Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்

13 ஜூன் 2022
 

ஆணவ கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி செய்கின்றனர். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

மருத்துவமனையில் மலர்ந்த காதல்

இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழி உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த) மோகன் (26) என்பவரின் தாயாரும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த நேரத்தில் சரண்யாவுக்கும் மோகனுக்கும் காதல் அரும்பியுள்ளது.

இருவரது தாயாரும் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக காதல் தொடர்புகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர்.

இந்த ஜோடி இன்று காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்தனர். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்டுள்ளனர்.

பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று அந்த கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், வெற்றிவேந்தன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இந்த நிலையில், காதல் தம்பதியை படுகொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-61791701

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

Edited by Nathamuni

2 hours ago, Nathamuni said:

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

 

உங்கள் கருத்தில், சாதிவெறி தாண்டவமாடுகிறது

சும்மா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

வெட்டியது பட்டியல் இனம்....

வெட்டப்பட்டது..... ?

புரியவில்லை..... இது ஆணவப்படுகொலையா அல்லது காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போனதால் வந்த கடுப்பா? (அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் )

குடும்ப பிரச்சனை என்று போலீஸ் சொல்வதால் அப்படி தான் இருக்கலாம்.

சரண்யா பட்டியல் வகுப்பு
மோகன்  செங்குந்த முதலியார் வகுப்பு

சாதிப்பிரச்சனையால் நடந்த கொலையாக இருக்க தான் சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

சரண்யா பட்டியல் வகுப்பு
மோகன்  செங்குந்த முதலியார் வகுப்பு

சாதிப்பிரச்சனையால் நடந்த கொலையாக இருக்க தான் சந்தர்ப்பம் உண்டு.

வழக்கமாக.... உயர்சாதியினர் தானே ஆணவக் கொலை செய்வர்.... இங்கே தாழ்த்தப்பட்ட பட்டியல் இனம்.

அவரும் நம்பிக்கையுடன் அங்கே வந்திருக்கிறார்..... ஏற்றுக்கொள்வார்கள் என்று.

அதனால் தான்.... இது சாதிப்பிரச்சணையில்லை..... குடும்ப பிரச்சணை என்று போலீசார் சொல்லியிருக்கலாம் என்ற ரீதியில் எனது அபிப்பிராயம் பதிந்து, தான் விளக்கம் கேட்டேன்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சாதிப்பிரச்சினையும் , மைத்துனர் ரஞ்சித்துக்கு தங்கையை  கொடுப்பதாக இருந்ததால் விருந்துக்கு மோகன் வரவைத்து  வெட்டி இருக்கிறார்கள் என வேறு பத்திரிகை சொல்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

மைத்துனர் ரஞ்சித்துக்கு தங்கையை  கொடுப்பதாக இருந்ததால்

அண்ணர்  சக்திவேல் கடையில் வாங்கிய ஒரு பொருளா தங்கை  தனது விருப்பபடி மைத்துனருக்கு கொடுப்பதற்கு
பெண் தனக்கு விரும்பியவரை திருமணம் செய்தால் கடுப்பாகி விருந்துக்கு வாங்கோ என்று அழைத்து ஓட விரட்டி கொலை செய்வார்கள் கொடூரம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணர்  சக்திவேல் கடையில் வாங்கிய ஒரு பொருளா தங்கை  தனது விருப்பபடி மைத்துனருக்கு கொடுப்பதற்கு
பெண் தனக்கு விரும்பியவரை திருமணம் செய்தால் கடுப்பாகி விருந்துக்கு வாங்கோ என்று அழைத்து ஓட விரட்டி கொலை செய்வார்கள் கொடூரம்.

விளங்க நினைப்பவரே ...மன்னிக்கவும் . இந்திய பேச்சுத்தமிழில்  ..கொடுத்து என எழுதி  விடடேன் .

 ஆனால் பெண் கொடுத்து பெண் எடுத்தல் எனும் வழக்கம் உண்டு . .

கொண்டு கொடுத்தல் என்பது பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்ற பழக்கம் ஆகும். இதன்படி 'அ' குழுவைச் சேர்ந்த பெண்ணை ஆ குழுவிற்கு கொடுத்தால் அங்கிருந்து 'அ' குழுவிற்கு ஒரு பெண் திரும்பப் பெறப்படுவாள்.

 

உடன் பிறந்தோர் பரிமாற்றம் (sibling set exchange) என்ற இம்முறை கொண்டு கொடுத்தலில் ஒரு முறையாகும். இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொள்ளலாம்.

ஆதாரம் தமிழ் விக்கி பீடியா 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண் கொடுத்து பெண் எடுத்தல் எனும் பொருள் மாற்று முறை அவர்களிடம் இருந்தாலும் சரண்யா மோகனை தான் விரும்பி திருமணம் செய்துள்ளார். தங்கள் சொல்பவரை திருமணம் செய்யாமல் தான் விரும்பியவரை திருமணம் செய்வதா என்று தம்பதிகளை படுகொலை செய்துள்ளனர். இது ஆணவக கொலை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சரியாகவே சொல்லியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.

https://www.naamtamilar.org/2022/06/seeman-demands-tn-govt-to-draft-a-seperate-law-to-curb-the-increasing-caste-based-honor-killings/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? - பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கும்பகோணம்

கும்பகோணத்தில் சில நாட்களுக்கு முன்பாக புதுமணத் தம்பதி கொல்லப்பட்ட விவகாரம் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. பட்டியலினத்தவர் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஆணவக் கொலையின் மறுவடிவமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது? பிபிசி கள ஆய்வு...

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சோழபுரத்தில் திருமணமான சில நாட்களில் புதுமணத் தம்பதி, பெண்ணின் உறவினர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆணவக் கொலை குறித்த பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களும், பெருமிதம் கொண்டு கொலையில் ஈடுபட்டார்களா என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சாதி தொடர்பான பெருமிதத்தால் நடத்தப்பட்டதா அல்லது பின்னணியில் வேறு காரணங்கள் இருந்தனவா என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தனர். உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது சோழபுரம். இங்கு பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளது துளுக்கவேலி ஆண்டவன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேன்மொழி. இந்தத் தம்பதிக்கு சக்திவேல், சதீஷ், சரவணன் என மூன்று மகன்களும் சரண்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இதில் சேகரும் சக்திவேலும் கொத்தனாராக வேலை பார்த்து வருகின்றனர். சதீஷ் எம்.பி.ஏவும் சரவணன் டி.எம்.இயும் முடித்துவிட்டு திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சகோதரர்கள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது. சரண்யா சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றிவந்தார்.

தேன்மொழிக்கு மனநலம் அவ்வப்போது பாதிக்கப்படும் பிரச்னை இருந்த நிலையில், அவரைக் கடந்த டிசம்பர் மாதம் சென்னைக்கு அழைத்துவந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தார் சரண்யா. பணியாற்றும் நேரம் போக, மீதி நேரத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து பார்த்துக்கொண்டார் அவர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள பொன்னார் கிராத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி - வடிவேல் தம்பதியின் ஒரே மகன் மோகன். இவர் வேதியியலில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். வடிவேல் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரி மட்டும் பொன்னூர் கிராமத்தில் மகன் அனுப்பிவந்த மாதாந்திரத் தொகையில் வாழ்க்கை நடத்திவந்தார். இவரும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதவாக்கில் இவரது மனநலம் மிகவும் மோசமடையவே, இவரைச் சென்னையில் உள்ள அரசு மனநலக் காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளித்தார் மோகன். அந்தத் தருணத்தில், தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க சரண்யாவும் அங்கிருந்த நிலையில், இருவரும் பழக ஆரம்பித்தனர்.

 

கும்பகோணம் தம்பதி கொலை

சரண்யாவின் வீட்டில் எதிர்ப்பு ஏன்?

மோகனைப் பொறுத்தவரை, மனநலம் பாதிக்கப்பட்ட தாயைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலையில், காதலைத் தொடர பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்கவில்லை. ஆனால், சரண்யாவின் சகோதரர் சக்திவேல் இந்த காதலை ஏற்கவில்லை. இதற்குக் காரணம் இருந்தது.

சரண்யாவின் மூத்த சகோதரரான சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் என்பவரை சரண்யாவுக்கு திருமணம் செய்வது குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பிலிருந்தே பேசிவந்தனர். ரஞ்சித்தும் சரண்யாவும் சில நாட்கள் பழகியும் வந்தனர். ஆனால், ரஞ்சித்திற்கு குடி, போதை போன்ற பழக்கங்கள் இருக்கவே, அவரை சரண்யாவுக்குத் திருமணம் செய்து வைப்பது குறித்து சதீஷும் சரவணனும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சரண்யாவும் ரஞ்சித்தைவிட்டு விலக ஆரம்பித்திருந்தார்.

ஆனால், மூத்த சகோதரரான சக்திவேல் இதனை ஏற்கவில்லை. தனது மைத்துனருக்கே சரண்யாவைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமெனக் கூறி சண்டையிட்டுவந்தார். இந்த நிலையில், சரண்யாவும் மோகனும் காதலிக்கும் விவகாரம் தெரியவந்தபோது அதற்கு அவரது பெற்றோரோ, சக்திவேல் தவிர்த்த மற்ற இரு சகோதரர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், சக்திவேல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமையன்று தனது தாய் பரமேஸ்வரி மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகில் உள்ள கோவில் ஒன்றில் சரண்யாவைத் திருமணம் செய்தார்.

விருந்துக்காக அழைக்கப்பட்ட தம்பதி கொலை

இந்தத் திருமணம் குறித்த தகவலை தனது சகோதரர்களுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார் சரண்யா. இதற்குப் பிறகு சரண்யாவை அழைத்த சக்திவேல், திங்கட்கிழமையன்று மோகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் அவரது பெயரில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை மீட்டுத் தரும்படியும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து மோகனும் சரண்யாவும் துளுக்கவேலிக்கு வந்துள்ளனர். சக்திவேலும் சரண்யாவும் கும்பகோணத்திற்குச் சென்று நகைகளை மீட்ட பிறகு, வீட்டுக்கு வந்தனர். பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு, பிற்பகலில் சென்னைக்குச் செல்வதற்காக மோகனும் சரண்யாவும் புறப்பட்டனர். சரண்யா, சக்திவேல், மோகன் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியில் வந்ததும், வீட்டின் மற்ற பெண்களை வீட்டுக்குள் போட்டுப் பூட்டினார் சக்திவேல்.

உடனடியாக ரஞ்சித்திற்குக் குரல் கொடுக்க, ஆயுதத்துடன் ஒளிந்திருந்த அவர் முதலில் மோகனைப் பின்னாலிருந்து கழுத்தில் வெட்டியதாகவும் அங்கிருந்து தப்பி ஓடிய சரண்யாவை அடுத்த திருப்பத்திலேயே துரத்திப் பிடித்த சக்திவேல் அவரது கழுத்தைப் பிடித்து நெரிக்க, அங்கு ஓடி வந்த ரஞ்சித் சரண்யாவையும் வெட்டியதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் கொலையான இருவரில் சரண்யா பட்டியலினத்தையும் மோகன் செங்குந்த முதலியார் இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆகவே, முதல் பார்வையில், இந்தக் கொலை சாதிக்கு வெளியே நடந்த திருமணத்தால் நிகழ்ந்த கொலையென்று கருதப்பட்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்திய ஆணவக் கொலை என சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட ஆரம்பித்தது.

"சாதிக்காக நடந்த கொலையில்லை"

ஆனால், இந்தக் கூற்றை முற்றிலுமாக மறுக்கிறார்கள் சக்திவேலின் குடும்பத்தினர். "இது நிச்சயமாக சாதிக்காக நடந்த கொலையில்லை. எங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை. அம்மா மன நலம் சரியில்லாதவர். நானும் என் அண்ணனும் திருப்பூரில் இருந்தோம். அம்மா, என் மனைவி, என் அண்ணன் மனைவி மட்டுமே வீட்டில் இருந்தனர். அவர்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வெட்டியிருக்கிறார்கள். அவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல இப்படிச் செய்திருக்கிறார்கள்" என்கிறார் சரண்யாவின் சகோதரரான சரவணன்.

சரண்யாவின் மற்றொரு சகோதரரான சதீஷ் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருப்பதை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். தனக்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடி சரண்யா, வேறு ஒரு நபரைத் திருமணம் செய்ததில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்கிறார் சதீஷ். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். வேறு எதையும் பேசும் நிலையில் அவர்கள் இல்லை.

சரண்யாதான் அந்த வீட்டின் ஆணி வேர் என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். தன் சகோதரர்களைப் படிக்கவைத்து, தன் தாய்க்கு மருத்துவம் பார்த்து மிகப் பொறுப்புடன் நடந்துகொண்ட பெண் என்கிறார்கள் அவர்கள். தனது மனநல பிரச்னையிலிருந்து மீண்ட அவரது தாய், மீண்டும் பாதிப்புக்குள்ளாக ஆரம்பித்திருக்கிறார்.

 

மோகனின் தாய் பரமேஸ்வரி

 

படக்குறிப்பு,

மோகனின் தாய் பரமேஸ்வரி

சுயநினைவின்றி புலம்பும் தாய்

ஆனால், சரண்யாவைத் திருமணம் செய்ததால் கொல்லப்பட்ட மோகனின் கதை இன்னும் பரிதாபமானது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ள உள்ளடங்கிய கிராமம் பொன்னூர். ஊர் கடைசியில் அமைந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் மோகனின் தாய் பரமேஸ்வரி.

"நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. வேணாம் வேணாம்னு.. இப்படி நடந்துருச்சு. தீடீர்னு கூட்டினு போய் கல்யாணம் பண்ணுனான். செத்துப்போய்ட்டான்" என்று சுயநினைவின்றி புலம்புகிறார் அவர்.

மோகன் ஐந்தாவது படிக்கும்போதே அவரது தந்தை வடிவேல் இறந்துவிட, மிகச் சிரமப்பட்டு அவரை படிக்கவைத்து ஆளாக்கியவருக்கு தன் மகன் இறந்துவிட்டதைக்கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.

மகனுக்கு இறுதிச் சடங்குகளை முடித்து ஒரு நாளுக்கு மேலாகியும் குளிக்காமலும் உடுத்திய உடையை மாற்றாமலும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார் அவர். "இனிமே என்ன இருக்குது.. நானும் கெளம்ப வேண்டியதுதான்" என்கிறார்.

ஊர்க்காரர்களைப் பொறுத்தவரை, மோகனை விருந்துக்கு அழைத்துச் சென்று கொன்றுவிட்டதாக பெண் வீட்டாரின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆதரவின்றி இருக்கும் மோகனின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்கிறார்கள்.

சோழவரம் காவல்துறையைப் பொறுத்தவரை, ஜாதி ஆணவத்தில் நடந்த கொலையாகத் தெரியவில்லை என்கிறது. தன்னை சரண்யா நிராகரித்துவிட்ட ஆணவத்தில் ரஞ்சித்தும் அவரால் துண்டப்பட்டு சக்திவேலும் இந்தக் கொலையில் ஈடுபட்டதாக காவல்துறை கருதுகிறது.

இப்போது ரஞ்சித், சக்திவேல் ஆகிய இருவரும் சிறையில் இருக்கிறார்கள். காதல் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கொலைகள் நடந்திருப்பதால் இதனை ஆணவக் கொலை என்றுதான் அழைக்க வேண்டும் என்று சிலரும், ஆணாதிக்கக் கொலை என்று அழைக்க வேண்டுமென சிலரும் விவாதித்துவருகிறார்கள்.

இது அப்பட்டமான ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்கிறார், மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் கதிர். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்திருக்கும் கதிர், "இந்தப் படுகொலையில் நேரடியாக சாதி இல்லை என்றாலும் இவை ஆணவக் கொலைகள் தான். ஒரு பெண்ணின் இணைந்து வாழக்கூடிய அல்லது திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு எதிராக குறுக்கீடு செய்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ அவற்றை ஆணவக் குற்றங்கள் என்று தான் பார்க்க வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவாதங்களுக்கு அப்பால், வெகு தூரத்தில் ஒரு ஆலமரத்தடியில் தனியாக அமர்ந்து உயிரோடில்லாத மகனோடு பேசிக்கொண்டிருக்கிறார் பரமேஸ்வரி.

https://www.bbc.com/tamil/india-61836122

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.