்களிற்கு விளக்கு கொளுத்தவும், நம்மை நாமே மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பை நமதாக்கவும் குட்டிப் பிசாசான சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பதே உசிதமானது. 
  • கருத்துக்கள உறவுகள்
Quote

நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண்டு, மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு நீர்ப்பரப்பையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, கொழும்பையே ஆட்டிப்படைத்த காலத்திலேயே அடையமுடையாதவற்றை, பதினாறு பேரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி விட்டு அடையலாம் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்ததும் பிழை தானே?

சுமந்திரன் சொன்னதை பொறுக்கி அடிக்கிறாரோ ஜூட் பிரகாஸ்.
 

Quote

 

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவனம் முழுவதும் அரசியல் தீர்வை பெறுவதிலேயே இருந்ததால், வடக்கு கிழக்கின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்தப்படாதது ஒரு குறைபாடே.


 

மேலே விக்கினேஸ்வரனை விமர்சித்த அளவுக்கு கூட்டமைப்பை விமர்சிக்க இவருக்கு மனம் வராததால் கூட்டமைப்பின் நெருங்கிய சகாவா ஜூட் பிரகாஸ்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மேலே விக்கினேஸ்வரனை விமர்சித்த அளவுக்கு கூட்டமைப்பை விமர்சிக்க இவருக்கு மனம் வராததால் கூட்டமைப்பின் நெருங்கிய சகாவா ஜூட் பிரகாஸ்??

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ...
மகிந்த கால அவலங்களை மறக்காமல் பட்டியல் போடும் பரகாஸ் 
முஸ்லிம்களால் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான ஈஸ்டர்  பயங்கரவாத தாக்குதலையும் அது யாருடைய ஆட்ச்சிக்காலத்தில் நடந்தது என்பதையும் வசதியாக மறந்து விட்டார்...மறந்து விட்டாரா மறைத்து விட்டாரா  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.