Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினம் ஒரு கவிதை

Featured Replies

இன்றைய கவிதை 06.08.2007

ஆண் பெண் படைத்து

அங்கம் வேறாக்கி

அந்தரங்க உறவு காட்டி

அற்புதங்கள் செய்தவன் யார் ?

பார்க்கும்போதே

ஈர்க்கும் சக்தி

பார்வையாலே பேசும் மொழி

கண்ணை மூட கற்பனை

கண்திறந்தால் அற்புதம்

படைத்தவன் யார் ?

சிறிய குறிப்பு

இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம்

நட்புடன் பரணீதரன்

Edited by Paranee

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 07.08.2007

இரவலின்பம் (விபச்சாரத்தால் வந்த வேதனை - எயிட்ஸ்)

உடையது மருவும்

இடையது கண்டு

எத்தனை இன்பம்

எத்துனை துன்பம்

மயிலிறகாலே மனதை வருடி

விடு விடுவென

வெட்கத்தை தேடி

கையது கொண்டு

மோகத்தை மூடி

காரிருளினுள் பொய்யான

மெய்யினை நாடி

இன்று

நாலு சுவற்றுக்குள்

நான்படும் வேதனை

இடையினால் வந்த

இன்பத்தின் துன்பமடா !

தோழா

இனியும் உனக்கொரு

இரவலின்பம் தேவைதானா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே! நான் முன்னர் 'காமம்' என்கின்ற தலைப்பில் எழுதிய கவிதையின் முதல் பந்தியை மட்டும் தருகிறேன்.

உடுப்பைக் களைந்து உள்ளிருக்கும் தளதள

உடலம்காண உணர்ச்சிகள் எல்லாம்

அடுப்பில் வைத்த பாலெனப் பொங்கும்

படிப்படியாகப் பரிசயமாகும் சிற்றின்பத்

துடிப்புகள் துடியில் அடங்கிப் போகும்

இடுக்கண்களைந்து அன்பினைச் சொரிந்து

கொடுத்திடும் பேரின்ப வாழ்வினை ஒக்குமா

நொடியில் கலைந்திடும் பாலியலின்பம்

  • கருத்துக்கள உறவுகள்

ஊன் தேடி

உண்டிக்கலையும்

ஊனக் கண்ணே

உடல் உள்ளிரு

அகக் கண் விரியாயோ..??!

அகப்பை

நிரப்பி

அழ வைத்து

ஆள்பவர் பாதி

அழிபவர் பாதி..!

புவிதனில்

உயிரது

தேடுவது

ஆண் பெண்

சிற்றினச்

சில்மிசமல்ல.

அறுகுமங்கு

உதாரணமாகி..!

உணர்ச்சி

அடங்கா

உலவும் கண்ணே

உடலுக்குள்

ஆசை தேடி

அலையும்

உலகில்..!

உணர்ச்சி ஆளும்

அகக் கண்ணும்

அடக்கும்

ஒழுகும்

உயர்வதை..!

போதிப்பவன்

புத்தனல்ல

மந்தி வழியில்

மனிதன்..! :(

அழைப்பது பூத்தான்..

தேன் வாரித் தரத்தான்..

பட்டிதழ் படரத்தான்..

செந்தேனைப் பருகத்தான்..

மறுக்குமா வண்டு..

மறைக்காத மலர் கண்டு..

மயங்கிடும் தேனுண்டு..

மறுப்பதில்லை பூச்செண்டு..

நீ பூ

நான் வண்டு...

தேன் வேண்டாம்

தொடவும் விடவேண்டாம்..

துரத்தாதே..

பறந்து வந்து

பார்த்துவிட்டேனும் போகிறேன்.. :(

ஆடு , மாடு, நாய் , நரிகளெல்லாம்

காணுமிடத்தில்

கலவி கொள்ளும்!

மிருகமில்லை

நீ - மனிதா...

இதற்கு மென்று

உனக்கொரு பந்தமுண்டு!

பந்தம் தாண்டி

இரவல் இன்பந்தேடி

மிருகமாக மாறு- பின்

(சுடு)காடுதான் உனது வீடு...! :P

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 08.08.2007

காதல் வந்திடுச்சா ?

விழி மோதிச்சிதறும்போது

மொழி சிக்கித்திணறும்

அக்கினியில் வீழ்ந்தாலும்

அண்டார்டிக்கா குளிர் தோன்றும்

இலையுதிர்காலத்திலும்

இடைவிடாது தூறல் வீசும்

அந்தரத்தில் பறந்துகொண்டு

அதிசயங்கள் செய்யவைக்கும்

நரி ஊளையுடும்போதும்

நடனம் ஆடத்தோன்றும்

சூரியச்சூட்டிலும்

சுகமான இன்பம் தோன்றும்

வான் இடிந்து வீழ்ந்தால்கூட

வாய்பிளந்து பார்க்கத்தோன்றும்

என்னவோ நடக்கும்

எதுவுமே தொடர்பில்லை

தன்னிலை மறக்கும்

தனிமையில் சிரிக்கும்

காதலித்துப்பார்

கவலையெல்லாம் பறந்துபோகும்

Edited by Paranee

முத்தெடுக்க முக்குளித்தேன்..

மூச்சடைக்குதே..காதல்

முத்தெடுக்க முன்னர்

கடல் ஊற்றெடுக்குதே

காதலெனும் மாயமானை

தேடிப்போகும் இதயம்..

அது கானல் நீரே கண்ட

பின்னும்..மீண்டும் மீண்டும் தொடரும்..

தூர நின்று பார்க்கும் போதும்

வண்ணநிலவு போல

நான் அருகில் சென்றும்பார்த்தேன்..

குழிகள் உண்மை நிலவு போல

விழிகள் நான்கும் தொட்டுவிட

பொறியாய்த் தோன்றும்.. தீ..

தீயை வளர்த்து தேகம் காய

இளமை அலையுதேடி..

பேசித்தொட்டு நெருங்கி

பாவை நிழலினின்று விலகி..

பத்துப் பேரைப் பழகி

கவிக்கு காதல் தினமும் வருதே..

காதல் வந்திடுச்சா?

கவனம் காதலர்களே

தாடியில் வளிந்தோடும்

பீரோடு சிலர்

தத்துவம் சொல்வார் கேள்

ஓரக்கண்ணால் ஆண்களை

வெறித்துப் பார்கும் வினோதம் பார்

காதலித்து கரம்பிடடித்த

கணவன் மனைவிகள்

காதலிக்கும் பிள்ளைகளை

கண்டிக்கும் விந்தை பார்

குஞ்சு நீ பிஞ்சு

கொஞ்சம் சிந்தி நீ

கோலம் கொள்ள முன்

ஒருவருக்குள் ஒருவர்

ஓளிந்திருப்பார்

ஏக்கங்கள் எல்லை மீறி

கோபுரமாய் வளர்ந்து நிற்க

நடுவில் சிறு உயிர்

சிற கொடிந்த பறவையாய்

சிக்கித்தவிக்கும்

காதலின் மீட்பை வேண்டி

தன்னுயிர் எது உணர்வெது

அதனுள்

அவள் உயிர் எது உணர்வெது என்று

பிரிக்க முடியாமல்

தவித்து தடுமாறி

சூனிய இருட்டுக்குள்

சூறாவளி புயலுக்குள்

சிக்கித்தவிக்குமே மனம்

நீண்ட இரவுகள் ஆகுமே

நெடுந்தூரம் கனவுகள் போகுமே

மூச்சும் காற்றோடு

முட்டி மோதுமே

ஆவள் விட்ட மூச்சை

கண்டுபிடிக்க

முண்டியடிக்குமே

ஈன்ற தாயை மறக்கச்செய்யும்

இருபது வருடம் உழைத்த

தந்தையின் கடமைக்கு

நன்றி கெட்டவனாக்கும்

பள்ளி வாத்தியை மறக்கச் செய்யும்

துள்ளித் திரிந்த காலத்தை

துப்பரவாய் மனதில் இந்து

துடைக்கச் செய்யும்

விம்மி வில்லங்கப்பட வைக்கும்

சமயத்தில்

தூக்கில் தொங்கிவிடு என

தூரத்தில் இருந்து அசரீரி கேட்கும்

அன்னை போல்

அரவணைத்து வரும்

எப்போது அசுரனாய் மாறும் என்று

இவருக்கும் தெரியாது சமயத்தில்

அவளுக்கும் தெரியாது

உணர்வின் ஆர்பரிப்பை

உண்மைக்காதல் என்பார்

பொய் காதல் என்பார்

கலியாணம் நடந்துவிட்டால்

உண்மையாகிவிடும பலருக்கு

நடக்காவிட்டால்

பொய் ஆகிவிடும் பலருக்கு

காலம் சில சென்றபின்

கட்டிலில் வேறெரு காதலை

விபரீதமாய் பார்த்துவிட

உண்மை பொய் போய்

பேய்க்காதல் ஆகிவிடும் சிலருக்கு

பின் பித்துப் பிடித்து

பிள்ளைகளுக்காய்

உயிரை கையில் பிடித்தபடி

உலா வருவார் நடை பிணமாய்

வாழ்க்கையில் ஒன்று காதல் என்று

வரையறுத்துக்கொண்டால்

நீ உனக்கு ஆசான்

வாழ்க்கையே காதல் என்று

வரம்பை மீறிக் கொண்டால்

நீ உனக்கு எதிரி

இதை நீ யோசித்து

இனிதே காதல் செய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விழியில் வந்து வித்தை காட்டும்

காதல் விளையாட்டு!. பிரிவின்

கணமோ கனமாய்த் தோன்றும்!

காதல் கணக்கு ஏடு!.

உறவுகள் ஆயிரம் இருந்தும்

தனிமையை மட்டும் விரும்பும்!

விருந்தே படைத்திருந்தாலும்

தண்ணீர் மட்டுமே அருந்தும்!.

கண்களில் கனவுகள் தேக்கி

கவிதைகள் ஆயிரம் எழுதும்!.

நடுநிசியில் எழுப்பி விட்டாலும்

"காதல்" என்றே புலம்பும்!

எழுதுகோலும் எழுத்தும் இதயம்

மட்டுமே வரையும்! இருவரின்

பேரையும் எழுதி அதில் அம்புகள்

விடுத்து மகிழும்!.

என்றோ நடந்த நிகழ்வை

நினைத்துத் தானாய்ச் சிரிக்கும்!

"காதல்" கொண்ட உள்ளம்! என்றும்

மகிழ்வில் திகழும் இல்லம்!.

  • கருத்துக்கள உறவுகள்

காதல்

ஒரு கண்ணாமூஞ்சி..

கண்கள் கட்டி

இருட்டில்

இரை தேடல்..!

தோற்பினும்

வெல்லினும்

இதயம்

வலிக்கும்..

இதழ்கள்

பேசும் பொய்கள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் வந்திடுச்சு

நீடுகுழல் வாரி நெற்றிப்பொட்டு வைத்து

தோடுமின்னி பூண்டு தோகை துகிலாடை

நூலினிடை இடையுடுத்தி ஒயிலாய் அசைந்துவர

கூடும் உவகைவெள்ளம் கோடி காலெமல்லாம்.

கண்கள் ஒருகோடி காதல் கதைபேசும்

கன்னம் தொடஇன்பம் கைகள் வழியேறும்

மின்னும் இடைபார்த்து எண்ணம் சூடேறும்

இன்னும் கதைபேசு என்றே மனம்கூறும்.

கடலின் அலைபோலே கூந்தல் அசைந்தாடும்

கனியின் சுவைபோலே கதைகள் இதமாகும்

துடிக்கும் விழியிரண்டும் தூண்டில் பலபோடும்

இடிக்கும் இதயமெங்கும் இன்பம் நிறைவாகும்.

பாடல் ஒருகோடி பாட மனம்நாடும்

கூடல் கவிவடிக்க தங்கத் தமிழ்தேடும்

கூடிக் கலந்துலவ கண்ட துணைநாடும்

ஈடு இணையில்லா இன்பம் உருவாகும்.

ஓடும் “ஓமோன்கள்” அளவு பலவாகும்

உடலும் மெருவாகி அழகு வலுவாகும்

விடலைப் பருவமாகி உடலம் நடைபோடும்

கொடிய நோயோடி நெடிய வாழ்வாகும்.

நினைவு நலமாக நாள்கள் வளமாகும்

இனிமை எமதாக இதயம் இதமாகும்

தனிமை பறந்தோடும் தளிர்க்கரங்கள் சங்கமிக்க

கனவு தினந்தோன்றும் கண்கள் திறந்திருக்க.

விழியில் நுழையும் உருவம்

மனதில் இறங்கி வளரும்

ஊனில் வேரைப் பரவி

உயிரை உறிஞ்சிக் குடிக்கும்..! :P

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 09.08.2007

கரிகாலன் வம்சமடா !

ஆசைக்கனியே

அழகிய வனமே

அள்ளும்போதும்

அணைக்கும்போதும்

துளிதுளியாய் மழலை

பேசும்போதும் - என்

தோள்மீது தவழும்போதும்

தூளியிலே ஆடிக்கொண்டே

துடிக்கும் உன்

இளமைக் குசும்பினிலே - என்

பிறப்பின் அர்த்தம் புரிந்துகொண்டேன்

மடியில் தவழ

என் மார்பில் உதைக்க

மகிழ்ந்து மகிழ்ந்து

என் மனமும் குதூகலிக்க

உன் பிஞ்சுவிரல்

அணைப்பினிலே என்

பஞ்சமெல்லாம் பறந்து போகும்

கஞ்சத்தனமில்லா சிரிப்பில்

என் கவலைகளை கரையச்செய்வாய்

கொஞ்சி கொஞ்சி பேசி

தமிழை கொஞ்சம் கொஞ்சமாய்

கொள்ளை செய்வாய்

அஞ்சியஞ்சி வாழ்ந்திடாதே

என் ஆசையமுதே - நீ

எம் வம்சம் தளைக்க வந்த

வீரப் புதல்வனடா !

அண்ணன் கரிகாலன் பேரனடா !

காலமெல்லாம்..கண்ணழுது

தவமாய்த் தவமிருந்து..

தான் கொஞ்சத் தரணியில்

தவழ்ந்து வந்த செல்வமடா..

மேதினியில் ஆளுமையும்..

மேலான தனித்துவமும்

மானமிழவா மாண்பும்..

மட்டற்ற தமிழ்ப்பற்றும்

மகன் பெற வேண்டுமடா..

அழுத தமிழர் கண்ணீர்..

ஆறாகி ஓடுகையில்

அரக்கர் சிரமறுக்க

புலி மாமனுடன் தோளிணைந்து

வாளெடுத்து வீறு கொள்ளடா..

கண்ணெல்லாம் காணக்

காத்துக்கிடக்கும்..கரி

காலன் காலத்தில் நீ

கூடத் தமிழ் ஈழ்ப்போர்

கலந்திட்ட பெருமை உன்

அம்மையப்பனுக்கும் வேணுமடா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானத்து நிலவோடு ஒப்பிட முடியாது

நீ என்றும் தேயாதவன்! சுடர் விடும்

நட்சத்திரம் கூட இணையில்லை

நீ மின்னி மறையாதவன்!.

ஆயிரம் காலமாய் ஈழத்தின் தாயவள்

அழுத கண்ணீரை எல்லாம்! வீரத்தின்

புதல்வனே!.எங்களின் அண்ணலே!

தீர்க்க நீ அவதரித்தாய்!.

ஈழத்தின் விடியலே மூச்சென

எழுந்தவன்! விடுதலைப் பயிருக்கு

உரமென அமைந்தவன்! ஈழத்தாய்

தந்த வீரத் தலைமகன்!

பதுங்கிப் பகை விரட்டும் புலி

படை தனைக் கொண்டான்

பதவிக்கும் பணத்துக்கும்

தலைகுனியாமல் வென்றான்!

உலகமே வியக்கின்ற எங்களின்

அண்ணா!. உன் வழி நின்றோம்

வென்றிடும் எங்களின் கரிகாலப்

படையணி! என்றே வாழ்த்துகின்றோம்

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 10.08.2007

நினைவெல்லாம் நிஜமாக. . .

மனமெல்லாம் கனமாக

வரைபடத்தில் தேடுகின்றேன்

உல்லாச பறவையாய் - நான்

ஓடியாடிய கிராமம் எங்கே ?

சருகோசைச் சங்கீதத்தோடு

மாந்தோப்பு வாசம் எங்கே ?

ஆலயமணியோசையோடு

ஆடியாடி வளர்ந்த - என்

பால்ய பருவம் எங்கே ?

ஆலயம் எங்கே அதில்

ஆண்டவன் எங்கே ?

கனவெல்லாம் நினைவாக்கி

கலைதந்து என்னை கவிஞனாக்கிய

கலைக்கூடம் எங்கே ?

கல்விமான்கள் எங்கே ?

சேற்றிலே மிதித்து

தினம் எனக்கு சோற்றினை

ஊட்டி வயிற்றை நிரப்பிய

மண்ணின் மைந்தர்கள்

விவசாயத் தெய்வங்கள் எங்கே ?

விளை நிலம் எங்கே ?

பனை மரம் எங்கே ?

பால் தரும் பசுவினம் எங்கே ?

தெங்கோடு தேன் தரும்

தோப்பு எங்கே ?

தோழிகள் எங்கே ?

தோன்றாமலேயே தொலைந்திடத்

துடிக்கின்றது தேசம்

தூக்கிவிட நான் துடிக்கின்றேன்

தோள்கொடுக்க வருவீரா ?

Edited by Paranee

மீள் வருமா

புல்லுத் தரையில் விளையாடிப்

புண்ணாய்ப் போன கால்களுக்குப்

புளுதி தனையே மருந்தாக்கிப்

புரண்ட மகிழ்ச்சி மீள்வருமா

காலை உணவும் இல்லாமல்

காலிற் செருப்பும் இல்லாமல்

காச்சும் வெயிலில் விளையாடிக்

களித்த நாட்கள் மீள்வருமா

தோட்டம் துரவில் அலைந்தலைந்து

தொட்டாற் சுருங்கி மரம்தேடி

தொட்டுத் தொட்டு இலைசுருட்டி

தொலைத்த நாட்கள் மீள்வருமா

முறமது குடையாய் மாறிவிட

முற்றம் நிறைந்த மழைநீரில்

காகிதக் கப்பல் விட்டேநாம்

களித்த நாட்கள் மீள்வருமா

வீட்டுப் பாடம் செய்யாமல்

விளையாடிப் பின் காலையிலே

வியாதி எனவே பலசொல்லி

வீட்டில் நின்ற நாள்வருமா

காதல் என்ற சொல்லுக்குக்

கருத்தே தெரியா வயதினிலே

கடிதம் கொடுத்துப் பதிலுக்காய்

காத்த நாட்கள் மீள்வருமா

கண்ணைக் கவரும் கவர்ச்சியுடன்

கலகல வென்று சிரிக்கின்ற

கன்னிப் பெண்கள் பின்னாலே

காவல் சென்ற நாள்வருமா

கள்ள மில்லா மனங்கொண்ட

கனிவும் பண்பும் மிகக்கொண்ட

நண்ப ரோடு சேர்ந்திருந்த

நல்ல நாட்கள் மீள்வருமா

வெள்ளிக் கிழமை வந்ததுமே

வெள்ளை வேட்டி தனையுடுத்து

ஆன்டவன் சந்நதி முன்னாலே

அமர்ந்த நாட்கள் மீள்வருமா

வெய்யில் மிகுந்த நேரத்தில்

வேப்ப மரத்து நிழல்தன்னில்

சாய்வுக் கதிரை துணையுடனே

சாய்ந்த நாட்கள் மீள்வருமா

தொல்லை இல்லா நண்பருடன்

தொடராய் ஓடும் வண்டியிலே

தொங்கிக் கொண்டே பயணித்துத்

தொலைத்த நாட்கள் மீள்வருமா

அறியாமல் நான் செய்துவிட்ட

அத்தனை தவறும் களைந்தகற்றி

அழகாய் மீள வாழ்க்கையினை

அமைத்து வாழும் நாள்வருமா

அன்றொருநாள்

வயல் வெளியில்

வெயில் மங்கும் மாலையில்

நடந்தேன்

துறந்திருந்த சட்டை

காற்றில் படபடத்தது

முழுகியபின் சீப்பில்

சிக்குப்படாத முடிகள்

நர்த்தனம் ஆடியது

கண்ணுக்கெட்டிய தூரம் வரை

நெற்பயிர்களில்

காற்று தவள்ந்தது

கோலங்களாக ஜாலங்களாக

என் தலை முடிகளும் அப்படியே..

நண்டு பொந்துக்கால்

நழுவியோடும் தண்ணீர்

சலசலத்தது

கள்ளக்கடவான் என்று

காலையில் ஒரு சண்டையும் வரலாம்

கள்ளனே என்று

ஒழிந்து கொண்ட நண்டைப்பார்த்து

உள்ளுர சொல்லிக்கொண்டே நடந்தேன்

தெருவோரத்து பூவரசில்

குருவிகள் கத்தியது

இரு மருங்கிலும் வாயக்கால்

கிணுகிணுத்தது

இரண்டும் சேர்ந்த

இனிய இசையை கேட்டேன்

அண்ணாந்து பார்த்தேன்

நாரைகளும் கொக்குகளும்

கூட்டமாக கோலம் போட்டபடியே

கூடு திரும்பிக்கொண்டிருந்தது

விறுசாக் கிளிகள்

காற்றைக் கிழித்துக்கொண்டு

கீச்சிட்டபடியே

குறுக்காக பறந்தது

தெருவுக்கு வந்தேன்

ஆழுயர புல்லுக்கட்டுடன்

கொட கொட என்ற சத்ததுடன்

என்னை கடந்தது ஒரு சைக்கிள்

;

என்ரயள் நேர போகுதுகளோ?

உங்களுக்கு முதல் வீட்டை நிக்கும்!

சொக்கரின்; உழவு மாடுகள்

சொன்னபடி கேட்கும்

இருந்தும் அவருக்கு

நெடுகிலும் சந்தேகம்

தலைக்கு மேலே ஒற்றை நாரை

ஆடி அசைந்து

கூடு திரும்பிக்கொண்டிருந்தது.

பள்ளிப்பை எறிந்து

பாய்ந்தோடி மாவுக்கு

அணில் கடித்த பழம் தேடி

அலைபாயும் கண்ணே...

அறுசுவையாய் அம்மாகை

சமையலெல்லாம் காத்திருக்கும்..

ஆனாலும் நொங்குக்காய்..

பனைநாடி விழிதேடுமே...

முற்ற வேப்பங்காற்றே..

சுடும் வெயில் கீற்றே....

விழுவாயோ..மீண்டும்

என் தேகம் மேலே..

உனை விட்டு வந்தேன்

என் மண்ணே..நீயும்..

என் தாயைப் போலே..

தேயாதே..அழகு திரியாதே..

அழுஅழுவென்றே அழுவேனே..

அணுக்கல்லுகள் தேயக் கரைவேனா..

யாரோ வந்து விதியால் கட்டியது..

என் கோவில் விட்டு விரட்டியது..

Edited by vikadakavi

இதயம் அழுகிறதே!

இதயத்தினுள்ளே இதயத்தினுள்ளே

வாழும் கனவுகளே!

இனியொருபோதும் காணமுடியாத

இறந்த நினைவுகளே!

கழிந்த வாழ்வின் முடிந்த பொழுதின்

கனவை மீட்கையிலே -

வழிந்து வழிந்து ஓடும் விழிநீரின்

காரணம் கேட்கையிலே -

இறந்த உயிர்களும் பகிர்ந்த வாழ்வை

இதயத்தில் காண்கையிலே -

இழப்பின் துயரினை தாங்கமுடியாது

இதயம் அழுகிறதே!

இதயத்தினுள்ளே இதயத்தினுள்ளே

வாழும் கனவுகளே!

இனியொருபோதும் காணமுடியாத

இறந்த நினைவுகளே!

பி/கு: இது முன்னொரு காலத்தில் சுமார் பதினைந்து வருடங்களின் முன் நான் எழுதிய கவிதை. இன்று மீண்டும் இந்தக்கவிதை திடீரென நினைவில் வந்ததாலும், மேலும் புதிதாக ஏதாவது கவிதை புனைவதற்கு எனது மூளை இப்போது வேலை செய்யாமல் அடம்பிடிப்பதாலும் இதை இங்கு இன்று இணைக்கின்றேன்.. :(

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 13.08.2007

என்தன் தேசத்திலே இருளகன்றது . . .

விழித்துப்பர்க்கும்

விடிகாலைப்பொழுதில்

விடியல் என்றுமே

வெளிச்சம் பெய்ததில்லை

புன்னகை பூத்த எம்

தேசத்தையும் கனவில்கூட

காண முடியவில்லை

மூன்று தசாப்தங்கள்

முடிவுறம் நிலையிலும்

எம் முயற்சிகள் எதுவுமே

முடிவுற்றதுமில்லை

நாளை நாளை என

விடியல் தேடி அலைகின்றேன்

கானல் நீராய் மாறிப்போகுமோ

கவலை மனதை நெருடுகின்றது

தினம் ஓருயிராய்

தினம் ஓர் உறவாய்

காவுகொண்டு சிங்களம்

கரகம் ஆடுகின்றது

என்றுதான் விடிவு கிட்டும்

என்றுதான் இருளகலும்

என்றுதான் எம் துயர் அகலும்

என்றுதான் நாம் புன்னகைப்போம்

என்றுதான் எம தேசம்

தீயை விலக்கும்

ஆவலுடன்

புலம்பெயர்ந்து புலனறுந்து

தினம் தினம்

மடிந்து போகின்றேன்

ஆயிரம் கைகள் சேரட்டும்

அண்ணனின் பலம் உயரட்டும்

வானுயர்ந்த அவன் வீரம்

வையகம் என்றும் போற்றட்டும்

அண்ணனின் நம்பிக்கையால்

நான் இன்றும் ஆவலுடன்

வான்; பார்க்கின்றேன்

என்றோ ஓர்நாள் விடியல் தோன்றும்

அன்று என்தன் இருளகலும்

Edited by Paranee

வாழும் காலம் நீழ்வதில்லை

வாழ்ந்த சுவடுகள் அழிவதில்லை

கருவிலிருந்து அன்னை

மடியில் மலர்ந்த போது

காணும் உலகம்

தாயின் நெஞ்சம்

மழலையின் விழிகள்

மலரும் போது

பரிவு மலையாக

பாச மழையாகும்

தாய் மார்பே

தளிரின் உலகம்

காலங்கள் நகரும்

காட்சிகள் விரியும்

கோலங்கள் மாறும்

பதிவுகளை மறக்கலாம்

பதிவுள் அழிவதில்லை

உறவுகளை பிரிந்து

தூர தேசங்கள் போகலாம்

உணர்வுகள் கூடவரும்

நினைவுகள் கூட வரும்

பிரிவுகள் வரும் போது

உறவுகள் தவிக்கும்

உணர முடியும்

என் தேசத்து

காட்சிகளின் பதிவுகள்

என்னுள் என்றும் வாழும்.

பழையதை மறந்திடு

புதியதை தேடிடு

ஆறுதல் கூற ஆயிரம் பேர்

அன்னையை மறக்க முடியுமா

இல்லையேல்

அன்னை மண்ணையும்

மறக்க முடியாதே

தவழ்ந்த மடியை மறக்க

தரணியில் யாரால் முடியும்?

தாயையும் என்னையும் தாங்கிய

மண்ணை மறந்தொரு வாழ்வு

செத்தபின்னும் வேண்டாம்

நினைவுகள்

தினம் நெஞ்சை

அழுத்துகின்றது

புதுமைகள் எனைச் சுற்றி

ஆரவாரம் செய்கின்றது

இருந்தும் இருளில் வாழ்கின்றேன்

நடந்து வந்த பதைக்கு

நன்றிக்கடனாக

என் கவலைகளும்

கண்ணீரும்

என்னை மனுசனாக

என்றும் வாழ வைக்கும்

தாயே தாய் மடியே

எமை தாங்கிய மண்ணே

உன்னில் விழைந்த

செடியிலும் கொடியிலும்

ஊறிய இரத்தம்

இன்னும் என்னுள் ஓடுகின்றது

உடம்பில் செல்களாக

இன்னும்

உயிருடன் இருக்கின்றது

இந்த உடம்பையும்

அந்த நினைவுகளையும்

சுமந்து கொண்டு நடந்திடுவேன்

உலகின் எந்த மூலையில்

எப்படி வாழ்ந்தாலும்.

என் தேசம் விடியும் போது

எனக்குள்ளும் விடிவு வரும்

அதுவரை நான்

என் தேசத்து அவலத்தை

எடுத்துரைப்பேன் உலகுக்கு.

Edited by sukan

  • தொடங்கியவர்

இன்றைய கவிதை 14.08.2007

விடுதலை

விடுதலை என்பது

விடுகதை அல்ல

வெற்றியும் எளிதல்ல

எலியாக நாம்

வளை தேடவில்லை

புலியாகி பகைவெல்ல

புறப்பட்டுவிட்டோம்

தடையினை உடைப்போம்

தலைவனை மதிப்போம்

மனதெங்கும் நிறைவான

மாவீரர் புகழ்பாடி

வெற்றிகள் குவிப்போம்

எடுபடையெனவே

படுகளம் ஆடும்

பகையது கொன்று

புதியதோர் சரித்திரம் படைப்போம்

வீரர் நாம்

வேகம்தான் எம் மூச்சு

மண்ணின் மைந்தர் நாம்

மானம்தான் பெரிது

கரிகாலன் வளர்த்தெடுத்த

கரும்புலிகள் நாங்கள்

கணப்பொழுதில்

விடியல் காண்போம்

கடலன்னை தத்தெடுத்த

கடற்புலிகள் நாங்கள்

கடலதிலும் காண்போம்

விடுதலை

வான்மகவு ஈன்றெடுத்த

வான்புலிகள் நாங்கள்

விண்ணேறிப் பெறுவோம்

வியத்தகு விடுதலை

தேசத்தின் குரலால்

தினம் வளர்ந்தவர்கள் - நாங்கள்

தேசம் அதிர

தேசியவிடுதலை காண்போம்

முகிலினின்று நீருக்கு விடுதலை

மழை...

பூவிலிருந்து நீருக்கு விடுதலை

தேன்...

தேகத்திலிருந்து நீருக்கு விடுதலை

வியர்வை..

விழியிலிருந்து நீருக்கு விடுதலை

கண்ணீர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.