Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி

 

 

image_20a1f57a11.jpg

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. 

அண்மையில் கூட, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூட, அது தொடர்பிலான விவாதங்களின் போது, முன்னாள் போராளிகளை நோக்கி, “நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை; குப்பி கடிக்காத நீங்கள் எல்லாம் முன்னாள் போராளிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதை ஆற்றவர்கள்...” என்ற மாதிரியான வாதங்களை முன்வைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் குப்பி கடிக்கவில்லை’ என்ற கேள்வி கேட்கப்படும் போதெல்லாம், ஈழத் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்டளவான தரப்புகளிடம் ‘குற்ற உணர்ச்சி’ என்கிற, மனிதனின் அடிப்படை பகுத்தறிவுசார் உணர்வு இல்லை என்ற உண்மை, முகத்தில் அறையும். 

அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் சமூகத்துக்குள், இவ்வாறான தரப்புகள் இருப்பது என்பது, தமிழ்ச் சமூகத்தின் பெரும் சாபக்கேடு. ஏனெனில், ‘குற்ற உணர்ச்சி’தான் மனிதனை விலங்குக் கூட்டத்திலேயே மேன்மையான இடத்தில் வைப்பதற்கான காரணங்களில் முக்கியமானது. 

காடுகளில் இருந்து நீர்நிலைகளின் கரைகளின் வழியாக, மனித நாகரிகம் வளர்ந்து வந்த போது, சமூகங்களாக வாழ்வதற்கான உந்துதல்களில் ‘குற்ற உணர்ச்சி’ என்கிற உணர்வும், முக்கிய இடத்தை வகித்தது.

‘குற்ற உணர்ச்சி’ இல்லையென்றால், மனித இனம் எப்போதோ தங்களுக்குள் அடித்துக் கொண்டு முழுவதுமாக அழிந்து போயிருக்கும். ‘குற்ற உணர்ச்சி’யே, மனிதனை இன்றைய ஓரளவான நாகரிக ஒழுங்குகளுக்குள் கொண்டு வந்து சேர்த்தது.

முள்ளிவாய்க்கால் முடிவு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பின்னடைவு. இந்தப் பெரும் பின்னடைவில்  இருந்து மீண்டெழுவதற்கு, எவ்வளவுதான் சிரத்தை எடுத்துச் செயற்பட்டாலும், இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இதனை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் உணர்ந்து கொண்டிருக்கின்றது. 

ஆனால், முள்ளிவாய்க்கால் முடிவு விட்டுச் சென்ற ‘முன்னாள் போராளிகள்’ எனும் அடையாளம் கொண்ட இன விடுதலை வீரர்களை, தீண்டத்தகாதவர்களாக தமிழ்ச் சமூகம் நோக்கி வருகின்றது. 

ஆயுதப் போராட்டங்களின் வீழ்ச்சி, போர்க் கைதிகளை, முன்னாள் போராளிகளை உலகம் பூராவும் பல சந்தர்ப்பங்களில் உருவாக்கி இருக்கின்றது. போராடிய அனைவரும் போர்க்களத்தில் மாண்டு வீழ்வதில்லை; அது நிகழவும் வாய்ப்பில்லை. 

அதுபோல, போராடச் சென்றவர்கள், போராட்டம் தோல்வியடைந்தால், உயிருடன் திரும்பக் கூடாது என்று நினைப்பதெல்லாம் மிருகத்தனமான உணர்வு. அதுதான் ‘குற்ற உணர்ச்சி’ அற்ற நிலை. அதனால்தான், முன்னாள் போராளிகளை நோக்கி, அரச உளவாளிகள் என்கிற அடையாளமும் “ஏன் குப்பி கடிக்கவில்லை” என்ற கேள்வியும் முன்வைக்கப்படுவதற்கு காரணமாகும்.

அதிக தருணங்களில், முன்னாள் போராளிகளை நோக்கி, இவ்வாறான கேள்விகளை முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் எந்தவித பங்களிப்பும் செய்யாமல், பவ்வியமாக பாடசாலைக்கும் தனியார் வகுப்புகளுக்கும் சென்று, தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை இட்டவர்கள். அல்லது, யாழ்ப்பாணத்திலோ, கொழும்பிலோ பெற்றோரோடு பாதுகாப்பாக இருந்து கொண்டு, புலம்பெயரும் கனவைச் சுமந்தவர்கள். பாடசாலைகளிலோ, தனியார் வகுப்புகளிலோ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பு கூட்டங்களை கேட்கக்கூட தயங்கியவர்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் மதில், வேலிகள் பாய்ந்து ஒழுங்கைகளுக்குள்ளால் வீடுகளுக்கு ஓடியவர்கள். 

இவர்களை ஒத்தவர்கள் போராட்டக்களத்தில் இருக்கின்ற போது, இவர்கள் பல்கலைக்கழகங்களில் கற்றுக் கொண்டிருந்தார்கள்; அல்லது, புலம்பெயரும் முயற்சிக்காக கொழும்பில் நின்றவர்கள். இவர்களோ, இவர்களின் பெற்றோரோ ஆயுதப் போராட்டத்தையோ, அதனை இறுதி வரை நடத்திய விடுதலைப் புலிகளையோ, மனதுக்குள் நாள்தோறும் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தவர்கள்.

ஆனால், புலிகளின் வீழ்ச்சி, போராட்டக்காலங்களில் ஒளித்து ஓடியவர்களை எல்லாம், திடீர் தமிழ்த் தேசிய போராளிகள் ஆக்கிவிட்டது. அவர்களில் அதிகமானவர்கள்தான், முன்னாள் போராளிகளை நோக்கி ‘துரோகிகள்’, ‘காட்டிக்கொடுப்பாளர்கள்’ என்கிற அடையாளங்களைச் சூட்டுகிறார்கள். 

வாழ்வை வளமாக்க வேண்டிய வயதில், இனவிடுதலைப் போராட்டத்துக்காக தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து, தெய்வாதீனமாக உயிர் மீண்டிருக்கின்ற முன்னாள் போராளிகள், இன்றைக்கு வாழ்வதற்தே வழியில்லால் இருக்கிறார்கள். 

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னர், 13 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், முன்னாள் போராளிகளை தமிழ்ச் சமூகம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரம், குடும்பம் பற்றியெல்லாம் எந்த உரையாடலும் தமிழ்ச் சூழலில், எந்தவொரு தரப்பாலும் முன்னெடுக்கப்படவில்லை. ‘குற்ற உணர்ச்சி’யுள்ள சமூகமாக இருந்திருந்தால், இதுவெல்லாம் நிகழ்ந்திருக்கும்; முன்னாள் போராளிகளை ஏறெடுத்துப் பார்த்திருக்கும். 

(இந்தப் பத்தியாளரும், ஆயுதப் போராட்டம் நீடித்த காலத்தில், போராடும் வயதை அண்மித்துவிட்ட ஒருவர்; ஆனால், எதிர்கால வாழ்வு பற்றிய பயத்தால், ஆயுதப் போராட்டத்தின் திசைப் பக்கமே திரும்பவில்லை.  எனினும், ‘குற்ற உணர்ச்சி’ என்கிற விடயம், முன்னாள் போராளிகள் பற்றிய எண்ணங்களின் போது, பிடரியில் தட்டுவதுண்டு. அதுதான், அவர்களை நோக்கி எந்தவொரு தருணத்திலும், தகுதியற்ற வார்த்தைகளை உதிர்ப்பதைத் தடுக்கின்றது.)
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல், கட்சிகளிடம் முழுவதுமாகச் சென்று சேர்ந்துவிட்டது. கட்சிகளிடம் போராடும் இனமொன்றின் அரசியல் முழுவதுமாகச் சென்று சேர்ந்தால், அது ஆபத்தான கட்டங்களைத் திறந்துவிடும். 

அதுவும், அதிகார ஆசையோடும் பதவி வெறியோடும் இருக்கின்ற கட்சிகளிடம், ஓர் இனத்தின் அரசியல் சென்று சேர்ந்தால், அது அதிக தருணங்களில் அபத்தமான கட்டங்களையே கொண்டுவந்து சேர்க்கும். இன்று, தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்ற கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அது புரிந்துவிடும். 

ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகளுக்குப் பயந்து, பணிந்து இயங்கிய கட்சிகள் எல்லாம், புலிகளின் வீழ்ச்சிக்குக் காத்திருந்தது போலவே, இப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது, புலிகள் மீதான போலி விசுவாசத்தை வெளியில் காட்டிக்கொண்டு, தங்களின் கட்சி அரசியலை வளர்ப்பதற்கான கட்டங்களை மாத்திரமே முன்னின்று நடத்தி வருகின்றன. 

அதற்காக, புலிகளின் மாவீரர் தினம், தியாகி திலீபன் நினைவு நாள்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதுதான், ஜீரணிக்க முடியாத விடயம்.

தேர்தல் அரசியலை நோக்கி, முன்னாள் போராளிகளில் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகையை எந்தவொரு தருணத்திலும் தமிழ்த் தேசிய கட்சிகள் இரசிக்கவில்லை. வேண்டுமென்றால், அவர்களைக் காட்டி, தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கே தயாராக இருக்கின்றன. 

ஆனால், தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகள், அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதையோ, நினைவேந்தல்களை கட்சிகள், அமைப்புகள் கைப்பற்ற முயற்சிப்பதையோ கேள்விக்கு உள்ளாக்கினால், அவர்களை நோக்கி, ‘குப்பி கடிக்காதவர்கள்’; ‘இனத் துரோகிகள்’; ‘இவர்களுக்கு தமிழ்த் தேசிய அரசியலுக்குள் இடமில்லை’ போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன. 

தேர்தல் அரசியலை நோக்கி வந்த முன்னாள் போராளிகளும் கூட, தமிழ் மக்களின் பொது நிலைவேந்தல்களாக கொள்ளப்படக் கூடிய எதையும் தனித்து, தமக்கானது என்று உரிமை கோரத் தேவையில்லை; அது ஏற்புடையதும் இல்லை. அவ்வாறான சிந்தனையுடையவர்கள் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முன்னாள் போராளிகளை நோக்கி, ‘ஏன் குப்பி கடிக்கவில்லை’ என்ற கேள்வியை யார் எழுப்புகிறார்களோ, அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் பெரும்  அவமானச் சின்னங்கள். 

ஏனெனில், அவர்களிடம் ‘குற்ற உணர்ச்சி’ என்ற மனிதனுக்கு அவசியமான உணர்வு இருக்க வாய்ப்பில்லை. 

‘குற்ற உணர்ச்சி’யும் அதுசார் மனித இயக்கமும் இல்லாத யாரும், போராடும் சமூகங்களில் இருக்க முடியாது. நீதிக்கான கோரிக்கைதான், போராட்டங்களில் அடிப்படை. அதனை உணர்ந்து கொள்வதற்கு ‘குற்ற உணர்ச்சி’ மிகவும் அவசியமானது.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஏன்-குப்பி-கடிக்கவில்லை-எனும்-அச்சுறுத்தும்-கேள்வி/91-305366

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் எத்தனைபேர் குப்பி கடிக்கவில்லை எனக் கோருகின்றனர் ?  விரல்விட்டுத்தானும் எண்ணலாமோ தெரியவில்லை. அப்ப்டியாக புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையில் உள்ள ஒருசிலருக்காக இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய அவசியமென்ன? இப்போது இந்த விடயம் உலகெங்கிலும் பரவக் காரணமாகிறது. 

சர்ச்சைகளைக் கிளப்புவதற்கென்றே கட்டுரைகளை தேடிப்பிடித்து எழுதுகிறார்கள். 

இந்தக் கட்டுரையாளர் திலீபன் மரணித்த நோக்கத்தை இந்தியாவிடம் கேள்வியெழுப்புவாரா ?  இல்லையே. 

இவ்வாறான கட்டுரைகளின் நோக்கம் மக்களின் உண்மையான தேவைகள், கவலைகளில்  இருந்து திசைதிருப்புவதே. மீண்டும் மேலெழுந்துவரும் மக்களின்  உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்காகவே இப்படியான கட்டுரைகளை எழுதுகிறார்கள். 

காசுக்காக உடலை விற்பது மட்டுமே விபச்சாரம் அல்ல, நேர்மையை விற்பதும் விபச்சாரமே 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

 

காசுக்காக உடலை விற்பது மட்டுமே விபச்சாரம் அல்ல, நேர்மையை விற்பதும் விபச்சாரமே 

 

உண்மை.👍

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில்.. அநாவசியமான சண்டை மூலம் இழப்பை தவிர்த்து மக்களை.. போராளிகளை அவர் சார்ந்தோரை காப்பாற்றும் முடிவு தான் எடுக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த பல சொந்தங்கள் கூறிவிட்ட பின்னரும்.. ஏன் இந்தக் கேள்வியை கேக்கினம். 

போர் காலத்தில் கூட குப்பி கடிக்கப்படாத நிகழ்வுகள் உண்டு. குறிப்பாக போர்க்களத்துக்கு வெளியில் இருந்த செயற்பாடுகளில் குப்பி வழங்கப்படாத நிலை இருந்தது. காரணம் குப்பியும் சூழ்நிலைக்கு ஏற்பத்தான் பாவிக்கப்பட முடியும். இல்லையேல் அது காட்டிக்கொடுக்கும் பொருளாகிவிடும்.

இந்த அடிப்படை அறிவற்றதுகள் தமிழ் சமூகத்துக்கு என்னத்தை வெட்டிக்கிழிக்க முடியும்.

ஒரு போராளி என்பவன் மாய்வதற்காக என்று போராடப் போவதில்லை. தன் இனத்துக்கான பொது இலட்சியம் வெல்லவோ.. அதற்காகப் பங்களிக்கவோ தான் போகிறான். தொடர்ந்து போராடுவதும் முடிப்பதும் அவனின் அல்லது அவளின் சொந்த முடிவு. அதற்கு தலைமையும் செவிசாய்க்கத்தான் வேண்டும். அதில் வெளியார் அல்லது போராட்டத்தில் நேரடிப் பங்காளிகள் அல்லாதோர் தலையிட முடியாது. 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2022 at 06:23, nunavilan said:

ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி

குப்பி ஏன் கடிக்கவில்லை என்கிறவர்கள்

வெள்ளைக் கொடியுடன் ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடன் சரணடைந்த போராளிகளை 

உலக போர் மரபுகளையும் மீறி சுட்டுக் கொன்றார்களே

ஏன் என்று கேட்க துணிவில்லாத பச்சோந்திகள்.

பாலகன் பாலச்சந்திரனை உடை கொடுத்து உணவு கொடுத்து சுட்டு கொன்றார்களே

எந்த மனித உரிமையாளனாவது அந்த பாலகனை ஏன் சுட்டு கொன்றீர்கள் என்று தட்டி கேட்டிருக்கிறார்களா?

கிழமைக்கு கிழமை பத்திரிகைகளுக்கு ஏதாவது எழுதி கொடுத்தா தான் பணம் வந்து கொட்டும் என்பதற்காக இப்போ புதிது புதிதாக ஏதேதோ எல்லாம் எழுதி கொடுக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.