Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன் குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

வவுனியாவிற்கு இன்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என இயன்றவரை இலங்கை அரசாங்கம் போராடி வருகின்ற நிலையில் அவர்களுடன் இணைந்து ஒரு சில தமிழ் தரப்புக்களும் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரேரணையில் வலு கிடையாது பிரயோசனமற்றது என கூறி வாக்களிக்கும் நாடுகளின் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தி வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார்.

சர்வதேச தளம் ஒன்றில் இலங்கையை தொடர்ந்தும் மேற்பார்வை செய்வதாக இருந்தால் இந்த பிரேரணை நிச்சம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி நாளைய தினம் பிரேரணை நிறைவேற்றப்படும் என்ற நல்ல செய்தியை மக்கள் அறிவார்கள் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1203980

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் பிரேரணை தோற்க வேண்டுமென சில தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாக செயற்பட்டன – சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லையென பிரசாரம் செய்துவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி இறுதி தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் முதலாவது தீர்மானமாக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் 2009ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் வாக்குகெடுப்புடன் மூன்று தீர்மானங்களும் அதனை தொடர்ந்து 2015, 2017, 2019ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இணை அனுசரணையுடன் இணைந்து வாக்கெடுப்பு இல்லாமல் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இறுதியாக நிறைவேற்றப்பட்ட 40/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் இலங்கையில் நிலவுகின்ற விடயங்கள் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரலுவலகம் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது. அந்த அறிக்கை டிசம்பர் மாதமே ஒரு வரைபாக இலங்கைக்கு காண்பிக்கப்பட்டதாக நாங்கள் தற்போது அறிந்தோம். அது ஜனவரி நடுப்பகுதியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை கடந்த அறிக்கைகளை விட மிகவும் காட்டமாக இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்ற பொறுப்புக்கூறல் நடவடிக்கை தொடர்பான விடயங்களிலோ நல்லிணக்கம் ஏற்படுத்துவதாகக் கூறி வழங்கிய வாக்குறுதிகளையோ நிறைவேற்றாமல் பின்னடித்ததை அந்த அறிக்கையில் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி உள்நாட்டுக்குள்ளேயே பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் சரியாக வராது என்பதையும் அவர் தீர்மானமாகக் கூறியிருக்கின்றார்.

இந்த அறிக்கையினையடுத்து குறித்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தினை பிரித்தானியா தலைமையிலான ஆறு இணை அனுசரணை நாடுகள் முன்வைத்தன. அது முன்வைக்கப்படுவதற்கு முன்பாக தமிழ் தேசியக் கட்சிகள் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியிருந்தோம்.

அதில் பொறுப்புக்கூறல் என்ற பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். இலங்கை உறுதியளித்த பல விடயங்களை நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவும் புதிய ஆட்சி பதவியேற்றதன் பின்னர் அந்தத் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்திருந்த நிலையில் பொறுப்புக்கூறல் என்ற வியடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே செல்லவேண்டும், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக செயலாளர் நாயகத்திடமும் பொதுச்சபையிலும் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்புச் சபை மூலமாக மட்டும்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படலாம்.

இதனுடன் இணைந்து சாட்சியங்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அண்மையில் சிரியாவிலும் மியன்மாரிலும் இவ்வாறான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி அப்படியான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரரணையில் அந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறை, பொறுப்புக்கூறல் தொடர்பாக செய்யப்படமாட்டாது. இலங்கைக்கு அது தொடர்பான கரிசனையில்லையென அந்தத் தீர்மானம் சொல்லுகின்றது.

அதுமட்டுமன்றி முழுமையான பொறுப்புக்கூறல் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு முன்பாக இந்த விடயங்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினைப் பொறுத்தவரையில் அதன் அங்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எதனையும் பாரப்படுத்தமுடியாது.அதற்கான அதிகாரம் அவர்களிடத்தில் இல்லை. அதனை பாதுகாப்பு சபை மட்டும்தான் செய்யமுடியும். அதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று அவர்கள் சொல்லமுடியாது. இதன்காரணமாகத்தான் அதன் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு முழுமைபெற்ற பொறிமுறைக்கூடாக இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதை அவர்கள் நேரடியாகச் சொல்லவில்லை. நாங்கள் கேட்டுக்கொண்ட விடயம் அங்கு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அது வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. சாட்சியங்களைச் சேகரிப்பது, பேணுவது, பரிசீலனை செய்வது என்ற மூன்றையும் மேற்கொள்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படவுள்ளது.இந்நிலையில், இது தமிழ் மக்கள் சார்பிலே கேட்டுக்கொண்டதற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எப்போதையும்போல பலர் இதனை ஒரு தோல்வியாகச் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு என்று சிலர் செயற்பட்டனர்.

பிரேரணையில் எந்தப் பிரயோசனமும் இல்லை, இந்தத் தீர்மானம் தேவையற்றது என்றெல்லாம் சொல்லி அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், தற்போதும் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லையென்ற பிரசாரத்தினை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.எந்ததெந்தக் கருவியை எந்ததெந்த வகையிலே உபயோகிக்க முடியும்? உச்சளவுக்கு ஒரு கருவியை எந்தளவுக்கு உபயோகிக்க முடியும் என்று தெரிந்தவர்களுக்கு ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானம் வலுவான தீர்மானம் என்று தெரியும்.

சாட்சியங்களைச் சேகரிக்கின்ற பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகையினால், இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த பிரித்தானியா உட்பட்ட நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். 11 நாடுகள்தான் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு இரட்டிப்பான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

நடு நிலையாக இருந்த நாடுகளின் மனநிலையிலும் மாற்றமுள்ளது. இந்தியா நடுநிலை வகிப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தெட்டத்தெளிவாக இலங்கையின் ஆட்புல ஒற்றுமைக்குச் சமாந்தரமாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லியுள்ளார்கள்.

தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று திட்டவட்டமாக அறிக்கையூடாகச் சொல்லப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி, அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதும் 13ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுவதும் எந்தத் தங்குதடையுமன்றி மாகாண சபைகள் இயங்குவதும் விரைவாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக நடுநிலை வகித்த இந்தியா சொல்லியுள்ளது.

இது கால அவகாசம் வழங்கும் தீர்மானம் அல்ல. என்றைக்கும் எந்தத் தீர்மானங்களும் இலங்கைக்குக் கால அவகசாம் வழங்குவதில்லை. ஒருவருட வாய் மூலமாக அறிக்கை என்ற விடயம் இன்று ஆறு மாதங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டு வருட இறுதியில் எழுத்துமூலமான அறிக்கையென்று சொல்லப்பட்டுள்ளது. அது மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு. அது நாட்டுக்குக் கொடுக்கின்ற காலக்கெடு அல்ல. இது தொடர்பாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என்று நம்பியிருந்தேன். இப்போது அது தொடர்பாக சந்தேகம் வந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் சாதாரண பிரேரணையை நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கைதான் கருத்தில்கொள்ளப்படும். வாக்களிக்காதவர்கள் தொடர்பாக கருத்தில்கொள்வதில்லை.நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஏதாவது, கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு சென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக சமாதானப் படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும் எனசுமந்திரன் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/ஐ-நா-வில்-பிரேரணை-தோற்க-வே/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் திருப்புமுனையான ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது- எம்.ஏ.சுமந்திரன்

 
DSCN1701-696x522.jpg
 32 Views

எந்த எந்தக் கருவியை எந்த எந்த விதத்திலே உபயோகிக் முடியும், உச்ச அளவிலே எவ்வாறு ஒரு கருவியை உபயோகிக்க முடியும் என்று தெரிந்தவர்களுக்கு இந்தத் தீர்மானம் மிக மிக காட்டமான, வலுவான தீர்மானம் என்பது தெரியும் எனத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,  மிகவும் திருப்புமுனையான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

 மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் எம்.ஏ.சுமந்திரன் பதில் அளித்தார்.

கேள்வி :
அண்மையில் தினேஸ் குணவர்த்தன அவர்கள் தெரிவித்துள்ள நடுநிலை வகித்த 14 நாடுகளையும் சேர்த்து நாங்கள் தான் வென்றிருக்கின்றோம் என்ற கருத்து தொடர்பில் தங்கள் கருத்து?

பதில் :
தினேஸ் குணவர்த்தனவிற்கு சாதாரண எண்கணிதம் தெரியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிஸ்டவசமாக தற்போது அதில் பெரிய சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில் இலங்கைப் பாராளுமன்றத்திலும் சாதாரண பெரும்பான்மையோடு எதையாவது நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையைத் தான் கணக்கிடுவது வாக்களிக்காதவர் தொடர்பில் கணக்கிடுவதில்லை. அப்படி வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையை எண்ண வேண்டுமாக இருந்தால் அது விசேடமாக விசேட பெரும்பான்மையாகச் சொல்லப்படும். தான் சபை முதல்வராக இருக்கின்ற தங்களின் பாராளுமன்றத்திலேயே எப்படியாகக் கணக்கெடுப்பதென்பதை மறந்து அவர் தவறான கணக்கினைக் காட்டிக் கொண்டிருக்கின்றார். பாவம் அவரது எண்கணிதம் பற்றி பலவாறான விமர்சனங்கள் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கு மேலும் அவரை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை.

கேள்வி :
சர்வதேச தடைகள் இலங்கைக்கு வரலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்ற இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் :
இந்த சூழ்நிலையில் அப்படியான சாத்தியம் இல்லை. ஆனால், நாடு போகின்ற போக்கைப் பார்த்தால் நிலைமை மோசமாகிக் கொண்டு போகின்றது. ஏதாவதொரு கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு செல்லுமாக இருந்தால் பாதுகாப்புச் சபை மூலமாக அப்படியான ஒரு நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

கேள்வி :
இந்த அரசாங்கம் ஐநா வின் தீர்மானத்தை அமுல்ப்படுத்தும் என்று நினைக்கின்றீர்களா? அவ்வாறு அமுல்ப்படுத்தாவிடின் விளைவு எவ்வாறிருக்கும்?

பதில் :
அரசாங்கம் அமுல்ப்படுத்த வேண்டும் என்றே ஐநா மனித உரிமைப் பேரவை சொல்லுகின்றது. 2012, 2013ம் ஆண்டு தீர்மானங்களைப் பார்த்தால் உங்களுடைய சொந்த ஆணைக்குழுவான கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் சொல்லியிருந்தார்கள். நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் தான் 2014ம் ஆண்டு ஒரு சர்வதேச விசாரணையை ஆணையிட்டார்கள். தற்போது பத்து வருடங்கள் கடந்த நிலையிலே இத்தனை வாக்குறுதிகளையும் கொடுத்த நிலையிலே நீங்கள் செய்யவில்லை என்று சொல்லித்தான் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் ஆரம்பமாயிருக்கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையொன்று நடப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. ஏனெனில் சாட்சியங்கள் சேகரிப்பதென்பது. பகிடிக்காகச் சேகரித்து பூட்டி வைப்பதற்காக அல்ல. அதனைப் பாவிப்பதற்கு. அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல. உறுப்பு நாடுகள் இவ்வாறான குற்றங்களைப் புரிந்தவர்கள் என்று சந்தேகிக்கின்றவர்ககள் அந்த நாட்டினூடாக வந்தால் அவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக இந்தச் சாட்சியங்களை உபயோகப் படுத்தலாம்.

எனவே இலங்கை ஆட்சியாளர்கள் தாங்கள் காப்பாற்றுவோம் என்று நினைத்துக் கொண்டு பாதுகாப்பாக வைத்திருப்பவர்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பமாயிருக்கின்றது. இலங்கை இராணுவத் தளபதி அமெரிக்காவிற்குச் செல்ல முடியாது. அவரது நெருங்கிய உறவினர்களும் செல்ல முடியாது. பிள்ளைகள் படிப்பதற்கும் செல்ல முடியாது. அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா 52 இராணுவத்தினருக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையைப் போட்டுடைத்துள்ளார். எனவே இந்த அழுத்தங்கள் இன்னும் பெருகிக் கொண்டிருக்கும். இலங்கை தான் கொடுத்த வாக்குறுதிகளைத் தொடர்ச்சியாக மீறிச் செயற்படுமானால் நிலைமை இன்னும் விபரீதமான நிலைக்குச் செல்லும்.

கேள்வி :
தமிழத் தேசியப் பரப்பிலுள்ள மூன்று கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஐநா சபைக்கும் உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தீர்கள். அதன் பிற்பாடு நீங்கள் ஒரு கடிதம் ஐநா சபைக்கு அனுப்பியதாகவும் அதன் காரணமாகத்தான் வலுவான தீர்மானம் வலுவிழந்து போனதாகவும் பாரானமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மற்றும் சிவகரன் ஆகியோர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் :
அவர்கள் அவ்வாறு சொல்லியதாக நான் அறியவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்துள்ளீர்கள் போலுள்ளது. கடிதம் அனுப்பியதென்றால் ஜனவரி மாதம் 16ம் திகதி கஜேந்திரகுமார் அவர்களும் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்றுதான் அனுப்பப்பட்டது. வேறு கடிதங்கள் அனுப்பப்படவில்லை. எனவே அதில் திரு. சம்பந்தன், திரு. விக்னேஸ்வரன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். அந்தக் கடிதம் மாத்திரம் தான் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் அமர்ந்திருந்து வரைந்தது நான். அதனை பிழையான கடிதம் என்று கஜேந்திரகுமார் கதைத்திருப்பாராயிருந்தால் அது தொடர்பில் அவரிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் கடிதத்தில் நாங்கள் கேட்ட விடயங்கள் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது தொடர்பில் நான் முன்னமே விளக்கியுள்ளேன்.

கேள்வி :
மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படாமைக்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என்றும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை நடாத்தாமல் இருந்தது. அதன் காரணமாகவே இத்தனை காலமும் இழுத்தடிக்கப்படுகின்றது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பில் தங்கள் கருத்து?

பதில் :
மாகாணசபைத் தேர்தல் நடத்தமுடியாமல் இழுத்தடிக்கப்பட்டமைக்கு நாங்கள் காரணம் அல்ல. அந்த வேளையிலே புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது மூன்ற விடயங்களிலே ஒரு விடயம் குறிப்பாகச் சொல்லப்பட்டிருந்தது. பாராளுமன்றத் தேர்தல் முறை. அந்த தேர்தல் முறை எவ்வாறு நடைபெற வேண்டும் என்று ஒரு இணக்கப்பாடு எய்தப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றத்தில் மட்டுமல்லாது மாகாணசபைக்கும், உள்ளுராட்சி சபைக்கும் அவ்வாறான முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடும் வந்தது. உள்ளுராட்சி சபைத் தேர்தலும் அப்போது காலம் கடந்திருந்தது எனவே அந்த இணக்கப்பட்டின் அடிப்படையில் தான் அதனை மாற்ற உள்ராட்சி சபைத் தேர்தல் நடாத்தப்பட்டது. அதே விதமாக மாகாணசபைகளுக்கும் தேர்தல்கள் வருகின்றது என்ற காரணத்தினால் மாகாணசபைத்தேர்தலுக்குமான முறைகளும் மாற்றப்பட்டது. ஆனால், அதனை அமுல்ப்படுத்த முடியவில்லை.

அதற்கக் காரணம் என்னவென்றால் பாராளுன்றத் தேர்தல்கள் விகிதாசார முறைமைக்கு முன்னர் தொகுதிகள் இருந்தன. அதனால் பாராளுமன்றத்தில் கலப்புத் தேர்தல் முறையைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படவில்லை. உள்ளுராட்சித் தேர்தல் முறையிலும் முன்னர் வட்டாரங்கள் இருந்தன. அதனால் அதுவும் கடினமாக இருக்கவில்மைல. ஆனால் மாகாணசபை என்பது 1987, 1988 களில் அறிமுகப்படுத்தப்பட்மையினால் அது முற்றுமுழுதான விகிதாசார முறைமையிலே இருந்தமையால் அதற்குத் தொகுதிகள் இருந்ததில்லை. அதில் இந்த புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தவதற்கு தொகுதிகளை முதலில் வரையறுக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது. அதற்கான குழு அமைக்கப்பட்டு அதற்கான அறிக்கையெல்லாம் கொண்டு வரப்பட்டபோது அது ஏற்புடையதல்ல என்று முழுப் பாராளுமன்றமும் நிராகரித்து. அந்தத் தொகுதிகளை வரையறுத்துக் கொண்டுவந்த அறிக்கையைச் சமர்ப்பித்த அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்தார். அதன் காரணமாக திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ மாகாணசபைத் தேர்தல் நடத்த முடியாமல் இருக்கின்றது. ஏனெனில் தொகுதிகள் இல்லாமையினால். இதுதான் உண்மைக் காரணம் அதற்கு ஒரு கட்சியோ இரண்டு கட்சியோ காரணம் அல்ல.

அப்படியான ஒரு நிலைமை வந்த பிறகு உடனடியாகப் பழைய முறைக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தினோம். தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வற்புறுத்தியது. அதனை அரசாங்கம் செய்யாமல் இருந்த காரணத்தினால் சென்ற பாராளுமன்றத்திலே உடனடியாகப் பழைய முறையில் தேர்தலை நடாத்த என்னால் தனிநபர் சட்ட மூலமும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதேவேளை பாராளுமன்றம் கலைந்து விட்டது. ஆகையினால் இப்போதுள்ள அரசாங்கம் சொல்லுகின்றது தாங்கள் அதனைத் திருத்துவோம் என்று. மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்பட முடியால் இருப்பதற்குக் காரணம் சட்டம் முதலில் திருத்தப்பட வேண்டும். அதனை அரசாங்கம் தான் செய்ய வெண்டும்.

இதற்கான அழுத்தத்தை நாங்கள் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவின் அறிக்கையில் அது பிரதானமானதாகவும் இருக்கின்றது.

கேள்வி :
கண்ணியா வெண்ணீறூற்று காணி விடயம் தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பதில் :
கண்ணியா வெண்ணீறூற்று இருப்பதும், பிள்ளையார் ஆலயம் இருந்ததும் தொடர்பில் அந்தக் காணியின் விஸ்தீரணம் மிகப் பெரியது. அது ஏக்கர் கணக்கில் இருக்கின்றது. அது முழுவதும் திருகோணமலை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலம். அதன் உரித்து சம்மந்தமாக எந்தவிதக் கேள்வியும் எழுப்பவில்லை. தொல்லியல் திணைக்களமும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தக் காணியில் காணிச் சொந்தக் காரர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு தொல்லியல் பெறுமதியுடைய இடம் அங்கு இருக்குமாக இருந்தால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமை சட்டத்தின் மூலம் தொல்லியல் திணைக்களத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிள்ளையார் கோவில் இருந்த பகுதி சிதைந்த கட்டிடமும் மேடும் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே தொல்லியல் பெறுமதிவாயந்த இடமாக அதுவே அடையாளம் காணப்பட்டுள்ளமையால் அதில் கட்ட முடியாது.

அப்போது கோவிலை எங்கே கட்டுவதென்று கேட்டபோது தொல்லியல் பொருட்கள் இல்லாத ஒரு பிரதேசத்தை அவர்கள் அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். இங்கு கட்ட முனைந்தால் இங்கு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. ஆகையினால் அந்தப் பிரதேசத்தில் கோவிலைக் கட்டலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். எனவே பரதேசம் தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே பிள்iயார் கோவில் கட்டலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. கோவிலின் விஸ்தீரணம் தொடர்பில் தீர்மானிப்பது அதனைக் கட்டுகின்ற நிலச் சொந்தக் காரரே தவிர வேறு எவரும் இல்லை. ஆனால் கட்டுகின்றபோது சாதாரணமாக கட்டிடத்திற்காகப் பெறப்படுகின்ற அனுமதி பெறப்பட வேண்டும்.

நாங்கள் அந்த வழக்குத் தாக்கல் செய்ததன் நோக்கம் இரண்டு. ஒன்று பிள்ளையார் கோவில் கட்டுவதைத் தடுத்தார்கள். அதனைத் தடுக்கக் கூடாது என்று கேட்டோம். அடுத்தது அதில் விகாரையொன்றைக் கட்ட முனைந்தார்கள். அவ்வாறு கட்டக் கூடாது என்று கேட்டோம். அந்த வழக்கில் இறுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தீர்ப்பு அல்லது முடிவு என்னவென்றால் அங்கு விகாரை கட்ட முடியாது தொல்லியல் இடங்களைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும் மட்டும் தான் தொல்லியல் திணைக்களத்துக்கு அனுமதியுண்டு. இரண்டாவது பிள்ளையார் கோவில் கட்டலாம். எனவே நாங்கள் வழக்கு எதற்காகத் தாக்கல் செய்தோமோ அந்த இரண்டு விடயங்களும் எய்தப்பட்டிருக்கின்றது.

கேள்வி :
வெளிவந்துள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில் :
பாராளுமன்றத்திலே இந்த விவாதத்தின் முதலாவது நாளிலேயே நான் கலந்து கொண்டு பேசியிருந்தேன். இந்த அறிக்கையில் எமக்குத் திருப்தியில்லை என்பதை வெளிப்படுத்தியிருந்தோம். ஏனெனில் இரண்டு வருடங்களாகியும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடைய சூத்திரதாரி யார் என்பதை இன்னும் இந்த அறிக்கை காட்டவில்லை. கர்தினால் ஆண்டகையும் அதைத்தான் சொல்லியிருந்தார். இதன் சூத்திரதாரியைக் கண்டுபிடியுங்கள், இதனை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது? பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலே நாங்கள் ஒரு அறிக்கையைக் கொடுத்திருந்தோம். அதில் நாங்கள் சில சில இடங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றோம். நாட்டில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்றது, ஒரு பலமானவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஒரு உணர்வைக் கிளப்புவதற்காக இது செய்யப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டும் என்று நாங்கள் அதில் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறு சில சில இடங்களை நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றோம். அதற்கான விசாரணைகள் நடாத்தப்படவில்லை.

இந்தத் தாக்குதல் என்பது தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் அறிந்த விடயம் அல்ல. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்து செய்யப்பட்ட ஒரு தாக்குதல். மூன்று வாரத்திற்கு முன்னதாகவே அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கின்றது, பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவையெல்லாம் சரியாகவும் இருந்திருக்கின்றது. எனவே அந்த அறிவு எவரிடத்திலேயோ இருந்திருக்கின்றது. அப்படியிருக்கும் போது சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றது. முன்னறிவித்தல் தெரிந்தவர்களுக்காவது தெரிந்திருக்க வேண்டும் இதன் பின்னணியிலே யார் இருந்திருக்கின்றார்கள் என்று. ஆகையினாலே இது ஒரு பாரிய சதியொன்றை மூடி மறைப்பதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

கேள்வி :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய சரிவினைக் கண்டது. அதனை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்வரும் தேர்தலிகளில் கூடுதல் ஆசனங்களைப் பெறுவதற்கு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளீர்கள்?

பதில் :
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி பாரிய பின்னடைவைக் கண்டது. இதனை நான் பல இடங்களிலும் சொல்லியிருக்கின்றேன். தற்போது நாங்கள் திருந்தி விட்டோம் என்று நினைக்கின்றேன். மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கின்ற ஆதரவுத் தளம் தற்போது பெரிய அளவில் பெருகியிருக்கின்றது. ஆகையினாலே வரப்போகின்ற மாகாணசபைத் தேர்தலில் இரண்டு மாகாணசபைகளிலும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=45590

முன்னர் தம் கொள்கைக்கு மாற்றானவர்களை, வேறு கருத்துக் கொண்டோர்களை துரோகிகள் என்றார்கள், இன்று கைக்கூலிகள் என்கின்றார்கள். இரண்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை.

மீண்டும் மீண்டும் எதிர் கருத்துகளையும் கொள்கைகளையும் மதிக்காமல் அதே பாதையில் தான் இவர்களும் செல்கின்றனர். இதற்குள் ஆயுத போராட்டங்களில் ஈடுபட்ட இயக்கங்களை குறை கூறிக் கொண்டு... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.