Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 மணி நேர வேலை: "அதிமுக கொண்டுவந்த போது எதிர்த்ததை திமுக இப்போது செய்யலாமா?" - கட்சிகள் சொல்வது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 மணி நேர வேலை திருத்த சட்டம்

பட மூலாதாரம்,M.K.STALIN

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கடுமையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்திருத்தம் கூறுவது என்ன?

இந்தச் சட்டத்தின் பெயர் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் என்பதாகும்.

இந்தச் சட்டத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் 1948ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்டத்தை அடிப்படையாக வைத்தே இயற்றப்பட்டிருக்கிறது. இது, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 65வது விதிக்குக் கீழே புதிய விதி ஒன்றைச் சேர்க்கிறது. இந்த விதி 65 - ஏ என்று அழைக்கப்படும். இது சிறப்பு நேர்வுகளில் விலக்களிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

 

அதன்படி, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 51, 52, 54, 56, 59ஆம் பிரிவுகளின் விதிகள் சிலவற்றில் இருந்தோ, அல்லது அனைத்திலும் இருந்தோ விலக்களிக்க இந்தச் சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.

இப்போது மேலே சொன்ன பிரிவுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். பிரிவு 51 தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரையறுக்கிறது. எந்த ஒரு பணியாளரும் எந்த ஒரு வாரத்திலும் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. 52வது பிரிவு வார விடுமுறையை வரையறுக்கிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதை இது வலியுறுத்துகிறது.

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

54வது பிரிவானது, எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது. 56வது பிரிவானது, இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது என்கிறது. 59வது பிரிவானது, ஒரு தொழிலாளர் ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

மேலே சொன்ன ஐந்து பிரிவுகளும் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த பிரிவுகளாகும். இந்த விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விளக்களிக்க மாநிலஅரசு அனுமதிக்க மேலே சொன்ன சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

அமைச்சர்கள் சொல்வது என்ன?

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம்,FACEBOOK/THANGAM THENARASU

இந்த மசோதாவுக்கு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இதையடுத்து சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்ததும் பேரவை வளாகத்திலேயே தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசனும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது என்ற தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால், வேலை நாட்கள் குறையும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

"திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம்தான் வேலை பார்க்க முடியும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்" என்றார்.

இதற்குப் பிறகு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற நிறுவனங்கள் பணி நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். "தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல் துறை, தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றார் தங்கம் தென்னரசு.

மேலும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரு வாரத்திற்கான ஒட்டுமொத்த வேலை நேரம் என்பது மாறாது என்றும் இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, மீதமுள்ள 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். இந்த மசோதா எந்தெந்தத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த விதிகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். அது தவிர, ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அதற்கேற்ற வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துத்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டத்திருத்தத்திற்கு நிலவும் கடும் எதிர்ப்பு

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

இந்த சட்டத் திருத்தத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. இது உழைப்புச் சுரண்டலை ஊக்கப்படும் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது. வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், குடும்ப நலன் என்பனவற்றைக் கவனிக்க வேண்டாமா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டல்தான்" என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது. வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

12 மணி நேர வேலை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தலாம்?

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போதே தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கும்போது, 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதித்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன்.

"இது ஒரு மிக மோசமான சட்டத்திருத்தம். ஏற்கனவே தமிழ்நாட்டில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலைபார்க்க வைக்கப்படுகிறார்கள். திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும் பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும் 12 முதல் 14 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் கீதா.

"ஐரோப்பிய நாடுகளில் 8 மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை என்பதை அமல்படுத்த வேண்டும்; அப்போதுதான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என விவாதித்துவருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்" என்கிறார் கீதா.

4 நாட்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினாலும், அப்படி நடக்க எந்தத் தொழிற்சாலையும் அனுமதிக்காது. மேலும் இது குறித்துப் போராட யூனியன்கள் வலுவாக இல்லாத நிலையில், தொழிலாளர் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார் அவர்.

மத்திய அரசு முதலில் இதுபோல சட்டத்தைத் திருத்தியபோது இந்தியாவில் உள்ள பல்வேறு யூனியன்கள் இதனை எதிர்த்ததால், மாநிலங்களின் பொறுப்பில் இதனை விட்டுவிட்டது. 2020ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தில் இதுபோல சட்டம் திருத்தப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பொது நல வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அங்கு அம்மாநில அரசே அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இதேபோல தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப்பட்டது. அப்போது இரண்டு செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்காகவே இந்தச் சட்டம் திருத்தப்பட்டதாக அம்மாநில அரசு வெளிப்படையாகச் சொன்னது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எந்தத் தொழிற்சாலைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது சொல்லப்படாவிட்டாலும், எந்தெந்தத் தொழில்துறைகளுக்காக இது கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"ஆனால், இதுபோல ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, யூனியன்களுடன் பேச வேண்டாமா? யூனியன்களுடன் தொழிலாளர்களுடன் எதுவும் பேசாமல், தொழிற்சாலைகள் சொல்கின்றன என்பதற்காக எப்படி இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டுவருகிறார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் கீதா.

ஆனால், இது பல புதிய சிக்கல்களைக் கொண்டுவரும் என்கிறார் மன நல மருத்துவரான சிவபாலன். "கொரோனா பரவலுக்குப் பிறகு மனநல பாதிப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. முக்கிய காரணம், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதுதான். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் நல்லதுதானே என பலர் கருதுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். காலை 9 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் இரவு 10 -11 மணிவரைகூட வேலை நீள்கிறது. இது மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மனநல பிரச்சனைகளோடு வரும் ஐ.டி. பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் வேலைக்கும் தன் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சமநிலையை எட்ட முடியாததுதான்.

இப்போது ஐடி நிறுவனங்களில், பெரிய தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் தலைமுறையாக இம்மாதிரி நிறுவனங்களில் பணியில் சேர்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பொருளாதார கனவுகள் இருக்கின்றன. இதனால், அதிக நேரம் வேலை பார்க்க ஒப்புக்கொள்கிறார்கள். முடிவில் அது பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சனை வருகிறது. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. வேலை நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் உருவாகிவரும் நிலையில், இப்படி வேலை நேரத்தை அதிகரிப்பது உற்பத்தியை, வேலைத் திறனைக் கடுமையாக பாதிக்கும்" என்கிறார் சிவபாலன்.

பெண்களுக்கு சுமை அதிகரிக்கும்

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேலை நேரம் அதிகரிப்பதில் பெண்களுக்குத் தான் சுமை அதிகம் ஏற்படும் என்கிறார் சிவபாலன். ஏனென்றால், அவர்கள் அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கும். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்கிறார் அவர்.

ஆனால், பல தொழில்துறைகளில் வேலை நேரத்தை அதிகரித்து, விடுமுறைகளையும் அதிகரித்துத் தரும் போக்கு உலகம் முழுவதுமே பரவிவருகிறது. நான்கு நாட்கள் வேலை பார்த்தால், மீதமுள்ள மூன்று நாட்கள் தொழிற்சாலை இயங்காமல் இருப்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்; 6 நாட்கள் வீட்டிலிருந்து பயணம் செய்து தொழிற்சாலைக்கு வருவதற்குப் பதிலாக, நான்கு நாட்கள் வந்தால் போதும் என்பதால் வாகன பயன்பாடு குறைந்து சூழல் மேம்படும் என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக, பல வளர்ந்துவரும் நாடுகளில் முதலீடு செய்யவரும் மின்னணு நிறுவனங்கள், காலணி நிறுவனங்கள் முதலீட்டிற்கான முன் நிபந்தனையாகவே இதனை வைக்கின்றன. அம்மாதிரி ஒரு நிபந்தனை சார்ந்த ஒரு நடவடிக்கையாகவே தற்போது தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cljg8pl5032o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்: வைகோ

Published By: RAJEEBAN

22 APR, 2023 | 02:59 PM
image

12 மணி நேர பணிச் சட்டம் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி, ஒரு நாள் ஓய்வு என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கெனவே பரிந்துரை செய்திருக்கிறது. மத்திய அரசின் பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கம் பொருத்தமற்றது. 8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழகத்திற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது ஆகும்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருக்கிறது.

மேலும், தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழகத்தில் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/153488

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"12 மணி நேர வேலை சமூகத்தை பின்னோக்கி அழைத்து செல்லும்" - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

“தொழிலாளர் விரோத நடவடிக்கையின் உச்சமாக, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைநீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகின்றன” என்று உத்தர பிரதேச அரசும், “8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது” என்று மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளும் அறிவித்திருக்கின்றன.

ஏழை தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம்” என்ற ஆபத்தான உள்நோக்கத்தை இந்த மாநிலங்களின் செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், ஏதோ பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் போல், குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து பெற்றவை அல்ல; 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரில் தொழிலாளர்கள் பேரணி நடத்தி - ரத்தம் சிந்தி - உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை!``

2020ஆம் ஆண்டில் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆண்ட பா.ஜ.க. அரசுகள், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டதற்கு எதிராக தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனம்தான் மேலே உள்ள வார்த்தைகள்.

 

"பா.ஜ.க. அரசின் “மக்கள் விரோத”, “தொழிலாளர் விரோத" நடவடிக்கைகளை - அப்படியே “காப்பி” அடித்துவரும் அ.தி.மு.க. அரசு - தமிழகத்தில் அதுமாதிரி எந்த ஒரு தொழிலாளர் விரோத முடிவினையும் எடுக்க, கனவில் கூட எண்ணிப் பார்த்திடக் கூடாது" என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக கடுமையாக எச்சரித்தார் மு.க.ஸ்டாலின்.

தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது, அவரது தலைமையிலான அரசே அப்படியொரு சட்டத்திருத்த மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் குறித்து விளக்கம் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், "தற்போது நடைமுறையில் உள்ள வாராந்திர, தினசரி வேலை நேரம், வரம்புமுறைகள், ஓய்வு, இடைவேளை, ஓவர் டைம், பணிக்கால சம்பளம், வாராந்திர விடுமுறை போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் தொழிலாளர்களின் ஒப்புதலுடன் மட்டுமே புதிய திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை என்பது அப்படியே தொடரும்" என்று தெரிவித்திருந்தார்.

நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நெகிழ்வுத்தன்மை எது?

தொழிலாளர் நலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் மாறுபட்ட வேலை சூழலில் இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது" என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், "அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல், தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்டாலின் அறிக்கையை அவரே படித்துப் பார்க்க வேண்டும்

ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `8 மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்பதை நூறாண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் தங்களது உரிமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

2020ஆம் ஆண்டில் மத்திய அரசு தொழிலாளர் வேலை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. வாரத்தில் 4 நாட்கள் குறைந்தபட்சம் 48 மணி நேர வேலை, 3 நாட்கள் விடுமுறை என்பது அந்தச் சட்டத்தின் ஷரத்து.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தச் சட்டத்தை எதிர்த்து வக்கணை பேசினார். பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மத்திய அரசுக்கு தலையாட்டாமல் தமிழகத்தில் இந்தச் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக அரசுக்கு கெடு விதித்தார்.

அன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை இன்று அவரே படித்துப் பார்க்க வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக தொழிலாளர்களின் நலனைக் காக்க அதிமுக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளூம்` என்று குறிப்பிட்டுள்ளார்.

12 மணி நேர வேலையின் ஆரம்பப் புள்ளி எது?

ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன.

இந்நிலையில், 2020 மே மாதம் 6ம் தேதி தொழில் நிறுவனங்களுடன் அப்போதைய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தனர்.

  • கொரோனா பொது முடக்க காலத்தை பணி நீக்கமாக கருதும் வகையில் தொழில் தகராறுகள் சட்டத்தில் விதிகளை தளர்த்த வேண்டும்.
  • தொழில் துறை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை சிஎஸ் ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்பு) நிதியின் கிழ் செலவீனங்களின் கீழ் ஈடு செய்ய வழி வகை செய்ய வேண்டும்.
  • குறைந்தபட்ச ஊதியம், போனஸ் மற்றும் சட்டப்பூர்வ நிலுவைத் தொகைகள் போன்ற விதிகளை தவிர்த்து தொழிலாளர் சட்டங்களை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்.
12 மணி நேர வேலை திருத்த சட்டம்

பட மூலாதாரம்,PIB

 
படக்குறிப்பு,

சந்தோஷ் கங்வார்- முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்

தொழில்நிறுவன பிரதிநிதிகள் மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றிருந்தது.

அதற்கு முன்பாகவே ஒருசில மாநிலங்கள் 12 மணி நேரம் வேலை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. கொரோனா பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப் பட்ட பின்னர், பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்கவும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

அதன்படி, தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் என வாரத்திற்கு அதிகப்பட்சமாக 72 மணி நேரம் (6 நாட்கள்) வேலை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டது. மத்திய அரசு எவ்வித திருத்தமும் செய்வதற்கு முன்பே, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வேலை செய்யும் நேரத்தை நீடிப்பது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டன. உத்தரப் பிரதேசமும் 12 மணி நேரம் வேலை தொடர்பாக 2020 மே மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது, எனினும் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுகொண்டது.

புதிய தொழிலாளர் விதிகள் 2022

தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகளை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. எனினும், பலத்த எதிர்ப்புகள் காரணமாகவும், பல மாநிலங்கள் அதற்கு தேவையான விதிகளை வகுக்காமலும் உள்ளதால் இந்த விதிகள் தற்போதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளன. புதிய தொழிலாளர் விதிகள் 2022ல் நான்கு பிரிவுகளின் கீழ் 29 சட்ட விதிமுறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 29 சட்ட விதிகளில் ஊதிய பிரிவின் கீழ் 4 சட்ட விதிமுறைகளும், சமூக பாதுகாப்பின் கீழ் 9 சட்ட விதிமுறைகளும், பணிப் பாதுகாப்பு, உடல்நலம், பணிச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் 13 சட்ட விதிமுறைகளும் உள்ளன. தொழில் உறவுகள் பிரிவின்கீழ் மற்ற மூன்று சட்ட விதிமுறைகளும் உள்ளன. புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்படை சம்பளமாக காட்டப்பட வேண்டும். இதன்மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின் பங்கு அதிகரிக்கும்.

இதனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களின் 'டேக் ஹோம்' வருமானம் குறையும் என, தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மாற்றத்தால் அவர்களின் ஓய்வுக்குப் பின்னர் கிடைக்கும் பி.எஃப் மற்றும் பணிக் கொடை தொகை உயர்ந்து அவர்கள் மதிப்பான வாழ்க்கையை வாழ உதவும் என அரசு கூறுகிறது.

அதன்படி, வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வேலைநேரத்தில் மாற்றம் கிடையாது. அந்த வேலை நேரத்தை வாரத்திற்கு 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள் என பிரித்து வழங்கலாம். அதற்கேற்ப, தொழிலாளர்களுக்கு வார விடுமுறை கிடைக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வீதம் வேலை செய்தால் வாரத்திற்கு 3 நாட்கள் வாரவிடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட விதிகள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

12 மணி நேரம் வேலை

பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES

12 மணி நேர வேலை என்ற தொழில் நிறுவனங்களின் முன்மொழிவை மத்திய அரசு பிரதிபலித்த போது கடுமையாக எதிர்த்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதனை செயல்படுத்த முனைவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.

வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

கருணாநிதி விருப்பத்திற்கு எதிராகவே திமுக செயல்படலாமா?

தொழிலாளர் விரோத எதிர்ப்பு போராட்டம்

பட மூலாதாரம்,ANI

திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க விரும்பியதாகம் தற்போதைய திமுக அவரது விருப்பதற்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார் சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பதுதான் தொழிற்சாலைகளுக்கான சட்டம். தேவைப்பட்டால் அதிகப்பட்சமாக கூடுதலாக 1 மணி நேரம் சேர்த்து 9 மணி நேரம் வேலை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற கணக்கை தாண்டக் கூடாது," என்கிறார்.

"8 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதிக்கும்போதே ஒருசில இடங்களில் 12 மணி நேரம் வாங்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது 12 மணி நேரத்துக்கு வேலை வாங்க அனுமதித்தால் என்ன ஆகும்.

12 மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்தால் தொழிலாளியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மன அழுத்தத்திற்கு உள்ளாவர். இதனால், அவரது நலம் மட்டுமல்லாது குடும்பத்தின் நலமும் பாதிக்கப்படும். மேற்கு உலக நாடுகள் வாரத்துக்கு 48 நேரம் என்பதை 36, 35 என்று குறைத்து வருகின்றனர்.

இந்தியாவில் கூட திமுக தலைவராக இருந்த கருணாநிதி உட்பட பலர் வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். அவரது மே தின முழக்கத்தில் இந்த கோரிக்கை இருக்கும். 20 ஆண்டுகளாக இந்த கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 8 என்பதை 6 ஆக குறைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதனை அதிகரிப்பது எப்படி சரியாகும்?

முதலாளிகள், முதலாளிகள் சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த சட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இந்த சட்டத்திருத்தத்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படுமோ அந்த தொழிலாளர்கள், தொழில் சங்கங்களிடம் கருத்து கேட்க வேண்டாமா? தமிழ்நாட்டில் மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உள்ளது. தொழிற்சங்கங்கள், முதலாளி சங்கங்கள், அதிகாரிகள் என முத்தரப்பு குழு இதில் இடம்பெற்றுள்ளது. இந்த குழுவில் கூட சட்டத்திருத்தம் குறித்து அரசு விவாதிக்கவில்லை. அரசு செய்துள்ள திருத்தம் என்பது பின்னோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. உடனடியாக சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம்," என்கிறார் சவுந்திரராசன்.

https://www.bbc.com/tamil/articles/cy7p4qxjp1jo

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது” என்று மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அரசுகளும் அறிவித்திருக்கின்றன.

இனி தமிழ்நாட்டில் இந்தியாவில் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்தே ஆகவேண்டும் என்று தொழிலாளர்கள் வதைக்கடுத்தபடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முதலீகளை உள்ளிழுக்கும் நடவடிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் 12 மணித்தியால வேலை சர்வ சாதாரணமாக உண்டு. இங்கு வரும் இந்தியர்கள்(உட்பட)  அதையே தொடர்கிறார்கள்.
 இப்போ இந்தியாவில் வேலை செய்ய என்ன பிரச்சனை?
அதிக உற்பத்தியை மேற்கொள்ளலாம் என மேற்கு ஆய்வுகள் சொல்வதால் இதனை பல நிறுவனங்கள் தொடர்கிறார்கள். இந்தியாவுக்கும் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'அரசு அலுலகங்கள்ல நிறைய வேலைகள் நிலுவையில் இருக்கு! நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசாரணைக்காக தீர்ப்புகளுக்காக காத்திருக்கு! அங்கெல்லாம் 12 மணி நேரம் வேலை பார்க்கனும்னு சட்டம் போட்டா எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடிக்கலாம்.'

  • கருத்துக்கள உறவுகள்

Image

தமிழக அரசு கொண்டு வந்த  12 மணி நேர வேலை சட்டம் நிறுத்தி வைப்பு. - முதலமைச்சர்  ஸ்ராலின் அறிவிப்பு. -
இனி இதனை 10 மணி நேரமாக்கி, வெற்றியாக கொண்டாடுவார்கள் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12 மணி நேர வேலை: சட்டத்திருத்தத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு சொல்லும் காரணங்கள் என்ன?

ஸ்டாலின்
 
படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களில் ஊழியர்களுக்கு தினமும் 12 மணி நேர வேலை வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் அங்கும் பெரும்பாலான கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துறைமுருகன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், தொழிலாளர்களின் நலன்களில் எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் உறுதியளித்தனர். இந்த நிலையில், 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

 

முன்னதாக, சட்டப்பேரவையின் சமீபத்திய கூட்டத்தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது, பேரவையில் இருந்து முதல் முறையாக ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்ச்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 24ஆம் தேதி இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிடக் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தன.

அரசின் சட்டத்திருத்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன், வேலை நேரத்தை அதிகரித்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் குறையும். எனவே, தமிழ்நாடு முதல்வர் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இந்த நிலையில், நடைபெற்ற இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தமிழக அரசு ஐந்து பக்க செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.

1) 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்திருத்த முன்வடிவின் முக்கியமான பிரிவுகளில் குறிப்பாக தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் பணிபுரிவதற்கான உகந்த பணிச்சூழல், தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட தொழிலாளர் நலன்கள் குறித்தும் இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் விரிவாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் உள்ள மிகச் சில குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் அரசின் பரிசீலனைக்குப் பிறகே பணி நேரம் குறித்த விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் நலனில் சமரசம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.

2) தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றியும் அரசு அக்கறை கொண்டுள்ளதால், தொழிலாளர் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதிலும் அதே அளவுக்கு அக்கறையும் கொண்டுள்ளது என்றும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

3) இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், இச்சட்ட முன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர். இந்த விஷயத்தில் தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

4) இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலன்களுக்காக ஆளும் திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டது என்பதை பட்டியலிட்ட அரசு, இந்த அரசு ஒரு சட்ட முன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகிறதோ அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப்பெற்றால் அவற்றை சீர்தூக்கி ஆராய்ந்து அவர்களின் கருத்துகளுக்கு இணங்க, அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வதிலும் உறுதியாக இருக்கும்.

5) அந்த வகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருச்ச சட்ட முன்வடிவு மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சந்தித்த கடும் அரசியல் நெருக்கடி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமணனிடம் கேட்டபோது, "ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு அதை கூட்டத்தொடருக்கு வெளியே திரும்பப் பெற வழியில்லை. ஒரு அறிக்கை மூலம் அதை செய்ய முடியாது. அதனால் தான் அந்த சட்டத்திருத்தத்தின் அமலாக்கத்தை அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது," என்று கூறினார்.

அரசின் முடிவு தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறிய அவர், "தன்னோடு கூட்டணி அரசியலில் உள்ள மற்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகள் மட்டுமின்றி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஆசிரியர் வீரமணி போன்றோர் கூட தமிழக அரசின் 12 மணி நேர சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு இது அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது," என்றும் சுட்டிக்காட்டினார்.

"மக்கள்தொகையில் சரிபாதி இருக்கக் கூடிய தொழிலாளர் வர்க்கம் சம்பந்தப்பட்ட இதுபோன்ற விஷயத்தில் முதல்வர் கொஞ்சம் முழு ஈடுபாடு காட்டி இந்த சட்டத்திருத்தத்தின் தாக்கம் அல்லது பின்விளைவை முன்கூட்டியே யோசிக்கத் தவறி விட்டார். அத்தகைய தவறு எதிர்காலத்தில் நிகழாமல் அவர் பார்த்துக் கொள்வது நல்லது," என்றும் லட்சுமணன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn01we0n30no

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 15:23, nunavilan said:

மேற்கு நாடுகளில் 12 மணித்தியால வேலை சர்வ சாதாரணமாக உண்டு.

நல்ல ஒரு நகைசுவைக்காக இப்படி சொல்லியுள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்ராலின் நிறுத்தியது நல்லது.
நிறுத்தி தான் வைக்கபட்டுள்ளது மறுபடியும் வேலை செய்பவர்களுக்கு எதிராக பாயலாம். ஆனபடியால் அந்த சட்டத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அது தான் நீதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல ஒரு நகைசுவைக்காக இப்படி சொல்லியுள்ளீர்கள்.

தாதிகளில் இருந்து  எந்த வகையான மருத்துவ பொருள் உற்பத்தியில் இருந்து வானியல் உற்பத்தி வரை 12 மணித்தியால  வேலைகள் உண்டு. இது எப்படி நகைச்சுவையாகும்??

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களில் ஒரு பகுதியினர்  வீடுவாங்கிய வங்கி கடனை ஈடுசெய்வதற்காக ஒரு வேலை முடிந்த பின்பு சென்று இன்னொரு வேலை என்று இரண்டு வேலைகள் செய்வதாக நானும் அறிந்துள்ளேன்.அது அவர்களாக விரும்பி செய்வது. இந்திய தமிழ்நாடு கொண்டுவந்த மாதிரி வேலை செய்வோரை  12 மணித்தியாலம்  வேலை செய்ய வைக்கும்  சட்டம் இல்லை அது.

6 hours ago, nunavilan said:

இது எப்படி நகைச்சுவையாகும்??

[மேற்கு நாடுகளில் 12 மணித்தியால வேலை சர்வ சாதாரணமாக உண்டு.]

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[மேற்கு நாடுகளில் 12 மணித்தியால வேலை சர்வ சாதாரணமாக உண்டு.]

 

அது எந்த மேற்குலக நாடு கட்டாயம் 12மணி நேரம் செய்யவேண்டுமென்று சட்டம்போட்ட நாடு, சட்டமின்றி தங்களின் வருமானத்திற்கு வேலை செய்பவர்கள் தான் உண்டு, அப்படி 12மணித்தியாலம் வேலைசொய்தாலும்  FMD கொடுக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.