Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

spacer.png
 
அன்புத் தமிழர்களே! மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழுவுக்கு நான் அனுப்பியுள்ள கருத்துரு இங்கே உங்கள் பார்வைக்கு!
 
* * * * *
 
திப்பிற்குரிய மேனாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு திரு.த.முருகேசன் அவர்களுக்கு நல்வணக்கம்!
 
தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையில் பொதுமக்களான எங்கள் கருத்தையும் கேட்க முன்வந்தமைக்கு முதலில் என் இனிய நன்றி!
 
நம் கல்விக் கொள்கையில் கட்டாயம் இடம்பெற்றாக வேண்டியதாக நான் கருதும் ஒன்றே ஒன்றை மட்டும் இக்கடிதத்தின் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். அதுதான் தாய்மொழி வழிக் கல்வி!
 
அறிஞர் பெருமக்களும் கல்வியியல் ஆய்வுகளும்
 
“அறிவியலை நாம் தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும்” என்று கூறிய நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியலாளரான சர் சி.வி.ராமன் தொடங்கி “இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (ISRO) பணி புரியும் 90% அறிவியலாளர்கள் தாய்மொழியில் படித்தவர்களே! அதனால் குழந்தைகளைத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்” என்று கூறிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழக மேனாள் இயக்குநர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் வரை அறிவியலாளர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், மொழியியலாளர்கள், உளவியலாளர்கள் என அனைவரும் ஒருமித்த குரலில் வலியுறுத்துவது தாய்மொழி வழிக் கல்வியையே!
 
1952ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மருத்துவர் இலட்சுமணசாமி தலைமையிலான ஆணையம், 1964இல் சவகர்லால் நேரு அவர்களால் அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையம், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த முத்துக்குமரன் ஆணையம் ஆகிய கல்வி ஆணையங்களின் ஆய்வு முடிவுகளும் தாய்மொழி வழிக் கல்வியையே பரிந்துரைத்திருக்கின்றன.
 
உலக அளவில் பார்த்தாலும் ‘கற்பிக்கும் முறைகளில் சரியானது ஆங்கில வழிக் கல்வியா தாய்மொழி வழிக் கல்வியா?’ என்று கண்டறிவதற்காக அமெரிக்காவில் நடத்தப்பெற்ற ராமிரசு எட் அல் 1991 ஆய்வு¹, அதே நாட்டில் 32 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தாமசு அண்டு காலியர் ஆய்வு² போன்ற ஆய்வு முடிவுகள் அனைத்தும் தாய்மொழி வழிக் கல்விமுறையையே சரியான கல்வி முறை என உறுதி செய்கின்றன.
 
அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகமும் (UNESCO) 1953ஆம் ஆண்டிலிருந்தே தொடக்கநிலைப் பள்ளிக் கல்வி தாய்மொழி வழியில் அமைவதைத்தான் ஊக்குவித்து வருகிறது³.
 
ஆங்கில வழிக் கல்வியின் பாதிப்புகளும் தாய்மொழி வழிக் கல்வியின் நன்மைகளும்
 
ஆங்கிலம் இன்றியமையாத் தேவைதான். அதை மறுக்கவே முடியாது. ஆனால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத பிள்ளைகளுக்கு நாம் அதை ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்க வேண்டுமே தவிர அதையே கற்பித்தலுக்கான ஊடக மொழியாக (medium of instruction) பயன்படுத்துவது தவறானது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
 
கனடாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தின் சிறார் மற்றும் இளைஞர் நலப் பள்ளிப் பேராசிரியர் யெசிகா பால் அவர்கள், “தாய்மொழி வழியில் கல்வி பெறாத மாணவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கல்வியின் தொடக்கநிலைகளில் தோல்வி அடைபவர்களாகவும் பள்ளிக் கல்வியிலிருந்து இடையிலேயே வெளியேறி விடுபவர்களாகவுமே இருக்கிறார்கள்” என்கிறார்⁴. தொடக்கநிலைக் கல்வியில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் தாய்மொழி வழிக் கல்வி அடிப்படையிலான பன்மொழிக் கல்வித்துறையில் தனது செயல்பாடுகளாலும் பன்னாட்டளவில் புகழ் பெற்றவரான இவரது கருத்து மிக முக்கியமானது!
 
தமிழ்நாட்டில் கல்விச் சேவை முழுக்கவும் மாநில அரசின் கையில் இருந்த வரை அனைவரின் ஒரே சரியான தேர்வாக தாய்மொழி வழிக் கல்வியே இருந்து வந்தது. ஆனால் 90-களின் தொடக்கத்தில் மாநிலமெங்கும் புற்றீசல் போலப் பரவத் தொடங்கிய ஆங்கில வழிப் பள்ளிகளாலும் அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் ஏற்படத் தொடங்கிய பொருளாதார மேம்பாட்டாலும் மக்கள் ஆங்கில வழிப் பள்ளிகளை நாடத் தொடங்கினார்கள்.
 
இதன் விளைவாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே தெரியாத ஒரு தலைமுறை இன்று உருவாகியிருப்பதாகச் சமுக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்திய மாணவர்களின் கற்றல்திறன் குறித்து நடத்தப்பெறும் கள ஆய்வுகளின் கல்விநிலை ஆண்டறிக்கை (Annual Status of Education Report-ASER) முடிவுகளிலும் பள்ளி மாணவர்களில் கணிசமானோரின் கற்றல்திறன் பின்தங்கியிருப்பதைப் பார்க்கும்பொழுது⁵ சமுக ஆர்வலர்களின் கவலை சரியானதே என்பதை உணரலாம்.
 
“குழந்தைகளை ஏன் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறீர்கள்?” என்று தமிழ்நாட்டில் எந்தத் தாயை / தந்தையைக் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே மறுமொழி “குழந்தைக்கு ஆங்கில அறிவு கிடைப்பதற்காக” என்பதாகத்தான் உள்ளது. ஆனால் கல்வியாளர்களோ “தாய்மொழி வழியில் படிக்கும் குழந்தையால்தான் இரண்டாவது மொழியையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும்” என்கிறார்கள். அது மட்டுமில்லை, மாணவர்களின்
 
  • ஒட்டுமொத்தக் கற்றல் அடைவுகள் (overall academic achievement)
  • கணிதக் கற்றல் அடைவு
  • இரண்டாம் மொழியைக் கற்பதில் எட்டப்படும் அடைவு
  • தாய்மொழி சார்ந்த கூடுதல் மொழியியல் திறன்கள்
  • கல்வி கற்றுக் கொள்வதிலான தன்னம்பிக்கை
 
ஆகிய அனைத்திலும் தாய்மொழி வழியில் படிக்கும் மாணவர்களே சிறந்து விளங்குவதாக அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் நடத்திய ஆய்வு முடிவு உறுதி செய்கிறது⁶.
 
முன்னேறிய நாடுகளும் முன்னேறும் நாடுகளும் பின்பற்றும் தாய்மொழி வழிக் கல்வி
 
அறிஞர்களின் கருத்துக்கள், ஆய்வு முடிவுகள் எனக் கோட்பாட்டியல் (theoretical) அடிப்படையில் மட்டுமில்லாமல் நடைமுறை (practical) அடிப்படையில் பார்த்தாலும் தாய்மொழி வழிக் கல்வியே சரியானது என்பதைப் பிற நாடுகளின் போக்கிலிருந்து உணர முடிகிறது.
 
உலகின் பெரும்பாலான நாடுகள் தாய்மொழி வழிக் கல்வியையே தங்கள் மாணவர்களுக்கு அளித்து வருகின்றன. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் விடுதலை பெற்ற நாடுகள் மட்டுமே தாய்மொழி வழிக் கல்வியைப் புறக்கணித்து ஆங்கில வழிக் கல்வி முறையைப் பின்பற்றுகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றுப் பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கல்வி, நல்வாழ்வு, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் என எந்தத் துறையிலும் முன்னேறாமல் இருப்பதையும், மறுபுறம் தாய்மொழி வழிக் கல்வி முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் அனைத்தும் பன்னாட்டளவில் அனைத்துத் துறைகளிலும் சிறந்தோங்கி நிற்பதையும் நாம் பார்க்க முடிகிறது.
 
அதிலும் இரண்டாம் உலகப் போரில் வீழ்த்தப்பட்ட செருமனி, அணுக்குண்டுத் தாக்குதலால் நிலைகுலைந்த சப்பான், இரண்டு பதிற்றாண்டுகளுக்கு (Two Decades) முன்பு வரை கூட மூன்றாம் உலக நாடுகளின் தரநிலையிலேயே இருந்து வந்த சீனம் போன்ற நாடுகள் இன்று உலக அளவில் பெருவளர்ச்சி பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளிலெல்லாம் தாய்மொழி வழிக் கல்வி முறைதான் பின்பற்றப்படுகிறது என்பது ஒப்பு நோக்க வேண்டிய ஒன்று.
 
தாய்மொழி வழிக் கல்வி - அறிவியல் சார்ந்த பார்வை
 
கென்யாவில் உள்ள அமெரிக்கப் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மற்றும் மொழியியல் பிரிவுப் பேராசிரியராக உள்ள ஏஞ்சலினா கியோகோ அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியின் இன்றியமையாமை பற்றிய தன் கட்டுரையில் “முதலில் கல்வி என்பது பள்ளியில் தொடங்குவதில்லை. அது மாணவர்களின் வீடுகளில் அவர்களின் தாய்மொழியிலேயே தொடங்குகிறது” என்கிறார்⁷.
 
கல்வியளவில் மட்டுமில்லாமல் அறிவியல் அடிப்படையிலும் இது மிக மிக முக்கியமான ஒரு கூற்று! குழந்தைகள் தமது 3 வயதிலேயே 200 முதல் 1000 வரையிலான சொற்களைப் பேசத் தொடங்கி விடுவதாக மருத்துவயியலும் கூறுகிறது⁸.
 
அதாவது ஒரு குழந்தை பள்ளியில் சேரும் முன்பே அன்றாடப் பேச்சுக்கான கணிசமான சொற்களைத் தன் தாய்மொழியில் கற்றுக் கொண்டு விடுகிறது. எனவே பள்ளியில் சேர்ந்த பின்பும் அதுவரை அந்தக் குழந்தை கற்றுக் கொண்ட அதே சொற்களை அடிப்படையாகக் கொண்ட கல்வியை நாம் முன்வைத்தால்தான் அந்தக் குழந்தை அதைப் புரிந்து கொண்டு படிக்க இயலும் என்பது வெளிப்படையான உண்மை.
 
பள்ளியில் சேர்ந்த முதல் இரு ஆண்டுகள் மழலையர் வகுப்பில் ஆங்கிலச் சொற்களும் கற்பிக்கப்படுகின்றன என்றாலும் வீட்டின் பாதுகாப்புணர்வு நிறைந்த பின்புலத்தில் எந்தவிதப் புற அழுத்தமும் இல்லாத தன்னியல்பான போக்கில் கற்றுக் கொண்ட பல நூற்றுக்கணக்கான தாய்மொழிச் சொற்களுக்கு நிகராக இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குழந்தை அயல்மொழிச் சொற்களை எண்ணிக்கையிலோ தரத்திலோ அந்த அளவுக்குக் கற்றுக் கொண்டு விட முடியாது.
 
மேலும் ஏற்கெனவே ஒரு மொழியில் ஏறக்குறைய ஆயிரம் சொற்கள் வரை கற்றுக் கொண்டு விட்ட ஒருவர் மேற்கொண்டு படிக்கக் கல்வியமைப்புக்குள் வரும்பொழுது அதுவரை அவர் கற்ற மொழியிலேயே கல்வியைத் தொடர்ந்து வழங்குவதுதான் இயல்பானது. மாறாக, புதிதாக ஒரு மொழியை அறிமுகப்படுத்தி, அந்தப் புதிய மொழியில் எல்லாப் பாடங்களையும் அவர் கற்க வேண்டும் என வற்புறுத்துவது எந்த வகையிலும் பொருளற்றது.
 
ஆங்கிலம் என்பது இங்கு மிகச் சில மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் பள்ளி மூலமாகத்தான் அறிமுகமே ஆகிறது. மற்ற பாடங்களோடு ஆங்கிலத்தையும் புதிதாகக் கற்றுக் கொள்ளத்தான் ஒரு குழந்தை பள்ளியிலேயே சேர்க்கப்படுகிறது. அப்படிப் புதிதாக அறிமுகமாகும் அந்த மொழியிலேயே அவர்கள் எல்லாப் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது அடிப்படையிலேயே தவறானது!
 
பிரெஞ்சு கற்பதற்காக ஆங்கிலேயர் ஒருவர் பிரான்சுக்குச் செல்கிறார் என வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக அங்கேயே அவர் தனது முதுநிலைப் பட்டப்படிப்பையும் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டால் பிரெஞ்சு மொழியோடு சேர்த்துப் பட்டப்படிப்புக்கான பிற பாடங்களையும் முழுக்க முழுக்க பிரெஞ்சிலேயே அவர் கற்க நேரிடுவது எப்படிப்பட்டதாக அமையும் என்பதை நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
எந்த மொழியைப் புதிதாகக் கற்றுக் கொள்ள ஒருவர் ஒரு கல்வி நிலையத்தில் சேர்கிறாரோ அந்த மொழியிலேயே அவர் மற்ற பாடங்களையும் படிக்க வேண்டும் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய வன்முறை! ஆங்கில வழிக் கல்வி மூலம் கடந்த இரண்டு தலைமுறைகளாக அப்படி ஒரு வன்முறையைத்தான் நமது கல்விக்கூடங்கள் நம் பிள்ளைகள் மீது நடத்தி வருகின்றன என்பதை நீதியரசரான உங்கள் மேலான கவனத்துக்கு இங்கே கொண்டு வர விரும்புகிறேன்!
 
தாய்மொழி வழிக் கல்வி எனும் உரிமை
 
அனைத்துலகக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம் (UNESCO) “தாய்மொழியில் கல்வி பெறுவது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமை” என்கிறது⁹. ஆனால் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னும் இந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்த உரிமை சரிவரக் கிடைத்தபாடில்லை. இது தொடர்பாக அரசுகளைக் குற்றஞ்சாட்ட ஏதுமில்லை என்பது எனக்குப் புரிகிறது. ஏனெனில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு ஆகிய இரண்டுமே தங்கள் பள்ளிக்கூடங்களில் தாய்மொழி வழிக் கல்விக்கு இடம் அளித்திருக்கின்றன; மாறாக, பெற்றோர்கள் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ப்பதால்தான் ஒரு குழந்தையின் தாய்மொழி வழிக் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது என்பது உண்மையே!
 
ஆனாலும் குழந்தைகள் என்பவர்கள் தங்களுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள். அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதவர்கள். அரசு, நீதித்துறை ஆகியவைதாம் அவர்களுக்கான உரிமையை உறுதி செய்ய முடியும்.
 
ஆகவே தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழுவில் நீதியரசரான தங்கள் தலைமையில் வகுக்கப்படும் இந்தக் கல்விக் கொள்கை நம் குழந்தைகளின் தாய்மொழி வழிக் கல்வி உரிமையை நிலை நாட்டுவதாக அமைய வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
என் கருத்தையும் மதித்து இவ்வளவு நேரம் பொறுமையாகப் படித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!
 
உசாத்துணை:
 
 
 
 
 
 
 
 
 
 
❀ ❀ ❀ ❀ ❀
 
படம்: நன்றி Freepik.  
தொடர்புடைய பதிவுகள்📂 தாய்மொழி.
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதும், அத்தியாவசியமான கருத்துகள். 👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.