Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் விவேக் நினைவலைகள்

Featured Replies

சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன.

பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம்.

எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும்.  

வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது. 

அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?!

தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள். 

அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான். 

இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள். 

இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை. 

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! 

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். 

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். 

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! 

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 

பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! 

பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே  செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை.

வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம்.  அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும்.

‘The Good, The Bad and The Ugly’ என்றொரு இத்தாலிய சினிமா.  நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன்  ‘The Good, The Bad and The Ugly’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன்.  இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்’ இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்!

நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன்.

நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது.  மனம் திறந்து : கடைசி முத்தம்! 

- நடிகர் விவேக்

மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் விவேக் எழுதிய கட்டுரை.

 

†*************************†**********

#FB

பாவிங்களா இது மைல் கல்றா !ஊர் பேர் . தெரியாத அளவுக்கு இதையும் சாமியாக்கிட்டீங்களேடா..!? விவேக் தவிர வேறு யாராவது சொல்லியிருந்தால்..ஒரு கூட்டம் கொடி பிடித்திருக்கும்.அவருக்கு முத்திரை குத்தி ஒதுக்கியிருக்கும்.கத்தி மேல் நடக்கும் கருத்துக்களைக் கூட விவேக்கால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல முடிந்தது.
அக்ராஹரத்து அய்யராக நடிக்கும் போது பகுத்தறிவு பேச முடிந்தது.கழுதைக்கு கல்யாணம் செய்தால் மழை வரும் என்ற பாமரர் நம்பிக்கை மூட நம்பிக்கை என்று உடைக்க முடிந்தது.
திரைத்துறையில் இருந்து கொண்டே தற்கால திரையிசையை கிண்டலடித்த காட்சிகள் உண்டு.
உடலை அலட்டாத உடல் மொழி எனினும்.. அவரின் ஆமாம் கோபால் 
கொஞ்சம் நடிக்கவும் செய்தேன் அந்த கெட்டப்..பிறகு தென்காசி பட்டணம் படத்தில் அதான் ஒன்பது மணிக்கா இப்படி வந்தேன் பெண் கெட்டப்பில் கலக்குவார்.
போலி சாமியாராக பல படங்களில் கலக்குவார் . தொலைக்காட்சி ராசிக் கல் விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு,வாஸ்து குறித்து , திடீர் சாமிகள் உருவாவது குறித்து..சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பகுத்தறிவு துணிச்சலாக பேசியும் அவரை ஆத்திகம் எதிர்க்க முடியவில்லை. நாத்திகம் அவரை சொந்தம் கொண்டாட முடியவில்லை . மக்களுக்கு பிடித்த மக்கள் கலைஞராக வாழ்ந்து முடித்த சின்ன கலைவாணரே.. இறந்தும் பலரின் கவலை நோய் தீர்க்கும் மருந்தாக வாழ்வீர்கள்!


டே.குன்வர் சோசுவா வளவன்

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

 

#FB-2

செத்தா...இந்த மாதிரி நாம செஞ்ச நல்லத கண்ணீர் விட்டு சொல்ல நாலு நல்லத பண்ணிட்டு சாகனும்...😊👍🏻

வாழ்வின் பெருமை மரணத்தில் தெரியும்...👏🏾👏🏾

https://m.facebook.com/story.php?story_fbid=4222862314444284&id=100001616704375

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

B.h அப்துல் ஹமீட் 

 

சின்னக் கலைவாணர் ‘பத்மஶ்ரீ’ விவேக் அவர்களது இழப்பு........
‘மரணம்’ -எவ்வேளையும் வரலாம் என, எம்மையும் எச்சரிக்கும் செய்தி. 
நேற்று, திடீர் மாரடைப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், நிச்சயம் நலம்பெறுவார் என்ற நம்பிக்கையில், அவர் தேறியபின், அனுப்பிவைக்கலாம் என, நேற்று எனது கைத்தொலைபேசியில் பதிந்து வைத்த ஆறுதல் செய்தி இது. 
———“அன்பு நண்பர் விவேக். உங்கள் இதயம் பாதுகாப்பாய் மீண்டும் நலமுடன் இயங்கவேண்டுமென, நீங்கள் நட்டுவைத்த 30லட்சம் தருக்களோடு, எம் இதயங்களும் பிராரத்திக்கின்றன” ———
ஆனால்.அதிகாலையிலேயே அந்தத் துயரச்செய்தி வந்து சேர்ந்தது. 
‘கலை மக்களுக்காக’ என நம்பும் கலைஞன், அவர்களைக் களிப்பில் ஆழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது, சூழவுள்ள சமூகத்திற்கும் தன்னால் ஆன தொண்டுகள் செய்யவேண்டும் எனத் திடமாக நம்பிய நல்ல மனிதர். முதுகலைப் பட்டதாரியாக திரைத்துரைக்குள் காலடிவைத்த நாள்முதல் முப்பத்தி ஐந்து ஆண்டு காலம், படைப்பாற்றல் திறமையோடு தனித்தடம் பதித்துச் சென்றுவிட்டார். 
90 களின் நடுப்பகுதியில், சென்னை ‘நேரு’ உள் அரங்கில் நடைபெற்ற  ஒரு நட்சத்திர விருதுவிழாவைத் தொகுத்து வழங்கியபோதுதான், அடியேன்,அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். விருது பெற வந்தவர் விருதினை பெற்றுக்கொண்ட பின்னர், அதே மேடையில் ரசிகர்கள் முன்னிலையில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசுகிறீர்களே! நீங்கள் இன்னும் எங்களது சென்னைத் தமிழ் கற்கவில்லையா? என்று கேட்டார். உடனே நானும் வேடிக்கையாக ‘ நீங்கள் ஒரு ஆசிரியராக கற்றுத்தரச் சம்மதம் என்றால், நானும் காத்திருக்கிறேன், என்றேன். 
சில ஆண்டுகள் கழித்து, ராஜ் தொலைக்காட்சி நடத்திய “நட்சத்திரக் கொண்டாட்டம்” விழாவில் ஒரு ‘ஓரங்க நகைச்சுவை நாடகத்தை’ நடத்தித் தர, நண்பர் விவேக் அவர்கள் இணங்கியபோது, ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது ‘இந்த நாடகத்தில் என்னோடு, அப்துல் ஹமீத் சாரும் நடிக்கனும்’ என்று. என்ன பாத்திரம் என்று கேட்காமலேயே, அடியேனும் சம்மதித்தேன். முன்பு விருது விழாவில் நடந்த உரையாடலையே கருவாக்கி, தனது நண்பன் ஶ்ரீனிவாசன் அவர்களைக் கொண்டு அந்த நாடகத்தை எழுதவைத்து, ஒத்திகைக்கும் அழைத்தார். 
அதாவது, அடியேன் தமிழாராய்ச்சிக்காக இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ள ஆய்வாளர். சைக்கிள் ரிக்‌ஷாத் தொழிலாளியான அவரைச் சந்தித்து, அவர்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்குப் பேச்சுத்தமிழ் அனைத்தையும் கற்றுக்கொள்கிறேனாம். நாடகத்தின் முடிவில் ‘நல்லதமிழ்’ மறந்துபோய் நானே சென்னைத் தமிழில் பேசுவதாக நாடகம் நிறைவுபெறும். இந்த நாடகத்துக்கு ஒரு நல்ல பெயர் வைக்கும்படி என்னைக் கேட்டார். “தமிழா! இது தமிழா?” எனப் பெயரிட்டேன். இரண்டே மணிநேரம்தான் ஒத்திகை. அத்தனை வசனத்தையும் மனனம் செய்து அவர் ஒப்புவித்த அதிசயத்தைக் கண்டு வியந்தேன்.அடியேனும் பள்ளிக் கலைவிழாக்களில் கலந்து கொண்ட நினைவு வந்தது. ஒரே கலைவிழாவில் இரு நாடகங்களில் ‘கர்ணன்’ மற்றும் ‘ஜான்ஸி ராணி’ என அத்தனை வசனங்களையும் மனனம் செய்து நடித்த காலத்தை இரைமீட்டி, ‘தமிழா இது தமிழா’ நாடக வசனங்கள் அனைத்தையும் பசுமரத்தாணி போல் நினைவில் பதியவைத்து, அன்று மாலையே சென்னை ‘காமராஜர் அரங்கிலே‘ நடித்து முடித்தோம். நடிகர் விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு அரங்கு நிறைந்த ரசிகப்பெருமக்கள் பெரும் ஆரவாரத்தோடு அந் நாடகத்தைக் கண்டுகளித்த நினைவு, இன்னும் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. 
அதன் பின் பல்வேறு சந்தர்பங்களில் நாம் ஒன்றாகவே - சிங்கப்பூர், மலேசியா எனக் கலைப் பயணங்கள் மேற்கொண்டோம்.  கிஞ்சித்தேனும் சோர்வின்றி, தன் அன்றாட வாழ்வை கட்டுக்கோப்பாக, நேர்த்தியாக அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் செலவிடும் அவரது பண்பு, நாமும் கற்று ஒழுகவேண்டியது. 
அவரது அன்பு மகன், எதிர்பாராது வந்த நோய்க்கு ஆளாகி இறந்தபோதும், அந்த இழப்பின் சோகத்தையே சமூகசேவையால் மாற்றி, இளைதலைமுறையின் கல்விக்கு உதவிய மாமனிதர். 
59 வயது என்பது, முதுமை அல்ல என உணர்த்தும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த வேளையில் அல்லவா அவரை இழந்திருக்கிறோம். உண்மையிலேயே இது ஒரு பேரிழப்புத்தான்-கலையுலகிற்கு மட்டுமல்ல, முழுச் சமூகத்திற்குமே. 
மேதகு.அப்துல்கலாம் அவர்களது பெயரால் அவர் ஆரம்பித்த ‘ஒருகோடி மரம்நடும் இயக்கத்தை’ தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று ஒருகோடி இலக்கினை அடைய, கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைவதே, விவேக் என்ற விவேகானந்தனுக்கு நாம் செலுத்தக்கூடிய, நன்றிக் காணிக்கையாகும்.
அந்த நல்ல மனிதரின் ஆன்மா, நற்பேறு அடையப் பிரார்த்தனைகள். அவரை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 12 people and text that says 'நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை,மரங்கள் தரும் காற்றில் இருந்து, ஆக்ஸிஜனை சுவாசிக்கிறோம்.எனவே, மரங்களை நம் தாய் போன்று பாதுகாக்க வேண்டும்-சின்ன வேண்டும் கலைவாணர் விவேக்.. டாக்டர் அப்துல் கலாம் ஐயாவை போல தமிழகத்தை பசுமையாக்க வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார் நடிகர் விவேக்.. நம் மனதில் சிந்தனை விதைகளை விதைத்தவர் இம்மண்ணில் 33.23லட்சம் மரக்கன்றுகளை விதைத்தும் சென்றுள்ளார்.அ வகையில் நாம் ஒவ்வொருவரும் மரக்கன்று நட்டு அதை வளர்த்தோமானால் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். அவர் மறைந்தாலும் அவர் முயற்சி மறையக் கூடாது அவர் விட்டுச் சென்ற பணியை நாம் முடித்து வைப்போம். ஒரு கோடி மரங்கள் நடும் அவரது இலக்கை நிறைவேற்றுவோம்..மரங்கள் நடுவோம் மரங்கள் காப்போம்.'

  • கருத்துக்கள உறவுகள்
மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவருக்கு வயது 59. மருத்துவமனையிலிருந்து அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில் தற்போது அவரின் குடும்ப முறைப்படி நடக்க உள்ள சடங்குகளுக்காக பொது மக்கள் அஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/17162702/Thousands-attend-funeral-of-late-actor-Vivek.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.