Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்யா பாலன்

Featured Replies

வித்யா பாலன்

இவர் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை ஒரு கிளார்க். தட்டச்சு பணி. அவர் தன்னுடைய எளிய வருமானத்தில் இளவரசியாகவே வித்யாவை வளர்த்தார். வித்யா அவருக்கு உண்மையில் மகள் அல்ல. உற்ற தோழி. அத்தனை விசயங்களையும் வெளிப் படையாக, ஆழமாக உரையாட முடிகிற தோழி. அப்படித்தான் வித்யா வளர்ந்தார். அந்த விசாலமான அன்பின் விஸ்வரூபமாக அவரின் கலைப்பயணம் பின்னாளில் இருக்கப் போகிறதென்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

அவர் திரைப்படத்துறையில் ஷோபா போல, ஸ்மிதா பாட்டீல் போல வரப் போகிறார் என்று அப்போது சொல்லியிருந்தால், ஒருவரும் நம்பியிருக்க மாட்டார்கள். வித்யாவை தவிர. 

வித்யா தமிழ் திரையுலகில் தான் முதலில் அடியெடுத்து வைத்தார். அது அவரை அவமானத்தின் உச்சத்திற்கு அழைத்துக் கொண்டு போய் ஆளில்லாத தீவின் அந்தரத்தில் கைவிட்ட கதை, வேறு எவருக்கும் நடந்திருந்து, இத்தனை எளிதாக அதை தாங்கிக் கொண்டு இயல்பாக கடந்து வந்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதிலை வார்த்தைகளில் சொல்வது கூட சிரமம் தான். 

‘மனசெல்லாம்’ படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டு, நடிகர் ஸ்ரீகாந்த்தோடு வெறிப்புறப்படப்பிற்கு சென்று நடிக்க துவங்கியாகி விட்டது. அவரின் மனதில் தன்னுடைய கனவுகளின் முதல் கதவு திறந்து விட்ட பரவசம். உற்சாகமாகவே ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த வேளையிலேயே தயாரிப்பாளரிடம் யாரோ இந்த பெண் செக்சியாகவே இல்லை என்று கொளுத்திப் போட, அவரிடம் சொல்லாமலே, அவரை நீக்கி விட்டு, திரிஷாவை நாயகியாக போட்டு, வேறொரு லொகேசனில் படம் பிடிக்க சென்றுவிட்டார்கள். வித்யா தன் தாயோடு அங்கிருக்கிற ஒரு சுமாரான ஹோட்டலில் தங்கியிருக்கிறார். எந்த தகவலும் அறியாமல், படப்பிடிப்பிற்கு கார் அனுப்புவார்கள் என்று மேக்கப் போட்டுக்கொண்டு வெகுநேரம் உட்கார்ந்திருக்கிறார். பிறகு தான் தெரிகிறது. அவரிடம் எதுவுமே தெரிவிக்காமல், அவரை அங்கேயே கைகழுவிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் யூனிட் கிளம்பிச் சென்று விட்ட சேதி. இப்போது வித்யா கையில் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. எப்படி சென்னைக்கு திரும்பி செல்வது. யார் வந்து ஹோட்டல் பணத்தை செட்டில் செய்வது. கையறு நிலை. வித்யா தளர்ந்துவிடவில்லை. அவருக்குள் இருந்த ஃபீனிக்ஸ் பறவை, தன் கழுத்தில் போட்டிருந்த தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு போய் அங்குள்ள அடகுக்கடையில் விற்று காசாக்கி, அந்த ஹோட்டலுக்கு தர வேண்டிய பணத்தை தந்து விட்டு, சென்னை திரும்பியிருக்கிறது. அப்போதும் வித்யாவின் மனதில் எந்த வன்மமும் ஏற்படவில்லை. யதார்த்தத்தை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, எளிதில் அந்த கசப்பை மருந்தாக விழுங்கி செறித்து விட்டார். அது தான் வித்யா. இது இருபது வருடத்திற்கு முன்னால் நடந்த கதை மட்டுமல்ல.. விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியமான இந்திய நடிகைகளில் ஒருவராக அவரை முன்னெடுத்த வரலாற்றின் முதல் அத்தியாயம்.

எந்த மனிதர்கள் அவரை செக்சியாக இல்லை என்று நிராகரித்தார்களோ, அவர்களின் கண் முன்பாகவே அவர் செக்சியாக டர்ட்டி பிக்சர் படத்தில் நசுருதீன் ஷாவுடன் நடித்து ஓவர் நைட்டில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார்.  அந்த படத்திற்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது ஒரு நகைமுரண்.

அவர் தமிழ் திரையுலகம் தந்த அவமானத்தை எங்கும் டமாரம் அடிக்கவில்லை. அந்த கங்கை மனதிற்குள் சுடராக ஏற்றி வைத்துக்கொண்டு, வைராக்கியத்தோடு முயன்றார். 

சரியான தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டும், தன்னை தயார்படுத்திக் கொண்டுமிருந்தார். அந்த தருணம் அவர் எதிர்பாராத வகையில் இந்தி திரையுலகிலிருந்து வந்தது. அவர் நடித்த பரினித்தா என்கிற ஒரு திரைப்படம், இந்தி திரையுலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டது. 

அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி..வெற்றி தான்.. வெற்றியை தூரத்திலிருந்து மூன்றாவது மனுசி போல தரிசிக்கிற வித்யாவின் மனநிலை அவரை மகோனத உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

ரகோ சலாம் ஈ இஸ்க், ஏகலைவா, உருமி, பாம்பே டாக்கீஸ், மகாபாரத், சாடி கீ சைட்எஃபெக்ட்ஸ், பேகம் ஜான், நேர்கொண்ட பார்வை, சைனிகுடு, மிஷன் மங்கள், லகே ரகோ முன்னாபாய், பா, இஷ்கியா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, தேங்க் யூ, டீன், துமாரி சுலு என்று இவரின் கிராஃப் ஒன்றின் உச்சத்தை இன்னொன்று தாண்டிச் சென்றுகொண்டே இருந்தது. மணி ரத்தினத்தின் குரு படத்தில் ஃபிசிகலி சேலஞ்ட் பெண்ணாக வந்து அசத்தியிருப்பார். ஹே பேபி திரைப்படத்தில் சிங்கிள் மதராக வந்து அசத்துவார். பூல் புலய்யா படத்தில் டிசோஸியேட்டிவ் ஐடன்டிட்டி டிஸார்டர் குணாம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். டீன் திரைப்படத்தில் ஒரு பதின்பருவ பெண்ணிற்கு நிகழ்கிற செக்சுவல் அப்யூஸை எதிர்த்து, அந்த பதின்பருவ பெண்ணை எந்தவித வடுவும் மனதில் ஏற்படாமல் நுட்பமாக அந்த சிடுக்கிலிருந்து விடுவிக்க, அமிதாப்பச்சனின் உதவியோடு போராடுவார். அற்புதமான கதாபாத்திரம் அது. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை முத்துகள்.

கஹானி, கஹானி 2, என்று தொடர்ந்து அவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன. கஹானியில் காணாமல் போன கணவனை, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வித்யா தேடிக் கொண்டிருப்பார். உண்மையில் அவர் தேடும் கணவன் ஒரு தீவிரவாதியா என்கிற சந்தேகம் காவல் துறைக்கு இருக்கும். அதை தாண்டி அதில் ஒரு காவல் அதிகாரி அவருக்கு உதவுவான். அவனுக்கு அவள் மீது மெலிதான ஒரு காதல் இருக்கும். இந்த நிலையில், அவள் அவளின் கணவனை தேடிக் கண்டுபிடித்ததும், ஒரு காளி மாதா திருவிழா கூட்டத்தில் அவனை சந்திப்பாள். சந்தித்ததும் சுடுவாள். காரணம் அவன் அவள் கணவனே அல்ல. அவன் தான் தன் கணவனை கொலை செய்தவன் என்பது அந்த உச்சக்கட்ட காட்சியில் தெரிய வரும். அதேசமயம் அவள் கர்ப்பிணியே அல்ல என்பதும் தெரிய வரும். 

இந்த உச்சக்கட்ட காட்சி ஏஞ்சலினா ஜுலி நடித்த ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து கையாளப்பட்டிருந்தாலும், அதை வித்யா தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தால் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, உணர்வுகளை மனதிற்கு நெருக்கமாக ஆக்கியிருப்பார்.

துமாரி சுலு படத்தில் வித்யா நடித்த கதாபாத்திரத்தை தான் தமிழில் ஜோதிகா நடித்து தன் ரீஎன்ட்ரியை தக்க வைத்துக்கொண்டார். அந்த படம் தான் காற்றின் மொழி. துமாரி சுலுவில் செக்சியாக இரவில் எஃப்.எம்-ல் காமம் சார்ந்த செக்ஸ் பிரச்னைகள் குறித்து கேள்விகள் கேட்கிறவர்களுக்கு இதமாய், வருடலாய், ஆதூரமாய், ரஸமாய் பதில் சொல்கிற செக்ஸி குரலழகி ஆர்.ஜே-வாக வாழ்ந்திருப்பார். 

வித்யாவிற்கு அப்பா பாலன் என்றால் உயிர். அவரும் ஒரு புன்னகை மன்னன். எப்போதும் அவரிடமிருக்கிற சாசுவத புன்னகையையே வித்யாவிற்கும் உயில் எழுதி தந்திருந்திருக்கிறார். அடிக்கடி அதற்காகவே ரகசியமாக சென்னை வந்து தன் அப்பாவின் கையால் சமைத்த சுவையான உணவுகளை ருசித்துச் செல்வது அவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரின் அப்பாவிற்கு கேன்சர். ஆனாலும், அவரின் புன்னகை அவரை இப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிற அருமருந்தாக இருக்கிறது. அவர் புன்னகையோடு தன் தந்தையை ஒருமையில் அழைக்கிற அழகை கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவே இயற்கை அவரின் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதில் உண்மை அல்லாமல் இல்லை. இந்த சூழ்நிலையிலும் அந்த எளிய மனிதர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, வித்யாவின் பேரன்பு தோய்ந்த புன்னகைக்கும் முக்கிய உண்டு.

ஆறு ஃபில்ம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருது பெற்றாகி விட்டது. பத்மஸ்ரீ விருது பெற்றாகி விட்டது. பிரபலமான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கரம் பிடித்தாகி விட்டது. என்றாலும், திரைப்படத்துறையிலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரே நேரத்தில் இப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 

மிகையில்லாத நடிப்பின் நளினம், அந்த மருளும் விழிகளின் ஜாலங்கள் அவரது தனித்தன்மை.

வித்யா பாலன் ஐந்து மொழிகளிலும் நடித்து வெற்றியை தன் வசப்படுத்திக் காட்டியிருந்தாலும், அவர் துவக்கத்தில் பட்ட அவமானங்களை வன்மங்களாக மனதில் ஒரு நாளும் ஏற்றிக் கொண்டதில்லை. அந்த ஸென் மனநிலை தான் அவரின் இந்த பரிபூரண வெற்றியின் பின்புலம் என்று எதனாலோ உள்ளுணர்வு சொல்லச் சொல்கிறது. அப்படியானால், அந்த சொற்கள் அப்பட்டமான உண்மையாக தானே இருக்க முடியும்.

வித்யா பாலன் இப்போது கணிதமேதை சகுந்தலாதேவியாக சகுந்தலாதேவி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னை காயப்படுத்தியவர்களுக்கும் சேர்த்தே மருந்திடும் மகோனத புன்னகைக்கு சொந்தக்காரான வித்யா, அதனாலேயே, தனதான எல்லா பக்கங்களிலும் நேர்த்தியான வெற்றிகளை சாசுவதமாய் தொட்டுக்கொண்டே இருக்கிறார்.

 

முகநூல்

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

ஓ மை கோட் நான் இவ்வளவு நாளும் இவ மலையாளி என்றல்லவா நினைத்துக் கொண்டு இருக்கிறன்...என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவர் ...தமிழ்த் திரையுலகத்திற்கு தமிழர்களை பயன்படுத்த தெரியாது என்பது  மிகவும் துரதிஸ்ட்டமானது.

 

தமிழனுக்கே தமிழனை வைத்து பயன்படுத்த தெரியாது  படம் எடுக்கவும் தெரியாது 

ஒரு சிலபேரை மட்டும் சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.