Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

MinnambalamFeb 13, 2023 07:00AM
qEsMyP0n-a-1.jpg

ராஜன் குறை

இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் தத்துவம், கோட்பாடு: அது இந்து மதத்தை ஓர் அடையாளமாக எடுத்துக்கொள்கிறதே தவிர, அந்த மதத்தின் வழிபாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மீது அதற்கு ஈடுபாடு ஏதும் கிடையாது என்பது நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது. நடைமுறையில் கண்கூடாகக் காண்பது.

உதாரணமாக இந்துத்துவ அரசியலைத் தீவிரமாக எதிர்க்கும் திமுக ஆட்சியில் இந்து அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம்.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள மற்றொரு நல்ல சந்தர்ப்பம்தான் காதலர் தினக் கொண்டாட்டங்களை இந்துத்துவ அரசியல் அணிகள் எதிர்ப்பது. இவர்களது எதிர்ப்பு விபரீதமான வடிவங்களையும், வேடிக்கையான வடிவங்களையும் ஒவ்வோர் ஆண்டும் எடுக்கும். இந்த ஆண்டு அது ஒரு மிகப்பெரிய நகைச்சுவை சம்பவமாக மாறிவிட்டது.

அதற்குக் காரணம் ஒன்றிய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் செய்த ஓர் அறிவிப்புதான். காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை “பசு அணைப்பு தினமாக”க் கொண்டாடும்படி அது அறிவித்தது. அதாவது பசுக்களைக் கட்டிப்பிடித்தால்  நல்ல உணர்ச்சிகள் ஏற்படுமாம் (Emotional Richness). பின்னர் பல்வேறு தரப்பினரும் செய்த கிண்டல், கேலி, விமர்சனங்களின் காரணமாக ஒன்றிய மீன்வள மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.  

இந்த அறிவிப்பினை செய்வதற்கான காரணமாகக் கூறப்பட்டது என்னவென்றால் இந்தியாவின் வேதகால பண்பாடு மறக்கப்பட்டு, அந்நிய நாட்டு கலாச்சாரம் ஊடுருவி வருகிறது, அதைத் தடுக்க வேண்டும் என்பதுதான். அதாவது காதலர் தினத்தை பசு அணைப்பு தினமாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டினை மீட்டெடுக்கலாம் என்பதே நோக்கம். இதில் பல குழப்பங்கள் நேர்கின்றன. காதலே இந்திய பண்பாடு இல்லையா? அல்லது காதலர் தினம் கொண்டாடுவதுதான் இந்திய பண்பாடு இல்லையா? அதற்கு பசு எப்படி மாற்றாக எண்ணப்படுகிறது?

Valentines day Hindutva opposition reasons by Rajan Kurai

கடவுள்களின் காதல்

இந்து மதம் என்பது பல்வேறு தளங்களில் செயல்படுவது. ஏனெனில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னால் இப்படி ஒரு பெயரில் எந்த மதமும் உருவாகவில்லை; அறியப்படவில்லை. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் சமஸ்கிருதத்தின் ஆதி வடிவத்தில் வேதங்களை இயற்றினார்கள். பின்னர் பிரமாணங்கள், உபநிடதங்கள் எனப் பல நூல்களை சமஸ்கிருதத்தில் இயற்றினார்கள். இந்த நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் கற்பனை கதைகளாக புராணங்களையும், ராமாயண, மகாபாரத இதிகாசங்களையும் இயற்றினார்கள். இன்னொரு புறம் வாழ்க்கைக்கான விதிமுறைகளாக தர்ம சாஸ்திரங்களை இயற்றினார்கள்.

இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்பே வசித்த பண்பாடுகளிலும் பல கடவுள்கள், கதைகள் இருந்திருக்கலாம். ஆரிய புராணங்களுடன் இவையும் கலந்திருக்கலாம் என்பதே பலரது கருத்து. காலப்போக்கில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் வழிபடப்படும் தெய்வங்களை இந்து புராண, இதிகாச தெய்வங்களுடன் சேர்த்து கதைகளைப் புனைந்தார்கள். சிவன்-ருத்ரன், முருகன்-ஸ்கந்தன் என தெய்வங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாக கருதுபவர்கள் பலர் உண்டு.

இவ்வாறான கதைகளில் இந்து கடவுளர்களின் காதல் நாடகங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. இத்தகைய பண்பாட்டில் காதலே பக்தியாகவும், பக்தியே காதலாகவும் மாறிவிடுவதைக் காணலாம். உதாரணமாக கிருஷ்ணனுக்கும், ராதைக்குமான காதல் குறித்து ஏராளமான கவிதைகள், காவியங்கள் புனையப்பட்டுள்ளன. சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்தக் காதல் பெருமளவு கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக்கொண்டால் தினைப்புனம் காத்த வள்ளியின் மீது முருகன் கொண்ட காதல் மிகவும் புகழ்பெற்றது. வள்ளியை ஈர்ப்பதற்காக தன் அண்ணன் கணேசனை யானை வடிவில் வந்து வள்ளியை மிரட்ட வைத்து, அவளைக் காப்பாற்றி அவள் மனதைக் கவர்ந்தது மிகவும் புகழ்பெற்ற இசை நாடகமாகத் தமிழகமெங்கும் வள்ளி திருமணம் என்ற பெயரில் நடிக்கப் பெற்றதாகும். அதே போலத்தான் கடவுள் மீது காதல் கொண்ட ஆண்டாளின் திருப்பாவையும்.

இந்த அளவு அனைத்து மட்டங்களிலும் காதலைப் பேசும் பண்பாட்டில் ஏன் காதலர் தினம் குறித்து வெறுப்புக் கொள்ள வேண்டும்? ஏன் இந்துத்துவம் காதலர் தினத்தை அந்நிய கலாச்சாரம் என்று கூறுகிறது?

Valentines day Hindutva opposition reasons by Rajan Kurai

உலக அளவில் பிப்ரவரி 14 என்ற வாலன்டைன்ஸ் டே

பிப்ரவரி 14ஆம் தேதியை வாலன்டைன்ஸ் டே என்ற பெயரில் கொண்டாடுவது ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்தில் உருவான ஒரு பழக்கம்தான். இது எப்போது தோன்றியது என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், வாலன்டைன் என்று பாதிரியார் சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என அவர் பெயரில் இந்த நாளை காதலர் தினமாகக் கொண்டாடும் பழக்கம் பதினைந்தாம் நூற்றாண்டு இங்கிலாந்திலேயே இருந்திருப்பதாக இலக்கிய சான்றுகள் கூறுகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இது பெரியதொரு சமூக நடைமுறையாக மாறியுள்ளது. காதலர்கள் வாழ்த்து அட்டைகளை அன்றைய தினத்தில் அனுப்பிக்கொள்வது தபால்துறை வளர்ச்சியடைந்த பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. பின்னர் பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் கொள்வதும்.

அமெரிக்கா பொருளாதார வல்லரசாக மாறிய பிறகு, அதில் வாலன்டைன்ஸ் டே என்பது பல கோடி டாலர்கள் புரளும் பிரமாண்டமான வணிக திருவிழாவாக மாறியுள்ளது. இந்தியர்கள் கணிசமாக அமெரிக்காவில் படிப்பதும், பணிபுரிவதுமாக இருப்பதன் காரணமாகவும், ஊடகங்களின் காரணமாகவும் இந்த தினம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிலும் பரவலாகக் கொண்டாடப்படுவது அதிகரித்துள்ளது.

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பிப்ரவரி 14 அன்று பெண்கள் ஆண்களுக்கு சாக்லேட் தருவதும், அதற்கு அடுத்த மாதம் மார்ச் 14 ஆண்கள் பெண்களுக்கு சாக்லேட் தருவதும் பழக்கமாக உள்ளது. சீனாவில் பாரம்பரிய காதலர் தினமாக வேறொரு தினம் கொண்டாடப்பட்டாலும், சமீப காலங்களில் பிப்ரவரி 14-ம் ஓரளவு கொண்டாடப்படுவதாகத் தெரிகிறது.

இஸ்லாமிய நாடுகள் பலவற்றில், பாகிஸ்தான் உட்பட, மதவாத அரசுகளால் காதலர் தினம் கொண்டாடப்படுவது தடை செய்யப்படுகிறது. ஆனாலும் ஈரானில் இளம் வயதினர் இந்த தினத்தைக் கொண்டாடுவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

காதலர் தினம் அந்நியக் கலாச்சாரமா?

ஊடகங்களின் பெருக்கத்தாலும், சர்வதேச வர்த்தகத்தின் அதிகரிப்பாலும் இன்று தேசிய எல்லைகள் முற்றானவையாக இல்லை. யுனெஸ்கோ போன்ற அமைப்புகளால் சர்வதேச அளவில் பல்வேறு விசேஷ தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. மார்ச் 8 என்பது சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மே 1 தொழிலாளர் தினம் என்று கூறப்படுகிறது. இது போலவே அன்னையர் தினம், தந்தையர் தினம் என்றெல்லாம் பல்வேறு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

அவ்வாறான சர்வதேச அளவிலான ஒரு கொண்டாட்டமாகக் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்துக் கொள்வதும், சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்வதும் சமூகத்துக்கு என்ன பெரிய தீங்கை விளைவித்து விடும் என்பது கேள்வி. எந்த நாட்டில், எப்படி உருவாகியிருந்தாலும் இது உலகெங்கும் காதலைக் கொண்டாடும் ஒரு தினமாக புரிந்துகொள்ளப்படுவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிட முடியும் என்பதே கேள்வி.

 நமது வாழ்க்கையின் சகல அம்சங்களுமே இன்று சர்வதேசத்தன்மை கொண்டுதான் விளங்குகிறது. நாம் உடுக்கும் உடை உலகெங்கும் உடுக்கப்படும் உடைதான். ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரிய உடை என்று ஒன்று இருந்தாலும், பேண்ட்-சர்ட் எனப்படும் உடைதான் உலகெங்கும் பெருமளவு தரப்படுத்தப்பட்ட உடையாக உள்ளது.

உணவு என்பதும்கூட பெருமளவு சர்வதேச தன்மையுடன் உள்ளது. பீட்சா இத்தாலி நாட்டினை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படுகிறது. இந்தியாவில், அமெரிக்காவில், ஐரோப்பாவில் சைனீஸ் ரெஸ்டாரென்ட் இல்லாத சிறு நகரங்களே இருக்காது எனலாம்.

இதெல்லாம் கூட சாதாரணமான விஷயங்கள். பொருளாதார அமைப்பு என்பது, முதலீட்டியம், இயந்திர மயமான உற்பத்தி, பங்குச் சந்தை வர்த்தகம், அதிவேக போக்குவரத்து அதிகரிப்பு, உலகெங்கும் பரவியுள்ள பண்டங்கள்-நுகர்வின் வலைப்பின்னல் என உலகெங்கும் ஒன்றே போல பரவியுள்ளது.

மருத்துவம் என்பது உலகெங்கும் பரவியுள்ள ஒற்றை வலைப்பின்னலாக உள்ளது. இது மிகப்பெரிய தொழிலாகவும், மனித உடல்களை நிர்வகிக்கும் முறையாகவும் வளர்ந்து நிலை பெற்று வருகிறது.

இதிலெல்லாம் எந்த வேத காலத்தைக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறார்கள் இந்துத்துவர்கள்? ஒட்டுமொத்த தேசிய வாழ்க்கையே சர்வதேச வாழ்க்கையுடன் இணைந்து போயிருக்கும்போது எந்த வேத காலத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்கள்? அதற்கு ஒரே ஒரு பதில்தான் உண்டு: அதுதான் ஜாதி.  

ஜாதி காப்பாற்றவே காதலுக்கு எதிர்ப்பு

ஜாதி படி நிலை அமைப்பின் ஆதாரம் ஆணாதிக்கம் என்பது மட்டுமல்ல; அது தந்தையாதிக்கமாகவும் (Patriarchy) இருக்க வேண்டும் என்பதுதான். ஆண்களும், பெண்களும் சுதந்திரமாக காதலிக்கத் தொடங்கினால் அது தந்தையாதிக்கத்தின் அடிப்படைகளையே தகர்த்துவிடும். பெண் முழுக்க முழுக்க தந்தையின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே ஜாதி அகமண முறையின் அச்சாணி.

இந்துத்துவ அரசியலுக்கு இந்து கடவுள்களோ, பக்தியோ, காதலோ முக்கியமல்ல. அதற்கு முக்கியமானது சனாதன தர்மம். அது என்னவென்றால் வர்ண தர்மம். மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து வைப்பது. மனிதர்களின் ஆன்மா பல்வேறு பிறப்புக்களில் ஒவ்வொரு வர்ணத்திலும் பிறந்து அதன் தர்மத்தின்படி நடந்து அடுத்த பிறவியில் அதற்கு மேல் வர்ணத்துக்கு பிரமோஷன் பெற்று இறுதியில் பிராமணப் பிறவி எடுத்து அதன்பிறகு மோட்சம் அடைய வேண்டும் என்பதுதான் வர்ண தர்ம கற்பிதம். ஒருவேளை வர்ண தர்மத்தைப் பின்பற்றவில்லையென்றால் டிமோஷன் – அதற்கு கீழ்வர்ணத்தில்தான் அடுத்து பிறக்க வேண்டும்.

இந்த வர்ண தர்ம கற்பிதத்தின் அடிப்படையிலேயே ஜாதி படிநிலை என்பது உருவாக்கி நிறுவப்பட்டுள்ளது. அதனால் அந்தந்த ஜாதிக்குள்ளேயே திருமணம் நடந்தால்தான் பிறக்கும் குழந்தை அதே ஜாதியாக இருக்கும். அதனால் பெண்கள் முழுவதும் தந்தையரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்.

வேத கால நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இந்துத்துவர்கள் சொல்வது இதைத்தான். அதைத்தான் புனிதப் பசுவாக புனைந்து சொல்கிறார்கள்.

Valentines day Hindutva opposition reasons by Rajan Kurai

வேத காலத்தில் பசு

வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டிறைச்சி உண்டார்கள் என்பதற்கு வேதங்களில், இதிகாசங்களில் ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு அறிஞர்கள் அதைக் குறித்து ஆதார பூர்வமாக எழுதியுள்ளார்கள். புத்த, ஜைன மதங்களின் பரவலுக்குப் பின்பே பிராமணர்களும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் பலராலும் கூறப்படுகிறது.  

அதிலும் குறிப்பாக பசுவைக் கொல்லக் கூடாது. அது புனிதமானது என்ற பிரச்சாரம் இஸ்லாமியர்களின் வருகைக்கு பிறகே உருவான ஒரு கருத்தியல் என்று டி.என்.ஜா என்ற வரலாற்றாசிரியர் The Myth of the Holy Cow (2004) என்ற நூலில் கூறுகிறார்.

இஸ்லாமிய வெறுப்பு என்பதை ஆதாரமாக வைத்து வர்ண தர்மம் ஆகிய சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டம்தான் இந்துத்துவம்.

அதனால்தான் இவர்களால் காதலர் தினத்துக்கு பதிலாக பசுவைக் கட்டிப் பிடிக்கும் திட்டத்தை அறிவிக்க முடிகிறது. இங்கே உண்மையான புனிதப் பசு என்பது ஜாதி ஆசாரம்தான். காதலர்களின் சுதந்திரம், குறிப்பாகப் பெண்களின் காதலிக்கும் சுதந்திரம், ஜாதீயத்தை தகர்த்துவிடுமோ என்ற அச்சம்தான் இந்த கலாச்சார அரசியலின் மூலாதாரம்.

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. 
 

 

https://minnambalam.com/political-news/valentines-day-hindutva-opposition-reasons-by-rajan-kurai/

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்தியாவில் தானே அமோகமாக கொண்டாடுகிறார்கள்.

இப்போ இலங்கையிலும் மும்மரமாக கொண்டாடுகிறார்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வேலை இடத்தில் ஈரானிய பெண்ணிடுடன் கதைக்கும் போது காதலர் தினம் பற்றி கதைத்தேன். தங்கள் நாட்டில் அனுமதி இல்லையாம். ஆனால் ரகசியமாக கொண்டாடுவார்களாம். சவூதி மற்றும் பல அரேபிய நாடுகள் இன்றைய  சமுதாயத்திற்கேற்ப மாறி விட்டது எனவும் முல்லாக்கள் மட்டும் பிடித்த பிடியில் நிற்கின்றார்கள் என கவலைபட்டார்.

ஆனால் முல்லாக்களின் பிள்ளைகள் சந்ததிகள் மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து உல்லாசமாக இருக்கின்றார்கள் எனவும் ஆதங்கப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.