Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன்

லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன்

பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார்.

ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை.

அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை ஈழத் தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பது. இரண்டாவது அண்ணாமலை 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை என்பது.

பாரதிய ஜனதாவின் இந்துத்துவா நிலைப்பாட்டை மறைமுகமாக அல்லது நேரடியாக ஏற்றுக் கொள்வதன்மூலம் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஈழத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாவை அணுக வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம், அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது கடுமையான விரோத உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது காரணம், காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகக் கூறி திமுகவின் மீதும் கடுமையான ஆத்திரத்தோடு காணப்படுகிறார்கள்.

மூன்றாவது காரணம், சிங்கள பௌத்த அரசாங்கம் தனது அரசியல் ராஜதந்திர இலக்குகளை வெல்வதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச் சேரும் ஒரு பின்னணியில், சிறிய ஈழத் தமிழர்களும் ஏன் அவ்வாறு யாரோடும் கூட்டுச் சேர்ந்து நமது அரசியல் இலக்குகளை வென்றெடுக்கக்கூடாது? என்று அவர்கள் கேட்கின்றார்கள்.

மேற்சொன்ன மூன்று காரணங்களையும் முன்வைத்து ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இந்துத்துவா நிலைப்பாட்டை வரித்துக் கொண்டு பாரதிய ஜனதாவை அணுக முயற்சிக்கின்றார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலைப்பாட்டை முதலில் அதிகம் வெளிப்படுத்தியது பிரித்தானிய தமிழர் பேரவைதான். ஏற்கனவே பாரதிய ஜனதாவின் தமிழக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீநிவாசனை அவர்கள் நெருங்கி சென்றார்கள். அதன் வழியே இப்பொழுது அண்ணாமலையை அவர்கள் பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கின்றார்கள்.ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “கனெக்டிவிட்டி” தொடர்பான நிகழ்ச்சிச் திட்டங்களை அதிகம் ஊக்குவிப்பது பிரித்தானிய தமிழர் பேரவைதான்.

இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட கலாச்சார மண்டபம், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கும் காரைக்காலுக்கும் அல்லது நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பற் போக்குவரத்து,மன்னாருக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கப்பற் போக்குவரத்து போன்ற இணைப்புத் திட்டங்களை அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரித்தானிய தமிழர் பேரவை ஊக்குவித்து வருகின்றது; ஆதரித்து வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஆளும் கட்சியாக வந்ததிலிருந்து பிரித்தானிய தமிழர் பேரவையும் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சில அமைப்புகளும் தனி நபர்களும் பாரதிய ஜனதாவை அணுக வேண்டும் என்ற தவிப்போடு இந்துத்துவா நிலைப்பாட்டை நோக்கிச் சாய்வதை காணக்கூடியதாக இருக்கிறது.அல்லது இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் பாரதிய ஜனதாவை நெருங்கி செல்லலாம் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதில்,பிரித்தானிய தமிழர் பேரவை மட்டுமல்ல பிரித்தானியாவில் உள்ள சில அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு அமைப்பாக இணைந்து அண்மை மாதங்களாக இந்தியாவில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வருவதனை இங்கு சுட்டிக் காட்டலாம். இவர்கள் பாரதிய ஜனதாவின் இதயம் என்று வர்ணிக்கப்படும் சிவசேனையோடும் நெருங்கி உறவாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

சிவசேனைப் பிரமுகர்களோடு இவர்கள் மேடைகளில் தோன்றும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இவர்களை ஈழத்து சங்கிகள் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.இந்த அமைப்பானது இதுவரையிலும் மூன்று கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்தியிருக்கிறது. டெல்லியும் உட்பட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் இக்கருத்தரங்குகளில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் அல்லது சிவசேனையின் பிரமுகர்கள் பங்குபற்றி வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல தாயகத்தில் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியானது மேற்படி கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து வருகின்றது.இதுவரை நடந்த மூன்று கருத்தரங்குகளிலும் ஜனநாயக போராளிகள் கட்சி பங்குபற்றியிருகிறது.

இவ்வாறு பாரதிய ஜனதாவை ஏதோ ஒரு விதத்தில் கையாள்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாமா என்று மேற்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் கடந்த எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதாவின் ஆட்சியைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மிகத் தெளிவாக தெரிகிறது. அது என்னவெனில், ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்திய ஆட்சியாளர்களின் வெளியுறவு நிலைப்பாட்டுகளில் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதுதான். குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வாக வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை பாரதிய ஜனதாவும் கடக்கவில்லை என்பதுதான்.

மிகக்குறிப்பாக இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமோ, அல்லது நாங்களும் இந்துக்கள் என்று பாரதிய ஜனதாவை நெருங்கி செல்வதன் மூலமோ, இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டில் பெரியளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பதே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் பெற்றுக் கொண்ட அனுபவம் ஆகும்.

அதே சமயம் வேறு ஒரு மாற்றத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்திய பிரதமர் மோடி அவர்கள் அண்மை காலங்களில் தமிழையும் தமிழ் புலவர்களையும் சைவத்தையும் மேலுயர்த்த காணலாம்.தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் கொடுத்துவரும் முக்கியத்துவத்தை வெறுமனே பாரதிய ஜனதாவின் இந்துத்துவ நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாமா ?அல்லது அதையும் தாண்டி தமிழகத்தைக் கையாள வேண்டிய ஒரு தேவை காரணமாக இந்திய பிரதமர் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறாரா? என்ற கேள்விகள் உண்டு.

தமிழகம் தொடர்ந்தும் திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளயே இருக்கின்றது. அண்ணாமலை தமிழக அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின் தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளில் விறுவிறுப்பும் எழுச்சியும் தெரிகின்றன. எதிர்வரும் தேர்தலில் அதன் தொகுக்கப்பட்ட விளைவைக் காணலாம். ஆனால் அண்ணாமலை கவர்ச்சியும் சர்ச்சைகளும் நிறைந்த ஒரு தலைவராக மேலெழுந்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும் அவர் இலங்கைக்கு வந்த போதும் சரி, பிரித்தானியாவுக்குப் போன போதும் சரி இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாடுகளில் இருந்து விலகி நின்று கதைக்கவில்லை என்பதனை இங்கே தொகுத்துக் காட்ட வேண்டும். அதாவது அவர் 13ஐத் தாண்டத் தயார் இல்லை.

ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்துத்துவா நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சிங்கள பௌத்தமயமாக்களையும் தடுக்க முடியவில்லை. 13ஐயும் கடக்க முடியவில்லை என்பதுதான் இதுவரையிலுமான அனுபவம் ஆகும். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் பாரதிய ஜனதாவையும் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் நெருங்கி சென்றதன் விளைவாக, தமிழகத்தில் திராவிட கட்சிகளிடமிருந்து விலகி வரும் ஒரு போக்கையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

2009 வரையிலும் அல்லது சீமானின் எழுச்சி வரையிலும் தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தை அதிகம் உரித்தோடு கையாண்டு வந்தது திராவிட மரபில் வந்த கட்சிகளும் இயக்கங்களும்தான். ஆனால் சீமானின் எழுச்சிக்குப் பின் திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இருந்து மெல்ல விலகிச் செல்லும் ஒரு போக்கு அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் பாரதிய ஜனதாவையும் சீமானையும் நெருங்கிச் செல்லும் ஒரு போக்கின் வளர்ச்சியின் விளைவாக திராவிட கட்சிகள் ஈழப் பிரச்சினையில் இருந்து விலகிச் செல்லும் ஒரு போக்கும் அதிகரித்து வருகின்றது.

அதாவது ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவை கையாள்வது அல்லது பாரதிய ஜனதாவை கையாள்வது அல்லது இந்துத்துவாவை ஒரு ராஜதந்திர கருவியாக பயன்படுத்துவது போன்ற வெளியுறவு நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இந்தியாவின் ஈழத் தமிழர்கள் தொடர்பான வெளியுறவு நிலைப்பாட்டில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய மாற்றம் எதையும் இதுவரையிலும் ஏற்படுத்த முடியவில்லை.

அதே சமயம் பிரித்தானிய தமிழர் பேரவையும் உட்பட புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் பெரும்பாலானவை 13வது திருத்தத்தை ஒரு இறுதித் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. அதை அண்ணாமலைக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் அவ்வாறு பாரதிய ஜனதாவுக்கு தமது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைத்த பின்னரும் அண்ணாமலை போன்றவர்கள் 13ஆவது திருத்தத்தை திரும்பத் திரும்ப பகிரங்கமாக வலியுறுத்துவது எதை உணர்த்துகின்றது?

https://athavannews.com/2023/1337186

  • கருத்துக்கள உறவுகள்

‘13’ஐ தீர்வாக திணிக்கும் திட்டம்

Published By: VISHNU

02 JUL, 2023 | 04:13 PM
image
 

(கபில்)

 “புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலமாக இருக்கும் வரை, தனிநாடு அல்லது சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை, பொறுப்புக்கூறலையும், சர்வதேச விசாரணைகளையும் வலியுறுத்தும் வரை, கொழும்புக்கு நெருக்கடி இருந்து கொண்டேயிருக்கும்” 

 “13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதனையே இறுதித் தீர்வாக அடையாளப்படுத்துவது, ஏற்றுக் கொள்ளச் செய்ய முற்படுவது, அபத்தமானது. ஆபத்தானது”

13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான முயற்சிகள் இப்போது, பலமுனைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தும் கூட, 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் மாத்திரம் இதனுடன் தொடர்புபடவில்லை. இந்தியாவும் தொடர்புபட்டிருப்பதாகவே தெரிகிறது.

 

k5-TOP_04.jpg

k5-TOP_03.jpg

k5-TOP_01.jpg

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்ட பயணம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்களை தீர்வாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்த அண்ணாமலை, காணி, பொலிஸ் அதிகாரங்களுடன், 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு,  இந்தியா துணை நிற்கும் என்று கூறியிருக்கிறார்.

அவரும், மத்திய அமைச்சர் எல்.முருகனும் சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் கலாசார மையத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த போதும், அதையே தான் தெரிவித்திருந்தனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இதனையே தான் முன்னர் கூறியிருந்தனர். 

ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய தரப்பில் இதுவரை பெரிதாக எந்த அழுத்தமும் இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து மாகாண சபை தேர்தலையும் கூட  இந்தியாவினால் நடத்தக் கூடிய சூழ்நிலை காணப்படவில்லை.

இவ்வாறான நிலையில், 13ஆவது திருத்த சட்டத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் இப்போது தமிழ் மக்களின் பிரச்சினை என்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினை, அதற்கான நிரந்தர தீர்வு என்பனவற்றை மூடி மறைக்கும் வகையில்  13 விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது.

13ஆவது திருத்த சட்டம் என்பது தமிழ் மக்களின்  பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகும்.

1987இல் இதனைக் கொண்டு வந்த போது, தமிழர் விடுதலைக் கூட்டணியோ, தமிழீழ விடுதலைப் புலிகளோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஈ.பி.ஆர்எ.ல்.எவ். ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ். போன்ற அமைப்புகள், அதற்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தன.

அண்மையில் பத்மநாபா நினைவு நிகழ்வில்  உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், 13ஆவது திருத்தத்தை பத்மநாபா தீர்க்கதரிசனத்துடன் ஆதரித்தார் என்றும், அதனை மிதவாத கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் ஏற்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

நாபாவின் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்பட்டிருக்காது என்றும், சமஷ்டியைக் கூட நெருங்கியிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சிவசக்தி ஆனந்தன், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும் அவர்களே காரணம் என்று, மறைமுகமாக குற்றம்சாட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

இதுவும் கூட, 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் சூழ்ச்சியின் ஒரு பகுதி தான். 

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவது வேறு. அதனையே தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்வது வேறு.

தமிழர் பிரச்சினைக்கு நிலையான- நிரந்தரமான தீர்வு சமஷ்டி தான். இதனை செல்வநாயகம் காலத்தில் இருந்து தமிழர்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையில் உறுதியாக இருந்த போதும், ஒரு கட்டத்தில் அவர்களும் கூட, சமஷ்டி தீர்வுத் திட்டத்தை பரிசீலிக்கத் தயாராக இருந்தனர்.

2009இற்கு்ப் பிற்பட்ட காலத்தில், ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் சமஷ்டியே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்று வலியுறுத்தும் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருந்தன.

அத்துடன், இந்தக் கட்சிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற பல்வேறு பேரணிகளில் வெளியிடப்பட்ட பிரகடனங்களிலும் கூட, சமஷ்டித் தீர்வே வலியுறுத்தப்பட்டது.

இப்போது, திடீரென,13 ஆவது திருத்தத்தை தமிழர் தரப்பு தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தால், அழிவுகளைத் தடுத்திருக்கலாம், அதுவே தீர்க்கதரிசனமான முடிவாக இருந்திருக்கும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். போதனை செய்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். மாத்திரமன்றி, இதே நிலைப்பாட்டில் தான் இன்னும் பல தமிழ்த் தேசியக் கட்சிகள் காணப்படுகின்றன.  

முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக -இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டவர்கள், பலரும் இப்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள வைக்க ஒன்றிணையத் தொடங்கியிருக்கிறார்கள்.

புலம்பெயர் அமைப்புகளின் ஊடாக அவர்கள் இதனைத் திணிக்க முற்படுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர், இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

அதில், மாகாண சபை தேர்தல், 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. எனவே அனைத்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும், அரசியல் வேறுபாடுகளை மறந்து, 13ஆவது திருத்தத்தை ஏற்பதுடன் தேர்தலுக்கான இலக்காக அதனை அடையவும், உடன் ஒன்றிணைய வேண்டும். என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

புலம்பெயர் மக்களும் 13ஆவது திருத்தச் சட்டம் அமுலாக்கம் செய்யப்படுவதை ஆதரிக்கிறார்கள் என்றும், ஜனாதிபதியின் அழைப்புக்காக தமிழ் கட்சிகள் காத்துக் கொண்டிருக்காமல் அவையாகவே சென்று ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்றும் அந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜ் சிவநாதன் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்கு அழைத்து விட்டு வெறும் கையுடன் தமிழ்க் கட்சிகளை திருப்பி அனுப்பி வைக்கிறார்.

எந்த தீர்வையும் முன்வைக்காத அவர், லண்டனில் போய், தமிழ்க் கட்சிகளுடனான பேச்சுக்களின் மூலம் பாதி பிரச்சினையை தீர்த்து விட்டதாக கூறுகிறார்.

இப்படியிருக்க, ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்காமல் போய், காலில் விழுங்கள் என்று தமிழ்க்கட்சி தலைவர்களுக்கு புலம்பெயர் சமூகம் ஆலோசனை கூறுகிறது.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தான், இப்போது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினது இலக்காக உள்ளது.

தமிழ்க் கட்சிகளை விட புலம்பெயர் அமைப்புகளை கைக்குள் போட்டுக் கொள்வதில் தான் அரசாங்கம் நாட்டம் காட்டுகிறது.

ஏனென்றால், ஜெனிவாவிலும் பிற தளங்களிலும், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து வருபவை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தான்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலமாக இருக்கும் வரை, தனிநாடு அல்லது சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வரை, பொறுப்புக்கூறலையும், சர்வதேச விசாரணைகளையும் வலியுறுத்தும் வரை, கொழும்புக்கு நெருக்கடி இருந்து கொண்டேயிருக்கும்.

அந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால், புலம்பெயர் தமிழ் அமைப்புகளை 13 இன் பக்கம் திருப்ப வேண்டும். அவர்களை கொள்கை ரீதியாக பிளவுபடுத்தி பலவீனப்படுத்த வேண்டும்.

அதற்காகவே, ஒரு பக்கத்தில் இந்தியாவில் இருந்தும், இன்னொரு பக்கத்தில் இலங்கையில் இருந்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை குறிவைத்து நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதனையே இறுதித் தீர்வாக அடையாளப்படுத்துவது, ஏற்றுக் கொள்ளச் செய்ய முற்படுவது, அபத்தமானது. ஆபத்தானது.

அதற்கான முயற்சிகளையே  புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என்ற பெயரில் செயற்படும், சில அமைப்புகள் முன்னெடுக்கின்றன.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அதனை தமிழர்களிடமோ, இந்தியாவிடமோ கேட்காமல் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு தமிழர் தரப்பின் ஒப்புதல் ஒன்றும் தேவையில்லை.

ஆனால் தமிழர் தரப்பை ஒரு பங்காளியாக சித்திரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு பங்காளி ஆக்கப்படுவது, இதனை தமிழர் பிரச்சினைக்கான ஒரு தீர்வாக அடையாளப்படுத்துவதில் உறுதியாகப் பங்களிக்கும்.

புலம்பெயர் தமிழர்கள், தாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், ஆதரவளித்தவர்கள் என்பது உண்மையே. அதற்காக அவர்கள், தமிழ் மக்களின் அபிலாசைகளை தவறான திசைக்கு கொண்டு சென்று விடக் கூடாது.

13 ஆவது திருத்தத்தை தீர்வாக திணிக்கும் முயற்சிகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் துணைபோகும் நிலை ஏற்பட்டால், வரலாறு அவர்களையும் மன்னிக்காது.

https://www.virakesari.lk/article/159056

  • கருத்துக்கள உறவுகள்

ஆணா பெண்ணாக் காணல்லையாம் ராமநாதனாம் பேர் என்று ஒரு சொல்லாடல் உண்டு அது போலத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையும் உள்ளது.  தமிழீழம் என்னும் தனிநாட்டுக் கோரிக்கை தொடங்கி பிரிந்து செல்லும் உரிமையுட்பட்ட சுயநிர்ணய உரிமை கொண்ட தமிழ் மாநிலம்,  ஒற்றையாட்சி யமைப்புக்குட்பட்ட தமிழீழ மாகாணம்,  காணி, பொலீஸ் அதிகாரங்கள் கொண்ட இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடகிழக்கு மாகாணசபையென்று பல்வேறு வகையான தமிழரசுக் கோட்பாடுகளும், சுயாட்சிக் கோட்பாடுகளும் ஒரே அரைத்த மாவையே அரைக்கும் முயற்சிகளாகத் தமிழர்மத்தியில் பத்திபத்தியாக எழுத்திலும் பேச்சிலும் விவாதிக்கப்படுகிறதேயொழிய, ஏதாவதொரு இடத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதாகத் தெரியவில்லை.  இதைச் சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டு இந்தியாவும் இலங்கையும் எப்படியிந்தக் கோட்பாட்டாளர்களை ஏமாற்றிக் காலங்கடத்தலாமென்று திட்டமிட்டுப் பல்வேறு சந்திப்பு நாடகங்களை நடத்துகின்றன.  அதிலொன்றுதான் அண்ணாமலையின் லண்டன் விஜயமும். 

ஒன்றும் நடைபெறப்போவதில்லை.  தமிழர்கள் தமக்கென்று வளர்த்தெடுத்த ஆளுமைத்திறன் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.  அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.   அதனைச் செய்ய என்னவழியென்று பார்ப்பதே எதாவது பலனைத் தரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

ஒன்றும் நடைபெறப்போவதில்லை.  தமிழர்கள் தமக்கென்று வளர்த்தெடுத்த ஆளுமைத்திறன் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.  அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.   அதனைச் செய்ய என்னவழியென்று பார்ப்பதே எதாவது பலனைத் தரும்.

இப்போதைக்கு 13 ஐ ஏற்று ஓரளவுக்கு எம்மைப் பலப் படுத்திய பின்னர் அடுத்த 20 வருடங்கள் கழித்து மீதி தேவையான விஷயங்களைக் கிளரலாம். இப்போதைக்கு தேவை மூச்சு விட அவகாசம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் இலங்கையில் சகல தரப்புக்களாலும் தூக்கி எறியப்பட்ட 13 இன்று இந்தியாவின் அழுத்தம் காரணமாக மீண்டும் தூசிதட்டி எடுத்துவரப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் என்ற போர்வையின் கீழ் இந்தியாவே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்திருக்கலாம்.

31 minutes ago, பகிடி said:

இப்போதைக்கு 13 ஐ ஏற்று ஓரளவுக்கு எம்மைப் பலப் படுத்திய பின்னர் அடுத்த 20 வருடங்கள் கழித்து மீதி தேவையான விஷயங்களைக் கிளரலாம். இப்போதைக்கு தேவை மூச்சு விட அவகாசம். 

பெயருக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் இலங்கையில் சகல தரப்புக்களாலும் தூக்கி எறியப்பட்ட 13 இன்று இந்தியாவின் அழுத்தம் காரணமாக மீண்டும் தூசிதட்டி எடுத்துவரப்படுகிறது.

இலங்கைத் தமிழர்கள் என்ற போர்வையின் கீழ் இந்தியாவே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்திருக்கலாம்.

பெயருக்கு ஏற்ற மாதிரி எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

இப்படி நக்கல் நையாண்டி செய்வதை விட்டு உங்களால் தமிழ் மக்களுக்கு என்று பெற்றுக்கொடுக்கக் கூடிய தீர்வு என்ன என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்!

இன்று தமிழர்களிடத்தில் என்ன பலம் இருக்கிறது என்று சொல்லுங்கள்.

நல்ல ஆளுமை உள்ள அரசியல் வாதிகள் இல்லை.

வடக்கிழக்கில் தற்சார்பு பொருளாதாரமும் இல்லை

வெளிநாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை மெல்ல மெல்லமாக மறக்கின்றது

வடக்கிழக்கில் படிப்பின் தரம் அதள பாதாளத்தில்

குடும்ப உறவுகள் சிதையும் நிலை

சமூக ஒழுக்கம் இல்லாத இளம் தலைமுறை

தமிழ்நாட்டில் திமுக வை எதிர்த்து அங்குள்ள பலம் மிக்க அரசின் எதிர்ப்பை சாம்பாதித்து இருந்த நண்பர்களையும் இழந்த நிலைமை 

இப்படி நம் நிலை இருக்கும் பொழுது உங்களால் எப்படி சமஷ்டியை பெற முடியும்?

வாய்ச்சொல்லில் வீரராக இருந்து சாவதை விட இப்போது மூச்சு விட அவகாசம் முக்கியம். அதற்க்குத் தான் 13 ஐ ஏற்போம் என்கிறேன்.

முதலில் எழுந்து நிற்போம். அதன் பிறகு மிச்சத்தைப் பாப்போம்.

இப்போதைய தேவை தமிழ் சமூகம் முற்றிலும் அழியாமல் காப்பாற்றப் படவேண்டும். முழு உரிமைகளையும் பெறுவது என்பது பிறகு. இப்போதே எல்லாம் வேணும் என்று கேட்டால் இருக்கிறதும் போயிரும் 

பிரபாகரனாலேயே வாங்க முடியாத சமஷ்டியை நீங்கள் எப்படி பெறுவீர்கள் என்று சொல்லி விட்டு நக்கல் நையாண்டி செய்யுங்கள் 

 

 

 

 

Edited by பகிடி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பகிடி

சுணக்கத்திற்கு மன்னிக்கவும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் உருவான 13ஐ இந்திய கைக் கூலியாக இருந்த வரதராஜப்பெருமாளைத் தவிர மற்றைய இயக்கங்களில் இருந்து அரசியல்கட்சி வரை சகலருமே ஏற்றுக் கொள்ளாத ஒன்று.ஐயா சம்பந்தன் இன்னொருபடி மேலே சென்று தொட்டுக்கூட பார்க்க முடியாத ஒப்பந்தம் இதுவென்றார்.

காணி இல்லை

கல்வி இல்லை

பொலிஸ் இல்லை.

இது அப்போ.

அப்ப இப்போ

வடகிழக்கு பிரித்தாச்சு

பெரியபெரிய கல்லூரிகளை மத்தியுடன் இணைத்தாச்சு

அடுத்து பெரிய மகாவித்தியாலயங்களை இணைக்கிறார்கள்.

முதலமைச்சராக வருகிறவர் ஒரு அங்கல நிலத்தையேனும் மத்தியின் அனுமதியில்லாமல் எதுவுமே செய்ய முடியாது.

போதாததற்கு வைத்தியசாலைகளையும் கையகப்படுத்துகிறார்கள்.

இப்போது உள்ள நிலைக்கும் 13ஐ கொடுத்துவிட்டோமென்று சொல்வதற்கும் வேறுபாடுகள் வேறுபாடுகள் இருக்குமா என்று தெரியவில்லை.

குறைந்த பட்சம் முதலமைச்சருக்கென்று நிதி நேரடியாக அனுப்பலாம் என்றால் அதுவும் இல்லை.

இந்த நிலையில் 13 பிறந்தால் மத்திக்கு தான் லாபம்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைக் கொடுத்துவிட்டோம் என்று வெளிநாடுகளுக்கு சொல்லி இன்னும் இன்னும் தமிழர் பெயரைச் சொல்லி அவர்களுக்கு பணம் சேர்க்கவே 13 உதவும்.

மற்றப்படி எனது இனம் தலைநிமிர்ந்து சுயமாக வாழ்ந்தால் எனக்கு சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2023 at 21:02, பகிடி said:

வாய்ச்சொல்லில் வீரராக இருந்து சாவதை விட இப்போது மூச்சு விட அவகாசம் முக்கியம். அதற்க்குத் தான் 13 ஐ ஏற்போம் என்கிறேன்.

நானும் பகிடியாக கே ட் கிறன் 13 எப்ப கிடைக்கும் அத சொல்லுங முதல்ல??

34 minutes ago, ஈழப்பிரியன் said:

மற்றப்படி எனது இனம் தலைநிமிர்ந்து சுயமாக வாழ்ந்தால் எனக்கு சந்தோசமே.

இது தான் உண்மை அண்ண 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பகிடி

சுணக்கத்திற்கு மன்னிக்கவும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தால் உருவான 13ஐ இந்திய கைக் கூலியாக இருந்த வரதராஜப்பெருமாளைத் தவிர மற்றைய இயக்கங்களில் இருந்து அரசியல்கட்சி வரை சகலருமே ஏற்றுக் கொள்ளாத ஒன்று.ஐயா சம்பந்தன் இன்னொருபடி மேலே சென்று தொட்டுக்கூட பார்க்க முடியாத ஒப்பந்தம் இதுவென்றார்.

காணி இல்லை

கல்வி இல்லை

பொலிஸ் இல்லை.

இது அப்போ.

அப்ப இப்போ

வடகிழக்கு பிரித்தாச்சு

பெரியபெரிய கல்லூரிகளை மத்தியுடன் இணைத்தாச்சு

அடுத்து பெரிய மகாவித்தியாலயங்களை இணைக்கிறார்கள்.

முதலமைச்சராக வருகிறவர் ஒரு அங்கல நிலத்தையேனும் மத்தியின் அனுமதியில்லாமல் எதுவுமே செய்ய முடியாது.

போதாததற்கு வைத்தியசாலைகளையும் கையகப்படுத்துகிறார்கள்.

இப்போது உள்ள நிலைக்கும் 13ஐ கொடுத்துவிட்டோமென்று சொல்வதற்கும் வேறுபாடுகள் வேறுபாடுகள் இருக்குமா என்று தெரியவில்லை.

குறைந்த பட்சம் முதலமைச்சருக்கென்று நிதி நேரடியாக அனுப்பலாம் என்றால் அதுவும் இல்லை.

இந்த நிலையில் 13 பிறந்தால் மத்திக்கு தான் லாபம்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைக் கொடுத்துவிட்டோம் என்று வெளிநாடுகளுக்கு சொல்லி இன்னும் இன்னும் தமிழர் பெயரைச் சொல்லி அவர்களுக்கு பணம் சேர்க்கவே 13 உதவும்.

மற்றப்படி எனது இனம் தலைநிமிர்ந்து சுயமாக வாழ்ந்தால் எனக்கு சந்தோசமே.

நீங்கள் சொல்வது விளங்குது ஈழப்பிரியன். நான் தருவதை  வாங்கச் சொல்லவில்லை. 13 ஐ பலப்படுத்தி வாங்க வேண்டும் என்கிறேன்.

காணி அதிகாரம் உள்ள, வடகிழக்கு இணைந்த( முஸ்லீம் மக்களுக்கு தனி அலகு )ஒரு கட்டமைப்பு கிடைத்தாலே போதும் இப்போதைக்கு.இது கிடைப்பதே பெரிய விடயம். ஆனால் இதாவது கிடைத்தால் நன்மை என்று நினைக்கிறன்.

மனித இனங்களுக்கான சண்டைகள் ஒரு போதும் ஓயப் போவதில்லை. ஆகவே எமக்கான சமயம் வரும் வரைக்கும் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.இப்போது கொஞ்சம் எம்மைப் பலப்படுத்த வேண்டும். இப்பிடியே கிடைக்க இயலாததை நினைத்து இருக்கிறத்தையும் ஏன் இழப்பான்?

மற்றபடி உங்களின் தமிழர் உரிமைகளுக்கான தாகம் விளங்குகிறது. அதை நான் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

மற்றபடி உங்களின் தமிழர் உரிமைகளுக்கான தாகம் விளங்குகிறது. அதை நான் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் 

பகிடி

நாங்கள் மக்களுக்காகவே சிந்திக்கிறபடியால் இதில் காயப்பட எதுவுமே இல்லை.

எனக்கு கல்வி காணி பொலிஸ் அதிகாரம் கொண்ட ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே விருப்பம்.

ஆனாலும் கட்சிகள் மக்களை சிந்திக்காமல் தேர்தல்களை எண்ணியே நடப்பதால் இதன் சாத்தியக் கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவும் தெரியவில்லை.

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் பகிடியாக கே ட் கிறன் 13 எப்ப கிடைக்கும் அத சொல்லுங முதல்ல??

தனி

இதை சீனாக்காரன் தான் முடிவு பண்ணணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.