Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Oppenheimer

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oppenheimer- 

IMG-0581.jpg

“Prometheus stole fire from the gods and gave it to man. For this he was chained to a rock and tortured for eternity.” என்ற கிரேக்க தேச புராணகதை வசனங்களுடன் தொடங்குகிறது Oppenheimer திரைப்படம்.

அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் Julius Robert Oppenheimerன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படம். முக்கியமாக அவரது இளமைப்பருவம், இரண்டாம் உலகப்போரின் முக்கிய அங்கமான மான்ஹட்டன் திட்டத்தில் அவரின் பங்களிப்பு, புகழின் உச்சியிலிருந்து அவரது சரிவு என்பவற்றை விபரிக்கிறது. 

பரிசோதனைக் கூடத்தை அதிகம் விரும்பாத கோட்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்ட ராபர்டை, மான்ஹட்டன் திட்டம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன் பின் அவர் எவ்வாறு பழிவாங்கும் அதிகாரிகளாலும் கேவலமான அரசியல்வாதிகளாலும் பகடைக்காயாக பயன்படுத்தப்படுகிறார். அதிலிருந்து அவரது சரிவு ஏற்படுகிறது. 

அணுகுண்டின் பாதிப்பு என்ன என்பதை உணர்ந்தாலும் அதில் ஈடுபடும் அவர்,  இறுதியில் தனது கண்டுபிடிப்பிற்காக இறக்கும் வரை மனம் வருந்தியேதான் இருந்திருப்பார். 

IMG-0583.jpg

தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் தான் ஒரு வித்தியாசமானவர் என நிரூபித்துவரும் Christopher Nolanனின் இன்னுமொரு அருமையான படைப்பு. 12 படங்களே தந்திருந்தாலும் அத்தனையும் தனித்துவமானவை. 

அவரது படத்தில் நடிப்பதற்கு வரும் வாய்ப்பை எந்தவொரு பிரபல்யமான ஹாலிவூட் நடிகர்களும் தவறவிடமாட்டார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது, ஏனெனில் Oscarரை வென்ற Rami Malek 
இந்தப் படத்தில் வரும் நிமிடங்கள் மிகவும் சொற்பமே. அதே போல மற்றைய நடிகர்கள் கூட சாதாரமானவர்கள் கிடையாது, அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் தனித்துவமானவர்களும் கூட. 

படம் தொடங்கியதிலிருந்து எந்தவொரு இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை. நடிக நடிகையர் தெரிவு, காட்சியமைப்பு, பின்னணி இசை,  எல்லாமே படத்தின் plus points. 

Albert Einstein வரும் காட்சிகள், அணுகுண்டு பரிசோதனை, Dr Oppenheimerனை விசாரனை செய்யும் காட்சிகள் என அத்தனையும் அருமை. 

அதிலும் Lewis Strussன் காட்சிகளை கறுப்பு வெள்ளை நிறத்தில் படமாக்கிய விதம், அவரது அரசியல் வாழ்க்கை John F Kennedyயினால் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறப்பட்டதை மறைமுகமாக கூறும் விதம் .. இப்படிப் பல. 
 

IMG-0582.jpg
அதுமட்டுமல்ல பல விஞ்ஞானிகளின் பெயர்கள், பெளதீகவியலைப் பற்றி தெரியாத என்னைப் போன்றவர்களுக்காக படத்தில் பெளதீகவியலும் குறைவு என்பதால் பார்ப்பவர்களுக்கு அலுப்பும் ஏற்படாது. 

Prometheus நெருப்பை மனிதர்களிடம் கொடுத்ததால் அவர் மட்டுமல்ல மனிதர்களுமே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் நெருப்பைக் கொண்டு மனிதன் செய்யும் செயல்களால் நன்மை இருந்தாலும் இந்த அணுகுண்டு போன்ற ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பாகப் போய்விட்டது. 

நாம் அவசியம் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய திரைப்படம் இது. ஆனாலும் யாரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னைக் குறை கூறக்கூடாது என்பதற்காக “குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கமுடியாது” என்பதையும் இங்கே கூறிவிடுகின்றேன்😊

Christopher Nolanனைப் போன்றவர்கள் இந்த திரைப்படத்துறையில் மிகவும் அருமை.. அத்திப்பூத்தாற் போல வரும் மனிதர்களில் அவரையும் அவரது படைப்புகளையும் சேர்க்கலாம். 

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை/வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் சொல்லப்படாத ஒரு விடயத்தையும் அறிந்து கொள்ளுங்கள், அமெரிக்கா  அரசு, கடந்த வருடமே இவருக்கு மீதுள்ள விசாரணையை மூடியது. 

இவர் அமெரிக்கா அரசை  எதிர்த்து அவரின், (அணுகுண்டு எதிர்ப்பை), செய்யவில்லை, அமெரிக்காவுக்கு என்றுமே விசுவாசமாக இருந்தார் என்று. 
 

  • கருத்துக்கள உறவுகள்

Oppenheimer திரைப்படம் பற்றி நல்லதொரு விமர்சனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2023 at 07:17, விளங்க நினைப்பவன் said:

Oppenheimer திரைப்படம் பற்றி நல்லதொரு விமர்சனம்.

இது எனது அபிப்பிராயம் மட்டுமே. மற்றவர்களுக்கு வேறு விதமாக தோன்றலாம், ஏனெனில் இவரது படங்களில் கூறப்படும் விடயங்கள் எத்தனை வீதத்தினரை சென்றடைகிறதோ தெரியவில்லை. 

On 5/8/2023 at 23:37, Kadancha said:

படத்தில் சொல்லப்படாத ஒரு விடயத்தையும் அறிந்து கொள்ளுங்கள், அமெரிக்கா  அரசு, கடந்த வருடமே இவருக்கு மீதுள்ள விசாரணையை மூடியது. 

இவர் அமெரிக்கா அரசை  எதிர்த்து அவரின், (அணுகுண்டு எதிர்ப்பை), செய்யவில்லை, அமெரிக்காவுக்கு என்றுமே விசுவாசமாக இருந்தார் என்று. 
 

அவர் இறந்த பின்பு, இதனை செய்து என்ன பலன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2023 at 09:37, Kadancha said:

படத்தில் சொல்லப்படாத ஒரு விடயத்தையும் அறிந்து கொள்ளுங்கள், அமெரிக்கா  அரசு, கடந்த வருடமே இவருக்கு மீதுள்ள விசாரணையை மூடியது. 

இவர் அமெரிக்கா அரசை  எதிர்த்து அவரின், (அணுகுண்டு எதிர்ப்பை), செய்யவில்லை, அமெரிக்காவுக்கு என்றுமே விசுவாசமாக இருந்தார் என்று. 
 

"விசாரணையை மூடியது" என்றால் தொடர்ந்து விசாரித்து வந்து போன வருடம் மூடவில்லை.

"1954 இல்  அவரது பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது சரியான முடிவா?" என பைடன் பதவிக்கு வந்த பின்னர் ஒரு மீளாய்வைத் தொடங்கி, 2022 இல் அது தவறான ஒரு முடிவெனத் தீர்மானித்தார்கள்.

இணைப்பு: https://www.npr.org/2022/12/17/1143896431/j-robert-oppenheimer-security-clearance

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

"விசாரணையை மூடியது" என்றால் தொடர்ந்து விசாரித்து வந்து போன வருடம் மூடவில்லை.

"1954 இல்  அவரது பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது சரியான முடிவா?" என பைடன் பதவிக்கு வந்த பின்னர் ஒரு மீளாய்வைத் தொடங்கி, 2022 இல் அது தவறான ஒரு முடிவெனத் தீர்மானித்தார்கள்.

இணைப்பு: https://www.npr.org/2022/12/17/1143896431/j-robert-oppenheimer-security-clearance

 

https://www.nytimes.com/2022/12/16/science/j-robert-oppenheimer-energy-department.html

இதையே சொன்னது. security clearance ஐ இல்லாமல் செய்தது விளைவே தவிர, இதுவே அடிப்படை பிரச்சனை , அமெரிக்கா அரசுக்கும், Oppenheimer க்கும் இடையில்.

அமெரிக்காவுக்கு விசுவாசம் இல்லை என்றதை மறுத்தே இருந்தார். அனால், மறுவளவமாகவும் நிரூபிக்கப்படவில்லை. 

இந்த விடயம் மூடப்படவில்லை. (போலீஸ் விசாரணையை (கோவையை) மூடாதது போல, விசாரணை நடக்காவிட்டாலும், உத்தியோகபூர்வகாம விசாரணை இருக்கும், அந்த நிலை. FBI உம் இவரை விசாரித்ததால், முடிவு இன்றி மூடி இருக்காது, அதுவும் விசுவாசம், கம்யூனிசம்  என்ற குற்றச்சாட்டில்,  மற்றது ஒபென்ஹெய்ம்ர் மிக முக்கியமானவர். இப்படியானவர்களை குறிக்கப்பட்ட நிரலில் பெயர் இருக்கும், இவர் மட்டும் அல்ல,  இரண்டும் கெட்டான் நிலையாக பல துறை  சார் சீனரர்களின் வாழ்க்கையும் சீர்குலைந்து, அழிந்தது. இவர் வாழ்க்கை சேர்குலையாமல் தப்பியது, தனித்துவதால்).  

security clearance இல் சந்தேகம், மறைகள் இருக்க கூடாது, நீக்கியதன் காரணம்   (அனால், நிரூபிக்கப்படவில்லை.)

இவைரை பற்றி நான் அறிந்த வருடங்களை  மறந்துவிட்டேன், அனால், அது 1990 - 2000 இடையில்.

அப்போதும் இந்த பிரச்னை பற்றி சுருக்கமாக தெரிய வந்தது.  

 

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர் இறந்த பின்பு, இதனை செய்து என்ன பலன்.. 

இது கிட்டத்தட்ட குற்றம் கண்டவரை, பின்பு நிரபராதி என்பது போல.

அரச அமைப்புகள், குடும்பத்தை பொறுத்தவரையில் முக்கியம். 

இது அவருடைய வாழ்க்கையை மிகவும் பாதித்து இருக்கும்.

அவரின் ன் நிலை , அப்படியான தனித்துவமான  ஒருவர் என்பதால், மங்கிய  கெளரவத்துடன்  தொடந்து மரியாதையுடன் வாழ்ந்தார்.

வேறு எவரும் என்றால், நிலை வேறாக இருந்து இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

 

https://www.nytimes.com/2022/12/16/science/j-robert-oppenheimer-energy-department.html

இதையே சொன்னது. security clearance ஐ இல்லாமல் செய்தது விளைவே தவிர, இதுவே அடிப்படை பிரச்சனை , அமெரிக்கா அரசுக்கும், Oppenheimer க்கும் இடையில்.

அமெரிக்காவுக்கு விசுவாசம் இல்லை என்றதை மறுத்தே இருந்தார். அனால், மறுவளவமாகவும் நிரூபிக்கப்படவில்லை. 

இந்த விடயம் மூடப்படவில்லை. (போலீஸ் விசாரணையை (கோவையை) மூடாதது போல, விசாரணை நடக்காவிட்டாலும், உத்தியோகபூர்வகாம விசாரணை இருக்கும், அந்த நிலை. FBI உம் இவரை விசாரித்ததால், முடிவு இன்றி மூடி இருக்காது, அதுவும் விசுவாசம், கம்யூனிசம்  என்ற குற்றச்சாட்டில்,  மற்றது ஒபென்ஹெய்ம்ர் மிக முக்கியமானவர். இப்படியானவர்களை குறிக்கப்பட்ட நிரலில் பெயர் இருக்கும், இவர் மட்டும் அல்ல,  இரண்டும் கெட்டான் நிலையாக பல துறை  சார் சீனரர்களின் வாழ்க்கையும் சீர்குலைந்து, அழிந்தது. இவர் வாழ்க்கை சேர்குலையாமல் தப்பியது, தனித்துவதால்).  

security clearance இல் சந்தேகம், மறைகள் இருக்க கூடாது, நீக்கியதன் காரணம்   (அனால், நிரூபிக்கப்படவில்லை.)

இவைரை பற்றி நான் அறிந்த வருடங்களை  மறந்துவிட்டேன், அனால், அது 1990 - 2000 இடையில்.

அப்போதும் இந்த பிரச்னை பற்றி சுருக்கமாக தெரிய வந்தது.  

 

 

ம்..இந்தப் பரிமாற்றம் எப்படிப் போகும் என்று புரிகிறது.

1954 இல் பாதுகாப்பு அனுமதியை நீக்க 4 to 1 என்ற வாக்கு விகிதத்தில் ஒரு விசாரணைக் குழு பரிந்துரைத்தது. அத்தோடு விசாரணை முடிந்தது, பிறகு இவரைப் பற்றிய கோப்பை திறந்து வைத்திருந்ததாக நம்பிக்கையான ஊடகங்களில் வரவில்லை. (NYT இல் 1954 தீர்ப்பை மாற்றியிருக்கிறார்கள் என்று மட்டும் இருக்கிறது, தொடர்ந்து விசாரித்தார்கள் என்று கூறவில்லை).

அதே போலத் தான் நீங்கள் குறிப்பிட்ட சீன விஞ்ஞானிக்கும் நிகழ்ந்தது. அதே போல, வேறொரு குற்றச்சாட்டில், பிரிட்டனின் அலன் ரூரிங்கிற்கும் நிகழ்ந்து பின்னர் அவரது குற்றத் தீர்ப்பை பிரிட்டன் நீக்கியது மிகத்தாமதமாக.

எனவே, பைலைத் திறந்து வைத்திருந்து போன வருடம் மூடவில்லை - 2020 இல் மீளாய்வு செய்து 2022 இல் தீர்ப்பை மாற்றினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

எனவே, பைலைத் திறந்து வைத்திருந்து போன வருடம் மூடவில்லை - 2020 இல் மீளாய்வு செய்து 2022 இல் தீர்ப்பை மாற்றினார்கள்.

 

என்னிடம் இதை விளங்கப்படுத்த நேரம் இல்லை 

நீங்கள் சொல்வது  security clearance க்கு மாத்திரம். அது அன்றே தீர்மானிக்கப்பட்டு விட்டது. (நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டின்), சந்தேகம் அடிப்படையில்.

அனால் இந்த விசுவாசம், கம்யூனிசம் - சந்தேகம், குற்றசாட்டு, இரண்டும் கெட்டான் நிலை, பிரச்சனையின் அடிப்படை. 

(இவை மிகவும் பாரதூரமான குற்றசாட்டுகள், சந்தேகம்) 

மூடப்படுவது என்றால் எல்லா அரச அங்கத்திலும் (agencies) இவர் (அல்லது எவரோ) மீதுள்ள குற்றசாட்டு, மறை  கைவிடப்படுவது. 

அது இப்பொது தான் நிகழ்ந்து உள்ளது. 

(சாதாரணமாக போலீஸ் இலும்,  (கிரிமினல்) விடயங்களில் நடப்பது இது தான், விசாரணை என்று நடக்காது, அனால் விடயம் மூடப்படாது, ஏனெனில் அறுதியாக ஒரு முடிவுக்கு வரமுடியாமையால். இதில் ஐரோப்பாவை  விட அமெரிக்கா இறுக்கம்). 

(எப்படி, 30, 40, 50 ... வருடத்துக்கு பின்னும், சந்தேக நபர்கள் இறந்த பின்னும், சில (கிரிமினல்) விடயங்கள் பின்பு கிடைக்கும் ஆதார அடிப்படையில்  (பொதுவாக dna போன்ற ஆதார ) தீர்மானிக்கப்படுகிறது. அவை மூடப்படுவதில்லை.)

(தமிழ் சினிமாவில் fir (first incident report) போல, உண்மையும் அது தான்), ஒரு விடயத்தை  அரச நிர்வாகத்தில் திறக்கப்பட்டால், பொதுவாக முடிவு இன்றி மூடப்படாது. முடிவு இல்லாவிட்டால், விடயம் திறந்த நிலையில் அப்படியே இருக்கும், ஒன்றும் அதில் செய்யப்படமுடியாமையால்.    

இது சாதரண நிர்வாக முறை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ம்..இந்தப் பரிமாற்றம் எப்படிப் போகும் என்று புரிகிறது.

கர்மா

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு IMAX அகன்ற திரையில் பார்த்தேன்.  ஒரு சிக்கலான அறிவியல் கோட்பாடான குவாண்டம் இயக்கவியலை அழிவாயுதத்தை தயாரிக்க உதவிய குற்றவுணர்வும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை துடைக்க போராடும் ஓர்மமும் நன்றாக வந்துள்ளது. 

ஓப்பன்ஹெய்மர் அணுகுண்டின் தந்தை என்பது பெருமைக்குரிய விடயமாக அவருக்கு இல்லை. ஆனாலும் அவர் கண்டுபிடிக்காமல்  விட்டிருந்தாலும் இன்னொருவர் கண்டுபிடித்திருப்பார். 

திரை நிறைந்த காட்சிகளாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

 

ஓப்பன்ஹெய்மர்: குவாண்டம் முரண்பாடுகளின் திரைப்படம்

spacer.png

ம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001: ஸ்பேஸ் ஒடிஸியின்’ முதல் காட்சியில் எலும்பை ஆயுதமாக்கிக் கொலை செய்யும் ஒரு குரங்கு, பரிணாம வளர்ச்சியில் அணு ஆயுதங்களை உருவாக்கும் இடத்தை அடைந்ததை கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ பேசுவதில்லை என்றாலும், அந்தக் குரங்கிடம் தோன்றாதவை ராபர்ட் ஜெ ஓப்பன்ஹெய்மருக்குத் தோன்றுவதை இந்தப் படம் பேசுகிறது.  

குற்ற உணர்வு, அறவுணர்வின் தடுமாற்றங்கள், அரசியல் முடிவுகள். இவை எவையும் ஆயுதத்தால் கொலை செய்யும் அந்த முதல் குரங்கிற்கு இல்லை.  உண்மையில் இயற்கையில் குற்றம் என்பதே இல்லை. குற்ற உணர்வு நாகரிகத்தின் (civility) அடிப்படைகளில் ஒன்றாக பின்னர் எழுந்தபோதும், ஆயுதங்களின் மீதான காதல் இதுவரையில் குறைந்திருக்கவில்லை.  

அணு ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகள் இப்போது அறிதுயிலில் வைக்கப்பட்டிருக்க, டிரோன்களும், கொத்துக் குண்டுகளும் சிறுசிறு துண்டுகளாக நம்மீது பறக்கின்றன. மிகப் பெரியவற்றை நாம் அஞ்சுகிறோம், சிறியவை உருவாக்கும் அழிவுகளின் கூட்டுத்தொகை நம் பார்வைக்குத் தப்பிவிடுகிறது.  

கொலைக் கருவி

காட்சிகள் தொடங்கும் முன்பாக, மனிதர்களுக்குத் தீயைக் கொடுத்ததற்காக காலாகாலத்திற்கும் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும் புரோமிதியஸின் கதை திரையில் தோன்றுகிறது. தன்னுடைய பணியின் காரணமாக ஒருவர் கொலைக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அதை அரசிடம் அளித்தால் அவரை நாம் குற்றவாளியாகக் கருத முடியுமா? ஓப்பன்ஹெய்மர் ஏற்றுக்கொண்டிருந்த பணியை நம்மால் இவ்வாறு சாதாரணமாக அணுக முடியாது. 

அவர் செய்தது தன்னுடைய அறிவை குறிப்பாக அப்போதுதான் புதியதாக வெடித்துக் கிளம்பிய ஏறக்குறைய இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் அவரே சொல்வதைப் போல, புரட்சிகரமான அறிவியல் அறிவின் ஒரு முக்கியக் கண்டுபிடிப்பாளர் தனது அறிவை ஆயுத உருவாக்கத்தில் பயன்படுத்துவதால் எழும் குற்ற உணர்வை, அன்றாடம் நம்முடைய உலகியல் செயல்களால் எழும் சாதாரண அறத்தடுமாற்றங்களோடும், அடுத்த நிமிடம் நாம் கடந்துவிடுகிற குற்ற உணர்வோடும் நாம் ஒப்பிட முடியுமா? நாம் அனைவரும் குற்ற உணர்வில் சமத்துவத்தை அடைகிறோமா? 

அணுகுண்டைப் பயன்படுத்தி பெரும் பேரழிவின் முகத்தை (திரைப்படத்தில் பிரபஞ்ச ஆற்றல் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகிறது) நிகழ்த்திக் காட்டிய ஓர் அரசை, அதன் அதிபரை நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிவதைப் போல அதன் பின்னணியில் இயங்கிய ஆயுதக் கண்டுபிடிப்பாளரின் பொறுப்பு, அவரது செயலின் முக்கியத்துவம், அவரது தேர்வின் மீதான விமர்சனம் இவற்றை எளிதாக விவாதிக்க முடிவதில்லை. நமக்கு ஒரு விமர்சனக் கருதுகோள் ஒன்று தேவைப்படுகிறது. அந்தக் கருதுகோளின் வழியாக நாம் இச்சிக்கலை அணுக முயல்வோம். 

 

 

விமர்சனக் கருதுகோள்

குவாண்டம் இயற்பியல் நமது கருதுகோளின் நம்பகத்தன்மையைக் கேள்வி கேட்கக்கூடியது.  நான் அறிந்தவரை, குவாண்டம் இயற்பியலின் ஓர் அங்கமான அணு இயற்பியல் இரண்டு முக்கியமான முடிவுகளை நம்முன் வைக்கிறது.  அணுவின் உள்ளே நிகழ்பவற்றை அடிப்படையாக் கொண்டு இவ்வுலகை நாம் பார்க்கிற விதத்தையும் குவாண்டம் இயற்பியல் மாற்றியிருக்கிறது.  ஏறக்குறைய இந்திய மெய்யியல் கோட்பாடுகளில் முக்கியமான தோற்ற மெய்மை அல்லது தோற்றப் பொய்மைக்கு அருகே செல்லும் கோட்பாட்டை முன்வைத்தது.   

ஒன்று, ஒளி என்பது துகள்களாகவும், அலைகளாகவும் இருக்கும் இரட்டைத்தன்மை (Duality).  இரண்டாவது, ஒரு பரிசோதனையின் முடிவு எதனைக் கொண்டு அப்பரிசோதனையின் முடிவை ஆராய்கிறோமோ அதனைப் பொறுத்து மாறுபடும் என்பது.  

முதல் முடிவை விடுங்கள், ஒளி எப்படி இருந்தாலும் நாம் கவலைப்படத் தேவையில்லை. இராண்டாவது முடிவு மிகவும் சிக்கலானது. ஒரு நிகழ்வு, அது விவரிக்கப்படும்போதுதான் நிகழ்கிறது என்று சொல்வதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகால மேற்கத்திய இயற்பியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்திய தெகார்த்திய, நியுட்டனிய பார்வைக்கு முற்றிலும் எதிராகவும் அமைந்தது.

குவாண்டம் இயற்பியல் நாம் உலகைப் பார்க்கும் பார்வையில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கும் அதேசமயம், நாம் பயன்படுத்தும் ஜிபிஎஸ், கோள்களின் இருப்பிடத்தை அறியும் பழைய கிரேக்க முறையின் அடிப்படையில் இயங்குகிறது. நிச்சயத்திற்கு ஓர் இடம் இருக்கிறது அதேசமயம் அது நிச்சயமானதும் அல்ல. இந்த முரண்பாடே குவாண்டம் இயற்பியிலின் கோட்பாட்டுப் பங்களிப்புகளில் நம்மைத் தலைசுற்ற வைப்பது. 

கிறிஸ்டோபர் நோலன் இந்த அறிவியல் முரண்பாட்டை தனிமனிதர், அரசியல், வரலாறு, அதிகாரத்தின் இயக்கம் இவற்றை ஒரு சேரப் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும், அணுகுண்டு உருவாக்கம், அவரது தளர்வான கம்யூனிஸ ஆதரவினால் மெக்கார்த்தி காலத்தில் அவர் மீது சோவியத் ரஷ்ய உளவாளி என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, தனிவாழ்வில் அவரது நம்பகமற்ற செயல்பாடுகளின் கலவையான ஓப்பன்ஹெய்மரின் வாழ்வின் முக்கியமான பகுதியை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்.  

 

 

இரண்டாம் உலகப் போரின் பின்னணி

காட்சிகளின் துவக்கத்தில் அல்லது இடையிடையே தோன்றும் துகள்கள், அலைகளைக் கொண்டு நாம் அக்காட்சியின் பார்வைக் கோணத்தை அணுகலாம். ‘இன்செப்சன்’ திரைப்படத்தில் சிறுபம்பரம் சுற்றும் அதே நுட்பம் என்றாலும் ஒரு காட்சியின் துவக்கமும் முடிவும் (குண்டுவெடிப்புச் சோதனையைத் தவிர) பல்வேறு காட்சிகளின் இடையிடையே சொருகி வைக்கப்பட்டிருப்பதால் அந்நுட்பம் இன்னும் சிக்கலானதாக மாறிவிடுகிறது. 

அ-நேர்கோட்டுக் கதையாடல் (narrative), சிதறல் சிதறலான காட்சிகள் என திரைப்படத்திற்கு என்று ஓர் அடிப்படை இயங்குதளம் இருக்கிறதா என்ற கேள்வியை படம் முழுக்க எழுப்பினாலும், அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளான ஓப்பன்ஹெய்மரின் தடுமாற்றங்களை, சிதறுண்ட மனதை, மாறுபடும் பார்வைக் கோணத்தை விவரிப்பதற்குப் பொருத்தமான கதையாடலாகவும் அமைந்திருக்கிறது.   

நாம் இப்போது ஒரு விவாதத்தைத் துவங்குவோம். பணியின் பொருட்டு, அல்லது தான் கண்டுபிடித்த ஒரு கோட்பாட்டை ஆயுதம் செய்வதற்கு ஒருவர் பயன்படுத்தினால் அவரை நாம் அதன் விளைவுகளுக்குக் குற்றவாளி ஆக்கலாமா? அதேசமயம், அணு ஆயுதத்தைவிட இன்னும் வீரியமான பேரழிவைத் தரக்கூடிய ஹைட்ரஜன் குண்டைக் கண்டுபிடித்த அறிவியலாளரை நாம் ஓப்பன்ஹெய்மரைப் போலவே குற்றத்தில் சமமாக நடத்துவோமா?

கொலை வாளைச் செய்யும் கொல்லர் மட்டுமல்ல அதனைப் பயன்படுத்திக் கொலை செய்பவரும் ஒரு கதையாடலில் சிக்கியிருக்கிறார். அது நாட்டைப் பாதுகாப்பது, அழிவைத் தடுப்பது, நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது எனும் கதையாடல். ஓப்பன்ஹெய்மர், அணுகுண்டு பாவிப்பிற்கு ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ஹாரி ட்ருமனைச் சந்திக்கும் காட்சியின் ஆழம் அதன் கால அளவில் தப்பிப் போகாமல், நம்முன் ஒரு கேள்வியாக எழும் வாய்ப்பை அழுத்தமாகக் கொண்டிருக்கிறது.  

ஒரு கைக்குட்டையின் அசைவில் வரலாற்றில் நிகழக்கூடிய பார்வைக் கோண முரண்பாட்டை எளிதாகக் கடத்துகிறார் நோலன். அறிவியலும், அரசு அதிகாரமும் இணையும்போது, அதுவும் ஒரு வரலாற்றுக் காலத்தின் நெருக்கடியின் பின்னணியில் இணையும்போது ஏற்படும் அழுத்தங்கள் நமது பார்வையின் அளவுகோலில் துகளாகவும் அமையலாம் அல்லது அலையாகவும்.  அரசியல் பின்னணியில்தான் அணுக வேண்டும் என்ற ஒரு பார்வையை மற்றொரு குவாண்டம் இயற்பியலாளரான வெர்னர் ஹெய்சன்பர்க் அவருடைய ‘இயற்பியலும் மெய்யியலும்’ நூலில் அளிக்கிறார்.  

இந்தச் சிக்கலை, மனித வரலாற்றில் மனிதர்கள் தங்களின் மீதே செய்துபார்த்த பரிசோதனைகளில் ஒப்பற்றதும், பேரழிவைத் தந்ததுமான இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அணுகி ஒரு நியாயத்தை அளிக்க முடியும். போரில் யாருக்கு என்ன செய்வதென்றே தெரியாது, கொல்வதைத் தவிர. யார் முதலில் கொல்கிறாரோ அவரே வெற்றியாளர். வெற்றிக்கு யார்தான் முந்துவதில்லை!

 

 

குற்ற உணர்வு 

ஓப்பன்ஹெய்மர், ’நானே மரணமும் உலகை அழிப்பவனுமானேன்’ எனும் பகவத் கீதையின் வசனத்தைச் சொல்கிறார். அவருடைய குற்ற உணர்விற்கு (அவர் ஒருபோதும் அணுகுண்டுப் பயன்பாட்டிற்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்கவில்லை) கீதையின் அடிப்படையில் விடுதலையை வழங்கிவிட முடியும். எதனையும் நியாயப்படுத்துவதற்கு நமக்குத் தேவை கதையாடலும், குறிப்பிட்ட காலகட்டத்தின் அழுத்தங்களின் பின்னணியுமே. ஒன்றின் முடிவே அதன் துவக்கத்தை தீர்மானிக்கிறது. 

இவ்வருடம் புக்கர் விருது வாங்கிய நாவலான ‘டைம் ஷெல்டரில்’ அதன் ஆசிரியர் கியார்கி கோஸ்படினோவ் 1936 செப்டம்பர் 1 அன்றோடு மனிதர்களின் காலம் முடிந்துவிட்டது என எழுதுகிறார். உலகப் போரின் கண்டுபிடிப்புகள், பின்விளைவுகள், பனிப்போர், நேட்டோ (அதை உருவாக்கியவரும் ஹாரி ட்ருமன்தான்) என ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று எனத் தொடரும் நீர்வளைய விளைவுகள் (ripple effect) முழு அளவிலான அழிவில்தான் நிற்கும். அழிவு முற்றாக நிகழ்ந்த பிறகு அழிவை அறிபவர் என்ற ஒருவர் இல்லாதபோது அழிவு என்பது உண்மையில் நிகழ்ந்ததுதானா?

மனிதர்கள் யாருமே இல்லாதபோது நிலவு என்ற ஒன்று இருக்காதா? இவ்வாறு குவாண்டம் இயற்பியலாளரைப் பார்த்துக் கேட்ட ஐன்ஸ்டினும், ஒப்பன்யெஹ்மரும் சந்திக்கும் காட்சியோடு இப்படம் முடிகிறது.  எவ்வாறாயினும் நாம் இருவருமே இதனைத் துவக்கி வைத்துவிட்டோம் என்கிறார் ஒப்பன்யெஹ்மர். 

வழக்கமாக அறிவியலின் பரப்புரையாளராகத் தோன்றும் நோலன் இத்திரைப்படத்தில் அதனை குற்ற உணர்வின் இரட்டைத்தன்மையின் ஆடிகளின் கீழே வைத்துப் பார்க்கிறார். அது துகளாகவும், அலையாகவும் தெரிகிறது எனும் போதும், திரையரங்கை விட்டு வெளியேறுகிறவர்கள் ஆழ்ந்த அமைதியில் வெளியேறுவதைப் பார்த்தேன்.  

 

https://www.arunchol.com/balasubramanian-ponraj-on-oppenheimer-movie

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.