Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு, என்ன செய்யலாம்?  நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு என்ன செய்யலாம்? நிலாந்தன்.

பொருளாதார நெருக்கடி: தமிழ்த் தரப்பு, என்ன செய்யலாம்?  நிலாந்தன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளாகவும் யாப்பு நெருக்கடிகளாகவும் மாறியுள்ளன. தென்னிலங்கையில் ஏற்பத்துள்ள அரசியல் ஸ்திரமின்மை தொடர்பாக தமிழ்த் தரப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?

இது விடயத்தில் தமிழ்த் தரப்பு முடிவெடுப்பதாக இருந்தால் முதலில் தென்னி லங்கையில் இடம்பெறும் கொந்தளிப்புகள் தொடர்பாக ஒரு சரியான படத்தை பெறவேண்டும்.

தென்னிலங்கையில் நான்கு பரப்புக்களை நோக்கி தமிழ் தரப்பு கவனத்தை குவிக்க வேண்டி இருக்கிறது. முதலாவது நாடாளுமன்றம். இரண்டாவது காலிமுகத்திடல்.மூன்றாவது பௌத்த மகா சங்கங்கள்.நாலாவது அரசாங்கத்துக்கு உதவ முற்படும் வெளித்தரப்புக்கள்.

முதலில் நாடாளுமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கமும் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்று விட்டன. அதன் விளைவாக அரசற்ற நிலை ஒன்று தோன்றியிருக்கிறது. யாப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி தொடர்ந்தும் பலமாக இருக்கிறார். அவரை அகற்ற எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. யாபை மீறிச் சிந்திக்க எதிர்க் கட்சிகள் தயாராக இல்லை. மக்கள் போராட்டங்கள் அவ்வாறு யாப்பை மீறத்தேவையான துணிச்சலை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அந்தத் திராணி இல்லை. இதுகாரணமாக நாடாளுமன்றத்தில் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. அரசாங்கம் எதிர்பார்ப்பது போல ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக அரசாங்கத்தால் முடியவில்லை.அதேசமயம் எதிர்க்கட்சிகளாலும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியவில்லை. இது தான் இப்பொழுது நாடாளுமன்றத்தின் நிலை.இது முதலாவது பரப்பு.

இரண்டாவது, காலிமுகத்திடல்.பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த ஒரு தலைமுறை காலிமுகத்திடலில் திரண்டிருக்கிறது. நாட்டின் ஏனைய தெருக்கள் நகரங்களிலும் திரண்டு வருகிறது. இவர்கள் பெரும்பாலும் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ராஜபக்ச குடும்பத்தை வீட்டுக்கு போ என்று கேட்கிறார்கள். சில சமயங்களில் முழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் அவநம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.விமல் வீரவன்ச குறிப்பிட்டதுபோல கோத்தபாய வீட்டுக்குப் போ என்பதில் தொடங்கி ராஜபக்சக்களை வீட்டுக்கு போ என்று கேட்பது வரை வந்துவிட்டது. அடுத்தகட்டமாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்குப் போ என்று கேட்கும் ஒரு நிலைமை வரலாம். ஆனால் காலிமுகத்திடலில் திரண்டிருக்கும் இந்த புதிய தலைமுறையிடம் அரசியல் சித்தாந்த தெளிவும் இல்லை. அவ்வாறான சித்தாந்தத் தெளிவுடைய தலைமைத்துவமும் அங்கு இல்லை. நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரு குடும்பம்தான் காரணம் என்று அவர்கள் நம்புவதாக தெரிகிறது. மேலும் அவர்கள் சிஸ்டத்தை மாற்றவேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் அது எந்த சிஸ்டம் என்பதில் அவர்களிடம் பொருத்தமான விளக்கங்கள் உண்டா என்பதும் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்ச குடும்பத்தை வில்லன்களாக பார்க்கின்றார்கள்.ஆனால் ராஜபக்ச குடும்பம் எவ்வாறு எப்படி அரச குடும்பத்துக்குரிய அதிகாரங்களை பெற்றது என்ற கேள்விக்கு அவர்களிடம் தெளிவான விளக்கம் இருக்கிறதா ?

யுத்தத்தை வென்ற காரணத்தால்தான் ராஜபக்சக்கள் தமது குடும்பத்தின் ஆட்சியை ஸ்தாபிக்கக் கூடியதாக இருந்தது ராஜபக்சக்களின் அரசியல் முதலீடு என்பது யுத்த வெற்றிதான்.அவர்கள் யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். யுத்த வெற்றி வாதம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் 2009க்கு பின்னரான வளர்ச்சியாகும்.ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் அது தன்னை அடுத்த கட்டத்துக்கு புதுப்பித்துக் கொண்டது. எனவே யுத்த வெற்றியை ஓர் அரசியல் முதலீடாக வைக்கும் அளவுக்கு நாட்டின் அரசாட்சி முறை உள்ளது என்பதுதான் இங்கே பிரச்சினை. இதை இன்னும் தெளிவாகச் சொன்னால், அரசாட்சியின் அடிப்படையே இனவாதமாக உள்ளது என்பதுதான். அது ஓரினத் தன்மை மிக்கதாக ஒரு மதத்தை முதன்மைப் படுத்துவதாக காணப்படுகிறது என்பதுதான்.எனவே காலிமுகத்திடலில் திரண்டிருப்பவர்கள் போராட வேண்டியது அந்த சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராகத்தான். கோட்டா வீட்டுக்கு போ என்று கேட்பதற்கு பதிலாக அவர்கள் கேட்க வேண்டியது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நொறுக்கு என்பதுதான். பல்லினத் தன்மை மிக்க ஒரு இலங்கைத் தீவைக் கட்டி எழுப்பு என்பதுதான். இது இரண்டாவது பரப்பு.

மூன்றாவது பரப்பு மகாசங்கம்.மகாசங்கம் இப்பொழுது தலையிட்டிருக்கிறது.அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரு தீர்வைப் பெறத் தவறுமிடத்து தாங்கள் தலையிட வேண்டிவரும் என்று மகா நாயக்கர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.நாட்டில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாத போது, மத பீடங்கள் தலையிட்டு ஒரு தீர்வைக் கூறுமளவுக்கு நிலைமை காணப்படுகின்றது. மகாசங்கம் ஏன் இப்பொழுது தலையிடுகிறது ?காரணம் மிகத் தெளிவானது. காலிமுகத்திடலில் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்சக்களைத் தோற்கடிக்க விரும்புகிறார்கள். ஆனால் ராஜபக்சக்களைத் தோற்கடிப்பது என்பது அவர்கள் வென்று கொடுத்த சிங்கள-பௌத்த அரசு கட்டமைப்பையும் பலவீனப்படுத்துவதாக அமையக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மகா சங்கம் தலையிடுகிறது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கேட்கும் மாற்றம் சில சமயம் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பலவீனப்படுத்தக் கூடாது என்று மகாசங்கம் சிந்திக்கின்றது. ஏனென்றால் ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கும் யாப்பும் மகாசங்கத்துக்கு தேவை. இலங்கையை சிங்கள பௌத்த தீவாக கட்டமைக்கும் யாப்பை அவர்கள் கைவிடத் தயாரில்லை. அந்த யாப்பை பாதுகாக்கவேண்டும். இப்பொழுது நிலவும் ஒருவித அரசற்ற நிலை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை பலவீனப்படுத்தக் கூடாது என்பதில் மகா நாயக்கர்கள் முன்னெச்சரிக்கையாக காணப்படுகிறார்கள். அதனால்தான் அரசாங்கத்தை ஏதோ ஒரு விதத்தில் பலப்படுத்துமாறு கேட்கிறார்கள். இது மூன்றாவது பரப்பு.

நாலாவது பரப்பு வெளித் தரப்புக்கள்.அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக இந்தியா சீனா உட்பட வெளிநாடுகள் அதிகரித்த உதவிகளை வழங்கி வருகின்றன.இன்னொருபுறம் அனைத்துலக நாணய நிதியத்தோடு உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.அண்மை மாதங்களாக இந்தியா அதிகரித்த அளவில் அரசாங்கத்திற்கு உதவி வருகிறது.இது அரசாங்கத்துக்கு மூச்சுவிடும் அவகாசத்தை வழங்கியிருக்கிறது.இந்த உதவிகள் காரணமாக அரசாங்கம் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் இந்தியாவின் பிடிக்குள் வந்திருக்கிறது. இவை தவிர அனைத்துலக நாணய நிதியம் போன்ற உலகளாவிய அமைப்புகளுடனும் அரசாங்கம் பேசி வருகிறது.அனைத்துலக நாணய நிதியம் எனப்படுவது ஒரு அடைவுகடை அல்ல, நினைத்தவுடன் காசை தருவதற்கு என்று நாணய நிதியத்தின் பிரதானிகள் நிதியமைச்சர் அலி சப்ரியிடம் கூறியிருக்கிறார்கள். எனவே அனைத்துலக நாணய நிதியத்தின் உதவிகள் வந்து சேர காலம் எடுக்கும்.மேலும் அந்த உதவிகள் நிபந்தனைகளோடுதான் அமையும். அரசாங்கம் அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். இது நாலாவது பரப்பு.

இந்த நான்கு பரப்புகளையும் ஈழத்தமிழர்கள் எவ்வாறு அணுக வேண்டும்? அதற்குரிய தந்திரோபாயத்தை தமிழ் கட்சிகள் வகுத்துக்கொள்ள வேண்டும். முதலாவதாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகள் இரண்டுமே நொந்துபோய் இருக்கின்றன. இரண்டுமே வெல்ல முடியாத ஒரு நிலை. இந்நிலையில் தமிழ் மக்கள் இரு தரப்போடும் பேரம் பேச வேண்டும். இரண்டு தரப்பையும் சம தூரத்தில் வைத்து தமது பேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இவ்வாறு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பும் அரசாங்கமும் பலவீனமடைந்திருப்பது என்பது மிக அரிதான ஒரு வாய்ப்பு. தமிழ்த் தரப்பை பொறுத்தவரை இது ஒரு பொன்னான வாய்ப்பு. இதை அவர்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள்?

அடுத்தது காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களிடம் சித்தாந்தத் தெளிவோ பலமான தலைமையோ கிடையாது. ஆனால் அவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். தமது போராட்டம் சிங்கள பௌத்த அரசுக்கோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கோ எதிரானது அல்ல என்பதனை உறுதியாகத் தெரிவிக்கும் நோக்கத்தோடு அவர்கள் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். மேலதிகமாக கோட்டாகோகம கிராமத்தில் ரணவிரு கிராமத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது யுத்த வெற்றியை அவர்கள் போராட்டக் கிராமத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.இது தமிழ் மக்களை அந்தக் கிராமத்தில் இருந்து விலக வைக்கக்கூடியது.

தமிழில் தேசிய கீதம் பாடுவது,கிராமத்தின் அறிவிப்பு பலகைகளில் தமிழில் எழுதுவது போன்ற சிறிய மேலோட்டமான சீர்திருத்தங்கள் மூலம் கோட்டாகோகம கிராமத்தில் இருப்பவர்கள் தமிழ் மக்களின் நம்பிக்கைகளை வென்றெடுத்து விடமுடியாது. அதேசமயம் அவர்கள் விளங்கியோ விளங்காமலோ சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் கேட்கிறார்கள். எந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டும்? ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு வழிவகுத்த சிங்கள பௌத்த இனவாத கட்டமைப்பை நீக்க அவர்கள் தயாரா ?என்ற கேள்வியை முன்வைத்து தமிழ்த் தரப்பு அவர்களோடு உரையாட வேண்டும். தமிழ்த் தரப்பின் நியாயமான அச்சங்களையும் காயங்களையும் அக்கிராமம் விளங்கிக்கொள்ளுமாக இருந்தால், அதாவது பல்லினத்தன்மை மிக்க ஒரு இலங்கைத் தீவை கட்டியெழுப்ப கிராமத்தவர்கள் தயாராக இருந்தால் தமிழ் மக்கள் அந்த கிராமத்தில் சென்று குடியேறலாம். இது இரண்டாவது அணுகுமுறை.

அடுத்தது மகா சங்கம். மகா சங்கத்தோடு தமிழ் தரப்பு உரையாடுவது இல்லை. இதுவரையிலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் சரி தமிழ் மக்கள் தரப்பிலிருந்து குடிமக்கள் சமூகங்களும் சரி மகா சங்கத்தோடு உரையாட முற்படவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லது குடி மக்கள் சமூகங்கள் சிங்கள பௌத்த மகா சங்கத்தோடு உரையாடும் ஒரு போக்கு எனப்படுவது அனேகமாக இருக்கவில்லை. இனிமேலும் அதை யார் தொடங்குவது?

அடுத்தது வெளித் தரப்புகள். தமிழ்த் தரப்பு அதிக அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய இடம் இது. இப்பொழுது அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் வெளித் தரப்புக்களை நோக்கி தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவாக உரைக்க வேண்டும்.வெளித் தரப்புகளின் உதவிகள் அரசையும் அரசாங்கத்தையும் பாதுகாக்கின்றன. இந்த உதவிகளால் அரசாங்கம் வெளித் தரப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் ஓரளவுக்கு வந்திருக்கிறது. எனவே மேற்படி வெளித் தரப்புக்கள் தமது உதவிகளை இனப்பிரச்சினைக்கான தீர்வோடும் தமிழ் மக்களுக்கான நீதியோடும் இணைக்க வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து இந்தியா அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உலகவங்கி அனைத்துலக நாணய நிதியம் போன்றவற்றோடு தமிழ்த் தரப்பு உரையாட வேண்டும். அரசாங்கத்திற்கு வழங்கும் உதவிகளும் தமிழ்மக்களுக்கான நீதியும் ஒன்றுக்கொன்று பிரிக்கப்பட முடியாதவை என்பதை மேற்படி தரப்புக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதிய 6 கட்சிகளும் இது தொடர்பில் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுத வேண்டும். நொந்து போயிருக்கும் அரசாங்கத்தையும் சிங்கள பௌத்த அரசையும் காப்பாற்ற முனையும் வெளித்தரப்புக்கள் தமிழ் மக்களின் உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டியது தமிழ்த் தரப்புத்தான். எனவே பொருளாதார நெருக்கடிகள் பொறுத்து தமிழ் மக்கள் மும்முனை அணுகுமுறை ஒன்றுக்குப் போகவேண்டும். நாடாளுமன்றத்தை நோக்கி, கோட்டாகோகம கிராமத்தை நோக்கி, இந்தியா,ஐஎம்எப் போன்ற வெளித் தரப்புக்களை நோக்கிய ஒரு திரிசூல அணுகுமுறை.

https://athavannews.com/2022/1278112

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள பௌத்த அரசுக்கோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கோ எதிரானது அல்ல என்பதனை உறுதியாகத் தெரிவிக்கும் நோக்கத்தோடு அவர்கள் சிங்கக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். மேலதிகமாக கோட்டாகோகம கிராமத்தில் ரணவிரு கிராமத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது யுத்த வெற்றியை அவர்கள் போராட்டக் கிராமத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள்.இது தமிழ் மக்களை அந்தக் கிராமத்தில் இருந்து விலக வைக்கக்கூடியது.

இந்த இலட்சணத்தில் தமிழர்களும் சிங்கள மத்திய வர்க்கத்தினரின் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று சிலர் கட்டுரைகள் வனைகின்றார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2022 at 13:41, கிருபன் said:

இந்த இலட்சணத்தில் தமிழர்களும் சிங்கள மத்திய வர்க்கத்தினரின் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று சிலர் கட்டுரைகள் வனைகின்றார்கள். 

 

 

On 24/4/2022 at 11:02, தமிழ் சிறி said:

எனவே பொருளாதார நெருக்கடிகள் பொறுத்து தமிழ் மக்கள் மும்முனை அணுகுமுறை ஒன்றுக்குப் போகவேண்டும். நாடாளுமன்றத்தை நோக்கி, கோட்டாகோகம கிராமத்தை நோக்கி, இந்தியா,ஐஎம்எப் போன்ற வெளித் தரப்புக்களை நோக்கிய ஒரு திரிசூல அணுகுமுறை.

🤫🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஏராளன் said:

 

🤫🤭

ஏராளன்...  திரிசூல அணுகுமுறையை பற்றி சொன்னவுடன், பயந்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏராளன்...  திரிசூல அணுகுமுறையை பற்றி சொன்னவுடன், பயந்து விட்டீர்களா?

இல்லை அண்ணை! 
திரிசூலம், தேள்வடிவம் எல்லாம் முந்தி வாசிச்சதின் தொடர்ச்சிதானே!

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2022 at 09:11, கிருபன் said:

இந்த இலட்சணத்தில் தமிழர்களும் சிங்கள மத்திய வர்க்கத்தினரின் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று சிலர் கட்டுரைகள் வனைகின்றார்கள். 

 

அதுகள் திருந்த நாள் எடுக்கும் அதுவரைக்கும் அந்தக்கால  மன்னனுக்கு அருகில் இருக்கும் அடிமைக்குக்கு இப்படியொரு பட்டம் the groom of the stool எனும் பட்டம்  கொடுப்பார்கள் உண்மையான அர்த்தம் புரியாமல் தாங்கள்  மாப்பிளை என்ற பதம் விளங்கிக்கொண்டு பூமிக்கும் வானுக்கும் குதிப்பினம் ஒருவகையில் சிங்களவனுக்கு அவர்கள் செய்ய விரும்புவதும் அதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இல்லை அண்ணை! 
திரிசூலம், தேள்வடிவம் எல்லாம் முந்தி வாசிச்சதின் தொடர்ச்சிதானே!

அவர் இப்போ மேற்கு நாடுகளுக்கும் யூக்ரேனுக்கும் எப்படி ஆயுதங்கள் பாவிப்பது என யு ரியூப்பில் பாடம் எடுக்கிறார்.(தமிழில்)🙂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் சிங்களத்தின் தேசிய கீதம் பாடப்படுவதைக் கண்டு புழகாங்கிதம் அடையும் நிலையில் தமிழர் நாம் இருக்கின்றோம் என்பது வெட்கக்கேடானது. 

சிங்களத்தின் இன்றைய போராட்டம்  Mகவும் போலியானது. இந்த போராட்டம் வேறுவகையில் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. அனேகமாக மீண்டும் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம். 

தற்போது சிறிது சிறிதாக வடக்கு கிழக்கில் இருந்து மக்கள்  அகதிகளாக தமிழகம் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். நாளடைவில் இது பெரிய அளவில் நடைபெற்று இந்தியத் தலையீட்டுக்கு வழிவகுக்கப்படும் நிலைக்கு கொண்டுவரப்படலாம். 

காலிமுகத்திடலில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு உபயம் USA. அகதிகளாகத் தமிழகம் செல்வதற்கு உபயம் இந்தியா. தற்போது சீனா மெதுமெதுவா வடக்கு கிழக்கில் நகரத் தொடங்கியிருக்கிறது. 

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். நிலைமை சாதகமாக மாறும்வரை தMழர் அமைதி காப்பதுதான் சாலச்சிறந்தது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Kapithan said:

தமிழில் சிங்களத்தின் தேசிய கீதம் பாடப்படுவதைக் கண்டு புழகாங்கிதம் அடையும் நிலையில் தமிழர் நாம் இருக்கின்றோம் என்பது வெட்கக்கேடானது. 

இருந்து பாருங்கள் தமிழர்களே தமிழர் பிரச்சனையை சிறிய பிரச்சனை ஆக்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.