Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு: வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மறுப்பா? குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் நடந்தது என்ன, எது உண்மை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு: வேலு நாச்சியார் அலங்கார ஊர்திக்கு மறுப்பா? குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் நடந்தது என்ன, எது உண்மை?

18 ஜனவரி 2022, 01:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அலங்கார வாகனம்

 

படக்குறிப்பு,

2020ஆம் ஆண்டில் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தி

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளுக்கு இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழு அனுமதி மறுத்ததாக வெளியான தகவல், நேற்று ஒரே நாளில் பரவலான கவனத்தை ஈர்த்தது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? எது உண்மை?

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வழக்கமான நடைமுறைகளின்படி முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவ படைகள், டெல்லி காவல்துறை ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுத்துறைகள், மத்திய அரசுத்துறைகளின் அலங்கார அணிவகுப்பு இடம்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இதில், கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி அரசு சார்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்று கூறி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இதேபோல மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் தமது மாநிலமும் அதன் அலங்கார ஊர்திக்கு முன்மொழிந்த பரிந்துரையை பாதுகாப்புத்துறை நிபுணர் குழு ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டி தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த வரிசையில் மூன்றாவதாக தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர்பான கருப்பொருளுடன் முன்மொழிந்த மாடல்கள் ஏற்கப்படவில்லை என்று அதன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த மூன்று மாநிலங்களும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் இல்லை என்பதால் இந்த விவகாரத்தில் அரசியல் ஏதேனும் இருக்குமா என்ற சர்ச்சையும் தீவிரமானது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மாநிலங்கள் முன்மொழிந்த கருப்பொருள்கள்

 

குடியரசு தினம்

 

படக்குறிப்பு,

2019இல் இடம்பெற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

கேரளா

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்புக்காக கேரளா ஸ்ரீ நாராயண குரு மற்றும் ஜடாயு பார்க் ஆகிய முன்மொழிவை வழங்கியிருந்தது. இதில் ஸ்ரீ நாராயண குரு சமூக சீர்திருத்தவாதியாகவும் உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் உடையதாக கருதப்படும் கோட்டயத்தில் உள்ள ஜடாயு பூங்கா நினைவுச்சின்னம் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவற்றுக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியாரின் நினைவுச் சின்னம் ஆக மாற்ற பாதுகாப்புத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. ஆதி சங்கராச்சாரியார் அத்வைத தத்துவத்தை முன்வைத்த ஒரு இந்திய தத்துவஞானி மற்றும் இறையியலாளர். அந்த அடிப்படையில் கேரள அரசுக்கு பாதுகாப்புத்துறை நிபுணர் குழு இந்த யோசனையை வழங்கியதாக கூறப்பட்டது.

அதே நேரத்தில், ஸ்ரீ நாராயண குரு சாதி எதிர்ப்பு சமூக சீர்திருத்தவாதியாக விளங்கியவர் என்றும், அவர் கோயில் நுழைவு இயக்கத்தை முன்னெடுத்ததுடன் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை கோயில்களில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் என்றும் கேரள அரசு பதிலளித்தது.

இருப்பினும், பாதுகாப்புத்துறை நிபுணர் குழு மெய்ஞான வல்லுவராக போற்றப்படும் எர்ணாகுளம் மாவட்டத்தின் காலடியில் பிறந்த ஆதி சங்கராச்சாரியார் சமய சீர்திருத்தம் மூலம் நாட்டை ஒன்றிணைத்தார் என்று கூறி தமது யோசனையை தெரிவித்திருந்தது. ஆனால் கேரளா தேவையான மாற்றங்களைச் செய்யாததால், அதன் முன்மொழிவு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இத்துடன் கேரளாவின் முன்மொழிவு தொடர்ச்சியாக இந்த ஆண்டுடன் சேர்த்து மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்கம்

 

குடியரசு தினம்

 

படக்குறிப்பு,

2021இல் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தி

மேற்கு வங்கத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் கருப்பொருளின்கீழ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆம் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுபடுத்தும் வகையில் அவரது அலங்கார ஊர்தி மற்றும் அம்மாநிலத்தில் பிறந்தவர்களான ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், சித்தரஞ்சன் தாஸ், ஸ்ரீ அரவிந்தோ மாதங்கினி ஹஸ்ரா, பிர்சா முண்டா, நஸ்ருல் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களையும் அம்மாநில அரசு குறிப்பிட்டிருந்தது.

ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இடம்பெற்ற அலங்கார வாகனத்தை மத்திய பொதுப்பணித்துறை முன்மொழிந்து அது ஏற்கப்பட்டு விட்டதால் மாற்று திட்டத்தை அளிக்குமாறு மேற்கு வங்க அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அடுத்தடுத்த தகுதிச் சுற்றுகள் வந்தபோது அலங்கார வாகன பட்டியலில் இணையும் வாய்ப்பை மேற்கு வங்கம் இழந்தது.

 

மேற்கு வங்கம்

 

படக்குறிப்பு,

2016இல் முதல் பரிசு வென்ற மேற்கு வங்க அலங்கார ஊர்தி.

2016ஆம் ஆண்டில் பவுல்ஸ் கிராமிய பாடகர்கள் இடம்பெற்ற அம்மாநில அலங்கார வாகனம்தான் சிறந்த அலங்கார வாகனத்துக்கான பரிசை பெற்றது.

மேற்கு வங்கத்தின் பவுல்ஸ் சமூகத்தினர் அமைதி, சகோதரத்துவம் மற்றும் மாய தத்துவத்தின் செய்தியைப் பரப்பும் நாடோடிகள். இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வழித்தோன்றலாய் வந்த இவர்கள் நாடோடி நாட்டுப்புற வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எக்தாரா, டோட்டாரா, கமாக், நூபுர், பிரேம்ஜூரி, டுப்கி போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளை பவுல்ஸ் இன்னும் பயன்படுத்துகின்றனர்,

தமிழ்நாடு

2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், ராணி வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களை சித்திரிக்கும் முன்மொழிவு இருந்தபோதும், அதை பாதுகாப்புத்துறை கவனத்தில் கொள்ளவில்லை.

டெல்லி

இந்த ஆண்டு நம்பிக்கை நிறைந்த டெல்லி நகரம் என்ற கருப்பொருளுடன் அம்மாநில அரசு வழங்கிய முன்மொழிவு பாதுகாப்புத்துறை நிபுணர்கள் குழுவால் ஏற்கப்படவில்லை. இதற்கான காரணம் வெளிவரவில்லை. இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டில் டெல்லியின் அலங்கார வாகனம் குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறவில்லை.

கர்நாடகா

அதேசமயம், 'பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தவழும் கர்நாடகம்' என்ற தலைப்பில் கர்நாடகத்தின் முன்மொழிவு தேர்வானது.

இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தமது ட்விட்டர் பக்கத்தில், "பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தவழும் கர்நாடகம் என்ற தலைப்பில் எங்களின் மாநில அலங்கார வாகனம் குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து 13வது முறையாக எங்கள் மாநில அலங்கார வாகனம் தேர்ந்தெடுக்கப்படுகிறது," என்று கூறியுள்ளார்.

எதிர்வினையாற்றிய தலைவர்கள்

 

மமதா பானர்ஜி

பட மூலாதாரம்,MAMATA BANERJEE

 

படக்குறிப்பு,

மமதா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

குடியரசு தின அணிவகுப்பு அலங்கார வாகன முன்மொழிவு ஏற்கப்படாத விஷயத்தில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு பாஜக ஆட்சியில் இல்லாத வேறு கட்சிகள் தலைமையிலான அரசுகளின் முன்மொழிவுகளை கண்டுகொள்வதில்லை என்று பினராயி விஜயன், மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் குற்றம்சாட்டினார்கள்.

இவர்களின் எதிர்வினை, கிட்டத்தட்ட இந்த முதல்வர்கள் ஆளும் மாநிலங்களில் உள்ள சில தனியார் தொலைக்காட்சிகளில் திங்கட்கிழமை இரவு விவாதத்தைத் தூண்டும் தலைப்புகளைக் கொண்ட நிகழ்ச்சியாக பிரதிபலித்தது.

இது குறித்து பாதுகாப்புத்துறை உயரதிகாரியிடம் கேட்டபோது, இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுத்துறைகளிடம் இருந்து மொத்தம் 56 பரிந்துரைகள் வந்தன. அவற்றில், 21 முன்மொழிவுகள் தேர்வு செய்யப்பட்டன என்று கூறினார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு முன்மொழிவை ஒதுக்குவது மாநில மக்களின் உணர்வுகளையும், தேசபக்தியையும் கடுமையாக புண்படுத்தும்," என்று தெரிவித்திருந்தார்.

 

கேரளா

 

படக்குறிப்பு,

பினராயி விஜயன், கேரள முதல்வர்

சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை சித்திரிக்கும் தங்களுடைய மாநில முன்மொழிவை பாதுகாப்புத்துறை நிபுணர் குழு ஏற்கவில்லை என்ற தகவலை வெளியான 24 மணி நேரத்தில் ஸ்டாலினின் இந்த எதிர்வினை வந்தது.

இவரைப்போலவே, சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாளில் அவர் மீது கவனம் செலுத்திய தமது மாநில முன்மொழிவை நிராகரித்தது குறித்து மமதா பானர்ஜி அதிர்ச்சி வெளிப்படுத்தியிருந்தார். இத்தகைய நடவடிக்கை தமது மாநில மக்களுக்கு "வலியை" ஏற்படுத்தும் என்று அவர் மோதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

'மாநில பெருமைக்கு அவமானம்'

சுபாஷ் சந்திர போஸ் மட்டுமின்றி ரவீந்திரநாத் தாகூர், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ அரவிந்தோ போன்ற பிற சிந்தனையாளர்களின் முன்மொழிவையும் கவனத்தில் கொள்ளாதது "சுதந்திரப் போராட்ட வீரர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு சமம்" என்றும் மமதா பானர்ஜி சாடியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, "கேரளாவின் குருவை அவமதிக்கும் இந்த அணுகுமுறையை" ஏற்கிறீர்களா என்பதை கேரள பாஜக தெரிவிக்குமாறு ட்விட்டர் பதவி மூலம் கேட்டிருந்தார்.

இந்தப்பின்னணியில் தமிழக அரசின் முன்மொழிவு முன்மொழிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த முன்மொழிவுகள் பாதுகாப்புத்துறையின் தேர்வுக்குழுவால் தன்னிச்சையாக அதன் அதிகாரத்துக்கு உள்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை. அதன் யோசனைகளை ஏற்காமல் மாநிலங்கள்தான் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் ஒரு காணொளியையும் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

முன்னதாக, "இது அனைத்தும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களுக்கும் எதிரான அப்பட்டமான பாகுபாடு. இந்தச் சிறுமையை பொறுத்துக் கொள்ளக் கூடாது" என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார்.

மத்திய அரசு எதிர்ப்பு

இந்த விவகாரத்தை பிராந்திய பெருமையுடன் இணைக்கும் முயற்சிகள், மாநில மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் அதன் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஒரு செய்திக்குறிப்பு திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பகிரப்பட்டது.

பெயர் குறிப்பிடப்படாமல் அரசு அதிகாரியொருவர் மூலம் பகிரப்பட்ட அந்த செய்திக்குறிப்பில், "இதுபோன்ற அறிக்கைகள் ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் வெளிவருகிறது. இது ஒரு ஆக்கபூர்வ நடைமுறையில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு இருப்பதாக சித்திரிக்க மாநிலங்களின் முதல்வர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தவறான முன்னுதாரணமாகும்," என்று கூறப்பட்டிருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

Twitter பதிவின் முடிவு, 5

இந்தப்போக்கு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் வெகு தூரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செல்கிறது. இந்த விஷயத்தில் தங்களுக்கு நேர்மறையான திட்டம் இல்லாததால் அதே பழைய தந்திரத்தை நாட இதை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படியொரு அவசர எதிர்ப்பை மத்திய அரசு காட்டவேண்டிய தேவை ஏன் எழுந்தது என பாதுகாப்புத்துறை உயரதிகாரியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, இந்த விவகாரத்தில் நடந்த முழு பின்னணியையும் விவரித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6

Twitter பதிவின் முடிவு, 6

குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெறும் அலங்கார வாகனங்களை தேர்வு செய்யும் குழுவில் கலை, கலாசாரம், சிற்பம், இசை, கட்டடக்கலை, நடனம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இடம்பெறுவர். பல சுற்றுகளாக நடைபெறும் அவர்களின் கூட்டத்துக்கான நடைமுறை 2021ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே தொடங்கியது.

எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் முறைப்படியே கடிதம் அனுப்பினோம். இம்முறை 56 முன்மொழிவுகள் வந்தன. அதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கமும் அடங்கும் என்றார்.

தேர்வு எப்படி நடந்தது?

பெரும்பாலான மாநிலங்கள் தமது கருப்பொருளை வழங்கிய பிறகு, நிபுணர் குழு தெரிவித்த யோசனைகளை பின்பற்றாமலோ குறைபாடுகளுடனோ மீண்டும் செயல்முறை காட்சி விளக்க கூட்டத்துக்கு வந்தன. சில மாநிலங்கள் தாமாகவே விலக்கிக் கொண்டன. தெலங்கானா மாநிலம் ஆரம்பத்திலேயே கருப்பொருளை வழங்கவில்லை. இப்படி கடைசியாக 21 முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டதில், அலங்கார அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12 ஆக இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருந்ததால், அதற்கு தக்கபடி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

 

குடியரசு தினம்

இதே கேரள அரசின் அலங்கார வாகனங்கள் 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் பங்கு பெற்றுள்ளன. தமிழ்நாடு சார்பில் 2016, 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன.

மேற்கு வங்கம் கூட அதன் பிரதிநிதித்துவத்தை 2016, 2017, 2019 மற்றும் 2021இல் காட்சிப்படுத்தியது.

இவை எல்லாமே மாநிலங்கள் சமர்ப்பிக்கும் கருப்பொருள், கருத்து, வடிவமைப்பு மற்றும் காட்சியின் தாக்கம் அடிப்படையில் மட்டுமே நடக்கிறதே தவிர இதில் வேறு அரசியல் சாயமும் கிடையாது என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

நேரமின்மை காரணமாக, சில முன்மொழிவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழக விவகாரத்தில் என்ன நடந்தது?

தமிழ்நாடு சார்பில் கடந்த செப்டம்பரில் நடைமுறை தொடங்கியவுடனேயே முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் முதலாவது, இரண்டாவது அமர்வுகளில் செய்தி, மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி கலந்து கொண்டார். அரசு சார்பில் வ.உ.சிதம்பரானார், வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோர் தொடர்பான முன்மொழிவு செய்யப்பட்டது.

 

குடியரசு தினம்

இதை பாதுகாப்புத்துறை உயரதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். அதே சமயம், முன்பக்கத்தில் இருந்த வ.உ.சிதம்பரானாருக்கு பதிலாக பாரதியாரை முன்னிலைப்படுத்தி வைக்கவும், அடுத்ததாக வேலு நாச்சியார், மூன்றாவதாக வ.உ. சிதம்பரானார் ஆகியோர் வருவது போல மாதிரியை திருத்தித்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அந்த யோசனைகளின்படி திருத்தங்கள் வராத நிலையில், ஐந்து சுற்றுகளுக்குப் பிந்தைய சுற்றுகளில் தமிழகத்தின் முன்மொழிவு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழக அரசு தரப்பிலும் விசாரிக்க முற்பட்டபோது செய்தி மக்கள்துறையின் இயக்குநர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அதே சமயம், இதுபோன்ற நுட்பமான விஷயங்களில் எங்கு பிரச்னை உள்ளது என்பதை அறிந்து அதை எதிர்காலத்தில் தீர்த்துக் கொள்ள மாநிலங்கள் முன்வர வேண்டும் என்று பாதுகாப்புத்துறை நிபுணர் குழுவில் உள்ள உயரதிகாரி தெரிவித்தார்.

அரசியலாக்கப்பட்டு விட்ட இந்த விவகாரத்தில் நிபுணர் குழு, குதிரை மீதிருந்த வேலு நாச்சியாரை பார்த்து ஜான்சி ராணியை எப்படி உங்கள் மாநில சுதந்திர போராட்ட தியாகியாக உங்கள் மாநிலம் ஏற்கிறது என்றும் அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாதா என்றும் நிபுணர் குழு கூட்டத்திலே கேட்கப்பட்டதா என்றும் அந்த உயரதிகாரியிடம் கேட்டோம்.

வெளிப்படைத்தன்மை இல்லையா?

மூடிய கதவுக்கள் அந்த கூட்டம் நடந்திருந்தாலும், அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ன. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம் தொடர்பான பின்புலத்தை அறிந்தவர்கள்தான் குழுவிலும் உள்ளனர். எனவே, இதுபோன்ற நுட்பமான விவகாரத்தில் இப்படிப்பட்ட கேள்விகளை குழுவில் உள்ள யாரும் கேட்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

 

குடியரசு தினம்

ஆனால், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் தொடர்பான முன்மொழிவுகள் வரவேற்கப்பட்டு தகுதியை சரிபார்க்கும் சுற்றுகளுக்குப் பிறகு, ஏன் மாநிலங்களின் முன்மொழிவுகள் தேர்வாகவில்லை என்பதற்கான எழுத்துபூர்வ தகவல்கள் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

இது வெளிப்படையற்ற செயல்பாடு போல உள்ளதே என அந்த உயரதிகாரியிடம் கேட்டபோது, தற்போது குடியரசு தின விழாவுக்கான ஏற்பாட்டில் அமைச்சகம் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் விழா முடிந்த பிறகு முறைப்படி தகவல் உரிமை சட்டப்படி விண்ணப்பம் செய்தால் விவரங்களை பகிர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்.

மாநிலத்தில் என்ன பிரச்னை?

பொதுவாக மாநிலத்தில் இருந்து குடியரசு தின விழா அலங்கார வாகன முன்மொழிவுகள் தொடர்பான கோப்புகள் மற்றும் தகவல்களை பிற மாநிலங்களின் அரசுகள் டெல்லியில் உள்ள அவற்றின் அரசு விருந்தினர் இல்ல உறைவிட ஆணையர்கள் மூலமே மேற்கொள்ளும்.

"தமிழகத்தில் அப்படியொரு வழக்கம் பல ஆண்டுகளாகவே பின்பற்றப்படவில்லை என்பதும் நமக்குத் தெரிய வந்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இரண்டு ஐஏஎஸ் உயரதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார். இவர்களில் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட அவர் மற்ற செய்தித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தமிழகத்தின் நிலைப்பாட்டை நிபுணர் குழுவிடம் விளக்கியிருப்பார்கள். ஆனால், அதற்கு வாய்ப்பு அமையாமல் போய் விட்டது," என்கிறார்கள் இந்த விஷயம் குறித்து நன்கறிந்த தமிழக அரசு அதிகாரிகள்.

https://www.bbc.com/tamil/india-60032211

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு ஏன்?: அண்ணாமலை

spacer.png

தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் 75ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்கத் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர வேறு எந்த மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில், “2019, 2020, 2021 என கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மகாபலிபுரம் சிற்பக் கலை, அய்யனார், மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா ஆகியவற்றை அலங்கார ஊர்திகள் மூலம் இந்த உலகுக்குக் காண்பித்தோம். 2017, 2016ஆம் ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு இடம் கிடைத்தது. அப்படிப் பார்த்தால் மோடி அரசு வந்த பிறகு சுமார் 5 ஆண்டுகளாக நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

வேறு எந்த மாநிலங்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. குறிப்பாகக் கேரள மாநிலத்திற்கு 2 முறை தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழுதான் அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்யும். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அனைத்து ஆண்டுகளிலும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுமதி கிடைக்காது.

இந்தச்சூழலில், பாதுகாப்புத் துறை தமிழக தலைமைச் செயலாளருக்குக் குடியரசு தின அணிவகுப்பு கருத்தாக்கம் குறித்து கடிதம் எழுதியிருந்தது. 75 ஆண்டுகள் நாம் சுதந்திரம் பெற்று ஒரு நாடாக வளர்ந்துவிட்டோம், இந்த கருத்தாக்கத்தில் மாநிலத்தின் ஊர்தி இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகமும் தனது கருத்தாக்கத்தைக் கொடுத்திருந்தது. அதன் அடிப்படையில் வல்லுநர் குழு முடிவு எடுத்திருக்கிறது.. தமிழகம் கொடுத்த கருத்தாக்கத்திற்காக இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம் என்றாலும், அதைத் தவிர்த்து, வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியாருக்கு மரியாதை கொடுக்கவில்லை, என்பதெல்லாம் கிடையாது. வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே பொய்யான அரசியல் வலையில் நாம் விழ வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/politics/2022/01/18/6/annamalai-expalanation-about- Tamil-Nadu-Tableau-for-the-Republic-Day

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலங்கார ஊர்தி சர்ச்சை: டெல்லியில் இருந்தவர்கள் 'திருப்பூர் குமரன் யார் என்று கேட்டார்கள்' - ஓவியர் ட்ராட்ஸ்கி மருது

9 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அலங்கார ஊர்தி

` நிபுணர் குழுவில் உள்ளவர்கள், திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள். சுதந்திர போராட்டத்தில் தென்னகத்தின் பங்களிப்பை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை' என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

60-ஆவது குடியரசு தினத்தில் அலங்கார ஊர்தி வடிவமைப்பில் அவர் பங்கேற்றிருந்தார். தற்போது அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தனது கருத்தை அவர் கூறியுள்ளார்.

"என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர்" என ட்ராட்ஸ்கி மருது பிபிசியிடம் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டில் 60-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தன. காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர்.

`இந்தியா 75' என்ற தலைப்பின்கீழ் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் சார்பாக குடியரசு தினத்தன்று அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மாநிலங்களிடம் இருந்து ஊர்திக்கான கருப்பொருள், மாதிரிகள், விளக்கம் ஆகியவற்றைப் பெறும் வேலைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கின.

அதில், விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், வ.உ.சிதம்பரனாருக்கு பதிலாக பாரதியாரை முன்னிலைப்படுத்தவும் அடுத்ததாக வேலு நாச்சியார், வ.உ.சி ஆகியோர் வருவதுபோல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய பாதுகாப்புத் துறையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த சுற்றுகளில் தமிழ்நாட்டின் முன்மொழிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒருகட்டத்தில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ` அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பித்து மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களை செய்தோம். நான்காவது கூட்டத்துக்கு அழைக்காமல் அதுகுறித்து எந்தத் தகவலும் தெரிவிக்காமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து எனது வருத்தத்தை பிரதமருக்குக் கடிதம் மூலம் தெரிவித்தேன். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடிதத்திலும் எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், ` மாநில அரசின் சார்பில் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும். மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்' எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

ஊர்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதொடர்பாக, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுகையில், "2014, 2017, 2019, 2020, 2021 என ஐந்து முறை தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. மாமல்லபுரம் சிற்பக் கலை, அய்யனார், திருவள்ளுவர் எனக் காட்சிப்படுத்தினோம். இந்த ஆண்டு 75 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்ததைக் குறிப்பிடும் வகையில் ஊர்திகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வேலுநாச்சியாருக்கும் வ.உ.சிக்கும் பாரதிக்கும் மரியாதை கொடுக்கவில்லை என்பது பொய்யானது. இவர்கள் அரசியலை வியாபாரமாக வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேலுநாச்சியார் பிறந்தநாள் வந்தபோது பிரதமர், தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க சார்பில் சிவகங்கைக்குச் சென்று விழா நடத்தினோம். இவை எதையும் தி.மு.க செய்யாது. நிபுணர் குழு எடுத்த முடிவை அரசியலாக்கலாமா?'' எனக் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், "விடுதலைப் போராட்டத்தின் தென் பகுதி மக்களின் பங்களிப்புகளை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் திருப்பூர் குமரனையே யார் எனக் கேட்டார்கள்'' என ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பேசியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"இந்தியாவின் 60 ஆவது குடியரசு விழாவின்போது நடந்த சம்பவம் இது. அப்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் என்னிடம், `அறுபதாவது சுதந்திர ஆண்டு என்பதால் நம்முடைய திருப்பூர் குமரனைக் காட்சிப்படுத்துவோம்' என்றனர். இதையடுத்து, மாதிரிகளை தயார் செய்து கொண்டு டெல்லி சென்றேன். அப்போது என்னுடன் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் வந்திருந்தார். பொதுவாக, நாம் மாதிரிகளை கொண்டு செல்லும்போது அது ஃபைபரா.. பிளாஸ்டிக்கா எனப் பார்ப்பார்கள். இரண்டு பாலங்களைக் கடந்து செல்லும் என்பதால் அது இடித்துவிடக் கூடாது என்பதை முக்கியமாகப் பார்ப்பார்கள்" என்றார் ட்ராட்ஸ்கி மருது

 

ஊர்தி

"என்னுடைய மாதிரிகளை நிபுணர் குழுவினரிடம் காண்பித்து, திருப்பூர் குமரன் குறித்து தெரிவித்தபோது, `அவர் யார் என்று தெரியாதே?' என்றனர். இத்தனைக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு இருந்தார்கள். அந்தக் குழுவில் சுதிர்கார் என்ற டெல்லி கார்ட்டூனிஸ்ட் ஒருவரும் இருந்தார். அவர்களின் கேள்விக்கு நான் பதில் அளித்துப் பேசியபோது, `தமிழ்நாட்டில் வந்து பாருங்கள், தேசியத் தலைவர்கள் பெயர்களில் கட்டடங்களும் தெருக்களும் இருக்கும். இந்த ஊர்வலம் வருவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்பூர் குமரன் யார் என்ற விவரம் தெரியவரும்' என்றேன். அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த அரசாங்கமாக இருந்தாலும் தென்பகுதியில் இருந்து பங்களிப்பு வருவதை டெல்லியில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது தெரிந்தது'' என்கிறார்.

"நாங்கள் வடிவமைத்த மாதிரியில் திருப்பூர் குமரனை நிராகரித்துவிட்டு, நாட்டுப்புறக் கலைகள் தொடர்பான மாதிரியை எடுத்துக் கொண்டனர். அந்தக் குழுவில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இருந்தனர். அந்தக் குழுவின் முன்னால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தனது மாநிலத்தின் சிறப்புகளை விளக்கிக் கூறினால், அவருக்கு ஆதரவாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் பேசுவார்."

"இதில் என்னை அதிர்ச்சியூட்டிய சம்பவம் என்னவென்றால், தொடக்கத்தில் இருந்து கடைசி வரையில் நிபுணர் குழுவில் இருந்த ஒரே ஒரு நபர் மட்டும் நாற்காலியில் மிக அலட்சியமாக உட்கார்ந்தபடியே இருந்தார். நாங்கள் பேசி முடித்த பிறகு இறுதியாக அந்த நபர் தமிழில் பேசினார். அவர் என்னிடம், `நீங்கள் ருக்மணி தேவி அருண்டேலை கொண்டு வரலாமே?' என்றார். அப்போதுதான் அவர் யார் என்பது புரிந்தது. அவர் எங்களுக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர் ஏற்கெனவே ஒரு முன்முடிவில் இருந்ததும் தெரியவந்தது'' என்கிறார் ட்ராட்ஸ்கி மருது.

 

ஊர்தி

தொடர்ந்து பேசிய மருது, `` இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றும் ஊழியர்களிடம், `திருப்பூர் குமரனை யார் என்று கேட்டுவிட்டார்களே?' என ஆதங்கப்பட்டேன். அதற்கு அவர்களோ, `இதுகூட பரவாயில்லை சார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியாரை வடிவமைத்துக் கொண்டு சென்றிருந்தோம். யார் இவர் என குழுவில் இருந்த ஒரு நபர் கேட்டார்' என வேதனைப்பட்டார். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அடிப்படையிலேயே டெல்லியில் உள்ளவர்கள், தென்பகுதிகளின் சிறப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை'' என்கிறார்.

மேலும், `` நான் சென்று வந்த பிறகு ஓசூரில் நடந்த த.மு.எ.ச கூட்டத்தில் இதைப் பற்றிச் சொன்னேன். `நாம்தான் அறுபதாம் ஆண்டு சுதந்திர விழாவைக் கொண்டாடுகிறோம். அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை' என்றேன். இதற்கு ஆள்வது பா.ஜ.கவா, காங்கிரஸா என்பது முக்கியமில்லை. அவர்களோடு நம்மால் சண்டையிட முடியாது. நாமும் ஓர் அங்கம் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்'' என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-60064287

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

`திருப்பூர் குமரனை யார் என்று கேட்டுவிட்டார்களே?'

தமிழர்கள் என்றால் யார் அவர்கள்.....?? என்று கேட்கும் நாள் வெகுதூரத்தில் இல்லையெனத் தெரிகிறது. 🧐

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2022 at 00:18, ஏராளன் said:

செய்தி மக்கள்துறையின் இயக்குநர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அதே சமயம், இதுபோன்ற நுட்பமான விஷயங்களில் எங்கு பிரச்னை உள்ளது என்பதை அறிந்து அதை எதிர்காலத்தில் தீர்த்துக் கொள்ள மாநிலங்கள் முன்வர வேண்டும் என்று பாதுகாப்புத்துறை நிபுணர் குழுவில் உள்ள உயரதிகாரி தெரிவித்தார்.

அரசியலாக்கப்பட்டு விட்ட இந்த விவகாரத்தில் நிபுணர் குழு, குதிரை மீதிருந்த வேலு நாச்சியாரை பார்த்து ஜான்சி ராணியை எப்படி உங்கள் மாநில சுதந்திர போராட்ட தியாகியாக உங்கள் மாநிலம் ஏற்கிறது என்றும் அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாதா என்றும் நிபுணர் குழு கூட்டத்திலே கேட்கப்பட்டதா என்றும் அந்த உயரதிகாரியிடம் கேட்டோம்.

முதலாவது  பந்தியின் நுட்பம் இரண்டாவது பந்தியில் தெரிந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.