Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1973 போல இஸ்ரேல் மீண்டும் ஒரு பல முனைப் போரை சந்திக்க நேரிடுமா? என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA

படக்குறிப்பு,

காசாவின் தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு மசூதி இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், யோலண்டே ஆணி
  • பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம்
  • 7 நிமிடங்களுக்கு முன்னர்

1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர்.

ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது.

1973ல் நடந்த அந்தத் தாக்குதல் அக்டோபர் போர் என அழைக்கப்படுகிறது. அந்தப் போர் தான் அரபு மற்றும் இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நடந்த முதல் போர் அல்லது யோம் கிப்பர் போர் என்று அறியப்படுகிறது.

இந்தச் சண்டையில், சிரியா கோலன் குன்றுகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்கியது. எகிப்து சூயஸ் கால்வாயிலிருந்து இஸ்ரேலைத் தாக்கி விரைவாக இஸ்ரேலுக்குள் நுழையத் தொடங்கியது.

இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியைக் கேட்டபோது, சோவியத் யூனியன் எகிப்து மற்றும் சிரியாவின் பக்கம் நின்றது. மேலும் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றது.

பல நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, சினாய் மாகாணத்தில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

சனிக்கிழமையன்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக 'அல்-அக்ஸா ஸ்டார்ம்' என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம், ஹமாஸ் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது. மறுபுறம், ஹமாஸ் போராளிகள் பல இடங்களில் இருந்து எல்லையைத் தாண்டி தரை வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

இதுவரை கிடைத்துள்ள செய்திகளின்படி இத்தாக்குதலினால் இஸ்ரேலில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS/AMIR COHEN

படக்குறிப்பு,

பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மழை போல் இஸ்ரேல் மீது பொழிந்தன.

சனிக்கிழமை காலை தொடங்கிய திடீர் தாக்குதல்

சமீப காலங்களில், காசா பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது, ஆனால் பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸோ அல்லது காசா நிர்வாகத்தை கவனிக்கும் இஸ்லாமிய குழுக்களோ அல்லது இஸ்ரேலோ அதை அதிகரிக்க விரும்பவில்லை என்று மக்கள் நம்பினர்.

ஆனால் ஹமாஸ் இது தொடர்பாக மிகவும் சிக்கலான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடைமுறையை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. சனிக்கிழமை காலை இதைச் செய்து இஸ்ரேல் மீது ராக்கெட் மழையைப் ஹமாஸ் குழுவினர் பொழிந்தனர்.

இஸ்ரேல் மீது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. சில ராக்கெட்டுகள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வரை சென்றடைந்தன. மறுபுறம், பாலத்தீன போராளிகள் தரை மற்றும் கடல் வழியாக தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

பல மணி நேரம் வரை இந்த போராளிகள் இஸ்ரேலிய நகரங்களையும் இராணுவ நிலைகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் இஸ்ரேலில் பலரைக் கொன்றுவிட்டு, பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு காசா சென்றுவிட்டனர்.

சனிக்கிழமையன்று பகல் முழுவதும், ஹமாஸ் தாக்குதலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி, முக்கிய ஊடகங்களில் நேரடியாக செய்திகளாக ஒளிபரப்பப்பட்டன.

காசா எல்லைக்கு அருகே இரவு விருந்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் திடீரென தாக்குதலுக்கு உள்ளானதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், நூற்றுக்கணக்கான மக்கள் திறந்தவெளியில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடுவது தெரிந்தது.

 
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,THE JERUSALEM POST @X

படக்குறிப்பு,

தற்போதைய தாக்குதலின் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதம் தாங்கிய போராளிகளிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், அவரது தோழர்கள் தன்னைத் தேடி வந்ததாகவும் கிலி யோஸ்கோவிச் என்பவர் பிபிசியிடம் கூறினார்.

"அவர்கள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நகர்ந்து துப்பாக்கிகள் மூலம் சுடுகிறார்கள். இருபுறமும் அவர்கள் குண்டுகளை வீசினர். எல்லா இடங்களிலும் சடலங்கள் கிடந்ததை நான் கண்டேன்" என்று அவர் கூறினார்.

"பரவாயில்லை, நான் சாகப் போகிறேன். மூச்சை வெளியில் விட்டுக் கண்களை மூடிக்கொள்" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். "அவர்கள் எல்லா இடங்களிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர்."

இஸ்ரேலின் ஹயோம் செய்தி நிறுவனம் கிபுட்ஸ் பெர்ரியில் வசிக்கும் எல்லா என்ற பெண்ணிடம் பேசியது. ராக்கெட் தாக்குதல் சைரன் ஒலித்த போது தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்ததாக எல்லா கூறுகிறார்.

அவர் கூறியபோது, "தாக்குதல்தாரிகள் தங்குமிடத்திற்குள் நுழைந்ததாக அவர்கள் எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார்கள். அவர்களின் படங்களை டெலிகிராமில் பார்த்தேன். அவை காசாவில் எடுக்கப்பட்டவை. எனக்கு இன்னும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது." என்றார்.

காசாவில் ஆரம்ப எதிர்வினை என்ன?

இச்சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை எதிர்பார்த்தது போல் விரைவாக பதிலடி கொடுக்கவில்லை என பல இஸ்ரேலியர்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு உதவ ராணுவம் விரைவாக வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், ஹமாஸ் தொலைக்காட்சியில் வெளியான காட்சிகளில், பாலத்தீன போராளிகள் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றிய காட்சிகளும், அவர்கள் இஸ்ரேலிய வீரர்களைக் கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

காசாவில் இருந்து கிடைத்த முதற்கட்டப் படங்களில், தாக்குதலுக்குப் பிறகு மக்கள் கொண்டாடும் காட்சிகளும், பாலத்தீன போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை சூறையாடி அதில் சுற்றித் திரியும் காட்சிகளும் இருக்கின்றன.

காசா நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, "ஹமாஸ் குழுவினரின் தாக்குதல் நடவடிக்கை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அல்-அக்ஸாவில் இஸ்ரேலின் செயல்களுக்கு பதிலடியாக ஹமாஸ் பழிவாங்கியுள்ளது," என்று கூறினார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேமை ஒட்டிய அல்-அக்ஸா மசூதியின் வளாகத்தையே இந்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். அங்கு சமீப காலமாக யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அல்-அக்ஸா மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. அதேசமயம் யூதர்களும் தங்கள் புனிதமான இடமாகக் கருதுகின்றனர். அவர்கள் அதை 'டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கிறார்கள்.

 
இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA

காசாவில் உள்ள நிர்வாகம் அருகிலுள்ள பகுதியை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இந்த இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

அந்த இளைஞர் தொடர்ந்து பேசிய போது, "எங்கள் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். 2021 இல், இஸ்ரேலில், ஷோரூக் டவர் தாக்கப்பட்டது. அப்போது எனது குடும்பத்துக்குச் சொந்தமான கடை அழிக்கப்பட்டது. இந்த முறை ஹமாஸின் தாக்குதல் முன்பை விட பெரிய நடவடிக்கை. எனவே இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்க்கலாம். அதுவும் பெரிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்," என்று கூறினார்.

பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்களின் விளைவாக பாலத்தீனத்தில் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தோராயமாக 2.3 மில்லியன் பாலத்தீனிய குடிமக்கள் வசிக்கும் காசா பகுதி 2007 இல் ஹமாஸ் அமைப்பால் கைப்பற்றப்பட்டது. இதற்கு ஓராண்டுக்கு முன் இங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு தான் வெற்றி பெற்றது.

அந்த நேரத்தில், இஸ்ரேலும் எகிப்தும் இந்தப் பகுதியின் எல்லையில் முற்றுகையை இறுக்கியிருந்தன. இப்பகுதியில் வேலையில்லமல் திண்டாடியோரின் எண்ணிக்கை விகிதம் 50 சதவீதமாக இருந்தது.

2021 ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்தன. அதன் பிறகு எகிப்து, கத்தார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய மத்தியஸ்தத்துக்குப் பின் இருதரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறியது. காஸாவில் வசிக்கும் மக்கள் இஸ்ரேலில் பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்றும் சில கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஹமாஸ் எல்லையில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

 
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,MOHAMMED SABER/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

தீ பற்றி எரியும் இடங்களில் பெரும் அளவில் கரும் புகை வெளியேறிவருகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

கடந்த மாதம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பைப் போல் நூற்றுக்கணக்கான வேலிகளால் ஆன எல்லைக்கு அருகில் பாலத்தீனர்கள் கூடத் தொடங்கிய போது, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் இருந்து கூடுதல் சலுகைகளை விரும்புவதாகவும், கத்தார் தனது உதவித் தொகையை அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கப் போவதாகவும் நம்பப்பட்டது.

ஆனால் இந்த சிறிய அளவிலான கூட்டங்கள் இப்போது எச்சரிக்கை மணி அடிப்பதைப் போல் தெரிகிறது. சிலர் இது வேலியின் கணக்கெடுப்பு அல்ல, இதனால் எங்கிருந்து வேலியை உடைக்க முடியும் என்பதைக் கண்டறிய முடியும் என்று கூறுகிறார்கள். ஒருசிலர் அந்த வேலியைக் கடந்து வருவதற்கான முயற்சிகளை அந்தக் குழுவினர் மேற்கொண்டதாகவும் கருதினர்.

ஹமாஸ் அமைப்பின் சமீபத்திய பிரச்சாரத்தின் மூலம், மீண்டும் ஒரு கிளர்ச்சி நடத்தி, இஸ்ரேலை அழிப்பதே அதன் முக்கிய நோக்கம் என்று அதன் பிம்பத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறது.

சனிக்கிழமையன்று அல்-அக்ஸா ஸ்டார்ம் தாக்குதலின் தொடக்கத்தில், ஹமாஸ் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் பாலத்தீனர்கள் மற்றும் பிற அரபு சமூகங்கள் "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இந்த போருக்கு உதவ வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் மேற்குக் கரையோ, கிழக்கு ஜெருசலேமோ அல்லது வேறு எந்தப் பகுதியோ ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலத்தீனர்கள் ஹமாஸின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்களா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

தற்போதைய தாக்குதலில், 1973-ம் ஆண்டைப் போல பல முனைகளில் போரிடக்கூடிய ஒரு போரின் சாத்தியத்தை இஸ்ரேல் காண்கிறது என்பதில் சந்தேகமில்லை.

லெபனானில் இருந்து செயல்படும் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா இயக்கம் இந்தத் தாக்குதலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் தற்போதைய தாக்குதல் நிலைமை கட்டுப்பாட்டை மீறும்.

 
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,WAEL HAMZEH/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் சனிக்கிழமையன்று பேரணி நடத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை, ஹமாஸ் குழுவினருடனான சண்டையின் போது ஹிஸ்புல்லா தலையிடக் கூடாது என்று இஸ்ரேல் கூறியது. ஹிஸ்புல்லா ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல், இராணுவம் மற்றும் சமூக அமைப்பாகும். இது லெபனானில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதுடன் ஹமாஸைப் போலவே ஈரானின் ஆதரவையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பெரிய அளவில் இராணுவ வீரர்களை அணி திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் காஸா மீது பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதுடன், அங்கு தரைப்படைத் தாக்குதல் நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஹமாஸ் அமைப்பு, தற்போதைய தாக்குதலின் போது ஏராளமான இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. அவர்களை அவர்கள் மனித கேடயங்களாகவோ அல்லது பேரம் பேசவோ பயன்படுத்தலாம். இந்த பிரச்னை அங்குள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், "நாங்கள் தற்போது அப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம். நாங்கள் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறோம். குறிப்பாக காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறோம். அதை முழுமையாக மதிப்பாய்வு செய்வோம்," எனத்தெரிவித்தார்.

அதற்கு சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் ஹமாஸ் அமைப்பு எப்படி இவ்வளவு பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது, ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது என்று இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புகளும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களால் பெரிய அழிவைத் தடுக்க முடியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/ced5904902xo

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அரபு மற்றும் இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நடந்த முதல் போர் அல்லது யோம் கிப்பர் போர் என்று அறியப்படுகிறது.

இந்த போரின் பெயரே 4th Arab Israeli war?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அடுத்து என்ன நடக்கும்?

1973 இல் சிரியாவும் எகிப்தும் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறினாலும், இஸ்ரேல் கொடுத்த மறுத்தானில் நிலைகுலைந்தன.

டமாஸ்கசின் வாசல் வரை இஸ்ரேல் ஏவுகணை வீச்சு இருக்கும் அளவுக்கு சிரியா திருப்பி அடிக்கப்பட்டது. இன்றும் கோலான் குன்றுகள் இஸ்ரேல் வசமே.

சினாய், வளைகுடாவில் இருந்து, சுயஸ் கால்வாயை கடந்து, எகிப்தின் மறு கரையில் இறங்கி, கெய்ரோவில் இருந்து 100 கிமி தூரம் வரை இஸ்ரேல் படைகள் முன்னேறின. எகிப்தின் ஒரு காலாட்படை அணியையே சுற்றி வளைத்தன.

அப்போ இஸ்ரேல் பின் மேற்கும்.

சிரியா, எகிப்தின் பின் சோவியத்தும் இருந்தன.

50 வருட பாடம் - இதன் பின் எகிப்தும், சிரியாவும் இஸ்ரேலுடன் சொறிவதில்லை.

இந்த முறையும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். 

அதே பாடம் படிப்பார்களா? 

காலம்தான் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2023 at 04:33, goshan_che said:

இந்த முறையும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். 

அதே பாடம் படிப்பார்களா? 

காலம்தான் பதில் சொல்லும்.

இவர்கள் ஒரு நாளும் பாடம் படிக்க மாடடார்கள். பல முனைத்தாக்குதல் நடந்தாலும் அதை எல்லாம் இஸ்ரவேல் சமாளிக்கும். அவர்கள் எல்லா கணக்கும் போட்டு வைத்துக்கெண்டே இறங்கிமிருக்கிறார்கள்.

அப்படி ஏதும் நடந்தால் நிச்சயமாக இஸ்ரவேலின் நிலப்பரப்பானது இன்னும் அதிகரிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியில் இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார் இப்ப நடப்பது ஆரம்பம் மட்டுமே. இதன் முடிவு சொல்வதற்கில்லை என்று. இஸ்ரேலிய இராணுவமும் கனரக ஆயுதங்களும் காசாவை சுற்றிவளைப்பதை பார்க்கும் போது....????😭

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

இவர்கள் ஒரு நாளும் பாடம் படிக்க மாடடார்கள். பல முனைத்தாக்குதல் நடந்தாலும் அதை எல்லாம் இஸ்ரவேல் சமாளிக்கும். அவர்கள் எல்லா கணக்கும் போட்டு வைத்துக்கெண்டே இறங்கிமிருக்கிறார்கள்.

அப்படி ஏதும் நடந்தால் நிச்சயமாக இஸ்ரவேலின் நிலப்பரப்பானது இன்னும் அதிகரிக்கும். 

இதில் இஸ்ரேலின் end game வட காசாவை முற்று முழுதாக பலஸ்தீனிய-சுத்தீகரிப்பு செய்வதே என நினைக்கிறேன்.

மக்கள் சாரை சாரையாக வட காஸா மற்றும் காஸா சிட்டி பகுதியில் இருந்து வெளியேறுகிறார்கள்.

இஸ்ரேல் இனி இவர்களை மீள திரும்பவிடுவது ஐயம்தான்.

எகிப்து எல்லையை இறுக்க மூடி வைத்துள்ளது.

இனி காஸாவின் நிலப்பரப்பு பாதியாக குறைந்து - மக்கள் அனைவரும் தெற்கு காஸா, கான் யூனிஸ் பகுதியில் முடக்கப்படுவார்கள் போலவே படுகிறது.

 

2 hours ago, விசுகு said:

இன்றைய செய்தியில் இஸ்ரேல் பிரதமர் சொல்கிறார் இப்ப நடப்பது ஆரம்பம் மட்டுமே. இதன் முடிவு சொல்வதற்கில்லை என்று. இஸ்ரேலிய இராணுவமும் கனரக ஆயுதங்களும் காசாவை சுற்றிவளைப்பதை பார்க்கும் போது....????😭

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Cruso said:

இவர்கள் ஒரு நாளும் பாடம் படிக்க மாடடார்கள். பல முனைத்தாக்குதல் நடந்தாலும் அதை எல்லாம் இஸ்ரவேல் சமாளிக்கும். அவர்கள் எல்லா கணக்கும் போட்டு வைத்துக்கெண்டே இறங்கிமிருக்கிறார்கள்.

அப்படி ஏதும் நடந்தால் நிச்சயமாக இஸ்ரவேலின் நிலப்பரப்பானது இன்னும் அதிகரிக்கும். 

இஸ்ரேல் தனிய சமாளிக்கும் என்றால் ஏன் அமெரிக்க/பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் மத்தியதரைக்கடலை நோக்கி நகர்கின்றது? ஐரோப்பிய ஒன்றியமும் போர் உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்களாம். நேட்டோவும் களமிறங்கலாம் என சொல்க்றார்கள்.......

ஒரு வேளை அடி பலமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இஸ்ரேல் இனி இவர்களை மீள திரும்பவிடுவது ஐயம்தான்.

 

இல்லை. நிச்சயமாக அம்மக்களை திரும்ப வருவதட்கு அனுமதிப்பார்கள். ஆனால் அங்கு ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டிருக்கும். அத்துடன் முழு காஸ்ஸா பகுதியும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இனி அங்கிருந்து வாபஸ் என்பதட்கு இடமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இஸ்ரேல் தனிய சமாளிக்கும் என்றால் ஏன் அமெரிக்க/பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் மத்தியதரைக்கடலை நோக்கி நகர்கின்றது? ஐரோப்பிய ஒன்றியமும் போர் உதவிகளை செய்ய காத்திருக்கின்றார்களாம். நேட்டோவும் களமிறங்கலாம் என சொல்க்றார்கள்.......

ஒரு வேளை அடி பலமோ? 😎

அடி பலமானது என்பதில் சந்தேகமேயில்லை. அவர்களே ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நடந்த யுத்தங்களில் பொது மக்களுக்கு இப்படியான சேதாரமிருக்கவில்லை.

இப்போது ஈரானின் பங்கு அதிகமாக இருப்பதால் மற்றைய நாடுகள் அதட்கு எச்சரிக்கையாகவே அங்கு நகர்வதுடன் இஸ்ரவேலுக்கு ஆதரவும் தெரிவித்திருக்கின்றன. மற்றப்படி அவர்கள் தாக்குதலுடன் இன்னும் சம்பந்தப்படவில்லை.

ரஸ்சியா , சீனா போன்ற நாடுகளின் ஆதரவு அரபு நாடுகளுக்கு அதிகரித்திருப்பதால் மேட்குலக நாடுகள் தங்கள் இஸ்ரவேலை நிச்சயமாக ஆதரிக்கும். மற்றபடி சுற்றியுள்ள நாடுகளை இஸ்ரவேல் தனியாக சமாளிக்கும் திறமை கொண்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2023 at 02:46, ஏராளன் said:

1973ல் நடந்த அந்தத் தாக்குதல் அக்டோபர் போர் என அழைக்கப்படுகிறது. அந்தப் போர் தான் அரபு மற்றும் இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நடந்த முதல் போர் அல்லது யோம் கிப்பர் போர் என்று அறியப்படுகிறது.

பிழையான தகவல், யொம் கிப்புர் என்பது 1973 இல் இடம்பெற்ற போர். உண்மையில் நான்காவது போர். இதற்கு முன்னர் 1948 இல் பலஸ்த்தீனப் போர், 1956 இன் சுயெஸ் கால்வாய்ப் போர், 1967 இன் ஆறு நாள்ப் போர் என்று மூன்று போர்கள் நடந்திருக்கின்றன. இதுவரையில் மொத்தமாக 7 போர்கள் இஸ்ரேலியர்களுக்கும் அரபுக்களுக்கும் (பலஸ்த்தீனர்கள் உட்பட) இடையே நடந்திருக்கின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.