Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விலக்கம் : உமாஜி

IMG_20230823_195656.jpg?resize=841%2C128

ஆலமரம், வேப்பமரம், வில்வமரம் இன்னும் என்னென்னவோ பெருவிருட்சங்களால் நிறைந்த சோலைக்குள் உள்ளடங்கியிருந்தது ஐயன் கோவில். பனி விலகாத காலை. எதிரே சற்றுத்தள்ளி பனை வடலிகள். ஒருமுறை நுங்கு குடிக்கவேணும் என்று சொன்னபோது கணேசண்ணை சைக்கிளில் எங்களை இங்கேதான் அழைத்து வந்தார். வசதியாக நிழலுக்குள் உட்கார்ந்துகொள்ள வெள்ளையண்ணை மரத்தில் ஏறிக் குலை குலையாக இறக்கி, வெட்டிக் கொடுத்தார்கள். இனி அடுத்த சீசன் வரைக்கும் நுங்கு ஆசையே இல்லாத அளவுக்கு நானும் தம்பியும் குடித்தோம்.

வருடத்தின் முதல் திருவிழா. பூசைக்கு புது நெல்லு உடைத்து பொங்கலும், இன்னும் நிறைய பலகாரங்களும், பழங்களுமாகப் படையல் வைத்திருந்தார்கள். அங்கேயிருந்த சனத்துக்கு மட்டுமில்லாம, கிராமத்துக்கே பரிமாறப் போதுமாக இருந்தது. பவளமன்ரி சாமத்திலிருந்தே ஏற்பாடுகளைக் கவனித்து களைத்து, தூணுடன் சாய்ந்து உட்கார்ந்திருந்தா. தேவாரம் பாடி, பூசை முடியும் தறுவாயிலிருந்தது.

டீச்சர் கோவிலுக்குள்ள வந்தா. யாரையும் பாக்காம பொதுவா ஒரு கீழ் நோக்கின பார்வை. வாய்க்குள்ள ஒரு மெல்லிய சிரிப்பு. சிரிக்கிறாவா இல்லையா எண்டு கண்டுபிடிக்கேலாத மாதிரி. அவ எப்பவுமே அப்படித்தான் இருந்த மாதிரிப்பட்டது. யாரையுமே அவ நேரடியாப் பார்த்த மாதிரி இல்ல. யாரோடயும் கதைச்சுக் கண்டதில்லை. அவவோடயும் யாரும் கதைச்சுப் பார்த்ததில்லை.

டீச்சர் அமைதியாக் கண்ணை மூடிக்கும்பிட்டா. பிறகு அதே பார்வை, சிரிப்போட சுத்திக் கும்பிட்டா. வீபூதியும், சந்தனமும் எடுத்து வச்சுக்கொண்டு தன்ர பாட்டில திரும்பி நடந்துபோனா. எல்லோரும் கவனிக்காத மாதிரியே இருந்ததாய்ப் பட்டது. ஒழுங்கையால சும்மா போற ஆக்களையே கூப்பிட்டுச் சாப்பிடக் கொடுக்கிற பவளமன்ரியும் என்னமோ கடும் வேலை மாதிரி அவ்வளவு சிரத்தையா விளக்குக்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தா.

தம்பி மெதுவாக, “டீச்சர் கிறிஸ்டியனோ? பிரசாதம் வாங்காமப் போறா” பிறகு அவனே, “சேச்சே கோவிலுக்கு வந்து பொட்டெல்லாம் வச்சிற்றுப் போறா”. அருகில் நின்ற கணேசண்ணையைப் பார்த்துத்தான் சொன்னான். அவர் ஒன்றும் பேசவில்லை. தம்பியும் விடுவதாயில்லை.

“ஏனண்ணை?” அவன் ஆரம்பித்தபோது கணேசண்ணைக்கு அழைப்பு வந்ததில், பொங்கல் பானையைப் பொறுப்பெடுத்தார். தரையில் எல்லோரும் அமர்ந்திருக்க, வாழை இலை போட்டுப் பிரசாதம் வழங்கினார்கள். வெள்ளை மாவில் பொரித்த மோதகத்துக்குள் பயறுக்குச் சமமாய் எள்ளும் சேர்த்திருந்தது. சர்க்கரை பாகாய் உருகி வடிந்தது. பவளமன்ரி தன் கைக்குப் பிடிபட்ட வடைகளளை எடுத்து ஒவ்வொருவருக்கும் வைத்துக்கொண்டு வந்தார். பனிக்கு இதமான மெல்லிய சுடுவெயில் திட்டுத் திட்டாக தரையில் படர்ந்திருந்தது.

“அருச்சுணனிட்ட கொஞ்ச நேரம் தா எண்டுபோட்டுத்தான் கீழ இறங்கினவன்”

குளித்துவிட்டு வந்து ஆசுவாசமாக மரத் தூணோடு சாய்ந்து உட்கார்ந்த பாலன் அங்கிள் திடீரென்று ஆரம்பித்தார். இரவுச்சாப்பாட்டு நேரம். அவர் குடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. எப்போதாவதுதான் அவர் மனம் விட்டுப் பேசுவார். மற்றபடி சிறு புன்னகை மட்டும்தான். அன்றைக்கு லைட்டாப் போட்ட மாதிரித்தான் இருந்தார்.

“இறங்கிச் சுரிக்குள்ள மாட்டின சில்லை எடுக்கத்தான் மினக்கெட்டவன். சுரிக்குள்ள வண்டிச்சில்லு மாட்டினா அலுப்புத் தம்பி. சிலநேரம் வரும். சிலநேரம் வெளில வாற மாதிரி வந்து இன்னும் புதைஞ்சிடும். கஷ்டகாலத்துக்கு வண்டிலயே கவிட்டுப் போட்டுடும். அதான் தம்பி சில்லெடுத்தவேலை எண்டுறது. கர்ணன் அங்க மினக்கெட, அந்த நேரம் அடிச்சிட்டான் எண்டது பிழைதான். ஆனா வேற வழியில்லை எண்டு கிட்ணன் சொல்லிப்போட்டான். ஆனா ஒண்டு… ஒருநேரம் கர்ணன் களைச்சுப்போய் சாப்பிடேக்கயோ, தண்ணி குடிக்கேக்கயோ அம்பு விட்டிருந்தானோ அது மன்னிக்கவே ஏலாத பிழை”

கையில் சாப்பாட்டுக் கோப்பையோடு பவளம் அன்ரி வருவதை அவர் பார்த்துவிட்டு, ‘’நான் மன்னிச்சாலும் பவளமன்ரி கடைசி மட்டும் மன்னிக்க மாட்டா” என்றார். அன்ரி சிரிப்புடன், “என்ன இண்டைக்கு ஏதும் முசுப்பாத்தியோ?” என்றவாறு கீழே அமர்ந்து பரிமாறத் தொடங்கினா.

அனேகமாய் மூன்று வேளையும் சோறு. காலையில் ஆறுமணிக்கே பழஞ்சோறும் சம்பலும் சாப்பிட்டு தோட்டத்துக்கு கிளம்பிவிடுவார்கள். மதிய உணவு வீட்டிலோ, வயலிலோ தோட்டத்திலோ அந்தந்த சூழ்நிலைக்கேற்ப. வீட்டில் குளித்து ஓய்வாக அமர்ந்துண்ணும் இரவுணவுதான் பிரதான உணவு என்று தோன்றிற்று.

“டேய் தம்பியவ நீங்களும் ஒரு கை..” என்றார் பாலன் அங்கிள்.

“நாங்கள் சாப்பிட்டம்”

“நாளைக்கு இளந்தாரியா வளரப்போற பெடியள் ஒருக்காதான் சாப்பிடுவியளோ? ஓ உங்களுக்குச் சோறு இரவில இறங்காதென்ன? என்ன சாப்பிட்டியள் புட்டுத்தானோ?” என்றார். அன்ரி எங்களுக்கு ஆளுக்கொரு பெரிய கச்சான் அல்வா உருண்டையைக் கையில் தந்தா.

உடனேயே குத்தி பொங்கிய சிவப்பு அரிசிச்சோறு, கத்தரிக்காய், கருவாடு சேர்த்த குழம்பும், அப்பளம், ஊறுகாய் வைத்துக் குழைத்து, ஒரு வாய் வைத்துப் பச்சை வெங்காயத்தைக் கடித்துக்கொண்டே, “அப்பு சாப்பிட்டதோ?” என்றார்.

“அப்புவும் இப்பான் சாப்பிடுது” அன்ரி நீங்கள் முதல்ல சாப்பிட்டுப் பிறகு கதையுங்கோ”

அமைதியாகச் சாப்பிட்டு முடித்துப் பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு குந்தி உட்கார்ந்திருந்தார் பாலன் அங்கிள்.

“சாப்பிடேக்க கதைச்சா மனிசிக்குப் பிடிக்காது. கதை குடுக்கவும் மாட்டுது. எல்லாம் அப்பு பழக்கினதுதான். ஒரு சத்தம் வரக்கூடாது. இங்க மனிசன் நிம்மதியா செய்யக் கூடியது சாப்பிடுறதுதானே. இப்ப பார் முந்தானாத்து மாட்டுப் பட்டிக்க புலி வந்திட்டுது. இப்ப கொஞ்ச நாளா இல்ல. மழை காலத்தில உங்கேரு.. உந்தச் சந்தில இரவில யானை வரும். சாப்பிடுற நேரமாவது அமைதியா நிம்மதியா இருக்க வேணுமெல்லே? இப்பவே இப்பிடியெண்டா அம்பது வரியத்துக்கு முதல் எப்பிடி இருந்திருக்கும்? அப்பு இளந்தாரியா இருக்கேக்க இரவு பகலா உழைச்சு தனியனா உருவாக்கினதுதானே இந்த வீடு தோட்டம் எல்லாம். இந்த வெயில், மழை, பனிக்குளிர் ஒண்டும்பாக்காம இங்கயே கிடந்து ஒவ்வொண்டா உருவாக்கின ஓர்மம், கெருக்கு எல்லாம் மனிசனுக்கு இருக்கத்தானே செய்யும்? மனிசன் நிம்மதியா நித்திர கொண்டிருக்க ஏலுமே? அப்ப சாப்பிடுறது மட்டுந்தான் மனிசனுக்கு நிம்மதி. அதான் அப்பு சாப்பிடேக்க கதைச்சா மனிசன் தட்டைத் தூக்கி எறிஞ்சிடும். ஞாயந்தானே?”

”குணா சொல்லுவான் சண்டைலயும் ரெண்டுதரப்பும் எதிரெதிரா பங்கர்ல நிக்கும். சாப்பிடுற நேரத்தில வோக்கில சொல்லிப்போட்டு அமைதியா இருக்குமாம். அந்த நேரத்தில சுட்டு பதகளிப்பட்டு சாப்பாட்டைக்கொட்டி சிந்தாமல்… அதொரு எழுதாத ஒப்பந்தம் மாதிரி எண்டுவான்’.

சற்று நேரம் ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருந்தார். தூரத்தே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் சொன்னார், ”அவன் போய் மூண்டு வரியமாச்சு”. நாங்கள் எதுவும் பேசவில்லை. உங்கள மாதிரி இருக்கேக்கதான் போனவன். நல்ல துடியாட்டமா இருந்தவன். நல்லாய்ப் படிச்சுக்கொண்டும் இருந்தவன். வாத்திமாருக்கும் பெரிய கவலை”

தம்பி என்னைவிட ஒரு வயதுதான் சின்னவன். எப்போதும் நண்பர்கள் போல ரெண்டுபேரும் ஒன்றாய்த்தான் ஒரே சைக்கிளில் வயல், காடு, குளம் எல்லாம் சுற்றிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு பொழுதில்தான் ‘அருமைகடை’யில் டீச்சரை முதன்முதல் பார்த்தோம்.

நேர்த்தியான சேலை, செம்மண் புழுதி படியாத செருப்புக்கள், தெளிவான உச்சரிப்பு என ஊருக்கு ஊருக்கு அந்நியமாய்த்தான் தெரிந்தார். ரெக்சோனா சோப்பையும், சன்ஸில்க் ஷம்பூவையும் சரியாக உச்சரிப்பவர் ஊருக்கு அந்நியமாய்த்தான் இருக்க முடியும் என்பது தம்பியின் நிலைப்பாடு. அநேகமாய் இங்கிலீஷ் டீச்சராய்த்தான் இருப்பா என்றான் தம்பி. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன் என்றேன்.

கடைக்கு வரும் யாரிடமும் அரைவாசிப்பற்கள் தெரிய குசலம் விசாரிக்கும் அருமை அண்ணன், எதுவும் பேசாமல் நேரடியாகக்கூடப் பார்க்காமல் டீச்சர் கேட்ட பொருட்களை எடுத்துக்கொடுத்தார். மௌனமாக மிச்சக் காசைக்கொடுத்தவர், டீச்சர் போனதும்தான் சகஜ நிலைக்குத் திரும்பியது ஆச்சரியமாய் இருந்தது. டீச்சர் எதையும் கண்டுகொள்ளாது என்னையும் தம்பியையும் பார்த்துச் சிரிச்சுட்டுப் போனா. பிறகு கவனித்ததில் எல்லோருமே டீச்சரிடம் சற்று விலகியிருந்ததைக் காண முடிந்தது. பவளமன்ரியின் பார்வையும் ஒரு கணநேரத்தில் மாறிவிடுவதையும் கவனித்தேன். இந்த ஊரில் இல்லாத வழக்கம் அது.

டீச்சர் மற்றவர்களைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாகவோ என்னவோ ஒரு கீழ்நோக்கிய பார்வைக்கோணத்தையே எப்போதுமே வைத்திருந்ததாய்த் தோன்றியது. அதற்குள் நானும் தம்பியும் மட்டுமே சரியாக மாட்டிக்கொண்டதாய் நினைத்தேன். எங்களை மட்டுமே சரியாகப் பார்த்து நேரடியாகப் புன்னகைப்பார். இன்னும் ஓரிரு சந்தர்ப்பங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்துவிடுவார் எனத் தோன்றியது. அவர் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிறார், அல்லது ஓய்வு பெற்றுவிட்டாரா? ஊரில் எத்தனையோ டீச்சர் இருக்க அவர் மட்டும் ஏன் டீச்சர் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டார் எனவும் தெரியவில்லை. இந்த ஊரின் முதல் டீச்சராக அவர் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.

பார்க்க இனிமையானவராக இருக்கிறார். ஆனாலும்! நாங்கள் கணித்தபடி இங்க்லீஷ் டீச்சராகவே இருக்க முடியும் என உறுதியாய் நம்பினோம். இங்க்லீஷ் டீச்சர்களிடம் பள்ளியிலேயே ஒரு விலக்கம் மாணவர்கள், சக ஆசிரியர்களிடம் இருப்பதுபோலவே ஊருக்குள்ளும் இருப்பதில் ஆச்சரியமில்லையே என்றுபட்டது.

அவித்த பனங்கிழங்குகளைச் சூட்டோடு தோலுரித்து உரலிலிட்டு தேங்காய்ப்பூ, உப்பு, மிளகு சேர்த்துத் துவைத்து உருண்டையாகப் பிடித்து வைத்திருந்தா பவளமன்ரி. இளஞ்சூடாக உப்பும் காரமுமாக அந்த மழைப் பொழுதுக்கு மிகச் சுவையாக இருந்தத

இங்கே எந்த வீட்டுக்கு எப்போது போனாலும் ஏதாவது சாப்பிடக் கொடுத்தார்கள். அவித்த கச்சான், சோளம், புளுக்கொடியல் ஏதாவது தின்னக் கொடுத்தார்கள். காலையில் ரொட்டியும், வீட்டில் தயாரித்த உளுவிந்தம்பழ ஜாமும் கிடைக்கும். கைவசம் ஒன்றுமில்லாவிட்டால் மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு பனங்கிழங்கு போட்ட பாத்தியைக் கிளறி, முளைவிட்ட பனங்கொட்டையை வெட்டிப் பூரான் எடுத்துக் கொடுத்தார்கள். இப்படியாகக் கொடுத்துக்கொண்டே வாழப் பழகியிருந்தார்கள். ‘வந்தாரை வாழவைக்கும் வன்னி’ என்று சொல்லலாம்.

எங்கட மண்ணில் வெறும் எட்டுக் கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் டவுனுக்கு முதன்முறையாக இடம்பெயர்ந்து மாமா வீட்டுக்குப் போனபோது அத்தையின் பார்வை வித்தியாசமாகப்பட்டது. அதற்குமுன்பெல்லாம் அங்கு விசிட் செல்லும்போது காட்டும் முகமலர்ச்சியும் வரவேற்பும் மாறி, ‘அகதியாய் வந்திருக்கினம்’ தோரணையில். சிலபடிகள் கீழிறங்கி விட்டதாய்த் தோன்றியிருக்க வேண்டும். அம்மாவுக்கும் அப்படித்தான் தோன்றியதோ என்னவோ. ஐந்தாறு நாட்களிலேயே வாடகைக்கு ஒரு வீடு பார்த்தாயிற்று. அங்கேயும் நிறைய ரூல்ஸ் இருந்தது. பாத்திரம் கழுவ தனியிடம், வெள்ளிக்கிழமை, தீட்டு எனப் பலவகையான நடைமுறை. மனிசி சலித்து ஓய்ஞ்சு போச்சு. பிறகு மொத்தமா எல்லாரும் ஒருநாள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளிக்கிட்டம்.

இங்கேயானால் எல்லாமே புதிதாய் இருந்தது. அகதியாய் வந்த எங்களை என்னமோ விருந்துக்கு வந்த மாதிரித் தாங்கிக் கொண்டார்கள். ‘என்ன மனிசரப்பா இப்பிடியொரு மனிசரப் பாத்ததே இல்லயே எங்கடயளோடயும் இருந்து பாத்தமே’ சொல்லிச் சொல்லி மாஞ்சு போயினம் அம்மாவும் சித்தியும்.

”இது பெருநிலப்பரப்பு. இங்க எல்லாருக்கும் பெரிய மனசு. அது குறுநிலம். எல்லாம் குறுகின” தம்பி ஆரம்பிக்க, ”நீ புத்தகத்தை எடுத்துப்படி பாப்பம் பெரியாக்கள் கதைக்கிறத வாய் பாக்காம” அம்மா முடிச்சு வச்சிட்டா.

”இந்த மண் எங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் தருது. அதுக்கு மேலயும் தருது. அதெல்லாம் கூட இருக்கிற உயிருகளுக்கு. இங்க யாழ்ப்பாணத்து ஆக்கள் வாற வரைக்கும் சந்தைல மரக்கறி வித்ததில்ல. பால், தயிர் விக்கிறதில்ல. உதெல்லாம் இப்பான் தம்பி” பவளம் அன்ரி ஒருநாள் சொன்னது உண்மைதான். 

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வேணுமெண்டா மரத்தில ஏறியிருந்தது ஆசைதீர சாப்பிட்டு இறங்க வேண்டியதுதான். ஆய்ஞ்சு வச்சு பழுக்க வைக்கிறேல்ல. மரத்திலேயே பழுத்து அணில், பறவை கொந்தி விழுந்து கொண்டிருக்கும். அவ்வப்போது மனுஷரும் சாப்பிடுவது வழக்கம். காணியில் பன்னிரண்டு பாரிய மாமரங்கள் காய்த்துக்கொட்டின. கொய்யா, ஜம்புநாவல் எல்லாமே அப்படித்தான்.

”எப்பிடி நல்லாருக்கோ?” சிந்தனையைக் கலைத்தது அன்ரியின் குரல். தலையாட்டினோம். ”குணாவுக்குச் சரியான விருப்பம். இண்டைக்கு அவன்ர பிறந்தநாள்” என்ற பவளமன்ரியின் முகத்தைப் பார்த்தோம். மலர்ச்சியாக இருந்தது. குணாவின் படத்துக்குப் புதிதாக மாலை போட்டிருந்தது.

”இவனும் கணேசின்ர தம்பியும் சின்ன வயசிலருந்தே ஒண்டாத்தான் திரிவாங்கள். ஒண்டாத்தான் இயக்கத்துக்குப் போனவங்கள். கடைசில ரெண்டுபேரும் ஒண்டாவே போயிட்டாங்கள். தெரிஞ்சதுதானே, எண்டைக்கோ ஒருநாள் போயிடுவான் எண்டு. இயக்கத்துக்குப் போனப்பத்தான் அன்ரி சாப்பிடாமல் ரெண்டு மூண்டு நாள் இருந்து அழுதது. அப்பவே அழுது முடிச்சிட்டுது மனிசி. வீரச்சாவு எண்டதும் மனிசிதான் உள்ளுக்க கவலைய வச்சுக்கொண்டு தெம்பா நிண்டு நடத்தினது” என்றார் பாலன் அங்கிள்.

கிரவலும், செம்மண்ணுமாக இருந்த வீதியில் மழை நீர் தேங்காத பகுதியாகப் பார்த்து வெட்டி வெட்டி சைக்கிளை ஒட்டிக் கொண்டிருந்தான் தம்பி. சடுதியாக சுரிக்குள் சிக்கி சரிந்து விழத்தெரிந்ததில் இருவரும் குதித்து விட்டோம். தடுமாறி நின்றபோது, “தம்பியவ கவனம் பாத்து” வாசல் கடப்புக்குப் பக்கத்தில் குரல்கேட்டது.

டீச்சர் புன்முறுவலுடன் நின்றிருந்தார். அவர் வீடு அதுவென்று தெரிந்துகொண்டோம். அந்தநேரம் பார்த்துக் கணேசன் அண்ணையும் அந்தவழியால் எங்கள் பின்னே வந்திருந்தார். வெட்கச் சிரிப்போடு எதுவும் பேசாமல் வந்துவிட்டோம்.

தம்பிக்கு ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. எனக்கும்தான். அவன் வெளிப்படையாகக் கேட்டு அறிந்துவிடத்துடித்தான்.

”ஏனண்ணை டீச்சரோட ஒருத்தரும் கதைக்கிறேல்ல?”

கணேசன் அண்ணை, ”யாரடாம்பி சொன்னது அப்பிடி?”

”அதான் தெரியுதே.. சொல்லுங்கோ நீங்கள் கதைக்கிறேல்லத்தானே?”

”அப்பிடியில்ல..”

”தெரியுமண்ணை… அவையள் வேற இயக்கமோ?”

”அவவின்ர பிள்ளையள் ரெண்டும் வெளிநாட்டில… ஏன்ரா வேற இயக்கமெண்டா கதைக்காமலே இருக்கிறம். உப்பிடிப் பாக்கப்போனா எங்கட சனத்தில பாதிப்பேர் ஒருத்தரோட ஒருத்தர் கோவம் போட்டுக்கொண்டெல்லே இருக்கவேணும்”

”அப்ப டீச்சரிண்ட புருசன் யாரையாவது காட்டிக் குடுத்து இயக்கம் சுட்டதோ?” தம்பி மெதுவான குரலில் முணுமுணுப்பாகக் கேட்டான்.

”டேய் விசர்க்கத்தை கதையாதை அந்தாள் அருமையான மனிசன்.. அநியாயமா வருத்தம் வந்து செத்தது”

”அந்தாள் அருமையான மனுசனெண்டா.. அப்ப டீச்சர்தான் நல்ல மனிசி இல்லைப்போல” என்றான் தம்பி விடாப்பிடியாக.

கனேசன் அன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்சநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு மெதுவான குரலில் சொன்னார், ”டீச்சரும் நல்ல மனிசிதான். என்னத்த சொல்லுறது..” என்றுவிட்டு மௌனமாய் இருந்தார்.

பிறகு தனக்குள் பேசிக்கொள்வதுபோல, ”என்னமோ தெரியேல்ல டீச்சரிண்ட முகத்தைப் பாக்க முடியேல்ல..என்னமோ ஒரு தயக்கம். எல்லாருக்கும் அப்பிடித்தான் இருக்கோ தெரியேல்ல”

”என்னெண்டு சொல்லுறியள் இல்ல” தம்பி.

”வேண்டாம். நீங்கள் இப்ப டீச்சரோட நல்ல மாதிரி. பார்த்தா சிரிக்கிறியள். நாளைக்கே கதைக்கலாம். நான் இப்ப சொன்னனெண்டா அது உங்களுக்குத் தேவையில்லாத கரைச்சல். உந்தக் கதையை விடு”

எவ்வளவு கேட்டும் கணேசன் அண்ணை சொல்லவில்லை. ஆனால் அவர் சொன்னது உண்மை. நாங்கள் அதுபற்றித் தெரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. அதன்பிறகு நானும் டீச்சரை எதிர்கொண்டு பார்க்கவில்லை. தம்பியும்தான். ஏனென்று தெரியவில்லை.

மாலைக் கருக்கலில் பாலன் அங்கிள் பீடி குடித்துக்கொண்டிருந்தார். ஆள் கொஞ்சம் ஏத்தத்தில இருந்ததாக தம்பி கிசுகிசுத்தான். பவளமன்ரி டீயும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துப் பொரித்த கச்சானும் மூன்றுபேருக்கும் கொடுத்தார். கொறித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.

தம்பி அவுக்கென்று கேட்டான், “ஏன் அங்கிள் டீச்சர் யாரையும் காட்டிக் குடுத்தவவோ?” அவர் இதை எதிர்பார்க்கவில்லை. நானும்தான். பேச்சு வராமல் அவனையே வெறிக்கப் பார்த்தவர், ”ஆரடாம்பி உதெல்லாம் சொன்னது?” என முணுமுணுத்தார். தூர வெறித்தபடி பீடியை ஆழமாக இழுத்தார்.

மெதுவான குரலில் அமைதியாகச் சொன்னார். ”மனிசர் எல்லா நேரத்திலயும் ஒரே மாதிரி இருக்கிறேல்ல. அந்தந்த நேர பதகளிப்பில வேற ஒருத்தரா மாறிடுவினம். டீச்சர் நல்ல மனிசிதான். அந்த நேரத்தில என்ன யோசிச்சுதோ தெரியேல்ல”

அமைதியாக சில நொடிகள் கழிந்தன. யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்வதுபோலப் பார்த்த அங்கிள் மெதுவாகச் சொன்னார், ”அப்ப மாங்குளம் அடிபாடு நடந்து பெடியள் ஆமிய அடிச்சுக் கலைச்சிட்டாங்கள். செத்த ஆமி போக தப்பி ஓடினவங்கள். ஆயுதங்களையும் எறிஞ்சுபோட்டு வழி தெரியாம உங்க காட்டுக்குள்ளால எல்லாம் ஓடுறாங்கள் எண்டு ஒரே அமளி. இயக்கமும் அறிவிச்சது, ஆமிக்காரரைக் கண்டாத் தகவல் சொல்ல வேணுமெண்டு.

ஒரு கிழமையா காடு மேடெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாடி வதங்கி ஓடின ஆமிக்காரரைச் சில பேர் கண்டுமிருக்கினம். அப்பிடித்தான் ஒருத்தன் டீச்சர் வீட்டுப்பக்கம் வந்திருக்கிறான். கிணத்துல தண்ணி அள்ளிக் குடிச்சிட்டு, டீச்சரைப் பாத்து வயித்தைத் தடவிக் காட்டியிருகிறான். டீச்சரும் உள்ள கூப்பிட்டு இருத்திச் சோறு போட்டுக்குடுத்திட்டு, அப்பிடியே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளில போட்டுது.

”சத்தம் கேட்டு நாங்கள் அங்க போகேக்க சாப்பாட்டுத் தட்டு நிலத்தில கவிண்டு சோறு கொட்டியிருந்துச்சு தண்ணிப் பேணி தட்டுப்பட்டு உருண்டு கிடந்துது. கிணத்தடில கொய்யா மரத்துக்குக் கீழ. அப்பிடியே குணாவின்ர வயது, அதே சைஸிலேயே கிடந்தான். வாய்க்குள்ள சோறு. கையிலயும் சோத்துப் பருக்கையள்”

000

உமாஜி 

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.
 
https://akazhonline.com/?p=4793

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிவு மனதை ஏதோ செய்தது. பகிர்வுக்கு நன்றி கிருபன்.👍

  • 3 weeks later...
Posted
On 2/9/2023 at 02:46, கிருபன் said:

அன்ரி பசித்த வயிறுக்கு, சாப்பாடு தாறன் என்று கூப்பிட்டு சாப்பிடும்போது  போது, காட்டிக் கொடுத்து போட்டா என்பதாகவே நான் முடிவை விளங்கிக் கொள்கிறேன்.

எதிரியாக இருந்தாலும், பசிச்ச வாயுத்துக்கு இப்படி செய்து இருக்க கூடாது என்று வன்னி சனம் அவரை நினைக்கின்றதா...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

அன்ரியா, டீச்சரா?

சாப்பாடு கொடுத்தவர் டீச்சர். மாவீரர் குணாவின் தாய் பவளம் அன்ரி?

டீச்சர் காட்டி கொடுக்கவில்லை, நிராயிதபாணியான ஆமிக்காரனை சாப்பிடும் போது/ சாப்பாட்டில் நஞ்சு வைத்து கொலை செய்துள்ளார் என நினைக்கிறேன்.

இதை மகனை மாவீரனாக கொடுத்த தாய் ஈறாக ஊரே ஏற்கவில்லை?

On 2/9/2023 at 07:46, கிருபன் said:

இது பெருநிலப்பரப்பு. இங்க எல்லாருக்கும் பெரிய மனசு. அது குறுநிலம். எல்லாம் குறுகின” தம்பி ஆரம்பிக்க, ”நீ புத்தகத்தை எடுத்துப்படி பாப்பம் பெரியாக்கள் கதைக்கிறத வாய் பாக்காம” அம்மா முடிச்சு வச்சிட்டா.

”இந்த மண் எங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் தருது. அதுக்கு மேலயும் தருது. அதெல்லாம் கூட இருக்கிற உயிருகளுக்கு. இங்க யாழ்ப்பாணத்து ஆக்கள் வாற வரைக்கும் சந்தைல மரக்கறி வித்ததில்ல. பால், தயிர் விக்கிறதில்ல. உதெல்லாம் இப்பான் தம்பி” பவளம் அன்ரி ஒருநாள் சொன்னது உண்மைதான். 

கதையோடு நிஜம் சொன்ன விதம் அருமை.

Posted
1 hour ago, goshan_che said:

அன்ரியா, டீச்சரா?

ஓம் டீச்சர். மாறிச் சொல்லிட்டன் ( இன்னும் ஆன்ரி மீதான கிரேசி குறையவில்லை போலிருக்கு என் மனசுக்கு 😄)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

ஓம் டீச்சர். மாறிச் சொல்லிட்டன் ( இன்னும் ஆன்ரி மீதான கிரேசி குறையவில்லை போலிருக்கு என் மனசுக்கு 😄)

பார்த்து…பார்த்து…நம்மளே அங்கிள் வயசு தாண்டுற காலம் வந்திட்டு…இப்ப எங்களுக்கு அன்ரி எண்டால் 70 தொடும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் டீச்சர் தான் செய்ததை நினைத்துக் கவலைப்படவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் தான் செய்த செயலால் அந்த ஊரில் தனியாக வாழும் மனத் தைரியம் இருந்திருக்காது என்பதையும்தான் இந்தக் கதை கூறுகிறது. 

பல பொய் சொல்லி நம்பவைப்பதைவிட உண்மையை கூறி (ஊர் ஒதுக்கினாலும்) வாழ்வதும் சிறந்ததுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

உண்மையில் டீச்சர் தான் செய்ததை நினைத்துக் கவலைப்படவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லாவிட்டால் தான் செய்த செயலால் அந்த ஊரில் தனியாக வாழும் மனத் தைரியம் இருந்திருக்காது என்பதையும்தான் இந்தக் கதை கூறுகிறது. 

பல பொய் சொல்லி நம்பவைப்பதைவிட உண்மையை கூறி (ஊர் ஒதுக்கினாலும்) வாழ்வதும் சிறந்ததுதான். 

வேறுபட்ட சிந்தனை கோணம்👏🏾

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீவகப் பகுதிகளில் இருந்து தொகையானவர்கள் நகர்ப் பகுதிக்குள் நகர்ந்து விட்டார்கள். இருக்கும் மக்களுக்கு ஏதாவது யாராவது நன்மை செய்தால் நல்லதே.
    • அதுவரை நான் இருக்க வேணுமே? அடுத்த அரசு வருவதற்கிடையில் எலான் உலகின் முதல் பணக்காரராக வர முயற்சி பண்ணுகிறார்.
    • நல்ல விடயம் தான்  ஆனால் மக்களை ஏமாற்றுவதாக அமைந்து விடக்கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு முன் பானையில் என்ன இருக்கு என்று பார்ப்பது நல்லது. 
    • சரியாக தான் சொல்கிறார். இது தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமுடிவாக இருக்கணும்.
    • கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.